Saturday, December 31, 2011

பப்பு டைம்ஸ் - 7DB

* டீவி இல்லாமல் நாங்கள் கடந்து வந்த முழு வருடம் இது. டீவி இல்லாத குறையை தீர்க்க பப்பு லாப்டாப்பை எடுத்துக்கொள்வாள். (பெயிண்டில் வரைவது அல்லது அனிமேசன் படங்கள்) சொல்லப்போனால், டீவி இல்லை என்ற குறையே இல்லை. நாங்களும் அப்படி ஒரு வஸ்து உலகில் இல்லவே
இல்லை என்பது போல ஆகிவிட்டோம். (இதில், ஆயாதான் பாவம். பப்புவுக்காக டீவியை தியாகம் செய்த ஆயா என்று வரலாறு பேசுமல்லவா!) தற்போது, வெளியில் எங்காவது டீவி பார்க்க நேரிட்டாலும், முன்போல் ஆர்வம் காட்டுவதில்லை.

மற்றபடி, குழந்தைகள் படம் ஒன்று ஓடிவிடுகிறது. அதுவும், நான் கணினி உபயோகித்தால், அடுத்தது அவளுக்கும் கொடுத்தாக வேண்டும். (”இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”) Tangled, how to train your dragon, Kung fu panda,
avatar, horton hears a who - பப்புவின் மிக மிக மிக ஃபேவரைட் படங்கள்.
(”ஒரு கீரைக்கு ஒரு படம் பத்தும், இல்லப்பா”- பப்பு)


* ஸ்கூட்டியில் முன்னால் நின்று கொள்ள வெளியில் செல்வது பப்புவுக்கு (எனக்கும்) மிகவும் பிடித்தமானது. அதுவும், காற்று முகத்தில் மோதினால் போதும். உல்லாசமான மனநிலைக்குச் சென்றுவிடுவாள். பின்னர், ஒரே பாடல்கள்தான். அவளது பாடல் புத்தகத்திலிருந்து அத்தனை பாடல்களும் பாடியாகி விடும். பப்பு, பின்னால் உட்கார அமர ஆரம்பித்ததிலிருந்து பாடல்களை மிஸ் செய்கிறேன். ஆனாலும், சின்னஞ்சிறு கைகள் பின்னாலிருந்து
என்னை சுற்றிக்கொண்டு வருவதும் நன்றாகத்தான் இருக்கிறது.


* இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்திருந்தாள். தமிழ் ஆரம்பத்தில் தடுமாற்றம். இடையில் சிறிது முன்னேற்றம். ’கோ’ மற்றும் ’கௌ’ வரிசைகள் சமயங்களில் அவள் கண்ணை ஏமாற்றும். தற்போது குறைந்திருக்கிறது. மேலும், சின்னதாக இருந்தால் மட்டுமே படிக்க ஆர்வம் காட்டுவாள். ஒரு வாக்கியம் அவள் படித்தால் அடுத்த வாக்கியம் நான் படிப்பேன். இப்படி ஆரம்பித்தது, ஒரு புத்தகம் அவள் படித்தால், அடுத்த புத்தகம் நான் என்ற அளவில் வந்திருக்கிறது. ஆனாலும், அதுவும் மூடை பொறுத்துதான். எப்போதும் ஒரே ஆட்டமும், பேச்சும். (கதை சொல்வதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இருந்தால் நன்றாக இருக்கும்!ஹ்ம்ம்....)


year 2011

* தமிழிலிருக்கும் தடுமாற்றம் ஆங்கிலத்தில் இல்லை. எவ்வளவு பெரிய வார்த்தையாக இருந்தாலும் படிக்க தயங்க மாட்டாள். ஒவ்வொரு
வார்த்தையாக சொல்லி சொல்லி படித்து விடுவாள். தற்போது, சரளமாக சிறார் கதைகளைப் படிக்கிறாள். இதற்கு மாண்டிசோரி முறைக்கும்,
ஆண்ட்டிகளுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

* ’நான் போலீசாக போறேன்’ என்பாள் திடீரென்று. போலீசாகி என்னை ஜெயிலில் வைத்துவிடுவாளாம். ஒருநாள், எல்லா புத்தகங்களையும் தலையில் வைத்து
தூக்கி வந்து தூக்கி வந்து படுக்கையில் போட்டுக்கொண்டிருந்தாள். கட்டிடத் தொழிலாளியாம். பிறகு, ஆண்ட்டியாக போறேன் என்பாள். ஒருநாள், ’சயிண்டிஸ்டாக போறேன்’ என்பாள். ’நான் தோழரா ஆயிடறேன்’ என்பாள். ’நான் ராக்கெட்ல போறேன்ப்பா’ என்பாள், ஒரு சமயம். ’ஒரே நேரத்தில எல்லாமா ஆயிட முடியாதாப்பா’ என்பது சமீபத்திய ஆதங்கம்

* ”பென் டென், ஸ்பைடர் மேன் எல்லாம் வேஸ்ட்.டோரா, பார்பிதான் சூப்பர்.” என்றாள் ஒரு நாள். பள்ளியில், ஆணா, பெண்ணா சண்டை வந்துவிட்டது போல!
’கேர்ல்ஸ் வயித்துலதான் பேபி வருது ’ என்றெல்லாம் ஆண்/பெண் சண்டை நடந்திருக்கிறது. (’பாய்ஸ் வயித்துல பேபி வளர்ற பேக் ஏன் இல்ல?’ என்பது அவளது நீண்ட நாள் சந்தேகம். அது போல, குழந்தை எப்படி அம்மா வயிற்றில் வருகிறது என்பதுவும். ’டாக்டர்கிட்டே போகும்போது நீயே கேளு. அப்போ மட்டும் அமைதியா இருக்க இல்லே!’ என்று தப்பித்துக்கொண்டேன்.)
“பெஸ்ட் ஃப்ரெண்டு” மற்றும் ” இனிமே என் ஃப்ரெண்டே இல்ல”என்பதெல்லாம் இந்த வருடத்தின் புது அனுபவங்கள். ஆனாலும், ரகசியம் சொல்ல மட்டும் பப்புவுக்கு தெரியவில்லை.

* பப்பு, முழுமையாக டாய்லெட் ட்ரெய்ண்ட்! இது தானாகவே எந்த பிரயத்தனங்களும் இல்லாமல் நடந்தது நிம்மதி.

* முன்பெல்லாம், அநியாயத்துக்கு வீட்டில் ஏக வசனமாக இருந்தது. ( வாடி, போடி, உனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு....etc..) அநேகமாக, இது சீசனல் என்று நினைக்கிறேன். ’கெட்டா வார்த்தை பேசினா ஹார்ட் ப்ளாக்காகிடும், நல்ல வார்த்தை பேசினாதான் ஹார்ட்ல நல்லா ப்ளட் போய் ரெட்டா இருக்கும்’ என்று சொல்லி வைத்திருந்தோம். தாயம் விளையாடும்போது நான் ஜெயிக்கிற மாதிரி
வந்துவிட்டால் எப்படியாவது தில்லாலங்கடி வேலை செய்து அவள் மேலே வந்துவிடுவாள். கண்டுபிடித்துவிட்டால் கோபம் வந்துவிடும்.
ஒருமுறை,

“போடி, நான் விளையாட்டுக்கு வரல” என்றாள்.

”ஹார்ட் ப்ளாக் ஆகப்போகுது...” என்றதும் லேசாக அதிர்ச்சியடைந்துவிட்டாள்.

பிறகு, ”நான் கெட்ட வார்த்தை சொல்லனும்னு நினைக்கல. அதுவாத்தான் என் வாயில வருது. நான் உன் வயித்துல இருந்தப்போ உன் ஹார்ட் அடிக்கடி ப்ளாக்கா மாறுச்சு. அதைப்பார்த்துதான் எனக்கும் அதுமாதிரி
வருது!!”

*பேச்சை மாற்றுவது, யோசிக்காமல் மாற்றி சொல்வது, கோள் சொல்வது எல்லாம் இந்த வருடத்தின் வளர்ச்சிகள்(?!). கலரிங் சாண்ட் செய்த மீதி இருந்திருக்கிறது. ஆயாவின் தலைமுடியை சீவுவதாக சொல்லி அதை எடுத்து அவரின் தலையில் போட்டிருக்கிறாள். கேட்டதற்கு, ஆயா என் தலையில் போட்டாங்க என்று சொன்னதோடு நிறுத்திருக்கலாம். (ஆயா பாவம்!!!)
அடுத்த நாள் பார்க்கும்போது அவள் தலையிலும் மணல். அவளாகவே எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறாள். ஸப்பா!!

”நாளைக்கு ஒரு ஸ்டிக்கரும், என்வெலப்பும் மறக்காம எடுத்துட்டு வர சொன்னாங்க, ஆண்ட்டி” என்றாள் இரவு தூங்கும்போது.
”என்ன ஸ்டிக்கர்? எதுக்கு கேட்டாங்க? டைரியில ஒன்னும் எழுதலையே ஆண்ட்டி”
“இல்லப்பா, எங்ககிட்டே சொன்னாங்க” என்றதும், ‘ அந்த ஸ்டிக்கர் புக்லே ஸ்டிக்கரை கட் பண்ணி எடுத்துக்கோ, என்வெலப் நாளைக்கு
ஸ்கூல் போகும்போது வாங்கிக்கலாம் என்றதோடு நானும் மறந்துவிட்டேன். பள்ளிக்கு சென்றதும்தான் நினைவுக்கு வந்தது. அவளது ஆண்ட்டியை பார்த்ததும் இது நினைவுக்கு வந்ததும் அவரிடம் எடுத்துவர மறந்துவிட்டதாக சொன்னேன்.
சரி, அவளை எதுவும் சொல்லக்கூடாதே என்பதற்காக. ஆண்ட்டிக்கு எதுவும் புரியவில்லை. அவரும் நான் கேட்ட அதே கேள்விகளை கேட்டார்.

பக்கத்திலிருந்த பப்பு, ’ஆண்ட்டி சொல்லல, நீ போ’ என்று ஓடிவிட்டாள்.

பின்னர்தான் தெரிந்தது, பிரக்னண்டாக இருக்கும் ஆண்ட்டிக்கு இந்த குட்டீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு க்ரீட்டீங்க்ஸ் கொடுக்கப்போகிறார்களாம். அதற்குதான் இந்த ஏற்பாடாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

* அலமாரிகளை ஒழுங்காக எப்போது பார்த்தோம் என்ற நினைவே இல்லை. சமநிலைக்கு சவால் விடுவதைப்போல்தான் இருக்கின்றன. எதையாவது எடுத்தால் மொத்தமும் கீழே கிடக்கும். அதனால்,அடுக்கி வைப்பது என்பதே இல்லை. எப்படி வைத்தாலும் அதன் வாழ்க்கை ஒரு சிலநாட்கள்வரைதான் என்பது தெரிந்துவிட்டது அதனால், யார் எடுக்கும்போது விழுந்தாலும் அவர்கள் அதனை எடுத்து வைத்துவிட வேண்டும் என்பது விதி. பெரும்பாலும், பாதி விளையாட்டு சாமான்கள் படுக்கையில் கிடக்கும். மீதி கீழே.

தற்போது மேடம் விதியை மாற்றி அறிவித்துவிட்டார்கள், “ இனிமே, யார் தள்றாங்களோ அவங்கதான் எடுத்து வைக்கணும்னு இல்ல, அவங்கவங்க திங்க்ஸ் கீழே விழுந்தா அவங்கதான் எடுத்து வைக்கணும்!”

* ஒருமுறை, பப்புவின் சாக்கோஸை எடுக்கும்போது தவறி கீழே கொட்டிவிட்டேன். அருகில் வந்த பப்பு, “பரவால்ல, பரவால்ல, விடு, எடுத்துடலாம். தெரியாம விழுந்துருக்கும் ” என்று என்னை தேற்றினாள். சின்ன வயதில், இப்படி எதையாவது சிந்திவிடுவேனோ என்று அதீத கவனத்துடன் இருப்பதாலேயே அப்படி நடந்துவிடும். ஆயாவின் டெரரிசம்தான் காரணம். இப்போதும், கண்ணாடி போன்ற பொருட்களை கையாளும்போது கீழே போட்டுவிடுவேனோ என்றேதான் தோன்றும். ஆனால், பப்புவிடம் அந்த பதற்றம் எதுவுமில்லை, தற்போதுவரை. :-)

நாற்காலி அடியில் அல்லது மேசைக்கடியில் அல்லது கேட்டின் மீதேறினால்
ஆயா,’ பார்த்து...பார்த்து, இடிச்சுக்கப்போறே’ என்று பதறுவார். அப்படி சொல்லும்போதுதான் பதற்றம் அதிகமாகி அவர் சொன்னதுபோல நடக்கும்.
இப்படி, பாதிக்கப்பட்டதால் ”கீழே குனிஞ்சு வா, மெதுவா புடிச்சுக்கிட்டு இறங்கு” என்றோ கீழோ கொட்டிவிட்டாலோ “பரவால்ல, அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணனும்” என்று சொல்லிவிடுவேன். அந்த பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

* இந்த வருடம் முழுக்க, பப்புவுக்கு மிகுந்த என்டர்டெயினராக இருந்தது, “ஆச்சியோட குட்டி வயசுல” என்ன நடந்தது என்பதுதான். பால் குடிக்க, சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் என்னோட “குட்டி வயசு கதைகள்”தான். பப்லு போய் ஆச்சியோட குட்டி வயசு!! இப்படி ஆயாவும், பெரிம்மாவும் சொன்னதுபோக, பப்புவே என்னோட குட்டி வயசுக்கதைகளைச் சொல்கிறாள்...என்ன,
சில கதைகளெல்லாம் பப்பு சொல்லிதான் எனக்கே தெரிகிறது(மரத்தில் ஏறிக்கொண்டு இறங்கமுடியாமல் அழுதது etc)!!

எதேச்சையாக வாங்கிய 'tell me a story mama' புத்தகமும் கொஞ்சம் இது போல்தான் என்பதில் கொஞ்சம் ஆறுதல் - நான் மட்டும் தனியா இல்லையென்று.

* மழலையெல்லாம் எப்போதோ மறைந்துவிட்டாலும் ஒரு சில வார்த்தைகளை அவள் உச்சரிக்கும் விதம் சிரிப்பாக இருக்கும். ’நிம்மேதி’, ’அமேதி’, ’ஒளைச்சு வைச்சிருக்கேன்.’- சாம்பிளுக்கு சில. அதே போல, அவள் உபயோகிக்கும் சில தமிழ் வார்த்தைகளும் - ’நீங்க அதை பாக்கணும்னு விரும்புறீங்களா? ’...etc


* காலை நேர பரபரப்புகளில், அவ்வப்போது கைகலப்பு நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போய்விடும். ஆனாலும், பள்ளிக்கு செல்லும் சமயம், ‘சாரி பப்பு, நீ சொன்னதை செய்யாம இருந்ததாலதான் கோவம் வந்துடுச்சு, லேட்டாகுது இல்ல, அதான் அடிச்சுட்டேன், ,மன்னிச்சுடு, குட் டே’ என்று சொல்லி விடுவேன். ’பரவால்ல ஆச்சி, உனக்கு இன்னும் 99 சான்ஸ் இருக்கு” என்பாள் மிகுந்த பெருந்தன்மையுடன்.

* மேலும், தன்மானம் ஜாஸ்தி! தன்னாலே எல்லாம் செய்ய முடியும், முக்கியமாக வெளியில் அல்லது மற்றவர் முன்பு நாங்கள் உதவுவதை அவள் விரும்புவதேயில்லை. அவள் தட்டில் நான் கை வைப்பதையோ ஊட்டி விடுவதையோ சுத்தமாக விரும்புவதில்லை. ஆனாலும், நாந்தான் திருந்தவில்லை.

* டெங்கு ஜூரம் வந்து கொஞ்சம் டென்சன் கொடுத்தது.


மொத்தத்தில் புது அனுபவங்கள்+போராட்டங்கள்+ மகிழ்ச்சிகள்+ வலிகள் - பரபரப்பான 2011! தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களின் நன்றிகள்!

2 comments:

Uma said...

முல்லைக்கும் குறிஞ்சி மலருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :-)

சந்தனமுல்லை said...

மிக்க நன்றி, உமா! தங்களுக்கும், டாக்டருக்கும் எங்களின் வாழ்த்துகள்! :-)