Sunday, November 24, 2013

நாங்கள் சக்கரத்தை கண்டுபிடித்த கதை ;-)

தில்லிக்கு சென்ற போது குயவர்களின் கிராமத்தை எட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக‌, எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு ஏதாவது நடைபயணங்கள்   நடைபெறுகிறதா என்று பார்த்து பங்கு பெறுவோம்.. பெரும்பாலும் "ஹெரிடேஜ் வாக்/நேச்சர் வாக்" தான் இதுவரை சென்றிருக்கிறோம். அதில், வரலாற்றுச் சின்னங்கள், வரலாற்று தகவல்கள் அல்லது நேச்சர் வாக்கில், பறவைகள்,மரங்கள் மிருகங்கள் பற்றிய தகவல்களாக இருக்கும். 

குயவர்களின் கிராமம் என்றதும், 'எப்படி இருக்கும்? இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றெல்லாம் சொல்லுவார்களே? ஆனால், கிராமத்தில்தான் யாருமே வாழ்வதில்லையே' என்றெல்லாம் யோசனைகள்!   சரி, என்னவென்றுதான் பார்ப்போமே, தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்புதானே, பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் தோன்றியது. 


தில்லி மெட்ரோவில் பயணம். எப்படி வந்து சேர வேண்டும் என்றெல்லாம் முன்பே தகவல்கள் கிடைத்தன. கிட்டதட்ட தில்லியின் கடைக்கோடி. சொன்னதுபோல, 9 மணிக்கு மெட்ரோ வாயிலில் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து காரில் 10 நிமிட பயணம். பாதி தூரம் சென்றிருப்போம். டிராஃபிக் ஜாம். ஏற்கெனவே ஒருவழி பாதை. இதில் பள்ளிக்கூட பேருந்துகள் இடத்தை அடைத்துக்கொள்ள அவ்வளவுதான்! 5 நிமிடங்கள் பார்த்துவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த டிராஃபிக் ஜாம் சரியாக இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம்.

 தாண்டி வந்ததும், ஒரு ஆட்டோ கிடைத்தது. போகிற வழிதான் என்று அவர்களே சொன்னதால் ஏறிக்கொண்டோம். ஒரு வழியாக கிராமத்தை ஒரு ஆலமரத்தில் ஆரம்பத்தில் கண்டுகொண்டோம். எந்த பகுதி  கிராமமானாலும், அது ஒரு ஆலமரத்திலிருந்துதான் ஆரம்பிப்பதுதானே நமது வழக்கம்!  வழக்கமாக, மற்றொரு வழியாகத்தான் என்ட்ரியாம். டிராஃபிக் ஜாம் காரணமாக, நாங்கள் தற்போது இந்த வழியாக கிராமத்தில் காலடி வைத்திருக்கிறோமாம்.

அங்கிருந்து, எங்கள் நடைபயணம் தொடங்கியது. அப்படியே, கிராமத்தைப் பற்றிய முன்னுரையும்! 

இந்த கிராமத்திலிருப்பவர்கள் அனைவரும் குயவர்கள்தானாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் ஆல்மரிலிருந்து பெரும் பஞ்சத்தின் காரணமாக குடிபெயர்ந்தவர்கள். ஆரம்பத்தில் 70 குடும்பங்களாக  இந்த கிராமத்துக்கு குடி பெயர்ந்தவர்ந்துள்ளார்கள். அதன்பிறகு, அவர்களது உற்றார் உறவினர்கள் என்று இந்த கிராமத்துக்கு வந்து தற்போது 600 குயவர்கள் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றர்.  

இந்த கிராமத்தில் தயாராகும் பொருட்கள் -  தண்ணீர் பானைகள், சிறு பானைகள், பூச்சாடிகள்,பூந்தொட்டிகள்,உண்டியல்கள் மற்றும் உருளிகள்-விருந்தினர்களை வரவேற்க வரவேற்பறையில் பூக்களைப் போட்டு வைக்கும் மட்பாண்டங்கள். அதோடு தீபாவளி காலத்தில் அகல் விளக்குகள்.


ஆனந்தவிகடனில், பாரதிதம்பி எழுதிய சேரி நடைகள் பற்றி வாசித்தது நினைவுக்கு வந்து மனசாட்சியை குத்தியது. ஆனால், ராஜஸ்தானத்து குயவர்கள் பற்றியும், அவர்களது வேலையைப் பற்றியும் வேறு எப்படி தெரிந்துக்கொள்வது!

எங்களது நடையில் மனதை செலுத்தினோம். பாதைகள் வெகு குறுகலானவை. பெரும்பாலும், மண்தான். மழைக்காலத்தில் வெகு சிரமம். பாதையின் இருபுறமும் பார்த்துக்கொண்டே வந்தோம். ம்ஹூம்! யாரும் எங்களைக் கண்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. தெருவில் குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருந்தனர். பாதைகளில் குறுக்குச் சந்துகளின் முடிவில் மட்டும் உடைந்த‌ பானைகளின் குவியலோ அல்லது மட்பாண்டங்களில் குவியலோ கண்களில் பட்டது - நீங்கள் இருப்பது குயவர்களின் பூமி என்று சொல்வது போல!


குறுக்குசந்துகளில் புகுந்து புகுந்து நடந்தோம். சிறுசிறு வீடுகள். முன்னால் வீட்டைவிட பெரிய காலி இடங்கள். காலி இடங்கள் எங்கும் சிறு சிறு பானைகள், மண் உண்டியல்கள், சிறுவிளக்குகள். தீபாவளி நெருங்கும் சமயமாதலால், பெரும்பாலும் அகல்விளக்குகள்தான் செய்வார்களாம். செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குயவர் ஒருநாளைக்கு 5000 அகல்விளக்குகளை செய்வதாக சொன்னார்கள். 

மோட்டார் ஆற்றலில் சக்கரம் சுழல, ஒருவர் நொடிப்பொழுதில் அகல் விளக்குகளை சக்கரத்திலிருந்து எடுக்கிறார். அவர் செய்கிறாரா அல்லது கை வைத்து அதிலிருந்து எடுத்து வைக்கிறாரா என்று தெரியாத படி சக்கரமும் அவரது கையும்  சுழன்றபடி இருந்தன. சுழலும் சக்கரத்தைப் பார்த்ததும், சக்கரம்தான் உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்கள் ஆசிரியர் சிறுவயதில் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆண்கள்தான் சக்கரத்திலிருந்து மட்பாண்டங்களை வடிக்கும் வேலையை செய்வார்களாம். பெண்கள் சக்கரத்தில் கை வைப்பதில்லை. இது ஆரம்பத்திலிருந்தே ஒரு கட்டுபாடு போல கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம்.தொடர்ந்து நடந்தோம். ஒரு இடத்தில் பானைகள் மண்ணோடு சேர்த்து பிணைக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது.  எல்லாம் தண்ணீர் பானைகள். வீட்டுச் சுவராம்,அது. குயவர்களிடமிருந்து ஏஜெண்டுகள்தான் பானைகளை வாங்கிச் செல்வார்களாம்.  சில பானைகளை ஏஜெண்டுகள் ஏற்பதில்லையாம். தரக்கட்டுப்பாட்டு சோதனை?! அவ்வாறு, ஜெண்டுகள் நிராகரித்த பானைகள், மூலைக்கு தலைக்கல்லாவது போல,  குயவர்கள் வீட்டு சுவர்களாகி விடுகின்றன. அந்த சுவர்கள் வெயிற்காலத்திலும் குளிர்காலத்திலும் ஒரு நல்ல தடுப்பாக பயன்படுகின்றனவாம். 


முன்பு அநேகமாக எல்லா வீடுகளும் இப்படித்தான் இருக்குமாம். இப்பொழுது அவை அருகிவிட்டனவாம்.

மட்பாண்டங்கள் வடிப்பதிலிருந்துதான் மட்டும்தான் பெண்களுக்கு விலக்கே தவிர, மண், சக்கரத்துக்கு வருவதற்கு முன்பும் அதன் பின்பும் இருக்கும் ஏகப்பட்ட வேலைகளுக்கு  அவர்கள் கைகளே பொறுப்பு.  

அந்த சுவரை சற்று நேரம் வெறித்துவிட்டு, நடையைத் தொடர்ந்தோம் - சாலையின் இருபக்கமும் கண்களை சுழலவிட்டவாறே.  ஒரு சிறுவன் வீட்டு வாயிலருகில் சிறுகுச்சியை வைத்து தரையில் அடித்துக் கொண்டிருந்தான். ஏதோ விளையாட்டு என்றெண்ணிக்கொண்டேன். அடுத்த கொஞ்ச நேரத்தில், ஒரு பெண்மணி  தரையில் மண்ணை அடித்துக்கொண்டிருந்தார். அருகில் குன்று போல மண். அவரது தலை முக்காடால் மூடிபட்டிருந்தது. 

பானைகள் வனைவதற்கு முன்னால், நிறைய வேலைகள் இருக்கிறதாம். அவற்றில் முதன்மையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மண் வந்து இறங்கியதும், அவற்றை தடியால் அடித்து மாவு போல் ஆக்குவது. அதில், கட்டியானவை எல்லாம் உதிர்ந்ததும், இரும்பு சல்லடையால் சலித்து எடுத்துக்கொள்கின்றனர்.

 உடனே, முன்பு பார்த்த அந்த சிறுவனின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தேன், அவனருகில் மண் குவிக்கப்பட்டிருந்தது. எனில், அந்த சிறுவன் மண்ணை சீராக்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்கிறான்!  பெரும்பாலும், பெண்களும், குழந்தைகளும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். குழந்தைகளும் வீட்டுவேலைகளில் உதவி செய்வதை கணக்கில் கொண்டு பள்ளிகள் இங்கு அரைநாள்தான் வேலை செய்கின்றன. 

அப்படி சீராக்கிய மண்ணை, ஈரப்படுத்தி தேவையான பதத்தில் வைத்துக்கொள்கிறார்கள். அதனை, உருண்டையாக்கி பாலித்தீன் கவர்களில் சுருட்டி வைத்துவிடுகிறார்கள். வேண்டும்போது, சக்கரத்திலிட்டு பானைகளை வனைகிறார்கள்.


வழியெங்கும் தீபாவளி அகல் விளக்குகள், தில்லி நகரத்தில் வீடுகளில் ஜொலிப்பதற்கு காய்ந்துக்கொண்டிருந்தன. செய்து முடித்ததும், அவற்றை பரப்பி காய வைக்கிறார்கள். பின்பு, சுடுகிறார்கள். 


சில இடங்களில் பெரிய பெரிய அடுப்புகளையும் பார்த்தோம். குயவர்களின் வீடுகள் முழுவதும்,  அவர்கள் செய்து வைத்திருக்கும்  பொருட்களே நிறைந்திருக்கிறது. வீடுகளே சேமிப்பு கிடங்கு! வீடுகளை அடைத்துக்கொண்டது போதாதென்று வீட்டு சுவர்கள், கைப்பிடி சுவர்கள் என்று எங்கும் பூந்தொட்டிகளும், பானைகளும் சூரிய குளியலில்.


 வழியில் எங்களை, முக்காடிட்ட  ஒரு பெண் கடந்து சென்றார். மஞ்சள் நிற சேலை. கைகளில் ஒரு தட்டு. தட்டிலிருந்த‌ உணவு பாத்திரங்கள் அலங்காரத் துணியால் மூடப்பட்டிருந்தது. கார்வா சௌத் போல, அன்றும் ஒரு பண்டிகையாம். 

உபயோகப்படுத்தும் பொருட்கள் தவிர அழகு பொருட்களையும் ஒருசில குயவர்கள் செய்கிறார்கள். அந்த கலைப்பொருட்கள் தில்லியில் நடக்கும் திருவிழாக்களில் கிடைக்குமாம். கலைப்பொருட்களை சிலர் பைபர் அச்சில் வார்த்து செய்வார்களாம். அதற்கு, மிகுந்த உழைப்பு தேவைப்படுமாம். அதேபோல், எல்லா குயவர்களும் எல்லா பொருட்களையும் செய்வதில்லை. பானையை ஒருவர் செய்தால், அதன் மூடியை வேறொரு குயவர் செய்வார்.அப்படி, மூடிகளை மட்டும் வனைந்துக்கொண்டிருந்தவரை பார்த்து அங்கேயே நின்றுவிட்டோம். 


அந்த கிராமத்தில் சந்து பொந்துகளில் வளையவந்தபோது, ஒரு தள்ளுவண்டிக்காரர் கண்ணில் பட்டார். வித்தியாசமாக, ஒரு காய்கறி இருந்தது. இந்தியில் சொன்ன பெயரை மறந்துவிட்டேன். வாட்டர் செஸ்ட்நட் என்றார் ஒருவர். கலைப்பொருட்களில், மிதக்கும் ஆமைகளை வாங்கினோம். தண்ணீரில் இட்டால் மிதக்குமாம். 

இறுதியில், எங்கள் கைகளையும் சக்கரத்தின் மேலே  சுழற்றிபார்க்க வாய்ப்பு கிட்டியது. பப்பு, நான் ஸ்கூல்லயே பண்ணியிருக்கேன்ப்பா என்று கொஞ்சம் பந்தா விட்டாள்.  பார்க்கும்போது, எளிதாக இருப்பதுபோல் தோன்றிய வேலை, நாம் செய்யும் போதுதான் எவ்வளவு கடினமாக ஆகிவிடுகிறது! 


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்யும் வேலையே திருப்தி என்பதால் வீடு முழுவதும் சந்தோஷ கிடங்கு...

தியானா said...

அருமை முல்லை!! பல புதிய தகவல்கள்...

பார்க்கும் பொழுது எளிதாக இருக்கும். ஆனால் நாம் செய்யும் பொழுது நெளிந்து வளைந்து பல வடிவங்களில் வரும்.. :))