Thursday, January 28, 2010

ஏ ஃபார் ...

...ஏக்கம்!

சுதா கான்வெண்டில் ஆண்டுவிழா நடக்கும். (ஸ்கூல்னு இருந்தா ஆண்டு விழாவெல்லாம் நடக்கத்தானே செய்யும்..ஹூம்..மேலே!) அது எப்பொழுதும் ஜனவரி-பெப்ரவரி சமயங்களில்தான் நடக்கும். யூகேஜி படிக்கும் போது வெல்கம் டேன்ஸ் ஆடுவதுதான் ஃபேஷன். அட்டையில் எழுதின எழுத்துகளை கழுத்தில் மாட்டிக்கிட்டு, உள்ளேருந்து ஒவ்வொருத்தரா ஆடிகிட்டே வந்து
கடைசிலே W E L C O M E-ன்னு வரிசையா நிப்பாங்க. அப்புறம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு டான்ஸ். யூகேஜி படிக்கும்போதுதான் முதன்முதலா இந்த டான்சை பார்த்தேன். அதுக்கு முன்னாடி பெரிம்மா ஸ்கூல் ஆண்டுவிழாலே
பரதநாட்டியம் ட்ரெஸ் போட்ட அக்காதான் கை கட்டை விரலை தோள்பட்டையிலேருந்து சுத்தி வளைச்சு தரையிலே தொட்டு வணக்கம் வைச்சுட்டு ஆடுவாங்க. அப்புறம், 'அழகு மலராட', 'இந்தியா என்பது என்வீடு'
'வான் போலே வண்ணம்' பாட்டுக்கெல்லாம் அக்காங்க ஆடறதை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து 'ரா ரா ரஸ்புடினு'க்கும், 'லீவ் அ லைட்'டுக்கும் பரதநாட்டியமெல்லாம் ஆடியிருக்கேன். எங்கே விட்டேன்...வெல்கம் டேன்ஸ்..ஆமா, வெல்கம் டேன்ஸுக்கு பொதுவாக முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு பசங்களைத்தான் சேர்ப்பாங்க. ஏன்னா அப்போதானே குட்டீஸா இருப்பாங்க. சில சமயத்துலே யூகேஜிலேருந்து ஒரே ஒருத்தரை மட்டும் சேர்த்துப்பாங்க.

ஒண்ணாவதுலே, எங்க கிளாஸுலேருந்து கணிசமா கொஞ்சம் பேரை டான்ஸுக்கு சேர்த்துக்கிட்டாங்க. மிஸ் என்னை பார்த்து, டான்ஸ் மாதிரியான நளினமான விஷயங்கள் எல்லாம் எப்படி இந்த பொண்ணுக்கு வரபோகுதுனு தப்பா எடை போட்டுட்டாங்க போல. அப்படி தேர்ந்தெடுக்கப்படறதுக்கு சில தகுதிகள் தேவைப்படும். அதாவது, அவங்க சொல்ற கலர்லே பட்டு பாவாடையோ, பாவாடை சட்டையோ இருந்தா உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்புறம் முடி வளர்த்து இருக்கணும் இல்லைனா
டான்ஸுக்கேத்த மாதிரி அலங்காரம் பண்ணி விடறவங்க உங்க வீட்டுலே இருக்கணும். அதுலேயும் பரதநாட்டியம் கத்துக்கிற பசங்களுக்கு முன்னுரிமையிலும் முதலுரிமை.

ஆயாவுக்கு, என்னை தினமும் சாயங்காலம் தேடிப்பிடிக்கறதே பெரிய விஷயம்.விளையாடிட்டு, தொலைஞ்சு போகாம ஒழுங்கா வீட்டை கண்டுபிடிச்சு
வந்துட்டேன்னாலே அவங்களுக்கு உலக மகா சந்தோஷம்தான். ஆறுமணிக்கு வாசல்லே இல்லைன்னா, பெரிம்மாக்கிட்டே ட்யூஷனுக்கு வந்த அண்ணாங்க ரெண்டு பேரு, தெருவோட ரெண்டு முனையிலேயும் தேடிக்கிட்டு இருப்பாங்க. (ஒளிஞ்சு விளையாடும்போது அவங்க கூப்பிட்டா எப்படி வரமுடியும்?) இதுலே பரதநாட்டியம் கத்துக்கிறது எல்லாம் ஸ்கோப்லேயே இல்லே. ப்ரென்ச் கத்துக்குறது இல்லேன்னா இந்தி கத்துக்கிறதுன்னா ஒருவேளை என்னை அனுப்பியிருப்பாங்க.

அப்புறம், டான்ஸுக்கு செலக்ட் ஆகிட்டா அவ்வளவுதான். ராஜ மரியாதை. அவங்களுக்கு மட்டும் தனி ரூல்ஸ். மத்தியானம் சாப்பிட்டபுறம்தான் ப்ராக்டீஸ் இருக்கும். அதனாலே மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வந்துடணும்.
மாடிலே ஒரு ரூம் இருக்கும். சாதாரண நாட்களில் அங்கே அனுமதி இல்லை.(அந்த மாடி ரூம்க்குள்ளே போகணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் வேணும்) அது ஒரு பொக்கிஷ அறை மாதிரி. அங்கேதான் ப்ராக்டிஸ்.
அப்புறம் ஸ்கூலுக்கு லீவ் போடக்கூடாது. கண்டிப்பா ஊருக்கெல்லாம் போகக் கூடாது (அதாவது ஆண்டு விழாக்கு முன்னாடி) அப்புறம், முக்கியமா ட்ரெஸ் மற்றும் அலங்காரம்.இந்த ரூல்ஸை வச்சுக்கிட்டு இவங்களும் நம்மக்கிட்டே ஒரு அலட்டல் கொடுப்பாங்க.

ஸ்கூலுக்கு பக்கத்துலேயே எல்லோர் வீடும் இருந்ததாலே மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்ட்டுதான் வருவோம். எனக்கு மத்தியானம் ஸ்கூல்லே சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா ஆயா விட மாட்டாங்க. இந்த ப்ராக்டீஸ் இருக்கறப்போ மட்டும் செலக்ட் ஆனவங்க எல்லாம் சாப்பாடு எடுத்துட்டு வரணும், சீக்கிரம் சாப்பிட்டுட்டு மாடி ரூமுக்கு போய்ட்டணும்.
அப்போ மட்டும் கொஞ்ச பேரு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க..அந்த பேக்கை பத்திரமா அவங்க பக்கத்துலே வச்சுப்பாங்க. மிஸ் பார்த்துட்டு ஹோம்வொர்க் வைக்கற செல்ஃப் கீழே வைக்கச் சொல்லுவாங்க. இரண்டாம் வருஷத்துலேயாவது நம்மை கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்கன்னு நம்பிக்கிட்டு இருந்தேன்.இரண்டாம் வருஷத்துலே நாந்தானே சீனியர். உயரமா வேற இருந்தேனா..செலக்ட் ஆகிட்டேன். ஆனா வெல்கம் டான்ஸ் இல்லே..ஃபேஷன் மாறிடுச்சு. கலர் பேப்பர் சுத்தின ஒரு வளையத்தை பிடிச்சுக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டே ஒலிம்பிக் வளையம் மாதிரி ஏதோ ஒரு ஷேப் ஃபார்ம் பண்ணனும்.அந்த வளையம் பார்க்க மல்லிப்பூ சுத்தின மாதிரியே இருக்கும். எனக்கு ஃப்ளூ கலர் வளையம். ஏன்னா என்கிட்டே ஃப்ளு கலர் ஃபிரில் வச்ச ப்ராக் இருந்தது.

ப்ராக்டீஸின் முதல் நாள். 'சாப்பாடு ரெடி ஆனதும் நான் கொண்டு வரேன்னு' ஆயா சொல்லிட்டாங்க. ஸ்கூல்லே சாப்பிடபோறேன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஏன்னா ரவுண்டா ப்ரெண்ட்ஸ் கூட உட்கார்ந்துக்கலாம். டிபன் பாக்ஸ்லேருந்து சாப்பிடலாம். அப்புறம் டேன்ஸூம் ஆடப்போறோம்னு ஜாலியாவும் இருந்துச்சு.ஒரு குதூகலமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன்ன். இந்த சந்தோஷத்துலே மிஸ் எது சொன்னாலும் காதுலே விழவே இல்லை. பெல் அடிச்சது. கொஞ்ச பேருக்கு வீட்டுலேருந்து தாத்தா பாட்டிங்க அம்மா அத்தைங்க எல்லோரும் சாப்பாடு கொடுத்துட்டு போய்ட்டாங்க. வரவேண்டிய எல்லோருக்கும் சாப்பாடு வந்துடுச்சு.எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டாங்க. எங்க ஆயாவை மட்டும் காணோம். எனக்கு பதைபதைப்பா இருக்கு..கிளாஸ் ரூமுக்கும் வாசலுக்கும் எட்டி எட்டி பார்க்கிறேன். அப்புறம் மிஸ் போய் சாப்பிட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு தெரு தள்ளிதானே...நானும் வேகமா போனா, ஆயா எங்க ஸ்கூல் தெருமுனையிலே வந்துக்கிட்டு இருக்காங்க... நான் வர்றதை பார்த்துட்டு என்னை வீட்டுக்கு கூப்டுக்கிட்டு போய்ட்டாங்க. வீட்டுலே போய் அந்த டிபன்பாக்ஸ்லே
சுடசுட இருந்த கடலைக்குழம்பு சாதம்,ரசம் சாதம் சாப்பிட்டேன்.ஆயா தட்டுலே போட்டு சாப்பிட சொன்னதை கேக்கவேயில்ல.

அப்புறம், ரெகுலரா போய் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். தினமும் கனவிலெல்லாம் கூட டான்ஸ் ஆடறமாதிரியே வரும். அந்த நேரத்துலேதான் திடீர்னு ஒரு செய்தி. ஆண்டுவிழா பரிட்சைகள் முடிஞ்சப்புறம்தான்னு. எனக்கு ஒரே பயம். ஏன்னா பரிட்சை முடிஞ்சதும் அடுத்த நாளே நாங்க வடலூர் கிளம்பிடுவோம். ஒருநாள் கூட ஆயா இருக்கமாட்டாங்க. பால்காரருக்கு, கீரைக்கார ஆயாவுக்குன்னு எல்லோருக்கும் சொல்லிடுவாங்க. பத்துநாள் ஊருக்குப் போறோம்னு. ஆண்டுவிழா பரிட்சைக்கு அடுத்த நாள்னு சொன்னதுக்கு ஆயாவும் ஒண்ணும் சொல்லல. பரிட்சைல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, கடைசியா ஒரு நாள் ரிகர்சல் இருந்தது, எல்லோரும் அவங்கவங்களுக்குச் சொன்ன கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்து ஆடணும். நான் மேட்சிங்கா, ஆயா வாங்கிக்கொடுத்திருந்த ப்ளூ கலர் வளையலும் போட்டுக்கிட்டு போய் ஆடினேன்.
அப்புறம் அந்த வளையங்களை எல்லாம் அழகா அடுக்கி மாடி ரூம்லே வச்சிட்டோம். பரிட்சை முடிஞ்சு நாளைக்கு ஆண்டு விழா. அனைக்கு ராத்திரி ஆயா துணியை எடுத்து மடிச்சு பைக்குள்லே வைக்கிறாங்க. 'ஊருக்கு கண்டிப்பா போயே ஆகணும், டான்ஸ் எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டாங்க. வயத்துக்குள்ளேருந்து ஏதோ உருண்டு வந்து தொண்டையை அடைக்குது. எதையோ இழந்த மாதிரி ரொம்ப ஏமாற்றமா இருக்கு. ஆனா அழலை. மிஸ் கிட்டே என்ன சொல்றது,நான் இல்லாம எப்படி பார்ம் பண்ணுவாங்கன்னெல்லாம் நினைச்சுக்கிட்டேன். ஆயாக்கிட்டே சொன்னா,'சீ கழுதை..நீ இல்லாம அங்கே டான்ஸே நடக்காதா'ன்னு சொல்லிட்டாங்க.
'நான் வரலைன்னு நாளைக்கு போய் மிஸ்கிட்டே சொல்லிட்டு வரேன்'னு ஆயாகிட்டே சொன்னேன். 'அதெல்லாம் வேணாம்,அப்புறம் பஸ் கிடைக்காது,
விடிகாலையிலேயே கிளம்பணும்'னு சொல்லிட்டாங்க.

ராத்திரில்லாம் நான் மட்டும் பஸ்லேர்ந்து தப்பிச்சு போய் டான்ஸ் ஆடற மாதிரி ஒரே கனவா வந்தது. அடுத்த நாள், மனசெல்லாம் அவங்க மட்டும் மேடையிலே ஆடறதையும், ஃபார்ம் பண்றதையும் கற்பனை பண்ணிக்கிட்டு பஸ்ஸுலே போய்க்கிட்டிருந்தேன் டான்ஸ் ஆட முடியாத ஏக்கத்தோடே!

27 comments:

பிரியமுடன்...வசந்த் said...

தினமும் கனவிலெல்லாம் கூட டான்ஸ் ஆடறமாதிரியே வரும்//

ஆவ்வ்வ்வ்வ் கனவிலுமா?

முகிலன் said...

இந்தத் தொடர் நல்லாயிருக்கே?

எனக்குக் கூட இது மாதிரி ஒரு அனுபவம் உண்டு (டான்ஸ் இல்லிங்க அது நமக்கு வராது)

ஸ்கூல் ட்ராமால பாரதியார் வேஷம். தூரத்து சொந்தம் ஒரு பாட்டி இறந்து போயிட்டதால அந்த ட்ராமால கலந்துக்க முடியாமப் போயிடுச்சி. உங்க பதிவு அதை ஞாபகப் படுத்திருச்சி.

சின்ன அம்மிணி said...

//ட்டுக்கு வந்து 'ரா ரா ரஸ்புடினு'க்கும், 'லீவ் அ லைட்'டுக்கும் பரதநாட்டியமெல்லாம் ஆடியிருக்கேன். //

ஆச்சி, உங்க அம்மா ப்ளாக் எல்லாம் எழுதாம விட்டுட்டாங்க. ம். நாங்க எவ்வளோ மிஸ் பண்ணறோம் :)

சின்ன அம்மிணி said...

ஆனாலும் ஆயா பண்ணினது சரியில்லை. :(

தமிழ் பிரியன் said...

\\\\கண்டிப்பா ஊருக்கெல்லாம் போகக் கூடாது (அதாவது ஆண்டு விழாக்கு முன்னாடி) \\\

அப்படின்னா ஆண்டு விழா அன்றைக்கு போகலாமான்னு கேட்கனும் நினைச்சேன்.. ஆனா நீங்க மிஸ் பண்ணியதைப் படிச்சதும் கொஞ்சம் சோகமாயிடுச்சு.. ..;-)

ராமலக்ஷ்மி said...

சின்ன வய்தில் இது போன்ற விஷயங்கள் நமக்கு எவ்வளவு பெரிதாக தோன்றும். பெரியவர்கள் சாதாரணமாய் எடுத்துக் கொள்வார்கள். சிறுமியின் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்.

ஆமாம், வெல்கம் டான்சுக்க்கு எங்க ஸ்கூலில் பாட்டு இருக்காது 5 நிமிடம் ம்யூசிக்காகவே இருக்கும். எழுத்துக்களோடு மேடையில் தோன்ற வேண்டும். நான் ஆடி இருக்கிறேன்:)! குஷியாய் ப்ராக்டிஸ் போகும் நினைவுகளை மலர வைத்து விட்டீர்கள்!

சங்கே முழங்கு said...

//(ஒளிஞ்சு விளையாடும்போது அவங்க கூப்பிட்டா எப்படி வரமுடியும்?//

அதானே!!

பித்தனின் வாக்கு said...

நல்ல கொசுவத்தி சுத்தி இருக்கிங்க. நடன உலகம் ஒரு நாட்டிய சிகாமணியை இழந்து விட்டது.ஹாஹா

கொஞ்சம் வருத்தம்தான், ஆமா அடம் எல்லாம் பிடிக்கமாட்டிர்களா?. நிறைய பீல் பண்ணி இருப்பீர்கள். நல்ல இடுகை.

அம்பிகா said...

சிறுவயது ஏக்கத்தை அழகாக பிரதிபலித்து இருக்கிறீர்கள்.
நானும் கூட சிறுவயதில் ஆண்டுவிழாக்களில் ஆடியிருக்கிறேன்.
ஆண்டுவிழா வந்துவிட்டாலே முதுகுக்கு பின்னால் இரண்டு இறக்கைகள் {உங்க`டெம்ப்ளேட் ’ல இருக்க மாதிரி} முளைத்து விடும். தெருவில் இருக்கும் அக்காக்களிடம் ப்ளெய்ன் ஸாரி வாங்கி அதை ப்ரில் வைத்து பாவாடை மாதிரி செஞ்சு கட்டிவிடுவாங்க. மலரும் நினைவுகள்.....
எங்கள் பள்ளி்நாட்களுக்கு கூட்டி சென்றதற்கு நன்றி, முல்லை.

கோமதி அரசு said...

ஆண்டு விழாக்களில் ஆடிய மலரும் நினைவுகளை மலர வைத்து விட்டீர்கள்.

ஆயா உங்கள் ஆசையை நிறைவேற்றாதது வருத்தமே

ஹுஸைனம்மா said...

ஆமா, அப்பல்லாம் அம்மாகிட்ட அனுமதி கேக்கக்கூட பயமாருக்கும்.

என்னையெல்லாம் ஸ்கூல்ல குடியரசு தின விழாவுல டான்ஸ்க்கு ஆள் குறைவதால சேத்துகிட்டாங்க!! அவ்ளோ கலர் நான்! :-)

Deepa said...

ஆசையா படிச்சிட்டே வந்தேன். ரொம்பக் கஷ்டமாயிடுச்சு.
சே. .அந்தக் குட்டிப் பொண்ணுக்கு எவ்ளோ ஏக்கமா இருந்திருக்கும்னு புரியுது.

ஆண்டு விழாக்கள் பத்தி நானும் ஒரு இடுகை பாதி எழுதி வெச்சிருக்கேன். அப்பாலிக்கா எடுத்து வுடறேன்! ;-)

☀நான் ஆதவன்☀ said...

ஆயாவுக்கு விழா நல்லபடியா நடக்கனும்னுங்கிற நல்ல எண்ணம் போல பாஸ். அதான் உங்களை ஊருக்கு கொண்டு போயிட்டாங்க :))

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் ’ம்’னு ஒரு வார்த்தை சொல்லுங்க பப்புவுக்கு நாட்டிய அரங்கேற்றம் செய்யும் போது உங்க பரதநாட்டிய அரங்கேற்றமும் வச்சிரலாம் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒளிஞ்சு விளையாடும்போது அவங்க கூப்பிட்டா எப்படி வரமுடியும்?//
என்ன ஒரு கடமை உணர்ச்சி விளையாட்டுல..:)பித்தனின் வாக்கு கேட்டமாதிரி அடம் பிடிக்கமாட்டீங்களா? இவ்வளவு சொல்பேச்சு கேக்கற முல்லை ம்.. ரொம்ப ஆச்சரியம்..

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அதானே.. ஆச்சி அடம் பிடிக்கலையா? இவ்வளவு பேர் கேட்கிறமே.. சொல்லுங்க!!! (இல்ல அடம் பிடிச்ச கதைய நைசா அமுக்கிட்டீங்களோ?):O))

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஆனாலும் ஆயா செஞ்சது சரியில்ல. எங்கள் (மிக மிக மிக மிகப் பிந்திய கண்டனங்கள் :O)

தாரணி பிரியா said...

அவ்வ் நீங்க இத்தனை நல்லவங்களா முல்லை. அடம் பிடிக்காம ஆயா கூட கிளம்பி இருக்கிங்க. கொஞ்சம் சோகமாதான் இருக்கு. ஆனாலும் இது பப்வுக்கு நல்லதுதானே. அவளை இப்படி அடமா ஊருக்கு அனுப்பி வைக்க மாட்டிங்கதானே :)

பின்னோக்கி said...

பாவங்க உங்க டான்ஸ் ஆசை இப்படி ஆகிடுச்சே. பரிட்சை முடிஞ்சதும் விழா ?. வித்தியாசமான ஸ்கூலா இருக்கும் போல.


//பெப்ரவரி
//டேன்ஸ்

வித்தியாசமா எழுதியிருக்கீங்க.

//'ரா ரா ரஸ்புடினு'க்கும், 'லீவ் அ லைட்'டுக்கும்

அடிக்கடி இப்படி எதாவது சொல்றீங்க. எதோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனா என்ன சொல்றீங்கன்னு புரியலை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் ஆதவன்☀ said...
ஆயாவுக்கு விழா நல்லபடியா நடக்கனும்னுங்கிற நல்ல எண்ணம் போல பாஸ். அதான் உங்களை ஊருக்கு கொண்டு போயிட்டாங்க :))


பாஸ், ஆச்சி எவ்ளோ ஃபீல் பண்ணியிருக்காங்க, அத விட்டுட்டு நீங்க என்னன்னா :)))))

காமராஜ் said...

அந்தபிராயத்தில் 24 மணிநேரமும் நம்மைத்திண்கிற முக்கியமான தருணமில்லையா அது. நினவுகள் சுழல்கிறது தங்கை முல்லை.

மாதேவி said...

ஆயா இப்படிச் செய்துட்டாங்களே:(((

அகஆழ் said...

"ஏ ஃபார் ...ஏக்கம்”
தலைப்பே ‘ஆடி’ப்போகும் படியா இருக்கு...

பா.ராஜாராம் said...

காமராஜ் said...

//அந்தபிராயத்தில் 24 மணிநேரமும் நம்மைத்திண்கிற முக்கியமான தருணமில்லையா அது//

ஆகா காமராஜ்!

விடுங்க முல்லை.பப்பு இருக்கிறாள்.கனவை கடத்த..

நசரேயன் said...

// தப்பிச்சு போய் டான்ஸ் ஆடற மாதிரி ஒரே கனவா வந்தது. //

இருக்கும் .. இருக்கும்

துபாய் ராஜா said...

"ஏ ஃபார் ..." - ஆயா... :))

நல்லதொரு பகிர்வு.

நட்புடன் ஜமால் said...

படிச்சிகிட்டு வரும் போதே நிறைய கலாய்க்கனுமுன்னு ஐடியா இருந்திச்சி - கடைசியில் கப்-சிப் ஆயிடிச்சி

ஒரே ஏக்கம் தான் போங்க.

-------------

பா.ரா சொன்னதும் தோனிச்சி - பப்புவை வைத்து நினைவாக்கிடுங்க கனவுகளை.

-------------

ஏ - தா