Showing posts with label அலுவலகம். Show all posts
Showing posts with label அலுவலகம். Show all posts

Saturday, February 28, 2015

திகட்ட திகட்ட தண்ணீர் - தென்காசி பயணம்

இதே போன்ற, ஒரு சனிக்கிழமை காலையில்தான், பொதிகை விரைவு ரயிலில் சென்று இறங்கினோம், தென்காசிக்கு. அலுவலக நண்பரின் திருமணம். கிட்டதட்ட, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே பார்த்திபன், டீமுக்கு சொல்லிவிட,  பேட்ச் பை பேட்சாக  முன்பதிவு செய்திருந்தார்கள்.  அதுவே, ஒரு தனி ப்ராஜக்ட் போன்றுதான் இருந்தது.

திருமணம் ஜனவரி 26. அதற்கு முன் இரண்டுதினங்கள்,  சரியாக வாரயிறுதி. குடும்பம்,குட்டி என்று  கிட்டதட்ட 35 பேர், எஸ் 6 பெட்டி வாசலில் குழுமியிருந்தோம். ஒருசிலருக்கு மட்டும் எஸ் 10. ஆரம்பத்தில், 'ஹாய் ஹலோ' என்று நலம் விசாரிப்புகள், பள்ளிக்கூட விபர பரிமாற்ற‌ங்கள்... 'என்ன சாப்பாடு', 'தண்ணி வாங்கணுமா' என்ற கவனிப்புகள்... ரயில் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி விலக ஆரம்பித்தது. 

அடுத்தநாள் காலையில், மாப்பிள்ளையும் குடும்பமும் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்க, தென்காசி எங்களை மொத்தமாக வாரி அள்ளிக்கொண்டது. அங்கு தங்கி யிருந்தது, மொத்தமே இரண்டு நாட்களே என்றாலும், ஏதோ பலகாலமாக அங்கேயே வாழ்ந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. கல்லூரிகாலத்துக்கே சென்று மீண்டு வந்தது போல! நண்பர்களோடு செல்லும் பயணத்துக் கெல்லாம் இந்த உணர்வு வந்துவிடுவது,ஆச்சரியம்தான். இதே போன்று, இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷின் திருமணத்துக்காக ராய்ச்சூர் மற்றும் ஹைதராபாத் சென்றது மனதிலேயே நிற்கிறது!

கைக்குழந்தை, குட்டிகளோடு இருந்தவர்கள், சற்று ஓய்வெடுக்க, தலை யணைக்கும், பாபநாசத்துக்கும் செல்ல ஒரு குழு கிளம்பியது. அந்த 'அடங்காத குழு'வில் நானும் பப்புவும் இருந்தோமென்று சொல்லவும் வேண்டுமா? 'சரி, எப்படின்னாலும் குளிக்கதானே போறோம், எதுக்கு ரூமிலே குளிச்சு, தண்ணியை வேற வீணாக்கிக்கிட்டு' என்று மாற்றுடையை கையில் சுருட்டிக்கொண்டோம்.

'குளிச்சுட்டு வந்தா பசிக்கும், அதனால, அதுக்கு முன்னாடி லைட்டா சாப்பிடலாம்'   என்று ஒருவருக்கு பல்பு எரிய, மொத்த குழுவுக்கும் அதே பல்பு எரிந்தது. ஓட்டுநரிடம் சொன்னதும், 'சூப்பர் ஓட்டல் ஒன்னு இருக்குங்க...போற வழியிலே, விட்டீங்கன்னு நாம போற வழியிலே வேற எங்கேயும் இல்லே' என்று ஒரு இடத்தில் நிறுத்தினார்.

பொட்டல்புதூர். வெஜ், நான் வெஜ் உணவகம். மட்டன்/சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், சுக்கா, மீன் வறுவல் ஆம்லேட், ஃபுல் மீல்ஸ், பரோட்டா,தயிர்,மோர்.....உணவு ஒரு பக்கம் என்றால், 'பரோட்டா வேணுமா, கொத்துபரோட்டா வேணுமா? இன்னொரு ஆம்லேட்? பாப்பாக்கு பிரியாணி?' என்று அவர்களது உபசரிப்பு மறுபக்கம்....ஆகா! என்ன ஒரு விருந்தோம்பல்! அங்கேயே சில ஆர்வக்கோளாறுகள் உணவை படமெடுக்க துவங்க, அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மனமும், வயிறும் குளிர்ந்து, அவ்விடம் நீங்கி, சிலபல வாழைப்பழங்கள், புளிப்பு மிட்டாய்கள், லாலிபாப் சகிதம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சென்ற இடம், தலையணை.


 
'இது அருவியல்ல, ஆறு மற்றும் அணை' என்பதை உணர்ந்துக்கொண்ட சில ஜீவன்கள், ' தண்ணின்னா கொட்டணும்...நேரா அருவிக்குத்தான்..எட்றா வண்டிய!' என்று அருவாள் பார்ட்டிகளாக மாறத்துவங்கினர். ஓட்டுநரது, 'இதுக்குமேலேல்லாம் இந்த வண்டி போகாதுங்க என்ற பருப்பெல்லாம் வேகவில்லை. அடுத்த ஸ்டாப் பாபநாசம்(அகஸ்தியர்?) அருவி. கொட்டும் தண்ணீரை பார்த்ததும், கர்ணனின் கவசகுண்டலம் போல கழுத்தில் மாட்டியிருந்த டிஎஸ்எல்ஆர் காமிராவை கழற்றி பெஞ்சின் மீது வைத்துவிட்டு, 'மச்சி டீ சொல்லேன்' ரேஞ்சின் 'மச்சி நீ பார்த்துக்கோ....தோ வந்துர்றேன்' என்று   உடமைகளை துறந்து அருவியை நோக்கி பாய்ந்தனர். நாங்கள், பெண்கள் பக்கம் ஒதுங்கினோம்.

 
 
அது எப்படிதான் அருவிகளுக்கென்று ஒரு தனி கடிகாரம்  இருக்கிறதோ தெரியவில்லை.இன்டர்ஸ்டெல்லரின் மில்லர் ப்ளானட் போல!  அருவிக்குள்  இருக்கும்போது என்னவோ, இப்போதுதான் வந்ததுபோல தோன்றுகிறது.   வெளியேறி சென்றபோதுதான், ஒன்றரைமணி நேரம் ஆடியிருக்கிறோம் என்பதே புரிகிறது.  'ஆத்திலேயும், தண்ணியிலேதானே ஆடப்போறோம்' என்று உடைமாற்ற சோம்பல்பட்டு, ஈரத்துணிகளோடு அடுத்த‌ ஸ்டாப்.... தலையணை! ஆகா...தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்! திகட்ட திகட்ட தண்ணீர்!

கொட்டும் அருவியிலேயே மனமும் உடலும் குளிர்ந்து போனது.  தலையணையின் தளும்பிப்பாயும் தண்ணீரைப் பார்த்ததுமே, எல்லா கவலைகளும், பாரங்களும் கரைந்துபோயின. எருமை மாடுகள் போல, கிட்டதட்ட இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஊறிக்கிடந்தோம்.  நிமிர்ந்து பார்த்தால், பின்னால் பசுமையான மலைமுகடுகள். அதன் உச்சியில் சூரியன். மலையின் அடிவாரத்தில் அணைத்தண்ணீர்...நிரம்பிய நீர், சுவரைத்தாண்டி அருவியாக கொட்டும் நீரின் சத்தம்...கவலைகளை மறந்து சிரித்த கணங்கள்  அவை!

 

அணையின் தடுப்பை  மீறிப்பாயும் கட்டுக்கடங்காத நீரின் அழுத்தம் நம்மை அழுத்த, குதூகலத்துடன் கத்திக்கொண்டே, பிடிப்புக்காக  நீருக்குள்ளேயே  படிக்கட்டுகளை தேடிப் பிடித்துக்கொண்டு நின்றபோது....மனதின் எல்லா கசடுகளும், கவலைகளும், எதிர்கால குழப்பங்களும் காணாமலேபோனது!
அணையிலிருந்து நீர் தளும்பி வழியும் சுவரில் தலையை குப்புற வைத்து, தண்ணீர் நம் தலைவழியே கடந்து செல்லும்போது உண்டாகும் ஒலியில் மூச்சு முட்டிப்போனோம்.

தளும்பி வழியும் தண்ணீரை, எங்கள் மேலேயே அங்கியை போல் வழிய விட்டுக்கொண்டோம்.  சூரியன் மறையும் வரை அலுக்காமல் அங்கேயே ஆட்டம்.... செல்ஃபிகள்... ஃபோட்டோக்கள்...பப்புவுக்கு இனிய அனுபவம்.ஆரம்பத்தில் பயந்தாலும், பின்னர் தண்ணீரைவிட்டு வரவே இல்லை. ஜூரம் வந்து அடுத்தநாள், அத்திரி மலையேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு.

ஈர உடையுடன், நேராக பாபநாச சுவாமிகள் கோயில். முதன்முறையாக, கோயிலினுள் தமிழப்பாடல்கள் பாடி தீபாராதனை காட்ட, அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஆறு மணி பூஜையோ என்னவோ சொன்னார்கள்....ஒருவர் தலைமுதல் தோள்பட்டை வரை ஒரே ருத்ராட்சை மாலையாக போட்டுக்கொண்டு ஒவ்வொரு சன்னதியாக் அமர்ந்து தமிழில் பாடல்கள்(குனித்த புருவமும்?) பாட, தீபாராதனை நடக்கிறது.


 
இருட்டதுவங்க, மீண்டும் விடுதிக்கு பயணம். அங்கே ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், உடனே தயாராக, அடுத்து சென்றது, காசி விஸ்வநாதர் கோயில். கோபுரம் விண்ணை முட்டி நிற்க, உடனே செல்ஃபிக்கள்... செல்ஃபிக்கள் பின்னர் குருப்பிகளாக....

கோயிலில், பக்திமான்கள் பூஜைக்கு செல்ல, நானும் பப்புவும் சங்கீதத் தூண்களை ஆராயத்துவங்கினோம். எங்கள் ஆர்வத்தால் கவரப்பெற்ற தீபங்கள் விற்பவர், எங்களை விசாரித்தார்.  'இந்த ஊர்க்காரங்களுக்கே தெரியாது இதெல்லாம்' என்று சொன்னப்படி தூண்களிலிருந்து ஸ்வரங்களை வரவழைத்தார். இந்த கோயிலின் முகப்பிலிருக்கும், ஆளுயர சிலைகள் அற்புதம்.

புளியோதரையும், லட்டுவும், அதிரசமும் வாங்கி அங்கேயே குழுவாக அமர்ந்து சிற்றுண்டியை முடித்தோம். வெளியில் வந்து அடுத்தநாள் மலையேற்றத்துக்காக பழங்களை வாங்கினோம். ஒரு மூலையில் மறைந்திருந்த 'லாலா புராதான மிட்டாய்க்கடை'யில் அல்வாவை காக்கைகள் போல பகிர்ந்துண்டு ருசித்தோம்.  அருகிலிருந்த உணவகத்தில் நுழைந்து இட்லியும், பரோட்டாவும், பனங்கல்கண்டு போட்ட‌ மிளகுப்பாலும் அருந்தினோம்.

ஏற்கெனவே, அத்திரிக்கு இரண்டுமுறை சென்று வந்திருந்த ரகுவை இப்போது 'குரு'வாக்கியிருந்தோம். அவரும், குருவாகவே மாறி,  மலையேற வேண்டுமானால் ஆறு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தார். 'தொல்லை விட்டுச்சுன்னு எங்களை விட்டுட்டு போய்டாதீங்கய்யா...அஞ்சு மணிக்கு எழுந்ததும், மிஸ்ட் கால் கொடுத்து எங்களையும் எழுப்பி விட்டுடுங்க' என்று பொறுப்பளித்துவிட்டு உறங்கினோம்.

கனவிலெல்லாம், தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.... மேலே மேலே வந்து அழுத்தியது! முதுகில், தோள்பட்டையிலெல்லாம் படபடவென்றும் தொப் தொப்பென்றும் விழுந்தது.உறக்கத்திலேயே அருவி மாற்றி அருவியாக காடுகளுக்குள் நாங்களும் பயணித்தோம். அணையின் கற்படிக்கட்டுகளில் , நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சடைத்துப்போய் 'ஹோ' வென கத்திக்கொண்டிருந்தோம். நீரைக் கிழித்து, மாலையாக இருதோள் களிலும் போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம்.

 
 
குறிப்பு: முதல்நாள் குற்றாலம், அடுத்தநாள் முஸ்தபா இல்லத்திருமணம் என்றுதான் திட்டம். பாதிவழியிலேயே,  மலையேறுவதற்கான திடீர் குழு உருவாகி, எங்களையும் இழுத்துப்போட்டுக்கொண்ட‌தில், தனியாக வர இயலவில்லை. தம்பி முஸ்தபா மன்னிக்கவும். ஆனாலும், உங்கள் பெருந்தன்மை ம்ஹூம்!! சான்சே இல்லை! வந்திருந்தால், ப்ளஸ் மக்களையும் சந்தித்திருக்கலாம்.

தங்கள் தம்பிக்கும், அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துகள்! அம்பா சமுத்திரத்தின் தேவதையைக் காண இன்னொருமுறை வருகிறோம் :‍)

Wednesday, October 20, 2010

X X & X Y in IT

"இன்ட்ர்வுயூவிலே ஒரே மாதிரி - ஈக்வல் டாலன்டோட ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருந்தா, நான், பையனுக்குத்தான் ப்ரெஃபரன்ஸ் கொடுப்பேன்ப்பா" (ஓ நோ..அப்படி பாக்காதீங்க...நான் இந்தக் டாபிக்க இழுக்கலை...அதுவா வந்து விழுந்துச்சு.. அன்னைக்கு, நான் லிசனிங் மோடுலேதான் இருந்தேன்..நம்புங்க...ப்லீஸ்!)

ஏன்?

"ஏன்னா..சிம்பிள், பையனுக்கு வேலை கொடுத்தா ஒரு பேமிலியே பிழைக்கும். பொண்ணுக்கு வேலை கொடுத்தா அது எக்ஸ்ட்ரா மணிதான்."

கடந்த வாரத்தில், பழைய அலுவலகத்தில் வேலை செய்த‌ நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஒன்றாக ஒரே நாளில் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவர்கள். அந்த அலுவலகத்தை விட்டு வந்துவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். ஆண்களும் பெண்களுமாக ஒரு ஆறேழு பேர் இருந்தோம். மெதுவாக பேச்சு வேலை, வீடு,குடும்பம், குழந்தைகள்,சினிமா என்று சுழன்று அப்புறம் கழுதை கெட்டால் குட்டி சுவராக அலுவலகம் மற்றும் வேலையில் வந்து நின்றது. அப்போது வந்து விழுந்ததுதான், இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் .


(இன்டர்வியூவிலே பொண்ணுங்களுக்குத்தான் எப்போவும் வேலை கொடுப்பாங்கன்னு பொருமும் கோஷ்டி இல்லையென்றாலும்) Progressive minded என்று சொல்லிக்கொள்ளும் இவன் மட்டுமில்லை... இன்னும் சிலரும் இதே கருத்தை பிரதிபலிப்பதை கண்டிருக்கிறேன். ஆபத்தான கருத்துதான் என்றாலும் கேட்டுக்கேட்டு ஷாக்கிங் எல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனைக்கும், அங்கிருந்த எங்கள் நண்பர்களில் சிலர்( பெண்கள்) குடும்பப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு தனியாக வாழ்பவர்கள்.


இந்த எண்ணம் தோன்ற என்ன அடிப்படைக் காரணம்?


திருமணமாகிவிட்டால் பெண்ணுக்கு தனது குடும்பத்தை அதாவது தனது தாய் தந்தையரை பேண வேண்டிய அவசியம் இல்லை. திருமணமான பெண் தனது கணவனைச் சார்ந்தவள். அதனால், அவளுக்கு முதல் கடமை குடும்பம்தான், கேரியர் என்பது இரண்டாம் பட்சமே என்ற எண்ணம்தான். சமூகமே ஒட்டு மொத்தமாக இப்போக்குடையதாக இருக்கையில் ஆணையோ பெண்ணையோ குறை சொல்வதில் அர்த்தமில்லை.

25 வயதுடைய ஒரு பெண்ணும் ஆணும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகவே, ஒரு ஃப்ரெஷரையோ அல்லது இருவருடங்கள் அனுபவங்கள் இருப்பவரையோ வேலைக்கு எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், 25 அல்லது 27 வயதுக்கு மேற்பட்ட மணமாகாத பெண்ணை (அவர் இனி ரிசோர்ஸ் எனப்படுவார்) வேலைக்கு எடுப்பதில் ஒரு தயக்கம் இருப்பதை எந்த மேனேஜருமே ஒப்புக்கொள்வார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, 'மைன்ஸ்வீப்பர் கேமில் வெடிக்கும் குண்டுபோல' அந்த ரிசோர்ஸ் எப்போது வேண்டுமானாலும் மணமாகிச் செல்லலாம். அதன்பின், அவர் அதே ஊரில் அதே கம்பெனியில் தொடர்வாரா என்பது சந்தேகமே. அதாவது திருமணமா கேரியரா என்று வரும்போது ரிசோர்ஸ்கள் பெரிதும் திருமணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மணமகன் எந்த ஊரோ எந்த நாடோ அங்கு செல்ல வேண்டியது அவரது கடமை. ஒருவேளை அதே கம்பெனியில் நீடித்தாலும் அந்த ரிசோர்ஸை வைத்து ப்ராஜக்ட் திட்டங்களை தீட்டுமுன் இன்னொரு ரிஸ்க்கையும் 'ஃபோர்ஸீ' செய்யவேண்டும். மருத்துவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டபின் பெற்றோருக்கு அடுத்து செய்தியை பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மேனேஜரிடம் - ப்ராஜக்ட் திட்டங்கள்! பிரசவ கால விடுப்போடு, அந்த ரிசோர்ஸை குறைந்தது ஆறுமாதங்களுக்கு நம்ப முடியாது. அதனால், அவரை வைத்து பிளான் செய்வது கடினமானது. இப்போது நான் சொன்னவை எல்லாம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பொதுவாக அநேக கம்பெனிகளில் நடைமுறையில் உள்ளவையே. இதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, கர்ப்பமாக இருக்கும் பெண் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.


வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால், ஓரளவிற்கு பெண்களுக்கு வசதியாக இருந்தாலும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், எல்லா கம்பெனிகளிலும் சாத்தியமாக இருக்காது. ‍அலுவலகத்திலும், வீட்டிலும். அதனை உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். இதற்கு நீங்கள் ஒரு மேனேஜராகத்தான் இருக்
வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.




மெட்டர்னிட்டி லீவு (டென்மார்க்கில் ஆறு மாதங்களுக்கு மேல்!) முடிந்தபின் அவர்க்ள் வேலையில் தொடர்வதும் சந்தேகத்துக்குரியதே. குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லையெனில் முதலில் பலியாவது பெண்களின் கேரியர்தான். பெண்ணின் அம்மா அப்பா வீட்டோடு வந்து தங்க மாட்டார்கள். அவர்களுக்கோ அது அவமானம். இல்லாவிட்டால், அதற்குள்ளாக ஏதாவது சண்டை வந்து பெண்ணின் பெற்றோர் வந்தாலும் தங்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். இல்லையேல், பையனின் பெற்றோரோடு பெண்ணிற்கும் உரசல்கள் வந்து சேர்ந்திருக்கும். இல்லை, இருபக்கத்து பெற்றோருக்கும் உதவ முடியாத ப்ணிச்சூழல்....எது எப்படியோ, குழந்தை வந்துவிட்டால் இந்த மாதிரி நேரத்தில் பெரிதும் பலியாவது பெண்ணின் கேரியர்தான்.
இதைத்தாண்டி வேலைக்கு வரும் ரிசோர்ஸ்கள் பெரும்பாலும் டெஸ்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இப்போது அவர்களது முக்கியம் நேரமும், வேலையில் நீடித்திருக்க வேண்டிய தேவையும்தானே தவிர கேரியர் இரண்டாம் பட்சம்தான். இதற்கு நடுவில், உடல்நலம் சரியில்லை அல்லது தடுப்பூசி போட வேண்டியது, குழந்தையை ப் பார்த்துக்கொள்ளும் ஆயாம்மா எடுக்கும் எதிர்பாரா லீவுகள்....இன்னபிறவெல்லாம் சமாளித்து டெலிவரபிள்ஸ் காட்ட வேண்டும்.

இதில், ஓடியிருக்கும் ஒருவருட சைக்கிளில் ரிசோர்ஸ்களின் மூன்று மாத பிரசவ விடுப்புகள் போக, மேலதிக‌ லீவு ஏதேனும் எடுத்திருந்தால் அது கேரியர் வளர்ச்சியை கண்டிப்பாக பாதிக்கும். ஏனெனில், பிரமோஷன்களுக்கான தகுதியை இழந்திருப்பார்கள். ஒரு மாத ட்ரிப்கள் அல்லது கஸ்டமர் சைட் விசிட் போன்றவற்றில் டைனமிக்காக முன்பு போல இருக்க முடியாது. ஏனெனில், குடும்பச்சுமையை சுமந்தாக கட்டாயத்தில் இருக்கும் ரிசோர்ஸ்கள் 'வேலை' என்பது இருந்தால் போதும், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். எதைக்கொடுத்தாலும் "வேல்யூ ஆடட்" என்பதைவிட, கொடுத்த வேலையைச் செய்வது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பார்கள்.


இதே நிலைமை, ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு - சொல்லப்போனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு கூட இருக்காது. "உத்தியோகம் புருஷ லட்சணம்". மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் கூட்டமும் இதில் இருக்கும். இருவருமே வெளிநாடுகளில் வேலை செய்தால், அங்கு உதவிக்கு யாராவது ஒருவருடைய பெற்றோர் கண்டிப்பாக கூட இருப்பார்கள். அப்படி இல்லா விட்டால், மனைவி வீட்டிலிருப்பார். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு சென்றபின், அங்கு வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்வதை ஆண்கள் (விதிவிலக்குகள் இருந்தாலும்) பொருட்டாக கருதுவதில்லை. (அதே ஆண்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் நடந்துக்கொள்ளும் முறையே வேறு. )

இப்போது, அந்த ஆணிடம் வருவோம். சேர்ந்த ஆறுமாதங்களிலோ ஒரு வருடத்திலோ (தானாக வராவிட்டாலும், சண்டையிட்டாவது) லாங்டெர்ம் அசைன்மென்டாக அவர் ஆன்சைட் சென்றிருக்கலாம். அவருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்திருந்தாலும் எந்த பெரிய மாறுதலும் இருக்காது. திருமணமானதிற்கு ஒரு ட்ரீட் மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு ட்ரீட் என்ற அளவில் முடிந்து போயிருக்கும். பிரசவ விடுப்பாக மூன்று நாட்கள். சமயங்களில் ஊருக்கு போய்வர ஒரு வாரமாக நீடிக்கப்பட்டிருக்கலாம்.அவர் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கூட ஆன்சைட் செல்லலாம். நைட் கால்கள் நிமித்தம் தாமதமாக வீட்டிற்கு வரலாம். கேரியரை மாற்ற வேண்டிய, என்ன வருகிறதோ அதை எடுத்துக்கொள் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். முக்கியமாக, No post-partum depressions! வீட்டிலும் வெளியிலுமாக சூழல்களை சமாளித்து அப்ரைசல் லெட்டர் வாங்கும்போது "முணுக்கென்று" கண்களில் தளும்பி நிற்க வேண்டிய நிலையும் இல்லை. முக்கியமாக எந்த பிரமோஷன்களையும் இழந்திருக்க மாட்டார். ரோல் மாற்றங்களில் சில படிகள் முன்னேறியும் இருக்கலாம்.


பொதுவாகவே, திருமணமாகி குழந்தைகளோடு பள்ளியில் செட்டிலாகி விட்ட பெண்கள் விரைவில் மாற்றங்களை விரும்ப மாட்டார்கள் என்ற எண்ணம் வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளூர உண்டு. ஏனெனில், ஒரு .5 புள்ளிகள் அப்ரைசல் குறைந்தாலே பேப்பர் போடும் ஆண்கள் உண்டு. ஆனால், (.5 என்ன 1 புள்ளி குறைந்தாலும் ) பெண்களுக்கோ, "அடுத்ததுலே பார்த்துக்கலாம்ப்பா, சென்னையிலே ஆப்சன்ஸும் கம்மி" என்றோ அல்லது "இதுதான் வீட்டுப் பக்கத்துலே இருக்கு, சாயங்காலம் சீக்கிரம் போய் தைகளை கூட்டிட்டு வரலாம்" என்பதோதான் முடிவாக இருக்கும்.


இதையெல்லாம் சமாளித்து ப்ராஜக்ட் லீடாகவோ மேனேஜராக வந்துவிடலாம். ஆக்சலரேட்டட் பிரமோஷன்கள் வாங்கி உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால், எத்தனை பேர் விபிகளாக ஜி எம்களாக, சீஇஓ ‍களாக‌ உயர்ந்திருக்கிறார்கள்?
உயர முடிந்திருக்கிறது? இறக்கைகள் பறக்க எத்தனித்தாலும் கால்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு குண்டு கீழ்நோக்கியல்லவா இழுக்கிறது?

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். ஒரே நிலையில் இருக்கும் ஆண், பெண் இருவரில் ஆணுக்குத்தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று நினைப்பது சரியானதா? ஒரு கட்டத்தில், பார்த்தபோது என்னை சுற்றியிருந்த எனது நெருக்கமான நண்பர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்திருந்தனர். பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட செல்வியும் அவளது கணவரும் வேலை செய்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். (So near, yet, so far.) கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்ட‌ அப்பாவுக்காக பர்சனல் லோன் வாங்கி தனது வருமானத்தில் அதை அடைத்து, தங்கையை படிக்க வைத்து, அம்மாவையும் கவனித்துகொண்ட லீமாவை பார்த்திருக்கிறேன். 'ஏடிஎம் கார்டை கொடுக்கவில்லையென்றால் உன் கணவனோடு உன்னை வாழவிடுகிறேனா பார்' என்று மகனை தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றபின், இருவருடங்கள் தனியாக வாழ்ந்த சுபா....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

படிக்கும் அனைத்து பெண்களுமே வேலைக்கு வந்துவிடுவதில்லை. ஐடி - யால், முன்பைவிட பெண்கள் அதிகமாக வேலைக்கு வருகிறார்கள். அதுவும் கூட பெண்கள் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல...ஆள் பற்றாக்குறையால்தான் என்பதை மறுக்க முடியாது! எத்தனை அலுவலகத்தில் பாதிக்குப் பாதி பெண்கள் இருக்கிறார்க்ள்? அதிகபட்சம், 35 முதல் 40 சதவீத பெண்களே இருப்பார்கள். கல்யாண செக்போஸ்ட், குழந்தை செக்போஸ்ட் தாண்டி வருபவர்கள் அவர்களிலும் குறைவுதான். (புள்ளிவிவரங்கள் கேட்காதீர்கள்‍, எல்லாம் கண்ட, கேட்ட அனுபவம்தான்)


எனவே, வேலைக்கு வரும் பெண்கள் எல்லோரும் ஸ்பாவுக்கும், ஷாப்பிங் போவதற்கும் மட்டுமே சம்பாரிப்பவர்கள் இல்லை. ("உனக்கென்னப்பா, டபுள் இன்கம், ஹைக் வரலன்னாலும் பரவால்ல, நீ சமாளிச்சுப்ப, எங்கள மாதிரியா" - ‍ கணவனும் மனைவியும் வேலை செய்பவர்களாக இருந்தால், இந்த டயலாக் கண்டிப்பாக சொல்லப்படும், கிண்டலுக்காகவேனும்.)


கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.


அடுத்த முறை இன்டர்வியூவில் ஒரே தகுதிகள் கொண்ட ஆணையும் பெண்ணையும் சந்தித்தால் மேலே உள்ள வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்!

பி.கு : அமுதா,பூங்குழலி, லஷ்மி, தீபா,ஹூசைனம்மா : ஹையயோ...ஓடாதீங்க...
No, you are not tagged, Juz share your thoughts - இங்கேயாவது இல்லே உங்க பதிவுலேயாவது!

Wednesday, October 06, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

ஆண்டுவிழா அனுபவங்கள் பற்றி தீபா அழைத்திருந்த தொடர்இடுகை. இன்னைக்கு ஏதாவது ஒரு போஸ்ட் போடணுமே என்று எண்ணியபோது இது நினைவுக்கு வந்தது. ஸ்டார்ட் மீசிக்.....

ஒரே ஒரு முறை வெல்கம் டான்ஸில் சேர்ந்து பயிற்சி எல்லாம் பெற்றுக்கொண்டு ஜூட் விட்டு ஊருக்குப் போனதோடு எனது கலைச்சேவைக்கு ஒரு shift+del. ஐந்தாம் வகுப்பு வரை விளையாட்டு விழாவில் மட்டுமே - லெமன் & ஸ்பூன், சாக்கு ரேஸ், ரன்னிங் ரேஸ்....

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம். ஆண்டுவிழா பற்றி அறிவிப்பு வந்ததும், கலையார்வம் மிக்க டான்ஸ் புலிகளான ராதாவும், சந்தியாவும் கலா மாஸ்டர் அவதாரம் எடுத்தனர். தகுதியெல்லாம் அதிகமில்லை ஜெண்டில்வுமன் - ஸ்கூல் விட்டதும் காம்ப்ளான் குடித்துவிட்டு பரதநாட்டியம் க்ளாஸுக்கு போயிருந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். பாரதியார் பாட்டு - கண்ணன் பற்றி வர்ணனை வரும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் இந்த நுண்கலைக்களுக்கும் - ஆடல், பாடல், வரைதல் போன்ற பொறுமை மிகவும் தேவைப்படும் மென்கலைகளுக்கு எவரெஸ்டுக்கும் ஏலகிரிக்குமான பொருத்தம்.(எவ்ளோ நாளைக்குத்தான் மலைக்கும் மடுவுக்கும்னே சொல்றது?!)வீட்டிலோ ’டான்ஸ்/பாட்டுன்னு இண்ட்ரெஸ்ட் வந்துடுச்சுன்னா படிப்புலே கவனம் போயிடும்’ (ஏற்கெனவே டன் கணக்கிலே இருக்கிறமாதிரி) என்று ஒரு மித். ’படிக்கிற பிள்ளையாக லட்சணமா இரு’ -க்கு அடங்கி ஊக்கமுடைமையை (?), எப்படி கேட்டாலும் - நடுவில் இருக்கும் வார்த்தையை சொன்னால்கூட அந்த குறளை ஒப்பிக்கிறமாதிரி சொம்படித்திருந்தேன். ரவி செம டஃப் ஃபைட் கொடுத்தாலும் முதலாவதாக வந்துவிட்டேன்.

அப்புறமென்ன....ஆண்டுவிழாவில் பரிசு வாங்க போகும் ஆர்வக்குட்டியாகிட்டேன்.பெரிம்மாகிட்டே சொல்லி புது நெய்ல்பாலிஷ் எல்லாம் போட்டு கையிலே மருதாணி வைச்சு...பின்னே சும்மாவா...பரிசு வாங்கப்போற கைகளாச்சே! ஆண்டுவிழா அன்னைக்கு பெரிம்மா ஊரில் இல்லை. பெரிம்மா, அவங்க இல்லாம போகவேணாம்னு சொல்லியிருந்தாங்க. சொன்ன பேச்சு கேக்காம, நானும் சங்கீதாவும் போனோம். பரிசு வாங்கப்போறவங்களை எல்லாம் வரிசையா ஒரு பெஞ்ச்லே உட்கார சொல்லி, பில்டப்லாம் ‘எந்திரன் பிரமோ’ மாதிரி இருந்துச்சு. ஆனா, லேட்டாகிடுச்சுன்னு 10வது, +1,+2 பசங்களுக்கு மட்டும் கொடுத்துட்டு கல்ச்சுரல்ஸ் ஆரம்பிச்சுட்டாங்க. எடிசன் ஏண்டா பல்பை கண்டுபிடிச்சார்ன்னு இருந்துச்சு!

அப்புறம் ஏழாவதுலே கட்டுரை போட்டி. ஏதோ ஒரு சமூக தலைப்பு. ஞாபகம் இல்லை. புனித பாண்டியன் அண்ணா எடுத்துட்டு வந்திருந்த ஒரு புக் வீட்டுலே இருந்துச்சு. அதுலே லட்டு மாதிரி அம்பேத்கர் பத்தி ஒரு கட்டுரை. அப்படியே பத்தி மாறாம அதே சேம் சொம்பு.அப்படியே பிக்கப் ஆகி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் போட்டின்னா, “கட்டதுர, எட்றா வண்டிய’ லெவலுக்கு வந்துட்டேன். (சொல்ல மறந்த கதை : பாட்டு போட்டிக்கு பேரைக் கொடுத்துட்டு லீவு போட்டது!) அப்புறம், வேணாம் வேணாம்னு சொன்னாலும் இலக்கிய மன்ற துணைச் செயலாளர், இலக்கிய மன்ற செயலாளர் பதவியிலே என்னை உட்கார வைத்து மக்கள் அழகு பார்த்தாங்க. என்ன வேலைன்னா, ஆண்டுவிழாவிலே ஒரு அறிக்கையை வாசிக்கணும். சிம்பிள்.

கல்லூரிலே, ஆண்டுவிழான்னா மேடைக்கு கீழேயோ இல்லேயோ கூட்டத்துலே கடைசியிலோ கும்பல் சேர்ந்துக்கிட்டு சவுண்ட் விடணும். மெல்லிசைன்னு பாடறவங்களை ஓட ஓட விரட்டணும்... என்னன்னா, மாட்டிக்காம கலாட்டா பண்ணனும்...( இண்டர்னல்ஸ்ன்னு ஒரு செக் பாயிண்ட் இருக்கே!)

பள்ளிக்கூடம், கல்லூரிக்கெல்லாம் அப்புறம், ஒரே மாதிரியாகிட்ட வாழ்க்கைக்கு நடுலே வர்ற ஒரே பாலைவனச் சோலை அலுவலக ஆண்டுவிழா. இந்த வருஷம் ராம்ப் வாக். ரொம்ப வேலையெல்லாம் இல்லை. பயிற்சியும் தேவை இல்லை. சும்மா நடந்து வந்தா போதும். அது அழகி போட்டியில்லை. ஸ்கூல்லே நடக்கிற ஃபேன்சி பரேட் மாதிரிதான். அதுவும் ஆள் பற்றாக்குறை வேற.

ஒரு கான்செப்டை அடிப்படையா வைச்சு 4 பெண்கள், 5 ஆண்கள் சேர்ந்து பண்ணினோம். இயற்கையின் படைப்புகளையும், எங்க கம்பெனியின் ட்ரேட்மார்க் கலரையும் இணைச்சு உருவான தீம்.

darkness - கருப்பு வண்ண உடை (boy)
light - வெள்ளை வண்ண உடை (boy)
earth - பழுப்பு வண்ண உடை (girl)
sky - ஆகாய நீலம் (girl)
sun - சிவப்பு (boy)
moon - க்ரீம் (girl)
water - நீலம் (boy)
man - சூட் (ofcourse, boy)
tree - பச்சைக்குப் பதில், எங்கள் கம்பெனியின் ட்ரேட்மார்க் கலர்தான் புதிய பச்சை. (girl)


ஆதியில், நான் வானமாக இருப்பதாகத்தான் ப்ளான். பங்கேற்ற இன்னொரு நண்பர்க்கு ஷராரா விருப்பமாக இருந்தது.மேலும், எனக்கும் அதில் பெரிய விருப்பமெல்லாம் இல்லை. சோ, விட்டுக்கொடுத்துவிட்டேன். சூரியனா இருக்கேன், ஏன் சூரியனோட ஒளியை வாங்கிட்டு ஒளி தர்றது பெண்ணா இருக்கணும்னு கொஞ்சம் கொளுத்திபோட்டேன். ஆனா, சூரியனா இருந்த பையன்கிட்டே சிவப்பு கலர் ஏற்கெனவே ஷெர்வானி இருந்ததாலே (பட்ஜெட்..பட்ஜெட்!) சூரியன் எஸ்கேப். சரி, ஜெண்டர் எதுவும் இல்லாத, மரமா இருக்கேன்னு முடிவாச்சு. இப்போ சதி செஞ்சது டெய்லர். நிலாவின் உடை மற்றும் மரத்திற்கான உடையை அளவுகள் மாத்தி தைச்சுட்டார்.
சோ, நான் இப்போ மூன்!

இது என்னோட நினைவுக்காக :

முதல் சீக்வென்ஸ் : மேலிருந்த வரிசையிலே ஒவ்வொருவராக
இரண்டாம் சீக்வென்ஸ் : darkness & moon, earth & sky, water & tree..etc
மூன்றாம் சீக்வென்ஸ் : earth- moon-sun, water-man-tree... etc

இசை : அதான், ஆதி காலத்துலேர்ந்து போட்டு வைச்சிருக்காங்களே...எனிக்மா (yes, same old ’mea culpa’!) அதோடு, ஃபேஷன் படத்தின் இசையும் கலந்து ஒரு fusion.

இதைத் தொடர நான் அழைப்பது

1. ஜெயந்தி
2. நான் ஆதவன்
3. தியானா
4. வல்லியம்மா

Friday, August 13, 2010

Blogcoming!

ஹாய் பீபிள்..ரொம்ப நாளா சத்தமே இல்லேன்னு நினைச்சவங்களுக்கு...
திரும்ப வந்துட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்! ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி!)

ஆஃபீஸ் டேவுக்காக Fashion..Fusion..dance..rampன்னு கலைச்சேவை செய்ய வேண்டி இருந்தது இவ்வளவு நாளா! கல்லூரி நாட்களை திரும்ப ரீவைண்ட் பண்ணின மாதிரி..ஒரே ஜாலி...க்ரூப்பா ப்ராக்டீஸ்,
ப்ராக்ஸ்டீஸ்ன்னு சொல்லிட்டு கும்மாளம்..கலாட்டா..கிண்டல்..கொஞ்சம் பாலிடிக்ஸ்-ன்னு ரெண்டு வாரம் ஜாலியா போச்சு.. நேத்து ஃபங்ஷனோட எல்லாம் ஓவர்!

இப்போ மிஸ்ஸிங் த ஃபன்...

இதுலே ஆளாளுக்கு, நீங்க நல்லா பண்ணீங்க இல்லே நீங்கதான் கலக்கிட்டீங்க...செம...உங்க டீம் சூப்பர்...சான்சே இல்ல..எல்லாம் உங்க கடின உழைப்புதான்..உங்க அர்ப்பணிப்பு உணர்வுதான்...நீங்க மேக்கப் பண்ணலைன்னா எதுவும் நடந்து இருக்காது...இல்லல்லே...உங்க அயராத உழைப்புதான் காரணம்னு மாத்தி மாத்தி மெயில் அனுப்பிக்கிட்டு, செண்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறேன்னு கண்ணீர் விட வைச்சுட்டு இருக்கிறதாலே அப்படியே எஸ்கேப்-பாகி இங்கே வந்துட்டேன்...:-)

பதிவுலகில் என்ன ஸ்பெஷல்? :-)

Thursday, August 28, 2008

வேலைக்கு நடுவே....

ட்ரெயினிங்கில் ஒரு பகுதி கவனித்தல், அதாவது மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பது பற்றி!! பாதி பேர் வெளியிலும், மீதிபேர் உள்ளேயும் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். வெளியில் இருந்து வரும் ஒருவர், உள்ளே இருப்பவரின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து அவரிடம் 3 பேச வேண்டும். உள்ளே இருப்பவர்களுக்கு சொல்லப்பட்டது, நீங்கள் அவர்கள் பேசுவதை கவனிக்க வேண்டும், ஆனால் உங்கள் நடவடிக்கைகள் அப்படி இருக்கக்கூடாது, அதாவது பேனாவை ஆட்டிக்கொண்டோ, வேறு எங்காவது பார்த்துகொண்டோ அல்லது
சம்பந்தமில்லாத வேறு கேள்விகள் கேட்டுக்கொண்டோ இருக்கலாம்.

ஒரு ஜோடி A & B!!

நிகழ்ச்சி நடத்துபவர், A(பேசுபவர்) & B( கேட்பவர் ) யிடம் என்ன நடந்தது என்ன கேட்டபொழுது, B சொன்னார் "A stopped talking after sometime!"

நடத்துனர் Bயிடம். "what made you to stop?"


A வெகு சீரியசாக, “when I was talking he was doing something on his mobile.
So, I thought he is recording my talk"!!!

!!!!!!!!!!

(And they were all asked to talk what they are passionate about!)

வேலைக்கு நடுவே....

இரண்டு நாட்களாக ஒரு ட்ரெயினிங்!!
சரியான நேரத்தில் வராதவர்கள் ஏதாவது பாட்டு பாட வேண்டும் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாயிருந்தது!A வந்தது லேட். சிறிது யோசித்த A, ”நான் பாட்டு பாடறேன், சூரியன் படத்துல பிரபுதேவா பாடும் பாட்டு!
நீங்க எல்லாரும் ஐலசான்னு கோரஸ் குடுக்கணூம்” என்று சொல்லிவிட்டு,
ஆரம்ப வரிகளை பாடத்துவங்கினார்

அப்தலா ..!!

ஐலசா!


.....

ஐலசா!

ஏ மரமும் பொளக்கும்!!

ஐலசா!



தமிழ் தெரியாத H, மெதுவாக பக்கத்திலிருப்பவரிடம்

மச்சா, சான்ஸ்கிரிட் words??

சிரிப்பில் அதிர்ந்தது ரூம்!!

Thursday, June 05, 2008

மகளிர் மட்டும்!!

எப்போதும் ஆண்கள் டீ சர்ட்தான் கிடைக்கும், ரிலீஸ் முடிஞ்சாலும் சரி, இல்ல ஆனுவல் ஃபங்ஷன்னாலும் சரி!!அதுவும் நம்ம சைசுக்கு இருக்காது. உள்ள நாலு பேர் புகுந்துக்கலாம் போல இருக்கும்.என்ன பண்றது..அத வாங்கி ரங்கமணிக்கோ, தம்பிக்கோ குடுக்க வேண்டியதுதான்!

போன தடவை தாங்க முடியாம கம்பெளெய்ன் பண்ணினதோட பலன் இப்போ WestSide-லேர்ந்து சல்வார் டாப்ஸ்.இதுவும் நாங்களே போய் செலக்ட் செஞ்சதுதான். மூணு ஷேட்ஸ்...பிஞ்க், பச்சை மற்றும் வெந்தயக் கலர். அதுல,ஸ்லீவ்-ல கம்பெனி லோகோ போட்டிருக்கு. (ஒரு தடவை உடுத்திக்கிட்டு, மெகா ஸ்லீவ்ஸ் ஆக்கிடலாமான்னு ஒரு யோசனை ;-)!!)

ஒரே மாதிரி எங்க கிடைக்கும்னு பார்த்தா, இந்த மூணுதான் தேறுச்சு.
1. Fabindia
2. Westside
3. Anokhi


Fabindia-ல ஒரே மாதிரி உடனே கிடைக்காது. ஆனா, டைம் கொடுத்தா (மினிமம் 2 வாரம்), நம்ம measurementக்கேத்தமாதிரி கிடைக்கும். இது வுட்ஸ் ரோடு கிளைல விசாரித்தபோது தெரிந்தது. அடுத்தவருடம் கண்டிப்பா இங்கதான். (கம்பெனி இருந்தா!!)
ம்ம்..பட்டு டாப்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது!! எல்லாமே பொதுவாக பார்ட்டி வேர் மாதிரி. தனியா ஒரு படையெடுப்பு நடத்தனும்!!


Westside-ல (Spencer Plaza) புது ஸ்டாக் வந்தாதான் தெரியும்னு சொன்னாங்க. கண்டிப்பா 20க்கு மேல வேறவேற சைஸ்களிலும் கிடைக்கும்னும் சொன்னாங்க. ஆனா ரெண்டு நாளாகும். ஓக்கே..ரெண்டுநாள்-னா பொறுத்துக்கலாம்.

Anokhi - இது ஆழ்வார்பேட்டைல இருக்கும் பொட்டிக். ஆனா, எல்லாம் பிரிண்டட் மாடல். plain fabric-ல இல்ல.

ஒதுக்கப்பட்ட நிதி - 600 ரூபாய் ஒருவருக்கு.
ஆனால், ரூ 499க்கு WestSide-லே கிடைத்துவிட்டது.