Showing posts with label ஃப்ளாஷ்பாக். Show all posts
Showing posts with label ஃப்ளாஷ்பாக். Show all posts

Wednesday, October 06, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

ஆண்டுவிழா அனுபவங்கள் பற்றி தீபா அழைத்திருந்த தொடர்இடுகை. இன்னைக்கு ஏதாவது ஒரு போஸ்ட் போடணுமே என்று எண்ணியபோது இது நினைவுக்கு வந்தது. ஸ்டார்ட் மீசிக்.....

ஒரே ஒரு முறை வெல்கம் டான்ஸில் சேர்ந்து பயிற்சி எல்லாம் பெற்றுக்கொண்டு ஜூட் விட்டு ஊருக்குப் போனதோடு எனது கலைச்சேவைக்கு ஒரு shift+del. ஐந்தாம் வகுப்பு வரை விளையாட்டு விழாவில் மட்டுமே - லெமன் & ஸ்பூன், சாக்கு ரேஸ், ரன்னிங் ரேஸ்....

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம். ஆண்டுவிழா பற்றி அறிவிப்பு வந்ததும், கலையார்வம் மிக்க டான்ஸ் புலிகளான ராதாவும், சந்தியாவும் கலா மாஸ்டர் அவதாரம் எடுத்தனர். தகுதியெல்லாம் அதிகமில்லை ஜெண்டில்வுமன் - ஸ்கூல் விட்டதும் காம்ப்ளான் குடித்துவிட்டு பரதநாட்டியம் க்ளாஸுக்கு போயிருந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். பாரதியார் பாட்டு - கண்ணன் பற்றி வர்ணனை வரும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் இந்த நுண்கலைக்களுக்கும் - ஆடல், பாடல், வரைதல் போன்ற பொறுமை மிகவும் தேவைப்படும் மென்கலைகளுக்கு எவரெஸ்டுக்கும் ஏலகிரிக்குமான பொருத்தம்.(எவ்ளோ நாளைக்குத்தான் மலைக்கும் மடுவுக்கும்னே சொல்றது?!)வீட்டிலோ ’டான்ஸ்/பாட்டுன்னு இண்ட்ரெஸ்ட் வந்துடுச்சுன்னா படிப்புலே கவனம் போயிடும்’ (ஏற்கெனவே டன் கணக்கிலே இருக்கிறமாதிரி) என்று ஒரு மித். ’படிக்கிற பிள்ளையாக லட்சணமா இரு’ -க்கு அடங்கி ஊக்கமுடைமையை (?), எப்படி கேட்டாலும் - நடுவில் இருக்கும் வார்த்தையை சொன்னால்கூட அந்த குறளை ஒப்பிக்கிறமாதிரி சொம்படித்திருந்தேன். ரவி செம டஃப் ஃபைட் கொடுத்தாலும் முதலாவதாக வந்துவிட்டேன்.

அப்புறமென்ன....ஆண்டுவிழாவில் பரிசு வாங்க போகும் ஆர்வக்குட்டியாகிட்டேன்.பெரிம்மாகிட்டே சொல்லி புது நெய்ல்பாலிஷ் எல்லாம் போட்டு கையிலே மருதாணி வைச்சு...பின்னே சும்மாவா...பரிசு வாங்கப்போற கைகளாச்சே! ஆண்டுவிழா அன்னைக்கு பெரிம்மா ஊரில் இல்லை. பெரிம்மா, அவங்க இல்லாம போகவேணாம்னு சொல்லியிருந்தாங்க. சொன்ன பேச்சு கேக்காம, நானும் சங்கீதாவும் போனோம். பரிசு வாங்கப்போறவங்களை எல்லாம் வரிசையா ஒரு பெஞ்ச்லே உட்கார சொல்லி, பில்டப்லாம் ‘எந்திரன் பிரமோ’ மாதிரி இருந்துச்சு. ஆனா, லேட்டாகிடுச்சுன்னு 10வது, +1,+2 பசங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு கல்ச்சுரல்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க. எடிசன் ஏண்டா பல்பை கண்டுபிடிச்சார்ன்னு இருந்துச்சு!

அப்புறம் ஏழாவதுலே கட்டுரை போட்டி. ஏதோ ஒரு சமூக தலைப்பு. ஞாபகம் இல்லை. புனித பாண்டியன் அண்ணா எடுத்துட்டு வந்திருந்த ஒரு புக் வீட்டுலே இருந்துச்சு. அதுலே லட்டு மாதிரி அம்பேத்கர் பத்தி ஒரு கட்டுரை. அப்படியே பத்தி மாறாம அதே சேம் சொம்பு.அப்படியே பிக்கப் ஆகி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் போட்டின்னா, “கட்டதுர, எட்றா வண்டிய’ லெவலுக்கு வந்துட்டேன். (சொல்ல மறந்த கதை : பாட்டு போட்டிக்கு பேரைக் கொடுத்துட்டு லீவு போட்டது!) அப்புறம், வேணாம் வேணாம்னு சொன்னாலும் இலக்கிய மன்ற துணைச் செயலாளர், இலக்கிய மன்ற செயலாளர் பதவியிலே என்னை உட்கார வைத்து மக்கள் அழகு பார்த்தாங்க. என்ன வேலைன்னா, ஆண்டுவிழாவிலே ஒரு அறிக்கையை வாசிக்கணும். சிம்பிள்.

கல்லூரிலே, ஆண்டுவிழான்னா மேடைக்கு கீழேயோ இல்லேயோ கூட்டத்துலே கடைசியிலோ கும்பல் சேர்ந்துக்கிட்டு சவுண்ட் விடணும். மெல்லிசைன்னு பாடறவங்களை ஓட ஓட விரட்டணும்... என்னன்னா, மாட்டிக்காம கலாட்டா பண்ணனும்...( இண்டர்னல்ஸ்ன்னு ஒரு செக் பாயிண்ட் இருக்கே!)

பள்ளிக்கூடம், கல்லூரிக்கெல்லாம் அப்புறம், ஒரே மாதிரியாகிட்ட வாழ்க்கைக்கு நடுலே வர்ற ஒரே பாலைவனச் சோலை அலுவலக ஆண்டுவிழா. இந்த வருஷம் ராம்ப் வாக். ரொம்ப வேலையெல்லாம் இல்லை. பயிற்சியும் தேவை இல்லை. சும்மா நடந்து வந்தா போதும். அது அழகி போட்டியில்லை. ஸ்கூல்லே நடக்கிற ஃபேன்சி பரேட் மாதிரிதான். அதுவும் ஆள் பற்றாக்குறை வேற.

ஒரு கான்செப்டை அடிப்படையா வைச்சு 4 பெண்கள், 5 ஆண்கள் சேர்ந்து பண்ணினோம். இயற்கையின் படைப்புகளையும், எங்க கம்பெனியின் ட்ரேட்மார்க் கலரையும் இணைச்சு உருவான தீம்.

darkness - கருப்பு வண்ண உடை (boy)
light - வெள்ளை வண்ண உடை (boy)
earth - பழுப்பு வண்ண உடை (girl)
sky - ஆகாய நீலம் (girl)
sun - சிவப்பு (boy)
moon - க்ரீம் (girl)
water - நீலம் (boy)
man - சூட் (ofcourse, boy)
tree - பச்சைக்குப் பதில், எங்கள் கம்பெனியின் ட்ரேட்மார்க் கலர்தான் புதிய பச்சை. (girl)


ஆதியில், நான் வானமாக இருப்பதாகத்தான் ப்ளான். பங்கேற்ற இன்னொரு நண்பர்க்கு ஷராரா விருப்பமாக இருந்தது.மேலும், எனக்கும் அதில் பெரிய விருப்பமெல்லாம் இல்லை. சோ, விட்டுக்கொடுத்துவிட்டேன். சூரியனா இருக்கேன், ஏன் சூரியனோட ஒளியை வாங்கிட்டு ஒளி தர்றது பெண்ணா இருக்கணும்னு கொஞ்சம் கொளுத்திபோட்டேன். ஆனா, சூரியனா இருந்த பையன்கிட்டே சிவப்பு கலர் ஏற்கெனவே ஷெர்வானி இருந்ததாலே (பட்ஜெட்..பட்ஜெட்!) சூரியன் எஸ்கேப். சரி, ஜெண்டர் எதுவும் இல்லாத, மரமா இருக்கேன்னு முடிவாச்சு. இப்போ சதி செஞ்சது டெய்லர். நிலாவின் உடை மற்றும் மரத்திற்கான உடையை அளவுகள் மாத்தி தைச்சுட்டார்.
சோ, நான் இப்போ மூன்!

இது என்னோட நினைவுக்காக :

முதல் சீக்வென்ஸ் : மேலிருந்த வரிசையிலே ஒவ்வொருவராக
இரண்டாம் சீக்வென்ஸ் : darkness & moon, earth & sky, water & tree..etc
மூன்றாம் சீக்வென்ஸ் : earth- moon-sun, water-man-tree... etc

இசை : அதான், ஆதி காலத்துலேர்ந்து போட்டு வைச்சிருக்காங்களே...எனிக்மா (yes, same old ’mea culpa’!) அதோடு, ஃபேஷன் படத்தின் இசையும் கலந்து ஒரு fusion.

இதைத் தொடர நான் அழைப்பது

1. ஜெயந்தி
2. நான் ஆதவன்
3. தியானா
4. வல்லியம்மா

Monday, April 12, 2010

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம், மேனி நுடங்காது ...”

”நாடினேன்..நாடி ஓடினேன்...கண்டுகொண்டேன் நாராயணா என்னும் ...”


”பாலும் தெளிதேனும்...”

”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை...”

வரிசையாக ஏழு குட்டீஸ் வயதுவாரியாக கையைக் கூப்பியபடி நின்றுக் கொண்டிருந்தோம். பெரிய அத்தை ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல பின்னாலேயே சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தோம்.மாமா பித்தளை தீபாராதனை தட்டில் கற்பூரத்தை ஏற்றி எல்லா சாமிபடங்களுக்கும் காட்டி கீழே வைப்பார். பின்னர், தம்ளரிலிருக்கும் தண்ணீரை மூன்று தடவை தட்டிற்கு அரை வட்டமாக விரலாலேயே பாத்தி கட்டுவார். கற்பூரம் எரிந்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் உயரமாக எரிந்து நெருப்பின் சீற்றம் குறைந்து, கீழே தட்டுக்கும் மேலே எரிவதற்கும் நடுவில் ஒரு கருப்பான வெற்றிடத்தைக் காட்டியபடி லேசாக ஒரு நளின நடனம் ஆடி அடங்கும். தம்ளரிலிருக்கும் துளசி இலைகள் எல்லோர் கையிலும் கொடுப்பார் மாமா. வலது கையில் வாங்கி எச்சில் படாமல் தூக்கி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஒட்டியிருக்கும் தண்ணீரை தலையில் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு விபூதி - குங்குமம். பெரியவர்களுக்கு கையிலும், சிறியவர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும் பூசி விடுவார். நெற்றியிலிருந்து கழுத்துக்கு பூச வரும்போது வாயை லேசாக திறந்தால் ஒரு சிட்டிகை வாயிலும் விழும். பெண்களாக இருந்தால் விபூதிக்குப் பிறகு குங்குமமும் வைத்துவிடுவார். தாத்தாவிற்கும்,இளங்கோ மாமாவிற்கும் தனிப்படையல். அப்போது மட்டும் ஆயா வந்து நிற்பார்.

வீட்டில் எதிர்பாராத இரண்டு பெரிய இழப்புகள்,அதைத் தொடர்ந்து ஒரு திருமணம், பிரச்சினைகள் என்று அடுத்தடுத்து நடந்ததன் காரணமாக ‘சாமி இருந்தா இப்படி நடந்திருக்குமா...சாமியே இல்லே'என்று வெறுத்துப் போயிருந்த வீட்டில் அத்தைகளும், குழந்தைகளும் வந்தபின்பு நடந்த முக்கிய மாற்றமிது. அதன் பக்க விளைவுகள்தான் இந்த 'வாக்குண்டாம்'.....அத்தைகளின் பெருமுயற்சிகளுக்குப் பிறகு மாமாக்கள் கொஞ்சமாக கொஞ்சமாக் மாறிக்கொண்டிருந்தார்கள்.அத்தைகள் கில்லாடிகள்தான். “எனக்கு நோம்பு கயிறு கிடைச்சிருக்கு, தீபாவளிக்கு நோன்பு வைக்கணும்” என்று பெரிய அத்தையும், ”கிழக்காலே வயல் மூலையிலே கிடைச்ச சிலை, விடாம வச்சிப் படைக்கணும்” என்று சின்ன அத்தையும் ஆரம்பித்து, வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகள், நினைவுதினங்கள், சதுர்த்திகள்,அமாவாசைகள், தீபாவளி , பாம்பு பஞ்சாங்கத்திலிருக்கும் இன்னபிறவெல்லாம் பரபரப்பாக கொண்டாடப்பட்டன. எங்களுக்கு கேட்கவா வேண்டும், கும்மாளமும் கொண்டாட்டமும்தான்.

நடுவில் எதையோ விட்டுவிட்டேனே..ஆமாம், பாட்டுல்லாம் பாடி முடிந்ததும் கற்பூரம் எரியும்போது மாமா,அத்தை,அம்மா எல்லோரும் கண்மூடி கை கூப்பி நிற்பார்கள். நாம் முழித்து பார்த்துக்கொண்டிருந்தோமானல் சைகையாலேயே கண்ணை மூடி கையை கூப்பச் சொல்லுவார்கள்.ஆனால் என்ன வேண்டிக் கொள்ளணுமென்றுதான் தெரியாதே...”சாமி நான் நல்லா படிக்கணும், எனக்கு நல்ல புத்திக் கொடுங்க”என்று வேண்டிக்கொள்ள சொல்லிக்கொடுத்தார்கள். நானும் போகிற கோயில்களிலெல்லாம் சத்தம் போட்டு (லைப்ரரிலே படிச்சனே அந்தக் கதைதான்!)வேண்டிக்கொண்டு நிற்பேன். அநேகமாக அது முதல் வகுப்பென்று நினைவு. அதுதான் சாமியிடம் கண்மூடி சிரத்தையாக வேண்டிக்கொண்டது. அப்போதும் சாமி என்பவர் பெரியவர்.. கோயிலுக்குள் இருப்பார். நாம் கேட்டதைக் கொடுப்பார்.அப்புறம் நான் நல்லா படிக்கணும்..நல்ல புத்தி கிடைக்கணும். மனதில் பதிந்தது அவ்வளவுதான்...இப்படி சாமி எனக்கு அறிமுகமானது வடலூரில்தான்.

ஒருமுறை, விளையாட்டில் சண்டை வந்தபோது நானும் சுஜாக்காவும் ப்ரெண்ட்சாகி விஜிக் கூடவும் சசி கூடவும் டூ விட்டோம். அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி. மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் புலப்பட்டதும் அப்போதுதான். நல்லவேளையாக விஜிக்கு ஜூரமெல்லாம் வரவில்லை. சாமி ஒரு உண்மையான பக்தையை இழந்துவிட்டார்.இதெல்லாம் வடலூரில் விடுமுறை நாட்களில்தான்.


பெரியப்பாவின் நினைவுதினத்துக்காக, திருவண்ணாமலை ரமணாசிரமம் போகிற பழக்கம் இருந்தது.ஆசிரமத்திற்கு எதிரில் அவர்களது காட்டேஜில் நான்கு நாட்கள் வாசம். ஒரு மாதத்திற்கு முன்பே லெட்டர் போட்டால் நமது பெயரில் புக் செய்துவிடுவார்கள். அப்போதெல்லாம் ரமணாஷ்ரமம் அவ்வளவாக பிரசித்தி அடையவில்லை. இளையராஜால்லாம் அங்கே போக ஆரம்பிக்காத நேரம். நினைவு நாள் அன்று அன்னதானம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கு ஆன்மீகத் தேடலைவிட எங்களுக்கு ஆங்கிலப் புலமையையும் இந்திப் புலமையையும் காட்டி வெள்ளைக்காரர்களை நண்பர்கள் பிடிப்பதே பொழுதுபோக்கு. அம்மா, பெரிம்மா, ஆயா, சாந்தா அத்தை எல்லாரும் தியான மண்டபத்திற்கும் பஜனையிலும் நூலகத்திலுமாக இருக்க நாங்கள்
வெள்ளைக்காரர்களையும், குஜராத்திக்காரர்களையும் ராமலிங்க சாமி ஜோதியாக மறைந்ததையும், அவர் ரகசிய சுரங்கப்பாதை வழி நடந்தே திருச்சிற்றம்பலத்திற்கு சென்றதையும், ஒரே நேரத்தில் சென்னையிலும் கருங்குழியிலுமாக காட்சி தந்ததையும் சொல்லி தனிச்சானல் ஓட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஏதோ ராமலிங்கசாமியையே நேரில் கண்டு விட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு மரியாதையாக நடத்துவார்கள். அவர்களது நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவார்கள். அதுவும் போரடித்தால், தியான மண்டபத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் கல்லெறிந்துக் கொண்டோ, அங்கே உலவும் மயில்கள் எப்போது தோகை போடுமென்றோ அல்லது லஷ்மி பசுவின் சமாதியைத் தாண்டி இருக்கும் மலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ பொழுதைக் கழிப்போம்.


ஆம்பூரில் எல்லா சாமிக்கும் தடா. சாமி படங்களோ சம்பிரதாயங்களோ கிடையாது. எல்லா நாளும் நல்ல நாளே..எல்லா நேரமும் நல்ல நேரமே. சாமியும் கிடையாது, பூதமும் கிடையாது என்பதே நம்பிக்கை.அந்த நம்பிக்கையை யாரும் எங்கள் மேல் திணித்தது இல்லை. சாமி இருக்கிறாரென்ற நம்பிக்கையையும் யாரும் எங்கள் மேல் திணிக்கவும் இல்லை. எப்போதும் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் இருந்தது. யாராவது என்னையும் தம்பியையும் கோயிலுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்னால் அனுமதி கிடைத்திருக்கிறது. சாந்தா அத்தை அல்லது குணா அத்தையோடு துணைக்குக் கோயிலுக்கு சென்று அவர்களோடு நவக்கிரகங்களை சுற்றியிருக்கிறேன்.

பெரியப்பாவின் நண்பர் மூலம் வீட்டுக்கு வந்த “இயேசு அழைக்கிறாரை” ஒரு இதழ் விடாமல் படித்திருக்கிறேன். எதிர் வீட்டுக் கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டுக்குச் சென்று ஜெபங்கள் செய்திருக்கிறேன். அவர்களைப் போல கண்ணீர் விட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர் என் பேரையும் ஜெபத்தில் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். 'இயேசு அழைக்கிறார்' நின்று போனபின் அவர்கள் வீட்டிலிருந்து பைபிள் வாங்கி வாசித்திருக்கிறேன். கொஞ்ச நாட்கள் யோகா கற்றுக்கொண்டபோது தியானமெல்லாம் செய்து ஒரு ஞானி தோற்றமெல்லாம் கொடுத்திருக்கிறேன். கணக்கு பரீட்சைக்கு எந்த கேள்வி வர வேண்டுமென்று தியானித்திருக்கிறேன். எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்.

சாமி இல்லையென்று வாதிட முடியாதது போன்று இருக்கிறாரென்று நம்பவும் முடியவில்லை. ஆனால், சிலை வடிவத்திலோ அல்லது எட்டு கை,நாலு தலை கொண்டோ இருக்குமென்றும் நம்ப முடியவில்லை.மேலும் வீட்டிலிருந்த தி.க புத்தகங்களையும் 'உண்மை' இதழையும் படித்து கடவுளர்கள் மேலேயும் இந்து மதத்தின் மேலேயேயும் எனக்கு வெறுப்பு வந்திருந்தது. (அதுவும் ‘கடவுளர்கள் பிறந்த கதை”ன்னு ஒரு புக் இருக்கும்..செம ROTFL புக்.)

மேலும்,எப்போதும் எனக்கு மற்றவர்களை வித்தியாசமாக இருக்கப் பிடிக்கும். அதனால், எல்லோரும் விழுந்து விழுந்து சாமி கும்பிடும்போது வித்தியாசத்திற்காக சாமி கும்பிடாமல் இருக்கப் பிடித்திருந்தது. டீனேஜ் வந்தபோது எல்லாவற்றும் rebelliousஆன குணம் வந்திருந்தது.அடையாளங்கள் எதுவும் இல்லாத அடையாளத்தையே விரும்பியிருக்கிறேன்.” ஒரு மதத்தை பின்பற்றித்தான் நல்ல விஷயங்களை கத்துக்கணும்னோ இல்லே அந்த மதத்தைச் சார்ந்து இருந்தாத்தான் நல்லவங்களா இருக்கமுடியும்னோ இல்லே, எங்கேயிருந்தாலும் அதை எடுத்துக்கலாம், முடிவா மனுஷங்களா இருக்கணும்” என்று எங்களை வளர்த்தது பெரிம்மாதான். சடங்குகள், அதனைக் குறித்தான அலட்டல்கள் பற்றியும் லேசான தெளிவு இருந்தது.


Happy Go lucky girl-ஆக இருந்த எனக்குள்ளும் தேடல்கள்,பயங்கள், தயக்கங்கள், உள்மனப் போராட்டங்கள், வெளிப்போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சுற்றியிருந்தவர்களுடன் பிரச்சினைகள்...சண்டைகள் குறிப்பாக - டீனேஜில் இல்லையென்று சொன்னால் நான் பொய் சொன்னவளாவேன். பெற்றோரிடம் , எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடுவீர்களா தெரியவில்லை.. என்னால் முடியாது. சொல்லியிருந்தாலும் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடியவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துக்கொண்டே இருந்தாலும், அவர்கள் யாராலும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது.


எதிர்காலம் குறித்தும், ”எப்படி இருக்கும், நான் நல்லா இருப்பேனா” என்று கலக்கம் வந்திருக்கிறது. தேவையற்ற கவலைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில் ஸ்தம்பித்திருக்கிறேன்..சமயங்களில் சோர்ந்து முடங்கி அமர்ந்திருக்கிறேன்.. ”டோண்ட் கிவ் அப், டோண்ட் கிவ் அப்” என்று முற்றிலும் எல்லாவற்றையும் அறிந்த யாராவது என்னிடம் சொல்லமாட்டார்களா என்று எண்ணியிருக்கிறேன். ”ஆச்சி, யூ ஆர் கோயிங் டு லிவ் அ க்லோரியஸ் லைஃப்” - என்றும் ”நான் இருக்கேன், நீ பயப்படாம இரு” என்று உத்திரவாதம் கொடுத்து பொறுப்பெடுத்துக்கொள்பவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று உள்ளுக்குள் தேடியிருக்கிறேன். பிரச்சினைகளின்போது, 'Things are gonna be alright'...'everything is gonna be fine here'..என்று என்னை அமைதிப்படுத்த ஆற்றுப்படுத்த மனிதர்களைத் தாண்டி யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கிறேன்.

உண்மையில், எனக்குள் இருந்த பயங்களை நானேதான் தின்று செரிக்க வேண்டியிருந்தது. என்னை நானேதான் ஆற்றுப்படுத்திகொள்ள வேண்டியிருந்தது. எனது தோல்விகளை, அவமானங்களை நானேதான் கடந்து வர வேண்டியிருந்தது. வாழ்க்கையின் குறுக்குரோட்டில் நின்றபோது எனக்கான திசைகளை நானேதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. நான் செய்வது சரியா, சரியாகச் செய்கிறேனா என்றெல்லாம் குழப்பங்கள் வந்தபோது நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டியது நானேதான் என்ற முடிவுக்கும் வந்திருந்தேன்.

அந்த சமயத்தில்தான் எனக்குக் கிடைத்தது, எம் எஸ் உதயமூர்த்தியின் ”எண்ணங்கள்” புத்தகமும், அதைத் தொடர்ந்து ராபர்ட் ஷெல்லர் மற்றும் நார்மன் பீலே புத்தகங்களும். எல்லாம் தன்னம்பிக்கை டானிக்குகள்தான். பாசிடிவ் அப்ரோச்சை பைபிளின் மூலாதாரத்தைக் கொண்டு எழுதப்பட்டவை. இந்து மதமே பிடிக்காமல் இந்து மத அடையாளங்களையே வெறுத்த எனக்கு இது பிடித்திருந்தது.

முகிலுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால், என்னை வற்புறுத்தியது இல்லை. I juz love the way he understands me. முகில் என்னை புரிந்துக்கொண்டதைப் போல வேறு யாராவதாக இருந்தால் புரிந்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. இப்போதும், நான் ஆம்பூரிலிருந்ததைப் போலத்தான் இருக்கிறேன். இன் லாஸ்-களின் விருப்பத்திற்காக இருவரும் ஒருமுறை திருப்பதி சென்றதுண்டு. அதைத் தாண்டி, ஒன்றாகக் கோயிலுக்கெல்லாம் சென்றது இல்லை. ஊருக்குச் சென்றால் கண்டிப்பாகக் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம். மாமியாரை புண்படுத்திவிடாமலிருக்க அங்கே சில காம்ப்ரமைஸ்களை செய்வதுண்டு. ( அவர் வைத்துவிடும் குங்குமத்தையும், பூஜைக்குப் பின் துப்பட்டாவில் வாங்கிக்கொள்ளச் சொல்லும் பூ,தேங்காய்,பழம்...முதலியன.)

நாங்கள் வாழும் வீட்டிலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ எந்த அடையாளங்களும், சம்பிரதாயங்களும் இல்லை. எந்த சம்பிரதாயங்களோ நம்பிக்கைகளாலோ கட்டிப்போட்டுக்கொள்ளாமல் ஃப்ரீயாக இருக்கப் பிடித்திருக்கிறது. இதே மனநிலை எப்போதும் வாய்க்கவே விரும்புகிறேன்.எல்லா நாட்களும் ஒன்று போலவேதான் விடிகிறது எங்களுக்கு. அம்மா அல்லது மாமியார் வந்தால் மட்டுமே பூஜை அலமாரி தூசு தட்டப்படும்.பப்புவும் அவர்களுடன் சேர்ந்துக்கொள்வாள். சொல்லப்போனால், ஒரு ரெகுலரான பூஜையை பப்பு இதுவரை பார்த்ததே இல்லை,நானும்தான். ஏன், சாமியின் பெயர் கூட அவளுக்கு இதுவரை தெரியாது. அம்மாவுடன் சேர்ந்து பாடல்கள் ('வாக்குண்டாம்....LoL') பாடுவாள். மாமனார் வந்தால் பப்புவை கோயிலுக்கு அழைத்துச் செல்வார். விபூதி /குங்குமத்தைப் பார்த்தால் வைத்துக்கொள்கிறாள். எதையும் நாங்கள் தடுப்பதுமில்லை. ஊக்கப்படுத்துவதுமில்லை. 'சாமி கண்ணு குத்திடும்' என்று சாமியை வைத்தும் பயமுறுத்தியதில்லை. என்னையே யாரும் அப்படி செய்யாதபோது நான் என் மகளுக்குச் செய்வேனா?



ஒரு அவியல் ஃபேமிலியில் வளர்ந்த எனக்கும் எப்போதாவது கேள்விகள்/ குழப்பங்கள் எழுந்திருக்கிறது. (ஒருவேளை இதுதான் ஆன்மீகத் தேடலோ?) ' நான் ஏன் இந்த வீட்டுலே பொறந்தேன்' (ச்சே, பேசாம நாம் வேற வீட்டுலே பொறந்திருக்கலாம்டா, குட்டி!!)...'நிஜமா மறுபிறவி இருக்கா'...'இறந்த பிற்கு என்ன ஆவேன்' ..' எதுக்காக நான் பிறந்தேன்'... 'மனசு உண்மையா'..'மூளை உண்மையா'..'ரெண்டும் ஒண்ணா'..இல்லே 'உணர்வுகள்தான் நானா'... 'இந்த உணர்வுகள், நினைவுகள் மட்டும்தான் நானா'... 'ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கு..ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு' - ஆனா இதுக்காக ரொம்பவெல்லாம் மெனக்கெட்டது இல்லே. வாழ்க்கையை புரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?

ஆயாவின் ஐந்து பிள்ளைகளுள் என் அம்மாதான் கடைசி. அம்மாவை உண்டான போது, ‘இது வேண்டாமெ'ன்று ஆயா மருந்து சாப்பிட்டாலும் மீறி பிறந்திருக்கிறார் அம்மா. (அதுதான் எங்கம்மா கலர் கம்மியானதுக்கு காரணமாம். LoL)

அப்படி பிறந்த அம்மா, என்னை பெற்றபோது “பொண்ணா” என்று என்னைப் பார்க்காமலேயே நிராகரித்து ஹாஸ்பிடல் வார்டைத் தாண்டிச் சென்றவர் என் அப்பாவழி தாத்தா.

25 வருடங்கள் கழித்து, அவர் என்னைப் பார்க்க வந்தபோது அவரை நான் நிராகரித்தேன்.

அப்பா இறந்தபிறகு, 'சொத்துகளில் பாத்தியதைக் கொண்டாட மாட்டேனெ'ன்று கையெழுத்து கேட்க வந்தவரை நிராகரித்து, 'கையெழுத்து போடமாட்டேன், ஆனால் அதே சமயம் சொத்துகளில் பங்கு கேட்கவும் மாட்டேனெ'ன்று சொல்லி அனுப்பினேன்.

'எவரும் எவருடைய வாழ்க்கையையும் தீர்மானித்துவிட முடியாது' என்றபடி தன்போக்கில் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

”குத்துவிளக்காக,குலவிளக்காக” என்று முன்பு எழுதிய இடுகையில் 'வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன்', அதைப்பத்தி அப்புறம் பார்ப்போம்ன்னு எழுதியிருந்தேன். அதனை ஒட்டி எழுத வாய்ப்பளித்த தீபாவிற்கு நன்றிகள்! தொடர்வதற்கு நான் அழைக்கவிரும்புவது,

'ஆன்மீகச் செம்மல்' ஆயில்ஸ்
'அம்மன் எஃபெக்ட்' அமித்து அம்மா
நோயாளிகளின் பிணி தீர்க்கும் பூங்குழலி
என் செல்ல G3
சாமியாடிய சின்ன அம்மிணி
பதிவில் கண்ணாமூச்சு விளையாடும் தீஷுக்குட்டி

Sunday, September 06, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

தொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி! சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் - மிக சுவாரசியம்!

ஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்!

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!”


சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது! நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்!அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை!

வேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று! தினமும் சுதர்சனை 'இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது' என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்!) உருமாறியது ஹனிடியு - சித்திரக்கூடமாக!!

ஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை! எனது ஃபேவரிட் கதை! எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது! எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் 'சித்திரக்கூடம்'!! இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க!) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் - ”சித்திரக்கூடம்”!

முதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை! கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது!)

பப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது! பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை!) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் - அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது - ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி - அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை! அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் - அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்!திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்! இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை - But, I am like this only - weird, huh! எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை - என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! ;-)

வாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது! பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்! அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன்! என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம்! தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி! :-)

ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை! :))


நான் அழைக்க விரும்பும் நால்வர்,

1. செல்வநாயகி
2. சென்ஷி
3. தீபா
4. சின்ன அம்மிணி

உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்....:-)


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

Saturday, August 08, 2009

‘அந்தக்காலத்துலே நாங்க'

எட்டாவது படிக்கும் போது - ஒருநாள் :

ஜரினா : ஆயா, ஆச்சி இருககாளா?
ஆயா : ஹிந்தி ட்யூஷன் போயிருக்கு, வந்துடும். உட்காரும்மா. உன் பேரு?
ஜரினா : ஜரினாங்க ஆயா!
ஆயா : ஓ...வீடு எங்கே?
ஜரினா : இங்கேதாங்க ஆயா, பக்கத்துலே!!

ஒரு 5 நிமிஷம் கழித்து...

ஆயா: என்ன விஷயம்மா?
ஜரினா : நான் நேத்து ஸ்கூலுக்கு போகலை...மேத்ஸ் நோட்டு வாங்கலாம்ன்னு வந்தேங்க ஆயா!
ஆயா : நல்லா படிப்பியாம்மா....ஏன் நேத்து ஸ்கூலுக்கு போகலை? என்ன ரேங்க்குள்ளே வருவே??

அதுதான் ஜரினா கடைசியா எங்க வீட்டுக்கு வந்தது! ஜரினா மூலமா இந்தஅதிர்ச்சி அலை என் மத்த ப்ரெண்ட்ஸ்கிட்டேயும் பரவி இருந்துச்சு!!


பதினொன்றாம் வகுப்பு - ஏதோ ஓர் சனிக்கிழமை மாலை:

நான் : பெரிம்மா, எனக்கு சன்னி வேணும், பெரிம்மா!
பெரிம்மா : சரி, பாக்கலாம்!
நான் : எப்போ வாங்கலாம்? மேரிக்கூட வாங்கபோறாளாம் பெரிம்மா!
பெரிம்மா : ......
(சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம்கொடுக்காத கதைதான்...நாமளே ஒரு பிட்டைப் போட்டு தேத்தி வச்சிருப்போம்...அதைக்கெடுக்கறதுக்குன்னே கரெக்டா எண்ட்ரி கொடுப்பாங்க...)
ஆயா : இப்போ எதுக்கு உனக்கு சன்னி? எப்படியும் அடுத்த வருஷம் ஹாஸ்டலுக்குத்தானே போகப்போறே!!
நான் : அது அப்போ பார்த்துக்கலாம்...எனக்கு சன்னிதான் வேணும்.
ஆயா : அந்தக்காலத்துலே, உங்க பெரிம்மால்லாம் ரெண்டு கிலோமிட்டர் ந்டந்தே போய் படிச்சாங்க...அதுல வேற மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துட்டு போவாங்க!
நான் : ஆயா, அது அந்தக்காலம் ஆயா...சைக்கிள் வாங்கிக்கொடுக்காதது உங்க தப்பு!
ஆயா: அதுதான் உனக்கு வாங்ககிக்கொடுத்திருக்கு இல்லே...அதுவே போதும்!!

இதுக்குமேலே வேறே எதுவும் பேசமுடியுமா!அவ்வ்வ்வ்!! அப்புறம், ‘அந்தக்காலத்துலே நாங்க'ன்னு ஆரம்பிச்சுடுவாங்க!! (மீறிப் பேசினா, ‘நீ ஸ்டேட்ஃப்ர்ஸ்ட் எடு, அப்போ நானே வாங்கித்தரேன்'னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கு, 'வாங்கித்தரமாட்டே'ன்னு நேராவே சொல்றதுன்னு நினைச்சுப்பேன்..ஆனாசொல்ல மாட்டேன்!! ;-))


காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் - செகண்ட் செமஸ்டர்

பெரிம்மா, எனக்கு டவ் சோப்தான் வேணும்!! அதுதான் புதுசா வந்திருக்கு! இந்ததடவை ஹாஸ்டலுக்கு போகும்போது அதுதான் வாங்கித்தரணும்!

(பில் பார்த்து எங்க ஆயாவுக்கு மயக்கம் வராத குறை..ஏன்னா,அப்போ அதனோட விலை : ரூ49.50 காசுகள்!! நான் வாங்கினது மூன்று சோப்புக்கட்டிகள்!!)

ஆயா : இவ்ளோ விலையா? சோப்புக்கா? இதெல்லாம் நீ சம்பாரிக்கும்போது வாங்கிக்கோ! இவ்ளோ செலவு பண்ணி உனக்கு சோப்பு வேணுமா? காசு என்ன மரத்துலே காய்க்குதுன்னு நினைப்பா?!!

டவ் திருப்பிக்கொடுத்துவிட்டு, எப்போதும்போல் எவிட்டா!!(ஆனால், வந்தக்கோவத்தில் ஆயாவை பழிவாங்குவதாக எண்ணி அவர்கள் குளியலுக்குஉபயோகிக்கும் பாசிபருப்பு மாவை
எல்லாம் எடுத்துக்கொண்டு ஹாஸ்டல்சென்றுவிட்டேன். பின்னர் அதன் மகிமையைப் பார்த்து, பப்பு பிறக்கும் வரைபாசிபருப்பு மாவுதான்..அது வேறு கதை..ஹிஹி!!)

காலேஜ் ஃபைனல் இயர் -ப்ராக்ஜட்க்காக வீட்டிலிருந்தபோது

நான் : ஆயா..நாள்பூரா நீங்கதானே பாக்கறீங்க....எப்பப்பார்த்தாலும் நியுஸ்..நியூஸ்...நியூஸ்!!!அதான் பேப்பர் படிக்கறீங்க இல்ல டெய்லி..அப்புறம் என்ன சன் நியூஸ்..அதை விட்டா ஜெயா நியூஸ்...ஏன் இப்படி கொல்றீங்க...நான் டீவி பாக்கணும் இப்போ!!

ஆயா : அப்போதான் ரெண்டு சைட் நியூஸ் தெரிஞ்சுக்க முடியும். இதைப்பாரு.. இல்லேன்னா போய் படி.....எப்போபார்த்தாலும் அந்த கூத்தாடிங்க ஆடறதைப் (ஓ மை..சோனி..ஜீ..சேனல் வீ!!) பாத்துகிட்டு இருப்பே...!!

நான் : இப்போதானே நானே எக்சாம் முடிச்சு வந்திருக்கேன்..என்னைக் கொஞ்ச நேரம் டீவி பாக்க விடறீங்களா?!

ஆயா : ஐஏஎஸ் க்கு படி ஆச்சி...நம்ம குடும்பத்திலேருந்து யாராவது ஐஏஎஸ் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசை..

நான் : ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....

ஆயா: இப்படி விதண்டாவாதம் பண்றதுக்குதான் நீ லாயக்கு...உருப்படியா எதுவும் செஞ்சுடாதே! இந்தா புடி...இதையே பார்த்துக்கிட்டிரு...இதுதான் உனக்கு வந்து சோறு போடப்போகுது!! நீ சம்பாரிச்சா நீ நல்லாருக்கபோறே..எனக்காக் கொடுக்கப் போறே!!

ஆயா, நீங்க அப்போ பண்ணது, பேசினதெல்லாம் அராஜகமா தெரிஞ்சாலும் இப்போதான் அதன் உள்ளர்த்தம், நோக்கமெல்லாம் புரியுது!! நான் நிலாவைத் தொடனும்னு நீங்க ஆசைப்பட்டதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு!!
தாங்ஸ் ஆயா, என்னோட வாழ்க்கையை சுவாரசியமாக்கினதுக்கு!! ஹாப்பி கிராண்ட் பேரண்ட்ஸ் டே!!

இதெல்லாம் எதுக்கு இப்போன்னா, பப்பு ஸ்கூல்லே நேத்து கிராண்ட் பேரண்ட்ஸ்டே கொண்டாடினாங்க! அதான்!! நம்ம ஊர்லே அஃபிஷியலா அடுத்த மாசம் ஏழாம்தேதிதான் கிராண்ட் பேரண்ட்ஸ் டெ!!

Saturday, June 13, 2009

டிராகுலாவும் சிஸ்டரும்!

எதற்கென்றே தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பது...வயிறு வலிக்க வலிக்க- வயிற்றைப் பிடித்துக் கொண்டு, பார்ப்பவர்கள், “நல்லாத்தானே இருந்தாங்க, என்னாச்சு இவங்களுக்கு” என்று கேட்குமளவிற்கு!விஷயம் பெரிதாக ஒன்றும் இருக்காது,! உண்மையில் ஒன்றுமே இருக்காது! ஆனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக் கொள்ளும்! கட்டுப்படுத்த இயலாமல் பொங்கிக் கொண்டிருக்கும் சிரிப்பலைகள் - ஏதோ அதுதான் அந்த சமயத்தில், ஏன் உலகத்திலேயே மிகவும் funny-ஆக இருப்பதுபோல!! கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் இது!

ஒரு புதிய கணினிக்கூடம் (Lab) ஒன்றை எங்கள் பல்கலை. நிறுவி இருந்தது. ஒன்றிரண்டு வேலைக்களே மீதி இருந்த நிலையில் எங்கள் உபயோகத்துக்கு திறந்து விடப்பட்டு இருந்தது. நாங்களும் இத்துப் போன DOS, FOX PRO-விலிருந்து ஆரக்கிள், புது ஆபரேடிங் சிஸ்டம், வழக்கம்போல சாலிடேர் என்று படம் காட்டிக்கொண்டிருந்தோம்! இரண்டுநாட்கள் கழித்து LAN-ல் ஏதோ பிரச்சினை. மெயிண்டெனன்ஸ் இஞ்சினியரும் வந்து எல்லா கணினிகளையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார். நாங்களும் அவர் செய்வதை நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். (கத்துக்குற ஆர்வம்ப்பா!) அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை போல. ஒரு கணினியில் எதையோ வெகு நேரமாகத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்டார்ட்-லேர்ந்து ப்ரோக்ராம்ஸ், அதைவிட்டா எக்ஸ்ப்ளோரர் என்று!

கல்பனா, தமிழ்செல்வி, சுபத்திரா மற்றும் நான்! எங்களுக்கு சொல்லவே வேண்டாம், சும்மாவே சிரித்துக் கொண்டிருப்போம் - ஆள் யாராவது மாட்டினால் சொல்லனுமா என்ன!
அதுவும், நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற டென்ஷனோடு கூட பரபரப்பாக இருந்தவரைப் பார்த்ததும் லேசாக சிரித்துக் கொண்டோம்! பக்கத்திலேயே லேப்-இன்சார்ஜ்!
சற்று நேரத்தில் “ஹப்பாடா, கிடைச்சுடுச்சி” என்றார் மகிழ்ச்சியோடு. என்ன பிரச்சினையென்றதற்கு, “யாரோ Network neighborhood"ஐ "connection to the pakkathu computer"னு மாத்தி வைச்சுருக்காங்க, தேடறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு” என்றதும் வந்த சிரிப்பை அடக்க மாட்டாமல் வெளியே ஓடினோம் நாங்கள்! நெடுநேரமாகியது எங்களுக்கு சிரிப்பை அடக்க! யாரோ ஒரு ஜூனியர் குட்டிப்பிசாசின் வேலை அது! எவ்வளவு அழகாக மொழி பெயர்த்து பெயரை மாற்றியிருக்கிறாள்!! கிச்சுகிச்சு மூட்டுவதைப் போல, connection to the pakkathu computer என்ற பதம் நீண்ட நாட்களுக்கு எங்களிடையே வழக்கத்தில் இருந்தது!

எங்கள் விடுதியில் ஆறு பேர் ஒரு அறைக்கு. ஸ்டீல் கட்டில்கள் போடப்பட்ட நீளமான அறை.இரவு 10 மணிக்குமேல் எந்த சத்தமும் வரக்கூடாது.(அப்படி வந்தா சிஸ்டர் வந்து சத்தம் போடுவாங்க!):-) வெள்ளிக்கிழமை இரவுகளில் தூங்க வெகுநேரம் பிடிக்கும். ஊர்க்கதை, திருடன் கதை, நாட்டுநடப்பு, பேய்க்கதை எல்லாம் பேசிட்டு தூங்க வேண்டாமா!! அன்று ஆறு கட்டில்களையும் அருகருகே போட்டுக்கொண்டு படுத்ததும் கதை சொல்லும் பணி ஆரம்பித்தது. டிராகுலா கதை. குஷி வந்த ஸோபி, போர்வையை மேலே சுற்றியபடி முக்காடிட்டுக் கொண்டு டிராகுலாவாக மாறி கட்டில்கள் தாண்டித்தாண்டி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தாள். நாங்களும் ஆ, ஊ என்று அலறிக் கொண்டு அட்டகாசம்!

திடீரென எங்கள் அறை கதவு திறக்கப்படும் சத்தம். ஸோபியைத் தவிர நாங்களெல்லோரும்
போர்வையை முகத்தில் மூடி கப்சிப்! சிஸ்டர் கதவைத் திறந்துக் கொண்டு நின்றிருந்தார்!
போர்வையோடு ஸோபி மிகப் பரிதாபமாக சிரிப்பை அடக்கமுடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்! நாங்கள் ஓட்டையின் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். ”you are all grown-ups” அது இதுவென்று வழக்கம் போல திட்டிவிட்டு சென்றுவிட்டார் சிஸ்டர். போர்வைக்குள்ளேயே சிரிப்பை அடக்கமாட்டாமல் இருந்த எல்லோடும் சேர்ந்துக் கொண்டாள் ஸோபியும்! கல்லூரியில் நெடுநாட்களுக்கு, ஏன் அதற்குப்பின்னான எங்கள் கடிதத் தொடர்பிலும்கூட இடம் இருந்தது டிராகுலாவும் சிஸ்டரும்! ”ஸோபி, நீ எப்படி நின்னுக்கிட்டிருந்தே” என்று சொல்வதே போதுமானதாக இருந்தது நீண்ட நாட்களுக்கு, வயிறு வலிக்க எங்களை சிரிக்கவைக்க!

என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது! இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)

Thursday, April 09, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்...பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind....and again I am in utter confusion as I was in 19!!



மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் - நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))



கொஞ்சம் நாஸ்டால்ஜிக் - Rising from the east - Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

Friday, February 13, 2009

பப்புவை ஏமாத்தறது ரொம்ப ஈசி!!

இப்போ ஒரு வாரமா எங்க வீட்டுல ஒரு நடக்கற ஒரு சம்பவம்! என்னன்னா, பப்புவை தூக்கத்திலிருந்து எழுப்ப நான் சொல்லும் பொய்...இது எனக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தையும் நினைவூட்டியது..

பொங்கலுக்கு அப்புறமா எங்களை யாருமே விசிட் பண்ணலை..எல்லா ஆயாக்களும், தாத்தாவும் ரொம்ப பிசி..கல்யாணத்துக்கு போறது, தைப்பூசம் அது இதுன்னு..(அதுவும் பெப்ரவரி, மார்ச் கொஞ்சம் கடினமான காலம் தான்..எந்த விடுமுறையும் கிடையாது..பள்ளி பரிட்சைகள்..அரசுதேர்வு விடைத்தாள் திருத்துதல்-ன்னு ஆயாஸ் ஒரே பிசிதான்!! )

ஓக்கே..புலம்பலை நிறுத்திக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்....தூக்கத்திலேர்ந்து பப்புவை எழுப்பனும்னா மகா கஷ்டம்....ஆனா இப்போல்லாம் “பப்பு, வடலூர் ஆயா வந்துட்டாங்க ”அப்படின்னு சொன்ன உடனே ஸ்பிரிங் மாதிரி எழுந்து கதவை போய் பார்ப்பா..அப்புறம் என்ன, பள்ளிக்கூடத்துக்கு ரெடி செய்ய வேண்டியதுதான்!

பப்பு ஒரு ஒன்றரை வயசு, ரெண்டு வயசா இருக்கும்போது நடக்கும் இது! அம்மா/பெரிம்மா வந்திருக்கும் போதுதான் எனக்கு ப்ரீ டைம் இருக்கும்! அப்போதான் படிக்காம விட்ட ஆவியெல்லாம் படிச்சுக்கிட்டு இருப்பேன் கதவை சாத்திக்கிட்டு..பப்பு வந்து, வந்து கதவை தள்ளுவா..என்னைக் கூப்பிட்டுக்கிட்டே!! நான் உடனே “ ஆச்சி இங்கே இல்லை” ந்னு சொன்னதும் நம்பிக்கிட்டு போய்டுவா! ஆனா திரும்ப வருவா..இதே ரெண்டு /மூனு தடவை நடக்கும்! :-)) அப்புறம் அம்மா/பெரிம்மா பப்புவை வந்து விட்டுட்டுப் போவாங்க, என்னைத் திட்டிக்கிட்டே! இப்போ ஒரே வித்தியாசம்..நான் அங்கே இல்லைன்னு சொன்னதுபோய் ஆயா இருக்காங்க-ன்னு சொல்றேன்!!

கடந்த நாடகளா பப்பு அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றதைப் பார்த்தா பாவமா இருக்கு! கனவெல்லாம் கூட அவங்க வர்றதைப் பத்திதான்!(I bet you aayas..this is not going to last forever..there comes a phase soon!!) சரியா சாப்பிடறதுக் கூட இல்லை..:(
(வந்தாலும் ஒன்றரை நாள் தான் இருப்பாங்க..பப்பு அவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா..அப்புறம் என்ன டே இன்னைக்கு, என்ன டே வருவீங்க என்று அடுத்த வாரயிறுதியை நோக்கி ஓட வேண்டியதுதான்! அது தனிக்கதை!!)

A note to the elders of my family:

சோ,பப்புவை நான் ஏமாத்தக் கூடாதுன்னு நீங்க நினைச்சா சீக்கிரம் வந்து சேருங்க!!(VRS வாங்கினா கூட எனக்கு ஓக்கேதான் ;-) !!)

Tuesday, August 26, 2008

நீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்!!



படம் : http://vikatangroup.blogspot.com


ஆனந்தவிகடனை பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தபோது பப்பு அதை பிடுங்கினாள்.
அவளிடம் கொடுத்து விட்டு, சின்ன புத்தகத்தை படிக்கத்துவங்கினேன். பப்பு பெரிய புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு பக்கம் கிழிந்து விட்டது!!

பப்பு ஏன் புக்கை கிழிச்சே??

நான் கிழிக்கலே..அது கிழிச்சிகிச்சி!!


பாத்து திருப்பனும். இப்படியா கிழிப்பாங்க??

அதுதான் கிழிச்சிகிச்சி..ஏன் கிழிச்சிகிச்சி??

ம்ம்ஹூம்!!

இப்போதெல்லாம், நான் சின்ன எடிஷனைப் படிக்கிறேன். பப்பு, பெரிய எடிஷனை படிக்கி(!)றாள்!!

I love the way she pronounces "ஆனந்த விகடன்”!!

ஃப்ளாஷ்பேக்:

எனது பெரிம்மா சொல்வார்கள், நான் எனது 5ஆவது வயதில் ஆனந்த விகடனை படிக்க ஆரம்பித்தேன் என்று!!மெரினா எழுதின ஒரு நகைச்சுவை தொடர் விரும்பிப் படித்த நினைவு!!எங்கள் குடும்பமே ஒரு ஆனந்த விகடன் குடும்பம். பழைய ஆனந்த விகடன்களை சேர்த்து வைத்திருந்து, அடிக்கடி அவற்றிலிருந்து சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரித்து தொகுப்புகளாக தைத்து வைக்கும் பழக்கம் சமீப காலம் வரை தொடர்ந்தது.
ஸ்டெல்லா புருஸின் “அது ஒரு நிலாக்காலம்” தொடர்கதை அப்படித்தான் பொழுதுபோகாத ஒரு மதியவேளையில் புத்தக அலமாரியை நோண்டிக் கொண்டிருந்த போது கிடைத்த தொகுப்பிலிருந்து அறிமுகமாயிற்று! அந்தத் தொடர் வந்தபோது
நான் பிறந்திருக்கவில்லை.இப்போது வரும் சின்ன விகடனின் கதைகள் ஒருவேளை அந்தத் தொகுப்புகளில் தேடினால் கிடைக்கலாம்! ஓரிரு வருடங்கள் நான் பொதுத்தேர்வு எழுதிய வருடங்கள் மட்டும் வீட்டில் ஆனந்த விகடன் பார்த்த நியாபகம் இல்லை!!

குப்பை என திட்டினாலும், ஆவி படிக்கும் பழக்கத்தை யாராலும் விடமுடியவில்லை எங்கள் வீட்டில் பப்புவிலிருந்து எனது பாட்டிவரை!!

Tuesday, July 01, 2008

"அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும்.
த்ரிஷாவையும்!! "அக்கம்-பக்கம் அக்கா" என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.

akkam_pakkkam-1.mp3 -

பப்பு குரலில் "அக்கம் பக்கம்" !!


ஃப்ளாஷ்பாக்

சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில் பார்க்கும்போது...ம்ம்..
எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியே!! (பிடித்த நடிகையை மார்க்கெட் போனபிறகு சீரியலில் பார்ப்பது போல) Dar படத்தில் இந்தப் பாடலில் ஜூஹியை எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம்.





எதிர்காலத்தில் த்ரிஷாவும் குர்-குரேயை விளம்பரப்படுத்தலாம், யார் கண்டது!!

Friday, June 13, 2008

பப்பு-சைக்கிள்-நான்

பப்புவின் முதல் சைக்கிள் மியூஸியத்தில் வைக்கும் நிலையையடைந்தது, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு.அவள் எவ்வளவோ முயற்சித்தாள், சீட்டை பிரித்தெடுப்பதற்கு! கடைசிவரை முடியவில்லை!!

வேளச்சேரி பை-பாஸ் ரோட்டில் இருக்கிரது BSA சைக்கிள் கடை. குட்டீஸ் ட்ரை-சைக்கிளிலிருந்து, ட்ரெட்மில் வரை கிடைக்கிறது. பப்புவை அழைத்து சென்றதால், உயரம் , பெடலிங் எல்லாம் பார்த்து முடிவு செய்ய வசதியாயிற்று!

பேக் செய்வதற்காகக் கூட, சைக்கிளை விட்டு இறங்கமறுத்துவிட்டாள்!!
அந்த மாடலில் மற்றொன்றை வெளியில் நிறுத்தியபோதும், அந்த சைக்கிளை விட்டு ம்ஹூம்..இறங்கவேயில்லை!

வீட்டிற்கு வந்தபின், சீரியஸாக குனிந்து சைக்கிள் பாரில் இருந்த காற்றுகுமிழ் பேப்பரை ஒவ்வொன்றாக உடைக்க துவங்கியிருந்தாள்!!

ஃப்ளாஷ்பாக்

முதல் சைக்கிள் என் பன்னிரண்டாம் வயதில் கிடைத்தது. BSA SLR பெண்கள் சைக்கிள்.
அதை வாங்குவதற்க்கு நான் போகவேண்டியிருக்கவில்லை! நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னிடம் இருந்தது. அதன் விலை பப்புவின் தற்போதைய
சைக்கிள் விலையில் பாதி!!