Showing posts with label ஷாப்பிங். Show all posts
Showing posts with label ஷாப்பிங். Show all posts

Monday, January 20, 2014

புத்தகக் கண்காட்சியில் ஒரு பொ.அ

* ஒருவழியாக, பப்புவுடனும், பெரிம்மாவுடனும் நேற்று புக் ஃபேருக்குச் சென்றேன். நுழைவாயிலிருந்தே,சாரி சாரியாக‌ ஊர்வலமாக சென்றோம். அவ்வளவு கூட்டம்! பார்த்ததும், பப்பு, "இது புக் ஃபேரா, என்ன ஃபேர் இது,ஆயா?" என்றாள்.

"ஏன், புக் ஃபேர்தான்", என்றதும், "இல்ல, இது பீபிள் ஃபேர்", என்றாள்.

* வரிசையாக சென்ற கூட்டம் ஓரிடத்தில் கொஞ்சம் குழப்பமடைந்தது போல இருந்தது. எல்லோரும் நடப்பதை நிறுத்திவிட்டு அந்த அதிசயத்தை காணத் துவங்கினோம்.  ஒருவர் பைக்கை கழுவிக்கொண்டிருந்தார். பிறகுதான் புரிந்தது, பைக்கை கழுவுவது அதிசயம் அல்ல, ஏதோ ஒரு சாதனம் கொண்டு பைக் மீது ஸ்ப்ரே பண்ணுகிறாரே! யெஸ், திரும்பி வரும்போது, ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்!! #மைண்ட்_வாய்ஸ்

* நுழையும்போதே நல்ல சகுனம். "விஜயராகவன் என்னும் வாசகர் ஆம்பூரிலிருந்து வந்திருக்கிறார். அவர், எங்கிருந்தாலும் ..." அடடா...யாரந்த வாசகர்!!ஆம்பூரிலிருந்து....தெரிந்தால், ஸ்டார் பிரியாணி கடைக்காரரிடம் சொல்லியிருக்கலாமே...ரெண்டு பிரியாணி பார்சல் கொடுத்துவிட்டிருப்பாரே!! இது மைண்ட் வாய்ஸ் இல்லை...ஒரு ஆதங்கம். (ஒரு பிரியாணி பிரியையோட‌ மனசை இன்னொரு ....ஹூம்!)

* ஒரு சில பதிப்பகங்களை மேய்ந்தோம். பப்புவுக்குரியது எதுவும் வரவில்லை. "என்னப்பா....எல்லாமே பெரியவங்களோடதா இருக்கு?" என்று அலுத்துக்கொண்டு சில பதிப்பக வாசல்களில் உள்ளே வராமல் ஸ்ட்ரைக் செய்தாள். அகநி பதிப்பகத்துக்கு சென்று சில புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தோம். வரலாற்று தொகுதி. தாட்களை புரட்டிக்கொண்டிருக்கையில், உமாயூன் என்றெல்லாம் வந்தது. ஒரு பக்கத்தில் இருந்த உருவத்தை காட்டி, 'பப்பு, இது யாருன்னு சொல்லு?" என்றேன். "இவர் அக்பர் மாதிரி இருக்காரே"  என்றாள். அவர் அக்பர்தான்!

*ஒரு ஸ்டாலில் புத்தகங்களை வாங்கினோம். "என்னப்பா, தமிழா இருக்கு எல்லாம்" என்று அலுத்துக்கொண்டாள். "டைட்டிலையாவது படி" என்று ஒரு பொறுப்பான அம்மாவைப் (இனிமேல் பொ.அ) போல் நடந்துக்கொண்டேன்.

* அடுத்து, ஒரு ஆங்கில புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்தோம். கூட்டமாக இருந்ததால், பப்புவை உள்ளே அனுப்பிவிட்டு வாயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைப் போன்ற பொறுப்பான ஒரு அம்மா, ஒரு பையனிடம் "க்விஸ் புக் கேண்டுண்டிருந்தியே,அதோ இருக்கு பாரு" என்று ஒரு புத்தகத்தை காட்டிக்கொண்டிருந்தார்.  அந்த பையனோ "கெடைச்சிடுச்சி" என்று கூவியபடி ஒரு புத்தகத்தை எடுத்தான். இந்தியாவின் வரலாறு ஆங்கிலத்தில்தான். "இதான் கேட்டுண்டிருந்தியே" என்றார் அவனது அம்மா. அப்போது, அவர்கள் கூடவே இருந்த இன்னொரு பையன், "என்ன புக்" என்றான். டைட்டிலை சொன்னதும், "சரி, உங்க ஆத்துக்கு நான் வரும்போது இந்த புக்கை படிச்சுக்கறேன்" என்றான். "ம்ம்ம்ம்ம்" என்று இழுத்தான் புக்கை வாங்கிய பையன். திரும்பி பார்த்தேன், அந்த பையனின் நெற்றியில் நாமம் போட்டிருந்தது! "என்ன உம்ம்ம்ங்கறே? குடுக்கறேன்னு சொல்லு" என்று தன் கடமையை செவ்வனே செய்தார் அந்த பொ.அ.

* தமிழில் சிறுவர் கதை புத்தகங்கள் வாங்கினார் பெரிம்மா. பில் போடுமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்த பப்பு, "ஆயா, இதெல்லாம் என்னால படிக்க முடியாது. நீங்கதான் படிச்சு காட்டணும்" என்று திட்டவட்டமாக கூறிவிட, கவுண்டரில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவ்வ்வ்வ்!

* இறுதியாக, "இரு இரு , சின்ன பசங்க புக்ஸ் இருக்கிற கடைக்கு போலாம்" என்று சொன்னதற்கேற்ப, ஒரு கடை தென்பட்டது. அதில், தோண்டி துழாவி பப்பு, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். "நீயே பில் போட்டு
வாங்கிக்கோ, எவ்ளோன்னு கேட்டு" என்று சற்று தள்ளி நின்றேன். அவளும், புத்தகத்தையும் காசையும் அவரிடம் நீட்டியபடி "இந்த புக் எவ்ளோ இந்த புக் தாங்க "  என்றெல்லாம் கேட்டு பார்த்துவிட்டாள். அவரோ, பப்புவின் பக்கம் திரும்பாமல், பின்னால் வருகிறவர்களிடமெல்லாம் பில் போட்டு கொடுத்தபடி இருந்தார். கேட்டு கேட்டு அலுத்து போனவள், "இந்தா நீயே கொடு" என்றதும், அவளிடமிருந்து வாங்கி பணத்தை நீட்டினேன். உடனே, பில் போட்டு கொடுத்தார். "பாத்தியா, பெரியவங்க குடுத்தாதான் வாங்குறாங்க" என்று நொந்துக்கொண்டாள்.  :‍(

* ஒரு பாதையை முடித்ததும், பப்பு  "எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிதாப்பா... நடக்கவே முடியலை" என்றாள். பெரிம்மாவும், "குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா, நான் இந்த ஸ்டால்லே இருக்கேன்" என்றதும், கான்டீனை நோக்கி நடந்தோம். அரங்கே நிரம்பி இருந்தது. மைக்கில், "வாசகர் ஒருவர் ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டை விட்டுவிட்டு சென்றுவிட்டார்" என்ற அறிவிப்பு! "கார்டை கூடவா விட்டுடுவாங்க" பெரிய மனுஷி பப்புதான்!

* கூட்டத்தை பார்த்து பயந்து போன நான், திரும்பி எப்படி இந்த கூட்டத்தில் வந்து பெரிம்மாவை கண்டுபிடித்து....என்று மலைத்து போனேன். "நீ எதுக்கு வந்தே?புக் வாங்க வந்தியா இல்ல...சாப்பிட வந்தியா" என்று ஒரு பொ.அவை  போல் கேட்டேன். அவளும், பொ. பெண் போல், "நான் ஐஸ்க்ரீம் சாப்பிடதான் வந்தேன்" என்றாள் வெகு தீர்மானமாக!

புக் ஃபேருக்கு குழந்தைகளை கூட கூட்டிப்போவதன் வசதிகள் இரண்டு வகைப்படும்:-

1. ஐஸ்க்ரீம் வாங்கினால் "கொஞ்சம் ஒரு வாய்" என்று கெஞ்சி  நாமும் சுவைக்கலாம். அல்லது, பஞ்சுமிட்டாய் வாங்கிவிட்டு, "இது கொஞ்சம் நீ எடுத்துக்கிட்டு ஒரு வாய் எனக்கு ஐஸ்கோலா தாயேன்" என்று பண்டமாற்று செய்யலாம்.

2. "கீழே இருக்கிற செல்ஃப்லேருந்து ஒவ்வொரு புக்கா எனக்கு எடுத்து குடு"
 என நின்றபடியே புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்களுக்கும் , ஒரு நல்ல விளையாட்டாக இருக்கும். ஹிஹி ("ஆச்சி, இது வேணாமா? இந்த புக் வீட்டுல இருக்கே?")

*ஐஸ் கோலாவையும், பஞ்சுமிட்டாயையும் காலியாக்கிய பிறகு, பெரிம்மாவையும் கண்டுபிடித்துவிட்டோம். சோட்டா பீம் கடையில் பப்பு ஃப்ரீசாகிவிட்டாள். "இதெல்லாம் அதுலேயே வந்ததுதானாம்..." என்றாலும் நோ சமாதானம். "நைன்ட்டி ருபீஸ்க்கு நாம வேற புக் வாங்கலாம்" என்றதும் கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.
* "உன் வயசுக்கு படிக்கிறதா எடு...சின்ன பசங்களோடதெல்லாம் எடுக்காதே..அதெல்லாம், நீ சின்ன வயசுலேயே படிச்சு முடிச்சுட்டே "என்று அவ்வப்போது (டோரா, சோட்டா பீம் புத்தகங்களை என்று வாசிக்கவும்) சொல்லி  ஒரு பொ.அ வாக நடந்துக்கொண்டேன்.

*நவ்நீத் ஸ்டாலை பார்த்துவிட்டு, "இது குட்டி பசங்க புக்குப்பா" என்று ஓடிவிட்டாள். புத்தகங்களை எடுக்கு வேகத்தை பார்த்ததும், "படிச்சு பார்த்துட்டு, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா வாங்கலாம். டைட்டில் பார்த்து வாங்கிட்டு நமக்கு லாஸ்ட் டைம் என்ன ஆச்சு." என்று பொ.அவாக நடக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். பொறுத்து பொறுத்து பார்த்தேன். பப்பு, இடத்தை விட்டு நகருவதாக இல்லை. "படிச்சு பார்க்கலாம்.. ஆனா, ஃபுல்லா படிச்சு பார்க்கணும்னு இல்ல...கொஞ்சம் படிச்சுட்டு, இன்ட்ர்ஸ்டிங்கா இருந்தா எடுத்துக்கோ" என்று நிபந்தனைகளை, நானே மாற்ற வேண்டியதாகிவிட்டது.

 * இறுதியாக, பப்பு ஹேப்பி NBT. நானும் ஹேப்பி NBT. :‍)

 *. உமாநாத் செல்வனை,கார்த்திக்கை , சுகிர்த ராணியை, சந்தித்தோம்.  பப்புவுக்கு ,கார்த்திக்கை தவிர மற்றவர்கள் அறிமுகம் இல்லையாதலால் ஒரே ஙே!

* மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு வெளியில் செல்வதை நினைத்தாலே தலை சுற்றியது. வண்டலூர் ஜூ போல, உள்ளே பேட்டரி கார் விட்டால் நன்றாக இருக்கும். எதிர்பட்ட ஒரு போலீஸ்காரரிடம், "எந்த பக்கம் எக்சிட்" என்றதும், "நேரா போங்கம்மா" என்று நடுவில் இருந்த பாதையை காட்டினார்.  சொல்லும்போது, அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. இந்த திருவிழா கூட்டத்தில் அந்நியமாக உணர்ந்திருப்பார் போல! அவர் கை காட்டிய திசையில் வெளியில் வந்தோம். வலது பக்கம் "சாப்பிட வாங்க"

* இன்னொரு ரவுண்ட்ட் ஐஸ்கோலாவும், பஞ்சுமிட்டாயும், இரண்டு அப்பளங்களையும் நொறுக்கிவிட்டு வெளியில் வந்தோம். ஆவேசமாக, ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார். இடையில், ஒரு குரல் குறுக்கிட்டது, கூட்டம் சிரித்தது. ஓ! சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல!

* மீட்டர் போடும் ஆட்டோ, கிடைத்து வீட்டுக்கு வந்து புக்ஃபேர் பற்றி ஸ்டேட்டஸ் போட்டதும்தான், கடமையை செய்த திருப்தி கிடைத்தது!! ஹப்பாடா! :‍)ஆனாலும், ஒரே ஒரு குறை மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது!! கிளம்பும் அவசரத்தில், கேமராவை எடுக்க மறந்து தொலைத்துவிட்டேன்! ச்சே! இப்பொழுது நொந்து என்ன பயன்...ம்ஹும்!

Sunday, January 08, 2012

புத்தக கண்காட்சி துளிகள்

இந்த பதிவு போடலைன்னா, அதுவும் சென்னையில இருந்துக்கிட்டு போடலைன்னா பதிவரா இருந்து என்ன பிரயோசனம்? அதனால மீ டூ ஜாயினிங் தி ஜோதி.......

* மகளிருக்கு மகத்தான யோசனைகள்என்றெல்லாம் புத்தகங்கள் இருந்தன. அதில் என்ன யோசனைகள் இருக்கும் என்ற நினைப்பிலேயே நடந்து போனதில், அந்த கடையை தவற விட்டு விட்டேன்(!).

*”ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்கிடாதீங்கஎன்ற புத்தகத்தின் அட்டையில் கொலவெறியோடு மிரட்டிக் கொண்டிருந்தார், நீயா நானா கோபி. அவரே, இவ்வளவு தூரம் சொன்னபிறகும் வாங்கவா செய்வோம்? (சாதா நாளிலேயே மனுசன்காட்டு காட்டுன்னு காட்டுவார். அட்டை படத்தில் சொல்லவா வேண்டும்? டெரர்தான், போங்க!)

* தமிழ்நாட்டில் போலி டாக்டர்களுக்கு பஞ்சம் இல்லாமலிருப்பதன் ரகசியம் இன்றுதான் புரிந்தது. (நான் +2 முடிச்சப்போ இந்த ரகசியம் தெரியாமப்போச்சே ..ம்ம்ம்….இப்போ மட்டும் என்ன!!) ஒன்றா ரெண்டா....அத்தனை மருத்துவ நூல்கள், உணவு பழக்க வழக்க நூல்கள். உடலின் எந்த பாகத்தில் கோளாறு வந்தாலும், டாக்டரிடம் போகாமலேயே அதன் காரணங்களை கண்டு கொள்ள புத்தகங்கள் இருக்கிறது. அப்புறம். சத்தான உணவு சமைப்பது பற்றி, இயற்கை உணவு பற்றி, மூலிகை மருந்துகள் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு காத்திருக்கிறது!!

* சென்ற வருடம் போல் இந்த சிபிடி காரர்கள் அராஜகம் இல்லை. ஒகேவான சத்தத்தில், அளவான எல்சிடி மானிட்டர்களில் குழந்தைகளுக்கு பாடல்கள், பாடங்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சில கடைகளில், டெஸ்க், டேபிள் கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு சிக் ஸா புதிர் போல ஒரு அட்டை இருந்தது. பக்கத்திலிருந்த பெண்மணி அதை எடுத்தார். பார்த்தால் – அதி ஒரு குட்டி சேர். “100 கிலோ கூட தாங்கும் மேடம்என்றார். கடைக்காரரிடமிருந்து வாங்கி கீழே போட்டு அதில் உட்கார்ந்து பார்த்தார் அவர் சொன்னதை டெஸ்ட் செய்வது மாதிரி!!

*விடியல் பதிப்பகத்தில் உள்ளே நுழைய எத்தனித்தேன். வாசலிலேயே இருவர் நின்றுக்கொண்டிருந்தார்கள். “டேய், அதுல்லாம் புரட்சி புக்கு, நமக்கு ஒத்துவராதுஎன்று மற்றவரை இழுத்தார். இவர், அவரை இழுத்ததில், கடைக்கு உள்ளே செல்ல லைட்டா கேப் கிடைத்தது. வாங்கி முடிக்கும் வரை, இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் போலிருக்கிறது - “சரி, நீ வாங்கிட்டு வா, நான் 46யில இருக்கேன்என்றபடி பேச்சு வார்த்தை சுமூகமான முடிவுக்கு வந்தது.

* அடுத்த அட்டாக் என்சிபிஹெச். அங்கும் ஒரு ஸ்பீடு பிரேக்கர் எனக்கு காத்திருந்ததை நான் அறியவில்லை. சைக்கிள் கேப்பில் சரேலென வந்தார் ஒருவர். வாசலில் இருந்த புத்தகத்தை, எடுத்து நடுப்பக்கத்தை விரித்து வைத்து படிக்கத் தொடங்கினார். உடனே, இருவர் அவரை சரமாரியாக படம் எடுத்தனர். நானும் சற்று பேக் அடித்துவிட்டேன். ஏதோ பிரபலம் போலிருக்கிறது, என்ன தொல்லையப்பா என்று எண்ணியபடி விலகி நின்றேன். உடனே, அடுத்த புத்தகத்தை எடுத்தார். ”இது சரியா இருக்கா?” என்று கேமிராக்காரர்களை கேட்டபடி பிரித்து வைத்துக்கொண்டார். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நிச்சயமாக இவர்கள் பதிவர்கள்தான் என்று மட்டும் தெரிந்து விட்டது. (அப்படி பதிவர்கள் இல்லாமல், அவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் மீ தி சாரி…வாரநாட்களில் கூட்டம் இல்லாத சமயங்களில் இந்த போட்டோ செஷனை வைத்துக்கொள்ளக் கூடாதா? கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன், ப்லீஸ்! J) பைதிவே. அந்த ரேக்கில்தான் ருஷ்ய நாவல்கள் இருந்தன. எனவே, எனக்கும் அங்கே வேலையிருந்தது. எக்ஸ்க்யூஸ் மீ சொல்லி எப்படியோ அடுத்த ரேக்கிற்கு வந்துவிட்டேன். அப்புறம், புகைப்பட கோஷ்டி சென்றதும். அந்த இடத்தை விடாமல் பிடித்துக்கொண்டேன்.

*குழந்தைகள் புத்தகம் என்று போட்டிருக்கிறது. ஆனால், பக்கம் பக்கமாக எழுதி தள்ளியிருக்கிறார்கள். புரட்டும்போதே ஸப்பா.....ஆயாசமாக இருக்கிறது. ஆவ்வ்வ்வ்! இருப்பதிலேயே, குறைவான வார்த்தைகள் கொண்ட புத்தகங்களை பப்புவுக்கு வாங்கிக்கொண்டேன். எனக்குத் தெரிந்து, யுரேகா புக்ஸ் அப்புறம் என்சிபிஹெச், ஓரளவுக்கு பாரதி புத்தகாலயம், அப்புறம், நேஷனல் புக் டிரஸ்ட் யில் மட்டும் குழந்தைகளுக்கான டைட்டில் தேர்ந்தெடுக்கலாம். சென்ற முறையும் சில நல்ல புத்தகங்கள் யுரேகாவில்தான் கிடைத்தன. தூலிகா வெல்லாம் என் ஆர் ஐகளுக்காகவே புத்தகம் தயாரித்து விலை வைத்திருப்பார்கள் போல. சில கடைகளில், புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த குழந்தைகளைபோதும் போதும், வைச்சுட்டு வாஎன்று விரட்டிக்கொண்டிருந்தனர், பெற்றோர்.

* ஒரு சில பதிப்பகங்களில், சில பெரியவர்கள், சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணாடி அணிந்த/அணியாத கண்களால், போகிற- வருகிறவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன கோபமோ தெரியவில்லை. பார்க்கவே, பயமாக இருந்தது. புகைப்படங்களிலிருந்துதான் என்றாலும், எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே இருந்தது. பீதியாக இருந்ததால் அடுத்த ஸ்டாலுக்கு ஓடி வந்துவிட்டேன். ஒருவேளை அவர்கள்தான் இலக்கியவாதிகளோ என்னவோ?!

*ஒரு கடையின் முன் அவ்வளவு கூட்டம். நானும் கூட சென்று எட்டிபார்த்தேன். மணல் கடிகாரம், தொலைநோக்கி, உருபெருக்கி, ஸ்டெத்தாஸ்கோப் எல்லாம் அடிக்கி வைக்கப்பட்டு இருந்தது. ரொம்ப ஜாலியாக இருந்தது. விலை மட்டும் கேட்கவில்லை. மற்றபடி, எக்ஸிபிஷனுக்கான உண்மையான அர்த்தம் அங்குதான் இருந்தது.

* ஒரு ஸ்டாலில், புத்தகங்களே இல்லை. குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். இளைப்பாறும் இடம் போலிருக்கிறது, தண்ணீர் கிடைக்குமாவென்று சுற்றும் முற்றும் பார்த்தேன். அய்யோ...அம்மா, ஏதோ இலக்கியவாதிகள்/ எழுத்தாளர் Vs வாசகர் சந்திப்பு மாதிரி ஏதோ எழுதி இருந்தது. ரெஸ்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

* எதிர் அல்லது கருப்பு பிரதிகள் என்று நினைக்கிறேன். போகலாம் என்று எண்ணினேன். ஆனால், அங்கும் ஒரு சிறு கூட்டம். கேமராவும், மைக்குமாக புதிய தலைமுறை டீம். ’என்னடா, ஒரு பிரபலம் புத்தகம் வாங்கக்கூட உரிமையில்லையா, உடனே வந்துடறாங்க’ என்று எண்ணியபடி நகர்ந்தேன்...யாரு, பிரபலமா...அட, நாந்தாங்க!! ;-)

*பார்த்ததிலேயே, டிஸ்கவரி புக் ஸ்டால் கல்லாவில் இருந்தவர்களின் முகத்தில்தான் சிரிப்பு இருந்தது.

* பதிவின் இறுதிக்கு வந்துவிட்டோம். பதிவர் சம்பிரதாயப்படி முடிக்க,நான் வாங்கிய சில புத்தகங்களின் பட்டியல் இதோ….

- மஹா ஸ்வேதா தேவியின் சிறுகதைகள் - நேஷனல் புக் டிரஸ்ட்

- சுதந்திர காற்று - பேபி காம்ப்ளி (விடியல் (?))

- ஜூதான் - (விடியல்)

- சூன்யப் புள்ளியில் பெண் - நவ்வல் எல் ஸாதவி ( உன்னதம்)

- லெனினுக்கு மரணமில்லை - அலைகள்

- பாகிஸ்தான் சிறுகதைகள் - சாகித்ய அகாடமி

- சினிமா : திரை விலகும் போது (கீழைக்காற்று)

- கண்ணை மறைக்கும் காவிப்புழுதி (கீழைக்காற்று)

- வானவில் - என் சி பி ஹெச்

- தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் - மூவலூர் ராமாமிருத அம்மையார்.

- விடுதலைப் போரின் வீர மரபு (கீழைக்காற்று)

இவை தவிர, பொதுவாக வாங்க வேண்டியவை:

- சோளகர் தொட்டி

- எரியும் பனிக்காடு

- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

அவை சென்ற வருட புத்தக சந்தையில் வாங்கியது. வாசித்ததில், பரிந்துரைக்கவும் தோன்றியது. அதனால், இந்த லிஸ்ட்!!

இந்த வருடம் வாங்கியவற்றைப் பற்றி அடுத்த வருடம்ம்ம்ம்ம்ம்ம்….. டொண்ட்டடொய்ங்!!

* ’வயிற்றுக்கும் ஈயலாமே’ என்று அரங்கை விட்டு வெளியே வந்தால். ஒருவர் மைக்கில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருந்தார். ஐஸ்க்ரீம் கடை இருந்தது – ம்ஹூம்….வாங்குவதற்குள் ஐஸ்க்ரீம் பாலாக மாற வாய்ப்பு அதிகம். அடுத்த கடையிலும் அப்படியே! இயற்கை உணவு என்று பழ ஸ்டால் – டென்சிங்-கே சவால் விடும் அளவுக்கு இருந்தது,முகப்பு. மனதை திடப்படுத்திக்கொண்டு டீக்கடை அருகில் சென்றேன்.’அமெரிக்காவில், லிஃப்ட் 3 5 7 இப்படிதான் இருக்கும். என் கூட வந்த ஒரு அமெரிக்கர், என்னை பார்த்து ஒரு வார்த்தை கேட்டார். அந்த ஒரு வார்த்தை. மிகவும் மரியாதைக்குறைவான வார்த்தை. அந்த, கேவலமான வார்த்தையை அவையில் சொல்லலமா, சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. என்னைப் பார்த்து அவர் கேட்ட அந்த ஒரு வார்த்தை ”யூ இண்டியன்ஸ்”?’ - பின்னாலிருந்து மைக்கில் துரத்திய குரல்தான்! அவ்வ்வ்வ்வ்!! இங்கியுமா? வயிற்றுக்கு ஈயும் எண்ணத்தை கைவிட்டு எக்சிட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்.