Monday, March 15, 2010

யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!

எங்கள் அலுவலகத்திற்கு பின்னாலிருந்து பார்த்தால் சைதாப்பேட்டை பாலம் தெரியும். பாலத்தின் கீழ் அழுக்கேறிய நீர் ஓடும் ஆறு - அது கூவம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அதுதான் அடையாறு. அந்த தண்ணீரிலேயும் கால்களை அலைந்தும் குதித்தும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். "அட, இவங்களுக்கெல்லாம் ஒண்ணும் வராதா? இந்த அழுக்கு தண்ணிலேயே குளிக்கறாங்களே?" என்று நினைத்தபடி பார்வையை கொஞ்சம் இடதுபுறம் திருப்பினால், கற்களை போட்டுக்கொண்டு துணிகளை துவைப்பதைக் காணலாம். வலது பக்கம் பார்த்தால் குப்பை கூளங்களை கொட்டியதால் உண்டான மேடுகளும், அருகிலேயே பன்றிக்குட்டிகளும், ஓரமாக நிற்கும் எருமைகளையும் பார்க்கலாம். இதற்கு நடுவில் குடிசை வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளும், கொடியில் காய வைத்த துணிகள் காற்றிலாடுவதும் மக்கள் அங்கே வசிக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.முதன் முதலில், அந்த ஆற்றின் கரையில் கம்பீரமாக நிற்கும் அந்த கட்டிடத்தின் ஆளுயர ஜன்னல் அருகினில் நின்றபடி து வாகனங்கள் விரைந்து செல்லும் பாலத்தையும், அதன் தூண்களையும் நெளிந்து செல்லும் அழுக்கு நீரையும் பார்த்துக்கொண்டு நின்றபோது, நண்பர் சொன்னார் “இங்கேருந்து பார்த்த கடல் தெரியும்”. சற்றே நிமிர்ந்து விண்ணை முட்டும் கட்டிடங்களையும், டெலிபோன் டவர்களையும் தாண்டி நீல நிறத்தில் கடலும், சில கப்பல்களும் கண்களுக்குத் தென்பட்டன. உயரமான அந்த கட்டிடத்தில் கண்களை கொள்ளைக் கொள்ளும் கண்ணாடி ஜன்னலின் அருகில் நின்றுக் கொண்டு எங்களுக்குக் நேர்கீழே அடையாறின் அழுக்குநீரில் விளையாடும் அந்த பசங்களை, அதின் நின்றுக்கொண்டு துணி துவைப்பவர்களை, குளிப்பவர்களை, இயற்கை உபாதைக்கு ஒதுங்குபவர்களை கண்டுக் கொள்ளாதவர்கள் போல தொலைதூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக்கொண்டு நின்றோம். சமயங்களில் மேலே கடந்து செல்லும் விமானங்களையும் பெருமிதத்தோடு பார்த்தபடி .

இந்தக் கட்டிடத்திற்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த மாநாகராட்சி பள்ளிக் கட்டிடம் வந்தது. அதே அடையாறு அல்லது கூவம் ஆற்றங்கரையில். முன்புறம் விளையாட்டு மைதானமும் இரு மரங்களையும் கொண்ட கட்டிடங்கள். சென்ற வாரத்தில் ஒரு நாள் மைதானத்திற்கு முன்புறம் இருக்கும் சாலையில் மெட்ரோ பாலம் வரப்போவதாகவும், அதற்கான தூண்களில் ஒன்று இந்த பள்ளிக்கூட மைதானத்தில் கட்டப்படப் போவதாகவும் இடம் குறித்துவிட்டு சென்றார்கள். அடுத்த நாளே அந்த காம்பவுண்டும், சாலையின் முடிவில் இருந்த மரமும் வெட்டி சாய்க்கப்பட்டது. பாலம் முழுவதுமாக கட்டப்படும்போது பள்ளிக்கூடம் இருக்குமா என்பதே சந்தேகம்தான். இப்படி எளிய மக்களை துரத்திவிட்டு யாருக்காக அந்த இடத்தில் பாலம்?


சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை தாண்டி சென்றால் தாடண்டர்நகர் என்று ஒரு இடத்தை பார்த்திருக்கலாம்.விடியற்காலையில் அந்த இடத்தைக் கடக்க நேரிட்டால், நடைபாதையிலே பாயையோ அல்லது சாக்கையோ விரித்துத் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்,அடிபம்பில் தண்ணீர் அடிக்க காத்திருக்கும் பெண்கள், அருகிலேயே ஒரு கோயில், ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடுகள், அல்லது சாக்குகளை மேலாக கட்டி அமைக்கப்பட்ட ஒற்றை அறை வீடுகள், மழை வந்தால் சகதியாகி விடும் தெருக்கள் - மெட்ரோ ரயிலும் மேம்பாலமுமாக என்னதான் உள்கட்டுமானத்தை நாம் உயர்த்தினாலும் - இந்த தெருக்களிலோ மக்களிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. வேண்டுமானால், அவர்களை ஏதாவது ஒரு ஏரியின் கரையில் இடம் பெயர வைக்கலாம். இந்த மாற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சி என்ற பெயர் வைத்துக்கொள்ளலாம்.

”அழகும், அசிங்கமும், கம்பீரமும்,ஆபாசமும்,ஆன்மீகமும் பின்னிப் பிணைந்து கிராம்பு மற்றும் ஆர்கிட் மலர்களின் புத்துணர்வூட்டும் நறுமணம் திறந்து கிடக்கும் சக்கடைகளிலிருந்து கிளம்பும் துர்நாற்றத்தை வெல்லப் போராடி கொண்டிருக்கும் நகரம்தான் ஜகார்த்தா” - ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகத்தில் மேற்கண்ட வரிகளை வாசித்தபோது ஜகார்த்தாவுக்குப் பதிலாக சென்னை என்றிருந்தால் கூட பொருந்தி வருவது போல தோன்றியது. ஒரு நாட்டின் உள்கட்டுமானத்தை, மின்உற்பத்தி மையங்கள், நெடுஞ்சாலைகள், கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள், தொலைதொடர்பு வசதிகள் போன்றவற்றை அமைக்கத் தேவையான முதலீடுகளை உலகவங்கி போன்ற பன்னாட்டு நிதிநிறுவனங்கள் மூலம் கடனாகப் பெற - பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில்அரசியல் தலைவர்களை,நாட்டின் அதிபர்களை சம்மதிக்க வைப்பதே பொருளாதார அடியாட்களின் வேலை. உண்மையில், தனிப்பட்ட முறையில் இந்த அரசியல் வாதிகளை பணக்காரர்காளாக்குவதும்,அதே நேரம் அந்நாட்டை மீளமுடியாத பெரும் கடன்சுமையால் அடிமையாக்குவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் வேலையாளாக இருந்த ஜான் பெர்க்கின்ஸன் எழுதிய இப்புத்தகம் - அமெரிக்கா தனது புதிய காலனியாக்கத்தை - வளர துடிக்கும் நாடுகளில் தனது ஆக்டோபஸ் கைகளால் இறுக்குகிறது என்பதைப் பற்றி தெளிவாக பேசுகிறது. இந்தப் புத்தகத்தை படித்தபோது என் மனக்கண் முன், ஹோட்டல் மாரியட்-ல் கிறிஸ்மஸ் கேக் செய்ய பாதாம் பருப்புகளையும் பழங்களையும் கொட்டி கலக்கியபடி போஸ் தரும் பன்னாட்டு தூதரக அதிகாரிகளும், சமூக சேவை செய்ய வரும் பல அயல்நாட்டு முகங்களும், புதிய ஒப்பந்தங்களை வேலைகளை அவுட்சோர்ஸ் செய்ய கையில் அக்வாஃபினாவுடனும் லேப்டாப் பையுடனும் வளையவரும் முகங்களுமே - வந்து போனது. அந்த பிரதிநிதிகள்/தூதரக அதிகாரிகள் மட்டுமே தங்க கட்டப்பட்ட வீடுகள், ரெசார்ட்கள், அவர்கள் பிள்ளைகள் மட்டுமே படிப்பதற்கான பள்ளிகள், அவர்கள் வலம்வர வழங்கப்படும் சொகுசு கார்கள் - எல்லாம் வந்து நின்றது கண்முன்னால் டிவி ஹைலைட் போல.சில இடங்களில் ப.சிதம்பரத்தின் முகம் கூட வந்து நிற்கிறது.


முதலில் எந்த நாட்டையும் கடனாளியாக்குவது, அதன்பின் அதன் இயற்கை வளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது - காடுகள், எண்ணெய் வளங்கள் - அதன்மூலம் வரும் வருவாய் மூலம் கடனை வட்டியுடன் அடைப்பது என்று அதிபர்களை நம்பவைப்பது - உண்மையில் இதுதான் திட்டமென்று கூறப்பட்டாலும் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்துவதும் அடிமைப்படுத்துவதுமே முழுமையான நோக்கம். அதற்குள் கடனை திருப்பிக்கொடுப்பது என்பதே சாத்தியமில்லாத ஒன்றாக ஆகியிருக்கும். அதற்கு பதிலாக அந்நாட்டின் கனிம வளங்களையும் நீராதாரங்களையும் எண்ணெய் வளங்களையும் உபயோகித்துக்கொள்ள ஒப்பந்தங்கள் அடுத்த கட்டமாக கையெழுத்தாகும். ஆனால், கடன் என்பது இருந்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா தனது கரத்தை வலிமையாக்கி நாட்டை உறிஞ்சியபின் அந்நாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்தநாட்டுக்கு - இப்படித்தான் ஜகார்த்தா, ஈக்வடார், கொலம்பியா, பனாமா...இப்படி அந்த தலைவர்களை மெல்ல மெல்ல பொருளாதார
வளர்ச்சி சி என்ற பெயரில் சூழ்ச்சி வலையில் விழ வைப்பதுதான் இந்த பொருளாதார அடியாள்களின் - மெய்ன் போன்ற நிறுவனங்களின் நோக்கம். அதன் அதிபர்கள் இந்த பொருளாதார அடியாட்களுக்கு மசிய வில்லையெனில் அடுத்த கட்டமாக “குள்ள நரிகள்” வருவார்கள். அவர்கள், இவர்களைவிட பயங்கரமானவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். நாட்டின் அரசியல்வாதிகள்/ அதிபர்கள் மசியவில்லையெனில் எதிர்பாராத விமான விபத்துகளால் மரணமடைவார்கள்.


இந்த பெர்க்கின்ஸ் அதை திறம்பட செய்பவர்.அதற்காக அவருக்கு பல வெகுமதிகள், பரிசுகள் என்ற பெயரில் லஞ்சங்கள். தன் வாழ்க்கை நிலை உயர வேண்டுமென்று அவரதுசெய்துக்கொள்ளும் சமரசங்கள் - இரவு பகலாக புத்தகங்களை கரைததுக்குடித்து தயாரித்து வழங்கும் econometrics திட்டங்கள் - கடைசியில் புலி வாலை பிடித்தது போல அவரால் வெளி வராமலே போவது என்று எல்லாமே இந்த புத்தகம் கூறுகிறது. ஈக்வடார் முதல் சவூதி அரேபியா வரை, பொருளாதார முன்னேற்றத்தில் அமெரிக்காவுக்கு அடிமையாகி போன நாடுகளின் நிலைகள், அரச குடும்பங்களுக்கும் அமெரிக்க அதிபர் புஷ் குடும்பத்தினருக்கும் இருக்கும் உறவுகள், இந்த குடும்பங்கள் வளர்த்தெடுத்த தீவிரவாத கும்பல்கள், அவர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு போன்ற எண்ணற்ற விஷயங்களை - தீவிரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லிக்கொண்டு போரிடும் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை தரிசிக்க முடிகிறது.


இந்தோனேஷிய மாணவி, பாண்டுங் அரசியல்வாதி, க்ளாடின், பொம்மலாட்டம் மூலமாக அரசியல் உணர்வூட்டும் பொம்மல்லாட்டக்காரர், ஜகார்த்தா,கொலம்பியா நாடுகளின் மேல் தட்டு வாழ்க்கைமுறை. நாற்றமெடுக்கும் ஆறுகள், குடிசைப் பகுதிகள், எண்ணெயை கசிய விடும் பேரல்கள் - இவையெல்லாம் வாசிக்கும்போது இந்தோனேஷியாவோ, கொலம்பியாவோ பனாமாவோ கண்கள் முன் நிற்காமல், இந்தியாவும், கூடங்குளமும், போபாலுமே, மஹாராஷ்ட்ராவுமே நினைவை ஆக்கிரமிக்கின்றன. எப்படி நம் வாழ்க்கையில் சப்-வேயும், மெ டொனால்ட்ஸ் பர்கரும், கேஃப்சி சிக்கன் பக்கெட்டும், மீட்டிங்குகளில் நம்முன் வைக்கப்படும் அக்வாஃபினா பாட்டில்களும், பிரியாணி வாங்கினால் கோக் இலவசம் என்று காம்போ ஆஃபர் வழங்கும் உணவகங்களும் இரண்டற கலந்தது நுகர்கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி இருக்கின்றன! நமது தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஆழ்துளை மூலமாக உறிஞ்சி எடுத்து விவசாயிகளை,குடிமக்களை தண்ணீருக்கு அலையவிடும் நமது அரசாங்கம்! அந்த ஆலைக்கழிவுகளை ஆற்றுத்தண்ணீரில் கொட்டி வளங்களை பாழாக்கும் ஆலைகள் - தட்டிக்கேட்ட முடியாமல் - அவ்வாலைகள் மினரல் வாட்டர் பாட்டில்களில் அடைத்து தரும் மினரல் வாட்டரை குடிப்பதுதான் நாகரிகமென்று கருதி வாழும் நாம் - இதை எதிர்த்து கேட்பவர்களை “தீவிரவாதிகள்” என்று முத்திரைக் குத்துவது! ஒரு வேளை, தண்ணீர் அல்லது எண்ணெய் வளம் வற்றினால் அந்நிறுவனங்களுக்கு இருக்கவே இருக்கிறது - இதர முன்னேற துடிக்கும் நாடுகள்!

உண்மையில், இந்தியா ஒளிர்கிறது என்றும் “யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி” என்று ரெமோ ஃபெர்னாண்டஸூடன் கூவியபோது இதுதான் நம் சாய்ஸ் என்று நினைத்தது எல்லாம் உங்களுக்கும் ரிவைண்ட் ஆகலாம். கலர்பிளஸ், காட்டன்ஸ், பெனிட்டன்-களின் கண்களை மயக்கும் சேல்கள், கண்ணாடிக் கதவுகள் பளபளக்கும் மால்களில் ஷாப்பிங் செய்த குற்றவுணர்வு - அதை தடுக்க உடனேயே ஏதாவதொரு ஹோமுக்கு இன்ஸ்டன்ட் தானம் செய்து மன திருப்தியடைந்துவிடும் நம் வாழ்க்கைமுறை!

எப்போதாவது உலக வங்கிக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் இவ்வளவு - ஒவ்வொரு இந்தியனுக்கும் கடன்பட்டுள்ளான் என்று பேப்பரில் எண்களைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? சிறுவயதில் - (பள்ளிக்கூடம் படிக்கும்போது என்று கொள்க)இந்தக் காசை பிரதமருக்கு ஒவ்வொருத்தரும் அனுப்பி உலகவங்கிக் கடனை தீர்த்துவிட்டால் இந்தியாவின் கடன் தீர்ந்துவிடுமென்றுதன் சின்னப்புள்ளத்தனமாக நினைத்துக்கொள்வதுண்டு. இப்போதுகூட, தண்ணீர் தினம் என்ற சொன்னதும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது பற்றி பேசி செயல்படும் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பிரக்ஞையும் கடமை உணர்ச்சியும் கூட கோடி கோடியாக லாபம் சேர்க்கும் முதலாளிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இருந்தால்...?

சில இடங்களில் பெர்க்கின்ஸ் இடத்தில் நமது ப.சிதம்பரமும், மன்மோகனும் கூட பொருந்தி வருகிறார்கள்.

பெர்க்கின்ஸ் தனது ஆசைகளைத் தீர்த்துக்கொண்டபின்பு மனசாட்சி விழித்திருக்கிறது. நமக்கும், நமது அரசியல்வாதிகளின் மனசாட்சிகளும் விழிப்பது எப்போது?

பெர்கின்ஸ் எழுதிய இன்னொரு நூல், பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் 'அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு'. விலை ரூ. 180/- 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' படித்தவர்கள் அனைவருமே இந்நூலையும் வாசிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் முழு சூழ்ச்சியையும் உணர்ந்துக் கொள்ள இந்த இரு நூல்களும் உதவும்.

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " - ஜான் பெர்க்கின்ஸ். விடியல் வெளியீடு.
இந்த இடத்தில் தமிழில், அழகாக மொழிபெயர்த்த இரா.முருகவேளை குறிப்பிட்டே ஆக வேண்டும். மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வே இன்றி தங்குதடையில்லாமல் முழுவீச்சில் வாசிக்க வைப்பதற்கு இவரது மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். நன்றி முருகவேள்.

உலக தண்ணீர் தினத்துக்கான தொடர்பதிவுக்கு அழைத்த "சிறுமுயற்சி" முத்துலெட்சுமிக்கு நன்றி. நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்


"சிதறல்கள்" தீபா

"சின்னு ரேஸ்ரி" மாதேவி

"அந்தமான் தமிழோசை "க.நா.சாந்தி லட்சுமணன்

52 comments:

பைத்தியக்காரன் said...

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட இடுகை, 'உலகம் தழுவிய' அழுத்தமான இடுகையாகிறது.

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' வாசித்திருக்கிறேன். அந்த நூலை தினமும் நான் கடந்து வரும் கூவம் ஆற்றுடன் ஒப்பிட்டு, வாசிப்பின் அனுபவத்தை கடலளவு கொண்டு சென்றுவிட்டீர்கள்.

'அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு' குறித்த நூல் அறிமுகத்துக்கு நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

புனிதா||Punitha said...

தகவலனைத்தும் புதுமையெனக்கு. பகிர்வுக்கு நன்றிங்க..எங்கள் ஊரில் குடிநீர் இலவசம்..[குறிப்பிட்ட அளவுவரை]..அதனால் என்னவோ சில நேரங்களில் அதன் அருமை தெரிவதில்லை :-)

சின்ன அம்மிணி said...

//சிறுவயதில் - (பள்ளிக்கூடம் படிக்கும்போது என்று கொள்க)இந்தக் காசை பிரதமருக்கு ஒவ்வொருத்தரும் அனுப்பி உலகவங்கிக் கடனை தீர்த்துவிட்டால் இந்தியாவின் கடன் தீர்ந்துவிடுமென்றுதன் சின்னப்புள்ளத்தனமாக நினைத்துக்கொள்வதுண்டு.//

நானும் நினைச்சதுண்டு. அப்பறம் அரசியல்வாதிங்க வாங்கற லஞ்சம் பாத்ததும் எல்லாம் தலைகீழாப்போச்சு. நல்ல விழிப்புணர்வு பதிவு

ஆயில்யன் said...

ஏற்பட்டுள்ள/ஏற்படவுள்ள பிரச்சனைகளுக்கு காரணங்களாக மக்கள் அரசினையும் அரசு மக்களுக்காகத்தான் என்ற பல்லவியினையும் பாடிக்கொண்டிருக்கையில் நாளைய தலைமுறையின் வாழ்க்கை பாதை மிகப்பெரிய ?

:(

பாபு said...

//கண்ணாடிக் கதவுகள் பளபளக்கும் மால்களில் ஷாப்பிங் செய்த குற்றவுணர்வு - அதை தடுக்க உடனேயே ஏதாவதொரு ஹோமுக்கு இன்ஸ்டன்ட் தானம் செய்து மன திருப்தியடைந்துவிடும் நம் வாழ்க்கைமுறை//

athe

லெமூரியன்... said...

அருமையான செய்தி....அதை சொன்ன விதமும் நல்லா இருந்தது....!
மேலும், அந்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொண்டேன் கண்டிப்பாக வாங்க வேண்டும்...!
சில நேரங்கள்ல சிதம்பரம் மன்மோகன் முகம் வந்ததுன்னு சொன்னீங்க....!
அடுத்த சந்ததி படப் போகும் அத்தனை துன்பங்களுக்கும் நமது தலைமுறை கடைசி காலம் நரகமாகிப் போக போவதற்கும்
அந்த இரண்டு கருங்காலிகளும்....அவர்களுக்கு திட்டங்களை தீட்டி கொடுக்கும் மலையாள மேனன்களும் நாயர் கருங்காலிகளும்
முழுதாக பொறுப்பு ஏறபார்கள்...
ஆனால் அவர்கள் சந்ததி மட்டும் சுகமாக ஏதோ ஒரு பணக்கார தேசத்தில் சொகுசாக வாழ்ந்து மடிவார்கள்....
தாமிரபரணி மட்டுமில்லை....ஒரிஸ்ஸாவில் ஒரு ஆரையே ஒரு குளிர்பான நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருக்கிறது....ஆற்று நீரை அங்குள்ள மக்கள் எடுக்க கூடாது...
சத்தியமாக இந்தியாவில் இது நடந்து கொண்டிருக்கிறது....

http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post.ஹ்த்ம்ல்
எப்பவோ இத பத்தி எழுதனும்னு நெனைச்சி எழுதுனது ....நேரம் கிடைத்தால் படிச்சி பாருங்க...!

அப்புறம் முக்கியமான விஷயம் உங்களுக்கு நியாபகம் வந்திருக்கணுமே ....மேற்கு வங்கத்துக்கு ராணுவம் எதுக்கு அனுப்றாங்க சிதம்பரமும் மன்மோகனும்......அங்கிருக்ற அளவில்லாத கனிம வளங்களை அள்ளிகிட்டு போக பன்னாட்டு நிறுவனகளுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க...இந்த தான பிரபுங்க...
ஆனா மக்கள் பாதுகாவலர்களான நக்சலைட்டுகள் விட மாட்டேன்க்ராங்க....அதான் நச்சல்கள பாத நம்ம சிதம்பரத்துக்கு பிரஷர் ஏறுது....!
கம்பியுடர் தட்டி நாம காசு பாத்துட்டு அடிமை வாழ்க்கை வாழலாம்...ஆனா பழங்குடிகளும் விவசாயிகளும் அப்டி கிடையாது....அதனால் உரிமை குரல் கொடுக்குற கடைசி விவசாயி வரைக்கும் நக்ஸ்சழ்ந்க்ரா பேர்ல கொன்னு முடிக்கிறது தான் இப்போ சிதம்பரத்தோட அசைன்மென்ட்...!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு முல்லை.

ஹ்ம்.. அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி இருந்தா நாம் ஏன் இத்தன கஷ்டப்படப்போறோம்..

காமன்வெல்த் கேம்க்காக விம் போட்டு கிளீன் செய்துட்டிருக்க டில்லியில்.. யமுனா பக்கம் மட்டும் வெளிநாட்டுக்காரங்களை போகவிடக்கூடாதுன்னு பெரிய டேஞ்சர் சிக்னல் குடுத்து தடுக்குறாங்களாம்.. அதில் அசுத்தம் கலக்ககூடாதுன்னு தடுக்க சட்டம் மட்டும் போடமுடியாதாம்.

ஆறே இல்லை வெள்ளம் எங்க வரபோது.. கட்டு ஆசியாவில் பெரிய கோயிலைன்னு கட்டி இருக்காங்க.. சப்போர்ட்டா இருந்து அரசியல்வாதியே திறந்தும் வைக்கிறார். ஆத்துப்படுகையில் ஏண்டா கோயில் கட்டறீங்கன்னா கேட்டார்?.. :(

KVR said...

நல்ல புத்தகப்பார்வை. உள்ளார்ந்த, அடித்தட்டு மக்களைக் குறித்தப் பார்வையும் கூட...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மழை பெய்து பெருவெள்ளம் வரும்போதெல்லாம் நான் முதலில் நினைக்கும் மக்கள் இவர்கள்தான்:((

எங்கேயோ போகிறார்கள், இங்கேயே வருகிறார்கள். ஏழைகளுக்கான அரசுகள் எப்போதும் இருக்கும்வரை இவர்களின் க(தை)ரை இதுதான்..!!

அன்புடன் அருணா said...

நல்ல அறிமுகம்!

Uma said...

Unfortunately, we don't seem to be making the right choices for our babies! International என்ற படம் பார்த்தும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருந்தேன். கனமான செய்தியை காட்டமா சொல்லியிருக்கீங்க. புத்தக அறிமுகங்களுக்கு நன்றி.

அம்பிகா said...

\\பைத்தியக்காரன் said...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட இடுகை, 'உலகம் தழுவிய' அழுத்தமான இடுகையாகிறது.\\

உண்மைதான் முல்லை.
நீர்நிலைகளை மாசுபடுத்துவதைக் கூட தடுக்க முடியவில்லை இவர்களால்.

அருமையான பகிர்வு. அழுத்தமான இடுகை.

அறிவன்#11802717200764379909 said...

நல்ல அறிமுகமும் பதிவும்..
வாழ்த்துக்கள்.

Joe said...

அழுத்தமான, ஆழமாக சிந்திக்க வைத்த இடுகை!

தலைப்பை மாற்றி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கோமதி அரசு said...

முல்லை ,நல்ல பதிவு.

//பெர்க்கின்ஸ் தனது ஆசைகளைத் தீர்த்துக் கொண்டபின்பு மனசாட்சி விழித்திருக்கிறது.நம்க்கும்,நம் அரசியல் வாதிகளின் மனசாட்சிகளும் விழிப்பது எப்போது?//

அதை காலம் தான் சொல்லவேண்டும்.
அவர்கள் பொறுப்புடன் நடக்க இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டும்.

அவர்களுக்கு ஓட்டு போடாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அம்மாடி! அருமையான,உபயோகமான பதிவு.

செல்வநாயகி said...

நல்ல பதிவு. நன்றி.

காமராஜ் said...

அன்பின் முல்லை.
எப்படியான பதிவு இது.
இந்த வலைத்தளத்தில் பொருளாதாரஅடியாளின் வாக்குமூலம்
புளங்குவதும் அது நூற்றுக்கணக்கான வாசகர்களைச்சென்றடைவதும் உண்மையில் மிகப்பெரிய காரியம்.
வாழ்த்துக்கள் புத்தகம் பேசுது இதழில் அமெ.பேரரசின் ரகசிய
வரலாறு குறித்த அறிமுகம் பார்த்தேன் படிக்கவில்லை.
இந்த எழுத்து அதைத்தூண்டுகிறது.
'இலைகள் அழுத ஒரு மழை இரவு' கரிசல்கிருஷ்ணசாமி பாடியது- பிரளயன் கவிதை.கேட்டுப்பார்.கேட்டிருந்தால் அது இந்தப்பதிவில் எனக்கு ஒலிக்கிறது.

மணிப்பக்கம் said...

நல்ல அறிமுகம், நன்றி!

Deepa said...

One of your masterpieces Mullai.
Will borrow both the books from you, next time I see you. :)

மாதவராஜ் said...

இரண்டு மூன்று முறை படித்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது உங்களது பார்வைகளையும், அதிலிருக்கும் இருக்கும் விசாலத்தையும் காணும்போது.

ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை, அதுவும் பொருளாதார அடிமையின் வாக்குமூலம் பற்றிய கருத்துக்களை, எவ்வளவு சுவாரசையமாகச் சொல்கிறீர்கள். கூவத்திலிருந்து மிகத் தெளிவாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.

வலைப்பக்க்ங்களை அர்த்தமுள்ளதாக்குகிறீர்கள்.

நன்றி. நன்றி.நன்றி.

வினவு said...

உலக தண்ணீர்தினத்தையொட்டிய இடுகை என்றாலும் உலகை சுரண்டும் அரசியலை பொதுவானவர்களுக்கும் கூட எடுபடும் விதத்தில் எளிமாயக எடுத்துச் சொன்னமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

அமைதிச்சாரல் said...

//சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பிரக்ஞையும் கடமை உணர்ச்சியும் கூட கோடி கோடியாக லாபம் சேர்க்கும் முதலாளிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இருந்தால்...?//

அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்தியா இன்னும் கொஞ்சம் முன்னேறியிருக்கும் இல்லையா!!!... சில விஷயங்கள் எப்போதும் கேள்விக்குறி தொக்கி நிற்பவையாகவே நின்றுவிடுகின்றன.

ஆழமான,அழுத்தமான இடுகை. பாராட்டுக்கள் முல்லை.

குடுகுடுப்பை said...

எனக்குத்தெரிந்து இங்கே தண்ணீரே குடிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு தண்ணீரில் சுவை கலந்து வியாபாரமாக்கிவிட்டார்கள்.

பூங்குழலி said...

அருமையான பதிவு சந்தனமுல்லை .நம் நாடு மீண்டும் ஒரு காலனியாகிக் கொண்டிருப்பதை அறியாமல் இருக்கிறோம் .இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் Nuclear Damage Bill (2009) வெளிநாட்டு நிறுவனங்களை ,இங்கே அவர்கள் நிறுவப் போகும் ஆலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால் அவர்களை அதற்கு நஷ்ட ஈடு தராமல் விலக்கு
அளிக்குமாம் .எந்த ஊரிலும் இல்லாத சட்டம் இது .
நேற்று பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் நிறுவவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது .
ஆனால் ,இதற்கு தீர்வு தான் என்னவென்று தெரியவில்லை ?

துளசி கோபால் said...

சூப்பர் இடுகை.

தலையைக் காமிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கோம். அதான் மொட்டையடிச்சுக்க ஏதுவான போஸ்:(

இந்தியா ஒளிருதாமே! எங்கேன்னு இந்தியாவந்த நாளாத் தேடிக்கிட்டே இருக்கேன்.

இதுலே சிங்காரச் சென்னையின் சிங்காரமும் சேர்த்தி:(

பித்தனின் வாக்கு said...

எப்போதாவது உலக வங்கிக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் இவ்வளவு - ஒவ்வொரு இந்தியனுக்கும் கடன்பட்டுள்ளான் என்று பேப்பரில் எண்களைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? சிறுவயதில் - (பள்ளிக்கூடம் படிக்கும்போது என்று கொள்க)இந்தக்
நல்ல பதிவு, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள். இதன் உடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வெரு கேஸ் சிலிண்டர் வாங்கும் போதும், இதன் மூலமாக அரசாங்கம் நமக்கு 100 ரூபாய் பிச்சை போட்டுள்ளார்கள் எனவும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது எல்லாம் அரசாங்கம் நமக்கு 50 ரூபாய் பிச்சை போட்டுள்ளார்கள் எனவும் எண்ண வேண்டும். இது மறைமுக அரசாங்க இனாம். சைதாப்பேட்டையில் பிளாட்ப்பார்ம் வாசிகளில் பலர் குடிசை மற்று வாரியம் கொடுத்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பிழப்புக்காக இங்கு மீண்டும் வந்துவிடுகின்றார்கள். ஆனாலும் பலர் உண்மையிலே ஏழைகள் என்பதை ஒத்துக் கொள்கின்றேன். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பகிர்வு / பதிவு.

naathaari said...

அடுத்த தலைமுறை எழுத்தாளனி தயாராகிவிட்டார்

vasan said...

Let us all stop drinking Coke/Pepsi. Tell our Stars (cricket/Movie) NOT to be the BRAND AMBASSADORS to such killer brands who again taken the merchandise as their weapen to grab our lands like East India co.
We NEVER learn from Past or present but cry after everything is lost.
When East India entered the Mohal rullers were bribed with the best wine and valuable gifts from abroad. The modern MNCS(Mansota,Nokia,Ford,Sony,Hundai,Pesticide, Fertilizer co Etc) will offer the rulers a good shelder in abroad, since India will not be suitable place to live for them. Like Gandhi said to our 2nd INDEPENDENCE, we initiate to boycott Foreign PRODUCT & SERVICE.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

மீண்டும் வருவான் பனித்துளி !

பின்னோக்கி said...

சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வூட்டும் பதிவு. அருமை.

"உழவன்" "Uzhavan" said...

படித்து முடித்தவுடன் கைதட்டிப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. மிக மிக அருமையான எழுத்தும் இடுகையும்.
வாழ்த்துகள்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட இடுகை, 'உலகம் தழுவிய' அழுத்தமான இடுகையாகிறது//
சரியான பொருத்த வார்த்தைகள்..

நசரேயன் said...

தண்ணியை பத்தி பேசினதும் பெர்க்கின்ஸ்ன்னு சரக்கு ஏதும் இருக்கான்னு யோசித்துகிட்டு இருக்கேன் !!

நசரேயன் said...

வர வர இடுகை எல்லாம் ஒரு நெடுந்தொடர் மாதிரியே இருக்கே .. எதாவது புத்தகம் வெளியிட போறீங்களா?

Dr.Rudhran said...

படித்து முடித்தும் நினைவில் நிற்கிறது. வாழ்த்துக்கள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம்

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !

முகுந்த் அம்மா said...

அருமையான பதிவு முல்லை அவர்களே. "Confessions of an economic hitman" எழுதிய பெர்கின்ஸ் இன் எண்ண ஓட்டத்தை உங்கள் பதிவில் பார்க்க முடிந்தது. சென்னையையும், ஜகார்தவையும் ஒப்பிட்ட தங்களின் எழுத்து அருமை. பாராட்டுக்கள்!

ராஜ நடராஜன் said...

உலக தண்ணீர் தினத்துக்கான இடுகையாக உங்களது பார்வைக்கு பாராட்டுக்கள்.இடுகை சரியாக தோன்றினாலும் இடுகையை ஒட்டிய விவாதமில்லா பின்னூட்டங்களுக்கு மாறாக....

இன்னும் கூவம் மணக்கிறது கேட்கும் போது நமது இயாலாமை குறித்த வருத்தங்கள் தோன்றினாலும் ஒரு புறம் நீளக்கடல்,நிலத்தில் அதே கூவம் என்பதற்கு அமெரிக்க சுரண்டல் மட்டுமே காரணமா?பனிப்போர் காலத்தில் ரஷ்ய சார்பு சோசலிஸமும் எந்த மாற்றங்களையும் கொண்டு வந்து விடவில்லை.லைசென்ஸ் ராஜ் இன்னும் மோசமாகவே இருந்தது.

அடிப்படை தேவைகளான நீர், உணவு,இருப்பிடம்,சாலைகள்,சுகாதாரம் போன்றவற்றில் கவனம் கொள்ளாமல் குண்டு தயாரிச்சா குண்டனாகி விடலாமென்ற மனப்பான்மையும்,எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை-உனக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்ற இந்திய பாகிஸ்தான் துவேசங்களில் இருவரும் இழந்தவை அடிப்படை வசதிகளும்,மேம்பட்ட மனித வாழ்வும்.

உலகமயமாக்கல் என்ற சூதாட்டத்தில் உலகின் அனைத்து நாடுகளும் பங்குதாரர்கள்.சூதாட்டத்தில் ஜெயிப்பதும் தோற்பதும் பொறுத்தே வாழ்க்கை நிலைகள் அமைகின்றன.

வளைகுடாக்களில் நீர் ஆதாரம் இல்லை என்பதால் மினரல் வாட்டர்.அப்படியிருந்தும் கடல்நீரை சுத்தநீராக்கி விடுகிறார்கள். பெட்ரோலை விட நீரின் விலை அதிகம் இங்கே.

நதிகளின் தேசமான நாமும் மோசம் போனதற்கு யார் காரணம்?பல வளைவு,நெளிவுகள் கொண்ட தப்பிக்க இயலாத உலகமயமாக்கலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கம்யூனிஸ நாடுகள் உட்பட.

ஒரேயடியாக பொருளாதாரம் முடங்காமல் காங்கிரசுக்கு கடிவாளம் போட்டதற்கு இந்திய கம்யூனிசக் கட்சிகளுக்கும் ஒரு ஹாய் சொல்லவேண்டியதும் அவசியம்.

முதலில் நேர்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளையும் பீரோகிராட்டிக் வகுப்பையும்.மன்மோகன் சிங்க் தனது திட்டங்களையெல்லாம் பாராளுமன்றத்தில் விவாதிக்கவே செய்கிறார்.ஆனால் விவாதமில்லாமல் கொள்ளைப்புற வாசல் வழியாக சிதம்பரம்,பிரணாப் து(ர)றைகள் செயல்படுகின்றன.பாகிஸ்தானுக்கு அறிக்கை விடுவதோட சரி.தமிழக முதல்வர் புதிய ச்ட்டமன்றம் திறந்து வைத்தார்.நல்ல விசயம்தான்.பாராட்ட வேண்டியதும் கூட.கூடவே 2 கோடியை அப்படியே கரைச்சு விட்டுட்டாருன்னும் செய்திகள்.கணக்கு கேட்கறதுக்கு இங்கே யாருமில்லை,எம்.ஜி.ஆரும் இல்லை.

சொல்ல வந்தா எங்கெங்கேயோ சிந்தனைகள் பறக்குது.நிறுத்திக் கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//தண்ணியை பத்தி பேசினதும் பெர்க்கின்ஸ்ன்னு சரக்கு ஏதும் இருக்கான்னு யோசித்துகிட்டு இருக்கேன் !!//

நசரேயன்!பெர்க்கின்ஸதான் பேரு குறுக்கி பெக்:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

பதிவு போட்டிருக்கன்.உங்க அளவு போடமுடியலப்பா! நன்றி.

பா.ராஜாராம் said...

இந்த தொடரில் நான் வாசித்த மிக சுவராசியமான,அடர்த்தியான பதிவு இது.

Itsdifferent said...

All this is fine. But what is anyone doing to fix this?
I remember last time in Central or South Madras some IIM graduate, contested the MP election? Does anyone know how many votes did he get?
Bunch of IIT graduates formed a party and contested an election. Do we know what happened to them?

When the people not ready to take any action, react, revolutionise there are going to be no changes. We can all sit in A/C rooms, and comment but not just dust even, I dont think any of us any right to question the wrong doers.
Sorry, thats the reality, i know no one would want to read this, but someone has to say...

ராமலக்ஷ்மி said...

//நமக்கும், நமது அரசியல்வாதிகளின் மனசாட்சிகளும் விழிப்பது எப்போது?//

நல்ல கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்! சிந்திக்கத் தொடங்குவோம். அருமையான பதிவு முல்லை.

Amrutha said...

சிறப்பான பதிவு;வாழ்த்துக்கள்; தொடர்ந்து எழுதவும் ;புத்தக அறிமுகத்திற்கு நன்றி; love and thanks to பப்பு

ஊரான் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

தோழமையுடன்

ஊரான்.

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

கும்மி said...

சிறப்பான இடுகைக்கும், தமிழ்மணம் விருது வென்றதற்கும் வாழ்த்துகள்.

பத்ம ப்ரியா said...

அருமையான, செறிவு மிகுந்த பதிப்பு. தமிழ் மணம் போட்டியில் வென்றதற்கு பாராட்டுக்கள்.

இயற்க்கை வளம் மிகுந்த நாடுகளை சுரண்டுவதாவது ஒரு கால கட்டத்தில் நின்றுவிடும். ஏன் எனில்- இயற்கை வளங்கள் தீர்ந்து போய் இருக்கும். ஆனால் அமெரிக்காவின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து நம் இந்தியா தப்பிக்கவே முடியாது. ஏன் எனில் நம்மிடம் இருப்பது தீர்ந்தே போகாத " மனித வளம் அல்லது மக்கள் தொகை அல்லது நுகர்வோர் ரிடெய்ல் மார்க்கெட்". உணவு, மருந்து, ஆயூள் காப்பீடு, வங்கித்துறை, சில்லறை வணிகம் போன்றவற்றில் கண்ணுக்கு தெரியாமல் அமெரிக்காவின் ஊடுறுவல்கள். பாமர மனிதன் வலை வீசி பிடிக்கப்பட்டு வட்டியால் அழுத்தப் படுகிறான் அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறான். அரசுடமையாக்கப்பட்ட வீட்டுக் கடன் வங்கிகள் சிலவற்றில் இப்போது 5, 6 அமெரிக்கர்களோ அல்லது ஆங்கிலேயர்களோ பங்குதாரர்கள். தேசிய நதி நீர் இணைப்பெல்லாம் - கட்டுரை போட்டிக்கான தலைப்பாக வேண்டுமானல் இனிமேல் இருக்கலாம்.
இதிலிருந்து நாமும் நமது வளரும் சமுதாயமும் மீள்வது எப்படி? பயமாகத்தான் இருக்கிறது.

மன்னிக்கவும்.. எனது கமெண்ட்டை உங்கள் கட்டுரை அளவுக்கு நான் எழுதியிருக்கக் கூடாது.. தேசப்பற்றும்.. அதனால் வந்த ப்ளட் ப்ரெஷரும் காரணம்.

நன்றி
சிறகுகள் பத்மப்ரியா..
priyaraghu.blogspot.com

நிழல் said...

அன்புள்ள சந்தனமுல்லை,
விரிந்து கிடக்கும் வலைப்பூக்கள் தோட்டத்தை இப்போது தான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளை வினவில் படித்து வியந்துள்ளேன். நிறைய விசயங்களை உள் வாங்கி நிறைவாக எழுதுகிறீர்கள். "யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!"- நெகிழ்ச்சியான படைப்பு இது.

//இப்போதுகூட, தண்ணீர் தினம் என்ற சொன்னதும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது பற்றி பேசி செயல்படும் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பிரக்ஞையும் கடமை உணர்ச்சியும் கூட கோடி கோடியாக லாபம் சேர்க்கும் முதலாளிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இருந்தால்...?//
எனக்கும் கோபம் கோபமாக வரும்.
மிக்க நன்றி,
ஆயிஸ்ரீ புகழேந்தி