செய்முறை இங்கே...
Saturday, June 06, 2015
5 offbeat things to do in Alleppey
செய்முறை இங்கே...
Tuesday, March 24, 2015
H...A...M...P...I - வரலாற்றின் வீதிகளில் ஒரு பயணம்
திருவிழாவில் தொலைந்தவர்கள் போல முதல்நாள் முழுவதும் விருபாஷா கோவிலையும் ஆற்றையும், சூழ்ந்திருந்த மலைப்பாறைகளையும் பார்த்து பார்த்து பிரமித்துபோனோம். 'இந்த பூமியில் என்ன நடந்திருந்தால், இந்த கற்பாறைகள் இப்படி ஆகியிருக்கும், எந்த விதியின் கீழ் இந்த பாறைகள் இப்படி ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருக்கின்றன' என்று கிறுகிறுத்துபோனோம்.
பொடிநடையாய் நடந்து மலைகளையும், கல்மண்டபங்களையும், பழங்கால சந்தைகள் நடந்த பஜார்களையும் கடந்தோம். ஆட்டோக்களையும், கைடுகளையும் கவனமாக தவிர்த்தோம்.
கைகளில் இருந்தவை, லாங்க்ஹர்ஸ்ட்டின் புத்தகம் ஒன்றும், நூனிஸின் 'விஜயநகரப் பேரரசு' மற்றும் தொல்லியல் துறையின் ஹம்பி கையேடு. கேமிரா, புத்தகங்களை முதுகில் சுமந்துக்கொண்டு நாடோடிக் கூட்டத்தில் நாங்களும் சிறு புள்ளிகளானோம்.
நதிக்கரை வழியாக நடந்தே விட்டலா கோவிலை அடைந்தோம். 'பழங்காலத்தில் குதிரைகள் வழியாக மக்கள் இந்த வழியை கடந்திருப்பார்கள்' என்று கற்பனை செய்தபடி பாறைகள், இடிபாடுகள் வழியாக இரண்டு கிமீ நடந்து தீர்த்தோம்.
விட்டலா கோவில், மண்டப தூண்களின் குதிரை மீதமர்ந்திருந்த வீரர்களின் முகங்களிலெல்லாம் கிருஷ்ணதேவராயரை தேடினோம். தலையில் பெரும் கொண்டையிட்டு , கைகூப்பி நின்ற சிலைகளையெல்லாம் கிருஷ்ணதேவராக எண்ணி பூரித்தாள், பப்பு அவள் பங்குக்கு. தெனாலிராமனை தேடியலைந்தவளுக்கு இதுதான் இலுப்பைப்பூ.
விட்டலா கோவிலின், கல்தேரின் சக்கரங்களின் அச்சை பிடித்து தேரை நகர்த்திவிட கடும்முயற்சி(!) செய்தோம். இறுதியில், சுழற்றுவது போல் புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கரத்தை விட்டுவிட்டோம். தார்வாடிலிருந்தும், பெல்லாரியிலிருந்தும், கிராமப்புற கர்நாடகப் பகுதியிலிருந்தும் வந்திருந்த மாணவர்களின் ஆசைக்கிணங்க போட்டோக்கள் எடுத்துத்தந்தோம். கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்களை தீர்த்துவிட்டு, திரும்ப நடையை கட்டினோம்.
ஆற்றைக்கடந்து, உணவகங்களை தேடிச்சென்றோம். கவுதமி உணவகத்தில், பீட்சாவும், சிக்கன் லாஃபாவும் உண்டோம். திரும்பவும் படகு சவாரி. கோவில் யானை லஷ்மி தண்ணீர் குடிக்க வந்திருந்தது. தண்ணீர் குடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னாலேயே சென்றோம்.
ஹேமகுட்டா மலைப்பகுதியின் உச்சிக்கு ஏறி, சூரியன் ஒரு சிவப்புக்கோளமாக மறைவதைக் கண்டோம். தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஒரு சிறு புன்னகை மட்டுமே போதுமாக இருக்கிறது. கும்பலாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவரவர் வழி நடந்தோம்.
மிகவும் பிரசித்தி பெற்ற 'மேங்கோ ட்ரீ' உணவகத்தில் ஆலிவ் பீட்சாவும், கோபி மஞ்சூரியனும், சப்பாத்திக் கறியும் உண்டோம். தெருவோர லம்பாடிகளிடம் பேரம் பேசி கைக்கு சோழி மாலை, ஒற்றைக்காலுக்கு கொலுசு, கழுத்தணிகள் வாங்கி அணிந்துக்கொண்டோம். வீட்டுக்கு திரும்பும் வரை கழற்றாமல், பப்புவும் நானும் ஒரு மினி லம்பாடி குடும்பமாகவே மாறிப்போனோம்.
"எரடு ப்ளேட் குண்ட்பங்கலா கொட்ரீ" "எரடு பூரி, சாய் பேக்கு" "மிர்ச்சி எரடு கொட்ரீ" என்று ஏதோ கன்னடாவையே கரைத்துகுடித்தமாதிரி தெருவோரக்கடைகளில் சுடச்சுட குழிப்பணியாரமும், டீயும், பச்சைமிளகாய் பஜ்ஜியும் வாங்கி காலை உணவை சாப்பிட்டோம். காசு கொடுக்க எத்தனிக்கும்போது, அவர்களும் கன்னடத்திலேயே விலையை சொன்னபோது திருதிருவென்று விழித்து 'இங்கிலீஷ் மே போலியே' என்று அசடு வழிந்தோம்.
மலையின் மறுபக்கத்துக்கு இறங்கி, கடுகு கணேசாவை தரிசித்து சாலைக்கு வந்தோம். காணாததை கண்டது போல, தர்பூசணி பத்தைகளை வாங்கி தெரு வோரத்திலேயே தின்று மலைப்பயணத்தின் தாகம் தணித்தோம். அடுத்து, கிருஷ்ணா கோவிலை அடைந்து தூண்களை ஆராய்ந்தோம்.
'இது கிருஷ்ண தேவராயா கட்டினது, இங்கேதான் அவர் நடந்து வந்திருப்பாரு' என்றும் 'இது ஒரிசா வார்லே ஜெயிச்சதுக்காக கட்டினது, இதுலே இருந்த கிருஷ்ணா ஒரிசாலேருந்து கொண்டு வந்து வைச்சது' என்றும் 'அந்த பாலகிருஷ்ணர் சிலை இப்போ சென்னை மியூசியத்திலே இருக்கு' என்றும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து வாசித்ததை பரிமாறிக்கொண்டோம்.
கிருஷ்ணா கோவிலிருந்து வெளியேறினோம். செடியோடிருந்த பச்சை கொண்டை கடலைகளை வாங்கிக்கொண்டு, உரித்து சாப்பிட்டபடி லஷ்மி நரசிம்மரைக் காண கரும்புவயல் வழியே நடந்தோம். எங்கள் கால்களுக்கு அந்தப்பக்கம், பழங்காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திராவின் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.
கொஞ்சம் இளைப்பாறியதும், ஒரு அஸ்திவாரத்தருகே ஓடிப்போய், 'இங்கதான் தெனாலிராமன் தொங்குனாரு' என்றாள் பப்பு. 'தொங்குனாரா' என்று நாங்கள் அதிர்ந்ததும், 'இல்லேல்ல..தூங்கனாருன்னு சொல்ல வந்தேன். அப்படியே, தங்குனாருன்னு வந்துச்சு..அதான் சேர்த்து சொல்லிட்டேன்' என்று சமாளித்தாள்.
ரகசிய அறையில் இறங்கி, இருட்டுக்குள் தட்டுத்தடவி நடந்து, படிகளை கண்டதும்'ஹப்பாடா' என்று ஓடிவந்து மேலேறினோம். 'வைரங்களும், விலைமதிப்பற்ற கற்களும் பதித்த நாற்காலி அங்கேதான் வைக்கப்பட்டிருந்தது' என்று செட்டார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை நினைவு கூர்ந்தோம். ராணிக்களின் அரண்மனைகளிலும், லோட்டஸ் மஹாலிலும் நிஜ ராணிகளைப்போலவே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நடைப்போட்டோம். ஹசாரே ராமா கோவிலில் ராமாயணத்தை கார்ட்டூன் போல பார்த்து கதை சொல்லிக்கொண்டோம்.
கோவிலுக்கு எதிரில் இருந்த பான் சுபாரி பஜாரில் வெற்றிலை கிடைக்குமா என்று தேடிச் செல்ல ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு ஓசையில்லாமல் நழுவினோம். குதிரைகளும், யானைகளும் சென்று வந்த ராஜபாதையில், ஆட்டோவுக்கு காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் லெமன் கோலிசோடா அருந்தினோம்.
மூன்று நாட்கள் ஹம்பி, ஒருநாள் பாதாமி, பட்டடக்கல், முடிந்தால் கோவா என்று மங்கலான திட்டம் வைத்திருந்தோம். ஆனால், ஹம்பி எங்களை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டு பார்க்க முடியாத இடங்களில் ஹம்பியும் ஒன்று. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...ஹம்பியை அடைந்தால் போதும். பயணிக்க வேண்டிய பாதைகளை ஹம்பி பார்த்து கொள்ளும். ஒவ்வொருநாளும் வாசித்து வாசித்து, வாசித்த இடங்களை நேரில் கண்டு உணர்ந்தது சுவையான அனுபவம்.
துங்கபத்திரா முழுவீச்சோடு நடைபோடுவதையும், இன்னும் அதிகமாக ஹம்பியை அறிந்துக்கொள்ளவும் மீண்டுமொருமுறை, மழைக்காலத்தில் வர வேண்டுமென்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான் வேண்டியிருந்தது.
Saturday, February 28, 2015
திகட்ட திகட்ட தண்ணீர் - தென்காசி பயணம்
திருமணம் ஜனவரி 26. அதற்கு முன் இரண்டுதினங்கள், சரியாக வாரயிறுதி. குடும்பம்,குட்டி என்று கிட்டதட்ட 35 பேர், எஸ் 6 பெட்டி வாசலில் குழுமியிருந்தோம். ஒருசிலருக்கு மட்டும் எஸ் 10. ஆரம்பத்தில், 'ஹாய் ஹலோ' என்று நலம் விசாரிப்புகள், பள்ளிக்கூட விபர பரிமாற்றங்கள்... 'என்ன சாப்பாடு', 'தண்ணி வாங்கணுமா' என்ற கவனிப்புகள்... ரயில் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி விலக ஆரம்பித்தது.
அடுத்தநாள் காலையில், மாப்பிள்ளையும் குடும்பமும் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்க, தென்காசி எங்களை மொத்தமாக வாரி அள்ளிக்கொண்டது. அங்கு தங்கி யிருந்தது, மொத்தமே இரண்டு நாட்களே என்றாலும், ஏதோ பலகாலமாக அங்கேயே வாழ்ந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. கல்லூரிகாலத்துக்கே சென்று மீண்டு வந்தது போல! நண்பர்களோடு செல்லும் பயணத்துக் கெல்லாம் இந்த உணர்வு வந்துவிடுவது,ஆச்சரியம்தான். இதே போன்று, இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷின் திருமணத்துக்காக ராய்ச்சூர் மற்றும் ஹைதராபாத் சென்றது மனதிலேயே நிற்கிறது!
கைக்குழந்தை, குட்டிகளோடு இருந்தவர்கள், சற்று ஓய்வெடுக்க, தலை யணைக்கும், பாபநாசத்துக்கும் செல்ல ஒரு குழு கிளம்பியது. அந்த 'அடங்காத குழு'வில் நானும் பப்புவும் இருந்தோமென்று சொல்லவும் வேண்டுமா? 'சரி, எப்படின்னாலும் குளிக்கதானே போறோம், எதுக்கு ரூமிலே குளிச்சு, தண்ணியை வேற வீணாக்கிக்கிட்டு' என்று மாற்றுடையை கையில் சுருட்டிக்கொண்டோம்.
'குளிச்சுட்டு வந்தா பசிக்கும், அதனால, அதுக்கு முன்னாடி லைட்டா சாப்பிடலாம்' என்று ஒருவருக்கு பல்பு எரிய, மொத்த குழுவுக்கும் அதே பல்பு எரிந்தது. ஓட்டுநரிடம் சொன்னதும், 'சூப்பர் ஓட்டல் ஒன்னு இருக்குங்க...போற வழியிலே, விட்டீங்கன்னு நாம போற வழியிலே வேற எங்கேயும் இல்லே' என்று ஒரு இடத்தில் நிறுத்தினார்.
பொட்டல்புதூர். வெஜ், நான் வெஜ் உணவகம். மட்டன்/சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், சுக்கா, மீன் வறுவல் ஆம்லேட், ஃபுல் மீல்ஸ், பரோட்டா,தயிர்,மோர்.....உணவு ஒரு பக்கம் என்றால், 'பரோட்டா வேணுமா, கொத்துபரோட்டா வேணுமா? இன்னொரு ஆம்லேட்? பாப்பாக்கு பிரியாணி?' என்று அவர்களது உபசரிப்பு மறுபக்கம்....ஆகா! என்ன ஒரு விருந்தோம்பல்! அங்கேயே சில ஆர்வக்கோளாறுகள் உணவை படமெடுக்க துவங்க, அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மனமும், வயிறும் குளிர்ந்து, அவ்விடம் நீங்கி, சிலபல வாழைப்பழங்கள், புளிப்பு மிட்டாய்கள், லாலிபாப் சகிதம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சென்ற இடம், தலையணை.
கொட்டும் அருவியிலேயே மனமும் உடலும் குளிர்ந்து போனது. தலையணையின் தளும்பிப்பாயும் தண்ணீரைப் பார்த்ததுமே, எல்லா கவலைகளும், பாரங்களும் கரைந்துபோயின. எருமை மாடுகள் போல, கிட்டதட்ட இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஊறிக்கிடந்தோம். நிமிர்ந்து பார்த்தால், பின்னால் பசுமையான மலைமுகடுகள். அதன் உச்சியில் சூரியன். மலையின் அடிவாரத்தில் அணைத்தண்ணீர்...நிரம்பிய நீர், சுவரைத்தாண்டி அருவியாக கொட்டும் நீரின் சத்தம்...கவலைகளை மறந்து சிரித்த கணங்கள் அவை!
அணையிலிருந்து நீர் தளும்பி வழியும் சுவரில் தலையை குப்புற வைத்து, தண்ணீர் நம் தலைவழியே கடந்து செல்லும்போது உண்டாகும் ஒலியில் மூச்சு முட்டிப்போனோம்.
தளும்பி வழியும் தண்ணீரை, எங்கள் மேலேயே அங்கியை போல் வழிய விட்டுக்கொண்டோம். சூரியன் மறையும் வரை அலுக்காமல் அங்கேயே ஆட்டம்.... செல்ஃபிகள்... ஃபோட்டோக்கள்...பப்புவுக்கு இனிய அனுபவம்.ஆரம்பத்தில் பயந்தாலும், பின்னர் தண்ணீரைவிட்டு வரவே இல்லை. ஜூரம் வந்து அடுத்தநாள், அத்திரி மலையேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு.
ஈர உடையுடன், நேராக பாபநாச சுவாமிகள் கோயில். முதன்முறையாக, கோயிலினுள் தமிழப்பாடல்கள் பாடி தீபாராதனை காட்ட, அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஆறு மணி பூஜையோ என்னவோ சொன்னார்கள்....ஒருவர் தலைமுதல் தோள்பட்டை வரை ஒரே ருத்ராட்சை மாலையாக போட்டுக்கொண்டு ஒவ்வொரு சன்னதியாக் அமர்ந்து தமிழில் பாடல்கள்(குனித்த புருவமும்?) பாட, தீபாராதனை நடக்கிறது.
கோயிலில், பக்திமான்கள் பூஜைக்கு செல்ல, நானும் பப்புவும் சங்கீதத் தூண்களை ஆராயத்துவங்கினோம். எங்கள் ஆர்வத்தால் கவரப்பெற்ற தீபங்கள் விற்பவர், எங்களை விசாரித்தார். 'இந்த ஊர்க்காரங்களுக்கே தெரியாது இதெல்லாம்' என்று சொன்னப்படி தூண்களிலிருந்து ஸ்வரங்களை வரவழைத்தார். இந்த கோயிலின் முகப்பிலிருக்கும், ஆளுயர சிலைகள் அற்புதம்.
புளியோதரையும், லட்டுவும், அதிரசமும் வாங்கி அங்கேயே குழுவாக அமர்ந்து சிற்றுண்டியை முடித்தோம். வெளியில் வந்து அடுத்தநாள் மலையேற்றத்துக்காக பழங்களை வாங்கினோம். ஒரு மூலையில் மறைந்திருந்த 'லாலா புராதான மிட்டாய்க்கடை'யில் அல்வாவை காக்கைகள் போல பகிர்ந்துண்டு ருசித்தோம். அருகிலிருந்த உணவகத்தில் நுழைந்து இட்லியும், பரோட்டாவும், பனங்கல்கண்டு போட்ட மிளகுப்பாலும் அருந்தினோம்.
ஏற்கெனவே, அத்திரிக்கு இரண்டுமுறை சென்று வந்திருந்த ரகுவை இப்போது 'குரு'வாக்கியிருந்தோம். அவரும், குருவாகவே மாறி, மலையேற வேண்டுமானால் ஆறு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தார். 'தொல்லை விட்டுச்சுன்னு எங்களை விட்டுட்டு போய்டாதீங்கய்யா...அஞ்சு மணிக்கு எழுந்ததும், மிஸ்ட் கால் கொடுத்து எங்களையும் எழுப்பி விட்டுடுங்க' என்று பொறுப்பளித்துவிட்டு உறங்கினோம்.
கனவிலெல்லாம், தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.... மேலே மேலே வந்து அழுத்தியது! முதுகில், தோள்பட்டையிலெல்லாம் படபடவென்றும் தொப் தொப்பென்றும் விழுந்தது.உறக்கத்திலேயே அருவி மாற்றி அருவியாக காடுகளுக்குள் நாங்களும் பயணித்தோம். அணையின் கற்படிக்கட்டுகளில் , நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சடைத்துப்போய் 'ஹோ' வென கத்திக்கொண்டிருந்தோம். நீரைக் கிழித்து, மாலையாக இருதோள் களிலும் போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம்.
தங்கள் தம்பிக்கும், அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துகள்! அம்பா சமுத்திரத்தின் தேவதையைக் காண இன்னொருமுறை வருகிறோம் :)
Saturday, February 21, 2015
'சிங்கம் பறந்தபோது முதலிய ஆப்பிரிக்க கதைகள்'
இந்த தலைப்புதான் என்னை ஈர்த்தது. அதிலும், 'உலகம் குழந்தையாக இருந்தபோது' என்ற புத்தகத்தை சென்ற ஆண்டு வாங்கியிருந்தேன். அதை வாசித்த மயக்கத்தில், அந்த வாசிப்பு அனுபவத்தை நினைத்துக்கொண்டே, இந்த புத்தகத்தையும் வாங்கினேன்.
'உலகம் குழந்தையாக இருந்தபோது' - புகழ்ந்து போற்றுமளவுக்கு பெரிய காவியமெல்லாம் இல்லை. ஆனால், உலகின் எல்லா காவியங்களைவிடவும் பழமையானது. ஆம், இந்தியாவில் வாழும் பல்வேறு ஆதிவாசிகளிடையே செவிவழியாக வழங்கப்பெற்று வரும் கதைகளின் தொகுப்பே, 'உலகம் குழந்தையாக இருந்தபோது'.
உலகத்தில் முதலில் மனிதன் வந்ததெப்படி, குரங்குகளுக்கு வால்கள் வந்தது எப்படி?, முதன்முதலில் தோன்றிய ஆறுகள், ஆடைகள் கண்டுபிடித்தது, தீயை உபயோகப் படுத்தியது, வீடு கட்டும் விதம், வானம் எப்படி மேலே சென்றது, குள்ளமனிதர்கள் பற்றி என்று எல்லா விஷயங்களைப் பற்றியும்,அதன் வரலாறு சுவையான கதைகளாக சொல்லப்பட்டிருந்தது. கதைகளை வாசிக்கப்பிடிக்கும் யாருக்கும் இந்த புத்தகம் நிச்சயமாக பிடிக்கும்.
அந்த புத்தகத்தை நினைவிலிருத்தியே, ஆப்ரிக்க ஆதிவாசிகளின் கதைகளை வாசிக்கலாம் என்று வாங்கினேன். நல்ல பலன்! எல்லா கதைகளுமே விலங்குகளைப் பற்றிதான். பெரும்பாலும், விலங்குகளைப் பற்றிய எளிய உண்மைகள், தகவல்கள் - அவைதான் கதையின் மையக்கரு. ஆனால், அது கதையாக விரியும் விதம் வாசிப்பவரை ஆச்சரியப்படுத்துகிறது.
செர்வாலின் மேல் தோலின் புள்ளிகள் வந்தது எவ்விதம்?
வௌவால்கள் இரவில் மட்டும் பறக்கின்றன. கீரிக்கும் வௌவாலுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணத் தினாலேயே வௌவால்கள் ஒளிந்துக்கொண்டு பகலில் வெளிவருவதில்லை. கீரியிடம் என்ன சண்டையாம்?
ஆர்டுவார்க் என்ற ஒரு மிருகம். அது எப்போதும் பூமியின் வளைகளுக்குள்ளேயேதான் வசிக்கும். ஏனென்று தெரியுமா?
இப்படி, மிருகங்களைப் பற்றி நாம் அறிந்த சாதாரண செய்திகள்தான் ஆனால், அதன் பின்னணியாக புனையப் பட்டிருக்கும் கதைகள்தான், நமது ஆப்பிரிக்க முன்னோர்களை வியந்து பார்க்க வைக்கிறது. இந்த புத்தகத்தை கொண்டாட வைக்கிறது. நாம் வேண்டு மானால், நம்பாமல் இருக்கலாம்..கதைகள்தானே என்று புறம் தள்ளலாம்...ஆனால், ஆப்ரிக்க பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் கதைகேட்கும் குழந்தைகள் வழிவழியாக இதை நம்பியிருப்பார்கள்தானே!
ஆரம்பத்தில், காட்டுப்பன்றிக்கே நீண்ட அழகான தந்தங்கள் இருந்தன. மிகப்பெரிதாக பளுவானதாக இருந்தாலும், காட்டுப்பன்றிக்கு தனது தந்தங்கள் மீது மிகப்பெருமை. யானைக்கோ பொறாமை. பலம் பொருந்திய தனக்கே, இந்த தந்தங்கள் இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தது.
காட்டுப்பன்றியும் ஆர்டுவாக்கும் நெருங்கிய நண்பர்கள். அருகருகே வளைகளில் வசித்தன. ஒருநாள் யானை, காட்டுப்பன்றியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தது. 'யானையை முழுதும் நம்பிவிடாதே, விழிப்பாக இருந்து உன்னை பாதுகாத்துக்கொள்' என்று ஆர்டுவாக் காட்டுப் பன்றியை எச்சரித்து அனுப்பியது.
யானையும், காட்டுப்பன்றியும் பேசியபடியே உண்டன. ஒருகட்டத்தில் காட்டுப்பன்றியுடைய தந்தங்களின் அழகைப் புகழ்ந்த யானை, அவற்றை சிறிது நேரம் கடனாக கேட்டது. மகிழ்வான மனநிலையில் இருந்த காட்டுப்பன்றி, யானையை மகிழ்விக்க தந்தங்களை கழற்றிக் கொடுத்தது.
தந்தங்களை அணிந்துக்கொண்ட யானை, காட்டுப் பன்றியை அடித்துவிரட்டிவிட்டது. வேறுவழியின்றி, காட்டுப்பன்றி யானையின் சிறிய தந்தங்களை பொருத்திக் கொண்டு ஆர்டுவாக்கிடம் வந்தது. நண்பனின் அவலநிலை, ஆர்டுவாக்கை கோபப்படுத்தியது.
'யானை இதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்கப் போகிறது, வீடு இல்லாமல் கஷ்டப் படப்போகிறது.பார், அழகிய தந்தங்களுக்காக அதனை வேட்டையாடுவர். நீ நிம்மதியாக வளையில் வாழ்வாய்' என்றது.
காட்டுப்பன்றியோ, 'நீளமான தந்தங்கள் இல்லாமல் எவ்வாறு வளை தோண்டுவேன்' என்று வருத்தப்பட, ஆர்டுவாக், அதிலிருந்து தன்னுடைய வளைகளை காட்டுப்பன்றி உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதித்தது.
மிக மென்மையான குணம் கொண்ட ஆர்டுவார்க்கின்
அன்புள்ளமும், காட்டுப்பன்றியின் வளையில் வாழும் தன்மையும், யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுவதும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் இந்த கதை வாசிக்கவும் கேட்கவும்தான் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது.
கிக்குயூ இனத்தில் என்றைக்கோ வாழ்ந்த ஒரு ஆதிவாசி மனிதனின் மனதில் உதித்த கற்பனைக் கதை, நூற்றாண்டுகள் பல கடந்த பின்னாலும் நம்மையும் மயக்குகிறது; அதே சுவாரசியத்தை தருகிறது.
இப்படி வாசிக்க, சுவையான நிறைய கதைகள் இந்த தொகுப்பில் உண்டு. அங்கோனி, ஸ்வாஹிலி, புஷ்மேன்,பட்டோங்கா, ஷோனா என்று பல்வேறு ஆப்ரிக்க இன மக்களின் நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கைகளுக்குக் காரணமான கதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
கதைகளின் இறுதியில், விலங்குகளைப் பற்றிய தகவல்கள்; வாழும் பகுதி, தட்பவெப்பம், உணவு என்று பல செறிவான தகவல்களும் வாசிப்பவர் ஆர்வத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அணிலை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? தன் வாலைக் கொண்டு உடலை எப்போதும் துடைத்த வண்ணமாக இருக்கும். ஏன் அப்படி செய்கிறது? மிக சுவாரசியமான கதையில் அதற்கான விடை அடங்கியிருக்கிறது.
புதர்மானுக்கு சிவந்த தோல் வந்தது எப்படி?
கினிப் பறவைகள் அதிகாலையில் யாரை கூப்பிடுகிறது?
ஆமை ஓட்டில் ஏன் இத்தனை கீறல்கள்?
மேலும், ஒரே தகவலைப் பற்றி இருவேறு கதைகள், இருவேறு இன மக்களிடமும் வழங்கப்படுவதையும் இந்த புத்தகம் பதிவு செய்திருக்கிறது. சாணிவண்டு எனும் ஒரு வகை வண்டுகள், யானை சாணியை உருட்டிக் கொண்டேயிருக்கும். எதற்காக தெரியுமா?
வண்ணத்துப் பூச்சியின் அழகை மட்டுமே மனிதர்கள் ரசிக்கின்றனர், தன்னை கவனிப்பதேயில்லை என்று மறுகிய வண்டு தன் பலத்தைக் காட்ட, தன்னைக்காட்டிலும் பலமடங்கு பெரிதான சுமையை உருட்டி மனிதர்களை தன்பக்கம் ஈர்க்கிறது என்று. உண்மையில், சாணிவண்டு தன் முட்டைகளை அந்த சாணி உருண்டையில் வைத்து பாதுகாக்கிறது.
கானா, இன மக்கள் சொல்லும் சாணிவண்டியன் கதை மிகவும் சுவாரசியமானது. மழை பெய்ய வைக்கும் அதிசயகுணம் கொண்ட பச்சோந்தி ஒன்று இருந்தது. பச்சோந்தியின் முதுகில், குச்சியால் இரண்டு தட்டு தட்டி மந்திர வார்த்தைகளைச் சொன்னால் மழை பெய்யும். அனன்சி என்ற பேராசை சிலந்தி, பலத்த மழை வேண்டி பச்சோந்தியை ஓங்கி அடித்துவிட, பச்சோந்தி செத்துப்போனது.
பச்சோந்தியை, கொன்ற பாவத்துக்கு தண்டனையாக, அதன் உடலை ஒரு உருண்டை டப்பாவில் அடைத்து உருட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்கிறார். டப்பாவை உருட்டிக்கொண்டிருந்த, அனன்சி களைத்துப் போயிற்று. தன் மகனை சந்தித்து வருவதாகவும், அதுவரை அந்த சுமையை உருட்டச் சொல்லிவிட்டு அனன்சி ஓடிப்போயிற்று. கடவுளின் கோபத்துக்கு, பலியாக விரும்பாத நியாயவாதி சாணிவண்டு, அந்த சுமையை இன்றும் உருட்டியப்படி இருக்கிறதாம். :)
இவற்றை தொகுத்தவர், நிக் க்ரீவ்ஸ் என்பவராம். பிரபலமான கதை சொல்லி போல. 'தேர்ந்தெடுத்து தொகுத்தவர்' என்று கூட போடவில்லை, கதைசொல்லி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். "நீர்யானைக்கு முடி இருந்தபோது" என்ற தொகுப்பின் தொடர்ச்சிதான் இந்த நூல் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த புத்தகத்தையும் வாங்கி வைத்திருக்கிறேன். இனிமேல்தான் வாசிக்க வேண்டும்.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆதிவாசி கதைகளை திரட்டிய வெரியர் எல்வின் கூட("உலகம் குழந்தையாக இருந்தபோது" ) அடிப்படையில் ஒரு கதை சொல்லியாம்.
தமக்கு அறிமுகமே இல்லாத உலகத்துக்கு வந்து, மொழி தெரியாத வெளி உலகம் அறியாத ஆதிவாசி மக்களோடு, பேசி பழகி, அவர்களது கதைகளை, நம்பிக்கைகளை எந்தவித விருப்பு வெறுப்புமின்றி கேட்டு ஆவணப் படுத்துவதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. வளையத்துக்குள்ளே வாழப்பழகிவிட்ட எனக்கு , அவர்களது இந்த மனப்பாங்கு ஆச்சரியமே!
பெரியவர்களுக்கே சுவாரசியமாக இருக்கும் இந்த கதைகள், சிறார்களை நிச்சயம் கவர்ந்துவிடும். விலங்குகளுக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பு, விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று பேணும் நட்பு மற்றும் பகை, மனிதர்களிடம் உறவாடும் தன்மை, காட்டின் அழகு மற்றும் அதற்கேயுரிய ஒழுங்கு என்று இயற்கையை பற்றிய நல்ல புரிதலை கொடுக்கும். (சிறார் இலக்கியம் இல்லை என்று புலம்புவதை விட , குற்றுயிரும் குலையிருமாக இருக்கும் இது போன்ற புத்தகங்களை தேடி பதிப்பித்தாலே போதும்.)
மொழிப்பெயர்ப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தங்கு தடையில்லாத மொழிநடை, வேற்று மொழியிலிருந்து வந்த நூலை வாசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தவேயில்லை.
நூல்: சிங்கம் பறந்தபோது முதலிய ஆப்பிரிக்க கதைகள்
கதைசொல்லி: நிக் க்ரீவ்ஸ் (தமிழில்: பிரிஜிட்டா ஜெயசீலன்)
என் பி டி
விலை: ரூ 86
Wednesday, June 18, 2014
A world of innocence (பெரிம்மாவின் டைரியிலிருந்து) ;-)
A world of innocence
I and my daughter packed
clothes,Jerkins,woolen-wares and shoes;
My granddaughter did her own packing with
innumerable crayons,eight pencils,six pens,
seven sharpeners,five erasers,
three scissors and one geometry box (I don't know what for)
besides storybooks,notebooks and drawing books
-We left for Mussoorie
we enjoyed cool breeze that comes through tall deodar trees
exotic aromatic air from white chestnut blossoms
we walked uphill,downhill till our knees ached;
we tasted aloo parantha,apple crumble,sweet lassie
at 'Char Dukans' (Estd in 1910)
Lo! The day came for departure
Our case is added more with
Tibetan styled purses,bags and bangles;
Kashmiri jacket and stoles
-Heavier than before!
I stealthily checked my granddaughter's bag
Little pink and white flowers from the weeds,
-a small bark of a deodar tree,
-a green fern twig for preservation
- dried leaves of some unknown trees,
- an unshaped stone chip from the mountain rock
- a round white pebble,
oh,what a world of innocence!
What a world of non-materialism!
What a world of non-consumerism!
I wish to go back there.
Can I?
இந்த படம், நைனிடாலில் தங்கியிருந்த விடுதியில் எடுத்தது. உதிர்ந்த பூவிதழ்களை சேகரிக்கிறாள் பப்பு.
Saturday, February 15, 2014
நிலாவுக்கு வந்த சோதனை!!
பப்பு வளர வளர, நானும் இன்னொரு ஆயாவாகிட்டேன்கிறதை நானே நம்பலைன்னாலும் அதுதான் உண்மை. அதுலே, ஆறரைக்கே எழுந்து 'பப்பு, ஏழு மணியாகிடுச்சு;ன்னு அலறி அவளை பயமுறுத்தலேருந்து, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணா எதையும் சீக்கிரமா செஞ்சுடுவே' ங்கிறதுலேருந்து...'உன்னை விட சூப்பரா புத்திசாலியா இந்த உலகத்துலே வேற யாருமே இல்ல'ன்னு பப்புவை நம்ப வைக்கிறது வரை அடக்கம்.இப்படியே ஆயாவோட சின்ன வெர்சனாகிட்டேன். அதுலே, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி....' ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி சொல்லிட்டேன்றதை நேத்துதான் உணர்ந்தேன்.
சாயங்காலம் காலார நடந்துபோய் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு திரும்ப வரோம்... பப்பு ஒரு இடத்துலே நின்னுட்டு வரவே இல்ல.' வா வா'ன்னு கூப்பிட்டாலும் அண்ணாந்து பார்த்துகிட்டு நிக்கறா. எங்களை பார்த்து எதிர்லே பைக்லே வந்த ஒரு பேமிலேயே அண்ணாந்து வானத்தை பார்த்துட்டு வேற போனாங்க. எதிர்லே நடந்து வந்தவங்க எங்களை ஒரு மாதிரி பார்த்துட்டு போனாங்க. இதெல்லாம் பார்த்து அலெர்ட் ஆகி கூப்பிட்டதும், பப்பு , 'ஹேய், ஆச்சி, இரு, நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு வந்துடறேன்'ன்னு சொன்னதும் பகீர்னு ஆகிடுச்சு.
Wednesday, November 27, 2013
மன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசி!
Friday, June 07, 2013
பப்புவும் டர்க்கிஷ் பூனையும்
அன்று காலையில்தான் ஊரிலிருந்து வந்தவனை, 'டர்க்கிஷ் கேட்' வாங்கி யிருக்கிறோம் என்று நம்ப வைத்திருக்கிறாள். பப்புவை, அவளது குறும்புத் தனத்தை, பார்த்தவர்கள் சிலர் அடிக்கடி அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயங்கரமாக கதை விடுவாள். அப்படியே,அவள் சொல்வதுதான் உண்மை என்பது போல் நடிப்பாள். அவளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. (அவள் சொல்வதை நம்புவதாக அவளையே நம்ப வைத்துவிடுவோம்!) ;-) எல்லாக் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கின்றன, இப்போதெல்லாம்!!
ஆனால், மற்ற சில உறவினர்களோ, 'நல்லா பொய் சொல்லுது' என்றோ 'இப்பவே பொய் சொல்ல நல்லா கத்து வைச்சிருக்கு' என்றோ சொல்வதுண்டு. இன்னும் சிலர், கொஞ்சம் மேலே போய், 'எல்லாம் அவங்க அம்மா சொல்லி கொடுத்திருக்கு' என்பார்கள்! இதில், உண்மை என்னவென்றால், அவள் சொல்வது பொய் என்றே அவளுக்குத் தெரியாது.
அவள் எதை நம்புகிறாளோ, கண்ட கேட்டவற்றிலிருந்து மனதில் பதிந்த தைத்தான் சொல்கிறாள். நாங்கள் அதை தடுப்பதில்லையே தவிர, அவளது கற்பனைத்திறன் என்றே புரிந்துக்கொள்கிறோம்.. தவிர 'அவள் பொய் சொல்கிறாள்' என்று மற்றவர்கள் சொல்வதையெல்லாம், (இப்போது வரை) பப்புவை அண்டாதவாறுதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இப்போது சொல்ல வந்தது, அதைப்பற்றியல்ல.
தம்பி அப்படி சொன்னபோது பப்புவும் அருகிலிலிருந்ததால், "முதல்ல ஸ்கூல்ல நல்லா படிக்கணும், அப்புறம் காலேஜ் போகணும், இதெல்லாம் ஹாபியா வைச்சுக்கலாம்" என்று 'ஆயா எனக்கு ஓதியது' மாதிரி நானும் ஓதி வைத்தேன்.
தம்பியும், "ஆமா, அப்புறம் வேலைக்கு போகணும், சம்பாரிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும், அப்புறம் குழந்தையை வளர்க்கணும், வீக் என்ட் எப்போ வருது பாக்கணும்," என்றான்.
அவன் சொன்னதைக்கேட்டு நான் சிரித்துக்கொண்டிருந்தேன். பப்புவோ, 'கல்யாணம் வேணாம் மாமா' என்றாள்.
"ஹேய், உனக்கு யாரு இப்ப கல்யாணம் பண்றேன்னு சொன்னது?" என்றதும் "இல்ல, மாமாவுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்" என்றாள் பப்பு.
"மாமாவுக்கு கல்யாணம் வேணாம்னா மாமாதான் சொல்லணும்;நீ ஏன் சொல்றே " என்றேன்.
"மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா' கல்யாணம் பண்ணிக்காதீங்க மாம" என்று விடாமல் சொல்லியபடி அவனது கையை பிடித்துத்தொங்கி ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டிருந்தாள். எங்களுக்கோ ஒரே சிரிப்பு தாங்கமுடியவில்லை!! நடுவில், தம்பி வேறு, 'எல்லாம் உன் வேலைதானா' என்பது மாதிரி என்னைப்பார்த்தான்.
"ஹேய், பப்பு, மாமாவுக்கு கல்யாணம் வந்தா நாம புது புது ட்ரெஸ் வாங்கிக்கலாம்! உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் மாமா கல்யாணத்துக்கு கூப்பிடலாம்,அப்புறம், பிரியாஆஆஆஅணி!! எப்பூடி...ஜாலியா இருக்கும் இல்ல?" என்றேன்.
"அதெல்லாம் ஒரு நாளைக்குத்தான்! அப்புறம் போர்!" பப்பு!!
அவ்வ்வ்வ்வ்!! போரா?!! இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
"போரா?? யாருக்கு போர்? எவ்ளோ ஜாலியா இருக்கும், பப்பு? மருதாணி எல்லாம் வைச்சுக்கலாம்" என்றேன்.
"ஆமா, போர்தான்! மாமாவுக்கும் அவங்க வைஃப்புக்கும்தான்!!" என்று சொல்லிவிட்டு, மாமாவின் கையை பிடித்து தொங்கி தொங்கி ஆடிக்கொண்டிருந்தாள்.....
கூடவே, "மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா" என்று சிரித்து சிரித்து சொல்லிக்கொண்டு!!
"க்கா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா" என்றான் தம்பி என்னைப்பார்த்து.
"டேய், நான் எதுவும் சொல்லிக்கொடுக்கைலைடா,என்னை சந்தேகப்படாத" என்றாலும் அவன் நம்பவேயில்லை!
எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது!! அவ்வ்வ்வ்வ்வ்!!
Monday, July 23, 2012
நியூஸ் ரீல்
பப்புவுக்கு சீனியர் சென்றதிலிருந்து தினமும் நியூஸ் பேப்பர் கட்டிங் எடுத்து வர வேண்டும். அன்றைய அல்லது முந்தின செய்தித்தாளிலிருந்து ஒரு செய்தியை வாசித்து, வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும். (ஸ்கூலில் சேர்க்கச் சென்றபோது, பிரின்சிபால் மாண்டிசோரி முறையை விளக்கிவிட்டு பள்ளியின் அருமை பெருமைகளை விவரித்தார். அப்போது, "ஐந்தரை வயதில் எங்க பிள்ளைகள் நியூஸ் பேப்பர் படிக்கும்" என்ற போது புளகாங்கிதமடைந்து விட்டேன். கடைசியில், அது எனக்கே ஆப்பாக வந்து முடியும் என்றா நினைத்தேன்?! பின்னே, நாந்தான் அவளை நியூஸ் படிக்க வைக்க பின்னால் ஓட வேண்டியிருக்கிறது?!!)சரி, அது போகட்டும்,
சமீபத்தில், 'கடவுள் துகள்' பற்றிய செய்தியை வாசித்தாள். விவரித்துச் சொன்னதும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாள். என்னவாம்?
தூக்கிவாரிப்போட்டது!!
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, "சரிப்பா, நான் வேற கண்டுபிடிக்கறேன். அனிமல்ஸ்ல்லாம் பேசும் இல்ல, அது என்ன பேசுதுன்னு நமக்கு தெரியுமா? இல்லல்ல, அதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கப் போறேன். அதை காதுல மாட்டிக்கிட்டு நாம காட்டுல போனா, பேர்ட்ஸ் என்ன பேசுது,சிங்கம் என்ன பேசுதுன்னு நமக்கு தெரியும். அது எவ்ளோ தெரியுமா? அஞ்சு ரூபான்னு வைக்கப் போறேன். ஏன்னா, எல்லா மக்களும் வாங்கணும் இல்ல. உழைக்கும் மக்கள் என்ன பண்ணுவாங்க,அப்புறம்?அதுக்குத்தான்"
பப்புவின் ஒரிஜினல் ஆசை சயின்டிஸ்டாக வேண்டும், என்றாலும் டெய்லராகவும் ஆக வேண்டும் என்றும் ஆசையாம்!
Tuesday, November 01, 2011
பப்பு டைம்ஸ்
“நீ ஒரு ஆச்சியா நீ? இனிமே உன் பேரு ஆச்சி இல்ல, உன் பேரு அடிச்சி”
:-)))
**********************************
“நிலாவாசைக்கு சிக்கன் சாப்பிடக்கூடாதுன்னு ஏன் வடலூர் ஆயா சொல்றாங்க, சிக்கன் கடைக்காரங்கதான் எல்லா சிக்கனையும் சாப்பிடணுமா?” என்றாள், ரொம்ப சீரியசாக.
கொஞ்ச நேரம் முழித்தபிறகுதான் பல்பு எரிந்தது, அது அமாவாசையென்று!!
யாரங்கே, இனி ’அமாவாசையை’ ‘நிலாவாசை’யென்று மாற்றுங்கள்,உடனே!!
Wednesday, September 07, 2011
காலை நேர பல்பு
......
“சொல்லி சொல்லி எனக்குதான் டென்சன் ஆகுது....டென்சன் ஆனா பிபி வந்துடும்...பிபி வந்தா என்ன ஆகும்..”
“சாயங்காலத்துலேருந்து காலைல வரைக்கும் கண் தெரியாம போய்டுமா,ஆச்சி?”
!!!
Monday, July 04, 2011
பப்பு டைம்ஸ்
சில மறக்க முடியாத கதைகள் :
ஒரு ஆண்டி - அவங்களுக்கு மழையில நனைஞ்சா பிடிக்காதாம். குடை எடுத்துட்டு போவாங்களாம். அவங்க வீட்டுல ஒரு செடி இருந்துச்சாம். அதுக்கு தண்ணியே ஊத்தமாட்டாங்களாம். ஒருநாள் மண்புழு வந்து, நாந்தான் பாம்பு னு அவங்களை பயமுறுத்துச்சாம். ஆ,பாம்புன்னு அவங்க் கத்துனாங்களாம். அந்த அங்கிள் வந்தாராம். அவங்களையும் பயமுறுத்துச்சாம். அங்கிள் சொன்னாராம், அது பாம்பு இல்ல, மண்புழுதான் நீ செடிக்கு தண்ணி ஊத்தலைன்னா
இப்டிதான் வரும்னு சொன்னாராம். ஆண்ட்டி தண்ணி ஊத்துனாங்களாம். செடி வானத்தை தாண்டி வளந்துடுச்சாம். ஆண்ட்டி செடியில சுண்டைக்காய் பறிக்கபோனாங்களாம். போய் போய் மேலே போய்ட்டாங்களாம். எறங்கி வரவே தெரியலையாம். அங்கிளும் ஏணி வைச்சு பாத்தாங்களாம் அவங்களால எறங்கவே முடியலையாம். அங்கிளும் மேலே மேலெ போய்ட்டாங்கலாம்.
ரெண்டு பேருக்கும் இப்போ எறங்க முடியலையாம். ரெண்டு பேரும் எப்டிடா இறங்குறதுன்னு அழுதுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு ஈகிள் வந்து அவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு போய் அதோட கூட்டுல விட்டுச்சாம். பாம்பு ஏதாவது வந்தா சொல்லுங்க, எனக்கு அதுதான சாப்பாடுன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சாம். அப்போ ஆண்ட்டிக்கு ஒரு ராக்கெட் கெடைச்சுச்சாம்.
அது என்னா ராக்கெட்ட்டு? ஓட்டை ராக்கெட்டு. ஓட்டை ராக்கெட்டுல ஏறி பறந்தாங்க பாரு, ஆத்துல விழுந்துட்டாங்க. ஆத்துல எதுமேல விழுந்தாங்க? முதலை முதுகு மேல. முதலை அவங்களை சாப்பிட வந்தப்போ ஆண்ட்டி என்ன்னா சொன்னாங்க, அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.
முதலை அவங்களை கரைக்குத் தூக்கிட்டு வந்தது. கரையில் ஜம்ப் பண்ணிட்டு ஆண்ட்டி என்னா பண்ணாங்க, மானை பிடிக்க போனாங்க. மான் என்னா பண்ணுச்சு, சிங்கத்தை கூப்பிட்டுச்சு....சிங்கம் புலியை கூப்பிட்டுச்சு, புலி நரியை கூப்பிட்டுச்சு, நரி யானையை கூப்பிட்டுச்சு, யானை கரடியை கூப்பிட்டுச்சு....
அதுக்குள்ள நான் zzzzzzzz....மீதி கதை என்னாச்சுனு தெரியலை.

ஒருவீட்டுல கோழி, ஆடு,மாடு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க. அப்போ அவங்க என்னா பண்ணாங்க, நாம் நாளைக்கு கோழியை சிக்கன் பண்ணி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டாங்க. அதை கோழி கேட்டுட்டு ஓடி போய்டுச்சு.
அப்புறம், சரி, நாம் ஆடு காலை வைச்சு நாளைக்கு சிக்கன் (மட்டன் லெக் பீஸ்!!) பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. ஆடு அதைக் கேட்டுட்டு ஓடிடுச்சு.
ஆடு ஓடினதும் என்னா பண்ணாங்க, சரி, மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க. மாடும் அதைக்கேட்டுட்டு ஓடிடுச்சு.
அப்புறம் மாடு என்னா பண்ணுச்சு, மூணு வீடு கட்டுச்சு, ஒரு வீடு மாடுக்கு, இன்னொன்னு ஆடுக்கும் கோழிக்கும். ஆடு என்னா சொல்லுச்சு, சொல்லு?
(தெரியலையே!) ரெண்டு வீட்டுலயும் நானே இருந்துக்கறேன்னு சொல்லுச்சு.மாடு, ஒரு வீடுதான் உனக்கு, இன்னொன்னு கோழிக்குன்னு சொல்லிச்சு.மூணு பேரும் மூணு வீட்டுல இருந்தாங்க. அப்போ பெரிய காத்து வந்துச்சு.
இது இப்போதைக்கு முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டே, நான் zzzzzzzzzzzzzzzz

I'm sorry என்று ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். இரு நண்பர்களுக்கிடையே சண்டை வருகிறது. பேசாமல் இருக்கிறார்கள். அப்புறம், சாரி சொல்லிவிட்டு ஒன்றாக ஆகிவிடுகிறார்கள். கதையை சொல்லிவிட்டு, ’சண்டை போட்டா சாரி சொல்லணும்’ என்று உணர்த்த விரும்பினேன்.
“எப்போல்லாம் நீ சாரி சொல்லுவே”
“யாரையாவது ஹர்ட் பண்ணா, அவங்களுக்கு புடிக்காதது பண்ணா சாரி
சொல்லுவேன்” - பப்பு
”உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் யாரு?”
“வர்ஷினி, வெண்மதி, அபிஷேக்” - பப்பு
”அவங்களோட சண்டை போடுவியா”
“ஓ, வேன்ல சண்டை போடுவோம். ஆனா வாரத்துக்கு ஒரு தடவைதான் ஆச்சி” - பப்பு
”அப்புறம் என்ன பண்ணுவ”
”சண்டை போட்டா ஆண்ட்டிக்கிட்டே போய் சொல்லிடுவோம்!” - பப்பு
Monday, June 13, 2011
தினம் ஒரு ப(/பா)டம்
பாலெல்லாம் எனக்கு வேணாம். கவ்-வோடதெல்லாம் யாராவது குடிப்பாங்களா...கவ்-வோடது, சிங்கத்தோடதுல்லாம் எனக்கு தராதே.
ப்ராக் பிரின்சசுக்குப் பின்:
யப்பா, நான் குடிச்சுடுறேன்ப்பா, மாடு என்னை வந்து முட்டுறதுக்கா,ஏன் பால் குடிக்கலைன்னு!
Friday, June 10, 2011
killer timepass - பப்பு விடு(ம்)கதைகள்
பே!!
”கருப்பாக இருப்பான்”
பே அகெய்ன்!
.
.
.
.
விடை: தலைமுடி
2. ரொம்ப பெரிதாக இருக்கும். அதுக்குள் நிறைய குட்டி குட்டி மனுசங்கள் ஓடிக்கிட்டு இருப்பார்கள். அது என்ன?
”பட்டாணி”
”இல்ல”
மாதுளம்பழம்?
”இல்ல”
”வேர்க்கடலை??”
”தெரியல, நீயே சொல்லு...........”
விடை: உலகமும், உலகத்துக்குள் இருக்கும் மனுஷங்களும்
Tuesday, May 03, 2011
பப்பு டைம்ஸ்
அதை அறிந்ததிலிருந்து பப்புவுக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஏற்கெனவே சுனாமியால் பப்புவுக்கு ஏகப்பட்ட கேள்விகள், யோசனைகள். இதில் உலகம் அழிந்துவிடுமென்றதும் ’நாம என்னதான் பண்றது’ என்று கலங்கிப்போய் விட்டாள். அந்த ஹெரால்டு என்பவருக்கு கடிதம் எழுதலாம் என்று அவளே ஒரு முடிவுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுதியிருக்கிறாள்.
dear Mr.herald,
why does world fall? what shall I do?
எழுதிவிட்டு இதை அவருக்கு அனுப்பியே ஆக வேண்டுமென்று அடம். சரி, மெயிலில் அனுப்புகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். ஹெரால்டு இந்தக்கடிதத்தை பார்த்துவிட்டு, ”i tell lie ன்னு சொல்லிட்டா நிம்மேதி”யாம். இல்லையென்றால்,
1. ராக்கெட் புடிச்சு நாம எல்லாரும் நிலாவுக்கு போய்டலாம். குட்டிப்பசங்களை எல்லாம், மேல்வீட்டு குட்டிப்பாப்பாவையும் (3 மாதக்குழந்தை!) கூப்பிட்டுப் போய்டலாம்.(ஆவ்வ்வ்..அப்போ பெரியவங்க!)
2. உலகத்தை மேலே தூக்கிட்டுபோய் வானத்தை கீழே அழுத்திடலாம். (நோ நோ, நாங்க ஒரு விஜயகாந்த் படம் கூட பாத்தது இல்ல)
3. உலகத்தை உடைச்சிட்டா உலகம் அழிஞ்சு போகாது. (அதானே, உலகம் இருந்தாத்தானே அழியும்!)
என்று மூன்று திட்டங்கள் வைத்திருக்கிறாள்.
ஹெரால்டு மற்றும் தினமணிக்கதிரின் கவனத்துக்கு...: அந்த ஹெரால்டின் ஐடியை தேடிக்கொண்டிருக்கிறேன். உடனே ஐடியுடன் தொடர்பு கொள்க!

விடுமுறையில் அராஜகம் தாங்கமுடியவில்லை. எல்லாருக்கும் கிச்சு கிச்சு மூட்டுவது, ஆயாவிடம் நான் கூப்பிட்டேன் என்றும் என்னிடம் ஆயா கூப்பிட்டார்கள் என்றும் சொல்லி பே என்று முழிக்க வைப்பது,மேலே விழுந்து புரள்வது.....தாங்க முடியாமல், கிச்சு கிச்சு பண்ணா வால் முளைச்சுடும் என்று சொல்லி வைத்தேன். கொஞ்சமே கொஞ்சூண்டு (நேரம்) பலனிருந்தது. அப்புறம்,
“ஆச்சி, நீ எனக்கு கிச்சு கிச்சு பண்ணுப்பா, ப்ளீஸ்....” என்று அமர்க்களம் ஆரம்பமாகிவிட்டது.
அம்மாவுக்கு வால் முளைக்குதான்னு பாக்க அவ்வளவு ஆசை! (ஹூம்...பாலூட்டி வளத்த கிளி...!)
Friday, March 11, 2011
பப்பு த ரைட்டர் ..மீ த டைப்ரைட்டர்!
"சரி, நீ சொல்லு நான் எழுதறேன்" என்றேன்.
one day one lion is there. one day another fox come.then that fox tell, the tank is another lion is there. that lion also come. fall down in the water. That's all.
(அவ்வ்வ்வ்...தெரிஞ்ச கதைக்கு இவ்ளோ பில்டப்பா...)"இதுதான் நமக்கு தெரியும் இல்ல, இப்போ நீயே ஒரு கதை சொல்லு, நான் எழுதறேன்"
One day one tree is there. The tree is tall tree. And one day one man come. broke the tree. And another tree biggest is coming. Another time he is broking. He goes to another. He broke that tree also. No tree is there.
One day one man come in the school. He is playing in the school. He is playing in the home also.
And Night time. He is not sleeping. Very very no time he is sleeping. (அப்டின்னா, எவ்ளோ நேரம் ஆகியும் தூங்கலையாம்....!) Morning only he is sleeping. (ஓ...இது சுயசரிதையா அப்போ!!) getting up night and playing. Another morning go to school. go to prayer.do activities. Another morning going to school. Writing home works. Come to home. And sleep.
That's all. (பாவந்தான் இல்ல...)
One day one fox come to the one home. That day tiger come to his home. One day both is friends.That fox called to his horse. Tiger come to the fox's house.Fox give lunch for tiger. Lunch eat it and tiger called fox his house. He called deers and rabbits. Then both that lunch -- eating deers and rabbits. (ஆ...பெரிய சூழ்ச்சியால்ல இருக்கு!) Both are friends to any house. That's all.
Wednesday, March 02, 2011
பப்பு டைம்ஸ்
”கொன்னே புடுவேன்”
”என்ன பப்பு சொல்றே?”
”நவ்ஜோத் இல்ல ஆச்சி, ’என் தம்பிக்கு யாராவது பை சொன்னீங்களோ கொன்னே புடுவேன்’னு சொன்னான்.”
ம்ம்....
”ஆச்சி, நான் இப்டி குடுமி போட்டிருக்கேன் இல்ல, அது ஃப்வுண்டெய்ன் குடுமியாம். வேதா ரெண்டு குடுமி போட்டிருக்கா இல்ல, அது இண்டிகேட்டர் குடுமியாம். தனுஷ் சொல்றான்….திருட்டு பையன்…”
”பப்பு அப்டில்லாம் சொல்லக்கூடாது பப்பு. என்ன பேச்சு இதெல்லாம்”(அவ்வ்வ் நான் ஏன் அப்பப்போ தேஞ்சுபோன ரெக்கார்டு மாதிரி ஆகிடறேன்!)
”இல்லப்பா, புவனேஷ்வரி ஏறினாதான் அடுத்து நவ்ஜோத் ஏறமுடியும். (?) புவனேஷ்வரி ஏறிட்டு தூங்கும்போது என்னா பண்ணுவான், மெதுவா பின்னாடி போய் ஸ்னாக்ஸ் பாக்ஸ் தெறந்து சாப்பிட்டுடுவான்.”
பேருக்கு பேரு சரியா போயிந்தி.....?
”இங்க பாருப்பா, வேதாக்கு மட்டும் முடி வளந்தா போதுமா, எனக்கு முடி வளர வேணாமா, சொல்லு ஆச்சி”
”ஏன் பப்பு, உனக்கும்தான் முடி வளரணும்..”
”வேதா பேரிச்சம்பழம்ல்லாம் எடுத்துசாப்ட்டுடறா, எனக்கு குடுக்கவே மாட்டேங்கறா…அவளுக்கு மட்டும் முடி வளரணுமா? எனக்கு முடி வளர வேணாமா?”
ரொம்ப நல்ல புள்ளைன்னுதானே நினைச்சீங்க பேரிச்சம்பழத்துலேருந்து எஸ்கேப் ஆகறதுக்கான வழி…இது!
”இந்த லஷ்மி பாருப்பா,”
....
”ஒரு நாள் குடுமி போட்டுட்டு வந்தா அடுத்த நாளும் குடுமி போட்டுட்டு வரக்கூடாதாம். அதுக்கு, அடுத்தநாள்தான் குடுமி போட்டு வரணுமாம்…நான் என் இஷ்டத்துக்கு நான் என்ன வேணா பண்ணுவேன்…அவளுக்கென்ன?அப்டி சொல்லலாமாப்பா…அவங்கவங்க இஷ்டம்தானே…அவ ஏன் சொல்றா…”
ஒரு விசாரணைக் கமிஷன் பார்சல்ல்ல்ல்....
Sunday, February 20, 2011
அம்மா தேக்...ஆ..தேக்...
நேற்று, வெளியில் சென்றபோது 'அம்மா பாரு, அம்மா பாரு' என்றாள். கத்தாம மெதுவா சொல்லு, என்ன பாக்க சொல்றே என்னை? என்றால், 'அதோ அம்மா' என்று கைகாட்டினாள். பார்த்த திசையில் ஜெயலலிதாவின் உருவம். அதிர்ச்சியாகிவிட்டேன். அதற்குக் காரணமிருக்கிறது. பப்புவின் அப்பா வழி உறவினர்கள் அம்மா ஆதரவுதான். அவர்கள் பக்கத்து குடும்ப விழாக்கள் அனைத்தும் அம்மாவின் படத்தோடும் ஆசியோடும்தான் தொடங்கும். சமீபத்திலும் அப்படி ஒரு நெருங்கிய குடும்பம் வந்து மணவிழாவிற்கு அழைத்து சென்றிருந்தனர். ஒருவேளை அவர்கள் பப்புவுக்கு ஏதாவது சொல்லியிருப்பார்களா என்றெல்லாம் டவுட். ஏனெனில், ஒருமுறை அப்படி நடந்து,'எதுக்கு இப்பவே அதெல்லாம் அவளுக்கு, நல்ல தலைவர்களைப் பத்தி சொல்லிக்கொடுங்க என்று மெருகாகச் சொல்லியிருந்தேன். இதெல்லாம்தான் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் காரணம்.
"எப்படி தெரியும் பப்பு? " என்று விசாரித்தால், "ஹேய்ய்ய், எனக்கே படிக்கத் தெரியுண்டி, அங்கே பாரு அ ம் மா எழுதியிருக்கு இல்ல, எனக்கு படிக்க தெரியாதா" என்று அவளது தன்மானத்துக்கு வந்த சோதனையாக நினைத்து கோபமாக பதில் சொல்லவே.... ஓ..யெஸ்..இப்போதான் அவளுக்குப் படிக்கத் தெரியுமே!! :-))
Thursday, January 13, 2011
ப... டி...படி
"ழு"
"ம்ம்..சேர்த்து படி"
"ஏழு"
"ஏழு...அப்புறம்"
"வா"
"ல்"
"க"
"ளு"
"ட்?இல்ல..ட"
"ன்"
"வா லு/ளுடன்"
”அப்டியா எழுதியிருக்கு...சேர்த்துபடி”
”ஏ”
”ழு”
”..அதுதான் முன்னாடியே படிச்சுட்டே இல்ல, பப்பு, அடுத்த வார்த்தைய படி...”
”வா”
”ல்”
”க”
”ளு”
”ட”
”ன்”
”ம்ம்..என்னது...சொல்லு...சேர்த்து..”
”வா க....”
”ம்ஹூம்..சரி ஃப்ர்ஸ்ட்லேர்ந்து படி...”
”ஏ”
”ழு”
(அவ்வ்வ்வ்...மறுபடியும் முதல்லேர்ந்தாஆஆஆ?!!)
”ஏழு தான் அப்பவே படிச்சுட்டே இல்ல..ரெண்டுரெண்டு எழுத்தா சேர்த்து படி
இது என்ன?”
”வா”
”இது?”
”ல்”
”சேர்த்து சொல்லு”
”வால்”
”அப்புறம்..இது”
”க”
”அப்புறம்?”
”ளு”
”சேர்த்து சொல்லு...”
”களு”
(அவ்வ்வ்வ். அழுதுடுவேன்)
“முழுசா படி...வால்ல்ல்?”
”களு”
ஃப்ர்ஸ்ட்லேருந்து...
”வால்களு”
”யெஸ்...அப்புறம்...”
”ட”
”ன்”
”டன்”
”உனக்கே படிக்க தெரியுதே!இப்போ சேர்த்து சொல்லு....”
”ஏழு...”
”ம்ம் (மேலே!)..ஏழு வால்..”
”வால்களுடன்”
”சூப்பரா படிக்கற பப்பு.....முழுசா சொல்லு பாக்கலாம்...”
”ஏழு வால்களுடன்”
ஹப்பாடா!சக்ஸஸ்...
”ஒ”
”ரு”
”ஒரு ”
”முதல்லேருந்து சொல்லி சொல்லி படி”
”ஏழு வால்களுடன் ஒரு”
”எ”
”லி”
”எலி”
”ம்ம்..இப்போ ஃபுல்லா படி..”
”ஏழு வால்களுடன் ஒரு எலி”
கொஞ்ச நேரத்துக்கு ஒரே கைதட்டல்...ஹை-ஃபை...
”இப்போ, அடுத்த பக்கம்...”
”போ..அதெல்லாம் நீதான் சொல்லணும்...நீயே படிச்சு சொல்லு...”
(ஸ்ப்பா...ஒரு தலைப்பை படிக்க வைக்கறதுக்குள்ளேயே இங்க பிபி ஏறுது...பப்புவுக்கு உயிர்மெய் எழுத்துகளை கற்றுக்கொடுத்த ஆயாவுக்கு அன்பு முத்தங்கள். எப்படி அத்தனை வேரியேஷன்களை கற்றுக்கொள்வாள் என்று மலைப்பாக இருந்தது. ஆயா என் கவலையைப் போக்கினார்.)
உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!