Monday, February 09, 2015

தேக்கடி செல்ல சில டிப்ஸ்


(கேட்டது மூணு நாலு பேருதான்..ஆனா, நாம ஊருக்கே சொல்வோமில்ல!) :-)

கூர்க் போயிட்டு வந்ததுலேருந்து, பப்பு, யானைகள் மேலே  அப்படி மதிமயங்கி கிடந்தாள். அதுவும், ஜூவிலே பார்க்கிறதெல்லாம் மேடமுக்கு பிடிக்காது. 'வாங்க பழகலாம்' ரேஞ்சுலே யானைகளை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து பழகணும்!!

  அதுக்கு எங்கே முடியும்... கூர்க் துபாரேயை விட்டா?! கூர்க்குக்கு அடுத்து  மசினகுடிக்கு பயணம்!  'தெப்பக்காடு யானைகள் முகாம்'லே பழகினோம். தங்கியிருந்த மூணு நாளும், சாயங்காலம் முழுக்க‌ யானைகள் முகாம்லேதான். என்ன, மசின குடியிலே 'தூரத்துலேருந்து' பழகலாம்!

அந்த பயணத்துலேதான், யானைகள் வீட்டு விலங்கு இல்லே காட்டு விலங்குன்றது பப்புவுக்கு புரிஞ்சதோ என்னவோ! காட்டு யானைகளையும் நேரடியா பார்த்தது மசினகுடி பயணத்துலேதான்.

'சிவநேசு சிவநேசு குருவம்மா' கணக்கா நாங்க  'இன்னும் இன்னும் யானை, ரிச்சர்ட் பார்க்கர்' ரிச்சர்ட் பார்க்கர்ன்னு தேடினப்போ க்ளிக்கானதுதான்  'தேக்கடி'.

"தேக்கடி" என்னவோ  தமிழுக்கு ரொம்ப நெருக்கமா தோணினாலும், தேனி வழியா ஏதோ ஒரு  மலையடி வாரத்துலேருந்து ஆரம்பிக்கிற பயணம் முடியும்போது கேரளாவாகிடுது. ஒரு சின்ன கோடுதான்... அதுக்கு இந்த பக்கம் குமுளின்றாங்க...அந்த பக்கம் தேக்கடியாம்.

மதுரை வழியாக தேனி சென்று தேக்கடி சென்றோம்.நாங்க போனது ஏப்ரல் மாதம். மத்த நாட்களிலே எப்படி இருக்கும்னு தெரியலை... ஆனா, ஏப்ரல் இரண்டாம் வாரத்துலே மிதமான வெயில். மிதமான குளிர். படகு சவாரிக்கு நல்லாவே இருந்தது. மேலும், ஏப்ரல் மாதத்தில், மலர் கண்காட்சி ஒன்றும் நடைபெறும். மதிய நேரத்தில், ஒரு சின்ன விசிட் அடிக்கலாம்.

தங்குமிடம்:

 காட்டுக்கு வெளிலே ஒரு ஹோட்டல்லேயும் ஒருநாள், இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளே கேரள அரசாங்க ஹோட்டல் லேயும் தங்கினோம். வெளியில் தங்குவதைவிட, காட்டுக்குள்ளே தங்குவதைதான் பரிந்துரைப்பேன்.

காட்டுக்குள்ளேன்னா, காட்டுக்குள்ளேயே இல்ல...காட்டின் எல்லை ஆரம்பிக்கிற இடம். பெரியாறு ஏரியின் முனையில், மலைப்பாங்கான பகுதியில் இருக்கிறது. முன்பதிவு அவசியம். இங்கு தங்கினா, மாலை ஐந்து மணிக்குள்ளே உள்ளே வந்திடணும்...ஏன்னா, காட்டு எல்லைப்பகுதியில் உள்ளே வர ஐந்து  மணிக்குப் பிறகு அனுமதியில்லை.

குடும்பத்தோடு தங்குவதற்கு ஏற்ற இடம். காலை உணவுக்கும் சேர்த்தே அறை வாடகை. அதுவும், இளங்காலை நேரத்தில் படகு சவாரி முடிச்சு, நேரா புட்டும், ஆப்பமும்,அன்னாசி பழரசமும் சாப்பிடறது இருக்கே!யம்ம்ம்ம்ம்!

உள்ளேயே, நீச்சல் குளம் குழந்தைகளுக்கு தனியாக இருக்கிறது. என்ன, குரங்குகள் தொல்லை அதிகம்.  கொஞ்சம் ஏமாந்தால் போதும்...உங்களையே தூக்கிட்டு போய்டும்! மற்றபடி, பாதுகாப்பான, சுத்தமான இடம். இன்னொருமுறை தேக்கடி சென்றால், 'ஆரண்ய நிவாஸில்' தங்கவே விரும்புவோம்.  பைசா வசூல்ல்ல்ல்ல்!

தேக்கடி படகு சவாரி:

தேக்கடின்னாலே படகு சவாரிதானே! தேக்கடியில், சுற்றவும் பார்க்கவும் இடங்கள் இருந்தாலும் தவற விடக் கூடாத முக்கியமான விஷயம் படகு சவாரி.  இரண்டு பக்கமும் காடுகள். நடுவில் சாலை போல நீண்டும் வளைந்து பெரியாறு. நடுவில், நீரில் மூழ்கி போன பட்டுப்போன மரங்கள். அந்த மரங்களின் நுனியில் அமர்ந்தும், சிறகுகளை விரித்து காற்று வாங்கியும் பறவைகள். ஆரண்ய நிவாசில் தங்கினால், சலுகையாக படகு சவாரி  ஒருமுறை இலவசம். நமக்கு தேவையான நேரத்தை, வரவேற்பு அலுவலகத்தில் குறிப்பிட்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

நாங்கள், இரண்டு முறை படகு சவாரியில் செல்லுமாறு பார்த்துக் கொண்டோம். ஒரு முறை காலை நேரத்தில் . காலை புலரும் நேரத்தில், படகில் சென்று ஆற்றையும், மெதுவாக விழிக்கும் காடுகளையும் காண்பது இனிமை யான அனுபவம். மனித நடமாட்ட தொல்லைகளின்றி ஆழ்ந்த‌ அமைதியில் இருக்கும் இயற்கையை காண்பது ஒரு தனி அனுபவ‌ம்.

காட்டுக்கு விலங்குகளை காண மட்டுமே வந்திருக்கிறோம் என்பது போல  பப்புவுக்கு பதிந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வேன். ஒரு இடத்துக்கு சென்றால், அந்த ஊரின்/சுற்றுப்புறங்களின் அனைத்துவித குணாதிசயங்களோடு  முழுமையாக  உணர வேண்டும், அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதை பயணங்களின் மூலமாக‌ தற்போது புரிந்துக் கொண்டிருக்கிறாள் என்றாலும், அதற்கு நமது சின்ன சின்ன நடவடிக்கைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்னொரு படகு சவாரி, மதியம் ஒரு இரண்டு/மூன்று மணி வாக்கில். விலங்குகள் நீர் குடிக்க மதிய நேரத்தில் வரும். அவற்றை காண வேண்டுமானால், உச்சி வெயில்  நேரம்தான் சரி. அப்படிதான், நாங்கள் ஒரு யானை குடும்பம் தன் குழந்தை குட்டிகளோடு நீந்தி ஆற்றை கடப்பதை வெகு அருகில் பார்த்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

இரண்டடுக்கு படகுகள்தான் எல்லாம். மேல்தளத்தில் அமர்ந்தால், முழு காட்டையும், ஏரி பரந்து விரிந்தி ருப்பதையும் காணலாம். விலங்குகள் தெரிகின்றது என்றாலே, எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு படகின் ஒரு இடத்தில் குவிந்துவிடுவதுதான் ஆபத்தானது. படகிலிருக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டத்தை கட்டுபடுத்துகின்றனர் என்றாலும், மக்களிடமும் இந்த விழிப்புணர்வு வரவேண்டும்.

விபத்துக்குப் பிறகு, அரசாங்கம் சில கெடுபிடிகளை விதித்துள்ளது. லைஃப் ஜாக்கெட் அணிவதை கட்டாயமாக்கியது, படகுகளில் குறிப்பிட்ட எண்ணி க்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றுவது என்று. என்றாலும், மக்கள், மான்களுக்கும் காட்டெருமை களுக்கும் படகிலிருந்தே அவ்வளவு குதூகலத்தை காட்டுவது சில சமயங்களில் பயத்தை ஊட்டுகிறது.

இவை தவிர, வனத்துறையினரால் நடத்தப்பெறும் சிலபல சாகச பயணங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு அனுமதியில்லை, பனிரெண்டு வயதுக்கு மேலிருந்தால் மட்டுமே அவர்களோடு செல்லலாம் என்பதால் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அதற்குட்பட்ட வயதினருக்கென்று செல்வதற்கு ஒரு 'Pug mark trail' - காட்டுவழி பயணம்  இருக்கிறது.

படகு சவாரிக்கு அடுத்து, எங்களை மிகவும்  கவர்ந்தது, அந்த நடைபயணம்தான். நுழைவுச் சீட்டுகள் விற்குமி டத்தில், இந்த ' Self guided trek 'க்கு நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றால், வனத்துறையின் அலுவலகம் வருகிறது. அங்கிருந்து கிட்டதட்ட இரண்டு முன்று கிமீ வரை காட்டுப்பாதையில் நடைபயணம்.

அடையாளத்துக்காக, பாதைகளில் ஆங்காங்கே கற்களை புதைத்திருக்கிறார்கள். அவற்றை தொடர்ந்து செல்ல வேண்டும். கற்கள் எல்லாவற்றிலும், பறவை மாதிரிகளை வரைந்தும், அந்டஹ் பறவைகளைப் பற்றிய விபரங்களையும் குழந்தைகளுக்கும் புரியும் விதமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

'அடர்காடு' என்று சொல்ல முடியாவிட்டாலும்,  வயதான மரங்களும், விழுதுகளுமாக அமைதி நிறைந்த இடமாக‌ த்தான் இருக்கிறது. விதவிதமான‌ பறவைகளும், அவற்றின் சப்தங்களும் நிறைந்து நமது நடையை வண்ணமயமாக்குகின்றன. சருகுகளின் மீது நாம் நடக்கும் சப்தம்தான் தொடர்ச்சியாக கேட்கிறது. (அவ்வப்போது, சில வாகனத்தின் சப்தங்களும்...ஏனெனில், இந்த பாதைக்கு சற்றுக்கீழேதான் சாலை..ஹிஹி)

வனத்தில், விழுந்து மட்கி கிடக்கும் மரங்களில் உருவங்களை தேடுவது நல்ல பொழுதுபோக்கு.

எங்கள் தேக்கடி பயண நினைவுகளில் முக்கியமானது, கதக்களி கண்டதுதான். நேரடியாக கதக்களையை, அதன் ஒப்பனைகளிலிருந்து ஆரம்பித்து முழு நிகழ்ச்சி வரை கண்டது அங்குதான். இரண்டு மூன்று இடங்களில் நிகழ்கிறது. காலையிலேயே நுழைவு சீட்டு வாங்கி, முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி, மாலை ஆறு மணிக்கு மேல்தான் நடக்கிறது.

எனவே, தங்குமிடத்தை அதற்கு ஏற்றாற்போல திட்டமிட்டுக்கொள்வது நல்லது. பயணிகளுக்காக என்பதால், கதக்களியின் முக்கிய அம்சங்களை, கண் அசைவுகளை எல்லாம் ஆங்கிலத்தில் விளக்குகிறார்கள். ராமாயணக் கதைகள்தான்,பாடலோடு ஆடி நடிப்பதைக் காண்பது நல்ல அனுபவம். நிகழ்ச்சி முடிந்ததும், அவர்களோடு படமெடுத்துக்கொள்வதை டோன்ட் மிஸ்.

அதேபோல், நாங்கள் தங்கியிருந்த இடத்திலும் மாலையில் 'மோகினியாட்ட'த்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கதக்களியும் மோகினியாட்டமும் எங்கள் தேக்கடி பயணத்தின் போனஸ்!

உணவு:

சிறிய ஊர் என்பதாலோ என்னவோ உணவுக்குதான் கொஞ்சம் திண்டாடினோம். உணவு நேரத்தில் கூட்டம் கூடிவிடுவதால் உணவகங்களில் காத்திருக்க நேர்ந்தது. அதோடு,  சாலையோர உணவகங்களை பப்புவுக்கு  அப்போது பழக்கவில்லை. அதனால் கூட இருக்கலாம். பரோட்டா, தோசை, க்ரீன் டீகளில் உயிர் வாழ்ந்த நினைவு.

ஷாப்பிங்:

தேக்கடியில் செய்யப்படும் ஷாப்பிங், மசாலாப் பொருட்களன்றி வேறென்ன?  நல்ல தரம். சரியான விலை.  முக்கியமாக, ஒரிஜினல் லெமன் கிராஸ் எண்ணெய். கொஞ்ச நாட்களுக்கு,வீட்டில்  க்ரீன் டீயிலிருந்து வீடு துடைப்பது வரை லெமன் க்ராஸ் எண்ணெய் வாசம்! நிறைய கடைகள் உண்டு. உள்ளூர் மக்கள் பரிந்துரைத்தது, 'லார்ட்ஸ் ஸ்பைஸ் ஷாப்'.

கிராம்பு, பட்டை, மற்றும் இன்ன பிற விதவிதமான மசாலாப் பொருட்கள் வாங்க நாடுவீட் 'லார்ட்ஸ் ஸ்பைஸ் ஷாப்'. கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி கடைசியாக இருக்கும் கடை.குழந்தைகளுக்கு, மசாலாப் பொருட்கள் பற்றி சொல்லிக்கொடுக்க சிறு சிறு பாக்கெட்டுகளில் மாதிரிக்கு அவற்றை போட்டு வைத்திருப்பார்கள். (பப்புவின் பள்ளிக்கு ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தோம். நல்ல வரவேற்பு.)

தேக்கடிக்குள்ளேயே, சென்று வர ஆட்டோக்கள் இ‍ருக்கின்றன. பேரம் பேச வேண்டிய அவசியமேற் படவில்லை.அல்லது எங்களைப் போல் நடைபயண விரும்பிகளுக்கு,  இருபுறமும் பெரிய மரங்களும் மூங்கில் புதர்களும‌டர்ந்த நீண்ட பாதை இருக்கிறது. பேசிக் கொண்டும், விளையாடிக்கொண்டும் நடக்க ஏற்ற பாதை.

காட்டுக்குள் ஒரு கண்ணகி கோயில் இருக்கிறது. ஒவ்வொரு ஏப்ரல் மாத பௌர்ணமியில் அந்த கோயிலை திறப்பார்கள். வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பொதுமக்களுக்கு அன்று மட்டுமே அனுமதி.

'மசாலா விளையும் தோட்டத்துக்கு (ஸ்பைஸ் ப்லான்டேஷன்' என்று  ஆட்டோக்காரர்கள்  மார்க்கெட்டிங் செய்வார்கள். அதோடு, யானையை குளிக்க வைக்க, அவற்றோடு விளையாட‌ என்றும் ஒரு இடம் இருக்கிறது. பெயர் நினைவிலில்லை.  அந்த இடத்தை பார்த்ததோடு சரி, யானையோடு 'பழக'ஆசையே வரவில்லை.

ஏனோ, யானை துன்புறுத்தப்படுவதாகவும், சுகாதாரமற்ற நீராக இருப்பதுபோல் தோன்றியதாலும்  அந்த இடத்திலிருந்து எஸ்கேப்! (இந்த 'யானை குளியல் பிசினெஸ்' பெரும்பாலும் வெளிநாட்டினரை குறி வைத்துதான் நடத்தப்படுகிறது போலும். விலைகளும் அவர்களுக்கேற்றவாறே இருந்தன.)

இலைகளை, முகர்ந்து வாசனை பார்த்து, வகைக் கொன்றாய் பறித்து அவளது ஜம்போ ஆக்டிவிட்டி புத்தகத்தில் பதப்படுத்தினோம். காய்ந்ததும்,  பப்பு ஒரு ஹெர்பேரியம் தயாரித்தாள். நினைத்தாற்போலிருந்து பப்பு அதனை அவ்வப்போது புரட்டுவாள்.   எங்கள் தேக்கடி பயண நினைவுகளின் வாசனை   அதிலிருந்து மிதந்து வரும். :‍)

2 comments:

minnal nagaraj said...

நெறைய டிப்ஸ் கொடுப்பீர்கள் என்று நினைத்தேன் .ஆரண்ய நிவாசுக்கு எங்கே எப்படி முன் பதிவு செய்வது எப்படி திட்டமிடுவது என்றெலாம் சொல்லியிருக்கலாம்

சந்தனமுல்லை said...

மின்னல் நாகராஜ்,
பாயிண்ட் போட்டு டிப்ஸ் கொடுக்காததற்கு மன்னிக்கவும்... அப்படி நிறைய டிப்ஸ், கூகுளில் தேடினாலே கிடைக்கின்றன. எழுதுவதென்றால் அவற்றையேதான் திரும்ப எழுதவேண்டும். மேலும் அவரவர் பயணத்தை அவரவர் கண்டடைவதுதானே சிறப்பாக இருக்கும். தேக்கடி பயண அனுபவங்கள் மூலம் எனக்கு கிடைத்த ஞானத்தை பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு! :-)