Thursday, April 09, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்...பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind....and again I am in utter confusion as I was in 19!!



மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் - நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))



கொஞ்சம் நாஸ்டால்ஜிக் - Rising from the east - Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

Tuesday, April 07, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா!! - சீன் 2

சில சமயங்களில் பப்பு மாலை 5.30 மணிக்கு தூங்கி விடுகிறாள். காலை மூன்று மணி அல்லது இரண்டரைக்கு எழுந்துக் கொள்கிறாள். பிரச்சினை அதுவல்ல!

சென்ற வாரத்தில் ஒருநாள், அப்படிதான் ஆயிற்று. பையை வைத்துவிட்டு, சோபாவில் உட்கார எத்தனித்த போது சோபா முழுதும் ஏதோ foam-ஐ வெட்டிப் போட்டது மாதிரி இருந்தது. மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில்! அருகில், பொம்மைகள். புரிந்துவிட்டது.

ஆயா, கட் பண்ணுச்சா, பொம்மையெல்லாம்? என்றதற்கு ஆயா

ஆமாம்மா, என் முடியைக் கூட கட் பண்ணியிருக்கு கொஞ்சம்!

அவ்வ்வ்! சேதாரம் அதிகமில்லை, நுனியில்தான்!

சட்டென்று கீழே பார்த்தேன். கறுப்பு முடி. சுருள் சுருளாக. ஆயாவிற்கு கறுப்பு முடியில்லையே. தூங்கிக்கொண்டிருந்த பப்புவின் தலையைப் பார்த்தேன்!

ஓ..நோ! எது நடந்திருக்கக் கூடாதென நினைத்தேனோ அது நடந்தேவிட்டிருக்கிறது!

ஆமாம், அவளாகவே தலையில் நெற்றிக்கு மேலாக வெட்டியிருக்கிறாள்!

ouch! கடந்த வாரத்தில்தான் சம்மர் கட் செய்திருந்தோம், ஒட்ட வெட்டி. இப்போது அதிலும் முன்னால் இருக்கும் முடி இல்லையெனில், எப்படி இருக்கும்!

இப்படித்தான் இருந்தது, அன்று!!



மறுநாள் காலை.

”பப்பு, போய் கண்ணாடி பாரு”

”அழகா இருக்கேன் ஆச்சி, நானே முடி வெட்டிக்கிட்டு!”

oh baby! உன் மேல் உனக்கிருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கு..ஆனால்..ஆனால்..:(

ஏன் பப்பு, வெட்டினே! - மிக மெதுவாய் கேட்டேன்!

முடி வளர்ந்துடுச்சு இல்ல, அதனாலதான் வெட்டினேன்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!



அவளை வேனில் ஏற்றிவிட்டு திரும்பும்போது, பள்ளியில் மற்ற/பெரிய வகுப்பு சிறார்களை எப்படி எதிர்கொள்ளுவாள்? ஆசிரியை என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்? எப்படி அணுகுவார்கள்? இதுவரை தன் தோற்றத்தைக்குறித்து சற்றும் கவலைப்படாதவள், வெட்கம் கொள்வாளா?! so many thoughts!

அன்று மாலை திரும்பக் கேட்டேன்!

ஸ்கூல்ல என்ன சொன்னாங்க பப்பு, ஆண்ட்டி பார்த்தாங்களா?!

நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!

(பொய்யோ உண்மையோ நானறியேன்,ஆனால், அவளது செய்கையைக் குறித்து வெட்கப் படவில்லை, I wish, her self-esteem grows like this!)



அவள் முடியை வெட்டிக்கொண்ட அன்று இரவு ரொம்ப அப்செட்டாக இருந்தது. முடி போனதினால் மட்டுமல்ல. சமையலறையில் இருந்த கத்திரிக்கோலை நாற்காலி போட்டு எடுத்திருக்கிறாள்...what ifs..etc..etc! ஆன்லைனில், Golda அக்கா இருந்தார்கள். காலேஜில் என்னோட சீனியர். அவர்களிடம் புலம்பினேன். Golda அக்கா சொன்னார்கள் இதெல்லாம் சகஜமென்று. மேலும், அவர்கள் கொடுத்த டிப்ஸ், timeout. கத்திரிக்கோலை அவளுக்கு இன்னும் கொஞ்சநாள்கள் கொடுக்காதே என்றும்.

என்னை ஆறுதல் படுத்தி, சகஜ நிலைக்கு கொண்டுவந்த,அடுத்த நாள் காலை பப்புவை மென்மையாக அணுக ஊக்கமூட்டிய Golda அக்காவிற்கு நன்றி!

Monday, April 06, 2009

லேடிபேர்ட்..லேடிபேர்ட்!!




லேடிபேர்ட்-டை செய்யத் தேவைப்பட்டது, சிவப்பு, கறுப்பு வர்ணங்களும், நீளவாக்கில் வெட்டப் பட்ட உருளைக்கிழங்கின் பாதியும், கேரட்ய்டின் மேல் பாதியும்! உருளைக்கிழங்கினால் சிவப்பு வர்ணத்தை வைத்துவிட்டு, காய்ந்த பின் கேரட்டினால் கறுப்பு வர்ணம் வைத்து எடுக்கவேண்டும். முதல் லேடிபேர்ட் காய்வதற்கு முன்னரே கறுப்புத் திட்டுகளை வைத்ததால், கலைந்துவிட்டது. அதம்ன்பின் நன்றாக காய்ந்திருக்கிறதாவென பார்த்தபின்னரே கறுப்பு வட்டங்கள் வைத்தாள்!



குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடியில் லேடிபேர்ட் பற்றிய பாடலைக் கேட்க நேர்ந்தது..ஏன் இப்படி ஒரு பாடல்...!!

Ladybird, ladybird fly away home,
Your house is on fire and your children are gone,
All except one,
And her name is Ann,
And she hid under the baking pan

Saturday, April 04, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா - சீன் 1

அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி விடுவதுண்டு. எடுப்பது பெரும்பாலும் பப்புவாகத்தான் இருக்கும்! அன்றும் அப்படிதான்...பப்புதான் எடுத்தாள்.

”என்ன பண்றே, பப்பு?” - வழக்கமான கேள்விதான்! ”சாப்பிட்டியா” என்று ஆரம்பிக்கும் அல்லது ”என்ன பண்றே, இப்போ” என்றுதான் தொடங்கும்! ஆனால் பதில்தான் வித்தியாசமா இருக்கும்!

”நான் வீடு தொடச்சிக்கிட்டு இருக்கேன்!”

”என்னது?” - நான்!

பதிலில்லை!

....போனை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் போல.

”வீடு ஃபுல்லா தண்ணியா ஆக்கி வைச்சிருக்கு, கேட்டா தொடக்கிறேன்னு சொல்லுதும்மா” - ஆயா!

சரி, நீங்க எங்கேயும் நடக்காதீங்க, நாங்க வந்தப்புறம் பார்த்துக்கலாம்!

சிலசமயங்களில் மாப் செய்ய விரும்புவாள்...கொடுப்போம்..ஆசை தீர்ந்ததும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். இந்த மாதிரி நாம் செய்வதை அபப்டியே செய்ய விரும்புவது குழந்தைகள் இயல்பு என்றாலும், தண்ணீரில் விளையாடுவது அதுவும்
பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!

ஹால் முழுவதும் ஈரம்,தண்ணீர் வேறு ஆங்காங்கே!

“அதை எதுவும் திட்டிடாதே!” - ஆயாதான்!

துடைத்துவிட்டு ஃபேனை போட்டுக் காயவிட்டப்பிறகு,பொறுமையாகக் கேட்டேன்!

”காலையிலேதான பப்பு xxx ஆண்ட்டி தொடச்சாங்க? ஏன் நீ இப்போ தொடச்சே?! ” ரொம்பப் பொறுமையாய், எல்லாக் கடுப்பையும் விழுங்கியபடி!

“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”

ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று!

அவள் சமயங்களில் ஈரம் செய்துவிடும்போது நாங்கள் செய்வதுதான்! பள்ளியிலும் ஒருவேளை பார்த்திருப்பாளாயிருக்கும்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!

Friday, April 03, 2009

புத்தகங்கள் - தலைமுறை இடைவெளிகளில்!!

செல்வேந்திரனின் புத்தகப் பதிவுக்காக! பெரிம்மா கடந்த வாரயிறுதியில் வந்திருந்தார்கள். பப்புவோடு சேர்த்து வீட்டில் நான்கு தலைமுறைகள்.

"பெரிம்மா, ஒரு வீட்டிலே கண்டிப்பா இருக்க வேண்டிய 10 புக்ஸ் சொல்லுங்க” - நான்

”பாரதியார் கவிதைகள், டேல் கார்னிக்..” - பெரிம்மா

நடுவில் ஒரு குரல், “ சத்திய சோதனை” - பாட்டிதான்!

“ஆயா, படிக்கற புத்தகமா சொல்லுங்க, நம்ம வீட்டிலே கூடத்தான் இருக்கு,ஒரு சாப்டருக்கு மேலே படிக்க முடிஞ்சதேயில்ல,முதல்ல நீங்க படிச்சிருக்கீங்களா?!”

“புக்குன்னெல்லாம் சொல்ல முடியாது, ஆத்தர் சொல்றேன், அந்த ஆத்தரோட ஒரு புத்தகம் படிச்சாக்கூட போதும், சார்லஸ் டக்ளஸ், எஸ் ராமகிருஷ்ணன்” - பெரிம்மா.

“பெண்ணின் பெருமை” - வேற யாரு, எங்க ஆயாதான்!

இது சரிவராதுடா சாமியென்று, ஆளுக்கொரு பேப்பர் கொடுத்தேன். ஒரு குடும்பம். நான்கு தலைமுறைகள். Reading habbit! தலைமுறை இடைவெளி எப்படி இருக்குன்னு பாருங்க!!

ஆயாவின் லிஸ்ட் :

1. சத்தியசோதனை
2. பகவத்கீதை
3. இராமாயணம்
4. ஓஷோ
5. பெண்ணின் பெருமை - திரு.வி.க
6. பாரதியாரின் கவிதைகள்
7. நெல்சன் மண்டேலா பற்றிய நூல்
8. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் - பெயர் நினைவில் இல்லை
9. திருக்குறள்.
10. தேம்பாவணி - வீரமாமுனிவர்

11-ஆவதா வீரப்பனின் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) சேர்த்துக்க சொன்னாங்க!
இந்த புத்தகங்களையெல்லாம் எங்க ஆயா படிச்சிருக்காங்களாம், உறுதிபடுத்திக்கிட்டேன்! (அவ்வ்வ்வ்)இப்போ புரியுது, வீட்டுக்கு வர்ற என் ப்ரெண்ட்ஸ்-க்கு எல்லாம் எங்க ஆயாவைத்தான் பிடிக்கும்! (Mary, are you listening??)


பெரிம்மாவின் லிஸ்ட்:
(ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர் எழுதிய ஏதாவது ஒரு புத்தகம் என்று பொருள் கொள்க!)

1. பாரதியார் கவிதைகள்
2. பாரதிதாசன் கவிதைகள்
3. பெரியார்
4. Dale carnegie
5. எம்.எஸ்.உதயமூர்த்தி
6. Who moved my cheese
7. Charles douglas
8. Shakespeare's dramas
9. எஸ்.ராமகிருஷ்ணன்
10. Roots - Alex Haley
11. Anna karinina - Leo Tolystoy
12. Mother - Maxim Gorky
13. Anton chekov's short stories
14. O Henry's short stories
15. Mythili sivaraman's articles
16. Darwin -Origin of Species

என்னோட லிஸ்ட் :

ஏற்கெனவே பதிவுலகில் ஒரு முறை பட்டியல் எடுத்தபோது எழுதிய பதிவு..புத்தகக்கூட்டிலே

1. அக்னிச் சிறகுகள் - கலாம்
2. I dare - Kiran bedi
3. The Roots/ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேய்லி
4. Any book by R.K Narayan (The Guide/Financial Expert)
5. anna karenina - டால்ஸ்டாய் (Tolstoy)
6. tough times never last but tough people do - robert schuller
7. பாரதியார் கவிதைகள்
8. Works of Anton chekov
9. பெண் ஏன் அடிமையானாள்?
10. The Bible

உலகில் இருக்கும் இன்னும் உன்னதமான பல புத்தகங்களை i am yet to read. ஆனால், இதுவரை படித்ததை வைத்தே எனது இந்த பட்டியல்!

பப்புவின் லிஸ்ட் :
( இப்போதெல்லாம் இந்த புத்தகங்களை வைத்து தானாக கதைகள் சொல்லிக்கொள்கிறாள்! அதை வைத்து எனது அனுமானம், இப்படித்தான் இருக்கவேண்டுமென!!)

1. டாக்டர் பவுடர்பில்
2. கசகச பறபற
3. கோல்டிலாக்ஸ் & 3 பியர்ஸ்
4. ரேவா & மோடோ
5. Rabbits happy day
6. தூக்கம் வரவில்லை சிறுமி மாஷாவுக்கு
7. ஏதாவது ஒரு போட்டோ ஆலபம் (அம்மா & அப்பா கல்யாண ஆல்பம்/பப்புவின் முதல் பிறந்த நாள் ஆல்பம்)
8. Gada Gada Gudu Gudu the marble rolls
9. At the zoo
10.Peter Pan

இந்த பதிவுக்கு காரணமான செல்வேந்திரனுக்கு நன்றிகள்!

Wednesday, April 01, 2009

அழியாத கோலங்கள் - தொடர் பதிவு

அழைத்த தீபாவிற்கும் , தொடங்கி வைத்த மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

ஹாய் மீனு,

உன் கடிதம் கிடைத்தது.எத்தனை வருடங்களுக்குப் பிறகு....!!! எப்படி இருக்கிறாய்? உன் மகள் மற்றும் கணவர்? இங்கே நாங்களனைவரும் நலமே!

நீ எழுதியக் கடிதம் எனக்குள் பல நினைவலைகளைத் தூண்டிவிட்டது! பழைய கடிதங்களையும், ஆட்டோகிராப் நோட்டுகளையும் தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்! இப்போதுதான் நாம் சந்தித்ததுபோல் இருக்கிறது, ஆனால் எவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது! oh..our sweet bygone days!

பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது..ம்ம்..உண்மைதான், குழந்தைகளையும், குடும்பத்தைத் தாண்டி பேச
ஒன்றுமில்லாதது போல்தான் இருக்கிறது..நான் பார்த்த கடைசி ஷாருக் படம் கூட நினைவில் இல்லை! ஹேய்..கடைசி எக்சாம் முடித்து, நம் கிளாஸ்மேட்ஸ் அனைவருடனும்கூட நாம் தியேட்டரில் பார்த்தோமே..என்ன படம் அது?!

முன்பு, எனது கஸின்சிஸ்டர்ஸை பார்த்து வியந்திருக்கிறேன், இவர்களுக்கு குழந்தைகளைத் தாண்டிப் பேச ஒன்றுமிராதாவென்று, எனக்கு ஒரு குழந்தைப் பிறக்கும் வரை! எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது, மின்சார ரயிலிலிருந்து இறங்கியதுமே, ஆண்கள்
டீ குடிக்கவோ பேசவோ நண்பர்களுடன் கூட்டாகப் போய் விடுகிறார்கள், ஆனால், பெண்கள் கீரை வாங்கவும், காய்கறி பேரம் பேசி வாங்கவும் தயாராகி விடுகிறார்களென்று! எவ்வளவு உண்மை! ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

நீ வேலை செய்கிறாயா, மீனா?! நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்....ஆபிஸூம், அதைவிட்டால் வீடும்தான் மாறிமாறி...மீனா, ஆன்சைட் போவதுதான் என் கனவு என்று சொல்லிக்கொண்டிருப்பேனே..ஆனால், இன்னும் ஒருமுறைக்கூட போகவில்லை! வாய்ப்புக் கிடைக்காமலில்லை, ஆனால், கல்யாணத்திற்கு முன் அம்மா போக விடவில்லை, கல்யாணத்திற்குப் பின் சந்தர்ப்பம் போக விடவில்லை! எங்கே, வீட்டையும், குட்டீஸையும் விட்டுவிட்டு போவது..சிலசமயங்களில் தோன்றுகிறது, ஒருவேளை நாம் தான் ரொம்ப நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, நாம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காதென்று!ஒருவேளை நாம் care-givers-ஆக இல்லாமலிருந்தால், equations மாறுமோ! மீனா, நாம் லைப்ரரில்யிலிருந்து எடுத்துப் படித்தோமே...அம்பையின் புத்தகம்..வீட்டின் மூலையில் சமையலறை..ஞாபகமிருக்கிறதா..நிறைய விவாதித்தோமே! நான் இதுவரைக்கும் ஆயிரம் தோசைகள் செய்திருப்பேனா..நீ எவ்வளவு செய்திருப்பாய்?:-)


இன்னும் ஒன்று சொல்லவேண்டும் மீனா, யூ வில் பி எக்சைட்டட்..எங்கள் அலுவலகத்தில் நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு குழுமம் உருவாக்கியிருக்கிறோம்..எங்காவது ஓரிடத்ட்க்ஹில் நாம் நாமாக இருக்கவேண்டுமில்லையா! எங்கள் கம்பெனி ஜிஎம் முதல் எல்லோரும் அதில்! நினைவிருக்கிறதா, நாம் காலேஜில் விளையாடுவோமே கிறிஸ்மா, கிறிஸ்சைல்ட்...அதிலிருந்து ஆரம்பித்து, காலேஜில் ஒரே கலர் தீம் வைத்து உடைஉடுத்திக்கொண்டு வருவோமே..அப்புறம் புடவை டே இதெல்லாமே..இங்கேயும்..விளையாட்டுப் போட்டிகள், எல்லோரும் ஒரே கலர் குர்தா..மாதத்தில் அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று ப்ரீக் அவுட்..என்றாவது ஒரு நாள் பாட் லக்! எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்!

இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! மதிய உணவிற்கு லேடிஸ் மட்டுமாக அமர்ந்து சாப்பிடுவோம்..அப்படிதான் நேர்ந்துவிடுகிறது..அவ்வளவு கிண்டலும் கலாட்டாவுமாக, சிரிப்புமாக..அப்போதுதான் தெரியும், ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குறும்புப்பெண் ஒளிந்துக்கொண்டிருப்பதை! பசங்க கிண்டல் செய்வாங்க, “என்ன மேடம், அவ்வளவு சிரிப்பு, நீங்களா ஒருத்தருக்கொருத்தர் பார்த்து, ஹேய், நீ இன்னிக்கி ரொம்ப அழகாயிருக்கே” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்குவீங்களா” அப்படின்னு! எவ்வளவு கிண்டல் பாரேன்! அப்புறம் பாட் லக் வைத்திருந்தோம்..அதுவும் நாங்கள் பெண்கள் மட்டும்! உடனே,பசங்க, “மேடம், இது சூசைட் அட்டெம்ட் இல்லையா, நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடறது?!” “நீங்க இபப்டில்லாம் கிண்டல் செஞ்சா உங்களுக்கு கொடுத்துடுவோம்னு நினைக்காதீங்கன்னு” சொல்லிட்டு நாங்க ஜாலியா பாட் லக் எஞ்சாய் செய்தோம்! ஒன்றாக ஒருமுறை சினிமாவுக்குக்கூட போயிருக்கிறோம், அலுவலக் பெண் தோழிகளாக! இதுதான் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்றாட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட!

ஓக்கே மீனா, ரொம்ப போரடிக்க விரும்பவில்லை! நாந்தான், கடிதம் எழுதினா பக்கம் பக்கமா பரிட்சை பேப்பரை விட அதிகமா எழுதுவேனே...விடுமுறைக்கு நாங்கள் சென்னை வருவோம், தொலைபேசியில் அழைக்கிறேன்!

N. B: இன்னும் இந்த “Guess me!" அப்புறம் “open with smile" இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! :-) (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)



வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், 'மனசைப் பிழியற' மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மாவை இதைத் தொடர அழைக்கிறேன்!

Tuesday, March 31, 2009

மாட்டு ஜூஸ்..

பொறுமைக்கு சோதனை + மூளைக்கு வேலை = பப்புவை பால் குடிக்க வைக்கறது! ஆனால், அவள் என்னதான் பிரச்சினை செய்தாலும், அழுதாலும், இப்போது அவளுக்குத் தெரியும் கண்டிப்பா குடிச்சுதான் ஆகணும், தப்பிக்க முடியாதுன்னு!! ஆனா ஒன்னு, அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் அவளை amuse செய்ய! ஒருதடவை வொர்க் அவுட் ஆனது அடுத்த முறை சுத்தமாக வேலைக்காகாது!

1. சிடி-கள் - பல சமயங்களில் உதவும், ஆனா “பப்பு குடி, பப்பு குடி” ன்னு ரீப்பிட்டிக்கிட்டே இருக்கணும்! (எங்க ஆயாவை எப்படில்லாம் லொள்ளு கொட்டியிருக்கேன், அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்படின்னு நினைக்கிறேன்!)


2. காலை நேரமாயிருந்தால், வேன் கிட்டே போய் குடிக்கலாம் என்றால், வீட்டிலேயே குடிக்கறேன் என்று குடிப்பாள், ஆனால் நான் அதே ரிப்பீட்டு போட்டுக்கிட்டு இருக்கணும்!


3. ஸ்ட்ரா - கொஞ்ச நாள் பலன் தந்தது.

4. ஏதாவது ஆக்டிவிட்டீஸ்-ற்கு பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, பாலைக் குடிச்சு முடிச்சப்பிறகுதான் என்று ஒரு செக்!

5. பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!

6. ரிவர்ஸ் டெக்னிக் - பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்! அதனால், பால் தம்ளரை அவளது கையில் கொடுத்து விட்டு, அவள் மடியில் தலை வைத்து திரும்ப அதே ரிப்பீட்டு.."அம்மா, குடிங்க அம்மா"!!


7. எண்கள் - 1 - 10 சொல்வதற்குள் (முன்னாடி இந்த டெக்னிக் வேலை செய்தது..இப்போது எப்போவாவது!!)

8. பேப்பர் கப்ஸ்

9. சாஸர் அல்லது குட்டிக் கிண்ணத்தில்...

...இன்னும் பல!! இப்படியெல்லாம் செய்து தம்ளரை காலி செய்ய வைத்ததும் நமக்கு வருமே ஒரு ஆயாசம்+சோர்வு..கூடவே கொஞ்சம் ஜாலி...இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரீ-யா இருக்கலாம்-னு! huh! :-)..ஆனால், இவை எதையுமே செய்யாமல் அவளாகவே எடுத்துக் குடிக்கும் ஓர் நாளை கனவு கண்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால், உள்மனசுக்குத்த் தெரியும்..அந்த நாள் வர இரு பத்தாண்டுகள் வேண்டுமென..ஏனெனில் DNA அப்படி!! DNA-வை மீறி அற்புதங்கள் நடக்குமா??

*மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார். ஆரஞ்ச் ஜூசைக்காட்டி இது என்ன, "ஆரஞ்ச் ஜூஸ்", ஆப்பிள் ஜூசைக்காட்டி, இது என்ன, "ஆப்பிள் ஜூஸ்", பாலைக் காட்டியதும் மக்கள்ஸ் சொல்வாங்க, "இது மாட்டு ஜூஸ்" !!

Monday, March 30, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, தம்பிக்கு அந்தப் பெயர்தான், அதுவும் தலைப்பெழுத்தையும் சேர்த்தே வைக்க வேண்டுமென அடம்பிடிக்குமளவிற்கு! பள்ளி பருவத்தில், ஒரு சம்மர் கேம்பில், இதே கேள்வியை எதிர்கொண்டபோது, எனது பிடித்தவர்கள் பட்டியல், அன்ட்ரூ அகாஸி, Gaby (Gabriella sabatini), பிரபாகரன், வீரப்பன் மற்றும் நாடியா கோமோன்ஸ்க்கி(ஜிம்னாஸ்டிக் வீராங்கனை) என்றிருந்தது! கல்லூரி பருவத்தில், கிரண் பேடியும், ஷாருக்கும், வீன்ஸ் வில்லியம்ஸூம், கலாமும் என்று பட்டியல் வளர்ந்தது!

one fine day, I learnt, எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!
இப்போதெல்லாம், இவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லையென்று சொல்லிவிடமுடிவதில்லை! ஒருவேளை நான் வளர்வது நின்று விட்டதாவெனத் தெரியவில்லை..ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!

என்னைக் கவர்ந்தவர்கள் எனும் தொடர்பதிவுக்கு சகோதரர் ஜமால் அழைத்திருந்தார். மிகத் தாமதமாக பதிவிட்டிருக்கிறேன்....தவறாக எண்ணமாட்டீர்கள் என் நினைக்கிறேன்!! எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! :-) அப்புறம் இந்த டேக்கை விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்..

Saturday, March 28, 2009

கசகச பறபற - சிறார் புத்தகம்!!



புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்


பப்பு-விற்கு, கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறியலாம் அம்மாக்களின் வலைப்பூவில்!

Friday, March 27, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்....உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன....மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன....பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

Thursday, March 26, 2009

வரலாற்று நினைவுகளும் தலைமுறைப் பெருமைகளும்!

எனது ஆயா(கொள்ளுப்பாட்டி)வின் வீர வரலாற்றைச் சொல்லும் பதிவைக் கண்டேன், முனைவர் ரத்தின புகழேந்தியின் வலைப்பூவில். ஆயாவின் விடுதலைப் போராட்ட வாழ்வின் அனைத்து விபரங்களோடும், சுவாரசியமான குறிப்புகளோடும்! பெண்கள் வெளியே வருவதும், தனியாக நடமாடுவதும் கூட கட்டுப்படுத்தப் பட்ட அன்றைய நாளில், ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பாரதிக்கு தடை விதிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், கடலூரிலிருந்த ஆயா வீட்டிற்கு வந்து அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறார்.

சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் நாளேட்டு மலர்களில் ஒரு சில வரிகள் அல்லது பத்திகள் தியாகப் பெண்மணிகளின் செய்தியைத் தொட்டுச் செல்லும்! எப்போதாவது, வரலாற்று/பெண்ணிய ஆராய்ச்சி மாணவர்கள் கட்டுரைகளில் இவர்களின் விபரங்கள் தொகுக்கப்படுவதுண்டு! ஏனோ தென்னாட்டின் பல வீர பெண்களின் விடுதலைத் தியாகங்கள் மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் இருக்கும்போது, அவ்வப்போது வரும் இப்பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றன..ஞாநியின் நெருப்பு மலர்கள் புத்தகம் முழுக்க முழுக்க, விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் பெண்களின் பங்களிப்பைப் பேசிச் செல்கிறது!

முனைவர் இரத்தினபுகழேந்தியின் பதிவு - அஞ்சலை அம்மாளைப் பற்றி

முனைவர் ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு நன்றி! இவர் கதை, கவிதை, கட்டுரை என பல தளங்களில் பங்களிக்கிறார்!

ஆயாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த பதிவுகள் பற்றிய தொகுப்பு - நட்சத்திர வாரத்தில் பதிவிட்டது!

Tuesday, March 24, 2009

இனியா இன் ஸ்கூல்!!

இனியா அந்தப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பிலிருந்த பலரும் அவளைப் போலத்தான், ஐந்தாம் வகுப்பை வேறு ஒரு பள்ளியில் படித்தபின், ஆறாம் வகுப்பிற்கு அந்தப் மேனிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தனர். அவளுடனே படித்த பலரும் அதே பிரிவில் இருந்தனர். பழைய பள்ளியில் எதிரிகளாயிருந்தவர்களும் இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் நண்பர்களாகிவிட்டிருந்தனர். இது அவர்களது சிறு பள்ளியை போல அல்ல,
பெரிய கட்டிடங்களும், அசெம்ப்ளி ஹாலும், மிகப் பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதுமாயிருந்தது இந்த மேனிலைப் பள்ளி. குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டிருப்பது போலத் தோன்றியது. இனியாவின் வகுப்பில் மட்டும் நாற்பத்தைந்து பேர் இருந்தனர். ஆனால், அவளுக்கு தன் வரிசையில், முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்தது! இனியா, நித்யா, வாணி மூவரும்
நண்பர்கள். மூவரும் படித்த கதைப்புத்தகங்களைப் பற்றியும், சுட்டியின் கார்ட்டூன்களைப் பற்றியும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பர்.

அவளது வகுப்பாசிரியை சுதா. அவர்தான் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுக்கிறார். அந்த வருடத்திற்கான புத்தகங்கள் அவர்களதுப் பள்ளியில் கொடுப்பார்கள்,
ஆனால் முதல் டெர்ம் முடியும்போதுதான் கிடைக்கும். அதனால், எல்லோருமே கடையிலே வாங்கிவிட்டிருந்தனர். மேலும், அவர்களது ஊரிலே இருந்த புத்தகக் கடைகளில் தமிழ் பாடத்திற்கான புத்தகம் தீர்ந்துவிட்டிருந்தது. பலருக்கு அப்புத்தகம் கிடைக்கவில்லை. வகுப்பிலே ஒரு சிலர் வைத்திருந்த புத்தகத்தை அருகிலிருப்பவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு சுதா மிஸ் சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டிருந்தார்கள். ராதா இனியாவின் வரிசையிலே அமர்ந்திருந்தாள். இனியாவும் நித்யாவும் அவளுடன் இணைந்துக் கொண்டனர். வாணி கலைமாமணியுடன் சேர்ந்துக் கொண்டாள்.



முதல் வரிசையிலிருந்த சௌந்தரி நன்றாக படிக்கும் பெண் போல காட்டிக் கொண்டாள். அவள்தான் வகுப்பில் முதலாவதாக வருவாள் என்று அவளுடன் பழைய பள்ளியில் படித்த சிலர் சாட்சி வேறு கூறினர். இனியாவும் வாணியும் ஒரே பள்ளியிலிருந்து வந்திருந்தனர். அந்தப் பள்ளியில் இனியாதான் நன்றாக படிக்கும் பெண் என்று பெயர் வாங்கியிருந்தாள். மாத பரிட்சைக்கான அட்டவணையும் வந்துவிட்டது. அட்டவணையை சுதா மிஸ் போர்ட்டில் எழுதும் போதுதான் தமிழ்புத்தகங்களை கொண்டு வந்திருப்பதாக பள்ளியின் உதவியாளர் கணேஷ், சுதா மிஸ்ஸிடம் கூறினார். சுதா மிஸ் புத்தகங்கள் இல்லாதவர்களை எழுந்து நிற்கும் படிக் கூறி ஒவ்வொன்றாக வினியோகிக்கத் தொடங்கினார்.கலைமாமணியும் எழுந்து நின்றாள்.

“மிஸ், கலைமாமணிகிட்டே புக் இருக்கு மிஸ்” என்ற யாருடைய குரலோ சுதாமிஸ்-ற்கு கேட்டுவிட்டது!

“கலைமாமணி, உன்கிட்டே புக் இருக்கா?” என்றதற்கு, ”ஆமா மிஸ்” என்றாள் மெல்லிய குரலில்!

“அப்போ ஏன் நின்னுக்கிட்டிருக்கே, உட்கார்” என்று மிஸ் சொன்னதற்கு,

“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. வகுப்பறையே சிரித்து ஓய்ந்தது!!


“நீ பாஸாகி அடுத்த வகுப்பிற்கு போய்டுவே இல்லையா, அப்போ வேற புத்தகம்தான் படிக்கணும், சரியா” என்றபடியே சுதா மிஸ்-உம் சிரித்தார்கள்!!


மாதப் பரிட்சையும் முடிந்து விட்டது. எளிதாக இருந்ததாகத் தான் இனியா நினைத்துக் கொண்டிருந்தாள். தான் நன்றாக எழுதியிருப்பதாக இனியா நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.அந்த வாரயிறுதி முடிந்து, திங்கள் காலை வகுப்புத் தொடங்கியது. சுதா மிஸ் வந்தார்கள்..ஹூம்...ஆனால் விடைத்தாள்களை கொண்டுவரவில்லை. சௌந்தரி ஒருவித படபடப்போடு இருந்தாள்....யாருடனும் பேசாமல்! எப்போதும் நமது மூவர் குழு வாரயிறுதியில் விளையாடியதைப் பற்றியும், கிரிக்கெட் மேட்ச் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்! மீண்டும் சுதா மிஸ் வகுப்பு மாலை மூன்று மணிக்கு! கையில் விடைத்தாள் கட்டு! அனைவரது விடைத்தாட்கள் அவரவர் கைக்கு வந்துச் சேர்ந்தது.
சௌந்தரி விசும்பத் தொடங்கினாள். வகுப்பறை முழுக்க அவளையே திரும்பிப் பார்த்தது! இனியாவிற்கு சௌந்தரி ஏன் அழுகிறாள் என்று புரியவேயில்லை. சௌந்தரிதானே முதல் மதிப்பெண். எதற்கு அழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். மணியடித்தது. சுதாமிஸ் வகுப்பறையை விட்டகன்றார்கள், அடுத்த பரிட்சையில் எல்லோரும் இதைவிட அதிகமாக எடுக்க வேண்டுமென்று வாழ்த்தியபடி!

சௌந்தரி இப்போது தேம்பியழத் தொடங்கியிருந்தாள். இனியாவிற்கு புதிதாக இருந்தது, ” நீதானே தொண்ணூறியொன்று எடுத்திருக்கே, அப்புறம் ஏன் அழறே?”, என்றாள் சௌந்தரியிடம்.

சௌந்தரி சொன்னாள், “ நான் எப்போவுமே நூற்றுக்கு நூறுதான் எடுப்பேன், இப்போ குறைஞ்சுப்போச்சே!” !!

“அடுத்தப் பரிட்சையிலே பார்த்துக்கலாம், அழாதே, இப்போ அழுதா ஒன்னும் யூஸ் இல்ல” என்றாள் எண்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்த இனியா!

மதிப்பெண்கள் மட்டுமே நம்மை நிரூபிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், நாம் முன்பு செய்ததைவிட சிறப்பாக அடுத்தமுறைச் செய்வதே வெற்றி என்பது இனியாவிற்கு நன்றாகவே புரிந்திருந்தது! அந்தத் தன்னம்பிக்கையும் மனப்பாங்குமே எண்பதைந்து மார்க்குகள் எடுத்த இனியாவை கொண்டு முதல் மதிப்பெண் எடுத்த சௌந்தரியைத் தேற்றச் செய்தது!!




பி.கு 3 : குழந்தைகளுக்கான எனது முதல் கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! அதுதான் கடைசி என்று நினைத்து ஒரு சிலர் மகிழ்ந்துக் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது...அதான்!

பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.

பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.

Monday, March 23, 2009

ஓ..பேபி..பேபி!!

ஒரு சின்ன பட்டியல் - தமிழ்நாட்டில் பொதுவாக சிறார்களுக்கு வைக்கப்படும் செல்லப் பெயர்கள்! செல்லப் பெயர்கள் சிறு வயதில் வைக்கப்பட்டு எவ்வளவு வளர்ந்தாலும் அதே பெயர்தான் நிலைத்துவிடுகிறது....சில சமயங்களில் அந்த பெயரோடு உறவுமுறையும் சேர்ந்துக் கொள்கிறது. உதா: என் தம்பி "குட்டி" பப்புவிற்கு "குட்டி மாமா"வானது போல!!

பேபி - இது நமது அம்மா காலத்துச் செல்லப் பெயர். எனது பல நண்பர்களுக்கு ”பேபி அத்தை”கள் இருந்தனர்.

பாப்பா - இது பேபியின் தமிழாக்கம். பெ. பாப்பா, சி. பாப்பா என்றும் மறுரூபம் எடுக்கும் வீட்டில் ஒரு பாப்பாவிற்கு மேல் இருந்தால்!!

பாப்பி/பாப்பு - இது பாப்பா எனும் செல்லப் பெயரின் சுருக்கமே என் நினைக்கிறேன். மேலும் பாப்பாவை விட இது கொஞம் ஃபேஷனாக இருக்கிறது!

குட்டி - இது இருபாலருக்குமானது. எனது தம்பியின் பெயரும் இதே..ஆனால் அவனது செல்லப்பெயர் குட்டிமணி, அதை சுருக்கியதால் குட்டி. ஆனால், சிறுவயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் குட்டி என்ற பெயரில் பல குட்டி பெண்களும், பையன்களும் இருந்தனர்.

புஜ்ஜி - கொஞ்சம் நாய்க்குட்டி பெயர் போல தோன்றும். ஆனால், இந்த பெயரில் எனது பள்ளி நண்பர்களுக்கு கஸின்ஸ் இருந்தனர்.

அம்மு - இதுவும் பரவலாக இருக்கும் செல்லப் பெயர். ஒரு காலத்தில் ஃபேஷனபிளாக இருந்திருக்க வேண்டும்!

தம்பி/தம்பா - இது உறவுமுறையை குறித்தாலும், அன்போடு அழைக்கப்படுவதால் செல்லப் பெயராக இருக்கிறது. செல்லம் அதிகமாக ஆகிவிட்டால் “தம்பா” என்று உருமாறும். தம்பிகளை ”தம்பா ” என்றழைக்கும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.

பப்லு - இதுவும் சிறுவர்களுக்கானது. கொஞ்சம் குண்டாக இருப்பர்வளுக்கு பொருத்தமாயிருப்பதாகத் தோன்றும். (அந்தப் பெயரில் முதன்முதலாக பார்த்த சிறுவனின்
அபப்டியிருந்திருக்கலாமியிருக்கும்!!)

சின்னி - இது சிறுமிகளுக்கானது. கொஞ்சம் சுட்டித்தனம் இந்தப் பெயரில் ஒட்டிகொண்டிருப்பதுப் போல தோன்றும்! அழகாகவும் இருக்கிறது, நவீனமாகவும். இந்தப் பெயரில் ஒரு அக்காவைத் தெரியும் (குடும்ப நண்பர்)

பொம்மி - இதுவும் சிறுமிகளுக்கானது. பொம்மை போன்ற என்பது அர்த்தமாக இருக்கலாம்.


Guddi - இதுவும் பொம்மையையே குறிக்கும்..இந்தி வடிவம்! இந்தப் பெயரில் எங்களுக்கு விளையாட்டுத்தோழி இருந்தாள்.

சோட்டு - இது பையன்களுக்கானது என நினைக்கிறேன். நமது ”குட்டி”தான் இதன் அர்த்தம்!

ஆச்சி - இது பண்ருட்டி, சிதம்பரம் வட்டாரங்களில் சிறுமிகளுக்கான செல்லப் பெயர்!

ரிங்க்கு/டிங்க்கு - அர்த்தமிருக்கிறதாவெனத் தெரியவில்லை. ஆனால், பேஷனபிளாகத் தோற்றமளிக்கும்! சம்பக்/சந்தாமாமா போன்ற சிறார் இதழ்களில் கதாநாயக/நாயகிகளின் பெயராக பார்த்திருக்கிறேன்.


இவை தவிர கழுதை, எருமை என மிக மிக செல்லமாய் அழைக்கப் படும் பெயர்கள் கணக்கில் கொள்ளப் படவில்லை!! :-)

Thursday, March 19, 2009

பப்பு டைம்ஸ்!

Rant

ஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க!

என்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.

நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!



தலைக்கனம்!?!

பப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது. அதே ஸ்டையிலில், தலையை மேலே தூக்கி, அடுத்த அறையில் சென்று பார்த்தாள். நானும் ஆயாவும் மட்டும்தான் இருந்தோம் அப்போது. அங்கிருந்து கேட்டாள்,

“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது?”


”என்னை வந்துத் தூக்கிட்டுப் போ” என்னு சொல்றதுக்கு பதிலா!! :-) offer period முடியும் போது சொல்வார்களே..அதேபோல்!




Role play !?!

எங்க அம்மா, பெரிம்மாவையெல்லாம் அவளுடைய அம்மா என்றும் எனக்கு யாரையும் கொடுக்க மாட்டாளென்றும் கடைசியில் ”உனக்கு யாரு அம்மா?” என்று ஒரு கேள்வி கேட்பாள். நான் யாரை சொன்னாலும், “பெரிய ஆயா”, ”விழுப்புரம் ஆயா” என்று சொன்னாலும் அவர்களெல்லாம் அவளுடைய ப்ரெண்ட்ஸ். திரும்ப ”உனக்கு யாரு அம்மா?” என்ற கேள்வி! ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்... சில சமயங்களில் அவளாகவே..அவளை பால் குடிக்கவைக்க வேண்டியிருக்கும் சமயங்களில் என்னால்!

Wednesday, March 18, 2009

பப்பு பாடும் பாட்டு!

damara.mp3


அவளது பள்ளியில் கற்றுத் தந்த பாடல்! mp3 வடிவில் தந்த கானாஸுக்கு நன்றிகள்!!

MISHA என்றொரு ரஷ்ய மாத இதழ்



மிஷா - இந்த ஒரு வார்த்தை எனக்குள் கொண்டுவரும் உணர்வுகள்..நினைவுகள்..!!
அப்போது..(ஐந்தாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு)ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் நான் எதிர்பார்த்து காத்திருப்பது இரண்டு விஷயங்களுக்காக! ஒன்று பேப்பர்கார அண்ணா கொண்டு வரும் கோகுலம் புத்தகம், இரண்டு தபால்காரர் கொண்டுவரும் மிஷா புத்தகம்! மிஷாவின் ஒவ்வொரு இதழும் ரத்தினம்...ஆனால், அது அப்போதுத் தெரியவில்லை! அதற்குள் அவ்வளவு செய்திகள், கதைகள், விஞ்ஞான செய்திகள், சிறுவர்களுக்கான ஆக்டிவிட்டீஸ், விதவிதமான புதிர்கள்..மிஷாவுக்கு இணை மிஷாதான்! இந்த மிஷா, ஒரு குட்டி கரடிபொம்மை. அது, அப்போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் சின்னம்..அதுவும் ரஷ்யாவில் நடைபெற்றது என்று நினைவு!

மிஷாவை நினைத்தவுடன் எழுவது அந்த புத்தகத்தின் வழுக்கும் பக்கங்களும், மென்மையான ஒரு புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையுமே! என் நினைவடுக்களில் இன்னமும் அந்த வாசனையை உணர்கிறேன். எனக்கு ரஷ்யக் கதைகள் பொதுவாக பிடிக்கும்..ரஷ்ய இலக்கியங்களும் நமது இலக்கியங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எங்கோ படித்தேன்!
“செவ்வணக்கங்கள்”, போனி எம்-ன் “ரஸ்புடீன்”, அன்னா கரீனினா, கடைசி ஜார் மன்னன் சரணடைந்த அடர் சைபிரீயக் காடுகள், அந்தோன் சேகவ்-வின் கதைகள் முக்கியமாக பள்ளத்து முடுக்கில், பாலிசிக் பெத்புரூமஸ்(கதையில் வரும் சிறுவன்) சேர்த்து வைத்த ரூபிள்கள், செஸ்சில் பிரபலமாயிருந்த விளாடிமிர் (?) என்று என்று எனக்குள் எத்தனையோ ரஷ்யச் சின்னங்கள்தான்..எல்லாமே புத்தகங்கள் வாயிலாகத்தான்! புத்தகங்களும் வாசிப்பனுபமும் எவ்வளவு மகத்தான திறன் படைத்தவை!!

அல்டர்கோஸையும், ஹெர்குலிஸையும், யெலிராவையும், பூமி பற்றிய விஞ்ஞான தகவல்களையும் நான் அந்த வயதில் அறிந்துக் கொண்டது மிஷாவின்
வாயிலாகத்தான்! அதில் ஒரு பகுதி, சிறுவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள் பிரசுரிக்கப் படும். அதில் எப்போதாவது இந்தியாவிலிருந்து அதுவும் காஷ்மீர் அல்லது மும்பை அலல்து டெல்லியிலிருந்து யாரோ அனுப்பியிருப்பார்கள். அதைப் பார்த்ததும் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி..:-) அவ்வளவு ஏன், பாகிஸ்தானிலிருந்து என்று இருந்தபோதும் கூட மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்..நம்ம பக்கத்து ஊரு டைப் சந்தோஷம்தான்! (oh, silly me!!)

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)..அதாவது, எனது வழிகளில் கடந்துவரும் எதையுமே சேமிப்பவள். இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும், எனது பீரோவின் ரகசிய அலமாரியில் அதற்கோர் இடமுண்டு! பல பதப்படுத்தப்பட்ட இலைகள், ஹிண்டுவிலிருந்து வெட்டப் பட்ட காகிதத்துண்டுகள், பத்தாம் வகுப்பு ப்ராக்ரஸ் கார்டு + ஹால் டிக்கட், வாழ்த்தட்டைகள், இப்படிப் பல..! அதேபோல், கோகுலம், ஹிந்துவின் யங் வேர்ல்ட் இதெல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில். பெரியவர்களுக்கான ரீடர்ஸ் டைஜஸ்ட், விஸ்டம் (இது எங்களுக்காக வாங்கியது..;-)..ஆனால் நாங்கள் அப்படி நினைப்பதில்லை) விமன்ஸ் எரா இதெல்லாம் தனித்தனி அட்டைப் பெட்டிகளில்! அப்படித்தான் நான்கு வருடங்களுக்கு மேலாக வாங்கிய மிஷாவில் மூன்று வருடங்கள் + ஒரு வருடத்தில் சில இதழ்கள் மட்டும் !! பெரியவர்களுக்கான புத்தகங்கள் இப்போது இல்லை!! :-(


மிஷா புத்தகங்கள் பப்புக்கு இந்த வயதில் ஏற்றவை அல்ல! அவளாகவே படிக்க ஆரம்பித்த பின்னர் தான் இதன் அருமைத் தெரியும் என எண்ணுகிறேன்..ஆனால், அந்த குணாதிசயம் எனது சரித்திரத்தில் இல்லை..அதாவது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ட்ரெஷர் செய்ததை நான் மதித்தது இல்லை..அது அவர்கள் செண்டிமென்ட். அவர்களுக்கு முக்கியம்...எனக்கல்ல என்பது போல! ;-). எனக்கு மிஷா-வைப் போல் பப்புவிற்கு டோரா போல இருக்கிறது,இப்போது!! (Both are Mascots too!)


USSR பிரிந்தபின் மிஷா வருவது நின்று போயிற்று. எவ்வளவோ சொன்னாலும், மிஷாவைப் பற்றியும் அதனுடன் எனது பிணைப்புகளையும் இன்னும் முழுதாக சொல்லவில்லை என்ற உணர்வுதான் ஏற்படும்.அதனால், முடிவாக, USSR -ரையும் மிஷாவையும் அவர்கள் என்னிடமிருந்துப் பிரித்திருக்கலாம், அதன் பின் பல காரணிகளிலிருக்கலாம்..ஆனால், எனக்குள்ளிருந்து மிஷாவையோ, USSR-யோ ஒருபோதும் பிரித்துவிட முடியாது, எந்தவொரு காரணியாலும்!!

Misha, I love you!


பிகு
இது கடந்த வருடத்தில் எழுதியது...தீபாவின் மிஷா பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே என் சிறு வயது புத்தகங்களைக் குறித்து எழுதியிருந்ததால், இதை வெளியிடாமல் வைத்திருந்தேன்! நன்றி தீபா, நினைவூட்டியமைக்கு!

Monday, March 16, 2009

Euphoria - Dhoom pichak தூம்

euphoria. எனக்கு மிகவும் பிடித்த பத்துப் இந்தி பாப் பாடல்களை தெரிந்தெடுக்கச் சொன்னால், அதில் euphoria band-ன் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. ராக்-கை இந்தி பாப் உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவர்கள் என்றேக் கூறலாம், அதுவும் எல்லோரும் விரும்பும் வகையில். எலக்ட்ரிக் கிட்டார், மற்றும் இந்திய இசை வாத்தியங்களான டோலக், தபலா வை சரியான பதத்தில் கலந்து மனம் மயக்கும் இசை ஆல்பங்கள்! ஐந்து ஆல்பங்களில் மூன்று என்னை கவர்ந்தவை. சில ஆல்பங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டோதான் தேறும்..ஆனால், euphoria-வின் ஆல்பங்களில் ஒரு பாட்டுக் கூட சோடை போகாது!

Palash Sen. ரசிக பெருமக்களால் Polly என்று செல்லமாக அழைக்கப் படுபவர். இவர்தான் லீட் பாடகர். மருத்துவம் இவரது தொழில். இப்போதும் ப்ராக்டீஸ் செய்கிறாரா தெரியவில்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் Dhoom Pichak Dhoom,Maeri,Mehfuz, Phir Dhoom, Mantra மற்றும் Aana Tu Meri Gully in that order! இந்த எல்லாப் பாடல்களுமே ஏதோவொரு விதத்தில் எனக்குள் மாறாத இடத்தை பெற்றவை! பல்வேறு நினைவுகள்...சில பாடல்கள் இடங்களோடு தொடர்புடைய நினைவுகள்..பல மனிதர்களோடு தொடர்புள்ள நினைவுகள்..அல்லது நிகழ்வுகளோடு தொடர்புடைய நினைவுகள்..ஓ..பதின்ம கால நினைவுகள்!!


Dhoom Pichak Dhoom

இந்தப் பாடலை எப்போதும் கேட்பதைவிட என்றாவதுக் கேட்டால் கூட போதும், புத்துணர்ச்சி பெறுவதற்கு! இதில் இருக்கும் ஒருவித வாண்டர்னெஸ்...எனது விட்டேற்றியான கல்லூரிப் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்தால் என்ன என்று பலமுறை நான் கற்பனை செய்திருக்கிறேன்...This song has a special place in my heart! வீடியோவும் பார்க்க நன்றாயிருக்கும்!



Maaeri

பாடல் வரிகளுக்காகவே பிடித்தது, காதல் தோல்விகள் எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும்!!
Polly பாடும் விதத்துக்காகவும், ரயில் எனக்குப் பிடித்த நாஸ்டால்ஜிக் வாகனமாக இருந்ததாலும்,கடந்துப் போன காதலை நினைத்து பாடலில் உருகுவதாலும்...எல்லாவற்றுக்கு மேலாக அவரது காதலி திரும்பி வந்துவிட வேண்டுமென்று நினைப்பதாலும்...

Duniya Parayi chod ke aaja..
Jhoote saare riste tod ke aaja..
Sau rabdi tujhe ek baari aaja..
Ab ke mile toh honge na judaa......Na judaa





(பாடல்கள் : thanks to youtube!)
இவர்களுக்கு இணையத்தளம் http://www.dhoom.com .

Sunday, March 15, 2009

ரோஜாக் கூட்டத்தோடு ஒரு மணிநேரம்!!

அலுவலகத்தில் அதுவும் கேபினுக்கு பக்கத்தில் அல்லது ஒரு ஜன்னல் வழியே நமது பெற்றோர் எட்டி நம்மை, நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சிலர் விருப்பபடலாம், ஒரு சிலர் விருப்பபடாமலும் ஏன் அபப்டி ஒரு எண்ணத்தையே வெறுக்கலாம். அது நாம் எந்தப் பக்கத்திலிருக்கிறோமென்பதையும் பொறுத்திருக்கிறது...;-). By this time, you would have got the idea. ஆமாம், என்னை அப்படி என் பெற்றோர் பார்க்க(கண்காணிக்க!?!) விரும்பியிருந்தால் அவ்வளவுதான்..உண்டு இல்லையென்றுச் செய்திருப்பேன்.(அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சுதான் பழிவாங்கிட்டாங்களே..ஒரே ஸ்கூல்!!)ஆனால், பப்புவை,அவளது பள்ளி நேரத்தில் பார்க்க மிகுந்த ஆவலோடு கிளம்பினேன்!

அன்று பப்பு பள்ளியில் observation day. 9.30 AM to 10.30 AM. உள்ளே சென்றதும் என் கண்கள் பப்புவைத் தேடின. “குறிஞ்சி மலரோட மம்மி ” என்று ஒரு குட்டிப்பெண் பக்கத்து குட்டிப் பெண்ணிடம் சொன்னதைக் கேட்டேன்.huh..என்ன ஒரு அறிமுகம்!! ஆனால், அந்த சுட்டிகளை யாரென்று எனக்குத்தான் தெரியவில்லை. வாட் அ ஷேம்!! காலையின் வாகனத்தில் ஏற்றும் போது பார்த்திருப்பார்களாயிருக்கும். எனக்கும் பெயர் தெரிந்திருக்கலாம்!! but it was a good feeling, you know!

எல்லோரும் சீருடையில், அவரவர்களின் பாயில் அமர்ந்திருந்தார்கள். ஹா..இதோ பப்பு, என்னைப் பார்த்து ஒரு ஆச்சரியம், ஒரு வெட்கப் புன்னகை! அவளது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தில் நான். ஏதோ செய்துக் கொண்டிருந்தாள், கலர் பாக்ஸ் என்று நினைக்கிறேன். அதைச் செய்து முடித்துவிட்டு, பெட்டியில் போட்டு அதன் இடத்தில் வைக்கச் சென்றாள். என்னிடம் வந்து “நீ ஆபிஸ் போகல?” என்றாள். போகணூம் பப்பு, உன்னைப் பார்க்க வந்தேன்! என்றேன்.

வேறு ஏதோ எடுத்து வந்து செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் வெண்மதி. இரட்டைக் குடுமி போட்ட ஒரு குட்டிப் பெண். பப்பு வீட்டில் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது இவளைப் பற்றிதான். என்னால், அவளை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. பப்பு திரும்ப அடுத்தப் பொருளை எடுக்கச் சென்றபோது, “நீ ஆபிஸ் போ மாட்டே?' என்றாள்! அவ்வ்வ்வ்வ்! ”போவேன் பப்பு” என்றேன்!she has got my genes! (hostel-ல் என்னை யாரும் பார்க்க வந்தால் சுத்தமாக பிடிக்காது. நீங்க என்ன எடுத்துக்கிட்டு வரணும்னு நினைக்கறீங்களோ, அதை எனக்கு கூரியர் பண்ணிடுங்க, பார்க்கணும்னா நாந்தான் வருவேன். யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது..அப்படின்னு கண்டிஷன்லாம் போட்டேன். என்ன சொல்லி என்ன, அதையெல்லாம் கேட்கல..ஆனா, வர்ற frequency மட்டும் குறைஞ்சது!)

எடுத்து வந்ததை செய்தபின் , பாயை சுருட்டி ஒரு டப்பாவில் வைக்கவேண்டும். அந்த டப்பா எனக்குப் பின்னால் இருந்தது. பாயை வைத்துவிட்டு, என்னருகில் வந்து, ”ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? என் ஃப்ரெண்ட்சை பாரு” என்றாள். (அடுத்த பல்ப்!) பிறகு அவர்களையும் பார்க்கத் தொடங்கினேன். மெதுவாக ஆயாம்மாவிடம் பேச்சுக் கொடுத்ததில் தண்ணொளியையும், தனுஷையும் அறிந்துக் கொண்டேன்.

பப்பு பொருட்கள் எடுக்க/வைக்க செல்லும்போது குதித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்வதைக் கவனித்தேன். (எப்போதும் அப்படியா, அல்லது நானிருப்பதாலாவென்றுத் தெரியவில்லை.) ஒன்று மட்டும் என்னை ஆறுதல் படுத்தியது, பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். எதைச் செய்யவும் பயப்படவோ கலங்கவோ இல்லை. மேலும் ஷீ இச் மெத்தாடிக்கல். ( இ-திருஷ்டி பொட்டு!)

பள்ளியிலேயே சொல்லிவிட்டாலும் பப்புவின் ஆண்ட்டிக்கும் மாண்ட்டிசோரி அம்மையாருக்கும் நன்றி!

பப்புவின் ரெண்டு பைசா - பிட்டுக்குப் ஃபோட்டோ!

இந்தக் கறுப்பு-வெள்ளை ஓக்கேவா?!



வரிக்குதிரை படத்தை தந்த இணையத்துக்கு நன்றி. நடுவில் கோடுகள் போட்டது பப்பு.

Wednesday, March 11, 2009

Introspection

mine first

"உங்க பொண்ணு, இன்னைக்கு, பிஸ்கட் கொண்டு வந்த பசங்ககிட்டே போய் பிஸ்கெட் கேக்கறாங்க” என்று உங்களிடம் சொல்லப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? உங்கள் மனதிற்குள் என்ன எண்ணங்கள் ஓடும்?

தொண்டைக்குள் ஒரு உருண்டை அடைத்திருப்பது போல..வயிற்றுக்குள் ஏதோ நெகிழ்வது போல!!

எல்லாவற்றுக்குமேல் you are helpless and its beyond your control!

அதற்காக, அவளுக்கு நாங்கள் பிஸ்கெட்டுகள் கொடுப்பதில்லை என்பது கிடையாது. அவளுக்காக அவளது விருப்பமான பிஸ்கெட்டுகள், எல்லா சுவைகளிலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கின்றன. மாலை தூங்கி எழுந்ததும் சாப்பிடுவது அவைகளைதான். ஆனால், ஒரு நொறுக்குத்தீனிப் போலத்தான் இதுவரை பழக்கியிருக்கிறோம்..ஒரு நேரத்து உணவைபோல அல்ல!

ஆனால், காலையில் உணவாக அதை எப்படிக் கொடுத்து விடுவது என்று, குட்டி குட்டி பூரிகள், சேமியா உப்புமா, பழங்கள், மற்றும் சப்பாத்தி.

அவளது சில பள்ளி நண்பர்கள் காலை உணவாக உலர் பழங்களையும், க்ரீம் பிஸ்கெட்டுகளையும் கொண்டு வருகிறார்கள். பப்பு மூலமாகவும், அந்த நண்பர்களின் தாய் மூலமாகவும் நான் அதை அறிவேன். ஏற்கெனவே நான் ஆண்ட்டியிடம் பேசியுள்ளதால், பப்பு கொண்டு செல்லும் உணவை உண்டு முடிக்கிறாளாவென கவனித்துக் கொள்வார். ஆனால், இதைப் போன்றதொரு சூழ்நிலையில், அவரும்தான் என்ன செய்வார்?!

க்ரீம் பிஸ்கெட்டுகள் பப்புவுக்கு பிடிக்காது, சிறிது நாட்கள் முன்பு வரை! உப்பு பிஸ்கெட்டுகளும், மாரி வகை பிஸ்கெட்டுகளும் விருப்பம். ஆனால், இப்போது க்ரீம் பிஸ்கெட்டுகள் மேல் விருப்பம்..இல்லை..அதிலிருக்கும் க்ரீம் மீது மட்டுமே! அதன்பின் அந்த பிஸ்கெட்டுகள் காகத்துக்கு! இவையெல்லாம் நொறுக்கு தீனியாக ஓக்கே..ஆனால் இதை ஒரு உணவாக கொடுத்து விட விருப்பம் இல்லை..


ஆனால் ஆயா சொன்னது,”குழந்தைங்க அப்படிதான், ஒன்னைப் பார்த்து இன்னொன்னு ஆசைப்படும்..”. yes, I know it is instantaneous! இப்போது உணவு டப்பாவில், காலை உணவோடு தினமும் இரண்டு பிஸ்கெட்டுகளும்.

(இதை எழுதி வைத்திருக்கும்போதுதான், லஞ்ச் க்ரூப்பில் இதைப் பற்றிப் பேச்சு வந்தது. பலருக்கும், பப்புவை விட பெரிய குட்டீஸ் இருக்கும் வீடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் இருப்பதை அறிந்தேன்! So, I am not alone ;-). )

Now Pappu's

எனக்கு முடி எவ்ளோ நீட்டா ஆகிடுச்சு, பாருங்க அம்மா!

(யெஸ், ஆச்சி என்றுக் கூப்பிடுவது மெதுவாக ஃபேடிங் அவே..”அம்மா” என்றழைக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, நாங்கள் எதுவும் சொல்லாமலேயே!)

ம்ம்..நாளைக்குப் போய் வெட்டலாம் !

இல்ல, நான் காலையிலே கீரை சட்னி சாப்பிட்டேன் இல்ல, அதான் வளர்ந்துடுச்சு...

கீரை சட்னியா..ஓ..தொவையல், அது..(முடி வளரும் என்றுச் சொன்னப் பிறகுதான் சாப்பிட்டாள்)

ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!

அட ஆமா!!!

Monday, March 09, 2009

pappu-doh - part II

part - I

இறுதிவடிவம்!




உருண்டைகளாக்கி, லேசாக தட்டி, ஓட்டையிட்டு, வண்ணங்கள் காய்ந்தபின் சணலிட்டு கட்டினோம். ஒன்றிரண்டை நான் செய்தபின், மீதியை அவளாக செய்ய விருப்பம் காட்டினாள். மூக்கு வைக்க முயற்சித்தோம்..ஆனால் வொர்கவுட் ஆகவில்லை...காய்ந்தபின் சரிவரவில்லை!



பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

Saturday, March 07, 2009

Happy women's day!

சுதா அக்கா. பத்தாம் வகுப்பு. நன்றாகப் படிப்பார்கள். பார்ப்பவரை வசீகரிக்கும் அழகிய புன்னகை. மாநிறம். பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்களின் கருத்துக் கணிப்பின் அவர் பெயர் முதலில். (கண்டிப்பாக இவர் டீச்சர் பெண் இல்லை, எனது பழைய இடுகையோடு எதையும் அனுமானிக்க வேண்டாம்..;-)). ஒரு நாள், தலைவிரி கோலமாக, முகத்த்தில் எந்த திருத்தங்களோ(பொட்டு, பவுடர், மை மற்றும் பூ) இல்லாமல் பள்ளிக்கு வந்தார். நாங்கள் அப்போது ஏழாம் வகுப்பு.சுதா அக்கா தான் நன்றாக படிப்பவர்கள் எல்லோருக்கும் ரோல் மாடல் மாதிரி. அன்று எங்கள் வகுப்பு என்றில்லை..எல்லா வகுப்புகளிலும் பிரேயர் மற்றும் மதிய உணவு இடைவேளைகள் “ஏன் சுதா அக்கா இபப்டி வந்திருக்காங்க?” என்றே கேள்விகளாலும், அனுமானங்களினாலும் நிரம்பியிருந்தது.

“யாரோ அவங்களை ஃபாலோ பண்றாங்களாம்...” என்ற விடை எங்களனைவருக்கும் அன்று சாயங்காலத்திற்குள் கிடைத்தது.

பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பின் தொடர்ந்திருக்கிறார் யாரோ ஒருவர். ஆனால் எங்கள் பள்ளி மாணவர் கிடையாது. சுதா அக்காவை வழக்கம் போல பார்க்க இரண்டு வாரங்கள் ஆனது. அந்த வருட இறுதியில் அவர் மூன்று பாடங்களில் முதலிடம் பெற்றார், மொத்தமாக முதலிடம் பெறாவிட்டாலும்!

சுதாக்கா அப்படி செய்தது(அலங்கோலமாக வந்தது) சரியா தவறா என்பதே எனக்கும் ஞானசௌந்தரிக்கும் பட்டிமன்றமாக இருந்தது, நெடுநாட்கள் வரை!



சவிதா அக்கா. ஒன்பதாம் வகுப்பு. சுதா அக்கா மாதிரியேதான் என்றாலும், இவர் டீச்சரின் பெண். அன்று காலையில் நான் சைக்கிள் நிறுத்தும்போது, சைக்கிள் ஸ்டாண்ட் முகப்பற்கு கொஞ்சம் தள்ளி ஒரு வித பதற்றத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்கள். புன்னகைத்துக் கொண்டோம்.

“டீச்சர் வந்துட்டாங்களா?” என்றார் என்னிடம். அதாவது என் பெரிம்மாவை.

”இன்னும் இல்லக்கா , வந்துக்கிட்டிருக்காங்க, என்றேன்.

ஆனாலும் ஏன் இங்கே நின்றுக் கொண்டு, முகம் வேறு சரியில்லை. ஆனால் அப்போதெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.

“ஏன்க்கா” என்றேன்.

“இல்ல, ஒருத்தன் அங்கே சைக்கிள் மேலே உட்கார்ந்திருக்கான் இல்ல, இன்னைக்கு காலைலேர்ந்து பின்னாடியே வந்துக்கிட்டிருக்கான் எங்கேபோனாலும். பயமாருக்கு”.

பள்ளி பிரேயருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

”டெய்லி ஃபாலோ பண்ணுவான். நான் கண்டுக்கலை. இன்னைக்கு எங்க அம்மா ஊருக்கு போயிருக்காங்க, +2 போல இருக்கு அவன், அதான் “, என்றார்.

அதன்பின் நான் எதுவும் ஃபாலோஅப் செய்யவில்லை.


மேலே சொன்னவையெல்லாம், கொஞ்சம் பழைய மேட்டர். இது மிக சமீபத்தில் நடந்தது.



ஒருவர் பாலோ செய்கிறார், நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது பதின்மம் தொடங்கும் வயதில் எவ்வளவு அச்சுறுத்தலையும் மன உளைச்சலையும் தருகிறது,
அதுவும் நாம் பார்க்கும் படி இருக்கிறோம் என்ற காரணத்திற்காக.இதில் அவர்களின் பங்கு ஒன்றுமேயில்லை, கொஞ்சம் கவரக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அந்த பையனும் பதின்மத்தில் இருக்கலாம்.இன்ஃபாச்சுவேஷன் என்று யாரேனும் சொல்லலாம்.

சரி!ஆனால், செய்யாத ஒரு காரியத்திற்காக பயப்படவும், குற்றவுணர்வு கொள்ளவும் இந்த அக்காக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? சுதா அக்காவை, தான் என்றும் அழகில்லை என்று காண்பித்துக் கொள்ள,அந்த வயதில் தான் விரும்பும் அனைத்தையும் இழக்கச் செய்து, “நான் அழகா இருக்கறதுனாலே தான், நான் அப்படியில்லை” என்றுக் காட்டிக் கொள்ள செய்த உணர்வுக்குப் பெயர் என்ன?

சிநேகம்

என் உயிர்ப்பறவை
உந்தன் நிழல் தேடிப் போகும்
ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்
நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!
எங்கோ தூரத்தில் கேட்ட
மணியோசையாய்...
தொலைவில் பெய்தமழையால்
மூக்கை நெருடும் மண்வாசனையாய்
மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...
உன்னைச் சந்திக்கும் காலம்
வருவதற்குள்
என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!





(உபயம் : பள்ளிக்காலத்து நோட்டுபுக்)

Thursday, March 05, 2009

பிடித்தமானவர்கள் - பப்புவின் லிஸ்ட்!

நிலாவும் அம்மாவும் நெடுநாட்களுக்கு முன் பப்புவை ஒரு தொடர்பதிவு-க்கு அழைத்திருந்தார்கள்! பப்புவுக்கு பிடித்த நபர்கள் பற்றி!

பப்புவிற்கு எல்லாரையுமே பிடிக்கும்..அவளிடம் பேசுகிற, அவளைப் பார்த்துக் புன்னகைத்துக் கொண்டே எங்கள் தெருவைக் கடக்கும் நபர்கள், பலூன் விற்கும் ஆயா, தண்ணீர் கொண்டு வரும் அண்ணா என எல்லோரையுமே! மெத்தப் பிடித்தது, ஆயாக்களையும் தாத்தாவையும்! ஆனால் பப்புவுக்கு பிடித்த இன்னொரு பெரிய பட்டியலுண்டு!

சண்முகம் ஆயா - இவர் பப்புவை 4 மாதத்திலிருந்து 14 மாதங்கள் வரை பார்த்துக் கொண்டார்...இல்லை...வளர்த்தார் என்றே சொல்லலாம். கும்பகோணத்திலிருந்து வந்து எங்கள் வீட்டோடு தங்கியிருந்தார். "டாடா சொல்லு" என்று பப்புவிற்கு கையை பிடித்து ஆட்டுவார், நாங்கள் அலுவலகம் செல்லும்போது! அவரது பெண்ணிற்கு வேலைக் கிடைக்கவே சென்றுவிட்டார், பெண்ணின் திருமணம் முடிந்தபின் வருவதாகக் கூறி! போகும்முன் பப்புவின் ஃபோட்டோவை வாங்கிக்கொண்டார் ஞாபகமாக...:-)

குண்டு ஆயா - பக்கத்துத் தெருவிலிருந்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே இவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது..பப்பு ஓடியாட ஆரம்பித்திருந்ததால், அவளின் பின் செல்ல மிகவும் கஷ்டப்பட்டார். முடியாததினால், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

செல்வி - I - பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர். வீட்டோடு தங்கியிருந்தார். அவரதுக் குடும்பசூழல் காரணமாக ஒரு மாதத்திலேயே விடைபெற்றுக் கொண்டார். ஆனால் பப்புவோடு ஓடியாடி விளையாடுவார்.

திருப்பத்தூர் ஆயா - இரண்டு மாதங்கள் வரை பப்புவை கவனித்துக் கொண்டார். பப்புவோடு சொப்பு வைத்து விளையாடுவார். பப்புவை வாக்கிங் அழைத்து செல்வார். தூக்கி வைத்துக் கொள்ள அலுத்துக் கொண்டதேயில்லை, முழங்கால் வலியிருந்தபோதும்!

செல்வி - II - ஏஜன்சி மூலமாக வந்தவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது, பப்பு இவரிடம் விளையாட மறுத்ததால்! பப்பு ஒருவரை மறுதலிப்பது இதுவே முதன்முறை!

ராணி - இவர் வரும் சமயம் பப்புவுக்கு தெரிந்திருந்தது, வருபவர்கள் அவளைக் கவனித்துக் கொள்ளத்தான் வருகிறார்களென்று. அதனால் அவளாகவே முதலில் போய் அவர்களிடம் பழக் முற்பட்டாள். இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். பெரம்பூர். பதினொரு மாதங்கள் வரை வீட்டோடுத் தங்கி இருந்தார். பப்புவிற்கு சப்பாத்தி மேல் விருப்பம் ஏற்பட செய்தவர். பப்புவின் விளையாட்டு சாமான்களை வைத்து விதவிதமாக விளையாட்டுக் காட்டுவார். பத்திரமாகப் கவனித்துக் கொண்டார், பொறுமையோடும்! பப்பு இப்போதும் பப்பு இவரை சிலசமயங்களில் கேட்பாள்.இவர் விட்டுச் சென்றுவிட்ட பின்பும் பப்பு இவரை மறப்பதுக் கடினமாக இருந்தது!

தனம் - இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். அரக்கோணம். வீட்டோடு தங்கியிருந்தார். பப்புவை சமாளிக்க கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களில் விடைப் பெற்றுக் கொண்டார்.

சரளா - ஏஜென்சி மூலம் திருச்சியிலிருந்து வந்தவர். இவர் பப்புவோடு ஓடியாடி விளையாட அலுக்கவே மாட்டார். எப்படியாவது சாப்பிட வைத்துவிடுவார். பப்புவை யானையேற்றிக் கொண்டு வலம் வருவார். அவரதுக் குடும்பச் சூழல் காரணமாக மூன்று மாதங்களிலேயே விடைப் பெற்றுக் கொண்டார். பப்பு இன்றும் கூட இவரைக் கேட்பாள். பப்புவின் நினைவுகள் சில சமயம் இவரை சுற்றி ரீங்காரமிடுவதுண்டு.

இவர்களிருக்கும் வரையிலும், சென்றபின்னும் சிலரை இன்னும் நினைவில் கொண்டும்... பப்புவிற்கு, பிடித்தமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள் இவர்கள் ஏதாவதொரு வகையில். பப்புவைக் கவர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள், அவரவர் வழிகளில்!
கவலையின்றி நான் வேலையில் கவனம் செலுத்த உதவியிருக்கிறார்கள். சம்பளத்துக்காகத்தானென்றாலும், பாதுகாப்பாக பப்பு இருக்கிறாள் என்று என்னை உணர வைத்திருக்கிறார்கள். சிலசமயங்களில் பப்பு என்னை விடுத்து, அவர்களிடம் உணவருந்தப் பிரியப்பட்டிருக்கிறாள். அவர்களிடமிருந்து என்னிடம் வர மறுத்திருக்கிறாள்! அவர்கள் பிரிந்துச் சென்றபோது வருந்தியிருக்கிறாள்! பப்புவின் சின்னஞ்சிறு உலகம் இவர்களால் ஆனதுதான்!

அதற்காக, பிரச்சினைகள் இல்லாமலில்லை..there were so many problems..hiccups. (hmm..that deserves a seperate post). ஆனால், இப்படியொரு supporting system இருந்ததால்தான், நான் மற்ற ஆப்ஷன்களை(creche etc) பற்றி நினைக்க முடியாமலிருந்தது. we, as a family, salute these ladies who dare to come out of their family and served us.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது, சசியையும் (பத்மாவிற்கு பிடித்தவர்களைப் பற்றியும்), வித்யாவையும்(ஜூனியருக்கு பிடித்தவர்கள் பற்றியும்)!

Wednesday, March 04, 2009

தவளைக் கனவுகள்!


(படம் - நன்றி கூகுள்!)
அழகழகான வண்ண வண்ன
உடைகளுண்டு
விளையாட தோட்டங்கள் - உண்டு
சூரியன் மறையும் அந்திசாயும்
நேரமுண்டு
தூக்கிப் போட்டுப் பிடிக்க
பந்துமுண்டு,
பந்து சென்று விழுந்த
கிணறுமுண்டு
கிணற்றடியில் தவளைகள்
தாவித்தாவி குதிக்கின்றன.
எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை?


என்னடா ஆச்சு முல்லைக்கு யோசிக்க வேண்டாம்...நம்ம முத்துலெட்சுமி லேட்டஸ்ட் கவிதையை படிச்சேன்..அதான் இந்த எஃபெக்ட்! இதை எதிர் கவுஜன்னு சொல்லுவீங்களோ..காப்பிக் கவுஜன்னு சொல்லுவீங்களோ..இல்லை ப்ளேக்கரிஸக் கவுஜன்னு சொல்லுவீங்களோ எனக்குத் தெரியாது...ஆனா கவுஜ-தான்னு ஒப்புக்கணும்..ஓக்கே!! :-)

நன்றி டூ முத்து அனுமதி தந்ததற்கு!

pappu-doh!

எளிய அதேசமயம் fun-க்கு கொஞ்சமும் குறையாத, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத playdoh வெர்ஷன் இங்கே! ஏனோ ப்ளேடோ-வின் வாசனை சற்றும் எனக்குப் பிடிப்பதில்லை..நான்-டாக்ஸிக் என்றபோதிலும்...விளையாடி முடித்தபின்னும் கைகளில் அந்த வாசனை இருப்பதுப்போலவே ஒரு தோற்றம்..அதனால் சிறிது நாட்களாக பப்புவிற்கு ஃப்ளே-டோ கொடுப்பதில்லை..அதுதான் வேண்டுமெனக் கேட்டவளுக்கு மாவையும் தண்ணீரையும் கொடுத்து கலந்துக் கொள்ளச் செய்ததும்....அவளின் முக பாவனையைப் பாருங்கள்..lol! இயற்கை ப்ளே-டோவை வைத்து we made a wonderful caterpillar! அடுத்த பதிவுகளில்...

Monday, March 02, 2009

டீச்சர் பசங்களாகிப் போனதன் சோகங்கள்!!

டீச்சர் பசங்களா இருக்கறது கஷ்டம்..ஆனா அதைவிட கஷ்டம் அந்த டீச்சர் வேலை செய்ற பள்ளிக்கூடத்தில் படிக்கறதுதான்! மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..ஆனா நல்லா கவனிச்சா,எவ்வளவு சோகம் இருக்குன்னு டீச்சர் பசங்களுக்குத்தான் தெரியும்......சிங்கை நாதனும், கேவிஆர்-க்கும் இதேதானான்னு சொல்லனும்!! :-))

1. நாம பள்ளிக்கூடத்திலே சேர்ந்து வகுப்புக்குப் போனதும், நமக்கேத் தெரியாம ரெண்டு குரூப் உருவாகிடும்.ஒன்னு டீச்சர் பசங்கன்னு நம்மகிட்டே பேசமாட்டாங்க, இன்னொரு க்ரூப், டீச்சர் ப்சங்கன்னு நம்மகிட்டே பேசுவாங்க! ஆனா இப்படிரெண்டு க்ருப்-கள் இருக்கறது நமக்கே தெரிஞ்சிருக்காது..நாம அதுக்கு எந்த விதத்திலேயும் காரணமில்லேன்னாலும்! ஆனா,காலப்போக்கில், ரெண்டு க்ரூப்-ல் இருக்கறவங்களும் இடமாறலாம், ஆனா அந்த க்ரூப்-கள் இருந்துக்கிட்டேதானிருக்கும்! நாம அந்த க்ரூப்-க்கு லீடரா மாறுவது அவரவர் திறமை/ஆர்வத்தைப் பொறுத்தது!

2. நம் செல்லப் பெயர்கள் almost எல்லா டீச்சர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்....அதுவும் சிலசமயம் நாm செய்த குறும்புத்தனங்கள், அசட்டுதனங்கள்-னுஎல்லா வரலாறும் பலருக்கு தெரிஞ்சிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு! சில டீச்சர்களால், நம்மைச் செல்லப் பெயரால கூப்பிடறதை மாத்திக்கமுடியாது..ஆனா இந்தப் பிரச்சினை மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல குறையலாம்!

3. நமக்கேத் தெரியாம நாம கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருப்போம்! (Ouch! How I hated that!!) கொஞ்ச நேரந்தானே..நிர்மலா கூப்பிட்டாளே, அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாமேன்னு நினைச்சுடக் கூடாது....நாம திரும்ப கிளாஸுக்கு போறதுக்குள்ள,செய்தி பள்ளிக்குப் போய்டும்..அதேமாதிரி, நாம விடைத்தாள் வாங்கிட்டு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மார்க் விஷயங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்!!

4. நமக்கு நிறைய பேரைத் தெரியலேன்னாலும் நிறையப் பேருக்கு நம்மைத் தெரிஞ்சிருக்கும்! அதுதான் டேஞ்சரான மேட்டர்..அதே சமயம் ஜாலியாவும் இருக்கும்..நான் ராத்திரி ட்ரெயின்லே வந்தாலும் ஆட்டோ அண்ணாக்கள் நம்மைப் பார்த்ததும், பையை வாங்கிக்கிட்டு"டீச்சர் வீடுதானேம்மா"-ன்னு சொல்லிக்கிட்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்வாங்க!

5. போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க....வேறயாரு..நம்ம கூட இருக்கறவங்க..இல்லன்னா போட்டியிலே கலந்துக்கிட்டவங்க! ஆனா அதையெல்லாம் தாண்டி நம் பெர்பாமன்ஸ் இருக்கணும்! அது ஒரு டென்ஷன்!! அதே சமயம், பப்ளிக் எக்சாம்-ன்னா எல்லாருக்கும் நம்ம மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு..அதுவும் ஒரு டென்ஷன்....

சமயத்துல காமெடியாவும் இருக்கும்..ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருக்கும்போது, வீட்டுக்கு வர்றவங்க, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்வி கேட்பாங்க...

"என்னம்மா, எந்தக் கிளாஸ் படிக்கிறே?!"

நைன்த் அங்கிள்!

ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க...grrrrrrr!!)

சரி,இவங்க தொல்லைத் எனக்கு மட்டும்தான் இப்படின்னு பார்த்தா, என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு இந்த அனுபவம்!!நைந்த்-க்கு அப்புறம் டெந்த்தானே படிப்பாங்க!! அவ்வ்வ்வ்வ்வ்வ்!அது வந்து, பப்ளிக் எக்ஸாமாம்..அதனால அவங்க அப்படி ஒரு விழிப்புணர்வைத் நமக்குத் தர்றாங்களாம்..:-)ஆனா, +1 படிக்கும்போது இந்தக் கேள்விக்கெல்லாம் அசரவேயில்லையே நாங்கள்!!

இன்னும் நிறைய இருக்கு..சோகங்கள்....வேறு ஒரு நாளில் தொடர்கிறேன்! :-)

Friday, February 27, 2009

சாக்லேட் கதைகள்..

80/90-களில் வளர்ந்தவர்கள் இந்த இனிப்புகளை சுவைத்திருப்பீர்கள்..ஆனால் இப்போதும் இருக்கிறதாவென சந்தேகமாக இருக்கும்/ நான் மிஸ் செய்யும் இனிப்புகளை தொகுத்திருக்கிறேன்.. கவர்களின் வண்ணங்களையே சாக்லேட் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்....நினைவிலிருந்தவரை!!

Ravelgaon - ராவல்கன் டாஃபி. இது ராவல்பிண்டியில் தயாரானகும் டாஃபி, ராவல்பிண்டி பாகிஸ்தானி இருக்கு என்று பொது அறிவுத்தனமாக பேசிக்கொண்டே....நிறைய
கவர்களை சேர்த்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் பரிசு வந்ததில்லை!
ole - ஸ்ட்ராபெர்ரி வடிவத்திலிருக்கும் கேண்டி! tangy-யான சுவை!
campco - கோகோ பார் சாக்லேட்....அதன் அட்டையை வெட்டி புக்மார்க்-ஆக பயன்படுத்தியிருக்கிறேன்..
cigarette choco - சிகரெட் வடிவ சாக்லேட்..மேலே பேப்பரால் சுற்றப்பட்டு உள்ளே வெள்ளை வடிவத்திலிருக்கும். ரொம்ப ஷோ விடுவோம்....ஆனால், பெரியவர்களுக்கு எரிச்சல்!
melody - மெலடி சாக்லேட். கவரின் ஒரு முனை மட்டுமே சுற்றப் பட்டிருக்கும். இப்போதும் கிடைக்கிறதாவெனத் தெரியவில்லை.
caramilk - டாஃபி. பல சுவைகள். பெரும்பாலும் பிறந்தநாளுக்கு பள்ளியில் கொடுப்பதற்கு இதுதான்!
naturo - இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!
pan pasaand - இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க வெத்தலை சாப்பிடக் கூடாது!)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.








doodh doodh doodh doodh…
peeyo glass full doodh…
garmiyon me daalo doodh mein ice…
doodh ban gaya very nice…

....
gimme more , gimme more
gimme gimme gimme gimme more wonderful doodh


ஒரு நாஸ்டால்ஜிக் விளம்பரம்...விளம்பர வரிகளை நோட் செய்து எழுதிக்கொண்டது இன்னும்கூட நினைவில் இருக்கிறது..பள்ளி விழாவிற்கு இந்த இசையை காப்பியடிக்கலாமாவென்றுக்கூட யோசனை செய்திருக்கிறோம்! இதேபோல், அண்டே (முட்டை)-க்கான ஒரு விளம்பரமும் இருந்தது..யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்!

Wednesday, February 25, 2009

milestone ?

காலையில் கதவை திறந்ததும் பால் பாக்கெட்டுகளையும் கீழே கிடக்கும் தினமணியையும்
எடுப்பது பப்புதான்....ஒரு பாக்கெட்டை சமையலறை மேடையிலும் இன்னொன்றை ஃப்ரிட்ஜிலும் வைத்து விடுவாள். தினமணியை டீப்பாய் மீது வைத்து விடுவாள்..அப்படி நான் எடுத்துவிட்டால் கோபம்.அழுகை..நான் திரும்ப அவற்றை வைத்துவிடவேண்டும்! மூன்று வாரங்களுக்கு முன்பு வரை!

அன்று காலையில் அவள் எடுக்காததினால், "பப்பு பால் எடுத்துக் குடு" என்றேன்.

....

பப்பு, டைம் ஆகுது..பாலை எடு!

பதிலில்லை..!

பப்பு...

நீயே எடுத்துக்கோ..நான் அழ மாட்டேன்!

-தீர்க்கமாகவும், அழுத்தமாகவும் ஒலித்தது பப்புவின் குரல்!




வழக்கம் போல அவளது சிற்றுண்டி டப்பாவில் உணவை வைத்து மூடும் சமயம், என்னருகே வந்த பப்பு, என்ன வைச்சிருக்கே என்றாள்.

சேமியா உப்புமா!

ஃப்ரிட்ஜ்-லிருந்து பிஸ்கட்களையும், உலர் பழங்களையும் கொண்டு வந்து அவளாகவே டப்பாவின் மேல்பகுதியில் போட்டுக்கொண்டு பையினுள் வைத்துக் கொண்டாள்! :-) எனக்கு இது வேண்டாமென்றோ, நான் இதை எடுத்துச் செல்கிறேனென்றோ ஒரு வார்த்தையும் இல்லை!!! நானும் ஒன்றும் கேட்கவில்லை!!


N.B : மதிய உணவாக என்ன எடுத்துச் செல்லலாமென்ற தீர்மானம் எடுக்கும் உரிமை பள்ளியிறுதி வரை எனக்கிருந்ததில்லை! ஹ்ம்ம்...

Tuesday, February 24, 2009

(படங்கள் (பேசும்) படங்கள்)



மோத்தி ஆண்ட்டியும், அவங்க நீளமான சடையும்!!




தனியாக எடுத்து வைத்த கற்கள்!



இது பப்பு என்னை எடுக்கச் சொன்னது..அவளாகவே வைத்துக் கொண்டது அந்த நகப்பூச்சு!

Monday, February 23, 2009

Height of all 'sales'!

புத்தாண்டு சேல், பொங்கல் சேல், தீபாவளி சேல், ஆடி சேல், சம்மர் சேல், வின்டர் சேல்,
end of season sale, கிறிஸ்துமஸ் சேல், கிளியரன்ஸ் சேல்...வரிசையில் இப்போது...:-)..

Sunday, February 22, 2009

வண்ணம் கொண்ட இதயங்கள்!!



கடந்த வாரயிறுதியில் செய்தோம் இவற்றை! எதையாவது செய்ய வேண்டும், அதற்கு ஒரு தீம் வேண்டும்...சிக்கியது V-day! சார்ட் பேப்பரை வாழ்த்து அட்டைபோல் வெட்டியதும், பப்பு
முதல் பக்கம் மட்டும் வண்ணம் தீட்டினாள்! இரண்டாவது படத்தில் வண்ண இதயங்கள் இளைப்பாறுகின்றன...மேலே வண்ணப் பொடிகள் தூவப்பட்டபின்!!

பிளாக் பெயிண்டிங்-கிற்கு வண்ணங்கள் குழைத்த பின், கோர்க்கப் பட்ட இதயங்கள்..முதலில் ஒரு நேர் கோட்டில் நீள வண்ண இதயங்கள்..பின் மஞ்சளும் சிவப்புமாக!!

கடைசிப் படத்தில், சிகப்பு, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை..பச்சையும் நீலமும்...(ரிலையன்ஸ் இம்பாக்ட்??)...பாதி தீட்டப்படாத ஒரு அட்டையும்!! பெரிய சிவப்பு நிற வாழ்த்து அட்டை is waiting for her appa to be picked up!


(நெடுநாட்களாக, draft-ல் இருந்ததை publish செய்திருக்கிறேன்...)

Friday, February 20, 2009

பாட்டிகளிடம் பத்து கேள்விகள்!!

இப்போ 10 கேள்விகள் கேக்கறதுதானே ஃபேஷன்! யாருக்கிட்டே கேக்கலாம்னு யோசிச்சதுல சிக்கியது "அக்கா தம்பியிடம் கேக்கும் 10 கேள்விகள்", "பக்கத்து வீட்டுக்காரரிடம் 10 பத்துக் கேள்விகள்", "வேலைக்காரம்மா-விடம் 10 கேள்விகள்" அப்புறம் "பாட்டியிடம் 10 கேள்விகள்"! "பாட்டியிடம் 10 கேள்விகள்"!! சின்னதாவும் ஈசியாவும் இருக்கறதால பாட்டியிடமே 10 கேள்விகள்..பேத்தியிடமிருந்து!! :-))


1. ஒரு வேலை சொல்லிட்டீங்கன்னா அதை செஞ்சு முடிக்கற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே அது ஏன்?

2. கடைக்குப் போறோம்-னு தெரியும் தானே, அப்புறமும் எப்போ வருவீங்கன்னு என்னக் கேள்வி?!

3. நாங்க ஞாபகப்படுத்துங்கன்னு சொன்னதை மட்டும் கரெக்டா மறந்துடறீங்க..ஆனா எப்போவோ நாங்க எடுத்த மார்க்கெல்லாம் கரெக்டா ஞாபகமா சொல்லிக்காட்டுவீங்க! அது எப்படி?

4. நீங்க டீவி பார்க்கும்போது முக்கியமா அதுல சொல்ல வர்றதை கேக்கவிடாம கூடக்கூட நீங்களும் பேசறீங்களே..அதுல சொல்லி முடிச்சப்பறம், உங்க கருத்தை சொன்னா என்ன?

5. சீரியல் பாக்கறீங்க..ஓக்கே..ஆனா "இவன் இப்போதைக்கு முடிக்க மாட்டான், வளத்திக்கிட்டேதான் இருப்பான்" அப்படினு திட்டினாலும் அடுத்த நாளும் பார்க்கறீங்களே, அது ஏன்?!

6. கடையிலேர்ந்து பொட்டலம் சுத்தி வர்ர நூல் எல்லாத்தையும் எடுத்து அழகா சுத்தி வைக்கறீங்களே....எப்போவாவது உதவும்-னு, அந்த நூல் எல்லாம் நூத்தா ஒரு ஆடையே தைக்கலாம்-னு தோண்ற அளவுக்கு இருக்கே..எதுக்கு இவ்வளவு-ன்னு நினைக்க மாட்டிங்கறீங்களே ஏன்?

7. எல்லா பாலித்தின் கவரையெல்லாம் நீவி மடிச்சி அலமாரி பேப்பர் கீழே வச்சி வச்சி அது ஒரு சோபா அளவுக்கு ஆகிப்போச்சே..சிலதுல்லாம் ஒரு தடவைதான் உபயோகிக்கணும்னு சொன்னாலும், அதையும் எப்படிடா ரீ-யூஸ் செய்யலாம்னு ரூம் போட்டு யோசிக்கிறது ஏன்?

8. உங்க பொண்ணுங்கள்ளாமே பாட்டி ஆகிட்டாங்களே, இன்னமும் தினமும் போனைப் போட்டு வீட்டுக்கு வந்தாச்சா, எத்தனை மணிக்கு வந்தே-ன்னு கேட்டு டார்ச்சர் செய்றது ஏன்? கேட்டா இதெல்லாம் உனக்குப் இப்போப் புரியாது-ன்னு ஃபீலிங்க்ஸ் விடறது ஏன் ஏன்?

9. "எங்களுக்காவது பென்ஷன்னு ஏதாவது வருது, உங்களுக்கு அதுல்லாம் இல்லயே, உங்கக் காலத்தை நெனச்சா பயமா இருக்கு" என்று அவ்வப்போது எங்களுக்கு டெரர் உண்டாக்குவது ஏன்?

10. உங்க படுக்கையை நீங்களே சுத்தம் செய்றீங்க..ஆனா அதுல கீழே பாதுகாத்து வச்சிருக்கற செய்தித்தாள் கட்டிங்ஸ், எப்போவாவது உபயோகப்படும் kind of பொக்கிஷங்களை aka குப்பைகளை திரும்ப அங்கேயே வச்சிடுறீங்களே..ஏன்?

Wednesday, February 18, 2009

மாலினி கொடுத்தப் பரிசு!!

மாலினி நேற்றுதான் தனது எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.
அவளது நண்பர்களும், உறவினர்களும் அவளது பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்துத் தெரிவித்ததுடன் பரிசுகளும் அவளுக்குக் கொடுத்தனர்.பரிசுகள் என்றால் மாலினிக்கு மிகவும் பிரியம். பரிசுப் பொருள் சுற்றியுள்ள காகிதத்தைப் பிரிக்கும்போதே அவள் கண்கள்
ஆவலுடன் விரியும். இப்போதெல்லாம் அவளாகவே காகிதத்தை அழகாகப் பிரிக்கக் கற்றுக் கொண்டு விட்டாள். முன்பெல்லாம் அவளது அம்மா சிலப் பரிசுப் பொருட்களைத் தனியாக எடுத்து வைத்து, இன்னும் சிறிது நாட்கள் சென்றபின் தருவதாகக் கூறிவிட்டு ஒருசிலவற்றை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் இந்தப் பிறந்தநாளிலிருந்து எல்லாப் பரிசுப் பொருட்களையும் அவளிடமே கொடுத்து விட்டார்கள். அது மாலினிக்குத் தான் ஒரு பெரியச் சிறுமியாகிவிட்டதைப் போன்ற கவுரத்தைக் கொடுத்தது.

அவள் பரிசுகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தப்போது பொம்மைகள், கதைப்புத்தகங்கள், ஒன்றாகச் சேர்த்து ஒட்டவைக்கக் கூடிய புதிர்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள் போன்றப் பல பரிசுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவற்றில் ஒரே மாதிரியான இரண்டுப் புதிர்கள் இருக்கக் கண்டாள்.

”அம்மா, இங்கே பாருங்களேன், இந்த சிக்-சாக் புதிர்கள் ஒரே மாதிரி இரண்டு இருக்கு “ என்றாள் அம்மாவிடம்.

அம்மாவும், ”எங்கே காட்டு” என்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மாலினி, “அம்மா, குட்டிமணி மாமாவும், அருண் மாமாவும் ஒரே மாதிரி வாங்கியிருக்காங்க, அம்மா!” என்றாள்.

அம்மா, “ஆமா, மாலினி! இருக்கட்டும், ஒன்றை நீ எடுத்துக் கொள், இன்னொன்றை தனியாக வை” என்றார்கள்.

“ஏன், அம்மா? அதை மாமாகிட்டே கொடுத்து வேற மாத்திக்கிட்டு வரச் சொல்லலாமா?” என்றாள் மாலினி.

அம்மாவும் புன்னகைத்துக் கொண்டே, “மாலினி, கொடுத்தப் பரிசைத் திருப்பிக் கொடுப்பது நல்ல நாகரீகமல்ல”, என்றார்.



உடனே மாலினி, “அப்புறம் இது பழசாயிடுச்சுன்னா இன்னொன்னு எடுத்துக்கலாமா, அம்மா” என்றாள்.

அம்மா, “இல்லம்மா, நம்மத் தேவைக்கு அதிகமா இருந்ததுன்னா, அது நம்முடையதுக் கிடையாது. அது மத்தவங்களுக்கு, அதாவது அந்தப் பொருள் இல்லாதவங்களுக்குச் சேர வேண்டியது”.

மாலினி பார்த்துக் கொண்டிருந்தாள், பதில் சொல்லாமல். அவள் மனதிற்குள், ”அப்படின்னா அம்மா இதை ஆகாஷிற்குக் கொடுக்கச் சொல்வார்களோ, அப்போ அவன்கிட்டே இருக்கும் சிவப்புக் காரை வாங்க்கிக்கலாமா” என்றெண்ணியவாறு, “அம்மா, இதை நான் என் ப்ரெண்ட்ஸ் யாருக்காவது கொடுத்துட்டு அவங்ககிட்டேயிருந்து அதிகமா இருக்கற விளையாட்டுச் சாமானை வாங்கிக்கவா, அம்மா” என்றாள்.

அம்மா, ”ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது பொருட்கள் பரிமாறிக்கொள்ளனும். ஆனா, நாம பரிசாக் கொடுக்கும்போது, திரும்ப எதையும் எதிர்பார்க்கக் கூடாது. நம்ம இதைப் பிரசாந்த்-க்கு கொடுக்கலாம். சரியா மாலினி” என்றார்.

”கஸ்தூரி ஆண்ட்டி கூட வருவானே, அவனுக்கா”, என்றாள் மாலினி.

”ஆமா, மாலினி! தனியா எடுத்து வை , நாளைக்கு காலையிலே அவங்க வேலைக்கு வருவாங்க இல்லையா, அப்போக் கொடுக்கலாம்”, என்றார்.

“அம்மா, பிரசாந்த்கிட்டே இருந்துதுன்னா”, என்று கேள்வி எழுப்பினாள் மாலினி.

அம்மாவும், “சரி, அவங்கம்மாக் கிட்டே கேட்டுட்டு நீ கொடு, சரியா! எப்போது, நம்மக்கிட்டே தேவைக்கு அதிகமா இருக்கோ, அது நம்முடையது இல்லன்னு நினைச்சுக்கோ மாலினி. நம்மைச் சுத்தியிருக்கறவங்க யாருக்கோ,அது நம்ம மூலமா போய் சேரணும். அதனாலதான் கடவுள் அதை நம்மக்கிட்டே சேர்த்திருக்கார்” என்றார்.

”சரிம்மா”, என்றபடி மாலினியும் எடுத்துவைத்தாள், அரைகுறை மனதோடு.

அழைப்புமணியோசை கேட்டு அம்மா கதவைத் திறந்துவிட்டு “மாலினி, இங்கே வா” என்றழைத்தார்கள்.

“இங்கே கையெழுத்துப் போடுங்கம்மா” என்று கூரியர் பணியாளர் சொன்ன இடத்தில் கையொப்பமிட்டாள் மாலினி.

“ஹை!! அம்மா, பெரிம்மா எனக்கு கிஃப்ட் அனுப்பியிருக்காங்க, பாருங்கம்மா, இது தபால் தலைகள் சேகரிக்கும் புத்தகம்தானே!” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

அம்மாவும், “ஆமா, அவங்க உன்கிட்டே சொன்ன மாதிரி, அதைத்தான் அனுப்பியிருப்பாங்க,மாலினி! பார்த்தியா, நீ மத்தவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சவுடன், உனக்கு ஒரு கிஃப்ட் வருது” என்றார்.

மாலினியும், ”ஆமா, அம்மா நான் பிரசாந்த்-கிட்டே இருந்துச்சுன்னா அவங்க அக்காவுக்கு அந்தப் புதிரைக் கொடுப்பேன், அம்மா. ”, என்று சொல்லிவிட்டு, பிறந்தநாளுக்கு வந்திருந்தவர்களுக்கு ”நன்றி” சொல்லி வாழ்த்தட்டை எழுதத் தொடங்கினாள்



பி.கு 3 : தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்போர் எனது வங்கி கணக்கிற்கு அனுப்பி விடவும்! (மாரல் ஆஃப் த ஸ்டோரி!)

பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.

பி.கு 1: what an irony!! :-) சிறுமியாக இருந்தபோது பெரியவர்களுக்கான கதைகளும், பெரியவர்களானப் பின் சிறுவர்களுக்கானக் கதையும் எழுதுவதையெண்ணி யாரும் எள்ளி நகையாடவேண்டாம் :-))...பப்பு படிக்க நான் எழுதி வைக்கும் கதைகள்!

Tuesday, February 17, 2009

alpha"beasts"!!

சசியின் பத்மா பற்றிய பதிவில் பார்த்தபோது இங்கேயும் அப்படி நடந்தது நினைவுக்கு வந்தது!
மழையின் காரணமாக விடுமுறை வாய்த்த நாளொன்றில் பப்பு பள்ளியை நினைவுகூர்ந்து மோத்தி ஆன்ட்டியாக மாறியிருந்தாள். "I spy with my little eyes" என்று வார்த்தைகளைக் கற்கும் விளையாட்டு போல! அவளது விலங்கு பொம்மைகளை வைத்து விளையாடியபோது எடுத்தது.கவனித்தால்,"I spy..., something here begins with கொ..கொரங்கு/க..கரடி" என்று சொல்வது கேட்கும்!! :-)




(எடுத்து மூன்று மாதங்களுக்கும் மேலாயிற்று!)

கற்றுக்கொண்ட புதிதில், I spy என்று சும்மா இருக்கும்போதுக் கூட சொல்லிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வது எனக்கு I spy with my little eyes..வடை சாப்பிட்டியா?" என்பதுபோல் இருக்கும்! அதற்காகவே அதை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்பதுண்டு!:-))

பப்பு டைம்ஸ்!!

பள்ளிக்கு கொண்டு செல்லும் தண்ணீர் குடுவையையே (பாட்டில்) வீட்டிலும் உபயோகிக்கஅ ஆசைப்படுவாள் பப்பு சிலநேரங்களில். அந்த குடுவையோடுதான் பார்த்தேன் அவளைக் கடந்துச் சென்றபோது! ஆனால், விரலால் எதையோ எடுத்து உள்ளே போட்டுக் கொண்டிருந்தாள்!ஆமாம், எதையோ டீப்பாயிலிருந்து எடுத்து குடுவையில் போட்டாள்..

இப்பொழுதுதானே சிப்ஸ் கொடுத்தேன், அதை பிய்த்து தண்ணீரில் போடுகிறாளோ??அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...ஆனால், பப்பு கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை! திரும்ப எதையோ, விரலால் எடுத்து உள்ளே போட்டாள்! குடுவையை எடுத்து குடிக்கப் போனாள்! என்ன புதுப் பழக்கம் இது? என்ன எடுத்து போடுகிறாள்? அவளிடமிருந்து பிடுங்கினேன்!

“என்ன பப்பு, என்ன எடுத்துப் போடறே..கீழே இருக்கறதச் எடுத்து சாப்பிடக் கூடாதுன்னு தெரியுமா இல்லையா?!”

என்று கூறியவாறு, குடுவைத் தண்ணீரை கீழே ஊற்ற எத்தனிக்கும்போது,

“தண்ணி மேலே வந்திருக்கு, நான் குடிக்கப் போறேன்..குடு..குடு” - பப்பு

புரிந்துக் கொள்ள சில நிமிடங்களானது எனக்கு! அட..

எனது பார்வை அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

“நான் கல்லெல்லாம் எடுத்துப் போட்டேன் இல்ல..தண்ணி மேலே வந்திருக்கு..”

ஓ...தாகமெடுத்த காகமாக மாறி, கற்பனைக் கற்களை எடுத்து போட்டு, கற்பனையிலே தண்ணீர் மேலே வரக் கண்டிருக்கிறாள்...:-)அவளின் கற்பனையை அறிந்துக் கொள்ளாமல் அதைக் கலைத்துவிட எத்தனித்திருக்கிறேனே!!

பப்புவின் இந்தச் செயலுக்குப்பின் இருப்பதன் பெயர்தான் புனைவோ!!




அதைத் தொடர்ந்து நாங்கள், காகம், நரி நாடகமும் விளையாடினோம்..சிப்ஸை வாயில் கவ்விய காகம் அவள். அவளைப் புகழும் குள்ள நரி நான்! அதுவும், “காக்கா காக்கா ஒரு பாட்டுப் பாடு” என்று மட்டும் சொல்லக் கூடாது, “ நீ ரொம்ப அழகா இருக்கே” என்றுச் சொல்லவும் வலியுறுத்தினாள்! ஆனால் காகம் சில சமயங்களில் பாதியைக் கடித்துவிட்டு மீதியை நரிக்குக் கொடுத்துவிட்டு பாடியது..சில சமயங்களில் கைகளில் வைத்துக் கொண்டும் பாடியது.. ஒருமுறை உட்கார்ந்து முழங்காலில் வைத்துவிட்டு பாடியபோது, “காக்காதான் காலில் வைத்துக் கொள்ள வேண்டும் ,கால் அழுக்குதானே” என்று சொன்னப் பிறகு, மென்று விழுங்கிவிட்டு பாடியது!! ம்ம்..நன்றாகத்தான் இருந்தது...(சிப்ஸூங்க!!), காகத்தின் குரலும், முன்னேற்பாடுகளில்லாத அந்த நாடகமும்!!





பப்புவை ஏமாத்தறது.. என்றப் பதிவில் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நல்ல பலனிருந்தது! பப்பு ஏமாறுவதை விரும்பாத ஆயாஸ், தாத்தா (parents from both sides!)எல்லோரும் வாரயிறுதியில் அவளை சந்தித்தனர்! பெரிம்மா ஒரு கான்ப்ரென்ஸூக்காக வந்திருந்ததால், ஞாயிறு காலையே கிளம்பிவேண்டியிருந்தது! ஞாயிறு மாலையே MIL,FIL & BIL கிளம்பிவிட, அம்மா மட்டுமே தங்கியிருந்தார், பப்புவுக்காக திங்களன்று விடுப்பெடுத்து! அழுத பப்புவிற்கு கிடைத்தது, லாலிபாப்பும், வேஃபர்களும்!! எனது லாலிபாப்பும் வேஃபர்களும் எங்கே?!!

Saturday, February 14, 2009

Happy V-day!!

தூங்கும் முன் வழக்கமாய் பப்பு சொல்லும் வசனம்தான்..

ஆச்சி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!!

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் பப்பு!!

ஏன் என்னை பிடிக்கும்? (அவளுக்கும் இருக்கும் 'ஏன்' டீமான் இது!!)

நீதான் என் பப்பு....குட்டிப் பாப்பா!


வெண்மதி பிடிக்காது? ஆகாஷ் பிடிக்காது..list goes on...

ம்ம்..பிடிக்குமே..எல்லாரையும் பிடிக்கும்..உங்க ஸ்கூல்ல, இந்த ஊர்ல இருக்கற எல்லா பாப்பாவையும் பிடிக்கும்!!

அவள் என்ன நினைத்து அப்படி கேட்பாளெனத் தெரியாது..எதைச் சொன்னாலும் தொக்கி நிற்கும் ஏன் என்ற ஒரு கேள்வி..முடிவிலா கேள்விகள்!! அப்படிதான் இந்தக் கேள்வியும்! ஆனால், எனக்குள் யோசனையைத் தூண்டும் கேள்வி! ஏன் என் நேசம் பப்புவோடு மட்டுமே நிற்க வேண்டும்..எல்லா குட்டிப் பாப்பாக்களுக்கும் எனது அன்பு!!




முடிவாக, V-day என்பது அன்பைச் சொல்லும் நாளெனில், இதோ, எனது சின்னஞ்சிறிய ஆர்டிஸ்ட் உங்களை புன்னகையோடு வாழ்த்துகிறாள்...பப்பு @ சித்திரக்கூடத்தை தொடரும், தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் அனைவரையும்!!

Friday, February 13, 2009

பப்புவை ஏமாத்தறது ரொம்ப ஈசி!!

இப்போ ஒரு வாரமா எங்க வீட்டுல ஒரு நடக்கற ஒரு சம்பவம்! என்னன்னா, பப்புவை தூக்கத்திலிருந்து எழுப்ப நான் சொல்லும் பொய்...இது எனக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தையும் நினைவூட்டியது..

பொங்கலுக்கு அப்புறமா எங்களை யாருமே விசிட் பண்ணலை..எல்லா ஆயாக்களும், தாத்தாவும் ரொம்ப பிசி..கல்யாணத்துக்கு போறது, தைப்பூசம் அது இதுன்னு..(அதுவும் பெப்ரவரி, மார்ச் கொஞ்சம் கடினமான காலம் தான்..எந்த விடுமுறையும் கிடையாது..பள்ளி பரிட்சைகள்..அரசுதேர்வு விடைத்தாள் திருத்துதல்-ன்னு ஆயாஸ் ஒரே பிசிதான்!! )

ஓக்கே..புலம்பலை நிறுத்திக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்....தூக்கத்திலேர்ந்து பப்புவை எழுப்பனும்னா மகா கஷ்டம்....ஆனா இப்போல்லாம் “பப்பு, வடலூர் ஆயா வந்துட்டாங்க ”அப்படின்னு சொன்ன உடனே ஸ்பிரிங் மாதிரி எழுந்து கதவை போய் பார்ப்பா..அப்புறம் என்ன, பள்ளிக்கூடத்துக்கு ரெடி செய்ய வேண்டியதுதான்!

பப்பு ஒரு ஒன்றரை வயசு, ரெண்டு வயசா இருக்கும்போது நடக்கும் இது! அம்மா/பெரிம்மா வந்திருக்கும் போதுதான் எனக்கு ப்ரீ டைம் இருக்கும்! அப்போதான் படிக்காம விட்ட ஆவியெல்லாம் படிச்சுக்கிட்டு இருப்பேன் கதவை சாத்திக்கிட்டு..பப்பு வந்து, வந்து கதவை தள்ளுவா..என்னைக் கூப்பிட்டுக்கிட்டே!! நான் உடனே “ ஆச்சி இங்கே இல்லை” ந்னு சொன்னதும் நம்பிக்கிட்டு போய்டுவா! ஆனா திரும்ப வருவா..இதே ரெண்டு /மூனு தடவை நடக்கும்! :-)) அப்புறம் அம்மா/பெரிம்மா பப்புவை வந்து விட்டுட்டுப் போவாங்க, என்னைத் திட்டிக்கிட்டே! இப்போ ஒரே வித்தியாசம்..நான் அங்கே இல்லைன்னு சொன்னதுபோய் ஆயா இருக்காங்க-ன்னு சொல்றேன்!!

கடந்த நாடகளா பப்பு அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றதைப் பார்த்தா பாவமா இருக்கு! கனவெல்லாம் கூட அவங்க வர்றதைப் பத்திதான்!(I bet you aayas..this is not going to last forever..there comes a phase soon!!) சரியா சாப்பிடறதுக் கூட இல்லை..:(
(வந்தாலும் ஒன்றரை நாள் தான் இருப்பாங்க..பப்பு அவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா..அப்புறம் என்ன டே இன்னைக்கு, என்ன டே வருவீங்க என்று அடுத்த வாரயிறுதியை நோக்கி ஓட வேண்டியதுதான்! அது தனிக்கதை!!)

A note to the elders of my family:

சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(VRS வாங்கினா கூட எனக்கு ஓக்கேதான் ;-) !!)

Thursday, February 12, 2009

கலாச்சாரம் - சில புரிதல்கள்!!

1. கலாச்சாரத்தைக் காப்பாற்ற (?) வேண்டிய, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே இருக்கிறது!!

2. வெளியே எங்கும் போகலாம்..ஆனால், இரவு 7 மணிக்கு கண்டிப்பாக வீடு திரும்ப வேண்டும்! (ராம் சேனாவின் ஃபவுண்டிங் மெம்பர் சொல்லியிருக்கார். http://www.hindu.com/mag/2009/02/08/stories/2009020850030100.htm)

3. கலாச்சாரம் பெண்கள் குடிப்பதால், நடை/உடை பாவனைகளால் மட்டுமே சீரழிகிறது!

4. கலாச்சாரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் moral policing செய்யலாம்! அது வன்முறையான வழியாகக் கூட இருக்கலாம்! யாராவது தடுக்க வருவார்கள் என்று எண்ணாதீர்கள் முட்டாள் பெண்களே.. தடுப்பது நமது கலாச்சாரமல்ல!!

5. உங்கள் சுதந்திரத்தின் எல்லையை தீர்மானிப்பவர் நீங்களல்ல! அது நீங்களாக எடுத்துக் கொள்வதுமில்லை. பெருந்தன்மையுடன் வழங்கப்படுவது! அந்த எல்லையைக் குறித்தக் கேள்விகள் கேட்காமல் இந்தியப் பெண்ணாய் அமைதியாய் இரு!

இந்தப் பட்டியலின் எண்ணிக்கையை நீங்கள் இன்னும் கூட்டிக் கொண்டே செல்லலாம்! கலாச்சாரத்தை புரிய வைத்த ராம் சேனா-விற்கு நன்றியும் அன்பும்..அதோடு இதுவும்!




நான் பப்-க்கு செல்வதை ஆதரிக்கிறேனோ இல்லையோ, காதலர் தினத்தை கொண்டாடுகிறேனோ இல்லையோ..what the heck! Its all about making a point! Saying no to "Moral policing"!!I am joining my hands!!

Tuesday, February 10, 2009