Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Sunday, June 02, 2013
"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?"
'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-)
ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிறது. ஒரு தென் தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை யாரும் அறியாத, பொதுவாக பலருக்கும் தெரியாத எல்லா வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது.. ஆமந்துறையின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, கடலை, அதன் அலைவாய்கரையை, கடலின் மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது'ஆழி சூழ் உலகு'.
ஆரம்பத்தில் நாவலில், வரும் வார்த்தைகள் தமிழாக இருந்தாலும் ஒன்றுமே புரியாதது போல இருந்தது. 'அணியம், சோழ வெலங்க, ஆழி, பருமல், மாசா, கத்து,ஓங்கல்கள்,பணிய, சம்பை,மேற்றிராசனம்' அவர்கள் பேசும் மொழியே அந்நியமாக இருந்தது. ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு ரொம்ப பரிச்சயப் பட்டதாக மாறிவிட்டது. நாவலின் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்ட அருஞ்சொற் பொருள் விளக்கம் இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான்! கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக காலப்போக்குகள், நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால், ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றையே பதிவு செய்ததாக இருக்கிறது.
கன்னியாகுமரியின் பெயர் காரணம் நாம் எல்லாருமே அறிந்ததுதான். சமீபத்தில், எங்கோ வாசித்திருந்தேன், கன்னியாகுமரியைத் தாண்டி இருந்த நிலப்பரப்பு கடலால் அழிந்தபோது குமரியின் முனையில் அலைவாய் க்கரையில் தன் காதலனுக்காக காத்திருந்த பெண்ணே பிற்காலத்தில் கன்னியாக்குமரி அம்மனாக மாறினாள் என்று. அதை வாசித்ததிலிருந்து, ஒரு இளம்பெண் கடலை நோக்கி காத்திருப்பது போன்ற சித்திரமே என் மனதில் பதிந்திருந்தது. கடலோடு கலந்த அந்த குமரிப் பெண்தான் முதல் பரத்தி என்கிறது இந்த நாவல். பரதவர், அவளைத்தான் தம் குலமகளாக் எண்ணுகின்றனர். கடலை அந்த அம்மனாகவே காண்கின்றனர். கடலின் பெரிய மீன்களும் அந்த சக்தியின் சத்தியத்துக்கு கட்டுபடுவதாகவே நம்புகின்றனர். எளிய நாட்டுப்படகுகளிலும், கட்டுமரத்திலும் சென்றாலும் எந்த பெரிய மீன்களும், மீனவர்களை அந்த சத்தியத்துக்கு கட்டுபட்டு, எதுவும் செய்வதில்லை.
அதிலும், ஓங்கல்கள் பரதவர்களின்/மனிதர்களின் நண்பன் என்றே நம்புகிறார்கள். கடலில் தவறி விழுந்துவிட்டாலும் சுறா மீன்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது இந்த ஓங்கல்கள்தான். அதனாலேயே, இந்த ஓங்கல்களை பிடிப்பதோ,உண்பதோ இல்லை.ஓங்கல்கள் என்றால் டால்பின்கள். பரதவர்களின் மகத்தான பெண் தெய்வ நம்பிக்கையை, கண்டுகொண்ட பாதிரிகள் கடலை அன்னை மேரியாக உருவகப்படுத்தி கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.
இந்த நாவல் நிகழும் களம் ஆமந்துறை. இந்த ஊர் கற்பனையே என்று நினைக்கிறேன். நாவல்படி, இந்த ஊர் கூத்தந்துறைக்கும் கூடங்குளத்துக்கும், மணப்பாட்டுக்கும் இடையில் கடல் உள் வாங்கியபடி அமைந்திருக்கிறது. இங்கு ஆமைகள் கோடையில் முட்டையிட வரும். மேலும், கடலிலிருந்து திரும்பும் பரதவர்களுக்காக கடற்கரையில் ஆமையின் ஓடுகளில் விளக்கேற்றுவதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த ஆமந்துறையில், தொம்மந்திரையின் சிறாப்பாறு பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, சிலுவையின் திசை மாறிய பயணம் வரை திகில்களோடு, சுவாரசியம் குன்றாமல் பயணிக்கிறது!
இந்த நாவலை வாசித்தபோது, பப்புவோடு நானும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தேன். 4.3 அடி ஆழ தண்ணீரே எனக்கு மூச்சு மூட்டவும், நீரின் அழுத்தத்தை உணரவும் போதுமானதாக இருந்தது. கழுத்தளவு தண்ணீரே உடலை அழுத்துவது போலவும், தலையெல்லாம் கிறுகிறுத்தது போலவும் இருந்தது. ஓரளவு நீந்த கற்றுக்கொண்டு ஒரு முழு லாப் செய்யும்போதோ தலையெல்லாம் வலித்து என்னென்னவோ செய்து வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் நினைத்தால் எட்டிபிடித்து நடந்துவிடும் தூரத்தில்தான் தரை. ஒரு செயற்கையான தண்ணீர்தொட்டிக்கே இப்படியென்றால், பிரமாண்டமான கடலின் மீது, சுழித்துக்கொண்டு ஓடும் வாநீவாட்டுக்கும் சோவாநீவாட்டுக்கும் இடையில் , வாழ்க்கைக்கு போராடும் இந்த சின்னஞ்சிறு மனிதர்களை நினைத்தால் வியப்பும்,நெகிழ்ச்சியுமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் கடல் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மணலும் மாறுகிறது. கிடைக்கும் மீன்கள் வித்தியாசப்படுகின்றன. அதோடு, அவர்களின் வாழ்க்கையும்!
பக்கத்து மீன்பரவ கிராமத்தினர் விரோதம், கிராமத்தில் நடக்கும் உட்பூசல்கள், கமுட்டிகளின் நியாய அநியாயங்கள், போதாததற்கு சுரண்டி பிழைக்கும் பாதிரிமார்கள், வெட்டு குத்து என்று முரட்டுத்தனங்களோடு ஆதரிக்க யாருமற்று எவர் வந்தாலும் அன்பாக அணைத்துக்கொள்ளும் போக்கு என்று ரத்தமும் சதையுமாக ஆமந்துறை மக்களின் வாழ்க்கை விரிகிறது. வாசிக்க வாசிக்க எவ்வளவு பெரிய உழைப்பை கோரியிருக்கிறது, இந்த நாவல் என்ற
வியப்பே மேலிடுகிறது. பிரமாண்டமான கடலைப் போலவே பிரமாண்டமான நாவல்!
பரதவர்கள், மீன்பிடித்து வரும்போது, கிராமத்தவர்கள் ஒமலிலிருந்து தங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு, கப்பலில் வேலை செய்து வசதியாக வாழ்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த வழக்கத்தை நினைத்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.உயிரை பணயம் வைத்து பிடித்து வந்த பொருளை சும்மா கொடுக்கும் வழக்கம் சமவெளி சமூகத்தினரிடையே இருக்கிறதா வென்று தெரியவில்லை. அதோடு, முடி எடுப்பவர்களுக்கும் அப்படி உரிமை உண்டு. அதோடு, அவர்களுக்கு பட்டும் நகையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
பரதவர்களுக்கும் நாடார்களுக்கும் இருக்கும் வியாபார ரீதியான உறவு, கொழும்பிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வசதியாக வரும் கச்சத்தீவு திருவிழா,அரசாங்கத்தின் சலுகைகள் எதையும் பெற இயலாமல் செய்கின்ற
அதிகாரிகள், காகு சாமியாரின் தொலைநோக்குப் பார்வையால் சூடுபிடிக்கும் றால் ஏற்றுமதி, திராவிட கட்சிகளின் மாநாடுகள், அவற்றின் போராட்டங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், தனுஷ்கோடியை சீரழித்த புயல்,காலரா ஊசி,கொழும்பில் சிங்களவர்களுடனான கலவரம் என்று அந்தந்த காலஓட்டத்தின் பின்னணியில் சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார் ஜோ டி குருஸ்.
அமலோற்பவத்தில் ஆரம்பித்து, மேரி, சூசானா,எஸ்கலின், வசந்தா, சுந்தரி டீச்சர், தோக்களத்தா,அன்னம்மா,சாரா, செலின்,லூர்து,எலிசபெத், மணிமேகலை வரை ஆமந்துறையின் பெண்கள் வலம் வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை வஞ்சிக்கிறார்கள். ஏமாறுகிறார்கள். அடிபட்டும், உதைபட்டும் வலியோடு ஜீவனம் நடத்துகிறார்கள். சில சமயங்களில், ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுகிறார்கள்.தாய் தந்தை இழந்த குழந்தைகளை அரவணைக்கிறார்கள். தியாகம் புரிகிறார்கள். கடலுக்குச் சென்றவர்களுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். திரும்பாவிடில் விதவைக்கோலம் பூண்கிறார்கள். ஒரு சுனாமிக்குப் பிறகே கடலை,இயற்கையைப் பற்றி நமக்கு பயம் வருகிறது. கடலையே நம்பிய வாழ்க்கை எனில்?
மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி, குழந்தை மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், ஆசிரியர்களின் கடும்தண்டனை முறைகள், அதனாலேயே கல்வியை வெறுத்து கடலுக்கு ஓடும் பரதவ இளம்தலைமுறை,கடலில் ஏற்படும் சண்டைகள், கலவரங்கள், இயற்கைச் சீற்றங்களின்போது கிராமத்தை, வீட்டை,ஏத்தனங்களை விட்டு வெளியேறும் அவலம்,சிலுவை கல்யாணம்.....விதம் விதமான மனித உணர்வுகள்!!
நாவல் முழுவதும் நாம் உணரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் 'கட'. எதுவும் பேசவில்லையே தவிர கடலின் பேரிரைச்சல் நம் காதுகளில் எப்பொழுதும் விழுந்தவண்ணம் இருக்கிறது. ஜஸ்டினை ஜெயிக்க வைக்கிறது. ஊமையனை மாசாவில் தடுமாறி விழ வைக்கிறது. அவனது உடலை கரையில் ஒதுக்கும் அடுத்தநாளே, ஒன்றுமறியாதது போல சாதுவாக கிடைக்கிறது. சிறுவர்கள் கொல்லம் பழங்களைப் போட்டு, சில்லி எடுத்து விளையாடும் கடலில்தான், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் இந்த சிறுமனிதர்கள் போராடுகிறார்கள். கதாமாந்தார்கள் ஒவ்வொருவருடனும் கடல் பின்னி பிணைந்து இருக்கிறது. ஒரு மௌனசாட்சியாக எல்லா நிகழ்வுகளையும் பார்த்த வண்ணம் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கிறது.
நாவலின் சுவாரசியமான இன்னொரு விஷயம் உணவு பற்றிய செய்திகள்! குதிப்பு மீன் குழம்பு, வாளை,சாளை,மீன் முட்டை பணியாரம் என்று ஆமந்துறையின் உணவு நம்மை சப்புகொட்ட வைக்கிறது. சுறா, மஞ்சப்பொடி கருவாடு எல்லாம் வாசிக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. கடல் ஆமையின் ரத்தத்தையும், ஆமை இறைச்சியையும் உணவாக பயன்படுவதை அறிந்தது புதிது!
கோத்ரா,சூசை, சிலுவை இந்த மூவரும் கடல் கொந்தளிப்பில் மரம் உடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொள்கிறார்கள்.நாட்கணக்கில் தத்தளிக்கின்றனர். இவர்களின் ஜீவ மரணப்போராட்டத்தில் வழியே நாவல் விரிகிறது. 'நண்பருக்காக தியாகம் செய்வதே சிறந்தது' என்று காகு சாமியார் சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் நண்பருக்காக உயிரை தியாகம் செய்கின்றனர். நாவலும் தியாகத்தையே விதந்து போற்றுகிறது. இறுதியில் சிலுவை மட்டும் கொச்சின் துறைமுகத்தருகே உயிர் பிழைக்கிறான். இந்த மூவரை கிராமத்தவர்களும், மற்ற மீனவ கிராமத்தவர்களும் தேடும் இடம் மிகவும் அருமையானது. மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது நமக்கு ஒருவரிச் செய்தி மட்டுமே. மொத்த கடலோர கிராமங்களுக்குமே அந்த பதைபதைப்பை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.யாருடைய உதவிக்கும் காத்திராமல் படகுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கடலில் தேடி அலைகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிரியாக பார்த்தாலும் ஆபத்தில் பரதவர்களுக்கு பரதவர்களேதான் உதவி செய்துகொள்ள வேண்டும்.
நாவலைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். திருச்செந்தூரிலிருந்து, திருவைகுண்டம்,வீரபாண்டியன் பட்டினம்,தூத்துக்குடி,மணப்பாடு, திசையவிளை,சோதிக்காவிளை,நாரோயில்(நாகர்கோவில்!)குலசேகரன்பட்டினம்,இடையன்குடி,கச்சத்தீவு,தீவுக்கடல், ஆழியிலிருந்து தீவுக்கடல் வரை அவர்கள் தாண்டும் கடற்பரப்புகள், கொழும்பு வரை நாமும் நாவலுடன் பயணிக்கிறோம். நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு பக்கத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.
சாவுக்குப் போய்விட்டு வந்தபின் கடலில் கால்நனைத்து வீடு திரும்புவது, பிடிமண் போடுவது,கடலில் ஓங்கல்கள் அழும் சத்தம் கேட்டு சகுனம் பார்ப்பது.....இப்படி, பரதவர்களின் தொன்மையான நம்பிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'ஆழி சூழ் உலகை' வாசிக்கும் முன்பாக 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலை வாசித்து திகைத்து போயிருந்தேன்.
கடலை, அதன் மனிதர்களுடன் சமூக நோக்கில் விவரிக்கும் நாவல் அது. ஒரு வங்காள எழுத்தாளர் நமது தமிழக கடற்கரையோர கிராமங்களைப் பற்றி இப்படி நுணுக்கமாக பதிவு செய்திருப்பது வியப்பாக இருந்தது. அதிலும், மீன்பரவர்களைப் பற்றி நுணுக்கமாக வரலாற்று தகவல்களோடு செறிவாக எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசித்து முடித்ததும் தூத்துக்குடியின் தெருக்களிலும், முயல்தீவுக்கும், கடற்கரையோரங்களிலும், மணப்பாடு முதல் மன்னார் வளைகுடா வரையிலும் அலைந்து திரிய ஆசையாக இருந்தது.
'ஆழி சூழ் உலகை' வாசித்தபின்போ ஆழிக்கும், சிறாப்பாறுக்கும் கச்சத்தீவுக்கும், ஆமந்துறைக்கும் சென்று வர ஆசையாக இருக்கிறது. ஆழி சூழ் உலகின்' விலையை பார்த்து சிலசமயம் வாங்குவதா வேண்டாமாவென்று யோசனையிலேயே தவிர்த்திருக்கிறேன். இப்போதோ, 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலையும் 'ஆழி சூழ் நாவலையும் வாசித்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியரின் அடுத்த நாவல் 'கொற்கை' என்று அறிகிறேன். அடுத்து, கொற்கையை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
விபரங்கள்:
நாவல்: ஆழி சூழ் உலகு, தமிழினி வெளியீடு
ஆசிரியர்: ஜோ டி குருஸ்
பக்கங்கள்: 558
விலை: ரூ 430
நாவல்: சிப்பியின் வயிற்றில் முத்து, நேஷனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர்: போதிசத்வ மைத்ராய
Tuesday, April 09, 2013
இது ரெத்த பூமி - மூன்று முறை கட்டப்பட்ட கோட்டையின் கதை
காலைச்சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக தன் வேலையைத் தொடங்கியிருந்தது.சென்ற இரண்டு நாட்கள்போலில்லாமல் பளிச்சென்று இருந்தது வானம். நாங்களும் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். மனம் ஒருவித மரியாதை/பயபக்தி/பெருமிதம் என்று கலவையான உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.செல்லுமிடம் அப்படியானது.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்மையானதும் முக்கியமானதும், வீரத்துக்கு அடையாளமாகவும் விளங்கும் இடம்,அது. இந்தியாவின் வரைபடத்திலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள் துடித்த இடம். இன்று கால ஓட்டத்தால் ஒதுக்கப்பட்டு, ஓரமாக மௌனசாட்சியாக இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி. வீர பாண்டிய கட்டபொம்மனின் கோட்டை. 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி,வட்டி' என்று அந்த வீரமகனின் குரல் கிண்ணென்று முழங்கிய கோட்டை.
தூத்துக்குடிக்கு அருகில் எங்கு செல்லலாம் என்று பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியும்,ஒட்டபிடாரமும் செல்ல வேண்டிய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. ஒன்று, ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் , காலனியாக்கத்தைப் பற்றியும் ஏன் எந்த தத்துவங்களையும் பற்றி அறியாமல், ஒரு வீரன், அந்நியரை எதிர்த்து நின்ற வீரமண். இன்னொன்று, சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற முழங்கிய கப்பலோட்டிய தமிழன் பிறந்த ஊர்.
பப்புவுக்கு 'ஜான்சிராணி' வரலாறு தெரியும். ஜான்சிராணியைப் பார்த்து சிலநாட்கள் கத்தியை வைத்துக்கொண்டு திரிந்தாள். அவ்வப்போது, அவள் தன்னையே ஜான்சிராணியாக பாவித்துக்கொண்டு காற்றில் கத்திச்சண்டை போடுவாள். அவளது மாமாவிடமிருந்து பெற்ற ஜான்சிராணி புத்தகத்தை பொன்போல வைத்துக்கொள்வாள். அட்டையில் இருப்பது,ஜான்சிராணியின் படமல்லவா! வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்த அளவுக்கு தெரியாது. ஆனால், ஜான்சிராணிக்கு எடுத்துக்காட்டாக/முன்னோடியாக இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று இந்த பயணத்தில் தெரிந்துக்கொண்டாள். இதற்கு முன்பும் பல கோட்டைகளுக்கு அவள் சென்றிருக்கிறாளென்றாலும், ஆங்கிலேயரை எதிர்த்த தன்மானமிக்க மன்னனின்(பாளையக்காரர்) கோட்டைக்கு வருவது இதுவே முதன்முறை. இதுவே எங்கள் மனதில், ஒரு மரியாதையை/பயபக்தியை தோற்றுவித்திருந்தது.
காலத்தை வென்ற கோட்டை
செம்மண் வண்ணத்தில் கோட்டைச்சுவர். இப்போது இருப்பது, மூன்றாவது முறையாக கட்டப்பட்ட கோட்டை. நுழைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஒரு மரத்தின் கீழே பிள்ளையார், இன்னும் சில சிற்பங்கள்.பார்க்க சற்றுப் பழமையானதாக இருக்கிறது.
பாதைக்கு இருபுறமும் மரங்களும், செடிகளுமாக சிறு தோட்டம். அதன் வழியே சென்றால், கோட்டையின் மரக்கதவுகள். கட்டபொம்மனின் குதிரை,யானை மற்றும் காலாட் படையைக் குறிக்கும் விதமாக கோட்டையின் ஒவ்வொரு பக்கத்தில் வரிசையாக உருவங்கள் வரையப் பட்டிருக்கின்றன.தோட்டத்தின் மரத்திலிருந்து கரைகிறது ஒரு காகத்தின் குரல்.
அன்றைக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் விருந்தினர். 'இந்த பக்கம் வாங்க' என்று வலப்புறம் வரச் சொல்கிறார் ஒருவர். சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கோட்டைச் சுவரின் முழுமையைக் காண முடிகிறது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகிறோம். ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறோம்.
'இந்தக்கோட்டையிலா கட்டபொம்மன் வாழ்ந்தார் 'என்ற எண்ணம் தோன்றுவதற்குள், கைகளில் ஒரு சுட்டுக்கோலை கொண்டு பேச ஆரம்பிக்கிறார், அவர். உட்சுவர் முழுக்க கட்டபொம்மனின் வரலாறு, படங்களாக வரையப்பட்டிருக்கிறது.தெள்ளத் தெளிவான தடங்களில்லாத தமிழில், 46 தலைமுறைகளுக்கு முந்தைய வரலாறு ஆரம்பிக்கிறது.
முதலாம் கெட்டிபொம்மு ராஜாவான வரலாற்றைத தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு நீள்கிறது. சாலிக்குளத்தில்,முயல் ஒன்று வேட்டைநாயை துரத்துவது குடகின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வேட்டைநாயை முயல் துரத்திய குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி, கிபி 1101 ஆம் ஆண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டி சிம்மாசனம் ஏறுகிறார் பொம்மு.
வரலாற்றின் சில பக்கங்கள்
கிபி 17 ஆம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், 72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது. 47ஆவது தலைமுறையாக, தனது 30ஆவது வயதில் அரியணை ஏறுகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது தம்பிகள், ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமி மற்றும் துரைசிங்கம். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி ஜக்கம்மாள்.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர். இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் கட்டபொம்மனும் பூலித்தேவரும்தான். பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க நெல்லையிலிருந்து வருகிறார், ஆலன். ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச்சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது,அந்தக்குரல்!
சாமாதான பேச்சுவார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில் ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன். அங்கும் வரி,வட்டியைப் பற்றிய பேச்சுவர ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.மன்னரை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.
வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்தபின்னரே, தானாபதியை காணாமல் திகைக்கிறார், மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறார். சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெல்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார். இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.
பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐவகைப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும்,வேல்களாலும் போரில் வெற்றிபெறுகின்றனர். இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருப்பதாக கூறினார்,அவர்.
வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில்தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும் நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது. போரில் இறந்த வெள்ளைத்தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச்சின்னமும் எழுப்பியுள்ளனர்.எதிரிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய கட்டபொம்மனின் பண்பு! இதன்பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது.
கோட்டையிலிருந்து தப்பித்து விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார், கட்டபொம்மன். கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச்சாவடைகிறார், சுந்தரலிங்கம் என்ற வீரர். தொண்டைமானின் அரண்மனையிலோ, கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து, கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக்கொண்டார். மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன்.
ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார். இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் எழுப்பிய கோட்டையென்று! மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை,ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.
கயத்தாறில், கட்டபொம்மன் உயிர்நீத்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரை, தூக்கு மாட்டிய புளியமரம் பட்டுபோயிற்று என்று முடிக்கிறார், பராமரிப்பாளர்.
கதைசொல்லியைப்போலவும், அதே சமயம் வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர சுவாரசியமாக, படங்களை காட்டி விவரிக்கிறார், பராமரிப்பாளர். மற்றபடங்களில், வீரதீரமாக தெரியும் கட்டபொம்மன், இறுதிகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக உருமாற்றம் அடைந்து இருக்கிறார். தூக்கிலிடும்போது கூட சிவாஜியாகவே இருக்கிறார்.உட்புறச்சுவரின் படங்கள் ஒரு சுற்று முடிந்ததும் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. நாமும் கோட்டையை உள்ளுக்குள்ளாகவே ஒரு முறை சுற்றியிருக்கிறோம். மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணாமல், கட்டபொம்மனையும்,போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறது.
இரண்டாம் முறையும், கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் வன்மத்துடன் கோட்டையை உருத்தெரியாமல் அழிக்கின்றனர். கோட்டை இருந்த இடம் முழுவதும் ஆமணக்கையும், முட்செடிகளையும் விதைக்கின்றனர். பார்க்கும் நமக்கு நெஞ்சமே எரிகின்றது. இப்போது இருக்கும் கோட்டை, ஒரிஜினல் கோட்டையின் மாதிரி மட்டுமே. அதில், ஒரு சிறு பங்குதான் இது என்று கூறி இரண்டாம் சுற்றுக்குப் பிறகு உள்ளே நுழைகிறார்.
பின் தொடரும் நம்மை, எதிர்கொள்வது, வீரபாண்டிய கட்டபொம்மன். கோட்டையின் மையப்பகுதியில், வாளோடு மிடுக்காக வீற்றிருக்கிறார். ஊமைத்துரை,தானாபதி,சுந்தரலிங்கம் சகிதம் அவ்விடம் ஒரு சிறு அரசவையாக காட்சியளிக்கிறது. நாம் விரும்பினால், அரசரோடு சேர்த்து நம்மை புகைப்படமெடுத்துத் தருவதாக பராமரிப்பாளரே முன்வருகிறார்.
எஞ்சியிருக்கும் சில ஞாபகங்கள்
இன்று நாம் பார்க்கும் கோட்டை, 1974ஆம் ஆண்டில் நமது அரசால், கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக எழுந்து நிற்கிறது.
நமது வரலாற்று ஆர்வத்தை பார்த்த பராமரிப்பாளர், கோட்டைக்குள் அகழ்வாய்வில் கிடைத்த கவண்கற்களையும், பீரங்கிகுண்டுகளையும் காட்டுகிறார். விம்மி நெகிழ்ந்த மனத்துடன், வெளியே வந்தால் எதிரில் ஜக்கம்மாவின் கோவில். இதுவும் புதிதாக கட்டியதுதான்.
அதை அடுத்து, தொல்லியல் துறையின் தகவல் பலகை நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்ல இயலாதபடி வலைபோடப்பட்டிருக்கிறது. உள்ளே, கோட்டையின் அஸ்திவாரத்தை நன்கு காணமுடியும். அரசவையும், அந்தப்புரமும், மணமண்டபமும் நமது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் அருகில்தான், ரகசிய பாதைகள் இருக்கின்றன.இன்று அவை தூர்ந்துபோய் இருக்கின்றன.
பார்த்து முடிக்கும்போது, இன்னும் ஒன்றிரண்டு விருந்தினர்கள் கோட்டை வாயிலில் நுழைகின்றனர். ஒருகாலத்தில் பரபரப்பாகவும், வேல் ஈட்டிகளின் சப்தங்களாலும் நிறைந்த கோட்டை,இன்று, எப்போதாவது கேட்கும் பறவையின் குரலைத் தவிர, கோட்டை மிகுந்த அமைதி கொண்டிருக்கிறது.
வரலாற்று பாடபுத்தகங்களைத் தவிர, பொதுவாக மறக்கப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் மறைக்கப்பட்ட புதையல்கள். நமது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் சென்று காட்டப்பட வேண்டிய இடங்கள். இப்படி எண்ணியபடி,கோட்டையின் கிரில்கதவுகளை திறந்துகொண்டு வெளியே வருகிறோம். கட்டபொம்மனின் கடைசி வாரிசு என்று அறிமுகத்துடன் ஒருவரை மரத்தடியில் கண்டோம்.
இன்று
கட்டபொம்மனின் உறவினர்கள் ஒரு 200 பேர் இப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும், அன்றாடக்கூலிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதில் ஒருவர் பீமராவ் கட்டபொம்மு. கட்டபொம்முவின் கடைசி வாரிசு. தலையில் ஒரு தலைப்பாகைபோல கட்டிக்கொண்டிருந்தார்.
ஆனாலும், எங்கள் கவனம் கட்டபொம்மனின் கடைசி வாரிசின் மீதிருந்ததை கண்டதும், பப்புவை அழைத்தார். பப்பு சற்று அருகில் சென்றதும், பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டார். இதன் நடுவில் கட்டபொம்முவின் வாரிசு தொடர்ந்து,விடாமல் தன்னைப் பற்றிய விபரங்களை கூறியபடியிருந்தார். நான் பப்பு இருந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பப்புவின் பெயரைச் சொல்லி, கோயில் இருந்த திசை நோக்கி ஒரு பாடலைப் பாடினார். தெலுங்கா தமிழா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, அது. பின்னர், 'நீ கண்டிப்பா டாக்டர்தான் ஆகப்போறே' என்றார் பப்புவிடம்.
கட்டபொம்முவின் வாரிசு ,இங்கு, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து, மாதந்தோரும் ரூ 1000 மட்டுமே கிடைப்பதாக கூறி விட்டு, முத்தாய்ப்பாக 'எங்கே, கையை காட்டுங்க' என்றார். 'அதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று மறுத்தோம். இதற்குள், டாக்சி டிரைவர், 'வாங்க வாங்க' என்று சைகை செய்தார். ஏறும்சமயம், சுந்தரலிங்கத்தின் வாரிசு, என் வயதையும் பெயரையும் கேட்டார். சொன்னதும், இதற்குப்பின் என்ன படிக்கப்போகிறேனென்று நினைத்தாரோ என்னவோ, கோயிலை நோக்கி பாடலைப்பாடி '35வயதில் சட்டசபைக்கு செல்வாய்' என்று ஆசீர்வதித்தார்.
திரும்பவும் ஒவ்வொரு வாயிலாக கடந்து வந்தோம். கரிசல் பூமியிலிருந்து வீசியது காற்றின் வெம்மை. உள்ளே ஒரு மகத்தான வரலாற்றை கேட்டு வந்தால், யதார்த்தம் வெளியில் முகத்தில் அறைகிறது. 2000 பொன்கள், 100/150 கோட்டை நெல் என்று தனது ஆட்சியாளர்களுக்கு வாரி வழங்கிய கட்டபொம்மன், 'எடைக்கு எடை தங்கம் அளிக்கிறேன், நம்பி வந்தவர்களை காட்டிகொடுத்து பழக்கமில்லை' என்ற கட்டபொம்மனையும், வருபவர்களிடம் எதிர்பார்க்கும் அவனது வாரிசு! அரசாங்கத்தின் சிக்கனத்தை, எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.
இதற்கு நடுவில்,பப்பு வேறு அவள் பங்குக்கு!
'ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள். 'அதெல்லாம் பொய்ப்பா, உனக்கே தெரியும் இல்ல, நீ என்ன ஆகணுமோ அதை நீதான் டிசைட் பண்ணனும்,அவருக்கு ஸ்பேஸ்ன்னா என்னன்னே தெரியாது, ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ன்னு ஒன்னை கேள்வியேபட்டிருக்க மாட்டாரு,அதான்' என்று அவளுக்கு தெளிய வைக்க வேண்டியிருந்தது. அவளை திசைதிருப்ப, நுழைவாயிலில் வாங்கிய கட்டபொம்மனைப் பற்றி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம்.
இடம்:
தூத்துக்குடியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி 18 கிமீ
ஒட்டப்பிடாரம் அங்கிருந்து 2/3 கிமீ
நுழைவுக்கட்டணம் : ஒருவருக்கு 2 ரூ
புத்தகம்:
வீரம் விளைந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆசிரியர்: மு. முருகையா
விலை : ரூ 30
Thursday, April 04, 2013
ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்
இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'.
"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;"
"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"
"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "
என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும்.
பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.
கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம்.
தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம். அந்த வழி முழுவதும் ஒரே திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம். பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே தெரு. இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது.
வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம். கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம். வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள்.
இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம். மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம்.
இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது அந்த எளிமையான மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை. மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும், உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன். இருந்தாலும், இவற்றுள், கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.
எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம். எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார். தாழிகளை தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.
கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம்.
ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார்.
"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"
அதற்குள் மேலும் சிலர் வந்து விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை.
"இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது.
அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின் மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!
""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)
"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும்.
நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.
Subscribe to:
Comments (Atom)