Friday, June 07, 2013

பப்புவும் டர்க்கிஷ் பூனையும்

"அக்கா, பேசாம பப்புவை தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக்கிடு" என்றான்  தம்பி.

அன்று காலையில்தான் ஊரிலிருந்து  வந்தவனை, 'டர்க்கிஷ் கேட்' வாங்கி யிருக்கிறோம் என்று  நம்ப வைத்திருக்கிறாள்.  பப்புவை, அவளது குறும்புத் தனத்தை, பார்த்தவர்கள் சிலர் அடிக்கடி அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயங்கரமாக கதை விடுவாள். அப்படியே,அவள் சொல்வதுதான் உண்மை என்பது போல் நடிப்பாள். அவளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. (அவள் சொல்வதை நம்புவதாக அவளையே நம்ப வைத்துவிடுவோம்!) ;‍-) எல்லாக் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கின்றன, இப்போதெல்லாம்!!

 ஆனால், மற்ற சில உறவினர்களோ, 'நல்லா பொய் சொல்லுது' என்றோ 'இப்பவே பொய் சொல்ல நல்லா கத்து வைச்சிருக்கு' என்றோ சொல்வதுண்டு. இன்னும் சிலர், கொஞ்சம் மேலே போய், 'எல்லாம் அவங்க அம்மா சொல்லி கொடுத்திருக்கு' என்பார்கள்! இதில், உண்மை என்னவென்றால், அவள் சொல்வது பொய் என்றே அவளுக்குத் தெரியாது.

அவள் எதை நம்புகிறாளோ, கண்ட கேட்டவற்றிலிருந்து மனதில் பதிந்த தைத்தான் சொல்கிறாள். நாங்கள் அதை தடுப்பதில்லையே தவிர‌, அவளது கற்பனைத்திறன் என்றே  புரிந்துக்கொள்கிறோம்.. தவிர 'அவள் பொய் சொல்கிறாள்' என்று மற்றவர்கள் சொல்வதையெல்லாம், (இப்போது வரை) பப்புவை அண்டாதவாறுதான்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இப்போது சொல்ல வந்தது, அதைப்பற்றியல்ல.

தம்பி அப்படி சொன்னபோது பப்புவும் அருகிலிலிருந்ததால், "முதல்ல ஸ்கூல்ல நல்லா படிக்கணும், அப்புறம் காலேஜ் போகணும், இதெல்லாம் ஹாபியா வைச்சுக்கலாம்" என்று 'ஆயா எனக்கு ஓதியது' மாதிரி நானும் ஓதி வைத்தேன்.

தம்பியும், "ஆமா, அப்புறம் வேலைக்கு போகணும், சம்பாரிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும், அப்புறம் குழந்தையை வளர்க்கணும், வீக் என்ட் எப்போ வருது பாக்கணும்," என்றான்.

அவன் சொன்னதைக்கேட்டு நான் சிரித்துக்கொண்டிருந்தேன். பப்புவோ, 'கல்யாணம் வேணாம் மாமா' என்றாள். 

"ஹேய், உனக்கு யாரு இப்ப கல்யாணம் பண்றேன்னு சொன்னது?" என்றதும் "இல்ல, மாமாவுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்" என்றாள் பப்பு.

"மாமாவுக்கு  கல்யாணம் வேணாம்னா மாமாதான் சொல்லணும்;நீ ஏன் சொல்றே " என்றேன்.

"மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா' கல்யாணம் பண்ணிக்காதீங்க மாம" என்று  விடாமல் சொல்லியபடி அவனது கையை பிடித்துத்தொங்கி ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டிருந்தாள். எங்களுக்கோ ஒரே சிரிப்பு தாங்கமுடியவில்லை!! நடுவில், தம்பி வேறு, 'எல்லாம் உன் வேலைதானா' என்பது மாதிரி என்னைப்பார்த்தான்.

"ஹேய், பப்பு, மாமாவுக்கு கல்யாணம் வந்தா நாம புது புது ட்ரெஸ் வாங்கிக்கலாம்!  உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம்  மாமா கல்யாணத்துக்கு கூப்பிடலாம்,அப்புறம், பிரியாஆஆஆஅணி!! எப்பூடி...ஜாலியா இருக்கும் இல்ல?" என்றேன்.

"அதெல்லாம் ஒரு நாளைக்குத்தான்! அப்புறம் போர்!" ‍ பப்பு!!

அவ்வ்வ்வ்வ்!! போரா?!! இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

"போரா?? யாருக்கு போர்? எவ்ளோ ஜாலியா இருக்கும், பப்பு? மருதாணி எல்லாம் வைச்சுக்கலாம்" என்றேன்.

"ஆமா, போர்தான்! மாமாவுக்கும் அவங்க வைஃப்புக்கும்தான்!!" ‍ என்று சொல்லிவிட்டு, மாமாவின் கையை பிடித்து தொங்கி தொங்கி ஆடிக்கொண்டிருந்தாள்.....

கூடவே,  "மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா" என்று சிரித்து சிரித்து  சொல்லிக்கொண்டு!!

"க்கா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா"  என்றான் தம்பி என்னைப்பார்த்து.

"டேய், நான் எதுவும் சொல்லிக்கொடுக்கைலைடா,என்னை சந்தேகப்படாத‌" என்றாலும் அவன் நம்பவேயில்லை!

எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது!! அவ்வ்வ்வ்வ்வ்!!

5 comments:

தியானா said...

//மற்ற சில உறவினர்களோ, 'நல்லா பொய் சொல்லுது' என்றோ 'இப்பவே பொய் சொல்ல நல்லா கத்து வைச்சிருக்கு' என்றோ சொல்வதுண்டு.//

இது மாதிரி மக்களைக் கடக்கும் பொழுது என செய்வது என்று தெரியாமல் நான் அமைதியாக இருப்பேன்.

//"ஆமா, போர்தான்! மாமாவுக்கும் அவங்க வைஃப்புக்கும்தான்!!"//

இது முற்றிலும் உண்மை.. பப்புவுக்கு பெரிய பெரிய உண்மைகள் தெரிந்து இருக்கிறதே!! :‍))

தியானா said...

முல்லை, பப்பு எழுதிய அல்லது சொன்ன கதை ஓன்று இருந்தால் அனுப்புங்களேன்.. பப்புவோட கற்பனைத்திறனுக்கு நிறையயயய் எதிர்பார்க்கிறேன்...

சந்தனமுல்லை said...

நன்றி தியானா. முன்னமே நினைத்தேன்...ஆனா, அவளோட கதையில நெறைய வன்முறையெல்லாம் இருக்கும் பரவாயில்லையா? :‍-)

தியானா said...

நம்ம பாக்காத வன்முறையா? சும்மா அனுப்புங்க முல்லை..

சந்தனமுல்லை said...

:‍) சரி, தியானா, இங்கிலீஷில ஒன்னும் தமிழ்ல ஒன்னும் அனுப்பறேன்ப்பா...