முன்பொரு காலத்தில் நடந்தது இந்த கதை. அப்போது, சென்னையே இல்லை. பெங்களூரு
இல்லை. ஹைதராபாத்தும் இல்லை. ஏன், இந்தியாவும் இல்லை. ஆஸ்திரேலியாவும்
இல்லை. சைனாவும் இல்லை. அமெரிக்காவும் இல்லை. ஜப்பானும் இல்லை. உலகமே ஒரு
பெரிய காடாக இருந்தது. அந்த காட்டில் எல்லா மிருகங்களும் வசித்து வந்தன.
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த காடு.
காலையில் சூரியன்
தகதகவென்று மின்னியபடி கிழக்கில் உதிக்கும். பறவைகள் கீச்சு கீச்சு என்று
கத்தியபடி காட்டையே சுற்றி வரும். விலங்குகள் இரை தேடி கிளம்பும். ஆறுகளில்
சலசலப்பு. எல்லா மிருகங்களும், பறவைகளும் அந்த ஆற்றில் தண்ணீர் அருந்தும்.
இப்படி, ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு நாளாக.....ஒவ்வொரு
வாரமாக....ஒவ்வொரு மாதமாக...ஒவ்வொரு வருடமாக! ஒவ்வொரு நாளும், சூரியன்
எழும்பும். பின்பு மாலையில் மறையும்.
ஒரே விஷயம் திரும்ப திரும்ப
ஒரே மாதிரி நடந்தால் என்ன நிகழும்? ஒரு சலிப்பு வரும், அல்லவா? சூரியனுக்கு
அப்படி ஒரு சலிப்பு வந்தது. ஒருநாள் காலையில், அது சொல்லிக்கொண்டது,
"இனிமேல் நான் வர மாட்டேன். வீட்டிலேயே இருக்கப் போகிறேன்.ரொம்ப
போரடிக்குது".
காட்டில் எப்போதும்போல் பறவைகள் எழும்பின. கீச்சு
கீச்சு என்று கத்தியபடி பறந்தன.மிருகங்கள் இரைதேடத் துவங்கின. யாருக்கும்
சூரியன் வராதது பெரிதாக தெரியவில்லை. மாலையில், தண்ணீர் அருந்த மிருகங்கள்
ஆற்றுக்கு வந்தன. தண்ணீர் அருந்த முடியாதபடி அவ்வளவு சில்லென்று இருந்தது.
அடுத்ததடுத்த நாட்களில், காடே மிகவும் குளிராக, இருட்டாக மாறிப் போய்
இருந்தது. பறவைகளாலும் மிருகங்களாலும் வசிக்கவே முடியவில்லை.
யானை,
எல்லா மிருகங்களையும், பறவைகளையும் அழைத்தது."இப்படியே இருந்தால் நாம்
எப்படி வசிப்பது? சூரியன் வரவே இல்லையே. நம்மில் யாராவது சூரியனிடம் சென்று
பேச வேண்டும்" என்று சொன்னது. எல்லா மிருகங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால்,
யார் சென்று பேசுவது? யாரால் முடியும்? எல்லா மிருகங்களின் கவனமும் பறவைகள்
பக்கம் திரும்பின. யானை, நாரையை அழைத்தது. நாரை சொன்னது
"முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது".
அடுத்ததாக, சிட்டுக்குருவியை கேட்டது யானை. சிட்டுக்குருவியும், "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது" என்றது.
ஹம்மிங்
பேர்ட், புறா, கௌதாரி, இரட்டை வால் குருவி, கொக்கு,மயில் என்று எல்லா
பறவைகளும், "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது" என்று
மறுத்து விட்டன.
கடைசியாக, யானை, கழுகிடம், வந்தது. "நீதான்
உயரத்தில் பறப்பாயே, உன்னால் சூரியனிடம் போக முடியுமே" என்றது. கழுகும்,
"எனக்கும் போக ஆசைதான். ஆனால், சூரியனின் வெயிலில் நான் கருகிவிடுவேன்.
உங்களுக்காக நான் மட்டும் ஏன் உயிரை விட வேண்டும்" என்றது. சூரியனிடம்
செல்ல, எந்த பறவையும் முன்வரவில்லை.
இறுதியாக, ஒரு பறவை முன்னால் வந்தது. அது, வானவில் பறவை.
வானவில்
பறவையின், சிறகுகள் வானவில் நிறத்தில் இருக்கும். சிறகுகளை விரித்து அது
பறந்தால் காண அவ்வளவு அழகாக இருக்கும். அதன் உடலோ பாலைவிட வெண்மையான நிறம்.
உடல், பஞ்சு போல! அதன் குரலோ கேட்கவெவெ வேண்டாம். அது பாட பாட நாம்
கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை. அந்த பறவையின் அழகே அழகு!
வானவில் பறவை, யானையிடம் வந்து சொன்னது, "நான் போய் சூரியனிடம்
பேசுகிறேன்".
காட்டில் எல்லாரிடமும் விடைபெற்று வானவில் பறவை மேலே
பறக்கத் தொடங்கியது. கீழே எல்லா பறவைகளும், மிருகங்களும் ஆரவாரத்துடன்
விடை கொடுத்தன. வானவில் பறவையின் சிறகுகள், மேலே செல்லும்போது பார்க்க
அவ்வளவு அழகாக இருந்தது. காட்டைத் தாண்டியதும் வானவில் பறவைக்கு களைப்பாக
இருந்தது. ஆனாலும், நண்பர்களுக்காக உயரே உயரே பறந்தது.
"பறக்க
வேண்டும் தூரமாக..இன்னும் தூரமாக" என்று தனக்குள் பாடிக்கொண்டது. சூரியனை
நெருங்கும்போது அதன் வெப்பம் தாங்காமல் அதனால் பறக்கவே முடியவில்லை.
பின்னால்
திரும்பி பார்த்தது. குளுமையான காடும் அதன் நண்பர்களும். பின்னால்
திரும்பி விடலாமா என்று ஒரு நிமிடம் எண்ணியது. ஆனால், சூரியனுக்காக ஏங்கும்
அதன் நண்பர்கள் நினைவுக்கு வந்ததன. "பறக்க வேண்டும் தூரமாக..இன்னும்
தூரமாக" என்று பாடியபடி, முன்னால் சூரியனை நோக்கி முன்னேறியது.
அதன்
வானவில் சிறகுகள்... அய்யோ...அதன் பால் போன்ற வெண்மையான உடலோ கருகி
விட்டது. அதன் இனிமையான குரலையும் இழந்துவிட்டது. சூரியனை நெருங்க
நெருங்க, அது தனது சிறகுகளையும் இழந்துவிட்டது. இறுதியாக, சூரியனின்
வீட்டை அடைந்தது, வானவில் பறவை.
வானவில் பறவையை கண்ட சூரியனுக்கு
அப்போதுதான் தான் செய்தது எவ்வளவு மோசமானது என்று தெரிந்தது. தீய்ந்து போன
உடலையும், வறட்டுத்தனமான அதன் குரலையும் கண்டு மனம் வருந்தியது. "என்னால்
தானே உனக்கு இதெல்லாம், நான் எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டேன்" என்று
வருத்தப்பட்டது.
"என்னால் உன்னுடைய இனிமையான குரலையும், வானவில்
சிறகுகளையும், வெண்மையான உடலையும் திருப்பிக் கொடுக்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும். ஆனால், என்னிடம் அந்த சக்தி இல்லை" என்று சொன்னது.
"திருப்பிக்கொடுக்கும்
சக்திதான் இல்லையே தவிர, உனக்கு மூன்று வரங்களை என்னால் கொடுக்கமுடியும்"
என்றது. ஒன்று, உன்னை எந்த வேடனும் வேட்டையாட மாட்டான். இரண்டு, உன்னை
சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். மூன்று, உனது சிறகிலிருந்து
விழுந்த இறகை எடுத்து சூரியனைப் பார்த்தால் அதில் வானவில் வர்ணங்கள்
தெரியும். அந்த வானவில் பறவையைதான் நாம் இன்று என்ன பெயர் சொல்லி
அழைக்கிறோம்? காக்கா என்று அழைக்கிறோம்.
அதனால்தான், காகத்தை எந்த
வேடனும் இன்றுவ்ரை வேட்டையாடுவதில்லை. எல்லா பறவைகளும் தனியாக அமர்ந்து
இரை உண்டாலும், நமது காக்கையார் நண்பர்களுடன் எப்போதும் விருந்துண்பார்.
அதோடு, காக்கையின் சிறகை எடுத்து பார்த்தால் நமது கண்களுக்கு வானவில்
தெரியும்!
**************************
பிப். 7 முதல் 9 வரை நடைபெற்ற, சென்னை கதைசொல்லும் விழாவில், பெங்களூரிலிருந்து வந்திருந்த அமீன் ஹக்
சொன்ன கதை. ரம்மியமான மாலைவேளையில், ஐந்து பேர் சொன்ன விதவிதமான கதைகளில்
என்னை மிகவும் கவர்ந்த கதை இது. வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில்,
நிகழ்வைப் பற்றி பேசும்போது பப்புவை கவர்ந்த கதை எதுவென்று கேட்டேன். (அவள்
எந்த கதைகளையும் கவனித்திருக்கவே இல்லை என்றுதான் நினைத்தேன். தனது, பழைய
ஸ்டோரிடெல்லிங் நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்த உற்சாக மிகுதியில்
திளைத்துக்கொண்டிருந்தாள். )ம்ம்ம்.... பப்புவை மிகவும் கவர்ந்த கதையும்
இதுதானாம்! குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த கதை பிடித்துபோவதில்,
ஆச்சர்யமேதும் இல்லைதானே! ;-)