இந்த தலைப்புதான் என்னை ஈர்த்தது. அதிலும், 'உலகம் குழந்தையாக இருந்தபோது' என்ற புத்தகத்தை சென்ற ஆண்டு வாங்கியிருந்தேன். அதை வாசித்த மயக்கத்தில், அந்த வாசிப்பு அனுபவத்தை நினைத்துக்கொண்டே, இந்த புத்தகத்தையும் வாங்கினேன்.
'உலகம் குழந்தையாக இருந்தபோது' - புகழ்ந்து போற்றுமளவுக்கு பெரிய காவியமெல்லாம் இல்லை. ஆனால், உலகின் எல்லா காவியங்களைவிடவும் பழமையானது. ஆம், இந்தியாவில் வாழும் பல்வேறு ஆதிவாசிகளிடையே செவிவழியாக வழங்கப்பெற்று வரும் கதைகளின் தொகுப்பே, 'உலகம் குழந்தையாக இருந்தபோது'.
உலகத்தில் முதலில் மனிதன் வந்ததெப்படி, குரங்குகளுக்கு வால்கள் வந்தது எப்படி?, முதன்முதலில் தோன்றிய ஆறுகள், ஆடைகள் கண்டுபிடித்தது, தீயை உபயோகப் படுத்தியது, வீடு கட்டும் விதம், வானம் எப்படி மேலே சென்றது, குள்ளமனிதர்கள் பற்றி என்று எல்லா விஷயங்களைப் பற்றியும்,அதன் வரலாறு சுவையான கதைகளாக சொல்லப்பட்டிருந்தது. கதைகளை வாசிக்கப்பிடிக்கும் யாருக்கும் இந்த புத்தகம் நிச்சயமாக பிடிக்கும்.
அந்த புத்தகத்தை நினைவிலிருத்தியே, ஆப்ரிக்க ஆதிவாசிகளின் கதைகளை வாசிக்கலாம் என்று வாங்கினேன். நல்ல பலன்! எல்லா கதைகளுமே விலங்குகளைப் பற்றிதான். பெரும்பாலும், விலங்குகளைப் பற்றிய எளிய உண்மைகள், தகவல்கள் - அவைதான் கதையின் மையக்கரு. ஆனால், அது கதையாக விரியும் விதம் வாசிப்பவரை ஆச்சரியப்படுத்துகிறது.
செர்வாலின் மேல் தோலின் புள்ளிகள் வந்தது எவ்விதம்?
வௌவால்கள் இரவில் மட்டும் பறக்கின்றன. கீரிக்கும் வௌவாலுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணத் தினாலேயே வௌவால்கள் ஒளிந்துக்கொண்டு பகலில் வெளிவருவதில்லை. கீரியிடம் என்ன சண்டையாம்?
ஆர்டுவார்க் என்ற ஒரு மிருகம். அது எப்போதும் பூமியின் வளைகளுக்குள்ளேயேதான் வசிக்கும். ஏனென்று தெரியுமா?
இப்படி, மிருகங்களைப் பற்றி நாம் அறிந்த சாதாரண செய்திகள்தான் ஆனால், அதன் பின்னணியாக புனையப் பட்டிருக்கும் கதைகள்தான், நமது ஆப்பிரிக்க முன்னோர்களை வியந்து பார்க்க வைக்கிறது. இந்த புத்தகத்தை கொண்டாட வைக்கிறது. நாம் வேண்டு மானால், நம்பாமல் இருக்கலாம்..கதைகள்தானே என்று புறம் தள்ளலாம்...ஆனால், ஆப்ரிக்க பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் கதைகேட்கும் குழந்தைகள் வழிவழியாக இதை நம்பியிருப்பார்கள்தானே!
ஆரம்பத்தில், காட்டுப்பன்றிக்கே நீண்ட அழகான தந்தங்கள் இருந்தன. மிகப்பெரிதாக பளுவானதாக இருந்தாலும், காட்டுப்பன்றிக்கு தனது தந்தங்கள் மீது மிகப்பெருமை. யானைக்கோ பொறாமை. பலம் பொருந்திய தனக்கே, இந்த தந்தங்கள் இருந்திருக்க வேண்டுமென்று நினைத்தது.
காட்டுப்பன்றியும் ஆர்டுவாக்கும் நெருங்கிய நண்பர்கள். அருகருகே வளைகளில் வசித்தன. ஒருநாள் யானை, காட்டுப்பன்றியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தது. 'யானையை முழுதும் நம்பிவிடாதே, விழிப்பாக இருந்து உன்னை பாதுகாத்துக்கொள்' என்று ஆர்டுவாக் காட்டுப் பன்றியை எச்சரித்து அனுப்பியது.
யானையும், காட்டுப்பன்றியும் பேசியபடியே உண்டன. ஒருகட்டத்தில் காட்டுப்பன்றியுடைய தந்தங்களின் அழகைப் புகழ்ந்த யானை, அவற்றை சிறிது நேரம் கடனாக கேட்டது. மகிழ்வான மனநிலையில் இருந்த காட்டுப்பன்றி, யானையை மகிழ்விக்க தந்தங்களை கழற்றிக் கொடுத்தது.
தந்தங்களை அணிந்துக்கொண்ட யானை, காட்டுப் பன்றியை அடித்துவிரட்டிவிட்டது. வேறுவழியின்றி, காட்டுப்பன்றி யானையின் சிறிய தந்தங்களை பொருத்திக் கொண்டு ஆர்டுவாக்கிடம் வந்தது. நண்பனின் அவலநிலை, ஆர்டுவாக்கை கோபப்படுத்தியது.
'யானை இதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்கப் போகிறது, வீடு இல்லாமல் கஷ்டப் படப்போகிறது.பார், அழகிய தந்தங்களுக்காக அதனை வேட்டையாடுவர். நீ நிம்மதியாக வளையில் வாழ்வாய்' என்றது.
காட்டுப்பன்றியோ, 'நீளமான தந்தங்கள் இல்லாமல் எவ்வாறு வளை தோண்டுவேன்' என்று வருத்தப்பட, ஆர்டுவாக், அதிலிருந்து தன்னுடைய வளைகளை காட்டுப்பன்றி உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதித்தது.
மிக மென்மையான குணம் கொண்ட ஆர்டுவார்க்கின்
அன்புள்ளமும், காட்டுப்பன்றியின் வளையில் வாழும் தன்மையும், யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுவதும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் இந்த கதை வாசிக்கவும் கேட்கவும்தான் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது.
கிக்குயூ இனத்தில் என்றைக்கோ வாழ்ந்த ஒரு ஆதிவாசி மனிதனின் மனதில் உதித்த கற்பனைக் கதை, நூற்றாண்டுகள் பல கடந்த பின்னாலும் நம்மையும் மயக்குகிறது; அதே சுவாரசியத்தை தருகிறது.
இப்படி வாசிக்க, சுவையான நிறைய கதைகள் இந்த தொகுப்பில் உண்டு. அங்கோனி, ஸ்வாஹிலி, புஷ்மேன்,பட்டோங்கா, ஷோனா என்று பல்வேறு ஆப்ரிக்க இன மக்களின் நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கைகளுக்குக் காரணமான கதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
கதைகளின் இறுதியில், விலங்குகளைப் பற்றிய தகவல்கள்; வாழும் பகுதி, தட்பவெப்பம், உணவு என்று பல செறிவான தகவல்களும் வாசிப்பவர் ஆர்வத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அணிலை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? தன் வாலைக் கொண்டு உடலை எப்போதும் துடைத்த வண்ணமாக இருக்கும். ஏன் அப்படி செய்கிறது? மிக சுவாரசியமான கதையில் அதற்கான விடை அடங்கியிருக்கிறது.
புதர்மானுக்கு சிவந்த தோல் வந்தது எப்படி?
கினிப் பறவைகள் அதிகாலையில் யாரை கூப்பிடுகிறது?
ஆமை ஓட்டில் ஏன் இத்தனை கீறல்கள்?
மேலும், ஒரே தகவலைப் பற்றி இருவேறு கதைகள், இருவேறு இன மக்களிடமும் வழங்கப்படுவதையும் இந்த புத்தகம் பதிவு செய்திருக்கிறது. சாணிவண்டு எனும் ஒரு வகை வண்டுகள், யானை சாணியை உருட்டிக் கொண்டேயிருக்கும். எதற்காக தெரியுமா?
வண்ணத்துப் பூச்சியின் அழகை மட்டுமே மனிதர்கள் ரசிக்கின்றனர், தன்னை கவனிப்பதேயில்லை என்று மறுகிய வண்டு தன் பலத்தைக் காட்ட, தன்னைக்காட்டிலும் பலமடங்கு பெரிதான சுமையை உருட்டி மனிதர்களை தன்பக்கம் ஈர்க்கிறது என்று. உண்மையில், சாணிவண்டு தன் முட்டைகளை அந்த சாணி உருண்டையில் வைத்து பாதுகாக்கிறது.
கானா, இன மக்கள் சொல்லும் சாணிவண்டியன் கதை மிகவும் சுவாரசியமானது. மழை பெய்ய வைக்கும் அதிசயகுணம் கொண்ட பச்சோந்தி ஒன்று இருந்தது. பச்சோந்தியின் முதுகில், குச்சியால் இரண்டு தட்டு தட்டி மந்திர வார்த்தைகளைச் சொன்னால் மழை பெய்யும். அனன்சி என்ற பேராசை சிலந்தி, பலத்த மழை வேண்டி பச்சோந்தியை ஓங்கி அடித்துவிட, பச்சோந்தி செத்துப்போனது.
பச்சோந்தியை, கொன்ற பாவத்துக்கு தண்டனையாக, அதன் உடலை ஒரு உருண்டை டப்பாவில் அடைத்து உருட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்கிறார். டப்பாவை உருட்டிக்கொண்டிருந்த, அனன்சி களைத்துப் போயிற்று. தன் மகனை சந்தித்து வருவதாகவும், அதுவரை அந்த சுமையை உருட்டச் சொல்லிவிட்டு அனன்சி ஓடிப்போயிற்று. கடவுளின் கோபத்துக்கு, பலியாக விரும்பாத நியாயவாதி சாணிவண்டு, அந்த சுமையை இன்றும் உருட்டியப்படி இருக்கிறதாம். :)
இவற்றை தொகுத்தவர், நிக் க்ரீவ்ஸ் என்பவராம். பிரபலமான கதை சொல்லி போல. 'தேர்ந்தெடுத்து தொகுத்தவர்' என்று கூட போடவில்லை, கதைசொல்லி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். "நீர்யானைக்கு முடி இருந்தபோது" என்ற தொகுப்பின் தொடர்ச்சிதான் இந்த நூல் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த புத்தகத்தையும் வாங்கி வைத்திருக்கிறேன். இனிமேல்தான் வாசிக்க வேண்டும்.
இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து ஆதிவாசி கதைகளை திரட்டிய வெரியர் எல்வின் கூட("உலகம் குழந்தையாக இருந்தபோது" ) அடிப்படையில் ஒரு கதை சொல்லியாம்.
தமக்கு அறிமுகமே இல்லாத உலகத்துக்கு வந்து, மொழி தெரியாத வெளி உலகம் அறியாத ஆதிவாசி மக்களோடு, பேசி பழகி, அவர்களது கதைகளை, நம்பிக்கைகளை எந்தவித விருப்பு வெறுப்புமின்றி கேட்டு ஆவணப் படுத்துவதை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. வளையத்துக்குள்ளே வாழப்பழகிவிட்ட எனக்கு , அவர்களது இந்த மனப்பாங்கு ஆச்சரியமே!
பெரியவர்களுக்கே சுவாரசியமாக இருக்கும் இந்த கதைகள், சிறார்களை நிச்சயம் கவர்ந்துவிடும். விலங்குகளுக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பு, விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று பேணும் நட்பு மற்றும் பகை, மனிதர்களிடம் உறவாடும் தன்மை, காட்டின் அழகு மற்றும் அதற்கேயுரிய ஒழுங்கு என்று இயற்கையை பற்றிய நல்ல புரிதலை கொடுக்கும். (சிறார் இலக்கியம் இல்லை என்று புலம்புவதை விட , குற்றுயிரும் குலையிருமாக இருக்கும் இது போன்ற புத்தகங்களை தேடி பதிப்பித்தாலே போதும்.)
மொழிப்பெயர்ப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தங்கு தடையில்லாத மொழிநடை, வேற்று மொழியிலிருந்து வந்த நூலை வாசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தவேயில்லை.
நூல்: சிங்கம் பறந்தபோது முதலிய ஆப்பிரிக்க கதைகள்
கதைசொல்லி: நிக் க்ரீவ்ஸ் (தமிழில்: பிரிஜிட்டா ஜெயசீலன்)
என் பி டி
விலை: ரூ 86