Tuesday, June 09, 2015

சென்னை டூ கவுஹாத்தி டூ ஷில்லாங் டூ ச்சிராபுஞ்சி


அந்த ஏழு சகோதரிகளில், யாரை பார்க்க வேண்டுமென்றாலும், கவுஹாத்தியிலிருக்கும் வாயிற்கதவைத்தான் தட்ட வேண்டும். நாங்களும்  தட்டினோம். கவுஹாத்தியின் லோக்பிரியா கோபிநாத் போர்தோலொய்  விமானநிலையம் , எங்களை இனிதே வரவேற்றது. இந்த முறை, ஏழு சகோதரிகளில், மேகங்களை மேகலையாய் அணிந்திருப்பவளைத்தான் சந்திக்கப்போகிறோம்.

கவுஹாத்தியிலிருந்து, மேகலாயா செல்ல வேண்டுமென்றால்,  இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று டாக்ஸி பிடித்து செல்லவேண்டும். இரண்டு, ஹெலிகாப்டர். ஹெலிகாப்டர் சர்வீஸூக்கு எங்கள் பட்ஜெட்டில் இடம்  இல்லை, அதோடு உயிர் மேல் பயம்.

விமானநிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே, 'ஷில்லாங்' 'ஷில்லாங்' என்று  பல குரல்கள் கேட்கும். ஆம், ஷேர் ஆட்டோ மாதிரி 'ஷேர் கேப். தலைக்கு 500 ரூ. நாங்கள் மூன்று பேர் மற்றும் ஆளுக்கிரண்டு  மூட்டை முடிச்சுகள். ஷேர் கேப் வேலைக்காகாது என்று,  தனி வண்டியை ஷில்லாங்கிலிருந்து வரச்சொல்லியிருந்தோம்.

கவுஹாத்தியிலிருந்து, ஷில்லாங்கிற்கு காரில் செல்வதாக இருந்தால், ML என்று பதிவு செய்திருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ஷில்லாங்கிலிருந்து செல்லும் பயணத்திற்கும் இது பொருந்தும்.

ஓட்டுநர் பெயர், கார் பதிவு எண் பற்றி முன்பே மடல் வந்திருந்ததோடு, ஓட்டுநர் பா ஷிம், தப்பும் தவறுமாக‌ என் பெயரை பிரிண்ட் அவுட் எடுத்துக்க்கொண்டு காத்திருந்தார். :-)

இரவு, ஏழு மணிக்குத்தான் கவுஹாத்திக்கு வந்து இறங்கியிருந்தோம். கொலப்பசி. பா ஷிம்மிடம், 'டீக்கடையில் நிறுத்த' சொல்லிவிட்டு, வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். மழை பெய்திருந்தது போல. ஆங்காங்கே, நிலத்தில் நீர் தேங்கியிருந்தது.  சூரியன் அப்போதுதான் மறையத் துவங்கியிருக்க, இருள் மெல்ல எங்களை சூழ்ந்தது.

வித்தியாசமான ஆனால் வண்ணமயமான‌ உடைகளில், ஆண்களும் பெண்களும் சாலையை கடந்தும், நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். போடோ மக்கள். பழங்குடி உடையில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. விமானநிலைய சாலையிலிருந்து இப்போது காட்டுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

'யானைகள் கடக்குமிடம். மெதுவாக செல்லவும்' என்று அறிவிப்பு பலகையை பார்த்ததும், 'ஹேய் பப்பு, யானைல்லாம் வருமாம்ப்பா..' என்று பப்புவிடம் சொல்லிவிட்டு, 'ஹையய்யோ...யானைல்லாம் வந்தா எனன் பண்றது?' என்று கவலைப்பட்டு, ஷிம்மிடம் கேட்க, அவரோ, 'ஆமாம், சில சமயம்தான். இப்போல்லாம் வராது' என்று யானை டாக்டர் மாதிரியே பேசினார்.

போடோ இன மக்களை, அஸ்ஸாமின் நிலக்காட்சிகளை, மூன்று மணிநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து அஸ்ஸாமின் சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை, அஸ்ஸாமும் தமிழ்நாடு போலவே இருப்பதை....மனம் அசைபோட்டபடி இருந்தது.

ஒரு டீக்கடை கூட வரவில்லை. அல்லது அவர் நிறுத்தும்படி வசதியாக‌ இல்லை. சேறும் சகதியுமாக,சாலையைத் தாண்டி இருந்தது. பப்புவோ, பசியில் க்ர்ர்ர்ர்ர்ர்.

நடுவில், தாண்டமுடியாத அளவுக்கு சுவரொன்றை நடுவில், கட்டி சாலை இரண்டு பக்கமாக பிரிக்கப் பட்டிருந்தது. வலதுபக்கம், நல்ல கடைகளாக தென்பட, இடதுபக்கம் இருட்டில் மூழ்கி இருந்தது.  லாரி சுத்தம் செய்யும் இடங்களாகவே இருந்தது, இடதுபக்கம். வலதுபக்கம் போல, இங்கும் நல்ல கடைகள் வரும், ஏதாவது உண்ணலாம் என்று நினைத்திருக்க நேரம் கடந்துக்கொண்டிருந்தது. 

ஒருவழியாக, நாங்களே 'இங்கே நிறுத்துங்க நிறுத்துங்க' என்று கத்தி ஒரு கடையில் நிறுத்தினோம். பேக்கரி, இனிப்புகள் என்று கடை நிறைந்திருக்க, இரண்டு டீ மட்டும் கேட்டோம். பப்பு, 'ஹே ஆச்சி, ரசகுல்லா...ரசகுல்லா வேணும்' என்று கதற, 'இங்கேல்லாம் வேணாம்ப்பா, நல்ல கடையிலே ஷில்லாங்லே போய் வாங்கலாம்' என்று அடக்கினேன்.

அஸ்ஸாம் டீ.

சாலையின் வலதுபக்கம் மட்டும் நல்ல வெளிச்சமான கடைகள், இரண்டுகடைகளுக்கு ஒரு கடை வைன் ஷாப்...எல்லாவற்றிலும் யாராவது வந்து வாங்கிக் கொண்டுதான் இருந்தனர். இந்த பக்கமோ, ஒரு பிஸ்கட் கடை கூட காணோம். விசாரித்தால், அந்த பக்கம் மேகாலயாவாம். இந்த பக்கம் ,நாங்களிருப்பது அஸ்ஸாமாம். ஆகா, ஒரு சாலையில் ஒரே நேரத்தில் 2 ஸ்டேட்ஸ்!!

இந்தியன் ஆயில், மேகாலயா பக்கம்- அஸ்ஸாம் ஆயிலாக-  மாறியிருந்தது. வண்டிக்கான எரிபொருளும், மனிதர்களுக்கான எரிபொருளும் மேகலாயா பகுதியில் மிகவும் மலிவாம். சுவரேறி குதித்து வாங்கிக்கொண்டு செல்வார்களாம். அதனால்தான் சாலைக்கு இந்த பக்கத்தில் கடை வைக்க எவருக்கும் ஆர்வமில்லை போலும்.

நடுவில், பெர்லின் சுவர் போல ஒரு குட்டிச்சுவர். அஸ்ஸாமிலிருந்து மேகாலயா தனியாக பிரிந்ததுதான் காரணம். பப்பு ரொம்ப பொறுப்பாக, 'எப்போ தனி ஸ்டேட் ஆச்சு மேகலாயா? உத்ராகாண்ட் அப்போவா' என்றாள். க்ர்ர்ர்ர்ர்....

கார் மெல்ல மலைப்பாதைகளில் ஊடுருவிச் சென்றது.சாலைகள் அவ்வளவு நன்றாக இருக்கின்றன. வெண்ணைய் போல வழுக்கிக்கொண்டு செல்கிறது வண்டிகள். எதிரில் அத்தனை லாரிகள். என்ன ஏற்றிச் செல்லும் அல்லது என்ன ஏற்றிகொண்டு வரும்? ஷில்லாங்குக்கு தேவையானது எல்லாமே வெளியிலிருந்து வந்தாக வேண்டுமோ?

முறுக்கு போன்ற பாதைகளென்றாலும், தலைசுற்றல், மயக்கம் எதுவும் இல்லை.  கொண்டை ஊசி வளைவுகள் இல்லாதது, நிம்மதி! சாலையின் ஓரத்தில் பார்த்த பெட்ரோல் பங்க்குகள், இருபது வருடத்துக்கு முந்தைய தமிழ்நாட்டை நினைவுபடுத்தின.

நாங்கள் செல்லவேண்டியது ச்சிராபுஞ்சிக்கு. அன்றிரவு மட்டும் ஷில்லாங்கில் தங்குவதாக திட்டம். இரவில் ஷில்லாங் பயணம் எப்படியிருக்குமோ, மலைப்பாதையிற்றே..கவுஹாத்தியில் தங்கிவிடலாமா என்று குழப்பிக்கொண்டிருந்தேன். இரவுகளில், பயமில்லாமல் ஷில்லாங்கிற்கு பயணிக்கலாம் என்றன சாலைகள்.

நமது ஊரைப் போல், அடிக்கடி அடிக்கும் ஹாரன் சப்தம் இல்லை. பொதுவாக, சாலைவிதிகளுக்கு கட்டுப்பட்டு, முக்கியமாக மலைப்பகுதியில்  இருக்கவேண்டிய கவனத்துடன் செல்கின்றன வண்டிகள்.

ஊரை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியாக, லாந்தர் விளக்குகள் வைத்துக்கொண்டு பழக்கடைகள். முக்கியமாக, கொலு வைத்ததுபோல, படிகளில் விதவிதமான பாட்டில்கள். அத்தனையும் ஊறுகாய்களாம்.

 பெரும்பாலும், பெண்களே எல்லாக் கடைகளிலும். 'எப்படி இந்த ராத்திரியிலே, இருட்டுலே தனியா உட்கார்ந்தி ருக்காங்க,  நம்ம ஊரிலே எட்டு எட்டரை மணியானா ரோட்டுலே பெண்கள் நடமாடறதை பார்க்கவே முடியாது' என்று மனம் தராசை தூக்கியது.

பராபானி தாண்டியதும், வரிசையாக வீடுகள். பராபானிதாம் உமியம் ஏரி. செயற்கையாக உருவாக்கப்பட்டது. இரவில் ஒன்றும் தெரியவில்லை. இரவு ஒன்பதரை இருக்கும். பெண்கள், ஆண்கள் என்று கவலையில்லாமல் நின்றுக்கொண்டும், நடந்துக்கொண்டும் இரவின் குளிரை அனுபவித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இளம் பெண்கள் நவீன உடைகளில் இருக்க, நடுத்தர வயது பெண்கள், ஜெயின்சம் உடையில் இருந்தனர். ஒருவரைக் கூட புடவையில் காணமுடியவில்லை.  இந்தியாவின் தென்பகுதியிலிருந்து வடபகுதிவரை, பெண்களை முழுநீள -கட்டும் விதம் வெவ்வேறாக இருந்தாலும்- புடவையில் கண்டிருந்த எங்களுக்கு புதியதாக இருந்தது.

வழியெங்கும் கடைகள்...ஒன்று ஊறுகாய் கடைகள் அல்லது இறைச்சிக் கடைகள். இரவு எத்தனை மணியானாலும், இறைச்சிக்கடைகள், முக்கியமாக பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். 'ஷில்லாங்கில் இறைச்சிதான் ஸ்பெஷல். லஞ்சுக்கு, டின்னருக்கு என்று இறைச்சிதான் உண்போம்' என்றார் பா ஷிம்.

வேறு ஊர், காலநிலை, மக்களின் முகங்கள், உணவு, உடை, மொழி என்று முற்றிலும் புதியதோர் உலகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தின. இந்தியாவுக்குள்தான் எத்தனை உலகங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்! பப்பு மட்டும் இந்திய மாநிலங்களை பற்றி ஆர்வம் காட்டிராவிட்டால், இவற்றை எல்லாம் எப்போது அறிந்துக்கொண்டிருப்பேனோ!

சடாரென்று ஒரு வளைவில் வண்டி திரும்பியபோது திகைத்துப் போனேன். மின்மினி பூச்சிக்கூட்டம் போல,வானத்து நட்சத்திரக்கூட்டம் போல.... ஆம், ஷில்லாங்கை நெருங்கிவிட்டோம். இன்றிரவு நாங்கள் தங்கப்போவது ஷில்லாங்கின் உள்ளூர்க்காரரின் வீடொன்றில். ஹில்டாப் சாட்டு.

போனில் பேசி, இராத்தங்கலுக்கும் இரவு உணவுக்கும் பேசியிருந்தேன்.  இந்த வீடு இருந்தது, உண்மையிலேயே ஹில்டாப்தான். வீட்டை அடையவும், மழை  தூறவும் சரியாக இருந்தது. வாயிலில் வந்து வரவேற்றார், உரிமையாளர். 

காரிலிருந்து இறங்கியதும், முகத்தில் மோதியது குளிர்க்காற்று. பண்டங்களை வெளியில் எடுக்கக்கூட விடாமல், எங்கள் கண்களை ஈர்த்தது, அங்கிருந்து தெரிந்த ஷில்லாங்கின் இரவுக் காட்சி. கீழிருந்த அறையை எங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.எளிமையான உணவு. சப்பாத்தி, சாதம், பருப்பு, காய்கறிக்கூட்டு. பசிக்கும், குளிருக்கும் அவ்வளவு நன்றாக இருந்தது. மலையுச்சி என்பதால் காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது.உணவுக்குப் பின்,வெளியில் நின்று சற்று நேரம் குளிரை அனுபவித்தோம். இதற்காகத்தானே, வெயில்தகிக்கும் சென்னையிலிருந்து ஓடி வந்திருக்கிறோம்!

இன்றிரவு மட்டும் இங்கு. நாளையிலிருந்து, மூன்றுநாட்களுக்கு  ச்சிராபுஞ்சியின் வசம். நாளை காலையில் புறப்படுவதாக திட்டம். பா ஷிம் வண்டிதான். அவருக்கு இங்கு ஒரு வீடும், ச்சிராபுஞ்சியில் ஒரு வீடும் இருக்கிறதாம். கொடுத்து வைத்தவர் என்று நினைத்துக்கொண்டேன்.

பைன் மரங்களை, அதனை உராயும் காற்றை, மினுக்மினுக்கென்று ஜொலிக்கும் ஷில்லாங் நகரத்தை,வீடுகளை உற்றுநோக்கிவிட்டு படுக்கைக்குச் சென்றோம். இரவு முழுக்க, காற்று கண்ணாடி ஜன்னல் கதவுகளில், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளில் முட்டி மோதும் சத்தம். எங்கேயோ, ஏதோ பெயர் தெரியாத ஊர்களில் அலைந்து திரிவது போல கனவு.

திடீரென்று, கண்களில் வெளிச்சம் கூச பார்த்தால் விடிந்திருக்கிறது. 'ஹைய்யய்யோ..ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போல...' என்று, கண் எரிச்சலோடு, எழுந்து பல் துலக்கி நேரம் பார்த்தால் மணி நாலரை. எட்டு மணிபோல் தகதக‌வென்று வந்துவிட்ட சூரியனை பார்த்து அதிசயித்து, பறவைகளை அவதானிக்க தொடங்கினோம். பப்புவையும் எழுப்பி விட்டேன். இப்படியாவது, ஐந்து மணியை பார்க்கட்டுமே!ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிதாக மலந்திருந்தன. செம்பருத்தியை இந்த சிவப்பில் பார்த்ததேயில்லை. ஊஞ்சலாடிக்கொண்டும், குளிர்க்காற்றை அனுபவித்துக்கொண்டும் இருந்த நேரத்தில், வந்தார் ஒருவர். 'என் பெயர் டீன். ஐஸ்வரியாவின் கணவன்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.நினைவு தெரிந்து, 'இன்னாருடைய‌ கணவன்' என்று தன்னை யாரும் அறிமுகப்படுத்திக்கொண்டதை பார்த்ததில்லை. இதுவரை எத்தனையோ வீடுகளில் விருந்தினராக தங்கியிருக்கிறோம். அனைவரும், 'என் மனைவி' என்றுதான் அறிமுகப்படுத்தி வைப்பார்களே தவிர, 'அவரது கணவன்' என்று சொல்லி கேட்டதே இல்லை. இனிய அதிர்ச்சி!!                           ( Hilltop Chateau)
 
கஸி இனத்தில், பெண்களுக்குத்தான் உரிமைகள் அதிகம். கஸீக்களில் குடும்பத்தை, சமூகத்தை கட்டி ஆள்பவர்கள் பெண்கள்தான். சொத்துரிமைகளும் பெண்களுக்குத்தான்.  இவற்றை எல்லாம் பேசியபடி பிரட்,தேநீரோடு காலை உணவை அருந்தினோம். பா ஷிம் வந்துவிட, மழையை துரத்திப் பிடிக்க ச்சிராபுஞ்சிக்கு பயணமானோம்.

No comments: