Friday, October 11, 2013
குங்குமம் தோழியின் "என் ஜன்னல்" வழியே...
Saturday, April 27, 2013
ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??
அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.
அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 - 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.
சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"
அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.
"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு
(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :-))
Wednesday, April 20, 2011
பதிவர்கள் - வாசகர்கள் கவனத்திற்கு
வங்கி விபரங்களோடு பதிவிட்டது நினைவு இருக்கும்.
பதிவு : சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!
இந்தப்பதிவுக்கு வந்த கேவிஆரின் பின்னூட்டத்தையும் மற்றொரு பதிவாக வெளியிட்டிருந்தேன் - பலருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு.
அதில், முக்கியமாக சொல்லியிருந்தது, ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் பணத்தை வசூலித்து மொத்தமாக அனுப்பலாமென்றும் அவர்களது விபரங்களையும் கொடுத்திருந்தார்.
இந்தியாவில் பதிவர் நர்சிமின் வங்கிக்கணக்குக்கு அனுப்புமாறு சொல்லப்பட்டிருந்தது. அப்படி இந்தியாவிலிருந்து வசூலித்த பணம் சிங்கைநாதன் அவர்களுக்குச் சென்றடைய கிட்டதட்ட ஒரு வருட காலம்
எடுத்திருக்கிறது. அந்த செய்தியும் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது. அதோடு அவர் வங்கி ஸ்டேட்மெண்டையும் சரியாக காண்பிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதோடு, பதிவர்கள் வெண்பூ மற்றும் சுரேகா அவர்களின் சமீபத்திய இடுகைகளும் நினைவில் இருக்கும். அதைத் தொடர்ந்து பதிவர் நர்சிம் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தார், ஆனால், சில பதிவர்கள் செலுத்திய தொகை அந்த ஸ்டேட்மெண்ட்டில் இல்லாதது, ட்ரான்சாக்ஷன் ஐடிகளில் குழப்பம் முதலிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிங்கைநாதன் அவர்களுக்கு அனுப்பிய பணம் என்று அவர் கூறுவதில் சந்தேகம் இருப்பதால் பதிவர் நர்சிமிருந்து சரியான கணக்கை பெறுவதற்கும் அதைச் சரிப்பார்ப்பதற்கும் பதிவர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர், ஒரு உயிரைக் காக்க விரைந்து பணம் அனுப்பியும் எவ்வளவோ சொந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் அனுப்பிய பணம் சரியான நேரத்தில் சரியான நபருக்குச் சென்று சேராதது அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பல செய்திகள் கூகுள் பஸ்ஸில்தான் பகிரப்பட்டிருக்கின்றன. பதிவுகளில் இல்லை.
பதிவரின் மருத்துவ உதவிக்காக நர்சிம்மிடம் பணம் கொடுத்தவர்கள் என்று பதிவர் சந்தோஷ் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார்.
நர்சிமின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியவர்கள் மேலே குறிப்பிட்ட பதிவர் சந்தோஷின் இடுகையில் அவர் கோரியிருக்கும் தகவல்களை பின்னூட்டமாக இடவும்.
பெயர் (அதை வெளியிட வேண்டாம் என்றால் கண்டிப்பாக வெளியிடப்படாது)
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் (அளிக்க விருப்பம் இருந்தால்)
நர்சிமிடம் அவர்கள் அளித்த தொகை
எந்த வழியாக பணம் குடுத்திங்க அப்படிங்கிற விவரம் (Cash/Cheque/Account Transfer)
பணம் அனுப்பியவர்கள் தொந்திரவாக நினைக்காமல் இதைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படி உதவிக்காக அனுப்பிய பணத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு மிகுந்த கண்டனத்துக்குரியது. அதே சமயத்தில், பதிவுலகின் மீதான நம்பிக்கை குலைந்ததற்கு ஒரு பதிவராக வெட்கப்படுகிறேன்.
நீங்கள் அனுப்பும் தகவல்கள், எவ்வளவு தொகை ஊழலாக்கப்பட்டது என்பதை அறியும் முயற்சிதான். தயவுசெய்து தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதனை பலருக்கும் சென்று சேரும்பொருட்டு
மற்ற பதிவுலக நண்பர்களும் இவ்விடுகையை வெளியிடலாம் என்றும் கருதுகிறேன்.
Friday, February 04, 2011
#tnfisherman : இன்றிரவு உலகளாவிய பிரச்சாரம்

மீனவர்கள் கொலைகளுக்கெதிராக #tnfisherman என்ற டேகில், ட்விட்டரில் பிரச்சாரம் நடந்து வருவதை அறிவோம். இன்றிரவு, 9 மணிக்கு ’உலகளாவிய பிரச்சாரம்’ மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, http://www.savetnfisherman.org/
இன்று, 9 PMக்கு, தவறாமல், அனைவரும் #tnfisherman டேக்கைகொண்டு மீனவர் கொலைகளுக்கெதிரான நமது கண்டனக்குரல்களையும்,எதிர்ப்புகளையும் பதிவு செய்வோம்.
உதவிக்கு ட்வீட்கள்: http://www.savetnfisherman.org/twits-in-english-tweetem/
Thursday, January 20, 2011
வெரைட்டீஸ் ஆஃப் வாஸ்து!
ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம். அதிலும் எப்போது பிறக்கும் என்று தெரியாதபோது அதற்கு நேரமும் காலமும் குறிப்பது என்ன வகையான லாஜிக்? இவற்றை ஊக்குவிப்பது எந்த விதத்தில் சரி? ஆனால், அந்த கைனக்காலஜிஸ்டை மட்டும் குறைசொல்லிவிட முடியுமா? அவரிடம் வரும் பலர் இது போன்ற நம்பிக்கைகளுடன் இருக்கக்கூடும். அந்த அனுபவம் தந்த பாடத்தால் முன்கூட்டியே இதனை சொல்லியிருக்கவும் கூடும். தொழில்முறை தர்மம் என்று இதனை அவர் நம்பியுமிருக்கலாம். ஆனால், பெண்களும் சரி, ஆண்களும் சரி இவ்வளவு மூடநம்பிக்கைகளுடன் இருக்க வேண்டுமா?
கொஞ்சம் நம்மை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தால், இதற்கு படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது என்பது தெரிய வரும். கிளி ஜோசியத்தை கிண்டலடிக்கும் படித்தவர்கள் வாஸ்துவிடமும் ஃபெங்க் சூயிடமும், சீன வாஸ்துவிடமும் சரணடைகிறார்கள். பாரம்பரிய உணர்வு மிக்கவர்கள் நாடிஜோதிடத்தை, ஓலைச்சுவடிகளைத் தேடிச்செல்கிறார்கள். தனது பகுத்தறிவினால் இவற்றை மறுக்கும் சிலருக்கு இருக்கவே இருக்கிறது எண் கணித ஜோதிடம். இதில் எதுவுமே இல்லையென்றால் சன் சைன்/மூன் சைன். அறிவியல் உண்மைகளை கொண்டு போலித்தனமாக விளக்கப்படும் ஜெம்மாலஜி முதல் ஜோதிட பரிகாரங்கள் வரை - அவரவர் வசதிக்கும் வர்க்கத்திற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது பாதுகாப்புக் கவசங்கள்/குறுக்கு வழிகள். இருந்தாலும் இவை எல்லாம் லாப நோக்குக்காகவே, தங்களை மயக்கி பணம் பிடுங்கவே என்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
என்னதான் படித்து நாசாவில் வேலை செய்தாலும் பழனி மலை கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடித்தால்தானே நமக்கு திருப்தி.! உங்கள் ஜாதகத்துக்கேற்ற வண்ணத்தை சுவர்களுக்கு அடித்தால் தம்பதிகளுக்கிடையில் சமாதானம் நிலவுமாம் - எனில், இரு வேறு ஜாதகங்கள் இருந்தால் அறைக்கு எத்தனை வண்ணங்களை எப்படி அடிப்பார்கள்?
ஆடி மாதமோ அல்லது ஏதோவொரு மாதத்தில் (ஆங்கில ஆகஸ்ட்/செப்டம்பர்) பல கோயில்களில் பெண்கள் வரிசை வரிசையாக அமர்ந்து எலுமிச்சை விளக்குகள் ஏத்தி குத்துவிளக்குடன் பூஜை செய்வதை பார்க்கலாம். ஒரு ஐயர் மைக்செட்டில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருப்பார். மாங்கல்யம் நிலைக்கவோ/கணவனின் நலனுக்கோ/குடும்ப நலனுக்கோ ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு காரணம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், அதே அளவுக்கு ஆண்களும் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு முறை ரயிலில் எனக்கு முன்னால் இருந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்ததில் முக்கிய விஷயமே இந்த ஜோதிடம்தான். பேசிக்கொண்டிருந்த ஒருவரின் மகளுக்கு 2011 இல் சுக்கிரன் நடக்கிறது, 2012 விட்டால் 2018இல்தான் கல்யாணத்திற்கு வரன் பார்க்க முடியும் என்பது போல. அதில் அவர் தனது மகளைக் குறித்து சொன்னது, "வெரி பயஸ்". மணமகள் ஆக பெண்ணுக்குரிய குடும்ப லட்சணங்களிலொன்று "பக்தியாக" இருப்பது. ஆன்மீக நாட்டம் பெண்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமானதொன்று என்றுதான் கற்பிக்கப்படுகிறது. 'பையனுக்கு கடவுள் பக்தி அதிகம்' என்று சொல்லி பொதுவாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


Wednesday, January 19, 2011
அன்னா-வை வரவேற்போம்!
குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு வகுப்புலே படிச்சப்போ, அப்படின்னா, இப்போ இருக்கிற குரங்குல்லாம் ஏன் மனுசனா மாற மாட்டேங்குதுன்னு சிலர் வாதம் பண்ணாங்க. ஆமாந்தானே, அப்போ பரிணாமம் உண்மைன்னா ஏன் புதுசா கண்டுபிடிக்கப்பட்ட உயிர் ஒன்னுக்கூட இல்லன்னும் கேள்விகள் வந்தது. நாலு கால் குரங்குலேருந்து இரண்டு கால் மனுசனா மாறுவது மாதிரி படமெல்லாம் இருக்கேன்னப்போ, படமெல்லாம் யார் வேணா வரையலாம்தானேன்னும் ஒரே சண்டை. அப்புறம், இதைப் பத்தி விரிவாக மேல்நிலை வகுப்புகளில் படிப்பீர்கள்னு இருந்தது. மேல்நிலை வகுப்புக்கு வந்தப்போ, இதைப் பற்றி கீழ்வகுப்புகளில் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்னும் இருந்தது.
அப்புறம் எங்க?எப்படி கட் ஆஃப் மார்க் தேத்தறதுதான் நினைவெல்லாம் நித்யா!
சமீபத்துல ஒரு இடுகையை தமிழ்மணத்தில் வாசிச்சேன். என்னோட மரமண்டைக்கும் லேசா புரியறமாதிரி.பரிணாமம் என்றால் என்ன?-ன்னு அன்னா எழுதிய இடுகை. இதை தொடரா எழுதப்போறதாவும் சொல்லியிருக்காங்க. அனலிஸ்டான அன்னா, பதிவராக தமிழ்மணத்தில் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்! :-)
அதோடு, அவரது குறிப்பில், " நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்று வருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடைய தாகவிருக்கும். நன்றி." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்னா பதிவுலகுகிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வினவின், மகளிர் தின இடுகைகளுக்காக y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள்... என்ற இடுகையை எழுதியிருக்கிறார்.
நன்றி அன்னா. தமிழ்மணத்திற்கு நல்வரவாகுக!
Tuesday, January 18, 2011
தமிழ்மணம் விருதுகள் 2010
முதலில், பங்கேற்ற, வெற்றி பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகள்!! :-)
பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
இல்லத்தரசிகளா, ஆயுள் தண்டனைக் கைதிகளா?
'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு
பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும்
கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!
நூல் விமர்சனம், அறிமுகம்
அந்த "தாயை" சந்திக்க விரும்புகிறீர்களா?
யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!
அரசியல், சமூக விமர்சனங்கள்
கல்லா? மண்ணா?? (And, this is not a game!)
என்ன 'வலி' அழகே!
ராணுவத்தை அனுப்பும் முன்....
ஒன்றும் இல்லை, இதெல்லாம் பரிந்துரைக்கென்று நான் தேர்ந்தெடுத்த இடுகைகள்தான். :-)
இவ்விடுகைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு இதில் எதனை பரிந்துரைப்பது என்று முடிவுக்கு வர இயலாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில், எழுதிய எல்லா இடுகைகளும் பரிந்துரைக்க ஏற்றவை போலவே(காக்கைக்கும்...) தோற்றமளித்துக்கொண்டிருந்தது,எனக்கு. அதோடு 'பூக்காரிகளுக்கும் சுயமரியாதை உண்டு' இடுகையை பரிந்துரைத்தே ஆகவேண்டும் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது. ஏனெனில், பூக்காரியை பரிந்துரைக்காமல் இருந்தால் அது என்னையே நான் மறுதலிப்பதாகும். (மேலும், பெண்களுக்கு என்று ஒரு தனிப்பிரிவு இருந்ததால் மொத்தம் நான்கு பிரிவுகள் என்றும் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தேன்.)எந்தப்பிரிவில் எதை பரிந்துரைப்பது என்பதும் ஒரு தனி குழப்பம். யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தார் தோழர்.ஏழர.
தோழர் ஏழர அவர்களுக்கு மடலிட்டு எனது குழப்பநிலையை சொன்னதோடு பட்டியலையும் பகிர்ந்துக்கொண்டேன். உடனே உதவிக்கு வந்தவர், இடுகைகளை வாசித்து, மாற்றுப் பார்வையையும்,வெற்றி வாய்ப்பையும் கணக்கில் கொண்டு, பிரிவுகளுக்கேற்ற இடுகைகளை மடலிட்டார். எனக்கும் அது ஏற்புடையதாக இருந்ததால் அந்த இடுகைகளை பரிந்துரைத்தேன். உதவிய தோழருக்கு மிக்க நன்றி! :-)
இறுதியாக, மூன்று பிரிவுகளில் மட்டும் பங்கேற்க முடியும் என்ற விதியின்படி,
பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!
நூல் விமர்சனம், அறிமுகம்
யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!
இவ்விடுகைகளை பரிந்துரைக்கு அனுப்பினேன்.
இதில், ஒன்றைத் தவிர மற்ற இரண்டு இடுகைகளும் தொடர்பதிவுகள். பதிவுலகில் தொடர்பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். எங்கிருந்தோ, யாரோ ஒருவர் ஆரம்பிக்க அது தீப்பொறியைப் போல பதிவுலகில் பரவுவதை...சங்கிலியைப் போல தொடர்வதை... நமது எண்ணங்களும் இணைவதை...வாசிக்கவும்,எழுதவும் மிகவும் பிடிக்கும்(சில தொடர்பதிவுகள் தவிர).


எனவே, இந்த விருதுகள் எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல.சாமி/ஆன்மீகம் மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்த தொடர்பதிவுகளை ஆரம்பித்த, அதைத் தொடர்ந்த பதிவர்கள் என்று அனைவருடையதுமான விருது இது! (’கலாச்சாரம் ஃபார் டம்மீஸ்’க்கு பிறகு வேறு தொடர்பதிவுகள் காணோமே!) இந்த வருடமும் அதைவிட சிறந்த, ஆக்கப்பூர்வமான, சுவாரசியமான தொடர்பதிவுகளை எழுதுவோம்.
வாக்கெடுப்பில், இரண்டு கட்டங்களிலும் வாக்களித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்து, குறித்த தேதிகளில் நடத்திய பாங்கிற்கு தமிழ்மணம் குழுவினருக்கும், நிர்வாகத்தினருக்கும் பணியாற்றிய நடுவர்களுக்கும், நெகிழ்ச்சியுடன் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வப்போது எழுந்த சந்தேகங்கள், வாக்களிக்க மடல் வராததைகேட்டு செய்த தொந்திரவுகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி.:-)
பரிசுகள் வழங்கும் நூல் உலகம் மற்றும் அலோகாவிற்கு நன்றி.
Saturday, December 25, 2010
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கடந்த மார்ச் 8 - உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி தங்கள் படைப்புகளை அனுப்புமாறு பதிவர்களிடம், வினவு தளம் அழைப்பு விடுத்திருந்தது. வினவு தளத்தில் வெளியான அந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட இருக்கிறது.
வரும் ஞாயிறு மாலை கீழைக்காற்று பதிப்பகத்தின் சார்பில் நடைபெறும் வினவு, புதிய கலாச்சாரம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தாங்கள் வருகை தருமாறு அன்புடன் கோருகிறோம். கூட்டத்தில் தோழர் மருதையன் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)
எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அனைத்தும் மொத்தமாகவும், தனியாகவும் 30% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வருக!
Saturday, December 04, 2010
ஆழம் இது ஆழமில்ல....ஆழம் இது அய்யா…
அதேபோல, டாக்டர் ஆன்ட்டியின் புடவைகளை மாடியில் காய வைக்கும் அங்கிளை பற்றியும் பெரியவர்கள் மத்தியில் இதே தொனியிலான கிண்டல் இருந்தது.
'பிங்க்' நிறத்தில் அல்லது கொஞ்சம் பூ வேலைப்பாடுகள்/டிசைன்கள் கொண்ட சட்டை/குர்தாக்களை ஆண்கள் அணிந்திருந்தால் நண்பர்கள் மத்தியில் 'கேர்லிஷா இருக்கு' என்றோ 'என்ன, பொண்ணுங்க ட்ரெஸ் மாதிரி இருக்கு' என்று நிச்சயம் ஒரு வரி கமெண்டாவது இருக்கும். கோலம் போடும் ஆணையோ அல்லது கிரிக்கெட் விளையாடும் பெண்ணையோ/சுவர் ஏறும் பெண்ணையோ அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.
"பெண்மனசு " என்ற தொடர்பதிவு இடுகைகள் சிலவற்றை தமிழ்மணத்தில் கணடதும் இதெல்லாம் ஞாபகம் வந்தது.
பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்படுத்தும் பாடல்கள் கொண்ட தொடர்பதிவு என்று சொல்லியிருந்தாலும், ஸ்டீரியோடைப் போன்றுதான் பார்த்ததும் தோன்றியது. "பெண் மனசு" என்றால் அது ஏதோ கடல், ஏரி, ஆழமான குளம்,சுரங்கம், புரிந்துக்கொள்ள முடியாதது என்பது போன்ற வசனங்கள் /ஆட்டோ வாசகங்களால் கூட இருக்கலாம். மேலும், மனம் என்பது மனிதர்கள் எல்லாருக்கும் பொதுவானதுதானே. (இந்த தொடர்பதிவை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியாது. நல்ல நோக்கத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த இடுகை யாரையும் புண்படுத்த அல்ல. )
பெண்களுக்கான செருப்புகளை பார்த்திருக்கிறீர்களா? செருப்பிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஸ்டீரியோடைப்பிங் எல்லாவற்றிலும் இருக்கிறது. மிகவும் ஸ்லீக்காக, நெளிவுகளுடன் பூ வேலைப்பாடுகளுடன் இருக்கும் செருப்புக ளெதுவும் எனக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் செய்து வைத்திருக்கும் அளவுகளுக்குள் என் கால்கள் எப்போதும் பொருந்தியதில்லை. செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் பெருங்குழப்பம் வந்து நேரும். அதுவும், பெண்களின் கால்கள் நெளிவாக ஸ்லீக்காக இருக்கும் என்பது செருப்பு உற்பத்தியாள்ர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை போல. (என்னைப் போன்ற அகன்ற பாதமுடையவர்களைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள். )
அதே போல, பெண்கள் 'இப்படித்தான் இருப்பார்கள்' அல்லது பெண் மனசு 'இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று வரையறைகள் இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பெண் அப்படி இல்லாமல் போய்விட்டால் 'பையன் மாதிரி' இல்லேன்னா 'டாம்பாய்' அதையும் தாண்டினால் இருக்கவே இருக்கிறது 'பொம்பளையா அவ". பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்கள். மெல்லியல்பானவர்கள். வல்னரபிள். சாட்டர்பாக்ஸ். பல்லி கரப்பான்பூச்சிக்கு பயப்படுவார்கள். அப்புறம், வலிமையானவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அதே மாதிரி பையனுக்கும். குழந்தையாக இருக்கும்போது மையிட்டு லிப்ஸ்டிக் போட்டு புகைப்படம் எடுத்து ரசிப்பவர்கள் அதே குழந்தை வளர்ந்த பின் அதையே செய்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தாலியை ஆண் அணிந்தால்? இப்படியிருந்தால் அவமானம் என்றுதான் எல்லோர் மனதிலும் இருக்கிறது.
தமிழ் சினிமா பாடல்களும் இதே ரகம்தான். உண்மையில் பல தமிழ் சினிமா பாடல்கள் பரிச்சயமானது கல்லூரி ஹாஸ்டலில்தான். பெரும்பாலும் 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' மாதிரி பெண்மையின் மென்மை டைப் பாடல்கள். ஓக்கே..அவற்றைப் பற்றி இன்னொரு இடுகையில். இப்போது ,இன்னொரு தொடர் இடுகை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
இந்த ஸ்டீரியோடைப்பிங்க்கு மாறாக/அவற்றிற்கெதிராக நாம் நடந்துக் கொண்டவை பற்றி பகிர்ந்துக்கொள்ளவது தான் அது.
1. நகைகள் மேலோ அல்லது பட்டுபுடைவைகள் மீதோ பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. சிறுவயதில் (ஆறாம்/ஏழாம் வகுப்பு?) கொஞ்சநாட்கள் மட்டும் கொலுசு அணிந்திருக்கிறேன். வளையல்கள் ஒருநாளும் அணிந்ததில்லை. இன்லாஸ் விருப்பத்திற்காக கொஞ்ச நாட்கள் பிரேஸ்லெட் அணிந்தேன். மேக்கப் மேல் ஆர்வம் இருந்ததில்லை. தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளின் போது மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டிருகிறேன்.மற்றபடி, பவுடர் கூட பூசுவதில்லை.தலைக்குப் பூ....நோ வே!
2. எம்ப்ராய்டரி, நடனம், நிட்டிங், க்ரோஷா,தஞ்சாவூர் பெயிண்டிங்,,கோலம் போன்ற நுண்கலைகளில் சூனியம். சமையல் செய்வதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. செய்ததும் இல்லை. இதுக்காக எத்தனையோ பேர்கிட்டே விதவிதமா திட்டு /அட்வைஸ் வாங்கியிருக்கேன்.
3. பிங்க் கலர் அப்படியெல்லாம் எனக்குப் பிடித்தது இல்லை. அதேபோல டெடிபேர், க்பியூட்,லேஸ், ஃபிரில்கள்....பிடித்ததும் இல்லை. சாக்லேட் பிடிக்கும். ஆனா, அது கேர்லியா? ;-)
4. சகோதரி என்று என்னை யாரும் அழைத்தாலொழிய யாரையும் அண்ணா என்று நானாக அழைத்தது இல்லை.
5. பெண்களுக்கென்று தனி கட் வைத்து வடிவைக் காட்டும் ஜீன்ஸை தவிர்ப்பதற்காக ஆண்களுக்கான ஜீன்சை அணிந்திருக்கிறேன்.
.
.
.
.
.
இந்த இடுகைக்கு மறுமொழி எழுதும் முதல் ஐந்து பேரை இத்தொடர் பதிவுக்கு அழைக்கிறேன். :-)
Saturday, November 27, 2010
அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!
- மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
- ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
- நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
- ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
- 1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
- கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
- அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
- 1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
- 1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
- 500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
- அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
- இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
- அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?
கேள்விகளுக்கு விடை காண வாருங்கள்…
நிகழ்ச்சி நிரல்:
அரங்கக்கூட்டம்
தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
கருத்துரை :
”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
விவாத அரங்கம் :
வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!
நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.
தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506
Saturday, November 13, 2010
நட்புலகம்/BuddiesWorld

நண்பர் அன்புவின் முயற்சியால், சென்னையில் நாளை உதயமாகிறது குழந்தைகளின் "நட்புலகம்".
குழந்தைகளின் நட்புலகம் ஒன்றை சென்னையில் அமைக்க கனவு கொண்ட நண்பர்கள் அன்புவிற்கும், தமயந்திக்கும்,அவரது சுட்டிப்பெண் எழிலுக்கும், வாழ்த்துகள். :-)
Tuesday, October 05, 2010
லூசுப் பெண்ணே...லூசுப் பெண்ணே!
"யூஎஸ் லேல்லாம், எதிரிலே யார் வந்தாலும் தெரியாதவங்களா இருந்தா கூட, பார்த்தா விஷ் பண்ணுவாங்க. சிரிப்பாங்க. நம்மை மாதிரி தயக்கம் எல்லாம் கிடையாது. " - முதல் முறை யூ எஸ் போய்ட்டு வர்ற சீனியர்கள் சொன்னது ஞாபகத்தில் வர, 'ஓ, இவங்களும் யூ எஸ் போல இருக்கு, தெரியாதவங்களைப் பார்த்தாக்கூட சிரிக்கறாங்களே, நாமளும் இப்படிதான் இருக்கணும்' ந்னும் நினைச்சுக்கிட்டேன். சரி, ஏதாவது கேட்கலாம் என்று நினைச்சு மறுபடியும் அவங்க பக்கம் திரும்பிய போது , அவங்களுக்கு நேரா இருந்த ஜன்னலை பார்த்துக்கிட்டிருந்தாங்க. லேசான புன்னகையோட இருந்த மாதிரி இருந்தது. எதிர்வரிசையிலே இருந்தவங்க, அறையில் இருந்தவங்க என்னையே பார்க்கற மாதிரி இருந்தது. அந்த அக்காவையும் ஒரு பார்வை பார்த்தாங்க. எனக்குதான் தன்னம்பிக்கை ஜாஸ்தி ஆச்சே! 'அட....இன்னைக்கு அளவுக்கு அதிகமா அழகா இருக்கோம் போல இருக்கு, செலிபிரிட்டிக்கு இதெல்லாம் சகஜமப்பா' ந்னு நினைக்கும்போதே அவர் என் பக்கம் திரும்பி சிரித்தார். இதற்காகவே காத்திருந்தது போல நானும்.
அவருக்கு பக்கத்திலிருந்தவங்க, அவங்க அம்மான்னு நினைக்கறேன்... கடினமான குரல்லே , யாருக்கும் கேட்காம ஏதோ சொன்னார். அதுவரைக்கும் புன்னகை பூத்த முகமா இருந்தவங்க, அவங்க அம்மாவைப் பார்த்து, வாயைக் கோணலாக்கி பல்லெல்லாம் கடிச்சாங்க. ஒரு நிமிஷம் பயந்துட்டேன். அப்போதுதான் உறைச்சது....ஏதோ அப்நார்மல். ரூம்லே இருந்தவங்க என்னை பார்த்த பார்வைக்கும், அடிக்கடி அந்த அக்காவை பார்த்த பார்வைக்கும் அர்த்தமும் அப்போதான் புரிஞ்சது. என்கூட இருந்த இந்த அராத்து கும்பல் கிட்டே சொன்னா ஓட்டித் தள்ளிடுவாங்கன்னு லதா கிட்டே மட்டும் சொல்ல, பேசாம எல்லோருக்கும் நானே சொல்லியிருக்கலாம்னு ஆகிடுச்சு. 'நட்லூஸ் கேர்ல், நாங்க இவ்ளோ பேரு இருக்கோம், அந்த மெண்டலுக்கு உன்னை மட்டும் பார்த்து சிரிக்கணும்னு தோணியிருக்கு பாரு யா' etc etc.
"பொதுவாக எல்லாக் கலாச்சாரங்களிலுமே மனநலக்குறைவு கேலியுடனும், கிண்டலுடனும் அணுகப்படும் போது, கூடவே நமது கலாச்சாரத்தில் பிரத்யேக சமூக, மத, மாந்திரீக, மாற்று மருத்துவத் தாக்கங்களால் மனநோய்கள் வெகுவாக புறக்கணிக்கப்பட்டு, பாதிப்பு முற்றவிடப்படுகின்றன. பல வகையான மனநோய்கள் அடையாளப் படுத்தப்பட்டு அதற்கான தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படாமல் முற்றிலும் குணமாகக் கூடிய நோயாளிகள் 'பைத்தியம்', 'சைக்கோ', 'லூசு', 'மெண்டல்' என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்."
என்று உமாவின் இந்த வரிகளை வாசித்ததும், இந்த சம்பவம் சட்டென்று மின்னல் வெட்டியது.
எனது நண்பர்கள், யாரையும் யாரையும் காயப்படுத்தணும்னு நினைக்கறவங்க இல்லே. ஒருத்தரையொருத்தர் கிண்டலடிச்சுக்கணும், ஓட்டிக்கணும் - இதுதான் முக்கியமே தவிர யாரையும் புண்படுத்தணும்னோ இல்லே வேணும்னே மனவருத்தமடையச் செய்யணும்னோ வார்த்தைகளை கொட்டறவங்க இல்ல. என்ன பண்றது, நாம் பாக்கற சினிமாலேருந்து வாசிக்கிற ஜோக் வரைக்கும் மன இயல்பு பிறழ்ந்தவர்களை கேலி செஞ்சுதானே பழகியிருக்கோம். எதையாவது மாத்தி செஞ்சுட்டா இல்லே கோவம் வந்துட்டா , உடனே "லூசு" ந்னு சொல்றது ரொம்ப இயல்பா வருதுதானே. பப்பு கூட இதை சொல்ல ஆரம்பிச்சுட்டா.....:-(
இந்த வாரம் முழுக்க மனநல விழிப்புணர்வு வாரம்னு உமா இடுகையிலே சொல்லியிருக்காங்க.
"நான் வலையுலகிற்கு பழக்கமான இந்த வருடம் என்னால் செய்ய முடிந்த சிறிய அளவில் இந்த முயற்சி. மனநல/மனநோய் தொடர்பான உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்பினால் (umarudhran@gmail.com) அதன் விளக்கங்களை (எனக்குத் தெரியாதவற்றை ருத்ரன் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்று) வலையில் பிரசுரிக்க முடியும்."
சோ, என்னோட பங்கா இந்த கேள்வி. நீங்களும் கேள்விகளை உமாவுக்கு அனுப்பி வைங்க.
ரொம்ப சின்னபுள்ளத்தனமா இருக்குன்னு யாரும் சொல்லக்கூடாது. இது மனநலம் சம்பந்தப்பட்டதா இல்லே ஆட்டிடியூட் பிரச்சினையான்னும் தெரியலை.
1. சில விஷயங்கள்லே ரொம்ப பொஸசிவ் - என்னோட க்ளோஸ் சர்க்கிள்லே. முக்கியமா, என்னோட பெரிம்மா வேற யார்க்கிட்டேயாவது கொஞ்சம் அன்பா அதாவது என்னோட கசின்ஸ்கிட்டேயோ என்னோட வயசு இருக்கிறவங்க கிட்டேயோ க்ளோசா பேசினா எனக்கு ரொம்ப J ஆகிடும். கோவம் வந்து ஒரே சண்டைதான். இப்பவும் கூட இருக்கு. ஆனா, பப்புகிட்டே அவங்க க்ளோசா இருந்தா எனக்கு சந்தோஷமா இருக்கு, ரசிக்கிறேனே தவிர ஜே வந்தது இல்லே. இப்போ பப்புவும், அதே மாதிரி...பெரிம்மாகிட்டேன்னு மட்டும் இல்லே...அவளோட க்ளோஸ் சர்க்கிள், யாரா இருந்தாலும், அவங்க எப்பவோ ஏதோ ஒரு குட்டி குழந்தையை தூக்கி கொஞ்சினதை கூட மறக்கவே மாட்டா. தூங்கும்போது கரெக்டா இது ஞாபகத்துக்கு வந்துடும்.
அம்மாக்கு தப்பாத பிள்ளைன்னு வீட்டுலே ஜாலியா எடுத்துக்கிட்டாலும் இது நார்மலானதுதானா? ஹெல்தியான ஆட்டிடியுடா? (பப்புவுக்காக இல்லே, எனக்காக கேட்கிறேன். இவ்ளோ வயசாகியும் நான் மாறாதப்போ பப்புவை எப்படி சொல்றது?)
2. அவங்க என்னோட ஃப்ரெண்ட்தான். ஏதாவது ஆர்க்யூமென்ட் போய்ட்டு இருந்தா, அதுக்கு எதிரா விவாதம் பண்ணுவாங்க. அதாவது, அதுதான் அவங்க கருத்துன்னு கிடையாது. ஆனா, விவாதத்துக்கு எதிரா சொல்லணும்னுதான் அவங்க நோக்கம். அதே சமயம், அவங்க சொல்றதுதான் சரின்னு ஏத்துக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அவங்க சொல்றதுதான் அந்த விவாதத்துலே கடைசி பேச்சாவும் இருக்கணும்னு நினைப்பாங்க. அங்கீகாரத்துக்காக ஏங்கறாங்கன்னு நினைசுக்கிட்டாலும், சமயத்துலே ரொம்ப அப்சர்டா இருக்கும்...எரிச்சலாவும்! எப்படி கையாள்றது ? இதை எப்படி நாசூக்கா அவங்ககிட்டே சொல்லி புரிய வைக்கிறது?
Monday, September 27, 2010
கல்லா? மண்ணா?? (And, this is not a game!)
வீணா ஆன்ட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வீணா ஆன்ட்டிக்கு ராமநாதபுரம். "எங்க அம்மா வழியிலே எனக்கு வந்ததுங்க டீச்சர்" என்று ஒரு குட்டி பையிலிருந்து கற்களை காண்பித்தார். அவை வைரக்கற்களும் நவரத்தின கற்களும். அவர்கள் குடும்பத்தில் இது ஒரு வழக்கமாம். அம்மாவின் நகைகள் பெண்களுக்கு பாகமாக வருவதுடன், வைரங்களும் நவரத்தின கற்களும் தலைமுறையாக தலைமுறையாக பெண்களுக்கு பாகம் பிரிப்பதும். மேலும் சொன்னார், " எனக்குதான் பொண்ணு இல்லையே, மருமகளுக்குத்தான் கொடுக்கணும்" .
வீட்டுக்கு வந்த பிறகு பெரிம்மா குணா அத்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - "எங்கிட்டே ஆச்சிக்கும், குட்டிக்கும் கொடுக்கிறதுக்கு இந்த கல்லுங்களும் புக்ஸும்தான் இருக்கு" என்று. எந்த ஊருக்கு நாங்கள் சுற்றுலா சென்றாலும் அங்கிருந்து நினைவுச்சின்னமாக ஒரு கல்லை எடுத்து வருவோம் நானும் குட்டியும். பெரிம்மா சொல்லிக்கொடுத்த பழக்கம்தான். செல்லுமிடங்களில் எல்லாம் அதற்காகவே வித்தியாசமான வடிவங்களில் கற்களை தேடி அலைந்திருக்கிறோம் - ஏற்காடு பார்க்கிலிருந்து மவுண்ட் அபு ஏரி வரை. அந்தக்கல்லில் தேதியை, இடத்தைக் குறித்து எங்கள் சேகரிப்பு இருந்த கடைசி ஷெல்ஃபில் கொண்டு வந்து சேர்த்தால் ஒரு நிம்மதி...சந்தோஷம்...சிறுவயது சந்தோஷங்கள் அவை. இப்போது எந்தக்கல் யாருடையது என்று எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அவை வைரக்கற்களுக்கு ஈடானவையே. ஆனால், எதை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம் என்பதுதான் இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியதாக கருதுகிறேன்.
இதே போலத்தான், தனது பெண்ணிற்கும் கொடுப்பதற்கு விலையுயர்ந்த சொத்தொன்றை வைத்திருந்தார் அஜிதாவின் தந்தை. அவரது சித்தப்பா கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். அஜிதாவின் தந்தையும் அவர்மூலமாக கம்யூனிசக் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் பரிச்சயம். இளமைக்காலத்தில் சித்தப்பாவுடன் சேர்ந்து போராட்டங்களிலும் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில், 'எனக்கு அடுத்த தலைமுறையாக இயக்கத்தில் செயல்பட யாரும் இல்லையே' என்று அஜிதாவின் தந்தையிடம் வருத்தப்பட்டிருக்கிறார். தானும் ஒரு கம்யூனிஸ்டாக இயங்குவதுடன் தனது மகளையும் இயக்கத்தில் சிறுவயதிலிருந்தே செயல்பட வைத்திருக்கிறார் அவர். "உன்னாலே வளர்க்க முடியலைன்னா எங்ககிட்டே கொடுத்துடு" என்று அஜிதாவின் பெரியப்பாக்களும் சித்தப்பாக்களும் கடிந்துக்கொண்டபோது "உங்களை நம்பி விடுவதைவிட எங்கள் தோழர்களையே நம்பி என் மகளை வளர்க்கிறேன்" என்றும், பதிமூன்று வயதான அஜிதாவிடம் "உனக்கு எது சரி, தவறு என்று தீர்மானிக்கும் வயது வரும் வரை நாங்கள்தான் உனக்கான முடிவுகளை எடுக்க வேண்டும், உனக்குத் தீர்மானிக்கும் வயது வந்தபின்னர் இதில் நீடிப்பதும் இல்லாததும் உனது விருப்பம்" என்றும் சொல்லி அஜிதாவை இயக்கத்தில் சேர்த்திருக்கிறார். இவை அனைத்துமே அன்றைய புரட்சித்திருமணத்தில் அஜிதாவின் தந்தையும், அஜிதாவும் மேடையில் பகிர்ந்துக் கொண்டவை.
Its all about the choices we make.
நாமெல்லாருமே, நமக்குக் கிடைக்காதது நமது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். எல்லா போராட்டங்களும் அதனை அடிப்படையாக கொண்டவைதான். நமது சந்ததி இல்லாவிடினும் நமக்கு அடுத்த தலைமுறையாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே விடுதலைப் போராட்டங்களிலிருந்து மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை விளைகின்றன. "நீயாவது நல்லா படிச்சு நல்லா இரு, எங்களை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்" என்று கேட்டு வளராதவர்கள் எத்தனை பேர்? "எந்த வம்பு தும்புலேயும் மாட்டிக்காதே, போனோமா வந்தோமான்னு இரு" என்று தானே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சொந்த சுகத்தைத்தாண்டி நாம் எப்போதாவது யோசிக்க பழக்கப் பட்டிருக்கிறோமா?
இவர்கள் நடுவில் அஜிதாவின் தந்தை செய்திருப்பது புரட்சி இல்லையா?
"கடனை உடனை வாங்கி பொண்ணை நல்லபடியா கல்யாணம் செஞ்சுகொடுக்கணும்" என்ற அம்மா-அப்பாக்கள் மத்தியில், எந்த ப்ரொஃபஷனல் கல்லூரியாலும் தர முடியாத சமூக அறிவை/கல்வியை அஜிதா பெற வாய்ப்பளித்தது அக்குடும்பம் செய்த புரட்சிதானே?
ஏன், ஐடி கலாச்சாரம் ஐடி கலாச்சாரம் என்று திட்டுகிறார்களே, அப்படித் திட்டுபவர்கள் தங்களது பிள்ளைகளை எந்த நம்பிக்கையில் இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார்கள்? படித்து முடித்ததும் ஏதாவதொரு பன்னாட்டு கம்பெனியில் வேலை நிச்சயம் என்ற நம்பிக்கையில்தானே! மழை பெய்தால் ஏரியா மூழ்கி விடுகிறது அல்லது அடுத்த மாநிலங்களில் தமிழனுக்கு வீடு கிடைப்பதில்லை அல்லது ஊழலுக்கெதிராக சீர்கேடுகளுக்கெதிராக - தனது மகளோடு/மகனோடு போராட்டத்தில் இறங்க வேண்டாம், குறைந்த பட்சம் அவர்கள் மகள்கள்/ மகன்கள் அச்சமூக சீர்கேடுகளுக்காக போராட ஊக்கமளிப்பார்களா? இல்லை, அதைப்பற்றித்தான் பேசுவார்களா? பாஸ்போர்ட்டை ரெடியாக்கி, 'போன கையோட முடிந்தால் பிஆர் வாங்கிடு' என்று சொல்வார்களா?
தான் நம்பும் அரசியல் விழுமியங்களுக்காக, தன் காலத்திற்குள் கண்ணால் பார்ப்போமா என்ற முழு உத்திரவாதம் இல்லாவிட்டாலும் என்றாவது நடந்தே தீரும் என்று தான் நம்பும் அரசியல் புரட்சிக்காக, கண்ணெதிரே நடக்கும் ஏகாதிபத்திய சுரண்டல்களையும், முதலாளித்துவ அடக்குமுறையையும் எதிர்த்து, வர்க்க நலன்களையும் தாண்டி போராடும் அவரது வாழ்க்கையே புரட்சிகரமானதில்லையா?
ஒரு ட்யூஷன் சென்டரை மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார் எனது தோழி ஒருவர். பணத்தைவிட தனக்குப் பிடித்ததை செய்யும் மகிழ்ச்சியும் பிறருக்கு உதவி செய்யும் ஆத்ம திருப்தியும் கிடைப்பதாகச் சொல்லுவார். திருமணமானதும் அவர் செய்தது அந்த ட்யூஷன் சென்டரை இழுத்து மூடியதுதான். குடும்பமா, தனது விருப்பமா என்ற கேள்வி வந்ததும் அவர் விட்டுக்கொடுத்தது தனது மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும்தான். இந்த ரேணுகாவை மட்டுமல்ல, திருமணத்திற்காக/குழந்தைக்காக என்று தனது கேரியரை பலியாக்கிய எண்ணற்ற தோழிகள் எனக்குண்டு. அயல்நாட்டு வாழ்க்கைக்காக பல சமரசங்களை செய்துக்கொண்டவர்களை நாம் கண்டுமிருப்போம்.
இவர்கள் நடுவில், தனது சிறுபருவத்திலிருந்தே மக்கள் நலனுக்காக ம.க.இ.க கலைக் குழுவோடு தமிழகம் முழுவதையும் சுற்றுபிரயாணம் செய்தும், கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவையும் மக்களிடையே அம்பலப்படுத்தி பிரச்சாரங்கள் செய்தும் ஒரு கம்பீரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். எப்படியோ பள்ளி வகுப்பில் தேறி ஒரு கல்லூரிப் பட்டம் பெற்று வேலைக்கு அமர்ந்து திருமண்ம் செய்துக் கொண்டு செட்டில் ஆனாலே சாதனைதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண்கள் மத்தியில் அஜிதா செய்தது புரட்சி இல்லையா?
இதில் எதையும் அவர் இழந்துவிட வில்லை, மாறாக பெற்றதே அதிகம். தனது விருப்பத்தில் அல்லது பாக்கெட் மணியில் சிறிது குறைந்தாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர் மத்தியில், இத்தகைய முடிவுக்கு தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களைக் குறித்து பெருமைப்படுவதாக அஜிதா சொன்னார்.
நமது சொந்த வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராமல் சமூக அவலங்களை கண்டிக்கத்தானே நம்மில் பலரும் பழக்கப்பட்டு போயிருக்கிறோம். சமூக சீர்கேடுகளுக்காக பொங்கி போஸ்ட் போடுவதைத்தாண்டி நம்மில் எத்தனை பேர் என்ன செய்திருக்கிறோம்?
குறைந்தபட்சம், சாதியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனிய சடங்குகளையாவது அன்றாட வாழ்வில் நிராகரித்திருக்கிறோமா? கோக்/பெப்சி கம்பெனிகளின் சுரண்டலையாவது புரிந்துக்கொண்டிருக்கிறோமா? அவ்வளவு ஏன், போபாலைக் குறித்து நாம் கவலைப்பட்டதை விட எந்திரனைக் குறித்து நாம் பேசியதே அதிகம்.
முத்துகுமாரின் ஊர்வலத்திற்குச் சென்றதற்கே, அதை வருடா வருடம் நினைத்தே - ஈழப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதைப் போல திருப்தியடையும் நாம், சுயநலம் தாண்டி, எந்த கொள்கைகளுக்கு வாழ்வில் மதிப்பளிக்கிறோம்? நமது எதிர்ப்பை எவ்விதத்தில் காட்டியிருக்கிறோம்?
எதைவிட்டுக் கொடுப்பது என்பது தெரியாமல் அல்லது புரியாமல் சுயத்தை இழந்து வாழும் குடும்பக் குத்துவிளக்குகளுக்கு மத்தியில் அஜிதாவின் குடும்பமும் - பாண்டியனின் குடும்பமும் செய்திருப்பது புரட்சிதான்.
நம்முன் கிடக்கும் கற்களில் எதனை நாம் பொறுக்கியெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அவை வைரக்கற்களா அல்லது வெற்று மண்ணாங்கட்டிகளா?
Saturday, August 14, 2010
ஆகஸ்டு 15 - முற்றுகை

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
ஆக்-15 முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருகFriday, August 13, 2010
Blogcoming!
திரும்ப வந்துட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்! ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி!)
ஆஃபீஸ் டேவுக்காக Fashion..Fusion..dance..rampன்னு கலைச்சேவை செய்ய வேண்டி இருந்தது இவ்வளவு நாளா! கல்லூரி நாட்களை திரும்ப ரீவைண்ட் பண்ணின மாதிரி..ஒரே ஜாலி...க்ரூப்பா ப்ராக்டீஸ்,
ப்ராக்ஸ்டீஸ்ன்னு சொல்லிட்டு கும்மாளம்..கலாட்டா..கிண்டல்..கொஞ்சம் பாலிடிக்ஸ்-ன்னு ரெண்டு வாரம் ஜாலியா போச்சு.. நேத்து ஃபங்ஷனோட எல்லாம் ஓவர்!
இப்போ மிஸ்ஸிங் த ஃபன்...
இதுலே ஆளாளுக்கு, நீங்க நல்லா பண்ணீங்க இல்லே நீங்கதான் கலக்கிட்டீங்க...செம...உங்க டீம் சூப்பர்...சான்சே இல்ல..எல்லாம் உங்க கடின உழைப்புதான்..உங்க அர்ப்பணிப்பு உணர்வுதான்...நீங்க மேக்கப் பண்ணலைன்னா எதுவும் நடந்து இருக்காது...இல்லல்லே...உங்க அயராத உழைப்புதான் காரணம்னு மாத்தி மாத்தி மெயில் அனுப்பிக்கிட்டு, செண்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறேன்னு கண்ணீர் விட வைச்சுட்டு இருக்கிறதாலே அப்படியே எஸ்கேப்-பாகி இங்கே வந்துட்டேன்...:-)
பதிவுலகில் என்ன ஸ்பெஷல்? :-)
Friday, May 14, 2010
500!!
கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....
And, Life goes on...
...500 இடுகைகளைக் கடந்து!!
எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், இடுகைகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை பார்க்க நேர்ந்தது.
எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்!
சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
குறிப்பு : பப்புவுக்கு இந்த உடையை அனுப்பிய கோல்டா அக்காவிற்கு நன்றிகள்..
(அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..ஏன்னா, என்னைத்தானே உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் தெரியும், அக்கா! :-) )
Sunday, April 18, 2010
குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!
பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்! :-)
இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும். )
அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)
1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்
2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்
3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.
4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!
5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!
குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!
என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
(அம்மாக்கள் வலைப்பூவிலும் வெளியாகியது.)
Wednesday, April 14, 2010
Summer camp @ Blogdom!

ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.
2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )
1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்) mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.
2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.
2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.
3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.
4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.
5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.
குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும் நன்றிகள்!!
Monday, March 08, 2010
சுவிஸின் "ஆனந்தி" இதழில் .....

4 Tamil Media-வின் வெளியீடான சுவிஸ் தமிழ் மாத இதழ் "ஆனந்தி"-யில் வலைப்பூங்கா பகுதியில் வந்த சித்திரக்கூடம் பற்றிய அறிமுகம்! இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - ஆனந்திக்கும், 4தமிழ்மீடியாவுக்கும் நன்றிகள்!! சித்திரக்கூடத்தைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
சுவிசிலிருந்து இதனை எனக்கு அனுப்பித்தந்த "சாரல்" சயந்தனுக்கு நன்றிகள்!
பின்குறிப்பு: படித்துப் பார்க்காமல், வெறுமே 'வாழ்த்துகள்' என்று பின்னூட்டமிடுபவர்கள், "ஆனந்தி"யில் சித்திரக்கூடத்தைப் பற்றி எழுதியிருப்பதை 100 முறை வாசித்து, மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாவீர்கள்!
'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்! :-)