Showing posts with label பப்பு நூலகம். Show all posts
Showing posts with label பப்பு நூலகம். Show all posts

Wednesday, December 08, 2010

பப்பு டைம்ஸ்

”பப்பு, ஹோம் ஒர்க் முடிச்சியா?”

”நீ எழுதி தா-ப்பா”

”ஆ, குட்டிக்கு எழுதினது பத்தாது இப்போ நீயா? ஹோம் ஒர்க்லாம் அவங்கவங்கதான் செய்யணும்.”

அவ்வளவுதான் கோபம்...கண்களில் நீர்..

"நீ ஏன் குட்டி மாமாவுக்கு எழுதி தந்தே? எனக்குதான் நீ எழுதி தரணும். நான் உன் ஃப்ரெண்டே இருக்க மாட்டேன்"

அவ்வ்வ்!

"இல்ல, பப்பு. குட்டி மாமாவும் இதே மாதிரி கேட்டப்போ எழுதி கொடுத்தேனா..அவங்க ஆன்ட்டி செம திட்டு. ஏன் இவ்ளோ அசிங்கமா எழுதி இருக்கே....அழகா எழுதணும்...உன் ஹேன்ட் ரைட்டிங் மாதிரி இல்லையே..இதுன்னு குட்டி மாமாவை செம திட்டு. அதுலேருந்து மாமா ஹோம் ஒர்க் மாமாவேதான் எழுதுவாங்க..நீயும் உன் ஹோம் ஒர்க் நீயே எழுது..."

#ஸ்ப்பா!! மூச்சு விடாம சொன்ன இந்த டயலாக்கு ஏதோ லேசா பலனிருந்தது.




பப்பு, வீட்டுக்கு விளையாட வந்த நண்பனிடம், "ஹேய், உனக்கு தெரியுமாப்பா, ஃபேன் சுத்தும்போது பேன்லே ஏறி உட்கார்ந்தா ஆஃபிரிக்காவுக்கு போகலாம்"

#டிக்கெட் வாங்கணும்னா... சாரி.....வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க...





"ம்ம்ம்....அம்மா வேணும்..ம்ம்.." சும்மாதான், அழற மாதிரி ஆக்டிங், என்னை ஏமாத்தறதுக்கு.
அதாவது கொஞ்சினது பத்தாதுன்னு சிக்னலிங்!


நானும், "பப்பு வேணும்..ம்ம்..பப்பு வேணும்"


"ஹேய், நான் என்ன உனக்கு அம்மாவா?!"ன்னு நிஜமாவே அழுகை...
#பாப்பாங்க மட்டும்தான் அம்மாவுக்காக அழுவாங்களா என்ன? அவ்வ்வ்வ்



க்ளோப்-லே விரலால ட்ரேஸ் செஞ்சு கண்டங்களைச் சொல்லி விளையாடிக்கிட்டிருந்தப்போ,

”ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”


”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு


#பவ்வ்வ்வ்வ்




இதுதான் சமீபமா பப்புவுக்கு பிடிச்ச புத்தகம். ஆங்கில எழுத்துகள் அறிமுக புத்தகம். என்ன ஸ்பெஷல்னா, A is for ZebrA, B ன்னா craB....u..gnU...விலங்குகள் பெயரா இருக்கிறதாலே பப்புவுக்கு ஆர்வமா இருக்கு. Worth reading.

Wednesday, October 27, 2010

மார்கரெட்டுக்கு ஒரு கடிதம்

டியர் டியர் மார்கரெட் வைஸ் ப்ரவுன்,

ஐ ஜஸ்ட் ஹேட் யூ....நோ நோ...ஐ ஹேட் ரன் அவே பன்னி(bunny)!

இதை சொல்றதுக்குத்தான் இந்த லெட்டர்.

முதல் காரணம், இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன். Yes, I whacked her! அதுக்கு நீங்க ஒரு முக்கியமான காரணம். ரெண்டாவது, உங்களோட Run away bunnyயை படிச்சதுக்கு அப்புறம், பப்பு பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

ஆமா, இப்போ கொஞ்சநாளா (15 நாளா?!) Run away bunny யைத்தான் தினமும் படிக்கறோம். திரும்ப திரும்ப. (இப்போதைக்கு) பப்புவுக்கு பிடித்தமான புத்தகங்கள் லிஸ்டில், Run away bunnyக்கு முக்கியமான இடம் இருக்கு.
சொல்லப்போனா, உங்களோட‌ 'குட் நைட் மூன்' எங்க ஆல் டைம் ஃபேவரிட். தூங்கப் போறதுக்கு முன்னாடினு இல்ல..காலையிலே எழுந்ததும் கூட குட் நைட் மூன் படிச்சிருக்கோம். கிட்டன் -‍ மிட்டன், ப்ரஷ் - மஷ், ஹவுஸ் - மவுஸ் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு...பப்புவுக்கு அலுக்கற வரைக்கும்.



அதே நினைப்போடதான் இந்த கதைபுக்கையும் எடுத்தோம், மிஸ். மார்கரெட் வைஸ் ப்ரவுன்! என்ன சொல்ல... எல்லா புக்கையும் போலத்தான் ஆரம்பத்துலே ஜாலியாதான் இருந்துச்சு....நான் சொல்றதை பப்பு கேட்டுக்கற வரைக்கும்!
(bunny, அம்மாகிட்டே எங்கியாவது போறேன்னு சொல்லும் போதெல்லாம் "நானும் பறந்து போறேன்" இல்லேன்னா " கடலுக்கு அடிலே போறேன்" பப்பு சொல்லுவா. நானும், bunnyயோட அம்மா மாதிரியே " நீ பறந்து போனா மரத்துலே நான் பெரிய நெஸ்ட் கட்டி வைப்பேன்", " நீ கடலுக்கு அடிலே போனா பெரிய ஷெல்லாகி வருவேன்", "போட் எடுத்துட்டு வந்து கூப்பிடுவேன்"னு, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடற மாதிரி நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு...)அதுக்கு அப்புறம்தான் ஆரம்பிச்சது வினை!



(Pic courtesy : Google)

போனவாரம் வர்ஷினிக்கு பர்த்டே. "வர்ஷினி என்னை அவங்க வீட்டுக்கு வரச்சொன்னா", "பர்த்டேவுக்கு போகணும்"னு (சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும் மாடுலேஷன்லே கஷ்டப்பட்டு படிச்சுக்கோங்க, மிஸ் ப்ரவுன் ) ஒரு வாரமாவே இதே புராணம்தான். சாப்பிடச் சொன்னப்போ, கரெக்டா ஆரம்பிச்சாச்சு. "நான் இப்போவே வீட்டைவிட்டு போறேன், வர்ஷினி வீட்டுலேயே இருக்கப் போறேன்"னு சாவியை எடுத்துக்கிட்டு கதவை திறக்கிறா. கோவம் வந்தா, ஏதாவது பிடிக்கலேன்னா இல்ல ஏதாவது சாப்பிட சொன்னா இப்போல்லாம் உடனே அவ சொல்றது, "நான் இந்த வீட்டை விட்டு போறேன்".

நானும், " ஓக்கே, பை பப்பு, வர்ஷினி பர்த்டே அன்னைக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்"னு கண்டுக்காதமாதிரி, ஜாலியா சிரிச்சுகிட்டே சொல்லிட்டு கதவுகிட்டேயே நிக்கறேன் (எல்லாம் ஒரு ஜாக்கிரதைக்குத்தான்). பப்பு கதவை திறந்ததும், கொஞ்சம் மூளையை (ம்ம்..என்னோடதுதான்!) யூஸ் பண்ணி, "ஏதோ நரி வர மாதிரி இருக்கேன்னு" நைஸா சொன்னேன். அப்போ பார்த்து ரோடிலே போன யாரோ சத்தமா தும்மினாங்க. (பெயர் தெரியாத அந்த நல்ல மனிதருக்கு நன்றி!) நல்லவேளையா நரி மேல சந்தேகப்பட்ட பப்பு, என்னை பார்த்து கேட்டா,

"உனக்கு பாப்பா வேணுமா வேணாமா? உனக்கு பொண்ணு வேணும்தானே?" (இந்த இடத்துலே, நாம, லிட்டில் ரெட் ரைடிங் ஹீட்டுக்கு ரொம்ப ரொம்ப‌ கடமைப் பட்டுள்ளோம்! யாரது, அதிக பிரசங்கித்தனமா அது ஓநாய்ன்னு சொல்றது?)

"ஆமா, பப்பு,எனக்கு பாப்பா வேணுமே!"ன்னு சொன்னதும் "அப்போ கதவை சீக்கிரம் பூட்டு"ன்னு சொல்லிட்டு புள்ளிகளை சேர்க்க(Dot-to-Dot) ஆரம்பிச்சுட்டா. . நல்லவேளையா நரி மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்?

நான், இந்த வயசுலேயும் நினைக்க முடியாததை, எங்க ஆயாகிட்டேயோ அம்மாக்கிட்டேயோ தைரியமா சொல்ல முடியாததை பப்பு இப்போவே சொல்றான்னா... அதுக்கு bunnyயும் ஒரு காரணம்தானே, சொல்லுங்க மிஸ் மார்கரெட் வைஸ் ப்ரவுன், சொல்லுங்க‌?

இதுவாவது பரவாயில்லை, காலையிலே கஷ்டப்பட்டு எழுப்பி, குளிக்க கூட்டிட்டு போனா, முரண்டு பிடிச்சதும் இல்லாம " வீட்டை விட்டு போறேன்"னு சொன்னா கோவமா வருமா வராதா? அதான்...வந்துச்சு, உங்க மேலே எனக்கு அவ்ளோ கோவம்!

சோ, பேரண்ட்ஸ், மிஸ் ப்ரவுனோட சம்மதத்தோட உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்....Run away bunnyயை கையிலே எடுக்கிறதுக்கு முன்னாடி எனக்கு வந்த இந்த விபரீத சோதனைகளை ரீவைன்ட் பண்ணி பாருங்க....ரிஸ்கை எண்ணிப் பாருங்க‌...பயனடையுங்க!

டேக் ரெஸ்ட், மிஸ் ப்ரவுன்.

குட் பை!

from
Run away Mummy!!

Wednesday, July 07, 2010

நாங்களும் மீன்களும்!


கடந்தவாரத்தில் சில புதிய கதைப்புத்தகங்களை வாசித்தோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். என் பர்த்டே வர்றதுக்கு இன்னும் எவ்ளோ டேஸ்ப்பா இருக்கு என்று பப்பு கேட்டதும் தான் உறைத்தது இன்னும் ஒரு சில மாதங்களில் பப்பு ஐந்து வயது சிறுமி என!

தான் வளர்க்கும் தங்க மீன்களுடன் தானும் ஒரு மீனாக மாறி ஒரு நாளை செலவழிக்கும் சிறுவனின் கதை. எளிய கதைதான். உடனே பப்புவுக்கு மீன் ஆக்டிவிட்டி செய்யும் ஆசை வந்துவிட்டது.





மேலிருப்பது பப்பு வரைந்தது. நெளிகோடுகளும் அதனை பின்னர் பிரஷ் கொண்டு தீற்றினாள். கீழிருப்பது நான் வரைந்தது. இந்த மீனைக் கண்டதும் அவள் வரைந்ததன் மேல் திருப்தியில்லாமல் இதில் வரைய விருப்பப்பட்டாள். ஆனால் இதில் வரையும்படி எதுவுமில்லாததால் கடைசியில் விரல்களில் வண்ணத்தை (thump print) ஒட்டி செதிள்களை தீற்றினாள்.




இரண்டு மீன்கள் வரைந்ததில் சரியாக வரவில்லை என்று நினைத்து வண்ணக்காகிதங்களை வெட்டித்தரச் சொன்னாள். நான் நன்றாக வரைவதாக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பப்பு என்னையே மீன் வரையச் சொன்னாள்.

பேஸ்டிங் மட்டும் பப்பு!

மீன்குழம்பும் வறுவலும் சாப்பிட்ட ஒரு சனிக்கிழமை மதியம் இப்படியாக கழிந்தது.

Saturday, May 29, 2010

பனிராஜாவின் மகள்

பப்புவிடம் இருக்கு சில புத்தகங்களில் வேறு வேறு நாடுகள்,கண்டங்களில் இருப்பவர்களின் காலநிலை பற்றி, உடை உடுத்தும் விதம் பற்றி வாசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் வரும் முக்கிய கேள்வி, ‘பனி எப்போ நம்ம வீட்டுக்கு வரும்'. நம் வீட்டிற்கு, பனி டீவியில் காட்டும் பனி போல பொழிவதில்லை என்று புரியவைக்க முடியாது. அவளுக்கு டீவியில் காட்டும் பனி போல- அவள் விளையாட்டில் செய்யும் பனி பந்துகள் போல வேண்டும்.

அப்போதுதான், இந்த புத்தகம் கோடையின் அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் தூலிகாவினரிடமிருந்து எங்கள் கைகளை வந்தடைந்தது.

”பனிராஜாவின் மகள்”

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம் இடுகைக்காக அனுப்பியிருந்தார்கள்.

அட்லசை பார்த்து, அவ்விடத்திற்கே கற்பனையில் விஜயம் செய்யும் சிறுவனின் கதை.

சிறுவன் கேசவ்-விற்கு கோடைவிடுமுறை . “என்ன வெயில்” என்று அம்மா சலித்துக்கொள்ள அட்லசை பார்த்துக்கொண்டிருந்த கேசவ் ”குளுமையான இடத்துக்கு போனால் எப்படி இருக்குமென்று” கேட்பதிலிருந்து அவனது கற்பனை ஆரம்பிக்கிறது. அட்லசில் ஒவ்வொரு இடமாக பார்த்து எங்கெல்லாம் போகலாமென்று கற்பனை செய்வதும்,அந்த ஊரின் மொழியையும் கதைகளையும் அறிந்தவன் போல தன்னை எண்ணிக்கொண்டு பாயில் படுத்தபடி மெதுவாக தனக்குள் பேசிக்கொள்வதுமாக நேரத்தை கழிப்பான்.

அதில் திபெத்தை கண்டுக்கொண்டவன் அம்மாவிடம் அந்நாட்டைப் பற்றிப் பேச, பக்கத்துவீட்டினர் அங்கிருந்துதான் வந்திருக்கிறார்களென்ற செய்தியை சொல்கிறார் அம்மா.அவனுக்கு தெரிந்தவர்கள் அந்நாட்டில் வசிப்பதாக அவன் அறிவது இதுதான் முதல் முறை.பக்கத்துவீட்டுச் சிறுமி லாப்சாங் குழந்தையாக இருக்கும்போதே வந்துவிட்டாள்,அவளது அம்மாவும்,அப்பாவும் இன்னும் திபெத்திலேயே இருக்கிறார்களென்றும் கூறுகிறார் அம்மா.

ஆச்சர்யத்துடன் அட்லசை எடுத்துக்கொண்டு லாப்சாங்கை நோக்கி ஓடும் கேசவ் அந்த சிறுமி மூலமாக அவளது நாட்டைப் பற்றியும்,அங்கு பொழியும் பனியைப் பற்றியும் பேசுக்கொள்வதும்,அவர்களுக்கிடையே உண்டாகும் நட்பு இழையையும் சொல்லும் கதைதான் பனிராஜாவின் மகள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து அட்லசை பார்ப்பதும், கற்பனையை ஓட்டி அங்கிருப்பதாகவே நினைத்துக்கொள்வதும், பனியை கையிலெடுத்து உருகுவதாக எண்ணிக்கொள்வதும் - பப்புவையும் அவர்களோடே விளையாட வைத்தது. புத்தகத்தின் படங்கள் ஒரு ப்ளஸ். திபெத்தில் பனி அரண்மனையை கண்டபின், அடுத்து இலங்கையை பார்த்து அங்கே போகலாமா என்று கேசவ் மற்றும் லாங்சாங் கேட்டுக்கொள்வதாக முடிகிறது கதை.


காசு வாங்குவதற்கு வீட்டிற்கு கூர்க்கா வரும்போதோ அல்லது ஏதாவது உணவகத்திலோ மங்கோலிய முகங்களைப் பார்த்தால் ”ஏன் அவங்க அப்படி இருக்காங்க” என்று சில சமயம் பப்பு கேட்டிருக்கிறாள். நம்மை போலில்லாமல் அவர்கள் வித்தியாசமாக இருப்பதைதான் அவள் குறிக்கிறாளென்றாலும் என்னால் விளக்க முடிந்ததில்லை. ”அவங்க வேற ஊரிலேருந்து வந்திருக்காங்க, அவங்க அப்படிதான் இருப்பாங்க ”என்றுதான் சொல்லியிருக்கிறேன், வேறுவகையில் புரிய வைக்க இயலாமல்.

பப்புவின் வயதுக்கு இந்தக் கதை பெரியது தான். அவளுக்கு பூமிஉருண்டை அல்லது மேப்பில் கண்டங்களை மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும். ஆஸ்திரேலியாவும் நார்த் அமெரிக்காவும் சால இஷ்டம்! பிறகு துருவங்கள்!

நானும் பப்புவும் கண்ணை மூடிக்கொண்டு ”இப்போ எங்கே இருக்கோம்,பப்பு” என்றதற்கு, “ஆர்டிக்,அண்டார்டிக்” என்றாள்.

“அங்கே என்ன இருக்கு”

”ஹேய், போலார் பேர் அங்கே போகுது பாரு...குட்டி போலார் பேர் பார்த்தியா”

போலார் விளையாட்டு முடிந்ததும், திரும்ப கேசவை போலவே கவிழ்ந்து படுத்துக்கொண்டு கதை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு எங்கு போகலாம் என்று கேட்டதற்கு “ஆஸ்திரேலியா” என்றாள். ”என்ன பண்ணலாம் அங்கே என்ன இருக்கும்” என்றேன். “கங்காரு” என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.

கடல் ஆமைக்குட்டிகளை கடலுக்குள் கொண்டு விடலாமென்றாள் அவள்.

டோராவின் அண்ணன், ஒரு புத்தகத்தில் கடல் ஆமைக்குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவந்ததும் கடலுக்குச் செல்ல வழிகாட்டுவான்.

கடல் ஆமைக்குட்டிகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என்ன தொடர்பு என்று குழப்பிக்கொண்ட போது பிடிபட்டது, அந்த புத்தகம் எங்களுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நண்பர் பப்புவிற்கு அனுப்பியது! :-)

தூலிகாவிற்கு நன்றி!

” பனிராஜாவின் மகள்”
கதை : சௌம்யா ராஜேந்திரன்
சித்திரங்கள் : ப்ரொய்தி ராய்

Thursday, April 29, 2010

பப்புவின் வானவில்



”ஆனந்தியின் வானவில்” என்ற கதையை படித்துக்கொண்டிருந்தோம். ஆனந்தி வானவில்லை பார்க்க தோட்டத்திற்கு வருவாள். வானவில்லின் வர்ணங்களை எடுத்து தோட்டத்து பூக்களுக்கும், செடிகளுக்கும்,வண்ணத்துப் பூச்சிகளுக்கும்,சூரியனுக்கும் கொடுப்பாள். இதுதான் கதை.

எல்லாப் பக்கங்களிலும் வானவில் கண்ணைப் பறிக்கும். 'ஆனந்தி'என்று சொல்லாமல், 'பப்பு' என்று மாற்றி படிக்கும்படி சொல்லுவாள். அவளே கற்பனை வானவில்லிருந்து வண்ணங்கள் எடுத்து அடிப்பதாக ஆக்‌ஷன் வேறு.



'வானவில் செய்லாமா' என்று இருவரும் ப்லீடிங் பேப்பரை வெட்டினோம். வானவில் போல வரையத்தான் (வளைச்சு..வளைச்சு) கோடுகள் போட்டேன். நல்லவேளையாக பப்பு அந்த கோடுகளை ஃபாலோ செய்யாமல், மேலே மேலே ஒட்டினாள்.நடுநடுவே, ஒவ்வொரு வண்ணக்காகிதம் ஒட்டும்போதும், “ஹவ் மெனி கலர்ஸ் ஆர் தேர் இன் த ரெயின்போ” என்ற பாடலை பாடிக்கொண்டாள். (என்னையும் கூடவே பாட சொன்னாள்!!பொது நலன் கருதி..)



முடிவில், சிவப்புக்கு இடமில்லாமல் போகவே, ஓரத்தில் மட்டும் ஒட்டினாள். ஒன்றரை மணிநேரம் பொழுதுபோக்குக்கு இந்த வானவில் க்யாரண்டி!

Wednesday, February 10, 2010

அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள்

அருவி பதிப்பகத்தின் வீட்டுக்கல்வி இயக்கத்தின் கீழ் வெளியிட்டிருக்கும் நூல்களை புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தோம். முதல் நிலை நூல், பப்புவின் வயதுக்குக் கீழ் இருந்தது. மிக எளிதான கதைகள். முன்பு, கோலின்ஸ் சீரிசில் வாங்கியது நினைவுக்கு வரவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புத்தகங்களை வாங்கினோம்.


டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்
முயல்குட்டியும் போலீசுக்காரரும் - இது இரண்டாம் நிலை புத்தகம்.

விலங்குகள் கதைகள் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப் பட்டுள்ளன. எளிய வாக்கியங்கள் - விதவிதமான ஓசைகள் - முயல் காரட்டை சாப்பிடும்போது ஏற்படுத்தும் சப்தம் - போலிசுக்காரர் பூட்ஸு காலால் நடக்கும்போது வரும் சப்தம் - ஆடுகள் பாலத்தின் மீது நடக்கும் சப்தம் - இவை குழந்தைகளின் கவனத்தையும், கதை கேட்டு தொடர் சம்பவங்களாக நினைவு
வைத்துக்கொள்வதையும் மேம்படுத்துகிறது.


இதில் முயல்குட்டியும் போலிசுக்காரரும் என்ற கதையை வாசித்தோம். ஒரு குட்டி முயல் தோட்டத்திற்கு சென்று காரட் சாப்பிடுகிறது. அப்போது டப்டுப் லப்டுப் என்ற சப்தத்தை கேட்கிறது.போலிசுக்காரர் என்று நினைத்து ஓடி ஒளிகிறது. அது ஒளியும் ஒவ்வொரு இடத்திலும் புதிய விலங்கொன்றை சந்திக்கிறது. கடைசியில் அந்த டப்டுப் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடுகிறது.


எளிய கதை, ஆனால் பப்புவை பால் குடிக்கவும் மருந்து குடிக்கவும் வைத்தது!

புத்தகத்திற்கு பின்னட்டையில் அம்மாஅப்பாக்களுக்கும்...பாட்டிதாத்தாக்களுக்கும்... அப்புத்தகத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதனை அருவியின் இந்த பக்கத்தில் காணலாம்.


அடுத்தது,
சுண்டெலிக் கதைகள் - இது மூன்றாம் நிலை புத்தகம்.
எல்லாக் கதைகளிலும் சுண்டெலிதான் ஹீரோ. சுண்டெலி சூப் குடிக்கிறது...சிங்கத்தைக் காப்பாற்றுகிறது..பூனையோடு உரையாடுகிறது.
...பப்புவோடு பொழுது போக்குகிறது!

இக்கதைகள் பிள்ளைகளுக்கு சொல்வதற்கானவை...வாசிப்பதற்கானவை அல்ல” என்று அட்டையில் போட்டிருந்தாலும் பப்பு நான் வாசிப்பதையே விரும்புகிறாள்! (எனது கதை சொல்லும் திறமை அப்படி!)

முதல் கதையும் , மூன்றாம் கதையின் பாதியையும் இப்போது திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

புலி ஒன்று சூப் வைக்கும். தேங்காய், மாங்காய் எல்லாம் போட்டு சுவையாக வைத்திருக்கும். சூப் சுவையால் கவரப்பட்ட சுண்டெலி புலியை நைச்சியமாக பேசி குளிக்க அழைத்துச் செல்லும். புலி நீந்திக் கொண்டிருக்க எலி வந்து சூப்பை குடித்து விடும். போகுமுன், மரத்தின் மேலிக்கும் குரங்குகளிடம் ஒர் பாடலை கற்றுக் கொடுக்கும்.

தேங்கா மாங்கா சூப்பு
தெகட்டாத சூப்பு
புலி வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு

எங்கே பாடுங்கள் பார்ப்போம்? (சும்மா கிண்டலுக்கு... :-)) )

ஒரே ஒரு விமர்சனம் : சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன். நான் வாசிக்காததால் பப்புவுக்கு இது தெரியாமல் போகப் போவது இல்லை. ஆனால், இந்த வயதில் (3-7 வயதினருக்கான) புத்தகத்தில் இப்படி வருவதை தவிர்த்திருக்கலாம்.

இது ஒன்றைத் தவிர, மிகவும் ரசித்து வாசிக்கூடிய குழந்தைகள் விரும்பக்கூடிய புத்தகங்கள் - மெல்ல கற்போம் நூல்கள்!

Sunday, January 10, 2010

நாங்களும் ரவுடிதான்!

இவை கடந்த ஆண்டு புத்தக சந்தையில் வாங்கியவை - Eureka - AID India -விலிருந்து.
எல்லாமே ஒரு பக்க கதைகள். தனித்தனி அட்டையில் இருக்கும். எளிதான கதைகள். ஐந்து வரி கதைகளிலிருந்து ஆரம்பித்து சற்றே பெரிய குழந்தைகளுக்கான கதைகள் வரை இருக்கும். பெரிம்மா அவற்றை கவரில் போட்டு தனித்தனி தாளாக வைத்தார். தமிழ் படிக்கத் தெரியாவிட்டாலும், கதையை பார்த்து அதைப்போலவே சொல்ல சாரி..படிக்க முயற்சி செய்தபோது எடுத்தது.





அருண் என் நண்பன் என்று ஆரம்பிக்கும் மீன்நண்பனை பற்றிய கதை. கடைசியில் ‘அவன் யார்?, நான் வளர்க்கும் மீன் தான்' என்று முடியும். சமயங்களில், அது 'நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!! அவ்வ்வ்!





இதுவும் அதே போன்ற கதைதான் - தாமு வாங்கிய சட்டை பற்றி.

இந்த ஆண்டும் AID -India வில் புத்தகங்கள்வாங்கினோம். ஆனால் இதே போல ஒரு பக்க கதைகள் ஒரே புத்தகமாக இருந்தது.

ஆங்கில புத்தகங்கள் ஒன்றிரண்டுதான் வாங்கினோம். தமிழில், நல்ல கதைகள் - சுவாரசியமான கதைகள் இல்லையென்ற குறை இந்தமுறை தீர்ந்தது. CBT, AID - India, பூவுலகின் நண்பர்கள், NCBH, பாரதி புத்தகாலயம் இன்னும் பல ஸ்டால்களில் குழந்தைகள் விரும்பக்கூடிய எளிய தமிழ் புத்தகங்கள் கிடைத்தன.

Saturday, October 17, 2009

Collins Big Cat

பப்புவிற்கு படித்துக்காட்ட, vocabulary அதிகப்படுத்த, அவளாகவே திரும்ப சொல்வதற்கு எளிதான கதைப் புத்தகங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஹார்ப்பர்கொலின்ஸ் தளத்தை காண நேரிட்டது. வாசிக்க ஆரம்பிக்கும் முதல் தானாகவே வாசிக்கும் வயது வரை நான்கு பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு புத்தகம், மொத்தமாக நான்கு புத்தகங்களை Big Cat சீரிஸிலிருந்து இணையத்திலேயே வாங்கினேன்.




The Big Splash - ஒரு முதலை/அலிகேட்டர் தானாக குளிப்பதற்கு என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராகிறது என்பது தான் கதை. இது முதல் லெவலில் நான்கு புத்தகங்களில் ஒன்று. மூன்று வயதுக்கு மேல் உபயோகப்படுத்தலாம். இந்த லெவல் பொதுவாக படம் பார்த்து பெயரை சொல்வது, அடுத்த என்ன பொருளை எடுத்துக்கொள்ளும் என்று கதையை தொடர உதவும். கதை முடிந்ததும் செயல்பாடுகள். எளிதான் maze, நிறைய படங்கள் (டெலிபோன், பிரஷ், டவல், காலணி முதலியன) கொடுத்து குளிக்க நாம் எதையெல்லாம் பயன்படுத்துவோம் என்று குழந்தைகள் கண்டறிவது முதலிய விளையாட்டுகள் உள்ளன.




The Little egg - இதுவும் எளிதாக கதைதான். ஆனால் லெவல் இரண்டு. இது சற்றே பெரிய கதை, அதிக வார்த்தைகள் + ரைமிங் வார்த்தைகள், பல விலங்குகளின் வசிப்பிடங்கள் முதலானவற்றை கதையினூடாக சொல்லிச் செல்கிறது. ஒரு சிறிய முட்டை அதன் கூட்டிலிருந்து பல இடங்களைக் கடந்து, பல விலங்குகளை சந்தித்து தனது கூட்டுக்கே திரும்ப வருவதுதான் கதை. இதிலும் கதைக்குப்பின் பல செயல்பாடுகள் உண்டு. கதையில் நிகழும் பல சம்பங்களை கொடுத்து வரிசைக்கிரமமாக சொல்லுதல் போன்ற செயல்பாடுகள் - இது 4 வயதினருக்கு மேல் ஏற்றது.


மற்ற இரண்டு புத்தகங்கள் மேல் பப்புவிற்கு இப்போது விருப்பம் இல்லை. சற்றே கடினமானதாக இருக்கலாம். அதனால் இந்த இரண்டு புத்தகங்கள்தான் இப்போது வாசிக்கிறோம். அந்த புத்தகங்களை வாசிக்கும்போது அவற்றை பற்றி பதிவிடுகிறேன்.



Dr.Seuss-இன் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன். இது 5 அல்லது 6 வயதுக்கு மேல் வாசிக்க பழக்குவதற்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். ஃபன்-க்கு நான் கியாரண்டி!! tongue twister மாதிரியான வாக்கியங்களில் அமைந்த புத்தகம். இப்போது நாங்கள் நாலு பக்கங்கள் வரைதான் வாசிக்கிறோம்....வாசித்துக்காட்டும் போதே பப்புவுக்கு ஜாலியாக இருக்கிறது. அவளும் கூடவே சொல்ல முற்படும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது.
மொத்தத்தில் பயனுள்ள செலவு!! :-)

வாங்குவதற்கு இங்கே செல்லவும்.

Friday, July 03, 2009

Cat & Catterpillar!

செய்தித்தாளுடன் வந்திருந்த ஃப்லையரில் இருந்த C ஐ பப்பு அடையாளம் காட்டினாள். அதை வெட்ட சொன்னேன். பின்னர், வளையலால் சார்ட் பேப்பரில் வட்டங்கள் போட வேண்டும். அதை வெட்ட வேண்டும். அதை ஒட்டி caterpillar செய்யப் போகிறோம் என்று சொல்லி ஒரு வட்டத்தைச் செய்துக் காட்டியதும், இதில் எப்படி கேட்டர்பில்லர் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்துடனே, மீதியைத் தானாகவே செய்தாள். ஓரிரு வட்டங்கள் வடிவம் சரியாக வரவில்லை(படத்தைப் பெரிதாக்கினால் தெரியும்!). பின்னர் வெட்டி முடித்து எல்லாவற்றையும் ஒட்டினாள். சில இடங்களில் பொருத்துவதற்கு இடத்தை நான் காட்ட வேண்டியிருந்தது. ஒட்டி முடித்ததும் கண்கள் வரையச் சொன்னேன். அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்!



இது ஸ்பான்ஞ் கொண்டு செய்தது. பூரிகட்டையில் அலுமினியம் ஃபாயிலை சுற்றி அதில் ஸ்பான்ஞ்ச்-ஐ ரப்பர் பான்டால் கட்டிவைத்தேன். தட்டில் அவளாகவே வண்ணங்களை குழைத்தாள். பூனை பொம்மையை மஞ்சள் சார்டில் வரைந்துத் தந்தேன். அதில் பூரிக்கட்டையால் வண்ணங்களைக் கொண்டு உருட்ட வேண்டும். ஒரு தடவை செய்துக் காட்டியதும் முழு சார்ட்டிலும் பூரிக்கட்டையால் உருட்டி வண்ணப்படுத்தினாள். பின்னர் அதை வெட்டச் சொன்னேன். வால் பகுதியில் என்னை வெட்டச் சொன்னாள். வெட்டியபின் வேறு சார்ட் பேப்பரில் ஒட்டினாள்!

அப்புறம் இந்த ABC புக்கை படித்தோம். எழுத்துகளை சொல்லித்தராம, ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் வாக்கியங்களை வாசித்தோம். ஒவ்வொரு எழுத்துக்கான ஒரு ஸ்டிக்கர் முதல்பக்கத்தில் இருந்தது. பப்புவின் வடலூர் ஆயா, பப்புவுக்கு கொடுத்தது இது. அவர் கொடுத்தவுடனேயே, ஸ்டிக்கரைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாத பப்பு, ஆயாவோட உதவியுடன் ஒட்டியிருந்தார். அதனாலே ஸ்டிக்கர் வேலை மிச்சம். வாக்கியங்களை சொல்லச் சொல்ல அவளும் திரும்பச் சொன்னாள்!







நல்ல படங்களோட கொஞ்சம் ஃபன்னியாகவும் இருக்கு. இதன் விலை ரூ 85. உதாரணத்துக்கு, ஒரு பக்கம் இங்கே! நல்ல ABC புத்தகம் வித்தியாசமானதா உங்களிடம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

Monday, June 08, 2009

...ஃப்ரம் பப்பு'ஸ் ரூம்!



ரொம்ப நாளைக்கப்புறமா பப்பு Doh வேணும்னு கேட்டதாலே, மாவு எடுத்துக் கொடுத்தேன்! போனதடவைய விட இப்போ நல்லாவே கைகளை பிசிபிசுப்பாக்கிக்க ஆர்வம் காட்டினா. மாவு பிசையறதுல உதவினேன். இந்த முறை நாங்க எடுத்துக்கிட்டது, ஷேப்ஸ். மாவிலே அந்த ஷேப்ஸை வைச்சு உருவங்கள் கொண்டு வரணும்! ஷேப்ஸ் எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, கொஞ்சூண்டு மாவு இருந்தது. இப்போ பப்புவிற்கு ஒரு சில ஆங்கில எழுத்துகள் தெரியும். A செய்யறியான்னு கேட்டதும் உருவானதுதான் இந்த As!! அவங்க பள்ளிக்கூடத்திலே, "நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க என்கிட்டே! (என்னை பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை! பெரிம்மா... நீங்க பப்புவோட ஸ்கூல் ஆண்ட்டியை சந்திச்சீங்களா?!!)


அப்புறம் செஞ்சதையெல்லாம் காய வச்சு வர்ணம் தீட்டினா பப்பு. அதுல A இப்படி உருமாறுச்சு!















A எழுத்து வர்ற மாதிரி ஒரு கதை படிச்சோம். A - ANT.

இது ஒரு காட்டுல வாழற எறும்பு மற்றும் யானையின் கதை! பெரிய வண்ணங்கள் நிறைந்த படங்களோட இருக்கு. ஒரு குறும்புக்கார யானை எபப்டி எல்லாருக்கும் தொல்லை கொடுத்துச்சு, எறும்பு அதுக்கு என்ன செஞ்சதுன்னு, யானை எப்படி எல்லோர்கூடவும் நட்பா மாறுச்சுன்னும் அழகா சொல்லியிருக்காங்க!இந்தக் கதை முழுசும் A எங்கே வருதுன்னு கண்டுபிடிச்சா! ஆனா சின்ன a தெரியாதே, சோ ஒரு சில இடங்களில் மட்டும் அவளாலே கண்டுபிடிக்க முடிஞ்சது!

Saturday, March 28, 2009

கசகச பறபற - சிறார் புத்தகம்!!



புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்


பப்பு-விற்கு, கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறியலாம் அம்மாக்களின் வலைப்பூவில்!

Tuesday, February 03, 2009

சுட்டிப் பையன் பபிள்ஸ்!!

பபிள்ஸ் சீரிஸ் புத்தகங்கள் பப்புவிற்கு மிகவும் பிடித்தம். பபிள்ஸ் என்ன பண்ணான், அவங்க அம்மா என்ன சொன்னாங்க என்பது ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் மிகப் பிரசித்தம். பபிள்சை நாங்கள் ஒரு லைப்ரரியில் தான் சந்தித்தோம். அதே போல் பெப்பர் என்றும் சீரிஸ் வருகிறது.

மூன்று விஷயங்கள் எங்களைக் கவர்ந்தவை (அ) பபிள்சை பற்றிச் சொல்ல..

1. ஆங்கில வார்த்தைகளை எளிதாக அறிமுகப் படுத்த (வார்த்தைகள் தான், வாக்கியங்கள் அல்ல!!)
2. ஒவ்வொரு கதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் அடிப்படையில் அமைந்திருப்பது
3. கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

பப்பு, சபரிக்கு பரிசளித்ததும் இந்த சீரிஸின் ஒரு கதையே! பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம். முத்துலெட்சுமியுடன் சபரியை பார்க்கப் போகிறோம் என்றதும் எந்த சந்தேகமுமில்லாமல் என் மனதில் தோன்றியது பபிள்ஸ்தான் சீரிஸ்தான்! Hope sabari enjoys with Bubbles!!

அம்மாக்களின் வலைப்பூவிலும் இதுக் குறித்து!

Sunday, January 25, 2009

குட்டி நாயோட அம்மா எங்கே போச்சு?




அன்று பப்புவின் பள்ளிவேனுக்காக காத்துக் கொண்டிருக்கையில், எதிரிலிருந்த மரக்கிளையிலிருந்து கரைந்ததொரு காகம். “அவங்க அம்மா எங்கே?” என்று கேள்வியும் என் எதிரில் வந்து விழுந்தது. வழக்கமான கேள்விதான். தெருவில் தனியாய் செல்லும் குட்டி நாய், குதித்தோடி வரும் கன்றுக்குட்டி அல்லது தனியாய் கூவும் குயிலின் ஒற்றைக் குரல் இதில் ஏதாவதொன்றுப் போதும், பப்புவிடமிருந்து இந்தக் கேள்வியை வெளிக்கொண்டுவர!
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலும் இந்தக் கேள்வியைத் தான் நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது!

புத்தகம் - Rabbit's Happy day மேலும் படிக்க... அம்மாக்களின் வலைப்பூக்கள்

Friday, November 28, 2008

தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து



இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடியப் புத்தகம். அபுவின் பந்து உதைக்கப் படும்போது அது பயணிக்கும் திசைகளில் சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச்
செல்கிறது ஒருவித தாள கதியில்.

மீதியை படிக்க இங்கே செல்லவும்.

Wednesday, October 08, 2008

ரவுண்ட் அப்

கடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).

வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,

“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல!!!

மை காட்!!

தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.

”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.

இல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”

ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!

நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)

சொத்துப் பிரிச்சிட்டோம்ல



பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.



அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!

என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!

படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!

Wednesday, September 17, 2008

குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்

3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன்.
தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு மேற்பட்டவருக்கு ஏராளமான புத்தகங்கள் தமிழில் உண்டு.

நியூ ஹாரிஜன் மீடியாவின் ப்ராடிஜி புத்தகங்கள் என்னுடைய ஆதங்கத்தை தணித்தது. பப்புவுக்கு வாங்கியது இந்தப் புத்தகம்.புத்தகங்கள் 5 வயதினருக்குரியது போலிருந்தாலும் பப்பு வயதினரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.தெளிவான பெரிய படங்களுடன் ஒன்றிரண்டு வாக்கியங்களில் கேரக்டர்கள் பேசுவதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. புத்தகத்திலிருப்பதைப் படித்துக் காட்டினாலே சிறு குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

விலையும் குறைவுதான். மற்ற சில டாபிக்குக்ளையும் டிரை செய்யலாமென்றிருக்கிறோம்.