Showing posts with label கன்னியாகுமரி. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி. Show all posts

Thursday, October 03, 2013

"காணி" பழங்குடியினர் சொன்ன கதைகள்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக....

காணி மக்களின் கதை சொல்லும் நிகழ்வில் நிறைய கதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. அவற்றில் மனதில் பதிந்த, முக்கியமாக -  என்னால் புரிந்துக்கொள்ள முடிந்த, சில கதைகளை, நினைவுக்காக பதிவு செய்கிறேன். கதைகள், உரையாடல்கள் அனைத்துமே 'காணி பாசை'யில் சொல்லப்பட்டது.


குஞ்சையன் கதைஇந்த கதை, ராஜம்மாள் காணி(70+) என்பவரால் பாடலும் கதையுமாக சொல்லப்பட்டது.

ஒரு பெற்றோருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அதில் இளைய மகன் குஞ்சையன்.  அவன் வேட்டையாடுவதில் வல்லவனாக இருந்தான். ஒருநாள் அவனது சகோதர்கள், காட்டில் பன்றியை வேட்டையாடச் செல்லலாம் என்று திட்ட்டமிடுகிறார்கள். அப்படி அழைத்துச் சென்று,  குஞ்சையனை கொன்று விடலாம் என்பது அவர்களது திட்டம். குஞ்சையனின் மனைவி மிக அழகானவள்.

ஒரு பௌர்ணமி  இரவில்,  குஞ்சையனை வேட்டையாட அழைக்கிறார்கள். அவனோ முதலில் வர மறுக்கிறான். "வேட்டையாடுவதில் வல்லவனான நீயே வர சம்மதிக்காததென்னா?" என்று குஞ்சையனை வற்புறுத்துகிறார்கள். அவனும், இறுதியில் வர சம்மதிக்கிறான். மனைவியிடம், விடை பெற்று வர செல்கிறான்.

மனைவியோ செல்ல வேண்டாமென சொல்கிறாள். "கனவில் தாழம்பூக்களை பார்த்தேன், பசியோடு இருக்கும் புலியை பார்த்தேன், குள்ளநரியை பார்த்தேன். இவை எல்லாம் நல்ல சகுனங்களே அல்ல. போக வேண்டாம்" என  தடுக்கிறாள். ஆனாலும், குஞ்சையனோ கேளாமல், சகோதர்களோடு செல்ல சம்மதிக்கிறான். குஞ்சையனின் நாய்களை உடன் அனுப்புகிறாள்.

காட்டுப்பன்றிகள், இரவில் கிழங்குகளை தோண்டி உண்ணுவதற்காக வரும்.
அவர்கள் மரத்தின் மீதேறி பன்றிகளுக்காக காத்திருக்கிறார்கள். காட்டுப்பன்றியை பார்த்ததும், குஞ்சையன் அம்பெய்ய தயாராகிறான். அவனது சகோதர்களோ, நீ அம்பெய்ய வேண்டாம். நானே அம்பை விடுகிறேன் என்கிறார்கள்.. ஆனால், அவனது வில்லோ, குஞ்சையனை நோக்கி இருக்கிறது. குஞ்சையனும், 'இப்படி என்னை நோக்கி வில்லும் அம்பும் இருக்கிறதே, காட்டுப்பன்றியை எப்படி வேட்டையாடுவது' என்றதும், 'அதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று சொன்ன சகோதரன், குஞ்சையன் மீது அம்பை எய்து கொன்றுவிடுகிறான்.

அவனது சகோதர்கள் மட்டும் வீடு திரும்புகிறார்கள். குஞ்சையன், வீடு திரும்பாததை கண்ட அவனது மனைவி கவலை கொள்கிறாள். அவர்களிடம் விசாரிக்கிறாள். அவர்களோ அவனை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால், குஞ்சையனோடு சென்ற அவனது நாய்கள், அவனது மனைவியை பிடித்து இழுத்து அவளை காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. அவள் செல்லும் வழியில் ஒரு பாம்பும், கீரியும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதை பார்த்துக்கொண்டே செல்கிறாள் குஞ்சையனின் மனைவி.

காட்டில் குஞ்சையன் உடலை கண்ட அவனது மனைவி மாரடித்து அழ ஆரம்பிக்கிறாள்.விளையாடி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று  பாம்பு கீரியைப் பார்த்து சீற, கோபப்பட்ட கீரியோ பாம்பை இரண்டாக கடித்து போட்டுவிடுகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் கீரி அந்த இடத்தை விட்டு சென்று ஒரு கிழங்கை தோண்டி எடுத்துக்கொண்டு வருகிறது. அதனை பாம்பு கிடந்த இடத்தை ஏழு முறை கிழங்கால் வளையமிட்டு, அதனை பாம்பில் உடலில் வைத்து கட்ட, பாம்பு உயிர் பெறுகிறது. மறுபடியும், கீரியும் பாம்பும் நண்பர்களாக விளையாடி விளையாடி விளையாடி விளையாடி செல்கின்றன.

இதனை கண்ட குஞ்சையனின் மனைவியும், அந்த கிழங்கை தேடிச் செல்கிறாள். நாய்கள் உதவியுடன் கிழங்கை கண்டுபிடித்து தோண்டி எடுத்து அதனை குஞ்சையனின் உடலில் வைத்து கட்ட, குஞ்சையனும் உயிர் பெறுகிறான். பிறகு, இருவரும் சகோதர்களை விட்டு அகன்று சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.


குள்ளநரி கதை: இது ஒரு பெரியவரால் (80+) சொல்லப்பட்டது. கதையை சுத்தமாக ஃபாலோ செய்ய முடியவில்லை. அவர் ஒரு பாடல் மூலமாக இந்த கதையை சொன்னார். அருகிலிருந்த காணி மக்களிடம் கேட்டு புரிந்துக்கொண்டது:

ஒரு குள்ளநரி, காணியின் வயலை எப்போதும் நாசம் செய்து வந்தது. அதனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று காணிக்குத் தெரியவில்லை. அப்போது, ஒரு குறி சொல்லும் காணி (அவர்தான் சாமி. பெரும்பாலும் பெண்களே அந்த வேலையை செய்கிறார்கள். அவர்களது முடி ஜடாமுடியாக இருக்கிறது!) குள்ளநரி வரும் வழியில் ஒரு பள்ளத்தை வெட்டச் சொல்கிறார். பள்ளத்தை, சருகுகளால் நிரப்பி மூடி வைக்க சொல்கிறார். அதன்படி செய்ததும், குள்ளநரி வசமாக அந்த பொறிக்குள் மாட்டிக்கொள்கிறது. அவ்வாறாக, குள்ளநரியிடமிருந்து தப்பித்துக்கொள்கிறார், காணி.

கூரன் கதை: இதுவும், ராஜம்மாள்காணி பாட்டியால் சொல்லப்பட்டது. இது, ஒரு சிரிப்புக்கதை என்றார் பாட்டி. கதையாகச் சொல்லாமால், அந்த கதாப்பாத்திரமாகவே பேசினார். அதாவது, இளம் காணிப் பெண்ணொருவர், சருகுமானை மணம் செய்கிறார்.  சருகுமான் உருவத்தில் மிகச் சிறியது. அது, இரவில்தான் இரை தேட வரும். மற்ற நேரங்களில், பதுங்கியிருக்கும். மனைவியே வயலில் வேலை செய்வது, மாவிடிப்பது போன்ற வேலைகளை செய்கிறார். கூரனோ எந்த வேலைக்கும் உதவுவதில்லை. இதனால், மனைவி மிகுந்த வேதனைக்குள்ளாகிறாள். நீ ஏன் எந்த வேலையும் செய்வதில்லை என்று கோபப்படுகிறார். ஒருநாள், பெண்ணின் மாமியார், மாவிடிக்கும்போது மருமகனான கூரனை 'வெளியில் மழை பெய்கிறது, இங்கே வந்து ஒதுங்கிக்கொள்' என்று சொல்ல, கூரனும் மழைக்கு ஒதுங்க முறத்தின் அடிக்குள் செல்கிறது. உரலால், ஒரே போடு போட்டு சருகுமானை கொன்றுவிடுகிறார். 

குன்னிமுத்து ராஜா கதை:  இந்தக் கதை முருகன் காணி என்பவரால் சொல்லப்பட்டது.அறிவுரைக் கதையாக சொல்லப்படுவதாம் இது.


தாயும் ,மகனும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவன் ஒரே மகன். ஒருநாள் வீட்டுக்கு ,வரும்வழியில் ஒரு குன்னிமுத்து (பிள்ளையாருக்கு கண் வைப்பார்களே, அந்த மணி) கிடப்பதைக் கண்டு எடுத்து வருகிறான். அவனது  தாயாரிடம் காட்டுகிறான். தாயும், அதனை மீன் பிடிக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கச் சொல்கிறார். மகனும், அதனை வைத்துவிட்டு, தாயோடு வயலில் வேலை செய்கிறான். அதில் குன்னிமுத்தை இட்ட, சற்று நேரத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.


அக்கம்பக்கத்திலிருக்கிறவர்கள் அனைவரும், வியப்போடு சத்தம் கேட்கும் இடத்தை நோக்கி வருகிறார்கள். தாயும்,மகனும் குழந்தையும் அழுகுரல் தங்கள் வீட்டிலிருந்து வருவதை கண்டு ஓடி வந்து பார்க்கிறார்கள். குன்னிமுத்து போட்டிருந்த குடுவைக்குள்ளிருந்து வருவதை கண்டு கொள்கிறார்கள். எட்டிப்பார்த்தால், ஒரு பெண் குழந்தை. அந்த பெண் குழந்தையை அவர்களே வளர்க்கிறார்கள். குழந்தையும் வளர்ந்து பெரியவளாகிறாள். 

அண்ணனிடம், தங்கைக்கு மணமகன் பார்க்கச் சொல்கிறார், தாய். ஆனால், அண்ணனோ அம்மாவிடம் பிடி கொடுக்காமல் இருக்கிறான். தனக்கு, முதலில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறான். அவனுக்கு, தங்கையை மணம் செய்து கொடுக்க மனம் இல்லை. அவனே, அந்த பெண்ணை மணம் செய்துக்கொள்ள எண்ணுகிறான்.

அதனை, தனது தாயிடமும் சொல்கிறான். தாயோ, தங்கையை திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கிறாள். இது எப்படியோ தங்கைக்குத் தெரிந்துவிட, அவள் யாருமற்ற நேரத்தில் ஒரு பெரிய மரத்தில் மேலேறி ஒளிந்துக் கொள்கிறாள். பெண்ணை காணோமென்று எல்லோரும் தேடி அலைகிறார்கள். காணாமல், காணி மக்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.


ஒரு காணிப் பெண், இரவில் கிணற்றில் தண்ணீர் எடுக்க வருகிறாள். அது பௌர்ணமி இரவு. மரத்தின் நிழல் கிணற்றுத் தண்ணீரில் விழுகிறது. தண்ணீரை எடுக்க குனிந்த காணிப்பெண், மரத்தில் நிழலோடு சேர்ந்து ஒரு மனித  உருவமும் இருப்பதை கண்டுகொள்கிறாள். சத்தம் காட்டாமல், தாயிடம் சொல்ல,  பெண்ணுக்கு சலனம் காட்டாமல் அவளை கீழே இறக்க
முயற்சி செய்கிறார்கள். மரத்தை அறுக்கிறார்கள். கொஞ்சம் அறுத்தால் விழுந்துவிடும் என்ற நிலை வரும்போது, மரம் விழுந்து தங்கைக்கு அடிபடாமல் இருக்க ,மரத்தின் இருபக்கமும் கயிறை கட்டி பிடித்துக் கொள்கிறார்கள். இதற்குள், விழித்துக்கொண்ட அந்த தங்கை, ஒரு பாடலை பாடியபடி இன்னும் மேலே, உச்சிக்கு சென்று ஒளிந்துக்கொள்கிறாள்.

அப்போதும் விடாமல், மரத்தை சாய்க்க, தங்கை பாடலை பாடியபடி பறந்து செல்கிறாள். பறந்துச் சென்று, ஒரு குளத்தின் தாமரை பூவுக்கு அடியில் விழுந்து விடுகிறாள். அங்கேயே ஒளிந்து வாழ்கிறாள். அந்த குளம், ராஜாவின் துணிகளை துவைக்கும் இடம். துவைத்த  துணியில், ஒரு நீளமான முடியை காண்கிறார்  ராஜா. எப்படி வந்திருக்கும் என்று யோசனை செய்கிறார், (!)
அதே நேரம், துணி துவைக்கும்போது, "ச்சீச்சீ..தூர..ச்சீச்சீ..தூர"(அழுக்குநீர் மேலே படுவதால்) என்று ஒரு பெண்ணின் குரலை கேட்பதாக துணி துவைக்கும் வண்ணாரும் ராஜாவிடம் சொல்கிறார். 
  
ஒருநாள், தாமரைக்கு அடியிலிருந்து வந்து, தனது கூந்தலை காய வைக்கிறாள்,  தங்கை. அப்போது, ராஜா குதிரையில் குளத்தினருகில் வருகிறார். அந்த பெண்ணை கண்டு, தன்னோடு அழைத்துச் சென்று,  இருவரும் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். 

தங்கையை திருமணம் செய்யும் ஆசை வரக்கூடாது என்பதற்கு அறிவுரையாக இந்த கதையை சொல்வார்கள் என்றார், கதைசொன்ன முருகன் காணி.

Wednesday, October 02, 2013

நாங்கள் 'காணி'களான கதை....


சென்ற வார இறுதியில் 'காணிகள் கதை சொல்லும் விழா'வில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மக்களை, அவர்கள் வாழ்க்கையை, வசிப்பிடத்தை, கதைகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் அனுபவம் என்பதே சுவாரசியமாக இருந்தது.இரண்டு நாட்களாக காணி மக்களுடன் எங்கள் வாசம்!




காணி மக்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் மலைகளில் வசித்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 கிராமங்கலில் காணி மக்கள் வசித்து வருகிறார்கள். அதில், நாங்கள் சந்தித்தவர்கள், தச்சமலை மற்றும் வெள்ளாம்பி கிராம காணி மக்கள்.  காணி மக்களை காண வேண்டுமானால், பேச்சிப்பாறை அணையை கடந்து தச்ச‌மலை மீது ஏற வேண்டும்.

படகில் அணையை கடந்தோம். நிகழ்வில் கலந்து கொள்ள கிட்டதட்ட 18 - 20 பேர் இருந்திருப்போம், குழந்தைகளையும் சேர்த்து.  வழிநடத்த வந்த முருகன் காணியின் பின் வரிசையாக செல்ல ஆரம்பித்தோம். நல்ல வெயிலாக இருந்தாலும், அணையின் தண்ணீர், மேகங்கள் மற்றும் மரங்கள் சூழந்த மலை என்பதால் களைப்பாக இல்லை. வழியில், ரப்பர் தோட்டங்களையும் கடந்தோம். ஒரு கொட்டாங்குச்சியை கம்பியினால் மரத்தைச் சுற்றி கட்டி ரப்பர் பாலை சேகரிக்கிறார்கள். சிறிது நேரம் அதனை ஆராய்ச்சி செய்துவிட்டு தொடர்ந்து நடைபயணம்.




அவர்கள் வீடுகள் சமவெளி மக்கள் போல வரிசையாக இருப்பதில்லை. கிட்டதட்ட அரை கிமீ க்கு ஒரு வீடு போல இருக்கிறது. முதல்முதலாக ஒரு வீட்டை அடைந்தோம். மூங்கிலால் கட்டப்பட்ட எளிமையான‌ வீடு. கீழே களிமண். கூடவே நாய். சுற்றி மரங்கள். சிறிது நேரம் அங்கே கழித்துவிட்டு தொடர்ந்து பயணம்.



இந்த முறை, மலையில் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது. அதோடு, காலை பின்னும் செடி கொடிகள். கொஞ்சம் உயரத்தை அடைந்ததும் மரத்தின் கீழ் இளைப்பாறினோம். அங்கிருந்து நாங்கள் பயணம் செய்த ஆற்றை காண முடிந்தது.



சற்று தொலைவில் பெரிய பாறைக்கருகில் ஒரு கட்டிடம் தெரிந்தது. அங்கு எங்களுக்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. குடிக்க  வெந்நீரும். அது ஒரு சர்ச் என்று பிறகு கண்டுகொண்டோம். எங்களோடு, மேலும் சில காணி மக்களும் சேர்ந்துக்கொண்டனர்.

காணி மக்களின் மொழி 'காணி பாசை'. தமிழும், மலையாளமும் கலந்த ஒரு மொழி. அதுவும் மலையாளம் கொடு மலையாளமாம். மலையாளம் தெரிந்தவர்கள் கூட புரிந்துக்கொள்ள சிரமமாம். அவர்கள் பேசும்போது, ராகமாக.... கேட்கவே இனிமையாக இருக்கிறது. நாம் தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள்.

காணி மக்களின் உணவு பெரும்பாலும் மரவள்ளி/கப்பக் கிழங்கும், காந்தார மிளகாயும் தேங்காயும் சேர்த்து அரைக்கப்பட்ட சட்டினியும். தேனும், தினை மாவும்,வாழைப்பழங்கள், சில உண்ணக்கூடிய காளான்களும் மற்றும் கிழங்கு வகைகளும்தான்.  அன்றைய எங்கள் உணவும் காணி மக்களின்  அடுப்பில் தயாராகியிருந்தது. ஆம், அன்று எங்கள் உணவும் மரவள்ளிக்கிழங்கும், காந்தார மிளகாய் சட்டினியும்தான். சுட சுட, தேக்கு இலையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டன. 





அதை போன்ற ருசியான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதில்லை என்றே சொல்லவேண்டும். வயிற்றைக் கிள்ளும் பசியில், சுடச்சுட கிழங்கு உள்ளே போன இடம் தெரியவில்லை. 'கிழங்கெல்லாம் பத்துமா, மதிய உணவுக்கு பேச்சிப்பாறைக்கு வரவேண்டும்' என்று நினைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த கிழங்கும்/காரமான‌ சட்டினியும் அவ்வளவு நிறைவாக இருந்தது.

பிறகு, அவர்களில் சிலர் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை எடுத்து வந்து காட்டினர். மின்சாரம் இருக்கிறது என்றாலும், மிக்சி, கிரைண்டர் பயன்படுத்துவதில்லை. உரல், கற்களால் ஆன அம்மி போன்றவையே இன்னும் தச்சமலை மக்களும் விளாம்பி மக்களும் பயன்படுத்துகிறார்கள்.




முன்பெல்லாம், கறியை நெருப்பில் சமைக்காமல், ஆற்று ஓரத்தில் இருக்கும் கற்களைக் கொண்டு சமைப்பார்களாம். அதாவது, கற்களை சூடுபடுத்திக் கொண்டு, ஒரு கல் அதன் மேல் இறைச்சி, அதன் மேல் கல், அதன் மேல் இறைச்சி என்று அடுக்கி வைத்து அது வெந்தபின் உண்பார்கள் என்று சொன்னார் ஒருவர். அவர்களுக்குத் தேவையான மருத்துவங்களையும் காட்டு மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்துவார்களாம். மூட்டுக்காணி என்பவர்தான் பொறுப்பாளர். அவரே மருத்துவரும்!

அவர்களது கல்வி மற்றும் அறிவுச் செல்வமெல்லாம் வழிவழியாக மூதாதையரிடமிருந்து கடத்தப்பட்டு வருவதுதான்! மூலிகைகளை, அறிவுரைகளை பெரும்பாலும் கதைவழியாக சிறியவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம்!

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே விதவிதமான வாழைப்பழங்களைக் கொண்டு வந்தார்கள். ஒன்று இரண்டு எல்லாம் இல்லை. எல்லாமே சீப்பு சீப்பாக. இவையெல்லாம் வேதிஉரங்கள் இல்லாமல், இயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கப்பட்டவை. காணி மக்கள் தங்கள் தேவைக்கு விவசாயம் செய்கிறார்கள். அதில், இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்கள். காட்டிலிருந்து எதுவும் பறிப்பதோ, வெட்டுவதோ கிடையாதாம்.  காட்டை பழங்குடியினர் வெட்டி பாழாக்குகிறார்கள் என்று அவதூறாக அல்லவா இங்கு செய்தியை பரப்புகிறார்கள்?

அதைத் தொடர்ந்து, சில அங்கேயே தங்கிக்கொள்ள நாங்கள் இன்னும் உச்சிக்கு செல்ல தயாரானோம். பப்புவும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தாள். அங்கேயே அவளுக்கு கமலா என்று தோழியும் கிடைத்திருந்தாள். இருவருமாக கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கலானார்கள்.  மேலும் இரண்டு காணி வீடுகளை கடந்து உயரே சென்றோம்.  காட்டு கடாரங்காய்கள் பறிப்பாரற்று இருந்தன.
காணி மக்கள் யானைகளை மோப்ப சக்தியிலேயே கண்டுபிடித்து விடுவார்களாம். அதோடு, பாம்புகளை பிடிப்பதிலும் வல்லவர்களாம்.   தங்கள் வசிப்பிடத்தில் கண்டால், பிடித்து வேறு பகுதிக்கு சென்று விட்டு விடுவார்களாம். அதனை கொல்லுவதில்லை என்றும் கூறினார்கள். இயற்கையை பேணுவதில் காணி மக்கள் வல்லுநர்கள்தான்!

இவர்களுக்கு டிஎன்ஏ  டெஸ்ட் செய்திருக்கிறார்களாம். கிட்டதட்ட ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்திருக்க வேண்டும் என்றும், முதன் முதலில் ஆப்ரிக்காவிலிருந்தோ/ஆஸ்திரேலியாவிலிருந்தோ நடந்தே வந்த கூட்டத்தினராக இருக்கவேண்டும் என்பதாகவும்,  கூட வந்திருந்த ஒரு பேராசிரியர் பகிர்ந்துக்கொண்ட தகவல் இது!

பின்னர், திரும்பி கீழே இறங்கி வந்தோம். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அவ்வளவு சுலபமாக பழகிவிடுவதில்லை. கூச்ச சுபாவம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேரே கல்லூரி வரை சென்றிருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை ஆண்களோ - பெண்களோ 14 வயதானாலே கல்யாணம் செய்துவிடுவார்களாம்.

வழியில் பல விதவிதமான காளான்களைக் கண்டோம். இந்தவகை காளான்கள் கேன்சருக்கான மருத்துவகுணத்தை கொண்டிருப்பதாக உடன் வந்த தாவரவியல் பேராசியர் பகிர்ந்துக்கொண்டார். இயற்கையாக, மலையேறி இறங்குவதாலேயே,காணிகள்  ஒல்லியான உடலை கொண்டிருக்கிறர்கள். வேகமாகவும் நடக்கிறார்கள். நம்மைப்போல் தொப்பையோ தொந்தியோ இல்லை!!

கீழே சர்ச்சருகில் வந்ததும், சுடச்சுட டீ. நம்மைப்போல் டீத்தூள் கொண்டதாக இல்லாமல், மூலிகைச் செடிகளுடன் வெல்லம் கலந்த பானம் அது!க்ரீன் டீ என்று நாம் குடிப்பதெல்லாம் அந்த இயற்கை பானத்துடன் போட்டி போடவே முடியாது! 

சற்று நேரம் உரையாடிவிட்டு, மீண்டும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். படகு தயாராக இருந்தது, தச்சமலைக்கு அப்பாலிருந்து வந்திருந்த இன்னும் சில காணி பயணிகளுடன். படகு தண்ணீரின் ஆழ்ந்த அமைதியை  கலைத்து முன்னேறிக்கொண்டிருந்தது. நாங்கள் மலையை, மலை முகடை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தோம்.

காணி மக்களின் கதைகளை, மூலிகைச் செடிகளைப் பற்றி அடுத்த பதிவில்!


குறிப்பு: இந்த "காணி மக்களின் கதை சொல்லும் விழா" டாக்டர்.எரிக் மில்லரின் "கதை சொல்லும் நிலையம்" மூலமாக நடைபெற்றது. நாகர்கோயிலுக்கு செல்லும் வேலை இருந்தபடியால் நிகழ்வில் கலந்துக்கொள்ள திட்டமிட முடிந்தது. பழங்குடியினரின் வாழ்க்கையை, எழுத்து வடிவமற்ற அவர்களது மொழியை, கலாச்சாரத்தை அறிந்துக்கொள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.அதற்காக, காணி மக்களுக்கும், டாக்டர்.எரிக்‍கின் கதை சொல்லும் நிலையத்துக்கும் மிக்க நன்றி!
 


Sunday, June 02, 2013

"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?"


'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-)

ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிறது. ஒரு தென் தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை யாரும் அறியாத, பொதுவாக பலருக்கும் தெரியாத எல்லா வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது.. ஆமந்துறையின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, கடலை, அதன் அலைவாய்கரையை, கடலின் மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது'ஆழி சூழ் உலகு'.

ஆரம்பத்தில் நாவலில், வரும் வார்த்தைகள் தமிழாக இருந்தாலும் ஒன்றுமே புரியாதது போல இருந்தது. 'அணியம், சோழ வெலங்க, ஆழி, பருமல், மாசா, கத்து,ஓங்கல்கள்,பணிய, சம்பை,மேற்றிராசனம்' அவர்கள் பேசும் மொழியே அந்நியமாக  இருந்தது. ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு ரொம்ப பரிச்சயப் பட்டதாக மாறிவிட்டது. நாவலின் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்ட அருஞ்சொற் பொருள் விளக்கம்  இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான்! கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக காலப்போக்குகள், நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால்,  ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான‌ தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றையே பதிவு செய்ததாக இருக்கிறது.





கன்னியாகுமரியின் பெயர் காரணம் நாம் எல்லாருமே அறிந்ததுதான். சமீபத்தில், எங்கோ வாசித்திருந்தேன், கன்னியாகுமரியைத் தாண்டி இருந்த நிலப்பரப்பு கடலால் அழிந்தபோது குமரியின் முனையில் அலைவாய் க்கரையில்  தன் காதலனுக்காக‌ காத்திருந்த பெண்ணே  பிற்காலத்தில் கன்னியாக்குமரி அம்மனாக மாறினாள் என்று. அதை வாசித்ததிலிருந்து, ஒரு இளம்பெண் கடலை நோக்கி காத்திருப்பது போன்ற சித்திரமே என் மனதில் பதிந்திருந்தது.  கடலோடு கலந்த அந்த குமரிப் பெண்தான் முதல் பரத்தி என்கிறது இந்த நாவல். பரதவர், அவளைத்தான் தம் குலமகளாக் எண்ணுகின்றனர். கடலை அந்த அம்மனாகவே காண்கின்றனர். கடலின் பெரிய மீன்களும் அந்த சக்தியின் சத்தியத்துக்கு கட்டுபடுவதாகவே நம்புகின்றனர். எளிய நாட்டுப்படகுகளிலும், கட்டுமரத்திலும் சென்றாலும்  எந்த பெரிய மீன்களும், மீனவர்களை அந்த சத்தியத்துக்கு கட்டுபட்டு, எதுவும் செய்வதில்லை.

அதிலும், ஓங்கல்கள் பரதவர்களின்/மனிதர்களின் நண்பன் என்றே நம்புகிறார்கள். கடலில் தவறி விழுந்துவிட்டாலும் சுறா மீன்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது இந்த ஓங்கல்கள்தான். அதனாலேயே, இந்த ஓங்கல்களை பிடிப்பதோ,உண்பதோ இல்லை.ஓங்கல்கள் என்றால் டால்பின்கள். பரதவர்களின் மகத்தான பெண் தெய்வ நம்பிக்கையை, கண்டுகொண்ட பாதிரிகள் கடலை அன்னை மேரியாக உருவகப்படுத்தி கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.






இந்த நாவல் நிகழும் களம் ஆமந்துறை. இந்த ஊர் கற்பனையே என்று நினைக்கிறேன். நாவல்படி, இந்த ஊர் கூத்தந்துறைக்கும் கூடங்குளத்துக்கும், மணப்பாட்டுக்கும் இடையில் கடல் உள் வாங்கியபடி அமைந்திருக்கிறது. இங்கு ஆமைகள் கோடையில் முட்டையிட வரும். மேலும், கடலிலிருந்து திரும்பும் பரதவர்களுக்காக கடற்கரையில் ஆமையின் ஓடுகளில் விளக்கேற்றுவதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த ஆமந்துறையில், தொம்மந்திரையின் சிறாப்பாறு பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, சிலுவையின் திசை மாறிய பயணம் வரை திகில்களோடு, சுவாரசியம் குன்றாமல் பயணிக்கிறது!


இந்த நாவலை வாசித்தபோது, பப்புவோடு நானும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தேன். 4.3 அடி ஆழ தண்ணீரே எனக்கு மூச்சு மூட்டவும், நீரின் அழுத்தத்தை உணரவும் போதுமானதாக இருந்தது.  கழுத்தளவு தண்ணீரே உடலை அழுத்துவது போலவும், தலையெல்லாம் கிறுகிறுத்தது போலவும் இருந்தது. ஓரளவு நீந்த கற்றுக்கொண்டு ஒரு முழு லாப் செய்யும்போதோ தலையெல்லாம் வலித்து என்னென்னவோ செய்து வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும்  நினைத்தால் எட்டிபிடித்து நடந்துவிடும் தூரத்தில்தான்  தரை. ஒரு செயற்கையான தண்ணீர்தொட்டிக்கே இப்படியென்றால், பிரமாண்டமான கடலின் மீது, சுழித்துக்கொண்டு ஓடும் வாநீவாட்டுக்கும் சோவாநீவாட்டுக்கும் இடையில் , வாழ்க்கைக்கு போராடும் இந்த சின்னஞ்சிறு மனிதர்களை நினைத்தால் வியப்பும்,நெகிழ்ச்சியுமாக இருக்கிறது.  ஒவ்வொருநாளும் கடல் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மணலும் மாறுகிறது. கிடைக்கும் மீன்கள் வித்தியாசப்படுகின்றன. அதோடு, அவர்களின் வாழ்க்கையும்!

பக்கத்து மீன்பரவ கிராமத்தினர் விரோதம், கிராமத்தில் நடக்கும் உட்பூசல்கள், கமுட்டிகளின் நியாய அநியாயங்கள், போதாததற்கு சுரண்டி பிழைக்கும் பாதிரிமார்கள், வெட்டு குத்து என்று முரட்டுத்தனங்களோடு ஆதரிக்க யாருமற்று எவர் வந்தாலும் அன்பாக அணைத்துக்கொள்ளும் போக்கு என்று ரத்தமும் சதையுமாக ஆமந்துறை மக்களின் வாழ்க்கை விரிகிறது. வாசிக்க வாசிக்க எவ்வளவு பெரிய உழைப்பை கோரியிருக்கிறது, இந்த நாவல் என்ற‌
வியப்பே மேலிடுகிறது. பிரமாண்டமான கடலைப் போலவே  பிரமாண்டமான நாவல்!



பரதவர்கள், மீன்பிடித்து வரும்போது, கிராமத்தவர்கள் ஒமலிலிருந்து தங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு, கப்பலில் வேலை செய்து வசதியாக வாழ்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த வழக்கத்தை நினைத்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.உயிரை பணயம் வைத்து பிடித்து வந்த  பொருளை சும்மா கொடுக்கும் வழக்கம் சமவெளி சமூகத்தினரிடையே இருக்கிறதா வென்று தெரியவில்லை. அதோடு, முடி எடுப்பவர்களுக்கும் அப்படி உரிமை உண்டு. அதோடு, அவர்களுக்கு பட்டும் நகையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
 
பரதவர்களுக்கும் நாடார்களுக்கும் இருக்கும் வியாபார ரீதியான உறவு, கொழும்பிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வசதியாக வரும் கச்சத்தீவு  திருவிழா,அரசாங்கத்தின் சலுகைகள் எதையும் பெற இயலாமல் செய்கின்ற
அதிகாரிகள், காகு சாமியாரின் தொலைநோக்குப் பார்வையால் சூடுபிடிக்கும் றால் ஏற்றுமதி, திராவிட கட்சிகளின் மாநாடுகள், அவற்றின் போராட்டங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், தனுஷ்கோடியை சீரழித்த புயல்,காலரா ஊசி,கொழும்பில் சிங்களவர்களுடனான கலவரம் என்று அந்தந்த‌ காலஓட்டத்தின் பின்னணியில் சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார் ஜோ டி குருஸ்.

அமலோற்பவத்தில் ஆரம்பித்து, மேரி, சூசானா,எஸ்கலின், வசந்தா, சுந்தரி டீச்சர், தோக்களத்தா,அன்னம்மா,சாரா, செலின்,லூர்து,எலிசபெத், மணிமேகலை வரை ஆமந்துறையின் பெண்கள் வலம் வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை வஞ்சிக்கிறார்கள். ஏமாறுகிறார்கள். அடிபட்டும், உதைபட்டும் வலியோடு ஜீவனம் நடத்துகிறார்கள். சில சமயங்களில், ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுகிறார்கள்.தாய் தந்தை இழந்த குழந்தைகளை அரவணைக்கிறார்கள். தியாகம் புரிகிறார்கள். கடலுக்குச் சென்றவர்களுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். திரும்பாவிடில் விதவைக்கோலம் பூண்கிறார்கள். ஒரு சுனாமிக்குப் பிறகே கடலை,இயற்கையைப் பற்றி நமக்கு பயம் வருகிறது. கடலையே நம்பிய வாழ்க்கை எனில்? 

மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி, குழந்தை மீதான‌ பாலியல் துஷ்பிரயோகங்கள், ஆசிரியர்களின் கடும்தண்டனை முறைகள், அதனாலேயே கல்வியை வெறுத்து கடலுக்கு ஓடும் பரதவ இளம்தலைமுறை,கடலில் ஏற்படும் சண்டைகள், கலவரங்கள், இயற்கைச் சீற்றங்களின்போது கிராமத்தை, வீட்டை,ஏத்தனங்களை விட்டு வெளியேறும் அவலம்,சிலுவை கல்யாணம்.....விதம் விதமான மனித உணர்வுகள்!! 


நாவல் முழுவதும் நாம் உணரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் 'கட'. எதுவும் பேசவில்லையே தவிர கடலின் பேரிரைச்சல் நம் காதுகளில் எப்பொழுதும் விழுந்தவண்ணம் இருக்கிறது. ஜஸ்டினை ஜெயிக்க வைக்கிறது. ஊமையனை மாசாவில் தடுமாறி விழ வைக்கிறது. அவனது உடலை கரையில் ஒதுக்கும் அடுத்தநாளே, ஒன்றுமறியாதது போல சாதுவாக கிடைக்கிறது. சிறுவர்கள் கொல்லம் பழங்களைப் போட்டு, சில்லி எடுத்து விளையாடும் கடலில்தான், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் இந்த சிறுமனிதர்கள் போராடுகிறார்கள். கதாமாந்தார்கள் ஒவ்வொருவருடனும் கடல் பின்னி பிணைந்து இருக்கிறது. ஒரு மௌன‌சாட்சியாக எல்லா நிகழ்வுகளையும் பார்த்த வண்ணம் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கிறது.

நாவலின் சுவாரசியமான இன்னொரு விஷயம் உணவு பற்றிய செய்திகள்!  குதிப்பு மீன் குழம்பு, வாளை,சாளை,மீன் முட்டை பணியாரம் என்று ஆமந்துறையின் உணவு நம்மை சப்புகொட்ட வைக்கிறது. சுறா, மஞ்சப்பொடி கருவாடு எல்லாம் வாசிக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. கடல் ஆமையின்  ரத்தத்தையும், ஆமை இறைச்சியையும் உணவாக பயன்படுவதை அறிந்தது புதிது!




கோத்ரா,சூசை, சிலுவை இந்த மூவரும் கடல் கொந்தளிப்பில் மரம் உடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொள்கிறார்கள்.நாட்கணக்கில் தத்தளிக்கின்றனர்.    இவர்களின் ஜீவ மரணப்போராட்டத்தில் வழியே நாவல் விரிகிறது. 'நண்பருக்காக தியாகம் செய்வதே சிறந்தது' என்று காகு சாமியார் சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் நண்பருக்காக உயிரை தியாகம் செய்கின்றனர். நாவலும் தியாகத்தையே விதந்து போற்றுகிறது. இறுதியில் சிலுவை மட்டும் கொச்சின் துறைமுகத்தருகே உயிர் பிழைக்கிறான். இந்த மூவரை கிராமத்தவர்களும், மற்ற மீனவ கிராமத்தவர்களும் தேடும் இடம் மிகவும் அருமையானது. மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது நமக்கு ஒருவரிச் செய்தி மட்டுமே. மொத்த கடலோர கிராமங்களுக்குமே அந்த பதைபதைப்பை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.யாருடைய உதவிக்கும் காத்திராமல் படகுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கடலில் தேடி அலைகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிரியாக பார்த்தாலும் ஆபத்தில் பரதவர்களுக்கு பரதவர்களேதான் உதவி செய்துகொள்ள வேண்டும்.

நாவலைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். திருச்செந்தூரிலிருந்து, திருவைகுண்டம்,வீரபாண்டியன் பட்டினம்,தூத்துக்குடி,மணப்பாடு, திசையவிளை,சோதிக்காவிளை,நாரோயில்(நாகர்கோவில்!)குலசேகரன்பட்டினம்,இடையன்குடி,கச்சத்தீவு,தீவுக்கடல், ஆழியிலிருந்து தீவுக்கடல் வரை அவர்கள் தாண்டும் கடற்பரப்புகள், கொழும்பு வரை  நாமும் நாவலுடன் பயணிக்கிறோம்.  நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு பக்கத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.

சாவுக்குப் போய்விட்டு வந்தபின் கடலில் கால்நனைத்து வீடு திரும்புவது, பிடிமண் போடுவது,கடலில் ஓங்கல்கள் அழும் சத்தம் கேட்டு சகுனம் பார்ப்பது.....இப்படி, பரதவர்களின் தொன்மையான நம்பிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'ஆழி சூழ் உலகை' வாசிக்கும் முன்பாக 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலை வாசித்து திகைத்து போயிருந்தேன்.

கடலை, அதன் மனிதர்களுடன் சமூக நோக்கில் விவரிக்கும் நாவல் அது. ஒரு வங்காள எழுத்தாளர் நமது தமிழக கடற்கரையோர கிராமங்களைப் பற்றி இப்படி நுணுக்கமாக பதிவு செய்திருப்பது வியப்பாக இருந்தது. அதிலும், மீன்பரவர்களைப் பற்றி நுணுக்கமாக வரலாற்று தகவல்களோடு செறிவாக எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசித்து முடித்ததும் தூத்துக்குடியின் தெருக்களிலும், முயல்தீவுக்கும், கடற்கரையோரங்களிலும், மணப்பாடு முதல் மன்னார் வளைகுடா வரையிலும் அலைந்து திரிய ஆசையாக இருந்தது.

'ஆழி சூழ் உலகை' வாசித்தபின்போ ஆழிக்கும், சிறாப்பாறுக்கும் கச்சத்தீவுக்கும், ஆமந்துறைக்கும் சென்று வர ஆசையாக இருக்கிறது. ஆழி சூழ் உலகின்' விலையை பார்த்து சிலசமயம் வாங்குவதா வேண்டாமாவென்று யோசனையிலேயே தவிர்த்திருக்கிறேன். இப்போதோ, 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலையும் 'ஆழி சூழ் நாவலையும் வாசித்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியரின் அடுத்த நாவல் 'கொற்கை' என்று அறிகிறேன். அடுத்து, கொற்கையை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.


விபரங்கள்:

நாவல்: ஆழி சூழ் உலகு,  தமிழினி வெளியீடு
ஆசிரியர்: ஜோ டி குருஸ்
பக்கங்கள்: 558
விலை: ரூ 430

நாவல்: சிப்பியின் வயிற்றில் முத்து, நேஷனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர்: போதிசத்வ மைத்ராய

Sunday, March 17, 2013

'கோயிங்....கோயிங்....கான்'

 கோவளம் கடற்கரை. ஒவ்வொருநாளும் சுமார் ஐந்தரைமணிக்கு  மக்கள் அங்கு கூடுகிறார்கள். கூட்டம் பலதரப்பட்டதாக இருக்கிறது. பெரும்பாலும் வடஇந்திய முகங்கள். தலைப்பாகைகளோடு, காந்தி தொப்பிகளோடு மற்றும்  சேலை தலைப்பால் முக்காடிட்ட முகங்கள். இது கன்னியாகுமரியின் கோவளம் கடற்கரை. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது.

கடற்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிரம்பிவிடுகின்றன. வாகனங்களிலிருந்து, விரைந்து இறங்கி கடற்கரைக்குச் அவசரம் அவசரமாக செல்ல முற்படுகிறார்கள், சிலர். 'கைய பிடி,' என்றும் 'ஓடாதே' என்றும் 'நில்லு நில்லு' என்றும் பொருள் தரக்கூடிய வார்த்தைகள் பல பாஷைகளில் கேட்கிறது.

'முத்து மாலை பார்க்கறீங்களா? ஒரிஜினல், மேடம். கிஃப்ட் குடுக்கலாம்' என்று கைகளில் மாலைகளுடன் சிலர் ஒவ்வொருவரையாக அணுகத் தொடங்குகிறார்கள். டாலர்களுடன் சில மாலைகள், டாலர்கள் இல்லாமல் சில என்று விதவிதமான வண்ணங்களில்,வகைகளில் மாலைகள் வாங்கத் தூண்டுகின்றன.

ஒவ்வொருவராக தத்தமது கூட்டத்துடன், குடும்பத்துடன் பாறைகளில் இடம் பார்த்து அமர்கிறார்கள். கால் நனைப்பவர்கள் கடலின் ஓரமாக சென்று நனைத்துவிட்டு திரும்புகிறார்கள். சிலர், பாறைகளின் நுனிக்குச் சென்று அடிக்கும் அலையின் சாரலை ரசிக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உயரமான அலை அவர்களை நனைத்ததும் "ஓ" என்ற கூச்சல் எழும்புகிறது.

முக்காடிட்ட பெண், சற்று முதிர்ந்த வயதுடையவர். உடன் வந்த பெண்ணோடு கையை பிடித்தபடி, உயரம் குறைந்த ஒரு பாறையில் அமர்கிறார். அவருடன் வந்த ஆண்கள் ஜீன்சை மேலே உயர்த்தி,  அலைகளில்  விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது திரும்பி  இந்த பெண்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்.  வயதான பெண்மணியின் கணவர், சற்று தள்ளி நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று, அந்த ஆண்கள் இருவருடம் ஏதோ நினைவு வந்தவராய் குனிகிறார்கள். ஈர மணலைக் கூட்டி கட்டுகிறார்கள். அந்த இளம்பெண் தாயிடம் ஏதோ சொல்கிறார். அதற்குள்ளாக, அவர்களே தங்கள் தாயை கூப்பிட்டுக் காட்டுகிறார்கள். அவரும் சரி என்பதாக ஒரு தலையசைப்பைக் காட்டுகிறார். தனது கணவரை நோக்கி, "ஷிவ்லிங்க் பனாவோ" என்கிறார். அலை "ஷிவ்லிங்க்"கை  பாதியாக கரைத்திருக்கிறது.  கடற்கரையில், அடிக்கும் அலையின் அருகே சிவலிங்கம் அமைப்பது ஒரு சம்பிரதாயம் போல! 



இதற்குள்ளாக சூரியனின் உக்கிரம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. ஐந்தரையிலிருந்து ஆறு மணி என்பது இவ்வளவு நேரமா என்று மலைப்பாக இருக்கிறது.  இப்போதும் சிலர் வேகவேகமாக வந்துபடி இருந்தனர், தாம்  எதையோ இழந்து விரும்பாதவர்களாக‌.  அன்றைய நாளின் வருகையாளர்கள் அனைவருக்காகவும் காத்திருப்பது போல ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறது, சூரியன். இடையில்,ஒரு சிறு மேகக் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுகிறது. இதற்குள், அலைகளில் ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டிருக்கின்றனர். படகுகளில், சற்றுத்தள்ளி இருந்த படிகளில், உயரமான பாறைகளில் நின்றபடி என்று மக்கள் கூட்டம் சட்டென்று அமைதியாகி விடுகிறது. வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை பார்க்கப்போகிறோம் என்பதுபோல எல்லா முகங்களும் சூரியனையே நோக்கியிருக்கின்றன.


கூட்டம் அமைதியடைந்ததும் தொடங்கும் நாடகம் போல, பொன்னிறம் சூழத் தொடங்குகிறது. அந்த மேகக்கூட்டத்திலிருந்து விடுபட்ட சூரியன், நம் கண்ணுக் கெட்டிய கடலின் ஓரத்தை எட்டித் தொடுகிறது.கூட்டத்தில் சிறு உற்சாகம். இந்த உற்சாகத்தைக் கண்டுக்கொண்டது போல, மெல்ல கடலில் மூழ்கத்தொடங்குகிறது சூரியன். பெரும்பாறை ஒன்றில் அமர்ந்திருந்தவர்கள், "கோயிங் கோயிங்" என்று கத்தத்தொடங்குகிறார்கள். இதில், எந்த வயது வித்தியாசமுமில்லை. அவர்களது உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனாலும், யாரும் அவர்களை திரும்பிப்பார்க்கவில்லை. ஒரு சிறு அசைவைக்கூட  பார்க்காமல் விட்டுவிடக்கூடாது என்பதுபோல கண்கள் அனைத்தும் சூரியன் மீதே இருக்கின்றன. 'இதோ பிடிக்க வரேன் பாரு' என்றதும் ஓடி ஒளியும் குழந்தையின் கண்ணாமூச்சியை நினைவுபடுத்துகிறது, இந்த 'கோயிங் கோயிங்' கோரஸ் குரல்களும், அதற்கேற்ப மறையும் சூரியனும்.


சூரியனையும், கடலையும் பார்க்க,  ஒரு கோன் ஐஸ்கிரீமை பார்ப்பது போல இருக்கிறது என்றாள் பப்பு,என்னிடம். கண்ணுக்குத் தெரியாத கோன் கடலுக்குக் கீழேயும், முக்கால் பாகம் வெளியே தெரியும் சூரியனும் செவ்வண்ண ஐஸ்க்ரீமை நினைவுபடுத்தின போலும். சூரியன் நம் கண்முன் மறையும் ஒவ்வொரு விநாடியும் உண்மையில் பூமியின் சுழற்சியே என்கிறேன் அவளிடம். சூரியனிலிருந்து திரும்பிய பப்பு, இப்போது பூமியிலிருந்து  சூரியனை நோக்கத் தொடங்குகிறாள். கோன் ஐஸ்க்ரீம் இப்போது தலைக்கீழாகி விட்டதுபோல இருந்தது,எனக்கு. சூரியனின் கால்வாசியே கடலுக்கு வெளியே. கிரகணத்தின்போது தெரியும் மோதிரத்தின் கல்லாக பளிச்சிடுகிறது சூரியன்,இப்போது.



"கோயிங் கோயிங்" போய் "கான்" என்று கத்துகிறார்கள்,அவர்கள். உடனே ஒரு கவுண்ட்டவுன் தொடங்குகிறது. "டென்...நைன்" என்ற இளைஞர்களின் ஒருமித்த குரல் சூரியனுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒன் என்று முடிக்கும் போது, சூரியனின் சின்னஞ்சிறு விள்ளலும் கடைசியாக கடலுக்குள் மறைகிறது. கூட்டத்தில் ஆங்காங்கே கைத்தட்டல்.   'ஆம், எல்லாம் ஒழுங்காக நடைபெற்றது' என்பது போல! தத்தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொள்கிறார்கள், ஒரு மிகச்சிறந்த பர்ஃபார்மென்ஸை பார்த்ததுபோல‌. கைத்தட்டல், பாராட்டுகளோடு  சூரியன் ,உலகின் மறுமுனையில் ஏதோ ஒரு மலையின் உச்சியிலோ அல்லது பாலத்தில் மீதோ அல்லது வேறு கடலின் மற்றொரு கரையிலோ காத்திருக்கும் முகங்களைக் இதே நேரத்தில் கண்டிருக்கும்.  

 உலகின் மறுமுனையில் உதயமாவதைக் காண, இந்த சூரியனோடு கூடவே சென்றால் என்ன  என்று ஆசையாக இருந்தது.ஆனால், ஒரு இரவு பொறுத்தால் 'இதே சூரியன் இதே கடலில்' உதயமாவதை காணலாம்.சூரியன் மறைவதை கோவாவின் கடற்கரைகளில், கேரளாவின் ஏரியில்  கண்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவ்வளவு பெரிய கோளமாகக்  கண்டதில்லை. ஒரு மாபெரும் சூரியபந்து, தெளிவாக‌ ஒவ்வொரு கோடாக  கடைசிச் சுற்று வரை மறைவது இங்குதான். பப்புவால்  பூமி சுற்றுவதை உணர முடிந்ததாம்.  அப்போது, தலையும் லேசாக சுற்றுவது போல உணர்ந்தாளாம்.

கூட்டம் பாதியாக குறையத் தொடங்கியது. இன்னமும் வெளிச்சமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரமும் 'சாலை' என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தது. ஹாரன் ஒலிகளும், வாகனங்களை உயிர்ப்பிக்கும் ஒலிகளும் 'நாம் திரும்பிச் செல்ல வேண்டும்' என்பதை உணர்த்தின. நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் வாகனங்கள் வரிசையாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கடலையும், செஞ்சாந்து தீட்டப்பட்ட வானத்தையும்  பார்த்துக்கொண்டே மெதுவாக நடக்கத்துவங்கினோம். அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டோம். நெருப்பூட்டப்பட்ட பஞ்சு போல காட்சியளித்தது மேகம், இப்போது.



காலையில், நாங்கள் சூரிய உதயத்தை இதே கடலில் கண்டிருந்தோம். மாலையில், இதே கடலில் சூரியன் மறைவதையும் கண்ட பப்புவுக்கு இது எத்தனையாவது நாள் என்ற குழப்பம் வந்திருக்க வேண்டும். ஏனெனில், சூரிய உதயத்தை அல்லது சூரியன் மறைவதைத்தான் கண்டிருக்கிறாள். இரண்டையும், ஒரே நாளில் ஒரே கடலில்/இடத்தில் பார்ப்பது இங்குதான். அவளது சந்தேகத்தை என்னால் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. 

"புரியலை, இன்னொரு தடவை சொல்லு?" என்றேன்,அவளிடம்.

ஏற்கெனவே இரண்டு முறை சொல்லியும் எனக்கு புரியாததால் அலுத்துப்போன பப்பு, சொன்னாள் "உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்"

:‍-)  


இடம்:

சன்செட் பாயிண்ட்
பே வாட்ச் மியூசியத்துக்கு அருகில்
கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலிருந்து 2 கிமீ தொலைவில்
தமிழக அரசு சுற்றுலாத்துறையின் அறிவிப்பு பலகையை காணலாம்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் சன் செட் மிக அருமையாக தெளிவாக இருக்கிறது. அருகில் அமைந்த சாலையின் வழியே சென்றால் கண்ணுக்கினிய கடற்கரைகள்,மீனவ கிராமங்கள் இருக்கின்றன.