Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, May 14, 2010

500!!


கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....


And, Life goes on...


...500 இடுகைகளைக் கடந்து!!


எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், இடுகைகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை பார்க்க நேர்ந்தது.


எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்!


சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!


குறிப்பு : பப்புவுக்கு இந்த உடையை அனுப்பிய கோல்டா அக்காவிற்கு நன்றிகள்..
(அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..ஏன்னா, என்னைத்தானே உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் தெரியும், அக்கா! :-) )

Saturday, April 10, 2010

லட்சுமணனின் "ஒடியன்"!


பதிவர் & சமூக ஆர்வலர் 'நாதாரி' லட்சுமணன் அவர்களின் “ஒடியன்” புத்தக வெளியீட்டு விழா நாளை இனிதே நடக்க அன்பும், வாழ்த்துகளும்! :-)

Friday, March 12, 2010

பப்பு டைம்ஸ்

நேற்றிரவு :

"பப்பு, வெண்மதி பர்த்டேவுக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்?"

"ம்ம்..நிஜமான போட் வாங்கிக் கொடுக்கலாம்! "

.....

"அவளுக்கு போட் ரொம்ப பிடிக்கும்.நாம பீச் வாங்கிக் கொடுக்கலாம், ஆச்சி!"

....

"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"


கொர்ர்ர்ர்ர்ர்.....



காலை 6.30.

நான் : இன்னைக்கும் மெய்ட் வரலை. பாத்திரம் எல்லாம் ஸிங்லே இருக்கு!

முகில் : பப்புவுக்கு என்ன லஞ்ச்? சப்பாத்தியா - குட்டி தோசையா?

பப்பு : இன்னைக்கு கராத்தேவா யோகாவா?

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, " that that man, that that worry"-ன்னு!!





இன்று காலை சாப்பிடும் நேரத்தில்,

"வெண்மதிக்கு கார்ட் கொடுக்கலாம், நீயே வரைஞ்சது...வரையலாமா?"

"வெண்மதிக்கு போன் பண்ணிக்கொடு, பேசிட்டு அவளுக்கு என்ன வரையணும்னு கேட்டுட்டு வரையறேன்."- பப்பு

"வெண்மதி தூங்கிக்கிட்டு இருப்பா..நீயே ஏதாவது அவளுக்குப் பிடிச்சது வரை. "

"ஏய், வெண்மதி சின்னது...அவ-கிட்டே கேட்டுட்டுத்தான் வரைஞ்சு கொடுக்கணும்! "

சின்னவங்கன்னா கேக்காம செஞ்சுதானே பழக்கம்!!

போனை செய்தால், வெண்மதி நிஜமாகவே தூங்கிக்கொண்டிருந்தாள்.

பப்புவே சமாதானமாகி, வெண்மதிக்கு பீச் பிடிக்குமென்று பெரிய சுறா, குட்டி மீன்கள், ஜெல்லி ஃபிஷ், ஆமை எல்லாம் வரைந்தாள். ஆனால், அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள்.

வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :

Friday, February 19, 2010

மணநாள் வாழ்த்துகள் மைஃபிரண்ட்!!


இன்று மணவிழா காணும் மணமக்கள் "மை ஃபிரண்ட் அனு & விஜயகுமார்" அவர்களுக்கு வாழ்த்துகள்!!


மை ஃபிரண்ட்-க்காக சிறப்பு கவிதை!


நீயோ மை ஃபிரண்ட்!
நாங்கள் உன் ஃப்ரண்ட்!!
நினைச்சு பார்த்தா
எல்லோரும் ஃபிரண்ட்!!!
வாழ்த்துகிறோம்
வாழ்க்கை எப்போதும்

உன்
பெஸ்ட் ஃபிரண்ட்!!!!

Wednesday, December 30, 2009

ப்ராக்ரஸ் ரிப்போர்ட் - 2009

வந்துவிட்டது புத்தாண்டு!

2010 - 365 நாட்களுடன் எழுதப்படாத பக்கங்களுடன் டைரியாக எனக்கு எதிரில் இருக்கிறது, பதிவுப்பக்கங்களாகவும்தான்! அடுத்த டிசம்பரில் மகிழ்ச்சியுடன் எடுத்து வாசிக்கத் தக்கதாக இருக்கும் என்ற நம்புகிறேன். தங்களுக்கும் இதனை வாழ்த்தாக்குகிறேன்!

2009 - ஸ்விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...வேகமாக கடந்தது 2008-ஐ போலவே!
கொஞ்சம் மகி்ழ்ச்சி, கொஞ்சம் வெற்றி,கொஞ்சம் தோல்வி,கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் அதிருப்தி - என்று எல்லாமே கடந்த வருடத்தைப்போலவே, ஒன்றைத் தவிர - வாழ்ந்தநாளில் ஒரு ஆண்டு கூடியிருக்கிறது!

2009, பப்பு குழந்தையிலிருந்து (குழந்தைச்)சிறுமியாக வளர்ந்ததைக் கண்டது. ஒரு முழு கல்வியாண்டைக் கடந்து வரச் செய்தது. முழுநேர பாதுகாப்பாளரிலிருந்து பகுதிநேர பாதுகாப்பாளருக்கான அவசியத்தைத் தந்தது. பப்புவும், நானும் பதிவர் சந்திப்புகளை கண்டோம். பதிவுகளைத் தாண்டியும் நட்பு பாராட்டப் பெற்றோம். எங்களைத் தொடர்ந்தும் வாசித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தும் தங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்! எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கைநாதனை மீட்டுக்கொடுத்த தங்கள் அன்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2009 - இவையெல்லாம் இருந்தாலும் ஏதோவொன்று என்னில் குறைகிறது! மனம் பின்னோக்கியே செல்கிறது. மனதில் வடுவாக பதிந்த வருடமாக போனது. ஆறாத ரணமாக, கலைந்த கனவாக, காற்றில் அழிந்த மேகமாக! எத்தனை எத்தனை பேரின் தியாகங்களையும், கனவுகளையும், ரத்தத்தையும் துடைத்தெறிந்துவிட்டு
ஒன்றுமில்லாதது போல தோற்றம் கொடுக்கிறது! உண்ணாவிரத மேடையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கிக் உயிர்நீத்த அந்த இளைஞனின் முகம், என் ஒன்பது வயதில் வீடியோ கேசட்டில் பார்த்த அந்த முகம் இன்னமும் மனதில் தேங்கி கிடக்கிறது! அவரிலிருந்து முத்துக்குமரன் வரை...இன்னும் எண்ணற்ற பேரின் தியாகங்கள் அவர்களின் உன்னத நோக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாம் போய் முள்வேலியில் முடங்கிக்கிடக்கிறது!

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு!

Thursday, December 24, 2009

Joy to the world...

நாங்கள் ஹவுசிங் போர்டு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அந்த வேப்பமரம் மஞ்சள் பூசிக்கொண்டது. கொஞ்ச நாளில் கூரை வேய்ந்து உண்டியல் வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சுவர் எழுப்பப்பட்டு பளிங்குக்கற்கள் போடப்பட்டது. அதன் முக்கிய தூண்களில் சுகர்மில் தாத்தாவும் ஒருவர்.

ஆயா மற்றும் காந்தா அத்தையின், ”நல்ல பிள்ளைக்கு லட்சணம்” மற்றும் “காலையில் எழுந்தால் நல்லது” மந்திரங்கள் காரணத்தால் ஒரு மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் காலை நேர பூஜைக்கு செல்ல பணிக்கப்பட்டேன். அதாவது சுகர்மில் தாத்தாவோடு சேர்ந்து திருப்பாவை பாடவும் வேண்டும்.
அவர் பாட... நான் படிக்க... இரண்டு நாட்கள் சென்றது.

” அவ்ளோ பால் ஏன் அபிஷேகத்திலே வேஸ்ட் பண்றாங்க? யாராவது ஏழை பசங்களுக்கு கொடுக்கலாம் இல்ல” - அன்றிரவு சாப்பிடும் நேரத்தில் பெரிம்மாவிடம் கேட்டேன்.

உண்மை பத்திரிக்கையும், கடவுள்கள் தோன்றியது பற்றிய தி.க புத்தகங்கள் வீட்டில் நிறைய உண்டு. மேலும், வீட்டில் ஒரு சாமி படம் கூட இருந்ததில்லை. அதனால், பெரிதாக சாமி மீதெல்லாம் அபிமானங்கள் இருந்ததில்லை. பெரிம்மாவுக்கும்தான். எங்கள் வாழ்க்கைமுறை எந்த மதத்தையும் சார்ந்து சுழன்றது இல்லை.

'அவர்கள் நம்பிக்கையை சார்ந்தது அதெ'ன்கிற ரீதியில் பெரிம்மா பதிலளித்தார். அதற்குப்பின் அந்தக்கோயிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாமல் போயிற்று.

கிறிஸ்மஸ் என்பது எனக்கு ஹேனா டீச்சர் வீட்டிலிருந்து வரும் அச்சு முறுக்கு, சுழியம் மற்றும் ப்ளம் கேக் போன்ற நினைவுகளோடு பிணைந்தது. இன்றைக்கு எத்தனை வீடுகளில் ஸ்டார்களைப் பார்த்தோம் என்ற எண்ணிக்கை விளையாட்டோடும், பக்கத்து வீடுகளில் இருக்கும் கிறிஸ்மஸ் மரத்தை, அதில் தொங்குகின்ற நூதனமாக பொருட்களைப் பற்றிய பேச்சோடு மட்டுமே பரிச்சயம்.

பெரியப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்தபோது அவரது நண்பரொருவர் வீட்டு முகவரிக்கு ”இயேசு அழைக்கிறார்” புத்தகத்திற்கு ஒரு வருட சந்தா கட்டியிருந்தார். வீட்டில் அதை சீண்டுவாரில்லை என்னைத் தவிர! இயேசுவின் அற்புதங்களை நான் வாசிப்பதைப் பார்த்து எல்லோரது கிண்டல் வேறு. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால்', ‘இயேசு உங்களை நேசிக்கிறார்', ‘உங்களுக்காக மரித்தேன்' போன்ற பரிச்சயமான, இதயத்திற்கு இதமான வார்த்தைகள் அந்த சந்தாவோடு முடிந்தது.

இளங்கலையிலேயே தமிழ்செல்வியை அறிந்திருந்தாலும் மிகவும் பழக்கமானது முதுகலையில்தான். எனது ரூம்மேட். எது அவளை மாற்றியதென்று தெரியவில்லை, ஒரு செமஸ்டர் லீவிற்குப் பிறகு வந்து சொன்னாள், “நான் கன்வெர்ட் ஆகிட்டேன்”. எனக்கு அது புதிதாக இருந்தது. நான் இன்ன மதம் என்று வரித்துக்கொள்ளாத போதும் ”எதுக்கு தமிழ்செல்வி இப்போ மாறனும்” என்று தான் தோன்றியது. எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் எனக்குள் நான் இந்து என்ற உணர்வு என்னையறியாமல் இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்செல்வி காலையில் எழுந்து பைபிள் வாசிக்கத் தொடங்கினாள். நாங்கள் காஃபி குடித்து அரட்டை அடிக்கும் சாயங்கால வேளைகளில் முக்காடிட்டு பிரார்த்தித்தாள். மொட்டைமாடியில் இன்னும் சிலருடன் சேர்ந்து பாட்டு பாடினாள்.

அவள், கடவுளுடன் நெருக்கமாக நெருக்கமாக மற்றவர்களுக்கும் அவளுக்குமிடையே இடைவெளி விழுந்தது. பின்னால் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். நானும் கல்பனாவும், சாப்பிடுவதற்கு, வேனுக்குச் செல்வதற்கு, கம்பைன் ஸ்டடிக்கு தமிழ்செல்வியை சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தோம். அப்படித்தான் தமிழ்செல்வி எனக்கு உற்ற தோழியானாள். அப்படியே தமிழ்செல்வியுடனான எனது கேள்விகளும் தொடர்ந்தது. ஆனால், தமிழ்செல்வி விவாதம் செய்ய விரும்பவில்லை. “ஜீசஸ் தான் உண்மையான கடவுள், அவர் பிறந்ததை வைச்சுதான் ஏடி, பிசி யே இருக்கு” என்றும் “ஒரு கடவுள்தான் இருக்க முடியும், அது ஜீசஸ்தான், பைபிள்லே ஜீசஸ் வரைக்கும் பிறந்தவங்க ஹிஸ்டரி எல்லாம் இருக்கு, அதுதான் உண்மை” என்றும் இன்னும் சில உண்மைகளை சொன்னாள். எல்லாவற்றுக்குமேலாக, ஜீசஸ் அவளுக்கு மன ஆறுதலை தருவதாகவும், பாவமன்னிப்பு கிடைத்ததாகவும், அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டாள். ஆனாலும் எனக்குள் கேள்விகள்..கேள்விகள்.. பாவம் என்றால் என்ன..எது செய்தாலும் பாவமா..அதுக்கு நீ ஏன் மாறணும்...

மேலும், தமிழ்செல்விக்கு என்ன மன ஆறுதல் வேண்டியிருக்குமென்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவளது ஊர் ராமேஸ்வரம். ஊரிலே அவரது அப்பா நல்ல செல்வந்தர். அவளுக்கு அடுத்து இரண்டு தங்கைகள். இருவருமே கொடைக்கானலில் கான்வெண்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தனர். ஊருக்கு அழைத்துச் செல்ல அவளது அப்பா காரில் வருவார். எல்லாவற்றிற்கும், அவளது வீட்டில் ஆள் இருந்தது. அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை என்று புதிராக இருந்தது.

அந்த சமயத்தில்தான் செமஸ்டர் பரிட்சைகள் வந்தது. 'ரெண்டு வேல்யூவேஷன், ஃபர்ஸ்ட் நம்ம யுனிவர்சிடி, அப்புறம் மெட்ராஸ் யுனிவர்சிடி ' என்று வதந்திகள் கிளம்பியிருந்தன. பேராசியர் பிரச்சினைகளால பாடங்கள் அறைகுறையாகவே நடத்தப்பட்டிருந்தன. சீனியர்கள் உதவியுடன் தத்தித்தத்தி படித்துக்கொண்டிருந்தோம். ஸ்டடி ஹாலிடேஸின்போது எப்படி அந்த வேளை வந்ததென்று தெரியவில்லை. தமிழ்செல்வியிடம் எல்லோரும் அவர்களுக்காக ப்ரேயர் செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அவளும், நாம் எல்லோருமே சேர்ந்து ப்ரேயர் பண்ணலாமென்று சொல்லி, அன்று எங்கள் ஹாஸ்டலில் பதினைந்து பேர் ப்ரேயர் செய்தனர். அதில் நானும் கல்பனாவும் இருந்தோம். பரீட்சைமுடிவில் நல்ல மதிப்பெண்களே வந்திருந்தன.

அதன்பிறகும், அவளைநோக்கி நமுட்டு சிரிப்பும், கிண்டல்களும் தொடரத்தான் செய்தன. அடுத்த விடுமுறைக்கு தமிழ்செல்வி கல்பனாவையும், என்னையும் அவளது வீட்டிற்கு அழைத்திருந்தாள். சுற்றிப் பார்க்க டிரைவருடன் ஒரு கார், இரவில் டெக்கில் போட்டுப் பார்க்க சினிமா கேசட்டுகள் (ஹூம்...தமிழ்செல்விதான் சினிமா பார்க்க மாட்டாளே!!) என்று அவளது குடும்பத்தினர் ஒரு நிமிடம் விடாமல் கவனித்துக்கொண்டனர். இறால் பண்ணை, சினிமா தியேட்டர், இறால் ஏற்றுமதி என்று அவளது அப்பாவிற்கு பல பிசினஸ்கள் இருந்தன. எது வேண்டுமென்றாலும் சொன்னால் போதும். டிரைவர் வாங்கி வந்து தருவார். நாங்கள் எதுவும் செய்ய வேண்டியிருக்கவில்லை. அவளது அப்பா எங்களை வெளியிலே நடக்கவே விடவில்லை.

ஒருவேளை, தமிழ்செல்விக்கு அந்த இறுக்கங்களிலிருந்து விடுபட ஒரு இதம் தேவையாயிருந்திருக்குமாயிருக்கும். தன்னம்பிக்கையளிக்கக் கூடிய ஒருவர், எளிய வாழ்க்கையை வாழ அவள் பின்பற்றக்கூடிய ஒருவர், 'உன் வாழ்வை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்” என்று பாதுகாப்பளிக்கக்கூடிய ஒருவர் தமிழ்செல்விக்கு தேவைப்பட்டிருக்கிறார்.

அவர், தமிழ்செல்விக்கு ஜீசஸாக இருந்திருக்கிறார்!

எல்லாவற்றுக்கும் மேல், இது தமிழ்செல்வியின் நம்பிக்கை சார்ந்த விஷயமுங்கூட!

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

Edited to Add : இங்கு நான் சொல்ல வந்திருப்பது மதம் மாற்றத்தைவிட மனம் மாற்றத்தையே. அந்த மனமாற்றம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதெனில் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

Saturday, November 14, 2009

Monday, September 21, 2009

Thursday, May 14, 2009

பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!




அடிக்கடி அமித்து அப்டேட்ஸ்
ரசித்து சிரிக்க அனுபவம் பேசுது படைப்புகள்
வாழ்வின் உன்னதத்தை உணர வைக்கும் கவிதைக் கணங்கள்
அவ்வப்போது மனசைப் பிழியும் பதிவுகள்
விமர்சனம் செய்ய இன்னும் பல புத்தகங்கள்- என்று
மற்றுமோர் சுவாரசியமான ஆண்டை
”மழை”யாய் பொழியும் அமித்து அம்மாவிற்கு
வாழ்த்துகிறோம்!!



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!

Sunday, May 10, 2009

அன்னையர் தின வாழ்த்துகள்



பதிவுலகில் இருக்கு அனைத்து அன்னையருக்கும்
தாய்மையை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!!


அம்மாக்களின் பகிர்வுகளில் எனது அன்னையர் தின இடுகை!!

(image courtesy - Google)

Saturday, February 14, 2009

Happy V-day!!

தூங்கும் முன் வழக்கமாய் பப்பு சொல்லும் வசனம்தான்..

ஆச்சி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!!

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் பப்பு!!

ஏன் என்னை பிடிக்கும்? (அவளுக்கும் இருக்கும் 'ஏன்' டீமான் இது!!)

நீதான் என் பப்பு....குட்டிப் பாப்பா!


வெண்மதி பிடிக்காது? ஆகாஷ் பிடிக்காது..list goes on...

ம்ம்..பிடிக்குமே..எல்லாரையும் பிடிக்கும்..உங்க ஸ்கூல்ல, இந்த ஊர்ல இருக்கற எல்லா பாப்பாவையும் பிடிக்கும்!!

அவள் என்ன நினைத்து அப்படி கேட்பாளெனத் தெரியாது..எதைச் சொன்னாலும் தொக்கி நிற்கும் ஏன் என்ற ஒரு கேள்வி..முடிவிலா கேள்விகள்!! அப்படிதான் இந்தக் கேள்வியும்! ஆனால், எனக்குள் யோசனையைத் தூண்டும் கேள்வி! ஏன் என் நேசம் பப்புவோடு மட்டுமே நிற்க வேண்டும்..எல்லா குட்டிப் பாப்பாக்களுக்கும் எனது அன்பு!!




முடிவாக, V-day என்பது அன்பைச் சொல்லும் நாளெனில், இதோ, எனது சின்னஞ்சிறிய ஆர்டிஸ்ட் உங்களை புன்னகையோடு வாழ்த்துகிறாள்...பப்பு @ சித்திரக்கூடத்தை தொடரும், தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் அனைவரையும்!!

Tuesday, January 27, 2009

பட்டாம்பூச்சி - பப்புவிடமிருந்து!

குடுகுடுப்பையாரின் புதிய வண்ணத்துப் பூச்சியைத் தொடர்ந்து...!



இது பப்பு செய்த பட்டர்பிளை, சாக்லேட் காகிதத்திலிருந்து. இரண்டு முறை செய்துக் காட்டியபிறகு, அதைத் தொடர்ந்து இதை செய்தாள். முதல் முறை கீழ்பாகம் மேலே வந்திருந்தது,மடிப்புகளில்லாமல். திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

இந்த பட்டர்பிளை விருது பப்புவிடமிருந்து பறந்துச் செல்கிறது நன்றிகளுடன், பப்பு @ சித்திரக்கூடத்தை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்! உங்கள் அனைவரது ஆசிகளும், வாழ்த்துகளும், ஊக்கமும் பப்புவை என்றும் சூழ்ந்திருக்கும்!

Special Thanks to her friends who made an effort to visit her over the weekend!!
எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், "பார்வைகள்" கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர். உங்களது பரிசுகளும், அன்பும், உங்களுடன் தனது உலகத்தை பகிர்ந்துக் கொண்டதிலும் பப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி! அவள், உங்களிருவரையும் தனது நண்பர்கள் என்றுதான் அடையாளப் படுத்துகிறாள். அவளோடு பொறுமையாய், அவளுக்குச் சமமாய், பேசி, பேச்சைக் கேட்டதற்கு நன்றிகள் பல!!

Tuesday, December 30, 2008

ஒரு வருடக் கடைசியில்...

பதிவுகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்...இதுவே ஒரு சாதனைதான் என்னைப் பொறுத்தவரையில்!! :-)

2008 - தமிழ்மண நட்சத்திரமாகவும், வலைச்சர ஆசிரியராகவும் மட்டுமன்றி பல நண்பர்களையும், புதிய வலைப்பூக்களையும் சந்திக்க முடிந்தது! எனது முதல் Tag அளித்த காட்டாறுக்கும், என் பதிவுகளை வாசிக்கும், வாசித்து பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துகள்! என்னை தொடரும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்!

2008- பப்பு பள்ளி செல்வதையும் பள்ளி சூழலுக்கு செட்டிலானதையும் கண்டது. பப்பு புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாள்,பல விஷயங்களை கற்பித்தாள், எங்களுக்கு!

2008- எனக்கும் முகிலுக்கும் நிறைய தெளிவுகளை, குடும்பத்தின் அவசியத்தை, வாழ்க்கை பற்றிய புரிதல்களை தந்தது!திடநம்பிக்கையை, மன வலிமையை சற்றே அசைத்துப் பார்த்தது! எனக்குள் இருந்த எனது இன்னொரு பரிணாமத்தை அடையாளம் காட்டியது! சூழ்நிலைகள் எவ்வாறாயினும், தாங்கிடும் திடன் கொடுத்த கடவுளுக்கு நன்றி! முடிவாக, காலத்தைப் பார்த்து சூளுரைக்க முடிந்தது, "Tough times Never last, But tough people do!" Finally I have learnt the art of letting go things!

இதை தட்டச்சுக்கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது பின்னோக்கி பார்க்கையில், எனக்கு ஆதரவளிக்க ஒரு அன்பான குடும்பமும், ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!


(படம்: நன்றி-கூகுள் உபயம்.)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009!!

Saturday, December 13, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : ராப்




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராப்!

ராப் எனக்கு எப்படி அறிமுகமானது பாப் பாடல்கள் பற்றின என்னோட பதிவுகள்னுதான் நினைக்கிறேன்! ராப்-இன் ஃபேவரிட் பாடல் எனக்குத் தெரியாததனால், என்னோட ஃபேவரி பேண்ட் Bombay Vikings-இன் சூப்பர் டூப்பர் பாடல், நாளை பிறந்த்நாள் கொண்டாடும் ராப்பிற்காக!!

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, October 29, 2008

நன்றிகள்


நினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி!
அழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,
மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

Tuesday, October 28, 2008

பிறந்த நாள் கலாட்டா!

பப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,

1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்

ஒரு விளையாட்டு:

பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.




பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)


லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!

இரண்டு ஆல்பங்கள்

”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!


இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.


மூன்று கொண்டாட்டங்கள்

மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)


ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை

ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!




ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(


விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!

கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!


பள்ளி :

28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).


வீடு:



உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!


பப்பு,


உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!

பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!

சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!

வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!

இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!


அம்மா!

Thursday, September 11, 2008

வாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புதுகைத் தென்றலுக்கு!!




புதிய அனுபவங்களை பதிவுகளாக்கிட
சமையல் குறிப்புகளை பகிர்ந்திட
இதோ இன்னுமொரு வருடம்....
இனிதாய் பிறக்கட்டும்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

(ஏதோ கவிதை மாதிரி டிரை பண்ணியிருக்கேன்.....!!)