Showing posts with label பிரதிபலிப்புகள். Show all posts
Showing posts with label பிரதிபலிப்புகள். Show all posts

Tuesday, June 09, 2015

சென்னை டூ கவுஹாத்தி டூ ஷில்லாங் டூ ச்சிராபுஞ்சி


அந்த ஏழு சகோதரிகளில், யாரை பார்க்க வேண்டுமென்றாலும், கவுஹாத்தியிலிருக்கும் வாயிற்கதவைத்தான் தட்ட வேண்டும். நாங்களும்  தட்டினோம். கவுஹாத்தியின் லோக்பிரியா கோபிநாத் போர்தோலொய்  விமானநிலையம் , எங்களை இனிதே வரவேற்றது. இந்த முறை, ஏழு சகோதரிகளில், மேகங்களை மேகலையாய் அணிந்திருப்பவளைத்தான் சந்திக்கப்போகிறோம்.

கவுஹாத்தியிலிருந்து, மேகலாயா செல்ல வேண்டுமென்றால்,  இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று டாக்ஸி பிடித்து செல்லவேண்டும். இரண்டு, ஹெலிகாப்டர். ஹெலிகாப்டர் சர்வீஸூக்கு எங்கள் பட்ஜெட்டில் இடம்  இல்லை, அதோடு உயிர் மேல் பயம்.

விமானநிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே, 'ஷில்லாங்' 'ஷில்லாங்' என்று  பல குரல்கள் கேட்கும். ஆம், ஷேர் ஆட்டோ மாதிரி 'ஷேர் கேப். தலைக்கு 500 ரூ. நாங்கள் மூன்று பேர் மற்றும் ஆளுக்கிரண்டு  மூட்டை முடிச்சுகள். ஷேர் கேப் வேலைக்காகாது என்று,  தனி வண்டியை ஷில்லாங்கிலிருந்து வரச்சொல்லியிருந்தோம்.

கவுஹாத்தியிலிருந்து, ஷில்லாங்கிற்கு காரில் செல்வதாக இருந்தால், ML என்று பதிவு செய்திருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ஷில்லாங்கிலிருந்து செல்லும் பயணத்திற்கும் இது பொருந்தும்.

ஓட்டுநர் பெயர், கார் பதிவு எண் பற்றி முன்பே மடல் வந்திருந்ததோடு, ஓட்டுநர் பா ஷிம், தப்பும் தவறுமாக‌ என் பெயரை பிரிண்ட் அவுட் எடுத்துக்க்கொண்டு காத்திருந்தார். :-)

இரவு, ஏழு மணிக்குத்தான் கவுஹாத்திக்கு வந்து இறங்கியிருந்தோம். கொலப்பசி. பா ஷிம்மிடம், 'டீக்கடையில் நிறுத்த' சொல்லிவிட்டு, வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். மழை பெய்திருந்தது போல. ஆங்காங்கே, நிலத்தில் நீர் தேங்கியிருந்தது.  சூரியன் அப்போதுதான் மறையத் துவங்கியிருக்க, இருள் மெல்ல எங்களை சூழ்ந்தது.

வித்தியாசமான ஆனால் வண்ணமயமான‌ உடைகளில், ஆண்களும் பெண்களும் சாலையை கடந்தும், நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். போடோ மக்கள். பழங்குடி உடையில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. விமானநிலைய சாலையிலிருந்து இப்போது காட்டுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

'யானைகள் கடக்குமிடம். மெதுவாக செல்லவும்' என்று அறிவிப்பு பலகையை பார்த்ததும், 'ஹேய் பப்பு, யானைல்லாம் வருமாம்ப்பா..' என்று பப்புவிடம் சொல்லிவிட்டு, 'ஹையய்யோ...யானைல்லாம் வந்தா எனன் பண்றது?' என்று கவலைப்பட்டு, ஷிம்மிடம் கேட்க, அவரோ, 'ஆமாம், சில சமயம்தான். இப்போல்லாம் வராது' என்று யானை டாக்டர் மாதிரியே பேசினார்.

போடோ இன மக்களை, அஸ்ஸாமின் நிலக்காட்சிகளை, மூன்று மணிநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து அஸ்ஸாமின் சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை, அஸ்ஸாமும் தமிழ்நாடு போலவே இருப்பதை....மனம் அசைபோட்டபடி இருந்தது.

ஒரு டீக்கடை கூட வரவில்லை. அல்லது அவர் நிறுத்தும்படி வசதியாக‌ இல்லை. சேறும் சகதியுமாக,சாலையைத் தாண்டி இருந்தது. பப்புவோ, பசியில் க்ர்ர்ர்ர்ர்ர்.

நடுவில், தாண்டமுடியாத அளவுக்கு சுவரொன்றை நடுவில், கட்டி சாலை இரண்டு பக்கமாக பிரிக்கப் பட்டிருந்தது. வலதுபக்கம், நல்ல கடைகளாக தென்பட, இடதுபக்கம் இருட்டில் மூழ்கி இருந்தது.  லாரி சுத்தம் செய்யும் இடங்களாகவே இருந்தது, இடதுபக்கம். வலதுபக்கம் போல, இங்கும் நல்ல கடைகள் வரும், ஏதாவது உண்ணலாம் என்று நினைத்திருக்க நேரம் கடந்துக்கொண்டிருந்தது. 

ஒருவழியாக, நாங்களே 'இங்கே நிறுத்துங்க நிறுத்துங்க' என்று கத்தி ஒரு கடையில் நிறுத்தினோம். பேக்கரி, இனிப்புகள் என்று கடை நிறைந்திருக்க, இரண்டு டீ மட்டும் கேட்டோம். பப்பு, 'ஹே ஆச்சி, ரசகுல்லா...ரசகுல்லா வேணும்' என்று கதற, 'இங்கேல்லாம் வேணாம்ப்பா, நல்ல கடையிலே ஷில்லாங்லே போய் வாங்கலாம்' என்று அடக்கினேன்.

அஸ்ஸாம் டீ.

சாலையின் வலதுபக்கம் மட்டும் நல்ல வெளிச்சமான கடைகள், இரண்டுகடைகளுக்கு ஒரு கடை வைன் ஷாப்...எல்லாவற்றிலும் யாராவது வந்து வாங்கிக் கொண்டுதான் இருந்தனர். இந்த பக்கமோ, ஒரு பிஸ்கட் கடை கூட காணோம். விசாரித்தால், அந்த பக்கம் மேகாலயாவாம். இந்த பக்கம் ,நாங்களிருப்பது அஸ்ஸாமாம். ஆகா, ஒரு சாலையில் ஒரே நேரத்தில் 2 ஸ்டேட்ஸ்!!

இந்தியன் ஆயில், மேகாலயா பக்கம்- அஸ்ஸாம் ஆயிலாக-  மாறியிருந்தது. வண்டிக்கான எரிபொருளும், மனிதர்களுக்கான எரிபொருளும் மேகலாயா பகுதியில் மிகவும் மலிவாம். சுவரேறி குதித்து வாங்கிக்கொண்டு செல்வார்களாம். அதனால்தான் சாலைக்கு இந்த பக்கத்தில் கடை வைக்க எவருக்கும் ஆர்வமில்லை போலும்.

நடுவில், பெர்லின் சுவர் போல ஒரு குட்டிச்சுவர். அஸ்ஸாமிலிருந்து மேகாலயா தனியாக பிரிந்ததுதான் காரணம். பப்பு ரொம்ப பொறுப்பாக, 'எப்போ தனி ஸ்டேட் ஆச்சு மேகலாயா? உத்ராகாண்ட் அப்போவா' என்றாள். க்ர்ர்ர்ர்ர்....

கார் மெல்ல மலைப்பாதைகளில் ஊடுருவிச் சென்றது.சாலைகள் அவ்வளவு நன்றாக இருக்கின்றன. வெண்ணைய் போல வழுக்கிக்கொண்டு செல்கிறது வண்டிகள். எதிரில் அத்தனை லாரிகள். என்ன ஏற்றிச் செல்லும் அல்லது என்ன ஏற்றிகொண்டு வரும்? ஷில்லாங்குக்கு தேவையானது எல்லாமே வெளியிலிருந்து வந்தாக வேண்டுமோ?

முறுக்கு போன்ற பாதைகளென்றாலும், தலைசுற்றல், மயக்கம் எதுவும் இல்லை.  கொண்டை ஊசி வளைவுகள் இல்லாதது, நிம்மதி! சாலையின் ஓரத்தில் பார்த்த பெட்ரோல் பங்க்குகள், இருபது வருடத்துக்கு முந்தைய தமிழ்நாட்டை நினைவுபடுத்தின.

நாங்கள் செல்லவேண்டியது ச்சிராபுஞ்சிக்கு. அன்றிரவு மட்டும் ஷில்லாங்கில் தங்குவதாக திட்டம். இரவில் ஷில்லாங் பயணம் எப்படியிருக்குமோ, மலைப்பாதையிற்றே..கவுஹாத்தியில் தங்கிவிடலாமா என்று குழப்பிக்கொண்டிருந்தேன். இரவுகளில், பயமில்லாமல் ஷில்லாங்கிற்கு பயணிக்கலாம் என்றன சாலைகள்.

நமது ஊரைப் போல், அடிக்கடி அடிக்கும் ஹாரன் சப்தம் இல்லை. பொதுவாக, சாலைவிதிகளுக்கு கட்டுப்பட்டு, முக்கியமாக மலைப்பகுதியில்  இருக்கவேண்டிய கவனத்துடன் செல்கின்றன வண்டிகள்.

ஊரை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியாக, லாந்தர் விளக்குகள் வைத்துக்கொண்டு பழக்கடைகள். முக்கியமாக, கொலு வைத்ததுபோல, படிகளில் விதவிதமான பாட்டில்கள். அத்தனையும் ஊறுகாய்களாம்.

 பெரும்பாலும், பெண்களே எல்லாக் கடைகளிலும். 'எப்படி இந்த ராத்திரியிலே, இருட்டுலே தனியா உட்கார்ந்தி ருக்காங்க,  நம்ம ஊரிலே எட்டு எட்டரை மணியானா ரோட்டுலே பெண்கள் நடமாடறதை பார்க்கவே முடியாது' என்று மனம் தராசை தூக்கியது.

பராபானி தாண்டியதும், வரிசையாக வீடுகள். பராபானிதாம் உமியம் ஏரி. செயற்கையாக உருவாக்கப்பட்டது. இரவில் ஒன்றும் தெரியவில்லை. இரவு ஒன்பதரை இருக்கும். பெண்கள், ஆண்கள் என்று கவலையில்லாமல் நின்றுக்கொண்டும், நடந்துக்கொண்டும் இரவின் குளிரை அனுபவித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இளம் பெண்கள் நவீன உடைகளில் இருக்க, நடுத்தர வயது பெண்கள், ஜெயின்சம் உடையில் இருந்தனர். ஒருவரைக் கூட புடவையில் காணமுடியவில்லை.  இந்தியாவின் தென்பகுதியிலிருந்து வடபகுதிவரை, பெண்களை முழுநீள -கட்டும் விதம் வெவ்வேறாக இருந்தாலும்- புடவையில் கண்டிருந்த எங்களுக்கு புதியதாக இருந்தது.

வழியெங்கும் கடைகள்...ஒன்று ஊறுகாய் கடைகள் அல்லது இறைச்சிக் கடைகள். இரவு எத்தனை மணியானாலும், இறைச்சிக்கடைகள், முக்கியமாக பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். 'ஷில்லாங்கில் இறைச்சிதான் ஸ்பெஷல். லஞ்சுக்கு, டின்னருக்கு என்று இறைச்சிதான் உண்போம்' என்றார் பா ஷிம்.

வேறு ஊர், காலநிலை, மக்களின் முகங்கள், உணவு, உடை, மொழி என்று முற்றிலும் புதியதோர் உலகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தின. இந்தியாவுக்குள்தான் எத்தனை உலகங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்! பப்பு மட்டும் இந்திய மாநிலங்களை பற்றி ஆர்வம் காட்டிராவிட்டால், இவற்றை எல்லாம் எப்போது அறிந்துக்கொண்டிருப்பேனோ!

சடாரென்று ஒரு வளைவில் வண்டி திரும்பியபோது திகைத்துப் போனேன். மின்மினி பூச்சிக்கூட்டம் போல,வானத்து நட்சத்திரக்கூட்டம் போல.... ஆம், ஷில்லாங்கை நெருங்கிவிட்டோம். இன்றிரவு நாங்கள் தங்கப்போவது ஷில்லாங்கின் உள்ளூர்க்காரரின் வீடொன்றில். ஹில்டாப் சாட்டு.

போனில் பேசி, இராத்தங்கலுக்கும் இரவு உணவுக்கும் பேசியிருந்தேன்.  இந்த வீடு இருந்தது, உண்மையிலேயே ஹில்டாப்தான். வீட்டை அடையவும், மழை  தூறவும் சரியாக இருந்தது. வாயிலில் வந்து வரவேற்றார், உரிமையாளர். 

காரிலிருந்து இறங்கியதும், முகத்தில் மோதியது குளிர்க்காற்று. பண்டங்களை வெளியில் எடுக்கக்கூட விடாமல், எங்கள் கண்களை ஈர்த்தது, அங்கிருந்து தெரிந்த ஷில்லாங்கின் இரவுக் காட்சி. கீழிருந்த அறையை எங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.



எளிமையான உணவு. சப்பாத்தி, சாதம், பருப்பு, காய்கறிக்கூட்டு. பசிக்கும், குளிருக்கும் அவ்வளவு நன்றாக இருந்தது. மலையுச்சி என்பதால் காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது.உணவுக்குப் பின்,வெளியில் நின்று சற்று நேரம் குளிரை அனுபவித்தோம். இதற்காகத்தானே, வெயில்தகிக்கும் சென்னையிலிருந்து ஓடி வந்திருக்கிறோம்!

இன்றிரவு மட்டும் இங்கு. நாளையிலிருந்து, மூன்றுநாட்களுக்கு  ச்சிராபுஞ்சியின் வசம். நாளை காலையில் புறப்படுவதாக திட்டம். பா ஷிம் வண்டிதான். அவருக்கு இங்கு ஒரு வீடும், ச்சிராபுஞ்சியில் ஒரு வீடும் இருக்கிறதாம். கொடுத்து வைத்தவர் என்று நினைத்துக்கொண்டேன்.

பைன் மரங்களை, அதனை உராயும் காற்றை, மினுக்மினுக்கென்று ஜொலிக்கும் ஷில்லாங் நகரத்தை,வீடுகளை உற்றுநோக்கிவிட்டு படுக்கைக்குச் சென்றோம். இரவு முழுக்க, காற்று கண்ணாடி ஜன்னல் கதவுகளில், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளில் முட்டி மோதும் சத்தம். எங்கேயோ, ஏதோ பெயர் தெரியாத ஊர்களில் அலைந்து திரிவது போல கனவு.

திடீரென்று, கண்களில் வெளிச்சம் கூச பார்த்தால் விடிந்திருக்கிறது. 'ஹைய்யய்யோ..ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போல...' என்று, கண் எரிச்சலோடு, எழுந்து பல் துலக்கி நேரம் பார்த்தால் மணி நாலரை. எட்டு மணிபோல் தகதக‌வென்று வந்துவிட்ட சூரியனை பார்த்து அதிசயித்து, பறவைகளை அவதானிக்க தொடங்கினோம். பப்புவையும் எழுப்பி விட்டேன். இப்படியாவது, ஐந்து மணியை பார்க்கட்டுமே!



ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிதாக மலந்திருந்தன. செம்பருத்தியை இந்த சிவப்பில் பார்த்ததேயில்லை. ஊஞ்சலாடிக்கொண்டும், குளிர்க்காற்றை அனுபவித்துக்கொண்டும் இருந்த நேரத்தில், வந்தார் ஒருவர். 'என் பெயர் டீன். ஐஸ்வரியாவின் கணவன்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.



நினைவு தெரிந்து, 'இன்னாருடைய‌ கணவன்' என்று தன்னை யாரும் அறிமுகப்படுத்திக்கொண்டதை பார்த்ததில்லை. இதுவரை எத்தனையோ வீடுகளில் விருந்தினராக தங்கியிருக்கிறோம். அனைவரும், 'என் மனைவி' என்றுதான் அறிமுகப்படுத்தி வைப்பார்களே தவிர, 'அவரது கணவன்' என்று சொல்லி கேட்டதே இல்லை. இனிய அதிர்ச்சி!!



                           ( Hilltop Chateau)
 
கஸி இனத்தில், பெண்களுக்குத்தான் உரிமைகள் அதிகம். கஸீக்களில் குடும்பத்தை, சமூகத்தை கட்டி ஆள்பவர்கள் பெண்கள்தான். சொத்துரிமைகளும் பெண்களுக்குத்தான்.  இவற்றை எல்லாம் பேசியபடி பிரட்,தேநீரோடு காலை உணவை அருந்தினோம். பா ஷிம் வந்துவிட, மழையை துரத்திப் பிடிக்க ச்சிராபுஞ்சிக்கு பயணமானோம்.

Monday, June 01, 2015

'பிகு'வும் ஃப்ளாஷ்பேக்கும்

படம் பார்க்க பார்க்க, அமிதாப்பும் தீபிகாவும் மறைந்து நானும் ஆயாவுமே திரைக்குள் தெரிவது போல ஒரு உணர்வு. ஆயா, பத்து வருடங்கள் என்னோடு இருந்தார்கள். ஆனால்,நான் ஆயோவோடிருந்தது பதினேழு வருடங்கள்.

சிறுவயதில்,எனது ஒன்றரை வயதில் என்னை கையில் வாங்கிக்கொண்ட ஆயா...

பள்ளிக்காலம் வரை ஆயாவின் கையைப் பிடித்தே நான் வளர்ந்தேன். பதின்மத்தில் எதிரியாக தோன்றிய ஆயா, திருமணமான காலகட்டத்தில் ஒரு தோழியைப் போல அல்லது  வாகனங்களின் ஸஸ்பென்ஷனை போலவே எனக்கு இருந்தார்கள்.

எப்போதென்று தெரியவில்லை. ஒரு மருத்துவமனையில் காத்திருந்தபோது, இரண்டு பெண்மணிகள் எனக்கு பின் வரிசையில் பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதைகள்தான். அதில் ஒரு பெண் சொன்னது இப்போது வரை மறக்கமுடியாது.

'இந்த வயசானதுகள்ளாம் எப்படிதான் கத்துண்டுடறதோ தெரியலை... வாழைப்பழம் சாப்டாதான் ஆகும்னு..தினம் வாழைப்பழம் வேணும்னு மைன்ட்செட்'

ஆயா செய்த ரகளைகள் சொல்லி மாளாது.

 தினமும் மாலையில் ஆயா, தன் இரு மகள்களுடன் போனில் பேசுவார். மெயின் டாபிக் இதுவாகத்தான் இருக்கும்.  ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை கணக்கா 'போன் போட்டு குடு' 'போன் போட்டு குடு' என்று என்னை தொணப்பிவிட்டு...

போனில் என்னதான் டிப்ஸ் கொடுத்தாலும், ஆயா தான் செய்வதைத்தான் செய்வார். அதாவது, ஏதோ தேவாமிர்தம் கணக்காக அந்த பிங்க் கலர் மருந்தை அநாயசமாக இரண்டு மூன்று கப்கள் குடிப்பார். டாக்டர் சொன்னதென்னவோ ஒரு டீஸ்பூனாகத்தான் இருக்கும். இவர் குடிப்பதோ சில பல‌ டேபிள்ஸ்பூன்களாக‌ இருக்கும்.

விளைவு, அடுத்தநாள் காலையிலேயே ஆம்பூருக்கு போன் பறக்கும். அரரூட் கஞ்சியோ, ஜவ்வரிசி கஞ்சியோதான் அடுத்த வேளைக்கு. கடும் காப்பி மாதிரி கடும் டீ, ஒரு மஞ்சள் நிற மாத்திரி சகிதம் ஆயா உட்கார்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருந்தாலும், பெரும்பாலும் 'சொன்னா கேக்கலைல்ல' என்று தோன்றும்..

அன்று மாலை, மகள்களுடனான‌ போனில் -  இதற்கு பரிகாரமும், 'ஏம்மா இப்படி பண்ணீங்க..எல்லா ப்ரொட்டீனும் போயிருக்குமே' என்ற கதறலும் கேட்கும்.

ஆயாவுக்கான மருந்து மாத்திரைகளாஇ, அலுவலகத்திலிருந்து வரும் வழியில் நானே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். வழக்கமாக, மருந்து வாங்கும் கடையில் ,சமயத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகள் கிடைக்காது.அதனால், வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கடையில் மாற்று ஏற்பாடு செய்திருந்தேன்.

வாரயிறுதியில், யாரோ கதவை தட்ட திறந்தால், அந்த மருந்துக்கடைக்காரர். கையில், மருந்துகளுக்காக செய்யப்படும் ப்ரொவுன் நிற பை. பையில், நான்கைந்து மருந்து குப்பிகளின் தலை.

புரியாமல் விழிக்க, 'பாட்டிம்மாதான் போன்லே சொன்னாங்க' என்றார் அவர்.

 என்னவென்று நினைக்கிறீர்கள்?

அத்தனையும் க்ரிமாஃபின் குப்பிகள்.

இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, வாரத்துக்கு இரண்டு வாங்கி அலுத்துப்போன ஆயா, மருந்துக் கடைக்காரருக்கு செய்த பரோபகாரம்தான் இது.

'எதுக்கு அடிக்கடி வந்துக்கிட்டு..அதான் ஆறு பாட்டில் கொண்டுவர சொன்னேன்.'

அவரெதிரில் என்ன சொல்ல முடியும். மொத்தமாக காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒன்றை மட்டும் ஆயாவிடம் கொடுத்துவிட்டு, மீதி அனைத்தையும், எனது அறையில் வைத்துகொண்டேன்.

அதிலிருந்து, இரவுணவுக்குப் பின் க்ரிமாஃபின் கொடுப்பது எனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயா, கெஞ்சுவதை பார்த்தால் பாவமாக இருக்கும். அதை பார்த்தால் முடியுமா?

ஒரு டீஸ்பூனுன் கொடுத்தால் ஆயாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி இரண்டை வாங்கி குடித்துவிடுவார்.

'அதிகமாக குடித்தால் நல்லா போகும்னு யார் சொன்னது உங்களுக்கு? எத்தனை வாட்டி படுறீங்க? நீங்கதானே கஷ்டப்படறீங்க?'

ம்ஹூம்..இதெல்லாம் காதில் விழவே விழாது.வயதானால் எப்படிதான் இந்த அடம் வந்துவிடுமோ...பிகுவில், இந்த அடத்தை மிக அழகாக படம் பிடித்திருந்தார்கள்.

இந்த விஷயத்துக்காக, போனில் பஞ்சாயத்து. எப்படிதான் கறாராக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு ஒரு பாட்டிலை காலியாக்கி விடுவார்.

அமிதாப்பிற்கு,  'என்னால் முடியும். நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்' என்ற ஈகோ அதிகம் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை தாத்தாக்களுக்கு இருக்குமோ என்னவோ...ஆயாவிடம் அது இல்லை. மாறாக, அதீத தன்னம்பிக்கை உண்டு. நிறைய முறை, நிறைய வடிவத்தில் அனுபவப்பட்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் இவரை பார்த்ததும், 'ச்சேர் எடுத்துட்டுவரட்டுமா' என்று- வீல் சேர் கொண்டுவர‌ - ஓடும் பகதூரை ஒரு கையாலே அடக்கிவிடுவார். சிரமப்பட்டு அவர் ஏறுவதை பார்ப்பவர்கள், ஏதோ என்னை கல்நெஞ்சக்காரி போல எண்ணிக்கொள்வார்கள்.

ஒருமுறை, லங்க்ஸில் டீபி வந்து மிகுந்த சிரமப்பட்டார். தானாக‌ நடக்கக்கூட முடியவில்லை. நாம் கை பிடித்தால் விட்டுவிட்டு,  ஊனிக்கொண்டு எழுவார்.
அவராகத்தான், நம் கையை பிடித்துக்கொள்வார். அவர்தான், நம் கையை பிடித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில், ஆயா தனியாக இருக்கும்போது, நடக்க உபயோகமாக இருக்குமே என்று ஊன்றுகோல் வாங்கியிருந்தோம். அதனை சீண்டக்கூட இல்லை. வலிய, எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று டெமோ காட்ட, வாங்கியதற்காக, இரண்டொரு முறை அதனை எடுத்துக்கொண்டு நடந்தார். ஆம், அதனை ஊன்றாமல், கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தார்.

பழக்கமில்லாததால் இப்படி இருக்குமோ, சில நாட்களில் பழகிவிடும் என்று நினைத்த நாங்கள்தான் ஏமாளிகளானோம்.  இறுதிவரை, அதனை ஊன்றி ஆயா நடக்கவேயில்லை. அவர் இறுதியாக மருத்துவமனைக்கு சேரும் நாளுக்கு முன்பு கூட, எனது கைகளை பிடித்துக்கொண்டுதான் படுக்கைகயறைக்குச் சென்றார்.

அவருக்காக, நானும் பப்புவும், எங்களது படுக்கையை ஆயாவின் அறைக்கே மாற்றிக்கொண்டோம், . நடுஇரவில், அவர் விழித்துக்கொண்டால் எனக்கு விழிப்பு வந்துவிடும். பாத்ரூமுக்குச் சென்று திரும்புவரை 'பக்பக்'தான்.
இதற்கே இப்படியென்றால், அவரை விட்டுவிட்டு ஊருக்கு போவதைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல இரவுகள், அவரது வயிறு சீராக ஏறி இறங்குவதை பார்த்தபின்புதான் நிம்மதியாக எனக்கு தூக்கம் வரும்.

எந்த கோழி கூவுகிறதோ இல்லையோ, காலையில் டாணென்று  'ஐந்து மணிக்கு' எழுந்துவிடுவார். எங்கள் தலைகளுக்கு மேலாக நடந்து சென்று ஹாலில் லைட் போட்டு கதவுகளை திறந்து வைத்து அமர்ந்துக்கொள்வார். ஒரே பதில்.

'முழிப்பு வந்துடுச்சு'தான்.

 வெயில் காலத்தில் ஓகே. பனிக்காலத்திலும்...சளி வந்து திரும்ப டாக்டரிடம் ஓடு!

'ஏன் ஆயா, காலையிலே அப்படி கேட் வாக் செஞ்சு ஹால்லே உட்கார்ந்துக்க‌லைன்னாதான் என்ன? முழுச்சிட்டீங்கன்னா கண்ணை மூடிக்கிட்டு படுத்திருங்களேன்' என்றால், 'நாளைக்கு பார்க்கறேன்' என்பார்.

அந்த நாளை கடைசி வரை வரவேயில்லை. (கடைசி மாதங்களில், மருந்துகளாலோ அல்லது மருத்துவமனையிலிருந்து வந்த அயர்வாலோ சில நாட்கள் தூங்கியிருக்கிறார். )

 வீட்டில் தனக்கு தெரியாமல் எந்த விஷயங்களும் நடந்துவிடக்கூடாது என்ற உணர்வு எப்படிதான் எல்லா வயதானவர்களுக்கும் வருமோ!அவரது அறை இருந்தாலும், ஹாலில் சரியாக  நடுவில் அமர்ந்துக்கொள்வார். அவரைத்தாண்டி, யாரும், எதுவும் அந்த பக்கம் இந்த பக்கம் சென்றுவிட முடியாது.

மதியம் ஒரே ஒரு மாத்திரை தவிர, காலையும் மாலையும் கணிசமான மாத்திரைகள் இருந்தது, ஆயாவுக்கு. ஒவ்வொருநாளிரவும், கைகளில் வண்ண வண்ண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, 'இவ்வளோவும் சாப்பிடணுமா?கொஞ்சம் கம்மியா தரக்கூடதா, அந்த டாக்டர்' என்பார்.

"ஆயா, சந்தோஷப்படுங்க...இந்த மாத்திரையெல்லாம் கிடைக்குதேன்னு.. நம்மாள இந்த மாத்திரையெல்லாம் வாங்க முடியுதேன்னு. நீங்க இல்லேன்னா பப்புவை யார் பார்த்துக்குவாங்க...நீங்க ரொம்ப நாள் எங்ககூட இருக்கணும். அதுக்காகவாவது, இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க‌' என்று ஒவ்வொரு நாளிரவும் நானும் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.அமிதாப், மருந்துப்பெட்டியும் கையுமாக இருக்குபோதெல்லாம் இதுதான் நினைவுக்கு வந்தது.

வயதானவர்களுக்கு வரும் எல்லா குணங்களையும் - பிறத்தியார் மீது சந்தேகம்,அடம், சுயநலம்-  இதெல்லாம் காட்டினாலும், 'பிகு' காட்டாத முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அது மறதி.

கடந்தகால நினைவுகளெல்லாம் பல பசுமையாக இருக்க, சமீபத்தில் நடந்த அல்லது அன்றாட முக்கியமான‌ விஷயங்கள் மறந்துவிடுவது இருக்கிறதே!! க்ர்ர்ர்ர்ர்ர்....

மண்டேலா எப்போது விடுதலையானார், நீல் சிலை அகற்றியது எப்போது, பிரேமதாசா செத்துப்போனது எப்போது, கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவை வழிநடத்தி சென்றது யார் என்பதெல்லாம் சரியாக நினைவிருக்க, வீட்டை உள்ளுக்குள் பூட்டிகொண்டு சாவியை எங்கே வைத்தோமென்று மறந்துவிடும்.

இத்தனைக்கும், அவருக்கெதிரே இருக்கும் சிறுமேஜையில்தான் இருக்கும். புத்தகத்தை படித்துவிட்டு, அதன் மேலே வைத்துவிட்டு, சாவி மாட்டும் இடத்தில் தேடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை, அலுவலகத்திலிருக்கும்போது போன்.

பப்புவும், பப்புவை பார்த்துகொள்ள வருபவரும் வெளியில் இருக்க ஆயா, சாவியை மறந்துவிட்டு நெடுநேரமாக தேடிகொண்டிருக்கிறார் என்று. ஆயாவுக்கு போனடித்தாலோ, 'நீ வர்றியாமா' என்கிறார்.

வெளியிலோ, அந்த அம்மாவுக்கு பதட்டம்.  தட்டுத்தடுமாறி ஆயாவே எப்படியோ தேடி எடுத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் சோபாவுக்கு கீழே கிடந்திருக்கிறது சாவி. மேஜையிலிருந்து எப்படியோ சாவி சோபாவுக்கு கீழே விழுந்திருக்கிறது.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து அதனை தேடியெடுப்பதற்குள், என்னை ஒரு வழி செய்துவிட்டார்கள். அவர்கள் அங்கு அனுபவித்த அத்தனை பதட்டத்தையும், இங்கே அலுவலகத்தில் அமர்ந்தபடி நானும் அனுபவித்திருந்தேன்.

இன்னொரு முறை.

 +2 முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தார் உறவுக்கார பெண். பப்பு ஏதோ கேட்டாளென்று கடைக்கு இருவரும் போக, சற்று நேரமாகிவிட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு புதிய ஊர். திரும்பி வரும் வழி தெரியவில்லையோ என்னவோ... இருவரையும்,காணவில்லை. பத்துநிமிடத்தில் எனக்கு போன். 'இருவரையும் காணவில்லை'

'வந்துடுவாங்க, ஆயா' என்ற எனது பதிலுக்கு ஆயா சமாதானமாகவில்லை.

'இப்போவரைக்கும் வரலை. உடனே புறப்பட்டு வா. '

எப்படி வண்டிஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனக்கு புரிந்ததில்லை. நான் போகவும், அவர்கள் வரவும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் ஆகிவிட்டது உண்மைதான்.

பப்புவை அப்போது கவனித்துக்கொண்ட 'சகுந்தலா அம்மா'வின் வீடு எனக்கு தெரியும் என்றாளாம் பப்பு. அங்கே போய்விட்டு வந்தார்களாம். என்னத்த சொல்ல!!

'ஆச்சி வராம‌ எங்கியும் நீங்க போகக்கூடாது' என்று  இருவருக்கும் வீட்டுக்காவல்.

அந்த நேரம் கோபமாக இருக்கும். ஒன்றும் சொல்லவும் முடியாது. சமயங்களில், கடுமையாக நடந்துக்கொள்வேன். சொல்லிவிட்டாலும், நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?! என்ன சொன்னாலும், அமைதியாக வேறு இருப்பார். அந்த கண்களில் தெரியும் ஏதோ ஒன்று, என்னை போட்டு கொன்றெடுக்கும். கோபித்துக்கொள்ளவே முடியாது.

என் சிறுவயதில், அவர் என் கைகளை கெட்டியாக பிடித்தவாறு பயணித்தது நினைவிலாடும். பென்ஷன் வாங்க சென்றாலும் சரி, உறவினர் வீட்டுக்குச் சென்றாலும் சரி, நெய்வேலியோ, திருவண்ணாமலையோ, கடலூரோ....  வேலூர் பஸ்ஸ்டாண்டில் அவருக்கு செய்தித்தாளும், இதழ்களும் வாங்கிக்கொண்டு எனக்கு கோகுலம் வாங்கிகொடுத்துவிட்டு விடுவிடென்று நடக்கும் ஆயா....ஒரு கையில் என்னையும், இன்னொரு கையில் குடையும் பிடித்துக்கொண்டு நடக்கும் ஆயா...

'பிகு'வில் அவள் கடைசியாக அந்த மருந்துப்பெட்டியோடு இருக்கும் சில நிமிடங்கள்...

கொடுமையான வலி அது. எல்லாமும் இருக்கும்... அவர்களுக்கான மருந்து, மாத்திரை, உபகரணங்கள்,படுக்கை, வாசிக்க இதழ்கள்,காலண்டர், கடிகாரம், அழைப்புமணி,பிளாஸ்க்... ஆனால்,  அவர்கள் மட்டும் இல்லாத, அவரது இழப்பை,வெறுமையை உணரும் தருணங்கள் இருக்கிறதே...

அதை விட்டு இன்று வரை என்னால் கடந்துவர இயலவில்லை. தூரத்திலிருப்பவர்களை விட, கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர்களில் வலியும், இழப்பும் அதிகம். எங்களால், இன்னமும் எங்களது அறைக்கு மீண்டு வரமுடியவில்லை.

அவரில்லாமல், நாங்கள் கடந்த முதல் மாதம். சமையல்  சிலிண்டர் வந்திருக்கிறது. கையில் காசில்லை. ஏடிஎம் சென்று எடுத்து வருமளவுக்கு அந்த பையன் காத்திருக்க மாட்டான்.  ஒவ்வொரு மாதமும், சிலிண்டர் வந்த தேதியை ஆயா குறித்து வைப்பார். அடுத்த சிலிண்டர் வருவதற்கு, உடனடியாக என்னிடம், காசு வாங்கி புத்தகத்தில் வைத்துவிடுவார். புத்தகத்தையும், காசையும் எடுத்து அந்த பையனிடம் கொடுக்க வேண்டியதுதான். அவன் முன்னால், பர்சை தேடி தடவ வேண்டியதில்லை. ஆயாவின் இழப்பை, கூர்மையாக எனக்கு உணர்த்திய சம்பவம் இது. பர்ஃபெக்ஷன் என்றால் ஆயா!

ஆயாவுக்கு எதிரில் எப்போதும் ஒரு காலன்டர் இருக்க வேண்டும். அவருக்காக மாட்டிய அந்த காலன்டரை இப்போது வரை அவிழ்க்க மனமில்லாமல் வைத்திருக்கிறேன்.  சுத்தப்படுத்தும்போதெல்லாம், அதை மட்டும் கண்டும் காணாமல் போகிறேன்.

அவரது அலமாரி கதவுகள், காற்றில் திறக்கும்போதெல்லாம், 'இன்டர்ஸ்டெல்லாரை' நினைவு கொள்கிறேன். பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், அந்த நினைவு ஒரு ஆசுவாசத்தை, நிம்மதியை, மெல்லிய புன்னகையை தருவதை உணர்கிறேன்.

நான்தான் இப்படியென்றால், பப்பு அதற்கு மேல்.
இசபெல்லா மருத்துவமனையை ஒருமுறை கடந்து செல்லும்போது, ஆயா ஏதோ அங்கேயே இருப்பதுபோல், இப்போது போய் அழைத்துவந்துவிடலாம் போல தோன்றியது. மனதுள் தோன்றிய அதே நிமிடம், பப்பு 'ஆயா உள்ளே இருப்பாங்களா ஆச்சி? ' என்றாள்.

ஆயா சென்று நீண்ட நாட்களுக்குப் பின் நடந்தது இது. ஆயாவின் அறையில்தான் அப்போதும் தூக்கம்.ஆனாலும், ஆயாவின் பாத்ரூமை அவர் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, தவிர வேறுயாரும் உபயோகப்படுத்துவதில்லை.

கரண்ட் கட்டான ஒரு நள்ளிரவில், அவளை ஆயாவின் அறையிலிருக்கும் பாத்ரூமையே உபயோகப்படுத்துக்கொள்ள சொன்னேன். கதவை திறந்து உள்ளே சென்ற சில நிமிடங்களில், அவள் சொன்னது இது.

"ஆயா, எனக்கு தெரியும், நீங்க இங்கேதான் எங்கியோ இருக்கீங்க'.

:-)

Thursday, May 28, 2015

நடையும், நடையின் நிமித்தமும்


அந்த நூதனமான பாலத்தை, 'எங்கே எப்போது பார்த்தேன் ' என்று நினைவில்லை. மேகாலயா என்று பெயரை எதிர்கொள்ளும் போதெல்லாம் அந்த  'இரண்டடுக்கு மரவேர் பாலம்'தான் நினைவுக்கு வரும்.  அப்போதெல்லாம், 'இந்த இடத்திற்கு ஒருநாள் நான் செல்வேனெ'ன்றோ அல்லது 'என் கண்களால் நேருக்கு நேர் பார்ப்பேனெ'ன்றோ - யாராவது ஆருடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக நம்பியிருக்கமாட்டேன்.

கடந்த, மே மாதத்தில் 'பிம்தல்' என்ற இடத்துக்கு சென்றோம். நைனிதால் மாவட்டத்தில் இருக்கும் ஊர். அந்த ஊரின், ஏழு ஏரிகளில் ஒன்றான  மரகத வண்ண ஏரிக்கு காட்டுப்பாதையில் பசுமை நடையாக பயணம் செய்தோம்.



 கிட்டதட்ட எட்டு டூ பத்து கிமீ வரையிலான அந்த நடை பயணமும், மரங்களடர்ந்த காட்டின் பசுமையும், ஏரி நீரின் தண்மையும், அமைதியும் மிகவும் கவர்ந்து விட, அதுபோன்ற நீண்ட 'ட்ரெக்கிங்' செல்ல  வேண்டும் என்று பப்பு நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

'வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்' அல்லது 'டார்ஜிலிங்கிலிருந்து சிக்கிமுக்கு 'ரங்கீத்' ஆற்றை கடந்து செல்லும் நடையைத் தான் - இந்த கோடைவிடுமுறைக்கு ஆலோசித்துக்கொண்டிருந்தேன். மனதுள் , அவ்விரண்டு இடங்களையும் நடைகளைப் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்தேனே தவிர, அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யவில்லை. அப்போதுதான் கையில் கிடைத்தது, 'அலெக்ஸாந்தர் கிரேட்டரின்' 'ச்சேஸிங் த மான்சூன்' புத்தகம்.  அந்த புத்தகத்தை வாசிக்கும்போது கூட, ச்சிராபுஞ்சியில் காலடி வைப்பேனென்று நினைக்கவில்லை.

"ச்சேஸிங் த மான்சூன்' புத்தகத்தை, வாசிக்க வாசிக்க அவ்வளவு வியப்பு. அந்த புத்தகம் ஒரு புதிய உலகத்தையே எனக்கு காட்டியது. இந்தியாவின், பருவகால மழையை தொடர்ந்து சென்ற அலெக்சாந்தரின் பயண நூல்தான் அது. கேரளாவிலிருந்து ச்சிராபுஞ்சி வரை கிட்டதட்ட‌ முப்பதாண்டுகளுக்கு முன்பே  மழையை துரத்தி சென்றிருக்கிறார்,அலெக்சாந்தர் ஃப்ரெட்டர். மேலும், அலுவலக நண்பரும் ஷில்லாங்கின் அழகை துதி பாட, எனக்கும் மேகலாயா ஜூரம் தொற்றிக்கொண்டது.

இணையத்தில் - ஷில்லாங்கைப் பற்றியும், ச்சிராபுஞ்சியைப் பற்றியும் தேடினால் , முதலில் அகப்படுவது  - இந்த வேர்களாலான பாலங்கள்தான். இந்த பாலத்தை, சென்றடையும் பயண விபரங்களை தெரிந்துக் கொண்டதும்,  'வேலி ஆஃப் ப்ளவர்ஸும்' 'ரங்கீத்' ஆறும்  சற்றும் காத்திருக்கட்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.

ச்சிராபுஞ்சிக்கு செல்ல, இன்னும் ஒருவாரமே இருக்கிறதென்ற நிலையில் தொடங்கியது எங்களது ட்ரெக்கிங் ஆயத்தங்கள். உலகின் ஈரமான இடத்தில் கிட்டதட்ட 6 மணிநேரங்கள் நடக்கப் போகிறோம்.அதுவும் மழைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது.

ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ள, ஆளுக்கொரு மழையுடை (ரெயின்கோட்), மழையில் நனையாத பை, பசுமை நடைக்கான‌ ஊன்றுகோல் என்று பார்த்து பார்த்து இணையத்திலும், வேளச்சேரியில் புதிதாக முளைத்துள்ள 'வைல்ட்க்ராஃப்ட்' கடையிலும்  வேட்டையாடினோம்.

இரண்டடுக்கு வேர்ப்பாலத்தை காணும் பயணத்தில், இரண்டு தொங்கு பாலங்களை கடக்க வேண்டும் என்று தெரிய வந்ததிலிருந்து மனம் உறுத்திக்கொண்டே இருந்தது.

இது மழைக்காலம். ஆற்றில் தண்ணீர் பொங்கி பிரவாகமாக வரும். பாலமோ, கம்பிகளால் பின்னப்பட்டது. பப்புவால் நடக்க முடியுமா? பயந்துவிட்டால் என்ன செய்வது? 

இணையத்தில், அந்த பாலங்களை அலசி ஆராய்ந்தேன்.   தைரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு வெளிச்சக்கீற்றுக்காக - பயணம் செய்தவர்களின் கருத்துகளை -தேடித்தேடி வாசித்தேன். 'சாகசமாக இருக்கும்' 'பயமொன்று மில்லை' என்ற கருத்துகளை வாசித்தபோது மகிழ்ந்தும், சில கருத்துரைகளில் 'கம்பிகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் குழந்தைகள் பத்திரம்' என்று கண்டபோதோ உள்ளூர பயந்தும் கிடந்தேன். 'ரிஸ்க் எடுக்கிறோமோ' என்று கூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். 

பப்புவிடம், மெல்ல மெல்ல இதைப்பற்றி சொல்லியும் வைத்தேன். பயந்துபோய்,  வேண்டாமென்று சொல்லிவிடுவாள் என்று மனதுள் ஒரு நப்பாசை இருந்தது. அவளோ,  'ஆ..சூப்பர்...நான் பாலத்துலே டான்ஸ் ஆடிக்கிட்டே நடப்பேன்' என்று துள்ளி குதித்தாள். பயத்தின் சிறு சாயல் கூட இல்லை.  இப்போது, பயத்தின் அளவு அதிகரித்து எனக்குத்தான் யாராவது தைரியம் சொல்ல வேண்டியிருந்தது.  

ஆற்றின் மீது நடக்கும்போது, கீழே ஓடும் நீரை பார்க்காமல் அடுத்த அடியை வைத்து கடந்துவிடு என்று மட்டும் தயார்பாடுத்தும் வகையில் சொன்னேன். அது அவளுக்கா அல்லது எனக்கா என்று தெரியவில்லை.

உண்மையில், பப்புவுக்கு  பாதுகாப்புணர்வு அதிகம். மிகைக்காக சொல்ல வில்லை. அவளை பற்றி நானறிவேன் இல்லையா! சரியான பிடிமானம் இல்லாமல் ஒரு சிறு இடைவெளியை கூட தாண்ட மாட்டாள். தாண்டிகுதிக்கக் கூட, அத்தனை ஆயத்தங்கள் செய்யவேண்டும்.  

சற்று சறுக்குகிற மாதிரி பாதை இருந்துவிட்டாலோ, அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டாள். சரியாக பாறையில் கால் வைத்து வழுக்கி விழுவாள். ஆழங்களை பார்த்துவிட்டால், அவளுக்கு கைப்பிடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே நடப்பாள். எல்லா பாரத்தையும் தூக்கி தனியாக வைத்துவிட்டு, ' பாலம் வரும்போது கடக்கலாம். அதுவரை வருவதை எதிர்கொள்ளடா' என்று கிளம்பியாயிற்று.

ச்சிராபுஞ்சியில், நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டடுக்கு வேர்ப்பாலம் போக மட்டுமே பத்து கிமீ. முதல் ஐந்து கிமீ சாலை வழி பயணம். அடுத்த ஐந்து கிமீதான் உண்மையான பசுமை நடை. 

அதாவது, மலைவழிப்பாதை. முதலில் 2500 படிகள் கீழ் நோக்கி இறங்க வேண்டும். அதன் பின் சற்று கரடுமுரடான காட்டுப்பாதை. அதைக்கடந்தால், சிங்சாங் ஆறு. அந்த ஆற்றின் மீது ஒரு  தொங்கும் பர்மாபாலம். அதனை கடந்தால் மீண்டும் ஏறுமுகமான படிகள். மீண்டும் ஒரு காட்டாறு. அதன் மீதான பெரிய தொங்கு பாலம்.

அதன்பின், கிட்டதட்ட 2 கிமீ காட்டு வழிப்பயணம். அதில் சில இடங்களில் படிகள் உண்டு.இதில், ஒரு சிறு வேர்ப்பாலம் வரும். அந்த ஆற்றை கடப்பது கணக்கில் வராது. போக வர‌ மொத்தம் இருபது கிமீ நடை.

சிறிய அளவில், கிட்டதட்ட 3 முதல் 5 மணி நேரங்களாலான பசுமை நடை சென்ற அனுபவம் உண்டு. ஆனால், அவையெல்லாம், ஒரே மாதிரியான மலையேற்றம் அல்லது கரடுமுரடான சாலைகள் வழி. இதுவோ, ஏழு கடல் ஏழு மலை போல படிகள், ஆறுகள், பாலங்கள்...விடுதியில் கொடுத்திருந்த வரைபடத்தில், 'You are doing the trek at your own risk and responsibility' என்று வேறு போட்டிருந்தது.



இரவுணவுக்குப் பின், நானும் பப்புவும் விடுதியில் ஓய்வறையில் கேரம் ஆடிக்கொண்டிருந்தோம். தங்கியிருந்த பலரும் சேர்ந்துக்கொள்ள, பேச்சு 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ்' பற்றி திரும்பியது. 'நாளைக்காலை செல்லப் போகிறோம்' என்று சொன்னதும் மும்பையிலிருந்து வந்த அந்த அம்மா ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.  

அன்று காலையில், அவர்கள், அந்த நடைபயணத்தை மேற்கொண்டதாகவும், இறங்குமுகமான படிகளில் - கிட்டதட்ட 1000 படிகளை தாண்டியநிலையில் - தலைசுற்றியதால் திரும்பி வந்துவிட்டதாகவும், அவர் சொன்னபோது கிலி  பிடித்துக்கொண்டது.  இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை.

'சரி, அதற்காகத்தானே வந்திருக்கிறோம் - முயன்று பார்ப்போம், இயலவில்லை என்றால் திரும்பி வந்துவிடுவோம். அவ்வளவுதானே' என்று என்னை நானே சமாதானப்படுத்தியபடி உறங்கிப்போனேன்.

நடப்போம்...

Saturday, March 28, 2015

சின்ட்ரெல்லா (2015) படத்தின் குறியீடுகளை கண்டுபிடிப்பதெப்படி?

"ஆச்சி, அந்த ஃபெய்ரி காட் மதர் வந்து ,ஃப்ர்ஸ்ட், எலா கிட்டா கேக்க மாட்டாங்க. ஃபர்ஸ்ட் அந்த ஸ்டெப் சிஸ்டர்ஸ்கிட்டே கேப்பாங்க. அவங்க குடுக்க மாட்டாங்க. அப்புறம்தான், ஃபெய்ரி காட்மதர், எலா கிட்டே கேப்பாங்க. " - பப்பு

"ஓ..இது எங்கே வந்துச்சு? நான் பார்க்கலையே? மிஸ் பண்ணிட்டேனா?"

"இல்லே..நான் சொல்றேன்..." - பப்பு

"ம்ம்..நீ முன்னாடியே பார்த்துட்டியா? யூ ட்யூப் ட்ரெய்லர்லே வந்துச்சா?"

(ஏன் அப்படி கேட்டேன்னா, அடுப்பு பக்கத்துலே படுக்கிற காட்சி வரும்போது, 'அவ மேலே சின்டர்லாம் படும். அதனாலேதான் அவ பேரு சின்டரெல்லாம்'ன்னு சொல்லியிருந்தா. அதனாலே டவுட். ):):)

"ம்ம்ம்...என் மைன்ட்லே வந்துச்சு...அதுக்குதான் உனக்கு சொல்லக்கூடாது. எங்க க்ளாஸ்லேயே, ஸ்கூல்லயே நாந்தான் இந்த மூவியை ஃப்ர்ஸ்ட் பார்த்துருக்கேன்" - பப்பு.

கட்.....

ஆட்டோவில் ஏறியதும்,

"ஆச்சி, ஆக்சுவலா அந்த ஸ்டெப் மதர் நல்லவங்கதான். க்ரூயல் கிடையாது. அவங்க ஃப்ர்ஸ்ட் அந்த வீட்டுக்கு வந்ததும், நல்லா எல்லார்க்கிட்டேயும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க இல்லே." - பப்பு

"ம்ம்..ஆமா..ஆனா, அவங்க எலாகிட்டே நல்லா நடந்துக்கலையே?"

"அதான்..அதுக்கு அடுத்து என்னா நடக்கும்? எலாவோட அப்பா ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லா சொல்வாரு? டோன்ட் ஃபுல்லி டிபென்ட் ஆன் தெம். அப்புறம், அவங்க அம்மாவையும்,வீட்டை பத்தியும்தானே சொல்றாரு.அதை ஸ்டெப்மதர் ஓவர்ஹியர் பண்றாங்க இல்லே? " - பப்பு

"ஆமா?"

"அப்போ, How would she feel? she will feel bad know? ஆக்சுவலா அப்போ கூட கெட்டவங்களா மாறலை"

"ம்ம்?"

"அவங்க அப்பா எலாக்கு மட்டும் அந்த பிராஞ்ச் குடுத்து அனுப்புவாரு இல்லே. அப்போ, அவங்க ஸ்பெட் சிஸ்டர்ஸ்,எனக்கு பேரசால்ன்னு கேப்பாங்கன்னு இல்லே. " - பப்பு

"ம்ம்ம்"

"அப்போ, அவங்க அம்மாவுக்கு எப்படி இருக்கும்? அதனாலேதான் அவங்க எலாக்கிட்டே அப்படி நடந்துக்கறாங்க. உனக்கு புரியலையா ?" -பப்பு

"ம்ம்..இல்லேப்பா...நீ சொன்னப்புறம்தான் புரியுது"

"இப்போ, நான் இருக்கேன். இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க. அப்போ, அவங்களுக்கு மட்டும் குடுத்துட்டு, எனக்கு நான் கேட்டது கொடுக்கலைன்னா உனக்கு எப்படி இருக்கும்?அதுமாதிரிதான்." - பப்பு

"ம்ம்..உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?  க்ளாஸ்லே டிஸ்கஸ்...  ஹேய்..ஸ்கூல்ல ஃப்ரென்ட்ஸ் கதை சொன்னாங்களா?"

"ம்ம்...உனக்கு சொல்லியிருக்கவே கூடாது. நீ புரிஞ்சுக்காமயே கிடன்னு விட்டிருக்கணும்." - பப்பு

கட்.....


"உனக்கு, ஏன் அந்த ஃபெய்ரி காட் மதர், பால் குடிக்கும்போது கீழேல்லாம் விழுந்துச்சுன்னு தெரியுமா?" - பப்பு

"வேகமா பசியிலே அவசரமா குடிச்சா அப்படிதான் விழும்."

"எல்லாருக்கும் அப்படிதான் விழுமா? நமக்கு அப்படிதான் விழுதா?" - பப்பு

"ஆமா,  நாம ரொம்ப தாகமா இருக்கும்போது தம்ளர்லே,பாட்டில்லேருந்து குடிக்கிறோம். மேலேல்லாம் கொட்டிக்கறோம் இல்லே...அதுமாதிரிதான்"

"இல்லே...அது உனக்கு புரியலை. Fairy god mother was not hungry. she was checking her kindness.  அதனாலேதான், அது வாயிலேருந்து விழுது" - பப்பு

"ஓ...ஆமா, பப்பு, இப்போதான் புரியுது. இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?"

அப்புறம், அவ பார்த்த பார்வையிலே வீடு வரைக்கும் யாருமே பேசிக்கலை. :))

வீட்டுக்கு வந்து இன்னொரு பல்பும் வாங்கினேன். எப்படி அந்த ஸ்டெப்மதர் கரெக்டா அவளோட ஷூவை எடுத்தாங்கன்றதை பத்தி. அதெல்லாம் இங்கு விலாவரியாக சொல்லப்படமாட்டாது.

*****

இதனால், அறியப்படும் நீதி,தற்போது வந்திருக்கும் "சின்ட்ரெல்லா"  புதிய‌ படத்தை உங்கள் ஏழு வயதுக்கு மேலிருக்கும் 'பெண்' குழந்தைகளோடு கண்டு களிக்கவும்.. பார்த்துவிட்டு, உங்களுக்கு புரியாத காட்சிகளை அவர்கள் விளக்கி னால், தயவுசெய்து ஒளிவுமறைவு இல்லாது அந்த பல்புகளை ப்ளஸ் விட்டு  பிரகாசமாக‌ எரிய வைக்கவும்.ஹிஹி

 

மற்றபடி, படத்தை பற்றி என்ன சொல்ல? தெரிந்த கதைதானே! 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பிய வாழ்க்கையின் அழகான தருணங்களை  மட்டும் நேரில் காண்பது போல இருக்கிறது. 'பால்' நடனத்தின் போதும் சரி,ட்யூக்கினுடனான பேச்சுகளும் திட்டங்களும் சரி, மாற்றாந்தாயின் பல்வித உணர்ச்சிகளை கண்டபோது, நான் புரிந்துக்கொண்டது, தற்கால அம்மாக்களின் குழந்தைகளைக் குறித்த பதட்டமும்,கவலையும் கொஞ்சமும் புதிதல்ல, அது  சின்ட்ரெல்லா காலத்து பழமையானது என்பதுதான். :‍)

Sunday, March 15, 2015

"மண் பொம்மை" - காளீந்திசரண் பாணிக்ராஹி

"மண் பொம்மை" என்ற ஒரிய நாவலை வாசித்த போது எனக்கு வடலூரும்,  பழைய வீடும், பாகம் பிரிக்கப்பட்டிராத -அந்த வீட்டில் - இப்போது பழையதாகிப் போன அந்த  நாட்களில் நாங்கள் ஓடியாடி விளையாடிய மகிழ்ச்சியான குரல்களும், எங்களை விளித்துக் கொண்டிருக்கும் பெரியவர்களின் குரல்களுமாக சித்திரங்கள் விரிந்தன.

எல்லா வீட்டிற்கும் இப்படி  ஒரு கதை இருக்கும்தானே. - பாகப்பிரிவினைக்கு முன்; பாகப்பிரிவினைக்கு முன் என்று! ரொம்ப ஆடம்பரமில்லாவிட்டாலும் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம், அன்பையே வாரி இறைக்கும் சில பல‌ மாமா அத்தைகள் அல்லது சித்தப்பா சித்திகள், கள்ளம் கபடமில்லாத குழந்தைகள்...பாகம் பிரிக்கப்படாத ஒன்றான குடும்பம்...குதூகலமான விடுமுறை நாட்கள்,மாடுகள்  - கன்றுகள், கனவு போல் தோன்றும் பண்டிகை நாட்கள்.... அப்படியான ஒரு கதை எங்கள் வடலூர் வீட்டிற்கும் இருந்தது. 

அன்பான இரண்டு மாமா பெரிய மாமா சின்ன மாமா, பெரிய அத்தை, சின்ன அத்தை,  பின்னாலிருக்கும் கொல்லையும், பழமையான இரண்டடுக்கு கிணறும், கொல்லையை சுற்றி வேலியாக நின்றிருந்த பனைமரங்களும், மரங்களினடியில் காலங்காலமாக குடியிருக்கும் புற்றுகளும்.....

 சாயங்காலம் விளக்கேற்றியதும் 'பின்கதவை சாத்தணும்' என்று ஏதோ கட்டளைபோல் ஓடி போய் போட்டியிட்டு சாத்திய கொல்லைகதவுகள், எங்கள் அடி உதைகளை தாங்கிய நெல்லிக்காய் மரம், ஒளிந்து விளையாட தோதான நாவல் மரம்,  தெனாலி ராமன் கதையை கேட்டு, அதே போல் திருடன் ஒளிந்தி ருப்பானோவென்று  இரவில் கைக்கழுவிய சொம்பு நீரை தூக்கி ஊற்றிப்பார்த்து  எழும் சலசலப்பை கேட்டு கற்பனைக்கு பயந்து வெறித்து வெறித்து பார்த்த மருதாணி மற்றும் குண்டுமல்லி புதர் என்று எங்கள் குழந்தைப்பருவத்தை தாங்கி நின்ற வீடு அது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் தவறாது சென்றாலும், வீட்டில் ஒரு சுவர் கண்ணுக்கு தெரியாம எழும்பி வருவது குழந்தைகளான எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஏதோ ஒரு விடுமுறையில் , அந்த சுவர் பெரிய ஆனால் தனி வீடாகவே மாறி இருந்தது. மற்றொரு மாமாவுக்கு எஞ்சியதோ, பழைய வீட்டின் பூச்சுகள் பெயர்ந்த ஒரு அறையும் முன்னாலிருந்த அவசரக் கொட்டகையும்.

இறுதியில், எல்லோரும் அவர்வர்க்கான கூடுகளை கட்டிக்கொண்டாலும், எங்களுக்கான‌ அன்பான நினைவுகளை நவநாகரிகமான‌ அந்த வீடுகளால் தர இயலவில்லை.

என்னதான், காந்திய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களால் மண்ணையும், ஆயாவின் மனதையும் கீறி இரணமாக்குவதை தவிர்க்க முடியவில்லை.   

ஒரிசாவின், பதான்படா என்ற பழஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் சாம்பதானுக்கும் இரண்டு மகன்கள் இருந்தனர். பர்ஜூ மற்றும் சக்டி. ஒன்றான கூட்டுக்குடும்பம், மூத்த மருமகள், இளைய மருமகள் மற்றும் அவர்களின் குழந்தைகள். சாம்பதான் இருந்தவரை ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்த குடும்பம், பதான் இறந்ததும் விரிசல் விடத் துவங்குகிறது.

மூத்த மருமகளுக்கும், இளைய மருமகளுக்கும் இடையிலான புகைமூட்டங்கள் நாசியை அடைக்கத் துவங்குகின்றன. அண்ணனின் குழந்தைகளை தன் குழந்தைகளாகவே பாவிக்கும் சக்டியும், மனைவி நேத்ரமணிக்காக மாறத் துவங்குகிறான். யார் சமைப்பது, பாத்திரம் கழுவுவது என்பதிலிருந்து ஆரம்பிக்கும் ஓரகத்திகளின்  பனிப்போர், உச்சத்தை அடைந்து அவ்வப்போது அண்ணன் தம்பிகளையும் அடையத் துவங்குகிறது.

நில புலன்,சொத்துகள் எல்லா உரிமைகளும் கிராமத்து வழக்கப்படி, மூத்தவன் பர்ஜூவிடமே இருக்கிறது. தம்பியின் மேலிட்ட பாசத்தால் அவனுக்கு எந்த தொல்லைகளும் தரவிரும்பாமல் வயல்  வேலைகள் அனைத்தையும் அண்ணனே  பார்த்துக் கொள்கிறான்.
ஒரே குடும்பமாக எண்ணி குடும்பச் செலவுகளையும் அவனே செய்கிறான்.

தத்தம், மனைவிகளுக்கிடையிலே நடக்கும் பூசல்களை அறிந்தாலும் அண்ணனும் தம்பியும் இதனை சட்டை செய்ததில்லை. இப்படியிருக்க குடும்பத்தில் ஒரு கொண்டாட்டம் வருகிறது. பர்ஜூவின் மூத்த மகளின் திருமணம்.

அதற்கு, ஆன செலவைப் பற்றி கேள்விகளும், பயங்களும் இளைய மகன் மனதில் வித்தாக விழ பாகப்பிரிவினை வேர் விடத் தொடங்கிறது. ஆனாலும் எதையும் அண்ணனிடம் நேரடியாகக் கேட்க சக்டிக்கு பயம்.

அந்த பயத்தைப் போக்க சக்டிக்கு தூபம் போடுகிறான், மிச்ரஜி. வட்டிக்கு கொடுத்து ஏழைகளிடம் அபகரிக்கும் பிராமணன். அவனது வழிகாட்டுதலில், தனியாக கடையும் வைக்கிறான். அண்ணியிடம் சண்டையிட்டு தன் பங்கு விளைச்சலையும் தனியாக கேட்டு வாங்கி வைத்துக் கொள்கிறான்.

இவையெல்லாம் தெரிந்தும் பதான் அமைதியாகவே இருக்கிறான். எது கேட்டாலும் கொடுத்துவிடுமாறும், இளையவளிடம் வம்பு சண்டைக்கு போக வேண்டாமென்றும் வலியுறுத்துகிறான்.

பாகப் பிரிவினையை, இந்த வீட்டுக்குள் சுவர் எழும்புவதை தான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டென்று தனக்குள் சொல்லிகொள்கிறான். இறக்கும் தறுவாயில் தந்தைக்கு தான் செய்துக்கொடுத்த வாக்கை நினைவு கொள்கிறான்.

பாகப்பிரிவினையை பற்றி தம்பி, அண்ணன் முன் வெளிப்படையாகவே பேசத்துவங்க, அண்ணனும் தம்பியிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். பிறகு,  தனது மனைவியிடமும்,மகளிடமும் சொல்லிவிட்டு வெளியில் செல்கிறான்.

மாலையில், அண்ணனின் குடும்பம் தங்களுக்குத் தேவையான பழைய உடைகளை மாத்திரம் மூட்டைக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறது. அதாவது,  தம்பி கேட்டது போல் பிரிந்து போகிறார்கள்.   ஆனால், சொத்து சுதந்திரத்தில் பிரிவினையே கிடையாது. வரப்பும் உயராது. வீட்டுக்குள் சுவர் எழும்பாது.

'ஒன்றும் பாதிப்பாதியாக பங்கிடப்படக்கூடாது. எது எப்படியிருக்கிறதோ அது அப்படியே இருக்க வேண்டும்' என்ற தந்தையின் வாக்குக்காக, தோட்டம் - துரவு, நிலம் -நெல், பசு - எருமை, பானைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு தனியாக பிரிந்து போகிறார்கள். சண்டையையும்,  தன் பங்கையும் மட்டுமே எதிர்பார்த்த சக்டி, விக்கித்து நிற்கிறான். பர்ஜூ பேசியதை,அவனால் புரிந்துக் கொள்ளவே இயலவில்லை.

 அண்ணியிடமிருந்து சாவிக்கொத்தை கொடுத்தபின் அண்ணன் பிரிந்து சென்றுவிட, சக்டி கலக்கமுறுகிறான். தான் செய்த காரியத்தின் வீரியம் விளங்க, நிம்மதியை இழக்கிறான்.  கல்கத்தா சென்று பிழைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் அண்ணனை எந்த வழியில்  சென்று தேடுவது என்று தவிக்கிறான்.

 அண்ணன் இராத்தங்கியிருக்கும் இடம் தெரிய, விடியும் வரை அந்த வீட்டின் முன் காத்திருக்கிறான்.

காலையில் வீட்டுவாசலில் சக்டியை கண்டதும், 'எங்கே வந்தாயென்று' பதான் வினவ, 'நானும் உன்னுடனே வருகிறேன்' என்கிறான் சக்டி. மெல்லிய குரலில், அவனை செல்லமாக‌ கடிந்துக் கொள்வதோடு முடிகிறது நாவல்.

நாவல் முழுவதும்,  பெருந்தன்மையும், அன்பும், கருணையும் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான் பதான். மாறாக, சக்டி,  தான் செய்வதன்,பேசுவதன் விளைவுகளை யோசித்துப்பார்க்காத  விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறான். மூத்தவன் பொறுப்பும், பொறுமையும், தந்தையின் பெயரை காப்பாற்றுவது போல நேர்மையும் கொண்டவனாக இருக்கிறான்.

சக்டியோ, தன் மனைவி நேத்ரமணியின் பேச்சைக் கேட்டு சொந்த அண்ணனையும், அவனது குழந்தைகளையும் வேறு படுத்திக்கொள்கிறான்.

'பாகப்பிரிவினை ' பற்றி கிராமத்தார்கள் அரசல் புரசலாக மூத்தவனிடம் பேசினாலும் சக்டியாக வாயைத் திறக்கும்வரை எந்த புறணிக்கும் பதான் காது கொடுப்பதில்லை.  பாகப்பிரிவினை என்ற பேச்செடுத்ததும், 'எல்லாம் உன்னுடையது' என்று தம்பியிடம் கொடுத்துவிட்டு சத்யாகிரகம் செய்கிறான்.

பாகப்பிரிவினை இல்லாத வீடுகள் இந்தியாவில் ஏது? அம்பானி வீடானாலும், மாறன் பிரதர்ஸ் ஆனாலும் சொத்து பிரிவினை எல்லா இடத்திலும்தான் இருக்கிறது.

ஆனாலும், எந்த அண்ணனும், தன் தம்பிகளுக்கு அல்லது தமக்கைகளுக்கு முழுமையாக விட்டுக் கொடுத்து விடுவதில்லை. பதானைப் போல் முழுமையாக வெளியேறி விடுவதுமில்லை.ஏன், ஒருவரும் மற்றொருவருக்கான பங்கை கொடுப்பதற்கே சிலபல பஞ்சாயத்துகள் வேண்டியிருக்கிறது. சிவில் கேஸ்கள், தலைமுறைகளாக இழுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், காந்தியைப் போல், விட்டு கொடுத்துவிட்டு செல்வது நாவலுக்குதான் சரி. இயல்பாக ஏற்கமுடியவில்லை.

இந்த நாவலின் நன்றியுரையில் ஆசிரியர், தான் கேள்விப்பட்ட ஒரு அண்ணன் தம்பி கதையை விரித்து எழுதிப் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

காந்திய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, அந்த காலகட்டத்தில் உண்மையாக‌ நிகழ்ந்ததாக கூட இருக்கலாம்.  நிலபுலன்களை விற்றும், தங்க அணிகலன்களையும் காந்தியின் கொள்கைகளுக்காக தியாகம் செய்த வரலாறு கண்முன்னே இருக்கும்போது, ஒரியாவிலும் நிகழக் கூடாதா என்ன?.

வாசிக்கும்போது,பிரச்சார நாவலாக தென்படவில்லை. ஆனால் பதான் என்ற மனிதன் பிம்பத்தில் நாம்  காந்தி  உறைந்து நிற்பதை உணரலாம்.

ஆங்காங்கே நிறைந்திருக்கும் நாட்டுப்புற பாடல்களும், பழமொழிகளும், ஒரிய கிராமத்து வழக்கங்களும், சமையலும், ஒரிய பண்பாட்டு விழுமியங்களும் சாதிய மனப்போக்குமாக‌ ஒரு துண்டு ஒரிசாவின் கிராமத்தை விண்டு காட்டுகிறது நாவல்.  பெயர்களை மட்டும் மாற்றிவிட்டால், மொழிபெயர்ப்பு நாவலென்று சொல்லமுடியாது. அவ்வளவு நேர்த்தி!

வாசிக்க சுவையான, அவ்வப்போது நம் வீட்டுக் கதைகளையும் நினைவுபடுத்துகிற கிராமத்து அண்ணன் தம்பி கதை.

ஒருவேளை, 'உங்கள் தாத்தாவும் காந்தியவாதியாக இருந்தார்', 'இராட்டையில் அவரே நூல் நூற்று கதரை த்தான் உடுத்தினார்', 'சொன்ன சொல் மாறாமல் வாழ்ந்தார்', 'நெளிவு சுளிவாக கணக்கு எழுததால் பிறரால் வஞ்சிக்கப்பட்டு வேலையை இழந்தார்' அல்லது 'அதிகாரிகள் நேர்மையாக இல்லாத இடத்தில் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேலையை உதறிவிட்டு வந்தார்'  என்று பிள்ளை பிராயத்தில் உங்களுக்குச் சொல்லப் பட்டிருந்தால், அந்த தாத்தாவை நீங்கள் 'மண் பொம்மை'யில் தரிசிக்கலாம்.


நாவல்: மண் பொம்மை
காளீந்திசரண் பாணிக்ராஹி (தமிழாக்கம் : ரா வீழிநாதன்)
வெளியீடு: சாகித்ய அகாதமி
விலை: ரூ 60
பக்கங்கள்: 153

Monday, February 23, 2015

மித்ராவந்தி‍‍‍--GoneGirl--மௌனத்தின் குரல்

தூத்துக்குடியிலிருந்து வந்த பெரிம்மாவை, பிக்கப் செய்ய மின்ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தேன்.காலை நேரம். பூக்கடைகள், காய்கறி கடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறத்துவங்கியிருந்தன.  புத்தம் புதிதாக மலர்ந்த மலர்களையும், தொடுக்கப்பட்டிருந்த சரங்களையும் ரசித்தபடி ஒரு பூக்கடையின் ஓரம் ஒதுங்கினேன். பூக்கடைக்கு பின்னாலிருந்த டீக்கடையிலிருந்து வந்த ஒருவர்,

"என்னம்மா? திரும்பவும் ஒண்ணாயிட்டீங்க போல? நேத்து சமாதானமாயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்?"

அதற்கு, அந்த பூக்காரம்மா சொன்னது பதில் யதார்த்தமான பதில்தான். ஆனால், முகத்தில் அறைகிற யதார்த்தம்!

"ஆமா...என்ன பண்றது? சண்டையும், சந்தோஷமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒருநாள் முடியை பிடுச்சு இழுக்கறான்...அடுத்த நாள் ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசறான். அதுக்காக என்ன விவாகரத்தா நாம பண்ண முடியும்? ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ பண்ணிடறாங்க... பொண்டாட்டிய..அதல்லாம் பார்க்கும் போது....இப்படியே ஓட்ட வேண்டியதுதான்"

வரும்வழியிலெல்லாம், அந்த பெண்ணின் பதிலையே என் மனம்  திரும்ப திரும்ப சவைத்துக்கொண்டிருந்தது.

"வச்சி ஓட்டுயெம்மா"

கண்மணி குணசேகரனின் ஒரு கதை அது.  கோபக்கார கணவனுக்கு வாழ்க்கைப்படும் ஒரு  பெண். திருமணமாகி, மறுவீடாக  அம்மா வீட்டுக்கு வந்திருப்பாள். கிளம்ப தாமதமாகி விட, கோபத்தில் எல்லார் முன்னாடியும் திட்டிவிட்டு தனியாக கிளம்பி சென்றுவிடுவான் அவன். விதிர்விதிர்த்து போய் நிற்கும் மகளிடம், தாய் சொல்லும் வார்த்தைகள் இவை.

"வச்சி ஓட்டுயெம்மா"

ரொம்ப நாட்களுக்கு, என்னை தொந்திரவு செய்த வார்த்தைகள் அவை.

இந்த நாட்டில், நிறைய பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே ஆப்சன் அதுதான் இல்லையா?!

தில்லி 6யில் வரும் 'சசூரால் கெந்தா ஃபூல்' பாடலை கேட்கும் போதெல்லாம் சசி தேஷ்பாண்டே நாவல்தான் நினைவுக்கு வரும். ஒரு மருமகள், தன் புகுந்த வீட்டை ஒரு அடுக்கு சாமந்தியோடு ஒப்பிட்டு பாடும் நாட்டுப்புற பாடல் அது. சாமந்தியை பொதுவாக யாரும் பார்த்தவுடன் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், அதன் மணம் பழக பழக பூவை  விரும்பத் தொடங்கிவிடுவார்கள். அதன் ஒவ்வொரு மடல்களும் ஒவ்வொருவிதம். அதைப்போல், புகுந்த வீட்டிலும் பலவித மனிதர்கள்...ஒவ்வொரு வீட்டுக்கும் பலவித பக்கங்கள்...
இந்த சின்னஞ்சிறு பாடல் நமது இந்திய கூட்டுக் குடும்பங்களை, அதன் பல்வேறு முகங்களை, அதில் புதிதாக வந்து சேரும் பெண்ணின் நிலையை வெகு எளிதாக குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டிவிடும்.

அந்த பாடலை நினைவூட்டிய புத்தகம், இந்த புத்தக சந்தையில் வாங்கிய  மித்ராவந்தி. குறுநாவல்தான். ஒரு கூட்டு குடும்பதான் கதைக்களம். மூன்று மகன்கள். மருமகள்கள். மித்ராவந்தி, இளைய மருமகள். கொஞ்சம் குறும்புக்காரி. கள்ளம் கபடமின்றி தெருக்காரர்களிடம் முக்கியமாக ஆண்களோடு பழகுவது, குடும்பத்தினருக்கு சங்கடத்தை தருகிறது.

அதன்காரணமாக,அவ்வப்போது சண்டையும் முள்கிறது. நன்றாக உடுத்திக்கொள்கிறாள், அலங்கரித்துக் கொள்கிறாள், மற்றவர்கள் மீது தன் கவனம் திரும்பும்படி நடந்துக்கொள்கிறாள் என்று தன்மீது குவியும் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக, 'தன் கணவன் தன்னை கண்டுக் கொள்வதில்லை' என்று குடும்பத்தினரிடம் கூறுகிறாள், மித்ராவந்தி. இதனால், மித்ராவந்தியின் கணவனுக்கே பூசை கிட்டுகிறது.

திருமணமாகி சென்றிருக்கும் அந்த வீட்டின் மகள், குழந்தைப்பேறுக்காக வீடு திரும்புகிறாள். இதனால், மித்ராவந்திக்கு தன் தாய்வீட்டுக்கு செல்ல அவகாசம் கிடைக்கிறது. கணவனோடு, தாய் வீட்டுக்கு செல்கிறாள் மித்ராவந்தி. கணவன் மீது அவளது தாய்க்கு இருக்கும் மோகத்தை கணநேரத்தில் கண்டுக்கொள்ளும் மித்ராவந்தி தன் வாழ்க்கையை எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை.

தன்னை மதிக்காத கணவனாக இருந்தாலும்,'அவன் தன்னை கவனிப்பதில்லை' என்று வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தாலும், கணவனை சாகுந்தலையாக மீட்டு வாழ்ந்து தீர்க்க வேண்டிய தலையெழுத்து இந்திய பெண்களுக்கு மட்டுமில்லை, அமெரிக்க பெண்களுக்கும் இருக்கிறது போலும் என்று உணர்த்தியது "Gone Girl" படம்.

அதே சமயம், எல்லாவற்றையும் ஏற்றுகொண்டு  மௌனத்தின் குரலாகவோ அல்லது சாமந்தி பூவின் மடல்களை உருவகப்படுத்திக் கொண்டுயோ வாழ்ந்து தீர்க்க தேவையில்லை. தன் கனவுகளை, ஆசைகளை, எதிர்காலத்தை, வாழ்க்கையை சிதைத்த கணவனை தண்டிக்கலாம், தப்பில்லை என்றும் இந்த படம் சொல்வதாகவும் கொள்ளலாம்.

நண்பர்களின் மூலமாக கிடைத்த காப்பிதான். பொதுவாக, தமிழ் மட்டும் குட்டீஸ் படங்களைத்தான் சேமிப்பேன். 'ஆங்கிலம்' என்ற போல்டருக்குள் நுழைந்தபோது தலைப்பு ஈர்க்க வாரயிறுதிக்காக சேமித்துக்கொண்டேன். நெட்டிலும் படத்தைப் பற்றி எந்த  விமர்சனத்தையும் வாசிக்க வில்லை. ஞாயிறு மதிய சோம்பலுக்கு ஏற்றது போல, மெதுவாகத்தான் ஆரம்பித்தது.  விளையாட்டு போல அந்த  'க்ளூ' குறிப்புகள் படத்தை சூடு பிடிக்க வைக்கிறது.

இறுதியில், இவை எல்லாமே ஏமி திட்டமிட்ட செய்ததுதான் என்பது தெரிய ஆரம்பிக்கும் நொடிதான் இருக்கிறதே!! ஏமி உயிரோடு இருப்பாள் என்று தோன்றாதபோது, அவள் காரில் பறக்கும் நொடி 'ஜிவ்' வென்றிருக்கிறது. திருமண வாழ்க்கையில் நம்பிக்கையை சிதைத்தற்கு, ஏமாற்றிய தற்கெல்லாம் பெரிய தண்டனைகள் கிடையாது. ஏன், தண்டனைகள் வேண்டாம், ஒரு குற்றச்சாட்டாகக் கூட வெளியில் சொல்லமுடியாது.

தண்டனைகள் கிடைக்க  வன்முறை நடந்திருக்க வேண்டும். அடி, உதை, சூடு என்று கண்ணில் படுமளவுக்கு வன்முறைகளுக்கான சான்றுகள் இருந்தாலொழிய, தண்டனைகள் கிடைப்பது வெகு அரிது. சசி தேஷ்பாண்டே, 'மௌனத்தின் குரல்' நாவல் மூலம் வெகு அழகாக உணர்த்தியிருப்பார்.

நாவலை வாசித்து இருவருடங்கள் இருக்கும். வாசித்த போதே, நாவலை மூடி வைத்ததும், அதில் ஒன்றியது போலிருந்த அல்லது  பாதித்த விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆனால், அதில் அவர் சொல்லி யிருக்கும் ஒவ்வொன்றும் கனமான விஷயங்கள். நாவலில் அவர்  சொல்லியிருக்கும் பிரச்சினைகளும், காரணங்களும் நமது அம்மாக்களின், அக்காக்களின், அண்ணிகளின் ஏன் தெரிந்த எல்லா பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை.

 இருந்தாலும், எந்த பெண்ணும் தன்னை ஏமாற்றியதற்காக , பொய் சொன்னதற்காகவோ, சீண்டப்பட்டதற்காகவோ அல்லது தன் விருப்பு வெறுப்புகளை கிஞ்சித்தும் மதிக்காகதற்காகவோ அல்லது தனது அடை யாளங்களைஅழித்ததற்காகவோ எந்த கணவனையும் தண்டித்துவிடவில்லைதானே!

எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக பிறந்த வீட்டில் வாழ்ந்திருந்தாலும், புகுந்த வீட்டிற்கு வந்தபின் தன்னை அவர்களுக்காக அல்லது திருமண வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக்கொண்டு 'வச்சி ஓட்டுவதுதானே'  யதார்த்தம். தனது சுயத்தை அழிப்பதை யாரும் கொலை என்று எண்ணுவதில்லையே!

அதிலிருந்து மாறுபட்டிருந்ததுதான், இந்த படம் எனை ஈர்த்தது போலும்!கதை அல்லது நாவல்தான் என்றாலும், இவ்வளவு நுட்பமாக, இழை கூட பிசகாமல் திட்டமிட்டு கணவனை சட்டத்தின் பிடிக்குள் மாட்டிவிட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. தனது அடையாளங்களை மறைத்துவிட்டு வேறு ஊரில் வாழும் ஏமி, பணம் பிடுங்கும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு அவளுக்கு ஏற்படும் கையறு நிலை!

உடனடியாக, அதிலிருந்து  மீண்டு  வந்து, அவள் மீது காதல் கொண்ட கொலீன்சோடு தொடர்பு கொள்கிறாள். அவனது தொல்லை அத்துமீறும்போது, அவனை போட்டுத்தள்ளவும் அவள் தயங்கவில்லை. அதுதான், ஏற்றுக் கொள்ள முடியாமல், 'அவள் என்ன, மனநோயாளியா' என்று எண்ண வைத்தது.  

ஆனால், அந்த பூக்கார அக்கா சொல்வது போல, 'ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ  பண்ணிடறாங்க... பொண்டாட்டிய... அதல்லாம் பார்க்கும் போது'....இதுவும் சரிதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். இறுதியில், 'அவள் திரும்பி வந்தால் போதும்' என்று அவளது கணவன் மீடியா மற்றும் மக்கள் அனு தாபத்துக்காக சொல்லும்போது, சரியாக அவனது கைகளில் வந்து விழுகிறாள். திருமண பந்தத்தை காப்பாற்றுகிறாள். 

படத்தில், மிகவும் பிடித்ததே, ஒவ்வொன்றையும் அவள் திட்டமிட்டு செய்வதும், அந்த புதிர்  பாணியிலான குறிப்புகளும், எந்த அழுத்தங்களுக்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ள போராடுவதும், அதனை மீட்டெடுப்பதும்தான். அமெரிக்காவிலாவது, மீடியாவில் தான் சொல்லிவிட்ட‌ வார்த்தைக்காக கட்டுப்படுகிறார்கள். இங்கோ சுனந்த புஷ்கரின் மரணதின் விடுகதையே இன்னும் அவிழ்க்கப்படவில்லை!

குறிப்பு:படத்தில் நெருக்கமான உடலுறவு காட்சிகளும், பகீர் கிளப்பும் கொலை மற்றும் ரத்தக்காட்சிகள் உண்டு.

Wednesday, June 18, 2014

A world of innocence (பெரிம்மாவின் டைரியிலிருந்து) ;-)

மசூரியிலிருந்து நைனிடால் பயணம். மசூரியிலிருந்து கிளம்பி, டேராடூனில் காத்திருந்தபோது பெரிம்மா எழுதியது.

A world of innocence

I and my daughter packed
    clothes,Jerkins,woolen-wares and shoes;
My granddaughter did her own packing with
    innumerable crayons,eight pencils,six pens,
    seven sharpeners,five erasers,
    three scissors and one geometry box (I don't know what for)
besides storybooks,notebooks and drawing books
-We left for Mussoorie
    we enjoyed cool breeze that comes through tall deodar trees
exotic aromatic air from white chestnut blossoms
we walked uphill,downhill till our knees ached;
we tasted aloo parantha,apple crumble,sweet lassie
at 'Char Dukans' (Estd in 1910)
Lo! The day came for departure
Our case is added more with
    Tibetan styled purses,bags and bangles;
    Kashmiri jacket and stoles
    -Heavier than before!
I stealthily checked my granddaughter's bag
Little pink and white flowers from the weeds,
    -a small bark of a deodar tree,
    -a green fern twig for preservation
    - dried leaves of some unknown trees,
    - an unshaped stone chip from the mountain rock
    - a round white pebble,
oh,what a world of innocence!
    What a world of non-materialism!
    What a world of non-consumerism!
I wish to go back there.
Can I?




 இந்த படம், நைனிடாலில் தங்கியிருந்த விடுதியில் எடுத்தது. உதிர்ந்த பூவிதழ்களை சேகரிக்கிறாள் பப்பு.

Tuesday, June 17, 2014

தந்தையர் தினப் பதிவு - லால் டிப்பாவிலிருந்து ஐவி காட்டேஜ்(ரஸ்கின் பாண்ட்) ‍வழியாக‌

இரண்டாம் முறையாக, லால் டிப்பா வரை நடைபயணம். திரும்பி வந்துக்கொண்டிருந்தோம். தேவதாரு மரங்களும், பூத்துக்குலுங்கும் செஸ்ட் நட் மரங்களும் அடர்ந்த சாலை. பள்ளத்தாக்குகளிலிருந்து, மேலெழும்பி வரும் ஈரக்காற்று மதிய வெயிலைக்கூட சிலிர்ப்பாக மாற்றியிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக பறவைகள் சப்தம். இதைத்தவிர, நாங்கள் நடக்கும் சப்தம் மட்டுமே. அந்த அமைதியை அவ்வப்போது உடைக்கும் பப்புவின் மெல்லிய‌ குரல்"ட்வென்டி சிக்ஸ்...ட்வென்டி செவன்". உதிர்ந்து கிடக்கும் ஜக்ரந்தா மலர்களை சேகரித்துக்கொண்டிருந்தாள், பப்பு.
ச்சார் தூகான் வந்ததும், ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாம‌லேயே அந்த‌ கடையில் அமர்ந்தோம். தான் சேகரித்த, ஊதா வண்ண‌ மலர்களை மேஜையின் மேல் பரப்பிவிட்டு, கண்ணாடி அலமாரிக்குள்ளிருந்த சாக்லெட்டுகளை பராக்கு பார்க்க துவங்கினாள் பப்பு. அவளை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அலமாரிக்குள்ளிருந்த புத்தகங்கள் ஈர்க்க, வெளியே எடுத்து பார்த்தோம்.  எல்லாம் ரஸ்கின் பாண்டின் புத்தகங்கள்.அவர் எழுதிய புத்தகங்கள்  சில ,அவரைப் பற்றி எழுதிய புத்தகங்கள் சில!

ச்சார் தூகான் -  பெயருக்கேற்றாற்போல், நான்கே நான்கு கடைகள்தான். ஒரு நூறாண்டு வரலாறு இந்த நான்கு கடைகளுக்கு உண்டு.  மேகியும், பான் கேக்குகளும், பன் ‍ஆம்லெட்டுகளும் சுறுசுறுப்பாக பரிமாறப்படும் கடையில், புத்தகங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. சில சமயங்களில், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரஸ்கினை ச்சார் தூகானில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.

நான்காவதோ, ஐந்தாவதோ தலைமுறையாக நடத்திவரும், இந்த கடைக்காரர் ரஸ்கினுக்கு குடும்ப நண்பர். அவரது கையெழுத்திட்ட பிரதிகள் அங்கிருந்தன. ஆட்களிலில்லாத மாலைநேரத்தில், நீங்கள், ச்சார் தூகானுக்கு சென்றால், அந்த கடைக்காரர் பழங்கதைகளை உங்களுக்கு சொல்லக்கூடும். கூடவே, ஒவ்வொரு சனிக்கிழமையும் ரஸ்கின், மசூரியிலிருக்கும் கேம்ப்ரிட்ஜ் புத்தக கடைக்கு வந்து இரண்டு மணிநேரம் வாசகர்களை சந்திப்பதையும்.

மில்க் ஷேக்குக்காக,  லால் டிப்பா வரை இரண்டாம் முறையாக நடந்திருந்த பப்புவை ஏமாற்றாமல், ஆர்டர் கொடுத்துவிட்டு புத்தகத்தை பிரித்தால் விரிந்தது, இந்த பக்கம் - " The funeral". 



வாசித்துவிட்டு, எதிரில் இருந்த அந்த பூங்காவையே வெறித்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். செஸ்ட்நட் மரநிழலில், உறங்கிக் கொண்டிருந்தன, நான்கைந்து நாய்கள். ச்சார் தூகானின் பிரிக்க முடியாத அங்கம், அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் அதன் நாய்கள். சாதாரண தெருநாய்கள் என்று அவற்றை சொல்லிவிட முடியாது. உயர்வகை நாய்கள்.தங்கள் உரிமையாளர்களை நூறாண்டுக்கு முன்பே தொலைத்தவை. மெல்லிய காற்று, மேஜையில் பப்பு பரப்பியிருந்த  ஜக்கரந்தா மலர்களை கலைத்துபோட்டது.

ரஸ்கினின் பெற்றோர், இந்தியாவில் பிறந்த ஆங்கில வம்சாவளியினர். ரஸ்கினின் தந்தை, ஏதோ விடுமுறைக்காக லேண்டர் வந்தபோது, ரஸ்கினின் தாயை சிஸ்டர்ஸ் பஜாரில் சந்திக்கிறார். மலேரியா மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு ஓய்வளிக்க ஏற்படுத்தப்பட்ட சிற்றூர்தான், லேண்டர். அந்த  மருத்துவமனை 1947 வரை செயல்பட்டும் வந்திருக்கிறது. அங்கு, செவிலியர்ப்பயிற்சியும் உண்டு. அதானாலேயே அந்த பகுதிக்கு 'சிஸ்டர்ஸ் பஜார்' என்றும் பெயர். அங்கு, செவிலியர் பயிற்சி படிக்க வந்தவர்  ஈடித். ஆப்ரே - ஈடித் சந்திப்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினரின்  இரண்டாவது மகன்தான் ரஸ்கின்.

ரஸ்கினின், குழ்ந்தை பருவ நினைவுகள் ஜாம்நகரிலிருந்து தொடங்குகிறது. அங்கு அவரது தந்தை, இந்திய ராஜகுடும்ப‌ குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்றுநராக பணியாற்றுகிறார். இரண்டாம் உலகப்போர் சூழல், ரஸ்கினின் குடும்ப சூழலை மாற்றுகிறது. தந்தை கல்கத்தாவுக்கு செல்ல, தாயாரோடு ரஸ்கின் டேராடூனுக்கு செல்கிறார்.

சிலநாட்களிலேயே, குடும்பம் இரண்டாக‌ பிரிகிறது. ரஸ்கின், தந்தையாரோடு டெல்லிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். ரஸ்கினின் இனிமையான நினைவுகள் என்றால் அதுதான். சிறிது காலமே ஆனாலும், அவரது தந்தையாரோடு அவர் தினமும் செலவழித்த நேரங்கள், பயணித்த இடங்கள், அவரது தந்தையார் அறிமுகப்படுத்திய இசை என்று ரஸ்கினின் வாழ்க்கை ஒரு அழகான குழந்தைபருவமாக நகர்கிறது.

சிம்லாவின் ,உறைவிட பள்ளியில் ரஸ்கின் சேர்ந்துவிட, தந்தையார் கல்கத்தாவுக்கு இடம் பெயர்கிறார். பெரும்பாலும், இருவருக்கும் தொடர்பு கடிதங்கள்தான். ரஸ்கின் அவ்வளவாக எழுதாவிட்டாலும், தந்தையாரி டமிருந்து அடிக்கடி கடிதங்கள் வரும் ரஸ்கினுக்கு. அந்த கடிதங்கள்தான் ரஸ்கினின் மகிழ்ச்சியான தருணங்கள். ரஸ்கினை ஒரு குழந்தையாக பார்க்காமல்,குழந்தைக்கு என்ன புரியும் என்று எண்ணாமல் கடிதம் மூலமே பேசியிருக்கிறார் அவரது தந்தை. மலேரியாவில்,ரஸ்கினின் தந்தை இறந்துவிட, இருள் சூழ்கிறது ரஸ்கினின் வாழ்க்கை.

தந்தையின் மறைவு, ரஸ்கினின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.தந்தை மறையும்போது,ரஸ்கினுக்கு ஒன்பது அல்லது பத்து வயதுதான். இழப்பை புரிந்துக்கொள்ளகூடிய வயதில்லையே அது!  ரஸ்கினை  தந்தையின் இறுதி சடங்கிற்கு,ரஸ்கினை அழைத்து செல்ல வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. 'வருடங்கள் பல சென்றாலும், இப்போதுகூட, அவரை இற‌ந்தது போல எனக்கு தோன்றவில்லை' என்கிறார், ரஸ்கின்.

தந்தையார் எழுதிய கடிதங்களும், ரஸ்கினிடம் தற்போது இல்லை. அது ஒரு சோகக்கதை. தந்தையிடமிருந்து வரும் கடிதங்கள் நின்றுவிட,பழைய கடிதங்களோடு திரிந்துக்கொண்டிருந்த ரஸ்கினிடமிருந்து அந்த கடிதங்களை வாங்கியிருக்கிறார், ஒரு தலைமையாசிரியர், அந்த வருடப்படிப்பு முடிந்ததும் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்ற நிபந்தனையோடு. இறுதியாக, ரஸ்கின் சென்று கேட்டபோது, அந்த தலைமையாசிரியருக்கு ரஸ்கின் எதைப்பற்றி பேசுகிறார் என்றே புரியவில்லையாம். மறதி! பத்து வயது சிறுவனுக்கு காலம் கொடுத்த கொடூரமான‌ தண்டனை!

தனது பள்ளி விடுமுறைகளை டேராடூனிலுள்ள‌ தாயாரோடு கழிக்கிறார். தாயாரோடும், தாய்வழிபாட்டியோடும்தான் அவரது விடுமுறை கழிகிறது. தாயின், இரண்டாம் கணவர் பற்றி கசப்பான எண்ணங்கள் எதுவும் இல்லை யென்றாலும், ரஸ்கினுக்கு உவப்பாக எதுவும் இல்லை.

படிப்பை முடித்து, இங்கிலாந்து சென்றாலும், ஆங்கிலேயராக அவரால் ஒன்றமுடியவில்லை. இமாலயத்தின் மலைகளின் பிள்ளை அவர். மலைகள் அவரை அழைக்கவே, திரும்பவும் மசூரிக்கு குடிபுகுந்து, எழுத்தாளராக வாழ்கிறார். எழுத்தாளராக ஆகவே, சிறுவயதிலிருந்து விரும்பியிருக்கிறார்.

எழுதவும், எழுத்தில் ஆர்வத்தையும் விதைத்தவர் அவரது தந்தையார்தான். ரஸ்கினோடு வாழ்ந்தது சிலகாலமேயானாலும், இன்றுவரை ரஸ்கினால் மாற்றிக்கொள்ள முடியாத குணநலன்களை போதித்தது அவரது தந்தைதான்.  சிறுவனாக இருந்த ரஸ்கினை, டைரி எழுத ஊக்குவித்த தந்தையால் நமக்கு கிடைத்தவைதான் ரஸ்கினின் இந்த கதையுலகம். ஆரம்பத்தில், பார்த்த நாடகங்களையும், பயணக்குறிப்புகளையும் எழுதத்தொடங்கியவர், தந்தையின் மறைவுக்குப் பின் புனைவாக எழுத ஆரம்பிக்கிறார். ஆனால், 'குழந்தைகளுக்காக, தான் எழுத ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பிரேமின் குழந்தைகளே' என்கிறார்.

 பிரேம், அவரது உதவியாளரின் உறவினர். உதவியாளர், டெல்லி சென்றுவிட, பிரேம் வேலை கேட்டு உள்ளே வருகிறார். அப்படியே, ரஸ்கினோடு தங்கிவிட, இன்று ரஸ்கின் ஒரு பெரும் குடும்பத்தின் தாத்தா.  பிரேமின் குழந்தைகளுக்கே குழந்தைகள் இன்று வந்துவிட்டாலும், ரஸ்கினின் பாடல்களும், கதைகளும் தான் அவர்களை தூங்க வைக்கின்றன. பிரேமின் குழந்தைகளை மட்டுமின்றி, நம் அனைவரின் குழந்தைகளையும்தான்!

காமிக்ஸ் என்றால் கொள்ளை விருப்பம் பப்புவுக்கு.அதை அடுத்து, அவள் விரும்பி படிப்பது ரஸ்கினின் கதைகளைதான்.அதற்காகவே, நாங்கள் மசூரியை இந்த வருடம் தேர்ந்தெடுத்தோம். அவரை சந்திக்க நாங்கள் பிரயத்தனப்படவில்லை. அவர் அறிமுகப்படுத்தியவற்றை நாங்கள் நேரில் காண ஆசைப்பட்டோம்.  ரயில்களையும், சிங்கத்தையும், கரடியையும், பூக்களையும், குருவிகளை, மலைகளையும் - முக்கியமாக மசூரியையும், வெயிலும் புழுதியும் படிந்த இந்திய தெருக்களை அவளுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நான் நன்றி சொல்லவிரும்புவது, ரஸ்கினுக்கும் அவரது தந்தைக்கும்தான்.

 
இதோ, அவள் , டெல்லி நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில், ரஸ்கினின் புனைவுலகத்தின் பிடியில்!









தந்தையர் தினத்தன்று, இந்த தந்தையை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அப்படியே,நமது பிரியத்துக்குரிய  தாத்தாவாகிவிட்ட  ரஸ்கினையும்தான்! :-)

RUSKIN, OUR ENDURING BOND 
          by : Ganesh Saili
Pages : 144
Price : Rs 395.00

Saturday, June 14, 2014

ஒரு விமானப்பயணமும், ஐந்து கத்தரிக்கோல்களும்

இந்திய மாநிலங்களை, அதன் தலைநகரங்களைப் பற்றி, பப்பு, படித்த சமயத்தில் கேட்டது, இன்றும் நினைவில் நிற்கிறது.

"ஆச்சி, நாம ஒவ்வொரு ஸ்டேட் கேப்பிடலுக்கும்  போலாமா...என்னை கூட்டிட்டு போறியா?"

இந்த கோணத்தில் நான் என்றைக்கும்  நினைத்தே பார்த்ததில்லை. இந்த நாட்டில் பிறந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், தமிழ்நாட்டை தாண்டி செல்ல என்றைக்கும் தோன்றியதில்லை.  சாகித்திய அகாதமியில் வெளியாகும், மாநில வாரியான கதைபுத்தகங்களை, ஒவ்வொரு புத்தக சந்தையிலும் வாங்கி மிகுந்த விருப்பத்தோடு வாசித்திருக்கிறேன். அதைத்தாண்டி, அந்த மாநிலங்களுக்கு, அவற்றின் தலைநகரங்களுக்கெல்லாம்  செல்லலாம் என்று  தோன்றியதில்லை.

அந்த வருட இறுதியில், ஹைதராபாத் சென்றோம்.

அடுத்து, சில மாதங்கள் கழித்து, பப்புவிடமிருந்து இன்னொரு கேள்வி.இந்தியாவின் வரலாற்று சின்னங்களை அப்போது கற்றுக்கொண்டிருந்தாள். அதோடு, நமது முக்கிய நதிகளையும். அன்றிரவு, அவள் கேட்டது, இன்னும்  காதில் எதிரொலிக்கிறது.

"ஆச்சி, யமுனா ரிவர் எப்படி இருக்கு தெரியுமா? மாஸ்டர் காட்டினார்ப்பா...எங்க ஸ்கூல் மெட்டிரீயல்ல இருக்கு. ஃப்புல்லா தண்ணி....எப்படி, போகுது தெரியுமா? அதோட ஓரத்துலேதான் தாஜ்மகால் இருக்கு. நாம யமுனா வழியா தாஜ்மகால் பார்க்க போலாமா?"

யமுனாவின், படத்தைதான் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அவளது கண்களில் மினுமினுத்த ஆர்வம் ஒரு நட்சத்திரத்தின் ஜொலிஜொலிப்புக்கு இணையானது. அந்த ஒளியை மறுதலிக்க இயலாமல், நானும் தலையாட்டி வைத்தேன். அதன்பிறகு, ஒருநாள், அவளாகவே பெரிம்மாவிடம் ஒன்றை அறிவித்தாள், "என் பர்த்டேவுக்கு நான் இந்தியாவோட கேபிடல்லேதான் இருப்பேன்."

அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. :‍)

அன்றிலிருந்து, பப்புவின் இந்த ஆசையை, தக்க வைக்க  இந்தியாவின் வரைபடத்தை உற்று நோக்க தொடங்கினேன். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்! தெரியாத ஊர்களின் ரயில் நிலையங்களை தடவித் தடவி அறிந்துக்கொள்கிறேன்.. அந்த ரயில் நிலையங்களை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இந்த ரயில் நிலையங்களின், வலையமைப்பு என்றுமே எனக்கு ஒருவித பிரமிப்புதான். பப்புவுக்கும் அதை கடத்த முற்பட்டேன்.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடமாக  ஒரு  தேர்ந்த தையல்காரரைப் போல இணைக்க தலைப்பட்டேன். வெளிநாடுகளுக்கு போவது பற்றி நினைப்பதற்கு முன், உன் நாட்டை பற்றி நீ அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்ல நினைக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களை மட்டுமல்ல... காடுகளையும், கடல்களையும்,மலைகளையும், நதிகளையும் அவள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  நாகரிகமும்,வரலாறும், சுவாரசியமும் புகழ் பெற்ற நகரங்களுக்கு மட்டுமே சொந்தமில்லை, அந்த நகரங்களின் பல மைல்களுக்கு அப்பால் உள்ள  சாதாரண கிராமத்திலும் கூட இருக்கிறது என்பதையும், அதை நாம்தான் தேடி கண்டடைய வேண்டும் என்பதையும் அவள் உணர விரும்புகிறேன். ஊர்களையும், அவற்றின் பாதைகளோடும் கூட.. மக்களை, அவர்களின் உணவை, அவர்களது போக்குவரத்தை, கலாசார அடையாளங்களையே இயன்றவரை பின்பற்றக்  கற்றுக்கொண்டிருக்கிறோம்..

அதனாலேயே,கிழக்கிலும் மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் இருக்கும் ஊர்களை பற்றி கனவு காண்கிறோம். அந்த ஊர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து பாதையை வரைகிறோம். சிலநாட்களே விடுமுறை கிடைத்தாலும், அந்த ஊர்களை நோக்கி, எங்கள் பைகளை தூசிதட்டி சுமக்கிறோம்.

அப்படி, இந்த விடுமுறைக்கு நாங்கள் நாங்கள் தடம் பதித்தது உத்தராகாண்ட் மாநிலம். முற்றும் முழுவதுமாக, இணையத்தில் தேடி தேடி, இந்த பயணத்தை வடிவமைத்து, பப்புவின் நாடகம் அரங்கேறும் நாளுக்காக காத்திருந்தேன். அவளது, நாடகம் முடிந்த அடுத்த நாள் பயணம். சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்வதாக திட்டம். விமானத்தில் செல்ல ஆசையாக இருப்பதாக வேறொரு பயணத்தில் அவள் கூறியிருந்தது சரியாக நினைவுக்கு வந்து, சென்னையிலிருந்து டெல்லிக்கு மட்டும் விமானத்தில் பயணம்.

பெரிய சூட்கேஸ்களை கொடுத்துவிட்டு, அவரவர் கைப்பைகளோடு செக்கிங்க்கிற்கு வந்தோம். செக்கிங் முடிந்து, திரும்ப கைப்பைகளை பெற்றுக்கொள்ள வருமிடத்தில், பப்புவின் பையை தனியாக வைத்திருந்தார்கள். எங்களுடையதை எடுத்துக்கொண்டு, அவளது பைக்காக காத்திருக்கையில், ஒரு பெண் வந்து 'இந்த பை யாருடையது ?'என்றார். பப்பு என்னுடையது என்றதும், 'எதற்காக இதில் ஐந்து கத்தரிக்கோல்கள் வைத்திருக்கிறாய்?' என்றார்.  அப்போதுதான், எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  அவர் பார்த்த பார்வையோ, நாங்கள் ஏதோ திட்டத்துடன் வந்தது போல இருந்தது.

ஒவ்வொரு பயணத்துக்கும், பப்பு அவளது பையை தயார் செய்வாள். அதில், சகல சொத்துகளும் இருக்கும். க்ரேயான்கள், நோட்டு புத்தகங்கள், கதைபுத்தகங்கள், க்யூப், தாயம், சிலசமயங்களில் பல்லாங்குழியும் புளியங்கொட்டைகளும், நூல்கண்டும் ஊசியும்,ஓரிகாமி பேப்பர்கள்...அதோடு பைனாகுலர். ஒருமுறை, ஆக்ஸ்ஃபோர்டு சின்ன அகராதி கூட இருந்தது.

இந்த பையை தயார் செய்தல் என்பது,மிகுந்த‌  கடமையாக பொறுப்புணர்வோடு நடைபெறும். இடையில், புகுந்தால் தேவையற்ற சண்டைகள் வருமென்பதால், எல்லாம் முடிந்தபின்  கிளம்புவதற்கு முன்பாக  நான் மட்டும் (பப்புவின் நம்பிக்கையை பெற்று) ஸ்கீரினிங் செய்வது வழக்கம்.

முக்கியமாக, பயணத்தின் இடையில், எங்காவது நடக்க வேண்டிய இடங்களில் அது என் முதுகைதான் தேடி வருமென்பதால், முடிந்த அளவு, இரக்கமேயில்லாமல், விடைத்திருத்தும் ஆசிரியரைப்போல் நடந்துக்கொள்வேன். அதேபோன்று, இந்த முறையும் செய்திருந்தேன். ஆனால், அதன்பிறகு, அவள் சிறு சில்லறை சாமான்களை ஏற்றியிருந்தாள். அது பரவாயில்லை, பெரிய அளவில் ஒன்றும் கனமாகயிராது என்று விட்டுவிட்டேன்.அது இப்போது என்னை ஏமாற்றியிருக்கிறது. பார்த்திருந்தாலும், கத்தரிக்கோலை கொண்டு செல்லக்கூடாது என்று எனக்கு தெரியாததால், ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மீதத்தை காப்பாற்றியிருப்பேன்.

"ஐந்து" என்றதும், 'அய்யய்யோ..வீட்டில் ஒன்றுமே இருக்காதா' என்றுதான் முதலில் தோன்றியது. எதற்கு எடுத்து வந்தாய் என்று சந்தேகத்தோடு அந்த  பணியாளர் கேட்டதும், "நான் கிராஃப்ட் செய்வேன்" என்றாள் பப்பு. புன்னகையோடு அவர்,"எங்கே, விமானத்திலா?" என்றதும் "ஆமாம்" என்றாள். பிறகு, தேடி எடுத்து அனைத்தையும் அவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, விமானத்துக்கு காத்திருந்தோம். 

வீட்டுக்கு சென்றால், பால் கவர் கத்தரிக்ககூட ஒரு கத்தரிக்கோல் இருக்காதே என்ற நினைப்பு வந்ததும், "ஒன்னு எடுத்துட்டு வந்தா பத்தாதா?" என்று அவளிடம் சொன்னதற்கு, "கத்தரிக்கோல் எல்லாம் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்று லாஜிக்காக கேட்டாள். எனக்கும், இப்போதுதான் தெரியும் என்பது அவளுக்கு எப்படி தெரியும்! :‍)

விமானத்துக்கு,உள்ளே செல்ல அழைத்ததும், உற்சாகமாக  கிளம்பியவள், விமானத்தில் ஏறி அமர்ந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்ததும் ஒருமாதிரியாகி விட்டாள். வழக்கமான உற்சாகம் குறைந்தாற்போலிருந்தது.மேலும், அவளது பையை வேறு மேலே வைக்கவேண்டியிருந்தது. பப்புவின் சொத்தே, அவளது பைதான். ஒரு நொடி கூட அதை விடாமல் பாதுகாப்பாள். ரயிலில், அமர்ந்த மறுநிமிடம், அவளது பெர்த்தில் கடைவிரித்து மும்முரமாக வரைய, எழுத, வெட்டி ஒட்ட தொடங்குவாள்.

இங்கோ, உட்கார மட்டுமே இடம். கால்களை நீட்ட கூட முடியாது. ஜன்னல் வழியாக பார்த்தால் விமானங்கள் வருவதும், பணியாளர்கள் ஊர்திகளில் செல்வதுமாக இருந்தனர். "எனக்கு ட்ரெயிந்தான்ப்பா பிடிக்கும், அப்போதான், ஜாலியா ஜன்னல் வழியா ஊரெல்லாம் பார்த்துக்கிட்டு போலாம். இனிமே ட்ரெயின்லேயே போலாம்" என்றாள். எல்லாம் விமானம் கிளம்பும் வரைதான். அதன்பிறகு, ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். விமானம், தரையில் இறங்கும் சமயம் உறங்கிவிட்டாள்.

குதூப்மினாரை, மேலிருந்து பார்க்க வேண்டுமென்பது பப்புவின் ஆசை. குதூப்மினாரின் கைடு ஒருவர், மேலிருந்து குதூப்மினாரை பார்த்தால் ஒரு விரிந்த தாமரையைபோல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதிலிருந்து, டெல்லியை பற்றி பேசினால், குதூப்மினாரைப் பற்றிய இந்த விவரிப்பு இருக்கும். ஆனால், இப்போது, குதூப்மினாரை மேலிருந்து   பார்த்தது நாந்தான். பப்புவின் கண்களுக்கு ஒருவேளை, அந்த‌ விரிந்த தாமரை தெரிந்திருக்குமோ என்னவோ?! :‍)

Saturday, March 29, 2014

பப்புவும் பொன்மொழிகளும்

பப்பு, எப்போது தத்துவங்களையும், பொன்மொழிகளையும் வீசுவாள் என்று கணிக்கவே முடியாது. 'கடையில பொருள் வாங்கிவிட்டு எப்போவும் பில் வாங்கணும்' என்று சொல்லியிருப்பேன். என்றைக்காவது காசை கொடுத்துவிட்டு பேச்சு சுவாரசியத்தில் திரும்புகையில் "இந்தாங்க பில்" என்பார் கடைக்காரர். அதை சுட்டி காண்பித்த, அடுத்த நொடிகளில் ஒரு பொன்மொழி தயாராக இருக்கும். 'நாம செஞ்சுட்டுதான் அடுத்தவவங்களுக்கு சொல்லணும்" என்பதாக!

"மேக் ஹே வென் த சன் ஷைன்ஸ் என்றால், நிறைய பேர், 'சன் வந்ததும் "ஹேய்"ன்னு கத்துறதுன்னு' நினைச்சுக்கிறாங்க. ஆனா அது இல்ல. சன் வரும்போது, நாம பயிரிட்டு ஹே செய்யணும்" என்றெல்லாம் பொன்மொழிகளும் விளக்கங்களும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும்.

 எனக்கோ, இந்த பொன்மொழிகள் எல்லாம்  எதிர்பாராத நேரங்களில் வீசப்படும் பந்து போல...சிலது நேராக நம் கைக்கு வந்துவிடும். பலது, மூக்கை பதம் பார்த்துவிட்டு போகும். இன்று அப்படியான ஒரு நாள். ஒன்றை சரியாக கேட்ச் பிடித்தாலும், இன்னொன்றுக்கு எனது மூக்கை கொடுத்தேன்.

பள்ளிக்கூடத்துக்கு கிளம்பியாகிவிட்டது. ஆனாலும், ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் ஒரே கதை. பப்புவின் பள்ளியில் டீச்சர்களை "ஆன்ட்டி" என்று அழைக்கும் முறை பற்றி மாமாவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். கதவை திறந்து வெளியே வருவதும்ம, பின்னர் திரும்பி உள்ளே சென்று மாமாவை கிண்டல் செய்வதுமாக இரண்டுமூன்று முறை நடந்துவிட்டது.  இந்தமுறை, வெளியே வந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்து, சொன்னாள்.

 "Parents are the first teachers; teachers are the second parents."

"நீ வந்தா வா , இல்லேன்னா போ, நான் ஸ்கூலுக்கு போறேன்"(!) என்று வண்டியை துடைக்கலானேன். பேசி முடித்து, வண்டியில் வந்து ஏறிக்கொண்டவள், கேட்டாள்,

"ஆச்சி, படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா?"

நேரமாகிவிட்ட‌ அவசரத்தில்,  எதை தேர்ந்தெடுத்து சொல்வது என்று தெரியாமல், பொதுவாக‌ "ரெண்டுமே தான்" என்று சொல்லிவிட்டு, "நம்ம கண்ணு மாதிரி" என்றேன். நல்லவேளையாக தப்பித்தேன் என்று என்னை நானே மனதுள் மெச்சிக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்குமுன் இப்படி ஒரு பொன்மொழியை கேள்விபட்டதும் இல்லை!

"கரெக்ட்" என்று பாராட்டும் கிடைத்தது. அடுத்ததாக, "எப்படிப்பா உனக்கு தெரியும்?", என்று ஒரு கேள்வியை வீசினாள், ஏதோ பொன்மொழிகளுக்கெல்லாம் தானே காப்புரிமை வைத்திருப்பதுபோல்.

"அதுக்குதான் எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்", என்று நானும் எனக்கு கிடைத்த‌ வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ;)

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை...

"உயிர்  இருந்தாதானே படிக்க முடியும்? இல்லேன்னா எப்படி படிக்க முடியும்? ஆனா, படிச்சாதானே வாழ முடியும்? இல்லேன்னா எப்படி வாழ முடியும்?" என்று விளக்கம் கொடுத்தவள், சற்று நேர அமைதிக்குப்பின்,

"நாலெட்ஜ் முக்கியமா? உயிர் முக்கியமா? என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள். திரும்பவுமா....இந்தமுறை நீயே ஜெயிச்சுக்கோ என்பது போல, "தெரியலையே" என்றேன்.

கையில் காசு;வாயில் தோசை என்பதுபோல், கை மேல் விளக்கம்.... 'தெரியாது' என்றதும் உற்சாகக்குரலில் விளக்கம், "போத் ஆர் லைக் டூ ஐஸ். உயிரோட இருந்தாதானே நாலெட்ஜை ப்ராக்டிஸ் பண்ண முடியும். நாலெட்ஜ் இருந்தாதானே உயிரோட வாழ முடியும்"

:‍)  

மன்னிப்பும் கூடவே ஒரு ஞானமும்

வெளியில் கிளம்ப வேண்டும். நேரமாகியும், அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமும் இன்றி விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தாள்.  "முகம் கை கால் கழுவு" "பையை எடுத்து வை" "பாட்டில்லே தண்ணி எடுத்து வை" ம்ஹூம்! காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அட்வைஸ் கலந்த திட்டுகளோடு சில பல மிரட்டல் கலந்த அடிகளோடு ஒருவழியாக கிளம்பியாயிற்று.

எவ்வளவு நேரம்தான் உர்ரென்று இருப்பது. அவளுக்கு பேச வேண்டும்.  ஏதோ சொன்னாள். எனக்கு சரியாக கேட்கவில்லை. "என்ன சொன்னே" என்று திரும்ப கேட்டேன். "நீயே யோசிச்சு பாரு. நீ செஞ்சதுலே என்ன தப்பு இருக்குன்னு" என்றாள். அவ்வ்வ்வ்...'எங்கேயோ கேட்ட குரல் மாதிரி என் டயலாக் எனக்கேவான்னு' நினைத்தபடி "என்ன" என்றேன். அப்புறம்தான் புரிந்தது, அவள் முதலில் முணுமுணுத்தது, "சாரி கேக்கணும்னு தெரியாதா" என்பது. 'சாரி' என்றேன். நொடிகளில் சகஜமாகி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டுக்கு திரும்பி வரும்வழியில்தான் எனக்கு இந்த சந்தேகம் தலைதூக்கியது. பப்பு என்னைப் பற்றி நினைக்கும்போது அவளது மனதில் உடனடியாக  நினைவுக்கு வரும் என்னைப்பற்றிய பிம்பது எது?கோபமான ஆச்சியா அல்லது ஃப்ரெண்ட்லியான ஆச்சியா? அவளிடமே அதை கேட்க முடிவு செய்தேன்.

"என்னை பத்தி  நினைச்சா உனக்கு என்ன தோணும்?"

...... பதிலில்லை.

"நீ என்னை பத்தி திங்க் பண்ணுவே இல்ல‌...அப்ப உனக்கு எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?"


"நீ கோவ மூட்ல இருந்தா இது என்ன லூசு அம்மா?  நினைச்சுப்பேன்.நீ ஜாலியா எனக்கு ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா சொல்லிக்கொடுக்கும்போது, "நல்லவேளை.... இது எனக்கு அம்மாவா வந்துச்சு...ப்பா..நான் இதுகூட வாழ்ந்துக்கறேன்ன்னு நினைப்பேன்."

:-)

Sunday, March 23, 2014

பப்புவும் அலமாரியும்

எவ்வளவுதான் ஹேர்பேண்ட், ரப்பர் பேண்ட், தலைமுடிக்கு போடும் கிளிப்புகள்  இருந்தாலும், நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது. கையில் இருக்கும் கிளிப்பின் இணையை இங்கேதான் எங்கேயோ பார்த்தோமே என்று இருக்கும். ஆனால், சரியான நேரத்துக்கு அதுவும் கிடைக்காது. சோபாவிலும் புத்தக அலமாரியிலுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சரி, இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று இறங்குவேன். பப்புவிடமும், சொல்லி வைப்பேன். இனிமே, ஸ்கூல்லேருந்து வந்ததும் ஒழுங்கா எல்லாத்தை ஒரு இடமா வைக்கணும். எல்லாம் ஒரு நாள் மட்டுமேதான். திரும்பவும் அதே கதை! இன்று சோபாவின் மேல் கிடந்த ஹேர்பேண்டையும், ஒற்றை கிளிப்பையும் பார்த்தவுடன் அதே வீரம் வந்தது. (அவ்வப்போது இந்த ஆவேசம் வந்தாலும் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காத்தால் போதும்..அந்த ஆவேசத்தை கடந்துவிடலாம். )

சரி, அதை மட்டும் தேடி தேடி ஒரு டப்பாவில் வைப்பதோடு, பப்புவின் அலமாரியையும் சேர்த்தே சுத்தம் செய்துவிடலாம் என்று திடீர் ஐடியா. ஓகே! முதலில் அந்த அலமாரியை சுத்தம் செய்யலாம். பிறகு இந்த ஹேர்பேண்டையும், கிளிப்பையும் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்ற, அலமாரியை டார்கெட் செய்தேன். 



அந்த அலமாரி, பப்பு பிறக்கும் சமயம் செய்தது. மூன்று அடுக்கு கொண்ட ஒரு சிறிய அலமாரி. கிட்டதட்ட,  பப்புவின்  தற்போதைய உயரம் இருக்கும்.  பப்பு பிறந்த சமயத்தில், ஹக்கீஸ், ஜட்டிகள் வைக்க உபயோகப்பட்டது. சற்று வளர்ந்ததும், அவளது உடைகளை அடுக்கி வைத்திருந்தேன். அவளது உடைகள் வளர்ந்து பெரிதாகி, இடம் கொள்ளாமல் போனதும், புத்தகங்கள் அந்த இடத்தை வந்தடைந்தது. கொஞ்ச காலம் கழித்து புத்தகங்களும் வேறு இடத்துக்கு மாறின. அதே காலத்தில்தான் பப்பு ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்துக்கு வந்திருந்தாள். சரி, இதுதான் சரியான சமயம் என்று அந்த அலமாரியை பப்புவின் பெயருக்கு மாற்றினேன்.

அவ்வளவுதான். அதற்குபிறகு, அந்த அலமாரியை தொடுவதற்கு கூட யாருக்கும் உரிமையில்லாமல் போயிற்று. சீவி சீவி குட்டியாகிப்போன பென்சில்கள், பலூன்கள், பிய்ந்து போன பலூன் துண்டுகள், உடைந்து போன க்ரேயான்கள், பென்சில் சீவல்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், கோலிகள், காந்த துண்டுகள், அவளது டப்பாக்கள்,பெரிய உண்டியல் ஒன்று, காசு வைக்க தனி கைப்பைகள்  என்று சகலமும் நோவாவின் கப்பல் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.விட்டுவிட்டேனே அதோடு, சிறு சிறு விளையாட்டுப்பொருட்களும்.

அந்த அலமாரிக்கு அருகே நின்று கொண்டு என்ன செய்வாளோ தெரியாது...உள்ளே எதையாவது வைப்பதும், திணிப்பதும், அது கீழே விழுவதும், பின்னர் திணிப்பதும்...என்று ஒரே ரகசிய பெட்டகமாக இருக்கும். ஒரு அலமாரி என்பது பப்புவின் முக்கியமான இடமாக சில நாட்களில் மாறிப்போனது. பப்புவுக்கு தான் பொக்கிஷமாக நினைக்கும், தனக்கு மட்டுமேயான ரகசியங்களை அடைகாக்கும் கூண்டை கொடுத்தது நல்லதாக போயிற்று என்று எனக்கும் ஒருகட்டத்தில் புரிந்தது. அதாவது, இந்த வீடே பப்புவுடையதாக, அவளது பொருட்களால் நிரம்பியிருந்தாலும், மற்றவர்கள் யாரும் உபயோகிக்காத ,அவளுக்கு மட்டுமேயான ஒரு இடம் ஒரு கட்டத்தில் அவளுக்கு தேவைப்படுகிறது என்பதை யதேச்சையாக நான் புரிந்துக்கொண்டது எவ்வளவு நல்லது!

"பப்பு, இன்னைக்கு உன்னோட கப்போர்டை நாம சுத்தம் செய்யலாம்ப்பா...நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீ எதெது எங்கெங்க  வைக்கலாம்னு சொல்லு." என்று லைட்டாக அடி போட்டேன். முதலில், "அதெல்லாம் நானே பார்த்துக்கறேன் " என்று முரண்டு பிடித்தது. அதனால், திட்டத்தை மாற்றினேன். முதலில் அவளது உடை வைக்கும் அலமாரியை சுத்தம் செய்யலாம் என்றேன்.  ஆடு சிக்கி விட்டது.  ;-) வீட்டுக்கு அணிந்து கொள்பவை, வெளியில் அணிந்து கொள்பவை, சிறியதாகிப்போனவை என்று பிரித்து அடுக்கினோம். அவளே மடித்து கொடுத்தாள். சொல்ல சொல்ல அடுக்கியும் வைத்தாள். இப்போது லைட்டாக ஆரம்பித்தேன். "இங்கியே எவ்வளவு தூசி இருக்கு, உன்னோட அந்த கப்போர்டையும் அடுக்கிடலாம்ப்பா...இதே மாதிரி நீயே அடுக்கு..நியூஸ் பேப்பர் மட்டும் நான் போட்டு தர்றேன்..சாப்பிட்டுட்டு பண்ணலாம்" என்றதும் முழு மனதுடன் அனுமதித்தாள்.

அவள் சாப்பிட்டுவிட்டு, நான் சாப்பிடும்போது, பாயை எடுத்து விரித்து அலமாரியிலிருந்த பொருட்களை அதில் பரப்பினாள். சாப்பிட்டு முடித்து நானும் போய் சேர்ந்துக்கொண்டேன். முதல் அடுக்கிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பிங்க் கலர் பென் ஹோல்டர், அழுக்கேறிய ஒரு நீல டப்பா, உண்டியல், மரத்தினாலான புதிர் விளையாட்டு, ஒற்றை ஒற்றையாக ஹேர்பின்கள், ரப்பர் பேண்ட்கள், ஜிகினா பொட்டலங்கள், ஒரு ஸ்டாப்ளர், அட்டைப்புதிர் பாகங்கள், வண்டி வண்டியாய் பென்சில் சீவல்கள் விதவிதமான கலர்களில் மற்றும் சிறிய சிறிய நோட்டுகள்... இன்னபிற!  ஒவ்வொரு டப்பாவாக கவிழ்த்து பின்னர் அவற்றையே அதில் அடுக்கினோம். இதற்கு மேலும் சிறியதாக பென்சில்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும் அளவின் பென்சில்கள் சீவப்பட்டு இருந்தன. 

அடுத்த அடுக்கில், கோலி குண்டுகள், வளையல்கள், புதிர் பாகங்கள், மேலும் புதிர் பாகங்கள்,  செஸ் காய்கள், அதன் பெட்டி ...ஆ..இதென்ன.... பித்தளை டபரா செட் இரண்டும் இங்கிருந்தன! கும்பகோணம் பயணத்தில், ஞாபகமாக வாங்கியது. அதற்கு பிறகு அதனை காணவே இல்லை என்பது அவற்றை பார்த்தபிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. டபராக்களை பார்த்தபின் ஏற்பட்ட, எனது அதிர்ச்சிக்கு பப்புவின் "ஹிஹி " என்ற சிரிப்பே பதிலாக கிடைத்தது. என்ன செய்வது. சுத்தம் செய்து பின்னர் அதே பொருட்களை அங்கேயே வைத்தோம். சுத்தம் செய்வது என்பது இங்கு அலமாரியின் அடுக்கில் 'பேப்பரை மாற்றுவது மட்டுமே'  என்று பொருள் கொள்க!

அதற்கு அடுத்த அலமாரிக்கு வந்தோம். அங்கு அடுக்கடுக்காக அட்டை டப்பாக்கள்! ஒவ்வொன்றாக எடுத்து கவிழ்த்தோம். சற்று நேரத்தில் பாய் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் க்ரேயான்களும், வண்ண பென்சில்களும். ஒவ்வொன்றாக பிரிக்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். க்ரேயான்களை தனி டப்பாவிலும், பென்சில்களை தனி டப்பாவிலும் பிரித்தாகிவிட்டது. தற்போது மீதம் இருந்தவை ஸ்கெட்ச் பேனாக்கள், கற்கள், கிளிஞ்சல்கள், கலர் பேனாக்களின் மூடிகள்! ஸ்கெட்ச் பேனாக்களை பார்த்தேன்...ஓ மை காட்.அதில் பேனா முனை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதை எடுத்து குப்பையில் போடபோனேன்.

"ஹேய், அது எனக்கு வேணும்ப்பா..." வாங்கிக்கொண்டாள். எதற்கு என்றதற்கு, அதற்கு உள்ளிருப்பதை எடுத்து விளையாடுவாளாம்.  ஐயோ! ஸ்கெட்ச் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற பொருட்களையும் பார்த்தேன். ம்ம்... அவற்றையும் சேர்த்து பென்சில் டப்பாவில் 'வைத்தோம்'. அடுத்த டப்பாவை கொட்டினேன். அய்யய்யோ! புதிர் பாகங்களுக்கு கீழே ஒரே மாவாக கொட்டியது!!


எதிலிருந்து இப்படி கொட்டுகிறது? சப்பாத்தி மாவை எடுத்து வைத்திருக்கிறாளா? டப்பாவை சுத்தம் செய்துவிட்டு புதிர்களை அதில் அடுக்கி வைத்தோம். அப்போது அகப்பட்டது...இதுதான் அந்த மாவுக்கு காரணம்! சப்பாத்தி உருட்டும் கட்டை ஒன்று! கொண்டபள்ளி சொப்பு சாமான்! உளுத்து கொட்டியிருக்கிறது. அதை பற்றி கொஞ்சம் லெக்சர் பப்புவுக்கு கொடுத்து விட்டு அடுத்த டப்பாவுக்கு வருகிறேன். சிறு சிறு கற்கள்...கடலிலிருந்து மேடம் கொண்டு வந்த பொக்கிஷங்கள். சில சிப்பிகளில் வண்ண‌ங்கள் அடிக்கப்பட்டிருந்தன. சில கிளிஞ்சல்களில் நூல் கோர்க்கப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளும் மாலை போன்று இருந்தது. உடைந்த பறவை, எங்கோ குடித்த ஜூசின் மேல் செருகியிருந்த சின்னஞ்சிறு குடை!   வேறு வழியின்றி எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.

இதையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, அலமாரியை பார்த்தேன்.
இந்த புதிர்பாகங்களை எல்லாம் எதற்கு எடுத்து வைத்தோமென்றே தெரியவில்லை. சிலதெல்லாம், பப்பு இரண்டரை வயதில் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ப்ளென்ட் கார்ட்ஸ் போன்றவை. அவைகளில் சில உடைந்தும் இருந்தன. எல்லா புதிர்களும் முழுமையானவையாகவும் இல்லை. இவற்றை வைத்து அவள் விளையாடுகிறாள் என்றும் சொல்லமுடியாது. ஆனால், தூக்கிப்போட மனமில்லை.

சொல்லப்போனால், எல்லாம் குப்பையே! ஆனாலும், அவரவர் குப்பை அவரவருக்கு முக்கியம்! ஊரில், பெரிய ஹோல்ட் ஆலிலும், ட்ரங்கு பெட்டியிலும் நான் சேமித்து வைத்திருக்கும் குப்பைகள் போலவே!அது ஏன்,  நமது குப்பை நமக்கு பொக்கிஷமாகவும்  அடுத்தவரின் பொக்கிஷங்கள் நமக்கு குப்பையாகவும் தோன்றுகிறது?!

இதையெல்லாம் முடித்து, பாயை எடுத்து தட்டுகிறேன்... அதிலிருந்து சிதறும் குப்பைகளையும் பொறுக்குகிறாள் பப்பு. காலியான பவுடர் டப்பா எதற்கு என்று எடுத்து வைக்கவில்லை. அது அவளது மைக்காம்! ஆமாம், பவுடர் டப்பாவின் கழுத்தில் அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறாள்.  என்ன சொல்வது! 

நமக்கு அல்பமாக தோன்றும் ஒன்று பப்புவின் கண்களில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.  இறுதியாக, தூசியை மட்டும் தட்டிவிட்டு பாயை அலச போடுகிறேன். அதற்குள் , அந்த இடத்தை பெருக்கி வைத்திருக்கிறாள் பப்பு. அப்போதுதான் கவனித்தேன், அந்த அலமாரியில், அவளது ஹேர்பேன்டுகளையும், பின்களையும் வைக்கவில்லை என்பதையும் அதில் வைக்க அங்கு  இடமேயில்லை என்பதையும்!

Thursday, March 06, 2014

வடக்கு பக்கம் தெற்கு


 காலையில், பள்ளிக்கூட பையை எடுத்து மாட்டும் போதுதான் கவனித்தேன். பையின் ஜிப்பிலிருந்து, ஒரு கீ செயின் ஆடிக்கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் காம்பஸ்.

"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?"  - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' ‍-  மைண்ட்வாய்ஸ்)

" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு

"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?"   நாந்தான். (இந்த இடத்துலே டவுட் வரணுமே!)  ;‍)

"இல்லப்பா,  நான் நார்த் சவுத் பார்த்துக்கிறதுக்கு" - பப்பு

"அதுக்கு எதுக்கு, இது இப்போ?..எடுத்து வை..நாம ஊருக்கு எங்கியாவது போகும்போது எடுத்துக்கிட்டு போலாம். சொன்னா கேளு" - மீ

"இல்லப்பா, நான் எங்கே இருக்கேன், எந்த டிரக்ஷன்லே போறேன்னு பார்த்துக்கிறதுப்பா..ஸ்கூல்ல எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல‌" - பப்பு

"நீயே யோசிச்சிக்கோ! இது கண்டிப்பா ஸ்கூலுக்கு வேணுமான்னு! ஸ்கூல் போற வரைக்கும் உனக்கு டைம்" -
என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டேன்.

 மாஸ்டர் காம்பஸை ஏன் கேட்டார்? அதான், எப்படியும் ஸ்கூல் போற வரைக்கும் டைம் இருக்கே!

"சரி, ஸ்கூல் வந்ததும் காம்பஸை எடுத்து குடுத்துடு, வீட்டுல பத்திரமா வைக்கிறேன். காம்பஸ் கிடைக்காம எங்கெல்லாம் தேடினோம்...கஷ்டப்பட்டு வாங்கினதுதானே!" - மீ

"இல்லப்பா..மாஸ்டர் நார்த் எதுன்னு கேட்டா எனக்கு தெரியலை...அதான்.." பப்பு

ஓ!! அதுதானா விஷயம்!..ம்ம்...அதுக்கு காம்பஸ்!

"என்னது...உனக்கு தெரியாதா? நீதான் படிச்சிருக்கே இல்ல...மறந்துட்டியா? சொல்லு...சூரியனை பார்த்து நில்" - மீ

"எனக்கு தெரியும்...எங்க ஸ்கூல்ல இருக்கு"  - பப்பு

"ம்ம்..சொல்லு" - மீ

"சூரியனை பார்த்து நில்...உன் இரண்டு கையையும் இரண்டு பக்கம் நீட்டு" - பப்பு

"ம்ம்.."  - மீ

"உன் இடக்கு பக்கம் வடக்கு..
வடக்கு பக்கம் தெற்கு"  - பப்பு

"ம்ம்?? என்னது?" - அதிர்ச்சியுடன் மீ!

"ம்ம்...தேற்கு?"  - பப்பு (சரியா சொல்றாங்களாம்!)

"ம்ம்ம்ம்?"  - மீ

"வடக்கு பக்கம் தேற்கு?" - பப்பு (கான்ஃபிடன்ட்டாக வந்தது பதில்)

"என்னப்பா சொல்றே?"  - மீ ( 'கன்ட்ரோல் த கோவம்...இப்போ கோவப்பட்டு பிரயோசனம் இல்ல...' - மைண்ட்வாய்ஸ்)

ரொம்ப கஷ்டப்பட்டு, வந்த துக்கத்தை தொண்டைக்குள்ளேயே  அழுத்தி முழுங்கினேன்.

"போப்பா..எனக்கு தமிழ்லே சொல்லவே தெரில... இங்கிலீஷ்லே சொல்லித்தா..அதை"  - பப்பு

"அதை எப்படி இங்கிலீஷ்லே சொல்லுவாங்க...நீதான் புரிஞ்சுக்கணும்.  நார்த்னா என்ன" -  மீ

"அதை ஃபுல்லா எனக்கு இங்கிலீஷ்லே சொல்லு..."  - பப்பு

"சூரியனை பார்த்து நில், உன் இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் நீட்டு..இதெல்லாம் நீயே இங்கிலீஷ்லே சொல்லிக்கோ. ரைட் ஹான்ட் எது? அதுதான் வலது. வலது பக்கம் தெற்கு. லெஃப்ட் ஹாண்ட் தான் இடது. இடது என்ன?   - மீ

"இடக்கு பக்கம் வடக்கு"  - பப்பு (திரும்ப...திரும்ப...)

"இடக்கு இல்ல..இடக்கை பக்கம் வடக்கு"  - மீ

.....

"இதுகூட தெரியலையா உனக்கு? ஏன் மாஸ்டர் கேட்டப்போ சொல்லலை?"  - மீ

"மாஸ்டர் கிளாஸ் ரூம்லே கேட்டாருப்பா..அங்கே எப்படி எனக்கு ஈஸ்ட் வெஸ்ட்ல்லாம் தெரியும்? சூரியனை பார்த்தாதானே தெரியும்"  - பப்பு

ஓ!!

ஒருவழியாக, பள்ளியும் வந்துவிட்டது. வாசலிலியே, காம்பஸை எடுத்து என்னிடம் தருமளவு மனம் மாறிவிட்டாள்.

"இரு, நான் பார்த்துட்டு குடுத்துடறேன்" என்று காம்பஸை எடுத்து நேராக நின்று பார்த்தாள். அது சவுத்வெஸ்ட் என்று காட்டியது.   :‍))

காம்பவுண்டிற்கு, உள்ளே சென்று பார்க்கலாம் என்று அவளது வகுப்பறை இருக்கும் திசையில் நிற்க வைத்து, திசைகளை பார்த்துக்கொண்டோம். நார்த்தை மட்டுமே அவள் கவனித்தாள். மீதி கவனமெல்லாம், குழந்தைகளை விட்டுச்செல்லும் பெற்றோர்கள் இதை கவனிக்கிறார்களா என்றுதான்!  அடக்கமட்டாமல், "இதான் உங்க கிளாஸ்லேருந்து நார்த், இது ஈஸ்ட்" என்று மீதியை நாந்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

உடனே, காம்பஸை தன் கைகளால் பொத்தி என் கைகளில் புதைத்துவிட்டு,

 "சரி சரி...எனக்கு தெரியும்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட்..ஹோம் ஈஸ் த பெஸ்ட்...நீ இப்போ வீட்டுக்கு போ!" என்று சொல்லிவிட்டு படிகளில் ஏறத்துவங்கினாள்!!

Sunday, February 16, 2014

I'll always Love you!

"if I spill some drops of coffee on the floor, would you still love me?"- Pappu

"yes, Pappu! I will love you always!" - Me

"Achi, If I fell from Bed when sleeping, Will you still love me?" - Pappu

"Yes, Pappu, I will love you forever and ever!" - Me

"Achi, If I broke the chair, Will you still love me?" - Pappu

"Yes Pappu, I will love you! " - Me

"Achi, If I take time to bath, Will you still love me?"- Pappu

"grrrrrrrrrrrr" - Meee!

காலங்காத்தாலே, பாத்ரூம்லே இருந்து இந்த ராகம். நான் கூட, சின்ன வயசு புத்தகத்துலே படிச்சதை 'திரும்பி பார்த்திருப்பா'ன்னு நினைச்சு,  நானும்   சேர்ந்து ராகம் போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, கடைசி கேள்விக்கு ஒரு லுக் விட்டதும், அடக்க ஒடுக்கமா குளிக்க போய்ட்டாங்க மேடம்!

பின்குறிப்பு: சோப்பை கரைச்சு கரைச்சு குளிக்கிறதுக்கு கண்டிப்பா அரைமணி நேரமாவது ஆகும்.  அப்போதான் நான் ரொம்ப டென்சனாவேன்னு தெரிஞ்சுக்கிட்டே, எப்படில்லாம் கேள்வி வருது பாருங்க!!


Saturday, February 15, 2014

மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety

ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர் வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம் அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள்.  'ஏன் இவள் எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில் வாசிப்பாளர் புத்தகத்தில்  ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள் பார்த்திருக்கிறாள்.

விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள். அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள் ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள்.   வெளியில் வந்து 'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.

'நம்ம டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.  நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ்  அல்லவா அது வருகிறது!

ஆட்டோவில் பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப் பற்றி கிஞ்சித்தும் பாதிப்படைய‌வில்லை.  'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.

இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள்  செய்த தவறைக் குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக‌ இருக்க‌ வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வேறு ஊரில் இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது. அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால் விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள் கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில் வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.

கார் ஒன்று வேகமாக அந்த பக்கம் செல்கிறது.  'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான் என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள் குமைகிறீர்கள்.  உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.

புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள்.  'அது எக்சிட், இதான் ஆச்சி, என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது'  என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல் தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப்   வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன, 'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.

'என்ன இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.

உங்கள் கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக  பள்ளியில் மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும்   ஒழுக்கத்தை தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர வேண்டும்.', என்று  நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வெளியிலாவது இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும் அட்டகாசங்களை எண்ணி  'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று புலம்புகிறீர்கள்.   பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை, அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

:-)