Thursday, January 06, 2011

லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு...

கடைசியா மீதி இருக்கிறதை காலியாக்கணும்னறதுக்குதான் இந்த ஐடியாவை யாரோ கண்டுபிடிச்சிருக்கணும். தின்பண்ட மூட்டையை பிரிச்சாலோ இல்ல யாருக்காவது விசிட்டர்ஸ் வந்திருந்தாலோ - காக்காங்களை மிஞ்சிடுவோம் நாங்க எல்லோரும், பாசத்துல. ஹாஸ்டல்ல இருந்தவங்களாலே இதை நல்லா புரிஞ்சுக்க முடியும். ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீன்னதும் ஒரே சமயத்துலே தட்டுலே கையைவிட்டு என்ன கிடைக்குதோ பகிர்ந்து உண்ணறதை பார்த்தா காக்காங்க என்ன - அண்டங்காக்காங்களே பயந்து ஓடிடும். ஆனாலும், கடைசிலே மீதி இருக்கிற ஒருவாயை மட்டும் சாப்பிட ஆள் இருக்காது. ஏதோ ஒரு படத்துல. நண்பன் சாப்பிடட்டும்னு சீன் போடுவாங்களே அது மாதிரிதான். நீ எடுத்துக்கோயா இல்ல நீ எடுத்துக்கோயான்னு பாச‌ம் நிக்க‌முடியாம தட்டுத் த‌டுமாறிக்கிட்டிருக்கும்.

’லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு நல்ல ஹஸ்பண்ட்'ன்னு ஒரு பழமொழிய கண்டுபிடிச்சதுலேருந்து இந்த லாஸ்ட் வாய்க்குத்தான் செம போட்டி. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குதே சென்டீ சீன்லாம் அதுக்கப்பறம் காலி. எல்லோரும் விளையாட்டுக்காகவாவது, 'எனக்குதான் நல்ல ஹஸ்பண்ட்'ன்னு சொல்லி கடைசியா இருக்கறதை சாப்பிடத்தான் செம போட்டி போட்டாலும் யாரும் ஹஸ்பண்டைப் பத்தி பெரிசால்லாம் கவலைப்படலை - எம்சிஏ கடைசி வருஷம் வரைக்கும்.

அதுக்கு அப்புற‌ம்தான் நிறைய பேருக்கிட்டே நிறைய மாற்றங்கள்...ஹீரோ 'நீயெல்லாம் ஒரு பொண்ணா பொண்ணா லட்சணமாவா நடந்துக்கறேன்னு' பளார்ன்னு ஒரு அறை விட்டதும் அடுத்த நிமிஷமே ஹீரோயின் புடவை, பூ, பொட்டு சகிதம் குடும்பக் குத்துவிளக்கா மாறி நிப்பாங்களே! (கனவு சீன்/பாட்டுலதான் மட்டும்தான் குத்துவிளக்குக்கு குத்து அலவுட்!)அதே மாதிரிதான். புடவை கட்டி போட்டோ எடுத்துக்கிறது,விரதம் இருக்கிறது,சாமி போட்டோக்கு பொட்டு வைக்கிறதுன்னெல்லாம், சமையலறையில பூந்து ரணகளம் பண்றதுன்னு. எல்லாம் க‌ல்யாண‌த்தை முன்னிட்டு... அட‌க்க‌ ஒடுக்க‌மா மாறும் வைப‌வம்! அதுவரைக்கும் புர்க்காவே போடாம இருந்த ஷாஹினும் புர்க்கா போட ஆரம்பிச்சதும் அப்போதான். எவ்ளோ ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாலும்...நமாஸ் சத்தம் கேக்கும்போது மட்டும் துப்பட்டாவை தலைக்கு மேலே இழுத்துவிட்டுப்பா, ஷாஹின்.

ஷாஹின் தமிழ் முஸ்லிம். திண்டுக்கல் பக்கத்துலே ஒரு குட்டி ஊர் அவங்களுக்கு. அவங்க ஊர் பத்தி சொல்ல ஆரம்பிச்சாலே ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவங்க ஊர்லே யார் வீட்டுலேயும் கேபிள் டிவி கிடையாது(இப்போவும் அப்படியான்னு தெரியாது). இதுவரைக்கும் போலீஸே அவங்க ஊருக்குள்ளே நுழைஞ்சது இல்லே. அவங்க ஊர் முழுக்க இவங்க உறவினர்கள்தான். பொண்ணுங்க, காலேஜ் வந்து படிக்கறது ஒன்னு ரெண்டு பேருதான்.கண்டிப்பா புர்க்கா போடனும்னெலாம் இல்ல. புர்க்கா போட்டாலும் அது முழுசா கவர் பண்ற இருக்கமாதிரி இருக்காது.. அவங்க அக்கால்லாம் போட்டது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க அம்மா மாதிரி வெள்ளை துணியை மேலே போர்த்திப்பாங்க. அவ்ளோதான். ஷாஹினோட அண்ணாதான் அதிகமா படிச்சவங்க. ஐஐடிலே மாஸ்டர்ஸ். அதோட ஒரு கம்பெனி ஆரம்பிக்கற ஐடியாலேயும் இருக்காங்க. அதனாலே கெமிஸ்ட்ரி படிச்ச ஷாஹினை இஷ்டம் இல்லாட்டியும் எம்சிஏ படிக்க சொல்லியிருக்காங்க. அப்படின்னெல்லாம்.....

காலேஜ், ஹாஸ்டல்னாலே நல்லா ஊர் சுத்தறதுதானே....அப்படி சுத்தும் போது ஷாஹின் புர்க்காவோடதான் வர ஆரம்பிச்சா. 'male gaze'-க்காகத்தான்னு ஆரம்பத்துலே நாங்களும் நினைச்சோம். ஆனா,இல்ல. அது, ’ந‌ற்குடி’ புர்க்கா. கேட்டப்போ, இந்த மாற்றம் எல்லாம் கல்யாணத்தை முன்வைச்சுதான்ற மாதிரி பதில் கிடைச்சது. சில‌ருக்கு ப‌க்தியா...விர‌த‌மா...இருந்த‌து ஷாஹினுக்கு புர்க்காவா இருந்துச்சு.அவ்ளோதான்! ஒரு கட்டத்துலே இந்த வைரஸ் என்னையும் தாக்கினப்போ, அது ’த‌லைமுடி’யா இருந்துச்சு.யாராவ‌து மாப்பிள்ளை வீட்டுக்கார‌ங்க‌ வ‌ர்றாங்க‌ன்னா,‌ அம்மா முத‌ல் நாள்லே இருந்தே ஆர‌ம்பிச்சுடுவாங்க‌...’தய‌வு செஞ்சு த‌லைமுடிய‌ க்ளிப் போட்டு க‌ட்டு’-ன்னு. ஏம்மான்னு கேட்டா, எல்லாம் என்னோட நல்லதுக்காம்.

ஆறேழு வ‌ருஷ‌த்துக்கு முன்னாடிதான் இந்த‌ நிலைமைன்னாலும் இப்போவும் பெரிசா மாறிட‌லைன்னு க‌ல்யாண‌ம் நிச்ச‌ய‌மான ஒரு ந‌ண்ப‌ர்கிட்டே பேசிக்கிட்டிருந்த‌ப்போ - "க‌ல்யாண‌த்துக்கு அப்புறம் நான் ஜீன்ஸ் போட‌மாட்டேன்னுதான் இவ‌ரே ந‌ம்புறாருன்னு' அவ‌ங்க‌ சொன்ன‌ப்போதான் தெரிஞ்ச‌து. "அவ‌ர் என்னை முத‌ல்ல பார்த்த‌தே இப்ப‌டிதான்...ஜீன்ஸும் குட்டை முடியோட‌வும்தான்...பாக்கற‌ப்ப‌ ம‌ட்டும் ந‌ல்லா மாட‌ர்னா பார்த்துப்பாங்க‌, அப்புற‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டு அவங்க‌ளை ப‌ழங்கால‌த்துக்கு மாத்த‌வேண்டிய‌து, இந்த‌ த‌மிழ்நாட்டு ப‌ச‌ங்களே இப்படிதான்." ந்னும் சொன்ன‌ப்போ என்னால‌ ஒன்னும் சொல்ல‌ முடிய‌லை. பொமரேனியன் நாய்க்குட்டியை நினைச்சுக்கிட்டேன்.

ஆச்சர்ய‌ம் என்னன்னா அவ‌ங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப்போற‌து இதே சென்னையை சேர்ந்த‌வ‌ரைதான். இங்கேயே செட்டிலான‌வ‌ங்க‌ளைதான்.நானும் அபியும் என்ன‌ நினைச்சுக் கிட்டிருந்தோம்னா, சிட்டில‌ செட்டிலான‌ குடும்ப‌ம்னா ந‌ம்ம‌ளை புரிஞ்சுப்பாங்க‌, இப்ப‌டில்லாம் ந‌ச்சு ப‌ண்ண‌ மாட்டாங்க‌ன்னு, நாம‌தான் தெரியாம‌ த‌ப்பு (!) ப‌ண்ணிட்டோம்னு. ஆனா, திவ்யா சொன்ன‌தை கேட்ட‌ப்போ அதெல்லாம் மாயைதான்னு தெளிஞ்சுடுச்சு. அர்பிதா சொன்ன‌து ஞாப‌க‌த்துக்கு வ‌ந்துடுச்சு. அர்பிதாவும் முரளியும் காத‌ல் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டாங்க. அர்பிதா மகாராஷ்டிரா. முரளி சென்னை பையன். ஒரே டீம். க‌ல்யாண‌மாகிட்டா ஒரே டீம்ல‌ இருக்க‌ முடியாது, அந்த‌ க‌ம்பெனிலே.

ஒருநாள் அர்பிதா முழு நீள‌ பாவாடை போட்டிக்கிட்டு வ‌ந்திருந்தா. அந்த‌ க‌ம்பெனில மாடிதான் ந‌ல்லா இருக்கும். பெங்க‌ளூர் வானிலை - மாடில‌ காபி- ஃப்ரெண்ட்ஸ் கூட‌ அர‌ட்டை. அப்ப‌டி நாங்க‌ ஒருநாள் பேசிக்கிட்டிருக்கும்போது அர்பிதாவும் எங்க‌ளோட‌ இருந்தா. முர‌ளி அவ‌ளை முறைச்சுக்கிட்டு ப‌க்க‌த்துலே வ‌ந்து ஏதோ சொல்லிட்டு போனார். அவ‌ர் போன‌தும், அர்பிதா முக‌த்துல‌ அப்ப‌ள‌ம் சுட்டு எடுக்க‌லாம் போல‌ இருந்த‌து. 'க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் நாம‌ என்ன‌ போட்டாலும் ந‌ல்லாருக்கு ந‌ல்லாருக்குன்னு சொல்லுவாங்க‌. இந்த‌ ட்ரெஸ் போட்டுட்டு வா, அந்த‌ ட்ரெஸ் போட்டுட்டு வான்னு...உனக்கு ஷார்ட் ஸ்கர்ட் நல்லா சூட் ஆகுதுன்னு. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம், these guys will start showing their true colors"ன்னு சொன்ன‌ப்போதான் அவ‌ர் என்ன‌ சொல்லியிருப்பார்னு புரிஞ்ச‌து. 'ஸ்க‌ர்ட் போடாதேன்ன்னு சொன்னா கேளு, அப்ப‌டியும் போட்டுட்டு வ‌ந்தா இப்ப‌டி வெளிலே எல்லார் முன்னாடியும் வ‌ந்து நிக்காதேன்னு'-தான் சொல்லிட்டு போயிருக்கார்! (என்னதான் மோனிகா பெலூச்சியையும், நிகோல் கிட்மேனையும் ரசிச்சாலும், குடும்பம்னு வந்தா...)

க‌லாச்சார‌த்தைக் காப்பாத்த‌வேண்டிய ம‌ந்திர‌க்கோல் எப்ப‌வும் பொண்ணுங்க‌ கையிலே - அதுவும் அவ‌ளோட‌ ந‌டை, உடை, பாவ‌னைகளை பொறுத்துதான் இருக்கு. பெண்கள் உடுத்தற உடைலே கூட குடும்ப கவுரவம், மானம், வளர்ப்பு எல்லாம் கலந்து இருக்கு.பொண்ணுங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம்கிற‌து ஒரு அடையாளமான்னு தெரியலை..ஆனா, கல்யாணம் பொண்ணுங்களுக்கு பல அடையாளங்களை வழங்குது. த‌ன்னோட ஐடன்டிடிக்காக ‌ இல்லாம‌ க‌லாச்சார‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌‌ மாறுத‌லை ஏத்துக்கிற‌து உண்மையான‌ அடையாள‌மா? இது மாதிரி உடை விஷ‌ய‌த்துலேருந்து இன்னும் நிறைய‌ விஷ‌ய‌த்துலே த‌ன்னை மாத்திக்கிற‌வ‌ங்க‌ நிஜ‌மா விருப்பப்பட்டுதான் மாறுகிறார்களா? இல்லே, நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்டே எதுக்கு பிர‌ச்சினைன்னு அமைதியா விட்டுக்கொடுத்துட‌றாங்க‌ளா?

கல்யாணமாகி விருந்துக்கு போறப்போ கண்டிப்பா புடைவை கட்டிட்டு போகணும்ன்ற சம்பிரதாயமே இருக்கு இல்லையா, பொதுவா! (கோயிலுக்கு போகும்போது புடைவை,தாவணியிலே போற‌மாதிரி. கோயிலுக்கும் புடைவைக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? பார‌ம்ப‌ரிய‌ க‌லாச்சார‌ லுக்தான் க‌ட‌வுளுக்கு உக‌ந்த‌தா?!)கல்யாணம்கிற நிறுவனத்துக்கு மட்டும் இது சொந்தம் இல்ல..பள்ளி, கல்லூரி நிறுவனங்களிலேயும் இது இருக்கே. சில வருடங்களுக்கு முன்னாடி அண்ணா யுனிவர்சிடிலே பொண்ணுங்க ஜீன்ஸ் டீ சர்ட்ல்லாம் போட்டுக்கிட்டு வரக்கூடாதுனெல்லாம் சொன்னாங்களே! டீச்சர்ங்கன்னா புடவைதான் கட்டணும்.ஏன்னா, புடவைதான் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை, லட்சணம்...இதெல்லாம் ஆண்களுக்கு மியூச்சுவலி எக்ஸ்க்ளுசிவ்! ஏன் இந்த இரட்டைநிலை?

8 comments:

Sriakila said...

எந்தெந்த இடத்தில் எந்த டிரெஸ் பண்ணலாம் என்பது தனிநபர் விருப்பத்தைப் பொருத்தது.

மற்றவர்கள் கண்களை உறுத்தாத மாடர்ன் டிரெஸ் எங்கு வேண்டுமானாலும் அணியலாம்.

தடுக்கி விழுந்தால் யாரும் பார்க்காத நாலு சுவத்துக்குள் அணியும்போது புடவை சுகம். மற்ற இடங்களில் புடவையைத் தவிர எல்லா உடைகளும் செளகரியம்.

Sriakila said...

//ஹீரோ 'நீயெல்லாம் ஒரு பொண்ணா பொண்ணா லட்சணமாவா நடந்துக்கறேன்னு' பளார்ன்னு ஒரு அறை விட்டதும் அடுத்த நிமிஷமே ஹீரோயின் புடவை, பூ, பொட்டு சகிதம் குடும்பக் குத்துவிளக்கா மாறி நிப்பாங்களே! (கனவு சீன்/பாட்டுலதான் மட்டும்தான் குத்துவிளக்குக்கு குத்து அலவுட்!)//

எனக்கும் ரொம்ப நாளா இதே டவுட்டுதான்.

Deepa said...

Mullai in full form!

//நீ எடுத்துக்கோயா இல்ல நீ எடுத்துக்கோயான்னு பாச‌ம் நிக்க‌முடியாம தட்டுத் த‌டுமாறிக்கிட்டிருக்கும்.// same blood!!

//பொண்ணுங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம்கிற‌து ஒரு அடையாளமான்னு தெரியலை..ஆனா, கல்யாணம் பொண்ணுங்களுக்கு பல அடையாளங்களை வழங்குது.// aaha! punch dialog ma! ;-)

// (கனவு சீன்/பாட்டுலதான் மட்டும்தான் குத்துவிளக்குக்கு குத்து அலவுட்!)// kuthuvilakku nne oru kuthu paatu irukke..?

சிட்டி பாபு said...

க‌லாச்சார‌த்தைக் காப்பாத்த‌வேண்டிய ம‌ந்திர‌க்கோல் எப்ப‌வும் பொண்ணுங்க‌ கையிலே - அதுவும் அவ‌ளோட‌ ந‌டை, உடை, பாவ‌னைகளை பொறுத்துதான் இருக்கு. பெண்கள் உடுத்தற உடைலே கூட குடும்ப கவுரவம், மானம், வளர்ப்பு எல்லாம் கலந்து இருக்கு.

கல்யாணத்துக்கு பின்னாடி பண்ற டிரஸ் ல அவளுடைய கணவனின் குடும்ப கவுரவம், மானம், வளர்ப்பு எல்லாம் கலந்து இருக்கு.

சேக்காளி said...

"ஈசன்" படம் பார்த்தீங்களா மேடம்?.முள்ளு சேலையில பட்டாலும் சேலை முள்ளுல பட்டாலும் முள்ளை பற்றி யாரும் கவலை படிவதில்லை.மேலும் ஏதோ ஒன்று நடந்து விட்டால் நடந்தது நடந்து விட்டது என்று அத்தோடு விட்டு விடும் நிலையிலா இருக்கிறது நமது நிலை.ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி என்று தானே நீள்கிறது.நம்மாலும் யாரும் எதுவும் சொல்லி விட்டு போகட்டும் நம் வேலையை நாம் பார்ப்போம் என்று இருக்க முடியவில்லையே?.ஒருவரை ஒருவர் சார்ந்து தானே வாழ வேண்டியிருக்கிறது.

ஹுஸைனம்மா said...

//’ந‌ற்குடி’ புர்க்கா//

எனக்குக் கல்யாணமாகி, ஒரு புள்ளையும் பிறந்ததுக்கப்புறம்தான் புர்ஹா போட ஆரம்பிச்சேன். In other words, நான் புர்ஹா போட்டிராத சமயத்தில்தான் எனக்குக் கல்யாணம் நடந்தது. :-)))

காமராஜ் said...

அன்பின் முல்லை வணக்கம்.
புத்தாண்டுவாழ்த்துக்கள்.
வளமை போல கட்டுரை பளார்னு அடிக்கிறது.

மாதவராஜ் said...

// பார‌ம்ப‌ரிய‌ க‌லாச்சார‌ லுக்தான் க‌ட‌வுளுக்கு உக‌ந்த‌தா?!// இப்படி இந்தப் பதிவில் சிரிப்பைப் பற்ற வைத்தபடி, அறைகிற உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. அருமை.