Thursday, June 11, 2015

ஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)

வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதியையும் முக்கியமாக -எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமான மக்கள்  மற்றும் வாகன நெரிசல்தானே- நமது அடையாளம்.

உத்தராகாண்ட் மலைபயணங்களில் கூட, எங்களது அனுபவம் இப்படியாகத்தானிருந்தது. முக்கியமாக சென்னை போன்ற ஜனசந்தடி மிகுந்த ஊரிலிருந்து சென்றால்,  'இந்த ஊர் இந்தியாவுக்குள்தானிருக்கிறதா' என்று சந்தேகம் வராமலிருக்காது.

சன்னமான வெயில். இளங்காற்று. சரிவு சரிவாக மலைத்தொடர்கள். மலைத்தொடர்களை போர்த்தியிருக்கும் மரகதப்பச்சை. தொடுகோடுகள் போன்ற மலைத்தொடர் ஒன்றில், அருகமைந்த மலைமுகடுகளை பார்த்தபடி நமது பயணம். வழியில் ஒன்றிரண்டு வியூ பாயின்டுகள். 'மேக்டோக்' வியூ பாயிண்ட், அழகிய இடம். பள்ளத்தாக்கு என்பதற்கு இலக்கணத்தை இங்கு கற்றுக்கொள்ளலாம்.

பயணத்தின் பாதை முழுக்கவே, நாம் கண்டு களிக்கக்கூடிய இயற்கை அற்புதங்களால் நிரம்பியிருக்கின்றன. எங்கு நின்று பார்த்தாலும், அருவிகளும், பூமியின் அடியையே காணமுடியாதபடி  பள்ளத்தாக்குகளும், எங்கிருந்தோ திடீரென்று எழும்பி வரும் வெண்பொதி பஞ்சுகளும் நம்மை மயக்குகின்றன.

ஏதோ ஒரு ஸ்க்ரீன் சேவருக்குள் நுழைந்துவிட்டாற்போல, ஆங்கிலப் படக்காட்சிகளுக்குள் எங்களை கொண்டு போய் விட்டுவிட்டது போல தோன்றியது.  பேசாமல், எங்கேயும் தங்காமல்,  சாலை செல்லும் வரை பயணித்துக்கொண்டே இருக்கலாமென்ற எண்ணம் இந்த பயணத்தில் எழுந்தால் நீங்களும் என் இனம்தான்!


படமெடுக்கலாமென்று, பா ஷிம்மை நிறுத்தசொன்னால், இடது பக்கத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். கதவை திறந்தால், அதல பாதாளம். ஒருவர் இறங்கி நடக்க வசதியுண்டு என்றாலும், நமக்கு பழக்கமில்லாததால் பகீரென்கிறது. :‍)

பெரும்பாலும், நடந்தேதான் தூரங்களை கடக்கிறார்கள்,மக்கள். ஒருவரைக் கூட தேவைக்கதிகமான  பருமனுடன் பார்க்கவில்லை.  இதில் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு பெண்கள். சாலையில் ஆங்காங்கே, நிலக்கரி குவியல்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

மலையை குடைந்தாலே, இங்கு நிலக்கரிதான். ஒன்று நிலக்கரி அல்லது சுண்ணாம்பு. சில பாறைகளை பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம், மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரமென்று. சில பாறைகளில், மீன்களின் தடயங்களை கூட‌ காணலாம் என்று இணையத்தில் படித்தது மூளையில் ஒளிர்ந்தது.

நெய்வேலியில், இரண்டாம் கட்ட சுரங்கமெல்லாம் தோண்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கே போய் விடுவார்கள் போல. இங்கு, சாலையோரத்தில், மக்கள் தங்கள் கைகளைக்கொண்டே பாறைகளை துருவி நிலக்கரியை எடுத்துவிடுகிறார்கள். அதனால்தான், அத்தனை லாரிகள் மேகாலயாவிலிருந்து செல்கின்றன போலும்.

மலையைக் குடையவோ, பாறையை வெட்டவோ, பெரிதாக எந்த உபகரணங்களையும் காணவில்லை. ஒரு மண்வெட்டி, சுமந்து செல்ல மூங்கிலான கூடை ஒன்று. இடைவேளைக்கு, ரெட் டீ. மழை பெய்கிறதோ இல்லையோ, ஒரு ஜெர்கின். கால்களில் ஷூ ஒன்று. இதுதான், உழைப்பாளிகளின்  உடை.

கிராமங்கள் இருக்கிறதென்பதற்கு அறிகுறியாக, சில இடங்களில் வரிசையாக இறைச்சிக்கடைகள். வியு பாயிண்டுகளுக்கு வரும் பயணிகளுக்கு மேகியும், உள்ளூர் புளிப்பு பழங்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு. பெட்டிக்கடை என்றால், உண்மையாகவே பெட்டியை போன்ற கடைகள்.

வழியில் தென்பட்ட‌து 'ஆரஞ்சு ரூட்ஸ்' உணவகம்.  தோசையும், ஃபுல் மீல்ஸும் உண்டோம். தமிழ்க்காரர்.  திரு.ரயான். ஊர் மதுரை. அவரது ரிசார்ட்டில் மூன்று நாட்கள் வாசம்.

ச்சிராபுஞ்சியை அடைந்துவிட்டோமென்பதற்கு அறிகுறியாக, வீடுகள் வரிசையாக தென்படுகின்றன. ஓவியங்களைப் போல வீடுகளும் தெருக்களும். ஜன்னல், திரைச்சீலை, கொத்து கொத்தாய் ரோஜா பூக்கள். பல்கணியில் பூனைகள்.   அப்பழுக்கின்றி சாலைகள்.  தெருவோரத்தில் விளையாடும் குழந்தைகள். ஊருக்கு எல்லையில், ஒரு சிமென்ட் தொழிற்சாலை. ருஷ்யக்கதைகளில், வருவது போலவே இருந்தது.

ச்சிராபுஞ்சியிலிருந்து 15 கிமீயில் இருக்கிறது, லாட்கின்ஸ்யூ  கிராமம். கஸி மலைத்தொடரை, குடைந்து சாலைவசதி செய்திருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறியை  குகையாக செல்கின்ற‌ பாதையிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.
அடுத்த நிறுத்தம் ச்சிராபுஞ்சி ஹாலிடே ரிசார்ட்.

எதிரில்,  கிழக்கு கஸி மலைத்தொடர். கையளவு மேகமாக பங்களாதேஷிலிருந்து மேலெழும்பி வரும் வெண்பஞ்சு, சில நிமிடங்களில், மலையையே முழுங்கும் மங்காத்தாவாகி விடுகிறது. இந்த இடைவேளையில், அருவிகளை எண்ணி எண்ணி...தோற்றதுதான் மிச்சம். எங்கிருந்து பார்த்தாலும், நோக்காலிக்காய் அருவி தெரிவதுதான் சிறப்பு.

இந்த பயணத்தில், இதோ இந்த நிமிடத்தில், நாங்கள் நின்றுக்கொண்டிருப்பது, இந்தியாவின்‍ கஸி மலைத்தொடரின் கடைசிக்கிராமம். இதற்கப்பால் தெரிவதெல்லாம், பங்களாதேஷ்.  வெட்டப்பட்டது போல, லாட்கின்ஸ்யூ கிராமத்தில் மலைத்தொடர் முடிய, கீழே ஏரிகளும், வயல்களுமாக விரிகிறது பங்களாதேஷ்.   

அடுத்த சில நாட்களில் நாங்கள் செய்ததெல்லாம், இயற்கையில் எங்களை தொலைத்ததுதான்.   இதற்கு முன்பாக, இயற்கையை இந்தளவுக்கு எப்போது ரசித்தேன் என்று எனக்கே நினைவிலில்லை.

மனிதன், ஊடுருவவே முடியாத பசுமை மாறாக்காடுகள், அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போல ஃபிரெஷ் க்ரீமாக மேகங்கள், பகலில் கூட சத்தமிடும் சிக்கடாக்கள், குருவிகள், குருவி அளவில் விதவிதமான வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள், இரவில் மட்டும் ஓடிபிடித்து விளையாடும் மின்மினிப் பூச்சிகள், அழகழகான கிராமத்து குழந்தைகள், பார்த்ததுமே வீட்டுக்கு அழைக்கும் பாட்டிகள், அடுக்ககங்கள் கட்டவோ அல்லது உள்ளூர்க்காரரல்லாத வேறு எவரும் குடியேறவே அனுமதிக்காத மலைவாழ்மக்கள்  என்று வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களை எங்களுக்கு வழங்கியது ச்சிராபுஞ்சி அனுபவங்கள்.  

லாட்கின்ஸ்யூ, நோங்வார் கிராமங்களில் காலார நடந்தோம்.அவர்களைப் பார்த்து, நாங்கள் ஆர்வமானது போலவே, எங்கள் முகங்களும் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்தது போலும். 'கஹா போஸ்தி'என்று வினவிய‌ அனைவருக்கும் 'சென்னை' என்று சொல்லியும் விளங்காதவர்களுக்கு 'மதராஸ்' என்று பதிலளித்தோம். (முக்கியமாக, புதியவர்களை கண்டாலே உற்சாகத்துடன் பேசும் பாட்டிகள், 'தி வே ஹோம்' பாட்டியை நினைவூட்டினார்கள்.)காட்டுக்குள் மறைந்திருந்த அருவியொன்றை இரண்டு மணிநேரத்துக்கு  எங்கள் வசப்படுத்தினோம். எக் ஹக்கா சௌ, சிக்கன் ஹக்கா சௌ ,வகை வகையான ஃபிரைடு ரைஸ்கள் என்று இங்கு எதெல்லாம் உண்ண மாட்டோமோ அதையெல்லாம் அங்கு ஒரு கை பார்த்தோம்.  சலித்தபோது, அம்பிகா அப்பளம்ஸில் வாங்கிய பருப்புப்பொடியை சாதத்தில் பிசைந்து உண்டோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து, ஆசியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல ஒருநாளை ஒதுக்கியிருந்தோம். நோங்வார், லாட்டின்ஸ்க்யூ, ச்சிராபுஞ்சியை கண்டதும் முடிவை மாற்றிக்கொண்டோம். எல்லா ஊர்களும் ,கிராமங்களும் தூய்மையாகத்தான் இருக்கின்றன. ஒரு பாலித்தீன் பையையோ, குப்பையையோ நாங்கள் காணவில்லை.  வேர்ப்பாலங்களை காண பசுமை நடை, ச்சிராபுஞ்சியில் ஊர் சுற்றல் என்று  நாட்களை கழித்தோம்.

மாலையில், உள்ளூர் மக்களின் கஸீ பாடல்களில், இந்தி பாடல்களில் ஊறினோம். நின்று நிதானமாக, ஆனாலும் 'காட்டு காட்டென்று' இரவு மட்டும் காட்டும் பேய் மழையை, அசாதார‌ணமான மின்னல்களை கண்ணாடி ஜன்னல்களினூடாக கண்டோம்.

சொர்க்கத்தோடு  இணைந்திருந்த  மேகாலயா, எப்படி பிரிந்து பூமியோடு இணைந்ததென்ற பாட்டிக்கதையை கேட்டோம். கா லிக்காயின் கதையை கேட்டு, சோகத்தில் மூழ்கினோம்.  பத்து ரூபாய்க்கு, புளிப்புப்பழங்களை அள்ளிக்கொடுத்த  பாட்டிகளிடம் 'கொஞ்சமா தாங்க‌ போதும்' என்று பேரம் பேசி, பழத்தை பாதி கடித்துதும், உச்சிக்கு ஏறிய புளிப்பில் முகத்தை அஷ்டக்கோணலாக்கினோம். மலை வாழைப்பழங்களை வாங்கி,  உண்ணும்போது அகப்பட்ட  கொட்டைகளை கண்டு அதிசயித்தோம்.

ச்சிராபுஞ்சியின் இயற்கை அதிசயங்களை,  கண்கவர் பூங்காக்களை, குகைகளை, எண்ணற்ற அருவிகளை ருசித்தோம். அதன் உயரங்களை அளந்தோம். மேகம் கவிந்த மலை முகடுகளில் ஓடித்திரிந்தோம். மேகத்தையே சுவாசித்தோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து எங்கள் வீட்டுக்கு தபால்களை அனுப்பினோம். 'நோக்காலிக்காய் ஸ்டாம்ப்' 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ் ஸ்டாம்ப்' இருக்கிறதாவென தபால் அலுவலர்களை கிடுக்கிப்பிடி போட்டோம். ஆறுகளிலிருந்தும், வேர்ப்பாலத்தினடியிலிருந்தும் கூழாங்கற்களை சேகரித்தோம்.

சாப்பிட்ட பின்பும்,  சும்மா இருந்த நேரங்களிலெல்லாம் ரெட் டீயும், லெமன் டீயும் அருந்தினோம். மற்ற சுற்றுலா பயணிகளோடு, நட்பு பூண்டோம். கஸீ உடையை நாங்களும் உடுத்திக்கொண்டு, 'இது போல் எங்கு கிடைக்கும்' என்று விசாரித்தோம்.மலைத்தேனும், மேகாலயாவின் மழையில் விளைந்த தூய்மையான மஞ்சளை பொடி செய்து வாங்கிக்கொண்டோம்.

மழை பெய்த போது, அடங்காமல் மழையுடையை உடுத்திக்கொண்டு மழையில் ஓடினோம். இதுவரை, எத்தனை இந்திய மாநிலங்களில், அதன் தலைநகரில் கால் வைத்திருக்கிறோம் என்று கணக்கு பார்த்தோம்.

எந்த ஊரிலிருந்து  கிளம்பினாலும், பப்பு சொல்லும், 'நான் இங்கியே   இருக்கப்போறேம்ப்பா' வை நாங்களும் இந்த முறை சொல்லிக்கொண்டோம். 'பப்பு, நீ என்னோட வயசாகிட்டு என்னை இங்கே கூட்டிட்டு வாப்பா' என்று ஆளுக்காள் உடன்படிக்கை போட்டுக்கொண்டோம்.

வாழ்க்கையில், மறக்க முடியாத அனுபவங்களை மூளைக்குள் ஏற்றிக்கொண்டோம். 'நடந்து சென்ற‌ பாதைகளை, கடந்து வந்த காட்சிகளை ,சந்தித்த மனிதர்களை மறந்துபோகவே கூடாது' என்று நியுரான்களுக்கு கட்டளையிட்டோம். 

'பசுமைநடையை, அங்கு செலவழித்த  கணங்களை லைஃப் முழுக்க நினைவு வைத்திருக்கப்போவதாக‌ நன்றி சொல்லி' கையோடு கை கோர்த்துக்கொண்டாள் பப்பு. சாட்சியாக, கனன்றுக்கொண்டிருந்தது கேம்ப் ஃபயரின் கங்குகள்.

2 comments:

Language Translator said...

Nice...
for Tamil Typing

Kalaivani said...

wow! lots of posts from you.. keep it going.