Thursday, June 16, 2011

(கோல்ட்) கம்மல் ரிட்டர்ன்ஸ்

ரொம்ப நாட்களாக இல்லாமலிருந்த கம்மல் புராணம் லீவில் திரும்ப வந்துவிட்டது. சரியாக சொல்லவேண்டுமென்றால், அம்மா ஊரிலிருந்து வந்த பிறகுதான் ஆரம்பித்தது. சின்ன வயதில் நான் ஏதாவது கேட்டால் பெரிம்மா உடனே மறுத்து எதுவும் சொல்லமாட்டார். கொஞ்சம் ஆறப்போட்டு, அது எப்படி நமக்கு அவசியமில்லாதது என்று சொல்வார். (அதற்குள் வேறு எதன்மீதாவது எனக்கு ஆர்வம்வந்திருக்கும்.) அதே லாஜிக்கை இங்கு அப்ளை செய்தேன்.

”சரி, குத்தலாம், நீதான் கம்மல் போட்டா காது வலிக்கும், நான் பெரிய பொண்ணாயிட்டுதான் குத்திப்பேன்னு சொல்லியிருந்தே” என்றேன்.

”பரவால்ல, வலிக்கட்டும், என் காதுதான” என்றாள்.

”பாய்ஸ்ல்லாம் கம்மல் போடறாங்களா, ஏன் கேர்ல்ஸ் மட்டும் கம்மல் போட்டுக்கணும், பப்பு” என்றேன்.

”ஏய், பாய்ஸ்ல்லாம் கம்மல் போடமாட்டாங்க. கேர்ல்ஸ்தான் கம்மல் குத்திக்கணும்” என்றாள்.

என்னடா, இது 2011-க்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டேன். சமீபகாலமாக, கம்மலைவிட அவளுக்கு தங்கத்தின் மீது அளவு கடந்த ஆசை.
எந்த விளையாட்டு விளையாடினாலும் கோல்டு, சில்வர் என்பதாகத்தானே பாயிண்டுகளும் வருகின்றன. டாங்கில்டு படத்தில் அவளது ஜொலிக்கும் கிரீடம்! (டாங்கில்டு விடாமல் ஓடி சாதனை படைத்தது அநேகமாக எங்க வீட்டில்தான்
என்று நினைக்கிறேன்.) சாகச படங்களில் தங்கத்தைத் தேடி பயணம் செல்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து, தங்கக்கோடரி என்று கதைகளிலும் தங்கம்தான்.

எப்படி தங்கம் வருகிறது என்று கேட்டுக்கொண்டிருப்பாள். பூமிக்கு அடியிலிருந்து எடுக்கிறார்களென்று மட்டும் தெரியும்.ஆனால் எப்படி அது டிசைன் டிசைனாக வருகிறது என்று ஆச்சரியம்.அவள் கேட்கும்போது மட்டும், யூ ட்யூபில் தேட வேண்டுமென்று நினைப்பேன். பிறகு மறந்துவிடும்.

வீட்டில் ஒரு படம் இருந்தது, ரொம்ப நாட்களாக பார்க்காமல்.
"With a girl of Black soil"- சுரங்கத்தில் வேலை செய்யும் தந்தை மற்றும் சிறுமி, அவளது தம்பியின் கதை. மண்ணை தோண்டி அள்ளி எடுப்பது, சுரங்கவேலைகள் முதலியன. பாதிவரை அதைப்பார்த்தோம். அன்றிரவு முழுக்க பப்புவுக்கு ஏன் அந்த சிறுமியின் அப்பா பூமிக்கு அடியில் தோண்டுகிறார், சுரங்கத்தில் எப்படி மூச்சு விடுவார்கள், வேர்க்குமே என்றெல்லாம் கேள்விகள்.

பளிச்! பல்பு எரிந்தது.

”நாமல்லாம் கோல்ட் வேணும்னு கேக்கறோம் இல்ல. அதான் அவங்க போய் கஷ்டப்படறாங்க. நாம கோல்டு போட்டுக்காம இருந்தா அவங்களும் போக வேண்டாம். நாம கடையில் போய் கோல்டு வாங்கினா, கடைக்காரங்க ’இன்னும் போய் கோல்டு எடுத்துட்டு வாங்க, குழந்தைங்க கம்மல் கேக்கறாங்க’ன்னு அவங்ககிட்டே சொல்லுவாங்க. அப்புறம், அதை நெருப்புல போட்டு உருக்கி டிசைன் செய்வாங்க. ” என்றதும் ”மண் அவங்க மேலல்லாம் விழுந்துச்சுன்னா பாவம் இல்ல, கம்மல் செய்யும்போது அவங்க கையை சுட்டுடும் இல்ல ஆச்சி”, என்று விட்டால் அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டாள்.

”அதுக்குத்தான் நாம கோல்டு போட்டுக்க வேணாம், பப்பு,நாம கோல்டு வேணாம்னு சொல்லிட்டா யாரும் அவங்களை போய் மண்ணை தோண்டி பூமிக்குள்ள போய் கோல்டு எடுக்கச் சொல்லமாட்டாங்க. என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன்.

”நான் கோல்டு வேணும்னு நினைக்கல ஆச்சி, வடலூர் ஆயாதான் கம்மல் குத்தனும்னு சொன்னாங்க” என்றாள். (டயனோசர் வெளியே வந்துவிட்டது!)

அதற்குப்பின் கோல்டு பற்றியோ அல்லது கம்மல் குத்து என்றோ வாயைத் திறக்கவில்லை. :-)

குறிப்பு: சுரங்கம் பற்றிய வீடியோ அல்லது டாக்குமெண்ட்ரி இருந்தால்/தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும், ப்ளீஸ்!

13 comments:

நானானி said...

தங்க மகள் காது குத்தணும்ன்னு கேட்டால் ஆசையோடு குத்த வேண்டியதுதானே? அத வுட்டுட்டு எதுக்கு தேவையில்லாத பில்டப்..ம்?

ஆமாம், எங்கே ஆளையே காணோம்?
சந்தனம் மணத்து நாளாச்சு.

நானானி said...

தங்க மகள் காது குத்தணும்ன்னு கேட்டால் ஆசையோடு குத்த வேண்டியதுதானே? அத வுட்டுட்டு எதுக்கு தேவையில்லாத பில்டப்..ம்?

ஆமாம், எங்கே ஆளையே காணோம்?
சந்தனம் மணத்து நாளாச்சு.

ஹுஸைனம்மா said...

இது சரியான அணுகுமுறை இல்லையோன்னு தோணுது. அத்தோடு, இப்படிப் பார்த்தால், எதுவுமே செய்ய/சாப்பிட முடியாது. கவரிங் நகைத் தொழிற்சாலைகளில் மட்டும் என்ன குறைவு? அதுபோல, அசைவம் சாப்பிடாமலா இருக்கோம்?

பொதுவா, பகுத்தறிவாளர்கள், (மத நம்பிக்கைன்னு வரும்போது) குழந்தைக்கு எதையும் திணிக்காதீங்க; அதுவா வளந்துட்டு தெரிஞ்சுக்கட்டும்பாங்க. இது, ஆப்போசிஸிட்டா இருக்கே? ;-))))

மேலும்,சிலர் இமிடேஷன் நகைகளுக்கென செலவழிக்கும் தொகையைக் கண்டால் மலைப்பா இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அதைத் தங்கத்தில் போட்டால், இன்வெஸ்ட்மென்டாகவாவது இருக்குமேன்னு தோணும்.

பொன்ஸ்~~Poorna said...

முல்லை, எனக்குக் கூட ஹூசைனம்மா சொல்றது மாதிரி, எதையுமே திணிக்காம வளர்க்கிறது பெட்டர்னு தோணுது.

இந்த ஊரு பொண்ணுங்க மாதிரி 'வைர மோதிரம் போட்டுக்கணும், வாங்கித்தா'ன்னு கல்யாணமான புதிதில் இவரைப் படுத்திகிட்டிருப்பேன். நான் கேட்டேன்னு ஒரே ஒரு சின்ன வைரம் பதிச்ச செயின் வாங்கிக் கொடுத்தார். பெரிய கல் வச்ச மோதிரம் எல்லாம் வாங்கமயே ஏமாத்திகிட்டிருந்தார். கடைசியா நானும் கேட்கிறதை விட்டுட்ட பிறகு, ஒரு நாள் blood diamond படம் வாங்கி போட்டுக் காட்டினார். அதுக்கப்புறம் நான் கேட்கிறதை விட்டுட்டேன்.

நானா முடிவு பண்ண முடிஞ்சது நல்லா இருந்தது

சந்தனமுல்லை said...

@நானானி,
நன்றி, இங்கேதான் இருக்கேன். அப்பப்போ போஸ்ட் போடறேனே. அப்புறம், தங்க மகள்னு நீங்களே சொல்லிட்டதாலே, தனியா வேற எதுக்கு தங்கம்னு விட்டுட்டேன். ;-)

சந்தனமுல்லை said...

@ஹூசைனம்மா & பொன்ஸ்

முதல்ல இதுல திணிப்பு எங்க வருதுன்னு புரியல. இருந்தாலும் சொல்றேன்.
அப்டி திணிக்காம இயல்பா வளர்க்கணும்னா குழந்தைகளுக்கு சாப்பாட்டைக் கூட நாம ஊட்டமுடியாது.
அவங்க கேக்கிற/விரும்புற ஜங்க் ஃபுட்டை மட்டுமே கொடுக்க முடியுமா?
கார்ட்டூன்ல குண்டு வெடிக்கிற துப்பாக்கியை பாத்துட்டு அத கேக்கிற குழந்தைக்கு துப்பாக்கிய வாங்கித்தர முடியுமா?
இல்ல, ஸ்கூலுக்கு போக அடம் பிடிக்கிற பிள்ளையை , ஐயோ, ஸ்கூலுக்கு போகச் சொல்லி
திணிக்கிறோமோன்னு அப்டியே விட்டுட முடியுமா?
விருப்பத்துக்கு மாறாவோ/ அவங்களோட சம்மத்தோடதான் செய்யணும்னா எதுவுமே செய்ய முடியாது.
ஒரு வயசுக்குள்ளேயே குழந்தை கதற கதற மொட்டையோ/காது குத்தறதோ செய்றாங்களே, அது திணிப்பு இல்லையா?
மத சம்பிரதாயங்களையும், கடவுள் நம்பிக்கையையும் குழந்தைகளா முடிவு பண்ணிக்கட்டும்னு அவங்க முடிவுக்கா நாம விடுறோம்?
பெரும்பாலும் எல்லாரும் செய்றாங்க, அதனால அது எல்லாமே சரியான ஒண்ணா இருக்கணும்கிற அவசியம் இல்லை.
நமக்கு காது குத்தி கோல்டு கம்மல் போடற வசதி இருக்கு, அதை செய்ய மறுக்கிறதால திணிப்புன்னு சொல்றோம்.
ஆனா, அதுக்கு வசதி இல்லாதவங்க செய்ய மறுத்தா அதுவும் திணிப்பு ஆகுமா?
குழந்தை மறுத்தாலும் எப்படி நாம் கணக்குப்பாடத்தை,அறிவியலை கற்றுக்கொடுக்கிறோமோ அதே மாதிரி
பிற்போக்குத்தனங்களை/நுகர்வு கலாச்சாரத்தை புரிய வைக்கணும்னு நினைக்கிறேன். பொண்ணு என்பதால் கம்மல் போட்டுக்கணும்னு குழந்தை மனதில் பதிய வைக்கப்பட்டிருப்பதைத்தானே/ ஏத்துக்கிட்டிருக்கிறதைத்தானே நாம உண்மையா திணிப்புன்னு சொல்லணும்?!


@ஹூசைனம்மா,
கவரிங் நகையை பத்தி எதுக்கு இங்கே சொல்லியிருக்கீங்கன்னு தெரியல.
பப்புவுக்கு காதுல ஓட்டையே இல்லாதப்போ அதை மட்டும் எப்படி போடமுடியும்?
உறவினர்கள் யாராவது கொடுத்த, குழந்தைகளூக்கான கிளிப் டைப் கம்மல்தான் இருக்கும்.
மஞ்சள் கலரில் போட்டாத்தான் கௌரவம்னெல்லாம் நான் நம்புறதில்லை.
சோ, நானும் சரி, பப்புவும் சரி கோல்டு/கவரிங் கம்மல்களை போடறது இல்ல.
கோல்டு மேல ஆசை இல்ல, ஆனா இன்வெஸ்ட்மென்டு -ன்னு நினைக்கிற மனோபாவத்தைத்தான், நகைக்கடைகள்
அறுவடை செய்துக்கொண்டிருக்கின்றன போலும்!

Arun KK said...

யதார்த்தமான எழுத்துநடை! வாழ்த்துகள் !!

துளசி கோபால் said...

இருங்க அவசரமா ஜிஆர்டிக்கு போய்க்கிட்டு இருக்கேன். மகளுக்கு மூணாவது காது (!!!???) குத்திக்கணுமாம்!

கொஞ்சமா ஊரோடு ஒத்து வாழலாம் முல்லை.

விஜய்கோபால்சாமி said...

ஆசைப்பட்டாலும் என் மகளிடம் இதைச் செயல்படுத்த முடியவில்லை. அவளுக்குப் 11 மாதங்கள் இருக்கையிலேயே குத்தி விட்டுவிட்டார்கள். நீங்க இத்தனை வருஷமா தொடர்ந்துகிட்டிருக்கது பெரிய சாதனை தான்.

ஹுஸைனம்மா said...

முல்லை, காதைப் போல குத்த வேண்டிய அவசியமில்லாத கழுத்து, கை, கால் (கொலுசு) போன்றவையும் இருக்கின்றன. ஒரேயடியாக மறுக்காமல், எதிலுமே அளவோடு கட்டுப்படுத்தி இருக்க முடிவதுதான் அவசியம். என்னைப் பொறுத்த வரை, Moderation is the key.

//பெரும்பாலும் எல்லாரும் செய்றாங்க, அதனால அது எல்லாமே சரியான ஒண்ணா இருக்கணும்கிற அவசியம் இல்லை//

சில வருடங்கள் முன் நான் எதிர்கொண்ட சூழ்நிலை ஞாபகம் வருகிறது. என் சின்னவன், 2 -3 வயது வரை, என் நகைகள் மீது ஆர்வம் கொண்டவனாக இருந்தான். அதுவும், என் கம்மல்தான் அவனோட ஃபேவரைட்!! அவன் ஆசைக்காக (எனக்கும்தான்), வெள்ளியில் (தங்கம் அணிவிப்பதில்லை) செயின், ப்ரேஸ்லட், மோதிரம் என்று வாங்கிக் கொடுத்தாலும், கம்மல்... எப்படி? நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்கனு யோசிக்கிறேன்.

//இன்வெஸ்ட்மென்டு -ன்னு நினைக்கிற மனோபாவத்தைத்தான், நகைக்கடைகள்
அறுவடை செய்துக்கொண்டிருக்கின்றன//

நகைக்கடைகள் மட்டுமல்ல, சம்பளம்-சாப்பாடு-போக்குவரத்து என்று தூண்டில் போட்டு இழுக்கிற பன்னாட்டு கம்பெனிகள் முதல் ஆடிக்கழிவு போடுகிற துணிக்கடைகள் வரை இதே உத்திதான்!! இதைத் தாண்டிவருவதற்குத்தான், அளவோடு இருக்கும் மனப்பாங்கு வேண்டுமென்கிறேன்.

எனினும், தங்கம் சிறந்த இன்வெஸ்ட்மெண்ட் என்பதைவிட எளிதான முதலீடு - எஃப்.டி., பங்குவர்த்தகம், பிளாட், வீடு போன்றவற்றில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ள நேரமில்லாதவர்களுக்கான சாய்ஸ் தங்கம்.

இமிடேஷன் - உங்களுக்காகவெனச் சொன்னதல்ல. தங்கம் காஸ்ட்லி, என்பவர்களில் பலர், இமிடேஷன்களில் விரையம் செய்வதைப் பார்த்ததினால் வந்த ஆதங்கம். தொடர்புடைய இடத்தில் வெளிப்படுத்தினேன்.

எனக்காக நேரமெடுத்து பதில் சொன்னதற்கும், என் கருத்துக்களைப் பகிர சந்தர்ப்பம் தந்ததிற்கும் நன்றி.

Agila said...

எனக்கும் இது அதிகம் என்றே தோன்றுகிறது முல்லை. எனக்கு தெரிந்து படு தீவிர நாத்திக குடும்பத்தில் பிறந்ததினால், என் தோழி வீட்டில் தீபாவளி கிடையாது. சிறு வயதில் அது அவளுக்கு எவ்வளவு வருத்தமாக இருந்தது என்று எனக்கு தெரியும். இப்போது அவள் நாத்திகமாக இருந்த போதும், அவளுடைய மகனுக்கு தீபாவளிக்கு பட்டாசும் புது உடையும் உண்டு.

உங்களுடைய இடுகையில் கம்மல் பாட்டியினால் திணிக்கப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் அவளாக விருப்பபட்டு கேட்கும் போது அதை நிறைவேற்றுவதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இல்லாமல் என்ன வாழ்க்கை? நம்முடைய analyzing mind வேறு.குழத்தைகளின் விருப்பம் , உலகம் வேறு தானே,even though it is influenced by the consumerism.

லெமூரியன்... said...

\\ ஒரு வயசுக்குள்ளேயே குழந்தை கதற கதற மொட்டையோ/காது குத்தறதோ செய்றாங்களே, அது திணிப்பு இல்லையா?//
காது குத்துறது தங்கம் போடறதுக்காக இல்லை முல்லை...
சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுப்பதற்காக ஆதி தமிழினம் கடைபிடித்த முறை அது....
இரண்டாவதா ஆபரணங்கள் அணிவதை பற்றி சொல்லியிருக்கீங்க...
இப்போதான் வெறும் தங்கம் மட்டுமே அணிவது நாகரிகம் ஆகிருக்கு...
ஆனா பழங்காலத்துல அனைத்து விதமான உலோகங்களும் சிறிது உடம்பில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்..
இதில் பால் வேறுபாடுகளெல்லாம் கிடையாது....
காரணம் உலோகங்கள் சில பிரத்தியோக தன்மைகளுடைய நன்மைகள் செய்பவை மனித உடலுக்கு...
ஊ ம்: செம்பு உடற்சூட்டை தணிக்கும், தங்கம் சற்று நிதானத்தை தரும்..

\\நமக்கு காது குத்தி கோல்டு கம்மல் போடற வசதி இருக்கு, அதை செய்ய மறுக்கிறதால திணிப்புன்னு சொல்றோம்...//
காது குத்தி தங்கம்தான் போடணும்னு யார் சொன்னா??? :)
நீங்களும் ஏன் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ADDICT ஆகுறீங்க :)

சின்ன ஈக்குச்சி கூட போதும்..


\\பொண்ணு என்பதால் கம்மல் போட்டுக்கணும்னு குழந்தை மனதில் பதிய வைக்கப்பட்டிருப்பதைத்தானே/ ஏத்துக்கிட்டிருக்கிறதைத்தானே நாம உண்மையா திணிப்புன்னு சொல்லணும்?!//
கால போக்குல ஒரு பாலினம் ஆபரணம் அணிவது குறைந்து விட்டது.... ஆனா பெண்களுக்கு மட்டும்னு எங்கும் வலியுறுத்தி சொல்லவில்லை...

இப்போவும் எங்க அப்பா திட்றார் அரைஞான் கொடி
போடறான்னு... :) :)

மூலக் காரணங்களை விட்டுட்டு மேலோட்டமா நாமளும் எதுக்கு யோசிச்சி பழகனும்???

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை. ரொம்ப நாட்களாக உங்கள் பக்கம் வரவில்லை. இன்றென்னவோ தோன்றியது.

குழந்தைக்கு எப்போது தோன்றுகிறதோ,சரியென்று பட்டால் எல்லாம் செய்யலாம்.


எங்கள் நாத்தனார் மகள் இந்திரா காந்தியின் பிறந்ததிலிருந்து காதிலோ கையிலோ ஒன்றும் (தங்கம்)அணிந்ததில்லை.

எண்ணம் போல வாழ்க்கை இனிக்கட்டும்.