Thursday, June 11, 2015

ஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)

வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதியையும் முக்கியமாக -எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமான மக்கள்  மற்றும் வாகன நெரிசல்தானே- நமது அடையாளம்.

உத்தராகாண்ட் மலைபயணங்களில் கூட, எங்களது அனுபவம் இப்படியாகத்தானிருந்தது. முக்கியமாக சென்னை போன்ற ஜனசந்தடி மிகுந்த ஊரிலிருந்து சென்றால்,  'இந்த ஊர் இந்தியாவுக்குள்தானிருக்கிறதா' என்று சந்தேகம் வராமலிருக்காது.

சன்னமான வெயில். இளங்காற்று. சரிவு சரிவாக மலைத்தொடர்கள். மலைத்தொடர்களை போர்த்தியிருக்கும் மரகதப்பச்சை. தொடுகோடுகள் போன்ற மலைத்தொடர் ஒன்றில், அருகமைந்த மலைமுகடுகளை பார்த்தபடி நமது பயணம். வழியில் ஒன்றிரண்டு வியூ பாயின்டுகள். 'மேக்டோக்' வியூ பாயிண்ட், அழகிய இடம். பள்ளத்தாக்கு என்பதற்கு இலக்கணத்தை இங்கு கற்றுக்கொள்ளலாம்.

பயணத்தின் பாதை முழுக்கவே, நாம் கண்டு களிக்கக்கூடிய இயற்கை அற்புதங்களால் நிரம்பியிருக்கின்றன. எங்கு நின்று பார்த்தாலும், அருவிகளும், பூமியின் அடியையே காணமுடியாதபடி  பள்ளத்தாக்குகளும், எங்கிருந்தோ திடீரென்று எழும்பி வரும் வெண்பொதி பஞ்சுகளும் நம்மை மயக்குகின்றன.

ஏதோ ஒரு ஸ்க்ரீன் சேவருக்குள் நுழைந்துவிட்டாற்போல, ஆங்கிலப் படக்காட்சிகளுக்குள் எங்களை கொண்டு போய் விட்டுவிட்டது போல தோன்றியது.  பேசாமல், எங்கேயும் தங்காமல்,  சாலை செல்லும் வரை பயணித்துக்கொண்டே இருக்கலாமென்ற எண்ணம் இந்த பயணத்தில் எழுந்தால் நீங்களும் என் இனம்தான்!


படமெடுக்கலாமென்று, பா ஷிம்மை நிறுத்தசொன்னால், இடது பக்கத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். கதவை திறந்தால், அதல பாதாளம். ஒருவர் இறங்கி நடக்க வசதியுண்டு என்றாலும், நமக்கு பழக்கமில்லாததால் பகீரென்கிறது. :‍)

பெரும்பாலும், நடந்தேதான் தூரங்களை கடக்கிறார்கள்,மக்கள். ஒருவரைக் கூட தேவைக்கதிகமான  பருமனுடன் பார்க்கவில்லை.  இதில் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு பெண்கள். சாலையில் ஆங்காங்கே, நிலக்கரி குவியல்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

மலையை குடைந்தாலே, இங்கு நிலக்கரிதான். ஒன்று நிலக்கரி அல்லது சுண்ணாம்பு. சில பாறைகளை பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம், மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரமென்று. சில பாறைகளில், மீன்களின் தடயங்களை கூட‌ காணலாம் என்று இணையத்தில் படித்தது மூளையில் ஒளிர்ந்தது.

நெய்வேலியில், இரண்டாம் கட்ட சுரங்கமெல்லாம் தோண்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கே போய் விடுவார்கள் போல. இங்கு, சாலையோரத்தில், மக்கள் தங்கள் கைகளைக்கொண்டே பாறைகளை துருவி நிலக்கரியை எடுத்துவிடுகிறார்கள். அதனால்தான், அத்தனை லாரிகள் மேகாலயாவிலிருந்து செல்கின்றன போலும்.

மலையைக் குடையவோ, பாறையை வெட்டவோ, பெரிதாக எந்த உபகரணங்களையும் காணவில்லை. ஒரு மண்வெட்டி, சுமந்து செல்ல மூங்கிலான கூடை ஒன்று. இடைவேளைக்கு, ரெட் டீ. மழை பெய்கிறதோ இல்லையோ, ஒரு ஜெர்கின். கால்களில் ஷூ ஒன்று. இதுதான், உழைப்பாளிகளின்  உடை.

கிராமங்கள் இருக்கிறதென்பதற்கு அறிகுறியாக, சில இடங்களில் வரிசையாக இறைச்சிக்கடைகள். வியு பாயிண்டுகளுக்கு வரும் பயணிகளுக்கு மேகியும், உள்ளூர் புளிப்பு பழங்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு. பெட்டிக்கடை என்றால், உண்மையாகவே பெட்டியை போன்ற கடைகள்.

வழியில் தென்பட்ட‌து 'ஆரஞ்சு ரூட்ஸ்' உணவகம்.  தோசையும், ஃபுல் மீல்ஸும் உண்டோம். தமிழ்க்காரர்.  திரு.ரயான். ஊர் மதுரை. அவரது ரிசார்ட்டில் மூன்று நாட்கள் வாசம்.

ச்சிராபுஞ்சியை அடைந்துவிட்டோமென்பதற்கு அறிகுறியாக, வீடுகள் வரிசையாக தென்படுகின்றன. ஓவியங்களைப் போல வீடுகளும் தெருக்களும். ஜன்னல், திரைச்சீலை, கொத்து கொத்தாய் ரோஜா பூக்கள். பல்கணியில் பூனைகள்.   அப்பழுக்கின்றி சாலைகள்.  தெருவோரத்தில் விளையாடும் குழந்தைகள். ஊருக்கு எல்லையில், ஒரு சிமென்ட் தொழிற்சாலை. ருஷ்யக்கதைகளில், வருவது போலவே இருந்தது.

ச்சிராபுஞ்சியிலிருந்து 15 கிமீயில் இருக்கிறது, லாட்கின்ஸ்யூ  கிராமம். கஸி மலைத்தொடரை, குடைந்து சாலைவசதி செய்திருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறியை  குகையாக செல்கின்ற‌ பாதையிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.
அடுத்த நிறுத்தம் ச்சிராபுஞ்சி ஹாலிடே ரிசார்ட்.

எதிரில்,  கிழக்கு கஸி மலைத்தொடர். கையளவு மேகமாக பங்களாதேஷிலிருந்து மேலெழும்பி வரும் வெண்பஞ்சு, சில நிமிடங்களில், மலையையே முழுங்கும் மங்காத்தாவாகி விடுகிறது. இந்த இடைவேளையில், அருவிகளை எண்ணி எண்ணி...தோற்றதுதான் மிச்சம். எங்கிருந்து பார்த்தாலும், நோக்காலிக்காய் அருவி தெரிவதுதான் சிறப்பு.

இந்த பயணத்தில், இதோ இந்த நிமிடத்தில், நாங்கள் நின்றுக்கொண்டிருப்பது, இந்தியாவின்‍ கஸி மலைத்தொடரின் கடைசிக்கிராமம். இதற்கப்பால் தெரிவதெல்லாம், பங்களாதேஷ்.  வெட்டப்பட்டது போல, லாட்கின்ஸ்யூ கிராமத்தில் மலைத்தொடர் முடிய, கீழே ஏரிகளும், வயல்களுமாக விரிகிறது பங்களாதேஷ்.   

அடுத்த சில நாட்களில் நாங்கள் செய்ததெல்லாம், இயற்கையில் எங்களை தொலைத்ததுதான்.   இதற்கு முன்பாக, இயற்கையை இந்தளவுக்கு எப்போது ரசித்தேன் என்று எனக்கே நினைவிலில்லை.

மனிதன், ஊடுருவவே முடியாத பசுமை மாறாக்காடுகள், அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போல ஃபிரெஷ் க்ரீமாக மேகங்கள், பகலில் கூட சத்தமிடும் சிக்கடாக்கள், குருவிகள், குருவி அளவில் விதவிதமான வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள், இரவில் மட்டும் ஓடிபிடித்து விளையாடும் மின்மினிப் பூச்சிகள், அழகழகான கிராமத்து குழந்தைகள், பார்த்ததுமே வீட்டுக்கு அழைக்கும் பாட்டிகள், அடுக்ககங்கள் கட்டவோ அல்லது உள்ளூர்க்காரரல்லாத வேறு எவரும் குடியேறவே அனுமதிக்காத மலைவாழ்மக்கள்  என்று வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களை எங்களுக்கு வழங்கியது ச்சிராபுஞ்சி அனுபவங்கள்.  

லாட்கின்ஸ்யூ, நோங்வார் கிராமங்களில் காலார நடந்தோம்.அவர்களைப் பார்த்து, நாங்கள் ஆர்வமானது போலவே, எங்கள் முகங்களும் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்தது போலும். 'கஹா போஸ்தி'என்று வினவிய‌ அனைவருக்கும் 'சென்னை' என்று சொல்லியும் விளங்காதவர்களுக்கு 'மதராஸ்' என்று பதிலளித்தோம். (முக்கியமாக, புதியவர்களை கண்டாலே உற்சாகத்துடன் பேசும் பாட்டிகள், 'தி வே ஹோம்' பாட்டியை நினைவூட்டினார்கள்.)காட்டுக்குள் மறைந்திருந்த அருவியொன்றை இரண்டு மணிநேரத்துக்கு  எங்கள் வசப்படுத்தினோம். எக் ஹக்கா சௌ, சிக்கன் ஹக்கா சௌ ,வகை வகையான ஃபிரைடு ரைஸ்கள் என்று இங்கு எதெல்லாம் உண்ண மாட்டோமோ அதையெல்லாம் அங்கு ஒரு கை பார்த்தோம்.  சலித்தபோது, அம்பிகா அப்பளம்ஸில் வாங்கிய பருப்புப்பொடியை சாதத்தில் பிசைந்து உண்டோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து, ஆசியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல ஒருநாளை ஒதுக்கியிருந்தோம். நோங்வார், லாட்டின்ஸ்க்யூ, ச்சிராபுஞ்சியை கண்டதும் முடிவை மாற்றிக்கொண்டோம். எல்லா ஊர்களும் ,கிராமங்களும் தூய்மையாகத்தான் இருக்கின்றன. ஒரு பாலித்தீன் பையையோ, குப்பையையோ நாங்கள் காணவில்லை.  வேர்ப்பாலங்களை காண பசுமை நடை, ச்சிராபுஞ்சியில் ஊர் சுற்றல் என்று  நாட்களை கழித்தோம்.

மாலையில், உள்ளூர் மக்களின் கஸீ பாடல்களில், இந்தி பாடல்களில் ஊறினோம். நின்று நிதானமாக, ஆனாலும் 'காட்டு காட்டென்று' இரவு மட்டும் காட்டும் பேய் மழையை, அசாதார‌ணமான மின்னல்களை கண்ணாடி ஜன்னல்களினூடாக கண்டோம்.

சொர்க்கத்தோடு  இணைந்திருந்த  மேகாலயா, எப்படி பிரிந்து பூமியோடு இணைந்ததென்ற பாட்டிக்கதையை கேட்டோம். கா லிக்காயின் கதையை கேட்டு, சோகத்தில் மூழ்கினோம்.  பத்து ரூபாய்க்கு, புளிப்புப்பழங்களை அள்ளிக்கொடுத்த  பாட்டிகளிடம் 'கொஞ்சமா தாங்க‌ போதும்' என்று பேரம் பேசி, பழத்தை பாதி கடித்துதும், உச்சிக்கு ஏறிய புளிப்பில் முகத்தை அஷ்டக்கோணலாக்கினோம். மலை வாழைப்பழங்களை வாங்கி,  உண்ணும்போது அகப்பட்ட  கொட்டைகளை கண்டு அதிசயித்தோம்.

ச்சிராபுஞ்சியின் இயற்கை அதிசயங்களை,  கண்கவர் பூங்காக்களை, குகைகளை, எண்ணற்ற அருவிகளை ருசித்தோம். அதன் உயரங்களை அளந்தோம். மேகம் கவிந்த மலை முகடுகளில் ஓடித்திரிந்தோம். மேகத்தையே சுவாசித்தோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து எங்கள் வீட்டுக்கு தபால்களை அனுப்பினோம். 'நோக்காலிக்காய் ஸ்டாம்ப்' 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ் ஸ்டாம்ப்' இருக்கிறதாவென தபால் அலுவலர்களை கிடுக்கிப்பிடி போட்டோம். ஆறுகளிலிருந்தும், வேர்ப்பாலத்தினடியிலிருந்தும் கூழாங்கற்களை சேகரித்தோம்.

சாப்பிட்ட பின்பும்,  சும்மா இருந்த நேரங்களிலெல்லாம் ரெட் டீயும், லெமன் டீயும் அருந்தினோம். மற்ற சுற்றுலா பயணிகளோடு, நட்பு பூண்டோம். கஸீ உடையை நாங்களும் உடுத்திக்கொண்டு, 'இது போல் எங்கு கிடைக்கும்' என்று விசாரித்தோம்.மலைத்தேனும், மேகாலயாவின் மழையில் விளைந்த தூய்மையான மஞ்சளை பொடி செய்து வாங்கிக்கொண்டோம்.

மழை பெய்த போது, அடங்காமல் மழையுடையை உடுத்திக்கொண்டு மழையில் ஓடினோம். இதுவரை, எத்தனை இந்திய மாநிலங்களில், அதன் தலைநகரில் கால் வைத்திருக்கிறோம் என்று கணக்கு பார்த்தோம்.

எந்த ஊரிலிருந்து  கிளம்பினாலும், பப்பு சொல்லும், 'நான் இங்கியே   இருக்கப்போறேம்ப்பா' வை நாங்களும் இந்த முறை சொல்லிக்கொண்டோம். 'பப்பு, நீ என்னோட வயசாகிட்டு என்னை இங்கே கூட்டிட்டு வாப்பா' என்று ஆளுக்காள் உடன்படிக்கை போட்டுக்கொண்டோம்.

வாழ்க்கையில், மறக்க முடியாத அனுபவங்களை மூளைக்குள் ஏற்றிக்கொண்டோம். 'நடந்து சென்ற‌ பாதைகளை, கடந்து வந்த காட்சிகளை ,சந்தித்த மனிதர்களை மறந்துபோகவே கூடாது' என்று நியுரான்களுக்கு கட்டளையிட்டோம். 

'பசுமைநடையை, அங்கு செலவழித்த  கணங்களை லைஃப் முழுக்க நினைவு வைத்திருக்கப்போவதாக‌ நன்றி சொல்லி' கையோடு கை கோர்த்துக்கொண்டாள் பப்பு. சாட்சியாக, கனன்றுக்கொண்டிருந்தது கேம்ப் ஃபயரின் கங்குகள்.

Tuesday, June 09, 2015

சென்னை டூ கவுஹாத்தி டூ ஷில்லாங் டூ ச்சிராபுஞ்சி


அந்த ஏழு சகோதரிகளில், யாரை பார்க்க வேண்டுமென்றாலும், கவுஹாத்தியிலிருக்கும் வாயிற்கதவைத்தான் தட்ட வேண்டும். நாங்களும்  தட்டினோம். கவுஹாத்தியின் லோக்பிரியா கோபிநாத் போர்தோலொய்  விமானநிலையம் , எங்களை இனிதே வரவேற்றது. இந்த முறை, ஏழு சகோதரிகளில், மேகங்களை மேகலையாய் அணிந்திருப்பவளைத்தான் சந்திக்கப்போகிறோம்.

கவுஹாத்தியிலிருந்து, மேகலாயா செல்ல வேண்டுமென்றால்,  இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று டாக்ஸி பிடித்து செல்லவேண்டும். இரண்டு, ஹெலிகாப்டர். ஹெலிகாப்டர் சர்வீஸூக்கு எங்கள் பட்ஜெட்டில் இடம்  இல்லை, அதோடு உயிர் மேல் பயம்.

விமானநிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே, 'ஷில்லாங்' 'ஷில்லாங்' என்று  பல குரல்கள் கேட்கும். ஆம், ஷேர் ஆட்டோ மாதிரி 'ஷேர் கேப். தலைக்கு 500 ரூ. நாங்கள் மூன்று பேர் மற்றும் ஆளுக்கிரண்டு  மூட்டை முடிச்சுகள். ஷேர் கேப் வேலைக்காகாது என்று,  தனி வண்டியை ஷில்லாங்கிலிருந்து வரச்சொல்லியிருந்தோம்.

கவுஹாத்தியிலிருந்து, ஷில்லாங்கிற்கு காரில் செல்வதாக இருந்தால், ML என்று பதிவு செய்திருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ஷில்லாங்கிலிருந்து செல்லும் பயணத்திற்கும் இது பொருந்தும்.

ஓட்டுநர் பெயர், கார் பதிவு எண் பற்றி முன்பே மடல் வந்திருந்ததோடு, ஓட்டுநர் பா ஷிம், தப்பும் தவறுமாக‌ என் பெயரை பிரிண்ட் அவுட் எடுத்துக்க்கொண்டு காத்திருந்தார். :-)

இரவு, ஏழு மணிக்குத்தான் கவுஹாத்திக்கு வந்து இறங்கியிருந்தோம். கொலப்பசி. பா ஷிம்மிடம், 'டீக்கடையில் நிறுத்த' சொல்லிவிட்டு, வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். மழை பெய்திருந்தது போல. ஆங்காங்கே, நிலத்தில் நீர் தேங்கியிருந்தது.  சூரியன் அப்போதுதான் மறையத் துவங்கியிருக்க, இருள் மெல்ல எங்களை சூழ்ந்தது.

வித்தியாசமான ஆனால் வண்ணமயமான‌ உடைகளில், ஆண்களும் பெண்களும் சாலையை கடந்தும், நின்றும் பேசிக்கொண்டிருந்தனர். போடோ மக்கள். பழங்குடி உடையில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. விமானநிலைய சாலையிலிருந்து இப்போது காட்டுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

'யானைகள் கடக்குமிடம். மெதுவாக செல்லவும்' என்று அறிவிப்பு பலகையை பார்த்ததும், 'ஹேய் பப்பு, யானைல்லாம் வருமாம்ப்பா..' என்று பப்புவிடம் சொல்லிவிட்டு, 'ஹையய்யோ...யானைல்லாம் வந்தா எனன் பண்றது?' என்று கவலைப்பட்டு, ஷிம்மிடம் கேட்க, அவரோ, 'ஆமாம், சில சமயம்தான். இப்போல்லாம் வராது' என்று யானை டாக்டர் மாதிரியே பேசினார்.

போடோ இன மக்களை, அஸ்ஸாமின் நிலக்காட்சிகளை, மூன்று மணிநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து அஸ்ஸாமின் சாலையில் பயணித்துக்கொண்டிருப்பதை, அஸ்ஸாமும் தமிழ்நாடு போலவே இருப்பதை....மனம் அசைபோட்டபடி இருந்தது.

ஒரு டீக்கடை கூட வரவில்லை. அல்லது அவர் நிறுத்தும்படி வசதியாக‌ இல்லை. சேறும் சகதியுமாக,சாலையைத் தாண்டி இருந்தது. பப்புவோ, பசியில் க்ர்ர்ர்ர்ர்ர்.

நடுவில், தாண்டமுடியாத அளவுக்கு சுவரொன்றை நடுவில், கட்டி சாலை இரண்டு பக்கமாக பிரிக்கப் பட்டிருந்தது. வலதுபக்கம், நல்ல கடைகளாக தென்பட, இடதுபக்கம் இருட்டில் மூழ்கி இருந்தது.  லாரி சுத்தம் செய்யும் இடங்களாகவே இருந்தது, இடதுபக்கம். வலதுபக்கம் போல, இங்கும் நல்ல கடைகள் வரும், ஏதாவது உண்ணலாம் என்று நினைத்திருக்க நேரம் கடந்துக்கொண்டிருந்தது. 

ஒருவழியாக, நாங்களே 'இங்கே நிறுத்துங்க நிறுத்துங்க' என்று கத்தி ஒரு கடையில் நிறுத்தினோம். பேக்கரி, இனிப்புகள் என்று கடை நிறைந்திருக்க, இரண்டு டீ மட்டும் கேட்டோம். பப்பு, 'ஹே ஆச்சி, ரசகுல்லா...ரசகுல்லா வேணும்' என்று கதற, 'இங்கேல்லாம் வேணாம்ப்பா, நல்ல கடையிலே ஷில்லாங்லே போய் வாங்கலாம்' என்று அடக்கினேன்.

அஸ்ஸாம் டீ.

சாலையின் வலதுபக்கம் மட்டும் நல்ல வெளிச்சமான கடைகள், இரண்டுகடைகளுக்கு ஒரு கடை வைன் ஷாப்...எல்லாவற்றிலும் யாராவது வந்து வாங்கிக் கொண்டுதான் இருந்தனர். இந்த பக்கமோ, ஒரு பிஸ்கட் கடை கூட காணோம். விசாரித்தால், அந்த பக்கம் மேகாலயாவாம். இந்த பக்கம் ,நாங்களிருப்பது அஸ்ஸாமாம். ஆகா, ஒரு சாலையில் ஒரே நேரத்தில் 2 ஸ்டேட்ஸ்!!

இந்தியன் ஆயில், மேகாலயா பக்கம்- அஸ்ஸாம் ஆயிலாக-  மாறியிருந்தது. வண்டிக்கான எரிபொருளும், மனிதர்களுக்கான எரிபொருளும் மேகலாயா பகுதியில் மிகவும் மலிவாம். சுவரேறி குதித்து வாங்கிக்கொண்டு செல்வார்களாம். அதனால்தான் சாலைக்கு இந்த பக்கத்தில் கடை வைக்க எவருக்கும் ஆர்வமில்லை போலும்.

நடுவில், பெர்லின் சுவர் போல ஒரு குட்டிச்சுவர். அஸ்ஸாமிலிருந்து மேகாலயா தனியாக பிரிந்ததுதான் காரணம். பப்பு ரொம்ப பொறுப்பாக, 'எப்போ தனி ஸ்டேட் ஆச்சு மேகலாயா? உத்ராகாண்ட் அப்போவா' என்றாள். க்ர்ர்ர்ர்ர்....

கார் மெல்ல மலைப்பாதைகளில் ஊடுருவிச் சென்றது.சாலைகள் அவ்வளவு நன்றாக இருக்கின்றன. வெண்ணைய் போல வழுக்கிக்கொண்டு செல்கிறது வண்டிகள். எதிரில் அத்தனை லாரிகள். என்ன ஏற்றிச் செல்லும் அல்லது என்ன ஏற்றிகொண்டு வரும்? ஷில்லாங்குக்கு தேவையானது எல்லாமே வெளியிலிருந்து வந்தாக வேண்டுமோ?

முறுக்கு போன்ற பாதைகளென்றாலும், தலைசுற்றல், மயக்கம் எதுவும் இல்லை.  கொண்டை ஊசி வளைவுகள் இல்லாதது, நிம்மதி! சாலையின் ஓரத்தில் பார்த்த பெட்ரோல் பங்க்குகள், இருபது வருடத்துக்கு முந்தைய தமிழ்நாட்டை நினைவுபடுத்தின.

நாங்கள் செல்லவேண்டியது ச்சிராபுஞ்சிக்கு. அன்றிரவு மட்டும் ஷில்லாங்கில் தங்குவதாக திட்டம். இரவில் ஷில்லாங் பயணம் எப்படியிருக்குமோ, மலைப்பாதையிற்றே..கவுஹாத்தியில் தங்கிவிடலாமா என்று குழப்பிக்கொண்டிருந்தேன். இரவுகளில், பயமில்லாமல் ஷில்லாங்கிற்கு பயணிக்கலாம் என்றன சாலைகள்.

நமது ஊரைப் போல், அடிக்கடி அடிக்கும் ஹாரன் சப்தம் இல்லை. பொதுவாக, சாலைவிதிகளுக்கு கட்டுப்பட்டு, முக்கியமாக மலைப்பகுதியில்  இருக்கவேண்டிய கவனத்துடன் செல்கின்றன வண்டிகள்.

ஊரை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியாக, லாந்தர் விளக்குகள் வைத்துக்கொண்டு பழக்கடைகள். முக்கியமாக, கொலு வைத்ததுபோல, படிகளில் விதவிதமான பாட்டில்கள். அத்தனையும் ஊறுகாய்களாம்.

 பெரும்பாலும், பெண்களே எல்லாக் கடைகளிலும். 'எப்படி இந்த ராத்திரியிலே, இருட்டுலே தனியா உட்கார்ந்தி ருக்காங்க,  நம்ம ஊரிலே எட்டு எட்டரை மணியானா ரோட்டுலே பெண்கள் நடமாடறதை பார்க்கவே முடியாது' என்று மனம் தராசை தூக்கியது.

பராபானி தாண்டியதும், வரிசையாக வீடுகள். பராபானிதாம் உமியம் ஏரி. செயற்கையாக உருவாக்கப்பட்டது. இரவில் ஒன்றும் தெரியவில்லை. இரவு ஒன்பதரை இருக்கும். பெண்கள், ஆண்கள் என்று கவலையில்லாமல் நின்றுக்கொண்டும், நடந்துக்கொண்டும் இரவின் குளிரை அனுபவித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இளம் பெண்கள் நவீன உடைகளில் இருக்க, நடுத்தர வயது பெண்கள், ஜெயின்சம் உடையில் இருந்தனர். ஒருவரைக் கூட புடவையில் காணமுடியவில்லை.  இந்தியாவின் தென்பகுதியிலிருந்து வடபகுதிவரை, பெண்களை முழுநீள -கட்டும் விதம் வெவ்வேறாக இருந்தாலும்- புடவையில் கண்டிருந்த எங்களுக்கு புதியதாக இருந்தது.

வழியெங்கும் கடைகள்...ஒன்று ஊறுகாய் கடைகள் அல்லது இறைச்சிக் கடைகள். இரவு எத்தனை மணியானாலும், இறைச்சிக்கடைகள், முக்கியமாக பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். 'ஷில்லாங்கில் இறைச்சிதான் ஸ்பெஷல். லஞ்சுக்கு, டின்னருக்கு என்று இறைச்சிதான் உண்போம்' என்றார் பா ஷிம்.

வேறு ஊர், காலநிலை, மக்களின் முகங்கள், உணவு, உடை, மொழி என்று முற்றிலும் புதியதோர் உலகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தின. இந்தியாவுக்குள்தான் எத்தனை உலகங்கள்! எத்தனை ஆச்சரியங்கள்! பப்பு மட்டும் இந்திய மாநிலங்களை பற்றி ஆர்வம் காட்டிராவிட்டால், இவற்றை எல்லாம் எப்போது அறிந்துக்கொண்டிருப்பேனோ!

சடாரென்று ஒரு வளைவில் வண்டி திரும்பியபோது திகைத்துப் போனேன். மின்மினி பூச்சிக்கூட்டம் போல,வானத்து நட்சத்திரக்கூட்டம் போல.... ஆம், ஷில்லாங்கை நெருங்கிவிட்டோம். இன்றிரவு நாங்கள் தங்கப்போவது ஷில்லாங்கின் உள்ளூர்க்காரரின் வீடொன்றில். ஹில்டாப் சாட்டு.

போனில் பேசி, இராத்தங்கலுக்கும் இரவு உணவுக்கும் பேசியிருந்தேன்.  இந்த வீடு இருந்தது, உண்மையிலேயே ஹில்டாப்தான். வீட்டை அடையவும், மழை  தூறவும் சரியாக இருந்தது. வாயிலில் வந்து வரவேற்றார், உரிமையாளர். 

காரிலிருந்து இறங்கியதும், முகத்தில் மோதியது குளிர்க்காற்று. பண்டங்களை வெளியில் எடுக்கக்கூட விடாமல், எங்கள் கண்களை ஈர்த்தது, அங்கிருந்து தெரிந்த ஷில்லாங்கின் இரவுக் காட்சி. கீழிருந்த அறையை எங்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.எளிமையான உணவு. சப்பாத்தி, சாதம், பருப்பு, காய்கறிக்கூட்டு. பசிக்கும், குளிருக்கும் அவ்வளவு நன்றாக இருந்தது. மலையுச்சி என்பதால் காற்றும் குளிரும் அதிகமாக இருந்தது.உணவுக்குப் பின்,வெளியில் நின்று சற்று நேரம் குளிரை அனுபவித்தோம். இதற்காகத்தானே, வெயில்தகிக்கும் சென்னையிலிருந்து ஓடி வந்திருக்கிறோம்!

இன்றிரவு மட்டும் இங்கு. நாளையிலிருந்து, மூன்றுநாட்களுக்கு  ச்சிராபுஞ்சியின் வசம். நாளை காலையில் புறப்படுவதாக திட்டம். பா ஷிம் வண்டிதான். அவருக்கு இங்கு ஒரு வீடும், ச்சிராபுஞ்சியில் ஒரு வீடும் இருக்கிறதாம். கொடுத்து வைத்தவர் என்று நினைத்துக்கொண்டேன்.

பைன் மரங்களை, அதனை உராயும் காற்றை, மினுக்மினுக்கென்று ஜொலிக்கும் ஷில்லாங் நகரத்தை,வீடுகளை உற்றுநோக்கிவிட்டு படுக்கைக்குச் சென்றோம். இரவு முழுக்க, காற்று கண்ணாடி ஜன்னல் கதவுகளில், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளில் முட்டி மோதும் சத்தம். எங்கேயோ, ஏதோ பெயர் தெரியாத ஊர்களில் அலைந்து திரிவது போல கனவு.

திடீரென்று, கண்களில் வெளிச்சம் கூச பார்த்தால் விடிந்திருக்கிறது. 'ஹைய்யய்யோ..ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போல...' என்று, கண் எரிச்சலோடு, எழுந்து பல் துலக்கி நேரம் பார்த்தால் மணி நாலரை. எட்டு மணிபோல் தகதக‌வென்று வந்துவிட்ட சூரியனை பார்த்து அதிசயித்து, பறவைகளை அவதானிக்க தொடங்கினோம். பப்புவையும் எழுப்பி விட்டேன். இப்படியாவது, ஐந்து மணியை பார்க்கட்டுமே!ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு பெரிதாக மலந்திருந்தன. செம்பருத்தியை இந்த சிவப்பில் பார்த்ததேயில்லை. ஊஞ்சலாடிக்கொண்டும், குளிர்க்காற்றை அனுபவித்துக்கொண்டும் இருந்த நேரத்தில், வந்தார் ஒருவர். 'என் பெயர் டீன். ஐஸ்வரியாவின் கணவன்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.நினைவு தெரிந்து, 'இன்னாருடைய‌ கணவன்' என்று தன்னை யாரும் அறிமுகப்படுத்திக்கொண்டதை பார்த்ததில்லை. இதுவரை எத்தனையோ வீடுகளில் விருந்தினராக தங்கியிருக்கிறோம். அனைவரும், 'என் மனைவி' என்றுதான் அறிமுகப்படுத்தி வைப்பார்களே தவிர, 'அவரது கணவன்' என்று சொல்லி கேட்டதே இல்லை. இனிய அதிர்ச்சி!!                           ( Hilltop Chateau)
 
கஸி இனத்தில், பெண்களுக்குத்தான் உரிமைகள் அதிகம். கஸீக்களில் குடும்பத்தை, சமூகத்தை கட்டி ஆள்பவர்கள் பெண்கள்தான். சொத்துரிமைகளும் பெண்களுக்குத்தான்.  இவற்றை எல்லாம் பேசியபடி பிரட்,தேநீரோடு காலை உணவை அருந்தினோம். பா ஷிம் வந்துவிட, மழையை துரத்திப் பிடிக்க ச்சிராபுஞ்சிக்கு பயணமானோம்.

Saturday, June 06, 2015

5 offbeat things to do in Alleppey

1.வஞ்சி பாட்டு:

'வல்லம்களி' என்ற அழைக்கப்படும் படகு போட்டிகளின் போது, பாடப்படும் பாடல்.  சீரான கைத்தாளத்தோடு, ஒருவர் பாட, குழு அவர் பின்னால் சேர்ந்து பாடுவது. இந்த பாடல்கள், இணையத்தில் முழுமையான தொகுப்பாக‌ கிடைக்கவில்லை.  வஞ்சிப்பாட்டு, அவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். எல்லா வயதினரும் ரசிக்கிறார்கள். 'நமக்கும் பிடிக்கிறது' என்று தெரிந்தால் மிகவும் மகிழ்கிறார்கள்.

சென்ற முறை, ஆலப்புழாவின் படகு போட்டியின்போது சென்றிருந்தோம்.ஆழப்புழாவின் குறுகிய‌ காயல்களில் 'ஷிகாரா' படகுகளில் வலம் வந்துக்கொண்டிருந்தோம். அழகான தாளலயத்தோடு, உச்ச ஸ்தாயில் பாடிக்கொண்டிருப்பது கேட்டது.  தித்தித்தாரா தித்தித்தை...தித்தை...

 

பாடல் வந்த திசையில்,  மரத்தடியில் , இரண்டு வரிசைகளில் குழுவாக ஆண்கள் நின்றிருந்தனர்.  நேர்த்தியான வரிசைகளில் நின்றபடி, துடுப்பு போடுவது போல கைகளை அசைத்து, முன்னால் நின்று பாடுபவரின் பாடலை திருப்பிப்பாடிக் கொண்டிருந்தனர். பார்க்கவும், கேட்கவும் இனிய காட்சியாக இருந்தது,அது.  அந்த இடத்தை கடந்த பின்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர்களின் பாடல்!


இதில், பல வகைகள் இருக்கின்றன போலும். நாங்கள் தேடிய பல கடைகளிலும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும், மனமிரங்கி, கணினியில் இருப்பதாகவும்,  எங்களுக்காக வட்டில் பதிந்து தருவதாகவும் சொல்லி கொடுத்தார். 40 பாடல்கள்.  சில சமயங்களில், படகு சவாரி செல்லும் போது இளநீர்,தேநீருக்காக , இறாலுக்காக‌ காயலோர கடைகளில் நிறுத்துவார்கள். அந்த கடைகளில் கிடைக்கலாம்.  சாம்பிளுக்கு இங்கே ஒன்று.


 தித்தித்தாரா தித்தித்தை...தித்தை...:‍)

2. ஷார்ஜா ஷேக்

ஜூஸ் கடைகளில் இந்த பானத்தை தவறாது குடிக்கவும். 'ஷார்ஜா ஷேக் எதனால் செய்தது?' என்று கடைக்காரரை கேட்டு 'ஷார்ஜா பழம்' என்று பதில் வந்தால், அதிர்ச்சி அடையாதீர்கள். சிறு கடைகளிலிருந்து, பெரிய உணவகங்கள் வரை இந்த 'ஷார்ஜா ஷேக்' உணவு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

ஷார்ஜா ஷேக் என்பது ஒருவேளை ஷார்ஜா வாழ் கேரளத்தினர் கண்டுபிடித்ததோ அல்லது, அரபு நாட்டின் பேரீச்சம் பழங்கள் கொண்டதோ   என்றெல்லாம் எங்களைப் போல் குழப்பிக்கொள்ள வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். ஷார்ஜா ஷேக் என்பது, ஒருவகை சிறுவாழைப்பழங்களும், பூஸ்ட்டும் கொண்டு செய்த 'மில்க் ஷேக்'. பிம்ப்பிலிக்கி பிலாபி! :-) ( அந்த வாழைப்பழத்துக்கு, 'ஞாலிப்பூவன்' என்று பெயராம்.)


அப்புறம், ஷார்ஜா ஷேக் செம!


3. லாட்டரி சீட்டு

நமது அதிர்ஷ்டத்தையும் கொஞ்சம் பரிசோதித்து பார்க்கலாம். இரண்டு கடைகளுக்கொரு லாட்டரி சீட்டுக் கடை. இதில், ஓணத்துக்காக சிறப்பு குலுக்கல் வேறு. பப்புவுக்கு முதலில் லாட்டரி என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவளுக்கு லேசாக விளக்கியதும், 'வாங்கலாம்' என்றாள். 'வாங்கித்தான் பார்ப்போமே' என்று எனக்கும் தோன்றியது.

அவளே ஒரு சீட்டை தேர்ந்தெடுத்தாள். அடுத்தநாள், செய்தித்தாளில் வரும் என்றதும், இந்த சீட்டுஎண் வரப்போகிறது என்று நம்ப ஆரம்பித்துவிட்டாள். அடுத்த அரைமணிநேரம் எங்கள் பேச்சையும், மூச்சையும் லாட்டரி ஆக்கிரமித்துக் கொண்டது. லாட்டரி காசு 65 லட்சங்கள் வந்ததும், அவளது காசை நான் எடுத்துக்கொள்ள கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள். குதிரை வாங்கப்போகிறாளாம்.

அடுத்த நாள் செய்தித்தாளில் வரப்போகும் எங்களது  லாட்டரி எண் குறித்தே எங்கள் எண்ணங்களும், திட்டங்களும் , சிரிப்பும் மகிழ்ச்சியுமாக சுற்றி சுற்றி வந்தன. குழந்தையின் எளிய மனம்தான் எத்தனை பெரிய வரம்!  செய்தித்தாளில் தன்னுடைய லாட்டரி சீட்டுஎண்  வந்துவிடும் என்றும், பணம் தனக்கே சேருமென்ன்றும் என்றும், அதனை எப்படி பெற்றுக் கொள்ளுவதென்றும் , கிடைத்த பணத்தை என்ன செய்வதென்றும் பப்புவுக்கு பல சிந்தனைகள்.

வாழ்க்கையை பற்றியும், எதிர்காலத்தை பற்றிய அவநம்பிக்கைகளையும், பயங்களையும் அவளுக்கு கடத்திவிட முனையும்  ஒவ்வொரு முறையும் என்னைக்கீழே தள்ளிவிட்டு சிரிக்கின்றன‌, அவளது நம்பிக்கைகளும், எளிமையான அணுகுமுறையும்!

வீட்டுக்கு வந்தபின், லாட்டரியை பற்றி மறந்தே போனாள். இரவு தூங்குமுன் ஒருமுறை கேட்டதோடு சரி! :-)

4. அப்பமும், தக்காளி ஃபிரையும்

கேரளா போய் அப்பம் சாப்பிடவில்லையென்றால் குருமா கூட உங்களை மதிக்காது! :-p

அப்பம் அல்லது பரோட்டா அல்லது இரண்டும் 'தவற விடக்கூடாதவை' பட்டியலில்  தவறாமல் இடம்பெற வேண்டியவை.;‍-)  அப்பத்துக்கு தேங்காய் பால் கொடுப்பது இல்லையாம். அது போகட்டும் குருமாவும் இல்லையாம்.
பட்டியலில், வித்தியாசமான பெயரில் ஈர்த்தது இதுதான்.


 (இது ஓணம் சதயா. தக்காளி ஃபிரை படத்தை செய்முறையில் காணவும்)

உலகின் இந்த மூலையில்தான், தக்காளியும் ஒரு காயாக  மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன். கோபி ஃபிரை அல்லது உருளை ஃபிரை என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்.  தக்காளியை ஒரு காயாக மதித்து, அதனை வெட்டிப்போட்டு மசாலா சேர்த்து கிடைக்கும் சைட் டிஷ்தான் 'தக்காளி ஃபிரை'.

செய்முறை இங்கே...

வித்தியாசமாக, ஆனால் நன்றாகவே இருந்தது, தக்காளி ஃபிரை. பெங்களூர் தக்காளிதான், இந்த ஃபிரையில் இருந்த காய். :‍-)

5. ஷிகாரா சவாரி

படகுவீட்டுப் பயணத்தையும், இரவில் படகில் தங்குவதையும் விட்டுத்தள்ளுங்கள். ஷிகாரா எனப்படும், அலங்காரமான படகில், ஆலப்புழாவின் கிராமங்களுக்கு நீர் வழியாக பயணம் செய்யுங்கள்.காயலோரத்தில் வாழும் மக்களும், அவர்களின் அன்றாட வாழ்க்கையும், காயலின் எதிரெதிர் முனைகளுக்கு கடக்கும் போட் சர்வீசும், சிறு வள்ளங்களில் படகு வலித்து விளையாடும் சிறுவர்களுமாக இந்த படகுபயணத்தில் நம்மை மயக்குவது, தண்ணீரை சுற்றி அவர்கள் வாழும் வாழ்க்கைதான். 


இந்த கிராம வழி பயணத்தில், ஆங்காங்கே சிறு மெஸ்களும் உண்டு. கேரளா மீல்ஸை மிஸ் பண்ணிவிடாதீர்கள்! ;‍) 


வீடுகளும், தென்னை மரங்களும்,வீட்டு முகப்பில் நிற்கும் கார் போல தென்னை மரத்தில் கட்டப்பட்ட படகுகளும், படகுகள் காற்றில் லேசாக அலைவதும், வீட்டின் பின்புறம் நெல் விளைந்து நிற்பதும் என்று  மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய‌ உணர்வை தந்தது,
 அந்த மூன்று மணிநேர கழிமுகப் பயணம். 


 சொகுசான‌ படகுவீட்டு பயணத்தைவிட என்னை கொள்ளை கொண்டது, இந்த ஷிகாரா சவாரியே!

Thursday, June 04, 2015

Double Decker Living Root Bridge Trek - சில உபயோகமான தகவல்கள்


வேர்ப்பாலங்களைப் பற்றி:

மேகாலயாவில், மூன்று வித மலைப்பகுதிகள்  உண்டு. கஸி, ஜெயிந்தியா மற்றும் காரோ. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களினால்  மலைகளுக்கு அந்த பெயர் வழங்கப்படுகிறதா அல்லது அந்த மலைப்பகுதியில் வசிப்பதால் பழங்குடியின மக்கள் இந்த பெயர்களால் விளிக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை. மேகாலயாவின், கிழக்கு கஸி (Khasi)  மலைப்பகுதி இயற்கை வளத்துக்கும், சுற்றுலா பயணத்துக்கும் மிகவும் புகழ் பெற்றது.


உலகிலேயே, மிகவும் அதிகமாக மழை பொழிவுக்கு, கின்னஸில் இடம் பெற்ற ச்சிரபுஞ்சி, இங்குதான் உள்ளது. கிழக்கு கஸி மலைப்பகுதியின் தனிச்சிறப்பு, அருவிகளும் வேர்ப்பாலங்களுமே. உலகில் வெறெங்கும் காணமுடியாத அதிசயம், இந்த‌ வேர்ப்பாலங்கள்.

மேகாலயாவின் பருவநிலையை மழைக்காலம், மழையற்ற காலம் என்று பிரிக்கலாம்.  மே மாதத்திலிருந்து பருவகாலம் தொடங்குகிறது. நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை மழை பெய்வதில்லை.

கஸி மலைப்பகுதியின், கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலை மீது அமைந்திருக்கிறது. மற்ற இடங்களுக்கு  செல்ல ,சிலபல ஆறுகளை கடந்துதான் அவர்கள் செல்ல வேண்டும். அதிலும், மழைக்காலத்தில் மலைப்பகுதியின் ஆறுகள் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லா மழைநீரும் ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடும்.

மேகாலயாவின், மலைப்பகுதி ஆறுகளின் குறுக்காக, இப்போது வரை பாலங்கள் இல்லை. கடலுக்கு நடுவில்,கங்கைக்கு குறுக்கில் பொறியியல் விந்தைகளாக நின்றுக்கொண்டிருக்கும் பாலங்கள் எதுவும் கஸி மலைப்பகுதிக்கு எட்டவில்லை. எனில், நூறு , இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்திருக்கும்?

ரப்பர் மரத்தின், இரண்டாம் கட்ட வேர்ககள்தான் கஸி மக்களுக்கு தீர்வாக அமைந்தன. ஆம், நீள நீளமான வேர்களை கண்டதும், ஏதோ ஒரு கஸி பொறியாளனுக்கு மூளையில் பல்பு எரிந்திருக்க வேண்டும். விளைவு, இரண்டு பக்கங்களிலும் ரப்பர் மரங்களை பராமரித்து, அவற்றின் வேர்களை பின்னி பிணைத்துவிட்டனர்.


இளம் வேர்கள் உடனடியாக உபயோகப்படுவதில்லை. வேர்கள் நன்கு வளர்ந்து, பலமுள்ளவையாக எடை தாங்குமளவுக்கு மாற‌, குறைந்தது 50 ஆண்டுகளாவது தேவை.  உடனடியாக, தமக்கு பயன் தராவிட்டாலும், பின் வரும் சந்ததியினருக்கு உபயோகமாகட்டும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.


அதன் விளைவுகள்தான், இன்று நாம் காணும் வேர்ப்பாலங்கள் (Living Root Bridges). சில வேர்ப்பாலங்கள், கிட்டதட்ட 150 முதல் இருநூறு வயதானவை. முழுமையாக வளர்ந்த வேர்ப்பாலங்கள், 500 முதல் 600 ஆண்டுகள் வரை மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும். இன்று அந்த வேர்ப்பாலங்கள்தான் மேகாலயாவின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

'பயோ என்ஞினியரிங் வொண்டர்' என்றே வேர்ப்பாலங்களை குறிப்பிடுகிறார்கள். மனிதனும், இயற்கையும் இயைந்து வாழும் வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வேர்ப்பாலங்கள் என்று பப்புவுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.


இதனை காண, உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர். புகழ் பெற்ற ஊடகங்க‌ள், வேர்ப்பாலங்களை பற்றி செய்திப்படங்களை தயாரித்திருக்கின்றன. ச்சிராபுஞ்சியை சுற்றிலும், பல்வேறு வேர்ப்பாலங்கள் இருந்தாலும், இரட்டை வேர்ப்பாலங்கள்தான் அனைவரையும் கவர்கின்றன.


மதிப்பு வாய்ந்ததென்றால் கொஞ்சம் மெனக்கெடத்தானே வேண்டும். இரட்டை வேர்ப்பாலமும் அப்படி கொஞ்சம் உழைப்பை கோரும் வகையில்தான் அமைந்திருக்கின்றது..   இரட்டை வேர்ப்பாலத்தை கண்டவர்களுக்கும் தனிமதிப்பு இருக்கத்தான் செய்கிறது.  :‍)


'மாலிங்னாங்' எனும் ஆசியாவின் தூய்மையான கிராமத்தருகில் இருக்கும் வேர்ப்பாலம், எளிதாக செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. 'உம்கார்' கிராமத்தின் இருக்கும் வேர்ப்பாலத்தின் ஒருபகுதி, மழைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டாலும் கிராம மக்கள், சுற்றுலா பயணிகளுக்காக பராமரித்து புதிதாக வேர்களை பின்னி வைத்திருக்கிறார்கள்.

இரட்டை வேர்ப்பாலத்தை அடையும் வழி:

பதிவின் இந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்களென்றால், வேர்ப்பாலத்தை பற்றி உறுதியாக இருக்கிறீர்களென்று பொருள். :-) வேர்ப் பாலத்துக்கான நடைபயணத்தை காலை பத்து மணிக்குள்ளாக  தொடங்கிவிடுவது நலம்.
வேர்ப்பாலத்தின் நடைபயணம் தொடங்குமிடம், ச்சிராபுஞ்சியிலிருந்து கிட்டதட்ட 15 கிமீ தொலைவில் இருக்கிறது.

எனவே,  ச்சிராபுஞ்சியில் இரவு தங்கலாம்.  வேர்ப்பாலத்துக்கு அருகில் உள்ள கிராமமான,  5 கிமீ தொலைவிலுள்ள 'லாட்டின்ஸ்க்யூ' கிராமத்திலும் தங்கலாம். இரண்டு இடங்களிலும் தங்கும் வசதி உண்டு. (ஷில்லாங்கி லிருந்தோ அல்லது வேறு தொலைவிலிருந்தோ பயணித்து நேராக  நடைபயணத்தை தொடங்குதல் சோர்வை தரலாம்.சிறார்கள் இருந்தால் இரவு தங்குதல் அவர்களுக்கு நல்ல ஓய்வைத் தரும்,  )


வேர்ப்பாலம்தான் நமது இலக்கு என்றாலும், அதுவரை நம்மை அழைத்துச் செல்லும் பாதையை கவனிக்க மறந்துவிடக் கூடாது. முதல் வளைவிலேயே இதனை நாம் உணர்ந்துக்கொள்வோம். சில வீடுகளை தாண்டியதும், எதிரில் தெரியும் மலைச்சரிவும், அதிலிருந்து வீழும் அருவிகளும், மலைமுகடுகளை படரும் மேகங்களும் கண்ணுக்கு விருந்து.

சில நிமிடங்கள்  எடுத்துக்கொண்டு, அந்த காட்சியினை  அணு அணுவாக ரசித்து மனதுள் கடத்தவும். படிகள் இறங்க இறங்க, மலைச்சரிவில் ஒளிந்திருக்கும்  அருவிகளும் கூட  முகம் காட்டும். மறக்காமல், அதன் பின்னணியில் படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.


கிட்டதட்ட, 2500 படிகள் என்று சொல்கிறார்கள். நாங்கள் எண்ணிப் பார்க்க‌வில்லை.  கீழ்நோக்கிய படிகள் என்பதால், மூச்சு வாங்காது. ஆனால், வேர்த்து ஊற்றும். (உடற்பயிற்சி செய்பவர் அல்லது தடகள வீரர்களுக்கு அல்ல, என்னைப் போல் சாதாரணமாக அவ்வப்போது நடைபயணம் செல்லும் சாதாரணர்களை மனதில் வைத்து சொல்கிறேன்.)  கிட்டதட்ட, கால்வாசி பாதையைத் தாண்டி கைப்பிடியை வைத்திருப்பார்கள். 

உண்மையில், நாம் ஒரு மலைச்சரிவில் படிகளில் இறங்கிக்கொண்டிருக்கிறோம். எனவே, பாதை செங்குத்தாக கீழ்நோக்கி இருக்கும். பயப்படத் தேவையில்லை.  துணைக்கு குருவிகள் மற்றும் பறவைகளின் சப்தங்களும், கண்ணுக்கு தெரியாமல் சலசலக்கும் ஆறும் உண்டு.


சக நடைபயணிகளுக்கு, முற்றிலும் புதியவராக கூட இருக்கலாம் அவர்களுக்கு உதவி செய்யும்  தருணங்களையோ அல்லது புன்னகையை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகளையோ இழக்காதீர்கள். கிட்டதட்ட,  இரண்டு கிமீ வரை, வேறு மனிதர்கள் யாரும் உங்கள் அருகில் இல்லை.

(இதுபோன்ற நடைபயணங்கள், குடும்பத்தினருக்கிடையில், சிறார்கள் மட்டும் பெற்றோருக்கிடையில் ஒரு வித நெருக்கத்தை, உதவும் மனப்பாங்கை வளர்த்தெடுக்கின்றன.இது அனுபவத்தில், கண்ட உண்மை.)

இந்த படிகள், கிட்டதட்ட ஒன்றரை கிமீ வரை நீளும். அதன்பிறகு, இரு பாதைகள் பிரியும். வலது பக்கம் சென்றால், நீண்ட வேர்ப்பாலத்தைக் காணலாம். அதற்கு கிட்டதட்ட  இருபது நிமிட நடை. அல்லது நேராக சென்றால் இரட்டை பாலத்தை காணலாம். நாங்கள், இரட்டைப் பாலத்தையே தேர்ந்தெடுத்தோம்.


இந்த பாதையின் ஆரம்பத்தில் சில வீடுகளை காணலாம். பூச்செடிகள், குழந்தைகள், ஓடையில் துணி துவைக்கும் பெண்கள், பாக்கு உரித்துக்கொண்டிருக்கும் ஆண்கள் என்று கிராம மக்களை காணலாம். இந்த தரை வழிப்பயணம் கிட்டதட்ட ஒரு கிமீ நீளும். அவ்வப்போது படிகளும் தட்டுபடும்.

பாறைகள் வழியாக, புகுந்து புறப்பட்டு செல்லும் ஆறொன்றை எதிர்கொள்வோம். எப்படி கடப்போம் என்ற கவலை வேண்டாம். கண்களை உயர்த்தினால், தொங்குபாலமொன்று தெரியும். இருபுறமும் பிடித்துக்கொண்டு, அடி எடுத்து வைக்கவும். காதுக்கு கேட்கும் உங்கள் இதயத்தின் லப்டப்பை  கவனிப்பதைவிட்டு, ஆறு பேசும் கவிதைக்கு காதுகொடுங்கள். :‍)


சரியாக இரண்டு நிமிடங்களுக்குள் அந்த பாலத்தை கடந்தால், இன்னும் கொஞ்சம் காட்டுப்பாதை. வெயில் புகா இடமென்றால் அதுதான். பாறைகள் மீதும் செடிகள் வளர்ந்திருக்கும். பாதைகளிலும், பசுமை படர்ந்திருக்கும். அடுத்து வரும் பாலம் சற்றே பெரிது. இந்த ஆற்றின் பாறைகள் கவனத்துக்குரியவை. இவை கண்டிப்பாக எங்கிருந்தே உருண்டு வந்திருக்க வேண்டும்.


இந்த இரண்டு பாலங்களையும் கடந்தால், இரட்டை வேர் பாலத்தை நெருங்கிவிட்டோமென்று பொருள். இலக்கை, தாங்களாக தேடிக் கண்டடையும் மகிழ்ச்சியை உங்களுக்கு கொடுக்கிறேன்.

செய்ய வேண்டியவை:

*உதவிக்கு,  உள்ளூர் வழிகாட்டி  வேண்டுமென்றால், ச்சிராபுஞ்சி விடுதியை (Cherra Holiday Resort) அணுகவும்.  பேச்சுத்துணைக்கும், உள்ளூர் பற்றி தெரிந்துக்கொள்ளவும் நல்ல வழி. 


அதோடு,  கிராமப்புற உள்ளூர் இளைஞர்களுக்கு இது ஒரு வேலைவாய்ப்பு.  (உள்ளூர் கஸி மக்கள் புதியவர்களை கண்டு வெட்கப்பட்டாலும் பழக இனிமையானவர்கள்.) பெரும்பாலும், எல்லோருமே ஆங்கிலம் பேசக்கூடியவர்களாகவும், தங்கள் ஊரைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

*வழிகாட்டி தேவையில்லையென்றாலும் கவலையில்லை.  ஆங்காங்கே இருக்கும் வழிகாட்டிப் பலகைகள் பெரும் உதவியாக இருக்கின்றன. 

*உடைகள், பருத்தி வகை ஆடைகள் வியர்வையில் ஒட்டிக்கொள்ளும். டீ சர்ட் ஈரத்தில் நனையாத வகை டீ சர்ட்கள் ஏற்றவை.

*உதவுகோல்கள்  கைகளில் இருப்பது நன்மை பயக்கும். உண்மையில் உதவுகிறதோ இல்லையோ, மனரீதியாகவும் உறுதியைக் கொடுக்கும். மேலும், காட்டுப்பாதையாதலால், கோலொன்று இருப்பது உதவியாக இருக்கும். பெரிய காட்டுவிலங்குகள், யானை, குரங்குகள் போன்றவை எதுவும் இந்த பகுதியில் இல்லை. எனவே, குழந்தைகளுக்கு நிம்மதி.

*கைகளில், ஒரு தண்ணீர் புட்டி கட்டாயம். கனமான பிளாஸ்டிக் வகையல்ல. மினரல் வாட்டர் போல‌, தூக்க எளிதான புட்டிகளை கொண்டு செல்லவும். ஆரம்பத்தில், நம்மால் தூக்க இயலுவது போல தெரிந்தாலும், 500 படிகளுக்கு அப்பால், நம்மை தூக்கிக்கொண்டு இறங்குவதே பெரிய காரியமாக தெரியும். :‍)

*இரட்டை அடுக்கு வேர்ப்பாலத்தினடியில், ஓடும் ஆற்றில் குளிக்கலாம். சிறு காட்டருவியும் உண்டு. சிறுவர்களும் குளிக்கும் வண்ணம் பாதுகாப்பானது. உடை மாற்றும் அறையும் இருக்கிறது. மாற்றுடைகளை கொண்டு செல்லலாம். கால்களை நீரில் அளாவி மீன்களுக்கு வேலை கொடுக்கலாம்.


*காட்டுவழிப்பாதை, வெளிச்சம் ஊடுருவ கடினமென்பதால் சிறு பூச்சிகளின் தொல்லை உண்டு. கொசு போல கடித்து வைக்கும். ஓடோமாஸ் எடுத்துக்கொள்ளலாம். பெருக்கெடுத்து ஓடும் வியர்வையில் அவையும் கரைந்து ஓடிவிடும். ஆனால், திரும்பி வரும்போது படிகளில் அமர்ந்து இளைபபாற  வேண்டியிருக்கும். அப்போது, உதவும்.

*காலையில் ஒன்பதுக்கு ஏற ஆரம்பித்தாலும், பதினொன்றரைக்குள் பாலத்தை அடைந்துவிடலாம். மதியம் இரண்டுக்கு பின் தங்காமல் பார்த்துக்கொள்ளவும். ஏறிவர ஐந்து மணிவரை ஆகிவிடலாம். (நான் சொல்வது மிகவும் மெதுவாக ஏறினாலும்..)


*திரும்பும் வழியில், நீளமான வேர்ப்பாலத்தை காணலாம். போகும்வழியில் இருக்கும் சிற்றோடைக்கருகில் உணவருந்துவது நல்ல அனுபவம். அல்லது, இரட்டை பாலத்தருகிலும் மதிய உணவை எடுத்துக்கொள்ளலாம். மறக்க இயலாத அனுபவமாக இருக்கும்.

* பாதம்,வால்நட் மற்றும் திராட்சை போன்றவை எடுத்துக்கொள்ளவும். வாழைப்பழமும் தாகத்தை தணிக்கும். புளிப்பு மிட்டாய்கள், சாக்லெட்டுகள் கைவசம் இருப்பது நடக்கும் களைப்பை போக்க உதவும். சிறார்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்.

*குடைகள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மழையுடைதான் உண்மையில் உபயோகமானது. மழை வருமா என்று அன்றைய காலநிலையை பார்த்து முடிவு செய்துக்கொள்ளலாம்.

*ஷூக்கள் தேவைப்படவில்லை.வழுக்காத மழையில் நனைந்தால் காய்வது கடினம். நீரில் நனையாத ஷூக்கள் என்றால் சரி. அல்லது,வழுக்காத நல்ல செருப்புகள் தேவை. சாதாரண செருப்புகளையே - செருப்பின் கீழ் treads - இருப்பது போன்ற‌ உபயோகப்படுத்தினோம்.

*முட்டிகளுக்கு, Knee support அணிந்துக்கொண்டோம். எனவே, முட்டி வலியிலிருந்து தப்பித்தோம், கெண்டைக்கால் வலிதான் 2/3 நாட்களுக்கு படுத்தி எடுத்தது.

செய்யக்கூடாதவை:

*மழைக்காலத்தில் சென்றால், வழிகளில் பெரிய பெரிய காளான்களை காண்பீர்கள். அவற்றை படம் பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும். கைகளால் தொடுவதோ, அவற்றை பறித்து உண்பதோ அபாயம்.

*'குளிரும்' என்று ஜெர்கின் போன்ற மேலாடைகளை அணிவதை தவிர்க்கவும். உண்மையில், நமது உடலிலிருந்து வெளியேறும் வெப்பம் எந்த குளிரையும் அணுகவிடாது. அணிந்துக்கொள்ளவும் முடியாததோடு, தேவையற்ற சுமை.

*மேகாலயா கிராமங்கள் அனைத்தும் அவ்வளவு சுத்தமானவை. ஸ்வச்ச பாரத், திட்டம், அநேகமாக மேகாலயாவை பார்த்த உந்துதலால் வந்திருக்கலாம்! ஆங்காங்கே, மூங்கிலால் செய்த கூடைகளை மரங்களில் கட்டி வைத்திருப்பார்கள். அதில் குப்பைகளை போடலாம். போட இடமில்லை எனில், திருப்பிக் கொண்டு வந்து விடவும்.

*இங்கிருப்பதை போலவே, லேஸும், பாக்கெட் வகை உணவுகளும், சாக்லெட்டுகளும், குளிர்பானங்களும் இருந்தாலும் எங்குமே நாங்கள் குப்பையை பார்க்கவில்லை. மக்கள் அனைவரும், குப்பையை தொட்டியில்தான் போடுகிறார்கள்.

கூடுதல் தகவல்கள்:

*தூய்மையான மலைத்தேன் கிடைக்கும். ஆரஞ்சு பூக்களிலிருந்து கிடைத்த தேன் என்பதால், லேசாக புளிப்பு இருக்கும். நம்பி வாங்கலாம்.

*இரட்டை பாலத்திலிருந்து, 2 கிமீ தொலைவு சென்றால், இயற்கையின் 'நீச்சல் குளங்கள்' இருக்கிறது. தெம்பும், நேரமும் இருப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

*இரட்டை அடுக்கு பாலத்திலிருந்து, 5 கிமீ தொலைவு மேலேறி சென்றால், 'நோக்காலிக்காய்' அருவியை கீழிருந்து காணலாம். இந்த அருவியை,ச்சிரபுஞ்சியில் மேலிருந்துதான் பார்க்க முடியும்.

அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால், சென்று பார்க்க நினைத்திருக்கிறோம். 'நோக்காலிக்காய்' அருவியைக் காணும்போது, 'நடைப்பயணமாக சென்று கொட்டும் அருவையை கீழிருந்து பார்க்க‌... அடடா என்ன அருமையாக இருந்திருக்கும்' என்று தோன்றியது!


*இரட்டை அடுக்கு பாலம் அமைந்திருக்கும் கிராமத்தில் இரவு தங்கலாம். ஹோம்ஸ்டே வசதிகள் இருக்கிறது.

Wednesday, June 03, 2015

'கங்கவ்வா கங்கா மாதா' - சங்கர் மோகாசி புணேகர் (எம் வி வெங்கட்ராம்)

உங்கள் அம்மா கோலம் போடும்போது கவனித்திருக்கிறீர்களா?  புள்ளிகள் வைத்து,  நெளி நெளியாக வளைந்த கோடுகள் கொண்ட கோலங்கள் -  எந்த முனையில் இருந்து இழுப்பார்களென்றே தெரியாது, பார்த்தாலும் புரியாது. ஆனால், கண்ணிகளை இணைக்கும் கைகளை கவனித்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று ஒரு முழுமைக்குள் வந்து முடிந்துவிடும் கோலங்கள்.

சிறுவயதில், அம்மா கோலம் போடுவதை பாராக்குப் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. வாசலில் நீர் தெளிக்கும்போதே, எங்கள் விளையாட்டுகள்  முடிவுக்கு வந்துவிடும்.  வரிசை வரிசையாக எண்கணக்கு மாறாமல் புள்ளிகள் வைத்து, எந்த கண்ணியும் தனித்து தொங்கிக் கொண்டிராமல்,  வகைவகையான நெளிவுகளுக்குள்  சுருங்கி, ஏதோ   ஒரு கணக்குக்குள் அடங்கிவிடும்  கோலங்கள் வடிவம் கொள்வதை பார்ப்பதே பிரமிப்புத்தானே! 

கிட்டதட்ட, கிட்டதட்ட என்ன‌ அதே மாதிரியான பிரமிப்பு, "கங்கவ்வா கங்கா மாதா"  என்ற கன்னட நாவலை வாசித்தபோது ஏற்பட்டது. வாசித்து முடித்ததும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நெடுநேரம் ஒவ்வொரு புள்ளியாக மனதுக்குள் இழுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

மொத்தத்தில் மூன்று குடும்பங்கள்...கங்கவ்வா, ராகப்பா,தேசாய். ஆனால், இந்த குடும்பங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு கண்ணியும், ஏதோ ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியோடு பாந்தமாக இயைந்து,  ஒரு முழுமையான‌ சித்திரத்துக்கு வந்துவிடுவது ஆச்சரியமாக இருந்தது.

இத்தனைக்கும், சிறார்களுக்கான‌  போட்டியொன்று  நிகழும் பள்ளி வளாகத்தினுள் வைத்து இந்த புத்தகத்தை வாசித்திருந்தேன். சுற்றி நிகழும் எந்த கூச்சல்களும் கூப்பாடுகளும் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டது, நாவலின் சுவாரசியமின்றி வேறெதுவும் இல்லை. சொல்லப்போனால், போட்டியை பற்றிய பதைபதைப்புகளிலிருந்து என்னைக் காத்தது கங்கவ்வாவும், கிட்டியும்தான். :‍)

மகனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, தன் கணவனை இழந்த பெண்.  நன்கு வாழ்ந்த குடும்பம். உறவினர்கள் சதித்திட்டத்தால்,  முக்கியமாக கங்கவ்வாவின் தம்பி ராகப்பாவால் செல்வத்தை இழக்க, மனக்கலக்கத்தின் காரணமாக கணவன் உயிரை விடுகிறான்.

யாருடைய நிழலிலும் இல்லாமல், தம்பிகள்  கண்களில் படாமல் வைராக்கியமாக  மகனை வளர்க்கிறாள் தாய். சில வீடுகளில் வேலை செய்து, தான் அரை வயிற்றுக்கஞ்சியும், மகனுக்கு முழு வயிற்றுக்கும் கொடுத்து ஆளாக்குகிறாள். மகன் கிட்டி,  மெட்ரிக் படித்து பாஸானதும், தெரிந்த, பெரிய மனுஷர்களிடம் சொல்லி அவனை குமாஸ்தாவாக ஒரு அரசாங்க வேலையில் அமர்த்துகிறாள்.

குடும்பத்து பெரியவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டோம். ஆனால், குடும்ப நண்பர்கள் என்ற பெயரில் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிக்கியிருப்பாரில்லையா... அவர் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லாமல் தலையாட்டுவோமே! எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராமல், அடுத்தவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையில் 'நம்மைவிட்டால் இவர்களுக்கு சொல்வதற்கும் செய்வதற்கும் யார் இருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு அவர்களும் உதவுவார்களே...

அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது அழிந்துபோகும் உயிரினமாக அருகிவருகிறார்கள்.ஆனால், நாவல் நடக்கும் காலகட்டத்தில் அப்படிப் பட்டவர்களே நாடெங்கும் நிறைந்திருந்தார்கள் என்று ஒவ்வொரு குடும்பத்து தாத்தா பாட்டியை கேட்டாலே தெரியும். அப்படி, கங்கவ்வா குடும்பத்துக்கு சிக்கியிருப்பவர் தேசாய்.

கங்கவ்வாவுக்கு  ஆலோசனைகளோடு, அவ்வப்போது பண ரீதியாக உதவியும் செய்பவர் தேசாய். தேசாய்க்கு, இரண்டு மகன்கள். மூத்தவன் அச்சுதராவ், பம்பாயில் கல்லூரியில் படிக்க, இளையவன் வசந்தராவ் நாடக/சினிமா மோகத்தில் ஊர் சுற்றிக்கொண்டும், தந்தையின் பணத்தை செலவழித்துக்கொண்டும்  அப்படியே, பொய் புரட்டுகளால், தந்தையின் நற்பெயரை கெடுத்துக்கொண்டும் இருக்கிறான்.

கிட்டி, அரசாங்க வேலையில் அமர்ந்ததும், நைச்சியமாக அவனை சந்திக்கிறான் மாமா ராகப்பா. எல்லாம் காரணமாகத்தான். மூத்த மகள் ரத்னாவுக்கு அவனை கட்டி வைத்துவிடலாமென்ற கனவோடு கிட்டியை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறான்.

மகனது, போக்கிலிருந்தே கிரகித்துக்கொள்ளும் கங்கவ்வா, ராகப்பாவின் ஏமாற்றுவேலைகளை, நயவஞ்சகத்தை கண்ணீரும் கோபமுமாக, சிலசமயங்களில் தன்மையாக புரிய வைக்கிறாள். இருந்தாலும், எல்லாம் சில காலம்தான். இறுதியில், தேசாயின் உதவியை நாடுகிறாள்.

முதலில், கங்கவ்வாவுக்கும் ராகப்பாவுக்குமாக இருந்த போர், இப்பொழுது தேசாய்க்கும் ராகப்பாவுக்குமாக மாறுகிறது. இதில்,ராகப்பாவுக்கு பகடைக்காயாக சிக்குபவன், தேசாயின், ஊதாரித்தனமான இரண்டாம் மகன் வசந்தராவ்.

ரத்னாவுக்கும், கிட்டிக்கும் திருமணம் நடந்ததா, வசந்தராவ் என்ன ஆனான், கங்கவ்வாவின் மற்றொரு தம்பியான  வெங்கட்ராவ் இருக்கும் இடம், அவனுக்கும் அச்சுதராவிற்குமான தொடர்பு, கங்கவ்வாவின் குடும்பம் நொடிக்கும் அளவுக்கு அப்படி என்ன மோசடி நடந்தத என்ற கண்ணிகளெல்லாம் தார்வார், தேசாயின் சொந்த கிராமம், பூனா, சௌபாத்தி, பம்பாய்  போன்ற நெளிகோடுகளில் இணைக்கப்பட்டு முழுமையான நாவலாக மாறுகிறது.

நாவல் நடப்பது, 19களின் ஆரம்பத்தில் ‍ - சுதந்திரப் போராட்ட காலம். அப்போது நடக்கும் சத்தியாகிரக போராட்டங்கள், பத்திரிக்கைகள், மாணவர்கள் போராட்டத்துக்குள் ஈர்க்கப்படுவது, பெண்கள் கொடி பிடித்து வீதியில் செல்வது, ஏச்சு பேச்சுகள், அதோடு சினிமா என்ற புது வகையான பொழுதுபோக்கு அன்றைய இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் எல்லாம் ஊடுபாவாக பிணைந்திருக்கிறது. இதனாலேயே, நாமும் ஏதோ அவர்களோடே வாழ்வது போலவே தோற்றமயக்கம் வாசிக்கும்போது ஏற்படுகிறது.

அந்த கால பழக்க வழக்கங்கள் -  சில சுவாரசியமான கலாச்சார ரீதியான பழக்கங்கள், நம்பிக்கைகள், மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் சமநிலை எல்லாம் வாழ்க்கை பதிவுகளாகவே வருகிறது. உதாரணத்துக்கு, பணக்கார வீடுகளில் ஏழை மாணவர்கள் ஒவ்வொரு வாரமாக முறை வைத்து உண்பார்களாம். வாசிக்கும்போது, ஆச்சரியமாக இருந்தது. இந்த சமூகம்தான் தன்னை எத்தனை விதமான சமநிலைகளில் நிறுத்திக்கொள்கிறது. புதிய தகவல்தான்.

 கிட்டி, தேசாய் வீட்டிலும் கிராமத்தவர்கள் வீட்டிலும்  அப்படித்தான் வளர்கிறான். அதனாலேயே, தன் விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒருவித அழுத்தம் அவனுக்குள் உருவாகிறது. அதுவே பிற்காலத்தில், அவனது தன்னம்பிக்கை குலைத்து அலுவலகத்தில் கேலிப்பொருளாக்குகிறது. அவனது இந்த நிலையை ராகப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான்.

அதேபோல், தீபாவளிக்கு வீட்டு ஆண்களுக்கு ஆரத்தி எடுப்பது, சோமாசி,புக்கரி போன்ற கர்நாடகத்தின் உணவு பொருட்களை உண்ணும் விதம், வாழ்க்கைமுறை, சம்பிரதாயங்கள், வரதட்சிணையின் முக்கியத்துவம், பூசைகள் என்று மற்றொரு உலகத்தை பார்ப்பது போலவே தோன்றுகிறது.

நாவலின் சுவாரசியமான பக்கங்களில் ஒன்று, ரத்னாவின் திருமணத்தில் ராகப்பாவின் இரண்டாவது மனைவி  மஹபூப் வளைய வருவதும் அதையொட்டிய நிகழ்ச்சிகளும். இப்படி இதனை முழுமையான குடும்ப நாவலென்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதிலிலேயே, த்ரில்லரும், துப்பறிவதும், நாடக பாணியிலான முடிவுகளுக்கும் குறைவில்லை.

இறுதியில்,நாவல் ஒரு மரணத்தில் முடிவடைந்தாலும்,  நமக்கு சோகமோ, மனவருத்தங்களோ உண்டாவதில்லை. அதுதான் நாவலின்  வெற்றி போலும். 

கிட்டியின் அலுவலக பகுதியும், லஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க இயந்திரத்தில் ஊடுருவது தெளிவாக வருகிறது. ரத்னாவுக்கும், கிட்டிக்குமான காதல், இதனால் மகனுக்கும் கங்கவ்வாவுக்கும் இடையிலான பிளவு, ராகப்பாவின் மனைவிக்கும் கங்கவ்வாவுக்குமான உறவு எல்லாமே சிக்கலான உணர்ச்சி போராட்டங்கள் மிகவும் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

 நாவலின் ஆரம்பத்தில், கங்கவ்வா கங்கைக்கு போய்விட்டு சொம்பில் கங்கைநீரை கொண்டு வருவாள்.  அவளது உயிர் பிரியும் தருணத்தில், மகன் கிட்டி அவளது வாயில் இந்த கங்கை நீரை ஊற்ற, அவளது உயிர் பிரிய வேண்டும். இது, சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய நம்பிக்கைதான்.

ஆனால்,  ரயிலின் ஓட்டத்தில், அந்த கங்கை நீர் சொம்புக்குள் ஆடுவது, கங்கவ்வாவுக்கு சாவை, மகனை விட்டு பிரிவதை, தனது கடமைகளை நிறைவேற்றாமல் பேரக்குழந்தைகளை பார்க்காமல் செல்வதை நினைவூட்டி மனதை பலத்த சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது.

 சொம்பு கங்கை நீரை ரயிலில் வழியிலேயே எடுத்து கவிழ்த்தபிறகுதான் நிம்மதியான உறக்கம் வருகிறது. அதே கங்கைநீர், அவளது பிற்கால வாழ்க்கையில் தாமாகவே வீடுவந்து சேர்கிறது. கிட்டியின் தந்தை பெரும் நம்பிக்கையோடு பூசை செய்த, சாலக்கிராமம் பூசையறையில் சேரும் பகுதியும் சுவாரசியமானது.

பிராமண குடும்பத்தை மையப்படுத்திய‌ நாவலாக இருந்தாலும், அவர்களுக்கான அந்த பிரத்யேகமான  மொழியை  எங்கும் காண முடியவில்லை. கன்னடத்திலிருந்தி இந்திக்குப் போய் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது.  ஒரு சில இடங்களில் வரும் எழுத்துப்பிழைகள், 'அவன்.......வந்தாள்' என்பது போன்ற பிழைகள் தவிர்த்து,  உறுத்தாத, அதே சமயம் சுவாரசியம் கொஞ்சமும் குன்றாத எளிமையான மொழி பெயர்ப்பு.

சில ஆண்டுகளுக்கும் முன் வாசித்தாலும் இன்னும் மனதில் நிற்கும் முழுமையான நாவல்கள்   'சிப்பிக்குள் முத்து', 'சிக்கவீர ராஜேந்திரன்', 'தென்காம ரூபத்தின் கதை' போன்றவை. அந்த  வரிசையில், கங்கவ்வா கங்கா மாதாவுக்கு நிச்சயம் இடமுண்டு. மோகாசி எழுதிய ஒரே நாவல் இதுதான் என்று  முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது, ஒரே நாவல் ஆனால் முக்கியமான நாவல்.

கங்கவ்வா கங்கா மாதா
சங்கர் மோகாசி புணேகர் (எம் வி வெங்கட்ராம்)
வெளியீடு: என் பி டி
விலை: 70
பக்: 260

Monday, June 01, 2015

'பிகு'வும் ஃப்ளாஷ்பேக்கும்

படம் பார்க்க பார்க்க, அமிதாப்பும் தீபிகாவும் மறைந்து நானும் ஆயாவுமே திரைக்குள் தெரிவது போல ஒரு உணர்வு. ஆயா, பத்து வருடங்கள் என்னோடு இருந்தார்கள். ஆனால்,நான் ஆயோவோடிருந்தது பதினேழு வருடங்கள்.

சிறுவயதில்,எனது ஒன்றரை வயதில் என்னை கையில் வாங்கிக்கொண்ட ஆயா...

பள்ளிக்காலம் வரை ஆயாவின் கையைப் பிடித்தே நான் வளர்ந்தேன். பதின்மத்தில் எதிரியாக தோன்றிய ஆயா, திருமணமான காலகட்டத்தில் ஒரு தோழியைப் போல அல்லது  வாகனங்களின் ஸஸ்பென்ஷனை போலவே எனக்கு இருந்தார்கள்.

எப்போதென்று தெரியவில்லை. ஒரு மருத்துவமனையில் காத்திருந்தபோது, இரண்டு பெண்மணிகள் எனக்கு பின் வரிசையில் பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதைகள்தான். அதில் ஒரு பெண் சொன்னது இப்போது வரை மறக்கமுடியாது.

'இந்த வயசானதுகள்ளாம் எப்படிதான் கத்துண்டுடறதோ தெரியலை... வாழைப்பழம் சாப்டாதான் ஆகும்னு..தினம் வாழைப்பழம் வேணும்னு மைன்ட்செட்'

ஆயா செய்த ரகளைகள் சொல்லி மாளாது.

 தினமும் மாலையில் ஆயா, தன் இரு மகள்களுடன் போனில் பேசுவார். மெயின் டாபிக் இதுவாகத்தான் இருக்கும்.  ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை கணக்கா 'போன் போட்டு குடு' 'போன் போட்டு குடு' என்று என்னை தொணப்பிவிட்டு...

போனில் என்னதான் டிப்ஸ் கொடுத்தாலும், ஆயா தான் செய்வதைத்தான் செய்வார். அதாவது, ஏதோ தேவாமிர்தம் கணக்காக அந்த பிங்க் கலர் மருந்தை அநாயசமாக இரண்டு மூன்று கப்கள் குடிப்பார். டாக்டர் சொன்னதென்னவோ ஒரு டீஸ்பூனாகத்தான் இருக்கும். இவர் குடிப்பதோ சில பல‌ டேபிள்ஸ்பூன்களாக‌ இருக்கும்.

விளைவு, அடுத்தநாள் காலையிலேயே ஆம்பூருக்கு போன் பறக்கும். அரரூட் கஞ்சியோ, ஜவ்வரிசி கஞ்சியோதான் அடுத்த வேளைக்கு. கடும் காப்பி மாதிரி கடும் டீ, ஒரு மஞ்சள் நிற மாத்திரி சகிதம் ஆயா உட்கார்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருந்தாலும், பெரும்பாலும் 'சொன்னா கேக்கலைல்ல' என்று தோன்றும்..

அன்று மாலை, மகள்களுடனான‌ போனில் -  இதற்கு பரிகாரமும், 'ஏம்மா இப்படி பண்ணீங்க..எல்லா ப்ரொட்டீனும் போயிருக்குமே' என்ற கதறலும் கேட்கும்.

ஆயாவுக்கான மருந்து மாத்திரைகளாஇ, அலுவலகத்திலிருந்து வரும் வழியில் நானே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். வழக்கமாக, மருந்து வாங்கும் கடையில் ,சமயத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகள் கிடைக்காது.அதனால், வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கடையில் மாற்று ஏற்பாடு செய்திருந்தேன்.

வாரயிறுதியில், யாரோ கதவை தட்ட திறந்தால், அந்த மருந்துக்கடைக்காரர். கையில், மருந்துகளுக்காக செய்யப்படும் ப்ரொவுன் நிற பை. பையில், நான்கைந்து மருந்து குப்பிகளின் தலை.

புரியாமல் விழிக்க, 'பாட்டிம்மாதான் போன்லே சொன்னாங்க' என்றார் அவர்.

 என்னவென்று நினைக்கிறீர்கள்?

அத்தனையும் க்ரிமாஃபின் குப்பிகள்.

இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, வாரத்துக்கு இரண்டு வாங்கி அலுத்துப்போன ஆயா, மருந்துக் கடைக்காரருக்கு செய்த பரோபகாரம்தான் இது.

'எதுக்கு அடிக்கடி வந்துக்கிட்டு..அதான் ஆறு பாட்டில் கொண்டுவர சொன்னேன்.'

அவரெதிரில் என்ன சொல்ல முடியும். மொத்தமாக காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒன்றை மட்டும் ஆயாவிடம் கொடுத்துவிட்டு, மீதி அனைத்தையும், எனது அறையில் வைத்துகொண்டேன்.

அதிலிருந்து, இரவுணவுக்குப் பின் க்ரிமாஃபின் கொடுப்பது எனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயா, கெஞ்சுவதை பார்த்தால் பாவமாக இருக்கும். அதை பார்த்தால் முடியுமா?

ஒரு டீஸ்பூனுன் கொடுத்தால் ஆயாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி இரண்டை வாங்கி குடித்துவிடுவார்.

'அதிகமாக குடித்தால் நல்லா போகும்னு யார் சொன்னது உங்களுக்கு? எத்தனை வாட்டி படுறீங்க? நீங்கதானே கஷ்டப்படறீங்க?'

ம்ஹூம்..இதெல்லாம் காதில் விழவே விழாது.வயதானால் எப்படிதான் இந்த அடம் வந்துவிடுமோ...பிகுவில், இந்த அடத்தை மிக அழகாக படம் பிடித்திருந்தார்கள்.

இந்த விஷயத்துக்காக, போனில் பஞ்சாயத்து. எப்படிதான் கறாராக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு ஒரு பாட்டிலை காலியாக்கி விடுவார்.

அமிதாப்பிற்கு,  'என்னால் முடியும். நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்' என்ற ஈகோ அதிகம் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை தாத்தாக்களுக்கு இருக்குமோ என்னவோ...ஆயாவிடம் அது இல்லை. மாறாக, அதீத தன்னம்பிக்கை உண்டு. நிறைய முறை, நிறைய வடிவத்தில் அனுபவப்பட்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் இவரை பார்த்ததும், 'ச்சேர் எடுத்துட்டுவரட்டுமா' என்று- வீல் சேர் கொண்டுவர‌ - ஓடும் பகதூரை ஒரு கையாலே அடக்கிவிடுவார். சிரமப்பட்டு அவர் ஏறுவதை பார்ப்பவர்கள், ஏதோ என்னை கல்நெஞ்சக்காரி போல எண்ணிக்கொள்வார்கள்.

ஒருமுறை, லங்க்ஸில் டீபி வந்து மிகுந்த சிரமப்பட்டார். தானாக‌ நடக்கக்கூட முடியவில்லை. நாம் கை பிடித்தால் விட்டுவிட்டு,  ஊனிக்கொண்டு எழுவார்.
அவராகத்தான், நம் கையை பிடித்துக்கொள்வார். அவர்தான், நம் கையை பிடித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில், ஆயா தனியாக இருக்கும்போது, நடக்க உபயோகமாக இருக்குமே என்று ஊன்றுகோல் வாங்கியிருந்தோம். அதனை சீண்டக்கூட இல்லை. வலிய, எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று டெமோ காட்ட, வாங்கியதற்காக, இரண்டொரு முறை அதனை எடுத்துக்கொண்டு நடந்தார். ஆம், அதனை ஊன்றாமல், கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தார்.

பழக்கமில்லாததால் இப்படி இருக்குமோ, சில நாட்களில் பழகிவிடும் என்று நினைத்த நாங்கள்தான் ஏமாளிகளானோம்.  இறுதிவரை, அதனை ஊன்றி ஆயா நடக்கவேயில்லை. அவர் இறுதியாக மருத்துவமனைக்கு சேரும் நாளுக்கு முன்பு கூட, எனது கைகளை பிடித்துக்கொண்டுதான் படுக்கைகயறைக்குச் சென்றார்.

அவருக்காக, நானும் பப்புவும், எங்களது படுக்கையை ஆயாவின் அறைக்கே மாற்றிக்கொண்டோம், . நடுஇரவில், அவர் விழித்துக்கொண்டால் எனக்கு விழிப்பு வந்துவிடும். பாத்ரூமுக்குச் சென்று திரும்புவரை 'பக்பக்'தான்.
இதற்கே இப்படியென்றால், அவரை விட்டுவிட்டு ஊருக்கு போவதைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல இரவுகள், அவரது வயிறு சீராக ஏறி இறங்குவதை பார்த்தபின்புதான் நிம்மதியாக எனக்கு தூக்கம் வரும்.

எந்த கோழி கூவுகிறதோ இல்லையோ, காலையில் டாணென்று  'ஐந்து மணிக்கு' எழுந்துவிடுவார். எங்கள் தலைகளுக்கு மேலாக நடந்து சென்று ஹாலில் லைட் போட்டு கதவுகளை திறந்து வைத்து அமர்ந்துக்கொள்வார். ஒரே பதில்.

'முழிப்பு வந்துடுச்சு'தான்.

 வெயில் காலத்தில் ஓகே. பனிக்காலத்திலும்...சளி வந்து திரும்ப டாக்டரிடம் ஓடு!

'ஏன் ஆயா, காலையிலே அப்படி கேட் வாக் செஞ்சு ஹால்லே உட்கார்ந்துக்க‌லைன்னாதான் என்ன? முழுச்சிட்டீங்கன்னா கண்ணை மூடிக்கிட்டு படுத்திருங்களேன்' என்றால், 'நாளைக்கு பார்க்கறேன்' என்பார்.

அந்த நாளை கடைசி வரை வரவேயில்லை. (கடைசி மாதங்களில், மருந்துகளாலோ அல்லது மருத்துவமனையிலிருந்து வந்த அயர்வாலோ சில நாட்கள் தூங்கியிருக்கிறார். )

 வீட்டில் தனக்கு தெரியாமல் எந்த விஷயங்களும் நடந்துவிடக்கூடாது என்ற உணர்வு எப்படிதான் எல்லா வயதானவர்களுக்கும் வருமோ!அவரது அறை இருந்தாலும், ஹாலில் சரியாக  நடுவில் அமர்ந்துக்கொள்வார். அவரைத்தாண்டி, யாரும், எதுவும் அந்த பக்கம் இந்த பக்கம் சென்றுவிட முடியாது.

மதியம் ஒரே ஒரு மாத்திரை தவிர, காலையும் மாலையும் கணிசமான மாத்திரைகள் இருந்தது, ஆயாவுக்கு. ஒவ்வொருநாளிரவும், கைகளில் வண்ண வண்ண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, 'இவ்வளோவும் சாப்பிடணுமா?கொஞ்சம் கம்மியா தரக்கூடதா, அந்த டாக்டர்' என்பார்.

"ஆயா, சந்தோஷப்படுங்க...இந்த மாத்திரையெல்லாம் கிடைக்குதேன்னு.. நம்மாள இந்த மாத்திரையெல்லாம் வாங்க முடியுதேன்னு. நீங்க இல்லேன்னா பப்புவை யார் பார்த்துக்குவாங்க...நீங்க ரொம்ப நாள் எங்ககூட இருக்கணும். அதுக்காகவாவது, இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க‌' என்று ஒவ்வொரு நாளிரவும் நானும் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.அமிதாப், மருந்துப்பெட்டியும் கையுமாக இருக்குபோதெல்லாம் இதுதான் நினைவுக்கு வந்தது.

வயதானவர்களுக்கு வரும் எல்லா குணங்களையும் - பிறத்தியார் மீது சந்தேகம்,அடம், சுயநலம்-  இதெல்லாம் காட்டினாலும், 'பிகு' காட்டாத முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அது மறதி.

கடந்தகால நினைவுகளெல்லாம் பல பசுமையாக இருக்க, சமீபத்தில் நடந்த அல்லது அன்றாட முக்கியமான‌ விஷயங்கள் மறந்துவிடுவது இருக்கிறதே!! க்ர்ர்ர்ர்ர்ர்....

மண்டேலா எப்போது விடுதலையானார், நீல் சிலை அகற்றியது எப்போது, பிரேமதாசா செத்துப்போனது எப்போது, கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவை வழிநடத்தி சென்றது யார் என்பதெல்லாம் சரியாக நினைவிருக்க, வீட்டை உள்ளுக்குள் பூட்டிகொண்டு சாவியை எங்கே வைத்தோமென்று மறந்துவிடும்.

இத்தனைக்கும், அவருக்கெதிரே இருக்கும் சிறுமேஜையில்தான் இருக்கும். புத்தகத்தை படித்துவிட்டு, அதன் மேலே வைத்துவிட்டு, சாவி மாட்டும் இடத்தில் தேடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை, அலுவலகத்திலிருக்கும்போது போன்.

பப்புவும், பப்புவை பார்த்துகொள்ள வருபவரும் வெளியில் இருக்க ஆயா, சாவியை மறந்துவிட்டு நெடுநேரமாக தேடிகொண்டிருக்கிறார் என்று. ஆயாவுக்கு போனடித்தாலோ, 'நீ வர்றியாமா' என்கிறார்.

வெளியிலோ, அந்த அம்மாவுக்கு பதட்டம்.  தட்டுத்தடுமாறி ஆயாவே எப்படியோ தேடி எடுத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் சோபாவுக்கு கீழே கிடந்திருக்கிறது சாவி. மேஜையிலிருந்து எப்படியோ சாவி சோபாவுக்கு கீழே விழுந்திருக்கிறது.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து அதனை தேடியெடுப்பதற்குள், என்னை ஒரு வழி செய்துவிட்டார்கள். அவர்கள் அங்கு அனுபவித்த அத்தனை பதட்டத்தையும், இங்கே அலுவலகத்தில் அமர்ந்தபடி நானும் அனுபவித்திருந்தேன்.

இன்னொரு முறை.

 +2 முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தார் உறவுக்கார பெண். பப்பு ஏதோ கேட்டாளென்று கடைக்கு இருவரும் போக, சற்று நேரமாகிவிட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு புதிய ஊர். திரும்பி வரும் வழி தெரியவில்லையோ என்னவோ... இருவரையும்,காணவில்லை. பத்துநிமிடத்தில் எனக்கு போன். 'இருவரையும் காணவில்லை'

'வந்துடுவாங்க, ஆயா' என்ற எனது பதிலுக்கு ஆயா சமாதானமாகவில்லை.

'இப்போவரைக்கும் வரலை. உடனே புறப்பட்டு வா. '

எப்படி வண்டிஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனக்கு புரிந்ததில்லை. நான் போகவும், அவர்கள் வரவும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் ஆகிவிட்டது உண்மைதான்.

பப்புவை அப்போது கவனித்துக்கொண்ட 'சகுந்தலா அம்மா'வின் வீடு எனக்கு தெரியும் என்றாளாம் பப்பு. அங்கே போய்விட்டு வந்தார்களாம். என்னத்த சொல்ல!!

'ஆச்சி வராம‌ எங்கியும் நீங்க போகக்கூடாது' என்று  இருவருக்கும் வீட்டுக்காவல்.

அந்த நேரம் கோபமாக இருக்கும். ஒன்றும் சொல்லவும் முடியாது. சமயங்களில், கடுமையாக நடந்துக்கொள்வேன். சொல்லிவிட்டாலும், நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?! என்ன சொன்னாலும், அமைதியாக வேறு இருப்பார். அந்த கண்களில் தெரியும் ஏதோ ஒன்று, என்னை போட்டு கொன்றெடுக்கும். கோபித்துக்கொள்ளவே முடியாது.

என் சிறுவயதில், அவர் என் கைகளை கெட்டியாக பிடித்தவாறு பயணித்தது நினைவிலாடும். பென்ஷன் வாங்க சென்றாலும் சரி, உறவினர் வீட்டுக்குச் சென்றாலும் சரி, நெய்வேலியோ, திருவண்ணாமலையோ, கடலூரோ....  வேலூர் பஸ்ஸ்டாண்டில் அவருக்கு செய்தித்தாளும், இதழ்களும் வாங்கிக்கொண்டு எனக்கு கோகுலம் வாங்கிகொடுத்துவிட்டு விடுவிடென்று நடக்கும் ஆயா....ஒரு கையில் என்னையும், இன்னொரு கையில் குடையும் பிடித்துக்கொண்டு நடக்கும் ஆயா...

'பிகு'வில் அவள் கடைசியாக அந்த மருந்துப்பெட்டியோடு இருக்கும் சில நிமிடங்கள்...

கொடுமையான வலி அது. எல்லாமும் இருக்கும்... அவர்களுக்கான மருந்து, மாத்திரை, உபகரணங்கள்,படுக்கை, வாசிக்க இதழ்கள்,காலண்டர், கடிகாரம், அழைப்புமணி,பிளாஸ்க்... ஆனால்,  அவர்கள் மட்டும் இல்லாத, அவரது இழப்பை,வெறுமையை உணரும் தருணங்கள் இருக்கிறதே...

அதை விட்டு இன்று வரை என்னால் கடந்துவர இயலவில்லை. தூரத்திலிருப்பவர்களை விட, கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர்களில் வலியும், இழப்பும் அதிகம். எங்களால், இன்னமும் எங்களது அறைக்கு மீண்டு வரமுடியவில்லை.

அவரில்லாமல், நாங்கள் கடந்த முதல் மாதம். சமையல்  சிலிண்டர் வந்திருக்கிறது. கையில் காசில்லை. ஏடிஎம் சென்று எடுத்து வருமளவுக்கு அந்த பையன் காத்திருக்க மாட்டான்.  ஒவ்வொரு மாதமும், சிலிண்டர் வந்த தேதியை ஆயா குறித்து வைப்பார். அடுத்த சிலிண்டர் வருவதற்கு, உடனடியாக என்னிடம், காசு வாங்கி புத்தகத்தில் வைத்துவிடுவார். புத்தகத்தையும், காசையும் எடுத்து அந்த பையனிடம் கொடுக்க வேண்டியதுதான். அவன் முன்னால், பர்சை தேடி தடவ வேண்டியதில்லை. ஆயாவின் இழப்பை, கூர்மையாக எனக்கு உணர்த்திய சம்பவம் இது. பர்ஃபெக்ஷன் என்றால் ஆயா!

ஆயாவுக்கு எதிரில் எப்போதும் ஒரு காலன்டர் இருக்க வேண்டும். அவருக்காக மாட்டிய அந்த காலன்டரை இப்போது வரை அவிழ்க்க மனமில்லாமல் வைத்திருக்கிறேன்.  சுத்தப்படுத்தும்போதெல்லாம், அதை மட்டும் கண்டும் காணாமல் போகிறேன்.

அவரது அலமாரி கதவுகள், காற்றில் திறக்கும்போதெல்லாம், 'இன்டர்ஸ்டெல்லாரை' நினைவு கொள்கிறேன். பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், அந்த நினைவு ஒரு ஆசுவாசத்தை, நிம்மதியை, மெல்லிய புன்னகையை தருவதை உணர்கிறேன்.

நான்தான் இப்படியென்றால், பப்பு அதற்கு மேல்.
இசபெல்லா மருத்துவமனையை ஒருமுறை கடந்து செல்லும்போது, ஆயா ஏதோ அங்கேயே இருப்பதுபோல், இப்போது போய் அழைத்துவந்துவிடலாம் போல தோன்றியது. மனதுள் தோன்றிய அதே நிமிடம், பப்பு 'ஆயா உள்ளே இருப்பாங்களா ஆச்சி? ' என்றாள்.

ஆயா சென்று நீண்ட நாட்களுக்குப் பின் நடந்தது இது. ஆயாவின் அறையில்தான் அப்போதும் தூக்கம்.ஆனாலும், ஆயாவின் பாத்ரூமை அவர் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, தவிர வேறுயாரும் உபயோகப்படுத்துவதில்லை.

கரண்ட் கட்டான ஒரு நள்ளிரவில், அவளை ஆயாவின் அறையிலிருக்கும் பாத்ரூமையே உபயோகப்படுத்துக்கொள்ள சொன்னேன். கதவை திறந்து உள்ளே சென்ற சில நிமிடங்களில், அவள் சொன்னது இது.

"ஆயா, எனக்கு தெரியும், நீங்க இங்கேதான் எங்கியோ இருக்கீங்க'.

:-)

Saturday, May 30, 2015

'அவளது பாதை ‍' - அப்பூரி சாயா தேவி


பெரும்பாலும், சிறுகதைகள் தொகுப்பை வாசித்து முடித்து மூடி வைத்தால் ,ஒன்றிரண்டை தவிர நினைவில் நிற்காது. எனது மனதின் ஞாபகசக்தி அப்படி. வாசிக்கும் நேரத்தில், கதைகள் ஏற்படுத்திய பாதிப்பு இருக்குமே தவிர, அதே கதையை, திரும்ப வாசிக்கும்வரை மீட்டெடுக்க முடியாது. இந்த சிறுகதை தொகுப்பும் அப்படித்தான் என்றாலும், கதைகள் ஏற்படுத்திய பிரமிப்பு  வித்தியாசமானது. கிட்டதட்ட, ஆர்.சூடாமணியின் 'நாகலிங்க மரம்' தொகுப்பு ஏற்படுத்திய பிரமிப்பு போல.

அந்த தொகுப்பில், எல்லாமே எளிய கதைகள்தான். சட்டென்று நினைவுக்கு வராதுதான். ஆனாலும், ஒவ்வொரு சிறுகதையையும், வாசித்தபின் ஏற்படும் மனச்சுழல்கள் இருக்கிறதே, எளிதில் தாண்ட முடியாதவை. இந்த தொகுப்பும் அதேபோல்தான்.  கனமான விஷயங்களை போகிறபோக்கில் எழுதி சென்றிருக்கிறார், அப்பூரி சாயா தேவி.  இந்த கதைகளை 1965யிலிருந்து 2001 வரை எழுதியிருக்கிறார்.

பெண்ணிய கதைகள் என்று இவற்றை பிரச்சார கதைகளாக சுருக்கிவிட முடியாது.புரட்சியும்,கொள்கைகளும் பேசுகிற, 'கொடி பிடிக்கிற' அல்லது வாழ்க்கையின் அவலத்தையோ அல்லது வீராவேசமான சவால்களை பேசுகிற கதைகளல்ல இவை.

 நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீட்டிலும்  வாழ்கிற  பெண்களின் எளிய அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளை, சம்பவங்களை சொல்கிற இயல்பான கதைகள். இன்று அம்பை ஃபேஸ்புக்கில்  எழுதியிருந்த அவரது அம்மாவைப் பற்றிய குறிப்பு போல. இயல்பான, எளிய மனுஷிகள் ஏற்படுத்தும் தாக்கம் சற்று வீரியமானதுதான்!

அந்த இயல்பு மட்டும்தான் சாயாதேவியின் கதைகளின் வலு. இந்த வலுவான முதுகெலும்பை மட்டுமே வைத்துக்கொண்டு, ஒன்றிரண்டு பக்கங்களில் வாழ்க்கையையே படம்பிடித்து காட்டிவிடுகிறார், ஒரு தேர்ந்த காட்சியமைப்பாளர் போல.  பெண்ணெனும் சட்டகத்துக்குள் குறுக்கி அடைக்க‌ப்படும் வாழ்க்கைகளின் மூச்சுத்திணறலை, சாயாதேவியின் கதைகள் வெகு எளிதாக பிரதிபலிக்கின்றன.   

கதைகள்தான் தெலுங்கு மூலத்திலிருந்து வந்திருக்கின்றனவே தவிர, கதைகளில் உலவும் மனிதர்கள் நம் வீடுகளிலும், வீதிகளிலும், பல்கலை கழகங்களிலும், அலுவலகங்களிலும் என்று எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நம்முடனும், நம் பெண்களிடமும் அன்றாடம் எதிர்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிவந்து, கிட்டதட்ட  ஐம்பதாண்டுகளானாலும், இந்த கதைகள் இன்றும் வழக்கொழிந்து போய்விடவில்லை என்பதற்கு அதுவே  சான்று. 

'சுகமான தூக்கம்' என்றொரு கதை.நம் அம்மாவுக்கு தூக்கமே வராதா என்று நாம் ஏதாவது ஒரு கணத்தில் நினைத்திருப்போம்தானே! அப்படி ஒரு அம்மாவின் கதைதான் இது. 'தூக்கமெல்லாம் பேசறதுக்கு வொர்த்தான‌ விஷயமா' என்றுதான் தோன்றும்.

கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.  ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளிக்கூடம் முடியும்வரை தூக்கமென்பது கனவுதான். அதன்பிறகு, கல்லூரி. கல்யாணம். குழந்தை, அந்த குழந்தைக்கு ஒன்றாம் வகுப்பு....பள்ளிக்கூடம்,சனி ஞாயிறு சிறப்பு வகுப்புகள்... கல்லூரி...திருமணம் முடித்து மகனும், மகளும் வெளியூர்களுக்கு சென்றுவிட, தூங்குவதற்கு  ஏங்கியது போக,வயதான காலத்தில் தூக்கம் வராமல் தவிக்கும் ஒரு அம்மாவின் கதை இது.

பப்பு பிறந்தபோது, ஏன் இன்றும் கூட இதனை உணர்கிறேன். 'இப்போதான் நானே  'ஃப்ராக்ஷன்ஸ்' படிச்ச மாதிரி இருக்கு. திரும்பவும் படிக்கணுமா' என்று அவ்வப்போது தோன்றும். யாரிடமாவது பகிர்ந்துக்கொண்டால் 'இதெல்லாம் ஒரு விஷயமா' என்று சொல்லி விடுவார்களோ நான் கடந்து போனவற்றை இந்த கதைமாந்தர்களும் எதிர் கொள்கிறார்கள் என்பதே எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது.

இன்னொரு கதை - 'போன்சாய் வாழ்க்கை'. அக்கா தங்கை கதையூடாக ஆண் பெண் வளர்ப்பைப் பற்றி பேசிவிடுவது அழுத்தமாக பதிந்து விடுகிறது. இனி போன்சாயை எங்கு கண்டாலும், சாயாதேவியை நினைக்காமல் இருக்க முடியாது.

'சதி' என்றொரு கதை. வேறொன்றுமில்லை. எழுத்தாளரான மனைவி, கணவன் மீது கொண்ட அன்பால், அவனது  முதல் எழுத்தையும், தனது முதலெழுத்தையும்  சேர்த்து வைத்துக்கொண்ட புனைபெயர். பத்திரிக்கை மூலமாக அறிவித்துவிட்டு, ஆரம்பத்தில் மனைவிதான் கதை எழுதுகிறாள்.

கதைகள்,நாவல்கள், சீரியல்கள்  என்று 'சதி'யிடமிருந்து வந்தாலே  நிச்சயமாக வெளியிடலாமென்று என்கிற நிலை உருவாகிறது. இதன் நடுவில்,'சதி'யில் பாதி கர்ப்பவதியாகி குழந்தையுடன் பொழுதை கழிக்கிறாள். வாசகர் களிடமிருந்து கிடைத்த வரவேற்பும், உற்சாகமும், 'சதி'யின் புகழும்,மயக்கமும் ஒரு கட்டத்தின் கணவனை ஈர்க்க, மனைவிக்கு தெரியாமல் அவளது சம்மதமே இல்லாமல் எழுதி அனுப்பத்தொடங்குகிறான். இலக்கியவட்டத்தில், கூட்டங்களில் 'சதி'யாக தன்னை காட்டிக்கொள்கிறான். 

அவளுக்கும், 'சதி'  எழுதுவதற்கும் தொடர்பே இல்லாமல் போகும் கட்டத்தில் கணவன் 'திருமலைராவ்' துர்மரணம் எய்துகிறான். இலக்கிய உலகம் ஸ்தம்பித்து போகிறது.  இரங்கல்கூட்டத்தில், 'சதி'யின் இழப்பையும் அனுதாபங்களையும் தெரிவிக்கும் ஆண், பெண் எழுத்தாளர்கள் எவரும் , சதியின் பாதியான 'சத்யவதி' இன்னும் உயிரோடு இருப்பதையும், 'சதி'யின் பெயரில் எழுத்துகள் வெளிவரலாமென்ற நம்பிக்கையை கூட வெளிப்படுத்தவில்லை. 'சதி என்ற பெயரிலோ சத்யவதி என்ற பெயரிலோ மீண்டும் ஒரு  கதை இதுவரையிலும் வரவில்லை'.

'ஸ்பரிசம்' -  மடி,ஆசாரம் என்று பெண் பிள்ளைகளை தள்ளியே நிறுத்தி பழக்கப்பட்டுவிட்ட அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான கதை. வயதான காலத்தில், பாசத்துக்கும், மகள்களின் அருகாமைக்கும் ஏங்குகிறார் அப்பா. ஆனால், எப்போதும் 'மடியாக' இருத்தப்பட்டு பழக்கப்பட்டுவிட்ட மகள் அப்பாவின் கையை எடுத்து வைத்துக்கொள்வதற்கே தயங்குகிறாள்.

அப்பாவின் அருகாமைக்காக‌ ஏங்குகிற சிறுவயதில் தள்ளிநிறுத்தப்பட்டுவிட்டு, அவருக்கு இயலாத காலத்தில், ரிக்ஷாவில் கூட அமர்ந்துக்கொள்ளவோ, வாஞ்சையாக கையை பிடித்து அன்பை வெளிப்படுத்தவோ கூட இயலாதபடி மனதளவில் தள்ளியிருக்கும் மகளின் நிலையை வெகு இயல்பாக காட்டிவிடுகிறது.

'வெள்ளிவிழா', 'அந்த மூன்று நாட்கள்' 'உட்ரோஸ்' திருமதி அதிகாரி' இவையும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள். முக்கியமாக, 'பயணம்' என்றொரு கதை. இந்த கதை,  ஜெயகாந்தனின் புகழ் பெற்ற 'அக்னி பிரவேசம்' கதையை நினைவூட்டியது. 'அக்னிபிரவேசம்' கதையை வாசித்ததில்லை, ஆயாவின் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். 'பயணம்' கதையில், அப்பா பார்த்திருக்கும் சேகரை வேண்டாமென்று சொல்லிவிட்டு தான் காதலிக்கும் மூர்த்தியை திருமணம் செய்துக்கொள்ள செல்கிறாள் ரமா.

இடையில், ராஜமுந்திரி ரயில் நிலையத்தில், பள்ளிக்கூட‌ தோழியையும் அவளது கணவனையும் சந்திக்க அவர்களது வற்புறுத்தலின் பேரில் இறங்குகிறாள். அன்று இரவு, தோழியின் கணவனிடமிருந்து அவளை காத்துக்கொள்ள முடியவில்லை. நடந்தவை தோழிக்கும் தெரிந்திருக்கிறது. ரமாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். வீட்டிலிருந்து கிளம்பி வந்த பெண்ணாக ரமா இப்போது இல்லை.

மூர்த்தியை சந்திக்க மனமற்று, கல்கத்தாவுக்கு விவேகானந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறாள். சாமியாரிணியாகிவிடும் முயற்சியில் இருக்கும் ரமாவை, மூர்த்தி சந்தித்து திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். அவரிடம் நடந்ததை சொல்ல, மூர்த்தியோ மறுகுகிறார். 'அவ்ளோதானே, விட்டுத்தள்ளு' என்று தன்னை மீட்டெடுத்துக்கொள்வாரென்று ரமாவின் மனதின் மூலையிலிருக்கும் ஒரு வெள்ளிக்கீற்றும் மறைகிறது.

இந்த நிலையில், தன்னை நிராகரித்த காரணத்தை கேட்க  அவளைத் தேடி வருகிறார் சேகர்.  மூர்த்தியை காதலித்ததையும், தோழியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தையும் சொல்கிறாள் ரமா. மூர்த்தி சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகளை, ரமாவிடம் சொல்கிறார் சேகர். கதை சுபம்.

இந்த கதையை வாசித்தபோது, எனக்குள் 'ஒரு சின்ன விஷயத்து இவ்ளோ களேபரமா..அது ஒரு ஆக்சிடென்ட்.. அதை மறந்துட்டு தாண்டி வரவேண்டியதுதானே.. அதுக்கு எதுக்கு இவ்ளோ குழப்பம்' என்றுதான் முதலில் தோன்றியது. இப்படி  தோன்றியதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொருநாளும் கேள்விபடும் செய்திகளா, அதன்  காலம் நிஜமாகவே நம்மை நகர்த்தி வந்துவிட்டதா?  கற்பு அல்லது கன்னித்தன்மை இதெல்லாம் வீர்யம் இழந்து கடந்தகாலத்து விஷயங்களாகிவிட்டனவா?

மேலும், தன்னம்பிக்கையும் தைரியமும், படிப்பும் கொண்ட ரமா ஏன் சாமியாரிணியாகிவிட வேண்டுமென்று நினைக்கவேண்டும் என்றும் புரியவில்லை. அதே சமயம், ஏன் அந்த காலத்து கதாநாயகிகள் யாராவது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று காத்து ஏங்கிநிற்க வேண்டுமென்றும் புரியவில்லை. (அக்னிபிரவேசத்து கதாநாயகியும் திருமணமே செய்துக்கொள்ளாமல்தான் காலத்தை கழிப்பாள் இல்லையா?) ஒருவேளை, எழுதிய காலத்துக்கும், கதைக்குமிருக்கும் தொடர்பும் கூட காரணமாக இருக்கலாம்.

அதேசமயம், இன்றும் யதார்த்தம் அப்படியொன்று மாறிவிடவில்லை. சேகர்கள், கதைகளில்தானே வாழ்கிறார்கள். ஆனால், இந்த சம்பவங்களை விபத்துபோல கடந்துவிட வேண்டுமேயன்றி வாழ்க்கையே போனது போல் கலங்கக்கூடாது என்ற தெளிவுக்கு நான் வந்திருப்பதற்கு சாயாதேவி போன்றோரின் எழுத்துகள் வழியாகத்தான்  என்றே உணர்ந்தேன். அந்த வகையில், 'அவளது பாதை' தொகுப்பு முக்கியமானவை. 

சில வருடங்களுக்கு முன்பு, (கிட்டதட்ட 9 வருடங்கள்?) 'பெண்மைய சிறுகதைகள்' என்று சாகித்ய அகாதமி சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். வெவ்வேறு முக்கியமாக தமிழ் பெண் எழுத்தாளர்களின் அழுத்தமான சிறுகதைகள் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன‌.  ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நட்சத்திரம்.

அதை மனதில் இருத்தியே, 'அவளது பாதை'யை வாங்கினேன். மொத்தம், 28 தெலுங்கு சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆனால், மொழிபெயர்ப்பு மிகவும் ஏமாற்றிவிட்டது. மொழிபெயர்ப்பு குறித்து புகாரளிக்கலாமென்ற அளவுக்கு எரிச்சலும் கோபமும்தான் வந்தன.

சாகித்ய அகாதமி, மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த நேர்த்தியையும் இதில் நான் காணவில்லை. வெந்ததும் வேகாததுமான உணவை சாப்பிடுவது போன்ற நிலைதான். இவ்வளவு கேவலமான  மொழிபெயர்ப்பு நூலை இதுவரை வாசித்தது இல்லை. இருந்தாலும், தொகுப்பை தொடர்ந்து வாசிக்க வைத்தது, சாயாதேவியின் சிறுகதைகளிலிருக்கும்  ஜீவன் மட்டுமே.  மறுமுயற்சி எடுத்து, இதனை மொழிபெயர்ப்பு செய்தால் தேவலை.


அவளது பாதை (தெலுங்கு சிறுகதைகள்)
அப்பூரி சாயா தேவி (தமிழாக்கம் கொ.மா. கோதண்டம்)
சாகித்திய அகாதெமி வெளியீடு
விலை: ரூ 165
பக்: 332