Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts

Thursday, June 11, 2015

ஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)

வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதியையும் முக்கியமாக -எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமான மக்கள்  மற்றும் வாகன நெரிசல்தானே- நமது அடையாளம்.

உத்தராகாண்ட் மலைபயணங்களில் கூட, எங்களது அனுபவம் இப்படியாகத்தானிருந்தது. முக்கியமாக சென்னை போன்ற ஜனசந்தடி மிகுந்த ஊரிலிருந்து சென்றால்,  'இந்த ஊர் இந்தியாவுக்குள்தானிருக்கிறதா' என்று சந்தேகம் வராமலிருக்காது.

சன்னமான வெயில். இளங்காற்று. சரிவு சரிவாக மலைத்தொடர்கள். மலைத்தொடர்களை போர்த்தியிருக்கும் மரகதப்பச்சை. தொடுகோடுகள் போன்ற மலைத்தொடர் ஒன்றில், அருகமைந்த மலைமுகடுகளை பார்த்தபடி நமது பயணம். வழியில் ஒன்றிரண்டு வியூ பாயின்டுகள். 'மேக்டோக்' வியூ பாயிண்ட், அழகிய இடம். பள்ளத்தாக்கு என்பதற்கு இலக்கணத்தை இங்கு கற்றுக்கொள்ளலாம்.

பயணத்தின் பாதை முழுக்கவே, நாம் கண்டு களிக்கக்கூடிய இயற்கை அற்புதங்களால் நிரம்பியிருக்கின்றன. எங்கு நின்று பார்த்தாலும், அருவிகளும், பூமியின் அடியையே காணமுடியாதபடி  பள்ளத்தாக்குகளும், எங்கிருந்தோ திடீரென்று எழும்பி வரும் வெண்பொதி பஞ்சுகளும் நம்மை மயக்குகின்றன.

ஏதோ ஒரு ஸ்க்ரீன் சேவருக்குள் நுழைந்துவிட்டாற்போல, ஆங்கிலப் படக்காட்சிகளுக்குள் எங்களை கொண்டு போய் விட்டுவிட்டது போல தோன்றியது.  பேசாமல், எங்கேயும் தங்காமல்,  சாலை செல்லும் வரை பயணித்துக்கொண்டே இருக்கலாமென்ற எண்ணம் இந்த பயணத்தில் எழுந்தால் நீங்களும் என் இனம்தான்!


படமெடுக்கலாமென்று, பா ஷிம்மை நிறுத்தசொன்னால், இடது பக்கத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். கதவை திறந்தால், அதல பாதாளம். ஒருவர் இறங்கி நடக்க வசதியுண்டு என்றாலும், நமக்கு பழக்கமில்லாததால் பகீரென்கிறது. :‍)

பெரும்பாலும், நடந்தேதான் தூரங்களை கடக்கிறார்கள்,மக்கள். ஒருவரைக் கூட தேவைக்கதிகமான  பருமனுடன் பார்க்கவில்லை.  இதில் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு பெண்கள். சாலையில் ஆங்காங்கே, நிலக்கரி குவியல்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

மலையை குடைந்தாலே, இங்கு நிலக்கரிதான். ஒன்று நிலக்கரி அல்லது சுண்ணாம்பு. சில பாறைகளை பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம், மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரமென்று. சில பாறைகளில், மீன்களின் தடயங்களை கூட‌ காணலாம் என்று இணையத்தில் படித்தது மூளையில் ஒளிர்ந்தது.

நெய்வேலியில், இரண்டாம் கட்ட சுரங்கமெல்லாம் தோண்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கே போய் விடுவார்கள் போல. இங்கு, சாலையோரத்தில், மக்கள் தங்கள் கைகளைக்கொண்டே பாறைகளை துருவி நிலக்கரியை எடுத்துவிடுகிறார்கள். அதனால்தான், அத்தனை லாரிகள் மேகாலயாவிலிருந்து செல்கின்றன போலும்.

மலையைக் குடையவோ, பாறையை வெட்டவோ, பெரிதாக எந்த உபகரணங்களையும் காணவில்லை. ஒரு மண்வெட்டி, சுமந்து செல்ல மூங்கிலான கூடை ஒன்று. இடைவேளைக்கு, ரெட் டீ. மழை பெய்கிறதோ இல்லையோ, ஒரு ஜெர்கின். கால்களில் ஷூ ஒன்று. இதுதான், உழைப்பாளிகளின்  உடை.

கிராமங்கள் இருக்கிறதென்பதற்கு அறிகுறியாக, சில இடங்களில் வரிசையாக இறைச்சிக்கடைகள். வியு பாயிண்டுகளுக்கு வரும் பயணிகளுக்கு மேகியும், உள்ளூர் புளிப்பு பழங்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளும் விற்பனைக்கு. பெட்டிக்கடை என்றால், உண்மையாகவே பெட்டியை போன்ற கடைகள்.

வழியில் தென்பட்ட‌து 'ஆரஞ்சு ரூட்ஸ்' உணவகம்.  தோசையும், ஃபுல் மீல்ஸும் உண்டோம். தமிழ்க்காரர்.  திரு.ரயான். ஊர் மதுரை. அவரது ரிசார்ட்டில் மூன்று நாட்கள் வாசம்.

ச்சிராபுஞ்சியை அடைந்துவிட்டோமென்பதற்கு அறிகுறியாக, வீடுகள் வரிசையாக தென்படுகின்றன. ஓவியங்களைப் போல வீடுகளும் தெருக்களும். ஜன்னல், திரைச்சீலை, கொத்து கொத்தாய் ரோஜா பூக்கள். பல்கணியில் பூனைகள்.   அப்பழுக்கின்றி சாலைகள்.  தெருவோரத்தில் விளையாடும் குழந்தைகள். ஊருக்கு எல்லையில், ஒரு சிமென்ட் தொழிற்சாலை. ருஷ்யக்கதைகளில், வருவது போலவே இருந்தது.

ச்சிராபுஞ்சியிலிருந்து 15 கிமீயில் இருக்கிறது, லாட்கின்ஸ்யூ  கிராமம். கஸி மலைத்தொடரை, குடைந்து சாலைவசதி செய்திருக்கிறார்கள் என்பதற்கு அறிகுறியை  குகையாக செல்கின்ற‌ பாதையிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.
அடுத்த நிறுத்தம் ச்சிராபுஞ்சி ஹாலிடே ரிசார்ட்.

எதிரில்,  கிழக்கு கஸி மலைத்தொடர். கையளவு மேகமாக பங்களாதேஷிலிருந்து மேலெழும்பி வரும் வெண்பஞ்சு, சில நிமிடங்களில், மலையையே முழுங்கும் மங்காத்தாவாகி விடுகிறது. இந்த இடைவேளையில், அருவிகளை எண்ணி எண்ணி...தோற்றதுதான் மிச்சம். எங்கிருந்து பார்த்தாலும், நோக்காலிக்காய் அருவி தெரிவதுதான் சிறப்பு.

இந்த பயணத்தில், இதோ இந்த நிமிடத்தில், நாங்கள் நின்றுக்கொண்டிருப்பது, இந்தியாவின்‍ கஸி மலைத்தொடரின் கடைசிக்கிராமம். இதற்கப்பால் தெரிவதெல்லாம், பங்களாதேஷ்.  வெட்டப்பட்டது போல, லாட்கின்ஸ்யூ கிராமத்தில் மலைத்தொடர் முடிய, கீழே ஏரிகளும், வயல்களுமாக விரிகிறது பங்களாதேஷ்.   

அடுத்த சில நாட்களில் நாங்கள் செய்ததெல்லாம், இயற்கையில் எங்களை தொலைத்ததுதான்.   இதற்கு முன்பாக, இயற்கையை இந்தளவுக்கு எப்போது ரசித்தேன் என்று எனக்கே நினைவிலில்லை.

மனிதன், ஊடுருவவே முடியாத பசுமை மாறாக்காடுகள், அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் போல ஃபிரெஷ் க்ரீமாக மேகங்கள், பகலில் கூட சத்தமிடும் சிக்கடாக்கள், குருவிகள், குருவி அளவில் விதவிதமான வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள், இரவில் மட்டும் ஓடிபிடித்து விளையாடும் மின்மினிப் பூச்சிகள், அழகழகான கிராமத்து குழந்தைகள், பார்த்ததுமே வீட்டுக்கு அழைக்கும் பாட்டிகள், அடுக்ககங்கள் கட்டவோ அல்லது உள்ளூர்க்காரரல்லாத வேறு எவரும் குடியேறவே அனுமதிக்காத மலைவாழ்மக்கள்  என்று வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களை எங்களுக்கு வழங்கியது ச்சிராபுஞ்சி அனுபவங்கள்.  

லாட்கின்ஸ்யூ, நோங்வார் கிராமங்களில் காலார நடந்தோம்.அவர்களைப் பார்த்து, நாங்கள் ஆர்வமானது போலவே, எங்கள் முகங்களும் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்தது போலும். 'கஹா போஸ்தி'என்று வினவிய‌ அனைவருக்கும் 'சென்னை' என்று சொல்லியும் விளங்காதவர்களுக்கு 'மதராஸ்' என்று பதிலளித்தோம். (முக்கியமாக, புதியவர்களை கண்டாலே உற்சாகத்துடன் பேசும் பாட்டிகள், 'தி வே ஹோம்' பாட்டியை நினைவூட்டினார்கள்.)



காட்டுக்குள் மறைந்திருந்த அருவியொன்றை இரண்டு மணிநேரத்துக்கு  எங்கள் வசப்படுத்தினோம். எக் ஹக்கா சௌ, சிக்கன் ஹக்கா சௌ ,வகை வகையான ஃபிரைடு ரைஸ்கள் என்று இங்கு எதெல்லாம் உண்ண மாட்டோமோ அதையெல்லாம் அங்கு ஒரு கை பார்த்தோம்.  சலித்தபோது, அம்பிகா அப்பளம்ஸில் வாங்கிய பருப்புப்பொடியை சாதத்தில் பிசைந்து உண்டோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து, ஆசியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல ஒருநாளை ஒதுக்கியிருந்தோம். நோங்வார், லாட்டின்ஸ்க்யூ, ச்சிராபுஞ்சியை கண்டதும் முடிவை மாற்றிக்கொண்டோம். எல்லா ஊர்களும் ,கிராமங்களும் தூய்மையாகத்தான் இருக்கின்றன. ஒரு பாலித்தீன் பையையோ, குப்பையையோ நாங்கள் காணவில்லை.  வேர்ப்பாலங்களை காண பசுமை நடை, ச்சிராபுஞ்சியில் ஊர் சுற்றல் என்று  நாட்களை கழித்தோம்.

மாலையில், உள்ளூர் மக்களின் கஸீ பாடல்களில், இந்தி பாடல்களில் ஊறினோம். நின்று நிதானமாக, ஆனாலும் 'காட்டு காட்டென்று' இரவு மட்டும் காட்டும் பேய் மழையை, அசாதார‌ணமான மின்னல்களை கண்ணாடி ஜன்னல்களினூடாக கண்டோம்.

சொர்க்கத்தோடு  இணைந்திருந்த  மேகாலயா, எப்படி பிரிந்து பூமியோடு இணைந்ததென்ற பாட்டிக்கதையை கேட்டோம். கா லிக்காயின் கதையை கேட்டு, சோகத்தில் மூழ்கினோம்.  பத்து ரூபாய்க்கு, புளிப்புப்பழங்களை அள்ளிக்கொடுத்த  பாட்டிகளிடம் 'கொஞ்சமா தாங்க‌ போதும்' என்று பேரம் பேசி, பழத்தை பாதி கடித்துதும், உச்சிக்கு ஏறிய புளிப்பில் முகத்தை அஷ்டக்கோணலாக்கினோம். மலை வாழைப்பழங்களை வாங்கி,  உண்ணும்போது அகப்பட்ட  கொட்டைகளை கண்டு அதிசயித்தோம்.

ச்சிராபுஞ்சியின் இயற்கை அதிசயங்களை,  கண்கவர் பூங்காக்களை, குகைகளை, எண்ணற்ற அருவிகளை ருசித்தோம். அதன் உயரங்களை அளந்தோம். மேகம் கவிந்த மலை முகடுகளில் ஓடித்திரிந்தோம். மேகத்தையே சுவாசித்தோம்.

ச்சிராபுஞ்சியிலிருந்து எங்கள் வீட்டுக்கு தபால்களை அனுப்பினோம். 'நோக்காலிக்காய் ஸ்டாம்ப்' 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ் ஸ்டாம்ப்' இருக்கிறதாவென தபால் அலுவலர்களை கிடுக்கிப்பிடி போட்டோம். ஆறுகளிலிருந்தும், வேர்ப்பாலத்தினடியிலிருந்தும் கூழாங்கற்களை சேகரித்தோம்.

சாப்பிட்ட பின்பும்,  சும்மா இருந்த நேரங்களிலெல்லாம் ரெட் டீயும், லெமன் டீயும் அருந்தினோம். மற்ற சுற்றுலா பயணிகளோடு, நட்பு பூண்டோம். கஸீ உடையை நாங்களும் உடுத்திக்கொண்டு, 'இது போல் எங்கு கிடைக்கும்' என்று விசாரித்தோம்.மலைத்தேனும், மேகாலயாவின் மழையில் விளைந்த தூய்மையான மஞ்சளை பொடி செய்து வாங்கிக்கொண்டோம்.

மழை பெய்த போது, அடங்காமல் மழையுடையை உடுத்திக்கொண்டு மழையில் ஓடினோம். இதுவரை, எத்தனை இந்திய மாநிலங்களில், அதன் தலைநகரில் கால் வைத்திருக்கிறோம் என்று கணக்கு பார்த்தோம்.

எந்த ஊரிலிருந்து  கிளம்பினாலும், பப்பு சொல்லும், 'நான் இங்கியே   இருக்கப்போறேம்ப்பா' வை நாங்களும் இந்த முறை சொல்லிக்கொண்டோம். 'பப்பு, நீ என்னோட வயசாகிட்டு என்னை இங்கே கூட்டிட்டு வாப்பா' என்று ஆளுக்காள் உடன்படிக்கை போட்டுக்கொண்டோம்.

வாழ்க்கையில், மறக்க முடியாத அனுபவங்களை மூளைக்குள் ஏற்றிக்கொண்டோம். 'நடந்து சென்ற‌ பாதைகளை, கடந்து வந்த காட்சிகளை ,சந்தித்த மனிதர்களை மறந்துபோகவே கூடாது' என்று நியுரான்களுக்கு கட்டளையிட்டோம். 

'பசுமைநடையை, அங்கு செலவழித்த  கணங்களை லைஃப் முழுக்க நினைவு வைத்திருக்கப்போவதாக‌ நன்றி சொல்லி' கையோடு கை கோர்த்துக்கொண்டாள் பப்பு. சாட்சியாக, கனன்றுக்கொண்டிருந்தது கேம்ப் ஃபயரின் கங்குகள்.

Tuesday, April 14, 2015

நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம் ...

 ஹம்பியில், பார்க்க வேண்டிய இடங்கள் - அமைந்திருப்பதே வித்தியாசமானது. சொல்லப்போனால், 'பார்க்கவேண்டிய இடங்கள்' என்ற பட்டியலே தேவையற்றது. ஒருவருக்கு, முக்கியமாக படுவது மற்றொருவருக்கு தேவையற்றதாக இருக்கலாம். இருந்தாலும், நாங்கள் சென்று வந்த பாதையை - பதிவு செய்யவும், குறிப்புக்காகவும் எழுதி வைக்கிறேன்.

நதிக்கரை வழியாகவே 'கல்தேரு' (விஜய விட்டாலா) கோவிலுக்கு பழங்காலத்தில் எப்படி சென்றிருப்பார்கள் என்று அறிய விரும்பினோம். 'நதிக்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது' என்று படிக்கிறோமே...அதை நேரில் காண வேண்டாமா? :-)

விருபாஷா கோவில் டூ விட்டலா கோவில் ‍- வழி துங்கபத்திரா! ஆம், விஜயநகர மன்னர்களின் பாதையில் - நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம்! விருபாஷா கோவிலின், பெரிய நந்தியிடம் இருந்து, நடக்க ஆரம்பித்து துங்கபத்திரா வழியாக விஜய விட்டலா கோவிலை அடைவதே திட்டம்.

 பயணிகளுக்கு உதவியாக, ஆங்காங்கே  வழிகாட்டி கற்கள் இருக்கின்றன. இல்லையென்றாலும், ஹம்பியில்  வரலாற்று சின்னங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் பாதகமில்லை. வழிதவற வாய்ப்பும் இல்லை. 

பெரிய நந்தியின் இடப்புற வழியாக மலையடிவாரத்தை ஒட்டி நடந்தோம். வழியில் மக்கள், 'அபார்ட்மெண்ட்கள்' பலவற்றை கட்டியிருந்தார்கள்.


 
குகைகளின் வழியாக, புறப்பட்டு சென்ற அந்த வழித்தடத்தின்,  ஆரம்பத்தில் சக்கரத்தீர்த்தத்தில் கால் நனைத்தோம். அங்கிருந்து ஆரம்பிக்கும் படிகளில் மேலேறி, மண்டபத்தில் அமர்ந்தோம்.  எங்களுக்கு நேரெதிரில் துங்கபத்திரா. கோவிலுக்குப் பின்னால் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவள், இங்கு வேறுமுகம் காட்டுகிறாள்.


நீர் அரித்த, பாறைகளை பார்த்தவாறே நினைவுகளில் தொலைந்து போனோம். பாறைகள், குடைந்தது போலவே அரிக்கப்பட்டிருந்தது. எத்தனை வருடத்து மழையும், வெள்ளமும்! 


தலைக்கு, மேலிருந்த மரத்தில், ஏதோ சலனத்தை உணர்ந்து திரும்ப , மந்திக்கூட்டம். குரங்கும் தொப்பிவியாபாரி கதை நினைவுக்கு வர,  தலையிலிருந்த  தொப்பியை, கவனமாக பிடித்தபடி நடையை தொடர்ந்தோம். 

அடுத்து வந்தது, கோதண்டராமர் கோவில். பூஜை நடைபெறும் கோவில் போலிருக்கிறது. பெரிய இரும்பு கதவு போடப்பட்டு, வர்ணங்களுடன் இருந்தது. பழைய கோவில் என்ற நினைப்பே வராததால் தவிர்த்துவிட்டு, அதையடுத்து இருந்த கடையில் இளநீர் அருந்தினோம்.

இளநீர் காய்கள் ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் இருந்தார் ஒரு வளையல் அம்மன். 

 

"Hampi is mythical landscape imbued with the presence of  Gods, godesses and heroes" என்பர் ஜான் ஃபிரிட்ஜ் மற்றும் ஜியார்ஜ் மிஷெல்  - அவர்களது 'ஹம்பி விஜயநகரா' என்ற புத்தகத்தில். கோயில்கள் தூண்களிலெல்லாம், வாயில் சுவர்களிலெல்லாம், மேற்கூரையில், இடிந்து விழுந்த தூண்களில் என்று எங்கும் கடவுளர் மயம்தான். அவையெல்லாம் போதாதென்று, இந்த வன்னி மரத்தினடியில் ஒரு அம்மன், அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இளநீர் குடித்தபடி, அம்மனின் தலபுராணமும், தல விருஷத்தைப் பற்றியும் கேட்டபிறகு, நடையை தொடர்ந்தோம். டிசம்பர் மாத இறுதி. வெயில் அதிகமில்லை.  இதமான வெயிலுக்கு ஏற்ற சுகமான குளிர் காற்று. காற்றை அனுபவித்தபடி மேலும் நடந்தால், வழிகாட்டி பலகைகள் நேராக வராக கோவிலை காட்டியது.


 
மரத்தின் கீழமர்ந்து, மாணவர்கள்  சிலர் படங்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். பாறைககளுக்கிடையில் மிஞ்சியிருந்த கோபுரங்களும், கோவில் மண்டபங்களும் தத்ரூபமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துவிட்டு, வராக கோவிலையும், அதன் தூண்களையும் சற்று நேரம் ஆராய்ந்தோம்.


 
நுழைவாயிலில் இருக்கும் ஹம்பியின் 'ராஜ முத்திரை' அழகு!  அம்புலிமாமா ராஜா கதைகளில் 'ஐம்பது வராகன், நூறு வராகன்' என்று படித்திருப்போமே! அந்த  'வராகன்' என்ற நாணயம் பிறந்தது இங்குதான் என்கிறார், நூனிஸ் 'விஜயநகர பேரரசு' புத்தகத்தில்.

வராக கோவிலுக்கு வலப்புறத்தில், எதிர்பட்ட‌  நீளநீளமான மண்டப  பாதைகளை பார்த்துவிட்டு, 'எதற்கு இப்படி கட்டியிருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு மலைப்பகுதிக்கு சென்றோம்.  மலைப்பகுதில் இருந்த சிதிலமடைந்த கோவில்களில், உள்நுழைந்து வெளியேறி மேலே மேலே சென்றுவிட்டோம். ஜைனக்கோவில்கள் போலிருந்ததைக் கண்டு, புத்தகங்களை துழாவி, அங்கேயே அமர்ந்து வாசித்தோம்..  

தூண்களிலும், மண்டபச்சுவர்களிலும் சிற்பங்களைத் தேடினோம். களைத்துப்போய், பையிலிருந்த பெரிய இலந்தம்பழங்களை உண்டோம். இதற்குமுன், இந்த இலந்தம்பழங்கள், இவ்வளவு ருசியாக இருந்ததேயில்லை.
பாதை ஓரத்திலிருந்த வேப்பமரத்தினடியில், பாறைமீது படுத்து காற்று வாங்கியபடி , தூரத்தில் தெரிந்த விருபாஷா கோவில் கோபுரத்தை ரசித்தோம்.

மேலே சென்று, பெயர் தெரியாத கோவில்களையும், மண்டபங்களையும் பராக்கு பார்த்தோம். உண்மையில், நாங்கள் அந்த இடத்தில், அச்சுதராயர் கோவிலை தேடி அலைந்துக்கொண்டிருந்தோம். மலையின் நட்டநடு சென்டரில், விண்ணை முட்டிக்கொண்டு நின்றது, கோயில் ஸ்தம்பம் ஒன்று. அந்த இடத்துக்கே, ஒரு அமானுஷ்யமான தோற்றத்தை கொடுத்தது அது.

அருகிலிருந்த, கோவிலின் படிகளில் ஏறும்போது, கீழே வந்தார் வயதானவர் ஒருவர். தலைப்பாகை, தார் பாய்ச்சி கட்டிய வேட்டி. 'உஜ்ஜயினி மாகாளி' என்று படத்தை என்னிடம் தந்துவிட்டு சென்றார். உஜ்ஜயினியிலிருந்து வந்திருப்பார் போலிருக்கிறது. உள்ளங்கையிலிருந்த‌ மாகாளியை ஒரு நிமிடம் உற்றுநோக்கிவிட்டு, எனை நோக்கி நீண்ட பப்புவின் கைகளின் திணித்தேன்.


இந்த கோயில், இருந்தது சற்று உயரத்தில். ஆனாலும், விடாமல், இரண்டடுக்கு மண்டபம் ஒன்றை கட்டி யிருக்கிறார்கள். லாங்ஹர்ஸ்ட் புத்தகத்தில், அது  ஜைனக்கோவிலென்று சொல்லப்பட்டிருந்தது.  திரும்பவும், வந்த வழியிலேயே திரும்பி நடந்தோம்.


 
வராக கோவிலுக்கு வலப்புறத்தில் தெரிந்த அந்த நீண்ட நெடிய பாதைதான் அச்சுதராயர் கோவிலுக்கு போகும் வழி.முன்பொருகாலத்தில் இங்குதான்  தேர் திருவிழா நடந்தது.  இடிபாடுகளுடன் இருமருங்கிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இந்த மண்டபத் தொடர்தான் அச்சுதராயர் கோவிலின் 'சூலே பஜார்'. இந்த சூலே பஜாரில்தான் நாட்டிய நடன பெண்மணிகள், தங்கியிருந்ததாக எழுதுகிறார், லாங்ஹர்ஸ்ட்.   நாட்டிய பெண்களுக்கு  உபயோகமாக,அருகிலேயே ஒரு குளம்.  
 

 
குளத்தை சுற்றும் முற்றும், எட்டியும் பார்த்துவிட்டு, கோபுரத்தை நோக்கி நடந்தோம். குளத்துக்கு அடுத்தாற் போல் ஒரு யானை நின்றிருந்தது. கரும்பாறை.  திரும்பி கோவிலை நோக்கி நடந்தோம்.

சிதலமடைந்த கோபுரத்தை பார்க்கும்போது, இணையத்தில் அங்கோர்வாட்,இந்தோனேசியா பாலி படங்களில் பார்த்தது போல‌ இருந்தது. வாயிலில் அழகான மங்கையர். அழகான முன் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டிருந்த பெண் சிற்பங்கள் அழகு. 

அண்ணன் கிருஷ்ண தேவராயா, கட்டிய‌ விட்டலா கோவிலைப் போல கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு, தம்பி  அச்சுதராயர் கட்டிய கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தை ஏனோ நினைத்துக்கொண்டேன்.  அழகாக இருந்தாலும்,  தற்போது அதிக சேதங்களுடன் களை யிழந்து காணப்படுவதாலா என்று தெரியவில்லை. கோவிலை ஒட்டி மாதங்கா பர்வதம். எல்லாம் சரியாக இருந்த ஒரு காலத்தில்,  ஒரு நேர்த்தியான கலைநயமிக்க ஓவியம் போலிருந்திருக்கும் இந்த இடம்.

யாளிகளுடன் மறைந்து, ஒளிந்து விளையாடி, பின்னர் ஒருவரை ஒருவர் புகைப்படங்கள் எடுத்தபின்,  மீண்டும் ஜைனக்கோவில்களுக்கே வந்து சேர்ந்தோம்.

சற்று தூரம் செல்ல, யாருமற்ற மலைப்பகுதியானது வழி.  மலைமுகடுகளில் ஆங்காங்கே தெரிந்த வெளிநாட்டினரும் இப்போது சிறுத்துப்போயினர். அந்த மலைப்பகுதியே எங்களுக்கு சொந்தமாகிப்போக, பாடிக்கொண்டும், ஓடிப் பிடித்தும், சில இடங்களில் அமைதியாகவும் நடந்தோம். வனாந்தர வழிபோல் தோன்ற, கீழே ஓடிக்கொண்டிருந்தது , துங்கபத்திரா. சுக்ரீவா குகையில், வாயிலில் யாரோ, புல்லாங்குழல் ஊதும் ஒலி மட்டும்.

துணைக்கு, குருவிகளில் சிறுசப்தங்கள்.  பூக்கள் அடர்ந்த புதரொன்றில் அத்தனை பறவைகள். அவைகளை தொல்லைப்படுத்திவிடாமலிருக்க  அடிமேல் அடி வைத்து நடந்தோம். ஒருவரையொருவர், நடப்பதை பார்த்து கிண்டலடித்து, வெடித்து சிரித்ததில் பயந்து பறந்தன குருவிகள்!


 
கீழே, செதுக்கி வைத்திருந்த சரணாகதி சிற்பங்களையும், தூண்களின் சிற்பங்களையும் பார்த்தபடி நடைபயணத்தை தொடர்ந்தோம். தூரத்தில் கண்ணுக்குத் தெரிந்தவரை மலைகள், அதற்குக் கீழே தென்னைமரத்தோப்புகள், அதற்கும்  கீழே பச்சைபசேலென வாழைக்கன்றுகள். வெயிலுக்கு இதமாக மெலிய காற்று. விஜயநகர பேரரசின், பயணிகளுக்கு ஆங்காங்கே நிழற்குடையென மண்டபங்கள்.

அருகில் தெரிந்தது, இரண்டடுக்கு வாயில் போல ஒன்று. அநேகமாக, இந்த பக்கத்துக்கான விட்டலா கோவிலுக்கான நுழைவாயிலாக இருக்கலாம். நிழலின் அருமையை உணர்த்திய இடம் அது! பிரமாண்டமான பேரரசு ஒன்றின், நுழைவாயிலில் கால்நீட்டி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே, கோயிலைப்பற்றி வாசித்தோம்.



கொஞ்ச தூரம் சென்றதும், கண்களுக்கு புலப்பட்டது  ஒரு அமைப்பு. 'ஆஆ!! அரசர துலாபாரா' என்று கத்திக்கொண்டே ஓடினோம். புத்தகங்களில் பார்த்ததை, நேரில் கண்டு கொண்டதும் ஏற்படும் பிரமிப்பு அது. கோயிலை அடைந்து விட்டதற்கான அடையாளமும் அதுதான்.
 

 
துலாபாரத்தின் தரைப்பகுதியில், தம்பதியினராக, குடும்பமாக விழுந்து கும்பிடும் உருவங்கள் செதுக்கப் பட்டிருந்தன.  அவற்றிலும் ராஜகுடும்பத்தையும், சாதாரண மக்களையும் தேடினோம். 'துலாபார தூண்களுக்கு இடையில் நின்று, தூணில் சாய்ந்து நின்று, நடுவில் துள்ளி குதித்து என்று புகைப்படங்களாக‌ எடுத்துத்தள்ளி  'அரசர துலாபாராத்தை' டரியலாக்கினோம்.

சுக்ரீவ குகை மற்றும் புரந்தர மண்டபம் வழியாக, சாரி சாரியாக மாணவர்கள் வரத்துவங்கியிருந்தனர். ஜோதியோடு ஜோதியாக, நாங்களும் ஐக்கியமாகி விட்டலா கோவிலை ஆராயத்துவங்கினோம்.  ஹம்பியில் கைடு வைத்து பார்த்த ஒரே இடமும் இதுதான்.

விருபாஷாவிலிருந்து ஆரம்பித்து விட்டலா கோவில் வரை, நதிக்கரை வழியாக  நீண்ட இந்த  பாதையும், நடைபயணமும், நாங்கள் செலவிட்ட எங்கள் சந்தோஷமான கணங்களும் நீண்ட நாட்க‌ள் எங்கள் மனதில் தங்கியிருக்கும்.  
 

குறிப்பு: கோவிலைப்பற்றி இங்கு எதுவும் சொல்லப்போவதில்லை. திரும்பி வரும் பாதையை, சுக்ரீவன் குகை வழியாக -  சக்கரத்தீர்த்தத்தை அடையுமாறு வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், ஆட்டோ பிடித்து, 'தாலரி கட்டா'வை (நுழைவாயில்) பார்த்துவிட்டு தொடரலாம். இந்த தாலரி கட்டா, நமது தற்போதைய சுங்கவரி சாவடியின் முன்னோடி.  

Tuesday, March 24, 2015

H...A...M...P...I - வரலாற்றின் வீதிகளில் ஒரு பயணம்


'போய் இறங்கினவுடனே முதல்நாளில் அங்கே போகணும், இதை பார்க்கணும்' என்ற திட்டத்தோடுதான் போய் இறங்கினோம். ஆனால், அங்கே சென்றதும்  எங்கள் திட்டமெல்லாம் போன இடம்  தெரியவில்லை...எங்கு நோக்கினும் திரள் திரளாக குவித்து வைத்ததுபோன்ற‌ கற்பாறைகளையும், அந்த ஆற்றையும் பார்த்து பிரமித்து போனதில், முதல்நாள் திட்டமெல்லாம் காற்றில் பறந்தே போனது.


நினைவு சின்னங்களை பார்க்கவேண்டியதை விட, பார்த்து பார்த்து பருக வேண்டியது ஹம்பியின் நிலக்காட்சி என்று புரிய, ஹம்பிக்கு எங்களை ஒப்புக்கொடுத்தோம். ஹம்பியும், எங்களை தத்தெடுத்துக் கொண்டது.

திருவிழாவில் தொலைந்தவர்கள் போல முதல்நாள் முழுவதும் விருபாஷா கோவிலையும் ஆற்றையும், சூழ்ந்திருந்த மலைப்பாறைகளையும்  பார்த்து பார்த்து பிரமித்துபோனோம். 'இந்த பூமியில் என்ன நடந்திருந்தால், இந்த கற்பாறைகள் இப்படி ஆகியிருக்கும், எந்த விதியின் கீழ் இந்த பாறைகள் இப்படி ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருக்கின்றன' என்று கிறுகிறுத்துபோனோம்.


தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து  படகில் ஆற்றைக்  கடந்து மறுபக்கம் போனோம். விருபாபூர் கட்டே (தீவு) வீதிகளில் அலைந்து திரிந்து  தெருவோர கடைகளை வேடிக்கை பார்த்தோம். இளநீர் குடித்தோம். பாறை உருண்டைகளும், ஆறும், காற்றும் பழகிய பின் மெல்ல எங்கள் இயல்புக்கு வந்தோம். அடுத்த ஆறு நாட்களும் ஏதோ ஒரு புராதன காலத்து ஊரில் அறுநூறு ஆண்டுகள் வசித்தது போல்தான் இருந்தது.

பொடிநடையாய் நடந்து மலைகளையும், கல்மண்டபங்களையும், பழங்கால சந்தைகள் நடந்த பஜார்களையும் கடந்தோம்.  ஆட்டோக்களையும், கைடுகளையும் கவனமாக தவிர்த்தோம்.

கைகளில் இருந்தவை, லாங்க்ஹர்ஸ்ட்டின் புத்தகம் ஒன்றும், நூனிஸின் 'விஜயநகரப் பேரரசு' மற்றும் தொல்லியல் துறையின் ஹம்பி கையேடு.  கேமிரா, புத்தகங்களை முதுகில் சுமந்துக்கொண்டு நாடோடிக் கூட்டத்தில் நாங்களும் சிறு புள்ளிகளானோம்.      

நதிக்கரை வழியாக நடந்தே விட்டலா கோவிலை அடைந்தோம். 'பழங்காலத்தில் குதிரைகள் வழியாக  மக்கள் இந்த வழியை கடந்திருப்பார்கள்' என்று கற்பனை செய்தபடி  பாறைகள், இடிபாடுகள் வழியாக இரண்டு கிமீ நடந்து தீர்த்தோம். 

விட்டலா கோவில், மண்டப தூண்களின் குதிரை மீதமர்ந்திருந்த வீரர்களின் முகங்களிலெல்லாம்  கிருஷ்ணதேவராயரை தேடினோம். தலையில் பெரும் கொண்டையிட்டு , கைகூப்பி நின்ற சிலைகளையெல்லாம் கிருஷ்ணதேவராக எண்ணி பூரித்தாள், பப்பு அவள் பங்குக்கு.  தெனாலிராமனை தேடியலைந்தவளுக்கு இதுதான் இலுப்பைப்பூ.

விட்டலா கோவிலின், கல்தேரின் சக்கரங்களின் அச்சை பிடித்து தேரை நகர்த்திவிட‌ கடும்முயற்சி(!) செய்தோம். இறுதியில், சுழற்றுவது போல் புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கரத்தை விட்டுவிட்டோம். தார்வாடிலிருந்தும், பெல்லாரியிலிருந்தும், கிராமப்புற கர்நாடகப் பகுதியிலிருந்தும் வந்திருந்த மாணவர்களின் ஆசைக்கிணங்க போட்டோக்கள் எடுத்துத்தந்தோம். கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்களை தீர்த்துவிட்டு, திரும்ப நடையை கட்டினோம்.

ஆற்றைக்கடந்து, உணவகங்களை தேடிச்சென்றோம். கவுதமி உணவகத்தில், பீட்சாவும், சிக்கன் லாஃபாவும் உண்டோம். திரும்பவும் படகு சவாரி.  கோவில் யானை லஷ்மி தண்ணீர் குடிக்க வந்திருந்தது. தண்ணீர் குடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னாலேயே சென்றோம்.

ஹேமகுட்டா மலைப்பகுதியின் உச்சிக்கு ஏறி, சூரியன் ஒரு சிவப்புக்கோளமாக மறைவதைக் கண்டோம். தெரியாதவர்கள்,  தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஒரு சிறு புன்னகை மட்டுமே போதுமாக இருக்கிறது. கும்பலாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவரவர் வழி நடந்தோம்.

மிகவும் பிரசித்தி பெற்ற 'மேங்கோ ட்ரீ' உணவகத்தில் ஆலிவ் பீட்சாவும், கோபி மஞ்சூரியனும், சப்பாத்திக் கறியும் உண்டோம்.  தெருவோர லம்பாடிகளிடம் பேரம் பேசி கைக்கு சோழி மாலை, ஒற்றைக்காலுக்கு கொலுசு, கழுத்தணிகள் வாங்கி அணிந்துக்கொண்டோம். வீட்டுக்கு திரும்பும் வரை கழற்றாமல்,  பப்புவும் நானும்  ஒரு மினி லம்பாடி குடும்பமாகவே மாறிப்போனோம்.


காலையில் எழுந்து, சூரிய உதயத்தை பார்த்து, நேராக ஆற்றுக்கு சென்று  ஏதாவதொரு படியில் அமர்ந்துக் கொள்வோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆறு உயிர் பெறுவதை காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமான காட்சி!  ஹம்பி பேருந்து நிலையத்தில் இறங்கும்  பயணியின் கால்கள் எப்படித்தான் ஆற்றுக்குச் செல்லும் வழியை தாமாக அறிந்துக்கொள்கின்றனவோ! வரிசையாக வரிசையாக மாணவர்களும், சுற்றுலா பயணிகளும்  ஆற்றை நோக்கி ஒவ்வொரு நாளும் வந்தபடி இருக்கின்றனர்.

"எரடு ப்ளேட் குண்ட்பங்கலா கொட்ரீ" "எரடு பூரி,  சாய் பேக்கு" "மிர்ச்சி எரடு கொட்ரீ" என்று ஏதோ கன்னடாவையே கரைத்துகுடித்தமாதிரி தெருவோரக்கடைகளில் சுடச்சுட குழிப்பணியாரமும், டீயும், பச்சைமிளகாய் பஜ்ஜியும் வாங்கி காலை உணவை சாப்பிட்டோம். காசு கொடுக்க எத்தனிக்கும்போது, அவர்களும் கன்னடத்திலேயே விலையை சொன்னபோது திருதிருவென்று விழித்து 'இங்கிலீஷ் மே போலியே' என்று அசடு வழிந்தோம்.


ஹேமகுட்டா மலைமீதுள்ள கோவில்களில் ஏறி இறங்கி, எங்கிருந்து பார்த்தாலும், முழு ஹம்பியும் தெரிவதை பார்த்து, ஆளுக்கொரு கேமிராவில் எல்லா கோணங்களிலும் புகைப்படங்களாக எடுத்து தள்ளினோம். கோயில் கோபுரம், அன்று எங்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டதை அந்த விருபாஷரே அறிவார்.

மலையின் மறுபக்கத்துக்கு இறங்கி, கடுகு கணேசாவை தரிசித்து சாலைக்கு வந்தோம். காணாததை கண்டது போல, தர்பூசணி பத்தைகளை வாங்கி தெரு வோரத்திலேயே  தின்று மலைப்பயணத்தின் தாகம் தணித்தோம். அடுத்து, கிருஷ்ணா கோவிலை அடைந்து தூண்களை ஆராய்ந்தோம்.

'இது கிருஷ்ண தேவராயா கட்டினது, இங்கேதான் அவர் நடந்து வந்திருப்பாரு' என்றும் 'இது ஒரிசா வார்லே ஜெயிச்சதுக்காக கட்டினது, இதுலே இருந்த கிருஷ்ணா ஒரிசாலேருந்து கொண்டு வந்து வைச்சது' என்றும் 'அந்த பால‌கிருஷ்ணர் சிலை இப்போ  சென்னை மியூசியத்திலே இருக்கு' என்றும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து வாசித்ததை பரிமாறிக்கொண்டோம்.

கிருஷ்ணா கோவிலிருந்து வெளியேறினோம். செடியோடிருந்த பச்சை கொண்டை கடலைகளை   வாங்கிக்கொண்டு, உரித்து சாப்பிட்டபடி லஷ்மி நரசிம்மரைக் காண கரும்புவயல் வழியே நடந்தோம். எங்கள் கால்களுக்கு  அந்தப்பக்கம், பழங்காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திராவின் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.


அச்சுதராயர் கோவில்,நெடிய  சூலே பஜார் மண்டபத்தில் தங்கமும், வைரமும் விற்பதாக கற்பனை செய்துக் கொண்டோம்.  ராணிகளும், இளவரசிகளும்  நகைகள் வாங்குவது போல,  ஏதோ நாங்களே வைரமும், வைடூரியமும் வாங்க வந்திருப்பதாக கருதிக்கொண்டோம்.  


அரண்மனை பகுதிகளை ஏதோ வரலாற்று ஆய்வாளர்களைப் போலவே அலசி ஆராய்ந்தோம்.  'இதோ ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடம்' '"அஷ்டதிக்கனா" க்களின் இடம்' 'இங்கதான் நவராத்திரி' 'வெளி நாட்டுக்காரர்கள் ராஜாவை சந்திச்ச‌து'  ' டைனிங் ஹால் இங்கே இருக்கு'  'அது சங்கமா டைனஸ்டி அரண்மனை'  என்று  நூனிஸும், பயஸும்,  நிக்கோலா காண்டியும் லாங்ஹர்ஸ்ட்டும் தடி எடுத்துக்கொண்டு ஓடிவரும் அளவுக்கு தேடித் தேடி ஆராய்ச்சி செய்தோம். இறுதியில், களைத்துப் போய், பிரமிடு போல இருந்த இடத்தில்  ராஜாக்கள் போல அமர்ந்து பாவனை செய்தோம். 


கொஞ்சம் இளைப்பாறியதும், ஒரு அஸ்திவாரத்தருகே ஓடிப்போய், 'இங்கதான் தெனாலிராமன் தொங்குனாரு' என்றாள் பப்பு. 'தொங்குனாரா' என்று நாங்கள் அதிர்ந்ததும், 'இல்லேல்ல..தூங்கனாருன்னு சொல்ல வந்தேன். அப்படியே, தங்குனாருன்னு வந்துச்சு..அதான் சேர்த்து சொல்லிட்டேன்' என்று சமாளித்தாள்.

ரகசிய அறையில் இறங்கி, இருட்டுக்குள் தட்டுத்தடவி நடந்து, படிகளை கண்டதும்'ஹப்பாடா' என்று ஓடிவந்து மேலேறினோம். 'வைரங்களும், விலைமதிப்பற்ற கற்களும் பதித்த நாற்காலி அங்கேதான் வைக்கப்பட்டிருந்தது' என்று  செட்டார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை நினைவு கூர்ந்தோம். ராணிக்களின் அரண்மனைகளிலும், லோட்டஸ் மஹாலிலும் நிஜ ராணிகளைப்போலவே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நடைப்போட்டோம். ஹசாரே ராமா கோவிலில் ராமாயணத்தை கார்ட்டூன் போல பார்த்து கதை சொல்லிக்கொண்டோம்.

கோவிலுக்கு எதிரில் இருந்த பான் சுபாரி பஜாரில் வெற்றிலை கிடைக்குமா என்று தேடிச் செல்ல ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு  ஓசையில்லாமல் நழுவினோம். குதிரைகளும், யானைகளும் சென்று வந்த ராஜபாதையில், ஆட்டோவுக்கு காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் லெமன்  கோலிசோடா அருந்தினோம்.


மிஞ்சிய நேரங்களில், சைக்கிள் எடுத்து  ஹம்பி பஜாரை சுற்றினோம்.பப்புவுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவளை திகிலடைய வைத்தேன். 'சைக்கிள் சைக்கிள் எனக்கு கியர் சைக்கிள்' என்று குதித்துக்கொண்டிருந்தவளை சைக்கிள் எடுக்கலாமா என்றாலே அவள் ஓடிப்போகும் அளவுக்கு  செய்ததுதான் என் சாதனை.  

மூன்று நாட்கள் ஹம்பி, ஒருநாள் பாதாமி, பட்டடக்கல், முடிந்தால் கோவா என்று மங்கலான திட்டம் வைத்திருந்தோம். ஆனால், ஹம்பி எங்களை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டு பார்க்க முடியாத இடங்களில் ஹம்பியும் ஒன்று. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...ஹம்பியை அடைந்தால் போதும். பயணிக்க வேண்டிய பாதைகளை ஹம்பி பார்த்து கொள்ளும்.  ஒவ்வொருநாளும் வாசித்து வாசித்து, வாசித்த‌ இடங்களை நேரில் கண்டு உணர்ந்தது சுவையான அனுபவம்.

துங்கபத்திரா முழுவீச்சோடு  நடைபோடுவதையும், இன்னும் அதிகமாக ஹம்பியை அறிந்துக்கொள்ளவும் மீண்டுமொருமுறை, மழைக்காலத்தில் வர வேண்டுமென்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான் வேண்டியிருந்தது.

Monday, February 09, 2015

தேக்கடி செல்ல சில டிப்ஸ்


(கேட்டது மூணு நாலு பேருதான்..ஆனா, நாம ஊருக்கே சொல்வோமில்ல!) :-)

கூர்க் போயிட்டு வந்ததுலேருந்து, பப்பு, யானைகள் மேலே  அப்படி மதிமயங்கி கிடந்தாள். அதுவும், ஜூவிலே பார்க்கிறதெல்லாம் மேடமுக்கு பிடிக்காது. 'வாங்க பழகலாம்' ரேஞ்சுலே யானைகளை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து பழகணும்!!

  அதுக்கு எங்கே முடியும்... கூர்க் துபாரேயை விட்டா?! கூர்க்குக்கு அடுத்து  மசினகுடிக்கு பயணம்!  'தெப்பக்காடு யானைகள் முகாம்'லே பழகினோம். தங்கியிருந்த மூணு நாளும், சாயங்காலம் முழுக்க‌ யானைகள் முகாம்லேதான். என்ன, மசின குடியிலே 'தூரத்துலேருந்து' பழகலாம்!

அந்த பயணத்துலேதான், யானைகள் வீட்டு விலங்கு இல்லே காட்டு விலங்குன்றது பப்புவுக்கு புரிஞ்சதோ என்னவோ! காட்டு யானைகளையும் நேரடியா பார்த்தது மசினகுடி பயணத்துலேதான்.

'சிவநேசு சிவநேசு குருவம்மா' கணக்கா நாங்க  'இன்னும் இன்னும் யானை, ரிச்சர்ட் பார்க்கர்' ரிச்சர்ட் பார்க்கர்ன்னு தேடினப்போ க்ளிக்கானதுதான்  'தேக்கடி'.

"தேக்கடி" என்னவோ  தமிழுக்கு ரொம்ப நெருக்கமா தோணினாலும், தேனி வழியா ஏதோ ஒரு  மலையடி வாரத்துலேருந்து ஆரம்பிக்கிற பயணம் முடியும்போது கேரளாவாகிடுது. ஒரு சின்ன கோடுதான்... அதுக்கு இந்த பக்கம் குமுளின்றாங்க...அந்த பக்கம் தேக்கடியாம்.

மதுரை வழியாக தேனி சென்று தேக்கடி சென்றோம்.நாங்க போனது ஏப்ரல் மாதம். மத்த நாட்களிலே எப்படி இருக்கும்னு தெரியலை... ஆனா, ஏப்ரல் இரண்டாம் வாரத்துலே மிதமான வெயில். மிதமான குளிர். படகு சவாரிக்கு நல்லாவே இருந்தது. மேலும், ஏப்ரல் மாதத்தில், மலர் கண்காட்சி ஒன்றும் நடைபெறும். மதிய நேரத்தில், ஒரு சின்ன விசிட் அடிக்கலாம்.

தங்குமிடம்:

 காட்டுக்கு வெளிலே ஒரு ஹோட்டல்லேயும் ஒருநாள், இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளே கேரள அரசாங்க ஹோட்டல் லேயும் தங்கினோம். வெளியில் தங்குவதைவிட, காட்டுக்குள்ளே தங்குவதைதான் பரிந்துரைப்பேன்.

காட்டுக்குள்ளேன்னா, காட்டுக்குள்ளேயே இல்ல...காட்டின் எல்லை ஆரம்பிக்கிற இடம். பெரியாறு ஏரியின் முனையில், மலைப்பாங்கான பகுதியில் இருக்கிறது. முன்பதிவு அவசியம். இங்கு தங்கினா, மாலை ஐந்து மணிக்குள்ளே உள்ளே வந்திடணும்...ஏன்னா, காட்டு எல்லைப்பகுதியில் உள்ளே வர ஐந்து  மணிக்குப் பிறகு அனுமதியில்லை.

குடும்பத்தோடு தங்குவதற்கு ஏற்ற இடம். காலை உணவுக்கும் சேர்த்தே அறை வாடகை. அதுவும், இளங்காலை நேரத்தில் படகு சவாரி முடிச்சு, நேரா புட்டும், ஆப்பமும்,அன்னாசி பழரசமும் சாப்பிடறது இருக்கே!யம்ம்ம்ம்ம்!

உள்ளேயே, நீச்சல் குளம் குழந்தைகளுக்கு தனியாக இருக்கிறது. என்ன, குரங்குகள் தொல்லை அதிகம்.  கொஞ்சம் ஏமாந்தால் போதும்...உங்களையே தூக்கிட்டு போய்டும்! மற்றபடி, பாதுகாப்பான, சுத்தமான இடம். இன்னொருமுறை தேக்கடி சென்றால், 'ஆரண்ய நிவாஸில்' தங்கவே விரும்புவோம்.  பைசா வசூல்ல்ல்ல்ல்!

தேக்கடி படகு சவாரி:

தேக்கடின்னாலே படகு சவாரிதானே! தேக்கடியில், சுற்றவும் பார்க்கவும் இடங்கள் இருந்தாலும் தவற விடக் கூடாத முக்கியமான விஷயம் படகு சவாரி.  இரண்டு பக்கமும் காடுகள். நடுவில் சாலை போல நீண்டும் வளைந்து பெரியாறு. நடுவில், நீரில் மூழ்கி போன பட்டுப்போன மரங்கள். அந்த மரங்களின் நுனியில் அமர்ந்தும், சிறகுகளை விரித்து காற்று வாங்கியும் பறவைகள். ஆரண்ய நிவாசில் தங்கினால், சலுகையாக படகு சவாரி  ஒருமுறை இலவசம். நமக்கு தேவையான நேரத்தை, வரவேற்பு அலுவலகத்தில் குறிப்பிட்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

நாங்கள், இரண்டு முறை படகு சவாரியில் செல்லுமாறு பார்த்துக் கொண்டோம். ஒரு முறை காலை நேரத்தில் . காலை புலரும் நேரத்தில், படகில் சென்று ஆற்றையும், மெதுவாக விழிக்கும் காடுகளையும் காண்பது இனிமை யான அனுபவம். மனித நடமாட்ட தொல்லைகளின்றி ஆழ்ந்த‌ அமைதியில் இருக்கும் இயற்கையை காண்பது ஒரு தனி அனுபவ‌ம்.

காட்டுக்கு விலங்குகளை காண மட்டுமே வந்திருக்கிறோம் என்பது போல  பப்புவுக்கு பதிந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வேன். ஒரு இடத்துக்கு சென்றால், அந்த ஊரின்/சுற்றுப்புறங்களின் அனைத்துவித குணாதிசயங்களோடு  முழுமையாக  உணர வேண்டும், அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதை பயணங்களின் மூலமாக‌ தற்போது புரிந்துக் கொண்டிருக்கிறாள் என்றாலும், அதற்கு நமது சின்ன சின்ன நடவடிக்கைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்னொரு படகு சவாரி, மதியம் ஒரு இரண்டு/மூன்று மணி வாக்கில். விலங்குகள் நீர் குடிக்க மதிய நேரத்தில் வரும். அவற்றை காண வேண்டுமானால், உச்சி வெயில்  நேரம்தான் சரி. அப்படிதான், நாங்கள் ஒரு யானை குடும்பம் தன் குழந்தை குட்டிகளோடு நீந்தி ஆற்றை கடப்பதை வெகு அருகில் பார்த்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

இரண்டடுக்கு படகுகள்தான் எல்லாம். மேல்தளத்தில் அமர்ந்தால், முழு காட்டையும், ஏரி பரந்து விரிந்தி ருப்பதையும் காணலாம். விலங்குகள் தெரிகின்றது என்றாலே, எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு படகின் ஒரு இடத்தில் குவிந்துவிடுவதுதான் ஆபத்தானது. படகிலிருக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டத்தை கட்டுபடுத்துகின்றனர் என்றாலும், மக்களிடமும் இந்த விழிப்புணர்வு வரவேண்டும்.

விபத்துக்குப் பிறகு, அரசாங்கம் சில கெடுபிடிகளை விதித்துள்ளது. லைஃப் ஜாக்கெட் அணிவதை கட்டாயமாக்கியது, படகுகளில் குறிப்பிட்ட எண்ணி க்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றுவது என்று. என்றாலும், மக்கள், மான்களுக்கும் காட்டெருமை களுக்கும் படகிலிருந்தே அவ்வளவு குதூகலத்தை காட்டுவது சில சமயங்களில் பயத்தை ஊட்டுகிறது.

இவை தவிர, வனத்துறையினரால் நடத்தப்பெறும் சிலபல சாகச பயணங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு அனுமதியில்லை, பனிரெண்டு வயதுக்கு மேலிருந்தால் மட்டுமே அவர்களோடு செல்லலாம் என்பதால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அதற்குட்பட்ட வயதினருக்கென்று செல்வதற்கு ஒரு 'Pug mark trail' - காட்டுவழி பயணம்  இருக்கிறது.

படகு சவாரிக்கு அடுத்து, எங்களை மிகவும்  கவர்ந்தது, அந்த நடைபயணம்தான். நுழைவுச் சீட்டுகள் விற்குமி டத்தில், இந்த ' Self guided trek 'க்கு நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றால், வனத்துறையின் அலுவலகம் வருகிறது. அங்கிருந்து கிட்டதட்ட இரண்டு முன்று கிமீ வரை காட்டுப்பாதையில் நடைபயணம்.

அடையாளத்துக்காக, பாதைகளில் ஆங்காங்கே கற்களை புதைத்திருக்கிறார்கள். அவற்றை தொடர்ந்து செல்ல வேண்டும். கற்கள் எல்லாவற்றிலும், பறவை மாதிரிகளை வரைந்தும், அந்டஹ் பறவைகளைப் பற்றிய விபரங்களையும் குழந்தைகளுக்கும் புரியும் விதமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

'அடர்காடு' என்று சொல்ல முடியாவிட்டாலும்,  வயதான மரங்களும், விழுதுகளுமாக அமைதி நிறைந்த இடமாக‌ த்தான் இருக்கிறது. விதவிதமான‌ பறவைகளும், அவற்றின் சப்தங்களும் நிறைந்து நமது நடையை வண்ணமயமாக்குகின்றன. சருகுகளின் மீது நாம் நடக்கும் சப்தம்தான் தொடர்ச்சியாக கேட்கிறது. (அவ்வப்போது, சில வாகனத்தின் சப்தங்களும்...ஏனெனில், இந்த பாதைக்கு சற்றுக்கீழேதான் சாலை..ஹிஹி)

வனத்தில், விழுந்து மட்கி கிடக்கும் மரங்களில் உருவங்களை தேடுவது நல்ல பொழுதுபோக்கு.

எங்கள் தேக்கடி பயண நினைவுகளில் முக்கியமானது, கதக்களி கண்டதுதான். நேரடியாக கதக்களையை, அதன் ஒப்பனைகளிலிருந்து ஆரம்பித்து முழு நிகழ்ச்சி வரை கண்டது அங்குதான். இரண்டு மூன்று இடங்களில் நிகழ்கிறது. காலையிலேயே நுழைவு சீட்டு வாங்கி, முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நடக்கிறது.

எனவே, தங்குமிடத்தை அதற்கு ஏற்றாற்போல திட்டமிட்டுக்கொள்வது நல்லது. பயணிகளுக்காக என்பதால், கதக்களியின் முக்கிய அம்சங்களை, கண் அசைவுகளை எல்லாம் ஆங்கிலத்தில் விளக்குகிறார்கள். ராமாயணக் கதைகள்தான்,பாடலோடு ஆடி நடிப்பதைக் காண்பது நல்ல அனுபவம். நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களோடு படமெடுத்துக்கொள்வதை டோன்ட் மிஸ்.

அதேபோல், நாங்கள் தங்கியிருந்த இடத்திலும் மாலையில் 'மோகினியாட்ட'த்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கதக்களியும் மோகினியாட்டமும் எங்கள் தேக்கடி பயணத்தின் போனஸ்!

உணவு:

சிறிய ஊர் என்பதாலோ என்னவோ உணவுக்குதான் கொஞ்சம் திண்டாடினோம். உணவு நேரத்தில் கூட்டம் கூடிவிடுவதால் உணவகங்களில் காத்திருக்க நேர்ந்தது. அதோடு,  சாலையோர உணவகங்களை பப்புவுக்கு  அப்போது பழக்கவில்லை. அதனால் கூட இருக்கலாம். பரோட்டா, தோசை, க்ரீன் டீகளில் உயிர் வாழ்ந்த நினைவு.

ஷாப்பிங்:

தேக்கடியில் செய்யப்படும் ஷாப்பிங், மசாலாப் பொருட்களன்றி வேறென்ன?  நல்ல தரம். சரியான விலை.  முக்கியமாக, ஒரிஜினல் லெமன் கிராஸ் எண்ணெய். கொஞ்ச நாட்களுக்கு,வீட்டில்  க்ரீன் டீயிலிருந்து வீடு துடைப்பது வரை லெமன் க்ராஸ் எண்ணெய் வாசம்! நிறைய கடைகள் உண்டு. உள்ளூர் மக்கள் பரிந்துரைத்தது, 'லார்ட்ஸ் ஸ்பைஸ் ஷாப்'.

கிராம்பு, பட்டை, மற்றும் இன்ன பிற விதவிதமான மசாலாப் பொருட்கள் வாங்க நாடுவீட் 'லார்ட்ஸ் ஸ்பைஸ் ஷாப்'. கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி கடைசியாக இருக்கும் கடை.குழந்தைகளுக்கு, மசாலாப் பொருட்கள் பற்றி சொல்லிக்கொடுக்க சிறு சிறு பாக்கெட்டுகளில் மாதிரிக்கு அவற்றை போட்டு வைத்திருப்பார்கள். (பப்புவின் பள்ளிக்கு ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தோம். நல்ல வரவேற்பு.)

தேக்கடிக்குள்ளேயே, சென்று வர ஆட்டோக்கள் இ‍ருக்கின்றன. பேரம் பேச வேண்டிய அவசியமேற் படவில்லை.அல்லது எங்களைப் போல் நடைபயண விரும்பிகளுக்கு,  இருபுறமும் பெரிய மரங்களும் மூங்கில் புதர்களும‌டர்ந்த நீண்ட பாதை இருக்கிறது. பேசிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் நடக்க ஏற்ற பாதை.

காட்டுக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது. ஒவ்வொரு ஏப்ரல் மாத பௌர்ணமியில் அந்த கோயிலை திறப்பார்கள். வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பொதுமக்களுக்கு அன்று மட்டுமே அனுமதி.

'மசாலா விளையும் தோட்டத்துக்கு (ஸ்பைஸ் ப்லான்டேஷன்' என்று  ஆட்டோக்காரர்கள்  மார்க்கெட்டிங் செய்வார்கள். அதோடு, யானையை குளிக்க வைக்க, அவற்றோடு விளையாட‌ என்றும் ஒரு இடம் இருக்கிறது. பெயர் நினைவிலில்லை.  அந்த இடத்தை பார்த்ததோடு சரி, யானையோடு 'பழக'ஆசையே வரவில்லை.

ஏனோ, யானை துன்புறுத்தப்படுவதாகவும், சுகாதாரமற்ற நீராக இருப்பதுபோல் தோன்றியதாலும்  அந்த இடத்திலிருந்து எஸ்கேப்! (இந்த 'யானை குளியல் பிசினெஸ்' பெரும்பாலும் வெளிநாட்டினரை குறி வைத்துதான் நடத்தப்படுகிறது போலும். விலைகளும் அவர்களுக்கேற்றவாறே இருந்தன.)

இலைகளை, முகர்ந்து வாசனை பார்த்து, வகைக் கொன்றாய் பறித்து அவளது ஜம்போ ஆக்டிவிட்டி புத்தகத்தில் பதப்படுத்தினோம். காய்ந்ததும்,  பப்பு ஒரு ஹெர்பேரியம் தயாரித்தாள். நினைத்தாற்போலிருந்து பப்பு அதனை அவ்வப்போது புரட்டுவாள்.   எங்கள் தேக்கடி பயண நினைவுகளின் வாசனை   அதிலிருந்து மிதந்து வரும். :‍)

Saturday, June 14, 2014

ஒரு விமானப்பயணமும், ஐந்து கத்தரிக்கோல்களும்

இந்திய மாநிலங்களை, அதன் தலைநகரங்களைப் பற்றி, பப்பு, படித்த சமயத்தில் கேட்டது, இன்றும் நினைவில் நிற்கிறது.

"ஆச்சி, நாம ஒவ்வொரு ஸ்டேட் கேப்பிடலுக்கும்  போலாமா...என்னை கூட்டிட்டு போறியா?"

இந்த கோணத்தில் நான் என்றைக்கும்  நினைத்தே பார்த்ததில்லை. இந்த நாட்டில் பிறந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், தமிழ்நாட்டை தாண்டி செல்ல என்றைக்கும் தோன்றியதில்லை.  சாகித்திய அகாதமியில் வெளியாகும், மாநில வாரியான கதைபுத்தகங்களை, ஒவ்வொரு புத்தக சந்தையிலும் வாங்கி மிகுந்த விருப்பத்தோடு வாசித்திருக்கிறேன். அதைத்தாண்டி, அந்த மாநிலங்களுக்கு, அவற்றின் தலைநகரங்களுக்கெல்லாம்  செல்லலாம் என்று  தோன்றியதில்லை.

அந்த வருட இறுதியில், ஹைதராபாத் சென்றோம்.

அடுத்து, சில மாதங்கள் கழித்து, பப்புவிடமிருந்து இன்னொரு கேள்வி.இந்தியாவின் வரலாற்று சின்னங்களை அப்போது கற்றுக்கொண்டிருந்தாள். அதோடு, நமது முக்கிய நதிகளையும். அன்றிரவு, அவள் கேட்டது, இன்னும்  காதில் எதிரொலிக்கிறது.

"ஆச்சி, யமுனா ரிவர் எப்படி இருக்கு தெரியுமா? மாஸ்டர் காட்டினார்ப்பா...எங்க ஸ்கூல் மெட்டிரீயல்ல இருக்கு. ஃப்புல்லா தண்ணி....எப்படி, போகுது தெரியுமா? அதோட ஓரத்துலேதான் தாஜ்மகால் இருக்கு. நாம யமுனா வழியா தாஜ்மகால் பார்க்க போலாமா?"

யமுனாவின், படத்தைதான் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அவளது கண்களில் மினுமினுத்த ஆர்வம் ஒரு நட்சத்திரத்தின் ஜொலிஜொலிப்புக்கு இணையானது. அந்த ஒளியை மறுதலிக்க இயலாமல், நானும் தலையாட்டி வைத்தேன். அதன்பிறகு, ஒருநாள், அவளாகவே பெரிம்மாவிடம் ஒன்றை அறிவித்தாள், "என் பர்த்டேவுக்கு நான் இந்தியாவோட கேபிடல்லேதான் இருப்பேன்."

அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. :‍)

அன்றிலிருந்து, பப்புவின் இந்த ஆசையை, தக்க வைக்க  இந்தியாவின் வரைபடத்தை உற்று நோக்க தொடங்கினேன். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்! தெரியாத ஊர்களின் ரயில் நிலையங்களை தடவித் தடவி அறிந்துக்கொள்கிறேன்.. அந்த ரயில் நிலையங்களை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இந்த ரயில் நிலையங்களின், வலையமைப்பு என்றுமே எனக்கு ஒருவித பிரமிப்புதான். பப்புவுக்கும் அதை கடத்த முற்பட்டேன்.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடமாக  ஒரு  தேர்ந்த தையல்காரரைப் போல இணைக்க தலைப்பட்டேன். வெளிநாடுகளுக்கு போவது பற்றி நினைப்பதற்கு முன், உன் நாட்டை பற்றி நீ அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்ல நினைக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களை மட்டுமல்ல... காடுகளையும், கடல்களையும்,மலைகளையும், நதிகளையும் அவள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  நாகரிகமும்,வரலாறும், சுவாரசியமும் புகழ் பெற்ற நகரங்களுக்கு மட்டுமே சொந்தமில்லை, அந்த நகரங்களின் பல மைல்களுக்கு அப்பால் உள்ள  சாதாரண கிராமத்திலும் கூட இருக்கிறது என்பதையும், அதை நாம்தான் தேடி கண்டடைய வேண்டும் என்பதையும் அவள் உணர விரும்புகிறேன். ஊர்களையும், அவற்றின் பாதைகளோடும் கூட.. மக்களை, அவர்களின் உணவை, அவர்களது போக்குவரத்தை, கலாசார அடையாளங்களையே இயன்றவரை பின்பற்றக்  கற்றுக்கொண்டிருக்கிறோம்..

அதனாலேயே,கிழக்கிலும் மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் இருக்கும் ஊர்களை பற்றி கனவு காண்கிறோம். அந்த ஊர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து பாதையை வரைகிறோம். சிலநாட்களே விடுமுறை கிடைத்தாலும், அந்த ஊர்களை நோக்கி, எங்கள் பைகளை தூசிதட்டி சுமக்கிறோம்.

அப்படி, இந்த விடுமுறைக்கு நாங்கள் நாங்கள் தடம் பதித்தது உத்தராகாண்ட் மாநிலம். முற்றும் முழுவதுமாக, இணையத்தில் தேடி தேடி, இந்த பயணத்தை வடிவமைத்து, பப்புவின் நாடகம் அரங்கேறும் நாளுக்காக காத்திருந்தேன். அவளது, நாடகம் முடிந்த அடுத்த நாள் பயணம். சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்வதாக திட்டம். விமானத்தில் செல்ல ஆசையாக இருப்பதாக வேறொரு பயணத்தில் அவள் கூறியிருந்தது சரியாக நினைவுக்கு வந்து, சென்னையிலிருந்து டெல்லிக்கு மட்டும் விமானத்தில் பயணம்.

பெரிய சூட்கேஸ்களை கொடுத்துவிட்டு, அவரவர் கைப்பைகளோடு செக்கிங்க்கிற்கு வந்தோம். செக்கிங் முடிந்து, திரும்ப கைப்பைகளை பெற்றுக்கொள்ள வருமிடத்தில், பப்புவின் பையை தனியாக வைத்திருந்தார்கள். எங்களுடையதை எடுத்துக்கொண்டு, அவளது பைக்காக காத்திருக்கையில், ஒரு பெண் வந்து 'இந்த பை யாருடையது ?'என்றார். பப்பு என்னுடையது என்றதும், 'எதற்காக இதில் ஐந்து கத்தரிக்கோல்கள் வைத்திருக்கிறாய்?' என்றார்.  அப்போதுதான், எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  அவர் பார்த்த பார்வையோ, நாங்கள் ஏதோ திட்டத்துடன் வந்தது போல இருந்தது.

ஒவ்வொரு பயணத்துக்கும், பப்பு அவளது பையை தயார் செய்வாள். அதில், சகல சொத்துகளும் இருக்கும். க்ரேயான்கள், நோட்டு புத்தகங்கள், கதைபுத்தகங்கள், க்யூப், தாயம், சிலசமயங்களில் பல்லாங்குழியும் புளியங்கொட்டைகளும், நூல்கண்டும் ஊசியும்,ஓரிகாமி பேப்பர்கள்...அதோடு பைனாகுலர். ஒருமுறை, ஆக்ஸ்ஃபோர்டு சின்ன அகராதி கூட இருந்தது.

இந்த பையை தயார் செய்தல் என்பது,மிகுந்த‌  கடமையாக பொறுப்புணர்வோடு நடைபெறும். இடையில், புகுந்தால் தேவையற்ற சண்டைகள் வருமென்பதால், எல்லாம் முடிந்தபின்  கிளம்புவதற்கு முன்பாக  நான் மட்டும் (பப்புவின் நம்பிக்கையை பெற்று) ஸ்கீரினிங் செய்வது வழக்கம்.

முக்கியமாக, பயணத்தின் இடையில், எங்காவது நடக்க வேண்டிய இடங்களில் அது என் முதுகைதான் தேடி வருமென்பதால், முடிந்த அளவு, இரக்கமேயில்லாமல், விடைத்திருத்தும் ஆசிரியரைப்போல் நடந்துக்கொள்வேன். அதேபோன்று, இந்த முறையும் செய்திருந்தேன். ஆனால், அதன்பிறகு, அவள் சிறு சில்லறை சாமான்களை ஏற்றியிருந்தாள். அது பரவாயில்லை, பெரிய அளவில் ஒன்றும் கனமாகயிராது என்று விட்டுவிட்டேன்.அது இப்போது என்னை ஏமாற்றியிருக்கிறது. பார்த்திருந்தாலும், கத்தரிக்கோலை கொண்டு செல்லக்கூடாது என்று எனக்கு தெரியாததால், ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மீதத்தை காப்பாற்றியிருப்பேன்.

"ஐந்து" என்றதும், 'அய்யய்யோ..வீட்டில் ஒன்றுமே இருக்காதா' என்றுதான் முதலில் தோன்றியது. எதற்கு எடுத்து வந்தாய் என்று சந்தேகத்தோடு அந்த  பணியாளர் கேட்டதும், "நான் கிராஃப்ட் செய்வேன்" என்றாள் பப்பு. புன்னகையோடு அவர்,"எங்கே, விமானத்திலா?" என்றதும் "ஆமாம்" என்றாள். பிறகு, தேடி எடுத்து அனைத்தையும் அவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, விமானத்துக்கு காத்திருந்தோம். 

வீட்டுக்கு சென்றால், பால் கவர் கத்தரிக்ககூட ஒரு கத்தரிக்கோல் இருக்காதே என்ற நினைப்பு வந்ததும், "ஒன்னு எடுத்துட்டு வந்தா பத்தாதா?" என்று அவளிடம் சொன்னதற்கு, "கத்தரிக்கோல் எல்லாம் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்று லாஜிக்காக கேட்டாள். எனக்கும், இப்போதுதான் தெரியும் என்பது அவளுக்கு எப்படி தெரியும்! :‍)

விமானத்துக்கு,உள்ளே செல்ல அழைத்ததும், உற்சாகமாக  கிளம்பியவள், விமானத்தில் ஏறி அமர்ந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்ததும் ஒருமாதிரியாகி விட்டாள். வழக்கமான உற்சாகம் குறைந்தாற்போலிருந்தது.மேலும், அவளது பையை வேறு மேலே வைக்கவேண்டியிருந்தது. பப்புவின் சொத்தே, அவளது பைதான். ஒரு நொடி கூட அதை விடாமல் பாதுகாப்பாள். ரயிலில், அமர்ந்த மறுநிமிடம், அவளது பெர்த்தில் கடைவிரித்து மும்முரமாக வரைய, எழுத, வெட்டி ஒட்ட தொடங்குவாள்.

இங்கோ, உட்கார மட்டுமே இடம். கால்களை நீட்ட கூட முடியாது. ஜன்னல் வழியாக பார்த்தால் விமானங்கள் வருவதும், பணியாளர்கள் ஊர்திகளில் செல்வதுமாக இருந்தனர். "எனக்கு ட்ரெயிந்தான்ப்பா பிடிக்கும், அப்போதான், ஜாலியா ஜன்னல் வழியா ஊரெல்லாம் பார்த்துக்கிட்டு போலாம். இனிமே ட்ரெயின்லேயே போலாம்" என்றாள். எல்லாம் விமானம் கிளம்பும் வரைதான். அதன்பிறகு, ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். விமானம், தரையில் இறங்கும் சமயம் உறங்கிவிட்டாள்.

குதூப்மினாரை, மேலிருந்து பார்க்க வேண்டுமென்பது பப்புவின் ஆசை. குதூப்மினாரின் கைடு ஒருவர், மேலிருந்து குதூப்மினாரை பார்த்தால் ஒரு விரிந்த தாமரையைபோல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதிலிருந்து, டெல்லியை பற்றி பேசினால், குதூப்மினாரைப் பற்றிய இந்த விவரிப்பு இருக்கும். ஆனால், இப்போது, குதூப்மினாரை மேலிருந்து   பார்த்தது நாந்தான். பப்புவின் கண்களுக்கு ஒருவேளை, அந்த‌ விரிந்த தாமரை தெரிந்திருக்குமோ என்னவோ?! :‍)

Monday, November 25, 2013

ஒளியும் ஒலியும்

தமிழகத்தின்,கணிசமான கோட்டைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.கோவாவின் கோட்டைகளை சுற்றியிருக்கிறோம். ஆந்திராவின் கோல்கோண்டாவை ஏற முடியவில்லையென்றாலும் சுற்றியிருக்கிறோம். சமீபத்தில், தில்லியின் கோட்டைகளையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்திலும், எங்களை கவர்ந்த அம்சம் என்னவென்றால், அந்த கோட்டைகளைச் சுற்றிச் சுழலும்  கதைகள்!

கோட்டையின், ஒவ்வொரு மூலையிலும், ஒளிந்திருக்கும் வரலாற்றுச் சம்பவங்களினூடே,  கைடுகள் நமது சினிமாவுக்கேயுரிய சுவாரசியத்துடன் அளந்துவிடும்(!) (மாயக்)கதைகள்!! வரலாற்றின்மீது பப்புவின் ஆர்வம் திரும்பியது இப்படித்தான்! அதற்காகவே, அவளது வயதுக்கு மீறியதென்றாலும் சில புத்தகங்களை தேடி வாங்கினேன். (படிக்கிறாளா இல்லையா என்பது அடுத்த விஷயம்!)

 அதே சமயம், சில கோட்டைகளின் ஒளி&ஒலி காட்சிகளை தவிர்க்காமல் பார்த்தும் விடுவோம்.இந்த ஒளி ஒலி காட்சிகள் அனைத்தும் தொல்லியல் துறையின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. அதனாலேயே, தவறாமல் பார்த்துவிடுவோம். அந்த வகையில், எங்களை கவர்ந்த -  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த - குழந்தைகள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய - இந்த இடங்களுக்குச் சென்றால் தவறாமல் காண‌ வேண்டிய -  ஒளி&ஒலி காட்சிகளை பற்றிய இடுகைதான் இது!  

ஒருவகையில், நாங்கள் கண்ட ஒளி -ஒலி காட்சிகளின்  தொகுப்பும் கூட.


 புரானா கிலாவின் இஷ்க்‍ -இ-தில்லி

இந்த கோட்டை ஹூமாயுனால் கட்டப்பட்டது. இந்த கோட்டையின் ஒரு சுவரில்தான் ஒளி & ஒலி மல்டிமீடியா காட்சி நடத்தப்படுகிறது. தில்லியின் வரலாற்றை சுருக்கமாக, ஒரு மணி நேரத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த‌ பிருத்விராஜ் சௌவ்ஹானின்  தில்லிமீதான காதலிலிருந்து, லோதிகள்,குத்புதீன் அடிமை வம்சம், முகம்மது கோரி, சுல்தான்களின் படையெடுப்பு, முகலாய வம்சம், இறுதியாக ஆங்கிலேயர்கள் வரை சுருக்கமாக சொல்லப்படுகிறது. 

வரலாற்றின் மீது ஆர்வமில்லா விட்டாலும்கூட, தில்லியின் கடந்த காலத்தின் மீது பாய்ச்சப்படும் லேசர் ஒளியிலும் -அந்தந்த காலகட்டத்தின் இசை மற்றும் கலையிலும் - ஒரு மணிநேரம் செல்வதே தெரிவதில்லை.   பல்வேறு அரச வம்சத்தினரின் - தில்லி மீதான ஆசையை, மன்னர்களுக்கிடையிலான விரோதத்தை, போர்களை, துரோகங்களை சிறு சிறு சம்பவங்களினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமக்கான தில்லியை கட்டியெழுப்புகிறார்கள். 

மெஹ்ருலி,சிரி, துக்ளகாபாத்,பெரோஸாபாத், ஷாஜகானாபாத்  என்று காலங்காலமாக தில்லியின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது.  இதற்காக, ஒவ்வொருமுறையும் தில்லி ரத்தத்தால் கழுவப்படுகிறது. கோஹினூர்!(பப்புவுக்கு ஒரே ஆச்சரியம்! இதே கோஹினூர் வைரத்தின் ஒளியை ஆந்திராவின் கோல்கொண்டாவின் வரலாற்று காட்சியிலும் நாங்கள் பார்த்திருந்தோம்.) கோல்கொண்டாவின் சுரங்கத்திலிருந்து வந்த கோஹினூர் தில்லியின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாதிர்ஷாவை தில்லியின் மீது  படைஎடுக்க வைக்கிறது. 

அந்த காலத்தில் யமுனா பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது.  யமுனையின் கரையோரமாகவே இந்த அரசுகளும், பேரரசுகளும் எழும்பியிருக்கின்றன.  பிற்காலத்தில், யமுனையே தன்போக்கை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், காலத்தின்  அழியாத சாட்சியாக  யமுனையின் வரலாற்றின் கரையோரமாக நிற்கின்றன, இந்த அரசர்கள் எழுப்பிய கோட்டைகளும், சின்னங்களும்! 

தில்லுக்கு சுற்றுலா செல்பவர்கள் நிச்சயமாக காண வேண்டிய மல்டிமீடியா காட்சி இது!  குழந்தைகள் விரும்பும்  வண்ணம் - பொழுதுபோக்கு அம்சத்துடனும், அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும்.  ஒளி அமைப்பு கண்களுக்கு விருந்து என்றால், ஒலி அமைப்பு அபாரம் ‍ - குதிரைகள் ஓடும்போது நமக்குப் பின்னால் ஓடுகின்றனவா என்று நம்மை திரும்பி பார்க்க வைக்கிறது!:-) 

முக்கிய குறிப்பு: இந்த காட்சி தில்லியின் பருவகாலத்துக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. செல்வதற்குமுன் அதன் கால அட்டவணையை பார்த்துக்கொள்வது நன்று! அந்த காட்சியின் புகைப்படங்கள் இங்கே. அதன் முழு வீடியோ இணைப்பு

கோல்கொண்டா கோட்டையின் ஒளி & ஒலி காட்சி

இதுவும் கோல்கொண்டா கோட்டையினுள் நடத்தப்படும் ஒளி & ஒலி காட்சி. அமிதாப்பின் கம்பீர குரலில் பின்னணியில் கோட்டையின் வரலாறு சொல்லப்படுகிறது.  இதன் சிறப்பு என்னவெனில், கோட்டையின் எந்த பகுதியைப் பற்றி பேசுகிறார்களோ அந்த பகுதி மட்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. அதைப்பற்றிய வர்ணனைகளும், கதாப்பாத்திரங்களும் பேசுகின்றன. இந்த அமைப்பு, நம்மை அந்த காலகட்டத்துக்கே கடத்திச் செல்கிறது - ஒரு டைம் மெஷினில் ஏறி அமர்ந்துக்கொண்டது போல! 

ஆரம்பத்தில், காக்கடியா அரசர்களின் கோட்டையாக இருக்கும் கோல்கொண்டா, பாமினி சுல்தான்களிடம் சென்று பின்பு குதுப் ஷாஹி வம்சத்தினரிடம் கை மாறுகிறது. பெர்ஷியாவிலிருந்து வந்து  ஏழு தலைமுறை வரை இங்கு அரசாள்கிறார்கள். கோட்டையை வலுப்படுத்துகிறார்கள். ஆனாலும், துரோகத்தின் காரணமாக, கோட்டை இறுதியில் ஔரங்கசீப்பின் கைகளில்!  இந்த சுருக்கமான வரலாறு மிகுந்த சுவாரசியத்துடன் கண்முன் விரிகிறது.

 அந்தந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக - அவர்களே பேசுவதுபோலவும், நாட்டிய ஒலியுடனும், சோகம் தொனிக்கும் குரல்களுடனும் ஒலியின் பின்னணியில் ஒளியின்  ஆட்சி! இடையில் பாக்யமதி வருகிறார். தனா ஷா வருகிறார். தாராமதியின் சலங்கைகள் ஒலிக்கின்றன. பக்த ராமதாசுவின் பாடுகிறார். அரசகுமாரிகளின் சிரிப்பொலிகள், மந்திரிகளின் ஆலோசனைகள்  இவைகளுக்கிடையில் மிகவும் பரபரப்பான  கடைவீதியின் சப்தங்களும்!  முக்கியமாக, வைரங்களின் நகரமாக இருந்திருக்கிறது கோல்கொண்டா. பின்னணியில், வைர வியாபாரமும் நிகழ்வதை நாம் கவனிக்கலாம். 

உலகின் முக்கிய வைரங்கள் இங்கிருந்து எடுக்கப்பட்டவைதான். அதில் ஒன்றுதான் கோஹினூர்! ரத்தக்கறை படிந்த வைரம் என்றே சொல்கிறார்கள். இவைதவிர, கோல்கொண்டாவின் கட்டுமான சிறப்புகள் மிக நுணுக்கமாக சொல்லப்படுகிறது. முக்கியமான சில, பால ஹிஸ்ஸார்  எனப்படும் நுழைவாயிலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  நின்று கைதட்டினால்,பாரதாரி எனப்படும் உச்சிமண்டபத்தில் கேட்கிறது. யானைகள் நுழையா வண்ணம் வாயில்கள், வாயில்களின் மேல்கூரையில் துளைகள் வழியே சூடான எண்ணெயை எதிரிகள் மீது பொழியச் செய்வது, கோல்கொண்டா அரண்மனையிலிருந்து சார்மினாருக்கு இருக்கும் சுரங்கப்பாதை...

இந்த ஒளி & ஒலி காட்சியும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும். இவை எல்லாம்,குழந்தைகளுக்கு முழுவதுமாக புரியும் என்று சொல்லமுடியாவிட்டாலும், அந்த காலத்து அமைப்பை, கோட்டையை 3டி போல அறிந்துக்கொள்ள உதவும். கதைகளை விரும்பாதவர்கள்தான் யாராவது இருக்கிறார்களா என்ன?அதுவும் சுவைபட சொன்னால்?

குறிப்பு: கோல்கொண்டா கோட்டையில் ஒளி ஒலி காட்சி பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை

தமிழ்நாட்டில் ஒளி & ஒலி காட்சிகள் எங்காவது நடைபெறுகிறதாவென்று தெரியவில்லை. மதுரை நாயக்கர் மகாலில் ஒளி -ஒலி காட்சி நடைபெறுவதாக அறிந்தாலும் காணும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.ஆனால், மேற்கண்ட கோட்டைகளின் ஒளி & ஒலி காட்சிக்கு சற்றும் குறையாமல், ஓவியங்கள் மூலமாகவே வரலாற்றை நமக்கு சொல்வது பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டை. இதுவும் குழந்தைகள் நிச்சயம் காண வேண்டிய கோட்டையே. இதனைப்பற்றி விரிவாக இங்கே எழுதியிருக்கிறேன். 

Sunday, November 24, 2013

நாங்கள் சக்கரத்தை கண்டுபிடித்த கதை ;-)

தில்லிக்கு சென்ற போது குயவர்களின் கிராமத்தை எட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக‌, எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு ஏதாவது நடைபயணங்கள்   நடைபெறுகிறதா என்று பார்த்து பங்கு பெறுவோம்.. பெரும்பாலும் "ஹெரிடேஜ் வாக்/நேச்சர் வாக்" தான் இதுவரை சென்றிருக்கிறோம். அதில், வரலாற்றுச் சின்னங்கள், வரலாற்று தகவல்கள் அல்லது நேச்சர் வாக்கில், பறவைகள்,மரங்கள் மிருகங்கள் பற்றிய தகவல்களாக இருக்கும். 

குயவர்களின் கிராமம் என்றதும், 'எப்படி இருக்கும்? இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றெல்லாம் சொல்லுவார்களே? ஆனால், கிராமத்தில்தான் யாருமே வாழ்வதில்லையே' என்றெல்லாம் யோசனைகள்!   சரி, என்னவென்றுதான் பார்ப்போமே, தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்புதானே, பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் தோன்றியது. 


தில்லி மெட்ரோவில் பயணம். எப்படி வந்து சேர வேண்டும் என்றெல்லாம் முன்பே தகவல்கள் கிடைத்தன. கிட்டதட்ட தில்லியின் கடைக்கோடி. சொன்னதுபோல, 9 மணிக்கு மெட்ரோ வாயிலில் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து காரில் 10 நிமிட பயணம். பாதி தூரம் சென்றிருப்போம். டிராஃபிக் ஜாம். ஏற்கெனவே ஒருவழி பாதை. இதில் பள்ளிக்கூட பேருந்துகள் இடத்தை அடைத்துக்கொள்ள அவ்வளவுதான்! 5 நிமிடங்கள் பார்த்துவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த டிராஃபிக் ஜாம் சரியாக இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம்.

 தாண்டி வந்ததும், ஒரு ஆட்டோ கிடைத்தது. போகிற வழிதான் என்று அவர்களே சொன்னதால் ஏறிக்கொண்டோம். ஒரு வழியாக கிராமத்தை ஒரு ஆலமரத்தில் ஆரம்பத்தில் கண்டுகொண்டோம். எந்த பகுதி  கிராமமானாலும், அது ஒரு ஆலமரத்திலிருந்துதான் ஆரம்பிப்பதுதானே நமது வழக்கம்!  வழக்கமாக, மற்றொரு வழியாகத்தான் என்ட்ரியாம். டிராஃபிக் ஜாம் காரணமாக, நாங்கள் தற்போது இந்த வழியாக கிராமத்தில் காலடி வைத்திருக்கிறோமாம்.

அங்கிருந்து, எங்கள் நடைபயணம் தொடங்கியது. அப்படியே, கிராமத்தைப் பற்றிய முன்னுரையும்! 

இந்த கிராமத்திலிருப்பவர்கள் அனைவரும் குயவர்கள்தானாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் ஆல்மரிலிருந்து பெரும் பஞ்சத்தின் காரணமாக குடிபெயர்ந்தவர்கள். ஆரம்பத்தில் 70 குடும்பங்களாக  இந்த கிராமத்துக்கு குடி பெயர்ந்தவர்ந்துள்ளார்கள். அதன்பிறகு, அவர்களது உற்றார் உறவினர்கள் என்று இந்த கிராமத்துக்கு வந்து தற்போது 600 குயவர்கள் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றர்.  

இந்த கிராமத்தில் தயாராகும் பொருட்கள் -  தண்ணீர் பானைகள், சிறு பானைகள், பூச்சாடிகள்,பூந்தொட்டிகள்,உண்டியல்கள் மற்றும் உருளிகள்-விருந்தினர்களை வரவேற்க வரவேற்பறையில் பூக்களைப் போட்டு வைக்கும் மட்பாண்டங்கள். அதோடு தீபாவளி காலத்தில் அகல் விளக்குகள்.


ஆனந்தவிகடனில், பாரதிதம்பி எழுதிய சேரி நடைகள் பற்றி வாசித்தது நினைவுக்கு வந்து மனசாட்சியை குத்தியது. ஆனால், ராஜஸ்தானத்து குயவர்கள் பற்றியும், அவர்களது வேலையைப் பற்றியும் வேறு எப்படி தெரிந்துக்கொள்வது!

எங்களது நடையில் மனதை செலுத்தினோம். பாதைகள் வெகு குறுகலானவை. பெரும்பாலும், மண்தான். மழைக்காலத்தில் வெகு சிரமம். பாதையின் இருபுறமும் பார்த்துக்கொண்டே வந்தோம். ம்ஹூம்! யாரும் எங்களைக் கண்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. தெருவில் குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருந்தனர். பாதைகளில் குறுக்குச் சந்துகளின் முடிவில் மட்டும் உடைந்த‌ பானைகளின் குவியலோ அல்லது மட்பாண்டங்களில் குவியலோ கண்களில் பட்டது - நீங்கள் இருப்பது குயவர்களின் பூமி என்று சொல்வது போல!


குறுக்குசந்துகளில் புகுந்து புகுந்து நடந்தோம். சிறுசிறு வீடுகள். முன்னால் வீட்டைவிட பெரிய காலி இடங்கள். காலி இடங்கள் எங்கும் சிறு சிறு பானைகள், மண் உண்டியல்கள், சிறுவிளக்குகள். தீபாவளி நெருங்கும் சமயமாதலால், பெரும்பாலும் அகல்விளக்குகள்தான் செய்வார்களாம். செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குயவர் ஒருநாளைக்கு 5000 அகல்விளக்குகளை செய்வதாக சொன்னார்கள். 

மோட்டார் ஆற்றலில் சக்கரம் சுழல, ஒருவர் நொடிப்பொழுதில் அகல் விளக்குகளை சக்கரத்திலிருந்து எடுக்கிறார். அவர் செய்கிறாரா அல்லது கை வைத்து அதிலிருந்து எடுத்து வைக்கிறாரா என்று தெரியாத படி சக்கரமும் அவரது கையும்  சுழன்றபடி இருந்தன. சுழலும் சக்கரத்தைப் பார்த்ததும், சக்கரம்தான் உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்கள் ஆசிரியர் சிறுவயதில் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆண்கள்தான் சக்கரத்திலிருந்து மட்பாண்டங்களை வடிக்கும் வேலையை செய்வார்களாம். பெண்கள் சக்கரத்தில் கை வைப்பதில்லை. இது ஆரம்பத்திலிருந்தே ஒரு கட்டுபாடு போல கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம்.



தொடர்ந்து நடந்தோம். ஒரு இடத்தில் பானைகள் மண்ணோடு சேர்த்து பிணைக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது.  எல்லாம் தண்ணீர் பானைகள். வீட்டுச் சுவராம்,அது. குயவர்களிடமிருந்து ஏஜெண்டுகள்தான் பானைகளை வாங்கிச் செல்வார்களாம்.  சில பானைகளை ஏஜெண்டுகள் ஏற்பதில்லையாம். தரக்கட்டுப்பாட்டு சோதனை?! அவ்வாறு, ஜெண்டுகள் நிராகரித்த பானைகள், மூலைக்கு தலைக்கல்லாவது போல,  குயவர்கள் வீட்டு சுவர்களாகி விடுகின்றன. அந்த சுவர்கள் வெயிற்காலத்திலும் குளிர்காலத்திலும் ஒரு நல்ல தடுப்பாக பயன்படுகின்றனவாம். 


முன்பு அநேகமாக எல்லா வீடுகளும் இப்படித்தான் இருக்குமாம். இப்பொழுது அவை அருகிவிட்டனவாம்.

மட்பாண்டங்கள் வடிப்பதிலிருந்துதான் மட்டும்தான் பெண்களுக்கு விலக்கே தவிர, மண், சக்கரத்துக்கு வருவதற்கு முன்பும் அதன் பின்பும் இருக்கும் ஏகப்பட்ட வேலைகளுக்கு  அவர்கள் கைகளே பொறுப்பு.  

அந்த சுவரை சற்று நேரம் வெறித்துவிட்டு, நடையைத் தொடர்ந்தோம் - சாலையின் இருபக்கமும் கண்களை சுழலவிட்டவாறே.  ஒரு சிறுவன் வீட்டு வாயிலருகில் சிறுகுச்சியை வைத்து தரையில் அடித்துக் கொண்டிருந்தான். ஏதோ விளையாட்டு என்றெண்ணிக்கொண்டேன். அடுத்த கொஞ்ச நேரத்தில், ஒரு பெண்மணி  தரையில் மண்ணை அடித்துக்கொண்டிருந்தார். அருகில் குன்று போல மண். அவரது தலை முக்காடால் மூடிபட்டிருந்தது. 

பானைகள் வனைவதற்கு முன்னால், நிறைய வேலைகள் இருக்கிறதாம். அவற்றில் முதன்மையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மண் வந்து இறங்கியதும், அவற்றை தடியால் அடித்து மாவு போல் ஆக்குவது. அதில், கட்டியானவை எல்லாம் உதிர்ந்ததும், இரும்பு சல்லடையால் சலித்து எடுத்துக்கொள்கின்றனர்.

 உடனே, முன்பு பார்த்த அந்த சிறுவனின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தேன், அவனருகில் மண் குவிக்கப்பட்டிருந்தது. எனில், அந்த சிறுவன் மண்ணை சீராக்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்கிறான்!  பெரும்பாலும், பெண்களும், குழந்தைகளும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். குழந்தைகளும் வீட்டுவேலைகளில் உதவி செய்வதை கணக்கில் கொண்டு பள்ளிகள் இங்கு அரைநாள்தான் வேலை செய்கின்றன. 

அப்படி சீராக்கிய மண்ணை, ஈரப்படுத்தி தேவையான பதத்தில் வைத்துக்கொள்கிறார்கள். அதனை, உருண்டையாக்கி பாலித்தீன் கவர்களில் சுருட்டி வைத்துவிடுகிறார்கள். வேண்டும்போது, சக்கரத்திலிட்டு பானைகளை வனைகிறார்கள்.


வழியெங்கும் தீபாவளி அகல் விளக்குகள், தில்லி நகரத்தில் வீடுகளில் ஜொலிப்பதற்கு காய்ந்துக்கொண்டிருந்தன. செய்து முடித்ததும், அவற்றை பரப்பி காய வைக்கிறார்கள். பின்பு, சுடுகிறார்கள். 


சில இடங்களில் பெரிய பெரிய அடுப்புகளையும் பார்த்தோம். குயவர்களின் வீடுகள் முழுவதும்,  அவர்கள் செய்து வைத்திருக்கும்  பொருட்களே நிறைந்திருக்கிறது. வீடுகளே சேமிப்பு கிடங்கு! வீடுகளை அடைத்துக்கொண்டது போதாதென்று வீட்டு சுவர்கள், கைப்பிடி சுவர்கள் என்று எங்கும் பூந்தொட்டிகளும், பானைகளும் சூரிய குளியலில்.


 வழியில் எங்களை, முக்காடிட்ட  ஒரு பெண் கடந்து சென்றார். மஞ்சள் நிற சேலை. கைகளில் ஒரு தட்டு. தட்டிலிருந்த‌ உணவு பாத்திரங்கள் அலங்காரத் துணியால் மூடப்பட்டிருந்தது. கார்வா சௌத் போல, அன்றும் ஒரு பண்டிகையாம். 

உபயோகப்படுத்தும் பொருட்கள் தவிர அழகு பொருட்களையும் ஒருசில குயவர்கள் செய்கிறார்கள். அந்த கலைப்பொருட்கள் தில்லியில் நடக்கும் திருவிழாக்களில் கிடைக்குமாம். கலைப்பொருட்களை சிலர் பைபர் அச்சில் வார்த்து செய்வார்களாம். அதற்கு, மிகுந்த உழைப்பு தேவைப்படுமாம். அதேபோல், எல்லா குயவர்களும் எல்லா பொருட்களையும் செய்வதில்லை. பானையை ஒருவர் செய்தால், அதன் மூடியை வேறொரு குயவர் செய்வார்.அப்படி, மூடிகளை மட்டும் வனைந்துக்கொண்டிருந்தவரை பார்த்து அங்கேயே நின்றுவிட்டோம். 


அந்த கிராமத்தில் சந்து பொந்துகளில் வளையவந்தபோது, ஒரு தள்ளுவண்டிக்காரர் கண்ணில் பட்டார். வித்தியாசமாக, ஒரு காய்கறி இருந்தது. இந்தியில் சொன்ன பெயரை மறந்துவிட்டேன். வாட்டர் செஸ்ட்நட் என்றார் ஒருவர். கலைப்பொருட்களில், மிதக்கும் ஆமைகளை வாங்கினோம். தண்ணீரில் இட்டால் மிதக்குமாம். 

இறுதியில், எங்கள் கைகளையும் சக்கரத்தின் மேலே  சுழற்றிபார்க்க வாய்ப்பு கிட்டியது. பப்பு, நான் ஸ்கூல்லயே பண்ணியிருக்கேன்ப்பா என்று கொஞ்சம் பந்தா விட்டாள்.  பார்க்கும்போது, எளிதாக இருப்பதுபோல் தோன்றிய வேலை, நாம் செய்யும் போதுதான் எவ்வளவு கடினமாக ஆகிவிடுகிறது! 


Saturday, November 23, 2013

கிராவிட்டி

படம் வந்த புதிதில் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்கும் சமயத்திலோ வாரயிறுதிகளில் வேலை/பயணம். ரொம்ப நாளாக பார்க்க நினைத்து இன்றைக்கு காலை ஷோவுக்கு செல்ல வாய்த்தது ‍ 'கிராவிட்டி'. விண்வெளிக்குச் செல்வதை பற்றிய‌, பப்புவின் கனவை இந்த படம் கலைத்து விட்டால்(?) என்றொரு பயமும் இருந்தது.

பப்புவுக்கு ஸ்பேஸ் செல்ல வேண்டும் என்பது ஒரு ஃபேன்டசி(!) கனவு. தான் ஒரு விண்வெளி வீரர் என்பது அவளது 'வளர்ந்து  என்னவாக  ஆவேன்" பட்டியலில் முதலில் இருப்பது.  "3 இயர்ஸ் ஸ்பேசில் இருப்பேன், 3 இயர்ஸ் எர்த்தில இருப்பேன். அப்போ, நெயில் சலான் வைச்சு சம்பாரிப்பேன்"  என்பாள். ஸ்பேசுக்கும் நெயில் சலானுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாத புதிர்.  'கிராவிட்டி' அவளது ஆசைகளை/முடிவுகளை அசைத்து பார்க்குமோ என்றும் லேசாக தயக்கம். படம் பார்க்கும் நாமும் விண்வெளியில் இருப்பதை போலவே தோன்ற செய்வதாக  இணையத்தில் படித்த சில விமர்சனங்கள் தூண்டிவிட்டன. சரி, இதுவும் ஒரு அனுபவமாக இருக்கட்டுமே என்று துணிந்து பப்புவை அழைத்துச் சென்றேன்.


நேரம் போனதே தெரியவில்லை. ஒரு ஆணி கையிலிருந்து தவறும் போது ஏற்படும் விறுவிறுப்பு கடைசி வரை எங்கும் குறையவில்லை. பப்புவோ, சீட்டின் நுனியில்! அறிவியல் கதை என்று  வகைபடுத்திவிட முடியாது. எனினும், விண்வெளியை பற்றி ஒரு சாகச படம் த்ரில்லிங்கான ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல! பார்க்கவே பயப்படுவாள் என நான் நினைத்த காட்சிகளை எல்லாம் பப்பு வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், நான்தான் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.  "இவங்கதான் சுனிதா வில்லியம்ஸா ஆச்சி, இவங்கதான் சுனிதா வில்லியம்சா" என்று நடுவில் கேள்வி வேறு.  


ஸ்பேசில் அவர்கள் நடப்பதையும், ஈர்ப்பு விசை என்பதே இல்லையெனில்  எப்படி இருக்கும் என்பதையும் தாண்டி விண்வெளியைப் பற்றி அறிந்துக் கொள்ளும்படி எதுவும் இல்லை. விண்கலத்துடனான‌  தொடர்பை இழந்துவிட்ட நிலையில், விழிப்புடன் இருக்க ஒருவரை ஒருவர் தொடர்ந்து பேச தூண்டிக் கொண்டிருப்பது, விண்வெளியில் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டியது என்று அவர்களது வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளலாம்.  டாக்டர் ரயான், விண்கலத்திலிருந்து தடுமாறி சென்று  பிறகு தொடர்புக்கு வந்துசேரும்  ஒரு கட்டத்தில் 'நீ அதிகமா ஆக்சிஜனை சுவாசிக்கறே, ரிலாக்சா இரு, லேசா சுவாசி'ன்ற மாதிரி கட்டளை வரும்போது நமக்கு திடுக்கிடுகிறது. நாம் எவ்வளவு இயல்பாக சுவாசிப்பது கொஞ்சம் மைல்களுக்கு மேல் போனால் எப்படி கிடைத்தற்கரிய வாய்ப்பாக மாறிவிடுகிறது!!

படத்தில், வன்முறையான அல்லது  ஆபாச‌ காட்சிகள் இல்லை. இப்படிதான், "நான் ஈ" என்ற படம் குழந்தைகள் பார்க்கலாம் என்று பலரும் சொல்லக்கேட்டு, யூ சர்ட்டிபிகேட்டையும் பார்த்து சூடு போட்டுக் கொண்டதால் கார்ட்டுன் அல்லாத படங்களை பப்புவோடு பார்க்க யோசிப்பதுண்டு.  அது போன்ற காட்சிகள் இல்லாவிடினும், திடுக்கிட வைக்கும் சில காட்சிகள் உண்டு. உடைந்துபோன விண்கலத்தில் மிதந்து கொண்டிருக்கும் உயிரற்ற உடல்களை,  டாக்டர் ரயான் எதிர்கொள்ளும் காட்சிகள் நம்மை டிஸ்டர்ப் செய்யும்.

நல்லவேளையாக, பப்பு எதுவும் அதைப்பற்றி கேட்கவில்லை. படம் முழுக்க,முழுக்க டாக்டர் ரயான் எப்படி தப்பிக்கிறார், அடுத்து என்ன செய்வார் என்று விறுவிறுப்பாக அமைந்ததால் அந்த காட்சிகளின் தாக்கம் மறைந்துவிடுகிறது. ஆனால், மேத்யூ ஏன் தானாக விடுவித்துக்கொண்டு செல்கிறார் என்பதைதான் பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திரும்பி வரும் வழி எங்கும், அடிக்கடி அந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  படத்தில் ஒருசில ஆங்கில கெட்ட வார்த்தைகள் இருந்தாலும் பப்புவுக்கு இன்னும் அவை தெரியாத காரணத்தால் கவனம் செலுத்தவில்லை.


விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது, நட்சத்திர வானத்துக்கு நடுவில் மிதப்பது , விண்வெளியில் இருந்து அவர்கள் சூரிய உதயத்தை பார்ப்பதும், பூமியை நோக்கி இடங்களை கண்டு நேரத்தை அனுமானிப்பது போன்ற காட்சிகளில்  நாமும், சில கணங்கள் அவர்களோடு விண்வெளியில் மிதக்கிறோம்.  விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது  லைட்டாக பிரமிப்போடு, பூமி மீது பாசமும் பொங்கியது. :‍)

விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்து சேர, டாக்டர் ரயான்  எதிர்கொள்ளும் சவால்கள், பயத்தை மீறி முடிவுகள் எடுப்பது, சோர்வடையாமல் தைரியத்துடன் முன்னேறி செல்வது என்று படம் எங்களை முழுவதும் ஆட்கொண்டது. ஒரு இடத்தில், பூமியின் தொடர்பு கிடைத்து, ரேடியோவில் நாயின் சத்தங்களை கேட்டு டாக்டர் ரயான் நாயைப் போல சப்தமிடும் காட்சி -  சமீபத்தில், ஒரு விண்வெளி வீராங்கனை தனது மகனுக்காக விண்வெளியிலிருந்து ஃபெல்ட் டைனோசரை தைத்து அனுப்பியதை தட்ஸ் தமிழில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

இடைவேளையில், டாக்டர் ரயான் சொல்லும் "ஐ ஹேட் ஸ்பேஸ்"-  பப்பு அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொண்டாள். இரண்டாம் பாகத்தில் நடுவில், 'நான் ஸ்பேசுக்கு போகமாட்டேன்ப்பா' என்றும் சொன்னாள். நல்லது, விண்வெளிக்கு செல்வது என்பது இங்கிருந்து விண்மீன்களை பார்ப்பது போல எளிதானது என்ற மாயையை 'கிராவிட்டி' உடைத்தது நல்லதுதான். ரியாலிட்டி இப்படியும் இருக்கும், விண்வெளிக்கு செல்வது என்பது கேக்வாக் போல அல்லது சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா என்று அவர்களின் வெற்றிகளை/ஸ்பேசில் செய்த வேலைகளை படித்து ஆசைப்படுவது மட்டுமே  இல்லை, அதற்கு நிறைய பயிற்சியும் தைரியமும் தேவைப்படும் என்பது பப்பு  தெரிந்துகொண்ட விஷயம்.

வரும் வழியில் எல்லாம் கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்..சில சமயங்களில் பதில்களும்! அதோடு, அடுத்த அக்டோபரில் பூமிக்கு ஒரு விண்கலம் வந்து சேருமாம். அது விண்வெளியைப் பற்றிய தகவல்களோடு வருமாம்.

முடிவில், டாக்டர் ரயான் நீரிலிருந்து நீந்தி தரைக்கு வந்து மண்ணை கையில் பற்றிக்கொள்ளும்போது நமக்கே பூமிக்கு வந்தது போல் இருக்கிறது. தலையும் லேசாக சுற்றுவது போல் இருந்தது. இதுவே, தமிழ்சினிமாவாக இருந்தால் பூமிக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பார்கள். ;‍-) நினைத்தது போல, பப்புவுக்கு படம் பிடிக்காமலோ அல்லது பயமோ இல்லை.   முக்கியமாக,  பூமியின் ஈர்ப்பு விசையை நியூட்டனுக்கு பிறகு எங்களை முக்கியமாக பப்புவை உணர வைத்த கிராவிட்டிக்கு ஒரு ஓ!

Sunday, November 17, 2013

ஒரு புத்தகம்/ஒரு பயணம்/ஒரு கதாபாத்திரம்

ஒரு புத்தகம்

இந்திய வரலாற்று சின்னங்களை பப்பு படிக்க ஆரம்பித்தபின் வாங்கிய புத்தகம் இது. வெறும் வரலாற்று சின்னங்களின் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல், அதோடு தொடர்புடைய வரலாற்று சம்பவங்களை அறிந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்தானே! கிட்டதட்ட 30 இந்திய சின்னங்களை பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதாவது, அவற்றை அறிமுகப்படுத்திவிடுவார்கள். குழந்தைகள்தான், அச்சின்னங்களைப்பற்றி தேடிப்பிடித்து படிக்க வேண்டும். எழுதி வர வேண்டும்.

எளிதாக, கூகுளில் போட்டு தேடி எழுதிச் செல்லலாம்தான், பப்பு சொல்வது போல!ஆனாலும், புத்தகமாக படித்தால் மனதிலிருந்து எளிதில் நீங்காது. அதே சமயம், எப்போது வேண்டுமானால், எடுத்து வாசிக்கலாம். அப்படி ஒரு புத்தகத்தை (பாடபுத்தகமாக அல்லாமல்) தேடிக்கொண்டிருந்தேன்.

வரலாற்று புத்தகங்கள் என்றாலே ஆண்டுகள் பட்டியலும், ராஜாக்கள் செய்த போர்களுமாகத்தான் படித்திருக்கிறேன்.  அதோடு, அவர்கள் ஆட்சி செய்த பிரதேசங்களையும். இதனாலே, வரலாற்றில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லாமல் போனது!    அதைவிட்டால்,  பீர்பால், தெனாலிராமன் கதைகளாகத்தான் இருக்கும்.  அப்படி இல்லாமல்,  சிறார்களுக்கு  ஏற்றவாறு சுவாரசியமாகவும், அதே சமயம் சரியான தகவல்கள் சம்பவங்க‌ளோடும்  வரலாற்று புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் சுருக்கமாகவும், அதே சமயம் செறிவாகவும் இந்திய வரலாற்றை குழந்தைகள் எளிதாக வாசிக்கும்படி அமைந்திருக்கிறது.


அதில், ஹரப்பா முகஞ்சதாரோவிலிருந்து ஆரம்பித்து முகலாயர்கள், மராட்டியர்கள், சோழர்கள், பிரிட்டிஷ் முதல் இன்றைய இந்தியா வரை எளிதான நடையில் இருந்தாலும், முகலாய மன்னர்களின் வரலாற்றைப் பற்றி மட்டும் பப்பு வாசித்திருக்கிறாள். முகலாய மன்னர்களின் பெயர்களை வரிசையாக பப்பு அறிந்துக்கொண்டது இதன் மூலம்தான்! அதில், ஒவ்வொரு முகலாய மன்னர்களைப் பற்றிய அறிமுகத்தோடு, முக்கிய சம்பவங்களும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில்  கொடுக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகம்தான், எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றது.


ஒரு பயணம்

வரலாற்றோடு சேர்த்து, வரலாற்று சின்னங்களையும்  நேரில் காண டெல்லிக்கும், அங்கிருந்து ஆக்ராவுக்கும் சென்றோம். இந்த பயணம், வெறும் பெயர்களாக மட்டுமே அறிந்திருந்த  முகலாய மன்ன‌ர்களையும்  அவர்கள் ஒவ்வொருவரும் கட்டிய சின்னங்களையும் ஒரு சேர அறிந்துக்கொண்டது  பப்புவுக்கு மட்டுமல்ல, எனக்குமே நல்ல அனுபவமாக இருந்தது. 


 இந்த பயணத்தில்தான் அக்பர் மீது  பப்புவுக்கு  ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. ஷேர் ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்ட ஹூமாயுன், தலைமறைவாக இருந்த காலத்தில் அக்பர் வளர்ந்தது, சிறு வயதில் தனது தந்தையை இழந்ததும் அரசு பொறுப்பை ஏற்றுக்கொண்டது, எல்லா மக்களை சமமாக எண்ணியது, இந்து மக்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை அவர் தள்ளுபடி செய்தது, மற்ற மன்னர்களோடு சமரசமாக ஆட்சி நடத்தியது இவை எல்லாம் சேர்ந்து அக்பர் மீது மிகுந்த மரியாதையையும் அன்பையும் கூட்டியது. முக்கியமாக, தனது தந்தைக்காக அக்பர் கட்டிய  'ஹூமாயுனின் கல்லறை' ‍ ‍- அதைப் பற்றி இன்னொரு புத்தகம் இந்த பயணத்திலேயே கிடைத்தது.


ஹூமாயுனோடு சேர்த்து, ஹூமாயுனின் முடிவெட்டுபவருக்கும் சேர்த்து ஒரு சின்னத்தை அக்பர் எழுப்பியிருக்கிறார். அதை, பயணத்தில் கிடைத்த இன்னொரு புத்தகத்தின் மூலமே தெரிந்துக்கொண்டோம். பப்பு,அதை பார்பர் என்று படிக்க, நானோ அது பாபராக இருக்கும் என்று சொல்லிவிட ஒரே கலவரம்தான்! :‍))

பயணத்திலிருந்து இன்னொரு புத்தகம்

இதை வாசித்ததிலிருந்து பப்புவின் மனதில் அக்பர் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்!

"Let's explore Humayun's tomb" என்ற இந்திய தொல்லியல்துறையின் சிறார்களுக்கான புத்தகத்தை செங்கோட்டையில் வாங்கினோம். இந்த புத்தகம் வெளியில் கிடைப்பதில்லை. தொல்லியல்துறையின், முக்கியமாக தில்லி கிளைகளில்தான் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அக்பரைப் பற்றியும், ஹூமாயுன் கல்லறையின் முக்கிய அம்சங்களையும், நுழைவாயில் களையும்,  அதன் சுற்றுபுறத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியும் படங்களோடு அழகாக சொல்லித்தருகிறது.

இந்த பயணத்தின் நடுவில்தான் ஒரு மடல் பப்புவின் பள்ளியிலிருந்து. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடக்கப்போகும் மாறுவேட விழாவைப் பற்றி. அதில், தாங்கள் என்ன வேடமிடப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டுமாம். பப்புவிடம், சொன்னபோது, தான் அக்பராக வேடமிடப்போவதாக கூறினாள்.


என்னது? மாறுவேட போட்டிக்கு அக்பரா? இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லையே?  ஜான்சி ராணி அல்லது அவ்வையார்,  இல்லை யென்றால்  (சிலநாட்களுக்கு முன்பு பப்பு சொன்னதுபோல) மேஜிக் செய்பவர்'  என்று எளிதாக அனுப்பிவிடலாமே என்று எண்ணிக்கொண்டேன். ('இதெல்லாம் வேலைக்காகாது, அந்த உடைகளுக்கு எங்கு செல்வது?') சரி, அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


ஜலாலுதீன் பப்பு அக்பர்


பயணத்திலேயே அக்பர் புராணம் ஆரம்பித்துவிட்டது.பேசுவதற்காக, , ஹூமாயுன், ஹமிதா பானு பேகம், பைராம்கான், ஆல் ஆர் ஈக்வல், தீன் இலாஹி, 37 கல்யாணம், ஜோதாபாய், ஜிஸ்யா, பேத்பூர் (பதேபூரை அப்படிதான் படித்திருக்கிறாள்!) சிக்ரி என்று தான் கண்டு/கேட்டு/படித்தவற்றை  ஒரு மாதிரி  தொடர்ச்சியாக‌ சொல்லிக்கொண்டிருந்தாள்.  

அப்போதுகூட, வேறு ஏதாவது, எளிதாக நம்மிடம் இருக்கிற உடைகளுக்கு ஏற்ற மாதிரி வேடமிடலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அவளிடம் சொன்னபோது, ஏற்றுக்கொள்ளவில்லை. விடாமல் 'நான் அக்பர் ஆகப் போறேன் என்றும் 'அக்பர் அக்பர்' என்றும்  அக்பர் புராணம் பாடிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்து சேர்ந்த வாரயிறுதில் பப்புவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவளது பிறந்தநாளுக்காக காத்திருந்த உடைதான் அது.

முழு நீள கவுன் போன்றிருந்த அந்த உடையையே அக்பருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று லைட்டாக ஒரு ஆசுவாசம் வந்தது. அதே போல், பள்ளியில்  ஆன்ட்டியிடம் அக்பர் என்று  பெயர் கொடுத்துவிட்டு வந்தாள்.அதிலிருந்து, வீட்டில் எப்போதும் அக்பர் மீதான ஆராய்ச்சிதான்.
அதை ஒரு தனி இடுகையாகவே எழுதலாம்.பப்பு அறிந்துக்கொண்டதையே அழகாக கோர்வையாக பெரிம்மா  எழுதிக்கொடுத்தார். அதைப்படித்து, பள்ளியில் அக்பராக பேசியும் வந்துவிட்டாள்.



ஒரு புத்தகம், அதைத் தொடர்ந்து ஒரு பயணம், அதிலிருந்து தூண்டப்பட்டு ஒரு கதாபாத்திரம் என்று ஒரு அழகிய தேடலாக, தொடர்பயணமாக‌ அமைந்தது இனிய அனுபவம்!!