Wednesday, January 12, 2011

உயிரைப் பணயம் கேட்கும் மெட்ரோக்கள்

அலுவ‌ல‌க‌ம் செல்லும் வ‌ழியில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'இங்கேதான் மெட்ரோ ரயில் ட்ராக் வரப்போகுது, இப்பவே வாங்கி போட்டீங்கன்னா நல்லா விலையேறிடும்‌' என்று ஐந்து வருடங்களுக்கு முன் தரகர் காட்டிய கல்லும் மண்ணுமான இடம், இன்று தார்சாலையும், தூண்களுமாக இருக்கிறது. சைன் போர்டுகள் அவ்வப்போது இடம் மாறும். டேக் டைவர்சன்கள் முளைக்கும். அங்குமிங்கும் ஓடியா‌டி சின்ன‌ஞ்சிறு ம‌னித‌ர்க‌ள் அந்த‌ பிர‌மாண்டமான‌ பால‌த்தை எழுப்பிக் கொண்டிருப்பார்க‌ள். புரியாத மொழியில் அவர்களுக்குள் க‌த்திக் கொள்வார்கள். ஒருசிலர் தலையில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தொப்பி அணிந்திருப்பார்கள். சாயங்கால வேளைகளில் ஃப்லோரசன்ட் நிற கோட் அணிந்திருப்பார்கள். கண்முன்னால் அந்த பாலம் உயிர் பெற்று எழுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே கடந்து செல்வேன்.

ஒரு நாள் காலை, எட்டு மணி இருக்கும். பலநூறு அடிகள் மேலே, தூணின் ஓரத்தில் அமர்ந்தபடி வெல்டிங் வேலை செய்துக்கொண்டிருந்தார் ஒருவர். கண்களில் கருப்புக்கண்ணாடி. அதைத்தாண்டி வேறு எந்த பாதுகாப்பு கவசங்களோ உடைகளோ இல்லை. குறைந்தபட்சம் தலைக்குக் கூட ஹெல்மெட் போன்ற கவசங்களை அவர்கள் அணிந்திருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் மிகவும் சாவதானமாக ஏதோ சொன்னபடி அவர‌ருகே உதவி செய்ய வந்தார். அவரும் எந்த விசேஷ பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை. பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இல்லாமல், ஒருவர் கம்பிகளை பிடித்துக்கொள்ள இன்னொருவர் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். பார்க்கும் யாருக்கும் வயிற்றில் சொரேர் நிச்ச‌ய‌ம்!

ஒருநிமிடம், அவர்கள் நழுவினாலோ அல்லது சறுக்கினாலோ பிடித்துக் கொள்ளவோ, தடுக்கவோ ஏதுமில்லை. கீழே தார்சாலை. அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற தொப்பி வெயில்/மழையைத்தவிர வேறு எதற்கும் உதவாது.கரணம் தப்பினால் மரணம் போல்தான்.

அடுத்த‌ சில‌ வார‌ங்க‌ளில், அவ‌ர்க‌ள் வெல்டிங் வேலையை இன்னும் சில‌ தூண்க‌ளுக்க‌ப்பால் ந‌க‌ர்த்திச் சென்றிருந்தார்க‌ள். என‌க்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கீழே இருந்தவர்களிடம் உரையாடிய‌ போது, இந்த‌ வேலை அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌து என்றும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றும் அலட்சியமாக சிரித்துக்கொண்டே கூறினார். அந்த‌ பீகார்/ஒரிஸ்ஸா இளைஞ‌ர்க‌ளுக்கு க‌லைஞ‌ர் காப்பீட்டு திட்ட‌ம் இருக்குமா? அவர்களது அடிப்படை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?


எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாம‌ல் ந‌ட‌க்கும் அச‌ம்பாவிதத்தை விப‌த்தென்று சொல்ல‌ முடியுமா? சிலியின் சுர‌ங்க‌த்தில் நிக‌ழ்ந்த‌தை, நோக்கியாவில் அம்பிகாவுக்கு நிக‌ழ்ந்த‌தை விப‌த்தென்றுதானே சொல்கிறார்கள்!

அந்த‌ ப‌ட்டிய‌லில் க‌ட‌ந்த‌ ஞாயிறன்று மும்பை- மாதுங்காவில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த க‌ட்டிட‌த்தில் நிக‌ழ்ந்த
லிஃப்ட் 'விபத்தையும்' சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து தொழிலாளிக‌ள் ப‌லியாகி இருக்கிறார்க‌ள். ஒருவ‌ர் காய‌ம‌டைந்துள்ளார். இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்க‌ வேண்டிய ந‌‌க‌ராட்சி த‌லைவ‌ரும், பொதுப்ப‌ணித்துறையின‌ரும், SRA அதிகாரியும் ஒருவ‌ரையொருவ‌ர் கைக்காட்டிய‌ப‌டி இருக்கிறார்க‌ள். இதில் கொடூரம் என்ன‌வென்றால், அது த‌ற்காலிக‌ லிஃப்ட் தொழிலாளிகள் உபயோகிக்க மட்டும். க‌ட்டிட‌த்திற்குச் சொந்த‌மான‌ லிஃப்டில், அங்கேயே வேலை செய்யும் தொழிலாளிக‌ள் செல்ல‌க்கூடாது போல!

பாதுகாப்பு ஏற்பாடுக‌ளைச் செய்யும் செல‌வுக‌ளில் மிச்ச‌ம் பிடிக்க‌லாம் என்ற‌ முத‌லாளிக‌ளின் லாபநோக்கும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதான அலட்சியம்தானே போபால் ப‌டுகொலைக்கு மூல‌க்கார‌ண‌ம்? அதே லாப‌வெறியும், அல‌ட்சிய‌மும்தான் மாதுங்கா கொலைக்கும் கார‌ண‌ம்.

இது எங்கோ யாருக்கோ ந‌ட‌ந்த‌துதானே என்று எண்ண‌ வேண்டாம். இது போன்ற‌ செய்திக்கு வ‌ராத‌ 'விப‌த்துக‌ளும்' ம‌ர‌ண‌ங்க‌ளும் எண்ண‌ற்ற‌வை. புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கும் ந‌ம‌து ஊரில் கூட‌ க‌யிறால் க‌ட்டிய‌ ஏணிக‌ளில் அம‌ர்ந்துக்கொண்டு சுவ‌ர்க‌ளில் தொங்கிய‌ப‌டி வ‌ண்ண‌ம‌டிக்கும் இளைஞ‌ர்க‌ளை பார்த்திருக்க‌லாம். மேலே இருப்ப‌வ‌ர் அந்த‌ க‌யிற்றினாலான‌ ஏணியை பிடித்துக்கொள்ள‌ ந‌டுவில் இருக்கும் க‌ட்டையில் எந்த‌ பிடிமான‌மும் இல்லாமல் அம‌ர்ந்துக்கொண்டு வ‌ண்ண‌ம‌டிப்பார், இன்னொருவ‌ர். வ‌ண்ண‌மடிக்கும் பிர‌ஷ் கூட‌ தொழிலாளியே வாங்கிக்கொள்ள‌ வேண்டிய நிலைதான் பெரும்பாலும் - இதில் அவரது பாதுகாப்பு குறித்து என்ன யாருக்கு என்ன கவலை? முறையான‌ பாதுகாப்பு இல்லாமல்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளிகளை பிழிந்தெடுக்கும் இத‌ற்குப் பெய‌ர் "சுர‌ண்ட‌ல்" என்றும் அழைக்கலாம் அல்லது "நகரமயமாக்கல்" என்றும் அழைக்கலாம்.

இப்ப‌டி உழைப்பை, உயிரை உறிஞ்சியெடுத்த‌ பால‌ங்க‌ள் மீதுதான் மெட்ரோக்க‌ள் ஓடுகின்ற‌ன‌. சாலைகள் இணைக்கப்படுகின்றன.க‌ட்டிட‌ங்க‌ள் வானளாவ உய‌ர்ந்து நிற்கின்ற‌ன. ந‌க‌ருக்குப் பெருமையைத் த‌ருகின்ற‌ன.
ம‌லிவாக‌க்கிடைக்கும் ம‌னித‌ வ‌ள‌த்தின் விய‌ர்வையில் ந‌க‌ர‌ங்க‌ள் ஜொலிக்கின்ற‌ன‌. வேலைவாய்ப்பென்று வருபவர்களை விட்டில்பூச்சிகளாய் கொல்கின்றன!

7 comments:

அமைதிச்சாரல் said...

//க‌ட்டிட‌த்திற்குச் சொந்த‌மான‌ லிஃப்டில், அங்கேயே வேலை செய்யும் தொழிலாளிக‌ள் செல்ல‌க்கூடாது போல//

அவங்க மட்டும்ன்னா போய்க்கலாம், குறிப்பிட்ட தளவாடங்களை கண்டிப்பா கொண்டுபோகக்கூடாதுன்னு மறைமுக உத்தரவு இங்கெல்லாம் உண்டு. அதுவுமில்லாம லிஃப்டுகளுக்கு உள்ளே பான் கறையாக்கி வைக்கிறதும் இவங்க தடுக்கப்பட ஒரு முக்கிய காரணம். (பில்டிங்கிற்கான துப்புரவுத்தொழிலாளியும் எவ்வளவுதான் அதை சுத்தம் செய்வாங்க)

அமைதிச்சாரல் said...

லிஃப்டின் தரமும் ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. சில கட்டிடங்களில் ஒருவருஷத்துக்குள்ளயே பல்லைக்காட்டிடுது. இதனால், எத்தனை அசம்பாவிதங்கள்!!... முக்கியமா குழந்தைகள் உயிரிழந்திருக்காங்க. நியூஸ்கட்டிங்கை நோட்டீஸ்போர்டில் ஒட்டிட்டு, சிறுகுழந்தைகளை தனியா லிஃப்டில் அனுப்பாதீங்கன்னு எச்சரிக்கை செய்யறதோட சொஸைட்டியின் செயலாளரோட வேலை முடிஞ்சுடும். சில கட்டிடங்களில் மட்டும்தான் வருஷத்துக்கொருமுறை அதை சர்வீஸும் செய்யறாங்க(எங்க பில்டிங் உட்பட)

வினவு said...

ஒருமுறை நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு என்ற அணைக்கு சென்ற போது இது காமராசர் கட்டிய பிரம்மாண்டமான மண் அணை என்று முழு வரலாறும் சொல்லிவிட்டு கடைசியில் இந்த அணை கட்டும் போது பதினெட்டு தொழிலாளிகள் இறந்து போனார்கள் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

நரகமயமாக்கம் பற்றிய தேவையானதொரு பதிவு, தொடருங்கள்...

ஹுஸைனம்மா said...

தொழிலாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்காத நிர்வாகங்கள் ஒருபக்கம் என்றால், அவ்வாறு செய்து கொடுத்தும் அவற்றைப் பின்பற்றாத தொழிலாளர்களும் உண்டு. இங்கே அமீரகத்தில், கட்டிடத் தொழிலாளராக வேலைபார்த்த உறவினர் எவ்விதமான (ஹெல்மெட், சேஃப்டி ஹார்னஸ்) பாதுகாப்பு உபகரணங்களும் அணிவதில்லை. ஏனென்றால், வேலைபார்க்க இடஞ்சலாயிருக்குமாம். ஏதாவது சம்பவித்தால் என்றதற்கு, இத்தினி வருசமா வேலைபாக்கிறனே, அதெல்லாம் பாத்து சுதாரிப்பா நடந்துக்குவோம் என்று சமாளிப்பு!!

ஸேஃப்டி ஆஃபிஸரோ, முனிஸிபாலிட்டி செக்கிங்கோ வரும்போது மட்டும் அணிந்துகொள்வார்களாம்.

நம்மூரில் பைக்கில் போகிறவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள்தானே, எத்தனை பேர் ஒழுங்காக ஹெல்மெட் அணிகிறார்கள்?

மித்ரா அம்மா said...

கிண்டி மேம்பாலம் கட்டும் பொது நானுமே தினம் தினம் பார்த்து வேதனை அடைந்த விஷயம், அங்கு வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு...
இங்கே சிங்கை வந்த பின் தான் தெரிந்தது நம் அலட்சியத்தின் வீரியம் .. இங்கே சாதரணமாக வராண்டா சுத்தம் செய்யும் ஆட்கள் கூட அதற்கான உடைகளும் கருவிகளும் வைத்து கொண்டு உள்ளனர்.. சாலை போடும் ஆட்கள் கடினமான மேல் அங்கி , முழங்கால்கள் வரை தடிமனான ஷூ எந்த பாரத்தையும் சுமக்க தேவை இல்லாமல் செய்யும் சின்ன சின்ன கருவிகள்.. இப்படி நிறையவே....They are smart
workers

குடுகுடுப்பை said...

தொழிலாளர்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது, உங்களின் சமூக அக்கறை புரிகிறது, உலகமயமாக்கல், தாரளமயம் இல்லாவிட்டால் இதைவிட இன்னும் மோசமான பாதுகாப்புதான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். பொது உடமை , கம்யூனிச நாடுகள்/ சிந்தனைகளில் இவர்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படுகிறது.

ராமலக்ஷ்மி said...

சில தனியார் நிறுவனங்களில் இதுபோன்ற விபத்துக்களில் காலமாகின்றவர் விவரங்களைக் கூட வெளிவராமல செய்து விடுவது தொடர்கின்றது. ‘முறையான பாதுகாப்பு’ தரப்பட சட்டதிட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும். நல்ல பதிவு முல்லை.