Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Saturday, February 15, 2014

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, அக்பர்க்கு தலைல கட்டிட்டு போனேன் இல்ல.... அந்த ஷாலை கேட்டாருப்பா மாஸ்டர்" என்று கடந்த சில நாட்களாக ஒரே "ஆத்தா வையும்...." டயலாக்.

ஷாலை எல்லாம் எடுத்து வைத்தபின், 'ஆனுவல் டேவுக்கும் அந்த ஷாலுக்கு என்னப்பா சம்பந்தம்' என்று திடீரென்று மூளையில் பல்பு எரிந்ததும், 'ஓகே, இன்னைக்கு மாஸ்டர்கிட்டே  நானும் கேட்டுக்கறேன். நாளைக்கு எடுத்துக்கிட்டு போ" என்று சமாதானக்கொடியை காட்டினேன்.

மாஸ்டர்கிட்டே கேட்டா, "இல்லையே,அதெல்லாம் வேணாம். செப்பல்தான் கொஞ்சம் டிசைனா இருக்கிற மாதிரி கேட்டிருந்தேன். ஷால் எல்லாம் வேணாம். " என்றவர், சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ,"ஒருவேளை அவங்களுக்கு தலையில அதை கட்டிக்கிட்டா அழகா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க. அவங்களுக்கு அப்படி ஆசையா இருந்திருக்கும்" என்று ஸ்டூடன்டுக்கு வக்காலத்து வேறு!! :-)

இதையே, எங்க ஸ்கூலில் நான் செய்திருந்தால்  ‍ டீச்சரிடமும்/வீட்டிலும் என்று இரண்டு பக்கமும் செமையா வாங்கி கட்டியிருந்திருப்பேன், "பொய் சொல்றியா?சொல்லாததை சொல்றியா" என்று!
ஹ்ம்ம்ம்!

"மாஸ்டர், அவ கொஞ்சம் பொறுமையா வரைஞ்சா நல்லாருக்கும்." என்று பப்புவின் 'பார்ட்ஸ் ஆஃப் த‌ ஹென்னை' குறிப்பிட்டு, சிலநாட்கள் முன்பு சொன்னபோது, "குழந்தைங்கதானே, இப்போதானே கத்துக்கறாங்க. பார்க்க ஹென் மாதிரி வரைஞ்சா போதும்" என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்டர்தான் இவர்!  :-)  (அப்போது,  அவள் வரைந்திருந்த  ஹென் சிட்டுக்குருவி மாதிரியே இருந்தது.)

இந்த இடத்தில் மரியா மான்டிசோரிக்கு நன்றி சொல்லலைன்னா என் மனசாட்சி என்னையே மன்னிக்காது! #நல்ல_டீச்சர்_நல்ல_ஸ்டூடன்ட்  #ThanksToMariaMontessori

 

தூங்கும் நேரத்தில் ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தோம்.சாப்பிட்ட ஆம்பூர் பிரியாணி, பொங்கல்,சாய்பாய் இன்னபிற. சாய்பாய் என்றால் என்ன என்று  எனக்கு புரியாததால் கண்டுக்கொள்ளவில்லை.

திடீரென்று, "நான் ஏன் கேர்லா பொறந்தேன்னு இருக்கு.அதுவும், ஏன் இப்போ போய் பொறந்தேன்னு இருக்கு. நான் இப்போ கேர்லாவே பொறந்துருக்கவே கூடாது" என்று பப்பு சொன்னதும் பகீர்ன்னு ஆகிவிட்டது.சீரியாசாக வேறு சொன்னாள்.  சொல்லும்போது குரல் வேறு தழுதழுத்தது. அதோடு, லேசாக கண்ணீரும்! கேட்கும் போது எப்படி இருக்கும்??

'என்னடா நடந்தது, நல்லாதானே போய்க்கிட்டிருக்கு, இவ்ளோ கவலைபடற மாதிரி என்ன ஆகிடுச்சு ' என்றும் குழப்பம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள எப்படி  நைச்சியமாக கேட்பது? மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கேப் விட்டாலே அவளே தொடர்ந்து சொல்லுவாள்.

"நான் பாயா பொறந்து இருக்கலாம். அதுவும் ஔரங்க்சீப் சிவாஜி காலத்துலே நான் வீர சிவாஜியா பொறந்து இருக்கனும். எப்படி இருந்திருப்பேன் நான்?"

அவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை விடுங்கள்! நான் எப்படி இருந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!

(இப்போ பொறந்ததுதான் சூப்பர்ன்னு சமாதானப்படுத்த, கொஞ்சம் மார்ஸுக்கு போன மங்கள்யான்,  கொஞ்சம் கேன்டிக்ரஷ், கம்ப்யூட்டர் இன்டர்நெட், பஃப்ஸ் என்று பேல்பூரி கிண்டினேன். கூட சேர்ந்து, அவளும் சப்புவது போல பாவனை காட்டினாள். ஐஸ்க்ரீமாம்!ஸப்பாஆஆஆ!)

 "ஐஸ்க்ரீம் கிடைச்சிருக்காது இல்ல!" என்று குரல் தெளிவாக ஒலித்ததும் கேட்டேன், "சாய்பாய்னா என்ன? " வீர சிவாஜியோட வைஃப் ஆம்!

#வீர_சிவாஜி_நான்_ஆனேன்_பஜ்ஜி! ;‍)

மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety

ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர் வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம் அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள்.  'ஏன் இவள் எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில் வாசிப்பாளர் புத்தகத்தில்  ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள் பார்த்திருக்கிறாள்.

விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள். அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள் ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள்.   வெளியில் வந்து 'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.

'நம்ம டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.  நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ்  அல்லவா அது வருகிறது!

ஆட்டோவில் பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப் பற்றி கிஞ்சித்தும் பாதிப்படைய‌வில்லை.  'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.

இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள்  செய்த தவறைக் குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக‌ இருக்க‌ வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வேறு ஊரில் இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது. அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால் விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள் கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில் வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.

கார் ஒன்று வேகமாக அந்த பக்கம் செல்கிறது.  'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான் என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள் குமைகிறீர்கள்.  உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.

புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள்.  'அது எக்சிட், இதான் ஆச்சி, என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது'  என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல் தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப்   வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன, 'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.

'என்ன இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.

உங்கள் கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக  பள்ளியில் மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும்   ஒழுக்கத்தை தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர வேண்டும்.', என்று  நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வெளியிலாவது இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும் அட்டகாசங்களை எண்ணி  'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று புலம்புகிறீர்கள்.   பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை, அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

:-)

Sunday, June 16, 2013

கூல்..கூல்..ஸ்கூல்!

நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே!

வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.

மாலா! 

பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக  குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை,  அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)

பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ  செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.

மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை  பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி க‌த்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.

மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில்  சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை,  அவர்கள்  இடையில் வந்து சேர்ந்தவர்கள். 

ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.

நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள்.  அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும்  சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.

அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும்  சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக  பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும்  சொன்னார்கள்.  அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.

ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது.  அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.

லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.

'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.

"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.

மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.


அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.

திரும்பி வரும்போது, பப்புவிடம்,

"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.

"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு

" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"

"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா  குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."

அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!

Thursday, June 13, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, வளைஞ்சி வளைஞ்சி போகாதே!" ‍-  பப்பு

டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன்.

"ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" - மீ

"இல்ல...வளைஞ்சு வளைஞ்சு போகாதே!" - பப்பு

"வளைஞ்சு போனா என்ன?" -  மீ

"வளைஞ்சு போனா குட் மேனர்ஸ் கிடையாது." - பப்பு


"..?!!.."

" நீ இப்ப க்யூல இருக்க. யாராவது வந்து உனக்கு முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்? குட் மேனர்ஸா அது? அது மாதிரிதான், பைக் பின்னாடி நாம இருந்தா, அது போனதுக்கு அப்புறமாதான் நீ போகணும். நீ வளைஞ்சு போனா அவங்களுக்கு எப்படி இருக்கும்?!" - பப்பு

"........" (அவங்களுக்கு எப்படி இருக்குமா?....நமக்கு லேட் ஆகிடும்.. மகளே!!அவ்வ்வ்  - மைன்ட் வாய்ஸ்!)

"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு

நான் ஏன் வாயை திறக்கறேன்?!!

போன வருசமெல்லாம், திடீர் திடீர்னு சில பைக் நம்பர்களை கொடுத்து போலீஸ்கிட்ட சொல்லு, சொல்லுன்னு ஒரே அட்டகாசம்.என்னன்னா, அவங்க எல்லாம், பைக்லே ஹெல்மெட் போடாம போனவங்களாம்.  காலையில பார்த்ததை மனப்பாடம் பண்ணி சாயங்காலம் நான் ஆஃபீஸ்லேருந்து வந்ததும் இந்த பஞ்சாயத்து நடக்கும்! இந்த வருசம் இப்படி ஆரம்பிச்சிருக்கு!!

ஆம், பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது!

மாலையில், வீட்டுக்குச் சென்றதும் பப்புவிடம் 'எப்படி இருந்துச்சு ஃப்ர்ஸ்ட் டே?" என்றேன். வழக்கமாக சில சோகங்கள் இருக்கும். பழைய நண்பர்கள் பள்ளி மாறிச் சென்றிருப்பார்கள். ஆன்ட்டியும் மாறி இருப்பார்.  ஆயாம்மாவும் வராமல் போயிருப்பார். இப்படி, ஏதாவது ஒன்று இருக்கும். இந்த முறையும் அப்படி சில நண்பர்கள் பள்ளிக்கூடம் மாறிச் சென்றிருக்கிறார்கள். இப்போ எனக்கு, '16 ப்ஃரெண்ட்ஸ்தான்' என்றாள், சிரித்தபடி. ஹப்பாடா!!

"அப்புறம், ஆன்ட்டி என்ன சொன்னாங்க உங்களுக்கு? , பிரேயர்லே" என்றேன்.

"நான் ஒரு நியூஸ் சொன்னேன் இல்ல...அதைதான் இவங்களுக்கு  ஆன்ட்டி இன்னைக்கு சொல்லியிருக்காங்க. அதாம்மா, ஒரு பொண்ணு, +2 படிக்கிற பொண்ணு, டீவி பார்த்துக்கிட்டே  இருந்திருக்கு. அவங்க அம்மா அப்போதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து ஹால்ல வைச்சிருக்காங்க. அது டீவி பார்த்துக்கிட்டே பெப்சிபாட்டிலை திறந்து குடிச்சிடுச்சுன்னு சொன்னேன் இல்ல"  என்றார் பெரிம்மா.

அது  பாட்டிலில் பெப்சி இல்லை. அதில் இருந்தது ஆசிட். அந்த பெண்ணை இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டாள். :- ( பெரிம்மா சொல்லி இந்த செய்தியை கேட்டிருந்தேன். அதைதான் ஆன்ட்டியும், அவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார். என்ன அறிவுரை கூறியிருப்பார்? "டீவி பார்த்துக்கிட்டே சாப்பிடாதீங்க, அப்புறம் நீங்க என்ன சாப்பிடறீங்கன்னே தெரியாது." என்றுதானே சொல்லியிருப்பார்!

ஆன்ட்டி சொன்னதாக பப்பு சொன்னதை கேட்டு பெரிம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். இருக்காதா பின்னே?!

"அந்த அக்கா மாதிரி கம்ப்யூட்டர்(!) பார்த்துகிட்டு நீங்களே சாப்பிடாதீங்க. நீங்க கம்ப்யூட்டர் பார்க்கும் போது, வீட்டுல யார் இருக்காங்களோ அவங்களை ஊட்டி விட சொல்லுங்க.  நீங்களே சாப்பிடக்கூடாது. அப்பதான்,  தப்பு நடக்காது!!" ‍ அப்படின்னு ஆன்ட்டி சொன்னாராம்.

அவ்வ்வ்வ்வ்!!

ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :-)


Saturday, April 27, 2013

ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??

பப்புவின் பள்ளியில், விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப்பாடம் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடத்திலும், தேதிவாரியாக ஒருநாளுக்கு ஒரு பக்கம் வீதம், குறைந்தது இரண்டுவாரங்களுக்கு. இதற்கு சில பெற்றோர்கள் வந்து சண்டை போடுவார்கள். 'விடுமுறை என்பது குழந்தைகள் விளையாடுவதற்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்குமே. அப்போது கூட ஹோம்ஒர்க் செய்யவேண்டுமா' என்பது மாதிரி. அவர்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும்,  ஹோம் ஒர்க் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவாவது உதவுமே!

அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய  குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து  கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.

அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number  யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 ‍- 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க  வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க  வேண்டும்.

"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"

அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.

"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு

(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :‍-))

Saturday, April 20, 2013

குழந்தைகளைத் துரத்தும் கேள்விகள்

மதியம், பப்புவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.

"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "


தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது.  அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட‌ வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :‍-))

"என்ன ஹர்ட் பண்ணான்?"

"he is asking me 'you are rich or poor?'"

ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம்.  இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!


it will hurt me right? he do not know that word hurts me.

.....(அவ்வ்வ்வ்)


"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?"  ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."

அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.


"அன்னைக்கு, you are muslim or christian?  ந்னு கேக்கறான். that also will hurt me rite?"


'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :‍)' #மைன்ட்வாய்ஸ்

பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள்.  'எதுவுமில்லை' என்றால்,  'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.


மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ்  வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை ‍ அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது!   ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்

"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"


"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல‌!!

Tuesday, March 19, 2013

ஆத்தா நான் பாசாயிட்டேன்!

மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் போதும். சின்ன வயதில்தான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன் என்றால், இப்போதும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நான் எதிர்கொள்ளும் "எக்ஸாம் எப்போ" அல்லது "எக்சாம் முடிஞ்சுடுச்சா" என்ற கேள்விதான். பப்புவின் பள்ளியில் தேர்வுகளே கிடையாது. பெரும்பாலான  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அப்படி தெரியவில்லை. (போன‌ ஜெனரேஷனுக்குஎக்சாம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ?!)

முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை  "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல.  சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்..  உடனே, "ஆச்சி, அது  டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)

இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)

அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.

'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல‌ ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....


"நீ என்னை கேளு"


"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"


"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"


......


"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"


Wednesday, October 19, 2011

பப்புவும் ஜெயலலிதாவும்

பப்புவுக்கு அவ்வப்போது “சாமி இல்லை” என்று சொல்லி ஓரளவுக்கு புரிய வைத்தாகிவிட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. பள்ளியிலும், உறவினர்களும் பப்புவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுப்பார்கள். உறவினர்கள் வந்தால் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். தெரியாமல் அழைத்துச் செல்லும்போது அதனை தடுக்கமுடிவதில்லை. வீட்டிலோ, அதெல்லாம் இல்லையென்றும், நம்மிடம் இருந்து காசு வாங்கத்தான் இதெல்லாம் இருக்கு என்றும் நான் சொல்லுவேன்.

இரவு தூங்கும்போது, இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள்.


’கோயிலுக்கு போனப்போ சாமி உன்கிட்டே பேசுச்சா?’, ’சாமியை எதனால செஞ்சிருக்காங்க?’, ‘ நம்ம வீட்டுல சாப்பாடு யார் செய்றாங்க? ’, ‘அரிசி வாங்க காசு எப்படி வருது?சாமியா குடுக்குது?’ ”உண்டியில, தட்டுல எல்லாம் காசு போடச்சொல்றாங்க இல்ல?” என்றெல்லாம் அவளை திருப்பி கேள்விகளை கேட்க, ஒரு கட்டத்தில் ’சாமிக்கு எல்லாம் தெரியும், சாமியே சமைச்சு கொடுக்கும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டாள். பிறகு, கொஞ்சநாட்கள் கழித்து, ”ஆமா ஆச்சி, சாமி பேசாது, அது கல்லுமண்ணுதான்(களிமண்ணு)” என்று கட்சி மாறுவாள். வெள்ளிக்கிழமைகளில், சாயிபாபா படத்தை வைத்துக்கொண்டு பக்திபாடல்கள் ஒலிக்க ஒரு வண்டி வரும். அதைப்பார்த்ததிலிருந்து, சாமின்னு சொல்லி காசு வாங்கி ஏமாத்தறாங்க என்று ஏற்றுக்கொண்டாள்.

ஆயா மீது நாங்கள் அக்கறை காண்பித்தால் பப்புவுக்கு சமயங்களில் பிடிக்காது. அப்போது, ஆயா மீது ஒரே கம்பெள்ய்ன்டுகளாக வரும். ’தனக்குக் கொடுத்த மாத்திரைகளை ஆயா சாப்பிடவில்லை, படுத்துக்கிட்டே சாப்பிடறாங்க’ என்று இஷ்டத்துக்கு... அதாவது,நாங்கள் எதையெல்லாம் ஆயாவை செய்யச் சொல்லுகிறோமோ அதையெல்லாம் அவர் செய்யாததாக கற்பனையை கலந்துகட்டி சொல்லுவாள். அதில், ஆயா, பப்புவை சாமி கும்பிடச் சொன்னதாகவும், இந்த உலகமே சாமிதான் செஞ்சுது என்றும் சொன்னதாகவும் சொல்லுவாள்.

பிறகு, அவளே “உலகத்தை யாராவது செய்யமுடியுமா? அது வெடிச்சு உலகம் வந்துச்சி...” என்று கவுண்டரும் கொடுப்பாள்.
ஆனாலும், அவளுக்குள் சாமி இருக்கா, இல்லையா என்ற கேள்விகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன என்றெண்ணுகிறேன்.

இது நடுவில், பிள்ளையார் சதுர்த்தி வந்தது. பள்ளியில், “புள்ளையார் பர்த் டே” என்று சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதற்காக, பிள்ளைகளின் கையில் களிமண் உருண்டையைக்கொடுத்து பிள்ளையார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அநேகமாக, அதுதான் பப்புவின் யுரேகா மொமெண்ட் என்று நினைக்கிறேன். அதாவது, ”சாமி கல்லுமண்ணுதான், அதை நாமதான் (மனுசங்கதான்) செய்றோம் “.

கீரை,காய்கறிகள் கொடுக்க ஒருவர் வீட்டுக்கு வருவார். பப்பு என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவரிடம், “சாமி பொய்னு சொன்னேன் இல்ல, இது பாருங்க, பொம்மைதான், நீங்க கூம்பிடாதீங்க (கும்பிடுவதை பப்பு அப்படிதான் சொல்கிறாள்.)” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் ”சாமி கும்பிடமாட்டேன்,பாப்பா” என்றார்.

ஆயுத பூஜையன்று அவர் வரமாட்டேனென்று சொன்னதும் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள். “ஆண்ட்டி, சாமி கூம்பிடக்கூடாது, அதெல்லாம் பொய்” என்று அவரிடம் திரும்பச் திரும்பச் சொல்லவும் அவரும் டென்சனாகிவிட்டார்.

” பாப்பா, நீங்க ஸ்கூல்ல பிரேயர்ல என்ன பண்ணுவீங்க?”

“ஜனகனமண.....” (இதைக்கேட்டால், இந்த பாடலை பாடுவோம் என்று மட்டும் சொல்லிவிட்டு விடாமல் முழுவதுமாக பாடுவாள். நமக்குதான், அவ்வ்வ்வ்...)

” அப்புறம்?”

”நீராரும் கடலுடுத்த நிலமடந்தை...”

”அப்புறம்?”

ஏதோ ஒரு ஆங்கிலப்பாட்டு பாடினாள்.

” அப்புறம் என்ன பண்ணுவீங்க?”

“ அயிகிரி நந்தினி....”

”பாத்தீங்களா, ஸ்கூல்ல சாமிப்பாட்டுதான பாடுறீங்க, அதுமாதிரி நானும் வீட்டுல பாட்டுபாடணும்” என்றார் அவர்.

ஆனாலும், பப்புவால் அதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அவளது க்ளோஸ் பிரண்டுகளுக்கெல்லாம் சாமியெல்லாம் கும்பிடக்கூடாது, அது வெறும் கல்லுமண்ணுதான்,தெரியாதவங்கதான் சாமி கும்பிடுவாங்க என்று சொல்லியிருப்பதாகவும், அவர்களும் கும்பிடமாட்டென்று சொல்லி யிருப்பதாகவும் ஆண்ட்டிக்கு கான்வாசிங் நடந்தது. (அநேகமாக, இதுதான் பப்புவின் கருத்துமுதல்வாதம் Vs பொருள்முதல்வாதம் விவாதமாக இருக்கக்கூடும்!)

இது நடந்து சிலநாட்கள் இருக்கும். அப்போது ஒரு கதை வாசித்திருந்தோம். ராஜா ஒருவர், சோசியத்தில் நம்பிக்கைக்கொண்டிருப்பார். ஆறு மாதங்களில் இறந்துவிடுவதாக சோசியர் சொன்னதை நினைத்து எதிலும் ஆர்வமற்றும் சோகமா இருப்பார்.இதைக் கண்டுக்கொண்ட மந்திரி சோசியரிடம், அவர் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பார் என்று கேட்க சோசியர் 100 வருடங்கள் என்பார். உடனே அவர் தலையை வெட்டிவிட்டு, சோசியம் பொய் என்று ராஜாவுக்கு உணர்த்துவார், மந்திரி.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக,பப்பு , ஆண்ட்டியிடம் இந்தக்கதையை சொல்லி ஜோசியக்காரங்களை நம்பக்கூடாது என்று வகுப்பெடுத்திருக்கிறாள். அவரும் ”சரி பாப்பா” என்றிருக்கிறார்.

இன்று காலையில், பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பப்புவுக்கு திடீரென்று சந்தேகம்.

”ஜெயலலிதா சாமி கும்பிடமாட்டாங்க இல்ல?”

“இல்ல, அவங்க கும்பிடுவாங்க”

“பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும்?”

“இல்ல, அவங்க சாமி இருக்குன்னு நம்புவாங்க.”

“சாமி கும்பிடுவாங்க, பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும் இல்ல?”

“இல்ல பப்பு, இல்லன்றதை அவங்க நம்பமாட்டாங்க”

அவளால் ஜெயலலிதா சாமி கும்பிடுவார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் சாமி கும்பிடுவதை ஏற்றுக் கொள்ளும் பப்புவால், நம்மை ஆளும் சீஃப் மினிஸ்டர் சாமி கும்பிடுவதை, அவளுக்கு தெரிந்த அந்த உண்மை தமிழ்நாட்டின் சீஃப் மினிஸ்டருக்கு தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. :-(

Wednesday, March 02, 2011

பப்பு டைம்ஸ்

”கொன்னே புடுவேன்”

”என்ன பப்பு சொல்றே?”

”நவ்ஜோத் இல்ல ஆச்சி, ’என் தம்பிக்கு யாராவது பை சொன்னீங்களோ கொன்னே புடுவேன்’னு சொன்னான்.”

ம்ம்....

”ஆச்சி, நான் இப்டி குடுமி போட்டிருக்கேன் இல்ல, அது ஃப்வுண்டெய்ன் குடுமியாம். வேதா ரெண்டு குடுமி போட்டிருக்கா இல்ல, அது இண்டிகேட்டர் குடுமியாம். தனுஷ் சொல்றான்….திருட்டு பையன்…”

”பப்பு அப்டில்லாம் சொல்லக்கூடாது பப்பு. என்ன பேச்சு இதெல்லாம்”(அவ்வ்வ் நான் ஏன் அப்பப்போ தேஞ்சுபோன ரெக்கார்டு மாதிரி ஆகிடறேன்!)

”இல்லப்பா, புவனேஷ்வரி ஏறினாதான் அடுத்து நவ்ஜோத் ஏறமுடியும். (?) புவனேஷ்வரி ஏறிட்டு தூங்கும்போது என்னா பண்ணுவான், மெதுவா பின்னாடி போய் ஸ்னாக்ஸ் பாக்ஸ் தெறந்து சாப்பிட்டுடுவான்.”

பேருக்கு பேரு சரியா போயிந்தி.....?

”இங்க பாருப்பா, வேதாக்கு மட்டும் முடி வளந்தா போதுமா, எனக்கு முடி வளர வேணாமா, சொல்லு ஆச்சி”

”ஏன் பப்பு, உனக்கும்தான் முடி வளரணும்..”

”வேதா பேரிச்சம்பழம்ல்லாம் எடுத்துசாப்ட்டுடறா, எனக்கு குடுக்கவே மாட்டேங்கறா…அவளுக்கு மட்டும் முடி வளரணுமா? எனக்கு முடி வளர வேணாமா?”

ரொம்ப நல்ல புள்ளைன்னுதானே நினைச்சீங்க பேரிச்சம்பழத்துலேருந்து எஸ்கேப் ஆகறதுக்கான வழி…இது!

”இந்த லஷ்மி பாருப்பா,”

....

”ஒரு நாள் குடுமி போட்டுட்டு வந்தா அடுத்த நாளும் குடுமி போட்டுட்டு வரக்கூடாதாம். அதுக்கு, அடுத்தநாள்தான் குடுமி போட்டு வரணுமாம்…நான் என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணா பண்ணுவேன்…அவளுக்கென்ன?அப்டி சொல்லலாமாப்பா…அவங்கவங்க இஷ்டம்தானே…அவ ஏன் சொல்றா…”

ஒரு விசாரணைக் கமிஷன் பார்சல்ல்ல்ல்....

Thursday, January 13, 2011

ப... டி...படி

"ஏ"

"ழு"

"ம்ம்..சேர்த்து படி"

"ஏழு"

"ஏழு...அப்புறம்"

"வா"

"ல்"

"க"

"ளு"

"ட்?இல்ல..ட"

"ன்"

"வா லு/ளுடன்"

”அப்டியா எழுதியிருக்கு...சேர்த்துபடி”


”ஏ”

”ழு”


”..அதுதான் முன்னாடியே படிச்சுட்டே இல்ல, பப்பு, அடுத்த வார்த்தைய படி...”


”வா”

”ல்”

”க”

”ளு”

”ட”

”ன்”

”ம்ம்..என்னது...சொல்லு...சேர்த்து..”


”வா க....”

”ம்ஹூம்..சரி ஃப்ர்ஸ்ட்லேர்ந்து படி...”


”ஏ”

”ழு”

(அவ்வ்வ்வ்...மறுபடியும் முதல்லேர்ந்தாஆஆஆ?!!)
”ஏழு தான் அப்பவே படிச்சுட்டே இல்ல..ரெண்டுரெண்டு எழுத்தா சேர்த்து படி
இது என்ன?”

”வா”

”இது?”

”ல்”

”சேர்த்து சொல்லு”

”வால்”

”அப்புறம்..இது”

”க”

”அப்புறம்?”

”ளு”

”சேர்த்து சொல்லு...”

”களு”

(அவ்வ்வ்வ். அழுதுடுவேன்)
“முழுசா படி...வால்ல்ல்?”

”களு”

ஃப்ர்ஸ்ட்லேருந்து...

”வால்களு”

”யெஸ்...அப்புறம்...”

”ட”

”ன்”

”டன்”

”உனக்கே படிக்க தெரியுதே!இப்போ சேர்த்து சொல்லு....”

”ஏழு...”

”ம்ம் (மேலே!)..ஏழு வால்..”

”வால்களுடன்”

”சூப்பரா படிக்கற பப்பு.....முழுசா சொல்லு பாக்கலாம்...”

”ஏழு வால்களுடன்”

ஹப்பாடா!சக்ஸஸ்...

”ஒ”

”ரு”

”ஒரு ”

”முதல்லேருந்து சொல்லி சொல்லி படி”


”ஏழு வால்களுடன் ஒரு”

”எ”

”லி”

”எலி”

”ம்ம்..இப்போ ஃபுல்லா படி..”

”ஏழு வால்களுடன் ஒரு எலி”

கொஞ்ச நேரத்துக்கு ஒரே கைதட்டல்...ஹை-ஃபை...

”இப்போ, அடுத்த பக்கம்...”

”போ..அதெல்லாம் நீதான் சொல்லணும்...நீயே படிச்சு சொல்லு...”

(ஸ்ப்பா...ஒரு தலைப்பை படிக்க வைக்கறதுக்குள்ளேயே இங்க பிபி ஏறுது...பப்புவுக்கு உயிர்மெய் எழுத்துகளை கற்றுக்கொடுத்த ஆயாவுக்கு அன்பு முத்தங்கள். எப்படி அத்தனை வேரியேஷன்களை கற்றுக்கொள்வாள் என்று மலைப்பாக இருந்தது. ஆயா என் கவலையைப் போக்கினார்.)


உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

Wednesday, November 24, 2010

ஆபரேஷன் ஓப்பன் டே

முன்பொரு காலத்தில் ஒரு அம்மா இருந்தாள். அவளது குழந்தையின் எல்லா 'முதல்'களை...ஒரு சின்ன விஷயத்தைக் கூட விடாமல் எழுதி வைத்துக் கொள்வாள் ரொம்பவும் சென்டிமென்டலாக‌. இப்போது அந்த அம்மாவின் முதல்கள் மாறிவிட்டனவா தெரியவில்லை..ஆனால், சென்டிமென்டல்கள் மட்டும் மாறவில்லை.....ஓக்கே..ஓக்கே...போதும்...விஷயத்துக்கு வரேன். :-)

தினமும் காலையிலே பப்புவை எழுப்புவது ஒரு கலை. இந்த 'டயமாச்சு', 'வேன் வந்துடும்', 'தண்ணி ஆறுது' இல்லேன்னா 'எவ்ளோ நேரம் சொல்லிக்கிட்டே இருக்கேன், சீக்கிரம் எழு' இதெல்லாம் வேலைக்கே ஆகாது.

என்னைப்போல, தூக்கத்திலிருந்து கண் விழித்ததும், அந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், இந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், ஜன்னலைப் பார்த்துகொண்டு கொஞ்ச நேரம்....லேசாக சாய்ந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்...இந்த மாதிரி துயில் கலையும் விஷயமெல்லாம் பப்புவிடம் அறவே கிடையாது. லிரில் புத்துணர்ச்சிதான். பெரும்பாலும் லஷ்மி கார்த்திகா, ஸ்ருதி லயா, அத்தி ஆண்ட்டி நினைப்புதான். எனவே, எனக்கும் தினமும் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும்.

'இன்னைக்கு யோகாவா' என்ற மொக்கையான கேள்வியிலிருந்து 'ஆம்பூர்/ வடலூர் ஆயா வர்றாங்களா இன்னைக்கு' 'இன்னைக்கு என்ன சிடி பாக்கலாம்' ..இப்படி ஏதாவது கேள்வியில் தொக்கி நிற்க வேண்டும். வெள்ளிக் கிழமைகள் போனான்ஸா. அன்றைக்கு ஆம்பூர்/வடலூர் ஆயா விசிட் இருந்தால் டபுள் போனான்ஸா. திங்கள் காலையில் எழுப்புவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு எளிது வெள்ளிகாலை எழுப்புவது.

மிக முக்கிய காரணம், வெள்ளிக்கிழமைகளில் யோகாவும் இல்லை. கராத்தேவும் இல்லை. ப்ளே க்ரவுண்ண்ண்ண்ண்ட்.

சிறிது நாட்களாக அதுவும் மழை ஆரம்பித்த நாளிலிருந்து பப்பு ப்ளே க்ரவுன்டில் வந்த விஷபாம்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள்.'ப்ளே க்ரவுண்டுக்கு இப்பல்லாம் ஆன்ட்டி எங்களை அனப்ப மாட்றாங்க' என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பள்ளியின் மைதானம் அவ்வளவு பெரிதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் விளையாட்டு சாதனங்கள் இருக்கும். ஆனால், காம்பவுண்டைச் சுற்றி இருக்கும் காலி இடம்...மரங்கள்... தேங்கியிருக்கும் தண்ணீர்...எல்லாம் சேர்ந்து 'க்ரவுண்டில் வந்த விஷப்பாம்பை' கொஞ்சம் படமெடுக்கத்தான் செய்தது.

ஓபன் டேவுக்குச் சென்றிருந்த போது, ஆன்ட்டி ட்ரைனாமியல், பைனாமியல், ஜ்யாமெட்ரிக் ட்ரே என்று பப்புவின் புலமையை பறைச்சாற்றிக்கொண்டிருக்க என் மனமோ விஷப்பாம்பையே சுற்றிக்கொண்டிருந்தது. எப்போடா முடிப்பாங்க என்று ஆண்ட்டி ரிப்போர்ட் கார்டை முடித்ததும் கையெழுத்திட்டுவிட்டு, 'ஆன்ட்டி (ஆமா, அங்கே பெரியவங்களை எல்லாம் பெரியவங்கஆன்ட்டின்னுதான் கூப்பிடுவாங்க..சில ஸ்கூல்லே சித்தின்னு கூப்பிடுவாங்களாம்..அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்தானே!) க்ரவுண்டில பாம்பு வந்துச்சு, ஓட்டையிலே கல்லு வைச்சு மூடி வைச்சிருக்காங்க ந்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. பாம்பு வந்துச்சா... க்ரவுண்டுக்கு அனுப்பினா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...' என்று ஆரம்பிக்க....

"மழை வந்ததுலேருந்து ப்ளே க்ரவுண்டுக்கு கொஞ்ச நாளா அனுப்புறதில்லை. பாம்பெல்லாம் வரலை. இங்கே வர்றதுக்கு சான்ஸே இல்லை. ஆனா, வெள்ளிக் கிழமையானா ப்ளே க்ரவுண்ட் ஆன்ட்டி எல்லாரும் கேப்பாங்க. நாங்கதான் நிறுத்தி வைச்சிருக்கோம். அந்த கோவத்துலே சொல்லியிருப்பாங்க, நீங்க பயப்படாதீங்க.." என்றார் சிரித்துக்கொண்டே.

பப்புவை நம்புவதா ஆன்ட்டியை நம்புவதா என்ற குழப்பத்தில் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ரொம்ப நீளமாக இருந்த அந்த விஷப்பாம்பு, பப்புவும் அவளது நண்பர்களும் கல்லெல்லாம் வைத்து சுவரின் ஓட்டையை அடைத்தாலும் தள்ளிவிட்டு வந்த அந்த பாம்பு மட்டும், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் நினைவுக்கு வந்துவிடுகிறது.


"ஆச்சி, நான் கீழே இருக்கிற வொர்க்கெல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு ஆன்ட்டி என்னை மாடிக்கு அனப்பிட்டாங்க, வர்ஷினி, பி.ஹர்ஷினி, தனுஷ், நானெல்லாம் மாடிக்குப் போயிட்டோம். மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி"

இது மூன்று வருட கோர்ஸ். பப்புவின் பள்ளியில் இந்த கோர்ஸின் பெயர் எம்1.இதை முடித்த பின்னர்தான் சீனியர் மான்ட்டிசோரி - ஒன்றாவது, இரண்டாவது எல்லாம்.... கீழே இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்களா, பப்புவும் கற்று முடித்துவிட்டாளா, மாடிக்கு அனுப்பிவிட்டார்களா டபுள் ப்ரமோஷனெல்லாம் ஆயா காலத்தோட சரியாச்சே...என்றெல்லாம் சந்தேகம்.ஏனெனில், மாதாந்திர சந்திப்பின்போது, 'குறிஞ்சியும் வர்ஷினியும் இங்கேயிருக்கும் மெட்டீரியல்ஸை எல்லாம் முடித்த பின்பே சாப்பிடக் கிளம்புவார்க‌ள்' என்று சொல்லியிருந்தார். ஆன்ட்டியிடம் கேட்டபோது, ' டெய்லி எங்களை மாடிக்கு அனுப்புங்க ஆன்ட்டி, நாங்க இந்த வொர்க்கெல்லாம் முடிச்சுட்டோம்.' என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த பூமராங்தான் என்னிடமும் வந்திருக்கிறது.

அடுத்த வருடம்தான் மாடிக்காம். :‍-)


ஓபன் டேவுக்கு கொஞ்சம் சீக்கிரம் சென்றுவிட்டேன் போல. பிள்ளைகள் எல்லாரும் வேனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நானும் வராண்டா விலிருந்து அவர்களது வகுப்பறையை எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பப்புவையும் அவளது நண்பர்களையும் பார்க்க.

பப்புவைத் தவிர மற்ற குட்டீஸெல்லாம் எட்டி எட்டி என்னைப் பார்த்து 'குறிஞ்சீஸ் மதர்' என்றும் 'ஆன்ட்டி ஹாய்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ பயம். பப்பு இதை பார்த்தால் அவ்வளவுதான்...எவ்வளவு கிள்ளுகள அடிகள் எனக்கு இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். ஆயாவுக்கு ஊசி போடுவதற்காக நர்ஸ் வந்திருந்தார். அவரது குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையைக் கொஞ்சப் போக அந்த வினையே தீர்ந்த பாடில்லை. தூங்கப்போகும் சமயம், சரியாக இது அவளது நினைவுக்கு வந்து விடும். இப்போது இவர்களுக்கு ஹாய் சொல்லி பேசிக் கொண்டிருந்தால்.... அதை பப்பு பார்த்துவிட்டால்.....நினைக்கவே பயமாக இருந்தது.

கடைசியாக பப்புவும் வந்தாள். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ஓடி விட்டாள்.

வீட்டிலும் கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆன்ட்டியை பார்த்தது பற்றி நானாக ஆரம்பித்தபோது, "ஹேய், என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் பார்த்தியா, அவங்கதான் என் ஃப்ரெண்ட்ஸூங்க..." என்று யார் வேதஸ்மிருதி, அக்ஷயா, பி.ஹர்ஹினி, மெரில் என்றெல்லாம் பெருமையாக‌ சொல்ல முற்பட்டாள். பொறாமையற்ற அந்த பப்புவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

மற்ற ரிமார்க்ஸ் : சொற்களுக்குகிடையில் இடைவெளி விடுவதை அறிந்து எழுதுகிறாள். கதை சொல்வதில் ஆர்வம் இருக்கிறது.

ஆன்ட்டி சொல்லாமல் விட்டது : நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்.

Thursday, October 21, 2010

hotchpotch

we shall overcome
we shall overcome

we shall overcome.... one day (somedayந்னு சொன்னதுக்கு, one day தான் சீக்கிரம் வருமாம்!)

deep in my heart i too(!) believe
we shall overkamyab....ek din

we shall overkamyab

we shall overkamyab
ek din
ohh man mey hai vishvaas

poora hai vishvaas

ham hongey kamyaam
ham hongey kamyaam
ek din

ohh man mey hai vishvaas

poora hai vishvaas

we shall overcome.... one day
அப்புறம்,onedayகன்டினியூ ஆகி

one w(d)ay ticket

one w(d)ay ticket..... ன்னு மாறிடுச்சு!

இப்போ கொஞ்சம் சரியான உச்சரிப்போட/வரிகளோட பாடினாலும், இதுதான் முதன்முதல்லே பாடின வரிகள். ஆடியோ ஃபைல் சீக்கிரம் போடறேன்.

(இந்த பாட்டு கேட்டாலே
என்சிசி நாட்கள்தான் ஞாபகம் வருது. இதுக்கு இந்தி, தெலுங்கு,மலையாளம் மற்றும் ஒரியா வெர்ஷன்ஸ் கூட இருந்தது. MTWU'ians.....please help!)

Saturday, October 16, 2010

பப்பு டைம்ஸ்


கடந்த ஆறுமாதங்களாக ஆங்கில எழுத்துகளை எழுத ஆரம்பித்திருப்பது தெரியும். பள்ளியில் தமிழ்/இந்தி என்றதில் தமிழை தேர்ந்தெடுத்தோடு சரி. ஆன்ட்டியை கடந்த டெர்மில் சந்தித்தபோது தமிழ் விரைவில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்லியிருந்தார். பழைய டைரிகளின் புதிய ஓனர் பப்பு எழுதிக்கொண்டே, 'ஔ, ஔஔ' எப்படி எழுதணும் ஆயா என்றாள். எட்டிப் பார்த்தால், மேடத்தின் கைவண்ணம்! ஆங்கில எழுத்துகளை கற்றுக் கொள்வதை விட தமிழ் கற்றுக்கொள்வதைப் பற்றித்தான் மிகுந்த கவலையாக இருந்தது. உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்....ஆனால், ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொண்டதைவிட வேகமாக அ,ஆ கற்றுக்கொண்டது போல தோன்றியது. க ங ச....எப்போது எனது அடுத்த கவலை ஆரம்பம்..;‍-)

தங்கேஸ்வரி ஆன்ட்டிக்கு நன்றிகள்!




மூன்றெழுத்து ஆங்கில் வார்த்தைகளை எழுதுகிறாள். ஒலிக்கும் சத்தங்களைக் கொண்டு வார்த்தைகளை காயின் செய்வதுதான் பெரும்பாலும். மேலும், எழுதி எழுதி cat,mat,rat etc - மனதில் பதிந்து போயிருக்கிறது போல‌. வழக்கமாக அதை எல்லாம் முதலில் எழுதியபின், புதிதாக எழுத வார்த்தைகளை யோசிப்பாள். அதில், புதிதாக கண்டுபிடித்த வார்த்தைகள் சில.

ziro - zero
cit - kite
jue - zoo
jac -?
ist - ? (east or something, I forgot)
boji -bujji




எழுதும்போது தவறு வந்துவிட்டால் அதை அழிக்கவேண்டாம், அடித்துவிட்டு சரியாக எழுத வேண்டும், வீட்டிலும் எழுதும்போது அதேபோல பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆன்ட்டி சொல்லியிருந்தார். தவறை திருத்திக்கொள்ள உதவுமாம். ஹோம் ஒர்க் நோட்டிலும் இதையே எழுதி அனுப்பியிருந்தார். பப்பு,எழுதியது அழகாக வரவில்லை அல்லது தவறான உச்சரிப்பு என்று எண்ணினால் அழிப்பாள்."அழிக்கவேணாம் பப்பு, அடிச்சுடு, பக்கத்துலே எழுது" என்றேன் அவள் அழிக்க முற்பட்டபோது?

அவள் செய்ததுதான் ஹைலைட்.

ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)

ஸ்ட்ரைக் அவுட், பப்பு என்றதும், சமாதானமாகாமல், அதனை அடித்துவிட்டு பக்கத்தில் திருத்தி எழுதினாள். அடுத்தநாள், மறக்காமல் ஆன்ட்டியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டுதான் ஓய்ந்தாள்.

இன்னும் என்னவெல்லாம் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வருமோ?


கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கர்சர் காணாமல் போய்விடும். கர்சரை திரும்பக் கொண்டு வர வைக்கும் கீ பெயர் "இஸ்க்".

Esc கீதான் அது!

Saturday, September 04, 2010

ராணுவத்தை அனுப்பும் முன்....

"எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே செல்லும் எங்களால் வெளிச்சூழ்நிலைகளுக்குள் பொருந்த முடியவில்லை. மற்ற மாணவர்களோடு போட்டியிட முடிவதில்லை.

கல்வி அமைச்சர் எங்களை வீட்டிலேயே கல்வி கற்குமாறு சொல்கிறார். எந்த வழிகாட்டுதலுமின்றி எங்களால் எவ்வாறு வீட்டிலேயே கல்வி கற்க இயலும்? ஒரு அறிவியல் மாணவனால் அறிவியல் சோதனைகளையும், செயல்பாட்டு வழிவகைகளையும் எவ்வாறு வீட்டிலேயே கற்றுக்கொள்ள முடியும்? இணையத்தின் வழியாகவும் கற்குமாறு அவர் சொல்லிவருகிறார். இணையத்தை உபயோகிப்பது/பயன்படுத்துவது எங்களைப் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கு இன்னும் சாத்தியமாகவில்லையே! இது போன்ற முட்டாள்தனமான யோசனைகளை கூறுவதை கைவிடுங்கள்!"

‍ -12 ஆம் வகுப்பு மாணவன, காஷ்மீரிலிருந்து

ஒட்டுமொத்த இந்தியாவே ஆசிரியர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் மாணவர்களின் ஒட்டுமொத்த மனக்குமுறல் இது. 'குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்' என்றும் 'அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை' என்றும் முழக்கமிட்டு வரும் நமது அரசு காஷ்மீர் மாணவர்களை கடந்த இருமாதங்களுக்கு மேலாக இப்படித்தான் வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது.

கூடுதல் ராணுவத்தையும், அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பும் நமது அரசுக்கு அங்கிருக்கும் மாணவர்களின் கல்வி பற்றியோ அவர்களது எதிர்காலத்தை பற்றியோ அல்லது மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்தோ என்ன அக்கறை இருக்கிறது?

காஷ்மீர் என்றதுமே எங்கும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் மரங்கள், வண்ண உடைகளில் அழகு குழந்தைகள், படகுகள் பயணிக்கும் ஏரிகள் , சிலுசிலு காற்று என்று கிட்டதட்ட பூலோக சொர்க்கம் என்றுதானே தோன்றுகிறது. அது நமது நாயக நாயகிகள் டூயட் ஆடிப் பாடும் கனவு காஷ்மீர். இந்நிலையைத் தாண்டி அது வந்து நெடுங்காலமாகிறது - கிட்டதட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து!

காஷ்மீரிகளாக இருப்பதைத் தவிர வேறு எந்த தவறும் செய்திராத அம்மாணவர்களிம் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்காலம் என்ற ஒன்றே அவர்களுக்கு இல்லாதது போலிருக்கிறது. "தீவிரவாதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்டு வலம் வர வேண்டியிருக்கிறது. பி.காம் முதலாண்டு படிக்கும் அமான், வாழ்க்கையே சுக்கு நூறாகி இருப்பதாக மறுகுகிறார். "தேர்வுகள் எப்போது நடத்தப்படுமென்று எந்த உத்திரவாதமும் இல்லை. மற்ற கல்லூரிகளில் சேர்வதற்கோ வழிவகைகள் இல்லை. இப்படி இருந்தால் மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பாடத்தை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டியிருக்கும். " - வாழ்க்கையில், நாங்கள் எங்கள் கேரியரில் வெற்றி பெற வேண்டாமா என்ற கேள்விக்கு யாரிடம் பதிலிருக்கிறது?

நிச்சயமற்ற வாழ்க்கை நிலையும், எந்நேரமும் ரோந்து வரும் ராணுவமும், அதன் அடக்குமுறையும் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியும், மன உளைச்சலுக்கும் குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்தும் போட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு காஷ்மீர் மாணவர் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடும் மன உளைச்சல் மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகும் மாணவர்கள் பரீட்சை நேர டென்சன்களை தவிக்க தூக்க மாத்திரையின் உதவியை நாடுகின்றனர். தமது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையே இச்சமூகத்தினரிடையே மேலோங்கி இருக்கிறது. "மூடப்பட்ட பள்ளிகளாலும், அரசாங்கத்தாலும் எங்களது குழந்தைகள் இன்று கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள்; பள்ளிகளிலிருந்து விடுபட்டு போயிருக்கிறார்கள்" என்கிறார் பெற்றோர் ஒருவர்.

"துப்பாக்கி எடுத்தவர்கள் அனைவரையும் "தீவிரவாதிகள்" என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் உதவுவதாகவும் கூறுகிறார்கள். இளைய சமுதாயத்திற்கு நல்ல கல்வி, நல்ல அமைதியான சுதந்திரமான சூழல், ஆரோக்கியம், வேலை, இவற்றை கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள்" என்ற சபியாவின் கேள்வியில் என்ன நியாயம் இல்லை?

"எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்களுக்குத் தேவை அமைதி. எங்களுக்குத் தேவை சுதந்திரம். எங்கள் இடத்தை விட்டு வெளிவேறுங்கள்" என்று கர்ஜிக்கும் மஜித்‍ என்ற கல்லூரி மாணவர் கேட்பது இந்திய அரசின் மந்தமான காதுகளை என்று எட்டப் போகிறது?

இந்த நிலை காஷ்மீரில் மட்டுமில்லை, தனி மாநிலமும் சுய அரசியல் நிர்ணயம் கோரும் எல்லா மக்களையும் இந்தியஅரசு இப்படித்தானே அடக்கி வைத்துள்ளது? தனி ஈழம் கேட்ட காரணத்துக்காக சொந்த நாட்டிலேயே அகதிகளாக முள்வேலியில் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழ் மக்கள். காட்டில் வாழும் உரிமை கேட்கும் பழங்குடியினர், தனிநாடு கேட்கும் நாகாலாந்தின் நாகா அமைப்பினர்; அஸ்ஸாமியர்; ஜம்மு‍ காஷ்மீர் மக்கள், அவர்தம் இளைய சமுதாயம் அனைவரையும் இரும்புக் கரம் கொண்டு இந்திய அரசு ஒடுக்கி வைத்துவிட்டு, கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக மாற்றியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொளவதில் என்ன பிரயோசனம் அல்லது ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதில்தான் என்ன பெருமை?

கட்டுக்கோப்புக்கும், ஒழுக்கத்துக்கு பெயர் போன இந்திய‌ ராணுவம் அங்கு செய்து வரும் கொடுமைகளை,இன்னல்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. யார் மீது சந்தேகம் வந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற சட்டம் 90களில் வந்தபின் நிலைமை மோசமானதுதான் மிச்சம். அப்படி கைது செய்தவர்களை இரண்டு ஆண்டுகள் வரை நீதிமன்றத்தின் தலையிடல் இல்லாமலே வைத்திருக்கலாம் எனபது இன்னும் கொடுமை. இப்படி பெற்றோரை, உறவினர்களை இழந்து பள்ளிப் படிப்பை கைவிட்டு குடும்பத்தின் பாரம் சுமந்தவர்களின் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பொறுப்பேற்பவர்கள் யார்?

வசதி இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளை புனாவுக்கு, டெல்லிக்கும் அனுப்புகிறார்கள். சிலர் அண்டை நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பாதுகாப்பு கருதி அவர்களது பெயர்கள் கூட வெளியே தெரிவதில்லை. அவதிக்குள்ளாவது ஏழை எளிய மக்கள்தான். பணமும் அதிகாரமும் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இன்று வீட்டில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் வன்முறையையும் அடக்குமுறையும் கண்ணெதிரே பார்க்கிறார்கள். கண்ணீர் புகை குண்டுகளிலும், கல்லெறிதலிலும் பங்கேற்கிறார்கள். எந்த நிச்சயமும், எதிர்கால திட்டமுமின்றி தாங்கள் செய்யாத தவறுக்காக முடங்கிப் போயிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் ,பல்கலை கழகங்களிலும் பதிந்து விட்டு காத்திருக்கிறார்கள். பள்ளி செல்லும் நாளுக்காக காத்திருக்கிறார்கள், இடுகையின் ஆரம்பத்தின் கண்ட மாணவனைப் போல.

"கடந்த இருபது ஆண்டுகளில் "தீவிரவாதிகள்" எனப்படுபவர்களால் காணாமல் போனவர்கள் வெறும் 15 பேர்தான். ஆனால் ஆயுதம் தாங்கிய ராணுவத்தால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்." என்கிறார் ஒரு காஷ்மீர்வாசி. சொல்லப்போனால், ராணுவத்தை அவர்கள் பாதுகாப்பாக கருதுவதில்லை. ஆக்கிரமிக்கப்பட்டதாகத்தான் கருதுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ராணுவத்தின் அதிகார துஷ்பிரயோகம், மற்றும் மனித உரிமை மீறலாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். உலகின் பெரிய ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா இன்னும் எவ்வளவு நாளைக்கு சொந்த மக்களையே அடக்கி வைக்கும்?

சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ளம் வந்து மக்களின் வாழ்க்கையை அடித்துச் சென்றது நினைவிருக்கும்.அதில் 11000க்கும் மேலான பள்ளிக்கட்டிடங்கள் பாதிப்படைந்திருப்பதாக யூனிசெஃப் தளம் கூறுகிறது. பள்ளிக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வீடு,நிலங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் கூடாரங்களில் தற்காலிக பள்ளி நடைபெறுகிறது. அவர்களது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் பள்ளி செல்லும் குழந்தைகள் கல்வியை இழந்துவிடாமல் இருக்க வழிவகைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய அரசுக்கு ராணுவத்தை அனுப்புவதுதான் எளிது போல; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை விட!

(செய்திகள் இணையத்திலிருந்து/ட்விட்டரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Friday, July 16, 2010

(ஃ)பன்னி மேனியா

பன்றியை ஒரு ஃபார்ம் அனிமலாக மட்டுமே இதுவரை அறிந்திருந்த பப்புவுக்கு மற்றவர்களை கிண்டல் செய்யவும் அப்படிச் சொல்லலாமென்று இப்போது தெரிந்துவிட்டது!

இந்த மைல்கல்லை கடக்க உதவிய பப்புவின் பள்ளி நண்பர்களான அர்ஷித்_வைஷ்ணவி_வ்யோம்_லைபோவுக்கு நன்றி! :-)

Saturday, July 10, 2010

chuk chuk rayil bandi - Telugu Version

sdr0167.mp3


”ஜோ ஜோ பாப்பா அழுதா காய்ச்சின பாலு தரணுமாம்...காய்ச்சலேன்னா அதுலே ஜெர்ம்ஸ் இருக்குமாம்” - மேடம் கொடுத்த விளக்கம்.

இந்தி வெர்ஷன் இங்கே!

Saturday, June 26, 2010

Red turned green

கடந்த வெள்ளிக்கிழமையன்று பப்பு பள்ளியில் ரெட் டே . முதல்நாள் ஜூரம் வந்ததில் ஒரே ப்ளூ டேயாகி போனது வேறு கதை. ஆனால், ரெட் டேவுக்கு எப்படி போக வேண்டுமென்று ஒரு வாரமாக கனவுகள்தான்.

அதில் ஒரு பகுதி :


நான் : “பப்பு, ஆயா வாங்கிட்டு வந்த ரெட் கவுன் போட்டுக்கலாம், லாங் கவுன் இருக்கே....அது! ”

பப்பு : .....(மையமாக ஒரு பார்வை)

நான்: “அப்புறம், ஹேட், கையிலே ரெட் பாண்ட், ரெட் சப்பல்ஸ்..ஓக்கேவா! சூப்பரா இருக்கும்! அப்புறம் ஹேர் கிளிப்ஸ்...”

பப்பு: ......

பப்பு: ”இல்லப்பா, ரெட் பாவாடை பீரோலே இருக்குல்லே...அது.. போட்டுக்கலாம்.”

நான்: ......(அதே மையமான பார்வை)

பப்பு: “கையிலே ரெட் வளையல், நெத்திசுட்டி, ரெட் ஹேர் க்ளிப்ஸ்....சூப்பரா இருக்கும்ப்பா! ”

நான்(மனதிற்குள்) : வாழ்க்கை ஒரு வட்டமான்னு மீ இன் டீப் திங்க்கிங்....!?!

(ஆயா எங்க ஸ்கூல் கலர் டேவுக்கு பாவாடை சட்டை போட்டுவிட்டா அடம்பிடிச்சு ஃப்ராக் போட்டுக்கிட்டது நான். ப்ராக் போட சொன்னா பப்பு பாவாடை போட அடம் பிடிக்கிறாளே... இப்போவே.....Gen' Gapஆஆ??)



ஆனால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்லி டாக்டர் விசிட். பப்புவால் எனக்கும் கிடைத்தது லீவ். டாக்டரை சந்தித்தப்பின் மறக்காமல் நாங்கள் செய்யும் இரண்டு காரியங்கள் : ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மற்றும் பார்க் செல்வது.

ஜுரம் வந்துவிட்டால் எப்போதும் தூக்கியே வைத்திருக்க வேண்டும் அல்லது மேலேயே வந்து ஒட்டிக்கொள்வாள். பார்க்குக்குச் சென்றதும் அவளாகவே இறக்கிவிடச் சொன்னாள். மெதுவாக நடக்கத் துவங்கினோம்.

மரங்களை தடவிப் பார்த்தோம். 'ஹார்டா இருக்கு ஆனா லீஃவ்ஸ் சாஃப்டா இருக்கு' என்றாள். இலைகள் உதிர்வதைப் பற்றியும், நிறம் மாறுவதைப் பற்றியும் பேசினோம். And then we hugged the trees (கட்டிப்புடி வைத்தியம்?!) . காதுகளை மரத்தில் வைத்து மரம் ஏதாவது பேசுகிறதாவென்று கேட்டோம். பப்பு, மரங்களைச் சுற்றி ”ரிங் அ ரிங்க் ஆஃப் ரோஸஸ்” பாட ஆசைப்பட்டாள். (ஆனால் எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது....geeee) ஆனாலும் சுற்றினோம்.

சோர்வெல்லாம் நீங்கி சிறிது நேரத்தில் ஓடவும் ஆரம்பித்திருந்தாள். நானும் அவளைத் துரத்திக்கொண்டு....

Tuesday, June 15, 2010

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....

கோடை விடுமுறை ஆரம்பித்த முதல் வாரத்தில், பள்ளிக்கூடம் இல்லையென்ற நினைப்பில் ஒரு சில நாட்கள் ஜாலியாக கழிந்தது. எல்லோருக்கும்தான். காரணம் காலை தூக்கம். பிறகு ,”எப்போடா ஸ்கூல் ஆரம்பிக்கும்” என்ற கதைதான். எனக்கல்ல. பப்புவுக்கு!அதுவும் காலையில் 6.30 மணிக்கு! காலையில் எழுவதே “இன்னைக்கு ஸ்கூல் இருக்கா, வேன் வருமா” என்ற கேள்வியுடன் தான். 'இன்னைக்கு ஸ்கூல் இருக்கு' என்றதுமே உற்சாகத்துடன் எழுந்துவிடுவாள். பாலும் காலை உணவும் கடகடவென்று இறங்கி விடும். இந்த உற்சாகத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்தி முதல் இரண்டு வாரங்கள் கழிந்தது. அலுவலகத்திற்கு கிளம்பியதும் முகம் வாடி விடும். கொஞ்ச நேரம்தான். அப்புறம், அக்கம்பக்கத்து வீடுகளில்தான் அவளைத் தேட வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரங்களில்,காலையில் 8.45 க்கு “எழுந்துக்கோ பப்பு” என்றால் தூக்கத்திலே பதில் வரும் “எனக்கு சம்மர் ஹாலிடேஸ் இல்லே, ஏன் என்னை எழுப்பறே?”. அப்போதே எனக்கு கிலி பிடித்துக்கொண்டது, ஜூன் 2ஆம் தேதியை நினைத்து. பப்புவுக்கு பள்ளி ரீ ஓபன் ஆச்சே!

பெரிம்மா,அம்மா, குட்டி என்று எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க நான் மட்டுமே எதிர்கொள்ள போகும் ஜூன் 2 கொஞ்சம் பயமாகவே இருந்தது - ஏதோ எனக்கே பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது போல.அதுவும், அந்த ஒழுங்கை/ ரொடினை கொண்டு வருவது குறைந்த பட்சம் பள்ளி ஆரம்பித்த முதல் வாரத்தில் - டெரர்தான். அதுவும் வேன் வேறு மே மாத இறுதியில் ஒரு ட்ரையல் ரன் வந்து, இனி பப்புவுக்கு காலை பிக்கப் 7.40க்கு என்று டரியலாக்கியிருந்தது.

சரி, கடைசி சனி,ஞாயிறுகளில் காலையில் எழுப்பி விடலாம், இரண்டு நாட்கள் பழக்கத்தில் மூன்றாம் நாள் எளிதாக இருக்கும் என்ற நினைப்பில் மண் அள்ளி போட்டுக்கொண்டது நானேதான். சனி -ஞாயிறுகளில் நான் எழுந்தாலல்லவா அவளை எழுப்புவதற்கு! கடைசியில் எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமலேயே விடிந்தது ஜூன் 2. காலையில் நல்ல மூடிலேயே எப்படி எழுப்புவது என்ற கவலையோடே உறங்கச் சென்றேன் - 6.15 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு. முதல்நாளே பப்புவுக்கு எல்லாம் ரெடியாக இருந்தது அவளுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்.

”ஆச்சி, பெரிய பெரிய தவளை ஆச்சி” பப்புதான்.

ஜன்னலைப் பார்த்தேன். இன்னும் விடியவில்லை. அரைக்கண்ணைத் திறந்து...நேரம்...5.30 மணி.

”ம்ம்..தூங்கு பப்பு, தவளை இங்கே வராது”

ம்..ஹூம்!

”ஆச்சி, லைட் போடு ” சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அவளாகவே லைட்டை போட்டு ”வா, கதவுக்கிட்டே பாரு ” என்று இழுக்கத் தொடங்கினாள்.

எழுப்பும் கவலை விட்டது என்று ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும் அதிகாலை தூக்கத்தை இழக்க மனம் வரவில்லை.வேறு வழியில்லாமல், எழுந்து அவளுடன் சென்றேன். படுக்கையறை கதவை திறக்கச் சொன்னாள் - என் கையை பிடித்தபடி நின்றுக்கொண்டு.

”ஆச்சி, எவ்ளோ பெரிய தவளை தெரியுமா” - அவள் சொன்னதைப் பார்த்தால் அந்த தவளை ஒரு கடலாமை அளவுக்கு இருந்திருக்க வேண்டும். சற்றே பெரிய தவளைதான் போல.

அடுத்து அவள் சொன்னதுதான் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

”ஒரு தவளை ஆச்சி, அதுக்கு தவளை மாதிரி உடம்பு இருந்தது, ஆனா வாய் இல்லே, எப்படி இருந்துச்சு தெரியுமா..க்ரோக்கடைல் மாதிரி இப்படி இருந்தது”

கடலாமை சைசில் தவளை உடல். அதற்கு முதலை முகம். வாசலில் இருந்ததாம்.
வாசல் கதவை திறந்து அங்கே நிற்கிறதாவெனத் தேடினோம்.

காணோம்!

பாலை சுட வைத்துவிட்டு, தோசை செய்ய ஆயத்தமானேன். அவளது நாற்காலியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தவள் அதன் மேலேறி சமையலறை மேடையில் அமர்ந்துக் கொண்டாள்.


கடைசியில், தவளைக்கதைகளை அவளே சொல்லியபடி ஒரு டம்ளர் பாலும், ஒரு தோசையும் உள்ளே சென்றது.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காலை தூக்கம் விடுபட்டாலும், அரக்கபரக்க இல்லாமல் நிதானமாக எல்லா வேலையும் முடிந்தததை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தது. 'அவளோ கஷ்டம் இல்லை போலிருக்கே, இனிமே பிரச்சினை இருக்காது போல' என்றும் தோன்றியது.

(முதல் நாள் - முதல் டெர்ம் - வேனை நோக்கி ஓடுவதற்கு ரெடியாக பப்பு!)

அவளை வேனுக்கு அனுப்பியபின் எழுந்த கேள்வி, ”தவளை நாளைக்கும் உதவுமா?”!

இரண்டு நாட்கள் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது!


சட்டென்று மனதுக்குள் மின்னல்!


யெஸ்...

”தூங்கும்போது குரங்கு-முதலை-நாவல்பழம் கதை சொன்னால் தவளை நிச்சயம் உதவும்!

யே!!

Monday, May 31, 2010

பப்...பூ

"உனக்கு மட்டும் ஏன் பூ பேரு?” - பப்பு

“உனக்கும்தான் பூ பேரு பப்பு!”

”எங்க இருக்கும்”

“மலைலேதான் பூக்கும், 12 இயர்ஸ்க்கு ஒரு வாட்டி”

“இல்ல,சந்தனமுல்லை தான் பூ பேரு, எனக்கு சந்தனமுல்லைன்னு பேரு வை”

”சரி..உன் பேரு சந்தனமுல்லை..”

சந்தனமுல்லை இந்த பூவை வரைந்து கோந்தை தடவை சிறு காகித துணுக்குகளை உருட்டி கோந்தில் ஒட்டி இந்த பூவைச் செய்தாள். மறக்காமல் இலைகள்!




புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்
.
.
.
.
.

UKG!
ஆமாம், இன்றிலிருந்து பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது. சென்ற வருடம் போலில்லாமல், முகம் மலர சிரித்தபடி பறந்தேவிட்டாள், எனக்கு கையசைத்துவிட்டு!

கற்றலின் இனிமையும், நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களும்,
குதூகலமான வேன் பயணமும் அமைய பப்புவுக்கும் , பப்புவின் நண்பர்களுக்கும் வாழ்த்துகிறேன்! :-)

Monday, May 10, 2010

பாஸ் பாஸ்..நீ இப்ப பாஸ் பாஸ் - தொடர்பதிவு

மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி...
சிறகுகள் விரித்தபடி இளங்குருவிகள் பறந்ததடி...

- இந்த பாட்டை கொஞ்ச நாள் முன்னாடிதான் முதல்முதலா பார்த்தேன். நிரோஷாவும் - ராம்கியும். அதுவரைக்கும் அந்த பாட்டுக்கு குணசுந்தரியை தான் கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். இந்த பாட்டும், குணசுந்தரி ஞாபகமும் பிரிக்க முடியாத ஒண்ணு. அட்டெனன்ஸ் -லதான் குணசுந்தரி. எங்களுக்கு குணாதான்.

அக்கார்டிங் டூ பெரிம்மா & மத்த டீச்சர்ஸ், பாட்டு புக் வாங்குறவங்க,பாட்டை நோட் புக்லே எழுதி வைக்கறவங்க எல்லாம் படிக்காத பசங்க. இதெல்லாம் விட்டுட்டு உருப்படற வழியை பாருன்றதுதான் அவங்க சொல்ற அட்வைஸா இருக்கும். குணா என்னை மாதிரியே ஆவரேஜ் ஸ்டூடண்ட்...எப்படியோ நாங்க திக் ப்ரெண்டாஸிகிட்டோம். ஏழாவதுலே, கில்லடின்லே கொலை பண்ணுவாங்களே, அந்த வரலாற்று பாடம் படிக்கும்போது புக் நடுவிலே இந்த பாட்டு புக்கை வச்சு பாடி காட்டினா. அதுலேருந்து எனக்கும் இந்த பாட்டு பிடிச்சுடுச்சு. அதுவரைக்கும், சினிமா பாடல்களை நான் கேட்டிருந்தது, ஆகாசவாணிலேயும், பி-கஸ்பாவிலேருந்து ஸ்பீக்கர்லே ஒலிக்கிற பாடல்களையும்தான். அதுலே பெரும்பாலும், ‘பாலை குடிச்சுப்புட்டு பாம்பா கொத்துதடி'மாதிரி இல்லேன்னா ‘ராஜா கைய வச்சா' மாதிரி பெப்பியா இருக்கும்.

குணாவும், நானும் ஸ்கூல்லே சில பாடங்களை ஒண்ணா படிச்சு முடிச்சுடுவோம். ஒண்ணா படிக்கிறதுன்னா, ரெண்டு பேரும் சத்தம்போட்டோ/மனசுக்குள்ளேயோ அவங்கவங்க புக்லே இருக்கிறதை படிச்சுட்டு மாத்தி மாத்தி ஒப்பிச்சுக்கிறது. +2 ஸ்டடி ஹால்ஸ் அப்போ ரொம்ப உருக்கமா நெருக்கமா எல்லாம் பேசிட்டு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு பிரிஞ்சாச்சு. அன்னைக்கு பிசிக்ஸ் எக்ஸாம். எங்க எல்லாருக்குமே பிசிக்ஸ் மாஸ்டரை பிடிக்கும்ன்றதாலே பிசிக்ஸையும் பிடிக்கும். பார்த்தா கொஸ்டின் பேப்பர் டஃப் (எங்க பேட்ச்-லே பிசிக்ஸ் பேப்பர் டஃப்-ஆ வந்துச்சு). டஃபா இருந்தாலும், படிச்சதை வேஸ்ட் பண்ணாமே (!) எழுதிடனும்னு தெரிஞ்சதையெல்லாம் எழுதிக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு, ஒரே சலசலப்பு.பியூன் ஒருத்தர் வந்து எங்க ரூம் சூபர்வைஸ்ர்கிட்டே ஏதோ சொல்லிட்டு போறார். ஏதோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது. ஆனா, ஒண்ணும் புரியலை. எல்லாரும் மும்முரமா எழுதிக்கிட்டிருந்தோம்.

வெளிலே வந்தப்புறம் தெரிஞ்ச விஷயம் - பிசிக்ஸ் பேப்பர் டஃப்ன்னு பார்த்ததும், குணா டென்ஷன் ஆகிட்டா. கை காலெல்லாம் உதறுது. அவளாலே எழுத முடியலை.மயக்கம். தண்ணியெல்லாம் கொடுத்து ஆசுவாசப்படுத்தின அப்புறமும், அவளாலே எழுத முடியலை. பாஸ் மார்க் வாங்கிற அளவுக்குக்கூட அவ எழுதலை. எழுதவும் முடியலை,அவளாலே. ஒரு எக்சாம் இப்படி கோட்டை விட்டுட்டோம்னு கவலைலே அடுத்த மேஜர் பேப்பரையும் எழுதலை.

வீட்டுலே அவ எதையோ தாண்டிட்டா இல்லே மிதிச்சுட்டான்னும் அப்புறம் செய்வினைன்னும் சாமியார்/பூஜாரிகிட்டேயெல்லாம் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட். அக்டோபரிலும் சரியா எழுதலை. இதுலேருந்து மீண்டு வர்றதுக்கு அவளுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு.அதாவது, அந்த மெண்டல் ட்ராமா!அப்புறம் பேருக்கு ஆப்டெக்-லே கம்ப்யூட்டர் படிச்சுட்டு இப்போ மேடம் ஏதோ ஒரு ஊருலே இல்லத்தரசியா இருக்காங்க.


எம்சிஏ பேட்ச்-லே UG கம்ப்யூட்டர் பண்ணினவங்க தவிர மத்த மேஜர் எடுத்து வந்தவங்களும் நிறைய பேர் இருந்தாங்க. வசுதா கெமிஸ்ட்ரி மேஜர்.அவளது, ஐஐடி அண்ணாவின் சொல்படி எம்சிஏ சேர்ந்திருந்தாள். முதல் செமஸ்டர் அக்கவுண்டன்ஸியோட கொஞ்சம் தீவிரமாவே போனது. சொல்லப் போனால், நாங்க எல்லாரும் ஒரே படகில்தான் இருந்தோம்.அதுவே ஒரு தைரியமா இருந்தது. தமிழ்செல்வி கூட சேர்ந்து பண்ணின ப்ரேயர் மேல பாரத்தை போட்டுட்டு கொஸ்டின் பேப்பரை வாங்கி எழுத ஆரம்பிச்சாச்சு.


சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். பின்னாடி பெஞ்ச்லே இருந்த வசுதாவுக்கு கை கால் உதறுது. தண்ணி கொடுத்ததும் வாங்கி குடிக்க முடியாம இழுக்க ஆரம்பிச்சது. வாயில் நுரை. டிஸ்க்ரீட் மேத்ஸ் பேப்பரிலிருந்து அந்த செம்ஸ்டரின் எந்த பரீட்சையையும் எழுத முடியாமல் போனது வசுதாவிற்கு. வீட்டிலிருந்து பெற்றோர் வந்து அழைத்து சென்று டாக்டரிடம் ட்ரீட்மெண்ட். ஏற்கெனவே, வசுதாவிற்கு தான் மட்டுமே கெமிஸ்ட்ரி மேஜர் என்றும், மற்ற அனைவரையும் பார்த்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் உண்டு.

அடுத்த செமஸ்டரின் பிராக்டிகல்ஸில் எனக்கு பின்னால் வசுதா. நான் முடித்ததும் அதே சிஸ்டம்தான் அவளுக்கு. அவுட்புட் மற்றும் முதல் கம்பைலேஷன் காட்டியபிறகு வசுதா என்னை அழைத்தாள். அவளுக்கும் அதே ப்ரோக்ராம். நான் அமைதியாக அலைன்மெண்டில் மூழ்கி இருந்தேன். வசுதாவிற்கு, லேசாக கைகள் உதற ஆரம்பித்தது. 'வெயிட் பண்ணு' என்று சைகை காட்டிவிட்டு அவளது பெயரில் அதே ப்ரோக்ராமை காப்பி செய்துவிட்டு எனது பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபின்தான் என் படபடப்பு நீங்கியது. அப்புறம்,வசுதா முதல் செமஸ்டர் பேப்பரை க்ளியர் செஞ்சு இப்போ நல்லப்டியா பொட்டி தட்டிக்கிட்டு இருக்கா.

+1 சேர்ந்த புதிதில், வசுதா நிலையை,குணாவின் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது முதல் இரண்டு மாதங்களில். புரிந்தாற் போலும் இருந்தது - எதுவும் புரியாதது போலவும். , 'ஸ்டொமக் அப்செட்' -னு சொல்லிட்டு முதல் டெர்ம் டெஸ்ட் முழுசும் போகாம இருந்தேன். பயம் மற்றும் டென்ஷன்தான் காரணம். அப்புறம் தெளிஞ்சுடுச்சு.

நான் ஒன்றும் கிளாஸ் டாப்பர் எல்லாம் கிடையாது. ஆனால், 'நல்லா படிக்கணும்,வேலைக்கு போகணும்,நல்லா சம்பாதிக்கணும்'கிற குதிரை கடிவாளம் போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டிந்தேன். படிக்கணும்கிறது, 'ஏன் எதுக்கு எப்படி'ன்னு கேள்வி எல்லாம் இல்லாம,'இது இப்படிதான்'ன்னு புக்லே இருக்கிறதை மனப்பாடம் பண்ணனும், பின்னாடி இருக்கிற கேள்விகளுக்கு பாடத்துலே பதில் குறிச்சுக்கிட்டு அதை அப்படியே மனப்பாடம் பண்ணணும்..பரீட்சையிலே எழுதணும்.மார்க் வாங்கணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வரணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வந்தா கேட்டது கிடைக்கும்.இதுதான் என்னோட கல்விச் செல்வம் - காலேஜ் வரைக்குமே!

மேலும், டீச்சரை பிடிச்சிருந்தா அந்த பாடம் ரொம்ப பிடிக்கும். டீச்சர் பிடிக்கலைன்னா கஷ்டம்தான். ஹிஸ்டரியும், கெமிஸ்ட்ரியும் பிடிக்காம போனதுக்கு காரணம் இதேதான்.பெரியவங்க என்னதான் புரிஞ்சுக்கிட்டு படி,படின்னு கரடியா கத்தினாலும் இதுதான் மார்க் வாங்கி கொடுக்கும். ஏன்னா, என்னோட வார்த்தைகளில் நான் எழுதியிருந்ததைவிட, புக்லே இருந்தா மாதிரியே ஞானசௌந்தரி எழுதியிருந்ததுக்குத்தானே முழு மார்க் கிடைச்சது!

பாடப்புத்தகங்கள் எல்லாம் சின்ன சின்னதா இருந்தப்போ படிச்சு நல்ல மார்க் வாங்கியிருந்ததாலேயோ என்னவோ ' நல்லா படிக்கற பொண்ணு' இமேஜ் வந்திருந்தது. அஞ்சாவது வரைக்கும், தினமும் கிளாஸுலே நடத்தினதை எல்லாம் படிச்சு ஆயாகிட்டே ஒப்பிக்கணும். கணக்கு எல்லாம் தினமும் போடணும் - கூடவே மனக்கணக்கு. பக்கத்துலேயே உட்கார்ந்து படிக்க வைப்பாங்க ஆயா. நான், ஆறாவது வந்ததுக்கு அப்புறம் மாடர்ன் மேத்ஸ் ஆயாவுக்கு தெரியாததாலே தப்பிச்சுட்டேன்.சொன்ன பேச்சு கேக்காத பழக்கமும் வந்திருந்தது.ஆனா, விதி அப்போ வேற ரூபத்திலே விளையாடிச்சு.

ஆறாவதுலேருந்து பெரிம்மாவோட ஸ்கூல். ‘டீச்சர் பொண்ணு' இமேஜ் வேற. டீச்சர் பசங்கன்னா ரெண்டு வித கஷ்டம். ஒன்னு, மத்த டீச்சர்ஸ் முன்னாடி டீச்சர் மானத்தை காப்பாத்த நாம நல்ல படிக்கவேண்டி இருக்கும். ரெண்டாவது, டீச்சர் பொன்ண்ணுன்னு மார்க் போடுட்டாங்கன்னு சொல்றவங்க வாயை அடக்கணும். சோ ,எப்பவுமே இருதலை கொள்ளி எறும்புதான். அரைபரிட்சை, கால் பரீட்சை லீவுலே கூட விடமாட்டாங்க.சொல்லப்போனா, லீவுலேதான் நாங்க ஒழுங்கா படிப்போம்.நடந்து முடிஞ்ச பரிட்சை பேப்பரை கரைச்சு குடிச்சிருப்போம்.

காலையில் ஆறரைக்கு மாடிக்கு போய்டணும் - நோட்டு, பாய்,தண்ணி ,புத்தகம் - ஓ யெஸ்...அதே ரென் அண்ட் மார்ட்டின் சகிதம்! எட்டு மணிக்கு ஆயா ராகி கஞ்சி எடுத்துக்கிட்டு மாடிக்கு வந்துடுவாங்க..கண்டிப்பா அதைக் குடிச்சே ஆகணும். அதையும் அவங்க கண் முன்னாடிதான் குடிக்கணும். நோ காஃபி..அதுக்கு அப்புறம்தான் டிஃபன். எல்லோரும் காம்ப்ஃளான்- போர்ன்விட்டா குடிச்சப்போ எங்க வீட்டுலே இந்த கொடுமை...911 மாதிரி நம்பர் இருந்திருந்தா...

பொண்ணுங்களுக்கு நடுவிலே காப்பி/பிட்-ன்னு எதுவும் பெரிசால்லாம் இல்லை - பத்தாவது வரைக்கும். பொருத்துக,சரியான விடையை தேர்ந்தெடு மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம். அதுதான் மேக்ஸிமம் காப்பி. கன்னத்துலே கை வச்சிக்கிற மாதிரி எந்த கேள்வியோ அத்தனை விரலை வச்சிக்கணும். யார்கிட்டே கேக்கிறோமோ அவங்க விடையை சொல்றதுக்கு அதே மாதிரி கன்னத்துலே கை வச்சிருப்பாங்க.

பிட் வச்சு எழுத இப்போவரைக்கும் முயற்சி செஞ்சது இல்லே. படிச்சதை வேஸ்ட் செய்யக் கூடாதுன்னு அந்தக் கேள்விக்கு தொடர்பா என்னென்ன தெரியுமோ அதை எழுதிடறதுதான் ஆல்வேஸ் பழக்கம். இப்படிதான், தமிழகத்தின் மான்செஸ்டரை கேட்டதுக்கு நான் எழுதிட்டு வந்தது இந்தியா மேப்லே பாம்பே இருக்கிற இடத்துலேன்னு. எக்ஸாம் ஹாலை விட்டு வெளிலே வந்ததுக்கு அப்புறம் தெரிஞ்சு என்ன பண்ண? அன்னைக்கு ராத்திரி நினைப்பெல்லாம், தமிழ்நாட்டின் மான்செஸ்டரை பாம்பேக்கு உடனே மாத்திட மாட்டாங்களான்னு இருந்துச்சு.

அடுத்தவங்க பேப்பரை பிடுங்கி எழுதுவாங்கன்னு +1/+2 வந்தப்புறம்தான் தெரியும். மன்த்லி டெஸ்ட்-லேல்லாம் பசங்க தொல்லை தாங்க முடியாது. எழுதி வச்சிருந்தா, முன்னாலேருந்து 'ட க்'ன்னு எடுத்துடுவாங்க.அப்புறம்,நம்ம பேப்பர் நம்ம கைக்கு வர்றதுக்குள்ளே வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும். இத்தனைக்கும், நாமே திக்கி திணறிதான் எழுதியிருப்போம்னாலும்!

காலேஜ் - ஸ்கூலைவிட மோசம். சர்ப்ரைஸ் டெஸ்ட், அசைன்மெண்ட், செமினார்ன்னு கடம் அடிச்சதுலே +1,+2 வை கூட செமஸ்டர் டைப்லே மாத்திட்டா நல்லாருக்குமேன்னுதான் தோணுச்சு!

எம்சிஏ -விலே எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஒரு மேடம் வந்தாங்க. யூஜிசி எல்லாம் முடிச்சு ப்ரெஷ்ஷா வந்திருந்தாங்க. ரொம்ப் நல்லா க்ளாஸ் எடுப்பாங்க. அவங்க பேர் நந்தினி. செம க்யூட்டாவும் இருந்தாங்க. அழகா சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க.எங்க எல்லாருக்குமே அவங்களை பிடிச்சிருந்தது. அடுத்த செமஸ்டர்லே அவங்க வரவே இல்லை. வரவும் மாட்டாங்கன்னு சொன்னாங்க.தீ வச்சி கொளுத்திக்கிட்டாங்களாம். காதல் தோல்வி! 'அவங்க அப்படியே உட்கார்ந்திருந்தாங்களாம் அக்கா'ன்னு ஜூனியர் சொன்னது இன்னும் என் காதுக்குள்ளே கேட்குது!

PG..UGC..முடிச்ச ஒரு மேடம்....ஒரு காதல் தோல்விக்காக....
கல்வி என்ன கத்துக்கொடுக்குது.... பொருளீட்டலையா... வெறும் டொமைன் நாலெட்ஜையா....அப்போ வாழ்க்கையை, நம்பிக்கையை, உரத்தை, பக்குவத்தை...?

படிக்கும் படிப்புக்கும்,நிஜ வாழ்க்கைக்குமே ஏகப்பட்ட இடைவெளி இருக்கும்போது... இதெல்லாம் எம்மாத்திரம்? கேம்ப்ஸ்லே நம்மை அள்ளிட்டு போற கம்பெனி நமக்கு என்ன லைன் பிடிக்கும்னு கேட்டா வேலை கொடுக்கறாங்க? அப்போதைக்கு எந்த பிராஜக்ட்லே காலி இடம் இருக்கோ... அதுலேதான். சில கம்பெனிகளில் ப்ஃரெஷ்ர்ஸ்-ன்னா நேரா டெஸ்டிங்தான்! அவங்களும் அதுலே உருண்டு பிரண்டு ஆட்டோ கேட்சப்...அப்படின்னு காலத்தை ஓட்ட தொடங்குவாங்க. நமக்கு என்ன வேண்டும்னு தெளிவா இல்லேன்னா கேரியர் அதன் போக்குலே போய்டும் - எத்தனை பேரு நான் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்றோம்...கிடைச்ச வேலையத்தானே செய்றோம்?!

சுகந்தியும் லெக்சரர்தான். வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் என் பக்கத்து ரூம்-மேட். புதுக்கோட்டை பக்கம் அவங்க ஊர். ஒருநாள் விடிகாலையிலே சுகந்தியின் குடும்பம் - அம்மா,அப்பா,ரெண்டு தங்கச்சி,அத்தை எல்லாரும் வந்தாங்க. சுகந்தி லவ் பண்றது வீட்டுக்கு தெரிஞ்சதாலே கையோட கூட்டுட்டு போகலாம்னு வந்துட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுகந்தியோட லவ்வர் வேலை விஷயமா வேற ஊருக்கு போயிருந்தார். சுகந்தியோட ப்ரெண்ட் மூலமா அவருக்கு போன் பண்ணினதும் ஏதோ ஏற்பாடு செய்றதா சொல்லியிருக்கார்.

ஒன்பது மணிக்கு 'நான் காலேஜுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரேம்மா'ன்னு வெளிலே போன சுகந்தி வரவே இல்லே. அவரோட ஃப்ரெண்ட் வந்து சுகந்தியை பைக்லே கூட்டிட்டு போய்ட்டார். நாங்க எல்லோரும் சாயங்காலம் வர்ற வரைக்கும் ஏன் நாங்க ராத்திரி சாப்பிட போற வரைக்கும் அவங்க குடும்பமே 'சுகந்தி வந்துடுவா'ன்னு காத்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இனிக்கிற காதல் மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடிய வலியை/வேதனையை அன்று நாங்கள் கண் முன் பார்த்தோம்.

'பி எஃப் லோன் எடுத்து படிக்க வச்சேன்மா' ன்னு சுகந்தியோட அப்பாவும் ‘இந்த ரெண்டு பொண்ணுங்களை எப்படி இனிமே நம்பி படிக்க வைப்பேன்,வெளிலே அனுப்புவேன்னு' அவங்க அம்மாவும் அழுதது ஹாஸ்டல் சுவர்களில் அன்றிரவு முழுக்க எதிரொலித்தது. சுகந்தி நிலையிலிருந்து அவங்க செஞ்சது நியாயமா இருக்கலாம். ஆனால், தங்கச்சிகளை, பெற்றோரின் கஷ்டத்தை புரிஞ்சுக்க வைக்காத கல்வி - அது கொடுக்கும் அறிவு?

ஷைனி அக்கா பத்தாவது படிக்கும்போது அவங்க அப்பா இறந்துட்டாங்க. அவங்க அம்மா அவங்களுக்கு இருந்த ரப்பர் தோட்டத்தையும்,அப்பாவோட பென்சனையும் வைச்சு அக்காவை எம்சிஏ படிக்க வைச்சாங்க. அக்காதான் ஒரு தங்கையை எம்பிஏவும், இன்னொரு தங்கையை பி ஈ யும் படிக்க வைச்சாங்க. அவங்க காதலிச்சவரையே கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

இட ஒதுக்கீட்டுலே படிச்சுட்டு, ‘இட ஒதுக்கீடே தேவையில்லை, மெரிட்தான் சரி'ன்னு பேசறவங்களையும், ‘கால பைரவர் கோயில்லே மிளகு விளக்கு ஏத்தறது எப்படி'ன்னு டவுட் கேக்கறவங்களையும், ஒரு செண்ட் அதிகமாக் கொடுத்துட்டாங்கன்னு சொத்து தகராறுலே உடன் பிறந்தவங்ககூடவே பேசாம இருக்கிறதையும் பார்க்கும்போது....

கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!

தேர்வு பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்த வினவுக்கு நன்றி!

தங்களது சுவாரசியமான பகிர்வுகளின் மூலம் இத்தொடரைத் தொடர்ந்திட
அழைப்பது :

ராப் (கம் பேக்,ராப்..உங்க ஹைபர்னேஷன் முடியும் நேரம் வந்தாச்சு :-) )
குசும்பன் (அடிச்சு தூள் கிளப்புங்க, சார்)
அன்புடன் அருணா (பெர்மிஷன் கேக்காம டாக் பண்ணிட்டேன்,கோச்சுக்காதீங்க!)
நான் ஆதவன் (பாஸ்...நோ ஒளிவுமறைவு!!)
தாரணி பிரியா (மேடம், காணாம போனா இப்படிதான்..;-) )