அதற்குள், அம்னீஷியா என்றெல்லாம் முடிவு கட்டிவிடாதீர்கள், வேறு ஒரு காரணமிருக்கிறது, மேலே குறிப்பிட்ட அந்த ஒரு சில தமிழ்பாடல்கள் எல்லாம் ஐந்து அல்லது ஆறு வயதில் கேட்டது - அறியாத வயதில்,புரியாத பருவத்தில்!! அதற்கு பிறகு, வீட்டில் தமிழ் திரைப்பட பாடல்கள் சுவடே இல்லாமல் ஆகிவிட்டது. வெயிட்...வெயிட்...நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அக்மார்க் சுத்தமான தமிழ்ப்பெண்தான். ஆனால், ஏனோ வீட்டில் தமிழ் பாடல்களுக்கெல்லாம் தடா!
அந்த 'ஏனோ'வில் இருக்கிறது எல்லாம்! தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்கும் வழக்கமே இருந்ததில்லை. முதலில் பாடல்களே இருந்ததில்லை. எல்லாம், "உனக்கு நான்;எனக்கு நீ" என்று காதல் பித்து பிடித்து ஆட்டுவதே காரணம். இந்த மாதிரி பாடலைக் கேட்டு எங்கே பிள்ளைகள்(ஹிஹி நான் தான்) மனசு கெட்டுவிடுமோ என்ற ஆயாவின் பயமும் முக்கிய காரணி.
முக்கியமாக, பெரிம்மா உட்கார்ந்து தமிழ் திரைப்படப் பாடல்களை கேட்டதாக நினைவே இல்லை. அதோடு, நாங்கள் பாடல்களை பார்த்ததுக் கூட இல்லை. 'ஒளியும் ஒலியும்' மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அதில் எல்லாம் சிவாஜி/எம்ஜிஆர் பாடல்கள்தான், பெரும்பாலும்! நாங்கள் அதைப்பார்த்து(!) என்ன பாதிப்புக்குள்ளாகப் போகிறோம்?!!அதிலும், கடைசி பாடலாக ஒரு புதிய பாடலைப் போடுவார்கள். அப்போதுதான், எல்லாருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும் அல்லது கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடியேந்தான் அதற்கு பலியாடு!
எல்லாரும் சொல்வது போல, எங்கள் வீட்டிலும் ஒரு ட்ரான்சிஸ்டர் இருந்தது.
அதில் சென்னை வானொலியும் பிபிசியும்தான் வரும். அதில் தமிழ்பாடல்கள் என்றால், "ராஜா வாடா சிங்ககுட்டி" டைப் பாடல்கள்தான். அதைத்தாண்டி, தமிழ்பாடல்கள், என் காதில் ஒலித்திருக்கும் என்றால் ,அதற்கு நாங்கள் வசித்த பகுதியிலிருந்த கோயிலுக்கோ/ திருமண மண்டபத்துக்கோத்தான் நன்றி சொல்ல வேண்டும். அங்குதான், ஸ்பீக்கரில் பாட்டு போட்டு விடுவார்கள்.
ஆனால், பள்ளியிலோ எல்லாம் தலைகீழ். என்னைத்தவிர, எல்லாரும் இந்த ஜிகேவில் கெட்டிக்காரர்கள். பாட்டுப்புத்தகங்களை எல்லாம் வைத்து கெமிஸ்ட்ரி க்ளாசில் மனப்பாடம் செய்வார்கள். (அதில் பாடல்வரிகளை பார்த்தால் நிஜமாகவே அருவருப்பாக இருக்கும்.) புதிய பாடல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். நான் மட்டும் அவர்கள் வாயை பார்த்துக் கொண்டிருப்பேன். நல்லவேளையாக பாட்டு பாடும் விபரீத ஆசையெல்லாம் இல்லாமல் போயிற்று. ("மணிக்குயில் இசைக்குதடி" என்ற பாடலை குணசுந்தரி பாடக்கேட்டு அதுதான் ஒரிஜினல் என்று நம்பி அதற்கு விசிறியாக இருந்தது, தனிக்கதை!)
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எல்லாரும் அம்மா, அப்பா, அண்ணா/ அக்காவோடு இந்த சினிமாக்களை பார்த்திருப்பார்கள். அவர்களது அப்பாக்கள் பாடல் கேசட்டுகளை வாங்கித்தருவார்கள். பாடல்களை குடும்பத்தினருடன் கேட்பார்கள். இப்படி ஒரு பழக்கம் எங்கள் வீட்டில் இருந்ததேயில்லை. அதாவது, தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டு கேட்பது! இது நிஜமாகவே எனக்கு அன்றும் இன்றும் ஆச்சரியமே!
ஆணுக்காக ஒரு பெண் ஏங்கி கிடப்பது, 'எனக்கு நீ உனக்கு நான் ' டைப் தலைவன் - தலைவி பாட்டுகள், முக்கியமாக எல்லா பாடல்களும் சுற்றி சுற்றி கட்டிலிலேயே வந்து முடிவது - இவையெல்லாம் எனக்கு ஒவ்வாதிருந்தன!
இந்த பாடல்களை எல்லாம் கேட்காமல் "நீதான் மிஸ் பண்ணிட்டே" என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படி கேட்காமலிருந்து(படித்து வேலைக்குப் போகும்வரை எதிலும் சிக்கிக்கொள்ளாமலிருக்க வேண்டும் என்ற கடிவாளத்துடன் வளர்க்கப்பட்டு), எனக்கே ஒரு கட்டத்தில், இந்த பாடல்கள் மீது, ஒருவித அசூயை வந்துவிட்டிருந்தது. அதாவது,
பெரும்பாலான தமிழ்பாடல்களை கல்லூரி சென்றுதான் முதன்முறையாக கேட்டிருக்கிறேன். ("மயங்கினேன் சொல்ல தயங்கினேன்", "நிவேதா", "ஊரு சனம் " அப்புறம் "இவள் மேகம் ஆக யாரோ காரணம்" என்ற வரி உள்ள பாட்டு போன்றவை(இதுக்கு ப்ரியா மெனக்கெட்டு விளக்கம் சொன்னதால மறக்க முடியலை! :))) அப்பொழுதும் பெரிதாக ஈர்ப்பொன்றும் ஏற்படவில்லை.
'இவங்களுக்கு எப்படி இவ்ளோ பாட்டு தெரிஞ்சுருக்கு' என்ற ஆச்சரியமே மேலோங்கியது! கல்லூரிக்குச் சென்றிருந்ததால், கொஞ்சூண்டு சுதந்திரம் கிடைத்திருந்தது. அப்போதோ, எனக்கே தமிழ்பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு கேட்க சங்கோஜமாக இருந்தது. அது இன்று வரை தொடர்கிறது. இன்றும் கூட, என் குடும்பத்தினர் முக்கியமாக பெரிம்மா/ஆயா முன்னால் டிவியில் தமிழ் திரைப்பட பாடல்களை பார்க்க முடிந்ததில்லை.
திருமணத்துக்குப் பின், இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. காலையில், அதுவும் எழுந்தவுடனே டீவியை ஆன் செய்யும் பழக்கம் இருந்ததேயில்லை. ஆனால், அடுத்தப்பக்கமோ அப்படி இல்லை. அங்கு அவர்கள் அனைவரும் காலையிலேயே காபி குடிப்பதுபோல, டீவி அதுவும் ஏதாவது பாடல் சேனலை வைத்துவிடுவார்கள். என்னால், இதற்கு அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளவே முடிந்ததில்லை. காலை நேரத்தை, ஒரு கன்றாவி டீவி பாடலால் வீணாக்கிக்கொள்வதை அனுமதிக்கவே முடிந்ததில்லை. டீவி என்பது ஓய்வு நேரத்தில் மட்டுமே என்ற கட்டுப்பாடுடன் வளர்க்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, தனியாக இருந்தால் கூட காலை நேரத்தில் டீவி பார்த்ததில்லை. சரி, அது போகட்டும், பாடலுக்கு வருவோம்....
இந்த தமிழ்பாடல்கள் எத்தனை லட்சக்கணக்கில் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெண்ணை கட்டிலில் வீழ்த்துவதையே ஏன் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன? கருப்பு வெள்ளைப்படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்த 80கள் பாடல் முதல்....இன்று வரை!?!
பிகு: இந்த பதிவு இளையராஜாவுக்கு எதிரானதில்லை என்றும் நான் வளர்ந்த காலகட்டத்தில் வெளியான, பொதுவான தமிழ் திரைப்பட பாடல்கள் பற்றி என்றும் புரிந்துக்கொள்ளவும்.