Sunday, January 23, 2011

ஜன்னல்

காலையில் வீடு மிகவும் பரபரப்பாக இருக்கும்(அஃப்கோர்ஸ் எல்லார் வீட்டிலேயும்தான், மேல சொல்லுன்றீங்களா!). குறிப்பாக ஆறுமணி முதல் ஏழு நாற்பது வரை. பப்புவை எழுப்பி ரெடியாக்குவது என்ற தலையாய கடமையை நோக்கி எல்லாரும் செயல்பட்டுக்கொண்டிருப்போம். என்னதான் ப்ளாஆஆன் பண்ணி ஆறு மணிக்கு எழுந்தாலும் பப்புவை ஏழேமுக்காலுக்கு வண்டியில் ஏற்றும்வரை டென்ஷன் அடங்காது. அரைமணி நேரம் பப்புவை துயிலெழுப்ப வேண்டும்.(அதுவும் மழைபெய்தால் கேக்கவே வேண்டாம்.) லீவு எதுவும் விடாதிருந்தால் எல்லாம் சரியாக ஓடிக்கொண்டிருக்கும். நடுவில் லீவு வந்துவிட்டால் கன்டினியூட்டி போய்விடும்.

குளித்துவிட்டு வந்தபின், பால் குடிக்க வைக்க ஒரு அரைமணி நேரம். குடி பப்பு, குடி பப்பு என்று ஒவ்வொரு வாயாக உள்ளேபோக வைப்பதற்குள்... தம்ளரை கையில் வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே அல்லது எங்காவது கனவுகளில் தொலைந்து போயிருப்பாள். திடீரென்று, "எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு, நாம வானத்து வரைக்கும் வீடு கட்டுனா வானத்தை தொட முடியுமாப்பா", "ஆச்சி,நீ குட்டியா இருக்கும்போதே உன் வயித்துலே நானும் குட்ட்ட்ட்ட்டியா இருந்தேனா,ஆச்சி" "ஆச்சி, பூவுக்குல்லாம் எப்போ கல்யாணம் நடக்கும்?"

எனக்கும் பொறுமைக்கும் ஏகப் பொருத்தம்... பப்புவை அவளாக வேலை பார்த்துக்கொண்டிருக்க வைக்க ஏதாவது ஸ்டார்ட் பட்டன் அல்லது ஷெல் கமான்ட் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.(அட்லீஸ்ட் கேப்சர் & ரீப்ளே!) சின்ன வயதில் நானும் இப்படி இருந்திருக்கிறேன்.எருமைமாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி...என்று ஆயா சொல்வது போல. எழுப்புவதற்கு ஒரு அரைமணி நேரம், சாப்பிட அரைமணி நேரம்....அப்படி ஆயாவையும் பெரிம்மாவையும் லொள்ளு கொட்டிய தற்கெல்லாம் சேர்த்துதான் இப்போது மொத்தமாக வாரிக்கொண்டிருக்கிறேன் போல!!

பப்பு,பை, காலை உணவு டப்பா ச‌கித‌ம் வேனில் ஏற்றிவிட்டு,'சாப்பிட வைச்சிடுங்க, தண்ணியே குடிக்க மாட்டேங்குது, நடுவுல குடிக்க வைங்க' என்றெல்லாம் ஆயாம்மாவிடம் சொல்லிவிட்டு,அவளது வேன் திரும்பும் வரை டாட்டா காட்டிவிட்டு ஆசுவாசத்தோடு வீட்டிற்கு நுழைந்தால் ஆயா அப்போதுதான் பால்கனியிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருப்பார். என்னதான் நாங்கள் ஏற்றிவிட்டாலும் பப்புவின் வேன் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தால்தான் ஆயாவுக்கு நிம்மதி. இது இன்று நேற்றில்லை....பையை மாட்டிக் கொண்டு நான் சுதா கான்வென்ட் செல்லும் நாளிலிருந்து தொடர்கிறது. தெருவின் திருப்பத்தில் என் உருவம் மறையும்வரை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார் ஆயா.

ஆம்பூரில்,ஹ‌வுசிங் போர்ட் வீட்டிற்கு வ‌ந்த‌பின், முதலில் வெளி பால்க‌னியில் நின்றும், திரும்பிய‌தும் ச‌மைய‌ல‌றை பால்க‌னிக்கு வ‌ந்தும் பார்ப்பார். காலையில் பள்ளிக்கூடம் செல்லும்போதும் வாரயிறுதிக‌ளில் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்லும் போதும்.... சென்னைக்கு, அதிகாலையில் லிங்க்கை பிடிக்க செல்லும் நாட்களிலும்..என்று எப்போதும் எனக்குப் பின்னால் ஆயாவின் இரண்டு கண்கள் இருந்தன. எனது உருவம் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தன. அதே போல‌ திரும்ப‌ வ‌ரும் நேர‌த்திலும். இப்ப‌டி பார்த்துக்/கவனித்து கொண்டிருந்தால் என‌க்கு அற‌வே பிடிக்காது. எரிச்சலாக வரும்.

"நீங்க‌ ஒன்னும் பாக்க‌ வேணாம், எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க, பார்த்து என்ன செய்யப்போறீங்க, எல்லோரும் எங்கெங்கியோ த‌னியா போறாங்க‌ளாம்,ஏன் எனக்கென்ன போகத்தெரியாதா,நான் என்ன குழந்தையா? " என்றெல்லாம் ச‌ண்டை போடுவேன். எரிந்து விழுவேன். அப்போதெல்லாம், 'உனக்கு இதெல்லாம் புரியாது, உனக்குன்னு வரும்போதுதான் தெரியும்' என்பார். "உங்கள மாதிரி ஒன்னும் நான்-லாம் இருக்கமாட்டேன்" என்பேன்,திமிராக. எவ்வ‌ளவு சொன்னாலும் ஆயா அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை மாற்றிக்கொள்ள‌வே இல்லை. இட‌ங்க‌ளை மாற்றிக் கொண்டார்- அறைக‌ளின் ஜ‌ன்ன‌ல்க‌ள் வ‌ழியே!

டீனேஜில் இருந்தபோது, இப்படி ஆயா பார்ப்பது வேவு பார்ப்பதாகத் தோன்றும். க‌ல்லூரி நாட்க‌ளிலோ எனது தன்னம்பிக்கைக்கு, எனது செல்ஃப் எஸ்டீமுக்கு பங்கமாக தோன்றியது. ஆயாவுக்கு அது கேர்.எப்ப‌டியோ, நானும் ஆயாவின் க‌ண்க‌ளுக்கு முன்பாக வாழ‌ப் ப‌ழ‌கிவிட்டேன். த‌ற்போது ப‌ப்புவும் :‍ அவளுக்கு பின்னாலும் அவ்விர‌ண்டு க‌ண்க‌ள் இருக்கின்ற‌ன. (ப‌ப்புவின் வேன் வ‌ர‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் தாம‌த‌மானால் உட‌னே என‌க்கு ஃபோன்!)

'என்னை ஒன்றும் பார்க்க‌வில்லையே, ப‌ப்புவைத்தானே' என்று நானும் ஒன்றும் சொல்வ‌தில்லை. என்றைக்காவ‌து ம‌ட்டும், 'நாந்தானே ஆயா ஏத்தி விடுறேன்' என்று ம‌ட்டும் சொல்வேன். மேலும், ஆயா இப்ப‌டி பப்புவையும் பார்ப்பார் என்ப‌தே நெடுநாட்க‌ளுக்குப் பிற‌கே தெரியும். வேனில் ஏற்றிவிட்டு திரும்பி வ‌ருவ‌த‌ற்குள், ஆயா ச‌ந்த‌டியே இல்லாம‌ல் அவ‌ரிட‌த்தில் இருப்பார். ஒருநாள் , வேனில் ஆயாம்மா வ‌ர‌வில்லை. 'ஆயாம்மா எங்கே,கேட்டியா, ஏன் வரலையாம்?' என்று அவ‌ர் கேட்ட‌போதுதான் ஆயா, ப‌ப்புவையும் இப்படி க‌வ‌னித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்த‌து.

நாங்க‌ள் பள்ளிக்கூடம் சென்ற‌பிற‌கு ஆயா ம‌ட்டும்தான் தனியாக வீட்டில் ..காலை முத‌ல் மாலை நாங்க‌ள் வ‌ரும்வ‌ரை. அதுவ‌ரை அவ‌ருக்குத் துணை டீவியும் எதிர்வீட்டு ஆன்ட்டியும். எதிர்வீட்டு ஆன்ட்டி ப‌தினொரு ம‌ணிக்கு மேல் க‌த‌வ‌டைத்து விடுவார். ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணிக்கு மேல் வ‌ளைய‌ல்கார‌ர், ப‌ழ‌க்கார‌ர், அப்ப‌ள‌க்கார‌ம்மா என்று ஜன்னல் வழியே பேரம் பேசி தெரு வியாபார‌ம் ந‌ட‌க்கும். அப்ப‌ள‌க்கார‌ம்மா வார‌ம் ஒரு முறை - ப‌ழ‌க்கார‌ர் இர‌ண்டு நாட்க‌ளுக்கொரு முறை -வ‌ளைய‌ல்கார‌ர் வெள்ளிக்கிழ‌மை ம‌ட்டும். பழக்காரர் தவிர மற்றவர்கள் எல்லோரும் மேலே வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். பால்கனியிலிருந்து ஆயா சணல் கட்டி பையை விட பழக்காரர் பழத்தை அனுப்புவார். வீட்டைவிட்டு செல்ல முடியாத ஆயாவுக்கு ஜன்னல் வழியாகவும் பலகனி வழியாகவுமே உலகம் உள்ளே வந்தது. இந்த சத்தங்கள் எதுவும் இல்லாத நேரத்தில் டீவி. அதுவும் பொதிகை மட்டுமே அப்போது.

இங்கு அதெல்லாம் எதுவும் இல்லை. அக்கம்ப‌க்க‌த்துவீடுக‌ளில் ப‌த்து ம‌ணிக்கு மேல் பூட்டு தொங்கும். வாரம் ஒருமுறை காய்கறிகளை நாங்களே வாங்கி வந்துவிடுகிறோம். அதுவும், சிலமாதங்களாக வீட்டில் டீவியும் இல்லை. சாயங்காலம் முழுவதும் நாங்கள் வரும்வரை பப்பு டீவி பார்ப்பதும், ஆயாவுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பதும், சமயத்தில், அவரைப் பார்க்கவிடாமல் கார்ட்டூன் பார்ப்பதுமாக‌ அராஜகம் அதிகமாகிவிட்டதைத் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் டீவி இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்து கேபிள் கனெக்ஷனை எடுத்துவிட்டோம். 'ஏன் இப்படி ஆயாவை சித்திரவதை பண்றே, நீங்கள்ல்லாம் போனப்புறம் ஆயா மொட்டு மொட்டுன்னு எவ்ளோ நேரம் உட்கார்ந்திருப்பாங்க' என்பார் பெரிம்மா. ஆயாவிற்கு நியூஸ் மீது கொள்ளைப்பிரிய‌ம். ஒரே செய்தியை, இருக்கும் அத்த‌னை சானல்க‌ளிலும் பார்ப்பார். லீவு விடப்போகிறார்கள் என்று செய்தி வந்தால் பெரிம்மாவுக்கும் அம்மாவிற்கும் போனில் சொல்லுவார். விம்பிள்டனில் யார் கோப்பையை வெல்லுவார்க‌ள் என்று குட்டியிட‌ம் போனில் பெட் க‌ட்டுவார்.

நினைவு தெரிந்தது முதல் ஆயாவை ஆக்டிவ் ஆக‌த்தான் பார்த்திருக்கிறேன். எப்போதும் எங்காவது பிரயாணம் செல்வார். இப்போது அப்படியில்லை. முன்பு போல நடமாட முடிவதில்லை. வீட்டிற்குள் நடமாடுவதே பெரிய விஷயமாகிவிட்டது. அப்படி ஆயாவைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள்ளே அறையிலிருந்து ஹாலுக்கு வருவதே அவருக்குப் பெரிய விஷயமாக இருப்பதைக் காண கஷ்டமாக இருக்கும். அதற்கே, அவருக்கு மூச்சு வாங்கும்.

ஆயாவுக்கு கதவை சாத்திக்கொள்வதோ பூட்டுவதோ பிடிக்காது.எனவே அவர் க்ரில்லை பூட்டிக்கொண்டாரா என்று பார்த்தபின்னரே நாங்கள் கிளம்பிச்செல்வோம்.

"பூட்டிக்கோங்க‌ ஆயா" என்று பூட்டவைத்துவிட்டு அன்றைக்கு கிளம்பினேன். கீழே சென்றபின்னரே ஞாபகம் வந்தது - ஹெல்மெட் எடுக்காம‌ல் வ‌ந்துவிட்டது.

காலிங் பெல்லை அழுத்தினால், 'யாரோ' என்று வேக‌மாக‌ வ‌ருவாரே என்று க்ரில் நாதாங்கியை த‌ட்டினேன். ச‌த்த‌மே இல்லை. பாத்ரூமில் இருப்பாராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டு சிறிது நேர‌ம் க‌ழித்து த‌ட்டினேன். ம்ஹும்....ஆயா வ‌ருவ‌த‌ற்கான‌ அறிகுறியே இல்லை.
என்ன‌ ப‌ண்றாங்க‌ என்று எரிச்ச‌லும், லேசாக‌ ப‌ய‌மும் வ‌ந்த‌து. ஏனெனில், ஆயாவுக்கு பாத்ரூமில் இருக்கும் டைல்ஸ் மீது ப‌ய‌ம். (உண்மையில் ஆயாவைவிட‌ என‌க்குத்தான் ப‌ய‌ம்.)


பொறுத்துப் பார்த்துவிட்டு, தாங்க‌முடியாம‌ல் காலிங் பெல்லை அழுத்தினேன். ஆயா உட‌னே வ‌ந்தார். ஆயாவைப் பார்த்த‌தும்தான் கவலை விட்டது.
'எவ்ளோ நேர‌மா தட்டறது, எங்கே இருந்தீங்க‌' என்றேன் உள்ளுக்குள் எரிச்சல், மற்றும் பயத்தையும் வெளிக்காட்டாமல்.

'நீ போவ‌ போவ‌ன்னு ரூம்ல‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியா பார்த்துக்கிட்டிருந்தேன், நீ போகக் காணோம், ஏன் ஏதாவ‌து விட்டுட்டியா' என்றார். ஏனென்றே தெரியவில்லை, இந்த‌ முறை என‌க்கு எரிச்ச‌லே வ‌ர‌வில்லை. நிம்மதியாக இருந்தது.

ரொம்ப நாளாக ட்ராஃப்டில் இருந்தது. இப்போது மூன்று வாரங்களாக ஆயா உடல்நிலை சரியில்லாமல், தனியாக நடமாட முடியாமல் இருக்கிறார். என்னையும் பப்புவையும் - ஜன்னல் வழியாக, பால்கனி கம்பிகள் வழியாக பார்க்கும் - எங்கள் முதுகுப்பின்னால் எப்போதும் இருக்கும்- அந்தக் கண்களை மிஸ் செய்கிறோம்.

18 comments:

செந்தழல் ரவி said...

குழந்தைகளை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு. பசிச்சா தானா சாப்பிடும் என்று என்னுடைய குழந்தையை ப்ராக்டீஸ் செய்துள்ளோம். சாப்பாட்டை போட்டு முன்னால் வைத்தால் யாழினி அதுவே எடுத்து சாப்பிடும்.

Deepa said...

ரொம்ப நெகிழ்வான பதிவு முல்லை; அதுவும் இறுதிப் பகுதி கவிதை!
ஆயாவை வந்து பார்க்க வேண்டும்.

பா.ராஜாராம் said...

அப்பா தொடங்கி என் வரையில் எல்லோரையும் வளர்த்து எடுத்த முனியம்மாள் அக்கா நினைவு வருகிறார்கள். இந்த மனுஷிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு அன்பு, பொறுமை வருகிறது?

தள்ளாமை மாதிரி கொடுமையான விஷயம் வேறு எதுனா இருக்க முடியுமா?

ஆயா..

நல்லாருங்க.. சரியா?

(பலநேரம் வார்த்தைகள் போதாமல் போய்விடுகிறதுதான்)

காமராஜ் said...

நமது குழந்தைகள் நம் பெற்றோரை நினைக்க வைக்கத் தவறுவதில்லை.
எத்தனைமுறை படித்தாலும் பேசினாலும்
நெகிழவைக்கிற தருணங்கள் இவை.

santhanakrishnan said...

எல்லார் முதுகின் மீதும் அந்த
ரெண்டு கண்கள் படிந்துதான்
இருக்குமென நினைக்கிறேன்.

மாதேவி said...

ஆயாவின் அன்பு நெஞ்சைத்தொட்டு நிற்கிறது.

அமைதிச்சாரல் said...

நெகிழ்வான இடுகை முல்லை..

தீஷு said...

மிக‌வும் நெகிழ்வான‌ ப‌திவு முல்லை. த‌லைமுறை இடைவேளி க‌ட‌ந்து நிற்கும் அன்பு. க‌டைசி வ‌ரிக‌ள் ம‌ன‌தை பாதித்து விட்ட‌ன‌. உங்க‌ள் ஆயா ந‌ல‌ம் பெற‌ வேண்டும்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை அன்பு செலுத்துகிறவர்களை நாம் எப்போதும் காயப்படுத்துகிறோம்..

Samar said...

கடல் கடந்த இடத்தில் இருந்தாலும் நான் இன்றும் என் பாசத்திற்கு உரியவர்கள் செல்லும் பொழுது நின்று பார்ப்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நல்ல பதிவு முல்லை.

The Analyst said...

வாசிக்கும் போது எனது அம்மம்மாவின் ஞாபகம் வந்தது. I hope she'll get better soon.

அம்பிகா said...

மிகநெகிழ்வான பதிவு முல்லை. எல்லோருக்குமே இப்படி யாராவது இருப்பார்கள் என நினைக்கிறேன், உங்களுக்கு ஆயா, எனக்கு அம்மா... இப்படி...
ஆயா விரைவில் குணமடைய வேண்டும்.

கவிதா | Kavitha said...

ஆயாவை பாக்கனும் போல இருக்கு.. வந்து பார்க்கிறேன்..... என்னோட விசாரிப்பை சொல்லவும்..

Maya said...

Romba arumai. Ennoda paati nyabagam dhaan vandhadhu. I still remember the last time she was alive, the way she looked at me with eagerness and affection and the way I ignored her in my teenage stupidity. Evalo dhaan paati mela paasama irundhu irundhaalum, last momentla thappu pannitennu guilt innum irukku. Paati enna pannalum irritateda mattum edhuvum pesidadeenga. Adhu mattum nyabagam vandhu romba kashtamayidum.

கோமதி அரசு said...

ஆயாவின் கண்கள் நம்மை காக்கும் கண்கள்.
நெகிழ்வான பதிவு முல்லை.
நீங்கள் போவதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருப்பது போல் காட்சி தெரிகிறது.

அன்புடன் அருணா said...

கொஞ்சம் லேட்டாச்சு!பூங்கொத்து!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்பா தொடங்கி என் வரையில் எல்லோரையும் வளர்த்து எடுத்த முனியம்மாள் அக்கா நினைவு வருகிறார்கள். இந்த மனுஷிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு அன்பு, பொறுமை வருகிறது//

Repeat

சின்ன அம்மிணி said...

நெகிழ்வா இருந்தது படிக்க. அப்படி ரெண்டு கண்கள் பார்த்துக்கிட்டே இருக்கவும் கொடுத்து வைத்திருக்கணும்.