Showing posts with label மைல்கல். Show all posts
Showing posts with label மைல்கல். Show all posts

Saturday, December 31, 2011

பப்பு டைம்ஸ் - 7DB

* டீவி இல்லாமல் நாங்கள் கடந்து வந்த முழு வருடம் இது. டீவி இல்லாத குறையை தீர்க்க பப்பு லாப்டாப்பை எடுத்துக்கொள்வாள். (பெயிண்டில் வரைவது அல்லது அனிமேசன் படங்கள்) சொல்லப்போனால், டீவி இல்லை என்ற குறையே இல்லை. நாங்களும் அப்படி ஒரு வஸ்து உலகில் இல்லவே
இல்லை என்பது போல ஆகிவிட்டோம். (இதில், ஆயாதான் பாவம். பப்புவுக்காக டீவியை தியாகம் செய்த ஆயா என்று வரலாறு பேசுமல்லவா!) தற்போது, வெளியில் எங்காவது டீவி பார்க்க நேரிட்டாலும், முன்போல் ஆர்வம் காட்டுவதில்லை.

மற்றபடி, குழந்தைகள் படம் ஒன்று ஓடிவிடுகிறது. அதுவும், நான் கணினி உபயோகித்தால், அடுத்தது அவளுக்கும் கொடுத்தாக வேண்டும். (”இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”) Tangled, how to train your dragon, Kung fu panda,
avatar, horton hears a who - பப்புவின் மிக மிக மிக ஃபேவரைட் படங்கள்.
(”ஒரு கீரைக்கு ஒரு படம் பத்தும், இல்லப்பா”- பப்பு)


* ஸ்கூட்டியில் முன்னால் நின்று கொள்ள வெளியில் செல்வது பப்புவுக்கு (எனக்கும்) மிகவும் பிடித்தமானது. அதுவும், காற்று முகத்தில் மோதினால் போதும். உல்லாசமான மனநிலைக்குச் சென்றுவிடுவாள். பின்னர், ஒரே பாடல்கள்தான். அவளது பாடல் புத்தகத்திலிருந்து அத்தனை பாடல்களும் பாடியாகி விடும். பப்பு, பின்னால் உட்கார அமர ஆரம்பித்ததிலிருந்து பாடல்களை மிஸ் செய்கிறேன். ஆனாலும், சின்னஞ்சிறு கைகள் பின்னாலிருந்து
என்னை சுற்றிக்கொண்டு வருவதும் நன்றாகத்தான் இருக்கிறது.


* இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்திருந்தாள். தமிழ் ஆரம்பத்தில் தடுமாற்றம். இடையில் சிறிது முன்னேற்றம். ’கோ’ மற்றும் ’கௌ’ வரிசைகள் சமயங்களில் அவள் கண்ணை ஏமாற்றும். தற்போது குறைந்திருக்கிறது. மேலும், சின்னதாக இருந்தால் மட்டுமே படிக்க ஆர்வம் காட்டுவாள். ஒரு வாக்கியம் அவள் படித்தால் அடுத்த வாக்கியம் நான் படிப்பேன். இப்படி ஆரம்பித்தது, ஒரு புத்தகம் அவள் படித்தால், அடுத்த புத்தகம் நான் என்ற அளவில் வந்திருக்கிறது. ஆனாலும், அதுவும் மூடை பொறுத்துதான். எப்போதும் ஒரே ஆட்டமும், பேச்சும். (கதை சொல்வதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இருந்தால் நன்றாக இருக்கும்!ஹ்ம்ம்....)


year 2011

* தமிழிலிருக்கும் தடுமாற்றம் ஆங்கிலத்தில் இல்லை. எவ்வளவு பெரிய வார்த்தையாக இருந்தாலும் படிக்க தயங்க மாட்டாள். ஒவ்வொரு
வார்த்தையாக சொல்லி சொல்லி படித்து விடுவாள். தற்போது, சரளமாக சிறார் கதைகளைப் படிக்கிறாள். இதற்கு மாண்டிசோரி முறைக்கும்,
ஆண்ட்டிகளுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

* ’நான் போலீசாக போறேன்’ என்பாள் திடீரென்று. போலீசாகி என்னை ஜெயிலில் வைத்துவிடுவாளாம். ஒருநாள், எல்லா புத்தகங்களையும் தலையில் வைத்து
தூக்கி வந்து தூக்கி வந்து படுக்கையில் போட்டுக்கொண்டிருந்தாள். கட்டிடத் தொழிலாளியாம். பிறகு, ஆண்ட்டியாக போறேன் என்பாள். ஒருநாள், ’சயிண்டிஸ்டாக போறேன்’ என்பாள். ’நான் தோழரா ஆயிடறேன்’ என்பாள். ’நான் ராக்கெட்ல போறேன்ப்பா’ என்பாள், ஒரு சமயம். ’ஒரே நேரத்தில எல்லாமா ஆயிட முடியாதாப்பா’ என்பது சமீபத்திய ஆதங்கம்

* ”பென் டென், ஸ்பைடர் மேன் எல்லாம் வேஸ்ட்.டோரா, பார்பிதான் சூப்பர்.” என்றாள் ஒரு நாள். பள்ளியில், ஆணா, பெண்ணா சண்டை வந்துவிட்டது போல!
’கேர்ல்ஸ் வயித்துலதான் பேபி வருது ’ என்றெல்லாம் ஆண்/பெண் சண்டை நடந்திருக்கிறது. (’பாய்ஸ் வயித்துல பேபி வளர்ற பேக் ஏன் இல்ல?’ என்பது அவளது நீண்ட நாள் சந்தேகம். அது போல, குழந்தை எப்படி அம்மா வயிற்றில் வருகிறது என்பதுவும். ’டாக்டர்கிட்டே போகும்போது நீயே கேளு. அப்போ மட்டும் அமைதியா இருக்க இல்லே!’ என்று தப்பித்துக்கொண்டேன்.)
“பெஸ்ட் ஃப்ரெண்டு” மற்றும் ” இனிமே என் ஃப்ரெண்டே இல்ல”என்பதெல்லாம் இந்த வருடத்தின் புது அனுபவங்கள். ஆனாலும், ரகசியம் சொல்ல மட்டும் பப்புவுக்கு தெரியவில்லை.

* பப்பு, முழுமையாக டாய்லெட் ட்ரெய்ண்ட்! இது தானாகவே எந்த பிரயத்தனங்களும் இல்லாமல் நடந்தது நிம்மதி.

* முன்பெல்லாம், அநியாயத்துக்கு வீட்டில் ஏக வசனமாக இருந்தது. ( வாடி, போடி, உனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு....etc..) அநேகமாக, இது சீசனல் என்று நினைக்கிறேன். ’கெட்டா வார்த்தை பேசினா ஹார்ட் ப்ளாக்காகிடும், நல்ல வார்த்தை பேசினாதான் ஹார்ட்ல நல்லா ப்ளட் போய் ரெட்டா இருக்கும்’ என்று சொல்லி வைத்திருந்தோம். தாயம் விளையாடும்போது நான் ஜெயிக்கிற மாதிரி
வந்துவிட்டால் எப்படியாவது தில்லாலங்கடி வேலை செய்து அவள் மேலே வந்துவிடுவாள். கண்டுபிடித்துவிட்டால் கோபம் வந்துவிடும்.
ஒருமுறை,

“போடி, நான் விளையாட்டுக்கு வரல” என்றாள்.

”ஹார்ட் ப்ளாக் ஆகப்போகுது...” என்றதும் லேசாக அதிர்ச்சியடைந்துவிட்டாள்.

பிறகு, ”நான் கெட்ட வார்த்தை சொல்லனும்னு நினைக்கல. அதுவாத்தான் என் வாயில வருது. நான் உன் வயித்துல இருந்தப்போ உன் ஹார்ட் அடிக்கடி ப்ளாக்கா மாறுச்சு. அதைப்பார்த்துதான் எனக்கும் அதுமாதிரி
வருது!!”

*பேச்சை மாற்றுவது, யோசிக்காமல் மாற்றி சொல்வது, கோள் சொல்வது எல்லாம் இந்த வருடத்தின் வளர்ச்சிகள்(?!). கலரிங் சாண்ட் செய்த மீதி இருந்திருக்கிறது. ஆயாவின் தலைமுடியை சீவுவதாக சொல்லி அதை எடுத்து அவரின் தலையில் போட்டிருக்கிறாள். கேட்டதற்கு, ஆயா என் தலையில் போட்டாங்க என்று சொன்னதோடு நிறுத்திருக்கலாம். (ஆயா பாவம்!!!)
அடுத்த நாள் பார்க்கும்போது அவள் தலையிலும் மணல். அவளாகவே எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறாள். ஸப்பா!!

”நாளைக்கு ஒரு ஸ்டிக்கரும், என்வெலப்பும் மறக்காம எடுத்துட்டு வர சொன்னாங்க, ஆண்ட்டி” என்றாள் இரவு தூங்கும்போது.
”என்ன ஸ்டிக்கர்? எதுக்கு கேட்டாங்க? டைரியில ஒன்னும் எழுதலையே ஆண்ட்டி”
“இல்லப்பா, எங்ககிட்டே சொன்னாங்க” என்றதும், ‘ அந்த ஸ்டிக்கர் புக்லே ஸ்டிக்கரை கட் பண்ணி எடுத்துக்கோ, என்வெலப் நாளைக்கு
ஸ்கூல் போகும்போது வாங்கிக்கலாம் என்றதோடு நானும் மறந்துவிட்டேன். பள்ளிக்கு சென்றதும்தான் நினைவுக்கு வந்தது. அவளது ஆண்ட்டியை பார்த்ததும் இது நினைவுக்கு வந்ததும் அவரிடம் எடுத்துவர மறந்துவிட்டதாக சொன்னேன்.
சரி, அவளை எதுவும் சொல்லக்கூடாதே என்பதற்காக. ஆண்ட்டிக்கு எதுவும் புரியவில்லை. அவரும் நான் கேட்ட அதே கேள்விகளை கேட்டார்.

பக்கத்திலிருந்த பப்பு, ’ஆண்ட்டி சொல்லல, நீ போ’ என்று ஓடிவிட்டாள்.

பின்னர்தான் தெரிந்தது, பிரக்னண்டாக இருக்கும் ஆண்ட்டிக்கு இந்த குட்டீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு க்ரீட்டீங்க்ஸ் கொடுக்கப்போகிறார்களாம். அதற்குதான் இந்த ஏற்பாடாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

* அலமாரிகளை ஒழுங்காக எப்போது பார்த்தோம் என்ற நினைவே இல்லை. சமநிலைக்கு சவால் விடுவதைப்போல்தான் இருக்கின்றன. எதையாவது எடுத்தால் மொத்தமும் கீழே கிடக்கும். அதனால்,அடுக்கி வைப்பது என்பதே இல்லை. எப்படி வைத்தாலும் அதன் வாழ்க்கை ஒரு சிலநாட்கள்வரைதான் என்பது தெரிந்துவிட்டது அதனால், யார் எடுக்கும்போது விழுந்தாலும் அவர்கள் அதனை எடுத்து வைத்துவிட வேண்டும் என்பது விதி. பெரும்பாலும், பாதி விளையாட்டு சாமான்கள் படுக்கையில் கிடக்கும். மீதி கீழே.

தற்போது மேடம் விதியை மாற்றி அறிவித்துவிட்டார்கள், “ இனிமே, யார் தள்றாங்களோ அவங்கதான் எடுத்து வைக்கணும்னு இல்ல, அவங்கவங்க திங்க்ஸ் கீழே விழுந்தா அவங்கதான் எடுத்து வைக்கணும்!”

* ஒருமுறை, பப்புவின் சாக்கோஸை எடுக்கும்போது தவறி கீழே கொட்டிவிட்டேன். அருகில் வந்த பப்பு, “பரவால்ல, பரவால்ல, விடு, எடுத்துடலாம். தெரியாம விழுந்துருக்கும் ” என்று என்னை தேற்றினாள். சின்ன வயதில், இப்படி எதையாவது சிந்திவிடுவேனோ என்று அதீத கவனத்துடன் இருப்பதாலேயே அப்படி நடந்துவிடும். ஆயாவின் டெரரிசம்தான் காரணம். இப்போதும், கண்ணாடி போன்ற பொருட்களை கையாளும்போது கீழே போட்டுவிடுவேனோ என்றேதான் தோன்றும். ஆனால், பப்புவிடம் அந்த பதற்றம் எதுவுமில்லை, தற்போதுவரை. :-)

நாற்காலி அடியில் அல்லது மேசைக்கடியில் அல்லது கேட்டின் மீதேறினால்
ஆயா,’ பார்த்து...பார்த்து, இடிச்சுக்கப்போறே’ என்று பதறுவார். அப்படி சொல்லும்போதுதான் பதற்றம் அதிகமாகி அவர் சொன்னதுபோல நடக்கும்.
இப்படி, பாதிக்கப்பட்டதால் ”கீழே குனிஞ்சு வா, மெதுவா புடிச்சுக்கிட்டு இறங்கு” என்றோ கீழோ கொட்டிவிட்டாலோ “பரவால்ல, அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணனும்” என்று சொல்லிவிடுவேன். அந்த பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

* இந்த வருடம் முழுக்க, பப்புவுக்கு மிகுந்த என்டர்டெயினராக இருந்தது, “ஆச்சியோட குட்டி வயசுல” என்ன நடந்தது என்பதுதான். பால் குடிக்க, சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் என்னோட “குட்டி வயசு கதைகள்”தான். பப்லு போய் ஆச்சியோட குட்டி வயசு!! இப்படி ஆயாவும், பெரிம்மாவும் சொன்னதுபோக, பப்புவே என்னோட குட்டி வயசுக்கதைகளைச் சொல்கிறாள்...என்ன,
சில கதைகளெல்லாம் பப்பு சொல்லிதான் எனக்கே தெரிகிறது(மரத்தில் ஏறிக்கொண்டு இறங்கமுடியாமல் அழுதது etc)!!

எதேச்சையாக வாங்கிய 'tell me a story mama' புத்தகமும் கொஞ்சம் இது போல்தான் என்பதில் கொஞ்சம் ஆறுதல் - நான் மட்டும் தனியா இல்லையென்று.

* மழலையெல்லாம் எப்போதோ மறைந்துவிட்டாலும் ஒரு சில வார்த்தைகளை அவள் உச்சரிக்கும் விதம் சிரிப்பாக இருக்கும். ’நிம்மேதி’, ’அமேதி’, ’ஒளைச்சு வைச்சிருக்கேன்.’- சாம்பிளுக்கு சில. அதே போல, அவள் உபயோகிக்கும் சில தமிழ் வார்த்தைகளும் - ’நீங்க அதை பாக்கணும்னு விரும்புறீங்களா? ’...etc


* காலை நேர பரபரப்புகளில், அவ்வப்போது கைகலப்பு நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போய்விடும். ஆனாலும், பள்ளிக்கு செல்லும் சமயம், ‘சாரி பப்பு, நீ சொன்னதை செய்யாம இருந்ததாலதான் கோவம் வந்துடுச்சு, லேட்டாகுது இல்ல, அதான் அடிச்சுட்டேன், ,மன்னிச்சுடு, குட் டே’ என்று சொல்லி விடுவேன். ’பரவால்ல ஆச்சி, உனக்கு இன்னும் 99 சான்ஸ் இருக்கு” என்பாள் மிகுந்த பெருந்தன்மையுடன்.

* மேலும், தன்மானம் ஜாஸ்தி! தன்னாலே எல்லாம் செய்ய முடியும், முக்கியமாக வெளியில் அல்லது மற்றவர் முன்பு நாங்கள் உதவுவதை அவள் விரும்புவதேயில்லை. அவள் தட்டில் நான் கை வைப்பதையோ ஊட்டி விடுவதையோ சுத்தமாக விரும்புவதில்லை. ஆனாலும், நாந்தான் திருந்தவில்லை.

* டெங்கு ஜூரம் வந்து கொஞ்சம் டென்சன் கொடுத்தது.


மொத்தத்தில் புது அனுபவங்கள்+போராட்டங்கள்+ மகிழ்ச்சிகள்+ வலிகள் - பரபரப்பான 2011! தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களின் நன்றிகள்!

Tuesday, December 20, 2011

பப்புவின் ’தினம் ஒரு சிந்தனை’கள்

வேகமாக ஓடி கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொண்ட பிறகு, பப்பு எழுதிய thought for the day:



(அந்த if என்னோட டச்!)

thought for the day என்று, ஒன்றை தினமும் எழுதிச் செல்ல வேண்டும். கூடவே, அதன் அர்த்தமும். ( ’old is gold ’ போல - ஏதோ எனக்கு தெரிந்த தாட் ஃபார் த டே! ) இதற்காக, நெட்டில் தேடி சிலதை பிடித்து வைத்திருந்தேன். ஆண்ட்டி வேறு, ஷார்ட்டா இருக்கணும் என்று வேறு சொல்லியிருந்தார். பப்புவிடம் சொன்னால் ம்ஹூம். கேட்கவேயில்லை. ”நாமளேதானே தாட் பண்ணி எழுதனும்?” என்று தினமும் அவளாக எதையாவது எழுதுகிறாள். (அநேகமாக பெரும்பாலும் அவளது அனுபவத்திலிருந்து - மேலே இருப்பது போல). அதைவிட ஹைலைட், எழுதிய தா(ட்)ள்களை கிழித்து விடுகிறாள். “அதான், அந்த டே முடிஞ்சுடுச்சே!” என்பது அவளது பதில்.

சாம்பிளுக்கு சில:
you eat carrots, you get powerful eyes;
you do good habits then only you will be perfect;
obey your mother's words, otherwise they call you bad gul; (”டாய், நீ பண்ணாததை எதுக்கு எழுதறே?” ”தாட் ஃபார் த டேல்லாம் சும்மாதான?”)
eat well before sleeping;

அநேகமாக, இவையெல்லாம் அவ்வவ்போது பப்பு காதில் நாங்கள் ஓதியது என்று நினைக்கிறேன். ’கேரட் சாப்பிட்டாதானே கண்ணு நல்லா தெரியும்’, ’நைட்ல சாப்பிடாம தூங்கினா காலையில எழுந்திருக்கவே முடியாது’, ’கீழே தள்ளிட்டா எடுத்து வைக்கணும்’, ’கட் பண்ண பேப்பரை டஸ்ட் பின்லே போடு’ முதலியன...

போதாததற்கு, அவளே ஒரு ’தாட் புக்கும்’ செய்து வைத்திருக்கிறாள். அதைப்பார்த்தால் திருக்குறள் ஓலைச்சுவடி போல இருக்கிறது. ’தாட்’ இல்லாத நாட்களில், அதில் ரெடிமேடாக இருப்பதை பார்த்து நோட்டில் எழுதிக் கொள்கிறாள்.

ம்ம்...இதெல்லாம் எங்கே போய் முடியுமோ? ஒருவேளை, பதிவராகும் அறிகுறியோ, என்னவோ?!!

Friday, October 28, 2011

5 to 6

"சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் சாப்பிடு எத்தனை வாட்டி சொல்றது? நீதாம்ப்பா எனக்கு கோவம் வர வைக்கிறே... நான் கோவப்படக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன், நீ பண்றதுதான் பப்பு, எனக்கு கோவம் வரவைக்குது.... "

"ஆச்சி, இங்க பாரு, நான் உன்னை இங்க வா,வான்னு எத்தனை தடவை கூப்பிடறேன், பாரு இப்ப...

ஆச்சி இங்க வா....
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...

ஆச்சி இங்க வா...
நீ வரலைல்ல, ஆனா எனக்கு கோவம் வரமாட்டேங்குது...உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "

?!!!!!!


***************************

பப்லூவை நம்பினோர் கை விடப்படார் என்று சொல்லுமளவிற்கு பப்லூதான் எங்கள் கை கொடுக்கும் கை. பப்லூ ஒரு இமாஜினரி கேரக்டர். பால் குடிக்க, சாப்பிட எல்லாம் பப்லூ எனும் பத்து வயது சிறுவனுக்குத் தெரியாது.. மேலே கீழே சிந்திக்கொள்வான். ஜட்டி போடமாட்டான். டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டு எதையாவது யோசித்துக்கொண்டிருப்பான். சரியான வாலு.
அவனது ஆயாவை படாதபாடு படுத்துவான், எரிச்சலூட்டுவான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. பப்லூவுக்கு பப்புவிடம் நேர்வினை இருந்தது.
ரகசியம் இதுதான் - பப்பு செய்வதை லேசாக பப்லூ செய்வதாக மாற்றி சொல்லிவிட்டால் வேலை கடகடவென்று நடந்துவிடும்.

காலைநேரம் - பரபரப்பு.

“சொல்ற பேச்சை கேட்டா என்ன பப்பு, சீக்கிரம் சாக்சை போடு, ஷீவை போடு, டைமாச்சு பாரு,இப்போ வந்தேன்னா அடி வாங்கப் போறே!”

"ஆச்சி. இங்க பாரேன், பப்லூ வந்து உன் வயித்துல பொறந்திருந்தான்னா உனக்கு ரொம்ம்ம்ம்ப கோவம் வந்திருக்கும் இல்ல....
"

?!!!!!


***************************

நாங்கள் சொன்ன பப்லூ கதை போய், பப்புவே பப்லூ கதைகளை விட ஆரம்பித்து விட்டாள். சாம்பிளுக்கு ஒன்று....

”பப்லூ வந்து என்னா பண்ணான்? மரத்துல ஒரு ரெக்கை செஞ்சான், எல்லாரையும் கூப்பிட்டு நான் பறக்கப் போறேன், பாருங்க, பாருங்கன்னு சொன்னான். எல்லாரும் வந்ததும் மாடி மேல நின்னுக்கிட்டு குதிச்சான் பாரு.....பறக்க முடியாம கீழே தொப்னு விழுந்துட்டான்!

’ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகனை’ பார்த்துட்டு, பயபுள்ள இப்டி புருடா விடுதேன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்...ஆயாஸ்தான் பாவம்..ஹிஹி!!
சூப்பர் மார்க்கெட்டில்:

"பப்பு, நீ என்ன எடுத்திருக்கேன்னு என்கிட்டே காட்டிட்டு பாஸ்கெட்ல போடு, சரியா? பப்பு, உன்கிட்டேதானே சொல்றேன், நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?"


வாயில் விரலை வைத்து ”டோண்ட் கால் மீ பப்பு, கால் மீ குறிஞ்சி மலர்”

”ஓகே, குறிஞ்சி மலர். ”

.
.
.
.

”ஏன் பப்புன்னு கூப்பிடவேணாம்? நல்லாதானே இருக்கு, பப்பு. அழகா இருக்கே!”

”உன்னை பப்புன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்? "

............

நல்லாருக்கா? நீ எவ்ளோ பெரிய பொண்ணா இருக்கே? இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு. ஓகே?”


?!!!!!!

***************************

டிரெயிலர் போதும், மெயின் பிக்சருக்கு வரேன்.....

ஆறு வருடங்களுக்கு முன்பு, பப்பு எட்டரை மாதங்கள் உனக்காக காத்திருந்தேன் - ரொம்ப படபடப்புடனும், ஆசையுடனும், தவிப்புடனும்!! எப்படி வளர்ப்பது, என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடல்களும் இல்லாமல்....குழந்தை பிறந்தா அது பாட்டுக்கு தானா வளர்ந்து காலேஜூக்கு போயிடும் என்ற ரொம்ப அசால்ட்டாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஒன்றாவது வகுப்பில் செல்வதற்குள்ளாக, என்னை இப்படி (உன் வார்த்தைகளில் சொல்வதானால்) “க்ரேசி”யாக்கிவிடுவாய் என்று நினைக்கவில்லை. ஆயாவும் பெரிம்மாவும் சொன்ன அதே அலுப்பூட்டும் வார்த்தைகளை, அதே டோனில் சொல்ல வைப்பாய் என்று எதிர்பார்த்திருக்கவில்லை ‍ அதுவும், இவ்வளவு சீக்கிரமே, சொல்லவேண்டியிருக்கும் என்றும்! எப்படியிருந்தாலும் பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது.

பப்புக்குட்டி....உனது சிரிப்புக்கும், ஓயாத பேச்சுக்கும், கோபத்துக்கும், குறும்புக்கும்,நை நைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....


.....ஆலவ்யூ!!

Thursday, June 30, 2011

பல் பல் புதுப்பல்

பப்புவின் கீழ்வரிசை முன்பற்களிடையில் ஒரு பள்ளத்தாக்கு உருவாகியிருந்ததை இன்று காலையில்தான் கவனித்தேன். சந்தேகத்துடன் முன்பற்களை தொட்டபோது லேசாக ஆடியது.:-) யெஸ், பப்புவிற்கு கீழ்வரிசையின் முன்பல் இரண்டும் விழப்போகின்றன! அநேகமாக அவைதான் முதலில் முளைத்த பற்களாக இருக்க வேண்டும். பப்புவுக்கு, பற்கள் முளைத்தபோது அவற்றை தடவிப்பார்த்ததும், பற்கள் முளைக்கும் தறுவாயில் என் விரல்களை, முகத்தைக் கடிக்க முற்பட்டபோது தடுக்காமல் இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. இரண்டு பற்கள் ஒன்றாக ஆடியதும், எங்காவது இடித்துக்கொண்டாளோ அல்லது சர்க்கஸ் செய்கிறேன் என்று தலைகீழாக தொங்கும்போது கீழே விழுந்துவிட்டாளோ என்று துருவிதுருவி கேட்டேன். இல்லையென்றதும், ஆடுகின்ற பற்களுக்கு பின்னால் ஈறில் தொட்டுப் பார்த்தேன். புதுப்பற்கள் தென்பட்டன. பிறகே நிம்மதியாக இருந்தது.

ஏழு வயதில் இந்த பற்கள் விழுந்து புதுப்பல் முளைக்கும் என்று அவளுக்கு சொல்லியிருந்தோம். இப்போதே பல் ஆடுவதால், ஒருவேளை, தான் இரவில் பல் விளக்காமல் உறங்கியதால்தான் பாக்டீரியாக்கள் சென்று பற்களை கொட்ட வைக்கின்றனவோ என்று பப்பு எண்ணிக்கொண்டிருக்கிறாள். :-)

Thursday, October 28, 2010

5 octobers

5


4

3


2

1

0



5 வருடங்கள்

அழுகை

சிரிப்பு

ஆச்சர்யங்கள்

சாக்லேட்டுகள்

சண்டைகள்

பயங்கள்

வாக்கர்

சைக்கிள்

பயணங்கள்

மலைகள்

சன்ரைஸ்

கடற்கரை

மூன்வாட்ச்

ஊசிகள்

ஜூரம்

பாடல்கள்

கண்ணீர்

கதைகள்

மழை

நடனங்கள்

நம்பிக்கை

மூட்ஸ்விங்ஸ்

கொஞ்சல்கள்

அப்ளிகேஷன்கள்

..........
..........



குறிப்பு : பப்புவின் பிறந்தநாளன்றைக்கான இடுகை இது. (இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. பப்புவும் பெரிதாக எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.) எதிர்பாராதவிதமாக, அவளுக்கு அன்றைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் எழுத மனமில்லாமல் விடுபட்டுவிட்டது. அப்படியே விட்டால், அடுத்த பிறந்தநாளும் வந்துவிடக்கூடும் என்பதால்...ட்ராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்.

Tuesday, June 15, 2010

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....

கோடை விடுமுறை ஆரம்பித்த முதல் வாரத்தில், பள்ளிக்கூடம் இல்லையென்ற நினைப்பில் ஒரு சில நாட்கள் ஜாலியாக கழிந்தது. எல்லோருக்கும்தான். காரணம் காலை தூக்கம். பிறகு ,”எப்போடா ஸ்கூல் ஆரம்பிக்கும்” என்ற கதைதான். எனக்கல்ல. பப்புவுக்கு!அதுவும் காலையில் 6.30 மணிக்கு! காலையில் எழுவதே “இன்னைக்கு ஸ்கூல் இருக்கா, வேன் வருமா” என்ற கேள்வியுடன் தான். 'இன்னைக்கு ஸ்கூல் இருக்கு' என்றதுமே உற்சாகத்துடன் எழுந்துவிடுவாள். பாலும் காலை உணவும் கடகடவென்று இறங்கி விடும். இந்த உற்சாகத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்தி முதல் இரண்டு வாரங்கள் கழிந்தது. அலுவலகத்திற்கு கிளம்பியதும் முகம் வாடி விடும். கொஞ்ச நேரம்தான். அப்புறம், அக்கம்பக்கத்து வீடுகளில்தான் அவளைத் தேட வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரங்களில்,காலையில் 8.45 க்கு “எழுந்துக்கோ பப்பு” என்றால் தூக்கத்திலே பதில் வரும் “எனக்கு சம்மர் ஹாலிடேஸ் இல்லே, ஏன் என்னை எழுப்பறே?”. அப்போதே எனக்கு கிலி பிடித்துக்கொண்டது, ஜூன் 2ஆம் தேதியை நினைத்து. பப்புவுக்கு பள்ளி ரீ ஓபன் ஆச்சே!

பெரிம்மா,அம்மா, குட்டி என்று எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க நான் மட்டுமே எதிர்கொள்ள போகும் ஜூன் 2 கொஞ்சம் பயமாகவே இருந்தது - ஏதோ எனக்கே பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது போல.அதுவும், அந்த ஒழுங்கை/ ரொடினை கொண்டு வருவது குறைந்த பட்சம் பள்ளி ஆரம்பித்த முதல் வாரத்தில் - டெரர்தான். அதுவும் வேன் வேறு மே மாத இறுதியில் ஒரு ட்ரையல் ரன் வந்து, இனி பப்புவுக்கு காலை பிக்கப் 7.40க்கு என்று டரியலாக்கியிருந்தது.

சரி, கடைசி சனி,ஞாயிறுகளில் காலையில் எழுப்பி விடலாம், இரண்டு நாட்கள் பழக்கத்தில் மூன்றாம் நாள் எளிதாக இருக்கும் என்ற நினைப்பில் மண் அள்ளி போட்டுக்கொண்டது நானேதான். சனி -ஞாயிறுகளில் நான் எழுந்தாலல்லவா அவளை எழுப்புவதற்கு! கடைசியில் எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமலேயே விடிந்தது ஜூன் 2. காலையில் நல்ல மூடிலேயே எப்படி எழுப்புவது என்ற கவலையோடே உறங்கச் சென்றேன் - 6.15 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு. முதல்நாளே பப்புவுக்கு எல்லாம் ரெடியாக இருந்தது அவளுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்.

”ஆச்சி, பெரிய பெரிய தவளை ஆச்சி” பப்புதான்.

ஜன்னலைப் பார்த்தேன். இன்னும் விடியவில்லை. அரைக்கண்ணைத் திறந்து...நேரம்...5.30 மணி.

”ம்ம்..தூங்கு பப்பு, தவளை இங்கே வராது”

ம்..ஹூம்!

”ஆச்சி, லைட் போடு ” சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அவளாகவே லைட்டை போட்டு ”வா, கதவுக்கிட்டே பாரு ” என்று இழுக்கத் தொடங்கினாள்.

எழுப்பும் கவலை விட்டது என்று ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும் அதிகாலை தூக்கத்தை இழக்க மனம் வரவில்லை.வேறு வழியில்லாமல், எழுந்து அவளுடன் சென்றேன். படுக்கையறை கதவை திறக்கச் சொன்னாள் - என் கையை பிடித்தபடி நின்றுக்கொண்டு.

”ஆச்சி, எவ்ளோ பெரிய தவளை தெரியுமா” - அவள் சொன்னதைப் பார்த்தால் அந்த தவளை ஒரு கடலாமை அளவுக்கு இருந்திருக்க வேண்டும். சற்றே பெரிய தவளைதான் போல.

அடுத்து அவள் சொன்னதுதான் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

”ஒரு தவளை ஆச்சி, அதுக்கு தவளை மாதிரி உடம்பு இருந்தது, ஆனா வாய் இல்லே, எப்படி இருந்துச்சு தெரியுமா..க்ரோக்கடைல் மாதிரி இப்படி இருந்தது”

கடலாமை சைசில் தவளை உடல். அதற்கு முதலை முகம். வாசலில் இருந்ததாம்.
வாசல் கதவை திறந்து அங்கே நிற்கிறதாவெனத் தேடினோம்.

காணோம்!

பாலை சுட வைத்துவிட்டு, தோசை செய்ய ஆயத்தமானேன். அவளது நாற்காலியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தவள் அதன் மேலேறி சமையலறை மேடையில் அமர்ந்துக் கொண்டாள்.


கடைசியில், தவளைக்கதைகளை அவளே சொல்லியபடி ஒரு டம்ளர் பாலும், ஒரு தோசையும் உள்ளே சென்றது.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காலை தூக்கம் விடுபட்டாலும், அரக்கபரக்க இல்லாமல் நிதானமாக எல்லா வேலையும் முடிந்தததை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தது. 'அவளோ கஷ்டம் இல்லை போலிருக்கே, இனிமே பிரச்சினை இருக்காது போல' என்றும் தோன்றியது.

(முதல் நாள் - முதல் டெர்ம் - வேனை நோக்கி ஓடுவதற்கு ரெடியாக பப்பு!)

அவளை வேனுக்கு அனுப்பியபின் எழுந்த கேள்வி, ”தவளை நாளைக்கும் உதவுமா?”!

இரண்டு நாட்கள் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது!


சட்டென்று மனதுக்குள் மின்னல்!


யெஸ்...

”தூங்கும்போது குரங்கு-முதலை-நாவல்பழம் கதை சொன்னால் தவளை நிச்சயம் உதவும்!

யே!!

Monday, May 31, 2010

பப்...பூ

"உனக்கு மட்டும் ஏன் பூ பேரு?” - பப்பு

“உனக்கும்தான் பூ பேரு பப்பு!”

”எங்க இருக்கும்”

“மலைலேதான் பூக்கும், 12 இயர்ஸ்க்கு ஒரு வாட்டி”

“இல்ல,சந்தனமுல்லை தான் பூ பேரு, எனக்கு சந்தனமுல்லைன்னு பேரு வை”

”சரி..உன் பேரு சந்தனமுல்லை..”

சந்தனமுல்லை இந்த பூவை வரைந்து கோந்தை தடவை சிறு காகித துணுக்குகளை உருட்டி கோந்தில் ஒட்டி இந்த பூவைச் செய்தாள். மறக்காமல் இலைகள்!




புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்
.
.
.
.
.

UKG!
ஆமாம், இன்றிலிருந்து பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது. சென்ற வருடம் போலில்லாமல், முகம் மலர சிரித்தபடி பறந்தேவிட்டாள், எனக்கு கையசைத்துவிட்டு!

கற்றலின் இனிமையும், நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களும்,
குதூகலமான வேன் பயணமும் அமைய பப்புவுக்கும் , பப்புவின் நண்பர்களுக்கும் வாழ்த்துகிறேன்! :-)

Friday, May 14, 2010

500!!


கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....


And, Life goes on...


...500 இடுகைகளைக் கடந்து!!


எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், இடுகைகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை பார்க்க நேர்ந்தது.


எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்!


சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!


குறிப்பு : பப்புவுக்கு இந்த உடையை அனுப்பிய கோல்டா அக்காவிற்கு நன்றிகள்..
(அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..ஏன்னா, என்னைத்தானே உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் தெரியும், அக்கா! :-) )

Wednesday, April 21, 2010

ஜூன் '09 - ஏப்ரல் '10

பப்பு,

பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!

1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09

5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10

13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10

பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )

Wednesday, November 04, 2009

பிறந்தநாள் - ரவுண்ட் அப்

கடந்த வருடத்தின் இந்த இடுகையில் கடைசியாக வந்த பின்னூட்டமே இந்தப்பதிவை எழுத இயலாமல் செய்து விட்டது! தங்களின் கேள்விக்கு என்னிடம் விடையில்லாவிட்டாலும் கூட, தங்களின் மனவருத்தத்தை எனது இடுகைகளால் தூண்டியிருக்கிறேனென்பது என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது! மன்னிக்க வேண்டுகிறேன்! தங்களுக்காகவும், தங்களின் மகனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! கண்டிப்பாக தங்கள் மகன் கேள்விக்கணைகளால் தங்களைத் துளைத்தெடுக்கும் நாள் தொலைவில் இல்லை!!

'சித்திரக்கூடம்' பப்புவின் செய்கைகளையும் நான் ரசிக்கும் கணங்களையும் பதிந்துக்கொள்ளும் ஒரு ஆன்லைன் ஜர்னல் என்ற சமாதானத்துடன் தொடர்கிறேன்!

இந்த வருடத்தின் திட்டம்

1. ஒரு ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes
2. ஒரு பரிசு - மீன் தொட்டி
3. நான்கு செலிபிரேஷன்கள் (நாங்களாக பிளான் செய்யாவிட்டாலும் அமைந்து விட்டது!)

ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes

கடந்தவருடத்தில் க்ரேஸியான மணித்துளிகள் - வழக்கம் போல சில 'முதல்'கள்- இன்னும் ஆல்பம் கைக்கு வரவில்லை.

ஒரு பரிசு - மீன் தொட்டி

இது ‘எதையாவது_வளர்க்கலாம்_மேனியா'வுக்காக. குறிப்பாக மீன்கள் வளர்ப்பதை ஆயாவும் விரும்புவது இல்லை. எனக்கும் தொல்லை. மீன்கள் உயிரிழப்பதை தாங்க இயலாது ஆயாவால். எனக்கோ அதை சுத்தம் செய்ய வேண்டிய வேலை. ஆனால், பப்புவுக்காக பெரிம்மா ஆம்பூர் செல்லும் போதெல்லாம் மீன் தொட்டியை சரி செய்து வைத்திருப்பார். அதிலிருந்து பப்புவுக்கு இஷ்டமானது மீன்களும் மீந்தொட்டியும்!

நான்கு கொண்டாட்டங்கள்

1. முதல் கேக் கட்டிங்
2. பிறந்தநாளன்று பள்ளியில் - பள்ளிக்கு சாக்லேட் அனுமதி இல்லை. பள்ளியில் அனைவருக்கும் டிரை ஃப்ரூட்ஸும், அவளது வகுப்பினருக்கு ஸ்கெட்ச் பேனாக்களும். பப்பு இன் பாவாடை சட்டை.
3. ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை - சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும். அங்கிருந்த அனைவரும் நன்றாக நினைவு வைத்திருந்தனர். சென்ற முறை கற்றுக்கொண்ட பாடல்களையும் அடிக்கடி நினைவுகூர்வதாகக் கூறினர். இந்த முறை பப்பு தயக்கமில்லாமல் பாடல்கள் பாடினாள். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் விளையாடி, பாடல்கள் பாடி நேரம் செலவழித்தோம். பின்னர், கொண்டு சென்றிருந்த நொறுக்குத்தீனிகளை பகிர்ந்துக்கொண்டோம்.



(ஆரஞ்சு வண்ண உடையில் பப்பு - சிறார்களை பெரிம்மா விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கும்போது)

4.வீட்டில் நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும். வழக்கம்போல pin the tail கேம்.



வர்ஷினி, வெண்மதி குடும்பத்துடன் வந்திருந்தனர். குட்டீஸ் எல்லோரும் ஓடியாடினர் வண்ணந்தீட்டினர்.கூச்சலிட்டனர். பப்புவுக்கு இருக்கும் இன்னொரு முகம் வெளிப்பட்டது.
வர்ஷினியோ, வெண்மதியோ வீட்டிற்குக் கிளம்புவதை விரும்பவில்லை. பப்புவும் விரும்பவில்லை. ”வீட்டுக்கு போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடலா'மென்ற சமாதானத்துடன் கிளம்பிச் சென்றனர். பதிவர்களில் g3 வந்திருந்தார். குட்டீஸோடு குட்டீஸாகவே மாறிவிட்டார். :-)

மின் வாழ்த்தட்டைகள் அனுப்பியும், தொலைபேசியிலும், பதிவுகளிலும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு பப்புவின் சார்பாக நன்றி!

Wednesday, October 28, 2009

From Troublesome Threes to Fearless Fours!!



பப்பு,

இந்த ஒரு கடிதம் உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடுமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் நான் எழுதியிருக்கும் இடுகைகள் உன்னைப்பற்றியும், உனது குழந்தைப்பருவத்தையும், ஒரு பெண்ணை தாயாக..மகிழ்ச்சியான தாயாக நீ உருமாற்றியதையும் கூறும்!

மேலிருக்கும் படம், நீ இப்போது கடந்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தை உணர்த்துவதற்காக - ஓடுவதற்கு ஆயத்தமாக - நம்பிக்கையுடன், துடிப்புடன் - அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் - எளிதில் மன்னித்து, மறந்தும் விடக்கூடிய இதயத்துடன்! பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன்! மாறாமல் இதே துடிப்புடன் - இதே நேசத்துடன் - இதே உன்னத்ததுடன் - உள்ளத்தூய்மையுடன்!!

அதற்காக, நீ ஒரு தேவதை என்று படம் காட்டவில்லை. உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை! சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை - அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன்! எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய்! நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்!!


குறும்பும், குழந்தையின் அறியாமையும், உனக்கேயுரித்தான ஞானத்துடனும் நிறைந்திருக்கிறாய் நீ! கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு! நீ மிக அருமையானவள் பப்பு! நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின! அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு! நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை! என்னை மன்னித்துவிடு! நீ உன்னதமானவள், பரிவு மிக்கவள், பப்பு!

புதியவர்களைக் கண்டால் எங்கள் பின்னால் ஒளிந்துக்கொள்ளும் நீ, உறவினர்களை, தூரத்து உறவினர்களை அதுவும் முதல்முறைதான் பார்க்கிறாய் என்றாலும் எப்படிக் கண்டுக்கொள்கிறாய் என்பது எனக்கு இன்னமும் விளங்காத ஆச்சரியம். குடும்பத்தின் தலைமுறைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். பக்கத்துவீட்டுச் சிறுவன் தீபாவளியன்று பொம்மைத் துப்பாக்கியில் உன்னை நோக்கிச் சுட்டான். நீயும் சுடு என்று உன் அப்பா கூற, ‘சுட்டா அவன் செத்துடுவான், பாவம்' என்று சொல்லி எங்களை ஆச்சர்யத்திலாழ்த்தினாய்!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு! வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு!
கடந்த வருடம் உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

ஆச்சி!

பி.கு :பப்பு, இதை நேற்று இரவு எழுதி முடிக்கும்போது கடந்த வருடம் எழுதிய பப்பு 0..1..2.. நினைவுக்கு வந்தது. உன் மழைத்தோழி இந்த வருடம் வரவே இல்லையே என்ற நினைப்பும் எட்டிப் பார்த்தது. இன்று காலையில் தூறலிட்டு வாழ்த்த வந்துவிட்டாள் உன் தோழி!! :-)

Friday, October 16, 2009

ஜங்கிள் ஜங்கிள்...

‘இன்னைக்கு ஆக்டோபர் 28தா' என்பதுதான், கடந்த இரண்டு மாதங்களாக காலையில் எழுந்ததும் எங்கள் காதுகளில் விழும் முதல்வாக்கியம். இம்முறை, 28ஆன் தேதி வாரநாட்களில் வருவதால் பிறந்தநாளைக் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம் என்று தோன்றியது. மேலும், அலுவலக நண்பர்களின் குழந்தைகளை பப்பு அறிந்திருக்கிறாளே தவிர அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. விளையாடியதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு கடந்த வாரயிறுதியில் ஒரு சிறிய கெட்-டூ-கெதரை(மினி பர்த் டே கொண்டாட்டம்) வைத்தாயிற்று - எனது அலுவலக நண்பர்கள் + குழந்தைகள். அதுவும்,'அனிமல்ஸ்லாம் வரணும் என் பர்த்டே'வுக்கு என்ற பப்புவின் கட்டளை என் ஆர்வத்தைத் தூண்ட ‘ஜங்கிள் பர்த்டே பார்ட்டி” யாக உருமாறியது.

அலங்காரங்கள் :

காட்டு மிருகங்கள் என்னவெல்லாம் வரவேண்டுமென்று பப்புவிடம் கேட்டு பட்டியலை தயாரித்தாயிற்று. யானை, புலி, சிங்கம், ஏப், ஹிப்போ, ரைனோ, ஜிராஃப், ஜீப்ரா, மான், ராபிட். இதற்கான பிரிண்ட் அவுட்களை இங்கே எடுத்துத் தர, பப்பு வண்ணம் தீட்டினாள். மஞ்சள் முயல், பிங்க் ஹிப்போ, ஆரஞ்சு ஒட்டகசிவிங்கி என்று உருமாறின. அவற்றை வெட்டி அறை முழுதும் ஒட்டினோம்.

சிறுத்தைகளின் கால் தடங்களையும், கரடியின் கால் தடங்களையும் சார்ட்டில் வரைந்து வெட்டி அவற்றையும் அறைக்கு செல்லும் வழியில் ஒட்டினோம்.



பப்புவின் விலங்கு பொம்மைகளை அங்குமிங்கும் வைத்தோம். ஒரு குகையைச் சார்ட் பேப்பரால் செய்து புலியை அதன் வாயிலில் அமர வைத்தோம்.

இலைச்சரங்களை தி.நகர் பாண்டி பஜாரில் ரோட்டோரக்கடைகளில் வாங்கியிருந்தேன் (Thanks to Gowri!!).அதனை அறையில் தொங்க விட்டு, மூலைக்கொன்றாக பலூன்களை கட்டினோம். நிறைய ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது. நாங்கள் ஏற்கெனவே பிரிண்ட் எடுத்திருந்ததால் வாங்கவில்லை.

விளையாட்டுகள் / ஆக்டிவிட்டி

ஃபேஸ் பெயிண்டிங் : கோடுகள் அல்லது ஸ்பாட்கள் இருந்தால் விலங்குகளின் அடையாளம்தானே. சிறுத்தைதோல் போல வட்டங்கள் கொண்ட உடையணிந்த பப்புவிற்கு புலி மீசையும் , கறுப்பு- வெள்ளையுமாக உடையுடுத்திருந்த யாழினிக்கு முகத்தில் வரிக்குதிரை,திவ்யாவிற்கு சிங்கக்கோடுகளும் போடப்பட்டது.

பேஸ் பெயிண்டிங் செய்ய விரும்பாதவர்களுக்கு word search (5 வயதினருக்கு மேல்), maze போன்றவைகளை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன். எல்லோருமே விருப்பமுடன் செய்தார்கள்.

வண்ணம் தீட்டப்பட்ட சிங்கத்திற்கு வால் ஒட்டும் விளையாட்டு: ஒவ்வொருவரின் கண்களையும் கட்டிவிட்டு வாலை சரியாக ஒட்டவேண்டும். streamers ஐ வெட்டி செய்த வாலை எல்லா குட்டீஸுமே ஒட்டினார்கள் - மிகுந்த வரவேற்பை பெற்றது இது!

நான் யார்/Who am I ; மிருகங்களின் ஸ்டிக்கர்களை வாங்கியிருந்தேன். ஒவ்வொரு குழந்தையின் முதுகில் ஒட்டி விட வேண்டும். என்ன மிருகம் ஒட்டப்பட்டதென்று அந்த குழந்தையைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்ட்ப்பட்டிருப்பவர் தான் என்ன மிருகமென்று கேள்விகள் கேட்டு கண்டுபிடிக்கவேண்டும். ஆம்/இல்லையென்று பதில் வருவது போன்ற கேள்விகள்தான் கேட்க வேண்டும். உ.தா ; எனக்கு நீண்ட கழுத்து இருக்குமா ? எனக்குக் கொம்புகள் இருக்குமா? எனக்கு தும்பிக்கை இருக்குமா? என்பது போல!

இது பப்பு வயதினருக்கு இல்லையென்றாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டாக இருந்தது இது. வித்தியாசமான க்ளுவெல்லாம் கொடுத்தார்கள் குழந்தைகள்!! குழந்தைகளுக்குப் பிறகு நாங்களும் மீதி இருந்த ஸ்டிக்கரைக் கொண்டு விளையாடினோம்!!

உணவு : முதலில் பொம்மை பிஸ்கெட்(animal shapes) பரிமாறப்பட்டது. கேக், மசாலா கடலை, நேந்திரம் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மாசா மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.

இசை : வண்டின் ரீங்காரங்கள்,ஓடை சலசலப்புகள், மைனாவின் கூவல்கள் கொண்ட யூ ட்யூப் வீடியோவை டவுன்லோடு செய்து சத்தத்தை மட்டும் ஒலிப்பரப்பினோம். ஸ்பீக்கர்கள் இல்லாததாலும், குழந்தைகளின் இசை அதனை விட இனிமையாக இருந்ததாலும் காட்டின் இசை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

இசை - 1

இசை -2



மிருக முகமூடியையும் அணிந்துக்கொண்டு அவற்றைப்போல போஸும் கொடுத்தார்கள்!!
வந்திருந்த எல்லாக் குழந்தைகளும் காட்டுமிருகமொன்றை தம்மோடு அழைத்துச் சென்றார்கள், அதனோடு நல்ல நினைவுகளையும் சுமந்து சென்றிருப்பார்களென நம்புகிறேன்!!

நீங்கள் எங்களோடு செலவழித்த நல்ல நேரங்களுக்காகவும், பப்புவிற்கு நல்ல நினைவுகளை பரிசளித்த குட்டீஸ்களுக்கும் அவர்களது அம்மாக்களுக்கும் நன்றிகள். குட்டீஸோடு குட்டீஸாக இணைந்து சூழலை கலகலப்பாக்கிய கவிதா விருந்தினர்களையும் நன்றாக கவனித்துக்கொண்டார். கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள். பப்புவிற்கு கவிதா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்ப மனமேயில்லை! உங்களனைவரையும் இந்தவாரமும் எதிர்பார்க்கிறாள்..:-))

பெரும்பாலான ஐடியாக்களை இணையத்திலிருந்தே பெற்றேன். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அருமையான ஐடியாக்களை அள்ளித்தந்த இணையத்திற்கு நன்றி! உதவிய தளங்கள் -
இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே

Tuesday, April 28, 2009

பப்பு டைம்ஸ்!

பப்பு,

42 மாதங்கள். உனது மாதாந்திர பிறந்த நாள் இன்று. மூன்றரை வயது, இன்றோடு.

நிறைய பேசுகிறாய். பெரியவர்கள் போல் கிண்டல் செய்து சிரிக்க எத்தனிக்கிறாய். you make silly faces too. ஜிக்-சாக் புதிர்கள் செய்வதில் மகிழ்ச்சியடைகிறாய். அதைவிட மகிழ்ச்சி, டோராவைப் பார்க்கும்போது! 24-பகுதிகள் கொண்ட புதிரை முழுமையாய் செய்யும்போது உனக்கு மிகச்சரியாய் மூன்றேகால் வயது!

புத்தகங்கள் படிக்க விருப்பப் படுகிறாய். ஆனால் என் உதவி தேவைப்படுகிறது! இருந்தாலும் நீயாகவே கதைகள் சொல்கிறாய், ப்டங்கள் பார்த்து. ஏப் மற்றும் குரங்குகளை இனம் காணத் தெரிகிறது உனக்கு! where is the party தான் உன் விருப்பப் பாடல், தற்போது!

தூங்கிக் கொண்டிருந்த சித்தப்பாவின் மேலும், முருகன் மேலும் தண்ணீர் ஊற்ற சின்ன ஆயா உன்னை அழைத்தார்கள். கையில் தண்ணீர் எல்லாம் கொண்டு வந்து மொட்டை மேலே தெளிக்கலாம் வா என்றழைத்த போது தண்ணீரை கையில் வாங்கிக்கொண்டு மறுத்தபடியே பினனால் நகர்ந்துக் கொண்டிருந்தாய். ஏனென்று கேட்டபோது, “தண்ணீ ஊத்தினா பயந்துடுவாங்க” என்றாய்! பப்பு, இவ்வளவு யோசிக்கும் நீ, அன்று முடிவெட்டிக் கொண்டது எங்ஙனம்? :-)

பள்ளியின் ரெவ்யூ சொல்கிறது கதைகளும், பாடல்களும் உனக்கு விருப்பமானவைகள். உனக்கென்று வெண்மதி, வர்ஷினி என்று குட்டி க்ரூப் இருக்கிறது. நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! அடிக்கடி உங்களுக்குள் சிரித்துக் கொள்வதும் உண்டாம்!

உனது எல்லைக்குள் எவர் வந்தாலும் கத்தல்களும், வன்முறையும் கிடைக்கப் பெறுகிறோம்!
சிடி பிளேயரை இயக்க நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறாய். வீட்டின் ஸ்விட்ச்-களை இயக்க நீ அறிந்துக் கொண்டபோதைவிட அதிகமாக பயங்கொள்கிறேன் இப்போது! ரோடில் கையை பிடித்து நடக்க உனக்கு விருப்பமில்லை.

பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!

Saturday, April 18, 2009

பப்பு - 360 டிகிரி!


(படம் : மூன்றாம் டெர்மின், கடைசி நாளன்று!)

முதல் டெர்ம்..., இரண்டாம் டெர்ம்... தற்போது பள்ளியின் மூன்றாம் டெர்ம் கடந்த ஒன்பதாம் தேதியோடு நிறைவுக்கு வந்தது!எவ்வளவு மாற்றங்கள், விரும்பத்தகுந்ததும், விரும்பத்தகாததுமாக!!


1. ”உன் பேச்சு க்கா” என்றும், “நீ என் ஃப்ரெண்ட் இல்ல” என்றும், ”சேலஞ்ச்' என்றும் சொல்கிறாள். “க்கா” சொல்லிவிட்டால், பேசக் கூடாது என்பது இப்போதெல்லாம் மாறிவிட்டது போல. பழம் விடுதலும், கட்டைவிரலை உயர்த்தி ”சேலஞ்ச்” செய்து அடுத்தவர் கட்டைவிரலை தொடுவதாக பரிணாமம் பெற்றுள்ளது.

2. நிறைய ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வந்திருக்கிறது. தண்ணீர் பாட்டிலை பப்பு பையில் வைக்கும்போது, தெரியாமல் கொட்டி விட்டேன். ”ஆச்சி, வாட் இஸ் திஸ்?”!!
நோ டச்சிங், ஒன் பை ஒன்...etc!

3. இந்த டெர்மில் சில நாட்கள், “நான் ஸ்கூலுக்கு போகல” என்று விடிந்தது. அநேக நாட்கள், பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, வேனிலிருந்து இறங்க மறுத்து, பள்ளிக்கே செல்லப் போவதாகவும் ஆயா சொல்லக் கேட்டேன்! :-)

4. “ஜனகன ” தாகம் போய் ”ரகுபதி ராகவ”தான் அவள் வாயில் இப்போது! இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை! அவள் புதிதாக ஏதும் முணுமுணுக்கும் போது, ஓடிப்போய் அவளது பாடல் புத்தகத்தை திருப்பும் என் பழக்கமும் இன்னும் மாறவில்லை!

5.இந்த டெர்மில், சாப்பிட என்ன எடுத்துச் செல்வதென்று முடிவு செய்வது அவளது உரிமையாக உருவெடுத்திருக்கிறது. கத்திரிக்கோலைக் கையாள்வதுதான் மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. வளையல்கள், ரப்பர் பேண்டுகளை கைகளில் மாட்டிக் கொளவது, கழுத்தில் மணிகள் சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-) என் பள்ளி/கல்லூரி நண்பர்கள் இதைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள், எங்கிருந்து இந்த பழக்கம் வந்திருக்குமென்று!

மொத்தமாக, 3 டெர்ம்கள். 360 மாற்றங்கள்.

வீட்டை விட்டு எங்கும் அதிகமாக சென்றறியாத ஒரு 2 1/2 வயதுச் சிறுமி தனக்கென்று பள்ளியில் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கிறாள். கடிகாரத்தை அறியாதவள், “இப்போ டைம் என்னா” என்றுக் கேட்கிறால், அதற்கு மேல் அதிகமாய் அறியாவிட்டாலும்! பெயர்கள் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறாள்! பேசும் மொழியின் பெயர் தமிழென்றும் அறியாதவள், “இங்கிலீஷ்-ல என்ன” என்றுக் கேட்கிறாள். காலையில் பள்ளி வாகனத்தில் ஏறியதும், என்னைத் திரும்பிப் பார்ப்பவள், கடைசியாக என்னை அப்படித் திரும்பிப் பார்த்தது எப்போதென்று யோசிக்கிறேன்!!

பள்ளிச் செல்லத் துவங்கிய நாட்களை நினைத்துக் கொள்கிறேன்!

நன்றிகள் அவளது பள்ளிக்கும், மோத்தி ஆண்ட்டிக்கும், சித்ரபாலா ஆண்ட்டிக்கும்!
லஷ்மி ஆயாவிற்கும் அம்சா ஆயாவிற்கும் நன்றிகளும் வணக்கங்களும்!

Friday, March 27, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்....உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன....மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன....பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

Friday, December 12, 2008

பப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்!!



(படத்தில் தெரியும் அந்தச் சின்னஞ்சிறு கைகள் செயதன, இந்த வட்டத்தை!)

பப்புவுக்கு இப்போது எல்லாமே ஷேப்ஸ்தான்! வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் ஆளுகின்றன அவளது கற்பனையை! முக்கோணம் செய்து எங்களைக் கூப்பிட்டு காட்டியவள், காமெரா எடுத்து வருவதற்குள் கலைத்து வட்டமாக்கி விட்டாள்! எழுதும் போதும் எழுத்துக்களால் ஒரு கட்டத்தை அமைக்கிறாள்.

இப்போது உணவில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது அவளுக்கு. சாதத்தை தண்ணீரில் போட்டு, காயையும் சேர்த்து...பின் தம்ளருக்கு மாற்றியென. நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை, இந்த முறை! அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதில் ஒரு புதிய முறையை கற்கிறாள் எனில், செய்வதில், செய்யும் முறையில் ஆழ்ந்து போகும் விஷயமெனில் அதைக் கலைப்பானேன்?!

ஜனகன மன பாடக் கற்றுக் கொண்டுள்ளாள். “பாக்ய விதாதா” வும், பஞ்ஞ்ஞாஆஆப சிந்துவும்” அடிக்கடி வரும், எந்த சீக்வென்ஸாயிருந்தாலும்! இப்போதுதான் ஜீரத்திலிருந்து மீண்டிருக்கிறாள், ஆனால் சளி இருப்பதால் குரல் பதிவு லேட்டர்!!

உண்மையில் இந்தப் பதிவை போட இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணவில்லை, ஆனால் அப்படி ஆகிவிட்டது. பப்புவின் பள்ளியில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அவளது முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??) நடந்தேறியது. இதோ பப்புவுக்கான ஒரு சின்னக் குறிப்பு:

பப்பு,

உனது பள்ளியின் ரெவ்யூ எனக்கு ஆச்சர்யங்களெதையும் தரவில்லை. நீயாகவே என்ன வொர்க் செய்ய வேண்டுமென்றும், அதை ”well co-ordinated hand movements"களிலும் செய்து விடுகிறாய். வேலை செய்யும்போது எதுவும் உன் கவனத்தை திசைத் திருப்புவதில்லை போலும்! நிறைய நேரங்களில் நானும் அதை உணர்ந்திருக்கிறேன், எப்போதும் இப்படி இருக்கவேண்டுமெனவும் ஆசைப்பட்டிருக்கிறேன்!

சப்தங்களை அறிந்துணர்வதிலும், பொருட்களை கண்டறிவதிலும் உனக்கு அதிக ஆர்வமே. பாடுவதிலும், பாடல்கள் கற்பதிலும் மகிழ்ச்சியாய் உணர்கிறாய், எப்போதும் போல்!! ஆனால் பப்பு, ஆங்கிலத்தில் பேச இன்னமும் நன்றாய் பழக வேண்டும். இனிமேல், முயற்சிக்கலாம் என்ன?!

முக்கியமாக, பள்ளியின் உனது சூழ்நிலையில் நீ பொருந்திவிட்டாய் என்றும் சொல்லப்படாத விதிகளை புரிந்துக் கொண்டாயெனவும் அறியும்போது கவலைகள் நீங்கியது. நீ கற்பது என்பது அடுத்த விஷயம், ஆனால் உனக்கான ஒரு இடத்தை, அந்த இடத்தில் நீயாக accomadate ஆவது..சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்வதே என் விருப்பம்! I always want you to be independent, to be on your own!

100 நாட்கள் நடைப்பெற்ற பள்ளிக்கு, 60 நாட்கள் சென்றிருக்கிறாய். ஜூலையில் சேர்ந்ததால் ஒரு மாத வருகை தடைப்பட்டிருக்கிறது.

பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!

பல நேரங்களில் நாமிருவருமே பெருமை கொண்டவர்களாகி விடுகிறோம், சில நேரங்களில் உன்னாலும், சில நேரங்களில் என்னாலும். இந்ததடவை உன்னால்!! நன்றி, மகளே!

உன் அம்மா!

Tuesday, October 28, 2008

பிறந்த நாள் கலாட்டா!

பப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,

1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்

ஒரு விளையாட்டு:

பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.




பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)


லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!

இரண்டு ஆல்பங்கள்

”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!


இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.


மூன்று கொண்டாட்டங்கள்

மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)


ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை

ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!




ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(


விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!

கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!


பள்ளி :

28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).


வீடு:



உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!


பப்பு,


உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!

பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!

சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!

வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!

இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!


அம்மா!

Thursday, October 23, 2008

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!



வரும் 28ஆம் தேதியிலிருந்து பப்பு மூன்றாம் வயதில் அடி எடுத்து வைக்கிறாள். நாட்கள் ஓடும் வேகத்தில், நினைவுகளை, நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.நேரம் இருக்கும்போதே, கடந்தகாலத்தை அசை போட எண்ணி பதிவைத் தொடங்குகிறேன் நான்!அடுத்த வாரம் இந்த நேரம் பப்பு,, நீ மூன்று வயதை எட்டியிருப்பாய்..

இந்த படத்தில் இருக்கும் பப்புவின் ஒவ்வொரு படமும் அவளது அந்தந்த அகவை நிறைவன்று எடுக்கப்பட்டது! கூட்டுப்புழுவிலிருந்து வண்ணத்துபூச்சியாக மாறுவதுப் போல், மொட்டிலிருந்து பூ மலர்வதுப் போல் என் பப்பு ஒவ்வொரு கட்டத்திலும்....

முதல் படம், பப்பு பிறந்த ஒரு சில கணங்களில் எடுக்கப் பட்டது. ஆனால் நான் பப்புவை பார்த்தது இரண்டாவது நாளில் தான்.மூன்று நாட்கள் வரை, தினமும் கொஞ்ச நேரம் எங்களிடம் காட்டிவிட்டு, இன்குபேட்டரில் வைத்து விடுவார்கள். என்னைத் தவிர எல்லாரும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவார்கள். இப்படி அமைதியாக தூங்கியது இந்த போட்டோவில் மட்டும்தான். ஒருவயது வரை தூங்கவும் இல்லை, தூங்கவிடவுமில்லை. :-). அந்தந்த கணங்களுக்கேயுரிய மகிழ்ச்சிகளை எங்களுக்குக் கொடுக்க தவறியதேயில்லை பப்பு!

இரண்டாவதாக இருக்கும் போட்டோ பப்புவின் ஒருவயது நிறைந்த போது எடுத்தது!
Just after the mottai! அந்த பிறந்தநாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டுமா என்று
நானும் பப்புவின் அப்பாவும் மிகவும் யோசித்தோம். அவளை சுற்றி நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியாது, நிறைய புதிய முகங்கள்..எல்லாரும் அவளைக் தூக்க விரும்புவார்கள்..etc..etc!! மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று!! ஆனால், பிறந்தநாளுக்கு முதல் நாளன்று ஜுரம் வந்து, பிறந்த நாளன்று காலையில் மருத்துவமனை செல்லும்படி ஆயிற்று.

மூன்றாவது படம், இரண்டாம் பிறந்தநாளன்று!! பப்பு, உனக்குத் தெரியுமா..உன் ஓவ்வொரு பிறந்த நாளன்றும் வானம் பூ மழை பொழிந்து உனை வாழ்த்தும்..வானவில் தோரணத்தோடு!
அன்றும் அப்படித்தான்! ஆனால் இந்த முறை ஜூரம் இல்லை...ஆனால் ஜலதோஷம் மட்டும்!!
உற்றத்தோடும், சுற்றத்தோடும் கழிந்தது உனது நாள்!

இதோ, இப்போது மூன்றாம் பிறந்தநாள்..அன்போடும், மனதில் ஏகப்பட்ட கனவுகளோடும் உனக்காக இன்னோரு ஸ்பெஷல் நாளை திட்டமிட்டிருக்கிறோம், நானும் உன் அப்பாவும்! இப்போது உனக்குத் தெரியும், பிறந்தநாள் எனது என்ன மற்றும் அதன் கொண்டாட்டங்கள்....பிறந்தநாள் நீ பிறந்ததானாலல்ல..ஆனால் எல்லாரும் உனக்கு 'ஹேப்பி பேத் டே தூ யூ" என்றும், "மெழுகோத்தி"யை ஊதவும்..மற்றும் கேக் கட் செய்வதுமென்று!!

இதோ, இப்போதும் உன் பிறந்தநாளையொட்டி உன் தோழி உரத்த தாளங்களோடு
வந்து விட்ட்டாள்..நகரெங்கும் தோரணம் கட்டியிருக்கிறது மழை! எங்களின் ஏற்பாடுகளை நீ
எஞ்சாய் செய்வாய் மற்றும் இந்த நாளின் நினைவுகள் என்றும் உன் மனதில் தங்கும் என்ற நம்பிக்கையுடன்...

மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)

Monday, July 14, 2008

முதல் நாளின்று....

எந்த குழந்தையுமே ரொம்ப adjustable-தான்!
எதையுமே, நாம் முன்கூட்டியே சொல்லி அவர்களை மனதளவில் தயார் படுத்திவிட்டால் போதும்! இந்த உத்தி எனக்கு, பப்புவின் 9 மாதங்களான போதிலிருந்தே உதவியிருக்கிறது!!
(இதை உத்தி என்று சொல்வதை விட, குழந்தைக்கு விளக்கி சொல்வது நமது கடமை!! )
அதாவது, நாம் சொல்லி அவர்கள் புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கும்போதிலிருந்து!
அதற்காக எல்லாவற்றிலும் இதை எதிர்பார்ப்பது நிச்சயம் கைக் கொடுக்காது!!

நாங்கள் வேலைக்கு செல்லும்போது, அவளை விட்டு செல்கிறோம் என அவள் அழுவாள்.
அவளிடம் பொறுமையாக, வேலைக்கு போய்ட்டு அம்மாவும்,அப்பாவும் சாயங்காலம் வந்துடுவோம், லைட் போடும்போது வந்துடுவோம். ஆயா கதவு சாத்தும்போது, நாங்க வந்துடுவோம்,ஆபீஸ் போனாதான் பப்புவுக்கு சாக்லேட் வாங்க முடியும். ஜூ-வுக்கு கூட்டிட்டு போக முடியும். ...என்று சொல்ல சொல்ல அழுவதை நிறுத்தினாள். ஆனால், ஒருநாள் சொல்லிவிட்டால் அதற்குபின் அழவே மாட்டார்கள் என்று பொருள் அல்ல!! இது ஒரு routine process! ஆனால் நல்ல ரிசல்ட் இருந்தது! ஒரு வயதிலிருந்து 2 வயது வரை தொடர்ந்தது! சில சமயம் போகும்போது அழுவாள். நாங்கள் சென்றபின், அதை மற்ந்துவிட்டு, விளையாட தொடங்குவாள்!!

அதேபோல் தடுப்பூசி போட டாக்டரிடம் செல்வதற்கு முன்னும் சொல்லி தயார் படுத்த வேண்டும். அதற்கும் நல்ல பலன் இருந்தது! ஊசி போடும் போது, அல்லது டாக்டர் அறைக்கு செல்ல மறுப்பேதும் காட்ட மாட்டாள்! ஊசி போடும்போது, ஒரு சிறு சத்தம் தவிர அழுகையும் கிடையாது!! எனக்கே ஊசி என்றால் பயம். ஆனால் அவள் காட்டும் மெச்சூரிட்டி, என்னை ஆச்சரியப்படுத்தும்!! காயத்தின் தையல் பிரிக்க சமீபத்தில் நேற்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். "டாக்டர், உன்னை மேலே பாருன்னு சொல்லுவாரு! நீ மேலே அண்ணாந்து காட்டினாத்தான், அந்த பிளாஸ்டர் எடுக்கமுடியும். அப்புறம் காயம் ஆறிப்போய்டும்! ஜாலியா ஸ்கூல்-ல போய் விளையாடலாம்" என்று பொறுமையாக பலமுறை சொன்னேன். எங்கே, கை வைக்க விடமாட்டாளோவென்று எனக்கு பயம். அதனால் "டாக்டர் காயத்தை காட்டுன்னு சொன்னதும், என்ன பண்ணுவே? எப்படி காட்டுவே?"- என்றுப்ராக்டிஸ் வேறு!! எங்களுக்கு முன்னால் சென்ற குழந்தை, உள்ளே செல்ல மறுத்து அழுகை! எங்கே அதை பார்த்து இவளும் அழுவாளோ என நினைத்தேன்.ம்ம்..இல்லை! உள்ளே சென்றதும், டாக்டர் ஹலோ சொல்ல, வணக்கம் சொன்னாள். அண்ணாந்து காட்டினாள். டாக்டர், அவளை பிடித்துக்கொண்டு அவளது கண்களை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு தையலை வெட்டினார்! ஒரு சிறு சத்தம்..சிறு அழுகை..இரண்டு செகண்ட்ஸ்..! முடிந்த பிறகு, "பை, தேங்க் யூ"!! டாக்டர் கண்களை மூடிக்கொள்ள சொன்னது, கூரான வெட்டும் கருவியை பப்பு பார்க்காமலிருக்கவாம்!!


இன்று பப்புவின் முதல் நாள் பள்ளியில்.
கடந்த இரு நாட்களாகவே மனதளவில் தயார்படுத்த தொடங்கியிருந்தேன்.
"காலையில வேன் வரும். குளிச்சுட்டு ட்ரெஸ், தொப்பி போட்டுகிட்டு வேன்ல ஏறிக்கணும்! வேன்ல யார்ல்லாம் இருப்பாங்க?" - நான்!

"ஒரு ஆயா, அப்புறம் நெறைய்யா குட்டி பாப்பாங்க, தம்பில்லாம் இருப்பாங்க!! " - பப்பு!!

(ம்ம்..நல்லா ட்ரெய்னா ஆகிட்டா!! )

இன்று காலை எழும்போதே அழுகை!!
என்ன பப்பு, ஏன் அழறே?
" ஸ்கூல் போ மாட்டேன்!! "

படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட இல்லை!!!
இத்தனைக்கும், யாரும் அவளிடம் ஸ்கூல் செல்வதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை!

சிறிது நேரம் சிணுங்களுக்குப் பின் ரெடியாகி பள்ளிக்கு சென்றாள்.
உள்ளே செல்வதற்குமுன் ஒரு சிணுங்கல்!
ஆனால், உள்ளே சென்றபின்,, ஒரு சத்தமும் காணோம்...என் குட்டிப்பெண்ணுக்கு,
பள்ளிக்கூடத்தில் இருப்பது பிடித்துபோயிருக்குமாயிருக்கும் :-)!!


பி.கு : Pappu needs all your blessings today as she started going school today!!