வல்லியம்மாவின் மாமியார் டைரியை வாசித்ததும் மருமகளின் டைரிக்குறிப்புகள் நினைவுக்கு வந்துவிட்டது. :-)
திருமண ஆல்பங்களில் புகைப்பட கவரேஜில் புது மாமியாருக்கு எழுந்த முதல் தர்மசங்கடத்தைப் பற்றி சுவாரசியமாக எழுதியிருந்தார்.
எனது இடுகை திருமண அழைப்பிதழ் பற்றி.
திருமண அழைப்பிதழ்களையும் இருவீட்டாரும் தனித்தனியாகவே அச்சடித்து அழைப்பார்கள். திருமண சம்பிரதாயங்களில் எனது அறிவும், ஆர்வமும் பூஜ்மாதலால் 'இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்' என்று ஒதுங்கிவிட்டதில் இந்த ஞானமெல்லாம் மிஸ்ஸிங். இருவீட்டாரும் அவரவர் பக்கத்திலிருந்து 50 பத்திரிக்கைகளை மாற்றிக்கொண்டதாக நினைவு.
பெரியவர்கள் சார்பான அழைப்பிதழை தவிர்த்து, எங்கள் சார்பாக ஒரே மாதிரியான அழைப்பிதழையே நண்பர்களுக்குக் கொடுக்கலாமென்று நானும் முகிலும் தீர்மானித்திருந்தோம். ஓலைச்சுவடி போன்ற ‘நறுக்கிதழை' - மூன்று இலைகள் கொண்ட அழைப்பிதழை தேர்ந்தெடுத்திருந்தோம். முகிலுக்கு 200 . எனக்கு 150. அழைப்பிதழ்களின் எண்ணிக்கைதான்!
அழைப்பிதழின் அட்டையில் “Mugil weds Mullai' என்பதற்கு பதிலாக, எனக்கு வேண்டிய அழைப்பிதழில் "Mullai weds Mugil" என்றும் , உள்ளேயும் மற்றும் சைன் ஆஃபிலும் எனது பெயர் முன்னால் வரும்படி அச்சடித்து தரும்படியும் கேட்டிருந்தேன். முகிலும் அவரது தந்தையிடம் கூறினார். ஆனால், அங்கிளுக்கு இருந்த வேலைப் பளுவில் எனது விண்ணப்பம் மறக்கப்பட்டு கீழ் கண்டது போல எல்லா அழைப்பிதழ்களும் வந்து சேர்ந்தன.

எல்லா இடங்களிலும் முகில் பெயரே முதலில். எனக்கோ ஏமாற்றம். ஏதோ, வாழ்க்கையில் நமது பெயர் தாங்கி வரும் பத்திரிக்கை இது ஒன்றுதான். அதில் கூட நமது ஆசையில் மண் என்று பெருத்த ஏமாற்றம்(!).
எனது ஒரு சில நண்பர்கள் மணமகனுக்கு அடிக்கப்பட்ட அழைப்பிதழ்களையே கொடுத்திருக்கிறார்கள். “உன் இன்விடேஷன்லே மாத்தி போட்டிருக்கலாம் இல்லே” என்றதற்கு ”நீ கொடுக்கப் போற 100 இன்விடேஷனுக்கு மாத்தி போடணுமான்னு அவர் சொல்லிட்டாரு” (ஹ்ம்ம்...இங்கே தொடங்கும் காம்ப்ரமைஸ்....!) என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு 50 இன்விடேஷன்கள் என்றாலும் நிச்சயம் நானும் இதே போல செய்துவிடக்கூடாது என்றும் நினைத்திருந்தேன்.
அதுவும் முகில் அழைப்பது போன்ற அழைப்பிதழை எனது நண்பர்களுக்கு எப்படி நான் கொடுப்பது?
எனது கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் என்னையல்லவா அறிவார்கள். முகிலை எப்படி அறிவார்கள்?
உடனே ட்ரிங்...ட்ரிங்...
பெரிம்மாவுக்குத்தான்!
ஆனால், அம்மாவும் மாமாவும் ”இதையே கொடேன், என்ன பெரிசா” என்று ‘ இது எல்லாம் ஒரு விஷயமா' என்பது போல சமாதானம் பேசி எதிரிகளாகிப் போயினர்.
ஓரிரு நாட்களில், எங்கள் தரப்புக்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. சென்னை மேனகா கார்ட்ஸ். என் முகம் வாடுவதை ஒருபோதும் தாங்கவியலாத பெரிம்மாவுடன் சென்று எனக்கான அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்து கீழ்கண்டது போல அச்சடிக்கப் பெற்றேன்.
நான் அழைப்பது போன்று அழைப்பிதழின் வடிவமும், அட்டையில் எனது பெயரே முதலிலும். அதன் பிறகே மனம் கொஞ்சம் ஆறியது. முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சியது(!). ஆனால் அந்த பேதை நெஞ்சத்திற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.... திருமண வாழ்க்கையே காம்ப்ரமைஸ்களால் ஆனது என்று.. (யார் வாய்ஸிலாவது மாற்றி படித்து நொந்து போகவும்...ஹிஹி!!)
சிலருக்கு இது சிறிய விஷயமாக இருக்கலாம். நமக்கு சிறிய விஷயமாக தோன்றுவது பிறருக்கு பெரிதாகத் தோன்றிவிடுகிறது இல்லையா, அதுபோலத்தான்.
(அந்த அழைப்பிதழ்களை, மீதியானவற்றில் 100 அழைப்பிதழ்களை முகில் உபயோகப்படுத்திக்கொண்டார்.அந்த அழைப்பிதழ்களை நான் பயன்படுத்த -வில்லை என்ற மனவருத்தம் முகிலுக்கு இருந்தது தெரிந்தே இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்!)
எங்கள் உறவுகளில் - ஐயர் வைத்து செய்யும் வழக்கம் இல்லை. ராமலிங்க அடிகளின் திருவருட்பாவை ஓதூவார் பாட யாராவது ஒரு பெரியவர் தாலியை எடுத்துக் கொடுக்க டும் டும் டும்தான். உறவினர்கள் திருமணங்களில் நானும் குட்டியும் கலந்துக்கொண்டதை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால், இவை தவிர மற்ற சம்பிரதாயங்கள் எதுவும் நுணுக்கமாக எனக்குத் தெரியாது.
ஆனால், முகில் வீட்டார் வழக்கமோ தலைக்கீழ்.
அதில், 'கூரைப்புடவை' என்ற வார்த்தை புதிதாகக் காதில் விழுந்தது. அதைப் பற்றிய அறிவு எனக்கு கிஞ்சித்தும் இல்லை. யாருக்கோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனெனில் உறவினர்களுக்கு கொடுக்க நிறைய புடவைகள் எடுத்து வைத்திருந்தோம். அதனால், யாரோ ஒரு உறவுக்கு கொடுக்க வேண்டியது போல என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அது எனக்குத்தான் என தெரியவந்தது. என்னவென்று கேட்கப் போக 'கட்டங்கள் போட்ட வாயில் புடவை' என்று பதில் வந்தது.
சமீபத்தில் கற்றுக்கொண்ட பாடம் நினைவுக்கு வந்தது. அது - முகிலிடம் சொல்வதை விட நேரடியாக அங்கிளிடம் சொல்லிவிடுவதே பெட்டர் என்பதே!
அடுத்த ட்ரிங்..ட்ரிங்...
அங்கிளுக்குத்தான்!
“எனக்கு வாயில் புடவைல்லாம் வேணாம் அங்கிள், கல்யாண புடவை இருக்கு இல்லே அதுதான் கட்டிக்கப்போறேன்.”
“தாலி கட்டும்போது கூரைப்புடவைதாம்மா கட்டணும், அதுக்கு அப்புறம் நீ வேற புடவை மாத்திக்கலாம்”
“ஹைய்யோ..அங்கிள்..அது என்னோட ஹைட்டுக்கு முழங்காலுக்கு ஏறிடும்.. பாக்க நல்லாவே இருக்காது. அதுவும் இல்லாம கட்டம் போட்டதுன்னா எனக்கு ஜெயில்லே இருக்கறவங்க கட்டியிருக்க புடவைதான் அங்கிள் ஞாபகம் வருது. ஃபோட்டோலேயும் நல்லா இருக்காது..ப்லீஸ் அங்கிள்” என்று புலம்பி வைத்தேன்.
“இதை ஒரு விஷயமா எடுத்துக்காதே, என்ன? மேடையிலே உட்காரப் போறது ஒரு மணிநேரம் இருக்குமா?!” என்று சின்ன அத்தை அறிவுரை.
சிறைபுகப் போகிறோம் என்பதை சிம்பாலிக்காக குறிக்கவே இந்தப் புடவையோ- சிறைப்புடவை மருவி கூரைப்புடவையாகி விட்டதோ(!!) என்ற கண்டுப்பிடிப்பை லதாவிடம் சொல்லப் போக அவளோ பார்வையால் எரிக்காத குறை!
”புடவையை மாத்திட்டேம்மா, வாயில் புடவையை மாத்திட்டு பட்டுலேயே கூரைப்புடவையைத் தேடி எடுத்திருக்கேன்” - அடுத்த நாள் அங்கிளிடமிருந்து ஃபோன்.
கடைசியாக, கூரைப்புடவையிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை...சிறை புகுவதிலிருந்தும்தான்..!
இதனால் அறியப்படும் நீதி : புது மாமியார்களுக்கு மட்டுமல்ல..பிரச்சினை புது மருமகள்களுக்கும் வரலாம். (மரு)மகள்களின் விருப்பத்தையும் (இரு) வீட்டு பெரியவர்கள் கேட்கலாம். சம்பிரதாயங்களையும் வளைத்துக் கொள்ளலாம். கூரை இடிந்து விழாது! :-)
உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” (கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!) கொஞ்சம் எடுத்துவிடும்படி தீபா, ஜெயந்தி, அமைதிச்சாரல் மற்றும் சாந்தி லஷ்மணை கேட்டுக்கொள்கிறேன்.