Showing posts with label TheGreatLivingCholaTemples. Show all posts
Showing posts with label TheGreatLivingCholaTemples. Show all posts

Friday, July 25, 2014

ராஜேந்திர சோழனோடு சிலமணித்துளிகள்

நினைவு தெரிந்து, முதன்முதலில் கங்கைகொண்ட சோழபுரம் பற்றி கேள்விப்பட்டது அத்தை சொல்லிதான். தஞ்சாவூர் கோவிலைவிடவும், அவரை ஈர்த்தது, கங்கை கொண்ட சோழபுரம்தான். அவருக்கு மட்டுமில்லை, மாமா, ஆயா என்று  பெரும்பாலும் , கங்கைகொண்ட சோழபுரம் ‍ கோவில் மட்டுமில்லை, ஊரும் அழகு என்றே சொல்வார்கள்.  'அமைதியான இடம், தஞ்சாவூரை விட பெரிய கோவில், ரொம்ப அழகான கோவில்' என்பதே அபிப்ராயம். அவர்களை பொருத்தவரை, பொதுவான எண்ணம்.
 'ராஜேந்திர  சோழன் ' பெரிதும் பேசப்படவில்லை என்பதே!
 
அதுவும் உண்மைதான்....தஞ்சை பெரியகோவிலை பற்றியும், ராஜ ராஜ சோழனைப்பற்றியும்தான், நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் பற்றியெல்லாம் வரலாறு பாடத்தில் வந்தாலும் ஒரு சிறு பத்தி அளவுக்குத்தான். அதில், அவர்களது பிறபெயர்கள், போர்கள் பற்றிதான். ராஜேந்திர சோழனின் இன்னொரு பெயர்  'கடாரம் வென்றான்' என்று மட்டும் தெரியும். ஏனென்றால், ஒருவேளை தேர்வில், 'கடாரம் வென்றான் பற்றி குறிப்பு வரைக'  என்று வரலாம் என்பதால்!


 
'இந்திய சின்னங்கள்' பற்றிய பட்டியலில் பப்பு, 'பிக் டெம்பிள்' பற்றி தெரிந்துக்கொண்டிருந்தாள். அதை நேரில் பார்க்க கேட்டுக்கொண்டிருந்தாள். கடந்த டிசம்பர் விடுமுறையை அதற்காக பயன்படுத்திக்கொண்டோம். எப்படியோ, 'கங்கை கொண்ட சோழபுரம்' என்பது கடற்கரையோரத்தில் அமைந்த ஊர் மற்றும் கோவில் என்பதாகவே மனதில் சிறுவயதிலிருந்து பதிந்துவிட்ட சித்திரம்.  ஏனென்று தெரியவில்லை, கடலலைகளை பின்னணியாக   கோவிலாகவே கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனக்குள் பதிந்திருந்தது. ஒருவேளை, கடல்கடந்து போன சோழ அரசன் என்பதால், பஸ் பிடித்து போவதுபோல், அங்கிருந்து கப்பல் பிடித்து போயிருப்பான் என்று உருவகப்படுத்துக்கொண்டேனோ என்னவோ! அங்கு போனபிறகுதான் தெரிந்தது, கடலுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்று.

நாங்கள் போன சமயம், உச்சிவேளை. கோவில் சாத்தியிருந்தார்கள். என்னசெய்யவென்று தெரியாமல், ஜெயங்கொண்டம் சென்றோம்  உணவுக்காக. 'ஏசி ஹோட்டல்ல கூட அப்படி இருக்காது...இங்கே அவ்ளோ நல்லா இருக்கும்' என்று வழிசொன்னார் ஒருவர். 'அலமேலு மெஸ்'சை தவறவிடாதீர்கள், ஜெயங்கொண்டத்தில். முக்கியமாக, மீன் வருவல் மற்றும் குழம்பு!

திரும்பிசென்றது, கங்கைகொண்ட சோழபுரத்துக்கோவிலுக்கு எதிரில் இருந்த ராஜேந்திர சோழன் அருங்காட்சியகத்துக்கு. அங்கு இருந்த பொருட்களெல்லாம் பெரும்பாலும், மாளிகைமேடு மற்றும் கங்கைகொண்டசோழபுரத்து கோவில் மற்றும் சில கோவில்களிலிருந்து சேகரித்தவை. என்னை மிகவும் ஈர்த்தது ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள்தான்.  'ஓலைச்சுவடியிலே எப்படி எழுதுவாங்க? காஞ்சுபோயிட்டா எழுத்தெல்லாம் எப்படி தெரியும்?' என்று ஆயாவை அடிக்கடி கேட்டிருக்கிறேன். வடலூர் வீட்டை சுற்றி 20 ‍‍-25 பனமரங்கள் இருக்கும். வெயில்காலமானால், தினமும் காலை ஆகாரம் நுங்குதான்.  நுங்கு வெட்டிய பின்னர் கூடவே வெட்டிப்போடும் பனைஓலைகளை எடுத்து கிழித்து, ஓலைகள் அது பங்குக்கு என் கையை கொஞ்சம் கீறி 'இதுலே எழுத முடியுமா'  என்று ஆணியால் எங்கள் பெயரை எழுத முயற்சி செய்ததெல்லாம் வரலாறு! (அப்புறம்தான் தெரிந்தது, அதற்கு தனி பனைஓலைகளாம். அந்த மரம் இது போல இருக்காதாம். )


அந்த திருக்குறள் சுவடிகள், 'ராஜேந்திர சோழன் அரண்மனையிலிருந்து 'என்றார் அருங்காட்சியகத்திலிருந்தவர். எனக்கோ, படத்தில், திருவள்ளுவர் கையில் இருக்கும் 'ஒரிஜினல்'  சுவடிகளே அவைதான் என்று தோன்றியது. பப்புவுக்கு திருக்குறள் பற்றியெல்லாம் என்னைப்போல எந்த பந்தபாச பிணைப்புகளும் இல்லை. ஏதோ சிறுவயதில் ஒன்றிரண்டு திருக்குறள்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். அதைத்தாண்டி, 'அகர முதல்' மட்டும்தான் திருக்குறள் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்.

அவளை ஈர்த்தவை, பாடம்பண்ணப்பட்ட‌ சங்குகள், செப்புக்காசுகள், கத்தி கப்படா வகையறாக்களே! பெரிம்மாவை ஈர்த்தவை, வரைபடங்களும், அவர்கள் சட்டமிட்டு மாட்டியிருக்கும் பட்டியல்கள் கொண்ட படங்கள்.  யாருமே  எட்டிப்பார்க்காத அந்த அருங்காட்சியகத்துக்கு, இப்படி ஒரு கூட்டம் அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான‌ ஆர்வத்தோடு, வந்ததிருந்து சலசலப்பை எழுப்பிக்கொண்டிருப்பதை பார்த்ததும், அந்த அதிகாரிக்கும் உற்சாகம் பீறிட்டிருக்க‌வேண்டும்.  ஆர்வமேலிட்ட அவர் , பப்புவுக்கு கொஞ்சம், எனக்கு கொஞ்சம், பெரிம்மாவுக்கு கொஞ்சம் என்று தானாகவே செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். அந்த இடத்தில், ஆயிரம் ரூபாவுக்கு புத்தகங்கள் வாங்கியது நாங்களாகத்தான் இருக்கும்.  அவர் பரிந்துரைத்தன் பேரில், அடுத்த நிறுத்தம் "மாளிகை மேடு".
 
சந்துபொந்துகளில், செல்லும்போது இங்குதானா ராஜேந்திரசோழன் படைகளோடு வசித்திருப்பான் என்று தோன்றியபோது நாங்கள் வந்து நின்ற இடம் ஒரு பொட்டல்காடு. தொல்லியல்துறையின் அறிவிப்பு பலகை இல்லையென்றால், அது மாளிகை இருந்த இடம் என்று நம்புவது கடினமே! 
 
அங்கும், யாருமே பாதுகாக்காத ஒரு அருங்காட்சியகம் ஒரு கூரையின் கீழ் இருந்தது. சிலைகள். பூட்டியிருந்தாலும் திறக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதை முடித்துவிட்டு, இடப்புறம் திரும்பினால், மாளிகை மேட்டுக்கு வழி. செங்கற்களால் ஆன அடித்தளம் மற்றும் சில பாறைக்கற்கள். ஆடுகள் அந்த பக்கம் மேய்ந்துக்கொண்டிருக்க, இந்த பக்கம் நாங்கள். 'இதுதான் பேலஸா' என்று நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் பப்பு. பார்பி மற்றும் டிஸ்னியில் மாடமாளிகளை போலிருக்கும் என்றெண்ணியிருப்பாள் போலும்.

'ஒருகாலத்துல' என்று சொன்னால் கற்பனை குதிரையை தட்டிவிடக்கூடிய  நிலையை எட்டியிக்கிறாள் அவள். 'ஓ அந்த காலத்துல இப்படி இருந்துருக்கும்...ராஜா இருந்தப்போ எப்படி இருந்துருக்கும்..இங்கே என்ன இருந்திருக்கும் என்ன செஞ்சிருப்பாங்க‌' என்று மேலும் கதைகளை எடுத்துவிடுவாள். அதற்கு,  சென்னையின் ஆலம்பறை கோட்டைக்கும், தில்லியின் பழைய கோட்டைக்கும், கோவாவின் சப்போரா கோட்டைக்கும், கன்னியாகுமரியின் வட்டக்கோட்டைக்கும் அங்கிருந்தபடியே நன்றிகளை உரித்தாக்கினேன்.   


இது அரண்மனையின் அடித்தளம், இதற்கு மேலே உப்பரிகை மற்றும் மாடங்கள் என்று நாங்களாகவே மேஸ்திரி வேலையை செய்தோம். சற்றுநேரத்தில், 'தங்கக்காசுகள் புதைந்திருக்கும்,  தேடுகிறேன்' என்று ஆரம்பித்தாள். கோவில் திறக்கும் நேரமாகிவிட்டதால், பெயர்ந்துகிடந்த சில செங்கற்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டோம். பிற்பாடு, அருங்காட்சியகத்தில் வாங்கிய நூலிலிருந்து தெரிந்துக்கொண்டது, மாளிகைமேட்டிலிருந்து வண்டி வண்டியாக செங்கற்களை எடுத்து சென்று வீடுகளை கட்டிக்கொண்டார்களாம் சென்ற நூற்றாண்டில். வண்டிக்கு இரண்டு அணாக்கள்.  ராஜ செங்கற்கள் கொண்ட வீடுகள்!!

கோவில் திறந்திருந்தது. அத்தை சொன்னதன் காரணம் விளங்கியது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு நான் பொழிப்புரை தரப்போவதில்லை. அது ஒரு அனுபவம். முன்னேறியதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அந்த ஊர் கொண்டிருக்கவில்லை.  ஆனாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மன்னனின் கனவுக்கு முன்,  நாங்கள் நின்று கொண்டிருப்பதை உண்ர முடிந்தது. அணைக்கரை என்ற  (பாலத்தை?) கட்ட ஆங்கிலேயர்கள் இந்தகோவிலின் கற்களை உடைத்து எடுத்து சென்றிருக்கிறார்கள். உலகப்போரின்போது, இந்த கோவிலை தங்களது தங்குமிடமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியது போக, கண்முன் நின்றுக்கொண்டிருக்கும் அந்த பிரம்மாண்டமான கோவிலின் உள்ளே சென்றபோது எழுந்த வியப்பை எழுத்தில் கடத்தமுடியுமா என்று தெரியவில்லை.


 
இன்று ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000மாவது விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த நினைவுகூரல் வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம், தொல்லியல்துறை, குழந்தைகளுக்காக சிலவற்றை செய்யலாம்.  அவர்களுக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ‍ வரலாற்று நடைகள், மேலும், ஒலிஒளிக்காட்சிகள் என்று முயற்சிகள் எடுத்தால் நல்லது. 

Tuesday, January 14, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - III


 அடுத்ததாக, சென்று இறங்கிய இடம் பட்டீஸ்வரம். தாராசுரத்திலிருந்து வெகு அருகில் உள்ளது. கோயிலின் பெயர் தேனுபுரீஸ்வரர் கோயில்.  பாடல் பெற்ற தலம் என்பதால் நண்பர் லிஸ்டில் கொடுத்திருந்தார் போலும். மிகப் பழமையான கோயில். கோயிலின் முன்கோபுரம் வர்ண பூச்சுக்களுடன் இருந்ததால் பழமை தெரியவில்லை. கோயிலின் உள்ளிருந்து ஒரு குட்டி பெண்ணின் குரல் மைக்கில் ஒலித்தது.  ‍ "எம்பாவாய் " என்று ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.

வாயிலிருந்து சற்று தள்ளி இட‌ப்பக்கத்தில் ஒரு பெரிய நந்தி. உள்ளே நுழைந்ததும், நந்தி அருகில் வயதான ஆண்களும் பெண்களுமாய் உள்ளே வருவோரிடம் காசு கேட்டக்கொண்டிருந்தனர். வலப்பக்கத்தில் ஒரு மண்டபம். திருப்பாவை  ஒப்புவிக்கும் போட்டி போலிருக்கிறது. கீழே சிறார்களும் ஆசிரியர்களும் அமர்ந்திருக்க மேடையில்தான் அந்த குட்டிப் பெண் திருப்பாவை சொல்லிக்கொண்டிருந்தாள். மேடையில் இருந்த பெரியவர்கள் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தனர். வரிக்கு வரி சரிபார்ப்பார்கள் போல. அடுத்த நுழைவாயிலில் நுழைந்து உள்ளே சென்றோம்.

கூட்டமாக இருந்ததால், சாமியை விட்டுட்டு, யாளிகளை சுற்றி கோயிலை வலம் வந்தோம். 
 
திரும்பவும் முன்வாயிலை வந்தடையும் இடத்தில் இன்னொரு குட்டி நந்தி இருந்தது. அதற்குள் கூட்டம் காணாமல் போயிருந்தது. உள்ளே சென்றோம்.பப்பு தூண்களை ஆராய தொடங்கியிருந்தாள். கருவறையில் இருந்த அர்ச்சகர் , மிகவும் இளையவராக இருந்தார்  கோயிலை பற்றி  கேட்டோம்.


சுட்டெரிக்கும் வெயிலில் வந்த திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அனுப்பி அவருக்கு  அருள் பாலித்த கோயிலாம். அப்படின்னா என்ற பப்புவின் கேள்விக்கு முத்து பந்தல்ன்னா அதோ அது மாதிரி இருக்கும் என்று ஓரமாக இருந்த பல்லக்கை காட்டினார். பல்லக்கில் வந்த திருஞானசம்பந்தர் காணும் விதமாக நந்தியை விலகச் சொன்னாராம்.அதனால்தான் இந்த கோயிலில் நந்திகள் எல்லாம் நேராக இல்லாமல் சற்று விலகியிருப்பதாக முடித்தார். இந்த கோயிலைக்கட்டிய வரலாறு பற்றி அவருக்கு தெரியவில்லை.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

புராணக்கதைகளை  சொல்லுவது போல  கொஞ்சம் வரலாற்றையும் சொல்லலாம். கோயில்களில் பெரும்பாலும் புராணங்களைத்தான் சொல்கிறார்கள். யார் கட்டியது, நூற்றாண்டு, வழிபட்ட மன்னர்கள் பற்றியும் தகவல்கள் சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.

 தூண்களில் பெரிதாக எதுவும் பப்புவை ஈர்க்கவில்லை. ஆனால், கோயிலில் இருந்த ஒரு அக்காவை பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி சுற்றி வந்தாள். அவள் சுட்டிக்காட்டிய பின்னர், நானும் அந்த அக்காவின் அழகில் மயங்கி விட்டேன். அவரது கையில் ஒரு கையை யாரோ சேதப்படுத்தியிருந்தார்கள். 


அவரது கொண்டை, ஆடை, அணிகலன்களை ஆராய்ந்த பிறகு, அவரது கையில் இருக்கும் இசைக்கருவியின் பக்கம் கவனம் திரும்பியது. இப்போது வழக்கொழிந்து போன அந்த இசைக்கருவி என்னவாக இருக்கும் என்று பேசியபடி வெளியில் வந்தோம்.

இப்போது ஒரு சிறுவனின் குரலில் திருப்பாவை. நடுவில் ஒரு குரல் கேட்க, கொஞ்சம் இடைவெளிவிட்டு திரும்பவும் தொடங்கியது. முடியும்/ஆரம்பிக்கும் குறளை சொல்லு என்பது போல இதற்கும் தேர்வு போல!

அடுத்து எங்கு போகலாம் என்று திட்டம் எதுவும் இல்லாததால், அருகில் எந்த கோயில் இருக்கிறது என்று பார்த்த போது தஞ்சாவூர் 20 கிமீ என்ற தகவல் கிடைத்தது.

அடுத்த ஸ்டாப் தஞ்சாவூர். 

நேரம் கிட்டதட்ட ஒன்றரை. உயர்ந்து நின்ற கோயிலின் கோபுரம் எங்களை ஈர்த்தது. ஆனால், வயிற்றின் இருந்த ஒரு  நெருப்பு எரிந்துக்கொண்டிருக்கிறதே! ;‍) பசியை போக்க நல்ல உணவுவிடுதியை தேடினோம். ஞானம் ஒன்றொரு ஹோட்டல் இருந்தது. வழக்கம் போல பப்பு ஃப்ரெஞ்ச் ஃப்ரைசும், ஃப்ரெஷ் லைம் சோடாவும் அருந்த நாங்கள் ஃபுல் மீல்ஸ். பசியை போக்கிக்கொண்டு தஞ்சாவூர் பெரிய கோவிலை அடைந்தோம்.

கோயிலை சுற்றியுள்ள அகழியைப் பற்றி இருநாட்களுக்கு முன்னர்தான் செய்தித்தாளில் வாசித்திருந்தோம். பெரிய பெரிய மரங்களாக அடர்ந்திருந்தன.நுழைவு கோபுரத்தருகிலேயே விளக்கப்படங்கள் வைத்திருக்கிறார்கள். கோயிலின் வரைபடத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.நான்கு மணிக்குதான் உள்ளே திறப்பார்களாம்.  எதற்கு இந்த சம்பிரதாயம் என்று தெரியவில்லை.

உள்ளே திறந்திருந்தாலும் கட்டிடக்கலையை பார்க்க வந்திருக்கும் எங்களுக்கு கோயிலை சுற்றிபார்க்க என்ன இருக்கிறது. மெதுவாக நடக்கத் தொடங்கினோம். வெயில்!!  ஓடிப்போய், கோபுரத்தின் நிழல் விழுகிறதா என்று பார்த்தோம். விழுகிறதே! பள்ளிக்கூட பாட புத்தகங்களில் கூட நிழல் விழாது என்று படித்த நினைவு!! :‍)

நந்தி!! ஒரே கல்லாலான நந்தி! ஆனால், பக்தகோடிகள் நந்தியை பிசியாக வைத்திருந்தார்கள். அருகில் செல்ல முடியவில்லை. கோயிலை வலம் வரத் தொடங்கினோம். கோயில்தான் எவ்வளவு பெரிய வளாகம்!

சோழர்களின் கட்டிடக்கலையை புரிந்துக்கொள்ள அவர்களுக்கு முன்னும் பின்னுமான கட்டிடக்கலையை அறிந்துக்கொண்டால் நன்று. பல்லவர்கள் காலத்து சிற்பக் கலைநுணுக்கங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை யும் விஜயநகர சிற்பக்கலையின் மாறுபாடுகளையும் ASI புத்தகம் சற்று விளக்குகிறது. மேலும்,பல்லவர் கால கோயில்களைக் காணச் சென்றபோது   பல்லவர் காலத்து சிற்பக்கலை பற்றி துப்ரயீல் எழுதிய புத்தகத்தையும் முன்பு வாசித்திருந்தேன். 
தூண்களில் இருக்கும் வேலைப்பாடுகள், மற்றும் தோரண வாயில்களின் வேலைப்பாடுகளை கவனித்தால் பல்லவர் கால கட்டிடக்கலையிலிருந்து சோழர்களின் கலை வளர்ந்ததை காணலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்ததா என்று தெரியவில்லை. அவளது வயதுக்கு இது அதிகமாகவும் இருக்கலாம். அதனால், நாங்கள் துவாரபாலகர்கள், கோயில் சுவரில் இருக்கும் சிறு சிறு தூண்களின் அமைப்புகள், பூக்களின் வடிவங்கள், செடி கொடிகளின் அமைப்புகள், மிருகங்களை,பறவைகளை கண்டுபிடிப்பது, அதோடு முக்கியமாக ஆடல் பாடல் இசைக்கலைஞர்களை அடையாளம் காண்பது என்று கோயிலை ஆராய்ந்தோம்.  





  "ஏன் சில பேரு ப்ரைவேட் பார்ட்ஸ்க்கு நடுவில் இப்படி போட்டிருக்காங்க, சில பேருக்கு போடலை "என்று நடுவில் கேள்வி வேறு. அவள் காட்டிய சில சிலைக‌ளின் மார்புக்கு நடுவில் கச்சை போல கட்டியிருந்தது.

எனக்கும் தெரியவில்லை.


கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் தோரண வடிவத்தை பார்த்து மயிலின் தோகை போன்று இருப்பதாக சொன்னாள். எனக்கு அதை பார்க்கும் போதெல்லம் பல்லக்கு வடிவமாக தோன்றியிருக்கிறது. மயிலையும்,யானையும், சிங்க முகங்களையும் அதிகமாக கண்டோம்.

  நடுவில், கல்வெட்டு எழுத்துகளை கண்டதும் வாசிக்க தலைப்பட்டோம். பப்பு பாவம்....நானும் அவளுடன் சேர்ந்து திணறினேன்! சற்று நேரம்தான்...பிறகு ஒன்றிரண்டு வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சற்று ஊகத்திலேயே வாசித்தால் ஒன்றிரண்டு வார்த்தைகளை வாசித்து முடிக்கலாம். 

அதோடு, பப்புவுக்கு போட்டோ எடுக்கும் ஆசை வந்துவிட்டது. கோபுரங்களோடு, என்னையும் சேரத்து எடுத்து தள்ளினாள். மண்டபத்தில்தான் எத்தனை சாமிகள்...அவர்கள் எல்லோருக்கும் சிறு சிறு கோயில்கள்.வருண பகவான் மிகவும் கவலைகிடமாக இருந்தார். சுவர்களில்,  நாயக்கர் காலத்து படங்களும். படம் பார்த்து கதை சொல்லுதலை விளையாடினோம். புராணக்கதைகள் தெரியாவிட்டால் நீங்கள் சொல்லுவதுதானே கதை! 


சில இடங்களில், நந்திகளின் காதில் மக்கள் ரகசியங்களை கசியவிட்டபடி இருந்தனர். நந்தியின் இன்னொரு காதையும் பொத்திவிட்டனர். இல்லையென்றால், ரகசியத்தை நானும் கேட்டிருப்பேன்.;‍) மக்களின் நம்பிக்கை! 


அவர்கள் சொல்வதை பார்த்து, விளக்கம் கேட்டபிறகு பப்புவும் தன் ஆசைகளை நந்தியிடம் சொல்லிவிட்டு வந்தாள். கேட்டதற்கு, ரகசியம், சொன்னா நடக்காதே என்றாள். விட்டுவிட்டதும், அவளாகவே, "எனக்கு மெர்மெயிட் ஆகணும், எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் மெர்மெயிட் ஆகிட்டு அப்புறம் அம்மாகிட்ட வந்துடணும்னு சொன்னேன்" என்றாள். 

கால்கள் வலிக்க ஆரம்பித்தது. சொன்னால், பப்புவும் அதையே பிடித்துக்கொள்வாள். நல்ல கூட்டம். ஐயப்ப பக்தர்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் மேல் மருவத்தூர் பக்தர்கள். கோயிலே கருப்பும் சிவப்புமாக‌ ஜெக ஜோதியாக  இருந்தது. அப்படியே சுற்றி பிராசதம் விற்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். அங்கும் வாங்கும்படி எதுவும் இல்லை. அதற்கு சற்று அருகிலேயே கல்படிகள் அந்த கோபுரத்துக்கு செல்ல வழிகாட்டின. ஆர்வத்தில் ஏறிவிட, பின்னாலே பப்புவும். அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும்! 


அங்கிருந்து கீழே பார்க்கவும், கோபுரத்தை பார்க்கவும் அருமையாக இருந்தது.  நாங்கள் இறங்கவும், பிரசாதம் விற்கும் கடையிலிருந்து சிலர் வந்து எல்லோரையும் இறங்கச் சொல்லவும் சரியாக இருந்தது.

அதற்குள் கோயிலை திறந்துவிட்டிருந்தார்கள். அவ்வளவுதான்... விஸ்தாரமான அந்த படிகளில் முழுக்க மக்கள்! அதை பார்த்ததும்  செல்வதற்கு தைரியமில்லை. எல்லாருக்கும் பின்னால் கடைசியாக நின்றுக்கொண்டோம். ஆனாலும், பின்னால் சேர்ந்த கூட்டத்தை பார்த்து பயந்து விலகிவிட்டோம். துவாரபாலகருக்கருகில், அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். கூட்டம் சற்றே குறைந்துவிட, பப்புவை அழைத்தபோது வர மறுத்துவிட்டாள். 'உள்ளே போக வேண்டாம்' என்றும் "நான் வரலை நீ போ" என்றும் ஸ்ட்ரைக்! பிறகென்ன...உள்ளே செல்லாமல், சுற்றி சுற்றி படங்கள் எடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு பழமையான மரத்தை நன்றாக பராமரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த கோயிலில் இசை எழுப்பும் தூண்கள் இல்லை. இதற்கு முன்பு, நாங்கள் சென்ற சில கோயில்களில் ஒலி எழுப்பும் தூண்களை கண்டிருந்தோம்.  சோழர்கள் காலத்தில் ராஜராஜனின் காலத்தில் அந்த தொழில்நுட்பம் வரவில்லையோ என்னவோ?!  அல்லது கோயிலின் உள்ளே இருந்ததோ?

எப்படியோ,தஞ்சாவூர் பிக் டெம்பில் பார்த்தாகி விட்டது. பப்புவின் இந்திய சின்னங்களில் இன்னொரு டிக். ஆனாலும், உள்ளே சென்று கோயிலின் உள்ளிருக்கும் ஓவியங்களை பார்க்காதது ஒரு குறைதான். அடுத்த முறை வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே! ;‍)

குதுப் மினாரை பார்த்து மதி மயங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை பார்க்கும்போதும் பிரமிப்புதான். தஞ்சையில், எங்கிருந்து கல் கிடைத்திருக்கும், எத்தனை மலைகளை கபளீகரம் செய்திருப்பார்கள் என்று பேசியபடி கும்பகோணம் வந்து சேர்ந்தோம்.  ஆச்சரியமாக, கும்பகோணத்தில் "கும்பகோணம் டிகிரி காபி" என்று எங்குமே இல்லை. ஆனால், காபியை பித்தளை டபரா தம்ளரில் கொடுக்கிறார்கள். வந்ததற்கு நினைவாக அதையாவது வாங்குவோம், மினியேச்சரில் கிடைத்தால் இன்னும் நல்லது என்று நினைத்து ஒரு பாத்திர கடையருகில் நிறுத்தினோம்.

மினியேச்சர் எல்லாம் இல்லை. சாதாரண சைசில் இரண்டு வாங்கிக்கொண்டோம். அங்கிருந்த குதிரை, யானைகளை பார்த்ததும் பப்புவுக்கு ஆசை! விலை கேட்டதும், "பள்ளி துட்டு/காலேஜ் மணி" என்று சொல்லிக்கொண்டாள். அதாவது, அதை வாங்கினால், அவளது காலேஜுக்கு என்று நான் வைத்திருக்கும் காசு போய்விடுமாம். (அப்படி ஒன்று இனிதான் நான் சேர்த்து வைக்கவேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கேட்கும்போது, 'காலேஜ் படிக்க காசு வேணும் இல்லப்பா..." என்று சீன் போடுவேன். அதுதான் இப்படி விளை(லை)ந்திருக்கிறது.)

ஆனால், எங்கு சென்றாலும் பப்புவுக்கு ஒரு பழக்கம். அவளது பள்ளிக்கு என்று ஏதாவது வாங்கிக் கொள்வாள். எஜுகேடிவாகத்தான் இருக்கும் என்பதால் நாங்களும் தடை சொல்வதில்லை. கன்னியாகுமரி சென்றபோது, விதவிதமான மணல் பாக்கெட்டுகள்,சங்குகள், தேக்கடி சென்ற போது பலவிதமான மசாலா/வாசனை பொருட்கள் பொட்டலம், தில்லி சென்ற போது பள்ளி லைப்ரரிக்கு ஒரு புத்தகம் என்று! இங்கு அவளைக் கவர்ந்தது, விதவிதமான நந்தா விளக்குகள். பள்ளிக்கு ஒன்றும், அவளுக்கு இரண்டுமாக வாங்கிக்கொண்டாள். 200ரு என்று சொன்னதும், ஒன்றை வைத்துவிட வற்புறுத்தினாள். செலவைக் குறைக்கிறாளாம்! எப்படியோ, நல்லபடியாக ஷாப்பிங் முடிந்துவிட தங்குமிடத்துக்கு திரும்பினோம்.

Monday, January 13, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - II


 தாராசுரத்துக்கு வழிகேட்டுக்கொண்டோம். 3 கிமீ தானாம்.  மிகவும் குறுகலான சாலைகள். ஒரு பஸ் சென்றால் எதிரில் இன்னொரு வாகனம் வருவது கடினம். பழையாறை,பட்டீஸ்வரம் செல்லும் பேருந்து எங்கள் முன்னால்.  இந்த ஊரின் பெயர்களை  நாவல்களில் படித்த நினைவு.  குறுகிய சாலை நெளிந்து வளைந்து சென்றது. சுற்றிலும் வீடுகள் மற்றும் கடைகள். இதற்குள்தானா அந்த புகழ் பெற்ற கோயில் இருக்கிறது என்று ஒருநிமிடம் சந்தேகமும் எட்டிப்பார்த்தது.ஏனெனில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலையோ அல்லது கற்களோ கிடையாது. எங்கிருந்து கற்கள் கொண்டு வந்து கோயில்களை அமைத்திருப்பார்கள்? கும்பகோணம், அதன் சுற்றுவட்டார கோயில்களை பார்க்கும்போது இந்த எண்ணம் எழாமலில்லை.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், யுனெஸ்கோ பராமரிக்கும் சின்னங்களுள் ஒன்று. கோயில் கோபுரங்களை வர்ணமடித்து இருக்க மாட்டார்கள் என்பதே ஆறுதல். பச்சையும், சிவப்புமாக கோயில் கோபுரங்களில் சிற்பங்களை பார்த்தால் அவை கற்சிற்பங்கள் என்ற எண்ணமே வருவதில்லை. ஏதோ பிளாஸ்டிக்கினால் அல்லது ப்லாஸ்டர் ஆஃப் பாரிசினால் செய்த உருவமாக தோற்றமளிக்கிறது.

கோயில் மதில் தெரிந்தது. மதில் மேல் நந்திகள் நமக்காக காத்திருக்கின்றன.  யுனெஸ்கோ பராமரிப்பின் அடையாளத்தை, பசும்புல் மெத்தை பறை சாற்றியது. நுழைவு சீட்டு அல்லது காமிராவுக்கு என்று டிக்கெட் எதுவும் வாங்க வேண்டியதில்லை.  செருப்புகளை விட்டுவிட்டு படிகளில் இறங்கினோம்.  தரையில் இருந்து இறங்கிதான் செல்ல வேண்டியிருக்கிறது. இறங்கியதும், ஒரு சிறு மண்டபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நந்தி.  உள்ளே நுழைந்தோம். கூட்டம் அதிகமில்லை.



இடப்பக்கம் திரும்பி நடக்கும்போதே நம்மை ஈர்க்கிறது - தேரை இழுக்கும் யானையும், குதிரையும் மற்றும் தேரின் சக்கரமும். இந்த கோயிலின்  முன் மண்டப அமைப்பே ஒரு பெரிய தேரை குதிரைகளும், யானையும் இழுப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேர் போன்ற அமைப்பை கொண்ட கோயில் ஹம்பியில் இருப்பதாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். அதே போல், கோனார்க்கின் சூரிய கோயிலும். 

தேரை இழுக்கும் பாவனையில், யானையின் முன்னங்கால் சற்று மடக்கியிருப்பது போல வடிவமைத்திருப்பது சிற்பியின் அழகான கற்பனை. சக்கரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் அலங்காரங்களை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். மண்டபத்தின் படிகளிலும் கூட ஆடலும் பாடலுமே!

இந்த பயணத்தின்போது, பப்புவுக்கு திடீரென்று குதிரை வாங்கும் ஆசை வந்துவிட்டிருந்தது.  அவள் இந்த கல் குதிரையை கவனித்துக்கொண்டிருந்ததோடு, அதில் எப்படியாவது ஏறிவிட முடியுமா என்று பார்த்த படியிருந்தாள்.பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,ஒவ்வொருவரும் அப்படி ஏறி அமர ஆசைப்பட்டால் இவ்வளவு நாட்கள் இந்த யானையும் குதிரையும் இருந்திருக்குமா என்றும் ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன். 

யானையின் அணிகலன்களையும், சக்கரத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் ரசித்தோம். அங்கேயே போட்டோக்களையும் எடுத்துக்கொண்டோம். படிகளின் கைப்பிடியாக‌ யானையின் தும்பிக்கை! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், வாழ்ந்து பெயர் தெரியாமல் மறைந்துபோன அந்த சிற்பிகளை நினைத்துக்கொண்டோம். மேலே மண்டபத்துக்கு ஏறிச் சென்று தூண்களை பார்வையிட்டோம். ஒவ்வொரு தூணிலும் அவ்வளவு நுணுக்கமான கலைநயமிக்க சிற்பங்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருக்க வேண்டும். அதேபோல்,  எல்லா வெளிப்புற தூண்களும்  யாளியின் மீது செதுக்கப்பட்டிருக்கிறது.

அநேகமாக, இந்த சிற்பங்கள் எல்லாம் நாயன்மார்களின் கதையாக இருக்கலாம். நமக்குத்தான் ஒன்றிரண்டை தவிர மீதி எதுவும் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள், அர்ச்சகர் "வர்றீங்களா" என்று கேட்டு அழைத்துச் சென்றார். கோயிலின் வரலாறை சுருக்கமாக சொல்லி முடித்தார். 'இரண்டாம் ராசராசனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் அதன் சிற்பக்கலைக்காகவே மிகவும் பெயர்பெற்றது. ஐராவதம் என்பது இந்திரனின் வெள்ளை யானை. அந்த யானை இங்கு சிவனை வழிபட்டது என்பது ஐதீகம். கோயில் முழுக்கவே அற்புதமான சிற்பங்கள். ஒரு இன்சிலும் செதுக்கியிருப்பார்கள். அதே போல், பெரிதாகவும் செதுக்கியிருப்பார்கள்' என்று கூறி,  தூணில் ஒரு இன்ச் பிள்ளையாரைக் காட்டினார். கையை வைத்து பார்க்கவும் சொன்னார். உள்ளிருந்து கடைந்தெடுத்தது தெரிந்தது.

அடுத்து, உள்ளே சென்றோம். அங்கு படமெதுவும் எடுக்கக் கூடாது. பார்த்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐயப்ப பக்தர் கூட்டம் வந்திருந்தது. யானை மீதேறி படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பப்புவுக்கு யானை மீது அமர ஆசை வந்துவிட்டது.ஏறி அமர்ந்துகொண்டாள். படமெடுக்கவும் ஆணையிட்டாள்.பின்னர். கோயிலின் சுவர்களில் இருக்கும் சிற்பங்களை பார்த்துக்கொண்டே நடந்தோம். மேலே மட்டுமில்லை, சுவரின் கீழே இருக்கும் இடத்தைக்கூட விடவில்லை. சொல்லப்போனால், அங்குதான் மிக அழகான சிற்பங்கள் இருக்கின்றன.



வெளிச்சுற்று மண்டபத்தில் முழுக்க தூண்கள். மேற்கூரைகளை கூட விடவில்லை. எல்லா இடத்திலும் சிற்பங்கள். பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருந்தது.  இது என்ன உருவமாக இருக்கும் என்றும் யாளியின் தும்பிக்கை என்றும் சிற்பங்களில் இருக்கும் மக்கள் கையிலிருக்கும் உபகரணங்களை கண்டுபிடிப்பதிலும் நேரத்தை கழித்தோம். 'அங்கே எல்லாரும் சண்டைக்கு ப்ராக்டீஸ் பண்றாங்க' என்றும் 'யானை மேல சிங்கம் உட்கார்ந்து இருக்கு' என்றும் ஆராய்ந்தாள். நெடுநேரம் யானையின் மீது சிங்கத்தின் தலை எப்படி இருக்க முடியும் என்று தடவி பார்த்துக்கொண்டிருந்தாள்.  இந்த மண்டபம் முடியும் இடத்தில் கல்லாலான ஜன்னல்கள்.சிற்பிகளின் திறமையை எண்ணி வியந்து போனோம்!


அங்கிருந்து, மீண்டும் எங்களின் "ஐ ஸ்பை " தொடங்கியது. ஒவ்வொருவரும் மற்றவரை அழைத்து அவரவர் பார்த்ததை கூற முற்பட்டோம். இறுதியாக, பப்புவையே தொடர்வது என்று முடிவாயிற்று. ஒரு தலை, நான்கு பக்கங்களிலும் நடன போஸ் கொடுத்த மங்கையை கண்டுபிடித்தோம். 
 
திடீரென்று, கோலாட்டம் ஆடும் சப்தம் வர‌ கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  மங்கையரை  வந்தடைந்தோம். அதன் தொடர்ச்சியான, இன்னொரு மண்டபத்துக்குச் சென்றோம்.   அங்குதான் 108 சிறு சிற்பங்கள் சுவரில் கடைந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களெல்லாம் சைவ சமய முனிவர்களாக இருக்கலாம்.

அந்த முனிவர்களோடு பப்பு கொஞ்சம் நேரம் செலவிட்டாள். எங்களுக்கு 108 ஆக எண்ணிக்கையில் இருந்தது பப்புவுக்கு மட்டும் 105 ஆக மாறிவிட்டது.அவர்களது இடையிலிருக்கும் உடை கூட மிக அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜமாகவே உடை உடுத்தியிருப்பது போல!  


அடுத்ததாக, ஒரே சிற்பத்தில் யானையும், காளையும் இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த உற்சாகத்தில் நாங்கள் கத்தியவுடன் அருகிலிருந்த இன்னும் சிலரும் யானையையும் காளையும் கண்டு களித்தனர்.




அடுத்ததாக, தொல்லியல் துறையின் சிறு அருங்காட்சியகம். கோயிலின் உதிரி/உடைந்த‌ சிற்பங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒருவர், அனைவருக்கும் விவரிக்கிறார். அந்த மண்டபத்தின் மேலே பனிரெண்டு ராசிகளுக்குமான சிற்பங்கள் வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அதோடு, நாயக்கர் காலத்திய சுவர் ஓவியங்களையும். சிற்பங்களை காட்டி சிவன், விஷ்ணு என்று புராண கதைகளை சொன்னதால் மனதில் எதுவும் பதியவில்லை. அந்த காலத்து சந்தன கட்டையை (கல்லாலானது) காண்பித்தார். எவ்வளவு பெரிது!! 

இறுதியாக‌, ஒரு வள்ளி தெய்வானை முருகன் சிலையை காண்பித்தார். அதில் தெய்வானையின் உடையலங்காரத்தையும், வள்ளியின் உடையலங்காரத்தையும் விவரித்துச் சொன்னார். இருவரும் வேறு வேறு வர்க்க பெண்கள். வள்ளியின் ஆடை அணிகலன்கள் எளிமையாக இருப்பதாக சிற்பிகள் காண்பித்திருக்கின்றனர். அதோடு, வள்ளியின் மூக்கில்,காதில் அணிகலன் அணிய துவாரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். பப்புவுக்கு அது மிகவும் ஆச்சரியம்!


அந்த மண்டபத்திலேயே, சோழர்களின் வரலாறும்,தலைமுறை தகவல்களும் கிடைக்கிறது. அதோடு, அந்த கோயிலில் நாம் தவறவிடக்கூடாத சிற்பங்களையும் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.  அந்த சிற்பங்களை தவறாமல் பார்க்க சொன்னதோடு, அவரே இன்னொரு தகவலையும் கூறினார். ஒரு இன்ச் பிள்ளையாரோடு, ஒரு இன்ச் நடராசர், சிவன் எல்லாம் இருப்பதாக.

போட்டோவில், குறிப்பிட்டிருந்த சிற்பங்களில், இரண்டு சிற்பங்களை நாங்கள் கவனிக்காமல் விட்டிருந்தோம். ஒன்று ,வளையமாக‌ பெண்கள் இருவர், மாடு ஒன்று தானாக பாலை அபிஷேகம் செய்வது. தேடிப்பார்த்தும் கிடைக்காமல், அவரையே தேடிச் சென்றோம். அந்த மண்டபத்தின் கீழ் வரிசையிலேயே இருந்தது. தவறவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்! எங்களைத் தொடர்ந்து பின்னாலேயே இன்னும் சிலர் வர, மற்ற சிற்பங்களை பற்றியும் எங்களிடம் கேட்டனர். அவர்களுக்குச் சொல்லிவிட்டு மற்றொரு சிற்பத்தை காண சென்றோம். ஒரு வயதான தம்பதி, எங்களோடு வந்து மற்ற சிற்பங்களை காண்பிக்குமாறு கேட்டனர். கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்களாம். "நம்ம  பீபிள் அப்பவே இப்படி இருந்திருக்காங்க" என்று அவர்களுக்குள்
பேசிக்கொண்டனர்.

கோயிலினுள் ஒரு சிறு மதில் போல கட்டி அதிலும் சிறு நந்திகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நந்திகளின் தலைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.


போட்டோக்கள் எடுத்துக்கொண்ட பின்னர் வெளியில் வந்தோம். செருப்புகளை அணிந்துக்கொண்டு கோயில் மதில் மீதிருக்கும் நந்திகளை திரும்பி பார்த்தபடி நடந்தோம். 'பக்கத்துலதான் இருக்கு, ஹேண்ட்லூம் சாரி, சில்க் சாரி இருக்கு. டயம் இருந்தா வந்து பாருங்க‌' என்றார் ஒருவர். கார்டு இருந்தா தாங்க, வரோம் என்று அவரிடம் வாங்கிக்கொண்டோம். தாராசுரத்தின் தேர் அங்கேயே நிற்க எங்கள் தேரில் ஏறி  பட்டீஸ்வரம் செல்ல  ஆயத்தமானோம்.

  

Sunday, January 12, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - I

கடந்த டிசம்பர் 2013 இறுதியில், உறவினர்களை சந்திக்க ஒரு சுற்றுப்பயணம் சென்றோம். பப்புவின், இந்திய சின்னங்களை பார்க்கும் பட்டியலில் தில்லிக்கு அடுத்து மும்பை வந்துவிட்டிருந்தது. 'கேட்வே ஆஃப் இந்தியா' பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். சிலநாட்களில், அந்த லிஸ்டில்  "அடுத்ததா பிக் டெம்பிள் பார்க்க போலாம்ப்பா!1000 இயர்ஸ் இல்ல‌" என்பதும் சேர்ந்துக்கொண்டது. இந்த விடுமுறையை சாக்கில் கொண்டு - இரண்டு நாட்கள் மட்டும் தஞ்சை மற்றும் கும்பகோணம் பயணம்.

பொதுவாக, எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூகுளை அலசி ஆராய்வதுண்டு. குறைந்தது, எங்கெங்கு செல்ல வேண்டும் என்றாவது ஒரு லிஸ்ட் இருக்கும் முக்கியமான இடங்கள், மியுசியம் என்பது போல! இந்த முறை,   எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் விசாரித்ததோடு சரி. 'எல்லாம் நம்ம ஊருதானே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கலாம். கையில், ASI World heritage series  "Chola Temples" மட்டும் இருந்தது.  அலுவலக நண்பர் பல கோயில்களை,பாடல் பெற்ற தலங்களை தரிசித்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது   ஒரு சின்ன லிஸ்ட்  கொடுத்திருந்தார்.

கும்பகோணத்தை நாங்கள் எட்டும்போதே மணி ஐந்து. அருகில் இருக்கும் கோயில்களை பார்க்கலாம்  என்று கிளம்பினோம். லிஸ்டில் முதலில் இருந்த‌, சாரங்கபாணி கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் கோயில் முழுக்க சாத்தியிருந்தார்கள். எதற்கு சாத்தியிருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. அபிஷேகம் என்று கூறினர் அருகில் இருந்தவர்கள். சற்று நேரத்தில் கதவை திறந்து ஒரு பல்லக்கு போன்ற ஒன்றில் சாமியை எடுத்துச் சென்றனர். நாங்கள் உள்ளே சென்றோம். கூட்டமாக இருக்கும் கோயிலுக்குச் செல்வது பப்புவுக்கு இதுதான் முதல்முறை.

பொதுவாக நாங்கள் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிட என்று செல்வதில்லை. பழங்கால கோயில்கள், தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கோயில்களுக்கு மட்டும் செல்வதுண்டு. மேலும், அந்த கோயில்களி லெல்லாம்  பெரிதாக கூட்டம்  ஒன்றும் இருக்காது.  வரும் ஒன்றிரண்டு பேரும் எங்களைப் போலவே கோயிலின் சிற்பக்கலையை, தொன்மையை பார்க்க வந்தவர்களாகவே இருப்பார்கள். அடித்துப்பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியதும் இல்லை. கோயிலில் இருப்பவரே,  நம்மை அழைத்து கோயிலைப் பற்றியும் அதன் சிறப்புகளையும் கூறிவிடுவார். இந்த கோயிலில்தான்  முதன்முதலாக கூட்டத்தையும், வரிசையில் சென்று பார்க்க வேண்டியிருப்பதையும் பப்பு பார்க்க நேரிட்டது. கோயிலை சுற்றி வரும்போது, ஒரு பெரியவர்/அர்ச்சகர் எங்களை அழைத்தார்.

அவர் அழைத்ததை பார்த்து  அவரை நோக்கிச் சென்றோம். படிகள் எங்களை தரைக்குக் கீழே அழைத்துச் சென்றன. திருப்பதி சாமி பாதாளத்தில் இருக்கிறார் என்றும் புத்தாண்டை முன்னிட்டு சில நல்ல வார்த்தைகளையும் கூறினார். கோயிலில் அந்த இடம் மட்டும்தான் கூட்டம் இல்லாமல் இருந்தது. பாதாள வெங்கடாசலபதியை பெரும்பானோர் கண்டுக்கொள்வதில்லை போலும். மெயின் டெயிட்டியைவிட இந்த இடம் அமைதியாக இருந்தது. நாயக்கர் காலத்து சிலையாக இருக்கலாம்.

கோயிலை விட்டு வெளியே வந்தோம். அடுத்ததாக, அருகில் இருக்கும் கோயில் என்னவென்று விசாரித்ததில், இங்கு தடுக்கி விழுந்தால் கோயில்கள்தானாம். எல்லாமே பழங்கால கோயில்கள்தானாம். சரி, கும்பகோணத்துக்கு பெயர்காரணமான கோயிலை பார்க்க முடிவாயிற்று. அடுத்த ஸ்டாப் - ஆதி கும்பேஸ்வரர் கோயில்.

இந்த கோயில் மதிலே மிகப்பெரிதாக இருந்தது. அதேபோல், கோயில் ஆக்கிரமித்திருந்த இடமும்.இந்த கோயிலின் முடிவில் மற்றொரு கோயிலின் ஆரம்பம். உள்ளே சென்றதும் யானை ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. ஒருவர், காசை கொடுக்க வாங்கிக்கொண்டு  யானை அவரை ஆசீர்வதித்தது. பப்புவை பொறுத்தவரை கோயில்களில் இப்படி யானையை நிறுத்துவது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. யானை, பறவைகள், முயல்களை இப்படி கூண்டுக்குள் அல்லது ஓரிடத்தில் அடைக்கக்கூடாது என்ற எண்ணமுடையவள், யானையைப் பார்த்து பரிதாபப்படலானாள். அதற்கு அதிக வாய்ப்பு கொடுக்காமல் உள்ளே நுழைந்தோம். இடதுபக்க சுவரில்,  கோயிலின் புராணம் "படம் பார்த்து கதை சொல்" பாணியில் வரையப்பட்டிருந்தது. பப்பு சற்றுநேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். ஐஸ் ஏஜ் மாதிரி என்று சொல்லிக்கொண்டாள். அதைத் தாண்டி உள்ளே சென்றோம்.

எந்த கோயிலுக்குச் சென்றாலும், அதன் சுற்று சுவர்களையும், தூண்களையும் பார்த்து அதில் இருக்கும் சிற்பங்களை பற்றி பேசிக்கொள்வோம். பப்புவுக்கும் அதே பழக்கம் வந்துவிட்டது. புத்தகங்களில் "ஐ ஸ்பை" விளையாடுவது போல சிற்பங்களிலும் விளையாடுவோம். இந்த கோயில்களில், பப்பு தானாகவே தூண்களையும், சுவர்களையும் ஆராயத்தொடங்கினாள். அதோடு, மேற்கூரைகளையும் உற்றுநோக்கத் தலைப்பட்டாள்.  "தூண்லியே பார்க்கறேன்னு மேலே பார்க்க மறந்துடாதே" என்று எனக்கு எச்சரிக்கை வேறு.

 வெளியில் வந்தோம். ஒரு சிறு கண்காட்சி இருந்தது. எதுவும் தேறவில்லை.
 வழியில் முராரி ஸ்வீட்ஸில் 'டிரை ஜாமுன்' வாங்கிக்கொண்டு தங்குமிடத்தை அடைந்தோம்.

ASI புத்தகத்தை புரட்டினேன். கூகுள் மேப், தாராசுரம் அருகில் இருப்பதாக காட்டியது. யுனெஸ்கோ பராமரிக்கும் இடம். சோழர்களின் சிற்பகலையை, வாசித்த பொன்னியின் செல்வனை பற்றி பேசிக்கொண்டே நித்திராதேவியை தழுவினோம். ;‍-)