Wednesday, October 20, 2010

X X & X Y in IT

"இன்ட்ர்வுயூவிலே ஒரே மாதிரி - ஈக்வல் டாலன்டோட ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருந்தா, நான், பையனுக்குத்தான் ப்ரெஃபரன்ஸ் கொடுப்பேன்ப்பா" (ஓ நோ..அப்படி பாக்காதீங்க...நான் இந்தக் டாபிக்க இழுக்கலை...அதுவா வந்து விழுந்துச்சு.. அன்னைக்கு, நான் லிசனிங் மோடுலேதான் இருந்தேன்..நம்புங்க...ப்லீஸ்!)

ஏன்?

"ஏன்னா..சிம்பிள், பையனுக்கு வேலை கொடுத்தா ஒரு பேமிலியே பிழைக்கும். பொண்ணுக்கு வேலை கொடுத்தா அது எக்ஸ்ட்ரா மணிதான்."

கடந்த வாரத்தில், பழைய அலுவலகத்தில் வேலை செய்த‌ நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஒன்றாக ஒரே நாளில் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவர்கள். அந்த அலுவலகத்தை விட்டு வந்துவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். ஆண்களும் பெண்களுமாக ஒரு ஆறேழு பேர் இருந்தோம். மெதுவாக பேச்சு வேலை, வீடு,குடும்பம், குழந்தைகள்,சினிமா என்று சுழன்று அப்புறம் கழுதை கெட்டால் குட்டி சுவராக அலுவலகம் மற்றும் வேலையில் வந்து நின்றது. அப்போது வந்து விழுந்ததுதான், இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் .


(இன்டர்வியூவிலே பொண்ணுங்களுக்குத்தான் எப்போவும் வேலை கொடுப்பாங்கன்னு பொருமும் கோஷ்டி இல்லையென்றாலும்) Progressive minded என்று சொல்லிக்கொள்ளும் இவன் மட்டுமில்லை... இன்னும் சிலரும் இதே கருத்தை பிரதிபலிப்பதை கண்டிருக்கிறேன். ஆபத்தான கருத்துதான் என்றாலும் கேட்டுக்கேட்டு ஷாக்கிங் எல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனைக்கும், அங்கிருந்த எங்கள் நண்பர்களில் சிலர்( பெண்கள்) குடும்பப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு தனியாக வாழ்பவர்கள்.


இந்த எண்ணம் தோன்ற என்ன அடிப்படைக் காரணம்?


திருமணமாகிவிட்டால் பெண்ணுக்கு தனது குடும்பத்தை அதாவது தனது தாய் தந்தையரை பேண வேண்டிய அவசியம் இல்லை. திருமணமான பெண் தனது கணவனைச் சார்ந்தவள். அதனால், அவளுக்கு முதல் கடமை குடும்பம்தான், கேரியர் என்பது இரண்டாம் பட்சமே என்ற எண்ணம்தான். சமூகமே ஒட்டு மொத்தமாக இப்போக்குடையதாக இருக்கையில் ஆணையோ பெண்ணையோ குறை சொல்வதில் அர்த்தமில்லை.

25 வயதுடைய ஒரு பெண்ணும் ஆணும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகவே, ஒரு ஃப்ரெஷரையோ அல்லது இருவருடங்கள் அனுபவங்கள் இருப்பவரையோ வேலைக்கு எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், 25 அல்லது 27 வயதுக்கு மேற்பட்ட மணமாகாத பெண்ணை (அவர் இனி ரிசோர்ஸ் எனப்படுவார்) வேலைக்கு எடுப்பதில் ஒரு தயக்கம் இருப்பதை எந்த மேனேஜருமே ஒப்புக்கொள்வார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, 'மைன்ஸ்வீப்பர் கேமில் வெடிக்கும் குண்டுபோல' அந்த ரிசோர்ஸ் எப்போது வேண்டுமானாலும் மணமாகிச் செல்லலாம். அதன்பின், அவர் அதே ஊரில் அதே கம்பெனியில் தொடர்வாரா என்பது சந்தேகமே. அதாவது திருமணமா கேரியரா என்று வரும்போது ரிசோர்ஸ்கள் பெரிதும் திருமணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மணமகன் எந்த ஊரோ எந்த நாடோ அங்கு செல்ல வேண்டியது அவரது கடமை. ஒருவேளை அதே கம்பெனியில் நீடித்தாலும் அந்த ரிசோர்ஸை வைத்து ப்ராஜக்ட் திட்டங்களை தீட்டுமுன் இன்னொரு ரிஸ்க்கையும் 'ஃபோர்ஸீ' செய்யவேண்டும். மருத்துவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டபின் பெற்றோருக்கு அடுத்து செய்தியை பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மேனேஜரிடம் - ப்ராஜக்ட் திட்டங்கள்! பிரசவ கால விடுப்போடு, அந்த ரிசோர்ஸை குறைந்தது ஆறுமாதங்களுக்கு நம்ப முடியாது. அதனால், அவரை வைத்து பிளான் செய்வது கடினமானது. இப்போது நான் சொன்னவை எல்லாம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பொதுவாக அநேக கம்பெனிகளில் நடைமுறையில் உள்ளவையே. இதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, கர்ப்பமாக இருக்கும் பெண் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.


வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால், ஓரளவிற்கு பெண்களுக்கு வசதியாக இருந்தாலும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், எல்லா கம்பெனிகளிலும் சாத்தியமாக இருக்காது. ‍அலுவலகத்திலும், வீட்டிலும். அதனை உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். இதற்கு நீங்கள் ஒரு மேனேஜராகத்தான் இருக்
வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
மெட்டர்னிட்டி லீவு (டென்மார்க்கில் ஆறு மாதங்களுக்கு மேல்!) முடிந்தபின் அவர்க்ள் வேலையில் தொடர்வதும் சந்தேகத்துக்குரியதே. குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லையெனில் முதலில் பலியாவது பெண்களின் கேரியர்தான். பெண்ணின் அம்மா அப்பா வீட்டோடு வந்து தங்க மாட்டார்கள். அவர்களுக்கோ அது அவமானம். இல்லாவிட்டால், அதற்குள்ளாக ஏதாவது சண்டை வந்து பெண்ணின் பெற்றோர் வந்தாலும் தங்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். இல்லையேல், பையனின் பெற்றோரோடு பெண்ணிற்கும் உரசல்கள் வந்து சேர்ந்திருக்கும். இல்லை, இருபக்கத்து பெற்றோருக்கும் உதவ முடியாத ப்ணிச்சூழல்....எது எப்படியோ, குழந்தை வந்துவிட்டால் இந்த மாதிரி நேரத்தில் பெரிதும் பலியாவது பெண்ணின் கேரியர்தான்.
இதைத்தாண்டி வேலைக்கு வரும் ரிசோர்ஸ்கள் பெரும்பாலும் டெஸ்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இப்போது அவர்களது முக்கியம் நேரமும், வேலையில் நீடித்திருக்க வேண்டிய தேவையும்தானே தவிர கேரியர் இரண்டாம் பட்சம்தான். இதற்கு நடுவில், உடல்நலம் சரியில்லை அல்லது தடுப்பூசி போட வேண்டியது, குழந்தையை ப் பார்த்துக்கொள்ளும் ஆயாம்மா எடுக்கும் எதிர்பாரா லீவுகள்....இன்னபிறவெல்லாம் சமாளித்து டெலிவரபிள்ஸ் காட்ட வேண்டும்.

இதில், ஓடியிருக்கும் ஒருவருட சைக்கிளில் ரிசோர்ஸ்களின் மூன்று மாத பிரசவ விடுப்புகள் போக, மேலதிக‌ லீவு ஏதேனும் எடுத்திருந்தால் அது கேரியர் வளர்ச்சியை கண்டிப்பாக பாதிக்கும். ஏனெனில், பிரமோஷன்களுக்கான தகுதியை இழந்திருப்பார்கள். ஒரு மாத ட்ரிப்கள் அல்லது கஸ்டமர் சைட் விசிட் போன்றவற்றில் டைனமிக்காக முன்பு போல இருக்க முடியாது. ஏனெனில், குடும்பச்சுமையை சுமந்தாக கட்டாயத்தில் இருக்கும் ரிசோர்ஸ்கள் 'வேலை' என்பது இருந்தால் போதும், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். எதைக்கொடுத்தாலும் "வேல்யூ ஆடட்" என்பதைவிட, கொடுத்த வேலையைச் செய்வது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பார்கள்.


இதே நிலைமை, ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு - சொல்லப்போனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு கூட இருக்காது. "உத்தியோகம் புருஷ லட்சணம்". மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் கூட்டமும் இதில் இருக்கும். இருவருமே வெளிநாடுகளில் வேலை செய்தால், அங்கு உதவிக்கு யாராவது ஒருவருடைய பெற்றோர் கண்டிப்பாக கூட இருப்பார்கள். அப்படி இல்லா விட்டால், மனைவி வீட்டிலிருப்பார். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு சென்றபின், அங்கு வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்வதை ஆண்கள் (விதிவிலக்குகள் இருந்தாலும்) பொருட்டாக கருதுவதில்லை. (அதே ஆண்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் நடந்துக்கொள்ளும் முறையே வேறு. )

இப்போது, அந்த ஆணிடம் வருவோம். சேர்ந்த ஆறுமாதங்களிலோ ஒரு வருடத்திலோ (தானாக வராவிட்டாலும், சண்டையிட்டாவது) லாங்டெர்ம் அசைன்மென்டாக அவர் ஆன்சைட் சென்றிருக்கலாம். அவருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்திருந்தாலும் எந்த பெரிய மாறுதலும் இருக்காது. திருமணமானதிற்கு ஒரு ட்ரீட் மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு ட்ரீட் என்ற அளவில் முடிந்து போயிருக்கும். பிரசவ விடுப்பாக மூன்று நாட்கள். சமயங்களில் ஊருக்கு போய்வர ஒரு வாரமாக நீடிக்கப்பட்டிருக்கலாம்.அவர் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கூட ஆன்சைட் செல்லலாம். நைட் கால்கள் நிமித்தம் தாமதமாக வீட்டிற்கு வரலாம். கேரியரை மாற்ற வேண்டிய, என்ன வருகிறதோ அதை எடுத்துக்கொள் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். முக்கியமாக, No post-partum depressions! வீட்டிலும் வெளியிலுமாக சூழல்களை சமாளித்து அப்ரைசல் லெட்டர் வாங்கும்போது "முணுக்கென்று" கண்களில் தளும்பி நிற்க வேண்டிய நிலையும் இல்லை. முக்கியமாக எந்த பிரமோஷன்களையும் இழந்திருக்க மாட்டார். ரோல் மாற்றங்களில் சில படிகள் முன்னேறியும் இருக்கலாம்.


பொதுவாகவே, திருமணமாகி குழந்தைகளோடு பள்ளியில் செட்டிலாகி விட்ட பெண்கள் விரைவில் மாற்றங்களை விரும்ப மாட்டார்கள் என்ற எண்ணம் வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளூர உண்டு. ஏனெனில், ஒரு .5 புள்ளிகள் அப்ரைசல் குறைந்தாலே பேப்பர் போடும் ஆண்கள் உண்டு. ஆனால், (.5 என்ன 1 புள்ளி குறைந்தாலும் ) பெண்களுக்கோ, "அடுத்ததுலே பார்த்துக்கலாம்ப்பா, சென்னையிலே ஆப்சன்ஸும் கம்மி" என்றோ அல்லது "இதுதான் வீட்டுப் பக்கத்துலே இருக்கு, சாயங்காலம் சீக்கிரம் போய் தைகளை கூட்டிட்டு வரலாம்" என்பதோதான் முடிவாக இருக்கும்.


இதையெல்லாம் சமாளித்து ப்ராஜக்ட் லீடாகவோ மேனேஜராக வந்துவிடலாம். ஆக்சலரேட்டட் பிரமோஷன்கள் வாங்கி உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால், எத்தனை பேர் விபிகளாக ஜி எம்களாக, சீஇஓ ‍களாக‌ உயர்ந்திருக்கிறார்கள்?
உயர முடிந்திருக்கிறது? இறக்கைகள் பறக்க எத்தனித்தாலும் கால்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு குண்டு கீழ்நோக்கியல்லவா இழுக்கிறது?

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். ஒரே நிலையில் இருக்கும் ஆண், பெண் இருவரில் ஆணுக்குத்தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று நினைப்பது சரியானதா? ஒரு கட்டத்தில், பார்த்தபோது என்னை சுற்றியிருந்த எனது நெருக்கமான நண்பர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்திருந்தனர். பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட செல்வியும் அவளது கணவரும் வேலை செய்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். (So near, yet, so far.) கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்ட‌ அப்பாவுக்காக பர்சனல் லோன் வாங்கி தனது வருமானத்தில் அதை அடைத்து, தங்கையை படிக்க வைத்து, அம்மாவையும் கவனித்துகொண்ட லீமாவை பார்த்திருக்கிறேன். 'ஏடிஎம் கார்டை கொடுக்கவில்லையென்றால் உன் கணவனோடு உன்னை வாழவிடுகிறேனா பார்' என்று மகனை தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றபின், இருவருடங்கள் தனியாக வாழ்ந்த சுபா....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

படிக்கும் அனைத்து பெண்களுமே வேலைக்கு வந்துவிடுவதில்லை. ஐடி - யால், முன்பைவிட பெண்கள் அதிகமாக வேலைக்கு வருகிறார்கள். அதுவும் கூட பெண்கள் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல...ஆள் பற்றாக்குறையால்தான் என்பதை மறுக்க முடியாது! எத்தனை அலுவலகத்தில் பாதிக்குப் பாதி பெண்கள் இருக்கிறார்க்ள்? அதிகபட்சம், 35 முதல் 40 சதவீத பெண்களே இருப்பார்கள். கல்யாண செக்போஸ்ட், குழந்தை செக்போஸ்ட் தாண்டி வருபவர்கள் அவர்களிலும் குறைவுதான். (புள்ளிவிவரங்கள் கேட்காதீர்கள்‍, எல்லாம் கண்ட, கேட்ட அனுபவம்தான்)


எனவே, வேலைக்கு வரும் பெண்கள் எல்லோரும் ஸ்பாவுக்கும், ஷாப்பிங் போவதற்கும் மட்டுமே சம்பாரிப்பவர்கள் இல்லை. ("உனக்கென்னப்பா, டபுள் இன்கம், ஹைக் வரலன்னாலும் பரவால்ல, நீ சமாளிச்சுப்ப, எங்கள மாதிரியா" - ‍ கணவனும் மனைவியும் வேலை செய்பவர்களாக இருந்தால், இந்த டயலாக் கண்டிப்பாக சொல்லப்படும், கிண்டலுக்காகவேனும்.)


கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.


அடுத்த முறை இன்டர்வியூவில் ஒரே தகுதிகள் கொண்ட ஆணையும் பெண்ணையும் சந்தித்தால் மேலே உள்ள வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்!

பி.கு : அமுதா,பூங்குழலி, லஷ்மி, தீபா,ஹூசைனம்மா : ஹையயோ...ஓடாதீங்க...
No, you are not tagged, Juz share your thoughts - இங்கேயாவது இல்லே உங்க பதிவுலேயாவது!

26 comments:

ராம்ஜி_யாஹூ said...

1st para is 10 year back story

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை, உங்கள் ஆண்டு விழாத் தொடரின் முதல் பகுதி எழுதிட்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

ஐ டி ல இருக்கிறவங்க இன்னோருத்தரும் இதைப் பற்றி சொல்லியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆணுக்கு வேலை கொடுப்பது அந்தக் காலம். ஆணுக்கும் வேலை கிடைக்கலாம் என்பதாகத் தான் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும்.

லெமூரியன்... said...

\\குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லையெனில் முதலில் பலியாவது பெண்களின் கேரியர்தான். பெண்ணின் அம்மா அப்பா வீட்டோடு வந்து தங்க மாட்டார்கள். அவர்களுக்கோ அது அவமானம். இல்லாவிட்டால், அதற்குள்ளாக ஏதாவது சண்டை வந்து பெண்ணின் பெற்றோர் வந்தாலும் தங்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள்.......//

முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது எவராலும் அவ்வளவு சீக்கிரம் வேறொருவரிடம்(தாய், அல்லது சமமான வேறு சொந்தம்) குழந்தையை ஒப்படைத்து வேலைக்கு வர முடியாதென்பது என் கணிப்பு..
மேலும் குழந்தையை சவலையாக விட்டு வேலையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஒரு கண்ணோட்டம் உள்ளது போல் தோன்றுகிறது மேலுள்ள வரிகளில்...

\\.5 புள்ளிகள் அப்ரைசல் குறைந்தாலே பேப்பர் போடும் ஆண்கள் உண்டு.....//
அந்த புள்ளி ஐந்து சதவிகிதத்தில் நெறைய்ய கவலைகள் இருக்கலாம்???(ஹோம் லோன், அடுத்ததாக பிறந்த ஒன்றின் மருத்துவ செலவு..முதல் குழந்தையின் படிப்பு செலவு?? )

\எனது நெருக்கமான நண்பர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்திருந்தனர். பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட செல்வியும் அவளது கணவரும் வேலை செய்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள்.......//
உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் வாழ்வியல் முறையை வைத்து ஒட்டுமொத்த கணினி துறை சார்ந்த பெண்களின் வாழ்வியல் முறையை நிர்ணயிக்க முடியாதே முல்லை????

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இதுகுறித்து எழுதவேண்டும் என்பது வெகுநாள் அவா; சீக்கிரம் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

The Analyst said...

இதெல்லாம் எமது சமுதாயத்தில் இப்போதைக்கு மாறப்போவதில்லை.

Denmark gives fully paid maternity leave for a year.

Save the children's 2010 report on the state of world's mother's points to Norway as the best place to be a mother taking into account women's health status, income, maternity leave plans and education.

report ஜ இங்கு பார்க்கலாம். It is quite interesting.

America is the worst place to be a mother in the developed world.

சிறிது காலத்திற்கு முன் எங்கோ வாசித்தது ‍ அமெரிக்காவில் ஆய்வாளார்கள் வேலைத்தளங்களுக்கு ஒரு கற்பனைப் பெண்ணின் 2 versions of CV தயார் செய்து ஒரு உண்மையான vacancy க்கு அனுப்பிவைத்தனர். 2 இலும் அப்பெண்ணிற்கு ஒரே வேலை அனுபவம், qualification எல்லாம் ஒன்று தான். ஒரே ஒரு வித்தியாசம் ஒரு version இல் அப்பெண் parent-teachers committee இல் ஒரு member எனக் குறிப்பிட்டிருந்தது.

மற்ற எல்லாமே ஒன்றாக இருந்தாலும் they found that employers were 50% less likely to call the person who was on the parents-teachers commitee for an interview. :(

The Analyst said...

"இதையெல்லாம் சமாளித்து ப்ராஜக்ட் லீடாகவோ மேனேஜராக வந்துவிடலாம். ஆக்சலரேட்டட் பிரமோஷன்கள் வாங்கி உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால், எத்தனை பேர் விபிகளாக ஜி எம்களாக, சீஇஓ ‍களாக‌ உயர்ந்திருக்கிறார்கள்? உயர முடிந்திருக்கிறது? இறக்கைகள் பறக்க எத்தனித்தாலும் கால்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு குண்டு கீழ்நோக்கியல்லவா இழுக்கிறது?"

Well said. அறிவிய‌லிலும் (especially biomedical science) அதே தான். முனைவ‌ர் ப‌ட்ட‌ம் முடித்து வேலைச்ச‌ந்தைக்குப் போகும் போது ஆண்க‌ளை விட‌ப் பெண்க‌ளே கூடுத‌லாக‌ உள்ள‌ன‌ர். ஆனாலும் associate professor, professor, director level க‌ளில் பெண்க‌ளின் எண்ணிக்கை மிக‌க்குறைவு. கிட்டத்தட்ட நீங்க‌ள் குறிப்பிட்டுள்ள‌ அதே கார‌ண‌ங்க‌ள் தான்.

The glass ceiling is always there.

அமுதா said...

/*வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.
*/
100% agreed. ஆனால் நம் சமூகத்தில் பெண்ணுக்கு சிக்கல்கள் பல உண்டு; வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும்... வேலைக்கு சென்றால் மேலும் சில சிக்கல்கள்....

/*Juz share your thoughts - இங்கேயாவது இல்லே உங்க பதிவுலேயாவது!*/
பதிவு பண்றேன் முல்லை;

DHANS said...

excellent post

I agree what you said

Padmaja said...

Hi Mullai,
You are 100% right. I am going in ML from next month.
Donno how I am gonna manage my career after joining back. lol...
A step ahead, nowadays I can hear advice from people to change company/technology or even profession in order to take care of kid.
If only Mom is responsible for bringing up kid, wot for dad is? Only to give the other X or Y I guess..! Strange society..!

NARI said...

லெமூரி குட்டி என்ன நினைத்துவிட்டீர்கள். குளுகுளு ஆன்சைட் லட்சத்தில் சம்பளம் இதெல்லாம் இருப்பதால் சந்தனமுல்லை அமெரிக்கர்களின் அடிவருடி என்பதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளவேண்டாம்.
நீங்கள் நன்றாக பணம் சம்பாதித்துக்கொள்ளுங்கள். முதலாளிகளை மூக்கில் குத்துங்கள். வாழ்க கம்யூனிஸம்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!....நாம் எழுதக் கூடாதா முல்லை?

gnani said...

நல்ல பதிவு. மேலை நாட்டில் இதே துரைகளில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏன் இதே பிரச்சினைகள் இல்லை ? அவர்களுக்கும் குழந்தை குடும்பங்கள் இருக்கின்றனதானே ? அங்கே ஆண்கள் பெண்களுடன் குடும்பப் பொறுப்பை பகிர்வது போல நம் நாட்டில் பகிரவிடாமல் தடுப்பது எது ? அதை எப்படி பெண்கள் முறியடிப்பது ? இதைப்பற்றியெல்லாமும் சிந்தியுங்கள். எழுதுங்கள். வாழ்த்துகள். அன்புடன் ஞாநி

? said...

அதனாலேயே பெண்களுக்கு சம உரிமைகள் அங்கு கிடைத்து விட்டதா ? உலக முதலாளியத்தின் வரம்புக்குட்பட்ட ஜனநாயகம் பெண்களுக்கு ஆணை விட அதிகமாக கிடைக்க வாய்ப்பில்லையே. ஞானி.. ஏன் குழந்தை வளர்ப்பையும் ஒரு சமூக வேலையாக ஒரு நிறுவனமாக அரசு தன் பொறுப்பில் ஏற்று நடத்த முடியாதா

நசரேயன் said...

//
இன்டர்வியூவில் ஒரே தகுதிகள் கொண்ட ஆணையும் பெண்ணையும் சந்தித்தால் மேலே உள்ள வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்!
//

கண்டிப்பா .. ஆமா தலைப்புக்கள் எல்லாம் இங்கிலிபிசிலே இருக்கே சமிபகாலமா ?

The Analyst said...

In Sweden, Men Can Have It All

How cool is that?

தியாவின் பேனா said...

அருமையாக இருக்கு

Agila said...

புதிதாக maternity leave முடிந்து வேலைக்குச் சேர்ந்த அம்மாவாக என்னுடைய 2 cents.

I have been both end of spectrum.

என் முதல் குழந்தை பிறந்த போது வேலையை விட்டு இரண்டு ஆண்டுகள் இருந்தேன். மறுபடியும் வேலை தேடும் போது மறுபடியும் வேலை கிடைப்பது மிக கடினமாக இருந்தது (just equivalent job what I left before, went with lower level)

இப்போது இரண்டாவது குழந்தையின் போது maternity leave முடிந்து வேலைக்குச் சேர்ந்தேன்(நேற்று , மூன்று மாதங்களுக்கு பிறகு).
இந்த முறை வேலைக்குச் செல்வதும் , சென்ற முறை வேலையை விட்டதும் முழுக்க முழுக்க என் முடிவு. ஆனால் தினமும் குற்றஉணர்வு என்னை பிடுங்கி தின்கிறது. (Even though my husband is 100% supports me and helps me)

I know even though my husband helps me in everything (we did not ask for any help from both of our parents during delivery as well as raising our kids). Guilt .. Guilt.. I was loaded with guilt and he is not. That is another aspect we have to consider here.
Who knows I may leave my job soon. I will let you know

Agila said...

@gnani
//மேலை நாட்டில் இதே துரைகளில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏன் இதே பிரச்சினைகள் இல்லை ? அவர்களுக்கும் குழந்தை குடும்பங்கள் இருக்கின்றனதானே ? //


இங்கேயும் (US ) இதே நிலை உண்டு. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரை(glass ceiling).இங்கு குழந்தைகளின் தந்தை கூடுதல் பொறுப்பை ஏற்றாலும் , ஒரு சில சமயங்களில் இருந்தாலும் பெண்களின் நிலை ,மனநிலை கிட்ட தட்ட இது போன்றதே.

பில் கிளிண்டன் காலத்தில் தான் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.ஒரு பெண் maternity leave முடிந்து வந்தால் அவளுக்கு முந்திய வேலையைக் கொடுக்க வேண்டுமென்று.(If they didn't give you or not an equivalent work that is against the law)

//ஆண்கள் பெண்களுடன் குடும்பப் பொறுப்பை பகிர்வது போல நம் நாட்டில் பகிரவிடாமல் தடுப்பது எது ? //

இது மற்றொரு விவாதத்துக்குரிய விஷயம்.

முல்லை பதிவில் கூறியது போல இந்திய ஆண்களே வெளிநாடுகளில் மனைவிகளுக்கு உதவுவது போல இந்தியாவில் உதவுவது இல்லை.

Mother in laws may get heart attack if their son is washing cloths and doing dishes. :-D

The Analyst said...

I know exactly what you mean.

நான் முதலில் maternity leave முடிந்து வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் (even though initilaly it was only for two days a week), the guilt ate me up. It is just the most horrible feeling.

எவ்வளவோ நாட்கள் எனது வேலைக்குச் சென்று அலுவலகத்திலிருந்து அழுதிருக்கின்றேன். அப்போது பலபேர் சொல்வார்கள், it's always harder on the parent than the kid ‍ மனது கேட்கவே கேட்காது.

நீங்கள் சொன்னது போல், இது மாதிரிக் குற்ற உணர்வு என் துணைவனிற்கு வந்ததில்லை. Even though he fully supports me in everything I do. I think it is partly due to our conditioned thinking since birth. அதோடு the cultural norm that assumes that it is bad for the kid if the mother goes to work.

சில பேர் "‍எப்படி எங்கட பாட்டி, பூட்டி காலத்தில எல்லாம் நன்றாக இருந்தது, அவர்கள் செய்யாததையா இந்தக்காலத்தில் பெண்கள் செய்கிறார்கள், அவர்கள் எவ்வளவு better ஆக‌ பிள்ளை வளர்த்தார்கள், etc, etc, etc," என்பார்கள்.

But the truth is,
அந்தக்காலத்திலும் பெண்கள் எவ்வளவோ கஸ்டப்பட்டு வேலை செய்தவர்களே. வயலிலும் வீட்டிலும் இப்ப இருக்கும் வசதிகள் இல்லாதிருந்த காலத்தில் எவ்வளவு நேரமெடுத்து வேலை செய்திருப்பார்கள். பிள்ளை அம்மாவோடு எந்நேரமும் இருப்பதில்லை. பல நேரங்களில் சாப்பாடு கொடுக்கவும் குளிப்பாட்டவுமே பிள்ளைகளைப் பார்ப்பர். பிள்ளைகளுக்கு சிலர் சொல்லுரவை அந்தக் காலத்தில் பிள்ளையை எப்படியோ பெத்தால் சரி அது தானாக வளர்ந்துவிடும் என்று. I wonder அந்தக் காலத்தில் அவர்களுக்கும் இதே குற்றவுணர்வு இருந்திருக்குமா என்று. அந்தக் காலத்திற்கும் இந்தக் காளத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் ‍ நாம் செய்யும் வேலைக்கு எமக்கு நேரடியாகச் சம்பளம் வருகின்றது.

அம்மாக்களின் குற்றவுணர்வைப் பற்றி பல இந்தியப் பெண்கள் எழுதிய சிறந்த பதிவுகள் இங்கே இருக்கு.

On a side note: Latest research also shows that working moms' kids turn out just fine.

சந்தனமுல்லை said...

@அகிலா & @அன்னா

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க...மாமி கில்ட் ‍ கிட்டதட்ட‌ இது இல்லாத யாருமே இல்லை எனலாம்.

குடும்பத்தினரை பார்த்துக்கொள்வது என்பது நமக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது. ("வெளியிலேருந்து யார் வந்தாலும் முதல்லே தண்ணி எடுத்து கொடு" என்று சிறுபெண்களுக்குதானே அறிவூட்டப்படுகிறது. )

குழந்தை வளர்ப்பது முழுதும் நம்மை சார்ந்தது என்று நினைத்துக்கொள்வதாலேயே வருகிறது என்றெண்ணுகிறேன்.
இன்றுகூட நாங்கள் சாப்பிடாமல், எங்கள் பெரிம்மாவோ அம்மாவோ சாப்பிட்டதாக நினைவில்லை. ஆனால், என்னால்
அப்படி இருக்க முடிவதில்லை. அதற்கு திட்டும் வாங்கியிருக்கிறேன்.

ஆனால், அலுவலகத்தில் சீக்கிரம் வேலையை முடித்துவிட்டால் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாமே என்றும் எந்த அலுவலக பார்ட்டிகளுக்கோ அல்லது வெளிவேலைகளுக்குச் செல்வதையோ தவிர்த்திருக்கிறேன். முகிலும் அதே போல இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்திருக்கிறேன்.

பூங்குழலி said...

இன்றே முழுவதும் படித்து முடிக்க நேரம் கிடைத்தது முல்லை .மிக மிக சிறப்பாக இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் .வாழ்த்துகள் .

//வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால், ஓரளவிற்கு பெண்களுக்கு வசதியாக இருந்தாலும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன//
அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதே என்னை பொறுத்த வரை நல்லது .நமக்கு இருப்பது போலவோ ,அதிகமாகவோ பிறருக்கும் பிரச்சனைகள் இருப்பது நமக்கு தெரிய வரும். இது நமக்கு தைரியத்தையும் சில சமயங்களில் தீர்வுகளையும் தரக் கூடியது .

//இதற்கு நடுவில், உடல்நலம் சரியில்லை அல்லது தடுப்பூசி போட வேண்டியது, குழந்தையை ப் பார்த்துக்கொள்ளும் ஆயாம்மா எடுக்கும் எதிர்பாரா லீவுகள்....இன்னபிறவெல்லாம் சமாளித்து டெலிவரபிள்ஸ் காட்ட வேண்டும்.//

இது இந்த பிரச்சனையின் ஒரு பக்கம் .இன்னொரு பக்கம் ,இதையெல்லாம்
செய்யாவிட்டால் நமக்கே குற்ற உணர்வு ஆட்டிப் படைக்கிறது .என்னுடைய நெருங்கிய தோழி ,ஏழு மாதங்கள் மேட்டர்னிட்டி லீவிற்கு பின்னும் குழந்தையை கிரஷில் விட்டுவிட்டு அதற்காக அழுது இன்னமும் சில மாதங்கள் விடுப்பில் போனாள்.ஆயா வரவில்லைஎன்று எந்த கணவராவது ஒரு நாளேனும் லீவ் எடுப்பாரா என்று தெரியவில்லை .

//அவருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்திருந்தாலும் எந்த பெரிய மாறுதலும் இருக்காது. திருமணமானதிற்கு ஒரு ட்ரீட் மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு ட்ரீட் என்ற அளவில் முடிந்து போயிருக்கும்//
:)
இந்த மாறுதல்கள் வர இன்னமும் காலமாகும்

V.Radhakrishnan said...

இது மிகவும் நல்ல இடுகை.

இது குறித்த பார்வையை நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்.

அவரவர் வாழ்வியல் நிலைக்கு அவரவர் பொறுப்பு.

தீஷு said...

மிக‌வும் ந‌ல்ல‌ இடுகை முல்லை. என் அம்மா இல்ல‌த்த‌ர‌சி. என‌க்கு மாலை எந்த‌ நேர‌த்தில் ப‌ள்ளியிருந்து வீட்டிற்கு வ‌ந்தாலும் அம்மா இருக்க‌ வேண்டும். என் தோழி அவ‌ள் அம்மா வேலைக்குச் செல்வ‌தால் வீட்டில் யாரும் இருக்க‌ மாட்டார்க‌ள் வீட்டிற்கு செல்ல‌வே பிடிக்க‌ வில்லை என்பாள். திரும‌ண‌த்திற்கு முன்பே குழந்தைக்கு அப்புற‌ம் வேலையை விட்டு விட‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதே போல் விட்டும் விட்டேன். பின்பு வீட்டில் போர் அடித்த‌தால் மீண்டும் சேர்ந்தேன். ஆனால் எந்த‌ நேர‌த்திலும் விட்டு விடும் ம‌ன‌நிலையிலேயே தான் இருக்கிறேன். அலுவ‌ல‌க‌த்தில் நான் இல்லை என்றாலும் யாராவ‌து என் வேலையை செய்ய‌ முடியும். ஆனால் அம்மா என்ற‌ ப‌ணியை என்னைத் த‌விர‌ யாரும் செய்ய‌ முடியாது என்ப‌து என் எண்ண‌ம். என் வ‌ள‌ர்ப்பு இத‌ற்கு கார‌ண‌மா என்று தெரிய‌வில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது//

excellent

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு முல்லை.

இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன், நன்றி.

மகளிர்தின வாழ்த்துக்கள்!