Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, June 01, 2015

'பிகு'வும் ஃப்ளாஷ்பேக்கும்

படம் பார்க்க பார்க்க, அமிதாப்பும் தீபிகாவும் மறைந்து நானும் ஆயாவுமே திரைக்குள் தெரிவது போல ஒரு உணர்வு. ஆயா, பத்து வருடங்கள் என்னோடு இருந்தார்கள். ஆனால்,நான் ஆயோவோடிருந்தது பதினேழு வருடங்கள்.

சிறுவயதில்,எனது ஒன்றரை வயதில் என்னை கையில் வாங்கிக்கொண்ட ஆயா...

பள்ளிக்காலம் வரை ஆயாவின் கையைப் பிடித்தே நான் வளர்ந்தேன். பதின்மத்தில் எதிரியாக தோன்றிய ஆயா, திருமணமான காலகட்டத்தில் ஒரு தோழியைப் போல அல்லது  வாகனங்களின் ஸஸ்பென்ஷனை போலவே எனக்கு இருந்தார்கள்.

எப்போதென்று தெரியவில்லை. ஒரு மருத்துவமனையில் காத்திருந்தபோது, இரண்டு பெண்மணிகள் எனக்கு பின் வரிசையில் பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதைகள்தான். அதில் ஒரு பெண் சொன்னது இப்போது வரை மறக்கமுடியாது.

'இந்த வயசானதுகள்ளாம் எப்படிதான் கத்துண்டுடறதோ தெரியலை... வாழைப்பழம் சாப்டாதான் ஆகும்னு..தினம் வாழைப்பழம் வேணும்னு மைன்ட்செட்'

ஆயா செய்த ரகளைகள் சொல்லி மாளாது.

 தினமும் மாலையில் ஆயா, தன் இரு மகள்களுடன் போனில் பேசுவார். மெயின் டாபிக் இதுவாகத்தான் இருக்கும்.  ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை கணக்கா 'போன் போட்டு குடு' 'போன் போட்டு குடு' என்று என்னை தொணப்பிவிட்டு...

போனில் என்னதான் டிப்ஸ் கொடுத்தாலும், ஆயா தான் செய்வதைத்தான் செய்வார். அதாவது, ஏதோ தேவாமிர்தம் கணக்காக அந்த பிங்க் கலர் மருந்தை அநாயசமாக இரண்டு மூன்று கப்கள் குடிப்பார். டாக்டர் சொன்னதென்னவோ ஒரு டீஸ்பூனாகத்தான் இருக்கும். இவர் குடிப்பதோ சில பல‌ டேபிள்ஸ்பூன்களாக‌ இருக்கும்.

விளைவு, அடுத்தநாள் காலையிலேயே ஆம்பூருக்கு போன் பறக்கும். அரரூட் கஞ்சியோ, ஜவ்வரிசி கஞ்சியோதான் அடுத்த வேளைக்கு. கடும் காப்பி மாதிரி கடும் டீ, ஒரு மஞ்சள் நிற மாத்திரி சகிதம் ஆயா உட்கார்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருந்தாலும், பெரும்பாலும் 'சொன்னா கேக்கலைல்ல' என்று தோன்றும்..

அன்று மாலை, மகள்களுடனான‌ போனில் -  இதற்கு பரிகாரமும், 'ஏம்மா இப்படி பண்ணீங்க..எல்லா ப்ரொட்டீனும் போயிருக்குமே' என்ற கதறலும் கேட்கும்.

ஆயாவுக்கான மருந்து மாத்திரைகளாஇ, அலுவலகத்திலிருந்து வரும் வழியில் நானே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். வழக்கமாக, மருந்து வாங்கும் கடையில் ,சமயத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகள் கிடைக்காது.அதனால், வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கடையில் மாற்று ஏற்பாடு செய்திருந்தேன்.

வாரயிறுதியில், யாரோ கதவை தட்ட திறந்தால், அந்த மருந்துக்கடைக்காரர். கையில், மருந்துகளுக்காக செய்யப்படும் ப்ரொவுன் நிற பை. பையில், நான்கைந்து மருந்து குப்பிகளின் தலை.

புரியாமல் விழிக்க, 'பாட்டிம்மாதான் போன்லே சொன்னாங்க' என்றார் அவர்.

 என்னவென்று நினைக்கிறீர்கள்?

அத்தனையும் க்ரிமாஃபின் குப்பிகள்.

இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, வாரத்துக்கு இரண்டு வாங்கி அலுத்துப்போன ஆயா, மருந்துக் கடைக்காரருக்கு செய்த பரோபகாரம்தான் இது.

'எதுக்கு அடிக்கடி வந்துக்கிட்டு..அதான் ஆறு பாட்டில் கொண்டுவர சொன்னேன்.'

அவரெதிரில் என்ன சொல்ல முடியும். மொத்தமாக காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒன்றை மட்டும் ஆயாவிடம் கொடுத்துவிட்டு, மீதி அனைத்தையும், எனது அறையில் வைத்துகொண்டேன்.

அதிலிருந்து, இரவுணவுக்குப் பின் க்ரிமாஃபின் கொடுப்பது எனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயா, கெஞ்சுவதை பார்த்தால் பாவமாக இருக்கும். அதை பார்த்தால் முடியுமா?

ஒரு டீஸ்பூனுன் கொடுத்தால் ஆயாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி இரண்டை வாங்கி குடித்துவிடுவார்.

'அதிகமாக குடித்தால் நல்லா போகும்னு யார் சொன்னது உங்களுக்கு? எத்தனை வாட்டி படுறீங்க? நீங்கதானே கஷ்டப்படறீங்க?'

ம்ஹூம்..இதெல்லாம் காதில் விழவே விழாது.வயதானால் எப்படிதான் இந்த அடம் வந்துவிடுமோ...பிகுவில், இந்த அடத்தை மிக அழகாக படம் பிடித்திருந்தார்கள்.

இந்த விஷயத்துக்காக, போனில் பஞ்சாயத்து. எப்படிதான் கறாராக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு ஒரு பாட்டிலை காலியாக்கி விடுவார்.

அமிதாப்பிற்கு,  'என்னால் முடியும். நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்' என்ற ஈகோ அதிகம் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை தாத்தாக்களுக்கு இருக்குமோ என்னவோ...ஆயாவிடம் அது இல்லை. மாறாக, அதீத தன்னம்பிக்கை உண்டு. நிறைய முறை, நிறைய வடிவத்தில் அனுபவப்பட்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் இவரை பார்த்ததும், 'ச்சேர் எடுத்துட்டுவரட்டுமா' என்று- வீல் சேர் கொண்டுவர‌ - ஓடும் பகதூரை ஒரு கையாலே அடக்கிவிடுவார். சிரமப்பட்டு அவர் ஏறுவதை பார்ப்பவர்கள், ஏதோ என்னை கல்நெஞ்சக்காரி போல எண்ணிக்கொள்வார்கள்.

ஒருமுறை, லங்க்ஸில் டீபி வந்து மிகுந்த சிரமப்பட்டார். தானாக‌ நடக்கக்கூட முடியவில்லை. நாம் கை பிடித்தால் விட்டுவிட்டு,  ஊனிக்கொண்டு எழுவார்.
அவராகத்தான், நம் கையை பிடித்துக்கொள்வார். அவர்தான், நம் கையை பிடித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில், ஆயா தனியாக இருக்கும்போது, நடக்க உபயோகமாக இருக்குமே என்று ஊன்றுகோல் வாங்கியிருந்தோம். அதனை சீண்டக்கூட இல்லை. வலிய, எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று டெமோ காட்ட, வாங்கியதற்காக, இரண்டொரு முறை அதனை எடுத்துக்கொண்டு நடந்தார். ஆம், அதனை ஊன்றாமல், கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தார்.

பழக்கமில்லாததால் இப்படி இருக்குமோ, சில நாட்களில் பழகிவிடும் என்று நினைத்த நாங்கள்தான் ஏமாளிகளானோம்.  இறுதிவரை, அதனை ஊன்றி ஆயா நடக்கவேயில்லை. அவர் இறுதியாக மருத்துவமனைக்கு சேரும் நாளுக்கு முன்பு கூட, எனது கைகளை பிடித்துக்கொண்டுதான் படுக்கைகயறைக்குச் சென்றார்.

அவருக்காக, நானும் பப்புவும், எங்களது படுக்கையை ஆயாவின் அறைக்கே மாற்றிக்கொண்டோம், . நடுஇரவில், அவர் விழித்துக்கொண்டால் எனக்கு விழிப்பு வந்துவிடும். பாத்ரூமுக்குச் சென்று திரும்புவரை 'பக்பக்'தான்.
இதற்கே இப்படியென்றால், அவரை விட்டுவிட்டு ஊருக்கு போவதைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல இரவுகள், அவரது வயிறு சீராக ஏறி இறங்குவதை பார்த்தபின்புதான் நிம்மதியாக எனக்கு தூக்கம் வரும்.

எந்த கோழி கூவுகிறதோ இல்லையோ, காலையில் டாணென்று  'ஐந்து மணிக்கு' எழுந்துவிடுவார். எங்கள் தலைகளுக்கு மேலாக நடந்து சென்று ஹாலில் லைட் போட்டு கதவுகளை திறந்து வைத்து அமர்ந்துக்கொள்வார். ஒரே பதில்.

'முழிப்பு வந்துடுச்சு'தான்.

 வெயில் காலத்தில் ஓகே. பனிக்காலத்திலும்...சளி வந்து திரும்ப டாக்டரிடம் ஓடு!

'ஏன் ஆயா, காலையிலே அப்படி கேட் வாக் செஞ்சு ஹால்லே உட்கார்ந்துக்க‌லைன்னாதான் என்ன? முழுச்சிட்டீங்கன்னா கண்ணை மூடிக்கிட்டு படுத்திருங்களேன்' என்றால், 'நாளைக்கு பார்க்கறேன்' என்பார்.

அந்த நாளை கடைசி வரை வரவேயில்லை. (கடைசி மாதங்களில், மருந்துகளாலோ அல்லது மருத்துவமனையிலிருந்து வந்த அயர்வாலோ சில நாட்கள் தூங்கியிருக்கிறார். )

 வீட்டில் தனக்கு தெரியாமல் எந்த விஷயங்களும் நடந்துவிடக்கூடாது என்ற உணர்வு எப்படிதான் எல்லா வயதானவர்களுக்கும் வருமோ!அவரது அறை இருந்தாலும், ஹாலில் சரியாக  நடுவில் அமர்ந்துக்கொள்வார். அவரைத்தாண்டி, யாரும், எதுவும் அந்த பக்கம் இந்த பக்கம் சென்றுவிட முடியாது.

மதியம் ஒரே ஒரு மாத்திரை தவிர, காலையும் மாலையும் கணிசமான மாத்திரைகள் இருந்தது, ஆயாவுக்கு. ஒவ்வொருநாளிரவும், கைகளில் வண்ண வண்ண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, 'இவ்வளோவும் சாப்பிடணுமா?கொஞ்சம் கம்மியா தரக்கூடதா, அந்த டாக்டர்' என்பார்.

"ஆயா, சந்தோஷப்படுங்க...இந்த மாத்திரையெல்லாம் கிடைக்குதேன்னு.. நம்மாள இந்த மாத்திரையெல்லாம் வாங்க முடியுதேன்னு. நீங்க இல்லேன்னா பப்புவை யார் பார்த்துக்குவாங்க...நீங்க ரொம்ப நாள் எங்ககூட இருக்கணும். அதுக்காகவாவது, இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க‌' என்று ஒவ்வொரு நாளிரவும் நானும் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.அமிதாப், மருந்துப்பெட்டியும் கையுமாக இருக்குபோதெல்லாம் இதுதான் நினைவுக்கு வந்தது.

வயதானவர்களுக்கு வரும் எல்லா குணங்களையும் - பிறத்தியார் மீது சந்தேகம்,அடம், சுயநலம்-  இதெல்லாம் காட்டினாலும், 'பிகு' காட்டாத முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அது மறதி.

கடந்தகால நினைவுகளெல்லாம் பல பசுமையாக இருக்க, சமீபத்தில் நடந்த அல்லது அன்றாட முக்கியமான‌ விஷயங்கள் மறந்துவிடுவது இருக்கிறதே!! க்ர்ர்ர்ர்ர்ர்....

மண்டேலா எப்போது விடுதலையானார், நீல் சிலை அகற்றியது எப்போது, பிரேமதாசா செத்துப்போனது எப்போது, கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவை வழிநடத்தி சென்றது யார் என்பதெல்லாம் சரியாக நினைவிருக்க, வீட்டை உள்ளுக்குள் பூட்டிகொண்டு சாவியை எங்கே வைத்தோமென்று மறந்துவிடும்.

இத்தனைக்கும், அவருக்கெதிரே இருக்கும் சிறுமேஜையில்தான் இருக்கும். புத்தகத்தை படித்துவிட்டு, அதன் மேலே வைத்துவிட்டு, சாவி மாட்டும் இடத்தில் தேடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை, அலுவலகத்திலிருக்கும்போது போன்.

பப்புவும், பப்புவை பார்த்துகொள்ள வருபவரும் வெளியில் இருக்க ஆயா, சாவியை மறந்துவிட்டு நெடுநேரமாக தேடிகொண்டிருக்கிறார் என்று. ஆயாவுக்கு போனடித்தாலோ, 'நீ வர்றியாமா' என்கிறார்.

வெளியிலோ, அந்த அம்மாவுக்கு பதட்டம்.  தட்டுத்தடுமாறி ஆயாவே எப்படியோ தேடி எடுத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் சோபாவுக்கு கீழே கிடந்திருக்கிறது சாவி. மேஜையிலிருந்து எப்படியோ சாவி சோபாவுக்கு கீழே விழுந்திருக்கிறது.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து அதனை தேடியெடுப்பதற்குள், என்னை ஒரு வழி செய்துவிட்டார்கள். அவர்கள் அங்கு அனுபவித்த அத்தனை பதட்டத்தையும், இங்கே அலுவலகத்தில் அமர்ந்தபடி நானும் அனுபவித்திருந்தேன்.

இன்னொரு முறை.

 +2 முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தார் உறவுக்கார பெண். பப்பு ஏதோ கேட்டாளென்று கடைக்கு இருவரும் போக, சற்று நேரமாகிவிட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு புதிய ஊர். திரும்பி வரும் வழி தெரியவில்லையோ என்னவோ... இருவரையும்,காணவில்லை. பத்துநிமிடத்தில் எனக்கு போன். 'இருவரையும் காணவில்லை'

'வந்துடுவாங்க, ஆயா' என்ற எனது பதிலுக்கு ஆயா சமாதானமாகவில்லை.

'இப்போவரைக்கும் வரலை. உடனே புறப்பட்டு வா. '

எப்படி வண்டிஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனக்கு புரிந்ததில்லை. நான் போகவும், அவர்கள் வரவும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் ஆகிவிட்டது உண்மைதான்.

பப்புவை அப்போது கவனித்துக்கொண்ட 'சகுந்தலா அம்மா'வின் வீடு எனக்கு தெரியும் என்றாளாம் பப்பு. அங்கே போய்விட்டு வந்தார்களாம். என்னத்த சொல்ல!!

'ஆச்சி வராம‌ எங்கியும் நீங்க போகக்கூடாது' என்று  இருவருக்கும் வீட்டுக்காவல்.

அந்த நேரம் கோபமாக இருக்கும். ஒன்றும் சொல்லவும் முடியாது. சமயங்களில், கடுமையாக நடந்துக்கொள்வேன். சொல்லிவிட்டாலும், நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?! என்ன சொன்னாலும், அமைதியாக வேறு இருப்பார். அந்த கண்களில் தெரியும் ஏதோ ஒன்று, என்னை போட்டு கொன்றெடுக்கும். கோபித்துக்கொள்ளவே முடியாது.

என் சிறுவயதில், அவர் என் கைகளை கெட்டியாக பிடித்தவாறு பயணித்தது நினைவிலாடும். பென்ஷன் வாங்க சென்றாலும் சரி, உறவினர் வீட்டுக்குச் சென்றாலும் சரி, நெய்வேலியோ, திருவண்ணாமலையோ, கடலூரோ....  வேலூர் பஸ்ஸ்டாண்டில் அவருக்கு செய்தித்தாளும், இதழ்களும் வாங்கிக்கொண்டு எனக்கு கோகுலம் வாங்கிகொடுத்துவிட்டு விடுவிடென்று நடக்கும் ஆயா....ஒரு கையில் என்னையும், இன்னொரு கையில் குடையும் பிடித்துக்கொண்டு நடக்கும் ஆயா...

'பிகு'வில் அவள் கடைசியாக அந்த மருந்துப்பெட்டியோடு இருக்கும் சில நிமிடங்கள்...

கொடுமையான வலி அது. எல்லாமும் இருக்கும்... அவர்களுக்கான மருந்து, மாத்திரை, உபகரணங்கள்,படுக்கை, வாசிக்க இதழ்கள்,காலண்டர், கடிகாரம், அழைப்புமணி,பிளாஸ்க்... ஆனால்,  அவர்கள் மட்டும் இல்லாத, அவரது இழப்பை,வெறுமையை உணரும் தருணங்கள் இருக்கிறதே...

அதை விட்டு இன்று வரை என்னால் கடந்துவர இயலவில்லை. தூரத்திலிருப்பவர்களை விட, கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர்களில் வலியும், இழப்பும் அதிகம். எங்களால், இன்னமும் எங்களது அறைக்கு மீண்டு வரமுடியவில்லை.

அவரில்லாமல், நாங்கள் கடந்த முதல் மாதம். சமையல்  சிலிண்டர் வந்திருக்கிறது. கையில் காசில்லை. ஏடிஎம் சென்று எடுத்து வருமளவுக்கு அந்த பையன் காத்திருக்க மாட்டான்.  ஒவ்வொரு மாதமும், சிலிண்டர் வந்த தேதியை ஆயா குறித்து வைப்பார். அடுத்த சிலிண்டர் வருவதற்கு, உடனடியாக என்னிடம், காசு வாங்கி புத்தகத்தில் வைத்துவிடுவார். புத்தகத்தையும், காசையும் எடுத்து அந்த பையனிடம் கொடுக்க வேண்டியதுதான். அவன் முன்னால், பர்சை தேடி தடவ வேண்டியதில்லை. ஆயாவின் இழப்பை, கூர்மையாக எனக்கு உணர்த்திய சம்பவம் இது. பர்ஃபெக்ஷன் என்றால் ஆயா!

ஆயாவுக்கு எதிரில் எப்போதும் ஒரு காலன்டர் இருக்க வேண்டும். அவருக்காக மாட்டிய அந்த காலன்டரை இப்போது வரை அவிழ்க்க மனமில்லாமல் வைத்திருக்கிறேன்.  சுத்தப்படுத்தும்போதெல்லாம், அதை மட்டும் கண்டும் காணாமல் போகிறேன்.

அவரது அலமாரி கதவுகள், காற்றில் திறக்கும்போதெல்லாம், 'இன்டர்ஸ்டெல்லாரை' நினைவு கொள்கிறேன். பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், அந்த நினைவு ஒரு ஆசுவாசத்தை, நிம்மதியை, மெல்லிய புன்னகையை தருவதை உணர்கிறேன்.

நான்தான் இப்படியென்றால், பப்பு அதற்கு மேல்.
இசபெல்லா மருத்துவமனையை ஒருமுறை கடந்து செல்லும்போது, ஆயா ஏதோ அங்கேயே இருப்பதுபோல், இப்போது போய் அழைத்துவந்துவிடலாம் போல தோன்றியது. மனதுள் தோன்றிய அதே நிமிடம், பப்பு 'ஆயா உள்ளே இருப்பாங்களா ஆச்சி? ' என்றாள்.

ஆயா சென்று நீண்ட நாட்களுக்குப் பின் நடந்தது இது. ஆயாவின் அறையில்தான் அப்போதும் தூக்கம்.ஆனாலும், ஆயாவின் பாத்ரூமை அவர் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, தவிர வேறுயாரும் உபயோகப்படுத்துவதில்லை.

கரண்ட் கட்டான ஒரு நள்ளிரவில், அவளை ஆயாவின் அறையிலிருக்கும் பாத்ரூமையே உபயோகப்படுத்துக்கொள்ள சொன்னேன். கதவை திறந்து உள்ளே சென்ற சில நிமிடங்களில், அவள் சொன்னது இது.

"ஆயா, எனக்கு தெரியும், நீங்க இங்கேதான் எங்கியோ இருக்கீங்க'.

:-)

Saturday, March 28, 2015

சின்ட்ரெல்லா (2015) படத்தின் குறியீடுகளை கண்டுபிடிப்பதெப்படி?

"ஆச்சி, அந்த ஃபெய்ரி காட் மதர் வந்து ,ஃப்ர்ஸ்ட், எலா கிட்டா கேக்க மாட்டாங்க. ஃபர்ஸ்ட் அந்த ஸ்டெப் சிஸ்டர்ஸ்கிட்டே கேப்பாங்க. அவங்க குடுக்க மாட்டாங்க. அப்புறம்தான், ஃபெய்ரி காட்மதர், எலா கிட்டே கேப்பாங்க. " - பப்பு

"ஓ..இது எங்கே வந்துச்சு? நான் பார்க்கலையே? மிஸ் பண்ணிட்டேனா?"

"இல்லே..நான் சொல்றேன்..." - பப்பு

"ம்ம்..நீ முன்னாடியே பார்த்துட்டியா? யூ ட்யூப் ட்ரெய்லர்லே வந்துச்சா?"

(ஏன் அப்படி கேட்டேன்னா, அடுப்பு பக்கத்துலே படுக்கிற காட்சி வரும்போது, 'அவ மேலே சின்டர்லாம் படும். அதனாலேதான் அவ பேரு சின்டரெல்லாம்'ன்னு சொல்லியிருந்தா. அதனாலே டவுட். ):):)

"ம்ம்ம்...என் மைன்ட்லே வந்துச்சு...அதுக்குதான் உனக்கு சொல்லக்கூடாது. எங்க க்ளாஸ்லேயே, ஸ்கூல்லயே நாந்தான் இந்த மூவியை ஃப்ர்ஸ்ட் பார்த்துருக்கேன்" - பப்பு.

கட்.....

ஆட்டோவில் ஏறியதும்,

"ஆச்சி, ஆக்சுவலா அந்த ஸ்டெப் மதர் நல்லவங்கதான். க்ரூயல் கிடையாது. அவங்க ஃப்ர்ஸ்ட் அந்த வீட்டுக்கு வந்ததும், நல்லா எல்லார்க்கிட்டேயும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க இல்லே." - பப்பு

"ம்ம்..ஆமா..ஆனா, அவங்க எலாகிட்டே நல்லா நடந்துக்கலையே?"

"அதான்..அதுக்கு அடுத்து என்னா நடக்கும்? எலாவோட அப்பா ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லா சொல்வாரு? டோன்ட் ஃபுல்லி டிபென்ட் ஆன் தெம். அப்புறம், அவங்க அம்மாவையும்,வீட்டை பத்தியும்தானே சொல்றாரு.அதை ஸ்டெப்மதர் ஓவர்ஹியர் பண்றாங்க இல்லே? " - பப்பு

"ஆமா?"

"அப்போ, How would she feel? she will feel bad know? ஆக்சுவலா அப்போ கூட கெட்டவங்களா மாறலை"

"ம்ம்?"

"அவங்க அப்பா எலாக்கு மட்டும் அந்த பிராஞ்ச் குடுத்து அனுப்புவாரு இல்லே. அப்போ, அவங்க ஸ்பெட் சிஸ்டர்ஸ்,எனக்கு பேரசால்ன்னு கேப்பாங்கன்னு இல்லே. " - பப்பு

"ம்ம்ம்"

"அப்போ, அவங்க அம்மாவுக்கு எப்படி இருக்கும்? அதனாலேதான் அவங்க எலாக்கிட்டே அப்படி நடந்துக்கறாங்க. உனக்கு புரியலையா ?" -பப்பு

"ம்ம்..இல்லேப்பா...நீ சொன்னப்புறம்தான் புரியுது"

"இப்போ, நான் இருக்கேன். இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க. அப்போ, அவங்களுக்கு மட்டும் குடுத்துட்டு, எனக்கு நான் கேட்டது கொடுக்கலைன்னா உனக்கு எப்படி இருக்கும்?அதுமாதிரிதான்." - பப்பு

"ம்ம்..உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?  க்ளாஸ்லே டிஸ்கஸ்...  ஹேய்..ஸ்கூல்ல ஃப்ரென்ட்ஸ் கதை சொன்னாங்களா?"

"ம்ம்...உனக்கு சொல்லியிருக்கவே கூடாது. நீ புரிஞ்சுக்காமயே கிடன்னு விட்டிருக்கணும்." - பப்பு

கட்.....


"உனக்கு, ஏன் அந்த ஃபெய்ரி காட் மதர், பால் குடிக்கும்போது கீழேல்லாம் விழுந்துச்சுன்னு தெரியுமா?" - பப்பு

"வேகமா பசியிலே அவசரமா குடிச்சா அப்படிதான் விழும்."

"எல்லாருக்கும் அப்படிதான் விழுமா? நமக்கு அப்படிதான் விழுதா?" - பப்பு

"ஆமா,  நாம ரொம்ப தாகமா இருக்கும்போது தம்ளர்லே,பாட்டில்லேருந்து குடிக்கிறோம். மேலேல்லாம் கொட்டிக்கறோம் இல்லே...அதுமாதிரிதான்"

"இல்லே...அது உனக்கு புரியலை. Fairy god mother was not hungry. she was checking her kindness.  அதனாலேதான், அது வாயிலேருந்து விழுது" - பப்பு

"ஓ...ஆமா, பப்பு, இப்போதான் புரியுது. இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?"

அப்புறம், அவ பார்த்த பார்வையிலே வீடு வரைக்கும் யாருமே பேசிக்கலை. :))

வீட்டுக்கு வந்து இன்னொரு பல்பும் வாங்கினேன். எப்படி அந்த ஸ்டெப்மதர் கரெக்டா அவளோட ஷூவை எடுத்தாங்கன்றதை பத்தி. அதெல்லாம் இங்கு விலாவரியாக சொல்லப்படமாட்டாது.

*****

இதனால், அறியப்படும் நீதி,தற்போது வந்திருக்கும் "சின்ட்ரெல்லா"  புதிய‌ படத்தை உங்கள் ஏழு வயதுக்கு மேலிருக்கும் 'பெண்' குழந்தைகளோடு கண்டு களிக்கவும்.. பார்த்துவிட்டு, உங்களுக்கு புரியாத காட்சிகளை அவர்கள் விளக்கி னால், தயவுசெய்து ஒளிவுமறைவு இல்லாது அந்த பல்புகளை ப்ளஸ் விட்டு  பிரகாசமாக‌ எரிய வைக்கவும்.ஹிஹி

 

மற்றபடி, படத்தை பற்றி என்ன சொல்ல? தெரிந்த கதைதானே! 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பிய வாழ்க்கையின் அழகான தருணங்களை  மட்டும் நேரில் காண்பது போல இருக்கிறது. 'பால்' நடனத்தின் போதும் சரி,ட்யூக்கினுடனான பேச்சுகளும் திட்டங்களும் சரி, மாற்றாந்தாயின் பல்வித உணர்ச்சிகளை கண்டபோது, நான் புரிந்துக்கொண்டது, தற்கால அம்மாக்களின் குழந்தைகளைக் குறித்த பதட்டமும்,கவலையும் கொஞ்சமும் புதிதல்ல, அது  சின்ட்ரெல்லா காலத்து பழமையானது என்பதுதான். :‍)

Monday, February 23, 2015

மித்ராவந்தி‍‍‍--GoneGirl--மௌனத்தின் குரல்

தூத்துக்குடியிலிருந்து வந்த பெரிம்மாவை, பிக்கப் செய்ய மின்ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தேன்.காலை நேரம். பூக்கடைகள், காய்கறி கடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறத்துவங்கியிருந்தன.  புத்தம் புதிதாக மலர்ந்த மலர்களையும், தொடுக்கப்பட்டிருந்த சரங்களையும் ரசித்தபடி ஒரு பூக்கடையின் ஓரம் ஒதுங்கினேன். பூக்கடைக்கு பின்னாலிருந்த டீக்கடையிலிருந்து வந்த ஒருவர்,

"என்னம்மா? திரும்பவும் ஒண்ணாயிட்டீங்க போல? நேத்து சமாதானமாயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்?"

அதற்கு, அந்த பூக்காரம்மா சொன்னது பதில் யதார்த்தமான பதில்தான். ஆனால், முகத்தில் அறைகிற யதார்த்தம்!

"ஆமா...என்ன பண்றது? சண்டையும், சந்தோஷமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒருநாள் முடியை பிடுச்சு இழுக்கறான்...அடுத்த நாள் ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசறான். அதுக்காக என்ன விவாகரத்தா நாம பண்ண முடியும்? ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ பண்ணிடறாங்க... பொண்டாட்டிய..அதல்லாம் பார்க்கும் போது....இப்படியே ஓட்ட வேண்டியதுதான்"

வரும்வழியிலெல்லாம், அந்த பெண்ணின் பதிலையே என் மனம்  திரும்ப திரும்ப சவைத்துக்கொண்டிருந்தது.

"வச்சி ஓட்டுயெம்மா"

கண்மணி குணசேகரனின் ஒரு கதை அது.  கோபக்கார கணவனுக்கு வாழ்க்கைப்படும் ஒரு  பெண். திருமணமாகி, மறுவீடாக  அம்மா வீட்டுக்கு வந்திருப்பாள். கிளம்ப தாமதமாகி விட, கோபத்தில் எல்லார் முன்னாடியும் திட்டிவிட்டு தனியாக கிளம்பி சென்றுவிடுவான் அவன். விதிர்விதிர்த்து போய் நிற்கும் மகளிடம், தாய் சொல்லும் வார்த்தைகள் இவை.

"வச்சி ஓட்டுயெம்மா"

ரொம்ப நாட்களுக்கு, என்னை தொந்திரவு செய்த வார்த்தைகள் அவை.

இந்த நாட்டில், நிறைய பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே ஆப்சன் அதுதான் இல்லையா?!

தில்லி 6யில் வரும் 'சசூரால் கெந்தா ஃபூல்' பாடலை கேட்கும் போதெல்லாம் சசி தேஷ்பாண்டே நாவல்தான் நினைவுக்கு வரும். ஒரு மருமகள், தன் புகுந்த வீட்டை ஒரு அடுக்கு சாமந்தியோடு ஒப்பிட்டு பாடும் நாட்டுப்புற பாடல் அது. சாமந்தியை பொதுவாக யாரும் பார்த்தவுடன் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், அதன் மணம் பழக பழக பூவை  விரும்பத் தொடங்கிவிடுவார்கள். அதன் ஒவ்வொரு மடல்களும் ஒவ்வொருவிதம். அதைப்போல், புகுந்த வீட்டிலும் பலவித மனிதர்கள்...ஒவ்வொரு வீட்டுக்கும் பலவித பக்கங்கள்...
இந்த சின்னஞ்சிறு பாடல் நமது இந்திய கூட்டுக் குடும்பங்களை, அதன் பல்வேறு முகங்களை, அதில் புதிதாக வந்து சேரும் பெண்ணின் நிலையை வெகு எளிதாக குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டிவிடும்.

அந்த பாடலை நினைவூட்டிய புத்தகம், இந்த புத்தக சந்தையில் வாங்கிய  மித்ராவந்தி. குறுநாவல்தான். ஒரு கூட்டு குடும்பதான் கதைக்களம். மூன்று மகன்கள். மருமகள்கள். மித்ராவந்தி, இளைய மருமகள். கொஞ்சம் குறும்புக்காரி. கள்ளம் கபடமின்றி தெருக்காரர்களிடம் முக்கியமாக ஆண்களோடு பழகுவது, குடும்பத்தினருக்கு சங்கடத்தை தருகிறது.

அதன்காரணமாக,அவ்வப்போது சண்டையும் முள்கிறது. நன்றாக உடுத்திக்கொள்கிறாள், அலங்கரித்துக் கொள்கிறாள், மற்றவர்கள் மீது தன் கவனம் திரும்பும்படி நடந்துக்கொள்கிறாள் என்று தன்மீது குவியும் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக, 'தன் கணவன் தன்னை கண்டுக் கொள்வதில்லை' என்று குடும்பத்தினரிடம் கூறுகிறாள், மித்ராவந்தி. இதனால், மித்ராவந்தியின் கணவனுக்கே பூசை கிட்டுகிறது.

திருமணமாகி சென்றிருக்கும் அந்த வீட்டின் மகள், குழந்தைப்பேறுக்காக வீடு திரும்புகிறாள். இதனால், மித்ராவந்திக்கு தன் தாய்வீட்டுக்கு செல்ல அவகாசம் கிடைக்கிறது. கணவனோடு, தாய் வீட்டுக்கு செல்கிறாள் மித்ராவந்தி. கணவன் மீது அவளது தாய்க்கு இருக்கும் மோகத்தை கணநேரத்தில் கண்டுக்கொள்ளும் மித்ராவந்தி தன் வாழ்க்கையை எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை.

தன்னை மதிக்காத கணவனாக இருந்தாலும்,'அவன் தன்னை கவனிப்பதில்லை' என்று வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தாலும், கணவனை சாகுந்தலையாக மீட்டு வாழ்ந்து தீர்க்க வேண்டிய தலையெழுத்து இந்திய பெண்களுக்கு மட்டுமில்லை, அமெரிக்க பெண்களுக்கும் இருக்கிறது போலும் என்று உணர்த்தியது "Gone Girl" படம்.

அதே சமயம், எல்லாவற்றையும் ஏற்றுகொண்டு  மௌனத்தின் குரலாகவோ அல்லது சாமந்தி பூவின் மடல்களை உருவகப்படுத்திக் கொண்டுயோ வாழ்ந்து தீர்க்க தேவையில்லை. தன் கனவுகளை, ஆசைகளை, எதிர்காலத்தை, வாழ்க்கையை சிதைத்த கணவனை தண்டிக்கலாம், தப்பில்லை என்றும் இந்த படம் சொல்வதாகவும் கொள்ளலாம்.

நண்பர்களின் மூலமாக கிடைத்த காப்பிதான். பொதுவாக, தமிழ் மட்டும் குட்டீஸ் படங்களைத்தான் சேமிப்பேன். 'ஆங்கிலம்' என்ற போல்டருக்குள் நுழைந்தபோது தலைப்பு ஈர்க்க வாரயிறுதிக்காக சேமித்துக்கொண்டேன். நெட்டிலும் படத்தைப் பற்றி எந்த  விமர்சனத்தையும் வாசிக்க வில்லை. ஞாயிறு மதிய சோம்பலுக்கு ஏற்றது போல, மெதுவாகத்தான் ஆரம்பித்தது.  விளையாட்டு போல அந்த  'க்ளூ' குறிப்புகள் படத்தை சூடு பிடிக்க வைக்கிறது.

இறுதியில், இவை எல்லாமே ஏமி திட்டமிட்ட செய்ததுதான் என்பது தெரிய ஆரம்பிக்கும் நொடிதான் இருக்கிறதே!! ஏமி உயிரோடு இருப்பாள் என்று தோன்றாதபோது, அவள் காரில் பறக்கும் நொடி 'ஜிவ்' வென்றிருக்கிறது. திருமண வாழ்க்கையில் நம்பிக்கையை சிதைத்தற்கு, ஏமாற்றிய தற்கெல்லாம் பெரிய தண்டனைகள் கிடையாது. ஏன், தண்டனைகள் வேண்டாம், ஒரு குற்றச்சாட்டாகக் கூட வெளியில் சொல்லமுடியாது.

தண்டனைகள் கிடைக்க  வன்முறை நடந்திருக்க வேண்டும். அடி, உதை, சூடு என்று கண்ணில் படுமளவுக்கு வன்முறைகளுக்கான சான்றுகள் இருந்தாலொழிய, தண்டனைகள் கிடைப்பது வெகு அரிது. சசி தேஷ்பாண்டே, 'மௌனத்தின் குரல்' நாவல் மூலம் வெகு அழகாக உணர்த்தியிருப்பார்.

நாவலை வாசித்து இருவருடங்கள் இருக்கும். வாசித்த போதே, நாவலை மூடி வைத்ததும், அதில் ஒன்றியது போலிருந்த அல்லது  பாதித்த விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆனால், அதில் அவர் சொல்லி யிருக்கும் ஒவ்வொன்றும் கனமான விஷயங்கள். நாவலில் அவர்  சொல்லியிருக்கும் பிரச்சினைகளும், காரணங்களும் நமது அம்மாக்களின், அக்காக்களின், அண்ணிகளின் ஏன் தெரிந்த எல்லா பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை.

 இருந்தாலும், எந்த பெண்ணும் தன்னை ஏமாற்றியதற்காக , பொய் சொன்னதற்காகவோ, சீண்டப்பட்டதற்காகவோ அல்லது தன் விருப்பு வெறுப்புகளை கிஞ்சித்தும் மதிக்காகதற்காகவோ அல்லது தனது அடை யாளங்களைஅழித்ததற்காகவோ எந்த கணவனையும் தண்டித்துவிடவில்லைதானே!

எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக பிறந்த வீட்டில் வாழ்ந்திருந்தாலும், புகுந்த வீட்டிற்கு வந்தபின் தன்னை அவர்களுக்காக அல்லது திருமண வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக்கொண்டு 'வச்சி ஓட்டுவதுதானே'  யதார்த்தம். தனது சுயத்தை அழிப்பதை யாரும் கொலை என்று எண்ணுவதில்லையே!

அதிலிருந்து மாறுபட்டிருந்ததுதான், இந்த படம் எனை ஈர்த்தது போலும்!கதை அல்லது நாவல்தான் என்றாலும், இவ்வளவு நுட்பமாக, இழை கூட பிசகாமல் திட்டமிட்டு கணவனை சட்டத்தின் பிடிக்குள் மாட்டிவிட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. தனது அடையாளங்களை மறைத்துவிட்டு வேறு ஊரில் வாழும் ஏமி, பணம் பிடுங்கும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு அவளுக்கு ஏற்படும் கையறு நிலை!

உடனடியாக, அதிலிருந்து  மீண்டு  வந்து, அவள் மீது காதல் கொண்ட கொலீன்சோடு தொடர்பு கொள்கிறாள். அவனது தொல்லை அத்துமீறும்போது, அவனை போட்டுத்தள்ளவும் அவள் தயங்கவில்லை. அதுதான், ஏற்றுக் கொள்ள முடியாமல், 'அவள் என்ன, மனநோயாளியா' என்று எண்ண வைத்தது.  

ஆனால், அந்த பூக்கார அக்கா சொல்வது போல, 'ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ  பண்ணிடறாங்க... பொண்டாட்டிய... அதல்லாம் பார்க்கும் போது'....இதுவும் சரிதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். இறுதியில், 'அவள் திரும்பி வந்தால் போதும்' என்று அவளது கணவன் மீடியா மற்றும் மக்கள் அனு தாபத்துக்காக சொல்லும்போது, சரியாக அவனது கைகளில் வந்து விழுகிறாள். திருமண பந்தத்தை காப்பாற்றுகிறாள். 

படத்தில், மிகவும் பிடித்ததே, ஒவ்வொன்றையும் அவள் திட்டமிட்டு செய்வதும், அந்த புதிர்  பாணியிலான குறிப்புகளும், எந்த அழுத்தங்களுக்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ள போராடுவதும், அதனை மீட்டெடுப்பதும்தான். அமெரிக்காவிலாவது, மீடியாவில் தான் சொல்லிவிட்ட‌ வார்த்தைக்காக கட்டுப்படுகிறார்கள். இங்கோ சுனந்த புஷ்கரின் மரணதின் விடுகதையே இன்னும் அவிழ்க்கப்படவில்லை!

குறிப்பு:படத்தில் நெருக்கமான உடலுறவு காட்சிகளும், பகீர் கிளப்பும் கொலை மற்றும் ரத்தக்காட்சிகள் உண்டு.

Monday, December 22, 2014

தேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்தியாய‌


கல்கத்தா பயணத்தின்போது இரண்டு நடைபயணங்களை தேர்ந்தெடுத்திருந்தோம். ஒன்று, ஹூக்ளி நதிவழியே, கடவுள்கள் உருவாகும் இடம், ஆங்கிலேய ஆட்சியின் நினைவுத்தடங்கள், கல்கத்தாவின் மாடமாளிகைகள் மற்றும் சிறிதும் பெரிதுமான கல்கத்தாவின் பழங்கால கடைத்தெருக்கள், இஸ்லாமிய பக்கம், கல்கத்தாவின் சீனா. இதில், முதலில் சென்ற நடைபயணத்தில் கல்கத்தா பாபுக்களின்  மாடமாளிகைகளையும் கோபுரங்களையும் நேரில் கண்டோம். ஒரு சில மாளிகைகள் இன்றுவரை  நன்றாக பராமரிக்கப்பட்டிருக்க, பெரும்பாலானவை சிதிலமடைந்தும், களையிழந்தும் காணப்பட்டன‌.

 
பெரிய பெரிய தூண்கள், விக்டோரிய அமைப்பிலான முகப்புகள், தளங்களாக பிரிக்கப்பட்டு உள்ளே இன்னும் உள்ளே என செல்லும் அறைகள், பெரிய முற்றம், யானைகள் பராமரிக்க தனி இடம் என்று இந்த மாளிகைகள் ஒவ்வொன்றும் ஆடம்பரமானவை. கிட்டதட்ட, நமது காரைக்குடி வீடுகள் போல.


ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றிய காலம். கல்கத்தாவில் ஆங்கிலேய  ஆதிக்கம் வலுப்பெற்றபோது, அதன் வழியாக செல்வாக்கு மிக்கவர்களாக சில வங்காளிகள் உருவானார்கள்.வணிக ரீதியாக பிரிட்ஷாருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியவர்கள்.          அந்த வங்காளிகளே  கல்கத்தா பாபுக்கள் என அறியப்பட்டார்கள். கிட்டதட்ட, ஒரு ஐரோப்பிய ஜமீந்தார்களைப்போல வாழ்ந்திருக்கிறார்கள்.


கல்கத்தா பாபு என்றாலே, எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது தேவதாஸ்தான். முக்கியமாக ஷாருக்கானுக்காகவும், போனாப்போகுதென்று ஐஸ்வரியாவுக்காகவும் பார்த்த படம். படம் பார்ப்பதற்கு முன்புவரை, 'தேவதாஸ்' என்றால் காதலுக்காக உருகி மருகி பைத்தியக்காரனாக ஆனவன் என்பதே மனதுக்குள் இருந்த பிம்பம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்ததும் அதுதான்.

மனிதனாகக்கூட, மதிக்க தகுதி இல்லாத, தன்னைப்பற்றிய எந்த நினைவும் இல்லாத குடியிலே அழிந்து போன  கிறுக்கனாகத்தான் தேவதாஸ் கதாபாத்திரம் எனக்குள் இருந்தது.சோபை இழந்துபோன , அந்த பழங்கால மாளிகைகளை கண்டபோது, ஒவ்வொன்றும் எனக்கு தேவதாஸின் வீட்டையே நினைவுபடுத்தின.  தேவதாஸின் குடும்பம் ஒரு அச்சு அசலான கல்கத்தா பாபு குடும்பம்.

சமீபத்தில்தான், சரத் சந்திர சட்டோபாத்தியாய எழுதிய தேவதாஸ் ஒரிஜினல் புத்தகத்தை (தமிழில்) வாசித்தேன்.  இந்த புத்தகம், நான் பார்த்த தேவதாஸ் படத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது.  :‍)

பள்ளி செல்லும் சிறுவனாக அறிமுகமாகிறான்  தேவதாஸ்.  அநேகமாக பத்து வயதிருக்கும் அவனுக்கு அப்போது.பள்ளிக்கூடம் அவனை ஈர்க்கவே இல்லை. பிரம்பு வைத்திருக்கும் வாத்தியார், தண்டனைகள், மணங்கு சேர் கணக்குகள் என்று பள்ளியை வெறுக்க அவனுக்கு போதுமான காரணங்கள் இருந்தன.   பக்கத்துவீட்டு சிறுமி பார்வதி. அவன் என்ன சொன்னாலும் கேட்பவளாக, அவன் பின் தொடர்ந்து வருபவளாகவே இருக்கிறாள். ஒருநாள், கூடப்படிக்கும் சிறுவனை, தேவதாஸ் மண்ணில் தள்ளிவிட்டுவிடுகிறான். ஆசிரியருக்கும், தந்தைக்கும் பயந்து  தோப்பில் சென்று பதுங்கிக் கொள்கிறான். அது அவனுக்கான தனியான இடம். ஹூக்கா பிடிக்கவும், மரம் ஏறவுமான இடம். பார்வதி அந்த இடத்தை அறிந்தவளாக இருக்கிறாள்.

பள்ளியில் நடந்ததை, ஆசிரியர் தந்தையிடம் வந்து சொல்கிறார். பார்வதி மூலமாக, தேவதாஸ் தோப்பில் இருப்பதும், ஹூக்கா பிடிப்பதும் தந்தைக்கு தெரியவருகிறது.  வைத்து விளாசிவிடுகிறார்.   பார்வதி மீது கோபம் கொண்ட தேவதாஸ், அவளிடமும் முரட்டுத்தனத்தை காட்டுகிறான். அடி வாங்கிக் கொண்டாலும் பார்வதி, அவனிடம் நட்பாகவே இருக்கிறாள். தேவதாஸ் இல்லாத பள்ளிக்கூடத்துக்கு  செல்லவே அவளுக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை, மீன் பிடிக்க செல்லும் தேவதாஸுக்கு உதவியாக செல்கிறாள். கிளையின் ஒரு முனையை அவளை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அதன் அடுத்த முனையில் தொங்கிக்கொண்டு மீன் பிடிக்கிறான், தேவதாஸ். ஏதோ ஒரு கணத்தில், பார்வதி  விட்டுவிட, கீழே விழுந்து அடிபடுகிறான் தேவதாஸ். அதற்காக, பார்வதியின் நெற்றியில், தூண்டிலால் அடிக்க, முன்நெற்றியில் காயமேற்படுகிறது. பாட்டியும் அம்மாவும் கேட்கும்போது, ஆசிரியர் அடித்ததாக சொல்லிவிட அதிலிருந்து பார்வதி பள்ளிக்கூடத்துக்கு செல்வது தடைபடுகிறது. இப்படி பாதி புத்தகம் முழுவதும், சிறுவயது விளையாட்டும், நட்பும், சண்டையுமாக இருக்கிறது.

கல்கத்தா செல்லும் தேவதாஸ், ஆரம்பத்தில் பாருவுக்கு கடிதங்கள் எழுதுகிறான். அதன்பின், கல்கத்தாவாசியாகவே மாறிவிடுகிறான். தனிமையை உணரும் பார்வதி, மீண்டும் கல்வியை தொடரவிரும்புகிறாள்.  ஒருகட்டத்தில், பார்வதியின் திருமணத்தை நடத்திவிட அவளது குடும்பம் மணமகனை தேடுகிறது.

படத்தில் வருவதைப்போல, தேவதாஸின் தாய்க்கும், பாரூவின் தாய்க்கும் சபதமெல்லாம் நடப்பதில்லை. குத்தல் பேச்சுகளும் இல்லை. பாரூவின் குடும்பத்தை, 'சாதாரண குடும்பம், விற்று வாங்கி என்று' என்றுதான் தேவதாஸீன் குடும்பம் நினைக்கிறது. தேவதாஸுக்கு, பார்வதியை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் வரும்போதும் 'பெற்றோர் என்ன நினைப்பார்கள், விற்று வாங்கி என்று' என்று நினைக்கிறான்.

ஒரு இரவில், தேவதாசை தேடி பார்வதி அவனது அறைக்கு வருகிறாள். யாருக்காவது தெரிந்தால், அதில் அவமானமடைவது அவளாகத்தான் இருக்கும் என்றாலும், தேடி வருகிறாள். தேவதாஸ், தைரியமின்றி அவளை  திருப்பி அனுப்பிவிடுகிறான். ஒருவேளை, இருவரும் எங்காவது சென்றிருந்தால், கதை வேறுமாதிரி இருந்திருக்கும். தேவதாஸ் தைரியமாக  எந்த முடிவும் எடுக்காதது, பார்வதியை பாதிக்கிறது.

எந்த சலனமும் இல்லாமல், தன்னைவிட இருமடங்கு வயதான ஒருவரை கணவனாக ஏற்கிறாள். தன் வயது ஒத்த அவரது வாரிசுகளுக்கு தாயாகிறாள். தனது கடமைகளுக்குள் மூழ்கிவிட, அதன்பிறகே தனிமையை,காதலை உணரும் தேவதாஸ் கல்கத்தாவுக்கு செல்கிறான். இடையில், தந்தை இறந்துவிட, தேவதாஸுக்கு சொத்து பிரிகிறது. தாயும், காசிக்கு செல்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகிறான், தேவதாஸ். அவன் சந்திரமுகியை சந்திப்பதும், அவள் காதல்வயப்படுவதும் ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், படத்தில் வருவதைப் போலெல்லாம் அவர் எழுதியிருக்கவில்லை.

சந்திரமுகியின் இரண்டாம் கட்ட வாழ்வை பார்த்து, அவளுக்கு கொஞ்சம் பணத்தை தானம் செய்கிறான், தேவதாஸ். குடியால், உடல்நலம் பாதிக்கப்பட மருத்துவமனையில் சேர்கிறான். தேறினாலும்,  குடியை விடமுடியாமல் இறுதிகட்டத்தை எட்டுகிறான். முடிவை அறிந்துக்கொண்ட தேவதாஸ், பார்வதி இருக்கும் ஊருக்கு வந்து சேர்கிறான். நாவலைப்பொறுத்தவரை, மனதை உருக்கும் காட்சி அதுவே.

யாருமற்ற அனாதையாக, இறந்து போகிறான்,தேவதாஸ்.  ஒழுங்காக தகனம் கூட செய்யப்படாத, அவனது உடலை,  பறவைகள் கொத்திக்கொண்டிருக்க, 'தன் ஊரைச் சேர்ந்த ஒருவன் இங்கு வந்து இறந்திருக்கிறான், அவன் பெயர் தேவதாஸ் என்று சொல்கிறார்கள் என்ற செய்தியை  கேட்டு' பார்வதி வீட்டிலிருந்து ஓடி வருகிறாள். அவளை பிடிக்கச் சொல்லி கத்துகிறார், அவள‌து கணவன்.அதோடு முடிவடைகிறது நாவல்.  

படத்தையும், நாவலையும்  ஒப்பிட்டு பார்க்க முடியாதுதான். ஆனால், 'தேவதாஸ்' என்று நினைத்தாலே ஏற்படும் பிம்பத்துக்கும் , மூலத்துக்கும் கொஞ்சமாவது நியாயம் இருக்கவேண்டும்தானே!

 நாவலின் ஆரம்பத்திலிருந்தே இருவரும் சிறுவயது நண்பர்களாக, விளையாட்டு பிள்ளைகளாக பழகுகிறார்கள். தேவதாஸும் பார்வதியும் ரொம்பவெல்லாம் இந்த புத்தகத்தில் காதல் வயப்படவில்லை. தேவதாஸின் தந்தை மரணத்துக்கு வருகிறாள் பாரு. அங்கும் இருவரும், பழைய நண்பர்கள் போலவேதான் பேசிக்கொள்கிறார்கள். நமக்குச் சொல்லப்பட்ட தேவதாஸீன் தன்மைகளை  நாவலில் எங்குமே பார்க்கமுடியவில்லை.

வரிக்கு வரி சரிபார்க்க முடியாதுதான் என்றாலும், படம் வேறு ஒரு தேவதாஸீன் கதையைத்தான் சொல்கிறது. உண்மையான தேவதாஸின் கதை மிகவும் எளிமையாக, அருமையாக இருக்கிறது. இறுதியில் அவர் சொல்வதுதான் மிகவும் முக்கியமானது. 'தேவதாஸீன் மரணத்தைப்போல் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு மனிதனின் மரணம், அன்பையும் நட்பையும்,பாசத்தையும் உணர்ந்தபடி நிகழவேண்டும். பரிவான ஒரு முகம், அவன் கண்ணுக்குமுன் தெரிய வேண்டும்' என்பதாக. (அதே வாக்கியங்களை கொடுக்க முடியவில்லை...)

 கல்கத்தாவின், அன்னை தெரசா இல்லத்த்தில், அவர் காப்பாற்றிய மக்கள் இறக்குமுன்பு சொன்னதாக எழுதிவைத்திருந்தார்கள்.  'செத்துப்போவது பற்றி பயமில்லை. ஆனால், யாருமற்ற அனாதையாக, எவருக்கும் தேவையற்று, ஒரு கேவலமான மிருகத்தைப்போல் நாங்கள் செத்துப்போவோம் என்று நினைத்தோம். இப்போதோ, எங்கள் மீது அன்பு காட்டும் பரிவான உங்கள் முகத்தை கண்டபடி செத்துப்போவது நிம்மதியாக இருக்கிறது.' என்று!

 வறுமையிலும், கடுங்குளிரிலும்,அழுக்கிலுமிருந்து அன்னை தெரசா அள்ளிக்கொண்ட மனிதர்கள் சொன்னதைதான் சரத் சந்திராவின் நாவலும் சொல்வது வியப்பாக இருந்தது!

Wednesday, November 19, 2014

Interstellar

பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது. இன்னும் மனம் அதையே பற்றி சுழன்றுக்கொண்டிருக்கிறது. அந்த பிரமிப்பு என்னைவிட்டு அகலவில்லை. பார்த்ததைவிட, 'இப்படி இருந்தால், இப்படி இருந்தால்' என்று பார்க்காதவற்றை கற்பனைகளாக தாண்டி  அசை போடுவதை மனது நிறுத்தவில்லை. பூமியை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை, இதற்குமுன்பாக  எப்போது உணர்ந்தேன் என்றெல்லாம் யோசித்துப்பார்க்கிறேன். இன்டர்ஸ்டெல்லரை பற்றிதான் சொல்கிறேன்.

'தமிழ்படத்துலே பார்க்காத லாஜிக்கையா இதிலே பார்க்க போறோம்' என்று நான் மிகவும் குழப்பிக்கொள்ளாத ரகம். எனவே, படத்தை ரசிக்க‌,  பிசிக்ஸ் புத்தகமெல்லாம் எனக்கு  வேண்டியிருக்கவில்லை. :-)

சிலநாட்களுக்கு முன்பு, ஒரு அறிவியல் அரங்கத்தில் அன்டார்டிகாவை பற்றிய படத்தை பார்த்தேன். உறைபனியும் குளிருமாக, மனிதர்கள் வாழ முடியாத இடம். பெங்குவின்களும், சில மீன்களும் மட்டுமே தாக்குபிடிக்கும் இடத்தில்கூட மனிதர்கள் காலடித்தடங்களும், சில நாடுகளின் கொடிகளும். பனிக்கட்டி உருகும் கோடைக்காலம் தவிர, அடுக்கடுக்காக பனி உறைந்து கிடந்தாலும், அதிலுங்கூட பூமியின் தரையை தேடிப்பிடித்து வந்து சேர்ந்திருக்கிறார்கள் மனிதர்கள். இன்றைய கப்பல்களும், அதிநவீன விமானங்களும் இல்லாத காலத்தில்கூட, கப்பல் வழியாக, மரப்படகுகள் வழியாக, பூமியின் இந்த பகுதியை தேடிக்கண்டடைந்திருக்கிறார்கள்.

அடுக்கடுக்காக உடை உடுத்திக்கொண்டு, ஆராய்ச்சி செய்கிறார்கள. சில இடங்களில், பனி உடைந்து விபத்துகளில் சிக்கி மாண்டு போயிருக்கிறார்கள். இரவில் அடிக்கும் பனிப்புயலில், கூடாரங்களுக்குள், சிறு மெழுகுவர்த்தியின் துணை கொண்டு 'இதற்கு மேல் எழுதமுடியாதென்று தோன்றுகிறது." என்று
குறிப்பெழுதியபடியே உயிரை விட்டிருக்கிறார்கள். நண்பர்களாக அன்டார்டிகாவுக்கு வந்து, தனியாக திரும்பிச் சென்றிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளரான‌ தந்தையை, புதைத்த இடத்தை தேடிவந்து பார்த்துவிட்டு,
மகனும் , அதே பகுதியில் ஆராய்ச்சியை பணியை மேற்கொள்கிறார்.

இவர்களைப் பார்க்கும்போது,  நமது வேலையைப்பற்றி இனி திங்கட்கிழமை காலைகளில் புகார்கள்  எதுவும் சொல்லாமல் ஒழுங்காக  பணிக்கு சென்றுவிட வேண்டுமென்றுதான் தோன்றியது.   அரசியல் லாபங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் என்று இருந்தாலும், மனிதர்களை இப்படி பனியிலும், மூச்சடைத்து நீருக்குக்கீழாகவும் பயணம் மேற்கொள்ளச் செய்வது எது என்று ஆச்சரியமாக இருந்தது.

சக்கரத்தை கண்டுபிடித்த நாள் முதல் மனிதன் ஒரு இடத்தில் நிற்கவேயில்லைதான். பூமியை, சூரிய குடும்பத்தைத்தாண்டி, மனிதன் பயணப்படும் என்ட்யூரன்ஸ் கூட சக்கர வடிவில்தான் இருக்கிறது. (அய்யய்யோ...இதுதான் குறியீடா? என்னை யாராவது காப்பாத்துங்களேன்!)
அந்த நொடியில் ஏற்படும் பரவசம், அதற்குப்பிறகு அடங்கவேயில்லை... இதோ இந்த நொடிவரை!


டாக்டர் மேனை உயிர்ப்பிக்கும் அந்த நொடிக்கு அரங்கம் திடீரென்று கைத்தட்டியது. என்னதான் நாம் இந்த பூமியை குறைகூறினாலும், மக்கள்தொகை பெருக்கம்  என்று திட்டிக்கொண்டாலும், இந்த கூட்டம் இல்லாமல் நம்மால் வாழமுடியுமா? என்னால் நிச்சயம் முடியாது. சென்னையை, அதன் புழுதியை, போக்குவரத்து நெரிசலை, நீண்ட வரிசைகளை குறைகூறினாலும், இந்த மக்கள்கூட்டம் இல்லாமல் யோசித்துப்பார்க்க முடியவில்லை. 

'இந்த மேட் க்ரவுடிலிருந்து எஸ்கேப்' என்று வெளியூருக்கு சென்றாலும் எல்லாம் இரண்டு மூன்று நாட்கள்தான். அதன்பிறகு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  வந்திறங்கும்போது ஏற்படும் நிம்மதி.... கிண்டியிலோ, ராஜ்பவனிலோ வாகன நெரிசலில், ஏதோ ஊர்வலம் செல்வதுபோல் வரிசையாக ஸ்கூட்டியில் செல்லும்போது ஏற்படும் ஹப்பாடா....

ஆனாலும் மானுடமே இல்லாத கோளுக்குச் சென்றாலும், மனிதர்களின் இயல்பு  மாறிவிடுவதில்லை. பொறாமை, போட்டி, இயலாமை எல்லாம் கூடப் பிறந்த குணங்கள்.  டாக்டர் மேனும் கூப்பரும் மோதிக்கொள்ளும்போது அப்படிதான் தோன்றியது.

கூப்பர், மூச்சுவிட திணறுவதைவிட பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னை திரும்பிப்பார்த்து கையை பிடித்திழுந்த்து அவள் பார்த்த பார்வையில் அழுகையும், கோபமும் முட்டிக்கொண்டிருந்தது.  'ஏன்டி என்னை இதுக்கு கூட்டுட்டு வந்தே' என்பது போல... 'ஏதாவது பண்ணு' என்பது போல...அவளால், ஒரு மனிதன் மூச்சுக்காற்றுக்கு  திணறுவதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

கூப்பர், ஈர்ப்புவிசையில் கருந்துளைக்குள் சென்று, மீண்டு, ஒரு அடைப்புக்கட்டங்களில் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் ஒன்றும் விளங்கவில்லை.  ம்ம்...கூப்பரின் கடைசி நிமிடங்களில் நினைவுகள் முட்டிமோதிக்கொள்கின்றனவோ என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கையில், காலமும் ஒரு பரிமாணமாக இருக்கிறது அந்த‌ கட்டமைப்பில் என்ற தருணம் இருக்கிறதே....வாவ்! கடந்துபோனவற்றை நம்மால் மீட்க முடியாது என்பதைதான்  வாழ்க்கை கற்றுதந்திருக்கிறது.  அதே காலத்தை முப்பரிமாண கட்டங்களில் மீட்டிப்பார்க்கும்போது, நொடி முள்ளால் கடத்தும்போது... 'இப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்' என்று தோன்றாமலில்லை.

 இப்படிதான், அலுவலகத்திலும் வீட்டிலும் இரண்டு நாட்களாக,  நினைவுக்கு வரும் காட்சிகளை விவரித்து, பேசி பேசி மாய்ந்து போகிறோம்.  கட்டிலின் மேலிருக்கும் சிறு அலமாரித்தட்டில் சில புத்தகங்களை வைப்பதுண்டு. பாதி படித்தவை, பப்பு படித்தவை...

படம் பார்த்துவிட்டு வந்த இரவு, விளக்கை அணைத்தபின் போர்வை இழுத்து போர்த்திய போது தலை மீது ஏதோ விழுந்தது. புத்தகம்....சாதாரணமாக கைபட்டு விழுந்தபோதெல்லாம் எடுத்த் வைத்துவிட்டு உறங்கசென்றிருக்கிறேன். ஆனால் அன்றோ...ஒரு புத்தகம்  விழுந்ததை  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. :))

நான்தான் இப்படி என்றால், பப்புவோ, படத்தைப் பற்றி எழுதி வைத்துக்கொண்டபின்புதான் உறங்கச்சென்றாள்.   

அந்தளவுக்கு ஆக்கிரமித்துக்கொண்டது, இன்டர்ஸ்டெல்லர்.... 'இன்னொருவாட்டி போலாம்' என்ற பப்புவின் நொச்சுவுக்காகவும்,  பூமியை தள்ளி நின்று பார்ப்பதற்காகவும், போகப்போகிறோம் இன்னொருமுறை!!  :-)

Tuesday, November 18, 2014

Interstellar - நானே எனக்கு மகனான‌ கதை ;)

 We went to Interstellar Saturday(நோலன் எப்படி குழப்பியிருக்கார் பார்த்தீங்களா! நாங்க போனது சன்டே!). It was about space. I loved that movie so much.

The main characters are Cooper,Murph and Tom. Cooper is a dad for Murph and Tom. The story goes like this. Once there was a house with a family, except any mother.

The father is a farmer and a good astronaut. One day in the night they go in wandering for something, then they enter a secret place.They meet professor who is working on saving earth.
So, he asked Cooper if he can ride the rocket, the professor built.

The professor set the rocket like if they find any other earth with living planet they can return.But in the end he somehow returns .

 He becomes 124 years old but looks like 42, but Murph was in her death bed. When they both meet together it look like Cooper is the son of Murph.


Saturday, November 23, 2013

கிராவிட்டி

படம் வந்த புதிதில் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்கும் சமயத்திலோ வாரயிறுதிகளில் வேலை/பயணம். ரொம்ப நாளாக பார்க்க நினைத்து இன்றைக்கு காலை ஷோவுக்கு செல்ல வாய்த்தது ‍ 'கிராவிட்டி'. விண்வெளிக்குச் செல்வதை பற்றிய‌, பப்புவின் கனவை இந்த படம் கலைத்து விட்டால்(?) என்றொரு பயமும் இருந்தது.

பப்புவுக்கு ஸ்பேஸ் செல்ல வேண்டும் என்பது ஒரு ஃபேன்டசி(!) கனவு. தான் ஒரு விண்வெளி வீரர் என்பது அவளது 'வளர்ந்து  என்னவாக  ஆவேன்" பட்டியலில் முதலில் இருப்பது.  "3 இயர்ஸ் ஸ்பேசில் இருப்பேன், 3 இயர்ஸ் எர்த்தில இருப்பேன். அப்போ, நெயில் சலான் வைச்சு சம்பாரிப்பேன்"  என்பாள். ஸ்பேசுக்கும் நெயில் சலானுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாத புதிர்.  'கிராவிட்டி' அவளது ஆசைகளை/முடிவுகளை அசைத்து பார்க்குமோ என்றும் லேசாக தயக்கம். படம் பார்க்கும் நாமும் விண்வெளியில் இருப்பதை போலவே தோன்ற செய்வதாக  இணையத்தில் படித்த சில விமர்சனங்கள் தூண்டிவிட்டன. சரி, இதுவும் ஒரு அனுபவமாக இருக்கட்டுமே என்று துணிந்து பப்புவை அழைத்துச் சென்றேன்.


நேரம் போனதே தெரியவில்லை. ஒரு ஆணி கையிலிருந்து தவறும் போது ஏற்படும் விறுவிறுப்பு கடைசி வரை எங்கும் குறையவில்லை. பப்புவோ, சீட்டின் நுனியில்! அறிவியல் கதை என்று  வகைபடுத்திவிட முடியாது. எனினும், விண்வெளியை பற்றி ஒரு சாகச படம் த்ரில்லிங்கான ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல! பார்க்கவே பயப்படுவாள் என நான் நினைத்த காட்சிகளை எல்லாம் பப்பு வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், நான்தான் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.  "இவங்கதான் சுனிதா வில்லியம்ஸா ஆச்சி, இவங்கதான் சுனிதா வில்லியம்சா" என்று நடுவில் கேள்வி வேறு.  


ஸ்பேசில் அவர்கள் நடப்பதையும், ஈர்ப்பு விசை என்பதே இல்லையெனில்  எப்படி இருக்கும் என்பதையும் தாண்டி விண்வெளியைப் பற்றி அறிந்துக் கொள்ளும்படி எதுவும் இல்லை. விண்கலத்துடனான‌  தொடர்பை இழந்துவிட்ட நிலையில், விழிப்புடன் இருக்க ஒருவரை ஒருவர் தொடர்ந்து பேச தூண்டிக் கொண்டிருப்பது, விண்வெளியில் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டியது என்று அவர்களது வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளலாம்.  டாக்டர் ரயான், விண்கலத்திலிருந்து தடுமாறி சென்று  பிறகு தொடர்புக்கு வந்துசேரும்  ஒரு கட்டத்தில் 'நீ அதிகமா ஆக்சிஜனை சுவாசிக்கறே, ரிலாக்சா இரு, லேசா சுவாசி'ன்ற மாதிரி கட்டளை வரும்போது நமக்கு திடுக்கிடுகிறது. நாம் எவ்வளவு இயல்பாக சுவாசிப்பது கொஞ்சம் மைல்களுக்கு மேல் போனால் எப்படி கிடைத்தற்கரிய வாய்ப்பாக மாறிவிடுகிறது!!

படத்தில், வன்முறையான அல்லது  ஆபாச‌ காட்சிகள் இல்லை. இப்படிதான், "நான் ஈ" என்ற படம் குழந்தைகள் பார்க்கலாம் என்று பலரும் சொல்லக்கேட்டு, யூ சர்ட்டிபிகேட்டையும் பார்த்து சூடு போட்டுக் கொண்டதால் கார்ட்டுன் அல்லாத படங்களை பப்புவோடு பார்க்க யோசிப்பதுண்டு.  அது போன்ற காட்சிகள் இல்லாவிடினும், திடுக்கிட வைக்கும் சில காட்சிகள் உண்டு. உடைந்துபோன விண்கலத்தில் மிதந்து கொண்டிருக்கும் உயிரற்ற உடல்களை,  டாக்டர் ரயான் எதிர்கொள்ளும் காட்சிகள் நம்மை டிஸ்டர்ப் செய்யும்.

நல்லவேளையாக, பப்பு எதுவும் அதைப்பற்றி கேட்கவில்லை. படம் முழுக்க,முழுக்க டாக்டர் ரயான் எப்படி தப்பிக்கிறார், அடுத்து என்ன செய்வார் என்று விறுவிறுப்பாக அமைந்ததால் அந்த காட்சிகளின் தாக்கம் மறைந்துவிடுகிறது. ஆனால், மேத்யூ ஏன் தானாக விடுவித்துக்கொண்டு செல்கிறார் என்பதைதான் பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திரும்பி வரும் வழி எங்கும், அடிக்கடி அந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  படத்தில் ஒருசில ஆங்கில கெட்ட வார்த்தைகள் இருந்தாலும் பப்புவுக்கு இன்னும் அவை தெரியாத காரணத்தால் கவனம் செலுத்தவில்லை.


விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது, நட்சத்திர வானத்துக்கு நடுவில் மிதப்பது , விண்வெளியில் இருந்து அவர்கள் சூரிய உதயத்தை பார்ப்பதும், பூமியை நோக்கி இடங்களை கண்டு நேரத்தை அனுமானிப்பது போன்ற காட்சிகளில்  நாமும், சில கணங்கள் அவர்களோடு விண்வெளியில் மிதக்கிறோம்.  விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது  லைட்டாக பிரமிப்போடு, பூமி மீது பாசமும் பொங்கியது. :‍)

விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்து சேர, டாக்டர் ரயான்  எதிர்கொள்ளும் சவால்கள், பயத்தை மீறி முடிவுகள் எடுப்பது, சோர்வடையாமல் தைரியத்துடன் முன்னேறி செல்வது என்று படம் எங்களை முழுவதும் ஆட்கொண்டது. ஒரு இடத்தில், பூமியின் தொடர்பு கிடைத்து, ரேடியோவில் நாயின் சத்தங்களை கேட்டு டாக்டர் ரயான் நாயைப் போல சப்தமிடும் காட்சி -  சமீபத்தில், ஒரு விண்வெளி வீராங்கனை தனது மகனுக்காக விண்வெளியிலிருந்து ஃபெல்ட் டைனோசரை தைத்து அனுப்பியதை தட்ஸ் தமிழில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

இடைவேளையில், டாக்டர் ரயான் சொல்லும் "ஐ ஹேட் ஸ்பேஸ்"-  பப்பு அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொண்டாள். இரண்டாம் பாகத்தில் நடுவில், 'நான் ஸ்பேசுக்கு போகமாட்டேன்ப்பா' என்றும் சொன்னாள். நல்லது, விண்வெளிக்கு செல்வது என்பது இங்கிருந்து விண்மீன்களை பார்ப்பது போல எளிதானது என்ற மாயையை 'கிராவிட்டி' உடைத்தது நல்லதுதான். ரியாலிட்டி இப்படியும் இருக்கும், விண்வெளிக்கு செல்வது என்பது கேக்வாக் போல அல்லது சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா என்று அவர்களின் வெற்றிகளை/ஸ்பேசில் செய்த வேலைகளை படித்து ஆசைப்படுவது மட்டுமே  இல்லை, அதற்கு நிறைய பயிற்சியும் தைரியமும் தேவைப்படும் என்பது பப்பு  தெரிந்துகொண்ட விஷயம்.

வரும் வழியில் எல்லாம் கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்..சில சமயங்களில் பதில்களும்! அதோடு, அடுத்த அக்டோபரில் பூமிக்கு ஒரு விண்கலம் வந்து சேருமாம். அது விண்வெளியைப் பற்றிய தகவல்களோடு வருமாம்.

முடிவில், டாக்டர் ரயான் நீரிலிருந்து நீந்தி தரைக்கு வந்து மண்ணை கையில் பற்றிக்கொள்ளும்போது நமக்கே பூமிக்கு வந்தது போல் இருக்கிறது. தலையும் லேசாக சுற்றுவது போல் இருந்தது. இதுவே, தமிழ்சினிமாவாக இருந்தால் பூமிக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பார்கள். ;‍-) நினைத்தது போல, பப்புவுக்கு படம் பிடிக்காமலோ அல்லது பயமோ இல்லை.   முக்கியமாக,  பூமியின் ஈர்ப்பு விசையை நியூட்டனுக்கு பிறகு எங்களை முக்கியமாக பப்புவை உணர வைத்த கிராவிட்டிக்கு ஒரு ஓ!

Friday, October 11, 2013

குங்குமம் தோழியின் "என் ஜன்னல்" ‍வழியே...


கடந்த ஆகஸ்டு மாத குங்குமம் தோழி இதழில் "என் ஜன்னல்" என்ற பகுதியில் வெளிவந்தது. சேமிப்புக்காக இங்கேயும்.  குங்குமம் தோழி குழுவினருக்கு நன்றி!

கடந்த மே மாத ஆரம்பத்தில் டான்டலிக்குச் சென்று வந்த பயணத்தைப் பற்றியும், சமீபத்தில் வாசித்த "ஆழி சூழ் உலகு" புத்தகத்தைப் பற்றியும், இணையத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தளங்களையும் பகிர்ந்துக்கொண்டேன்.. 

பப்புவுக்குதான் மிகுந்த சந்தோஷம். பத்திரிக்கை வந்த கவரில் "சந்தனமுல்லை & பப்பு"  என்று அச்சிடப்பட்டிருந்தது.:‍)



இடம் - டான்டலி:

ஊர் சுற்றுவதும், மக்களை, அவர்களது வாழ்க்கையை,பழக்க வழக்கங்களை,மொழியை அறிந்துக்கொள்வதும் மிகவும் விருப்பமானது.. சாதாரணமாக, சுற்றுலா பயணிகளிடையே  அதிகமாக புகழடையாத பகுதி அது.ஆனால், ராஃப்டிங், கேம்ப்பிங், ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களை விரும்புவோர்  மத்தியில் வட கர்நாடகாவின் டான்டலி மிகப்பிரசித்தம்.
மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை மாறாக்காடுகள், சுழன்று ஓடும் நதி, கலங்கலில்லாத தண்ணீர் என்று எங்குமே இயற்கைதான். காட்டில் நடுவில் ஓடும் காளி நதியின் கரையில்தான்  எங்கள் கூடாரம். 

சமீபகாலமாக, பெண்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகள்  தனியாக வெளியில் செல்வதே ஆபத்தானது என்பது போல பயம் இருக்கிறது. இந்த பயணத்தில் நான், மகள் பப்பு மற்றும் அம்மா என்று பெண்களாகத்தான் சுற்றினோம்.   எல்லோரும் பயமுறுத்துவது போன்ற அச்சத்தை எங்கள் பயணத்தில் எங்குமே உணரவேயில்லை. வெளி உலகம் அந்தளவுக்கு ஆபத்தானது இல்லை என்பதை முற்றிலும் புதிய இடமான ஹீப்ளியிலும்,டான்டலிலியும், குந்த் எனப்படும் மலைக்கிராமத்திலும் நாங்கள் தங்கிச் சுற்றியபோது உணர்ந்தோம்.
நமக்கு மொழி தெரியவில்லை, அந்த பகுதிக்கு புதியவர்கள் என்று தெரிந்ததும் நமக்கு உதவத்தான் எத்தனை பேர்! எளிமையான சாதாரண  மக்களிடையே மனிதம் என்றும் மரிப்பது இல்லை!

டான்டலி, மலபார் பைட் ஹார்ன்பில் எனப்படும் பறவைகளின் தேசம். குறைந்தது, 40 வகை பறவைகளையாவது நாங்கள் கண்டிருப்போம்.

டான்டலியின் காளியில் ராஃப்டிங் செல்வது தனி அனுபவம். சுழித்துக்கொண்டு ஓடும் காளி நதியை பார்க்கும்போதெல்லாம் நமது ஊர் ஆறுகள்தான் நினைவுக்கு வந்தன. இப்படி ஓடும் எத்தனை ஆறுகளை நாம் வீணாக்கி யிருக்கிறோம், அவை ஓடிய தடங்கள்கூட இல்லாமல் ! 

பிறகு, குழந்தைகளுக்காக‌ பரிசல் சவாரி. பரிசலுக்கு மேலே பறந்து நதியை கடக்கும்  ஹார்ன்பில்கள்,சிறு பறவைகள், கரையோர முதலைகள் என்று சூழலே ரொம்ப அழகு.
பலாப்பழ அப்பளமும்,தேனும், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஏலமும் நிச்சயமாக நாம் வாங்கிக்கொண்டுவர வேண்டியவை. ஆர்கானிக் என்ற பெயரில் இரண்டு மடங்கு விலையெல்லாம் அங்கு இல்லை.

ஹூப்ளி பகுதியின் சுதந்திரபோராட்ட வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா, போர்த்துக்கீசியர்களால் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட‌ ஆப்ரிக்க இனத்தவர்கள்,அவர்களின் வாரிசுகள் என்று வரலாற்றுத்தகவல்களுக்கும் டான்டலியில் குறைவில்லை. அன்பான மக்கள், சுவையான‌ வடகர்நாடக உணவு, சாகசம், சுத்தமான காற்று என்று மீண்டும் டான்டலிக்கு எப்போது வருவோம் என்ற ஆசையோடே திரும்பி வந்தோம்.

புத்தகம் - ஆழி சூழ் உலகு

இதுவரை நேரில் பார்த்த கடலைவேறுவிதமாக அறிந்துக்கொண்டது 'ஆழி சூழ் உலகு' நாவல் மூலம்தான். மீனவர்களை,அவர்களது வாழ்க்கையை யாரும் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.

தென்தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை அதன் எல்லா  வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது. ஆமந்துறை என்ற கிராமத்தின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, கடலை, அலைவாய்கரையை, மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது 'ஆழி சூழ் உலகு'.

கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளோடு,அரசியல்   பரதவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை  விரிவாக பதிவு செய்கிறது. ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றை நமக்கு புரிய வைக்கிறது.  பரதவர்களின் கடவுள் மற்றும் இயற்கை மீதான நம்பிக்கைகள், அன்றாட வாழ்க்கை, கடலோடு அவர்களது போராட்டம் அதோடு சமவெளி மக்களோடான உறவுகள், அரசியல்வாதிகளின் நயவஞ்சகம், மதம் அவர்களது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் என்று பரதவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக சொல்கிறது, இந்த நாவல்.
குமரி அம்மனே முதல் பரத்தி.  அவளையே தொழுகிறார்கள். கடலில் அவளுக்கு தேங்காய் உடைக்கிறார்கள். 

பரதவர்களின் சுறாப்பிடிக்கும் பயணமும், ஆழியில் கட்டுமரத்தில் கடந்து மீன்களை பிடிப்பதையும் படிக்கும்போது நமக்கு சிலிர்க்கிறது. நாம் அதிகமாக கண்டுக்கொள்ளாத பரதவர்கள் வாழ்க்கையை, நமக்கு தெரியாத அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டத்தை இந்த நாவல் நம் கண்முன் விரிக்கிறது.

நிலத்தில் வழி தவறிப்போனால் எப்படியும் வீடு வந்து சேர்ந்துவிடலாம். ஆனால், கடலில்? ஆழியில் இயற்கையை மட்டுமல்ல, நிலத்தில் தங்களைச் சுற்றி எழும் எல்லா பிரச்சினைகளையும், அந்த எளிய பரதவர்கள் ஒரு கட்டுமரத்தின் துணையுடன் மட்டும் எதிர்கொள்வதை அருமையாக சொல்கிறது இந்த நாவல். இந்த நாவலின் ஆசிரியர் ஜோ டி குருஸ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி!

இணையம்

இணையம் எனக்கு கற்றுக்கொடுத்தது நிறைய.  தமிழ்மணம்.காம் மற்றும் http://ultraviolet.இன்/ இந்த இரண்டு தளங்களும் நேரம் கிடைக்கும்போது நான் எட்டிப்பார்ப்பவை. 

அடிப்படையில், நானும்ஒரு வலைப்பதிவர். தமிழ்மணம்.காம் ஒரு வலைதிரட்டி என்றாலும் ஒரு தளம் என்ற அளவிலே அதன் வீச்சு அசாத்தியமானது.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மனிதர்களின் அனுபவங்களை, சிந்தனைகளை நெருக்கத்தில் காட்டுவது வலைப்பதிவுகள்தான். அதையும் தாய்மொழியில் வாசிப்பது மிகவும் சுவாரசியம். மாற்றுப் பார்வைகளை, வாழ்வியல் அனுபவங்களை, பயணங்களை, புதிய முயற்சிகளை, நகைச்சுவையை, சிறு சிறு சுவாரசியங்களை, அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம் தளம்தான். அதன்மூலமே, பல வலைப்பதிவுகள் எனக்கு அறிமுகம்.குறிப்பாக ஈழ தமிழர்களை, போராட்ட காலத்தில் அவர்களது வாழ்க்கையை,புலம்பெயர் வாழ்க்கையின் போராட்டத்தை தமிழ்மணம் திரட்டிய வலைப்பதிவுகள் வாயிலாகத்தான் அறிந்துக்கொண்டேன்.  

அல்ட்ரா வயலெட், என்பது பெண்ணியலாளர்கள்  பலர் ஒன்றாக எழுதும்   ஆங்கில தளம். இங்கு பெண்ணிய சிந்தனைகள்,  பெண்கள் சமூக ரீதியாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், பெண்களுக்கெதிரான நிகழ்வுகள், தீர்வுகள் என்று சகலமும் தீவிரமாக எழுதி விவாதிக்கப்படும்.

சினிமா

இரட்டை அர்த்த வசனங்கள்,வக்கிரம், பெண்களை உடல்ரீதியாக கிண்டலடிப்பது போன்றவற்றால் சினிமாவை பார்க்க விரும்பியதேயில்லை.  ஆனால், பப்புவுக்காக கார்ட்டூன் படங்களை பார்ப்பது உண்டு. அவளை மிகவும் கவர்ந்த படங்கள் பிரேவ் ,க்ரூட்ஸ் மற்றும் எபிக். 

பொதுவாக டிஸ்னி ஹீரோயின்களாக வரும் பெண்கள் அனைவரும், ஒரே மாதிரி உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். சிவந்தமேனியும், பெண்களுக்கேயான உடல் வளைவுகளுடன், ஃபேஷனான‌ உடைகளோடு  பார்பி பொம்மைகள் போல இருப்பார்கள். கற்பனை கதாபாத்திரங்கள், அனிமேட்டடாகவே  இருந்தாலும் கூட , அழகை முன்னிறுத்தி,  உடலமைப்பில் ஒரு பெண் இப்படித்தான்  இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போல் இருக்கும்.

ஆனால், சமீபத்தில் பார்த்த பிரேவின் மெரிடா, க்ரூட்சின் ஈப் மற்றும் எபிக்கின்  சுட்டிப்பெண், இவர்கள் அனைவரும்  இந்த சட்டத்துக்குள் பொருந்தாதவர்களாக இருந்தனர். ஒல்லி பார்பியாக இல்லாமல், ஒழுங்கற்ற பழுப்பு முடியுடன், அலட்சியமான உடைகளோடு சற்று வீர தீர சாகசக்காரர்களாக  காட்டப்பட்டிருந்தனர்.   ஆனாலும், இதிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. இந்த பெண்களுக்கேற்றவாறு ஒரு பையன் கதாபாத்திரம்  ஆபத்தில் அவர்களுக்கு உதவும்.  உதவுவது, நண்பனாக இருப்பது எல்லாம் தவறில்லைதான். ஆனால், அவர்களுக்கிடையில் ஏற்படும் க்ரஷ் சற்று நெருடலை தருகிறது.  குழந்தைகள் பார்க்கும் படங்களில் இவையெல்லாம் தேவையா? மெரிடாவை டிஸ்னியின் ஹீரோயினாக மாற்ற அவளது நடை,உடைகளில் சில மாற்றங்களை செய்தபோது இணையத்தில் அதற்கு பலத்த கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

Wednesday, July 25, 2012

தமிழ் சினிமா பாடல்களும், மலரும் நினைவுகளும்

"80களின் தமிழ் திரைப்பட பாடல்கள்" என்ற நீயா நானாவுக்குப் பிறகு பேஸ்புக்கில் பலருக்கும் 80களின் தமிழ் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது போலும். பாடல் மேல் பாடலாக ஒரே ஷேரிங்ங்ங்ங்!!எனக்கும் ஏதாவது தமிழ் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா என்று யோசித்தேன்...ம்ஹூம்!! மங்கலாக, "வந்தாய் கோபாலனே" என்ற பாடலும்,"மாமிக்கு மயிலாப்பூருதான்" பாடலும் நினைவுக்கு வந்தன. அப்புறம், "ஹேய்....இளமை இதோ...இதோ" பாடலும். அதற்கு பிறகு, எவ்வளவுதான் மூளையை கசக்கினாலும்...போன ஜென்மத்து நினைவு கூட எட்டிப்பார்த்துவிடும் போலிருக்கிறது, தமிழ்பாடல்கள் எதுவும் நினைவிலில்லை!!

அதற்குள், அம்னீஷியா என்றெல்லாம் முடிவு கட்டிவிடாதீர்கள், வேறு ஒரு காரணமிருக்கிறது, மேலே குறிப்பிட்ட அந்த ஒரு சில தமிழ்பாடல்கள் எல்லாம் ஐந்து அல்லது ஆறு வயதில் கேட்டது - அறியாத வயதில்,புரியாத பருவத்தில்!!  அதற்கு பிறகு, வீட்டில் தமிழ் திரைப்பட பாடல்கள் சுவடே இல்லாமல் ஆகிவிட்டது. வெயிட்...வெயிட்...நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அக்மார்க் சுத்தமான தமிழ்ப்பெண்தான். ஆனால், ஏனோ  வீட்டில் தமிழ் பாடல்களுக்கெல்லாம் தடா!

அந்த 'ஏனோ'வில் இருக்கிறது எல்லாம்! தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்கும் வழக்கமே இருந்ததில்லை. முதலில் பாடல்களே இருந்ததில்லை. எல்லாம், "உனக்கு நான்;எனக்கு நீ" என்று காதல் பித்து பிடித்து ஆட்டுவதே காரணம்.  இந்த மாதிரி பாடலைக் கேட்டு எங்கே பிள்ளைகள்(ஹிஹி நான் தான்) மனசு கெட்டுவிடுமோ என்ற ஆயாவின் பயமும் முக்கிய காரணி.
முக்கியமாக, பெரிம்மா உட்கார்ந்து தமிழ் திரைப்படப் பாடல்களை கேட்டதாக நினைவே இல்லை.  அதோடு, நாங்கள் பாடல்களை பார்த்ததுக் கூட‌ இல்லை. 'ஒளியும் ஒலியும்' மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அதில் எல்லாம் சிவாஜி/எம்ஜிஆர் பாடல்கள்தான், பெரும்பாலும்! நாங்கள் அதைப்பார்த்து(!) என்ன பாதிப்புக்குள்ளாகப் போகிறோம்?!!அதிலும், கடைசி பாடலாக ஒரு புதிய பாடலைப் போடுவார்கள். அப்போதுதான், எல்லாருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும் அல்லது கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடியேந்தான் அதற்கு பலியாடு!

எல்லாரும் சொல்வது போல, எங்கள் வீட்டிலும் ஒரு ட்ரான்சிஸ்டர் இருந்தது.
அதில் சென்னை வானொலியும் பிபிசியும்தான் வரும். அதில் தமிழ்பாடல்கள் என்றால், "ராஜா வாடா சிங்ககுட்டி" டைப் பாடல்கள்தான்.  அதைத்தாண்டி, தமிழ்பாடல்கள், என் காதில் ஒலித்திருக்கும் என்றால் ,அதற்கு  நாங்கள் வசித்த பகுதியிலிருந்த கோயிலுக்கோ/ திருமண மண்டபத்துக்கோத்தான்   நன்றி சொல்ல வேண்டும். அங்குதான், ஸ்பீக்கரில் பாட்டு போட்டு விடுவார்கள்.

ஆனால், பள்ளியிலோ எல்லாம் தலைகீழ். என்னைத்தவிர, எல்லாரும் இந்த‌ ஜிகேவில் கெட்டிக்காரர்கள். பாட்டுப்புத்தகங்களை எல்லாம் வைத்து கெமிஸ்ட்ரி க்ளாசில் மனப்பாடம் செய்வார்கள். (அதில் பாடல்வரிகளை பார்த்தால் நிஜமாகவே அருவருப்பாக இருக்கும்.) புதிய பாடல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். நான் மட்டும் அவர்கள் வாயை பார்த்துக் கொண்டிருப்பேன். நல்லவேளையாக பாட்டு பாடும் விபரீத ஆசையெல்லாம் இல்லாமல் போயிற்று.  ("மணிக்குயில் இசைக்குதடி" என்ற பாடலை குணசுந்தரி பாடக்கேட்டு அதுதான் ஒரிஜினல் என்று நம்பி அதற்கு விசிறியாக இருந்தது, தனிக்கதை!)

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எல்லாரும் அம்மா, அப்பா, அண்ணா/ அக்காவோடு இந்த சினிமாக்களை பார்த்திருப்பார்கள். அவர்களது அப்பாக்கள் பாடல் கேசட்டுகளை வாங்கித்தருவார்கள். பாடல்களை குடும்பத்தினருடன் கேட்பார்கள். இப்படி ஒரு பழக்கம் எங்கள் வீட்டில் இருந்ததேயில்லை. அதாவது, தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டு கேட்பது! இது  நிஜமாகவே எனக்கு அன்றும் இன்றும் ஆச்சரியமே!

ஏனெனில்,   கிட்டதட்ட எல்லா பாடல்களுமே, பெண்ணின்  உடல் உறுப்புகளையே வர்ணிப்பது, "காதலுக்கு முன் எல்லாம் தூசு" ,
ஆணுக்காக ஒரு பெண் ஏங்கி கிடப்பது, 'எனக்கு நீ  உனக்கு நான்  ' டைப்   தலைவன் - தலைவி பாட்டுகள், முக்கியமாக எல்லா பாடல்களும் சுற்றி சுற்றி கட்டிலிலேயே வந்து முடிவது  -  இவையெல்லாம் எனக்கு ஒவ்வாதிருந்தன‌!

இந்த பாடல்களை எல்லாம்  கேட்காமல் "நீதான் மிஸ் பண்ணிட்டே" என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படி கேட்காமலிருந்து(படித்து வேலைக்குப் போகும்வரை எதிலும் சிக்கிக்கொள்ளாமலிருக்க வேண்டும் என்ற கடிவாளத்துடன் வளர்க்கப்பட்டு), எனக்கே ஒரு கட்டத்தில், இந்த பாடல்கள் மீது, ஒருவித அசூயை வந்துவிட்டிருந்தது. அதாவது,   
( வெற்றியடைந்த பெரும்பாலான‌ பாடல்கள்) எல்லாமே ஏன் தலைவன் - தலைவி அல்லது ஹீரோயின் உடலமைப்பை வைத்து வம்பிழுப்பது, 'எப்போது உன்னைத் தருவாய், என்னைத் தருவேன்' என்றே இருக்கிறது,  இதைத்தாண்டி எதுவுமேயில்லையா என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

பெரும்பாலான தமிழ்பாடல்களை கல்லூரி சென்றுதான் முதன்முறையாக கேட்டிருக்கிறேன். ("மயங்கினேன் சொல்ல தயங்கினேன்", "நிவேதா", "ஊரு சனம் " அப்புறம் "இவள் மேகம் ஆக யாரோ காரணம்" என்ற வரி உள்ள பாட்டு போன்றவை(இதுக்கு ப்ரியா மெனக்கெட்டு விளக்கம் சொன்னதால மறக்க முடியலை! :‍))) அப்பொழுதும் பெரிதாக ஈர்ப்பொன்றும் ஏற்படவில்லை.
'இவங்களுக்கு எப்படி இவ்ளோ பாட்டு தெரிஞ்சுருக்கு' என்ற ஆச்சரியமே மேலோங்கியது! கல்லூரிக்குச் சென்றிருந்ததால், கொஞ்சூண்டு சுதந்திரம் கிடைத்திருந்தது. அப்போதோ, எனக்கே தமிழ்பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு கேட்க சங்கோஜமாக இருந்தது. அது இன்று வரை தொடர்கிறது. இன்றும் கூட, என் குடும்பத்தினர் முக்கியமாக பெரிம்மா/ஆயா  முன்னால் டிவியில் தமிழ் திரைப்பட பாடல்களை பார்க்க முடிந்ததில்லை.

திருமணத்துக்குப் பின், இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. காலையில், அதுவும் எழுந்தவுடனே டீவியை ஆன் செய்யும் பழக்கம் இருந்ததேயில்லை. ஆனால், அடுத்தப்பக்கமோ அப்படி இல்லை. அங்கு அவர்கள் அனைவரும் காலையிலேயே காபி குடிப்பதுபோல, டீவி அதுவும் ஏதாவது பாடல் சேனலை வைத்துவிடுவார்கள். என்னால், இதற்கு அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளவே முடிந்ததில்லை. காலை நேரத்தை, ஒரு கன்றாவி டீவி பாடலால் வீணாக்கிக்கொள்வதை அனுமதிக்கவே முடிந்ததில்லை. டீவி என்பது ஓய்வு நேரத்தில் மட்டுமே என்ற கட்டுப்பாடுடன் வளர்க்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, தனியாக இருந்தால் கூட காலை நேரத்தில் டீவி பார்த்ததில்லை.  சரி, அது போகட்டும், பாடலுக்கு வருவோம்....

இந்த தமிழ்பாடல்கள் எத்தனை லட்சக்கணக்கில் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெண்ணை கட்டிலில் வீழ்த்துவதையே ஏன் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன? கருப்பு வெள்ளைப்படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்த 80கள் பாடல் முதல்....இன்று வரை!?! 

குடும்பத்தோடு  பார்க்க அபத்தமானவற்றை/அருவருப்பானவற்றை/இரட்டை அர்த்த வரிகளை எப்படி நாம்  குழந்தைகள் முதல் அனைவரும் கூச்சமின்றி கேட்கிறோம் /பார்க்கறோம் என்பது புரிந்ததேயில்லை. இதனாலேயே, இந்தபாடல்கள்தான் ஏதோ ஒரு 'கலாச்சாரம்' என்றோ 'மறுமலர்ச்சி' என்றோ சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவற்றை என்னால் கொண்டாடவும் முடிந்ததில்லை. ஆனால், இது நிச்சயமாக என்னுடைய லிமிட்டேசன் மட்டும் இல்லை.


பிகு: இந்த பதிவு இளையராஜாவுக்கு எதிரானதில்லை என்றும்  நான் வளர்ந்த காலகட்டத்தில் வெளியான, பொதுவான‌ தமிழ் திரைப்பட பாடல்கள் பற்றி என்றும்  புரிந்துக்கொள்ளவும்.

Thursday, June 16, 2011

(கோல்ட்) கம்மல் ரிட்டர்ன்ஸ்

ரொம்ப நாட்களாக இல்லாமலிருந்த கம்மல் புராணம் லீவில் திரும்ப வந்துவிட்டது. சரியாக சொல்லவேண்டுமென்றால், அம்மா ஊரிலிருந்து வந்த பிறகுதான் ஆரம்பித்தது. சின்ன வயதில் நான் ஏதாவது கேட்டால் பெரிம்மா உடனே மறுத்து எதுவும் சொல்லமாட்டார். கொஞ்சம் ஆறப்போட்டு, அது எப்படி நமக்கு அவசியமில்லாதது என்று சொல்வார். (அதற்குள் வேறு எதன்மீதாவது எனக்கு ஆர்வம்வந்திருக்கும்.) அதே லாஜிக்கை இங்கு அப்ளை செய்தேன்.

”சரி, குத்தலாம், நீதான் கம்மல் போட்டா காது வலிக்கும், நான் பெரிய பொண்ணாயிட்டுதான் குத்திப்பேன்னு சொல்லியிருந்தே” என்றேன்.

”பரவால்ல, வலிக்கட்டும், என் காதுதான” என்றாள்.

”பாய்ஸ்ல்லாம் கம்மல் போடறாங்களா, ஏன் கேர்ல்ஸ் மட்டும் கம்மல் போட்டுக்கணும், பப்பு” என்றேன்.

”ஏய், பாய்ஸ்ல்லாம் கம்மல் போடமாட்டாங்க. கேர்ல்ஸ்தான் கம்மல் குத்திக்கணும்” என்றாள்.

என்னடா, இது 2011-க்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டேன். சமீபகாலமாக, கம்மலைவிட அவளுக்கு தங்கத்தின் மீது அளவு கடந்த ஆசை.
எந்த விளையாட்டு விளையாடினாலும் கோல்டு, சில்வர் என்பதாகத்தானே பாயிண்டுகளும் வருகின்றன. டாங்கில்டு படத்தில் அவளது ஜொலிக்கும் கிரீடம்! (டாங்கில்டு விடாமல் ஓடி சாதனை படைத்தது அநேகமாக எங்க வீட்டில்தான்
என்று நினைக்கிறேன்.) சாகச படங்களில் தங்கத்தைத் தேடி பயணம் செல்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து, தங்கக்கோடரி என்று கதைகளிலும் தங்கம்தான்.

எப்படி தங்கம் வருகிறது என்று கேட்டுக்கொண்டிருப்பாள். பூமிக்கு அடியிலிருந்து எடுக்கிறார்களென்று மட்டும் தெரியும்.ஆனால் எப்படி அது டிசைன் டிசைனாக வருகிறது என்று ஆச்சரியம்.அவள் கேட்கும்போது மட்டும், யூ ட்யூபில் தேட வேண்டுமென்று நினைப்பேன். பிறகு மறந்துவிடும்.

வீட்டில் ஒரு படம் இருந்தது, ரொம்ப நாட்களாக பார்க்காமல்.
"With a girl of Black soil"- சுரங்கத்தில் வேலை செய்யும் தந்தை மற்றும் சிறுமி, அவளது தம்பியின் கதை. மண்ணை தோண்டி அள்ளி எடுப்பது, சுரங்கவேலைகள் முதலியன. பாதிவரை அதைப்பார்த்தோம். அன்றிரவு முழுக்க பப்புவுக்கு ஏன் அந்த சிறுமியின் அப்பா பூமிக்கு அடியில் தோண்டுகிறார், சுரங்கத்தில் எப்படி மூச்சு விடுவார்கள், வேர்க்குமே என்றெல்லாம் கேள்விகள்.

பளிச்! பல்பு எரிந்தது.

”நாமல்லாம் கோல்ட் வேணும்னு கேக்கறோம் இல்ல. அதான் அவங்க போய் கஷ்டப்படறாங்க. நாம கோல்டு போட்டுக்காம இருந்தா அவங்களும் போக வேண்டாம். நாம கடையில் போய் கோல்டு வாங்கினா, கடைக்காரங்க ’இன்னும் போய் கோல்டு எடுத்துட்டு வாங்க, குழந்தைங்க கம்மல் கேக்கறாங்க’ன்னு அவங்ககிட்டே சொல்லுவாங்க. அப்புறம், அதை நெருப்புல போட்டு உருக்கி டிசைன் செய்வாங்க. ” என்றதும் ”மண் அவங்க மேலல்லாம் விழுந்துச்சுன்னா பாவம் இல்ல, கம்மல் செய்யும்போது அவங்க கையை சுட்டுடும் இல்ல ஆச்சி”, என்று விட்டால் அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டாள்.

”அதுக்குத்தான் நாம கோல்டு போட்டுக்க வேணாம், பப்பு,நாம கோல்டு வேணாம்னு சொல்லிட்டா யாரும் அவங்களை போய் மண்ணை தோண்டி பூமிக்குள்ள போய் கோல்டு எடுக்கச் சொல்லமாட்டாங்க. என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன்.

”நான் கோல்டு வேணும்னு நினைக்கல ஆச்சி, வடலூர் ஆயாதான் கம்மல் குத்தனும்னு சொன்னாங்க” என்றாள். (டயனோசர் வெளியே வந்துவிட்டது!)

அதற்குப்பின் கோல்டு பற்றியோ அல்லது கம்மல் குத்து என்றோ வாயைத் திறக்கவில்லை. :-)

குறிப்பு: சுரங்கம் பற்றிய வீடியோ அல்லது டாக்குமெண்ட்ரி இருந்தால்/தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும், ப்ளீஸ்!

Friday, October 08, 2010

Size 0...Size -1...Size -2

பிரேக் நேரத்தில், காஃபேடெரியாவில் கதையடித்துக்கொண்டிருந்தோம். உள்ளே வந்த உருவத்தைக் கண்டபோது அது ரஞ்சனிதானாவென்று சந்தேகம்...அல்லது அவளது ஆவியா? என்னால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. ஒரே அலுவலகமே என்றாலும் வேறு டீம். பிரேக்கு வரும் நேரங்களும் வேறு. கடைசியாக ரஞ்சனியை எப்போது சந்தித்தேன்?

"ஏய் ஆர்த்தி,அது ரஞ்சனியா...இல்ல அவளோட தங்கச்சியா?என்னயா ஆச்சு அவளுக்கு" என்றேன் ஆர்த்தியிடம்.

அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. பின்னே? ரஞ்சனியும் ஆர்த்தியும் ஒரே டீம்.

"என்ன ஆச்சு. நான் 2 வாரம் முன்னாடி பார்த்தப்போ கூட நல்லாத்தானே இருந்தா"

"அய்யோ, அவ தொல்லை தாங்க முடியலை..அவளோட பொண்ணு ஒல்லியா இருந்தாதான் ஸ்கூலுக்கு வந்து பிக்கப் பண்ணனும்னு சொல்லிட்டாளாம். குண்டா இருந்தா என் கூட வெளிலே வராதேன்னு சொல்றாளாம். அதான், அவ ஒரே சின்சியரா வெயிட் ரிடக்ஷன்லே இறங்கிட்டா. டீம் லஞ்சுக்கு வந்தாக் கூட ஒரே சாலட் மயம்தான்"

அந்த சிறுமியை நாங்கள் சந்தித்திருக்கிறோம். சரியான சுட்டி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். ரஞ்சனி தனது பெண்ணுக்காக, தினமும் ஐந்து கிலோ மீட்டர்கள் நடக்கிறாள். மதியம் கெலாக்ஸ் (சேலஞ்ச்) கார்ன் பிலேக்ஸ் மட்டுமே உண்கிறாள். க்ரீன் டீ மட்டுமே அருந்துகிறாள். எண்ணெயில்லாத சப்பாத்தி, வேக வைத்த காய்கறிகள். 15 கிலோ குறைத்திருக்கிறாள். குண்டு கன்னங்கள் கொண்ட ரஞ்சனியில்லை அவள் இப்போது.

"நல்லா ரெடியூஸ் ஆகிட்டே, இப்படியே போனா சைஸ் ஜீரோ ஆகிடுவே போலிருக்கே, பாவம் கரீனாவும் தீபிகாவும்..பொழைச்சு போகட்டும்..." என்றதும் ரஞ்சனிக்கு ’அலகண்டி..’ என்று வாய் கொள்ளாத சிரிப்பு.

ரஞ்சனியை மட்டுமில்லை. ஜிஎம் டயட் என்று கிட்டதட்ட பட்டினி கிடந்து இளைத்த சிலரையும் பார்த்திருக்கிறேன். 'ரொம்ப வில் பவர் வேணும்' என்ற பெயர் பெற்ற டயட் முறை அது. இணையத்தில் ரெஜிஸ்டர் செய்தால், தினமும் நீங்கள் சாப்பிடவேண்டியது என்ன என்று உங்கள் மின்மடலுக்கு வந்துவிடும். ஒரு நாள் முழுக்க காய்கறிகள், மற்றொரு நாள் முழுவதும் பழங்கள்...இன்னொரு நாள் முளைகட்டிய பயறு வகைகள்...அதில் ஒருநாள் மதியத்திற்கு இரண்டு திராட்சை பழங்கள் மட்டுமே உணவு.

சௌம்யா இந்த ஜிஎம் திட்டத்தில் இணைந்தபோது நாங்களிருவரும் ஒரே நிலையிலிருந்தோம். அதாவது, டெலிவரிக்குப் பிறகு வேலையில் சேர்ந்திருந்தோம். உலகின் மிக முக்கிய பிரச்சினையாக, உடனடியாக தீர்க்கப்பட வேணடியதொன்றாக எங்கள் முன் இருந்தது ‍ பிரக்னன்சியின் மூலம் வந்து சேர்ந்த அதிகப்படியான எடையை உதறித்தள்ளுவது எப்படி? என்பதுதான். எவ்வளவு வேகத்தில் முடியுமோ அவ்வளவு வேகமாக குறைய விரும்பினோம்.

உடனடியாக டைம் மெஷினில் ஏறி அந்த பதிமூன்று மாதங்களை பின்னோக்கி செலுத்திவிட எண்ணம் கொண்டோம். டெலிவரி என்ற ஒன்றே எங்களுக்கு ஏற்படவில்லை என்று எங்களை பார்க்கும் யாவரும் கூறும் நிலை வராதாவென்று ஏங்கினோம். என்றாவது ஒருநாள் பழைய 28வும் 30 இன்சுமான ஜீன்ஸுகளையும் பேண்ட்களையும் திரும்ப அணிய முடியுமென்று உறுதியாக நம்பினோம். அவற்றை பாதுகாத்தும் வைத்தோம். "டெலிவரிக்கு அப்புறம் செமையா குறைஞ்சுட்டேன்யா, ஆனா அதுக்கு அப்புறம் இருக்கே.....மூணு மாசம்..அப்போதான் முன்னாடிய விட அதிகமா ஏறிட்டேன்" என்று பேசி பேசி மாய்ந்து போனோம். (இதை சொல்லாத யாரேனும் உண்டா?!) ஒருவருடமாக ஏ(ற்)றிய எடையை மூன்று மாதங்களில், சொல்லப்போனால் ASAP குறைத்துவிட முடியுமென்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், தூக்கமில்லாத இரவுகள், புதிய பொறுப்புகள், அலுவலக வேலையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டால் வீட்டுக்கு போய் குழந்தை கூட இருக்கலாமென்ற எண்ணங்கள்....

இவற்றின் நடுவே ஜிஎம் டயட்டின் முறையைப் பார்த்து மிரண்டு போனேன் என்றுதான் சொல்லவேண்டும். நான் பின் வாங்கிவிட சௌம்யா தொடர்ந்தாள். இரண்டு வாரங்கள் என்று நினைக்கிறேன். அதற்குப்பின், அவளாலும் முடியவில்லை.

(நான் குண்டாக இருப்பதால் இந்த இடுகையை எழுதவில்லை. ஆரோக்கியமான முறையில், சரியான உணவு திட்டத்தோடு முறையான பயிற்சியுடன் எடையை கட்டுக்குள் கொண்டுவந்த நண்பர்களும் இருக்கிறார்கள். I salute you, Ladies!)

ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதை விட, டெலிவரிக்கு முன்னால் இருந்த ஃபிரேமையாவது அடைய வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே பொது என்று நினைக்கிறேன். ஏனெனில், குழந்தை உருவாகி இருக்கும்போது எடை ஏறவில்லை என்றால் அதைப்போன்றதொரு கவலை எதுவும் இல்லை. குழந்தை பிறந்த பிறகு எடை மளமளவென்று குறையவில்லை என்றால் அதைப்போன்ற மகா கவலையும் ஏதுமில்லை. (டெலிவரியும் அதனோடு வரும் வைட் ஆங்கிள் மாற்றங்களைப் பற்றி பிறிதொரு இடுகையில் பார்ப்போம்.)

இப்போது , நாம் ரஞ்சனியிடம் இல்லை இல்லை ரஞ்சனியின் சின்னஞ்சிறுமியிடம்!

அம்மா ஒல்லியாக இருக்க வேண்டுமென்று விருப்பம் கொண்ட எட்டு வயது பெண்ணவள். சினிமா நடிகைகளையோ, விளம்பர மாடல்களையோ, பார்பி பொம்மைகளையோ பார்த்து ஒல்லியான body image/ மெலிய உடலமைப்பு கொண்டவராக தனது அம்மா இருக்க வேண்டும் என்ற பிம்பம் மனதில் பதிந்திருக்கலாம். அவளின் ஆசையில் தப்பொன்றும் இல்லைதான். ஒல்லியாக இருப்பதே இள்மையின் அடையாளம், ஒரு ஐடியல் பெண் இதுபோலத்தான் இருபபாரென்று அவள் பார்த்த ஒவ்வொரு விஷயமுமே - கார்ட்டூனிலிருந்து, விளையாடும் பொம்மைகளிலிருந்து, பார்க்கும் சினிமா காட்சிவரை சொல்லி கொடுத்திருக்கும். தனது அம்மாவும் அதுபோல இருக்க வேண்டுமென்ற அவளது மனோபாவத்தில் எனக்கொன்றும் தவறாக படவில்லை. அவளை முற்றிலும் புரிந்துக் கொள்ள முடிகிறது. அழகென்பது புறத்தோற்றத்திலிருக்கிறது என்றுதானே நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் சொல்லித் தருகிறது.

"Tall,Fair and Slim" என்று மணமகள் தேவை விளம்பரம் கொடுக்கும் சமூகத்தில் அச்சிறுமியை குற்றம் சொல்ல முடியாது. அழகென்பது ஒல்லியாக இருப்பது என்று பயிற்றுவிக்கப்படும் மனோபாவத்தைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். கல்யாணமாகி குழந்தைப் பெற்றுவிட்டால், நம்பர் ஒன் சிம்ரனையும் 'கோணாலா இருந்தாலும்' நம்முடையதாக்க மாட்டோம். சூர்யாவுக்கு அம்மாவாக மாற்றிவிடுவோம். கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால்..என்னுடைய பள்ளிக்காலத்து ஹீரோயின்கள் குஷ்பூ,ரோஜா, மீனா, சுவலஷ்மி, மாதுரி....திடீரென்று எல்லா இடங்களிலும் ஐஸ்வர்யாவின் படங்களும், சுஷ்மிதாவின் படங்கள் ஆக்கிரமித்தன. ”பொண்ணுங்களே பார்த்து பொறாமைப்படற அளவுக்கு இருக்கா” என்று ஐஸ்வர்யா பற்றி ஒரே பேச்சுதான். அப்போது பிறந்த குழந்தைகள் பலர் ’ஐஸ்வர்யா’க்களானார்கள். தொடர்ந்து லிசா ரே, சொனாலி பெந்த்ரே...பின்னர், கல்லூரி காலத்தில் சிம்ரன்,த்ரிஷா,ஷில்பா ஷெட்டி, விதிவிலக்காக ஜோதிகா..

பிபாஷா பாஸு, ஜெனிஃபர் லோபெஸ், செலீன் டயான்....ஷ்ரேயா....தமன்னா...பத்திரிக்கை அட்டை படங்களை ஆக்கிரமிக்கும் பெண்களிலிருந்து பிசினஸில் சாதித்த பெண்கள் என்று செய்தியாகும் பெண்கள் வரை - உடல் மெலிந்திருப்பதே ஃபேஷன்!

லாரெல்..பெனிட்டன்..வில்ஸ்...டவ்...லீ..கார்டன்.. முதல் டூத்பேஸ்ட் வரையிலான பன்னாட்டு நிறுவனத்தின் மாடல்கள் எல்லாம் ஒரே அச்சில் வார்த்தெடுத்த‌து போல ஒல்லியானவர்களே! ஒரு மைக்ரோக்ராம் கூட எடையில் மாற்றமிருக்காது.

தங்களது பொருட்களை சந்தைப்படுத்த மாடல்களை ஒரு மெஷினைப் போலவே பிழிந்தெடுக்கின்றன. மாடல்களாக இருக்க அவர்கள் கொடுக்க வேண்டிய விலை ஒரு சோகக்கதை. சில வருடங்களுக்கு முன் பன்னாட்டு விளம்பர கம்பெனியின் ஒப்பந்ததை முறித்துக்கொண்டு வந்து மாடலின் நெஞ்சை உலுக்கும் பேட்டி மறக்க முடியாதது. சத்துக்குறைபாடு முதல் ஒழுங்காக பீரியட்ஸ் வராத பிரச்சினைகள் வரை பல உடல்நலசீர்கேடுகளையும் சுமந்துக்கொண்டுதான் ராம்ப்களில் வலம் வருகின்றனர். கார் விளம்பரத்திலிருந்து தைல விளம்பரம் வரை முன்னிருத்தப்படும் மாடல்கள் எல்லாமே பார்பி பொம்மைகள்தானே!

மெலிந்த உடலமைப்பு கொண்டவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். அவர்களே அழகிகள். வசீகரமானவர்கள். கண்களுக்கினியவர்கள். தயாரிக்கப்படும் உடைகளனைத்தும் ஒல்லியானவர்களுக்கே...(எடை கூடக் கூட வண்ணங்கள் கூட மறுக்கப்பட்டுவிடும்.) ஒல்லியான பெண்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். ஒல்லியான பெண்களின் தலை ஒருபோதும் தாழ்ந்துபோவதில்லை. அவர்கள் மனவலிமை வாய்ந்தவர்கள். இந்த உலமே அவர்களுக்கானது.

மாறாக, ஒல்லியாக இல்லாமற்போனால் நீங்கள் குண்டுதான். நார்மல் என்ற ஒன்றே கிடையாது. குண்டு என்பது அழகில்லை. அழகில்லை என்பதைவிட ’க்ளம்சி லுக்’ என்றே மனதில் பதிந்து போயிருக்கிறது. lethargic.குண்டாயிருக்கும் பெண்களை நீங்கள் பெண்களாகவே ஏன் மனிதர்களாகக் கூட மதிக்கத் தேவையில்லை... குண்டான பெண்கள் தின்னிப் பண்டாரம். அவர்கள், கிண்டலுக்கும் கேலிக்கும் மட்டுமே உரியவர்கள். அரிசிமூட்டை, பம்ப்ளீமாஸ், பிந்துகோஷ்.....

பெங்களூரில் வேலை பார்த்தபோது ரஜினிகாந்தாவும் நானும் பிஜியில் ஒரே அறைவாசிகள். ஒவ்வொரு மாதமோ பதினைந்து நாட்களுக்கிடையிலோ வீட்டிற்கு வரும்படி அவளுக்குத் தொலைபேசி அழைப்பு வரும். எல்லாம் பெண் பார்க்கும் படலம்தான். அவளும், கடமையாக லக்மே பார்லருக்குச் சென்று ஊருக்கும் சென்று வருவாள். ஊரிலிருந்து திரும்பிய அன்று மிகுந்த வருத்ததுடனும் சோர்வாகவும் காணப்படுவாள். வழக்கமான கலகலப்பு இருக்காது.

"சந்தனா, எனக்கு என்ன யா குறை...எல்லாமே கொஞ்சம் பெரிசா இருக்கு, அதானே" என்று ஒருமுறை சொன்னபோது பதிலளிக்கவே தோன்றாமல் அவளைத் தாண்டி கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே இருந்த க்ரோட்டன்ஸை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஷகீலாவையும், நமீதாவையும் ரசிப்பவர்களில் எத்தனை பேர் குண்டான பெண்களை திருமணம் செய்துக் கொள்வார்கள்?

Monday, April 05, 2010

அங்காடித் தெருவில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ்...

சாந்தி சின்னம்மா, ஆத்துக்கு போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவாங்க. இப்போவரைக்கும் நான் ரொம்ப நெருக்கத்திலே கால் வைச்சி விளையாடினதுன்னா சேத்தியாதோப்பு ஆறுதான். சின்னம்மா குளிச்சி, அன்னக்கூடையிலே இருக்கற துணியெல்லாம் துவைச்சு எடுத்துக்கிட்டு வர்ற வரைக்கும் நானும் ஆத்திலே விளையாடுவேன். அந்த ஆத்துலே இறங்கறதுக்கு நிறைய படிக்கட்டு இருக்கும்..அதுலே தண்ணிலே எந்த படிக்கட்டு வரைக்கும் தெரியுதோ அந்த படிக்கட்டு வரைக்கும் விளையாடுவேன்..அங்கே நிறைய குட்டி குட்டி மீன் வரும். சின்னம்மா நல்லா நீந்துவாங்க..அங்கே குளிக்க வர்ற எல்லா அத்தைங்களுமே நல்லா நீந்துவாங்க..திடீர்னு தண்ணிலே ஜிக்-ஜாக் மாதிரி தெரியும்..அது பாம்பாம். தண்ணிபாம்புல்லாம் ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாலும் அதுக்காகவே இறங்க மாட்டேன்.

சாந்தி சின்னம்மாவுக்கு ரெண்டு பசங்க. அசோக்-ஆனந்த். அசோக்குக்கு என்னோட வயசுதான். செல்வம் சித்தப்பா வழியாதான் சின்னம்மா சொந்தம்..ஆனா, எனக்கு சின்னம்மாவைத்தான் புடிக்கும்.அதனாலே சின்னம்மாவைதான் முதல்லே சொல்வேன். செல்வம் சித்தப்பா குடிப்பார்ன்னு இளஞ்செழியனும், சுரேஷும் சொல்லியிருந்தாங்க. அதனாலே பயம். சாந்தி சின்னம்மாவுக்கு முடி நீளம் - எங்க அம்மா மாதிரியே. அவங்களை எல்லாரும் ‘கருப்பா இருந்தாலும் களையான முகம்'னும் ‘சிரிச்ச முகம்'ன்னும் சொல்லுவாங்க. நான் அஞ்சாவது வகுப்புக்கு வந்ததும் சேத்தியாதோப்புக்கு போய் தங்கறதுல்லாம் குறைஞ்சுடுச்சு.அவங்க எல்லாம் வடலூருக்கு வந்தா பார்க்கிறதோட சரி.


நான் செவன்த்துக்குப் போனப்போ சாந்தி சின்னம்மாவும், சித்தப்பாவும் ஆம்பூருக்கு வந்தாங்க. அசோக் ஆனந்த்லாம் வரலை. 'படிக்கற நேரத்துலே கதை புக் படிக்காதே'ன்றதுதான் நான் ஆயாக்கிட்டே வாங்கற திட்டா இருந்துச்சு. அன்னைக்கும் அப்படி சொன்னாங்க. சின்னம்மாவும், ‘ஆமாம்மா, படிக்கற பசங்களை கெடுக்கறதே இந்த கதை புக்தான்,அசோக் கூட இதேதான்'ன்னு சொன்னாங்க. அசோக் கோகுலம்-லாம் படிக்க மாட்டான். காமிக்ஸ் புக்ஸ்தான். எனக்கும் கொடுத்தான். ஆனா, எனக்குதான் புடிக்கலை..அதுலே எதை முதல்லே படிக்கணும், யார் சொல்றதை முதல்லே படிக்கணும்னு தெரியாம குழப்பமா இருந்துச்சு. வரிசையா படிக்கறதுக்கே தெரியலை..அதனாலே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே.


ஆங்..சித்தப்பாவும் சின்னம்மாவும் வந்தாங்க இல்லே..செல்வம் சித்தப்பா துபாய் போகப்போறாராம். அதை சொல்லிட்டு போறதுக்குத்தான் வந்தாங்களாம். சின்னம்மா-வோட அம்மா சேத்தியாதோப்புக்கு வந்துடுவாங்களாம். அதுக்கு அப்புறம், சின்னம்மாவை அந்த வருஷ பொங்கலுக்கு பார்த்ததோட சரி. ஆனா அசோக் எல்லா லீவுக்கும் ஆம்பூர் வருவான். அவனுக்கும் எனக்கும் சண்டைதான் வரும். ஏன்னா, அவனும் எங்க பெரிம்மாவை பெரிம்மான்னு கூப்பிடுவான்.அதனாலே எனக்கு பிடிக்காது. அவன் செய்றது எதுவும் எனக்கு பிடிக்காது.


ஒருநாள் சாயங்காலம் விளையாடிட்டு வந்தப்போ பெரிம்மாவை ஹால்லே காணோம். நுழையும்போதே பெரிம்மா பெரிம்மான்னுதான் ஓடி வருவேன்..தேடிக்கிட்டு ரூம் உள்ளே போகும்போது ஆயா 'சத்தம் போடாதே.. பெரிம்மாவுக்கு தலைவலி'ன்னு சொன்னாங்க. பெரிம்மா படுத்திருந்தாங்க. பெரிம்மா எப்பவும் - நாங்க தூங்காம படுக்கமாட்டாங்க. யாரும் பேசிக்காம வீடு ரொம்ப அமைதியா ஒரு மாதிரி இருந்தது. அப்படி இருந்தா, ஊர்லே ஏதோ நடந்திருக்கு இல்லேன்னா ஏதோ பிரச்சினைன்னு அர்த்தம். ஏன்னா, விஜயன் மாமா செத்துட்டாங்கன்னு போன்வந்தப்பவும் அப்படிதான் ரொம்ப அமைதியா இருந்துச்சு வீடு.


அடுத்தநாள்தான் தெரிஞ்சுது...செல்வம் சித்தப்பா துபாய்லே இறந்துபோய்ட்டாராம். போய் ஆறுமாசம்தான் ஆகியிருக்கு. ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்களாம்.வேற எதுவும் தெரியலையாம். அண்ணாதுரை சித்தப்பாதான் லெட்டர் போட்டிருந்தாங்களாம். என்ன பண்றதுன்னு எதுவும் தெரியலையாம். அப்புறம், மூணு மாசத்துக்குள்ளே பாடியை அனுப்புவாங்கன்னு சொல்லிகிட்டாங்க. எட்டாவது அரைபரிட்சை லீவுலே சாந்தி சின்னம்மா ஆம்பூருக்கு வந்தாங்க. இந்தவாட்டி ரொம்பநாள் வீட்டுலே இருந்தாங்க. யாராவது வீட்டுலே இருந்தா எனக்கு ஜாலி. ஆனா, சின்னம்மா முதல்லே கொஞ்சம் உம்ம்னு இருந்தாங்க..அப்புறம், என்கூட ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவஙக்கூட டீவி பார்த்தா ஆயா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஞாயித்துக்கிழமை சாயங்காலம் சினிமால்லா சின்னம்மா கூட பார்த்துஇருக்கேன். அதுலே ஒரு பழங்காலத்து ப்டம..ஒரே சோகம்.. அப்போ சின்னம்மா சொன்னாங்க..இதுக்கே இபப்டி சொல்றே, துலாபாரம்னு ஒரு படம் இருக்கு..பார்த்தா நமக்கே அழுகைவந்துடும். அவ்ளோ சோகமா இருக்கும்னு சொன்னாங்க..எனக்கு ஆச்சரியம்தான்..ஏன்னா சின்னம்மாவுக்கே லைஃப்லே எவ்ளோ சோகம் இருக்கு..அவங்க சினிமாவைப் பார்த்தா அழுவாங்களாம்!


அவங்க கும்பகோணத்துலே இருக்கிற ஏஜெண்ட் வழியாத்தான் சித்தப்பா போனாராம். இப்போ சித்தப்பா இறந்துட்டதாலே சின்னம்மா போக ட்ரை பண்றாங்களாம். நிறைய காசு கொடுத்திருந்தாங்களாம், அந்த ஏஜெண்ட்க்கு. அந்த ஏஜெண்ட்-டும் அனுப்பறேன்னு சொல்லியிருக்காராம். வீட்டு வேலைதான். சின்னம்மா அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சிருந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் வரட்டும். பம்பாய்க்கு அனுப்பி அங்கேருந்து மொத்தமா துபாய்க்கு அனுப்பறேன்னு சொல்லியிருந்தாராம். பம்பாய்-க்கு போனாங்களாம் சின்னம்மா. அங்கே மூணு மாசம் வரைக்கும் தங்கி இருந்தாங்களாம். வேலை ஒண்ணும் இலலியாம். இன்னும் சில பொண்ணுங்கள்ளாம் இருந்தாங்களாம். எல்லாம் இதேமாதிரி வீட்டுவேலைக்குத்தானாம்.ஐம்பது அறுவது பேராவது சேரணுமாம்.அப்போதான் துபாய்க்கு அனுப்ப முடியும்னு சொல்லிட்டாராம் அந்த ஏஜெண்ட். அதுவரைக்கும் ஊருக்கு போய் இருக்க சின்னம்மாவுக்கு இஷ்டம் இல்லே. ஏன்னா, துபாய்க்கு போகப்போறேன்னு ஊர்லே சொல்லிட்டு இப்போ திரும்ப போறதுக்கு நல்லாயில்லை. அதனாலே ஆம்பூருக்கு வந்திருக்காங்க.


பம்பாயிலே ஒரே ரூம்லே இருவது பேர் தங்கணுமாம். இருக்கற ஒரே ஃபேன்லேருந்து காத்துக் கூட ஒழுங்கா வராதாம். கேட்டா இன்னைக்கு அனுப்பறேன், நாளைக்கு அனுப்பறேன்னு அந்த ஆள் சொல்லுவாராம். நிறைய பேரு குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு கூட வந்திருந்தாங்களாம். எல்லாருக்கும் வீட்டுக்கு லெட்டர் போடறதும், வீட்டுலேருந்து லெட்டர் வருதான்னு பாக்கறதும்தான் வேலையாம். கொஞ்சம் நர்ஸ் வேலைக்கு படிச்சவங்களும் இருந்தாங்க போல. ஆனா, அதிகமா வீட்டுவேலைக்குத்தானாம். அங்கே ஷேக்குங்க வீட்டுலே அவங்க சொல்ற வேலை செய்யணுமாம். அந்த ஷேக்குங்க ஏதாவது தப்பா நடந்துக்கிற மாதிரி இருந்தா அந்த வீட்டம்மாகிட்டே சொல்லிட்டா பாத்துப்பாங்களாம். எல்லாம் சின்னம்மா சொன்னதுதான். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி வேற ஊருக்கு போய் வீட்டுவேலை செய்ற அளவுக்கு சின்னம்மா தைரியமாகிட்டாங்கன்னு. அதுவும் அந்த ஏஜெண்ட்கிட்டே சண்டை எல்லாம் போட்டிருக்காங்க!

ஒரு ரெண்டு மாசத்துக்குப்புறம் சின்னம்மா போய்ட்டாங்க. அப்புறம், நாங்க மறந்துட்டோம்.நடுவுலே கொஞ்சம் சொந்தக்காரங்க மட்டும், 'சின்னம்மாவை கும்பகோணத்துலே பார்த்தேன், பேசாம போய்டுச்சு'-ன்னும், 'அந்த ஏஜெண்ட் வீட்டுலேதான் இருக்குது'ன்னும் கதை கட்டிட்டு இருந்தாங்க்க.ஆனா, ஆயாவும் பெரிம்மாவும் இதைப் பத்தி எதுவும் பேசிக்கலை. ஆனா நாங்க அவங்களைப் பார்த்து ரொம்ப வருஷமாகிடுச்சு. ராமமூர்த்தி மாமா மட்டும், ‘என்னா தைரியம், கண்டிப்பா பாராட்டணும், படிக்காத ஒரு லேடிக்கு, அதுவும் ஒண்ணும் தெரியாத நாட்டுக்கு போகணும்னா எவ்ளோ தைரியம் வேணும்”னு ஆச்சரியமா சொல்லிக்கிட்டு இருந்தார்.

சின்னம்மா இப்போ என்னோட கல்யாணத்துக்கு முதல் வருஷம்தான் துபாய்லேருந்து வந்தாங்க. அதேமாதிரிதான் இருந்தாங்க. சிரிச்ச முகம், நீளமான முடி. இப்போ சேத்தியாதோப்புலேயே ஒரு மெஸ் வச்சு நடத்துறாங்க. அசோக், ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அசோக் மட்டும் சேத்தியாதோப்புலேயே ஒரு கம்ப்யூட்டர் நடத்துறான்.எல்லோரும் இப்போ நல்லா இருக்காங்க.
நேத்து அங்காடி தெரு பார்த்தப்போ எனக்கு சின்னம்மா ஞாபகம்தான் வந்துச்சு. அதுவும் அந்த ஒரே ரூம் இல்லே..ஹால்லே அத்தனை பேரு படுத்துக்கிட்டு, சாப்பாட்டு இடத்துலே தட்டுக்கு அலைஞ்சுக்கிட்டு இருந்ததை பார்த்தப்போ...சின்னம்மா சொன்ன ஹாலை ஏனோ நினைச்சுக்கிட்டேன்.

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலே இருந்தப்போ எப்படித்தான் எங்களுக்கு அந்த ஐடியா வந்துச்சோ தெரியலை, ஆனா எல்லோருமே ஓக்கேன்னு சொல்லிட்டோம். ஒரே மாதிரி ட்ரெஸ் ஆறு பேரும் வாங்கிக்கலாம் - ப்ரெண்ட்ஷிப் டே-க்கு - அப்படின்றதுதான் அந்த ஐடியா. எங்கே கிடைக்கும்னதுக்கு கிடைச்ச ஒரே சாய்ஸ் - தி நகர்தான். அங்கே கிடைக்கலன்னா வேற எங்கேயுமே கிடைக்காதுன்னு வேற சொல்லி இருந்தாங்க.


ஒரு சனிக்கிழமை காலையிலே அங்கே போய் இறங்கி ஆல்மோஸ்ட் எல்லா கடையிலேயும் சல்லடை போட்டு சலிச்சிட்டோம். ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைக்கவேயில்லை. அப்படியே இருந்தாலும், சைஸ் எல்லாம் குழந்தைங்க, ஸ்கூல் பொண்ணுங்க, பெரியவங்க ன்னு வேற வேற சைஸ்லேதான் கிடைச்சது. அதுக்காக நாங்க அந்த கடையிலே இருந்தவங்களை படுத்தினது கொஞ்சம் நஞ்சம் இல்லே. முதல்லே சுடிதார் வேணும்னு கேக்க வேண்டியது, அப்புறம் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் வேணும்னு சொல்ல வேண்டியது, அவங்க உடனே அந்த இன்சார்ஜ்-ஜை கூப்பிட்டு சொல்லுவாங்க, 'சார், ஆறு ட்ரெஸ் ஒரே மாதிரி வேணுமாம்'னு.

உடனே அவர் , ஒரு 'பொடன்சியல் கிளையண்ட் ட்ரீட்மெண்ட்' எங்களுக்குக் கொடுப்பார். அப்புறம், 'உள்ளே போய் எடுத்துட்டு வாம்மா'ன்னு யாரையாவது அனுப்புவார். சில இடத்துலே, அடுத்த தெருவுலே இருக்கற குடோனுக்கு அனுப்பி பார்த்துட்டு வரச் சொல்லுவாங்க. அப்படில்லாம் அலைய வைச்சு, நாங்களும் அலைஞ்சு கடைசிலே ஒருகடையிலே 'அடுத்த வாரம் வாங்க, கண்டிப்பா நீங்க கேக்கற மாதிரி கிடைக்கும்'னு சொன்னாங்க.

எப்படி ஃப்ளாட்பார்ம்லே ட்ரெயினைப் பார்த்தாலே வீட்டுக்குப் போய்ட்ட சந்தோஷம் கிடைக்குமோ அதே மாதிரி எங்களுக்கு அப்போவே ட்ரெஸ் கிடைச்ச சந்தோஷமும், ஒரே மாதிரி போட்டுக்கப் போறோம்னுதான் இருந்ததே தவிர சேல்ஸ் பீபிள் அலைச்சலையோ இல்லேன்னா மத்த கடையிலே கடையையே புரட்டிபோட்டுட்டு வாங்காம வந்தப்போ அவங்க படற கஷ்டத்தையோ நாங்க நினைச்சும் பாக்கல. அப்புறம் கொஞ்ச நாள்லே ரங்கநாதன் ஸ்ட்ரீட் மேலே இருந்த க்ரேஸ் போய்டுச்சு... அங்கே போய்ட்டு வந்தா அன்னைக்கு ஃபுல்லா செம தலைவலி வந்துடும் எனக்கு.


ஆனா, இந்த குட்டி குட்டி திங்ஸ் வாங்கற சந்தோஷம் இருக்கே.. குட்டி குட்டி பர்ஸ், டிசைன் டிசைனா ஹேர் பாண்ட் எல்லாம் எங்களுக்குன்னு இல்லே.. நல்லாருக்குன்றதுக்காகவே வாங்கியிருக்கோம். அதாவது, அவசியமே இல்லேன்னாலும், ' கடையிலேயே விட்டு வர்றதுக்கு மனசேயில்ல'ன்னு ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்காக வாங்குறது.. அப்புறம், யாராவது நல்லாருக்கு சொன்னா அதை அவங்களுக்கு கிஃப்ட் பண்றது....

சற்றும் மனந்தளராமல் அடுத்த வாரமும் போனதில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு காலையிலே நாங்கதான் ஃப்ர்ஸ்ட் கஸ்டமர்ஸ். கடையெல்லாம் திறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டோம். அப்போதான் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் வாசல்லே எல்லாரும் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு கும்பல் கும்பலா நிக்கறதைப் பார்த்தோம். நானும் லதாவும் கூட அங்கே ரெண்டு தடவை போயிருக்கோம். நம்ம பேக்கை வாங்கி அவங்க கேரிபேக் போட்டு தந்துடுவாங்க. அது எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனா, அங்கேதான் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல்லே சொல்லுவாங்க. இந்த 'எம்பி எம்பியே' படிச்சவங்க இருக்காங்களே, "மத்த ஷோரும்லேல்லாம் விலை குறைக்க மாட்டாங்க.. இவங்க Strategy- யே வந்து பொருட்கள் மூவிங்க்லே இருக்கணும், விலை குறைச்சாலும் பரவால்லே.. அதுதான் செல்லிங் டெக்னிக்'ன்னு அலசி ஆராய்வாங்க...

ஏதாவது ஒரு ஃபெஸ்டிவல் கண்டுபிடிச்சு அதைக் கொண்டாட காரணமும் கண்டுபிடிச்சு கலர் கலர் பலூனை தோரணம் கட்டி பளிச்-னு இருக்கற பில்டிங்லே வேலை செய்றவங்களோட வொர்க்கிங் அட்மாஸ்ஃபியர்...அவங்க ஒவ்வொருத்தரோட குடும்ப பின்னணி...


ஆனா, ஒரு சில காட்சிகள், சில கேரக்டர்கள் - இன்னும் மனசை விட்டு அகலாம... இல்லேன்னா டயலாக்கோட ஒலிச்சுக்கிட்டே இருக்கு.

குப்பை பொறுக்கற தாத்தா, உடம்பெல்லாம் வாட்ச் மாட்டிக்கிட்டு விக்கிறவர், கர்சீஃப் விக்கிற கண்ணு தெரியாத தாத்தா, பத்து ரூபா டீ சர்ட்.... (ஆதம்பாக்கம்லே பறக்கும் ரயிலுக்கு தூண் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஆறுமாசம் முன்னாடி வரைக்கும் யாருமே இல்லாத அந்த ரோடுலே தூண்கள் கட்டி வாகனங்கள் போக வர ஆரம்பிச்சதும்.. அங்கே முளைச்ச தர்பூசணி கடை, இளநீர் கடைகள்..ஆச்சரியமாயிருந்துச்சு..எப்படி மக்கள் வாழ்க்கையை நடத்துறதுக்கு வழி கண்டுபிடிக்கறாங்கன்னு!)

'அப்பா இல்லாதவனா, அக்கா தங்கச்சி இருக்கறவனா பார்த்து எடுத்தாதான் வாயை மூடிகிட்டு வேலை செய்வான்'- என்று தேர்வு நடத்திட்டு அவர்கள் கடைக்கு முதல்முதலாக வந்திறங்கும் போது - 'எச்சிக்கையை நீட்டினா ஆயிரம் காக்கா, நம்ம ஊர் பசங்கன்னுதான் உங்களை இங்கே சேர்த்திருக்கோம்,ஒழுங்கா வேலை பாக்கணும்,புரியுதா'ன்னு அண்ணாச்சி கேக்கறதும், பசங்க எல்லாம் 'புரியுது அண்ணாச்சி'ன்னு தலையாட்டறதும்...

அந்த பப்ளிக் டாய்லெட்லே மூக்கைப் பொத்திக்கிட்டு அருவெறுப்போட நுழைஞ்ச அந்த ஆளுக்கு ஐடியா பொறிதட்டும்போது அவர் முகத்திலே தெரியற லேசான புன்னகையும்... ப்ளஸ் எக்ஸ்பிரஷனும்!

'சிமெண்டை கால்லே பூசிக்கிட்டு படுங்க'-ன்னு நடைபாதையிலே படுக்கும்போது ஒரு தாத்தா சொல்வாரே..

நாகம்மை அஸ்சாம் போகும்போது கனிகிட்டே, ' நான் இருந்துகிடுவேன்க்கா, நான் உன்னை மாதிரிக்கா, தைரியமாயிருப்பே..'

என்னோட ஹாஸ்டல் ரூம்மேட் ஷைனி அக்காவோட தங்கையை நாங்க காலேஜ் ஹாஸ்டல்லே சேர்க்கப்போயிருந்தோம். அந்த ஹாஸ்டலைப் பார்த்துட்டு அக்கா அவங்க தங்கச்சிக்கிட்டே கேட்டப்போ அந்தப் பொண்ணு மேலே இருக்கற வசனத்தைத்தான் சொல்லுச்சு.ஷைனி அக்காதான் அப்பா இல்லாத அவங்க குடும்பத்தை கவனிச்சிக்கிட்டு தங்கச்சிங்களையும் படிக்க வைச்சாங்க.

நாகம்மையை பார்த்தப்போ எனக்கு ஷைனி அக்காவும் அவங்க தங்கச்சியும்தான் கண்லே தெரிஞ்சாங்க!

இன்னொரு மறக்கமுடியாத சீன், அந்த குட்டிப்பொண்ணு பையை வாங்கிட்டு ஓடி வர்றது...

நாகம்மைக்கு மாதிரி என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சது, செல்வராணி...

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' - செம..

பளிச்சுனு கலர்லே புடவை கட்ட சொல்லி அண்ணாச்சி சொன்னதும், கூட இருக்கற ஜால்ராஸ், 'அடுத்த படம் நீங்களே டைரக்ட் செஞ்சுடுங்க'-ன்னு ஐஸ் வைக்கறதும்.. அண்ணாச்சி அதை பெருமையா(!) ஃபீல் பண்ணி விளம்பர டைரக்டர்கிட்டே சொல்லி சிரிச்சுட்டு (இதே சீனை எத்தனை வாட்டி ரியல் லைஃப்லே பார்த்திருப்போம்) 'அடுத்தவங்க வாழ்க்கையிலே மண்ணள்ளி போட மாட்டேன்'ன்னு சொல்றதும்...


கனி ரோஷத்தோட லிங்குவை சட்டை செய்யாம இருக்கும்போது, கனியோட ஹாஸ்டலுக்கே வந்து சந்திச்சு பேசுவான். கனி கொஞ்சம்கூட இறங்கி வராதபோது, பளார்ன்னு கன்னத்துலே அறைவான். என்னதான் அதிகாரமேயில்லாத நிலையில் இருக்கிற கதாநாயகனுக்குக் கூட கதாநாயகியை அறைஞ்சுதான் ஆம்பிளைத்தனத்தை காட்டிக்க வேண்டியிருக்கு... ஒருவேளை இதுவும்தான் யதார்த்தமோ..என்னவோ!


கிளைமாக்ஸ்லே கனிக்கு கால் போனது சினிமாதானேன்னு அப்படின்னு தோண வைச்சுடுச்சு.. அந்த வடபழனி விபத்து உண்மையானதா இருந்தாலும். அப்புறம், அந்த தெரசா படம்லாம் காட்டி ஒரு பாட்டு - அதெல்லாம் இல்லாமலே இந்த படம் மனசை தொடற மாதிரிதான் இருக்கு.

இன்னும் சில கடைகளிலே ஒவ்வொரு தளத்துலேலேயும் கேமிரா இருக்குமாம். யார் யார் எப்படி வேலை செய்றாங்க, என்ன செய்றாங்கன்னு கவனிக்கறதுக்கு. ஒரு ரூம்லே உட்கார்ந்துகிட்டு அதை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருப்பாராம். எல்லாம், 'கஸ்டமர் சர்வீசு'க்காகத்தான் சொல்லிக்கிட்டாலும் இப்படி ஒவ்வொரு நிமிஷமும் கண்காணிக்கறது - மனித உரிமை மீறல்னுதான் தோணுது...

கவர்மெண்ட் ஆபிஸிலே இது மாதிரி செஞ்சா என்ன ஆகும்?!