Sunday, January 16, 2011

பொங்கலோ பொங்கல்!

எப்போதிலிருந்து நாம் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்தோம்? 97? அல்லது 98? விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கத் துவங்கியதும், அப்படி உற்பத்தியான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததும் எப்போதிலிருந்து?

உலக வங்கியின் நிர்பந்தத்திற்காக தங்கள் கொள்கைகளை மாற்றி மான்சான்ட்டோவையும்,சின்ஜென்டாவும் இன்னும் சில விதை வங்கிகளும் இந்தியாவுக்குள் நுழைந்தன.இந்த கார்ப்பரேட் விதை வங்கிகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. கார்ப்பரேட் கம்பெனிகளின் விதைகள் மறுஉற்பத்திக்கு உதவாதவை. பிரத்யேக உரங்களை, பூச்சிகொல்லிகளை கோருபவை.அதுவரை, உற்பத்தியிலிருந்து விதைகளை சேமித்து வந்த நிலை மாறி விவசாயிகள் மொத்தமாக இந்த கார்ப்பரேட் விதைகளுக்கு அடிமையாக நேர்ந்தது. விதை சேமிப்பு என்பது விவ‌சாயிகள் கையிலிருந்து, கார்ப்பரேட் கம்பெனிகள் கைகளுக்கு தாராளமயமாக்கல் மூலமாகவும் உலகமயமாக்கல் மூலமாகவும் மாறியது.

இந்த விதைகளை உபயோகித்தால் அதற்கான உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகப்படுத்த வேண்டும்.இத‌னால் சுற்றுபுற‌ சூழ‌ல் மாச‌டைந்ததோடு ஒரே மாதிரியான பயிர் விளைச்சலால் மற்ற பயிர்களை விளைவிக்க முடியாமல் போயிற்று. மேலும், பல விதைகள் இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்படாதவை.முதன்முறையாக ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌போது தோல்வியையே கொடுத்தன‌. மான்சான்ட்டோ விதைக‌ள் மூல‌ம் பிடி காட்ட‌ன் ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌ போது,ஒர் ஏக்க‌ருக்கு 200 கிலோவுக்கும் குறைவான‌ அறுவடைதான் கிடைத்த‌து. மான்சான்ட்டோ க‌ம்பெனியால் சொல்ல‌ப்ப‌ட்டதோ ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ.இதே போல, மான்சான்டோவின் ஹைபிரிட் சோள‌த்தை ப‌யிரிட்ட‌ விவ‌சாயிக‌ள் எக்க‌ச‌க்க‌ ந‌ஷ்ட‌த்தை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து. சோயாவை பயிரிட்டவர்களுக்கும் இதே நிலைதான்.

விதைகளுக்காக செலவு செய்ய வேண்டிய நிலையும், நஷ்டமும் விவசாயிகளை மீளமுடியாதக் கடனுள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளியது. புதுக்கடன்கள் பெறமுடியாதவர்கள் தனியார்களிடம் கடன் பெற்றனர். தங்கள் சிறுநீரகங்களை விற்றும் கடனடைக்க இயலாமல் விவசாயிகள் - உலகமயமாக்கப்பட்ட சூழலில் வாழ முடியாத விவசாயிகள் - தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். விதைக‌ளுக்காக‌ க‌ம்பெனிக‌ளிட‌ம் கையேந்திய‌ விவ‌சாயிகளின் வாழ்க்கையை கார்ப்ப‌ரேட் க‌ம்பெனிக‌ள் கொள்ளைய‌டித்த‌ன. பலியான விவசாயிகளில் பெரும்பான்மையினர் சிறு விவசாயிகள் மற்றும் பெரும் கடன்சுமை கொண்டவர்கள்.

இந்த‌ உலகமயமாக்கலுக்கும், விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைக்கும் இடையிலிருக்கும் உற‌வை நம‌து அர‌சு புரிந்துக்கொள்ளாதது போல நடிக்கிறது. மின்சார‌த்தை இல‌வ‌ச‌மாக‌க்கொடுத்தும், க‌ட‌ன்க‌ளை த‌ள்ளுப‌டி செய்தும் கூட தொடரும் விவ‌சாயிகளின் த‌ற்கொலைக்கான‌‌ கார‌ண‌ங்க‌ளை தேடுகிற‌து.மாறிவரும் சுற்றுசூழலையும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறது. மாறாக,விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலையை அறிவிய‌ல் பூர்வ‌மாக‌ ஆராய முற்ப‌டுகிற‌து. பொருளாதார‌ கார‌ண‌ங்களை புறம் தள்ளிவிட்டு விவசாயிகளின் குடிப்பழக்கமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. விவசாயக்கொள்கைகளை மாற்றுவதை விட்டுவிட்டு விவசாயிகளின் மனப்போக்கை மாற்ற பரிந்துரைக்கிறது!! அவ‌ர்க‌ளுக்கு த‌ன்ன‌ம்பிக்கையும் சுய‌ ம‌ரியாதையும் அதிக‌ரிக்க‌ வொர்க் ஷாப்க‌ள் கூட பல மாநில‌ங்க‌ளில் ந‌ட‌ந்ததாக செய்திகளைப் வாசித்திருப்போம்.

த‌னியார் ம‌ய‌த்தினாலும், உல‌க‌ம‌ய‌மாக்க‌லாலும் விவ‌சாயிக‌ள் த‌ங்க‌ள‌து அடையாள‌த்தை இழ‌ந்துவிட்ட‌ன‌ர். உல‌குக்கு உண‌வு வ‌ழ‌ங்கும் பெருமைக்குரிய‌ ப‌ணி என்று ந‌ம‌து அறுவடைத்திருநாள் வாழ்த்த‌ட்டைக‌ளில் வித‌வித‌மான‌ வார்த்தைக‌ளில் உழ‌வ‌னைப் போற்றி, வாழ்த்திய‌ நிலை போய், இன்று, அவ‌ர் பன்னாட்டு கம்பெனிகளிடம் விதைகளை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டுவிட்டார். ப‌சுமைப் புர‌ட்சியால் த‌ன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் அர‌சு விவ‌சாயிக‌ள் மீதுதான் போர் தொடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகளின் சதவீதம் வளர்ந்து வருகிறது. உதவியற்று நிற்கும் விவசாயிகளின் மீது ப‌ழியைப் போடுகிற‌து.

சில‌வார‌ங்க‌ளுக்கு முன் வெங்காய‌த்தின் விலை நினைத்துப்பார்க்க‌ முடியா வ‌ண்ண‌ம் விலையுய‌ர்ந்த‌து. ஏன்? சிலர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதால்தான் என்றும் மாறிவரும் காலநிலை அல்லது பெய்த மழைதான் உற்பத்தியைக் கெடுத்தது என்றும் பல காரணங்கள் கூறப்பட்டது. உச்ச‌ப‌ட்ச‌மாக‌, ஏற்றும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ வெங்காய‌த்தை பாகிஸ்தான் திருப்பித்த‌ர‌ ம‌றுத்துவிட்ட‌து என்றும் ஒரு ப‌க்க‌ம் செய்தி வந்தது.சாதார‌ண‌ ம‌னித‌ன் வெங்காய‌த்தை வாங்க‌ இய‌லாத அதே நாட்டில்தான் - சிலநாட்கள் முன்பு ராக்கெட்டும் விட‌ப்ப‌ட்ட‌து. விலையேறியது வெங்காயம் மட்டுமில்லை.... கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய்,உருளை, தக்காளி ,கேரட், கொத்தமல்லிக்கூடத்தான். சாமானிய‌ ம‌னித‌னுக்கு உண‌வு என்ப‌து ஒரு ல‌க்ஸ‌ரி போலாகிவிட்ட‌து.

இதில்,விவசாயிகளை - விவசாயத்தை ஒழித்துவிட்டு பொங்க‌லும், சங்கராந்தியும், உழ‌வ‌ர் திருநாளும் யாருக்கு? உழ‌வ‌ர்க‌ளுக்கா?!

(செய்திகள் : இணையத்திலிருந்து)

9 comments:

ராம்ஜி_யாஹூ said...

உழவர்கள் / விவசாய தொழிலாளர்கள் அனைவரும் டாஸ்மாக், சாராயக் கடைகளில் தங்கள் சம்பளப் பணத்தை தொலைக்காமல் இருக்கும் வரை, இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்குm

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இதில்,விவசாயிகளை - விவசாயத்தை ஒழித்துவிட்டு பொங்க‌லும், சங்கராந்தியும், உழ‌வ‌ர் திருநாளும் யாருக்கு? உழ‌வ‌ர்க‌ளுக்கா?! //

:((

விஜய்கோபால்சாமி said...

//உழவர்கள் / விவசாய தொழிலாளர்கள் அனைவரும் டாஸ்மாக், சாராயக் கடைகளில் தங்கள் சம்பளப் பணத்தை தொலைக்காமல் இருக்கும் வரை, இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்குm//

ஏதோ தப்பு இருக்குதுங்க இந்த வாக்கியத்துல. என்ன சொல்ல வற்றீங்க?

கோமதி அரசு said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சந்தனமுல்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் முல்லை

தொடர்ந்து கலக்குங்க பாஸ்

அம்பிகா said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள் முல்லை

குடுகுடுப்பை said...

விலையேறியது வெங்காயம் மட்டுமில்லை.... கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய்,உருளை, தக்காளி ,கேரட், கொத்தமல்லிக்கூடத்தான். சாமானிய‌ ம‌னித‌னுக்கு உண‌வு என்ப‌து ஒரு ல‌க்ஸ‌ரி போலாகிவிட்ட‌து.

இதில்,விவசாயிகளை - விவசாயத்தை ஒழித்துவிட்டு பொங்க‌லும், சங்கராந்தியும், உழ‌வ‌ர் திருநாளும் யாருக்கு? உழ‌வ‌ர்க‌ளுக்கா?!
//
மேலே உள்ளதை இன்றைய வரை விளைவிப்பவன் விவசாயி அதன் விலை உயர்ந்தால் விவசாயி(யும்) பலனடைகிறான். ஏன் விலை ஏறக்கூடாது. விவாசாய விலைபொருட்களைக் குறைத்து எப்படி விவசாயிக்கு நன்மை செய்யமுடியும்.

குடுகுடுப்பை said...

எந்த ஒரு அரசும் தனது பலத்தின் மூலத்தை பெருக்கியே பொருளாதாரத்தை வளர்க்கவேண்டும். இந்தியா கூலி சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. விவசாயத்தை அழிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ராமலக்ஷ்மி said...

// விலையேறியது வெங்காயம் மட்டுமில்லை.... கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய்,உருளை, தக்காளி ,கேரட், கொத்தமல்லிக்கூடத்தான். சாமானிய‌ ம‌னித‌னுக்கு உண‌வு என்ப‌து ஒரு ல‌க்ஸ‌ரி போலாகிவிட்ட‌து.//

சரியாச் சொன்னீர்கள். எட்டாக் கனி போல காயும் எட்டா தூரத்தில் என்றாகி விட்டது சாமான்யர்களுக்கு:(! ஏதேதோ இலவசங்கள் அறிவிக்கும் அரசு நியாய விலையில் ஏழைகளுக்கு காய்கனிகள் கிடைக்கச் செய்யட்டுமே.

இறுதியாய் கேட்டிருக்கும் கேள்வி..நச்!