Showing posts with label சொல்லு_ஆச்சி_சொல்லு_சீரிஸ். Show all posts
Showing posts with label சொல்லு_ஆச்சி_சொல்லு_சீரிஸ். Show all posts

Tuesday, April 16, 2013

ஆஸ்ட்ரேலியா வண்டி in தமிழ்நாடு

"ஆச்சி, ஆஸ்ட்ரேலியா பஸ் பாரு...."

என்ன?? என்பது போல பார்த்தேன்.

"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au   ந்னு போட்டிருக்கு பாரு!!"


ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த‌  TN   என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.


"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!

Wednesday, April 03, 2013

டன் டிக்கிட்டு போய்ட்டா?

மெர்மெய்ட் என்றால் பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை கரைத்து தந்தேன். அதி உற்சாகமாகிவிட்டாள். அவற்றை மோல்டில் ஊற்றினாள். ஊற்றியவுடனே அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். "இதை தொட்டு பார்த்துக்கிட்டிருந்தா சரியா வராது, நைட் ஃபுல்லா இங்கியே இருக்கட்டும், அப்பதான் நல்லா காயும்" என்றேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று பப்புவுக்கு பயம்/சந்தேகம் வந்துவிட்டது.

"பால்கனியில் விட்டுவைத்தால் திருடன் வந்து எடுத்துக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?"

 அவள் செய்வது முக்கியமானது என்ற அவளது எண்ணத்தை கலைக்கவிரும்பாமல், 'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது' என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எண்ணியபடி லைட்டாக ஆரம்பித்தேன்.

"திருடங்க எல்லாம் ஏன் திருடறாங்க? அவங்ககிட்ட என்ன இல்லையோ  அதைத்தானே திருடறாங்க?"

உடனே இடைமறித்துக் கேட்டாள்,

"அப்போ, அவங்க இந்த மெர்மெய்டை திருடிட்டா நாம தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றியா?!!


அவ்வ்வ்வ்!!!

தலைப்பு: பப்புவுக்கு இந்த கதை ரொம்ப ஃபேவரிட். அதான்!

Monday, July 23, 2012

நியூஸ் ரீல்


பப்புவுக்கு சீனியர் சென்றதிலிருந்து தினமும் நியூஸ் பேப்பர் கட்டிங் எடுத்து வர வேண்டும். அன்றைய அல்லது முந்தின செய்தித்தாளிலிருந்து ஒரு செய்தியை வாசித்து, வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும். (ஸ்கூலில் சேர்க்கச் சென்றபோது, பிரின்சிபால் மாண்டிசோரி முறையை விளக்கிவிட்டு பள்ளியின் அருமை பெருமைகளை விவரித்தார். அப்போது, "ஐந்தரை வயதில் எங்க பிள்ளைகள் நியூஸ் பேப்பர் படிக்கும்" என்ற போது புளகாங்கிதமடைந்து விட்டேன். கடைசியில், அது எனக்கே ஆப்பாக வந்து முடியும் என்றா நினைத்தேன்?! பின்னே, நாந்தான் அவளை நியூஸ் படிக்க வைக்க பின்னால் ஓட வேண்டியிருக்கிறது?!!)சரி, அது போகட்டும்,

சமீபத்தில், 'கடவுள் துகள்' பற்றிய செய்தியை வாசித்தாள். விவரித்துச் சொன்னதும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாள். என்னவாம்?

 "ச்சே, இதைத்தான் நான் சயின்டிஸ்டாகி கண்டுபிடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். இவங்க கண்டுபிடிச்சுட்டாங்க! திருட்டுப் பசங்க!!" என்றாள்.


தூக்கிவாரிப்போட்டது!!

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, "சரிப்பா, நான் வேற கண்டுபிடிக்கறேன். அனிமல்ஸ்ல்லாம் பேசும் இல்ல, அது என்ன பேசுதுன்னு நமக்கு தெரியுமா? இல்லல்ல, அதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கப் போறேன். அதை காதுல மாட்டிக்கிட்டு நாம காட்டுல போனா, பேர்ட்ஸ் என்ன பேசுது,சிங்கம் என்ன பேசுதுன்னு நமக்கு தெரியும். அது எவ்ளோ தெரியுமா? அஞ்சு ரூபான்னு வைக்கப் போறேன். ஏன்னா, எல்லா மக்களும் வாங்கணும் இல்ல. உழைக்கும் மக்கள் என்ன பண்ணுவாங்க,அப்புறம்?அதுக்குத்தான்"

 பப்புவின் ஒரிஜினல் ஆசை சயின்டிஸ்டாக வேண்டும், என்றாலும் டெய்லராகவும் ஆக வேண்டும் என்றும் ஆசையாம்!

Thursday, April 12, 2012

'நல்லதே நினைங்க'ன்னு தத்துவம் சொல்றவங்க யாராவது இருக்கீங்களா?

நிலநடுக்கம் என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். ஆயாவிடமும், பப்புவிடமும் நிலநடுக்கத்தைப் பற்றியும், அலுவலகத்தில் சேர், மானிட்டர் எல்லாம் ஆடியதைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவுதான், பப்புவுக்கு ஒரே கேள்விகள்!!

' நிலநடுக்கம் வந்தபோது எங்கள் அலுவலகம் முன்னும் பின்னுமாக ஆடியதா', 'அப்பொழுது எழுந்து நாமும் நின்றுக்கொண்டால் ஆடுவோமா', 'அலுவலகத்தில் சே ஆடியபோது எல்லாரும் விழுந்துவிட்டார்களா', 'ரோட்ல நீ வரும்போது நிலநடுக்கம் வந்துச்சா', 'வண்டில்லாம் எப்படி போகும்', 'கட்டிடம் ஆடும்போது நாம் ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டால் நாம் எப்படி ஆடுவோம்' என்றெல்லாம் குடைந்துக்கொண்டிருந்தாள்.ஸ்ப்ப்பா....இரவு தூங்கப்போகும்போது கூட விடவில்லை.

"ஆச்சி, நைட் நாம தூங்கினப்புறம் நிலநடுக்கம் வரும் இல்ல,ஆச்சி, வீடு விழுந்துடும் இல்ல, அப்போ நான் உன் மேல எல்லாம் இடிஞ்சு விழும்போது நான் தூக்கி தூக்கி போடுவேன். ஏன் சொல்லு, உன் வயித்துலேருந்துதானே நான் வந்தேன், உனக்கு வயிறு வலிக்கும் இல்ல, அப்புறம் நான் உன் மேல படுத்துக் கிட்டு கேட்ச் பண்ணி பண்ணி தூக்கி போடுவேன்" என்று ஏதோ அட்வென்ச்சர் செய்யப்போவது போல் சொல்லிக்கொண்டிருந்தாள். கேட்க கேட்க எனக்குதான் பீதியாக இருந்தது. அவளது உற்சாகத்தை கலைக்க மனம்வராமல், சரி,ஏதாவது சொல்லி வைப்போமே என்று தூக்கக்கலக்கத்தில் "பப்பு, நாம ஏன் அப்படி நடந்துடும், இப்படி நடந்துடும்னு நினைக்கணும், நல்லதா நினைச்சுக்கோ, நிலநடுக்கம் வராதுன்னு. இப்போ தூங்கலாம். நாளைக்கு ஸ்கூல் போகணும் இல்ல‌" என்று சொல்லிவைத்தேன். (சத்தியமா இந்த ஒருவார்த்தைதான் சொன்னேன்...அவ்வ்வ்!)

"ஆச்சி, அப்போ இந்தோனேசியாவில இருக்கிறவங்கல்லாம் நிலநடுக்கம் வரணும்....வரணும்னு நினைச்சாங்களா ஆச்சி, அதனாலதான் வந்துதா?"

அப்போதுதான் நான் செய்த தப்பு புரிந்தது. "இல்ல, பப்பு, அங்க, ஜப்பான்ல எல்லாம் நிலநடுக்கம் அடிக்கடி வர்ற இடம். நாம் மேப்ல பார்த்தோம் இல்ல."

"ஆச்சி, நம்ம நாட்டுக்கு டைனோசர் வரணும்னு நான் நினைச்சுக்கிட்டா வந்துடுமா ஆச்சி?"

"எப்படி வரும்? டைனோசர் இப்போ இருக்கா?" (இது தேவையா?இது தேவையா??)

"ம்ம்...ஆச்சி, எனக்கு மேஜிக் ஸ்டிக் வரணும்னு நினைச்சுக்கிட்டா எனக்கு கிடைக்குமா ஆச்சி?"

"மேஜிக் ஸ்டிக் உலகத்துல இருக்கா?" - பப்பு

"இல்ல, ஆனா, நாம நினைச்சுக்கிட்டா நடக்கும்னு சொன்னே இல்ல? இப்போ நிலநடுக்கம் வரும்னு நினைச்சுக்கிட்டா வந்துடும் இல்ல?"

"ம்ஹூம்...அப்டில்லாம் இல்ல" (அவ்வ்வ்வ்வ்வ்)

"சிலசமயம் நாம நினைச்சா வரும், சிலசமயம் நினைக்கலன்னா வராது, அப்படியா ஆச்சி?" (அய்யய்யோ, நான் தெரியாம சொல்லிட்டேன்,பப்பு..மறந்துடேன் ப்ளீஸ்......)

"அதையே நினைச்சுக்கிட்டு பயபட்டுக்கிட்டு இருக்கணுமா? அதுக்காக சொன்னேன், பப்பு. வந்தா என்ன பண்ணனும்னு மட்டும் தெரிஞ்சுக்கணும், அவ்ளோதான்.வீடு நம்ம மேல விழுந்தா தூக்கிலாம் போட முடியுமா?கட்டிலுக்கு கீழே போய் ஒளிஞ்சுக்கணும்"

"ஆச்சி, ரோட்டுல போகும்போது நிலநடுக்கம் வந்தா?"

"ரோட்லல்லாம் நமக்கு தெரியாது."

"ஆனா, ஆச்சி, எப்படி நாம வராதுன்னு நினைச்சா எப்படி வராம இருக்கும்?"

ஓ..நோ!!திரும்பவும் முதல்ல இருந்தா...............?!!

தலைப்பு: அப்படி சொல்றவங்க யாராவது இருந்தா பப்புகிட்டே பிடிச்சு குடுத்துடுவேன்னு சொல்லத்தான் இந்த தலைப்பு...ஹிஹி

Monday, March 05, 2012

புரட்சிக்குப் பிறகு கோல்ட் போட்டுக்கலாமா?

வீட்டுக்கு அருகே சாலையில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார்கள். காலையில் அந்த வழியாகத்தான் செல்வது வழக்கம். பள்ளமாக இருக்கிறதென்று மாற்று வழியில் சென்றோம். அப்போது நடந்த உரையாடல்:

“ஆச்சி, கோல்ட் எடுக்கப்போறாங்களா?” - பப்பு

“ம்ம்..?”

“பள்ளம் தோண்டி கோல்ட் எடுக்கப்போறாங்களா?” - பப்பு

“இல்ல, சாக்கடை போடப்போறாங்க..”

“புரட்சி நடந்ததும் எல்லாரும் கோல்ட் போட்டுக்கலாமா?” - பப்பு

”ம்ம்..இப்போ கோல்ட் வெலை அதிகமா இருக்கு இல்ல, யாருக்கிட்ட காசு அதிகமா இருக்கோ அவங்களாலதான் இப்போ கோல்ட் வாங்க முடியுது..புரட்சி நடந்ததும் வெலை எல்லாம் இப்டி அதிகமா ஆகாது. எல்லாரலயும் வாங்க முடியும். ஆனா, புரட்சிக்கு அப்புறம் மக்கள் எல்லாம் கோல்ட் எடுக்கிறது எவ்ளோ கஷ்டம்னு புரிஞ்சுப்பாங்க..கோல்ட் எடுக்கறவங்க உயிருக்கு பயப்படாம பள்ளத்துக்குள்ள போறாங்க, மண்ணுல்லாம் மேல விழுந்து, ஆக்சிஜன்ல்லாம் இல்லாம இவ்ளோ கஷ்டப்பட்டு எடுக்கிற கோல்ட் எங்களுக்கு வேணாம்னு சொல்லிடுவாங்க. பிளாஸ்டிக் ஆபரணமே போதும்னு நினைப்பாங்க” - நானேதான்

கொஞ்ச நேரம் அமைதி.

“ஆச்சி, சில்வர் கோல்டுக்கு கீழ கிடைக்கும் இல்ல?” - பப்பு

“ரெண்டுமே மண்ணுக்குள்ளதான் கிடைக்கும், ஆனா அது கொஞ்சம் ஈசியா கிடைக்கும். ஆனா எல்லாருக்கும் கோல்ட்தான ரொம்ப பிடிக்குது” - நான்

“ஆச்சி, இரும்பை ஒடைக்கவே முடியாது இல்ல?” (நேத்து படிச்ச ’சீன சகோதரர்கள்’ கதை எஃபெக்ட்னு நினைக்கிறேன்) - பப்பு

“ம்ம்...பிளாஸ்டிக்கும் இரும்புக்கும் என்ன வித்தியாசம்” - நான்

“பிளாஸ்டிக் வளைக்க முடியும், இரும்பை வளைக்க முடியாது” - பப்பு

“கரெக்ட்....நீ கோல்ட் போட்டுப்பியா?” - நான்

“நான் ஏன் போட்டுக்கணும்? கஷ்டப்பட்டு எடுக்கிற கோல்ட்-ட நான் ஏன் போட்டுக்கணும்? சொல்லு, ஆச்சி” - பப்பு

“குட்!! ” - நான்

ஆச்சி, உழைக்கும் மக்கள், ஏழை மக்கள்தான் கோல்ட் எடுக்கறாங்க, இல்ல?” - பப்பு

“ம்ம்..ஆமா” #அதுக்குள்ள_ஸ்கூல்_வந்துடுச்சு

Monday, February 20, 2012

கடலுக்கு ஷாக் அடிக்க வைப்பது எப்படி?

”ஆச்சி, டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல் தண்ணி காலியாகிடுமாப்பா?” - பப்பு

”என்னது, டார்ச் லைட்டா? எதுக்கு?” - மீ

“ம்ம்..சூரியன்லேருந்து வர்ற லைட்டு தண்ணியை இழுத்திடும் இல்ல... அது மாதிரி..” - பப்பு

” .........” - மீ

” நாம டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல்ல இருக்கிற தண்ணியை காலி பண்ண முடியுமா?” - பப்பு

”ம்..ஹூம்...” - மீ

”டார்ச் லைட்லே அந்த கண்ணாடியை கழட்டிட்டு கடல்ல வைச்சா?” - பப்பு

“ம்ம்..எதுக்கு? வைச்சா என்ன ஆகும்?” - மீ

“மீனுக்கெல்லாம் ஷாக் அடிக்குமா?ஷாக் அடிச்சு செத்துடுமா?சொல்லு ஆச்சி” - பப்பு

Saturday, January 28, 2012

’கொசக்சி பசப்புகழ்’

ஸ்ட்ராவினால் செய்த கிரவுன், ஸ்ட்ராவினால் செய்த மோதிரம், கழுத்து மணிகளைக் கொண்டு கைகளுக்கு ஆபரணம் என்று பப்பு ஒரு மாதிரி கோலத்தில் இருந்தாள். (ஹிஹி...அந்த கம்மல் என்னோடது!)அது, அவளாகவே விளையாடும் கற்பனை ராணி விளையாட்டு. படுக்கும் நேரமாகிவிட்டது என்றதும் பப்புவுக்கு இந்த நகைகளை குறித்து பயம் வந்துவிட்டது. அதைத்தொடர்ந்து.....





”ஆச்சி, திருடங்க எப்படி வர்றாங்க?” - பப்பு

”நைட்ல எல்லாரும் தூங்கினப்புறம். யாருக்கும் தெரியாம, கதவு தெறந்து வருவாங்க....” - மீதான், அசிங்கப்படப்போவது தெரியாமல்!

”அது இல்ல ஆச்சி, திருடங்களாவறதுக்கு யாரு டீச் பண்ணுவாங்க? திருடங்க எப்படி உருவாகறாங்க? சொல்லு....” - பப்பு (ஆகா...அந்த கொசக்சி பசப்புகழ் நீதானா?!பவ்வ்வ்வ்வ்வ்!!)

”ம்ம்..பப்பு, யாரும் திருடங்களாகணும்னு யோசிச்செல்லாம் திருடனாக மாட்டாங்க. திருடங்களாகணும்னு அப்படின்னு யாருக்காவது ஆசையிருக்குமா? சொல்லு..திருடறது சரியா தப்பா?” - நானேதான்.

”தப்பு....” - பப்பு

”ம்ம்...கரெக்ட். இப்போ நீ நம்ம வீட்டுக்கிட்டேயே பாரேன். சிலருக்கு வீடு இருக்கு. சிலருக்கு வீடே இல்ல. வழியிலதான் படுத்திருக்காங்க. சிலருக்கு கார் இருக்கு. சிலருக்கு சாப்பாடு வாங்கக்கூட காசு இல்ல. சிலபேரு ஸ்கூலுக்கு போய் படிக்கிறாங்க. சிலபேரு ஸ்கூல் போக முடியல.சிலபேருக்கிட்ட
நெறைய நகை இருக்கு...”

”ஓ.... அவங்களுக்கு நெகை இல்லன்னா நாமளும் நெகை போட்டுக்காம இருக்கணும். சரியா, ஆச்சி?” - பப்பு

”ம்ம்...இப்போ அவங்களுக்கு எதுவும் கிடைக்காததாலதான் திருடறாங்க. அதுக்கு நாம என்ன பண்ணனும்?” - நான்.

”அவங்களுக்கு சாப்பாடு குடுக்கணும். வீடு குடுக்கணும்.அவங்க நெகை வைச்சிருக்க அளவுக்குத்தான் நாமளும் வைச்சிருக்கணும்...கரெக்டா? சொல்லு ஆச்சி” - பப்பு (இதெயெல்லாம் நான் சொல்லித்தரலையே பப்பு!!)

”அவங்ககிட்டே நகை இல்லன்னா?” - நான்

”அவங்ககிட்டே நகை இல்லன்னா நாம நகை போட்டுக்ககூடாது.” - பப்பு

”ம்ம்..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஸ்கூல், ஒரே மாதிரி வீடுல்லாம் இருந்தா.....” - நான்

”நாம நெகை போட்டுக்கலாம்...” - பப்பு (அவ்வ்வ்வ்!!)

”ம்ம்..அப்போ திருடங்க உருவாக மாட்டாங்க!! எல்லாருக்கும் வேலை கிடைச்சா எல்லாரும் சம்பாரிப்பாங்க இல்ல. அது மாதிரி புது சொசைட்டியை நாம உருவாக்கணும்...” - நான்.

அமைதியாக இருந்தாள். யோசனை என்று நினைக்கிறேன். அப்புறம், ஆயாவிடம் சென்று இதே கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள்.

இதில் ஹைலைட் - கடைசிவரைக்கும், அவள் அணிந்திருப்பது ”நகைகள் ” கேட்டகரியை சேர்ந்ததுதான் என்ற அபார நம்பிக்கை!! அதுவும், அந்த விலைமதிக்க முடியாத”நகைகளைத்” திருடுவதற்கு, திருடன் வருவானோ எனும் கவலையில் அவற்றை கழற்றி, ஒளித்து வைத்துவிட்டுதான் படுத்தாள்.