Monday, February 23, 2015

மித்ராவந்தி‍‍‍--GoneGirl--மௌனத்தின் குரல்

தூத்துக்குடியிலிருந்து வந்த பெரிம்மாவை, பிக்கப் செய்ய மின்ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தேன்.காலை நேரம். பூக்கடைகள், காய்கறி கடைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெறத்துவங்கியிருந்தன.  புத்தம் புதிதாக மலர்ந்த மலர்களையும், தொடுக்கப்பட்டிருந்த சரங்களையும் ரசித்தபடி ஒரு பூக்கடையின் ஓரம் ஒதுங்கினேன். பூக்கடைக்கு பின்னாலிருந்த டீக்கடையிலிருந்து வந்த ஒருவர்,

"என்னம்மா? திரும்பவும் ஒண்ணாயிட்டீங்க போல? நேத்து சமாதானமாயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்?"

அதற்கு, அந்த பூக்காரம்மா சொன்னது பதில் யதார்த்தமான பதில்தான். ஆனால், முகத்தில் அறைகிற யதார்த்தம்!

"ஆமா...என்ன பண்றது? சண்டையும், சந்தோஷமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒருநாள் முடியை பிடுச்சு இழுக்கறான்...அடுத்த நாள் ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசறான். அதுக்காக என்ன விவாகரத்தா நாம பண்ண முடியும்? ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ பண்ணிடறாங்க... பொண்டாட்டிய..அதல்லாம் பார்க்கும் போது....இப்படியே ஓட்ட வேண்டியதுதான்"

வரும்வழியிலெல்லாம், அந்த பெண்ணின் பதிலையே என் மனம்  திரும்ப திரும்ப சவைத்துக்கொண்டிருந்தது.

"வச்சி ஓட்டுயெம்மா"

கண்மணி குணசேகரனின் ஒரு கதை அது.  கோபக்கார கணவனுக்கு வாழ்க்கைப்படும் ஒரு  பெண். திருமணமாகி, மறுவீடாக  அம்மா வீட்டுக்கு வந்திருப்பாள். கிளம்ப தாமதமாகி விட, கோபத்தில் எல்லார் முன்னாடியும் திட்டிவிட்டு தனியாக கிளம்பி சென்றுவிடுவான் அவன். விதிர்விதிர்த்து போய் நிற்கும் மகளிடம், தாய் சொல்லும் வார்த்தைகள் இவை.

"வச்சி ஓட்டுயெம்மா"

ரொம்ப நாட்களுக்கு, என்னை தொந்திரவு செய்த வார்த்தைகள் அவை.

இந்த நாட்டில், நிறைய பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே ஆப்சன் அதுதான் இல்லையா?!

தில்லி 6யில் வரும் 'சசூரால் கெந்தா ஃபூல்' பாடலை கேட்கும் போதெல்லாம் சசி தேஷ்பாண்டே நாவல்தான் நினைவுக்கு வரும். ஒரு மருமகள், தன் புகுந்த வீட்டை ஒரு அடுக்கு சாமந்தியோடு ஒப்பிட்டு பாடும் நாட்டுப்புற பாடல் அது. சாமந்தியை பொதுவாக யாரும் பார்த்தவுடன் விரும்ப மாட்டார்கள்.

ஆனால், அதன் மணம் பழக பழக பூவை  விரும்பத் தொடங்கிவிடுவார்கள். அதன் ஒவ்வொரு மடல்களும் ஒவ்வொருவிதம். அதைப்போல், புகுந்த வீட்டிலும் பலவித மனிதர்கள்...ஒவ்வொரு வீட்டுக்கும் பலவித பக்கங்கள்...
இந்த சின்னஞ்சிறு பாடல் நமது இந்திய கூட்டுக் குடும்பங்களை, அதன் பல்வேறு முகங்களை, அதில் புதிதாக வந்து சேரும் பெண்ணின் நிலையை வெகு எளிதாக குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டிவிடும்.

அந்த பாடலை நினைவூட்டிய புத்தகம், இந்த புத்தக சந்தையில் வாங்கிய  மித்ராவந்தி. குறுநாவல்தான். ஒரு கூட்டு குடும்பதான் கதைக்களம். மூன்று மகன்கள். மருமகள்கள். மித்ராவந்தி, இளைய மருமகள். கொஞ்சம் குறும்புக்காரி. கள்ளம் கபடமின்றி தெருக்காரர்களிடம் முக்கியமாக ஆண்களோடு பழகுவது, குடும்பத்தினருக்கு சங்கடத்தை தருகிறது.

அதன்காரணமாக,அவ்வப்போது சண்டையும் முள்கிறது. நன்றாக உடுத்திக்கொள்கிறாள், அலங்கரித்துக் கொள்கிறாள், மற்றவர்கள் மீது தன் கவனம் திரும்பும்படி நடந்துக்கொள்கிறாள் என்று தன்மீது குவியும் குற்றச் சாட்டுகளுக்கு பதிலாக, 'தன் கணவன் தன்னை கண்டுக் கொள்வதில்லை' என்று குடும்பத்தினரிடம் கூறுகிறாள், மித்ராவந்தி. இதனால், மித்ராவந்தியின் கணவனுக்கே பூசை கிட்டுகிறது.

திருமணமாகி சென்றிருக்கும் அந்த வீட்டின் மகள், குழந்தைப்பேறுக்காக வீடு திரும்புகிறாள். இதனால், மித்ராவந்திக்கு தன் தாய்வீட்டுக்கு செல்ல அவகாசம் கிடைக்கிறது. கணவனோடு, தாய் வீட்டுக்கு செல்கிறாள் மித்ராவந்தி. கணவன் மீது அவளது தாய்க்கு இருக்கும் மோகத்தை கணநேரத்தில் கண்டுக்கொள்ளும் மித்ராவந்தி தன் வாழ்க்கையை எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை.

தன்னை மதிக்காத கணவனாக இருந்தாலும்,'அவன் தன்னை கவனிப்பதில்லை' என்று வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தாலும், கணவனை சாகுந்தலையாக மீட்டு வாழ்ந்து தீர்க்க வேண்டிய தலையெழுத்து இந்திய பெண்களுக்கு மட்டுமில்லை, அமெரிக்க பெண்களுக்கும் இருக்கிறது போலும் என்று உணர்த்தியது "Gone Girl" படம்.

அதே சமயம், எல்லாவற்றையும் ஏற்றுகொண்டு  மௌனத்தின் குரலாகவோ அல்லது சாமந்தி பூவின் மடல்களை உருவகப்படுத்திக் கொண்டுயோ வாழ்ந்து தீர்க்க தேவையில்லை. தன் கனவுகளை, ஆசைகளை, எதிர்காலத்தை, வாழ்க்கையை சிதைத்த கணவனை தண்டிக்கலாம், தப்பில்லை என்றும் இந்த படம் சொல்வதாகவும் கொள்ளலாம்.

நண்பர்களின் மூலமாக கிடைத்த காப்பிதான். பொதுவாக, தமிழ் மட்டும் குட்டீஸ் படங்களைத்தான் சேமிப்பேன். 'ஆங்கிலம்' என்ற போல்டருக்குள் நுழைந்தபோது தலைப்பு ஈர்க்க வாரயிறுதிக்காக சேமித்துக்கொண்டேன். நெட்டிலும் படத்தைப் பற்றி எந்த  விமர்சனத்தையும் வாசிக்க வில்லை. ஞாயிறு மதிய சோம்பலுக்கு ஏற்றது போல, மெதுவாகத்தான் ஆரம்பித்தது.  விளையாட்டு போல அந்த  'க்ளூ' குறிப்புகள் படத்தை சூடு பிடிக்க வைக்கிறது.

இறுதியில், இவை எல்லாமே ஏமி திட்டமிட்ட செய்ததுதான் என்பது தெரிய ஆரம்பிக்கும் நொடிதான் இருக்கிறதே!! ஏமி உயிரோடு இருப்பாள் என்று தோன்றாதபோது, அவள் காரில் பறக்கும் நொடி 'ஜிவ்' வென்றிருக்கிறது. திருமண வாழ்க்கையில் நம்பிக்கையை சிதைத்தற்கு, ஏமாற்றிய தற்கெல்லாம் பெரிய தண்டனைகள் கிடையாது. ஏன், தண்டனைகள் வேண்டாம், ஒரு குற்றச்சாட்டாகக் கூட வெளியில் சொல்லமுடியாது.

தண்டனைகள் கிடைக்க  வன்முறை நடந்திருக்க வேண்டும். அடி, உதை, சூடு என்று கண்ணில் படுமளவுக்கு வன்முறைகளுக்கான சான்றுகள் இருந்தாலொழிய, தண்டனைகள் கிடைப்பது வெகு அரிது. சசி தேஷ்பாண்டே, 'மௌனத்தின் குரல்' நாவல் மூலம் வெகு அழகாக உணர்த்தியிருப்பார்.

நாவலை வாசித்து இருவருடங்கள் இருக்கும். வாசித்த போதே, நாவலை மூடி வைத்ததும், அதில் ஒன்றியது போலிருந்த அல்லது  பாதித்த விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆனால், அதில் அவர் சொல்லி யிருக்கும் ஒவ்வொன்றும் கனமான விஷயங்கள். நாவலில் அவர்  சொல்லியிருக்கும் பிரச்சினைகளும், காரணங்களும் நமது அம்மாக்களின், அக்காக்களின், அண்ணிகளின் ஏன் தெரிந்த எல்லா பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை.

 இருந்தாலும், எந்த பெண்ணும் தன்னை ஏமாற்றியதற்காக , பொய் சொன்னதற்காகவோ, சீண்டப்பட்டதற்காகவோ அல்லது தன் விருப்பு வெறுப்புகளை கிஞ்சித்தும் மதிக்காகதற்காகவோ அல்லது தனது அடை யாளங்களைஅழித்ததற்காகவோ எந்த கணவனையும் தண்டித்துவிடவில்லைதானே!

எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக பிறந்த வீட்டில் வாழ்ந்திருந்தாலும், புகுந்த வீட்டிற்கு வந்தபின் தன்னை அவர்களுக்காக அல்லது திருமண வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக்கொண்டு 'வச்சி ஓட்டுவதுதானே'  யதார்த்தம். தனது சுயத்தை அழிப்பதை யாரும் கொலை என்று எண்ணுவதில்லையே!

அதிலிருந்து மாறுபட்டிருந்ததுதான், இந்த படம் எனை ஈர்த்தது போலும்!கதை அல்லது நாவல்தான் என்றாலும், இவ்வளவு நுட்பமாக, இழை கூட பிசகாமல் திட்டமிட்டு கணவனை சட்டத்தின் பிடிக்குள் மாட்டிவிட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. தனது அடையாளங்களை மறைத்துவிட்டு வேறு ஊரில் வாழும் ஏமி, பணம் பிடுங்கும் கும்பலிடம் மாட்டிக்கொண்டு அவளுக்கு ஏற்படும் கையறு நிலை!

உடனடியாக, அதிலிருந்து  மீண்டு  வந்து, அவள் மீது காதல் கொண்ட கொலீன்சோடு தொடர்பு கொள்கிறாள். அவனது தொல்லை அத்துமீறும்போது, அவனை போட்டுத்தள்ளவும் அவள் தயங்கவில்லை. அதுதான், ஏற்றுக் கொள்ள முடியாமல், 'அவள் என்ன, மனநோயாளியா' என்று எண்ண வைத்தது.  

ஆனால், அந்த பூக்கார அக்கா சொல்வது போல, 'ஒவ்வொரு குடும்பத்திலும் வெட்டு, குத்துன்னு என்னன்னவோ  பண்ணிடறாங்க... பொண்டாட்டிய... அதல்லாம் பார்க்கும் போது'....இதுவும் சரிதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். இறுதியில், 'அவள் திரும்பி வந்தால் போதும்' என்று அவளது கணவன் மீடியா மற்றும் மக்கள் அனு தாபத்துக்காக சொல்லும்போது, சரியாக அவனது கைகளில் வந்து விழுகிறாள். திருமண பந்தத்தை காப்பாற்றுகிறாள். 

படத்தில், மிகவும் பிடித்ததே, ஒவ்வொன்றையும் அவள் திட்டமிட்டு செய்வதும், அந்த புதிர்  பாணியிலான குறிப்புகளும், எந்த அழுத்தங்களுக்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ள போராடுவதும், அதனை மீட்டெடுப்பதும்தான். அமெரிக்காவிலாவது, மீடியாவில் தான் சொல்லிவிட்ட‌ வார்த்தைக்காக கட்டுப்படுகிறார்கள். இங்கோ சுனந்த புஷ்கரின் மரணதின் விடுகதையே இன்னும் அவிழ்க்கப்படவில்லை!

குறிப்பு:படத்தில் நெருக்கமான உடலுறவு காட்சிகளும், பகீர் கிளப்பும் கொலை மற்றும் ரத்தக்காட்சிகள் உண்டு.

No comments: