Monday, January 03, 2011

கிண்டர் ஜாயும் டாலர் ஷாப்பும்

பல்பொருள் அங்காடிகளில் அல்லது கடைகளில் பில் போடும் தருணங்களில் உங்களுடன் நிற்கும் குழந்தையின் கண்களை ஒரு மாயவலையால் கட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறதா?!

கின்டர் ஜாய்.


இந்த பெயரை கேட்டதுமே இது என்னவென்று உங்களுக்கு புரிந்து விட்டதெனில் உங்கள் வீட்டில் ஒரு சுட்டி இருக்கிறதென்று அர்த்தம்.

கிண்டர் ஜாய் மட்டுமில்லை...சீட்டோஸ்,குர் குர்ரே, யம்மீஸ், லேஸ், ஹனி லூப்ஸ், சாக்கோஸ், நம்கீன்ஸ், ஃப்ராரோ ரோஷர், பிரிங்க்ல்ஸ் என்று ஏராளம் இருக்கின்றன. அதனோடு இவற்றை வாங்க வைக்க குழந்தைகளை கவரும் வண்ணம் பல விளையாட்டு
பொருட்களும் - பிச்சுக்கு, கார்ட்டூன் கேரக்டர்கள், பென் 10 சீரிஸ், டெலி டப்பீஸ் சீரீஸ்....

நாம் வாங்கிக்கொடுக்காவிட்டாலும் பள்ளியில், வெளியில் என்று எப்படியாவது இந்த நொறுக்குத் தீனிகள் அறிமுகமாவதை தடுக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கான ஏதாவது நிகழ்ச்சி அல்லது பிக்னிக் என்று சென்றால் உணவு இடைவேளை என்றதும் எல்லாக் குழந்தைகளும் பையிலிருந்து எடுப்பது இவற்றில் ஏதாவது ஒரு பாக்கெட்டைத்தான்.பெற்றோர்களுக்கும் வேலை சுலபம். கடையில் வாங்கிக்கொடுத்தால் முடிந்தது. அதனோடு ஒரு தண்ணீர் பாட்டிலை விட ஃபான்டா, பெப்சியை கொண்டு வரும் குழந்தைகளே அதிகம். இந்த காட்சிகளை சர்வ சாதாரணமாக ஒரு சிறுவர் பூங்காவிலோ கடற்கரையிலோ பார்க்கலாம்.

ஆயாவின் மொழியில் சொல்வதென்றால் 'நாலு வாய்க்குக் கூட காணாத' அளவில், காற்றடைத்த பையில் போட்டு விற்பார்கள். விலை 5 ரூ பாக்கெட்டு முதல்.இவர்களின் டார்கெட்டுகள் விளம்பரத்தைப் பார்த்து அழுது அடம் பிடிக்கும் குழந்தைகள், அவர்களின் மத்திய
தர பெற்றோர்.

முதன்முதலில் பப்பு சொல்லித்தான் கிண்டர் ஜாய் எனக்குத்தெரியும்.
விளம்பரங்களின் மகிமை!!


டாம் அண்ட் ஜெர்ரி

கிறிஸ்மஸ் மேரி

மேரா ஹா - ஹஹ்ஹா

மேரா ஜி - ஜிஜி

மேரா ஹா மேரா ஜி

கோகோ கோலா பெப்சி - என்ற பாடலை பப்பு பாடியபோது, அவளுக்கு பெப்சியும் தெரியாது, கோக்கும் தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா? கோகோ கோலா பெப்சி என்று சொல்லும்போது குடிப்பது போல அபிநயித்துக்காட்டினாள். நான்கு வயதுக்குழந்தை ஸ்கூட்டி விளம்பரத்தில் வரும் மேட்ச்சிங் லிப்ஸ்டிக் போல - தனது உடைக்கு மேட்சிங்காக லிப்ஸ்டிக் வேண்டுமென்று கேட்டதைப் பார்த்தால் விளம்பரங்களின் தாக்கமும் எவ்வளவு விரைவாக குழந்தைகளை கவர்ந்துவிடுகின்றன என்பதும் புரியும்!

கிண்டர் ஜாயின் விலையை முதலில் பார்த்துவிட்டு, '30 ரூபாய்க்கு இதுல என்ன இருக்கு? இதை போய் யாராவது வாங்குவாங்களா' என்றுதான் நினைத்தேன். விரைவில் நான் நினைத்தது எவ்வளவு தவறு என்று புரிந்த‌து. விளம்பரத்தை பப்பு மட்டும் பார்க்கவில்லையே! இந்த முட்டையை இரண்டாகப் பிளந்தால் ஒரு பக்கத்தில் கன்டென்ஸ்ட் மில்க் போல கொழகொழாவென்று ..அதனுள் சாக்லேட். மறுபக்கம் சிறு பிளாஸ்டிக் பாகங்கள். அவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வழிமுறைகள். எப்படியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு குழந்தைகளுடன் வரும் யாரும் இதை வாங்காமல் தப்பிக்க முடியாதளவுக்கு குழந்தைகளை தமது பிடியில் வைத்துள்ளனர் இந்த பன்னாட்டு வியாபாரிகள். (குழந்தைகளை அழைத்துவராவிட்டாலும் வாங்கிச்செல்லும் பெற்றோர் ஒருபுறம்.)

இந்த‌ கிண்ட‌ர் ஜாய் ஐரோப்பியத் தயாரிப்பு. உண‌வுபொருள் ப‌ற்றிய‌ க‌ட்டுப்பாடுக‌ள் நிமித்த‌ம் அமெரிக்காவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌தாக ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பு இணைய‌த்தில் வாசித்தேன். ஆனால் இந்தியாவில் சூப்பர் ஹிட்.இந்த‌ கிண்ட‌ர் ஜாயின் வெற்றியைப் பார்த்து, த‌ற்போது ஜெம்ஸும் இதே வடிவத்தில் வருகிறது. உங்களுக்குத் தெரியாவிட்டாலும் உங்கள் குழ‌ந்தைக்குத் தெரிந்திருக்க‌க்கூடும்.
அதே 30 ரூ விலையில் ப‌ந்து வடிவ‌த்தில் உள்ளே பொம்மையுட‌ன். கிண்டர் ஜாயை பார்த்து ச‌ன்ஃபீஸ்ட் பிஸ்க‌ட்டுக‌ளின் உள்ளேயும் பொம்மைக‌ள்.

அது ம‌ட்டுமா..குழந்தைகளுக்கு பிடித்த உணவு லிஸ்டில் முதலில் இடம்பிடிப்பது நூடுல்ஸ், ஃபுடுல்ஸ், கெல்லாக்ஸ் கார்ன்
ப்லேக்ஸ்,ஹனி லூப்ஸ்,அமெரிக்க பாப்கார்ன் பொட்டலங்கள் என்று ப‌ல‌ ப‌ண்ட‌ங்க‌ள். குக்க‌ரிலேயே செய்ய‌லாம் என்றும் அப்பாவே ச‌மைத்துத் த‌ர‌ முடியும் என்று பாப்கார்னுக்குக்கூட எத்த‌னை விள‌ம்ப‌ர‌ங்க‌ள்! இப்போதெல்லாம், க‌டைக‌ளில் எங்கும் நாம் சாப்பிட்டு வ‌ளர்ந்த‌ ம‌க்காச்சோள‌த்தை பார்க்க‌வே முடிவ‌தில்லை. அடுக்கி வைத்திருக்கும் அத்த‌னை சோள‌ங்க‌ளும் 'அமெரிக்க‌ன் கார்ன்'. அது ப‌த்தாதென்று வெளியில் ஆங்காங்கே ஸ்டால் போட்டு வித‌வித‌ சுவைக‌ளில் இதே சோள‌ம். நாம் சாப்பிட்டு வளர்ந்த அந்த ம‌க்காச் சோள‌த்தைப் போல இதில் மெல்வ‌த‌ற்கு அவ‌சிய‌மே இல்லை. அத்த‌னை மிருதுவாக‌ இருக்கிற‌து.

அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌தைதான் நாம் வாங்க‌ வேண்டும். உண்ண‌ வேண்டும். குடிக்க‌ வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக நம்மைக்கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன இந்த தீனிப்பண்டங்களின் சந்தை. பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்லும் ஒரு குடும்பம்
குறைந்தது 20 ரூ 7 அப் பாட்டிலாவது வாங்காமல் திரும்புவதில்லை. சுண்டல், முறுக்கு, கடலை போன்ற உணவுகளை குழந்தைகளின் டப்பாவில் பார்க்கவே முடிவதில்லை. குழ‌ந்தைக‌ள் நொறுக்குத்தீனியும், உண‌வு ப‌ண்ட‌ங்க‌ளும் இந்தியாவில் ஒரு பெரிய‌ ச‌ந்தையை பிடித்து வைத்திருக்கின்றன. அதுவும், ந‌ம‌து குழ‌ந்தை ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைவிட‌ ஊட்ட‌மும் அரை இன்ச்சாவ‌து உய‌ர‌மாக‌வும் இருக்க‌ வேண்டும் என்ற‌ பெற்றோர்க‌ள் இவர்களின் ப‌லியாடுக‌ள். 90களின் நீங்கள் வளர்ந்தவர்களாக இருந்தால் போர்ன்விட்டாவிற்கும் (தன் கி சக்தி - மன் கி சக்தி!) பூஸ்ட்க்கும் (சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!) இடையில் நடந்த போட்டியை மறக்க முடியாது. த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை உய‌ர்த‌ட்டு குழ‌ந்தைக‌ள் போல‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும் என்று விரும்பும் ம‌த்தியவர்க்க ‌பெற்றோர்க‌ள், இவ‌ர்க‌ளைப் பார்த்து ஏங்கும் கீழ்த‌ட்டு ம‌க்க‌ள் என்று ச‌ந்தைக்கு கொள்ளை லாப‌ம்தான்.

அதைவிடுத்தால் இருக்க‌வே இருக்கிற‌து கேஎப்சி, மெக் டோனால்ட்ஸ், டோமினோஸ், பீட்ஸா ஹ‌ட் பீட்ஸா கார்னர்,மேரி பிரவுன் ,காஃபி டே. இதில் டிக்கா பீட்ஸா செட்டிநாடு பீட்ஸா வகையறாவெல்லாம் கூட‌ கிடைக்கும். ஆனால் விலையை ம‌ட்டும் கேட்டுவிடாதீர்க‌ள்...ஒரு பீட்ஸா தோராய‌மாக‌ 350 ரூபாயிலிருந்து ஆர‌ம்பிக்கும். ப‌ர்க‌ர், சான்ட்விச் 75 ரூபாயிலிருந்து, தோராய‌மாக. குடிக்க தண்ணீர் கொடுப்பார்களாவெனத் தெரியாது. ஆனால் குடிக்க கோக்/பெப்ஸி தான் சிறந்தது என்று உங்கள் வீட்டு வாண்டு கூட சொல்லும். அது மட்டுமா, கூட அதிகப்படியான டாப்பிங்ஸ், அத‌ற்கு முன்னால் உண்ண‌, பின்பு உண்ண‌ என்று ஏராள‌ம் இருக்கிற‌து, ப‌ர்சுக்கு வேட்டு வைக்க‌.

வேள‌ச்சேரியில் எஃப்சியும் மெக்டோனால்ட்ஸும் வ‌ந்ததிலிருந்து வார‌ம் ஒரு முறை இங்கு ஏதாவ‌தொன்றிற்கு சென்று வ‌ருவ‌து ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரிடையே ஃபேஷ‌னாக‌ இருக்கிறது. 'இந்த‌ ச‌னிக்கிழ‌மை/ஞாயிற்றுக்கிழ‌மை அங்கு சென்று உண‌வ‌ருந்தினோம்' என்று சொல்வ‌து பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஊருக்குப்போனால் அல்ல‌து த‌விர்க்க‌ இய‌லாத‌
நேர‌த்தில்தான் வெளியில் சாப்பிடுவ‌து என்று வ‌ள‌ர்ந்த‌ த‌லைமுறை, இன்று சாப்பிடுவ‌த‌ற்காக‌ வெளியில் செல்கிற‌து.செல‌வு என்றும் 'அதே காசுக்கு வீட்டுலயே அழகா செஞ்சு சாப்பிடலாம்' என்றும் அலுத்துக்கொள்ளும் பெற்றோர் ஒரு சில‌ர்தான்.

குழந்தைகளின் பிற‌ந்த‌நாள் கொண்டாட்ட‌ங்க‌ளை இதுபோன்ற உணவகங்களில் ந‌ட‌த்துவ‌து அடுத்த‌து. த‌லைக்கு இவ்வ‌ளவு ரூபாய் என்று பல்வேறு திட்டங்களில் உணவுக‌ளை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தருகிறது இந்நிறுவனங்கள். குழந்தைகள் ச‌றுக்கி விளையாட, ப‌ந்துக‌ளில் குதித்து விளையாட சாதனங்கள், ச‌ம‌ய‌ங்க‌ளில் ஏதாவ‌தொரு கார்ட்டூன் கேர‌க்ட‌ர் வேட‌ம‌ணிந்த‌ ஒருவ‌ர் என்று ஒவ்வொரு குழ‌ந்தையும் த‌ன‌து பிற‌ந்த‌நாளை இங்குதான் கொண்டாட‌ வேண்டும் என்ற எண்ண‌த்தை/ஏக்கத்தைத் தோற்றுவிக்கிற‌து,
இந்த‌ உண‌வ‌க‌ங்க‌ள்.

இவை எல்லாமே நம‌து ந‌ல‌னையோ குழ‌ந்தைக‌ளின் ந‌ல‌னை நோக்க‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌த‌ல்ல‌. லாப‌மே நோக்கு. மொத்த‌ ச‌ந்தையும் தன் கையில் இருக்க‌வேண்டும் என்ற‌ அராஜ‌க‌ம். இத‌ற்கு ஒவ்வொரு க‌ம்பெனியும் த‌ன‌து தயாரிப்பைச் ச‌ந்தைப்ப‌டுத்துமுன் தெளிவாக‌ திட்ட‌மிட்டு, உழைத்து, ச‌ர்வேக்க‌ள் ந‌ட‌த்தி, போட்டி க‌ம்பெனிக‌ளை அவ‌தானித்துதான் இற‌ங்குகின்ற‌ன‌. அதாவது, இவ்வளவுதான் உற்பத்தி செய்யவேண்டுமென்று நினைப்பதில்லை. இருக்கும் மொத்த சந்தையையும் கையகப்படுத்துவதுதான் இவர்களின் முழுநோக்கம். குழ‌ந்தைகளும் தங்களை அறியாமலேயே இந்த‌ நுக‌ர்வு க‌லாச்சாரத்திற்கு ஆட்படுகின்றனர் என்ப‌துதான் மிக‌ப்பெரிய‌ சோக‌ம்.நமது குழந்தைகள் சந்தையின் பொம்மைகளாக மறைமுகமாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனபதும் நாமறியாத உண்மை.

தாராள‌ம‌ய‌மாக்க‌லும், ச‌ந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திற‌ந்துவிட்ட‌த‌ன் ப‌ல‌னும் ந‌ம‌து அன்றாட‌ வாழ்க்கையில் எதிரொலிப்ப‌தை உண‌ர‌ வேண்டும்.ஏதோவொரு கான்ஃப்ரன்ஸ் அறைகளில் அமர்ந்துக்கொண்டு நாமும் நமது குழந்தைகளும் என்ன உண்ண வேண்டும் என்றும் அருந்த வேண்டும் என்று தீர்மானிப்பது அன்னியர்கள். இதில் எதுவுமே இந்திய தயாரிப்பு கிடையாது. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள்.

இந்நிறுவனங்களின் அசுர‌ப்ப‌சிக்கு ப‌லியாவ‌து குழ‌ந்தைகளும்,வெளிநாட்டு மோக‌த்தில் வ‌ளர்க்க‌ ஆசைப்ப‌டும் பெற்றோர்க‌ளும்தான். முத‌லில், விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் மூலம் ந‌ம்மைக் க‌வ‌ர்வ‌து (பெற்றோராக‌) அதில் அட‌ங்கியிருக்கும் ஊட்ட‌ச்ச‌த்துக‌ள். அடுத்து அதன் அள‌வு. பின்னர் அத‌னோடு வ‌ரும் இல‌வ‌ச‌ம் அல்ல‌து
என்ன‌ லாப‌ம். (பைசா வ‌சூல்!) குழ‌ந்தைக‌ளுக்கோ, சாக்லேட் அல்ல‌து நொறுக்கு சுவை, பிடித்த‌ வ‌ண்ண‌த்தில்...அத‌னோடு ஒவ்வொரு முறையும் வாங்க‌ வைக்க‌ அவ‌ர்க‌ள் த‌ரும் வித‌வித‌மான‌ பொம்மைக‌ள். ஏன் அவ‌ர்க‌ள் ஒரே பொம்மையைத் த‌ருவ‌தில்லை? கிண்ட‌ர் ஜாயை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு முட்டையிலும் ஒரு பொம்மை இருக்கிற‌து. ஒரே பொம்மை இர‌ண்டு முறை பெரும்பாலும் கிடைப்பதில்லை. (90களின் பிக் ஃபன்னின் ரன் அட்டைகளும் - எவ்ரிடே பேட்டரியின் கவரை அனுப்பினால் அவர்கள் அனுப்பும் சிவப்பு நிற கழுத்தணி!)

சென்னையில் தற்போது தொடர்ச்சியாகத் துவ‌ங்க‌ப்ப‌டும் 'டால‌ர் ஷாப்'க‌ளை ப‌ற்றிய‌ அறிவிப்பு பலகைக‌ளை அங்க‌ங்குக் காண‌லாம். எந்த‌ பொருளை எடுத்தாலும் ஒரு டால‌ரின் விலை..அதாவ‌து ஐம்ப‌து ரூபாய் ம‌ற்றும் வ‌ரி.ஜூஸ் பாட்டில்க‌ளை, சாக்லேட் சிர‌ப்புக‌ளை
அடுக்கி வைத்திருப்பார்க‌ள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். சமயங்களில் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். எப்படி கட்டுபடியாகிறது? அந்த டப்பாக்களின் இறுதித்தேதியில் இருக்கிறது விடை. ஒன்று வாங்கினால் ஒன்று இல‌வச‌ம் என்றால் அத‌ன் இறுதித் தேதிக்கு ஒரு மாத‌ம் இருக்கிற‌து என்று பொருள். இர‌ண்டு இல‌வ‌ச‌ம் என்றால் இன்னும் ஒரு வார‌மே இருக்கிற‌து என்று பொருள். த‌ங்க‌ள் நாட்டில் செல்லுப‌டியாகாததை, விற்காத‌தை இங்கு திணிப்ப‌த‌ற்கு பெய‌ர் என்ன‌? யாரும் வாங்க‌வில்லையெனில் தூக்கிப்போடாம‌ல் அதையும் ச‌ந்தைப்ப‌டுத்தி லாப‌ம் பார்ப்ப‌த‌ற்கு ந‌ம‌து அர‌சும் உட‌ந்தையாக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

24 comments:

இனியவன் said...

நல்ல கருத்துதான். ஆனால் கொஞ்சம் சுருக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டாலர் ஷாப் பற்றி தெரியாது.. இந்த கிண்டர் ஜாய் , ஜெம்ஸ் டாய் அண்ட்
மெக் டீ டாய் ஸ் இதுகளுக்காகத்தான் எனக்கும் சபரிக்கும் சண்டையே நடக்கும்.. என் பொண்ணு இதையெல்லாம் சொன்னா புரிஞ்சுப்பா .இவன் நோ வே .. ஒரேடியா மறுப்பதால் எதிரிங்களா ஆகிட்டோம்..
:(

Sriakila said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டியது.

எல்லார் வீட்டிலும் கிண்டர் ஜாய்க்கு அடிமையாகும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். இந்த நிலைக்கு நாமும் தள்ளப்பட்டிருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

அம்பிகா said...

நல்ல பகிர்வு முல்லை. இவைகள் குழந்தைகள் உடல்நலனுக்கும் ஊறு விளைவிக்கின்றன. ஆனாலும் விளம்பரங்களில் மயங்கித்தான் போகிறார்கள்.

விஜய் said...

நல்ல பகிர்வு

குர்குரே, லேஸ் போன்றவற்றில் Monosodium glutamate (MSG) இருக்கிறது

திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும்

இது உடலுக்கு மிகவும் கெடுதல்

அரசாங்கமே இதுபோன்ற பொருள்களை தடை செய்ய வேண்டும்

விஜய்

பூங்குழலி said...

நல்ல பதிவு முல்லை .குழந்தைகளுக்கான சேனல்களில் இவை அதிகம் விளம்பரப்படுத்தப்படுகின்றன .என் சின்ன மகனுக்கு கூட தெரியும் எதற்கு எது இலவசம் என்று ...கடையில் போய் காம்பிளான் வேண்டும் என்று ஒரே அடம் ...வளர முடியும் என்று .கடையிலிருந்த பையன் சொன்னான் ,"ஏம்ப்பா அப்பன்னா எல்லாரும் வளர்ந்திருக்க மாட்டாங்களா ?" .விளம்பரங்களில் வரும் கவர்ச்சியான பெற்றோர் போல நாமும் இருக்க வேண்டும் என்று அடுத்து குழந்தைகள் ஆசைப்பட ஆரம்பித்தால் என்னவாகும் ?

thejasvie said...

நாம் வாங்கிக்கொடுக்காவிட்டாலும் பள்ளியில், வெளியில் என்று எப்படியாவது இந்த நொறுக்குத் தீனிகள் அறிமுகமாவதை தடுக்க முடிவதில்லை.-
உண்மை தான் முதலில் snacks பாக்ஸ்ற்கு சுண்டலும், சத்துமாவு உருண்டைகளும், பழங்களுமே என் பெண்ணிற்காக கொடுத்தனுப்பினேன். ஆனால் பள்ளியில் இவளுடன் யாரும் ஷேர் செய்து கொள்வதில்லையாம், அவர்களும் நீங்கள் குறிப்பிட்டது போல பாக்கெட் உணவு வகைகளை கொண்டுவருவதால்...

அன்புடன் அருணா said...

இந்த வகையான தின்பண்டங்களும் ,டாலர் ஷாப்களும்,குழந்தைகளை மட்டுமல்ல முல்லை நிறைய பெரியவர்களையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு முல்லை.

எழுபதுகளில் ‘மங்காரம் வேஃபர் பிஸ்கட்’ பாக்கெட்டுக்கள் கார் படங்களை வைத்து ஒரு பெரிய கலெக்‌ஷனை செய்யத் தூண்டியது நினைவுக்கு வருகிறது.

உணவு முறைகள், வழக்கங்கள் பெருமளவில் மாறி விட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. கிண்டர் ஜாய் போன்ற இப்போதைய சந்தை வரவுகளைக் கவனித்ததில்லை. ஆனால் என் மகன் படித்த பள்ளியில் /குர் குர்ரே, யம்மீஸ், லேஸ்/ போன்றவற்றிற்கும் தடையும், அவை junk food எனும் தொடர் அறிவுறுத்தலும் குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

Best Online Jobs said...

Good Post and Use Full Information

☀நான் ஆதவன்☀ said...

நச் போஸ்ட் பாஸ்

வல்லிசிம்ஹன் said...

நல்ல பதிவு முல்லை.
எங்கள் பேரனுக்குத் தெரிந்திருக்கும் ப்ராண்ட் பெயர்கள் ஆச்சரியம் கொடுக்கிறது.
இங்க வந்து இரண்டு வாரங்களுக்குள்
கற்றுக் கொண்டது:0) லேஸ் சிப்ஸ் அங்க சாப்பிட்ட டேஸ்ட் இல்லாவிட்டாலும் அம்மாவுடன் தினமும் சண்டைதான். அவள் வேண்டாம் சொல்ல இங்கயாவது ஃப்ரீயா விடு ன்னு சொல்கிறான்.

செந்தழல் ரவி said...

கிண்டர்ஜாய் பிடிக்கவில்லை அல்லது அது தடைசெய்யப்பட்ட உணவு, அதில் ஆபத்தான் பொருட்கள் இருந்தால் அதனை சொல்லலாமே !!

அமெரிக்க / முதலாளித்துவம் பற்றி எதிப்புணர்வை அப்படியே தூவுவது போல இருக்கிறதே ?

அவன் இங்கே கடை விரிக்கிறான், நமது சாப்ட்வேர் கம்பெனி முதலாளிகள் அங்கே கடை விரிப்பதால் நாம் இங்கே பிழைப்பை ஓட்டி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறோம்.

ஒரு பேச்சுக்காக இரண்டும் பரஸ்பரம் தடைவிதிக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

Arul said...

பப்பு கேட்டா பரவாயில்லை ..எங்க வீட்டுல என் மனைவி கேக்கறாங்க :) .. ஒவ்வொரு வாட்டியும் கடைக்கு போகும் போதும் , பெட்ரோல் போட போகும் போதும் . எங்க வீட்டுல அவ்வளோ குட்டி குட்டி பொம்மைங்க இருக்கு :)

வினவு said...

குழந்தைகள் உலகம் பன்னாட்டு நிறுவனங்களால் சிதைக்கப்படுவது பற்றிய நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி, அமெரிக்கா காரனை வைத்து நாம் பிழைக்கவில்லை, நம்மை வைத்து அவன்தான் சம்பாதிக்கிறான்,

ரோகிணிசிவா said...

//அமெரிக்கா காரனை வைத்து நாம் பிழைக்கவில்லை, நம்மை வைத்து அவன்தான் சம்பாதிக்கிறான்,//
information

ரோகிணிசிவா said...

I like ur approach,rather gimmicks i sud tell Mullai,finally u end up with propagating ur thoughts , how much ever u may beat around the bush for it,

"உழவன்" "Uzhavan" said...

நல்ல பதிவு

The Analyst said...

பல நாடுகளில் இப்பிரச்சனை உள்ளது. இங்கும் அதே கதை தான். இங்கு kinder surprise. கடைகளில் counters க்குப் பக்கத்திலேயே தான் வைத்திருப்பர். வியாபார உத்தி. அது அவற்றைத் தயாரித்து விநியோகிக்கும் company களின் பிழையென்றே கருதுகின்றேன். இங்கும் அண்மைக் காலம் வரைக்கும் காலையில் குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் போதே பல fast foods ads உம் காண்பிக்கப்பட்டது. இப்போது அதைத் தடுப்பதற்குச் சட்டம் கொண்டுவந்தாச்சு.

நாம் தான் பிள்ளைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வழிசெய்ய வேண்டும். எந்தவொரு sodaக்களும் சிறு பிள்ளைகளுக்கு கூடாதென்று தெரிந்தும் அவர்களுக்கு முதலில் பெற்றோரே அறிமுகப்படுத்துகின்றனர். TV ல் விளம்பரம் வரும் போது அதைப் பற்றி பிள்ளைகளுடன் கதைத்து விளக்குவது எந்தளவு பயன் தருமென எனக்குத் தெரியாது.

நாம் வீட்டில் செய்வது இதுதான். அகரனிற்கு இரண்டு வயதாகும் மட்டும் TV காட்டவில்லை. இப்போது ஒரு நாளில் 30 நிமிடங்கள் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் மட்டும் பார்க்க விடுவோம். ஆனால் normal TV இல் அல்ல, அதோடு இதுவரையில் எந்தவொரு விளம்பரங்களையும் பார்க்க விட்டதில்லை. தனியா இந்தமாதிரி fast foods, kinder surprise விளம்பரங்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் கூட விளம்பரப்படுத்தும் விதமும் consumerism உம் எமது முடிவிற்கு முக்கிய காரணங்கள். பின் அவன் கொஞ்சம் வளர்ந்து வெளி உலகில் மற்றோர் செய்வதை விரும்பும் போது நாமாக அவனுக்கு விளக்கலாமென எண்ணியுள்ளோம்.

Deepa said...

Very well written.
//அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌தைதான் நாம் வாங்க‌ வேண்டும். உண்ண‌ வேண்டும். குடிக்க‌ வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக நம்மைக்கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன இந்த தீனிப்பண்டங்களின் சந்தை. பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்லும் ஒரு குடும்பம் குறைந்தது 20 ரூ 7 அப் பாட்டிலாவது வாங்காமல் திரும்புவதில்லை. சுண்டல், முறுக்கு, கடலை போன்ற உணவுகளை குழந்தைகளின் டப்பாவில் பார்க்கவே முடிவதில்லை. குழ‌ந்தைக‌ள் நொறுக்குத்தீனியும், உண‌வு ப‌ண்ட‌ங்க‌ளும் இந்தியாவில் ஒரு பெரிய‌ ச‌ந்தையை பிடித்து வைத்திருக்கின்றன// Very true. We must realize this.

ஹுஸைனம்மா said...

குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லலாம்; அல்லது கண்டித்துச் செயல்படுத்தலாம்.

ஆனால், இதுபோலவே பெரியவர்களுக்கும் ஆசை காட்டி, வேலை கொடுத்துப் பிழிந்தெடுக்கும் அமெரிக்க/பன்னாட்டு நிறுவனங்களை நம்மால் விலக்க முடிகிறதா என்ன? வேலை தேடும்போது அதுபோன்ற நிறுவனங்களைத்தானே ப்ரிஃபெர் செய்கிறோம்?

மாதேவி said...

நல்லபதிவு.

விளம்பரங்களின் கவர்சியால் அறியாத வயதில் குழந்தைகள் ஆசைப்படும். புரிந்துகொண்டால் விட்டுவிடுவார்கள்.

பின்னோக்கி said...

என் சிறு வயதில் binaca/cibaca ? டூத் பேஸ் கவரின் உள்ளே வித விதமான சிறிய பொம்மைகள் இருக்கும். இந்த டெக்னிக் பல வருடங்களாக இருக்கிறது

ராமலக்ஷ்மி said...

@ பின்னோக்கி,

எங்கள் காலத்தில் அது பினாகாதான். ப்ரஷுக்கு ஒரு நீண்ட ஸீ த்ரூ பாக்ஸ். அதன் முன்னும் பின்னுமாய் பொம்மையைப் பொறுத்திக் கொள்கிற மாதிரியாய் கிடைத்து வந்தன:)! கோபால் பல்பொடியின் சுவையை மீறி.. மறந்து.. பினாகாவுக்கு தாவி விட்டோம் அப்போது:)))!