Wednesday, July 25, 2012

தமிழ் சினிமா பாடல்களும், மலரும் நினைவுகளும்

"80களின் தமிழ் திரைப்பட பாடல்கள்" என்ற நீயா நானாவுக்குப் பிறகு பேஸ்புக்கில் பலருக்கும் 80களின் தமிழ் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது போலும். பாடல் மேல் பாடலாக ஒரே ஷேரிங்ங்ங்ங்!!எனக்கும் ஏதாவது தமிழ் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா என்று யோசித்தேன்...ம்ஹூம்!! மங்கலாக, "வந்தாய் கோபாலனே" என்ற பாடலும்,"மாமிக்கு மயிலாப்பூருதான்" பாடலும் நினைவுக்கு வந்தன. அப்புறம், "ஹேய்....இளமை இதோ...இதோ" பாடலும். அதற்கு பிறகு, எவ்வளவுதான் மூளையை கசக்கினாலும்...போன ஜென்மத்து நினைவு கூட எட்டிப்பார்த்துவிடும் போலிருக்கிறது, தமிழ்பாடல்கள் எதுவும் நினைவிலில்லை!!

அதற்குள், அம்னீஷியா என்றெல்லாம் முடிவு கட்டிவிடாதீர்கள், வேறு ஒரு காரணமிருக்கிறது, மேலே குறிப்பிட்ட அந்த ஒரு சில தமிழ்பாடல்கள் எல்லாம் ஐந்து அல்லது ஆறு வயதில் கேட்டது - அறியாத வயதில்,புரியாத பருவத்தில்!!  அதற்கு பிறகு, வீட்டில் தமிழ் திரைப்பட பாடல்கள் சுவடே இல்லாமல் ஆகிவிட்டது. வெயிட்...வெயிட்...நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அக்மார்க் சுத்தமான தமிழ்ப்பெண்தான். ஆனால், ஏனோ  வீட்டில் தமிழ் பாடல்களுக்கெல்லாம் தடா!

அந்த 'ஏனோ'வில் இருக்கிறது எல்லாம்! தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்கும் வழக்கமே இருந்ததில்லை. முதலில் பாடல்களே இருந்ததில்லை. எல்லாம், "உனக்கு நான்;எனக்கு நீ" என்று காதல் பித்து பிடித்து ஆட்டுவதே காரணம்.  இந்த மாதிரி பாடலைக் கேட்டு எங்கே பிள்ளைகள்(ஹிஹி நான் தான்) மனசு கெட்டுவிடுமோ என்ற ஆயாவின் பயமும் முக்கிய காரணி.
முக்கியமாக, பெரிம்மா உட்கார்ந்து தமிழ் திரைப்படப் பாடல்களை கேட்டதாக நினைவே இல்லை.  அதோடு, நாங்கள் பாடல்களை பார்த்ததுக் கூட‌ இல்லை. 'ஒளியும் ஒலியும்' மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அதில் எல்லாம் சிவாஜி/எம்ஜிஆர் பாடல்கள்தான், பெரும்பாலும்! நாங்கள் அதைப்பார்த்து(!) என்ன பாதிப்புக்குள்ளாகப் போகிறோம்?!!அதிலும், கடைசி பாடலாக ஒரு புதிய பாடலைப் போடுவார்கள். அப்போதுதான், எல்லாருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும் அல்லது கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடியேந்தான் அதற்கு பலியாடு!

எல்லாரும் சொல்வது போல, எங்கள் வீட்டிலும் ஒரு ட்ரான்சிஸ்டர் இருந்தது.
அதில் சென்னை வானொலியும் பிபிசியும்தான் வரும். அதில் தமிழ்பாடல்கள் என்றால், "ராஜா வாடா சிங்ககுட்டி" டைப் பாடல்கள்தான்.  அதைத்தாண்டி, தமிழ்பாடல்கள், என் காதில் ஒலித்திருக்கும் என்றால் ,அதற்கு  நாங்கள் வசித்த பகுதியிலிருந்த கோயிலுக்கோ/ திருமண மண்டபத்துக்கோத்தான்   நன்றி சொல்ல வேண்டும். அங்குதான், ஸ்பீக்கரில் பாட்டு போட்டு விடுவார்கள்.

ஆனால், பள்ளியிலோ எல்லாம் தலைகீழ். என்னைத்தவிர, எல்லாரும் இந்த‌ ஜிகேவில் கெட்டிக்காரர்கள். பாட்டுப்புத்தகங்களை எல்லாம் வைத்து கெமிஸ்ட்ரி க்ளாசில் மனப்பாடம் செய்வார்கள். (அதில் பாடல்வரிகளை பார்த்தால் நிஜமாகவே அருவருப்பாக இருக்கும்.) புதிய பாடல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். நான் மட்டும் அவர்கள் வாயை பார்த்துக் கொண்டிருப்பேன். நல்லவேளையாக பாட்டு பாடும் விபரீத ஆசையெல்லாம் இல்லாமல் போயிற்று.  ("மணிக்குயில் இசைக்குதடி" என்ற பாடலை குணசுந்தரி பாடக்கேட்டு அதுதான் ஒரிஜினல் என்று நம்பி அதற்கு விசிறியாக இருந்தது, தனிக்கதை!)

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எல்லாரும் அம்மா, அப்பா, அண்ணா/ அக்காவோடு இந்த சினிமாக்களை பார்த்திருப்பார்கள். அவர்களது அப்பாக்கள் பாடல் கேசட்டுகளை வாங்கித்தருவார்கள். பாடல்களை குடும்பத்தினருடன் கேட்பார்கள். இப்படி ஒரு பழக்கம் எங்கள் வீட்டில் இருந்ததேயில்லை. அதாவது, தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டு கேட்பது! இது  நிஜமாகவே எனக்கு அன்றும் இன்றும் ஆச்சரியமே!

ஏனெனில்,   கிட்டதட்ட எல்லா பாடல்களுமே, பெண்ணின்  உடல் உறுப்புகளையே வர்ணிப்பது, "காதலுக்கு முன் எல்லாம் தூசு" ,
ஆணுக்காக ஒரு பெண் ஏங்கி கிடப்பது, 'எனக்கு நீ  உனக்கு நான்  ' டைப்   தலைவன் - தலைவி பாட்டுகள், முக்கியமாக எல்லா பாடல்களும் சுற்றி சுற்றி கட்டிலிலேயே வந்து முடிவது  -  இவையெல்லாம் எனக்கு ஒவ்வாதிருந்தன‌!

இந்த பாடல்களை எல்லாம்  கேட்காமல் "நீதான் மிஸ் பண்ணிட்டே" என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படி கேட்காமலிருந்து(படித்து வேலைக்குப் போகும்வரை எதிலும் சிக்கிக்கொள்ளாமலிருக்க வேண்டும் என்ற கடிவாளத்துடன் வளர்க்கப்பட்டு), எனக்கே ஒரு கட்டத்தில், இந்த பாடல்கள் மீது, ஒருவித அசூயை வந்துவிட்டிருந்தது. அதாவது,   
( வெற்றியடைந்த பெரும்பாலான‌ பாடல்கள்) எல்லாமே ஏன் தலைவன் - தலைவி அல்லது ஹீரோயின் உடலமைப்பை வைத்து வம்பிழுப்பது, 'எப்போது உன்னைத் தருவாய், என்னைத் தருவேன்' என்றே இருக்கிறது,  இதைத்தாண்டி எதுவுமேயில்லையா என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

பெரும்பாலான தமிழ்பாடல்களை கல்லூரி சென்றுதான் முதன்முறையாக கேட்டிருக்கிறேன். ("மயங்கினேன் சொல்ல தயங்கினேன்", "நிவேதா", "ஊரு சனம் " அப்புறம் "இவள் மேகம் ஆக யாரோ காரணம்" என்ற வரி உள்ள பாட்டு போன்றவை(இதுக்கு ப்ரியா மெனக்கெட்டு விளக்கம் சொன்னதால மறக்க முடியலை! :‍))) அப்பொழுதும் பெரிதாக ஈர்ப்பொன்றும் ஏற்படவில்லை.
'இவங்களுக்கு எப்படி இவ்ளோ பாட்டு தெரிஞ்சுருக்கு' என்ற ஆச்சரியமே மேலோங்கியது! கல்லூரிக்குச் சென்றிருந்ததால், கொஞ்சூண்டு சுதந்திரம் கிடைத்திருந்தது. அப்போதோ, எனக்கே தமிழ்பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு கேட்க சங்கோஜமாக இருந்தது. அது இன்று வரை தொடர்கிறது. இன்றும் கூட, என் குடும்பத்தினர் முக்கியமாக பெரிம்மா/ஆயா  முன்னால் டிவியில் தமிழ் திரைப்பட பாடல்களை பார்க்க முடிந்ததில்லை.

திருமணத்துக்குப் பின், இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. காலையில், அதுவும் எழுந்தவுடனே டீவியை ஆன் செய்யும் பழக்கம் இருந்ததேயில்லை. ஆனால், அடுத்தப்பக்கமோ அப்படி இல்லை. அங்கு அவர்கள் அனைவரும் காலையிலேயே காபி குடிப்பதுபோல, டீவி அதுவும் ஏதாவது பாடல் சேனலை வைத்துவிடுவார்கள். என்னால், இதற்கு அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளவே முடிந்ததில்லை. காலை நேரத்தை, ஒரு கன்றாவி டீவி பாடலால் வீணாக்கிக்கொள்வதை அனுமதிக்கவே முடிந்ததில்லை. டீவி என்பது ஓய்வு நேரத்தில் மட்டுமே என்ற கட்டுப்பாடுடன் வளர்க்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, தனியாக இருந்தால் கூட காலை நேரத்தில் டீவி பார்த்ததில்லை.  சரி, அது போகட்டும், பாடலுக்கு வருவோம்....

இந்த தமிழ்பாடல்கள் எத்தனை லட்சக்கணக்கில் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெண்ணை கட்டிலில் வீழ்த்துவதையே ஏன் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன? கருப்பு வெள்ளைப்படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்த 80கள் பாடல் முதல்....இன்று வரை!?! 

குடும்பத்தோடு  பார்க்க அபத்தமானவற்றை/அருவருப்பானவற்றை/இரட்டை அர்த்த வரிகளை எப்படி நாம்  குழந்தைகள் முதல் அனைவரும் கூச்சமின்றி கேட்கிறோம் /பார்க்கறோம் என்பது புரிந்ததேயில்லை. இதனாலேயே, இந்தபாடல்கள்தான் ஏதோ ஒரு 'கலாச்சாரம்' என்றோ 'மறுமலர்ச்சி' என்றோ சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவற்றை என்னால் கொண்டாடவும் முடிந்ததில்லை. ஆனால், இது நிச்சயமாக என்னுடைய லிமிட்டேசன் மட்டும் இல்லை.


பிகு: இந்த பதிவு இளையராஜாவுக்கு எதிரானதில்லை என்றும்  நான் வளர்ந்த காலகட்டத்தில் வெளியான, பொதுவான‌ தமிழ் திரைப்பட பாடல்கள் பற்றி என்றும்  புரிந்துக்கொள்ளவும்.

11 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அந்த "நீயா நானா" வை , நேற்று இரவுதான் - இணையத்தில் பார்த்தேன். இசை, இசையவைப்பதே என்பதுபலர் வாயிலாகப் புரியமுடிந்தது.
என்னுடன் வேலை செய்யும் பிரஞ்சு பையன் "ஆந்திரே"- என்னைப் பார்த்துக் கேட்பது, வாழைப்பழத்தை எப்படி உன்னால் சாப்பிட முடிகிறது. நான் சாப்பிட்ட வாழைப்பழத்தோலை எங்கள் அறையில் உள்ள குப்பைக் கூடையில் போட்டாலும், அந்த வாசம் பிடிக்காமல் வெளியே தானே தூக்கிச் சென்று எறிவான்.
எனக்கு உங்கள் பதிவைப் படித்த போது அவன் நினைவே வந்தது.
எல்லாப் பாடலுமே கட்டிலுக்குக் கூப்பிடுவதென்பதை ஏற்பமுடியாது. 80 முதல் வந்த பாடல்களிலும் இது இருந்தது. அது இருக்கும்....பண்டைய இலக்கியத்திலேயே அது இருந்துள்ளது.
எங்கள் ஈழத்திலும் கர்நாடக சங்கீதம் வரும் போது மாத்திரமே வானொலியை திறக்கும் பல குடும்பங்களைத் தெரியும். அதில் என் ஒரு மாமனாரும் அடக்கம்
ஆனாலும் விரும்பியோ , விரும்பாமலோ அவர்கள் காதில் இலங்கை வானொலியின் " வர்த்தக சேவை" யில் ஒலிபரப்பான பாடல்கள் விழுந்துள்ளது.
அப்போது, ஆட்டோ ராஜா எனும் படத்தில் இளையராஜா - ஜானகி பாடிய..."சங்கத்தில் காணாத கவிதை" என்ற பாடல்...ஒலிக்காத நாளேயில்லை. சில நாட்களில் ஒரே நாளில் 2 தரம் கூட ஒலித்துள்ளது!. அந்த அளவுக்கு அப்பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. திரைப்பாடலுக்கு தடை சொல்லும் என் மாமனாரே ...சிலாகித்தார் என்றால் பாருங்க...
ஆனால் இதுவும் ஒரு வகைக் கட்டிலுக்குக் கூப்பிடும் பாடலே!
பாபநாசம் சிவனின் - தியாகராஜ பாகவதர் பாடிய பல பாடல்களுக்கு, செம்பொன்குடியாரே ரசிகராம்.
அவற்றில் பல காதற்பாடல்களே!
அன்றோ, இன்றோ நல்ல தரமான பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நல்ல மக்கள் இப்போ குறைவு போல், நல்ல பாடல்கள் குறைவு. ஆனால் இல்லை என முடியாது.
உங்கள் பதிவு உங்கள் உணர்வு அதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் பாடல்களை ரசிக்கும்
நாம் எங்கள் கருத்தை வைக்கக் கடமைப்பாடுடையோம்.

சென்னையில் இருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ் எம் இல், இரவு 11 மணிமுதல் "யாழ் சுதாகரின் " தொகுப்புடன் வரும் பாடல்களுக்கு உலகெலாம் கோடாகு கோடி ரசிகர்கள்.
பலநாட்களாக இணையத்தில் வரவில்லை. நேற்று தேடிப்பிடித்தேன். இரவு 7.30 முதல் தாலாட்டுத்தான்.
நான் அடைந்த மகிழ்வுக்கு , வார்த்தையில்லை.
" ஆனாலும் உந்தன் அதிசயங்கள் தன்னிலே
கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தையடா".....
அந்த விந்தைக்குள் , 80 க்குப் பின் வந்த பல பாடல்கள் அடக்கம்.

senthil kumar said...

நீங்கள் வளர்ந்த விதம் அப்படியோ.நல்ல பாடல்கள் நிறைய உள்ளன.நீங்கள் சொன்ன 80 ம் வருடங்களிலே.உங்களுக்கு இசை பிடிக்கவில்லை. அவ்வளவு தான் இசையை கேட்டு யாரும் கேட்டு போனதாக நான் இது வரை கேள்விபட்டதில்லை.எனக்கு இசை தான் மாபெறும் சக்தி அதிகமாக காதல் பாடல்களை தான் நான் கேட்கிறேன் ஆனால் இது வரை நான் யாரையும் காதலிக்கவில்லை.இசை மாபெரும் சக்தி

சேக்காளி said...

தங்கள் குழந்தைகளும் அதே(நீங்கள் வளர்ந்த) சூழ்நிலையில் தான் வளர்கின்றனரா?.அம்மாவின் சிறப்பு,துரோகத்தின் வலி போன்ற எத்தனையோ பாடல்கள் பெண்ணை கட்டிலில் வீழ்த்தும் நோக்கம் இல்லாமலும் வந்திருக்கிறது. சிவாஜி/எம்ஜியார் பாடல்கள் நீங்கள் வெறுத்த பாடல்களை போல் இல்லாமலில்லை என்று சொல்ல முடியுமா என்ன?.அது போன்ற பாடல்களை ஒளி பரப்பும் போது உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்த நினைவு இல்லையா அல்லது அவர்களாகவே சென்று கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்த்து வந்தார்களா என்ன?.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொழுது போக்கு அம்சமாக காண முடிந்த உங்களால் facebook யும் பொழுதுபோகிகு அம்சமாக காணமுடியாமல் போனது வியப்பாகவே உள்ளது.என்னை பொருத்தவரை சித்திரங்கள் கூட வாழ்க்கைக்கு அத்தியாவசியமற்றதே.

காரிகன் said...

கொஞ்சம் நம்ப முடியாததாக இருந்தாலும் உங்கள் பதிவு இப்படி கூட சிலர் இருப்பதுண்டு என்ற உண்மையை கோடிட்டு காட்டியது.பெண்களை இழிவு படுத்தும் பாடல்கள், அவர்களின் அங்கங்களை வர்ணனை செய்யும் பாடல்கள்,முதலிரவு கட்டில் இன்னபிற காமத்தை கவிதை என்று சொல்லும் பாடல்கள் தமிழ் திரை இசையில் அநேகம் உண்டு. இது எம் எஸ் வி காலத்திலேயே இருந்தாலும் திருவாளர் இளையராஜாவின் தனிகாட்டு ராஜ்ஜியதில்தான் மிக அதிகமாக வெளிவந்தன. நீங்கள் குறிப்பிட்ட படி இளையராஜாவின் பல பாடல்கள் இந்த வகையை சார்ந்தவையே. எனவே நீங்கள் எண்பதுகளின் பாடல்களை கேட்டகாமல் இருந்ததில் பெரிய இழப்பொன்றும் இல்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் பார்த்தேன்... அருமையா இருந்தது...

நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

Anonymous said...

I have been reading your blog for a long time, especially for Puppu. Greatly inspired by your thoughts.
Thanks! - Raghothaman

தனிமரம் said...

80 பாடல்கள் ரசித்து உருகிப்பார்த்தால் புரியும் அதன் ஆணந்தம் எனக்கு சின்ன வயது என்றாலும் இன்னும் அந்தப்பாடல்கள் மய்க்கம் இன்னும் நினைவுகளில்!

Maya said...

Cinema paadalgal dhaan bestnu solla varalae. But neenga sonna karuthu is so not true. Apart from describing female body parts and whatever you have said...there are lots and lots of Raja songs that are there about samathuvam, amma paasam, and what not. Pen urumai appadingira perla, neenga solra ella thoughtsum correct kidayaadhu. It has nothing to do with it. i used to like your blogs a lot, not sure i like this one a bit. How can you generalize music lovers like us as just people who like such cheap songs. Karnatic music theriyaama, townla enna madhiri ilayaraja crazy fansa irukuravanga ellam, just female body parts, love idha mattum kettu dhaan valarndhomnu nenaikireengala. Medhavi thanam irukalam, but generalization of everyone is not fair.

Anonymous said...

நல்லவேளை, எனக்கு ஆயாவோ,அப்பத்தாவோ இல்லை!!

Anonymous said...

பதின்ம வயதின் இசை, அதனோடு தொடர்புள்ள காதல்,சோகம், நட்பு,கோபம் என்று அத்தனை உணர்வுகளும் உள்ளடக்கிய விஷயம். அது வெறும் பாட்டு இல்ல. ஒரு ஆத்மார்த்தமான உணர்வு. பெண்ணுடைய அங்கங்களை வர்ணிக்கும் அழகே அழகு பாட்டை கேட்டு இருக்கீங்களா? ராஜாவின் பாட்டு ஆத்மாவை தொடுவது. ம்ம் இசையை ரசிக்க ஒரு கொடுப்பினை வேணும்!.

மாற்றுப்பார்வை said...

அருமை