டோடோ வினோதமான ஒலியைக் கேட்டாலோ அல்லது புதிதாக எதையாவது பார்த்தாலோ டொட் டொட் என்று சப்தமெழுப்பும். ஆச்சர்யமடைந்தாலும் டொட் டொட் என்று சப்தம் கொடுக்கும்.
காற்று பலமாக வீசி, வீட்டின் ஜன்னலின் தடுப்புகள் அசைந்தாலோ், கோழிக்குஞ்சுகள் கிச்கிச் என்று அங்கிமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாலோ, பூனைகள் குழந்தை போல அழும் சத்தம் கேட்டாலோ டோடோ ஆச்சர்யமடைந்து விடும். ”டொட்டொட்..இதோ வந்துட்டேன், உன்னை நான் புடிக்கப்போறேன், உன்கூட விளையாட வர்றேன்” என்று சொல்லிக்கொண்டு தாவி ஓடும். பிடிக்க முயற்சி செய்து மண்ணில் விழுந்து புரளும்.
அதிலிருந்துதான், எல்லோரும் டோடோ என்று அழைக்கத் தொடங்கினர்.
டோடோ, ஒருநாள் காலையில் 'கிரிச் கிரிச் கிரிச்' என்ற கலவையான சத்தத்தை கேட்டது. ஆச்சர்யமடைந்தது டோடோ! தோட்டத்தில் குருவிகள் கூட்டமாக மண்ணில் புழுக்களை தேடுவதையும், டோடோவின் உணவுத்தட்டை கொத்தியபடி திரிந்துக்கொண்டிருப்பதையும் பார்த்தது. டோடோ மெதுவாக சப்தமெழுப்பாமல் நடந்தது.
டோடோ குருவிகளை பயமுறுத்த விரும்பவில்லை. குருவிகள் பயத்தினால் பறந்துவிடுவதை டோடோ விரும்பவில்லை. அருகில் சென்றதும் குருவிகளின் மேல் திடீரென்று பாய்ந்தது. கைகளில், குருவியை பிடித்தமாதிரி இருந்தது, ஆனால் கைகளில் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாக்குருவிகளும் பறந்துவிட்டிருந்தன.
டோடோவுக்கு ஏன் குருவிகளை பிடிக்கத் தெரியவில்லை, ஏனெனில் டோடோ ஒருவயதே நிரம்பிய நாய்க்குட்டி!
குறிப்பு : பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். அதற்கேற்ப உருவான கதை. நாய்க்குட்டிக்கு பதில் புலி, சிறுத்தை என்றும் குருவிகள் மான்களாகவும் மாறும்.