Thursday, January 20, 2011

வெரைட்டீஸ் ஆஃப் வாஸ்து!

எனது உறவினருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அவர் ஒரு அதலெடிக் வீராங்கனை. உயர்நிலை பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும் வேலை செய்கிறார். இயற்கையாக பிரசவம் ஆகுமென்று நாங்கள் நினைத்திருக்க, சிசேரியன் செய்ய வேண்டியதாகிவிட்டது. இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அவரது அம்மா விவரித்தது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இன்னும் என்னவெல்லாமாகவோ இருந்தது. டாக்டர் அந்த பெண்ணிடம் 'உனக்கு நார்மல் வேண்டுமா அல்லது சிசேரியனா' என்று கேட்டிருக்கிறார். இவர், நார்மலுக்கு முயற்சி செய்யப் போவதாகச் சொன்னதும், குறித்த தேதியில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துவிடுமாறு சொல்லியிருக்கிறார்.

'முதலில் நார்மலுக்கு முயற்சி செய்வோம், அப்படி இல்லையெனில் ஆபரேஷன்தான் செய்ய வேண்டியிருக்கும்' என்றும் அவர் முதலில் சொன்ன சேர வேண்டிய நாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் புதன்கிழமை அன்று சேரச்சொல்லியிருக்கிறார். 'புதன் மற்றும் வியாழனில் பிறந்து விட்டால் நலம். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு இரண்டு ஆபரேஷன்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது? நீங்கள் யோசித்து சொல்லுங்கள்' என்றும் கேட்டிருக்கிறார். வெள்ளிக்கிழ‌மை பொறந்துட்டா என்ன‌ ப‌ண்றது, தூக்கியா போட்டுட‌ முடியும்? அப்புறம் அவ‌ளுக்கு ட்ரிப்ஸ் ஏத்தி வ‌லி வ‌ர‌லை...எட்டு ம‌ணி நேர‌ம் பார்த்துட்டு 'க‌ர்ப்ப‌ப்பை விரிய‌லை, குழந்தை ஹார்ட்பீட் குறையுது' என்று வெள்ளிக்கிழ‌மை ம‌திய‌த்துக்கு மேல் ஆப‌ரேஷன் நடந்ததாக அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும், பிறந்தநேரம், நட்சத்திரம் குறித்து பேசுகையில், 'ந‌ல்ல‌வேளை கொஞ்ச‌ம் க‌ழிச்சு பிறந்திருந்தா மூலம் நட்சத்திரம், பெண்ணுக்கு ஆகாது' என்றெல்லாம் அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். என‌க்கு சுத்த‌மாக‌ இதில் ஆர்வம் இல்லாத‌தால் அவ‌ர் சொன்ன‌ அந்த‌ ந‌ட்ச‌த்திர‌ விவ‌ர‌ங்க‌ள் புரிப‌ட‌வில்லை. 'வெள்ளிக்கிழ‌மை பைய‌ன் பொற‌ந்தா என்ன‌ பிரச்சினை ஆன்ட்டி?' என்றதற்கு 'ஆகாதுன்னு சொல்லுவாங்க' என்றார். 'அத்தனவாட்டி ஸ்கேன் பண்ணாங்க, ஆணா பொண்ணான்னு சொல்லலை.. அப்புறம், நல்லவேளை வெள்ளிக்கிழமை பொண்ணாப் போச்சு..' என்றும் சொல்லிக்கொண்டார். இத்தனை விபரங்களையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குத்தான் நாம் எந்த கிரகத்தில் வசித்துக்கொண்டிருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது.

நேரம் பார்த்து, குறித்து ஆபரேஷன் செய்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தளவு மூடநம்பிக்கைகளுடன், நட்சத்திரம் பார்த்து குழந்தை பிறப்பை செய்கிறார்கள் என்பதை கண்கூடாகக் கண்டது அன்றுதான். இதிலிருந்து ஆரம்பிக்கும் இந்த 'நாள் நட்சத்திர சடங்குகள்', அதன்பிறகு தீட்டு கழித்தல், குழந்தைக்கு கண் பட்டது என்று ஏராளம் இருக்கும். இவ்வளவு பேசும் என்னாலேயே, மற்ற தீட்டு கழித்தல் போன்ற மூடநம்பிக்கைகளை தடுத்து நிறுத்தினாலும், என் அம்மாவும், மாமியாரும் சேர்ந்து எனது மகளுக்கு திருஷ்டி சுத்திய‌தையோ அல்லது திருஷ்டி பொட்டு இட்ட‌தையோ குறைந்தது ஒரு வருடத்திற்கு தடுக்கமுடியவில்லை. இதில் ம‌ட்டும் என்றில்லை.. ந‌ம்மைய‌றியாம‌லேயே நாம் இவ்வித‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு ஆட்ப‌ட்டு போயிருக்கிறோம்.

ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம். அதிலும் எப்போது பிறக்கும் என்று தெரியாதபோது அதற்கு நேரமும் காலமும் குறிப்பது என்ன வகையான லாஜிக்? இவற்றை ஊக்குவிப்பது எந்த விதத்தில் சரி? ஆனால், அந்த‌ கைன‌க்கால‌ஜிஸ்டை ம‌ட்டும் குறைசொல்லிவிட‌ முடியுமா? அவ‌ரிட‌ம் வ‌ரும் ப‌ல‌ர் இது போன்ற நம்பிக்கைகளுடன்‌ இருக்க‌க்கூடும். அந்த அனுபவம் தந்த பாடத்தால் முன்கூட்டியே இதனை சொல்லியிருக்க‌வும் கூடும். தொழில்முறை த‌ர்ம‌ம் என்று இத‌னை அவர் ந‌ம்பியுமிருக்க‌லாம். ஆனால், பெண்களும் சரி, ஆண்களும் சரி இவ்வ‌ள‌வு மூட‌ந‌ம்பிக்கைக‌ளுட‌ன் இருக்க‌ வேண்டுமா?

கொஞ்சம் நம்மை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தால், இதற்கு ப‌டித்த‌வ‌ர்க‌ள் - ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது என்பது தெரிய வரும். கிளி ஜோசிய‌த்தை கிண்டலடிக்கும்‌ ப‌டித்த‌வ‌ர்க‌ள் வாஸ்துவிட‌மும் ஃபெங்க் சூயிட‌மும், சீன‌ வாஸ்துவிட‌மும் ச‌ர‌ண‌டைகிறார்க‌ள். பார‌ம்ப‌ரிய‌ உண‌ர்வு மிக்க‌வ‌ர்க‌ள் நாடிஜோதிட‌த்தை, ஓலைச்சுவடிகளைத் தேடிச்செல்கிறார்க‌ள். த‌ன‌து ப‌குத்த‌றிவினால் இவ‌ற்றை மறுக்கும் சில‌ருக்கு இருக்க‌வே இருக்கிற‌து எண் கணித‌ ஜோதிடம். இதில் எதுவுமே இல்லையென்றால் சன் சைன்/மூன் சைன். அறிவிய‌ல் உண்மைக‌ளை கொண்டு போலித்த‌ன‌மாக‌ விள‌க்க‌ப்ப‌டும் ஜெம்மாலஜி முதல் ஜோதிட பரிகாரங்கள் வரை - அவ‌ர‌வ‌ர் வ‌ச‌திக்கும் வ‌ர்க்க‌த்திற்கும் ஏற்ற‌ வ‌கையில் இருக்கிற‌து பாதுகாப்புக் க‌வ‌ச‌ங்க‌ள்/குறுக்கு வ‌ழிக‌ள். இருந்தாலும் இவை எல்லாம் லாப நோக்குக்காகவே, தங்களை மயக்கி பணம் பிடுங்கவே என்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

என்ன‌தான் ப‌டித்து நாசாவில் வேலை செய்தாலும் ப‌ழ‌னி மலை கோவிலில் குழ‌ந்தைக்கு மொட்டை அடித்தால்தானே ந‌ம‌க்கு திருப்தி.! உங்கள் ஜாத‌கத்துக்கேற்ற ‌வ‌ண்ணத்தை சுவர்களுக்கு அடித்தால் த‌ம்ப‌திக‌ளுக்கிடையில் ச‌மாதான‌ம் நில‌வுமாம் - எனில், இரு வேறு ஜாத‌க‌ங்க‌ள் இருந்தால் அறைக்கு எத்த‌னை வ‌ண்ண‌ங்க‌ளை எப்ப‌டி அடிப்பார்க‌ள்?


இதைத்தாண்டி இன்னும் ப‌ல‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் இருந்தாலும், பெண்கள்தான் இம் மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்டு போயிருக்கிறார்க‌ளென்றும் பெண்க‌ளை வைத்து ம‌ட்டுமே இந்த‌ பிசின‌ஸ் ந‌ட‌ப்ப‌து போல‌ ஒரு மாய‌த்தோற்றம் கொடுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. பெண்கள் என்றாலே நகை, ஷாப்பிங், அழகு பொருட்கள், கைவினை பொருட்கள் என்று ஸ்டீரியோடைப் செய்வது போலத்தான் இதுவும். ந‌க்மா கிறிஸ்துவ‌ மதத்தைத் தழுவுவதும், ஷில்பாஷெட்டி யோகா ஆசிரிய‌ராவ‌தும் செய்திகளாகின்ற‌ன. இந்த‌ த‌த்துவ‌ங்க‌ளை போதிப்ப‌வ‌ர்க‌ள்/ஜோதிட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள், நான் பார்த்த வரையில்.

ஆடி மாத‌மோ அல்ல‌து ஏதோவொரு மாத‌த்தில் (ஆங்கில‌ ஆக‌ஸ்ட்/செப்ட‌ம்பர்) ப‌ல‌ கோயில்க‌ளில் பெண்க‌ள் வ‌ரிசை வ‌ரிசையாக‌ அம‌ர்ந்து எலுமிச்சை விள‌க்குக‌ள் ஏத்தி குத்துவிள‌க்குட‌ன் பூஜை செய்வ‌தை பார்க்க‌லாம். ஒரு ஐய‌ர் மைக்செட்டில் ம‌ந்திர‌ங்க‌ள் சொல்லிக் கொண்டிருப்பார். மாங்க‌ல்ய‌ம் நிலைக்கவோ/க‌ண‌வ‌னின் ந‌ல‌னுக்கோ/குடும்ப‌ ந‌ல‌னுக்கோ ஒவ்வொருவ‌ருக்கும் ஏதோவொரு கார‌ண‌ம் இருக்க‌த்தான் செய்கிற‌து என்றாலும், அதே அள‌வுக்கு ஆண்களும் இந்த‌ மூட‌நம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்டுதான் இருக்கிறார்க‌ள்.

ஒரு முறை ர‌யிலில் என‌க்கு முன்னால் இருந்த‌ இர‌ண்டு பெண்க‌ள் பேசிக்கொண்டிருந்த‌தில் முக்கிய‌ விஷ‌ய‌மே இந்த‌ ஜோதிட‌ம்தான். பேசிக்கொண்டிருந்த ஒருவரின் ம‌க‌ளுக்கு 2011 இல் சுக்கிர‌ன் ந‌ட‌க்கிற‌து, 2012 விட்டால் 2018இல்தான் க‌ல்யாண‌த்திற்கு வரன் பார்க்க‌ முடியும் என்ப‌து போல. அதில் அவ‌ர் த‌ன‌து ம‌க‌ளைக் குறித்து சொன்ன‌து, "வெரி ப‌ய‌ஸ்". ம‌ணம‌க‌ள் ஆக‌ பெண்ணுக்குரிய‌ குடும்ப‌ ல‌ட்ச‌ண‌ங்க‌ளிலொன்று "ப‌க்தியாக‌" இருப்ப‌து. ஆன்மீக‌ நாட்ட‌ம் பெண்க‌ளுக்கு இருக்க‌வேண்டிய‌ முக்கிய‌மான‌தொன்று என்றுதான் க‌ற்பிக்க‌ப்ப‌டுகிற‌து. 'பைய‌னுக்கு க‌ட‌வுள் ப‌க்தி அதிக‌ம்' என்று சொல்லி பொதுவாக‌க் கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா?


புத்தாண்டை முன்னிட்டு, சில‌ வ‌ங்கிக‌ள் த‌ங்க‌ள‌து வாடிக்கையாள‌ர்க‌ளுக்கு சிரிக்கும் புத்த‌ர் சிலைகளை பார்சல் அனுப்புகிறார்கள்.. வீடு கட்டும் பில்டர்கள் வாஸ்து மூலை பார்த்தே பீரோ வைக்கும் இடத்தையும் கழிப்பறையையும் தீர்மானிக்கிறார்கள். மீன்தொட்டிக‌ள், குட்டி நீருற்றுகள், சீனத்து சுவர்சித்திரம், சமையலறையில் தொங்கும் திராட்சை கொடிகள், குபேரப் பூக்கள் என்று ஏராளம் இருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் ஒரு மிகப்பெரிய நிறுவனமே இதில் இயங்கி வருவது புலப்படும். இதில் எந்த நாட்டு கலாச்சாரத்தை புகுத்தினாலும் நமது மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையிலேயே இருப்பது மற்றுமொரு சுவாரசியம். அதிலும் இதனை நம்புவர்கள் எல்லோரும் பாமரர்களும் அல்ல. சினிமா நடிகர்களிலிருந்து சயின்டிஸ்ட் வரையில் பரந்து விரிந்திருக்கிறார்கள். திருப்பதியில் சாமிக்கு தாலிக்கயிறு கழன்று விழுந்ததென்று தனது தாலிக்கொடியை மாற்றிக்கொண்டு வந்தார் எனக்குத் தெரிந்த அறிவியலாளர் ஒருவர். மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிக்கும் பலரும் வருடாவருடம் திருப்பதிக்குச் சென்று வருபவர்கள்தான்.

அதுவும் பிரச்சினைகள் எதனால் என்று ஆராயும் மனநிலை போய் 'எம் சீல்'/ 'க்யிக் ஃபிக்ஸ்' போல எதை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற மனநிலைதான் அதிகரித்திருக்கிறது. அதற்காக எத்தனை ஆயிரங்களை செல‌வ‌ழிக்க‌வும், எதனை சொன்னாலும் நம்புகின்ற மனநிலையும் இருப்பது என்னதான் அறிவியல் வளர்ந்து பிரபஞ்சத்தை விளக்கினாலும் திரும்பவும் பூமி தட்டை என்பதுபோலத்தான் இருக்கிறது. அதிலும் இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் எனர்ஜி, பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, காஸ்மிக் எனர்ஜி என்று நாம் படித்த அறிவியலையே கேள்விக்குள்ளாக்குகிறது. (எனர்ஜிக்கு பாசிடிவ் - நெகடிவ் இருக்கிறதா?)


அறிவியலையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பி உணர்ச்சி ரீதியான தாக்குதலைத் தொடுக்கிறார்கள். 'வேவ்லெந்த்' என்றும் 'சக்ராஸ்' என்றும் அறிவியலையும், மதநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் சாட் மசாலாவாக சேர்த்து கலக்கி விற்பனை செய்வதைக் காணலாம். அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டும். இல்லையேல் அதுவும் துரதிருஷ்டத்தையே கொண்டு வரும். அடுத்தவர்களுக்கு தயிர் கொடுப்பதிலிருந்து, பணத்தை எந்த நாளில் கொடுக்க வேண்டுமென்பதிலிருந்து... கிழிந்த துணியை தைப்பதற்குக் கூட நேரம் காலம் வகுத்து வைத்திருக்கும் நம்மக்களிடம் இதெல்லாம் விற்பனையாவது கடினமா என்ன? கோள்களையும், திசைகளையும் பற்றி அறிய ஜோதிடம் வழியல்ல, முறையுமல்ல என்பதை படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள்.

ஒரு ந‌ண்ப‌ர் வீட்டில் எங்கு திரும்பினாலும் ஒரு பொம்மையோ பூவோ கொடியோ ஏதோவொன்று இருந்த‌து. எத‌ற்கு இதெல்லாம் என்றத‌ற்கு, "அவ‌ருக்கு உட்கார்ந்த‌ இடத்துலேயே ப‌ண‌ம் வர‌ணும். ந‌ம்ம‌ ப‌ண‌ம்தான், க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ வ‌ர‌ணும்" என்று தன் கணவரது நம்பிக்கைகள் குறித்து விள‌க்க‌ம‌ளித்தார். எல்லோரும் புத்த‌ர் சிலைக‌ளையும், சீன‌ எழுத்துக‌ளையும், குட்டி குட்டி சிலைக‌ளையும் வைத்துக்கொண்டால் போதுமே.. நாட்டில் அனைவ‌ரும் ப‌சி ப‌ட்டினி இன்றி வ‌ள‌மாக‌ இருப்பார்கள்தானே! உழைக்காம‌ல் காசு வ‌ர‌வேண்டும் என்ப‌து என்ன‌ வித‌மான‌ எண்ண‌ம்? ஜோதிடம் மனித உழைப்பை கேவலப்படுத்துகிறது.! சோம்பேறியாக்குகிறது.!

வான அறிவியல் என்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வழிமுறையல்ல, கோள்களை பற்றி அறியும் அறிவியல் நமது அன்றாட வாழ்க்கையில் அவற்றின் கதிர்வீச்சை குறித்ததும் அல்ல. முக்கிய‌மாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கும் வ‌ழி ஜோதிட‌த்தை ந‌ம்புவதிலோ பின்ப‌ற்றுவதிலோ அல்ல. (அதை பின்பற்றுவதால் ஜோதிட சிகாமணிகள் வேண்டுமானால் பணம் சம்பாதிக்கலாமே தவிர) அவற்றால் ஒரு பயனும் இல்லை - த‌ங்க‌ள் குடும்ப‌த்து ந‌லனோ குழ‌ந்தை பிற‌க்கும் நேர‌மோ, நாளோ எதையும் தீர்மானிப்ப‌து இல்லை என்பதை நாம் அறிய ‌ வேண்டும். மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?)

அன்பினால்தான் உறவுகள் கட்டமைக்கப்பட வேண்டுமேயன்றி பூஜை புனஸ்காரங்களாலோ அல்லது பரிகாரங்களாலோ அல்ல. வெற்றிகள் உழைப்பினால்தான் ஈட்டப்பட வேண்டுமேயன்றி ஜோதிடத்தை பின்பற்றுவது போன்ற குறுக்கு வழியால் அல்ல.

குறிப்பு: பொங்கல் தினத்த‌ன்று தனது பயணத்தை துவக்கியிருக்கும் அதீதம் இணையஇதழில் வெளியானது.

19 comments:

Deepa said...

//ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம்?//
Very true. டாகடராகறதுக்கு முன்னாடி ஏதாச்சும் ஹோட்டல்ல வேலை பாத்திருப்பாங்களோ?

Btw, Nice Title!

அமுதா said...

நல்ல பதிவு முல்லை. மனிதனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாத பொழுது மூட நம்பிக்கையைப் பற்றிக் கொள்கிறான்.

The Analyst said...

நல்ல இடுகை. இவற்றையெல்லாம் எப்படி மாற்றுவதென்றே தெரியவில்லை. நானும் எத்தனையோ பேரிடம் விவாதித்துப் பார்த்துள்ளேன். இதுவரைக்கும் ஒரு பலனும் இல்லை. யோசிக்கவே மாட்டோம் என்பவர்களிடம் என்ன செய்யலாம்?

நீங்கள் குறிப்பிட்டுள்ளது very unethical medical practice. எந்த நாளில், எந்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமெனக் கூறும் பல பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் ஒரு வைத்தியரை இப்போது தான் அறிகின்றேன். That's ridiculous.

விட்டால் மகள் தமக்குப் பிடிக்காதவனைக் காதலிப்பாள் என்று ஜோசியர் சொன்ன ஒரே காரணத்திற்காக மகளை A/L கூட முடிக்க விடாமல் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை எனக்குத் தெரியும்.

positive and negative energies are very popular now. எப்படி என்று தெரியவில்லை. எல்லாம் இந்த Deepak Chopra மாதிரியானவர்கள் பிரபலமாக்கியது தானென நினைக்கின்றேன். Secret என்றொரு புத்தகம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? It's an international best seller. எல்லாம் இந்த சத்தி சமாச்சாரம் தான், ஒரு உண்மையும் இல்லை, ஆனால் மேலை நாடுகளில் Oprah Winfrey ஆல் பிரபலமாக்கப்பட்டது. Positive and happy thoughts ஜ universe க்குக் கொடுத்தால் அதையே அதுவும் reflect பண்ணுமோ என்னவோ something crazy like that.

காசு மரம், குபேரனெல்லாம் இங்கு கூட அநேகமான வீடுகளில் உள்ளது.

"மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?"
:) இதே கேள்வியைத்தான் நானும் கெளரி விரதனம், வரலட்சுமி விரதம், மண்ணாங்கட்டி விரத‌மென்று பிடிக்கிற ஆட்களிடம் கேட்கிறனான்? என்னும் உருப்படியான பதிலெதுவும் வரவில்லை.

Latest news is இந்த ராசிகள் எல்லாம் இப்ப மாறிவிட்டதாம். ஏனெனில் பூமி பல ஆயிரம் வருடங்களுக்கு முதலிருந்த இடத்தில் இப்போது இல்லை. :) It's ture, not that it's going to change anything and make people think.

இனியா said...

Great Article Mullai!!!

என்னோடு பணிபுரியும் எல்லோருமே காலையில் வந்தவுடன்
முதல் வேலையாக online astrology பார்த்துவிட்டுத்தான் வேலையை ஆரம்பிக்கின்றார்கள்!

கல்வெட்டு said...

சந்தனமுல்லை,
//ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம். //

ஒரு மருத்துவராக இதைக் கேட்க உரிமை உண்டு. அது தவறு அல்ல.
ஆனால் அதை எந்தக் காரணத்திற்காக (ஜோசியம்/வாஸ்து) மக்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம உள்ளது. அதுபோல காசுக்காக மருத்துவர் பயன்படுத்திக் கொள்வது.
*
பிரசவவலியைத் தாங்கமுடியாது என்று நினைப்பவர்கள் (மனப்பயம்) , பிளஸண்டாவின் அமைப்பு,கடந்தகால அனுபவம் தந்த பயம் என்று பல காரணிகளால் அறுவை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் உண்டு.
*
அறிவியலை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. குழந்தையின் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டி கண்டுபிடித்து உதவிச்ய்யும் வகையில்தான் ஸ்கேன் வந்தது. ஆனால் நம் மக்கள் பெண் குழந்தையை கண்டுபிடித்து கலைக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மருத்துவர் கேட்கலாம். ஆனால் அவரோ அல்லது பிரசவிக்கும் தாய் எந்த நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்துகிறார் என்பதில்தான் அவர்களின் அறம் உள்ளது.

***

ஒரு இலட்சம் சம்பள‌ம் வாங்குவதற்காக, 10,000 செலவில் தனது குழந்தையை அடுத்தவரிடம் வளர்க்க அடகுவைக்கும்( பிள்ளைகள் காப்பகம்)தாய்/தந்தை களின் அறம் "பணம் சார்ந்தது" என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ஒரு இலட்சம் தரும் சந்தோசத்தைவிட என்பிள்ளையை நான் வள‌ர்ப்பதே அதிக சந்தோசம் என்று தாய்/தந்தை யாராவது ஒருவர் வேலையை விடுவார்களா?

அறங்கள் சுயநலம் சார்ந்தது.
செலக்டிவ் அறம்.
வாஸ்துக்கான அறங்களும் அப்படியே.

இதன் நீட்சிதான் கருப்பறை உரிமையை மறுக்கும் கத்தோலிக்கர்களின் "அபார்சன் கூடாது" என்னும் கூச்சல்.

பெறுபவள் முடிவு செய்யட்டும் எதுவாக இருந்தாலும்.

நாள் நட்சத்திரம் வாஸ்து என்பது நமக்கு உவப்பில்லாததுதான் , ஆனால் அந்த சுதந்திரமாவது பெறுபவளுக்கு இருக்கட்டும். மனதளவில் பிரசவ பயம் கொண்ட ஒருவர் தனக்கு சிசேரியன்தான் வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மாமியார் என்ன சொல்வாரோ என்று எண்ணி அதைச் சொல்லப்பயந்து நட்சத்திர நம்பிக்கையைப் பயன்படுத்தி மாமியாரை அடக்கிவிட்டார். சில சமயம் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களின் வழியில் செல்லவேண்டியுள்ளது.
.

குடுகுடுப்பை said...

இதைத்தாண்டி இன்னும் ப‌ல‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் இருந்தாலும், பெண்கள்தான் இம் மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்டு போயிருக்கிறார்க‌ளென்றும் பெண்க‌ளை வைத்து ம‌ட்டுமே இந்த‌ பிசின‌ஸ் ந‌ட‌ப்ப‌து போல‌ ஒரு மாய‌த்தோற்றம் கொடுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. பெண்கள் என்றாலே நகை, ஷாப்பிங், அழகு பொருட்கள், கைவினை பொருட்கள் என்று ஸ்டீரியோடைப் செய்வது போலத்தான் இதுவும். ந‌க்மா கிறிஸ்துவ‌ மதத்தைத் தழுவுவதும், ஷில்பாஷெட்டி யோகா ஆசிரிய‌ராவ‌தும் செய்திகளாகின்ற‌ன. இந்த‌ த‌த்துவ‌ங்க‌ளை போதிப்ப‌வ‌ர்க‌ள்/ஜோதிட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள், நான் பார்த்த வரையில்.//
கன்ஸ்யூமர் வியாபாரி ரிலேசன்ஷிப்.

நான் கூட வெள்ளிக்கிழமைத்தான் பிறந்தேன். என் குடும்பச்சிரமங்களில் அதிகம் சுமந்தும் இருக்கிறேன்.குடும்பத்துக்கு என்ன ஆகாதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.

குடுகுடுப்பை said...

நார்த்.ஈஸ்ட் பேசிங் வீடுதான் தேசிகள் இருக்கிற ஏரியாவிலே விக்கும், சவுத் வெஸ்ட் பேசிங் வீடுகளை வாங்கிற தேசிங்க தமிழகத்தை சேர்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே. அவர்கள் வாஸ்து பார்ப்பதில்லை.

The Analyst said...

கல்வெட்டு நீங்கள் கூறிய‌ அநேகமான கருத்துக்களை முழுதாக ஆமோதிக்கின்றேன்.

இதைத்தவிர,

"ஒரு மருத்துவராக இதைக் கேட்க உரிமை உண்டு. அது தவறு அல்ல."

ceasarian ஒரு major surgery. அதனால் எத்தையோ பிரச்சனைகள் பின் வரக்கூடும் (பயப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, ஆனால் செய்ய வேண்டிய அவசியமில்லாவிடில் செய்யாமல் இருப்பதே நன்று என்று சொல்கின்றேன்). அதனால், வேறு எதுவும் பிர‌ச்ச்னைக‌ள் இல்லாவிடில் (அதாவ‌து ceasarian செய்வ‌த‌ற்கு ம‌ருத்துவ‌ரீதியாக‌ ஒரு கார‌ண‌மும் இல்லாவிடில் இய‌ற்கையான‌ முறையில் பிள்ளை பெறுவ‌தையே ம‌ருத்துவரோ/mid wife ஓ recommend ப‌ண்ண‌ வேண்டும் (Actually it should be a given that the default position is natural vaginal delivery, unless there's a reason). அதோடு பெண்களுக்கு எல்லாத் தகவல்களையும் முதலே கொடுத்து, பின் அவரை birth plan என்ன என யோசித்து பிள்ளை பெறு காலத்திற்கு பல நாட்களுக்கு முன்பே முடிவெடுத்து விடச் சொல்ல வேண்டும். இத‌னாலெயே நான் எல்லோருக்கும் antenatal classess ஜ‌ ப‌ரிந்துரைக்கிற‌னான். இந்தியாவில் இவ்வ‌குப்புக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌வா தெரியாது.


மற்றப்படி, இந்த விடயத்தில் அநேகமாக எல்லாம் பிள்ளைபெறும் பெண்ணின் தெரிவாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

Interesting read about astrology: Is Astrology Rubbish? Don't Get Me Started

redwithanger said...

My opinion about cesarean or normal delivery - ideally, the doctor should give the basket of delivery choices to the patient, explaining the risks and benefits of each (i assume that the patient is able to understand these things). It should finally be the patient who picks up whatever she prefers. And if the patient prefers her baby to be delivered on a particular day at a particular time due to her belief, what harm would it cause as long as the baby remains normal within? Of course, if such decision is deleterious to the baby, then the doctor should intervene at the right time, as the baby is a separate individual whose life cannot be controlled by mom's wishes.

I personally feel that everyone has the 'right' to have their own personal beliefs - which need not be questioned unless harmful. If someone thinks that having a laughing buddha in his room brings happiness - who the hell am I to question his belief? On the other hand, I do think that we should question someone who sells his products with such unproven results.

Truth said...

நல்ல பதிவு.. ஆனால் உங்களது ஜோதிட ராசி மேஷம் என்று உங்களைப் பற்றிய குறிப்புகளில் அவசியமா??

கல்வெட்டு said...

.

அன்புள்ள அன்னா,
நீங்கள் சொல்வதிலோ அல்லது சந்தனமுல்லை சொல்வதிலோ அல்லது உங்களின் நோக்கத்திலோ எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

நாம் அனைவரும் சமுதாயத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒரே புள்ளியில் இருந்து விமர்சிக்கிறோம்.

நான் மாறுபடுவது.. "ஒரே அடியாக மருத்துவருக்கு உரிமை இல்லை" என்று சொல்வதில்தான்.

இருக்கும் எல்லா ஆப்சன்களையும் சொல்லவேண்டியதும், நல்லவற்றைப் பரிந்துரைப்பதும் மருத்துவரின் கடமை.

***

மேற்குலகில் இது நன்றாக நடக்கிறது.

சபிக்கப்பட்ட நமது சமூகத்தில் இன்னும் நட்சத்திரங்களைத் தொங்கிக்கொண்டுள்ளார்கள். சிசெக் என்பது காப்பாற்ற வந்த அறிவியல். ஆனால் அதை வாஸ்துவாக்கியது நம் முட்டாள்கள்.


இன்டெர்நெட்டைக்கூட மணியாட்டப் (ஈ பிராத்தனா) பயன்படுத்தும் நமதுசமூகத்தில்தான் அறிவியல் அவியாலகிறது.

**

redwithanger said...

//இருக்கும் எல்லா ஆப்சன்களையும் சொல்லவேண்டியதும், நல்லவற்றைப் பரிந்துரைப்பதும் மருத்துவரின் கடமை.//

//மேற்குலகில் இது நன்றாக நடக்கிறது. //

U r right! But this is where they provide chapels within hospitals for the patient's relatives to pray even if the doctor does not believe in that. And this is where they would not transfuse a follower of Jehovah's witness if he or she refuses to undergo blood tranfusion(even in lifesaving situations, as long as they are conscious). Doctor's explanation and recommendation - followed by expression of patient's belief (if one has something specific as I said above) - followed by patient's choice of treatment.

redwithanger said...

One clarification - my statement "u r right!" in the above comment is just my head nodding to agree with kalvettu's statement about the situation in western world. I am not in a position to judge someone and say if he is right or wrong.

கல்வெட்டு said...

redwithanger,
வாழ்வது 70 வருசம் என்று கொள்வோம் தனக்கான ஆசைகளுடன் வாழ்வது (வாஸ்து, நட்சத்திரம்) தவறு இல்லை.

வயிற்றில் வாஸ்த்து பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து எட்டுமாசத்தில் பிள்ளையை நோண்டும் கதைகள் உண்டு. இப்போது தாயின் நம்பிக்கையை மதிப்பதா? அல்லது பிள்ளையின் நலத்தை மதிப்பதா?

இங்கே சந்தனமுல்லை சொல்லவருவதின் மையக் கருத்து மூட நம்பிக்கைகள் குறித்தானதும் , தனிப்பட்ட சில மூட நம்பிக்கைகள் சமுதாயத்தின் நோயாக மாறுவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலே...

உடன்கட்டை ஏறுவதும் விதவைக்கு மறுமணம் கூடாது என்பதும் ஒரு காலத்தில் திணிக்கப்பட்ட விருப்பமாகவே இருந்தது. அந்தக்காலப் பெண்களும் அதை ஏதோ சமூக் கடமைபோலத்தான் செய்தார்கள். ‌அவை எல்லாம் கலகக்குரல் மூலம்தான் சரியானது. அம்மாவசை கருமாதி என்று பெண்ணின் வயிற்றை சூறையாடுவது பெண்ணின் விருப்பமாகவே இருந்தாலும் சமூகம் கேள்வி எழுப்பவேண்டும். அது வளர்ந்து ஒரு புதிய சமூக நோயாக மாறிவிடும்.

ஸ்கேன் வந்த புதிதில் பல கூமுட்டைப்பயல்கள் தவறாகவே பயன்படுத்தப் பார்த்தனர். குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக்கூடாது எப்ன்று சட்டம் போடவேண்டிய நிலைமைக்கு அது சமூக நோயானது. தனிப்பட்ட விருப்பமாக ஆரம்பித்தவைகள்தான் கட்டாயச் சடங்குகளாக நோயாக மாறியவை.

**
தாயின் நம்பிக்கை சார்ந்த உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பிள்ளையின் உடல் நலமும் , மருத்துவரின் ஆலோசனையும் வேண்டும்.

தாயின் நம்பிக்கை என்றுதான் பல பெண் குழந்தைகள் அதே தாயால் கொல்லப்பட்ட கதைகள் உண்டு நம் மண்ணில். வெளங்கா வெட்டிகள் இருக்கும் நாட்டில் சில நேரம் அவர்களின் கூமுட்டை நம்பிக்கைகளை வெட்ட வேண்டியுள்ளதே?

The Analyst said...

நன்றி கல்வெட்டு. நீங்கள் சொல்வது எனக்கு விளங்குது.

நான் சொன்னதற்குக் காரணம் சில வைத்தியர் தமது நேரத்தை சேமிப்பதற்காக, vaginal delivery ஜ விட C-section ஜ விரும்புவது தான். World Health Organisation ஏ பல நாடுகளில் அவசியமில்லாத C-sections ஜக் குறைக்க முயற்சிக்கின்றது.

நாம் எல்லோரும் நிச்சயமாக ஒரே புள்ளியில் இருந்து தான் விமர்சிக்கிறோம். :)

redwithanger said...

//உடன்கட்டை ஏறுவதும் விதவைக்கு மறுமணம் கூடாது என்பதும் ஒரு காலத்தில் திணிக்கப்பட்ட விருப்பமாகவே இருந்தது. அந்தக்காலப் பெண்களும் அதை ஏதோ சமூக் கடமைபோலத்தான் செய்தார்கள். ‌//

இது எல்லாமே கொடுமை, பிறரை பாதிக்கக் கூடியவை. கண்டிப்பாக இதை நீக்கித் தான் ஆகணும்.

//அம்மாவசை கருமாதி என்று பெண்ணின் வயிற்றை சூறையாடுவது பெண்ணின் விருப்பமாகவே இருந்தாலும் சமூகம் கேள்வி எழுப்பவேண்டும். அது வளர்ந்து ஒரு புதிய சமூக நோயாக மாறிவிடும். //

இது விரதத்தைக் குறித்ததா? விரதம் தன் செல்ப் கன்றோல்லுக்கு (regulation of instinct drives) உதவுகிறது என்று ஒரு பெண் காரணம் சொன்னால் நான் குறுக்கே பேச மாட்டேன். ஒரு வேளைக்கான விரதம் தீங்கானது அல்ல.

//ஸ்கேன் வந்த புதிதில் பல கூமுட்டைப்பயல்கள் தவறாகவே பயன்படுத்தப் பார்த்தனர். குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக்கூடாது எப்ன்று சட்டம் போடவேண்டிய நிலைமைக்கு அது சமூக நோயானது. தனிப்பட்ட விருப்பமாக ஆரம்பித்தவைகள்தான் கட்டாயச் சடங்குகளாக நோயாக மாறியவை//

நிச்சயமா! ஒரே விஷயம் மேற்குலகில் நன்மை தரக் கூடியதாகவும் இங்கு தீமை தரக் கூடியதாகவும் இருக்கும். காரணம், வாழ்வியல் சூழ்நிலை வெவ்வேறானது. வாழ்வியலை நிர்மாணிக்கும் புறக் காரணிகள் மாறும் பொழுது இதெல்லாம் தானே மாறும் (பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, வறுமை ஒழிதல், survival லின் நிச்சயத்தன்மை கூடுதல்)

//பிள்ளையின் உடல் நலமும் , மருத்துவரின் ஆலோசனையும் வேண்டும். //

கண்டிப்பா!

//வெளங்கா வெட்டிகள் இருக்கும் நாட்டில் சில நேரம் அவர்களின் கூமுட்டை நம்பிக்கைகளை வெட்ட வேண்டியுள்ளதே? //

:-) உண்மை தான்.

redwithanger said...

//வாழ்வது 70 வருசம் என்று கொள்வோம் தனக்கான ஆசைகளுடன் வாழ்வது (வாஸ்து, நட்சத்திரம்) தவறு இல்லை//

நான் சொல்ல வருவதும் அதைத் தான். ஒருவன் தனக்கான நம்பிக்கைகளைக் கொண்டு வாழட்டும். தீங்கு இல்லாத பட்சத்தில், அவனை நாம் கேள்வி கேட்பது சரியென்று தோன்றவில்லை. தன் நம்பிக்கைகளை பிறர் மீது திணித்தல் எவ்வளவு தவறானதோ, அதே போன்று தான் நமது நம்பிக்கையின்மையை நம்பிக்கை உள்ளவர்களின் மீது திணித்தலும். லாபிங் புத்தா என்று ஒரு சிறிய எடுத்துக்காட்டு சுட்டியிருந்தேன். ஆங்கிலத்தில் placebo என்றொரு பதம் உண்டு. இப்படியான ஒன்றை வீட்டில் வைத்துக் கொள்வதால் நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை வழியாக, placebo effect இனால் அவனுக்கு வாழ்வில் நம்பிக்கை கிட்டுகிறது என்றால், அதை உண்மையில்லை என்று நான் சாதிப்பதால் என்ன பயன்? unless I replace his happiness with something else? ஆனால், இதையே பெரும் விலைக்கு ஒரு வியாபாரி விற்றால் கண்டிப்பாக கேள்வி எழுப்புவேன்.

redwithanger said...

//வயிற்றில் வாஸ்த்து பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து எட்டுமாசத்தில் பிள்ளையை நோண்டும் கதைகள் உண்டு. இப்போது தாயின் நம்பிக்கையை மதிப்பதா? அல்லது பிள்ளையின் நலத்தை மதிப்பதா?//

இதற்குத் தான் யோசித்துச் சொல்லி இருக்கிறார்கள். எட்டு மாதக் குழந்தையாக தாய் வயிற்றில் இருந்தாலும், அது இன்னொரு தனி மனிதன் தான். ஆக, எட்டு வாரக் கருவைக் கலைக்கும் உரிமை உள்ள தாய்க்கு, எட்டு மாதக் குழந்தையை பாதிக்கும் நம்பிக்கை இருக்குமாயின், அப்போது குழந்தைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஏன்னா குறைபிறப்பாலே ஏற்படக் கூடிய காம்பிளிகேஷன்ஸ் நிறைய! என்னுடைய முதல் பதிலில் சொல்லியிருந்தேன் - Of course, if such decision is deleterious to the baby, then the doctor should intervene at the right time, as the baby is a separate individual whose life cannot be controlled by mom's wishes.

கையேடு said...

//வாழ்வியலை நிர்மாணிக்கும் புறக் காரணிகள் மாறும் பொழுது இதெல்லாம் தானே மாறும்//

இது புரியலைங்க.. தானாகவே மாறும்னா எப்படி நடக்கும்? சமூகக் குறைபாடுகளை தானாகவே மாற்றும் புறக்காரணிகள் என்னென்ன?