Wednesday, January 19, 2011
அன்னா-வை வரவேற்போம்!
குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு வகுப்புலே படிச்சப்போ, அப்படின்னா, இப்போ இருக்கிற குரங்குல்லாம் ஏன் மனுசனா மாற மாட்டேங்குதுன்னு சிலர் வாதம் பண்ணாங்க. ஆமாந்தானே, அப்போ பரிணாமம் உண்மைன்னா ஏன் புதுசா கண்டுபிடிக்கப்பட்ட உயிர் ஒன்னுக்கூட இல்லன்னும் கேள்விகள் வந்தது. நாலு கால் குரங்குலேருந்து இரண்டு கால் மனுசனா மாறுவது மாதிரி படமெல்லாம் இருக்கேன்னப்போ, படமெல்லாம் யார் வேணா வரையலாம்தானேன்னும் ஒரே சண்டை. அப்புறம், இதைப் பத்தி விரிவாக மேல்நிலை வகுப்புகளில் படிப்பீர்கள்னு இருந்தது. மேல்நிலை வகுப்புக்கு வந்தப்போ, இதைப் பற்றி கீழ்வகுப்புகளில் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்னும் இருந்தது.
அப்புறம் எங்க?எப்படி கட் ஆஃப் மார்க் தேத்தறதுதான் நினைவெல்லாம் நித்யா!
சமீபத்துல ஒரு இடுகையை தமிழ்மணத்தில் வாசிச்சேன். என்னோட மரமண்டைக்கும் லேசா புரியறமாதிரி.பரிணாமம் என்றால் என்ன?-ன்னு அன்னா எழுதிய இடுகை. இதை தொடரா எழுதப்போறதாவும் சொல்லியிருக்காங்க. அனலிஸ்டான அன்னா, பதிவராக தமிழ்மணத்தில் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்! :-)
அதோடு, அவரது குறிப்பில், " நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்று வருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடைய தாகவிருக்கும். நன்றி." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்னா பதிவுலகுகிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வினவின், மகளிர் தின இடுகைகளுக்காக y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள்... என்ற இடுகையை எழுதியிருக்கிறார்.
நன்றி அன்னா. தமிழ்மணத்திற்கு நல்வரவாகுக!
Tuesday, January 18, 2011
தமிழ்மணம் விருதுகள் 2010
முதலில், பங்கேற்ற, வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகள்!! :-)
பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
இல்லத்தரசிகளா, ஆயுள் தண்டனைக் கைதிகளா?
'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு
பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும்
கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!
நூல் விமர்சனம், அறிமுகம்
அந்த "தாயை" சந்திக்க விரும்புகிறீர்களா?
யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!
அரசியல், சமூக விமர்சனங்கள்
கல்லா? மண்ணா?? (And, this is not a game!)
என்ன 'வலி' அழகே!
ராணுவத்தை அனுப்பும் முன்....
ஒன்றும் இல்லை, இதெல்லாம் பரிந்துரைக்கென்று நான் தேர்ந்தெடுத்த இடுகைகள்தான். :-)
இவ்விடுகைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு இதில் எதனை பரிந்துரைப்பது என்று முடிவுக்கு வர இயலாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில், எழுதிய எல்லா இடுகைகளும் பரிந்துரைக்க ஏற்றவை போலவே(காக்கைக்கும்...) தோற்றமளித்துக்கொண்டிருந்தது,எனக்கு. அதோடு 'பூக்காரிகளுக்கும் சுயமரியாதை உண்டு' இடுகையை பரிந்துரைத்தே ஆகவேண்டும் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது. ஏனெனில், பூக்காரியை பரிந்துரைக்காமல் இருந்தால் அது என்னையே நான் மறுதலிப்பதாகும். (மேலும், பெண்களுக்கு என்று ஒரு தனிப்பிரிவு இருந்ததால் மொத்தம் நான்கு பிரிவுகள் என்றும் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தேன்.)எந்தப்பிரிவில் எதை பரிந்துரைப்பது என்பதும் ஒரு தனி குழப்பம். யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தார் தோழர்.ஏழர.
தோழர் ஏழர அவர்களுக்கு மடலிட்டு எனது குழப்பநிலையை சொன்னதோடு பட்டியலையும் பகிர்ந்துக்கொண்டேன். உடனே உதவிக்கு வந்தவர், இடுகைகளை வாசித்து, மாற்றுப் பார்வையையும்,வெற்றி வாய்ப்பையும் கணக்கில் கொண்டு, பிரிவுகளுக்கேற்ற இடுகைகளை மடலிட்டார். எனக்கும் அது ஏற்புடையதாக இருந்ததால் அந்த இடுகைகளை பரிந்துரைத்தேன். உதவிய தோழருக்கு மிக்க நன்றி! :-)
இறுதியாக, மூன்று பிரிவுகளில் மட்டும் பங்கேற்க முடியும் என்ற விதியின்படி,
பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!
நூல் விமர்சனம், அறிமுகம்
யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!
இவ்விடுகைகளை பரிந்துரைக்கு அனுப்பினேன்.
இதில், ஒன்றைத் தவிர மற்ற இரண்டு இடுகைகளும் தொடர்பதிவுகள். பதிவுலகில் தொடர்பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். எங்கிருந்தோ, யாரோ ஒருவர் ஆரம்பிக்க அது தீப்பொறியைப் போல பதிவுலகில் பரவுவதை...சங்கிலியைப் போல தொடர்வதை... நமது எண்ணங்களும் இணைவதை...வாசிக்கவும்,எழுதவும் மிகவும் பிடிக்கும்(சில தொடர்பதிவுகள் தவிர).


எனவே, இந்த விருதுகள் எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல.சாமி/ஆன்மீகம் மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்த தொடர்பதிவுகளை ஆரம்பித்த, அதைத் தொடர்ந்த பதிவர்கள் என்று அனைவருடையதுமான விருது இது! (’கலாச்சாரம் ஃபார் டம்மீஸ்’க்கு பிறகு வேறு தொடர்பதிவுகள் காணோமே!) இந்த வருடமும் அதைவிட சிறந்த, ஆக்கப்பூர்வமான, சுவாரசியமான தொடர்பதிவுகளை எழுதுவோம்.
வாக்கெடுப்பில், இரண்டு கட்டங்களிலும் வாக்களித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்து, குறித்த தேதிகளில் நடத்திய பாங்கிற்கு தமிழ்மணம் குழுவினருக்கும், நிர்வாகத்தினருக்கும் பணியாற்றிய நடுவர்களுக்கும், நெகிழ்ச்சியுடன் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வப்போது எழுந்த சந்தேகங்கள், வாக்களிக்க மடல் வராததைகேட்டு செய்த தொந்திரவுகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.:-)
பரிசுகள் வழங்கும் நூல் உலகம் மற்றும் அலோகாவிற்கு நன்றி.
Friday, June 04, 2010
'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு
திரும்ப திரும்ப்ச் சொன்னதையே சொன்னாலும் இதுதான் உண்மை.
என்னை நம்புபவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. நம்பாதவர்களுக்கு இன்னும் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் போதாது!
எனினும்...சில வார்த்தைகள்!
பதிவுலகில் ஒரு நடைமுறை ஹிட் ஆனால் அதை பின்பற்ற சிலர் விரும்புவது இயல்பு. உதாரணத்திற்கு, சென்ற வருடம் பரிசல்காரனின் பத்து கேள்விகளைத் தொடர்ந்து பதிவுலகமே பத்து கேள்விகளால் நிரம்பியது. அதைத்தொடர்ந்து நானும் ஆயாவிடம் பத்து கேள்விகள் இடுகையை இட்டேன். இதற்கு நான் பரிசல்காரனிடம் பர்மிஷன் கேட்கவில்லை.
அடுத்து, ஒரு வாசகர் கடிதத்தை நர்சிமும் வெட்டிபயலும் இடுகிறார்கள். அதைத் தொடர்ந்து தன்னைத் தானே பகடி செய்து, அதையும்
நர்சிமிடம் கேட்டபிறகு அவரது ஒப்புதலுடனே தீபா இடுகிறார். அப்படி ஒப்புதல் இல்லாவிட்டால் முன்பே தெரிவித்திருக்கலாம். அதைத் தொடர்ந்து கண்டன பதிவுகள்,சர்ச்சைகள் வரத் தொடங்குகின்றன. தீபாவிற்கு ஆதரவாக கமெண்ட்கள் இடுகிறேன். பிரச்சினை ஓய்ந்ததும் முகில் என்னை கிண்டல் செய்து அனுப்பிய வாசகர் கடிதத்தை இடுகிறேன். அதை அனைவரும் ரசித்தாலும் ஒரு சில பதிவர்கள் அதை நீக்குமாறு கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து என்னை நச்சரிக்கிறார்கள்.
என்னைப் பற்றிய சுய கிண்டலில் நான் யாரையும் காயப்படுத்தவில்லை, சொல்லப்போனால் என்னை நானே டேமேஜ் செய்து கொண்டதுதான் அதிகம். இதில் நீக்க ஒன்றுமில்லை என்று சொன்னாலும் வடகரைவேலன் போன்றவர்கள் வழியாக பிற பெண் பதிவர்கள் மூலம் எனக்கு தொடர் நச்சரிப்பு வருகிறது. இந்த இடத்தில்தான் ‘இந்த போஸ்ட்க்கு என்ன இவ்ளோ முக்கியத்துவம்' என்று வியப்பும் எரிச்சலும் மேலிடுகிறது. அதனாலேயே அதை இன்றுவரை நீக்கவில்லை. கவனிக்கவும், இங்கு தீபாவின் பிரச்சினை முடிந்தவுடன், தீபா மற்றும் நர்சிம் சம்பந்தபட்ட அனைத்து இடுகைகளும் நீக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் என்னையும் ராப்பையும் வைத்து அதிஷா எழுதிய ”அடிச்சுக்கிட்டு சாவுங்கடி” இடுகை இன்னமும் இருக்கிறது. அந்த இடுகையை விட,என்னை நானே கிண்டல் செய்துகொள்வதைத்தான் நடுநிலைவாதிகளால் தாங்க முடியவில்லை போல!
தற்போது, சாட்டில் வந்து மயில் ஒரு லொள்ளு சபா டைப்பிலான இடுகையின் சுட்டியைக் கொடுக்கிறார். சம்பந்தபட்டவரிடம் ஒப்புதல் பெற்றதாக கூறுகிறார். வாசகர் கடிதம் கொண்டு வந்த வினையை நினைத்து இதற்கு உளவு வேலை பார்க்க வந்துவிடுவார்களோ என்று முன்னெச்சரிக்கையாக அதைச் சொல்லியே இடுகையை ட்விட்டரில் பகிர்கிறேன். 'இப்படி இல்லை' என்று சொன்னால் 'அப்போ அப்படித்தான்' என்று எடுத்துக்கொள்பவர்களை நான் என்ன செய்ய முடியும்? நானே எழுதியதாக கதை கட்டுவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நானே எழுதினால் அதை எனது பதிவில் போட்டுக் கொள்ளும் தைரியம் எனக்குண்டு.
கடந்த வருட சீரியஸ் சர்ச்சையை பகடி செய்யும் விதமாகவும், மணிகண்டனுக்கு பதிலாகவும் சில கமெண்ட்கள் இடுகிறேன்.
நான் மட்டுமல்ல, என்னோடு பல பதிவர்கள் இடுகிறார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும் . நான் எந்த குழுமத்திலோ எந்த பிரபல நட்பு வட்டாரத்திலோ இல்லை. ஆனால், நான் இட்ட கமெண்ட்கள்தான் பிரச்சினையாக இருக்கிறது என்பது அவ்விடுகையின் சில கமெண்ட்கள் மூலமாக தெரிய வருகிறது
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒரு வருடமாக நான் சீண்டி வருகிறேனென்று சொல்லப்படுகிறது. எங்கே என்னவென்று இப்போது வரை எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை.
ஆனால், நர்சிம் தொடர்ந்து என்னை சீண்டியதை அவரது இடுகைகளிலிருந்து சொல்ல முடியும். உதா. சென்ற வருடம், ஐ லவ் யூ சென்னை என்று இடுகையிட்டததைத் தொடர்ந்து அய்யனார் எழுத பலரும் சென்னை குறித்து அவரவர் அனுபவங்களை எழுத தொடங்குகிறார்கள். பதிவுலகில் எனக்குப் பிடித்த அம்சமே இதுதான். கதைகள்,கவிதைகளை விட அனுபவங்களை அவரவர் பகிர்வுகளில் வாசிப்பதே வாழ்க்கையை
இன்னும் நெருக்கமாக காட்டுகிறது. எனது அனுபவங்கள், பார்வையை மட்டும் இல்லாமல் சக ஜீவனின் அனுபவங்களையும் அவர்களது எண்ணங்களையும் அறியக் கிடைப்பது வேறு எங்கே என்று கூறுங்கள்? அதில் குசும்பன் அவருக்கே உரிய கலாய்த்தலுடன் சென்னை
பிடிக்காமல் போனதை எழுதுகிறார். அதில் நர்சிம் , “இன்னும் கூட குத்தலாம் தலைவா” என்று கமெண்ட் இடுகிறார். அதைத் தொடர்ந்து அவரும் சென்னை குறித்து இடுகையிடுகிறார். இது என்னை சீண்டுவதற்கு என்று நான் சொல்லலாமா? எனக்கே அபத்தமாக இருக்கிறது. இதை ஒரு நிகழ்ச்சியாக சொல்ல வரவில்லை, இதையும் சீண்டல் என்று நான் கொள்ளலாமா என்றுதான் கேட்கிறேன்.
ஆனால், நிஜமான சீண்டல் ஒன்று இருக்கிறது. பல பெண் பதிவர்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால், நான் இதை பிரச்சினையாக்க விரும்பியதில்லை. பிரச்சினையாக்குமளவுக்கு எனக்கோ, மற்ற பெண் பதிவர்களுக்கோ இங்கே பாதுகாப்பில்லை என்பதும் உண்மையே. பதிவுலகில் பெண்கள் குறித்து புதுகை எழுதிய இடுகையின் மூலம் நர்சிம்மின் இடுகையை வாசிக்க நேர்ந்தது. விதூஷை அசோக் 'எளிய அழகுடன் இருக்கிறீர்கள்' என்று சொன்னதைத் தொடர்ந்து ‘குழந்தைகள் அப்டேட் முதல் பெண்ணிய கருத்துகள் முழுவதும் பதியப்படும் உலகில் இதை யாரும் கேட்கவில்லை, பெண்ணியம் என்னவென்று புரியவில்லை' என்கிற ரீதியில் நர்சிம் எழுதினார். இப்போது சொல்லுங்கள்,இதை என்னவென்று சொல்வீர்கள்?
இதைக் குறித்து நான் கண்டன இடுகை இட்டிருக்கலாமல்லவா
அடுத்து, மயிலின் இடுகையை தொடர்ந்து பூக்காரி வெளிவருகிறது. முற்றிலும் என்னை குறி வைத்து எழுதப்பட்டு ! பூக்காரியை வாசித்தபோது கீழவெண்மணி பற்றிய மைதிலி சிவராமனின் கட்டுரைகள் வாசித்தது நினைவுக்கு வந்தது. பிறப்பு குறித்தும் வளர்ப்பு குறித்து எழுதியிருந்தது அதனோடு முற்றிலும் தொடர்புடையது. நான், எனது முகம், நிறம், வளர்ப்பு, குழந்தை, தொழில் என்று என்னை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய அந்த இடுகை புனைவு என்ற பெயரில் வன்மத்துடன் தயாரிக்கப் பட்டிருந்தது.
ஆத்திரம், அவமானம், அழுகை, மன உளைச்சல், கோபம், கையாலாகத்தனம் எல்லாமும் என்னை அரிக்க ஆரம்பித்தன. ஆனாலும் இதை எதிர்கொள்ள வேண்டுமென்ற உறுதியும் இருந்தது. இல்லையென்றால் பதிவுலகை விட்டு இரக்கமின்றி துரத்தப்பட்டிருப்பேன். உடனடியாக எதிர்வினை செய்ய வேண்டாம் ,நிதானமாக இருப்போமென்று எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் பைத்தியக்காரன் என்னைத் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்து அவரது இடுகையை அம்பலப்படுத்துவோம் என்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வினவு தொடர்பு கொள்கிறார். மேலே சொன்ன அனைத்தையும் அவர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். தோழர்கள் என்னை ஆறுதல்படுத்தி நம்பிக்கை அளிக்கிறார்கள். முக்கியமாக இதை விடக்கூடாது என்று சொன்னது எனக்கு பெறும் ஆறுதலாக இருந்தது.
விதூஷை சொன்னதற்கு அவ்வளவு கொதித்தவர் இப்படி ஒரு பெண்ணை கேவலப்படுத்துவதற்காக எழுதலாமா, அதிலும் கமெண்ட்களில் கார்க்கியின் வக்கிரமும் அதை கண்டிக்காமல் அனுமதிக்கிறாரே.. அவர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. என்னையும், என் மகளையும் பதிவுலகில் பலரும் அன்போடு பார்த்த அந்த சித்திரத்தை, சித்திரக்கூடத்தை அடியோடு தீ வைத்து எரிப்பதில் எத்தனை இன்பம்? இப்படியெல்லாம் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? என்ன செய்வது, இருக்கிறார்கள்.
முன்பு நர்சிம் கொதித்தது விதூஷ் அவரது சாதி என்பதாலா?( ஏனெனில் வித்யா அய்யர் என்ற பெயரில் ஓட்டுகள் போடுபவர் அவர். ) ஆர்குட்டில் நான் முன்பு வன்னிய சாதி ஃபோரமில் இருந்ததற்கு சாதி உணர்வோ, இல்லை வெறியோ காரணம் இல்லை. அது மிகவும் தற்செயலாய் நடந்த நிகழ்வு. ஏன், புதிதாக வரும் ஹீரோயின்களுக்கான ஃபோரம்களிலும்தான் நான் இருக்கிறேன். சுயசாதி பெருமை இருந்தால் எனது பெயரில் படையாச்சி என்று சேர்த்துக் கொண்டு ஓட்டு போடவில்லை. அல்லது ஒரு சில பதிவர்கள் தங்கள் இடுகைகளில் ‘காமராஜ்' புகழ் மட்டுமே பாடுவது போல ராமதாஸின் புகழை நான் பாடவில்லை. வினவின் பாமக மீதான விமரிசனக் கட்டுரையை ஆதரித்து ஒட்டளித்திருக்கிறேன்.அவர்களது கருத்தோடு உடன்படுகிறேன். என் மீது நடத்தப்பட்ட வன்முறையை விட எனது ஃபோரம் நடவடிக்கைதான் சுகுணா திவாகருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இந்த புலனாய்வு நடவடிக்கைகளைத் தாண்டி நான் எப்போதும் வெளிப்படையானவளே.
ஞாயிறு மதியம் வரை தீபா நீங்கலாக எந்த பெண் பதிவரும் இதற்கு கண்டனத்தை எழுப்பவில்லை. ஏன், நர்சிமின் இடுகையில் ஒரு கண்டன குரல்கூட அவர்களால் பதிவு செய்யப்படவில்லை. அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. எது அவர்களை தடுத்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிர். எனக்கு தேவையாயிருந்தது அனுதாபமல்ல, கோபமே! அந்தக் கோபம் சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே என்பதால் நானும் தனிமைப் பட்டிருந்தேன்.
மாதவராஜும்,காமராஜூம் ஞாயிறு இடுகையிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கார்க்கி பகிரங்கமாக இடுகையிட்ட மயிலை நாங்கள் குறிப்பிடவில்லை என்று சில இடங்களில் எனது பெயரையும் வெளிப்படுத்தியே கமெண்ட்கள் இடுகிறார். ஆமாம், கார்க்கி, நீங்கள் ஏன் என்னை குதறுகிறீர்கள்? உங்களுக்கு ஏன் இத்தனை வன்மம? என்னை விடுங்கள், எனது மகளைக்கூட விட்டு வைக்காத உங்களது 'மனிதநேயம்' என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இது சூடு பிடிப்பதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த ரவி நெகிழ்ச்சியாக ஒரு இடுகையிடுகிறார். ரவி, நீங்கள் எங்கள் குடும்ப நண்பர் என்ற விதத்தில் உதவ முற்படுகிறீர்கள், புரிகிறது. ஆனால் இதை சனிக்கிழமையோ அல்லது எல்லாருக்கும் முதலிலோ அல்லவா இட்டிருக்க வேண்டும், நீங்கள் என்னை சகோதரி என்றுக் குறிப்பிடும் பட்சத்தில். சரியான அர்த்தத்தில் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காயப்படுத்துவதற்காக கேட்கவில்லை, இப்போது கேட்கவில்லை என்றால் பின் எப்போதுமே கேட்க முடியாமல் போய்விடலாம் அல்லவா! நர்சிமின் நட்பு என்ற பயத்தில் பூக்காரியின் அழுகை பலருக்கும் கேட்டிருக்காது என்றே பார்க்கிறேன்.
விக்னேஷ்வரி சமாதான உடன்படிக்கையை கொண்டு வருகிறார். அது எப்படி விக்னேஷ்வரி, இடுகையை ஒரு பெண்ணை கேவலப்படுத்தியத்தை கண்டிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்கிறீர்கள்? இடுகையை எடுக்கச் சொல்லி சகோதரியாக இறைஞ்சியதாக கோபப்பட்டதாக சொல்லியிருந்தீர்கள். ஏன், சகோதரியாக இல்லாமலிருந்தால் இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா உங்கள் சகோதரர்கள்? மன்னியுங்கள், விக்னேஷ்வரி! என்னை பொதுவெளியில் இழிவு செய்தவர்களிடமே தலைவிரி கோலமாக அழுதபடி உயிர்ப்பிச்சை கேட்கும் அடிமை நானில்லை.
நர்சிம் இடுகையை தூக்கிவிடுகிறார். கவனிக்கவும், செய்த தவறுக்கு கொஞ்சமும் வருந்தவில்லை. மன்னிப்பு கேட்பதென்றால், முகிலுக்கு பின்னூட்டமிட்டதைப் போல உள்ளத்தை வருத்தியதென்றால் அப்போதே அல்லவா மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டும்.ஆனால், எனக்கு நன்றி சொல்லி அல்லவா அவருக்கு அனுதாபத்தை தேடுகிறார்?
வினவு திங்களன்று இடுகையை எனக்கு அனுப்பிவிட்டு சம்மதத்தை கேட்கிறார். பழைய இடுகைகளிலிருந்தும், அவரை தொடர்பு கொண்ட பிற பதிவர்கள் சொன்ன தகவல்களை வைத்தும் எழுதியிருப்பதாக கூறுகிறார். வன்புணர்ச்சி என்ற வார்த்தை ஒன்றும் “பூக்காரி”யை விட
என்னை பாதித்துவிடவில்லை. தாராளமாக இடுகையிடுங்கள் என்று சம்மதிக்கிறேன். பதிவுலகில் பூக்காரியின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் நாறடித்த பிறகு அதை கண்டிப்பவர்களின் கையை கட்டிப்போட நான் விரும்பவில்லை. சொல்லப்போனால் எனது உணர்ச்சிகளின் குமுறலாய் அதைப் பார்க்கிறேன். தனிமையில் சலித்திருந்த என்னை அந்த இடுகை தோளில் கை போட்டு பார்க்கலாம் ஒரு கை என்றது.
தொடர்ந்து தோழர்கள் நர்சிமின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்துகிறார்கள். இமேஜ் நாசமாவதை தாங்க முடியாமல் புனைவு சிலரை காயப்படுத்தியதாகவும் என்னிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் இடுகிறார். ஆனால் அதாவது என்னை கேவலபடுத்தியதற்கும், பப்புவின் இடுகைகளை ரசித்து மறுமொழி இட்டவர்களை கேவலப்படுத்தி இருந்ததையும், மற்ற பெண்பதிவர்களை சில்வண்டுகள் என்றும் “அவளுகளுக்கு இருக்கு” என்ற அச்சுறுத்தலையும் விட்டு விட்டார். பூக்காரி என்ற உண்மையான 'புனைவினால்' நைந்திருந்த எனக்கு அந்த மன்னிப்பு ஒரு பச்சையான புனைவு என்று புரிந்து கொள்வதற்கு மெனக்கெடவில்லை.
இடையில் ரவியும் முகிலும் தொடர்பு கொள்கிறார்கள். கவிதாவும் ஏதோ உடன்படிக்கை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதில் எதுவும் எனது consensus இல்லாமலே நடைபெறுகிறது. ஏனெனில் எனக்கு வேண்டியது தனிப்பட்ட தீர்வுகள் அல்ல.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள். உதாரணங்கள் சொல்ல விரும்பவில்லை. இதற்கு சில வருடங்களுக்கு முன்பு கூட உதாரணம் காட்டலாம். கடைசி பலியாக என்னோடு இது முடியட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகிலிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.
அதையும் மீறி, எனக்கு தெரியாமலே
நேற்று முகில் எழுதிய கடிதத்தை ரவி அவரது பதிவில் வெளியிட்டிருக்கிறார். அலுவலக மீட்டிங் மற்றும் தமிழ்மணம் தொங்கிய நிலையில் உடனடியாக அதைக்குறித்து அறிய முடியாதிருந்தது. அதைக் குறித்து சில விளக்கங்கள்:
பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.
முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?
இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!
அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.
ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?
சிரித்துவிட்டு கடந்து விடக்கூடிய கமெண்ட்களுக்கு வஞ்சம் தீர்க்க பத்தி பத்தியாக வார்த்தைகள் கொட்டி புனைவு எழுதமுடியும் போது மன்னிப்பு என்பது குற்றத்தை உணராமல் ஒற்றை வரியில் - இதற்கு மேல் சொல்லாமலிருந்தால் இமேஜ் போய் விடுமோவென்ற எண்ணத்தில் - ஏன் சொல்லபடுகிறது? சூழ்நிலை எனக்கு ஆதரவாக திருப்பப்படும் நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரும் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் முட்டாளில்லை.
'அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே' என்பது உங்களின் வாதமெனில், பிரச்சினையை எப்படியாவது முடித்து வைக்கவேண்டுமென்பதுதான் உங்கள் பிரச்சினையாக இருந்தால், தயவு செய்து தள்ளிப் போங்கள்!
இந்த இடுகை உங்களுக்கானதில்லை.
எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.
அல்லது உங்களது தமிழ்பட செண்ட்டிமென்ட்களுக்காக அல்ல. நானும் அழுது புரண்டு காப்பாற்றக் கோரும் தமிழ் சினிமா நாயகியும் அல்ல.
இதில் நான் யார் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று நானல்லவா தீர்மானிக்க வேண்டும்?!
''அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே...
இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்
இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.
இது குறித்து சாதி வெறியையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் நன்றி!
இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன்.
நர்சிம் மற்றும் கார்க்கி செய்த குற்றத்தை, தவறை என்னால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.
எனக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கும் என்னுடன் இருந்த அத்தனை நண்பர்களுக்கும், மடலிட்டு, ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி!
இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!
Monday, January 18, 2010
சைன் Q/காஸ் Q = ?
எழுதியபின் ஒவ்வொருவரையும் வாசிக்கச் சொன்னார் பாரி அங்கிள்.
எல்லோரும் காந்தி நேரு விவேகானந்தர் ரஜினி கமல் கவுண்டமணி செந்தில் அன்னை தெரசா எல்கேஜி டீச்சர் சச்சின் என்று எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரும் எழுந்து வாசிக்கும்போது எனக்கு 'வட போச்சே' என்பது போல இருந்தது. :-) என் முறை வந்தபோது லிஸ்ட்டில் இருந்த பெயர்களை எழுந்து நானும் வாசித்தேன். வீரப்பனும், மோனிகா செலஸும் வனஜா டீச்சர் மற்றும் பெரிம்மா.
பெரிம்மாவை ஏன் பிடிக்கும்? என்று அங்கிள் கேட்டபோது ஏனென்று சரியாகக் காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.
எனது தம்பியும் எழுந்து வாசித்தான். அவன் முடித்தபோது எனக்கு மிகுந்த சந்தோஷமாக, பிரமிப்பாக, பெருமையாக இருந்தது. ஏனெனில், அவனுக்கு என்னை பிடிக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. அப்படியே பிடித்தாலும் இப்படி முதல் ஐந்திற்குள் நான் இருப்பேனென்று கண்டிப்பாக நம்பியிருக்கவில்லை. எப்போதும் சண்டைதான். போட்டிதான். அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன். இப்படி எத்தனையோ!!
(பாரி அங்கிள் அவனிடமும் ஏன் பிடிக்குமென்று சொல்ல சொல்வாரென்று பார்த்தேன், ஆனால் கேட்கவில்லை!..ஹிஹி..)
தம்பியை நான் நேசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.
அந்த கோடை முகாமில் ஏற்பட்ட அதே பிரமிப்பு, மகிழ்ச்சி எல்லாமும் நேற்றும் ஏற்பட்டது - தீபா அழைத்துச் சொன்னபோது.
முதல் கட்ட வாக்கெடுப்பின்போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போதும் வாக்களித்த எனதன்பு பதிவர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் மிகுந்த நன்றிகள்.
இந்த பதக்கத்தை பதிவுலகத்திற்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.தமிழ்மணத்திற்கும், என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்! தொலைபேசியிலும், மடலிலும் பின்னூட்டங்களிலும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!
Sunday, July 27, 2008
நன்றிகளுடன்..
Thursday, July 24, 2008
a ப்பார் ஆப்பிள்
இதோ நான் அடிக்கடி செல்லும் இணையப்பக்கங்கள்!!
alibaba - எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் தேடலாம், நுகர்வோர்களுக்கானது!!
babycenter - குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு இன்ன பிற!!
CHETANA - என் SIL- க்கு வேலை தேடும் முயற்சியில்!
esnips - இந்த புத்தகமோ,பாடலோ, இங்கு கிடைக்கும், யராவது வலையேற்றியிருந்தால்!!
google - அறிமுகம் தேவையில்லை
ibnlive - செய்திகளுக்காக
joelonsoftware - இது சாப்ட்வேர் பற்றி!!
kiddiesdayout - சென்னையில் குழந்தைகளுக்கான ஆக்டிவிடிஸ், எது எங்கு இருக்கிறதென அறிய!!
media-convert - ஒரு கோப்பிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்ற! வீடியோவிலிருந்து, எம்பி3 க்கு மாற்ற!
mouthshut - எந்த பொருளைப் பற்றிய விமர்சங்களுக்கும்
orkut- அறிமுகம் தேவையில்லை
qaiindia- இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக
raaga - பாடல்களுக்கு
softwarecertifications - இதுவும் சாப்ட்வேர் டெஸ்டிங் சம்பந்தமாக
thatstamil - லோக்கல் செய்திகளுக்காக
vanillaplace - வாரயிறுதியில் என்ன நடக்கிறது என அறிந்துக் கொள்ள
womenone - இது டிப்ஸ், பேஷன்,சமையல் இன்னபிற!!
நான் அழைக்க விரும்பும் மூவர் :
கயல்விழி முத்துலெட்சுமி
காட்டாறு
மங்களூர் சிவா
வழிநெறி:
தலைப்பு :: ‘ஏ ஃபார் ஆப்பிள்
அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க
உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம்,
என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.
Friday, July 18, 2008
பதிவுலகத்திற்கு...
”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.
அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!
நம்ம ஓமப்பொடியார் சுதர்சனின் வலைப்பூவின் வழியாக நான் வந்து இறங்கிய இடம் தமிழ்மணம், தேன்கூடு!. ஃப்ரீயா இருக்கும்போது படிக்கலாம்னு புக்மார்க்கிட்டு, அப்பப்ப படிச்சிகிட்டிருந்தது போய், பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!
என்னோட சிறு வயது நினைவுகள்,நிகழ்வுகளை பதிந்து வைத்துக்கொள்வதற்காக ஆரம்பித்த வலைபதிவு இப்போது என் மகள் பப்புவின் குறும்புகளையும், மழலை பேச்சுகளையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் படம் பிடிக்கிறது!வளர்ந்தப்பின், அவள் ஒரு நாள் இதை படிக்கையில், அவள் எவ்வள்வு சுவாரசியமானவளாயிருந்திருக்கிறாளென்பதை
அவளுக்கு உணர்த்தக்கூடும், இந்த வலைப்பூ! (போதுமா முன்கதை சுருக்கம்!!)
ம்ம்..திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! எனக்கு அது ஒரு த்ரில்!!
அநேகமா, நிறைய பேரு அப்படிதான்னு நினைக்கிறேன்...
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!
பொறுமை காத்து ஆதரவு அளிக்கவும்!!
