Saturday, March 29, 2014
பப்பு டைம்ஸ்
"அப்படின்னா என்னப்பா...எனக்கு தெரியாதே?!"
"தி மு கா மாதிரி அ தி மு கா...ஜெயலலிதா கட்சி...நேத்து வீட்டுக்கு வந்துச்சு"
"வீட்டுக்கு வந்துச்சா?எப்போ? எனக்கு தெரியாதூ!!"
"வீட்டுக்குன்னா வீட்டுக்கு இல்ல...பாஸ் பண்ணி போனாங்க..ரோட்ல எல்லாருக்கும் லெட்டர்ஸ்.."
"நீ வாங்கினியா? உனக்குதான் ஜெயலலிதா புடிக்குமே.."
"இல்லே....ஜெயலலிதா கொண்டு வந்து குடுத்தா வாங்கிக்கலாம். அதுதான், தூத்துக்குடி போயிருக்காங்களே!"
!!!
"ஆச்சி,ஒரு கேம்.யெஸ் ஆர் நோ?" - பப்பு
"யெஸ்" - பலியாடு
"யெஸ் சொல்லலாம்..ஒரே ஒரு நோ அலவுட்" -பப்பு
"ம்ம்ம்" - அதே பலியாடு
"ஜனவரி ஐ பீட் யூ?"-பப்பு
ஙே...."யெஸ்"
"பிப்ரவரி ஐ பீட் யூ?" -பப்பு
"யெஸ் "
"மார்ச்சு ஐ பீட் யூ" -பப்பு
"யெஸ்"
ஏப்ரல் மாதத்துக்கு ஏதோ இருக்கும் போல இருக்கு...கவனமாக இருக்கும்.
"ஏப்ரல் ஐ பீட் யூ"
எதுக்கும் யெஸ் சொல்லி வைப்போம்.
"யெஸ்"
"மே ஐ பீட் யூ?"-பப்பு
"ஓ நோஓஒ"
ஆகா...நல்லவேளை தப்பிச்சேன்!
I had a wife
Her name is life
In my life,
I stay with my wife!
- பப்புவுக்கு உதித்த தத்துவம்
#ஆர்டரின்_பேரில்_இங்கு_கவிதைகள்_செய்து_தரப்படும்:)
டெரரா இல்ல இருக்கு!!
"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது" என்றேன்.
"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு
என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.
"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.
"இல்லல்ல...சும்மா சொன்னேன்." - பப்பு
"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா" - நாந்தான்.
"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு" - பப்பு
அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!
"அப்போ கேர்லும் கேர்லும் போனா?" - மீ தி அப்பாவி
"அவங்க ஃப்ரெண்னட்ஸ்" - பப்பு
"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.
"அவங்க எனிமீஸ்" - பப்பு
"அப்புறம், பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே, இங்கே பாரு, ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே வெட்டிங்டேன்னு சொல்லுவோம்" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!எகொச!!
" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?" - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!
இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி, எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.
"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?" - மீ
"நான் (இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன் இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!" - பப்பு
எனக்கு எப்படி இருந்திருக்கும்!! :-)))
ஆச்சரியமாகவும், ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.
" இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ, எல்லாரும் சிரிப்போம்!"
டெரரா இல்ல இருக்கு!!
Sunday, February 16, 2014
பப்பு டைம்ஸ்
'நான் கல்யாணத்தை நிறுத்த போறேன். அதுதான் என் ப்ளான்' என்று வருவோர் போவோரிடம் எல்லாம் சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். அதில் சிலர் பப்புவுக்கு ஐடியா தருவதாக எண்ணி, 'நீ கல்யாணத்தப்போ மாமாவோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுடு.' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். பப்பு அதையே பிடித்துக்கொண்டாள்.
நச்சு தாங்காமல் 'சீப்பை எல்லாம் ஒளிச்சு வைப்பாங்களா? அது கிண்டலுக்கு சொன்னது பப்பு' என்றதும், அவளது திட்டத்தை என்னிடம் விவரிக்கத் தொடங்கினாள்.
'எல்லா சீப்பையும் ஒளைச்சு வைச்சுட்டா என்ன ஆகும்? மாமா சீவ முடியாது. அப்போ, மாமாவோட தலை எப்படி இருக்கும்? அதை பார்த்துட்டு பிரைட்(bride) !!! "ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ...யார்றா இந்த பையன் பேய் மாதிரி இருக்கான்னு"ன்னு சொல்லிட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவாங்க'
;-)

"ஒரு ஊர்ல தில்லையர்க்கரசின்னு (தில்லைக்கரசியை அப்படிதான் சொல்றா!) ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த குட்டி பொண்ணு வளர்ந்து டீச்சர் ஆகிடுச்சாம்.அதுக்கு ஒரு டாட்டர் வந்துச்சாம். அந்த டாட்டர் பேரு சந்தனமுல்லையாம். அந்த டாட்டருக்கு குட்டி டாட்டர் வந்துச்சாம். அந்த பொண்ணு பேரு குறிஞ்சி மலராம். அது எப்போவும் கதை கேட்டுக்கிட்டே இருக்குமாம். அப்போ அவங்க ஆயா ஒரு கதை சொன்னாங்களாம்.
ஒரு ஊர்லே ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணு செம வாலாம். ரொம்ப குறும்பு பண்ணுமாம். எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுமாம். அதுக்கு வால் முளைச்சுக்கிச்சாம். அது அவங்க ஆயாகிட்டே போய் எனக்கு ஏன் வால் முளைச்சுச்சுன்னு கேட்டுச்சாம். நீ வால்த்தனம் பண்றதால உனக்கு வால் முளைச்சுடுச்சுன்னு சொன்னாங்களாம். அப்போ அவங்க அப்பா, நீ யாரைல்லாம் ஹர்ட் பண்றியோ அப்பல்லாம் இந்த சுவரிலே ஒரு ஆணி அடின்னு சொன்னாராம். அது கொஞ்ச நாள்லே ஆணி அடிச்சு அடிச்சு சுவரே ஃபுல்லாயிடுச்சாம். அப்போ அவங்க அப்பா ஆணியெல்லாம் எடுத்துட்டு சொன்னாராம். அங்கே நெறைய ஓட்டை இருந்துச்சாம், ஆணி அடிச்ச இடத்துலே. 'நீ ஆணி அடிச்சுட்டு எடுத்தாலும் ஹர்ட் பண்ணது பண்ணதுதான்'னு சொல்லிட்டு ஒரு கதை சொன்னாராம்.
இப்படிதான் ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு ஒரு வால் இல்ல...பல வாலுங்க இருந்துச்சாம். 20 30 வாலு. ஏன்னா அந்த பொண்ணு செம வால்த்தனம் பண்ணுமாம். அப்போ..."
அதுக்குள்ளே நான் தூங்கிட்டதாலே கதை எப்போ முடிஞ்சதுன்னு தெரியலை!
#நெவர்_எண்டிங்_வால் ;-)

"எல்லாரும் அப்போதான் போய் உட்கார்ந்திருந்தாங்க. ஆரம்பிக்கல்லாம் இல்ல. நீ எப்படி கேக்கிறே...பாரு !! ..அதுலேருந்து தெரியுது. உனக்கு என் மேல அவ்ளோ அக்கறைன்னு. நீ எது சொன்னாலும் நான் செய்வேன் ஆச்சி!" என்றெல்லாம் ஒரே லவ்ஸ்! நானும், இதான் சான்சுன்னு, "காலையில நான் எழுப்பும்போது மட்டும் எழுந்துடு" என்று காதில் போட்டு வைத்தேன்.
(அதற்கு முதல் நாள்தான் 'உன்னை தவுஸண்ட் இயர்ஸுக்கு புடிக்கும், ஆனா, எல்லா டேஸ்லெயும் மார்னிங் மட்டும்தான் புடிக்காது'ன்னு ஒரு பல்பு குடுத்திருந்தா!)
அதுலேருந்து, "ஐ லவ் யூ ஆச்சி ," நீதான்ப்பா என் லைஃப்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், ஒரு படி மேல் போய், அவளது அன்பை நிருபிக்க வேண்டி - ஒரு உதாரணத்தை சொன்னாள்.
'நான் தாட் ஃபார் த டேவுல என்ன எழுதினேன்..?.An intelligent son makes a father glad; But a foolish son makes his mother sad" ந்னு இருந்ததை, நான் எப்படி எழுதுனேன். An intelligent daughter makes her mother glad, but foolish daughter makes her father sad. எல்லாம், உனக்காகதான்..ஆச்சி!"
நேரமோ எட்டரை. அங்கே,ஆட்டோ வேற வெயிட்டிங்!
இதுக்கெல்லாம் 'என்ன கைமாறு செய்ய போகிறேன்' லுக்கோட, ஈஈஈஈன்னு சிரிச்சு - 'தேங்க் யூ'ன்னு சொல்லிட்டேன்!
#வீ_வான்ட்_மோர்_எமோசன்
Saturday, December 07, 2013
சிங்கம் - I
"அப்டின்னா?"
"மூவி...சிங்கம் 1, சிங்கம் 2" - பப்பு
"ஓ..அது கிட்ஸ் மூவியா?"
"ஆமா ஆச்சி, ஜாலியா இருக்குமாம்" (!!) - பப்பு
"ம்ம்..."
"அதுல ஒரு சிங்கம், மேஜிக்கலா எப்படி புலியா மாறுது, அதான் ஸ்டோரியாம்" - பப்பு
"நெஜம்மாவா?"
"ஆமா ஆச்சி, விலாசினி குட்டிப்புலி பார்த்துட்டாளாம்" - பப்பு
"எங்கே?"
"மூவில ஆச்சி, அதும் ஜாலியா இருந்துச்சாம்! அமித் சிங்கம் 2 பார்த்துட்டானாம்" - பப்பு
"ம்ம்..நீ சாயங்காலம் ஸ்கூல்லேருந்து வருவே இல்ல, வழியிலே சிங்கம் 2 போஸ்டர் இருக்கான்னு பாரு. போஸ்டர்லே என்ன இருந்துச்சுன்னு சொல்றியா, எனக்கு."
"இப்போவே நான் பார்த்துட்டேன். அது பார்த்ததும்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. " - பப்பு
"என்ன இருந்துச்சு போஸ்டர்லே?"
"ம்ம்..ஒரு சிங்கம், அப்புறம் 2 மனுசங்க" - பப்பு
"சிங்கம் இருந்துச்சா!!ம்ம்...ரெண்டு மனுசங்க யாரு, பாயா கேர்லா?"
"ஒரு பாய், ஒரு கேர்ல்" -பப்பு
அதுக்குள்ள நல்லவேளையா ஹெல்மெட் போடாத ஒரு அங்கிள் கிராஸ் பண்ணி எங்களை காப்பாத்திட்டாரு.
Wednesday, August 28, 2013
"Living Statues of Marina Beach" By Pappu
This is about the walk on the beach. There is a meeting. I was so happy. I advised my mom to take me.
She said, "Ok, I will take you". I was so happy.
At the night, I did not sleep. I was thinking to go to the beach. I dreamed.
I waked my mom, "Its time!".
She said "I feel sleepy.ahhhh".
"Its time to go to the beach", I shouted.
My Mom said "OK".
We went to catch train. So, we started to walk. My Mom said, "My legs are paining. I think we can go in Auto." I said to my Mom, "Mom, What is this Mom. Even not my legs are paining. OK, I will listen to you". We went to catch a train. And we bought the ticket.
Then, we started to go in the train. It was a happy day. But, I feel sleepy. At that time my Mom said, "Get up!Get up!we need to go to other station." I said, "Ok. "
That time it was our station. My Mom pulled me and jumped from the train. We went to the other railway station, It was going up and up. So we saw all the things. At that time, it was our station. In the board,it had written "CHENNAI BEACH". I jumped from the train. My mom took me.
And we went near to the statue "KANNAGI". It is Kannagi's statue. And my Eric came. I was enjoying. He looked at me and smiled. He took a cloth . He put the cloth on his head.
We have to pull it. We pulled. But I did not pull. He talked as Kannagi. I was happy to listen Kannagi's story. I thought it was an awesome day. Other man talked about Kannagi in Tamil.
I did not like Kannagi burning Madurai. I liked kannagi's speech to the king. And, I like her, as she is a brave lady.
Then we started to walk to other statue, which is named was Subash Chandra Bose. An uncle talked about him. And I saw he was wearing glass. I liked the Subash chandra bose as I have a friend called Rubyone Chandra Bose. Two people talked about Subash Chandra Bose.
And,some of the people came and asked "Can I come and observe?". And Eric said, "Yea, I love you to come and speak about Subash Chandra Bose. If you know about him, say about him."
They said , "I will see in the paper and read".
I did not like it. He is elder. But he did not learned to speak without seeing the paper. How can it be? Even, I, can speak a big speech. Yes, Republic day I talked about 3 pages.
The we moved to other statue. My legs started to pain. But I was brave.
This statue was about G.U.Pope. He looked beautiful. We like the speech of this statue.He acted beautifully. And it was a big statue. I saw the statue for many many times.When he was talking, I was seeing the statue. At the last moment, I saw him. He He smiled at me.
We went to the next statue. It is Thiruvalluvar.You know Thiruvalluvar?
He was a man, who was beautiful too! He was having a beard. He had pen and panai olai. I liked it.
At that time, we went to the next statue. It is fifth statue. The statue's name was Bharathidasan. Eric sir talked about Bhrathidasan, As he put the cloth on him.
Then my mom came. She talked as Bhrathidasan. I though she will be scared because she will not be brave in home, as she was shy.
At the last, I sang, "Achchamillai! Achchamillai!!". I sang it as loud as I could. My mom was shocked to see my loud song. I saw I surprised my Mom.
So, this was the last statue, "Avvaiyar". A man spoke of her. At that time, Police came and scared me.
Then Eric said, "Let us go there and give speech". One man came. "I will", he said. And he spoke. It was finished. It was a beautiful day. He spoke about Avvaiyar beautifully. I like her.
And I like to introduce my name amd my mother's name.
My name is Khurinji. And My mother's name is Sandanamullai.We loved the place very much.We thanked Eric and we came back home.
**************************************************
பின்குறிப்பு: கடந்த ஞாயிறு சென்னை வாரத்துக்காக நடைபெற்ற 'வாழும் சிலைகள் நடை"க்குச் சென்றிருந்தோம். காலையில் ஏழரைக்கு மணிக்கு மெரினாவின் கண்ணகி சிலையிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு சிலையாக ஆறு சிலைகள் வரையிலான ஒரு மணி நேர நடை. பப்புவிடம் சொன்னதும் போக விருப்பம் தெரிவித்தாள். (அவளது கதைசொல்லும் ஆசிரியராயிற்றே!!) காலை ஏழரைக்கு அங்கு இருக்க வேண்டும் என்றால் ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால்தான் சாத்தியம். அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். என்ன ஆச்சர்யம்!! அலாரம் அடிக்க ஒரு நிமிடம் முன்பாகவே எழுந்து எனக்கு "குட்மார்னிங்" என்றதுதான் நம்பவே முடியவில்லை....மற்ற நாட்களில், ஆறு மணியிலிருந்து அரைமணிநேரம் வரை கடப்பாரை போட்டு ஆளை கிளப்ப வேண்டும்...ம்ம்ம்...:-)
சென்னை கோட்டை வரை சென்று பறக்கும் ரயிலில் அங்கிருந்து திருவல்லிக்கேணிக்கு சென்றோம். பிறகு, திருவல்லிக்கேணியிலிருந்து வேளச்சேரி வரை அதே ரயிலில் சென்றோம். அதாவது கதாபாத்திரங்களே பேசுவதாக ஆங்கிலத்தில் தமிழிலும் பேசுவார்கள். 'பாரதிதாசனாக தமிழில் யாராவது பேசுகிறீர்களா 'என்றபோது நான் சில வார்த்தைகள் பேசினேன். தொடர்ந்து, பப்பு, "அச்சமில்லை அச்சமில்லை" பாடலை (பாரதிதாசனின் சிலை கீழ் நின்று!)பாடினாள்.சென்றுவந்த அனுபவத்தைப் பற்றி எழுதச் சொன்னேன். வழக்கம்போல, அவள் சொல்ல சொல்ல நான் எழுதவேண்டியதாகிவிட்டது.
Sunday, July 14, 2013
மனதை உருக்கும் ஒரு காதல் கதை By பப்பு
Now you tell me , how the girl magic stick escaped. You have to create the end. Tell me."
"Mmmm...". - me
"Say... "
"ம்ம்..சொல்றேன்..சொல்றேன்...கொஞ்சம் டைம் குடு."
டைம் எடுக்கிட்டதை பார்த்து நொந்துபோன பப்பு, "நானே சொல்றேன்"
"The girl magic stick can do magics. She thought to kill the knife. The knife said,'you can not kill me.' Because, this is a magic knife. He turned round and round and turned to be a human . The girl magic stick turned round and round and turned to be a fairy.The boy magic stick turned round and round and turned to be a elf. The human turned round and round and he felt dizzy and fell down. The fairy and elf runned to the sky."
இப்போ எனக்குதான் dizzy யா இருக்கு!!!
Sunday, June 16, 2013
கூல்..கூல்..ஸ்கூல்!
வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.
மாலா!
பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை, அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)
பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.
மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி கத்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.
அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.
மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில் சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இடையில் வந்து சேர்ந்தவர்கள்.
ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.
நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும் சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.
அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும் சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும் சொன்னார்கள். அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.
ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது. அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.
லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.
'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.
"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.
மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.
அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.
திரும்பி வரும்போது, பப்புவிடம்,
"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.
"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு
" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"
"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."
அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!
Thursday, June 13, 2013
பப்பு டைம்ஸ்
டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன்.
"ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" - மீ
"இல்ல...வளைஞ்சு வளைஞ்சு போகாதே!" - பப்பு
"வளைஞ்சு போனா என்ன?" - மீ
"வளைஞ்சு போனா குட் மேனர்ஸ் கிடையாது." - பப்பு
"..?!!.."
" நீ இப்ப க்யூல இருக்க. யாராவது வந்து உனக்கு முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்? குட் மேனர்ஸா அது? அது மாதிரிதான், பைக் பின்னாடி நாம இருந்தா, அது போனதுக்கு அப்புறமாதான் நீ போகணும். நீ வளைஞ்சு போனா அவங்களுக்கு எப்படி இருக்கும்?!" - பப்பு
"........" (அவங்களுக்கு எப்படி இருக்குமா?....நமக்கு லேட் ஆகிடும்.. மகளே!!அவ்வ்வ் - மைன்ட் வாய்ஸ்!)
"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு
நான் ஏன் வாயை திறக்கறேன்?!!
போன வருசமெல்லாம், திடீர் திடீர்னு சில பைக் நம்பர்களை கொடுத்து போலீஸ்கிட்ட சொல்லு, சொல்லுன்னு ஒரே அட்டகாசம்.என்னன்னா, அவங்க எல்லாம், பைக்லே ஹெல்மெட் போடாம போனவங்களாம். காலையில பார்த்ததை மனப்பாடம் பண்ணி சாயங்காலம் நான் ஆஃபீஸ்லேருந்து வந்ததும் இந்த பஞ்சாயத்து நடக்கும்! இந்த வருசம் இப்படி ஆரம்பிச்சிருக்கு!!
ஆம், பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது!
மாலையில், வீட்டுக்குச் சென்றதும் பப்புவிடம் 'எப்படி இருந்துச்சு ஃப்ர்ஸ்ட் டே?" என்றேன். வழக்கமாக சில சோகங்கள் இருக்கும். பழைய நண்பர்கள் பள்ளி மாறிச் சென்றிருப்பார்கள். ஆன்ட்டியும் மாறி இருப்பார். ஆயாம்மாவும் வராமல் போயிருப்பார். இப்படி, ஏதாவது ஒன்று இருக்கும். இந்த முறையும் அப்படி சில நண்பர்கள் பள்ளிக்கூடம் மாறிச் சென்றிருக்கிறார்கள். இப்போ எனக்கு, '16 ப்ஃரெண்ட்ஸ்தான்' என்றாள், சிரித்தபடி. ஹப்பாடா!!
"அப்புறம், ஆன்ட்டி என்ன சொன்னாங்க உங்களுக்கு? , பிரேயர்லே" என்றேன்.
"நான் ஒரு நியூஸ் சொன்னேன் இல்ல...அதைதான் இவங்களுக்கு ஆன்ட்டி இன்னைக்கு சொல்லியிருக்காங்க. அதாம்மா, ஒரு பொண்ணு, +2 படிக்கிற பொண்ணு, டீவி பார்த்துக்கிட்டே இருந்திருக்கு. அவங்க அம்மா அப்போதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து ஹால்ல வைச்சிருக்காங்க. அது டீவி பார்த்துக்கிட்டே பெப்சிபாட்டிலை திறந்து குடிச்சிடுச்சுன்னு சொன்னேன் இல்ல" என்றார் பெரிம்மா.
அது பாட்டிலில் பெப்சி இல்லை. அதில் இருந்தது ஆசிட். அந்த பெண்ணை இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டாள். :- ( பெரிம்மா சொல்லி இந்த செய்தியை கேட்டிருந்தேன். அதைதான் ஆன்ட்டியும், அவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார். என்ன அறிவுரை கூறியிருப்பார்? "டீவி பார்த்துக்கிட்டே சாப்பிடாதீங்க, அப்புறம் நீங்க என்ன சாப்பிடறீங்கன்னே தெரியாது." என்றுதானே சொல்லியிருப்பார்!
ஆன்ட்டி சொன்னதாக பப்பு சொன்னதை கேட்டு பெரிம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். இருக்காதா பின்னே?!
"அந்த அக்கா மாதிரி கம்ப்யூட்டர்(!) பார்த்துகிட்டு நீங்களே சாப்பிடாதீங்க. நீங்க கம்ப்யூட்டர் பார்க்கும் போது, வீட்டுல யார் இருக்காங்களோ அவங்களை ஊட்டி விட சொல்லுங்க. நீங்களே சாப்பிடக்கூடாது. அப்பதான், தப்பு நடக்காது!!" அப்படின்னு ஆன்ட்டி சொன்னாராம்.
அவ்வ்வ்வ்வ்!!
ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :-)
Tuesday, March 19, 2013
ஆத்தா நான் பாசாயிட்டேன்!
முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல. சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்.. உடனே, "ஆச்சி, அது டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)
இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)
அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.
'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....
"நீ என்னை கேளு"
"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"
"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"
......
"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"
Saturday, March 09, 2013
"நான் முக்கியமா, காசு முக்கியமா?"
பப்புவின் அகராதியில், அன்கவுண்டபிளுக்குப் அடுத்தபடியான அதிக மதிப்புகொண்ட எண் இந்த 'மில்லியன் லாக்ஸ்'.
ஏன் திடீரென்று இந்த கேள்வி, எது பப்புவை இப்படி கேட்க வைத்ததென்று
யோசித்தப்படியே....
"நீதான் முக்கியம்"
"ம்ம் கரெக்ட்!!" - பப்பு
"ஏன் கேட்டே?" (ஹப்பாடா! நான் பாஸ்ஸ்!!யே!!!)
"நீ கரெக்ட்டா திங்க் பண்றியா. ஹவ் யூ கேன் திங்க் குட்ன்னு பாக்கிறதுக்கு" - பப்பு
"ஓ...உன்னை கேட்டா நீ என்ன சொல்லியிருப்ப?"
உடனே ரோல் ப்ளே ஆரம்பமாகிவிட்டது.
"நீ பப்புவா இரு, நாந்தான் ஆச்சி. இப்ப நீ என்னை கேளு..." - பப்பு
"ஆச்சி, உனக்கு நான் உனக்கு முக்கியமா இல்ல மில்லியன் லாக்ஸ் முக்கியமா?" - நானேதான்!
"நீ தான் முக்கியம் பப்பு. ஏன் சொல்லு? நம்ம காசு போயிட்டா போலீஸ்கிட்ட சொல்லலாம். பப்பு போயிட்டா?! தோண்டிதானே எடுக்க முடியும்." - பப்பு
"தோண்டி எடுக்க முடியுமா? அப்படின்னா?"
"இங்க பாரு, எனக்கு ஹார்ட் இருக்கு. காசுக்கு ஹார்ட் இருக்கா? எனக்கு சதை எல்லாம் இருக்கு. காசுக்கு அது எல்லாம் இருக்கா? நான் செத்துட்டேன்னு வைச்சுக்கோ, எனக்கு உயிர் வைக்க முடியுமா? " - பப்பு
'ஒருவேளை நானும் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டுமோ' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே இப்படியெல்லாம் சொல்கிறாளே எனறு திடுக்.
எனது முகத்தில் தெரிந்த கிலியை புரிந்துக்கொண்டவள் போல மேலும் விளக்குகிறாள். (ஏற்கெனவே, 'உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது, உனக்கு புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்' என்றெல்லாம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன்.இப்போ, இதுவேற!)
"இப்ப,ஆயா இருக்காங்க...இல்ல, பெரியாயா இருக்காங்க.ஓகே! பக்கத்துல காசு இருக்கு, நெறைய! அப்ப, காசு திருடன் எடுத்துக்கிட்டு போயிடறான். பெரியாயா இறந்துட்டாங்க இல்ல, அவங்களை நாம எங்க வைச்சிருக்கோம்? கீழதானே புதைச்சிருக்கோம். அவங்களை தோண்டி எடுக்க முடியுமா?ஆனா, போலீஸ் திருடனை புடிச்சு காசு கண்டுபிடிப்பாங்க இல்ல, அதான்." - பப்பு
பெரியாயாவின் இழ(ற)ப்பு பப்புவை படுத்தி எடுக்கிறது,போலும்!
Monday, January 21, 2013
A promise to keep....
"I like you mom very much my dear
thank you mom. you are my real mom ocay (ஸ்ஸ்....சின்ட்ரெல்லாக்களும் ரப்புன்சல்களும் எனக்குக் கொடுத்த பேறு(ரு) இது! சண்டை போடும்போது "நீ என் ரியல் மாம் இல்ல" என்பாள். இப்போது பாச மிகுதியில் ரியல் மாம் ஆகிவிட்டேன்!) you shood not become star are (or) moon.
realy not ly(lie) are (or) story. I like you very much realy okay. it is a trooth (ஹிஹி...நம்பறேன் மகளே?!)"
Friday, March 09, 2012
ஜெயலிலிதா மீது போலீஸ் கம்ப்ளெயிண்ட்
”அது எப்படி பிடிக்காம இருக்கும்? அவங்க மேல நெறைய கேஸ் இருக்கு, பெங்களூர் கோர்ட்ல இப்போஅவங்களை கேள்வி கேட்கிறாங்க, எப்படி உங்களுக்கு இவ்ளோ சொத்து வந்துச்சுன்னு” என்றதும், “ஓ..அவங்க நெறைய கொள்ளையடிச்சதாலதான் ஏழைங்க உருவாகறாங்களா” என்றாள். ”ஆமாம்” என்றதும் ”நான் சீஃப் மினிஸ்டராகி கொள்ளையடிக்காம இருக்கேன், இல்லனா நான் பிரைம் மினிஸ்டரா ஆகிடவா” என்றாள்.
ஆனாலும், கொள்ளையடித்தவரை போலீஸ் எப்படி ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்று அவளுக்கு புரியவே இல்லை. எனக்கும் அவளுக்கேற்றமாதிரி விளக்கத் தெரியவில்லை. இறுதியில், ”நான் போலீஸ் கிட்டே சொல்றேன், நாம வர்ற வழியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பார்த்திருக்கேன்” என்றாள். ‘இப்படி நாம் போய் சொன்னா, எப்படிம்மா சொல்றே, ஆதாரம் குடுன்னு போலீஸ் சொல்லுவாங்க” என்றதும் ”நான் நோட்டுல எழுதி வைச்சிக்கிட்டு, அதை காட்டுவேன்” என்றாள். (ஏற்கெனவே ஒரு முறை போலீஸ்
கம்ப்ளெயிண்ட் எழுதிதான் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருந்தேன். மெயிட் அனுப்பும் ஏஜென்ஸி பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பவில்லை, அதை போலீசிடம் சொல்ல வேண்டுமென்று துளைத்து எடுத்தபோது அப்படி சொல்லியிருந்தேன்)
இரவு வீட்டுக்கு வந்ததும், பழைய தினமணியை எடுத்து ஜெயலலிதா பற்றிய தலைப்புச் செய்திகளை வாசித்து, நோட்டில் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தாள்.
ஜெயலலிதா பற்றிய போலீஸ் கம்ப்ளெயிண்ட் :
*********************************
கூட்டத்தில், கூடங்குளத்திலிருந்து வந்த மக்களுக்கு பின்வரிசையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். மேடைக்கு அவர்களை அழைத்ததும், மேடையிலேறி பாடல்களை பாடியும், வீர முழக்கங்கள் இட்டும் அணு உலைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டினர். ”அடுத்து நாம போய் அங்க போராடணுமாப்பா? எல்லாரும் மேடையில போய் போய் போராடணுமா” என்று பப்பு மிகுந்த ஆவலாக இருந்தாள். கூப்பிட்டால் செல்ல ரெடியாக எழுந்து வேறு நின்றுக்கொண்டாள். ஆனால், ஏன் மற்றவர்களைக் கூப்பிடவில்லை என்று அவளுக்கு புரியவே இல்லை. :-)
Tuesday, January 24, 2012
பப்பு டைம்ஸ்
”ஏன் பப்பு? எப்படி சொல்றே?” - அப்பாவி மீ
“ம்ம்....நீ எதையும் தொலைக்க மாட்டேங்குறே இல்ல, ஆனா எனக்கு தொலைக்கிற டிஎன்ஏ இருக்கு இல்ல...உனக்கு அது இல்லயே” (பயபுள்ள பென்சில்/ஷார்ப்பனர் தொலைக்குறதும் இல்லாம எப்படி சீன் போடுது பாருங்க!!)
யாருடைய குழந்தைங்கன்னு கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் செய்வாங்கன்னு சொல்லியிருந்தேன். பேர்ட்சுக்கு மட்டும் ஏன் இறக்கை இருக்கு, நமக்கு இல்லைன்னு கேட்டப்போ நம்ம டிஎன்ஏ அது மாதிரி இல்லன்னு சொல்லிட்டேன். அது எல்லாத்துக்கும் சேர்த்து கிடைச்ச பரிசு இது!!
*******************
”நாம பிளாக்காதானே இருக்கோம். நம்மை பிளாக் பிளாக்ன்னு கூப்பிடலாமே, ஏன் ஆரஞ்சை மட்டும் ஆரஞ்சுன்னு சொல்லணும்?” - பப்பு.
இப்போ பிளாக்க்குன்னு கூப்பிட்டா யாரை கூப்பிடறாங்கன்னு தெரியும்? அதுக்குதானே பேர் இருக்கு? - மீ தான்.
“ஓ..ஈசியா சொல்லிட்டே...ம்ம்ம்..நமக்கு ஒரு கண்ணு இருந்திருக்கலாமே, ஏன் ரெண்டு கண்ணு இருக்கு?” - அகெய்ன் பப்பு.
ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் பார்த்தெல்லாம் சில பரிசோதனைகள் செய்தபிறகு, “நமக்கு லெஃப்ட் ரைட் லல்லாம் தெரியணும் இல்ல...அதுக்குதான்” என்றேன்.
“அப்போ ஏன் நெத்தியில் ஒரு கண்ணு இல்ல, மேலே பாக்குறதுக்கு?” - பப்புவேதான்!
“அதுக்குதானே கழுத்து இருக்கு...மேலே கீழே எல்லா திரும்பி பாக்குறதுக்கு” என்றேன்..
”கழுத்துல இருக்கிறது போன்சாப்பா?” - பப்பு
“ஆமா, அது ஸ்பெஷல் டைப் போன்ஸ்..வளையற மாதிரி இருக்கும்”
“ஓக்கே...சரி, இதுக்கு ஆன்சர் பண்ணீட்டே...மனுசங்க எப்ப்டி வந்தாங்க சொல்லு?!! #avvvvvv_வேணா_அழுதுடுவேன்!!
***********************************
"மாடுல்லாம் ஒரே கலராதான் இருக்குமா? பிளாக், ஒயிட்டாதான்? வேற கலர்ல இருக்காதா, ஆச்சி?"
"இருக்குமே, பிரௌவுன் கலர்ல இருக்குமே, நீ பாத்ததில்லை?"
"பிங்க் கலர்ல மாடு இருக்காதா, ஆச்சி?!"
:-)))) பிங்க் கலர்ல ஒரு மாட்டை, அது ரோட்ல க்ராஸ் பண்ற மாதிரி என்னால கற்பனையே பண்ண முடியலை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
Tuesday, December 20, 2011
பப்புவின் ’தினம் ஒரு சிந்தனை’கள்
(அந்த if என்னோட டச்!)
thought for the day என்று, ஒன்றை தினமும் எழுதிச் செல்ல வேண்டும். கூடவே, அதன் அர்த்தமும். ( ’old is gold ’ போல - ஏதோ எனக்கு தெரிந்த தாட் ஃபார் த டே! ) இதற்காக, நெட்டில் தேடி சிலதை பிடித்து வைத்திருந்தேன். ஆண்ட்டி வேறு, ஷார்ட்டா இருக்கணும் என்று வேறு சொல்லியிருந்தார். பப்புவிடம் சொன்னால் ம்ஹூம். கேட்கவேயில்லை. ”நாமளேதானே தாட் பண்ணி எழுதனும்?” என்று தினமும் அவளாக எதையாவது எழுதுகிறாள். (அநேகமாக பெரும்பாலும் அவளது அனுபவத்திலிருந்து - மேலே இருப்பது போல). அதைவிட ஹைலைட், எழுதிய தா(ட்)ள்களை கிழித்து விடுகிறாள். “அதான், அந்த டே முடிஞ்சுடுச்சே!” என்பது அவளது பதில்.
சாம்பிளுக்கு சில:
you eat carrots, you get powerful eyes;
you do good habits then only you will be perfect;
obey your mother's words, otherwise they call you bad gul; (”டாய், நீ பண்ணாததை எதுக்கு எழுதறே?” ”தாட் ஃபார் த டேல்லாம் சும்மாதான?”)
eat well before sleeping;
அநேகமாக, இவையெல்லாம் அவ்வவ்போது பப்பு காதில் நாங்கள் ஓதியது என்று நினைக்கிறேன். ’கேரட் சாப்பிட்டாதானே கண்ணு நல்லா தெரியும்’, ’நைட்ல சாப்பிடாம தூங்கினா காலையில எழுந்திருக்கவே முடியாது’, ’கீழே தள்ளிட்டா எடுத்து வைக்கணும்’, ’கட் பண்ண பேப்பரை டஸ்ட் பின்லே போடு’ முதலியன...
போதாததற்கு, அவளே ஒரு ’தாட் புக்கும்’ செய்து வைத்திருக்கிறாள். அதைப்பார்த்தால் திருக்குறள் ஓலைச்சுவடி போல இருக்கிறது. ’தாட்’ இல்லாத நாட்களில், அதில் ரெடிமேடாக இருப்பதை பார்த்து நோட்டில் எழுதிக் கொள்கிறாள்.
ம்ம்...இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!
Wednesday, December 14, 2011
Never Ending story by Pappu
But one lion come back. "Why do you sad?"- said the lion. Fat dog said and mother was cried," but where is my little dog, i do not knw. i want my little dog to evening tiffin." (டிஃபனுக்கு வேணும் அந்த நாய், சேர்ந்து சாப்பிடனும்னு) and the lion was very sad. and the lion go where he want. then he saw a pet dog. he take the pet dog and go to dog house. fat dog, fat dog, i got your pet dog, see. mother dog also look. he was very happy. mother dog was very happy. then, the fat dog take the petdog. And, the mother dog and fat dog take the pet dog to tiffin. then pet dog,mother dog,fat dog went to bed. and he sleeped but fat dog he did not sleep. he get up and took paper sheet and he wants to leave a kite.
he do a big kite then the pet dog wants father. but where is father and he looks. he got up and go to hall. there was father doing kite, then the pet dog also came to leave the kite, fat dog was very happy. he and pet dog leave kite. mother dog, "where is my kid, where is my pet dog", was shouting. pet dog went. pet dog and fat dog run to their house. " i go and leave the kite", said the fat dog. then the fat dog go to mottai maadi. then he leaves the kite. he leaves the kite up. but kite going down down. but wind don’t come. but only sun shines is there. "but how i leave the kite now", said the fat dog.
then the fat dog was very sad. very bore. but fat dog said to the pet dog, "pet dog, pet dog i am very borely. but what do i do. i go home and rest. i come in 5 minutes". fat dog went. he was very restly, take rest. then he slept. then 5 mins went. then also the fat dog was sleeping. then little dog comes and wake up the fat dog. then the fat dog was very happily, jolly, then he went house do another kite to leave jolly jolly jolly then he takes the kite and leave.
then the pet dog said, "how do u do a kite, tell me fat dog", asked the pet dog. the pet dog was very sad. he go to house to play. father dog comes to house. then he plays with pet dog. pet dog was sad. then, "i am going to sleep dad", said the pet dog. then he go to bed and sleeps. then the father dog wakes up the little dog. little dog asks," why you wake up me father. leave me for 5 min". father dog said, "now time to wake up. this is not night, this is morning, get up get up, brush your teeth". father dog went.
then night come. that time also he was sleeping…………………………….
******************************
ஒரு never ending story எழுதறேன்னு பப்பு ஆரம்பிச்சா. வார்த்தை வந்து முட்டுற ஸ்பீடுக்கு டைப் பண்ண முடியாம, பாதியில மேடம் எரிச்சலானதுனால, ’சரி நீ சொல்லு, நான் உனக்காக எழுதறேன்’-னு நானாஆஆஆஆ போய் மாட்டினேன்!! அவ்வ்வ்வ்வ்வ்........எழுத எழுத வந்துக்கிட்டேயிருந்தது. அரைமணி நேரமாகியும், ம்ஹூம், கதை முடியலை...எனக்குத்தான் தூக்கம் தூக்கமா வர ஆரம்பிச்சது. டைப் பண்றதை நிறுத்திட்டு, மீதியை ரெக்கார்டுல போட்டுட்டு தூங்கிட்டேன். சோ, மீதி கதை அப்புறமா அப்லோட் பண்றேன்.
Friday, October 28, 2011
5 to 6
"ஆச்சி, இங்க பாரு, நான் உன்னை இங்க வா,வான்னு எத்தனை தடவை கூப்பிடறேன், பாரு இப்ப...
ஆச்சி இங்க வா....
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...
நீ வரலைல்ல, ஆனா எனக்கு கோவம் வரமாட்டேங்குது...உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "
?!!!!!!
***************************
பப்லூவை நம்பினோர் கை விடப்படார் என்று சொல்லுமளவிற்கு பப்லூதான் எங்கள் கை கொடுக்கும் கை. பப்லூ ஒரு இமாஜினரி கேரக்டர். பால் குடிக்க, சாப்பிட எல்லாம் பப்லூ எனும் பத்து வயது சிறுவனுக்குத் தெரியாது.. மேலே கீழே சிந்திக்கொள்வான். ஜட்டி போடமாட்டான். டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டு எதையாவது யோசித்துக்கொண்டிருப்பான். சரியான வாலு.
அவனது ஆயாவை படாதபாடு படுத்துவான், எரிச்சலூட்டுவான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. பப்லூவுக்கு பப்புவிடம் நேர்வினை இருந்தது.
ரகசியம் இதுதான் - பப்பு செய்வதை லேசாக பப்லூ செய்வதாக மாற்றி சொல்லிவிட்டால் வேலை கடகடவென்று நடந்துவிடும்.
காலைநேரம் - பரபரப்பு.
“சொல்ற பேச்சை கேட்டா என்ன பப்பு, சீக்கிரம் சாக்சை போடு, ஷீவை போடு, டைமாச்சு பாரு,இப்போ வந்தேன்னா அடி வாங்கப் போறே!”
"ஆச்சி. இங்க பாரேன், பப்லூ வந்து உன் வயித்துல பொறந்திருந்தான்னா உனக்கு ரொம்ம்ம்ம்ப கோவம் வந்திருக்கும் இல்ல.... "
?!!!!!
***************************
நாங்கள் சொன்ன பப்லூ கதை போய், பப்புவே பப்லூ கதைகளை விட ஆரம்பித்து விட்டாள். சாம்பிளுக்கு ஒன்று....
”பப்லூ வந்து என்னா பண்ணான்? மரத்துல ஒரு ரெக்கை செஞ்சான், எல்லாரையும் கூப்பிட்டு நான் பறக்கப் போறேன், பாருங்க, பாருங்கன்னு சொன்னான். எல்லாரும் வந்ததும் மாடி மேல நின்னுக்கிட்டு குதிச்சான் பாரு.....பறக்க முடியாம கீழே தொப்னு விழுந்துட்டான்!”
’ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகனை’ பார்த்துட்டு, பயபுள்ள இப்டி புருடா விடுதேன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்...ஆயாஸ்தான் பாவம்..ஹிஹி!!

"பப்பு, நீ என்ன எடுத்திருக்கேன்னு என்கிட்டே காட்டிட்டு பாஸ்கெட்ல போடு, சரியா? பப்பு, உன்கிட்டேதானே சொல்றேன், நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?"
வாயில் விரலை வைத்து ”டோண்ட் கால் மீ பப்பு, கால் மீ குறிஞ்சி மலர்”
”ஓகே, குறிஞ்சி மலர். ”
.
.
.
.
”ஏன் பப்புன்னு கூப்பிடவேணாம்? நல்லாதானே இருக்கு, பப்பு. அழகா இருக்கே!”
”உன்னை பப்புன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்? "
............
நல்லாருக்கா? நீ எவ்ளோ பெரிய பொண்ணா இருக்கே? இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு. ஓகே?”
?!!!!!!
***************************
டிரெயிலர் போதும், மெயின் பிக்சருக்கு வரேன்.....
ஆறு வருடங்களுக்கு முன்பு, பப்பு எட்டரை மாதங்கள் உனக்காக காத்திருந்தேன் - ரொம்ப படபடப்புடனும், ஆசையுடனும், தவிப்புடனும்!! எப்படி வளர்ப்பது, என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடல்களும் இல்லாமல்....குழந்தை பிறந்தா அது பாட்டுக்கு தானா வளர்ந்து காலேஜூக்கு போயிடும் என்ற ரொம்ப அசால்ட்டாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஒன்றாவது வகுப்பில் செல்வதற்குள்ளாக, என்னை இப்படி (உன் வார்த்தைகளில் சொல்வதானால்) “க்ரேசி”யாக்கிவிடுவாய் என்று நினைக்கவில்லை. ஆயாவும் பெரிம்மாவும் சொன்ன அதே அலுப்பூட்டும் வார்த்தைகளை, அதே டோனில் சொல்ல வைப்பாய் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அதுவும், இவ்வளவு சீக்கிரமே, சொல்லவேண்டியிருக்கும் என்றும்! எப்படியிருந்தாலும் பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது.
பப்புக்குட்டி....உனது சிரிப்புக்கும், ஓயாத பேச்சுக்கும், கோபத்துக்கும், குறும்புக்கும்,நை நைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....
.....ஆலவ்யூ!!
Wednesday, October 19, 2011
பப்புவும் ஜெயலலிதாவும்
இரவு தூங்கும்போது, இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள்.
’கோயிலுக்கு போனப்போ சாமி உன்கிட்டே பேசுச்சா?’, ’சாமியை எதனால செஞ்சிருக்காங்க?’, ‘ நம்ம வீட்டுல சாப்பாடு யார் செய்றாங்க? ’, ‘அரிசி வாங்க காசு எப்படி வருது?சாமியா குடுக்குது?’ ”உண்டியில, தட்டுல எல்லாம் காசு போடச்சொல்றாங்க இல்ல?” என்றெல்லாம் அவளை திருப்பி கேள்விகளை கேட்க, ஒரு கட்டத்தில் ’சாமிக்கு எல்லாம் தெரியும், சாமியே சமைச்சு கொடுக்கும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டாள். பிறகு, கொஞ்சநாட்கள் கழித்து, ”ஆமா ஆச்சி, சாமி பேசாது, அது கல்லுமண்ணுதான்(களிமண்ணு)” என்று கட்சி மாறுவாள். வெள்ளிக்கிழமைகளில், சாயிபாபா படத்தை வைத்துக்கொண்டு பக்திபாடல்கள் ஒலிக்க ஒரு வண்டி வரும். அதைப்பார்த்ததிலிருந்து, சாமின்னு சொல்லி காசு வாங்கி ஏமாத்தறாங்க என்று ஏற்றுக்கொண்டாள்.
ஆயா மீது நாங்கள் அக்கறை காண்பித்தால் பப்புவுக்கு சமயங்களில் பிடிக்காது. அப்போது, ஆயா மீது ஒரே கம்பெள்ய்ன்டுகளாக வரும். ’தனக்குக் கொடுத்த மாத்திரைகளை ஆயா சாப்பிடவில்லை, படுத்துக்கிட்டே சாப்பிடறாங்க’ என்று இஷ்டத்துக்கு... அதாவது,நாங்கள் எதையெல்லாம் ஆயாவை செய்யச் சொல்லுகிறோமோ அதையெல்லாம் அவர் செய்யாததாக கற்பனையை கலந்துகட்டி சொல்லுவாள். அதில், ஆயா, பப்புவை சாமி கும்பிடச் சொன்னதாகவும், இந்த உலகமே சாமிதான் செஞ்சுது என்றும் சொன்னதாகவும் சொல்லுவாள்.
பிறகு, அவளே “உலகத்தை யாராவது செய்யமுடியுமா? அது வெடிச்சு உலகம் வந்துச்சி...” என்று கவுண்டரும் கொடுப்பாள். ஆனாலும், அவளுக்குள் சாமி இருக்கா, இல்லையா என்ற கேள்விகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன என்றெண்ணுகிறேன்.
இது நடுவில், பிள்ளையார் சதுர்த்தி வந்தது. பள்ளியில், “புள்ளையார் பர்த் டே” என்று சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதற்காக, பிள்ளைகளின் கையில் களிமண் உருண்டையைக்கொடுத்து பிள்ளையார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அநேகமாக, அதுதான் பப்புவின் யுரேகா மொமெண்ட் என்று நினைக்கிறேன். அதாவது, ”சாமி கல்லுமண்ணுதான், அதை நாமதான் (மனுசங்கதான்) செய்றோம் “.
கீரை,காய்கறிகள் கொடுக்க ஒருவர் வீட்டுக்கு வருவார். பப்பு என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவரிடம், “சாமி பொய்னு சொன்னேன் இல்ல, இது பாருங்க, பொம்மைதான், நீங்க கூம்பிடாதீங்க (கும்பிடுவதை பப்பு அப்படிதான் சொல்கிறாள்.)” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் ”சாமி கும்பிடமாட்டேன்,பாப்பா” என்றார்.
ஆயுத பூஜையன்று அவர் வரமாட்டேனென்று சொன்னதும் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள். “ஆண்ட்டி, சாமி கூம்பிடக்கூடாது, அதெல்லாம் பொய்” என்று அவரிடம் திரும்பச் திரும்பச் சொல்லவும் அவரும் டென்சனாகிவிட்டார்.
” பாப்பா, நீங்க ஸ்கூல்ல பிரேயர்ல என்ன பண்ணுவீங்க?”
“ஜனகனமண.....” (இதைக்கேட்டால், இந்த பாடலை பாடுவோம் என்று மட்டும் சொல்லிவிட்டு விடாமல் முழுவதுமாக பாடுவாள். நமக்குதான், அவ்வ்வ்வ்...)
” அப்புறம்?”
”நீராரும் கடலுடுத்த நிலமடந்தை...”
”அப்புறம்?”
ஏதோ ஒரு ஆங்கிலப்பாட்டு பாடினாள்.
” அப்புறம் என்ன பண்ணுவீங்க?”
“ அயிகிரி நந்தினி....”
”பாத்தீங்களா, ஸ்கூல்ல சாமிப்பாட்டுதான பாடுறீங்க, அதுமாதிரி நானும் வீட்டுல பாட்டுபாடணும்” என்றார் அவர்.
ஆனாலும், பப்புவால் அதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அவளது க்ளோஸ் பிரண்டுகளுக்கெல்லாம் சாமியெல்லாம் கும்பிடக்கூடாது, அது வெறும் கல்லுமண்ணுதான்,தெரியாதவங்கதான் சாமி கும்பிடுவாங்க என்று சொல்லியிருப்பதாகவும், அவர்களும் கும்பிடமாட்டென்று சொல்லி யிருப்பதாகவும் ஆண்ட்டிக்கு கான்வாசிங் நடந்தது. (அநேகமாக, இதுதான் பப்புவின் கருத்துமுதல்வாதம் Vs பொருள்முதல்வாதம் விவாதமாக இருக்கக்கூடும்!)
இது நடந்து சிலநாட்கள் இருக்கும். அப்போது ஒரு கதை வாசித்திருந்தோம். ராஜா ஒருவர், சோசியத்தில் நம்பிக்கைக்கொண்டிருப்பார். ஆறு மாதங்களில் இறந்துவிடுவதாக சோசியர் சொன்னதை நினைத்து எதிலும் ஆர்வமற்றும் சோகமா இருப்பார்.இதைக் கண்டுக்கொண்ட மந்திரி சோசியரிடம், அவர் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பார் என்று கேட்க சோசியர் 100 வருடங்கள் என்பார். உடனே அவர் தலையை வெட்டிவிட்டு, சோசியம் பொய் என்று ராஜாவுக்கு உணர்த்துவார், மந்திரி.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக,பப்பு , ஆண்ட்டியிடம் இந்தக்கதையை சொல்லி ஜோசியக்காரங்களை நம்பக்கூடாது என்று வகுப்பெடுத்திருக்கிறாள். அவரும் ”சரி பாப்பா” என்றிருக்கிறார்.
இன்று காலையில், பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பப்புவுக்கு திடீரென்று சந்தேகம்.
”ஜெயலலிதா சாமி கும்பிடமாட்டாங்க இல்ல?”
“இல்ல, அவங்க கும்பிடுவாங்க”
“பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும்?”
“இல்ல, அவங்க சாமி இருக்குன்னு நம்புவாங்க.”
“சாமி கும்பிடுவாங்க, பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும் இல்ல?”
“இல்ல பப்பு, இல்லன்றதை அவங்க நம்பமாட்டாங்க”
அவளால் ஜெயலலிதா சாமி கும்பிடுவார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் சாமி கும்பிடுவதை ஏற்றுக் கொள்ளும் பப்புவால், நம்மை ஆளும் சீஃப் மினிஸ்டர் சாமி கும்பிடுவதை, அவளுக்கு தெரிந்த அந்த உண்மை தமிழ்நாட்டின் சீஃப் மினிஸ்டருக்கு தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. :-(
Thursday, September 15, 2011
பப்பு சொன்ன கதைகள் - II
மயிலுக்கு கொஞ்சம் உயரத்துக்கு மேல பறக்கவே முடியலை.
இதுக்குதான் நான் அழகா இருக்கேன், நான் கலர்கலரா இருக்கேன்னு சொல்லக்கூடாது.
**********************************
ஒரு ராணி இருந்தாங்க. அந்த ராணி ஒருநாள் அனிமல்ஸ் எல்லாத்தையும் வர சொன்னாங்க.
“வாங்க, இன்னைக்கு நான் உங்களுக்கு ப்ரைஸ் தரப்போறேன்”ன்னு சொன்னாங்க. எல்லா அனிமல்ஸும் குட்டிகளையும் தூக்கிட்டு வந்துச்சுங்க. ஒரு குரங்கும் அதோட குட்டியை தூக்கிட்டு வந்துச்சு.
குரங்கு குட்டியை பார்த்துட்டு ராணி “அய்யே, இது அசிங்கமா இருக்கு, உனக்கு பிரைஸ் கிடையாது”ன்னு சொல்லிட்டாங்க.
குரங்கு, குட்டிக்கிட்டே சொல்லுச்சு“ அது வேணாம், பரவால்ல,நீ எனக்கே பிரைசா இருந்துக்கோ” .
இதுக்குதான் யாரையும் அசிங்கமா இருக்கேன்னு சொல்லக்கூடாது.
*******************************
த்ரிஷா காட்டுக்கு போன கதை கூட சொல்லியிருந்தாங்க மேடம். தூக்கக்கலக்கத்துல நாந்தான் மறந்துட்டேன். :-))
Sunday, September 11, 2011
பப்பு சொன்ன கதைகள்
நோ நோ நீ சூப் குடிக்கணும்னு அவங்கம்மா சொன்னாங்க.
சூப் குடிச்சா காரம். தண்ணி குடிச்சா கூட காரம் போகவேல்ல. அப்டியே தூங்கிட்டா. அப்போ ஒரு எலி வந்து அவளை கடிச்சுடுச்சு.
எலி-யை பிடிச்சு அடிச்சு பூனைக்கு போட்டாங்க. பூனை சாப்பிட்டுடுச்சு. அப்புறம் பூனை சுட்டுட்டாங்க.
"சுட்டுட்டாங்களா? ஏன் சுட்டாங்க?"
"ஏன்னா, பூனை வீட்டுக்கு உள்ள வந்துடும் இல்ல, இன்னும் எலி இருக்கும்னு,அதுக்குதான்."
"ம்ம்...அப்புறம்..."
அப்புறம். அந்த எலியோட குட்டி எலி வந்து கோல்டிலாக்சை கடிச்சு நெறைய ரத்தம் வர வைச்சுடுச்சு. டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனாங்க. கோல்டிலாக்ஸுக்கு எலி ஊசி போட்டாங்க. எலிக்கும் ஊசி போட்டாங்க.
அப்புறம் எலி செத்து போய்டுச்சு.
இதுல என்னா புரிஞ்சுது?
....
எலி இருந்தாலும் நல்லதுதான். எலி இல்லன்னாலும் நல்லதுதான்!
*****************************
ஒரு நாள் ஒரு பொண்ணு கோழி வளத்துச்சு. அது ஒரு நாள் கோல்ட் முட்டை போட்டுச்சு.
உடனே அந்த பொண்ணு ”ஆ, நான் கொஞ்சம் சாப்பாடு கொடுத்ததாலதான் ஒரு முட்டை போடறே...இந்தா நெறைய சாப்பாடு”-ன்னு நெறைய நெறைய சாப்பாடு போட்டா! கோழிக்கு மூச்சே விட முடியல...மூச்சு விட முடியாம கோழி செத்து போச்சு...
இதுக்குதான் பேராசை கொள்ள கூடாது!
********************************
ஒருநாள் ஒரு அங்கிள் இளநீ குடிக்க கடைக்கு போனாரு. கடையில ஃபைவ் ரூபீஸ் சொன்னாங்க.
”நோ நோ ஐ வில் கிவ் ஃபோர் ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.
”யூ கோ தேர் ஃபார் ஃபோர் ரூபிஸ்ன்னு சொன்னார் கடைக்கார்
அந்த கடைக்கு போனா ஃபோர் ரூபீஸ் சொன்னாங்க.
”நோ நோ ஐ வில் கிவ் த்ரீ ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.
அந்த கடைக்கு போங்கன்னு சொன்னாங்க. அந்த கடைக்கு போனார் அங்கிள். அங்க போய் ”நோ நோ ஐ வில் கிவ் டூ ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.
அந்த கடைக்கு போங்கன்னு சொன்னார் கடைக்கார். அந்த கடைக்கு போனார். அந்த கடைக்கார் ஃபைவ் ரூபீஸ் சொன்னார்.
”நோ நோ ஐ வில் கிவ் ஒன் ரூபின்னு” சொன்னார் அங்கிள்.
அவர்கிட்டே ஃபைவ் ரூபீஸ் இருந்தது,. அவர் பொய் சொன்னார். அப்போ கடைக்கார் சொன்னார், அதோ அந்த மரத்துல ஏறுங்க அங்கதான் ஒன் ரூபின்னு சொன்னதும் அங்கிள் மரத்துல ஏறுனார் பாரு....
இளநீ பறிச்சுட்டு தொப்புன்னு விழுந்துட்டார்.
இதுக்கும்தான் பேராசை கொள்ளக்கூடாது.
************************
குறிப்பு: கொஞ்சம் சற்றே பெரிய கதைகள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறோம். Going someplace special/The magic locket/சிறுவர்மணி கதைகள் - மாதிரி. அவளது வயதுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் அவள் என்ன நினைத்து வைத்திருக்கிறாள் என்றும் புரிந்துக்கொள்ள அவ்வப்போது ”இதுல என்ன புரிஞ்சுது” என்று அவளை கேட்பதுண்டு. அது இப்படி பூமராங்காக வரும் என்று நினைக்கவில்லை! (இன்னும் கூட சில கதைகள் இருக்கிறது. மறக்குமுன்பு எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். )
Tuesday, May 03, 2011
பப்பு டைம்ஸ்
அதை அறிந்ததிலிருந்து பப்புவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஏற்கெனவே சுனாமியால் பப்புவுக்கு ஏகப்பட்ட கேள்விகள், யோசனைகள். இதில் உலகம் அழிந்துவிடுமென்றதும் ’நாம என்னதான் பண்றது’ என்று கலங்கிப்போய் விட்டாள். அந்த ஹெரால்டு என்பவருக்கு கடிதம் எழுதலாம் என்று அவளே ஒரு முடிவுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுதியிருக்கிறாள்.
dear Mr.herald,
why does world fall? what shall I do?
எழுதிவிட்டு இதை அவருக்கு அனுப்பியே ஆக வேண்டுமென்று அடம். சரி, மெயிலில் அனுப்புகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். ஹெரால்டு இந்தக்கடிதத்தை பார்த்துவிட்டு, ”i tell lie ன்னு சொல்லிட்டா நிம்மேதி”யாம். இல்லையென்றால்,
1. ராக்கெட் புடிச்சு நாம எல்லாரும் நிலாவுக்கு போய்டலாம். குட்டிப்பசங்களை எல்லாம், மேல்வீட்டு குட்டிப்பாப்பாவையும் (3 மாதக்குழந்தை!) கூப்பிட்டுப் போய்டலாம்.(ஆவ்வ்வ்..அப்போ பெரியவங்க!)
2. உலகத்தை மேலே தூக்கிட்டுபோய் வானத்தை கீழே அழுத்திடலாம். (நோ நோ, நாங்க ஒரு விஜயகாந்த் படம் கூட பாத்தது இல்ல)
3. உலகத்தை உடைச்சிட்டா உலகம் அழிஞ்சு போகாது. (அதானே, உலகம் இருந்தாத்தானே அழியும்!)
என்று மூன்று திட்டங்கள் வைத்திருக்கிறாள்.
ஹெரால்டு மற்றும் தினமணிக்கதிரின் கவனத்துக்கு...: அந்த ஹெரால்டின் ஐடியை தேடிக்கொண்டிருக்கிறேன். உடனே ஐடியுடன் தொடர்பு கொள்க!

விடுமுறையில் அராஜகம் தாங்கமுடியவில்லை. எல்லாருக்கும் கிச்சு கிச்சு மூட்டுவது, ஆயாவிடம் நான் கூப்பிட்டேன் என்றும் என்னிடம் ஆயா கூப்பிட்டார்கள் என்றும் சொல்லி பே என்று முழிக்க வைப்பது,மேலே விழுந்து புரள்வது.....தாங்க முடியாமல், கிச்சு கிச்சு பண்ணா வால் முளைச்சுடும் என்று சொல்லி வைத்தேன். கொஞ்சமே கொஞ்சூண்டு (நேரம்) பலனிருந்தது. அப்புறம்,
“ஆச்சி, நீ எனக்கு கிச்சு கிச்சு பண்ணுப்பா, ப்ளீஸ்....” என்று அமர்க்களம் ஆரம்பமாகிவிட்டது.
அம்மாவுக்கு வால் முளைக்குதான்னு பாக்க அவ்வளவு ஆசை! (ஹூம்...பாலூட்டி வளத்த கிளி...!)