பிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டு கஞ்சாக் கடத்தியதாக பொய்யாகக் குற்றசாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகிறார் ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரான பிரபாகர்.
காவல்துறையினரிடமிருந்து தப்பியோடி, வெளிமாநிலங்களில் சாதுக்களோடு அலைந்து திரிந்து நீண்ட முடி ம்ற்றும் வெட்டப்படாத தாடியுடன் உருமாறுகிறார். மீண்டும் சென்னை திரும்பும் பிரபாகர், அவரது இந்த நிலைக்குக் காரணமானவர்களைக் கொலைச் செய்கிறார்.
யுவான் சுவாங் கிடம் பத்தாயிரம் தருவதாக கூறி, அவரது தன்னிலை விளக்கத்தை ஒளிப்பதிவு செய்ய சொல்கிறார். அதில் சொல்லப்படுகிறது..அவரது சாவு துரத்தும் வாழ்க்கை..இளைம்பிராயம்...சாலை விபத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, பள்ளியிறுதி வரை விடுதியில் கழித்தது..தான் தமிழை தேர்ந்தெடுத்து படிக்க காரணமாய்ரிக்கும் அபிமான தமிழ் ஆசிரியர், பால்யத்தோழி ஆனந்தியிடம் ஈற்படும் ஈர்ப்பு...ஆனந்தியிடம் விட்டுப்போகும் கடிதத்தொடர்பு..ஒரு விலைமாதராக அவரைச் சந்திக்க நேர்ந்த அவலம்..தான் கொன்றவர்களின் விவரம்..
ஒளிநாடாவை சன் தொலைக்காட்சியிடம் கொடுத்துவிட்டு, ஆனந்தியுடன் தான் வளர்ந்த வீட்டை காண அம்பாசமுத்திரத்திற்கு பயணப்படுகிறார். காவல்துறை அவரை கைது செய்யத் தேட தொடங்குகிறது....அம்பாசமுத்திரத்தில் கைதுச் செய்யப்படுகிறாரா பிரபாகர்..அவர்கள் இருவருக்கும் என்ன நேர்கிறது?
தயாரிப்பாளர்கள் பெயர் தவிர பெயர் மற்றும் படவிவரங்கள் அனைத்தும் தமிழிலேயே போடப்படுவது அருமை..படக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.
"என்ன சேரப்போறே?" என்ற கதாநாயகியின் கேள்விக்கு, தமிழ் படிக்கப்போவதாக சொல்கிறார் கதாநாயகன். உடனே "ஏன், மார்க் கம்மியா" என்ற கதாநாயகியின் கேள்வி "நச்".
"தட்டாமாலை சுத்தறது எனக்கு பிடிக்காது..ஆனா, எனக்கு பிடிக்குமா..ன்னு தெரியாம, பிடிச்சதா நெனைச்சு சுத்துவாரு. அவருக்கு அது பிடிச்சதானால, அதை நான் அவருக்கு சொல்லல!! " போன்ற கணங்கள்!!
கால் சென்டரில வேலை செய்பவரிடம் "உன் பேர் கௌசிக்..ஏன் உன் பேரை தாமஸ்ன்னு சொல்றே..என்பதும் 2000 வருஷத்து தமிழ் படிச்ச எனக்கு 2000 ரூபாதான் சம்பளம்.ஆனா, 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பொட்டி, அதாண்டா கம்ப்யூட்டர் அதை படிச்சவனுக்கு 2 லட்சம் சம்பளம்..எப்படி எப்படி?? என்று கேட்பதும்...
நண்பனது சாப்ட்வேர் அலுவலகத்திற்குச் சென்று..."இவ்ளோ பெரிய ஆஃபிஸ், ஏ சி..உங்க எம். டி அமெரிக்காவுல உனக்கு வேற 2 லட்சம் சம்பளம்.." என்றுக் காட்டும் வியப்பு, நக்கல் தொனி..என்று...மிக நன்றாக நடித்திருக்கிறார் ஜீவா!
ஒப்பனை எதுவும் இல்லாமல், மிக எளியத் தோற்றத்தில், நம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண் போல அஞ்சலி."நெசமாத்தான் சொல்றியா?" என்று..நான்கு நார்த்தைகொருமுறைக் கேட்பதும்...இவரது அடையாளம்...மட்டுமல்ல..இன்னும் சிறிது நாட்களுக்கு நமது சானல்களுக்கும்தான்!
பின்னனி இசை..மற்றும் பாடல்கள்..நன்று!
தேடலின் இசையாய்.. இன்னும் ஒரு இரவு, துள்ளலின் இசையாய்..பற பற... பட்டாம்பூச்சி,
தனிமையின் இசையாய்..பறவையே எங்கு இருக்கிறாய்..!!
ஆனால் சில கொலைகள் மற்றும் வன்முறையை தவிர்த்திருக்கலாம்..!!
தமிழ் படித்ததனால் சைக்கோ ஆகிறாரா..இல்லை..அவரது வாழ்வில் நிகழ்ந்த பல விபத்துகள் போல தமிழ் படிக்க நேர்ந்ததும் ஒரு விபத்தா?
இங்கு இருக்கும் எல்லா சாப்ட்வேர் கம்பெனி பணியாளார்களும், அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ இருக்கும் கம்பெனிகளுக்குத்தான் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வேலை செய்கிறோம்.. தமிழ் படிச்சா எந்த கம்பெனியில் டாலர்களில் பணம் வரும்?
- இது எனக்குள் எழுந்த கேள்விகள்!!