புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு.அதாவது நேற்று. காய்கறிகள் வாங்க அருகிலிருக்கும் கடைத் தெருவுக்கு சென்றோம்.கடைகளெல்லாம் சீரியல் தோரணங்கள். சேல் பற்றிய அறிவிப்புகள். சில உணவகங்களில் இரவு உணவு/பார்ட்டிக்கான அறிவிப்புகள், சலுகை கட்டணங்கள் பற்றிய வசீகர அழைப்புப் பலகைகள். வாசல்களில் "ஹாப்பி நியூ இயர்" கோலங்கள்.ரம்மியமான காட்சியாகத்தான் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிகளும் வெடிக்கத் துவங்கியிருந்தன.
மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக - பிறக்கப்போகும் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க தயாராகி இருந்தது எங்கள் ஏரியா. சர்ச்களில் இரவு பிரார்த்தனை ஆரம்பித்து பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஏஞ்சல் உடைகளில் குட்டிப்பிள்ளைகள் ஓடியாடியபடி அங்குமிங்கும். சில வீடுகளில் ஸ்டார்கள் வண்ண வண்ணமாக.ஒவ்வொரு ஸ்டாரை பார்க்கும் போதெல்லாம் "ஸ்டார்" "ஸ்டார்" என்று கத்தியபடி வந்தாள் பப்பு.
எங்கள் வீட்டிற்கு எதிரிலேயே புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் இடைவேளை இல்லாமல்..விடுமுறைகள் இல்லாமல்...நேரங்காலம் இல்லாமல். பகலில் சுவர்கள் எழுப்பப்படுமென்றால் இரவில் சில பல விநோத மெஷின்கள் வரும். அல்லது ட்ரில்லிங் ஆரம்பித்திருக்கும். ஜல்லிகள் வந்து இறங்கும். ஓய்வில்லாமல் இயங்கும் ஒரு பேக்டரி போல கட்டிட வேலைகள் நடந்துக் கொண்டேயிருக்கும். நேற்றிரவும், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவும் லைட்கள் வெளிச்சத்தை உமிழ ஆந்திராவிலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வந்த அம்மக்கள் தலையில் துண்டை கட்டியபடி வேலை செய்தவண்ணம் இருந்தனர். அவர்களுடன் சாலையை அங்குமிங்கும் விரையும் வாகனங்களை வெறித்துப் பார்த்தபடி சிறு பிள்ளைகள்...அவர்களது குழந்தைகளாக இருக்க வேண்டும். வானத்தில் பூவாய் விரியும் வண்ணப்பட்டாசுகளை பார்க்க கூச்சலுடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
மொபைலில் சில மெசேஜ்கள் வந்த சப்தம். 2011....புத்தாண்டு வாழ்த்துக்கானவைகளாக இருக்கக்கூடும்.ஹாப்பி,ப்ராஸ்பரஸ்,புதிய துவக்கம்....இன்னபிற!
காம்பவுண்டுக்குள் நுழைந்த போது கேட்டை திறந்து வெளியேறினார் அண்ணாமலை அண்ணா. எங்கள் காம்பவுண்டிலேயே இயங்கும் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்பவர். "என்னண்ணா, வீட்டுக்கா, நாளைக்கு லீவா? என்றேன். "ஆமாம்மா, நாளைக்கு எதுக்கு லீவு. ஞாயித்துக்கிழமை கூட இருக்கே, லீவு போட்டா சம்பளம் புடுச்சிக்குவாங்க" என்றார். அவர் வாங்கும் இரண்டாயிரத்து இருநூறில் ஒருநாள் சம்பளம் கட்டானால்....
அந்த இரண்டாயிரத்து இருநூறுக்கு இந்த நகரத்தில் எப்படி வாழ்ந்துவிட முடியும்? அல்லது என்ன வாங்கிவிட முடியும்? வானில் பார்த்த வாணவேடிக்கைகள் ஒருவேளை அவரது சம்பளத்தின் மதிப்பிருக்கலாம்.
அப்போதுதான் எனக்கு காய்கறிகளை நிறுத்து போட்ட அக்காவிடம் புத்தாண்டைப் பற்றி விசாரித்திருந்தேன். "என்ன அக்கா, நியூ இயர்ல்லாம் வந்துடுச்சா?" என்றதற்கு "நமக்கெல்லாம் என்ன நியூ இயர், அதெல்லாம் காசு இருக்கவங்களுக்குதான்!" என்றார் எடுத்துவைத்த காய்கறிகளை எடை போட்டபடி.
இந்த வருட பங்குசந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம், 120 புள்ளிகள் உயர்ந்து. மேலும், ஆசியாவிலேயே சிறப்பாக செயல்பட்ட பங்குசந்தை நமது மும்பை பங்கு சந்தைதானாம். இது இந்திய வளர்ச்சியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறதாம். (செய்தி)
ஆம், வளர்ச்சிதான். கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 17368. சென்னையில் மட்டும் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 40500 என்று ஒரு தொண்டு நிறுவனம் கணித்திருக்கிறது. இங்குதான் பலநூறு குடும்பங்களுக்கு ஒரு கழிவறை இருக்கிறது. ஆப்பிரிக்காவை விட இந்தியாவில்தான் பட்டினி சாவுகள் அதிகம்.தாமிரபரணி தண்ணீரை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து குடிநீருக்கு அலையும் மக்களும் இங்குதான் அதிகம். 43% (5 வயதிற்குக் குறைந்த) குழந்தைகள் வயதிற்கேற்ற எடையில் இல்லாமல் எடை குறைந்து காணப்படுகின்றனர். இந்தியாவில் குழந்தை இறப்பில் 50% ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எல்லாமே வளர்ச்சியின் பெயரால்தான்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் எனக்குப் பின்னால் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது வெடிச்சத்தம்.
43% என்பவர்கள் யார்? 50% என்பவர்கள் யார்?

'பொருளாதார வளர்ச்சி' என்ற பெயரிலும் 'இந்தியா நல்லா டெவலப் ஆகுது' என்று நம்பிக்கொண்டு மேம்பாலங்களையும், சாலைகளையும், விண்ணை எட்டும் கட்டிடங்களையும், அக்கட்டிடங்களை பாதுகாக்கும் வேலையைச் செய்பவர்களின் குழந்தைகள்.. வாணவேடிக்கைகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அழுக்கு ஜட்டிகளுடன் நிற்கும் அந்தக் குழந்தைகள்....
ஒன்றரை லட்சம் செலவு செய்து உயர்ரக நாய் வாங்கி வளர்க்கும் குடும்பங்களின் மத்தியில் இதே வேளச்சேரியில்தான் அந்தக் குழந்தைகள் வாழ்கின்றனர். என்ன, நமது கேட்களை தாண்டி....நின்றுக் கொண்டிருக்கின்றனர். இதுவும் ஒரு "வளர்ச்சிதான்"
ஹாப்பி நியூ இயர், மன்மோகன்...ஹாப்பி நியூ இயர், சிதம்பரம்...