வேர்ப்பாலங்களைப் பற்றி:
மேகாலயாவில்,
மூன்று வித மலைப்பகுதிகள் உண்டு. கஸி, ஜெயிந்தியா மற்றும் காரோ. அங்கு
வசிக்கும் பழங்குடியின மக்களினால் மலைகளுக்கு அந்த பெயர் வழங்கப்படுகிறதா
அல்லது அந்த மலைப்பகுதியில் வசிப்பதால் பழங்குடியின மக்கள் இந்த பெயர்களால்
விளிக்கப்படுகிறார்களா என்று தெரியவில்லை. மேகாலயாவின், கிழக்கு கஸி (Khasi)
மலைப்பகுதி இயற்கை வளத்துக்கும், சுற்றுலா பயணத்துக்கும் மிகவும் புகழ்
பெற்றது.
உலகிலேயே, மிகவும் அதிகமாக மழை பொழிவுக்கு, கின்னஸில் இடம்
பெற்ற ச்சிரபுஞ்சி, இங்குதான் உள்ளது. கிழக்கு கஸி மலைப்பகுதியின்
தனிச்சிறப்பு, அருவிகளும் வேர்ப்பாலங்களுமே. உலகில் வெறெங்கும் காணமுடியாத
அதிசயம், இந்த வேர்ப்பாலங்கள்.
மேகாலயாவின் பருவநிலையை மழைக்காலம்,
மழையற்ற காலம் என்று பிரிக்கலாம். மே மாதத்திலிருந்து பருவகாலம்
தொடங்குகிறது. நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை மழை பெய்வதில்லை.
கஸி
மலைப்பகுதியின், கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலை மீது அமைந்திருக்கிறது.
மற்ற இடங்களுக்கு செல்ல ,சிலபல ஆறுகளை கடந்துதான் அவர்கள் செல்ல
வேண்டும். அதிலும், மழைக்காலத்தில் மலைப்பகுதியின் ஆறுகள் பற்றி சொல்லவே
வேண்டாம். எல்லா மழைநீரும் ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடும்.
மேகாலயாவின்,
மலைப்பகுதி ஆறுகளின் குறுக்காக, இப்போது வரை பாலங்கள் இல்லை. கடலுக்கு
நடுவில்,கங்கைக்கு குறுக்கில் பொறியியல் விந்தைகளாக நின்றுக்கொண்டிருக்கும்
பாலங்கள் எதுவும் கஸி மலைப்பகுதிக்கு எட்டவில்லை. எனில், நூறு , இருநூறு
ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்திருக்கும்?
ரப்பர் மரத்தின்,
இரண்டாம் கட்ட வேர்ககள்தான் கஸி மக்களுக்கு தீர்வாக அமைந்தன. ஆம், நீள
நீளமான வேர்களை கண்டதும், ஏதோ ஒரு கஸி பொறியாளனுக்கு மூளையில் பல்பு
எரிந்திருக்க வேண்டும். விளைவு, இரண்டு பக்கங்களிலும் ரப்பர் மரங்களை
பராமரித்து, அவற்றின் வேர்களை பின்னி பிணைத்துவிட்டனர்.
இளம்
வேர்கள் உடனடியாக உபயோகப்படுவதில்லை. வேர்கள் நன்கு வளர்ந்து, பலமுள்ளவையாக
எடை தாங்குமளவுக்கு மாற, குறைந்தது 50 ஆண்டுகளாவது தேவை. உடனடியாக, தமக்கு
பயன் தராவிட்டாலும், பின் வரும் சந்ததியினருக்கு உபயோகமாகட்டும் என்று
கணக்கிட்டிருக்கின்றனர்.
அதன் விளைவுகள்தான், இன்று நாம் காணும்
வேர்ப்பாலங்கள் (Living Root Bridges). சில வேர்ப்பாலங்கள், கிட்டதட்ட 150 முதல் இருநூறு வயதானவை.
முழுமையாக வளர்ந்த வேர்ப்பாலங்கள், 500 முதல் 600 ஆண்டுகள் வரை
மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும். இன்று அந்த வேர்ப்பாலங்கள்தான்
மேகாலயாவின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
'பயோ என்ஞினியரிங் வொண்டர்' என்றே வேர்ப்பாலங்களை குறிப்பிடுகிறார்கள். மனிதனும்,
இயற்கையும் இயைந்து வாழும் வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த
வேர்ப்பாலங்கள் என்று பப்புவுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.
இதனை காண,
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் மக்கள் வருகின்றனர். புகழ் பெற்ற
ஊடகங்கள், வேர்ப்பாலங்களை பற்றி செய்திப்படங்களை தயாரித்திருக்கின்றன.
ச்சிராபுஞ்சியை சுற்றிலும், பல்வேறு வேர்ப்பாலங்கள் இருந்தாலும், இரட்டை
வேர்ப்பாலங்கள்தான் அனைவரையும் கவர்கின்றன.
மதிப்பு வாய்ந்ததென்றால்
கொஞ்சம் மெனக்கெடத்தானே வேண்டும். இரட்டை வேர்ப்பாலமும் அப்படி கொஞ்சம்
உழைப்பை கோரும் வகையில்தான் அமைந்திருக்கின்றது.. இரட்டை வேர்ப்பாலத்தை
கண்டவர்களுக்கும் தனிமதிப்பு இருக்கத்தான் செய்கிறது. :)
'மாலிங்னாங்'
எனும் ஆசியாவின் தூய்மையான கிராமத்தருகில் இருக்கும் வேர்ப்பாலம், எளிதாக
செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. 'உம்கார்' கிராமத்தின் இருக்கும்
வேர்ப்பாலத்தின் ஒருபகுதி, மழைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டாலும் கிராம
மக்கள், சுற்றுலா பயணிகளுக்காக பராமரித்து புதிதாக வேர்களை பின்னி
வைத்திருக்கிறார்கள்.
இரட்டை வேர்ப்பாலத்தை அடையும் வழி:
பதிவின்
இந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்களென்றால், வேர்ப்பாலத்தை பற்றி உறுதியாக
இருக்கிறீர்களென்று பொருள். :-) வேர்ப் பாலத்துக்கான நடைபயணத்தை காலை பத்து
மணிக்குள்ளாக தொடங்கிவிடுவது நலம்.
வேர்ப்பாலத்தின் நடைபயணம் தொடங்குமிடம், ச்சிராபுஞ்சியிலிருந்து கிட்டதட்ட 15 கிமீ தொலைவில் இருக்கிறது.
எனவே, ச்சிராபுஞ்சியில் இரவு தங்கலாம். வேர்ப்பாலத்துக்கு அருகில் உள்ள
கிராமமான, 5 கிமீ தொலைவிலுள்ள 'லாட்டின்ஸ்க்யூ' கிராமத்திலும் தங்கலாம்.
இரண்டு இடங்களிலும் தங்கும் வசதி உண்டு. (ஷில்லாங்கி லிருந்தோ அல்லது வேறு
தொலைவிலிருந்தோ பயணித்து நேராக நடைபயணத்தை தொடங்குதல் சோர்வை
தரலாம்.சிறார்கள் இருந்தால் இரவு தங்குதல் அவர்களுக்கு நல்ல ஓய்வைத்
தரும், )
வேர்ப்பாலம்தான் நமது இலக்கு என்றாலும், அதுவரை நம்மை
அழைத்துச் செல்லும் பாதையை கவனிக்க மறந்துவிடக் கூடாது. முதல் வளைவிலேயே
இதனை நாம் உணர்ந்துக்கொள்வோம். சில வீடுகளை தாண்டியதும், எதிரில் தெரியும்
மலைச்சரிவும், அதிலிருந்து வீழும் அருவிகளும், மலைமுகடுகளை படரும்
மேகங்களும் கண்ணுக்கு விருந்து.
சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு,
அந்த காட்சியினை அணு அணுவாக ரசித்து மனதுள் கடத்தவும். படிகள் இறங்க
இறங்க, மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் அருவிகளும் கூட முகம் காட்டும்.
மறக்காமல், அதன் பின்னணியில் படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
கிட்டதட்ட,
2500 படிகள் என்று சொல்கிறார்கள். நாங்கள் எண்ணிப் பார்க்கவில்லை.
கீழ்நோக்கிய படிகள் என்பதால், மூச்சு வாங்காது. ஆனால், வேர்த்து ஊற்றும்.
(உடற்பயிற்சி செய்பவர் அல்லது தடகள வீரர்களுக்கு அல்ல, என்னைப் போல்
சாதாரணமாக அவ்வப்போது நடைபயணம் செல்லும் சாதாரணர்களை மனதில் வைத்து
சொல்கிறேன்.) கிட்டதட்ட, கால்வாசி பாதையைத் தாண்டி கைப்பிடியை
வைத்திருப்பார்கள்.
உண்மையில், நாம் ஒரு மலைச்சரிவில் படிகளில்
இறங்கிக்கொண்டிருக்கிறோம். எனவே, பாதை செங்குத்தாக கீழ்நோக்கி இருக்கும்.
பயப்படத் தேவையில்லை. துணைக்கு குருவிகள் மற்றும் பறவைகளின் சப்தங்களும்,
கண்ணுக்கு தெரியாமல் சலசலக்கும் ஆறும் உண்டு.
சக நடைபயணிகளுக்கு,
முற்றிலும் புதியவராக கூட இருக்கலாம் அவர்களுக்கு உதவி செய்யும்
தருணங்களையோ அல்லது புன்னகையை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகளையோ
இழக்காதீர்கள். கிட்டதட்ட, இரண்டு கிமீ வரை, வேறு மனிதர்கள் யாரும் உங்கள்
அருகில் இல்லை.
(இதுபோன்ற நடைபயணங்கள், குடும்பத்தினருக்கிடையில்,
சிறார்கள் மட்டும் பெற்றோருக்கிடையில் ஒரு வித நெருக்கத்தை, உதவும்
மனப்பாங்கை வளர்த்தெடுக்கின்றன.இது அனுபவத்தில், கண்ட உண்மை.)
இந்த
படிகள், கிட்டதட்ட ஒன்றரை கிமீ வரை நீளும். அதன்பிறகு, இரு பாதைகள்
பிரியும். வலது பக்கம் சென்றால், நீண்ட வேர்ப்பாலத்தைக் காணலாம். அதற்கு
கிட்டதட்ட இருபது நிமிட நடை. அல்லது நேராக சென்றால் இரட்டை பாலத்தை
காணலாம். நாங்கள், இரட்டைப் பாலத்தையே தேர்ந்தெடுத்தோம்.
இந்த
பாதையின் ஆரம்பத்தில் சில வீடுகளை காணலாம். பூச்செடிகள், குழந்தைகள்,
ஓடையில் துணி துவைக்கும் பெண்கள், பாக்கு உரித்துக்கொண்டிருக்கும் ஆண்கள்
என்று கிராம மக்களை காணலாம். இந்த தரை வழிப்பயணம் கிட்டதட்ட ஒரு கிமீ
நீளும். அவ்வப்போது படிகளும் தட்டுபடும்.
பாறைகள் வழியாக, புகுந்து
புறப்பட்டு செல்லும் ஆறொன்றை எதிர்கொள்வோம். எப்படி கடப்போம் என்ற கவலை
வேண்டாம். கண்களை உயர்த்தினால், தொங்குபாலமொன்று தெரியும். இருபுறமும்
பிடித்துக்கொண்டு, அடி எடுத்து வைக்கவும். காதுக்கு கேட்கும் உங்கள்
இதயத்தின் லப்டப்பை கவனிப்பதைவிட்டு, ஆறு பேசும் கவிதைக்கு காதுகொடுங்கள்.
:)
சரியாக இரண்டு நிமிடங்களுக்குள் அந்த பாலத்தை கடந்தால்,
இன்னும் கொஞ்சம் காட்டுப்பாதை. வெயில் புகா இடமென்றால் அதுதான். பாறைகள்
மீதும் செடிகள் வளர்ந்திருக்கும். பாதைகளிலும், பசுமை படர்ந்திருக்கும்.
அடுத்து வரும் பாலம் சற்றே பெரிது. இந்த ஆற்றின் பாறைகள் கவனத்துக்குரியவை.
இவை கண்டிப்பாக எங்கிருந்தே உருண்டு வந்திருக்க வேண்டும்.
இந்த
இரண்டு பாலங்களையும் கடந்தால், இரட்டை வேர் பாலத்தை நெருங்கிவிட்டோமென்று
பொருள். இலக்கை, தாங்களாக தேடிக் கண்டடையும் மகிழ்ச்சியை உங்களுக்கு
கொடுக்கிறேன்.
செய்ய வேண்டியவை:
*உதவிக்கு, உள்ளூர்
வழிகாட்டி வேண்டுமென்றால், ச்சிராபுஞ்சி விடுதியை (Cherra Holiday Resort) அணுகவும்.
பேச்சுத்துணைக்கும், உள்ளூர் பற்றி தெரிந்துக்கொள்ளவும் நல்ல வழி.
அதோடு,
கிராமப்புற உள்ளூர் இளைஞர்களுக்கு இது ஒரு வேலைவாய்ப்பு. (உள்ளூர் கஸி மக்கள் புதியவர்களை கண்டு வெட்கப்பட்டாலும் பழக இனிமையானவர்கள்.) பெரும்பாலும், எல்லோருமே ஆங்கிலம் பேசக்கூடியவர்களாகவும், தங்கள்
ஊரைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
*வழிகாட்டி தேவையில்லையென்றாலும் கவலையில்லை. ஆங்காங்கே இருக்கும் வழிகாட்டிப் பலகைகள் பெரும் உதவியாக இருக்கின்றன.
*உடைகள், பருத்தி வகை ஆடைகள் வியர்வையில் ஒட்டிக்கொள்ளும். டீ சர்ட் ஈரத்தில் நனையாத வகை டீ சர்ட்கள் ஏற்றவை.
*உதவுகோல்கள்
கைகளில் இருப்பது நன்மை பயக்கும். உண்மையில் உதவுகிறதோ இல்லையோ,
மனரீதியாகவும் உறுதியைக் கொடுக்கும். மேலும், காட்டுப்பாதையாதலால்,
கோலொன்று இருப்பது உதவியாக இருக்கும். பெரிய காட்டுவிலங்குகள், யானை,
குரங்குகள் போன்றவை எதுவும் இந்த பகுதியில் இல்லை. எனவே, குழந்தைகளுக்கு
நிம்மதி.
*கைகளில், ஒரு தண்ணீர் புட்டி கட்டாயம். கனமான பிளாஸ்டிக்
வகையல்ல. மினரல் வாட்டர் போல, தூக்க எளிதான புட்டிகளை கொண்டு செல்லவும்.
ஆரம்பத்தில், நம்மால் தூக்க இயலுவது போல தெரிந்தாலும், 500 படிகளுக்கு
அப்பால், நம்மை தூக்கிக்கொண்டு இறங்குவதே பெரிய காரியமாக தெரியும். :)
*இரட்டை
அடுக்கு வேர்ப்பாலத்தினடியில், ஓடும் ஆற்றில் குளிக்கலாம். சிறு
காட்டருவியும் உண்டு. சிறுவர்களும் குளிக்கும் வண்ணம் பாதுகாப்பானது. உடை
மாற்றும் அறையும் இருக்கிறது. மாற்றுடைகளை கொண்டு செல்லலாம். கால்களை
நீரில் அளாவி மீன்களுக்கு வேலை கொடுக்கலாம்.
*காட்டுவழிப்பாதை,
வெளிச்சம் ஊடுருவ கடினமென்பதால் சிறு பூச்சிகளின் தொல்லை உண்டு. கொசு போல
கடித்து வைக்கும். ஓடோமாஸ் எடுத்துக்கொள்ளலாம். பெருக்கெடுத்து ஓடும்
வியர்வையில் அவையும் கரைந்து ஓடிவிடும். ஆனால், திரும்பி வரும்போது
படிகளில் அமர்ந்து இளைபபாற வேண்டியிருக்கும். அப்போது, உதவும்.
*காலையில்
ஒன்பதுக்கு ஏற ஆரம்பித்தாலும், பதினொன்றரைக்குள் பாலத்தை அடைந்துவிடலாம்.
மதியம் இரண்டுக்கு பின் தங்காமல் பார்த்துக்கொள்ளவும். ஏறிவர ஐந்து மணிவரை
ஆகிவிடலாம். (நான் சொல்வது மிகவும் மெதுவாக ஏறினாலும்..)
*திரும்பும்
வழியில், நீளமான வேர்ப்பாலத்தை காணலாம். போகும்வழியில் இருக்கும்
சிற்றோடைக்கருகில் உணவருந்துவது நல்ல அனுபவம். அல்லது, இரட்டை
பாலத்தருகிலும் மதிய உணவை எடுத்துக்கொள்ளலாம். மறக்க இயலாத அனுபவமாக
இருக்கும்.
* பாதம்,வால்நட் மற்றும் திராட்சை போன்றவை
எடுத்துக்கொள்ளவும். வாழைப்பழமும் தாகத்தை தணிக்கும். புளிப்பு
மிட்டாய்கள், சாக்லெட்டுகள் கைவசம் இருப்பது நடக்கும் களைப்பை போக்க
உதவும். சிறார்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்.
*குடைகள்
எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மழையுடைதான் உண்மையில் உபயோகமானது. மழை வருமா
என்று அன்றைய காலநிலையை பார்த்து முடிவு செய்துக்கொள்ளலாம்.
*ஷூக்கள் தேவைப்படவில்லை.வழுக்காத மழையில் நனைந்தால் காய்வது கடினம். நீரில் நனையாத ஷூக்கள் என்றால் சரி. அல்லது,வழுக்காத நல்ல செருப்புகள் தேவை. சாதாரண செருப்புகளையே - செருப்பின் கீழ் treads - இருப்பது போன்ற உபயோகப்படுத்தினோம்.
*முட்டிகளுக்கு, Knee support அணிந்துக்கொண்டோம். எனவே, முட்டி வலியிலிருந்து தப்பித்தோம், கெண்டைக்கால் வலிதான் 2/3 நாட்களுக்கு படுத்தி எடுத்தது.
*முட்டிகளுக்கு, Knee support அணிந்துக்கொண்டோம். எனவே, முட்டி வலியிலிருந்து தப்பித்தோம், கெண்டைக்கால் வலிதான் 2/3 நாட்களுக்கு படுத்தி எடுத்தது.
செய்யக்கூடாதவை:
*மழைக்காலத்தில்
சென்றால், வழிகளில் பெரிய பெரிய காளான்களை காண்பீர்கள். அவற்றை படம்
பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவும். கைகளால் தொடுவதோ, அவற்றை பறித்து உண்பதோ
அபாயம்.
*'குளிரும்' என்று ஜெர்கின் போன்ற மேலாடைகளை அணிவதை
தவிர்க்கவும். உண்மையில், நமது உடலிலிருந்து வெளியேறும் வெப்பம் எந்த
குளிரையும் அணுகவிடாது. அணிந்துக்கொள்ளவும் முடியாததோடு, தேவையற்ற சுமை.
*மேகாலயா
கிராமங்கள் அனைத்தும் அவ்வளவு சுத்தமானவை. ஸ்வச்ச பாரத், திட்டம், அநேகமாக
மேகாலயாவை பார்த்த உந்துதலால் வந்திருக்கலாம்! ஆங்காங்கே, மூங்கிலால்
செய்த கூடைகளை மரங்களில் கட்டி வைத்திருப்பார்கள். அதில் குப்பைகளை
போடலாம். போட இடமில்லை எனில், திருப்பிக் கொண்டு வந்து விடவும்.
*இங்கிருப்பதை
போலவே, லேஸும், பாக்கெட் வகை உணவுகளும், சாக்லெட்டுகளும்,
குளிர்பானங்களும் இருந்தாலும் எங்குமே நாங்கள் குப்பையை பார்க்கவில்லை.
மக்கள் அனைவரும், குப்பையை தொட்டியில்தான் போடுகிறார்கள்.
கூடுதல் தகவல்கள்:
*தூய்மையான மலைத்தேன் கிடைக்கும். ஆரஞ்சு பூக்களிலிருந்து கிடைத்த தேன் என்பதால், லேசாக புளிப்பு இருக்கும். நம்பி வாங்கலாம்.
*இரட்டை
பாலத்திலிருந்து, 2 கிமீ தொலைவு சென்றால், இயற்கையின் 'நீச்சல் குளங்கள்'
இருக்கிறது. தெம்பும், நேரமும் இருப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
*இரட்டை
அடுக்கு பாலத்திலிருந்து, 5 கிமீ தொலைவு மேலேறி சென்றால்,
'நோக்காலிக்காய்' அருவியை கீழிருந்து காணலாம். இந்த அருவியை,ச்சிரபுஞ்சியில் மேலிருந்துதான் பார்க்க முடியும்.
அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால்,
சென்று பார்க்க நினைத்திருக்கிறோம். 'நோக்காலிக்காய்' அருவியைக் காணும்போது,
'நடைப்பயணமாக சென்று கொட்டும் அருவையை கீழிருந்து பார்க்க... அடடா என்ன அருமையாக இருந்திருக்கும்' என்று தோன்றியது!
*இரட்டை அடுக்கு பாலம் அமைந்திருக்கும் கிராமத்தில் இரவு தங்கலாம். ஹோம்ஸ்டே வசதிகள் இருக்கிறது.