Wednesday, September 16, 2009

உ ஃபார்....

...உல்லாசப் பயணங்கள்! (கோல்டா அக்கா, நீங்க பரிந்துரைத்ததுதான்!)

உல்லாச பயணம் அதாங்க டூர்! பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் - மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது - ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது!)ஒருநாளிலேயே, நண்பர்களை மாற்றும், நெருக்கத்தைக் கொடுக்கும் திறமை டூருக்கு இருந்தது!

பயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக அறிவிப்புகள் வகுப்புவாரியாக நடக்கும். நாட்கள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அதுவும், 'இப்படம் இன்றே கடைசி' போன்றதொரு தோற்றத்தை அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நாமோ வீட்டில் கெஞ்சிக் கதறிக்கொண்டிருப்போம்,எல்லாவிதமான அஸ்திரங்களையும், 'இனிமே நல்லா படிப்பேன், ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்' போன்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக்கொண்டு. கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, 'இதுக்கு மேல தாங்காது' என்ற இரக்கம் மேலிட காசு கொடுப்பார்கள். இதற்கு மேல் ஏமாற்றினால் பெண் எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். ;-))

பெயர்கொடுத்தபின், அடுத்த டென்ஷன்கள் ஆரம்பிக்கும். அடுத்தகட்ட திட்டமிடல்கள். என்ன மாதிரி பை எடுத்துச் செல்வது - நம்மிடம் இருக்கும் எல்லா ஃபேஷன் வஸ்துகளையும் அடுத்தவரிடம் காட்டிக்கொள்ள் கிடைத்த அரியதொரு வாய்ப்பு இல்லையா..அதை ஒழுங்காக பயன்படுத்தி peer pressure ஏற்றிவிடுவது நமது கையிலல்லவா இருக்கிறது! மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம்! இத்தனைக்கும் போகுமிடம் மெட்ராஸ் - மகாபலிபுரம், வேடந்தாங்கல் தான்!

அடுத்தது, எந்தெந்த டீச்சர்கள் நம்முடன் வருகிறார்கெளென்று பற்பல வதந்திகள் கிளம்பும். 'ஐயோ..சயின்ஸ் டீச்சர் மட்டும் வரக்கூடாதுப்பா', 'ஹிஸ்டரி டீச்சரா..ஆ...அதுக்கு போகமலே இருக்கலாம்பா' என்று கதைகள் பேசி மாய்ந்துப் போவோம். கண்டிப்பாக பி.இ.டி டீச்சர் வருவார். நாட்களை எண்ணியெண்ணி, யார் பக்கத்தில் யாரமருவதென்று முடிவுக்கட்டி, 'காலையில் ஜன்னல் சீட் உனக்கென்றால் மதியம் எனக்கு', அல்லது 'போகும் போது ஜன்னல் உனக்கு, வரும்போது எனக்கு' என்று பஞ்சாயத்து பேசி கிளம்புவதற்கு முதன்நாளும் வந்துவிடும். அந்த இரவுதான் மிகக் கஷ்டம். பரபரப்பில், மகிழ்ச்சியில், தூக்கமே வராது. வீட்டிலிருந்து கடைசிநேர அட்வைஸ்கள் - 'ட்ரெஸை அழுக்காக்கிட்டு வராதே', 'வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்காதே', 'டீச்சர் கூடவே போகணும்', 'பத்திரமா இருக்கணும்', 'கண்டதை வாங்கி சாப்பிடாதே', 'வாந்தி மாத்திரை பையிலே சைடிலே வச்சிருக்கேன் etc - போதாதென்று பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் அட்வைஸ்கள் வேறு - நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான்.

அதென்னவோ, நான் போன உல்லாச பயணங்களும் (ஒன்றைத் தவிர) அதிகாலை மிகச்சரியாக நாலு மணிக்குத்தான் வரச்சொல்லுவார்கள். பேருந்து மிகச்சரியாக நாலரை மணிக்கு கிளம்பிவிடும், யார் வந்தாலும் வராவிட்டாலும் என்பார்கள். மப்ளர் கட்டிய அப்பாக்கள், ஸ்வெட்டர் போட்ட அம்மாக்கள், ஷால் போர்த்திய ஆயாக்கள், மற்றும் தலையை கோதியபடி நுழையும் அண்ணாக்களுடன் ஒவ்வொருவராக வந்து சேர அட்டெண்டன்ஸ் எடுத்தபின் ஆறு மணிக்கு டாணென்று பஸ் கிளம்பும். தூக்கக் கலக்கத்தில் முகங்கள் - புன்னகைகள் - 'தூக்கம் வருதா, மடிலே படுத்துக்கோ' போன்ற பாச அலைகள்!!
முதலில் சாமிப்பாட்டு எல்லாம் போட்டபின்னர் மெதுவாக சினிமா பாடல்கள் ஆரம்பிக்கும். 'லாலாக்கு டோல் டப்பிம்மா', 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி'தான் என்று பாடல் ஒலிக்கத் தொடங்கும். வீடு, ஹோம்வொர்க், வகுப்புகள் என்று எல்லாமும் ஊர் எல்லையின் மைல்கல்லோடு விடைபெற்றிடும். 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்' என்று நினைத்த ஆசிரியர்கள் கூட சிநேகமான மறுபக்கத்தைக் காட்டுவார்கள். பாடல்களை முணுமுணுப்பதோடுஇ கைத்தடடி தாளம் போட ஆரம்பிப்பார்கள். ஒருவித உல்லாச மனநிலை எல்லோரையும் ஆக்ரமிக்கத் துவங்கும்! நமக்கேத் தெரியாமல் கைகள் தாளமிடத் துவங்கும். அதிகாலைக் காற்று சிலீரென்று முகத்தில் படர இந்தப் பயணம் முடிவிலாமல் நீண்டாலென்ன என்பது போலத் ஆசை அரும்பும்!

வெயிலடிக்கத் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் இடமாறுதல்கள். உற்சாகமாக ஆரம்பிக்கும் கை தட்டல்கள் மெதுவாக ஓயும்போது யாராவது யாரையாவது எழுப்பி முன்னே தள்ளி டான்ஸ் ஆட வைத்துக் கொண்டடிருப்பார்கள். மீண்டும் களை கட்டத்துவங்கும் ஆடலும் பாடலும் அதனோடுச் சேர்ந்துக் கொண்ட சிரிப்பொலியும். காலை உணவு முடித்தபின் ஜன்னலோர இடமாறுதல்கள், கடி ஜோக்குகள், டம் ஷரத், அந்தாக்‌ஷரி போன்ற எவர்க்ரீன் விளையாட்டுகள் தொடங்கும். இப்போது பேருந்தின் முன்பக்கம் கூட்டமாகியிருக்கும். சிலரது மடிகள் சிலருக்கு இருக்கையாகியிருக்கும். தோழியரின் கைகள் தோளை அரவணைத்திருக்கும். மெதுவாக எல்லோரது பையிலிருக்கும் நொறுக்குத் தீனிகள் பையை விட்டு வெளிவரும்.

ஒப்பந்தப்படி ஜன்னல் சீட் கொடுக்காத சண்டைகள் லேசாக புகையும். தாளமிட்டு கைவலி வந்திருக்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய இடமும் வந்திருக்கும். டீச்சரை முன்னால் செல்ல விட்டு பின்னால் குரூப்பாக நடந்து மக்களை வேடிக்கைப் பார்த்து என்று பாதிபயணம் முடிந்திருக்கும். மீதிப்பயணமும் முடிந்து சாயங்கால வேளையில் தேநீர் அருந்த நிறுத்தியிருப்பார்கள். முகங்கள் களைப்புடனும், லேசான சோகத்துடனும் இருக்கும். தாலாட்டும் பாடல்களுடன் திரும்ப ஊருக்குள் நுழைகையில், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்றிருக்கும்...அடிக்கடி இப்படி டூர் வைத்தாலென்ன என்றும் தோன்றும்! தூக்கம் சொக்க திரும்ப அட்டெண்டென்ஸ் எடுத்தபின் அப்பா-அம்மாக்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போய்விட்டு நாளை காலை வீட்டிற்கு செல்பவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையும். 'டூர் எப்படி இருந்துச்சு' என்ற கேள்விக்கு ‘ம்' என்று ஒற்றை வார்த்தையில் தலையசைப்போடு புன்னகையை பதிலாக்கிவிட்டு மௌனமாக இரவின் இருட்டில் காலடிச் சத்தங்கள் தேயும். மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்!

20 comments:

jayanthi said...

Akka you have taken my memories back to the School Days. The only tour I went when I was in 6th std to the Neyveli and Sathanur Dam ( were you there in that tour when Mr.KasthuriRangan is the HM?).

Your blogs are excellent and realistic and interesting to read and there stands your writing skills.

Good work akka

Regards

Jayanthi

சின்ன அம்மிணி said...

ம்ம்ம். பப்புவோட டூர் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா, உங்க டூர் பத்தி எழுதியிருக்கீங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான். //
:)
நான் முதல் டூரே கல்லூரியில் தான் .:(

வல்லிசிம்ஹன் said...

ஓ.முல்லை. என் உல்லாசப் பயணத்தை நினைக்க வைத்துவிட்டீர்களே:)


பஸ்ஸில் உங்களோட வந்த அனுபவம்!!

பின்னோக்கி said...

நல்லா இருக்கு. நான் 8 வது படிக்கும் போது தூத்துக்குடியில இருந்து திருநெல்வேலிக்கு பொருட்காட்சிக்கு கூட்டிக்கிட்டு போனாங்க 1 நாள். அதுதான் நான் போன ஒரே ஒரு சு(சி)ற்றுலா. பரவாயில்லை, சென்னை போன்ற A கிளாஸ் சிட்டியில படிக்குறதோட பலன் இதுதான். அதுவும் பெரிய ஸ்கூல்ல படிக்கனும்.

ஆயில்யன் said...

சூப்பர் !


உங்ககூடவே டூர் வந்த மாதிரி ஒரு ஃபீலிங்க் @த ஸேம் டைம் எனக்கு பிஸ்கெட்டு அப்புறம் 2 முறுக்கு மட்டும்தான் கொடுத்தீங்க !:(

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...

ம்ம்ம். பப்புவோட டூர் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா, உங்க டூர் பத்தி எழுதியிருக்கீங்க :)///


ஆமாம் அம்மிணி இப்ப
பப்பு சீனியர்
ஆச்சி ஜூனியர்!

இனி ஒரே நாஸ்டாஜிக்கல் (என்னய்யா வாயிலயும் நுழைய மாட்டிக்கிது டைப்பவும் வரமாட்டிகிது) தான் :))))))))

பின்னோக்கி said...

//மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்!

எனக்கு தீபாவளி அன்று, இரவு, கடைசி பட்டாசு வெடித்தபின் இதே மாதிரி சோகம் வரும். அடுத்த தீபாவளி எப்ப என்று. அது ஒரு கனாக் காலம்ங்க. எல்லா சின்ன சின்ன சந்தோசங்கள் போயிடுச்சு.
ஏங்க இந்த மாதிரி பதிவ போட்டு காலங்கார்த்தால சோகமாக்குறீங்க :-) ??

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆஹா,
நானே டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. எங்க ஸ்கூல்ல டூர் என்றால் குறைந்தது 3 நாள். ஒன்பதாவது படிக்கும் போது 7 நாட்கள் அந்தரா முழுவதும். தென் இந்தியா முழுவதும் சுற்றியாச்சு. ஒருதடவை டெல்லி டூர் 12 நாட்கள் ட்ரைன்ல. நான் இதுவரை ஒரு டூர் கூட மிஸ் பண்ணதில்லை, காரணம் எங்க அம்மா வேலை பார்த்த ஸ்கூல்ல தான் நான் படிச்சேன்.

என்ன இது பழசெல்லாம் ஞாபகம் வர வச்சுடீங்க........

PITTHAN said...

ரொம்ப நல்ல எளுதி இருக்கிங்க, ஆனா நான் போன பதிவு பின்னூட்டத்தில், பப்புவிடம் அவளுடைய பயண அனுவங்களை, பப்புவின் மழலை மொழியில் எளுத கோட்டுக்கொண்டேன். பப்புவின் பயண அனுவங்களை கோட்டு எளுதுங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

எங்களுக்கும் சேர்த்து கொசு வத்தி சுத்திட்டீங்களே :)

கோமதி அரசு said...

முல்லை,
உங்கள் சுற்றுலா அனுபவங்கள்,

அருமை.என் இன்பசுற்றுலா 4வது படிக்கும் போது ஆரம்பம் ஆனது,
11வது வரை தொடர்ந்த மகிழ்ச்சியான
காலம்.

என் மலரும் நினைவுகளை தூண்டி விட்டது, உங்கள் பதிவு. நன்றி.

கதிர் - ஈரோடு said...

ஆறாம் வகுப்பில நானும் டூர் போனேன்... எல்லாம் இப்போ மறந்து போச்சு..

உங்க இடுகை படிச்சு.. சில மின்னல் வருது

அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய பேரின் பள்ளி டூர் அனுபவங்களை ஜெராக்ஸ் எடுத்து போட்டிருக்கிறீர்கள்

:)))

விறுவிறுப்பான நடை

தியாவின் பேனா said...

பழைய நினைவுதான் வருகிறது...

" உழவன் " " Uzhavan " said...

உள்ளத்தைக் கிளறிவிட்டுச் செல்கிறது உங்களின் இந்த அருமையான எழுத்து.

குடுகுடுப்பை said...

நினைவுகள் நல்லா இருக்கு..

உ ஃபார்....

...உல்லாசப் பயணங்கள்! ..
----------

உ ஃபார்....

...உல்லாச பாணங்கள்! அப்படின்னு படிச்சிட்டேன்.

மாதவராஜ் said...

இன்னும் எழுதியிருக்கலாமே.... சட்டென்று முடிந்தது போல இருந்தது டூரைப் போலவே. சின்ன வயசில் டூர் போன ஞாபகங்களும், இப்போது பிரித்துவை அதிகாலையில் பள்ளியில் டூருக்கு அனுப்பிய ஞாபகங்களும் சேர்ந்து வந்தன. அருமையான பகிர்வு.

Deepa (#07420021555503028936) said...

//உ ஃபார்....

...உல்லாச பாணங்கள்! அப்படின்னு படிச்சிட்டேன்.//
:-)))
திருந்தவே மாட்டீங்களா?

முல்லை!

சின்ன வயசு டூர் ஞாபகங்களை அப்படியே மனக்கண் முன் கொண்டு வந்துட்டீங்க.
ஆனா நானும் அன்னிக்கே சொன்ன மாதிரி flow கலக்கலா போய்ட்டிருக்கும் போது திடீர்னு முடிச்சிட்டீங்க.