Showing posts with label கர்நாடகா. Show all posts
Showing posts with label கர்நாடகா. Show all posts

Wednesday, June 03, 2015

'கங்கவ்வா கங்கா மாதா' - சங்கர் மோகாசி புணேகர் (எம் வி வெங்கட்ராம்)

உங்கள் அம்மா கோலம் போடும்போது கவனித்திருக்கிறீர்களா?  புள்ளிகள் வைத்து,  நெளி நெளியாக வளைந்த கோடுகள் கொண்ட கோலங்கள் -  எந்த முனையில் இருந்து இழுப்பார்களென்றே தெரியாது, பார்த்தாலும் புரியாது. ஆனால், கண்ணிகளை இணைக்கும் கைகளை கவனித்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று ஒரு முழுமைக்குள் வந்து முடிந்துவிடும் கோலங்கள்.

சிறுவயதில், அம்மா கோலம் போடுவதை பாராக்குப் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. வாசலில் நீர் தெளிக்கும்போதே, எங்கள் விளையாட்டுகள்  முடிவுக்கு வந்துவிடும்.  வரிசை வரிசையாக எண்கணக்கு மாறாமல் புள்ளிகள் வைத்து, எந்த கண்ணியும் தனித்து தொங்கிக் கொண்டிராமல்,  வகைவகையான நெளிவுகளுக்குள்  சுருங்கி, ஏதோ   ஒரு கணக்குக்குள் அடங்கிவிடும்  கோலங்கள் வடிவம் கொள்வதை பார்ப்பதே பிரமிப்புத்தானே! 

கிட்டதட்ட, கிட்டதட்ட என்ன‌ அதே மாதிரியான பிரமிப்பு, "கங்கவ்வா கங்கா மாதா"  என்ற கன்னட நாவலை வாசித்தபோது ஏற்பட்டது. வாசித்து முடித்ததும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நெடுநேரம் ஒவ்வொரு புள்ளியாக மனதுக்குள் இழுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

மொத்தத்தில் மூன்று குடும்பங்கள்...கங்கவ்வா, ராகப்பா,தேசாய். ஆனால், இந்த குடும்பங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு கண்ணியும், ஏதோ ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியோடு பாந்தமாக இயைந்து,  ஒரு முழுமையான‌ சித்திரத்துக்கு வந்துவிடுவது ஆச்சரியமாக இருந்தது.

இத்தனைக்கும், சிறார்களுக்கான‌  போட்டியொன்று  நிகழும் பள்ளி வளாகத்தினுள் வைத்து இந்த புத்தகத்தை வாசித்திருந்தேன். சுற்றி நிகழும் எந்த கூச்சல்களும் கூப்பாடுகளும் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டது, நாவலின் சுவாரசியமின்றி வேறெதுவும் இல்லை. சொல்லப்போனால், போட்டியை பற்றிய பதைபதைப்புகளிலிருந்து என்னைக் காத்தது கங்கவ்வாவும், கிட்டியும்தான். :‍)

மகனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, தன் கணவனை இழந்த பெண்.  நன்கு வாழ்ந்த குடும்பம். உறவினர்கள் சதித்திட்டத்தால்,  முக்கியமாக கங்கவ்வாவின் தம்பி ராகப்பாவால் செல்வத்தை இழக்க, மனக்கலக்கத்தின் காரணமாக கணவன் உயிரை விடுகிறான்.

யாருடைய நிழலிலும் இல்லாமல், தம்பிகள்  கண்களில் படாமல் வைராக்கியமாக  மகனை வளர்க்கிறாள் தாய். சில வீடுகளில் வேலை செய்து, தான் அரை வயிற்றுக்கஞ்சியும், மகனுக்கு முழு வயிற்றுக்கும் கொடுத்து ஆளாக்குகிறாள். மகன் கிட்டி,  மெட்ரிக் படித்து பாஸானதும், தெரிந்த, பெரிய மனுஷர்களிடம் சொல்லி அவனை குமாஸ்தாவாக ஒரு அரசாங்க வேலையில் அமர்த்துகிறாள்.

குடும்பத்து பெரியவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டோம். ஆனால், குடும்ப நண்பர்கள் என்ற பெயரில் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிக்கியிருப்பாரில்லையா... அவர் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லாமல் தலையாட்டுவோமே! எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராமல், அடுத்தவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையில் 'நம்மைவிட்டால் இவர்களுக்கு சொல்வதற்கும் செய்வதற்கும் யார் இருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு அவர்களும் உதவுவார்களே...

அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது அழிந்துபோகும் உயிரினமாக அருகிவருகிறார்கள்.ஆனால், நாவல் நடக்கும் காலகட்டத்தில் அப்படிப் பட்டவர்களே நாடெங்கும் நிறைந்திருந்தார்கள் என்று ஒவ்வொரு குடும்பத்து தாத்தா பாட்டியை கேட்டாலே தெரியும். அப்படி, கங்கவ்வா குடும்பத்துக்கு சிக்கியிருப்பவர் தேசாய்.

கங்கவ்வாவுக்கு  ஆலோசனைகளோடு, அவ்வப்போது பண ரீதியாக உதவியும் செய்பவர் தேசாய். தேசாய்க்கு, இரண்டு மகன்கள். மூத்தவன் அச்சுதராவ், பம்பாயில் கல்லூரியில் படிக்க, இளையவன் வசந்தராவ் நாடக/சினிமா மோகத்தில் ஊர் சுற்றிக்கொண்டும், தந்தையின் பணத்தை செலவழித்துக்கொண்டும்  அப்படியே, பொய் புரட்டுகளால், தந்தையின் நற்பெயரை கெடுத்துக்கொண்டும் இருக்கிறான்.

கிட்டி, அரசாங்க வேலையில் அமர்ந்ததும், நைச்சியமாக அவனை சந்திக்கிறான் மாமா ராகப்பா. எல்லாம் காரணமாகத்தான். மூத்த மகள் ரத்னாவுக்கு அவனை கட்டி வைத்துவிடலாமென்ற கனவோடு கிட்டியை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறான்.

மகனது, போக்கிலிருந்தே கிரகித்துக்கொள்ளும் கங்கவ்வா, ராகப்பாவின் ஏமாற்றுவேலைகளை, நயவஞ்சகத்தை கண்ணீரும் கோபமுமாக, சிலசமயங்களில் தன்மையாக புரிய வைக்கிறாள். இருந்தாலும், எல்லாம் சில காலம்தான். இறுதியில், தேசாயின் உதவியை நாடுகிறாள்.

முதலில், கங்கவ்வாவுக்கும் ராகப்பாவுக்குமாக இருந்த போர், இப்பொழுது தேசாய்க்கும் ராகப்பாவுக்குமாக மாறுகிறது. இதில்,ராகப்பாவுக்கு பகடைக்காயாக சிக்குபவன், தேசாயின், ஊதாரித்தனமான இரண்டாம் மகன் வசந்தராவ்.

ரத்னாவுக்கும், கிட்டிக்கும் திருமணம் நடந்ததா, வசந்தராவ் என்ன ஆனான், கங்கவ்வாவின் மற்றொரு தம்பியான  வெங்கட்ராவ் இருக்கும் இடம், அவனுக்கும் அச்சுதராவிற்குமான தொடர்பு, கங்கவ்வாவின் குடும்பம் நொடிக்கும் அளவுக்கு அப்படி என்ன மோசடி நடந்தத என்ற கண்ணிகளெல்லாம் தார்வார், தேசாயின் சொந்த கிராமம், பூனா, சௌபாத்தி, பம்பாய்  போன்ற நெளிகோடுகளில் இணைக்கப்பட்டு முழுமையான நாவலாக மாறுகிறது.

நாவல் நடப்பது, 19களின் ஆரம்பத்தில் ‍ - சுதந்திரப் போராட்ட காலம். அப்போது நடக்கும் சத்தியாகிரக போராட்டங்கள், பத்திரிக்கைகள், மாணவர்கள் போராட்டத்துக்குள் ஈர்க்கப்படுவது, பெண்கள் கொடி பிடித்து வீதியில் செல்வது, ஏச்சு பேச்சுகள், அதோடு சினிமா என்ற புது வகையான பொழுதுபோக்கு அன்றைய இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் எல்லாம் ஊடுபாவாக பிணைந்திருக்கிறது. இதனாலேயே, நாமும் ஏதோ அவர்களோடே வாழ்வது போலவே தோற்றமயக்கம் வாசிக்கும்போது ஏற்படுகிறது.

அந்த கால பழக்க வழக்கங்கள் -  சில சுவாரசியமான கலாச்சார ரீதியான பழக்கங்கள், நம்பிக்கைகள், மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் சமநிலை எல்லாம் வாழ்க்கை பதிவுகளாகவே வருகிறது. உதாரணத்துக்கு, பணக்கார வீடுகளில் ஏழை மாணவர்கள் ஒவ்வொரு வாரமாக முறை வைத்து உண்பார்களாம். வாசிக்கும்போது, ஆச்சரியமாக இருந்தது. இந்த சமூகம்தான் தன்னை எத்தனை விதமான சமநிலைகளில் நிறுத்திக்கொள்கிறது. புதிய தகவல்தான்.

 கிட்டி, தேசாய் வீட்டிலும் கிராமத்தவர்கள் வீட்டிலும்  அப்படித்தான் வளர்கிறான். அதனாலேயே, தன் விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒருவித அழுத்தம் அவனுக்குள் உருவாகிறது. அதுவே பிற்காலத்தில், அவனது தன்னம்பிக்கை குலைத்து அலுவலகத்தில் கேலிப்பொருளாக்குகிறது. அவனது இந்த நிலையை ராகப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான்.

அதேபோல், தீபாவளிக்கு வீட்டு ஆண்களுக்கு ஆரத்தி எடுப்பது, சோமாசி,புக்கரி போன்ற கர்நாடகத்தின் உணவு பொருட்களை உண்ணும் விதம், வாழ்க்கைமுறை, சம்பிரதாயங்கள், வரதட்சிணையின் முக்கியத்துவம், பூசைகள் என்று மற்றொரு உலகத்தை பார்ப்பது போலவே தோன்றுகிறது.

நாவலின் சுவாரசியமான பக்கங்களில் ஒன்று, ரத்னாவின் திருமணத்தில் ராகப்பாவின் இரண்டாவது மனைவி  மஹபூப் வளைய வருவதும் அதையொட்டிய நிகழ்ச்சிகளும். இப்படி இதனை முழுமையான குடும்ப நாவலென்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதிலிலேயே, த்ரில்லரும், துப்பறிவதும், நாடக பாணியிலான முடிவுகளுக்கும் குறைவில்லை.

இறுதியில்,நாவல் ஒரு மரணத்தில் முடிவடைந்தாலும்,  நமக்கு சோகமோ, மனவருத்தங்களோ உண்டாவதில்லை. அதுதான் நாவலின்  வெற்றி போலும். 

கிட்டியின் அலுவலக பகுதியும், லஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க இயந்திரத்தில் ஊடுருவது தெளிவாக வருகிறது. ரத்னாவுக்கும், கிட்டிக்குமான காதல், இதனால் மகனுக்கும் கங்கவ்வாவுக்கும் இடையிலான பிளவு, ராகப்பாவின் மனைவிக்கும் கங்கவ்வாவுக்குமான உறவு எல்லாமே சிக்கலான உணர்ச்சி போராட்டங்கள் மிகவும் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

 நாவலின் ஆரம்பத்தில், கங்கவ்வா கங்கைக்கு போய்விட்டு சொம்பில் கங்கைநீரை கொண்டு வருவாள்.  அவளது உயிர் பிரியும் தருணத்தில், மகன் கிட்டி அவளது வாயில் இந்த கங்கை நீரை ஊற்ற, அவளது உயிர் பிரிய வேண்டும். இது, சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய நம்பிக்கைதான்.

ஆனால்,  ரயிலின் ஓட்டத்தில், அந்த கங்கை நீர் சொம்புக்குள் ஆடுவது, கங்கவ்வாவுக்கு சாவை, மகனை விட்டு பிரிவதை, தனது கடமைகளை நிறைவேற்றாமல் பேரக்குழந்தைகளை பார்க்காமல் செல்வதை நினைவூட்டி மனதை பலத்த சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது.

 சொம்பு கங்கை நீரை ரயிலில் வழியிலேயே எடுத்து கவிழ்த்தபிறகுதான் நிம்மதியான உறக்கம் வருகிறது. அதே கங்கைநீர், அவளது பிற்கால வாழ்க்கையில் தாமாகவே வீடுவந்து சேர்கிறது. கிட்டியின் தந்தை பெரும் நம்பிக்கையோடு பூசை செய்த, சாலக்கிராமம் பூசையறையில் சேரும் பகுதியும் சுவாரசியமானது.

பிராமண குடும்பத்தை மையப்படுத்திய‌ நாவலாக இருந்தாலும், அவர்களுக்கான அந்த பிரத்யேகமான  மொழியை  எங்கும் காண முடியவில்லை. கன்னடத்திலிருந்தி இந்திக்குப் போய் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது.  ஒரு சில இடங்களில் வரும் எழுத்துப்பிழைகள், 'அவன்.......வந்தாள்' என்பது போன்ற பிழைகள் தவிர்த்து,  உறுத்தாத, அதே சமயம் சுவாரசியம் கொஞ்சமும் குன்றாத எளிமையான மொழி பெயர்ப்பு.

சில ஆண்டுகளுக்கும் முன் வாசித்தாலும் இன்னும் மனதில் நிற்கும் முழுமையான நாவல்கள்   'சிப்பிக்குள் முத்து', 'சிக்கவீர ராஜேந்திரன்', 'தென்காம ரூபத்தின் கதை' போன்றவை. அந்த  வரிசையில், கங்கவ்வா கங்கா மாதாவுக்கு நிச்சயம் இடமுண்டு. மோகாசி எழுதிய ஒரே நாவல் இதுதான் என்று  முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது, ஒரே நாவல் ஆனால் முக்கியமான நாவல்.

கங்கவ்வா கங்கா மாதா
சங்கர் மோகாசி புணேகர் (எம் வி வெங்கட்ராம்)
வெளியீடு: என் பி டி
விலை: 70
பக்: 260

Tuesday, April 14, 2015

நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம் ...

 ஹம்பியில், பார்க்க வேண்டிய இடங்கள் - அமைந்திருப்பதே வித்தியாசமானது. சொல்லப்போனால், 'பார்க்கவேண்டிய இடங்கள்' என்ற பட்டியலே தேவையற்றது. ஒருவருக்கு, முக்கியமாக படுவது மற்றொருவருக்கு தேவையற்றதாக இருக்கலாம். இருந்தாலும், நாங்கள் சென்று வந்த பாதையை - பதிவு செய்யவும், குறிப்புக்காகவும் எழுதி வைக்கிறேன்.

நதிக்கரை வழியாகவே 'கல்தேரு' (விஜய விட்டாலா) கோவிலுக்கு பழங்காலத்தில் எப்படி சென்றிருப்பார்கள் என்று அறிய விரும்பினோம். 'நதிக்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது' என்று படிக்கிறோமே...அதை நேரில் காண வேண்டாமா? :-)

விருபாஷா கோவில் டூ விட்டலா கோவில் ‍- வழி துங்கபத்திரா! ஆம், விஜயநகர மன்னர்களின் பாதையில் - நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம்! விருபாஷா கோவிலின், பெரிய நந்தியிடம் இருந்து, நடக்க ஆரம்பித்து துங்கபத்திரா வழியாக விஜய விட்டலா கோவிலை அடைவதே திட்டம்.

 பயணிகளுக்கு உதவியாக, ஆங்காங்கே  வழிகாட்டி கற்கள் இருக்கின்றன. இல்லையென்றாலும், ஹம்பியில்  வரலாற்று சின்னங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் பாதகமில்லை. வழிதவற வாய்ப்பும் இல்லை. 

பெரிய நந்தியின் இடப்புற வழியாக மலையடிவாரத்தை ஒட்டி நடந்தோம். வழியில் மக்கள், 'அபார்ட்மெண்ட்கள்' பலவற்றை கட்டியிருந்தார்கள்.


 
குகைகளின் வழியாக, புறப்பட்டு சென்ற அந்த வழித்தடத்தின்,  ஆரம்பத்தில் சக்கரத்தீர்த்தத்தில் கால் நனைத்தோம். அங்கிருந்து ஆரம்பிக்கும் படிகளில் மேலேறி, மண்டபத்தில் அமர்ந்தோம்.  எங்களுக்கு நேரெதிரில் துங்கபத்திரா. கோவிலுக்குப் பின்னால் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவள், இங்கு வேறுமுகம் காட்டுகிறாள்.


நீர் அரித்த, பாறைகளை பார்த்தவாறே நினைவுகளில் தொலைந்து போனோம். பாறைகள், குடைந்தது போலவே அரிக்கப்பட்டிருந்தது. எத்தனை வருடத்து மழையும், வெள்ளமும்! 


தலைக்கு, மேலிருந்த மரத்தில், ஏதோ சலனத்தை உணர்ந்து திரும்ப , மந்திக்கூட்டம். குரங்கும் தொப்பிவியாபாரி கதை நினைவுக்கு வர,  தலையிலிருந்த  தொப்பியை, கவனமாக பிடித்தபடி நடையை தொடர்ந்தோம். 

அடுத்து வந்தது, கோதண்டராமர் கோவில். பூஜை நடைபெறும் கோவில் போலிருக்கிறது. பெரிய இரும்பு கதவு போடப்பட்டு, வர்ணங்களுடன் இருந்தது. பழைய கோவில் என்ற நினைப்பே வராததால் தவிர்த்துவிட்டு, அதையடுத்து இருந்த கடையில் இளநீர் அருந்தினோம்.

இளநீர் காய்கள் ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் இருந்தார் ஒரு வளையல் அம்மன். 

 

"Hampi is mythical landscape imbued with the presence of  Gods, godesses and heroes" என்பர் ஜான் ஃபிரிட்ஜ் மற்றும் ஜியார்ஜ் மிஷெல்  - அவர்களது 'ஹம்பி விஜயநகரா' என்ற புத்தகத்தில். கோயில்கள் தூண்களிலெல்லாம், வாயில் சுவர்களிலெல்லாம், மேற்கூரையில், இடிந்து விழுந்த தூண்களில் என்று எங்கும் கடவுளர் மயம்தான். அவையெல்லாம் போதாதென்று, இந்த வன்னி மரத்தினடியில் ஒரு அம்மன், அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இளநீர் குடித்தபடி, அம்மனின் தலபுராணமும், தல விருஷத்தைப் பற்றியும் கேட்டபிறகு, நடையை தொடர்ந்தோம். டிசம்பர் மாத இறுதி. வெயில் அதிகமில்லை.  இதமான வெயிலுக்கு ஏற்ற சுகமான குளிர் காற்று. காற்றை அனுபவித்தபடி மேலும் நடந்தால், வழிகாட்டி பலகைகள் நேராக வராக கோவிலை காட்டியது.


 
மரத்தின் கீழமர்ந்து, மாணவர்கள்  சிலர் படங்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். பாறைககளுக்கிடையில் மிஞ்சியிருந்த கோபுரங்களும், கோவில் மண்டபங்களும் தத்ரூபமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துவிட்டு, வராக கோவிலையும், அதன் தூண்களையும் சற்று நேரம் ஆராய்ந்தோம்.


 
நுழைவாயிலில் இருக்கும் ஹம்பியின் 'ராஜ முத்திரை' அழகு!  அம்புலிமாமா ராஜா கதைகளில் 'ஐம்பது வராகன், நூறு வராகன்' என்று படித்திருப்போமே! அந்த  'வராகன்' என்ற நாணயம் பிறந்தது இங்குதான் என்கிறார், நூனிஸ் 'விஜயநகர பேரரசு' புத்தகத்தில்.

வராக கோவிலுக்கு வலப்புறத்தில், எதிர்பட்ட‌  நீளநீளமான மண்டப  பாதைகளை பார்த்துவிட்டு, 'எதற்கு இப்படி கட்டியிருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு மலைப்பகுதிக்கு சென்றோம்.  மலைப்பகுதில் இருந்த சிதிலமடைந்த கோவில்களில், உள்நுழைந்து வெளியேறி மேலே மேலே சென்றுவிட்டோம். ஜைனக்கோவில்கள் போலிருந்ததைக் கண்டு, புத்தகங்களை துழாவி, அங்கேயே அமர்ந்து வாசித்தோம்..  

தூண்களிலும், மண்டபச்சுவர்களிலும் சிற்பங்களைத் தேடினோம். களைத்துப்போய், பையிலிருந்த பெரிய இலந்தம்பழங்களை உண்டோம். இதற்குமுன், இந்த இலந்தம்பழங்கள், இவ்வளவு ருசியாக இருந்ததேயில்லை.
பாதை ஓரத்திலிருந்த வேப்பமரத்தினடியில், பாறைமீது படுத்து காற்று வாங்கியபடி , தூரத்தில் தெரிந்த விருபாஷா கோவில் கோபுரத்தை ரசித்தோம்.

மேலே சென்று, பெயர் தெரியாத கோவில்களையும், மண்டபங்களையும் பராக்கு பார்த்தோம். உண்மையில், நாங்கள் அந்த இடத்தில், அச்சுதராயர் கோவிலை தேடி அலைந்துக்கொண்டிருந்தோம். மலையின் நட்டநடு சென்டரில், விண்ணை முட்டிக்கொண்டு நின்றது, கோயில் ஸ்தம்பம் ஒன்று. அந்த இடத்துக்கே, ஒரு அமானுஷ்யமான தோற்றத்தை கொடுத்தது அது.

அருகிலிருந்த, கோவிலின் படிகளில் ஏறும்போது, கீழே வந்தார் வயதானவர் ஒருவர். தலைப்பாகை, தார் பாய்ச்சி கட்டிய வேட்டி. 'உஜ்ஜயினி மாகாளி' என்று படத்தை என்னிடம் தந்துவிட்டு சென்றார். உஜ்ஜயினியிலிருந்து வந்திருப்பார் போலிருக்கிறது. உள்ளங்கையிலிருந்த‌ மாகாளியை ஒரு நிமிடம் உற்றுநோக்கிவிட்டு, எனை நோக்கி நீண்ட பப்புவின் கைகளின் திணித்தேன்.


இந்த கோயில், இருந்தது சற்று உயரத்தில். ஆனாலும், விடாமல், இரண்டடுக்கு மண்டபம் ஒன்றை கட்டி யிருக்கிறார்கள். லாங்ஹர்ஸ்ட் புத்தகத்தில், அது  ஜைனக்கோவிலென்று சொல்லப்பட்டிருந்தது.  திரும்பவும், வந்த வழியிலேயே திரும்பி நடந்தோம்.


 
வராக கோவிலுக்கு வலப்புறத்தில் தெரிந்த அந்த நீண்ட நெடிய பாதைதான் அச்சுதராயர் கோவிலுக்கு போகும் வழி.முன்பொருகாலத்தில் இங்குதான்  தேர் திருவிழா நடந்தது.  இடிபாடுகளுடன் இருமருங்கிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இந்த மண்டபத் தொடர்தான் அச்சுதராயர் கோவிலின் 'சூலே பஜார்'. இந்த சூலே பஜாரில்தான் நாட்டிய நடன பெண்மணிகள், தங்கியிருந்ததாக எழுதுகிறார், லாங்ஹர்ஸ்ட்.   நாட்டிய பெண்களுக்கு  உபயோகமாக,அருகிலேயே ஒரு குளம்.  
 

 
குளத்தை சுற்றும் முற்றும், எட்டியும் பார்த்துவிட்டு, கோபுரத்தை நோக்கி நடந்தோம். குளத்துக்கு அடுத்தாற் போல் ஒரு யானை நின்றிருந்தது. கரும்பாறை.  திரும்பி கோவிலை நோக்கி நடந்தோம்.

சிதலமடைந்த கோபுரத்தை பார்க்கும்போது, இணையத்தில் அங்கோர்வாட்,இந்தோனேசியா பாலி படங்களில் பார்த்தது போல‌ இருந்தது. வாயிலில் அழகான மங்கையர். அழகான முன் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டிருந்த பெண் சிற்பங்கள் அழகு. 

அண்ணன் கிருஷ்ண தேவராயா, கட்டிய‌ விட்டலா கோவிலைப் போல கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு, தம்பி  அச்சுதராயர் கட்டிய கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தை ஏனோ நினைத்துக்கொண்டேன்.  அழகாக இருந்தாலும்,  தற்போது அதிக சேதங்களுடன் களை யிழந்து காணப்படுவதாலா என்று தெரியவில்லை. கோவிலை ஒட்டி மாதங்கா பர்வதம். எல்லாம் சரியாக இருந்த ஒரு காலத்தில்,  ஒரு நேர்த்தியான கலைநயமிக்க ஓவியம் போலிருந்திருக்கும் இந்த இடம்.

யாளிகளுடன் மறைந்து, ஒளிந்து விளையாடி, பின்னர் ஒருவரை ஒருவர் புகைப்படங்கள் எடுத்தபின்,  மீண்டும் ஜைனக்கோவில்களுக்கே வந்து சேர்ந்தோம்.

சற்று தூரம் செல்ல, யாருமற்ற மலைப்பகுதியானது வழி.  மலைமுகடுகளில் ஆங்காங்கே தெரிந்த வெளிநாட்டினரும் இப்போது சிறுத்துப்போயினர். அந்த மலைப்பகுதியே எங்களுக்கு சொந்தமாகிப்போக, பாடிக்கொண்டும், ஓடிப் பிடித்தும், சில இடங்களில் அமைதியாகவும் நடந்தோம். வனாந்தர வழிபோல் தோன்ற, கீழே ஓடிக்கொண்டிருந்தது , துங்கபத்திரா. சுக்ரீவா குகையில், வாயிலில் யாரோ, புல்லாங்குழல் ஊதும் ஒலி மட்டும்.

துணைக்கு, குருவிகளில் சிறுசப்தங்கள்.  பூக்கள் அடர்ந்த புதரொன்றில் அத்தனை பறவைகள். அவைகளை தொல்லைப்படுத்திவிடாமலிருக்க  அடிமேல் அடி வைத்து நடந்தோம். ஒருவரையொருவர், நடப்பதை பார்த்து கிண்டலடித்து, வெடித்து சிரித்ததில் பயந்து பறந்தன குருவிகள்!


 
கீழே, செதுக்கி வைத்திருந்த சரணாகதி சிற்பங்களையும், தூண்களின் சிற்பங்களையும் பார்த்தபடி நடைபயணத்தை தொடர்ந்தோம். தூரத்தில் கண்ணுக்குத் தெரிந்தவரை மலைகள், அதற்குக் கீழே தென்னைமரத்தோப்புகள், அதற்கும்  கீழே பச்சைபசேலென வாழைக்கன்றுகள். வெயிலுக்கு இதமாக மெலிய காற்று. விஜயநகர பேரரசின், பயணிகளுக்கு ஆங்காங்கே நிழற்குடையென மண்டபங்கள்.

அருகில் தெரிந்தது, இரண்டடுக்கு வாயில் போல ஒன்று. அநேகமாக, இந்த பக்கத்துக்கான விட்டலா கோவிலுக்கான நுழைவாயிலாக இருக்கலாம். நிழலின் அருமையை உணர்த்திய இடம் அது! பிரமாண்டமான பேரரசு ஒன்றின், நுழைவாயிலில் கால்நீட்டி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே, கோயிலைப்பற்றி வாசித்தோம்.



கொஞ்ச தூரம் சென்றதும், கண்களுக்கு புலப்பட்டது  ஒரு அமைப்பு. 'ஆஆ!! அரசர துலாபாரா' என்று கத்திக்கொண்டே ஓடினோம். புத்தகங்களில் பார்த்ததை, நேரில் கண்டு கொண்டதும் ஏற்படும் பிரமிப்பு அது. கோயிலை அடைந்து விட்டதற்கான அடையாளமும் அதுதான்.
 

 
துலாபாரத்தின் தரைப்பகுதியில், தம்பதியினராக, குடும்பமாக விழுந்து கும்பிடும் உருவங்கள் செதுக்கப் பட்டிருந்தன.  அவற்றிலும் ராஜகுடும்பத்தையும், சாதாரண மக்களையும் தேடினோம். 'துலாபார தூண்களுக்கு இடையில் நின்று, தூணில் சாய்ந்து நின்று, நடுவில் துள்ளி குதித்து என்று புகைப்படங்களாக‌ எடுத்துத்தள்ளி  'அரசர துலாபாராத்தை' டரியலாக்கினோம்.

சுக்ரீவ குகை மற்றும் புரந்தர மண்டபம் வழியாக, சாரி சாரியாக மாணவர்கள் வரத்துவங்கியிருந்தனர். ஜோதியோடு ஜோதியாக, நாங்களும் ஐக்கியமாகி விட்டலா கோவிலை ஆராயத்துவங்கினோம்.  ஹம்பியில் கைடு வைத்து பார்த்த ஒரே இடமும் இதுதான்.

விருபாஷாவிலிருந்து ஆரம்பித்து விட்டலா கோவில் வரை, நதிக்கரை வழியாக  நீண்ட இந்த  பாதையும், நடைபயணமும், நாங்கள் செலவிட்ட எங்கள் சந்தோஷமான கணங்களும் நீண்ட நாட்க‌ள் எங்கள் மனதில் தங்கியிருக்கும்.  
 

குறிப்பு: கோவிலைப்பற்றி இங்கு எதுவும் சொல்லப்போவதில்லை. திரும்பி வரும் பாதையை, சுக்ரீவன் குகை வழியாக -  சக்கரத்தீர்த்தத்தை அடையுமாறு வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், ஆட்டோ பிடித்து, 'தாலரி கட்டா'வை (நுழைவாயில்) பார்த்துவிட்டு தொடரலாம். இந்த தாலரி கட்டா, நமது தற்போதைய சுங்கவரி சாவடியின் முன்னோடி.  

Tuesday, March 24, 2015

H...A...M...P...I - வரலாற்றின் வீதிகளில் ஒரு பயணம்


'போய் இறங்கினவுடனே முதல்நாளில் அங்கே போகணும், இதை பார்க்கணும்' என்ற திட்டத்தோடுதான் போய் இறங்கினோம். ஆனால், அங்கே சென்றதும்  எங்கள் திட்டமெல்லாம் போன இடம்  தெரியவில்லை...எங்கு நோக்கினும் திரள் திரளாக குவித்து வைத்ததுபோன்ற‌ கற்பாறைகளையும், அந்த ஆற்றையும் பார்த்து பிரமித்து போனதில், முதல்நாள் திட்டமெல்லாம் காற்றில் பறந்தே போனது.


நினைவு சின்னங்களை பார்க்கவேண்டியதை விட, பார்த்து பார்த்து பருக வேண்டியது ஹம்பியின் நிலக்காட்சி என்று புரிய, ஹம்பிக்கு எங்களை ஒப்புக்கொடுத்தோம். ஹம்பியும், எங்களை தத்தெடுத்துக் கொண்டது.

திருவிழாவில் தொலைந்தவர்கள் போல முதல்நாள் முழுவதும் விருபாஷா கோவிலையும் ஆற்றையும், சூழ்ந்திருந்த மலைப்பாறைகளையும்  பார்த்து பார்த்து பிரமித்துபோனோம். 'இந்த பூமியில் என்ன நடந்திருந்தால், இந்த கற்பாறைகள் இப்படி ஆகியிருக்கும், எந்த விதியின் கீழ் இந்த பாறைகள் இப்படி ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருக்கின்றன' என்று கிறுகிறுத்துபோனோம்.


தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து  படகில் ஆற்றைக்  கடந்து மறுபக்கம் போனோம். விருபாபூர் கட்டே (தீவு) வீதிகளில் அலைந்து திரிந்து  தெருவோர கடைகளை வேடிக்கை பார்த்தோம். இளநீர் குடித்தோம். பாறை உருண்டைகளும், ஆறும், காற்றும் பழகிய பின் மெல்ல எங்கள் இயல்புக்கு வந்தோம். அடுத்த ஆறு நாட்களும் ஏதோ ஒரு புராதன காலத்து ஊரில் அறுநூறு ஆண்டுகள் வசித்தது போல்தான் இருந்தது.

பொடிநடையாய் நடந்து மலைகளையும், கல்மண்டபங்களையும், பழங்கால சந்தைகள் நடந்த பஜார்களையும் கடந்தோம்.  ஆட்டோக்களையும், கைடுகளையும் கவனமாக தவிர்த்தோம்.

கைகளில் இருந்தவை, லாங்க்ஹர்ஸ்ட்டின் புத்தகம் ஒன்றும், நூனிஸின் 'விஜயநகரப் பேரரசு' மற்றும் தொல்லியல் துறையின் ஹம்பி கையேடு.  கேமிரா, புத்தகங்களை முதுகில் சுமந்துக்கொண்டு நாடோடிக் கூட்டத்தில் நாங்களும் சிறு புள்ளிகளானோம்.      

நதிக்கரை வழியாக நடந்தே விட்டலா கோவிலை அடைந்தோம். 'பழங்காலத்தில் குதிரைகள் வழியாக  மக்கள் இந்த வழியை கடந்திருப்பார்கள்' என்று கற்பனை செய்தபடி  பாறைகள், இடிபாடுகள் வழியாக இரண்டு கிமீ நடந்து தீர்த்தோம். 

விட்டலா கோவில், மண்டப தூண்களின் குதிரை மீதமர்ந்திருந்த வீரர்களின் முகங்களிலெல்லாம்  கிருஷ்ணதேவராயரை தேடினோம். தலையில் பெரும் கொண்டையிட்டு , கைகூப்பி நின்ற சிலைகளையெல்லாம் கிருஷ்ணதேவராக எண்ணி பூரித்தாள், பப்பு அவள் பங்குக்கு.  தெனாலிராமனை தேடியலைந்தவளுக்கு இதுதான் இலுப்பைப்பூ.

விட்டலா கோவிலின், கல்தேரின் சக்கரங்களின் அச்சை பிடித்து தேரை நகர்த்திவிட‌ கடும்முயற்சி(!) செய்தோம். இறுதியில், சுழற்றுவது போல் புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கரத்தை விட்டுவிட்டோம். தார்வாடிலிருந்தும், பெல்லாரியிலிருந்தும், கிராமப்புற கர்நாடகப் பகுதியிலிருந்தும் வந்திருந்த மாணவர்களின் ஆசைக்கிணங்க போட்டோக்கள் எடுத்துத்தந்தோம். கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்களை தீர்த்துவிட்டு, திரும்ப நடையை கட்டினோம்.

ஆற்றைக்கடந்து, உணவகங்களை தேடிச்சென்றோம். கவுதமி உணவகத்தில், பீட்சாவும், சிக்கன் லாஃபாவும் உண்டோம். திரும்பவும் படகு சவாரி.  கோவில் யானை லஷ்மி தண்ணீர் குடிக்க வந்திருந்தது. தண்ணீர் குடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னாலேயே சென்றோம்.

ஹேமகுட்டா மலைப்பகுதியின் உச்சிக்கு ஏறி, சூரியன் ஒரு சிவப்புக்கோளமாக மறைவதைக் கண்டோம். தெரியாதவர்கள்,  தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஒரு சிறு புன்னகை மட்டுமே போதுமாக இருக்கிறது. கும்பலாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவரவர் வழி நடந்தோம்.

மிகவும் பிரசித்தி பெற்ற 'மேங்கோ ட்ரீ' உணவகத்தில் ஆலிவ் பீட்சாவும், கோபி மஞ்சூரியனும், சப்பாத்திக் கறியும் உண்டோம்.  தெருவோர லம்பாடிகளிடம் பேரம் பேசி கைக்கு சோழி மாலை, ஒற்றைக்காலுக்கு கொலுசு, கழுத்தணிகள் வாங்கி அணிந்துக்கொண்டோம். வீட்டுக்கு திரும்பும் வரை கழற்றாமல்,  பப்புவும் நானும்  ஒரு மினி லம்பாடி குடும்பமாகவே மாறிப்போனோம்.


காலையில் எழுந்து, சூரிய உதயத்தை பார்த்து, நேராக ஆற்றுக்கு சென்று  ஏதாவதொரு படியில் அமர்ந்துக் கொள்வோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆறு உயிர் பெறுவதை காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமான காட்சி!  ஹம்பி பேருந்து நிலையத்தில் இறங்கும்  பயணியின் கால்கள் எப்படித்தான் ஆற்றுக்குச் செல்லும் வழியை தாமாக அறிந்துக்கொள்கின்றனவோ! வரிசையாக வரிசையாக மாணவர்களும், சுற்றுலா பயணிகளும்  ஆற்றை நோக்கி ஒவ்வொரு நாளும் வந்தபடி இருக்கின்றனர்.

"எரடு ப்ளேட் குண்ட்பங்கலா கொட்ரீ" "எரடு பூரி,  சாய் பேக்கு" "மிர்ச்சி எரடு கொட்ரீ" என்று ஏதோ கன்னடாவையே கரைத்துகுடித்தமாதிரி தெருவோரக்கடைகளில் சுடச்சுட குழிப்பணியாரமும், டீயும், பச்சைமிளகாய் பஜ்ஜியும் வாங்கி காலை உணவை சாப்பிட்டோம். காசு கொடுக்க எத்தனிக்கும்போது, அவர்களும் கன்னடத்திலேயே விலையை சொன்னபோது திருதிருவென்று விழித்து 'இங்கிலீஷ் மே போலியே' என்று அசடு வழிந்தோம்.


ஹேமகுட்டா மலைமீதுள்ள கோவில்களில் ஏறி இறங்கி, எங்கிருந்து பார்த்தாலும், முழு ஹம்பியும் தெரிவதை பார்த்து, ஆளுக்கொரு கேமிராவில் எல்லா கோணங்களிலும் புகைப்படங்களாக எடுத்து தள்ளினோம். கோயில் கோபுரம், அன்று எங்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டதை அந்த விருபாஷரே அறிவார்.

மலையின் மறுபக்கத்துக்கு இறங்கி, கடுகு கணேசாவை தரிசித்து சாலைக்கு வந்தோம். காணாததை கண்டது போல, தர்பூசணி பத்தைகளை வாங்கி தெரு வோரத்திலேயே  தின்று மலைப்பயணத்தின் தாகம் தணித்தோம். அடுத்து, கிருஷ்ணா கோவிலை அடைந்து தூண்களை ஆராய்ந்தோம்.

'இது கிருஷ்ண தேவராயா கட்டினது, இங்கேதான் அவர் நடந்து வந்திருப்பாரு' என்றும் 'இது ஒரிசா வார்லே ஜெயிச்சதுக்காக கட்டினது, இதுலே இருந்த கிருஷ்ணா ஒரிசாலேருந்து கொண்டு வந்து வைச்சது' என்றும் 'அந்த பால‌கிருஷ்ணர் சிலை இப்போ  சென்னை மியூசியத்திலே இருக்கு' என்றும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து வாசித்ததை பரிமாறிக்கொண்டோம்.

கிருஷ்ணா கோவிலிருந்து வெளியேறினோம். செடியோடிருந்த பச்சை கொண்டை கடலைகளை   வாங்கிக்கொண்டு, உரித்து சாப்பிட்டபடி லஷ்மி நரசிம்மரைக் காண கரும்புவயல் வழியே நடந்தோம். எங்கள் கால்களுக்கு  அந்தப்பக்கம், பழங்காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திராவின் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.


அச்சுதராயர் கோவில்,நெடிய  சூலே பஜார் மண்டபத்தில் தங்கமும், வைரமும் விற்பதாக கற்பனை செய்துக் கொண்டோம்.  ராணிகளும், இளவரசிகளும்  நகைகள் வாங்குவது போல,  ஏதோ நாங்களே வைரமும், வைடூரியமும் வாங்க வந்திருப்பதாக கருதிக்கொண்டோம்.  


அரண்மனை பகுதிகளை ஏதோ வரலாற்று ஆய்வாளர்களைப் போலவே அலசி ஆராய்ந்தோம்.  'இதோ ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடம்' '"அஷ்டதிக்கனா" க்களின் இடம்' 'இங்கதான் நவராத்திரி' 'வெளி நாட்டுக்காரர்கள் ராஜாவை சந்திச்ச‌து'  ' டைனிங் ஹால் இங்கே இருக்கு'  'அது சங்கமா டைனஸ்டி அரண்மனை'  என்று  நூனிஸும், பயஸும்,  நிக்கோலா காண்டியும் லாங்ஹர்ஸ்ட்டும் தடி எடுத்துக்கொண்டு ஓடிவரும் அளவுக்கு தேடித் தேடி ஆராய்ச்சி செய்தோம். இறுதியில், களைத்துப் போய், பிரமிடு போல இருந்த இடத்தில்  ராஜாக்கள் போல அமர்ந்து பாவனை செய்தோம். 


கொஞ்சம் இளைப்பாறியதும், ஒரு அஸ்திவாரத்தருகே ஓடிப்போய், 'இங்கதான் தெனாலிராமன் தொங்குனாரு' என்றாள் பப்பு. 'தொங்குனாரா' என்று நாங்கள் அதிர்ந்ததும், 'இல்லேல்ல..தூங்கனாருன்னு சொல்ல வந்தேன். அப்படியே, தங்குனாருன்னு வந்துச்சு..அதான் சேர்த்து சொல்லிட்டேன்' என்று சமாளித்தாள்.

ரகசிய அறையில் இறங்கி, இருட்டுக்குள் தட்டுத்தடவி நடந்து, படிகளை கண்டதும்'ஹப்பாடா' என்று ஓடிவந்து மேலேறினோம். 'வைரங்களும், விலைமதிப்பற்ற கற்களும் பதித்த நாற்காலி அங்கேதான் வைக்கப்பட்டிருந்தது' என்று  செட்டார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை நினைவு கூர்ந்தோம். ராணிக்களின் அரண்மனைகளிலும், லோட்டஸ் மஹாலிலும் நிஜ ராணிகளைப்போலவே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நடைப்போட்டோம். ஹசாரே ராமா கோவிலில் ராமாயணத்தை கார்ட்டூன் போல பார்த்து கதை சொல்லிக்கொண்டோம்.

கோவிலுக்கு எதிரில் இருந்த பான் சுபாரி பஜாரில் வெற்றிலை கிடைக்குமா என்று தேடிச் செல்ல ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு  ஓசையில்லாமல் நழுவினோம். குதிரைகளும், யானைகளும் சென்று வந்த ராஜபாதையில், ஆட்டோவுக்கு காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் லெமன்  கோலிசோடா அருந்தினோம்.


மிஞ்சிய நேரங்களில், சைக்கிள் எடுத்து  ஹம்பி பஜாரை சுற்றினோம்.பப்புவுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவளை திகிலடைய வைத்தேன். 'சைக்கிள் சைக்கிள் எனக்கு கியர் சைக்கிள்' என்று குதித்துக்கொண்டிருந்தவளை சைக்கிள் எடுக்கலாமா என்றாலே அவள் ஓடிப்போகும் அளவுக்கு  செய்ததுதான் என் சாதனை.  

மூன்று நாட்கள் ஹம்பி, ஒருநாள் பாதாமி, பட்டடக்கல், முடிந்தால் கோவா என்று மங்கலான திட்டம் வைத்திருந்தோம். ஆனால், ஹம்பி எங்களை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டு பார்க்க முடியாத இடங்களில் ஹம்பியும் ஒன்று. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...ஹம்பியை அடைந்தால் போதும். பயணிக்க வேண்டிய பாதைகளை ஹம்பி பார்த்து கொள்ளும்.  ஒவ்வொருநாளும் வாசித்து வாசித்து, வாசித்த‌ இடங்களை நேரில் கண்டு உணர்ந்தது சுவையான அனுபவம்.

துங்கபத்திரா முழுவீச்சோடு  நடைபோடுவதையும், இன்னும் அதிகமாக ஹம்பியை அறிந்துக்கொள்ளவும் மீண்டுமொருமுறை, மழைக்காலத்தில் வர வேண்டுமென்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான் வேண்டியிருந்தது.

Thursday, January 01, 2015

'Hampi' New year!

ஊருக்குத் திரும்பிவிட்டாலும், இன்னும் மனம் ஹம்பியிலிருந்து மீளவில்லை. திரள் திரளான கற்பாறைகள், அதன்மேல் முளைத்து உருண்டு மறையும் சூரியன், பழங்கால மண்டபங்கள், சிற்பங்கள், கோயில்கள், மெல்ல ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திரா, காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும் இரும்புதுகள்கள் போல ஆற்றை நோக்கி செல்லும் பயணிகள், கோவில் யானை,  சிநேகமான‌ லம்பாடிகள் எல்லாவற்றுக்கும் மேல் ஹம்பியை சுழன்று வரும் வரலாறு, குரங்குகள் என இன்னும் இன்னும் ஹம்பிக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்.

மாதங்கா மலைமீது உதிக்கும் சூரியனோடு புத்தாண்டு வாழ்த்துகள்!