Friday, October 15, 2010

நவராத்திரி ‍ @ 360 டிகிரி

சாலையின் இருபுறங்களிலும் பொரி மூட்டைகளும் பழக்கடைகளும் அலங்காரப் பொருட்களுமாக நிரம்பியிருக்கின்றன. அநேகமாக எல்லா அலுவலகங்களிலும் இப்போது பூஜைக்கான ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேலை நிமித்தம், நான் நேற்று சென்றிருந்த அரசு அலுவலகம் கூட இதற்கு விதி விலக்கில்லை. பெரும்பாலான பள்ளிகள், தசரா விடுமுறை அல்ல‌து பூஜா ஹாலிடேஸ் என்று கடந்த ஒரு வாரமாக விடுமுறை. உள்ளகரத்தில் இருக்கும் பியூட்டி பார்லரிலிருந்து அண்ணா நகரில் இருக்கும் கடைவரை ஃபெஸ்டிவல் ஆஃபர் - எல்லாம் நவராத்திரியை முன்னிட்டுதான்.

நவராத்திரி அல்லது ஒன்பது நாட்கள் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் / இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்களா? இது எல்லாருக்குமான பண்டிகையா?

கொலு வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் வழக்கமாகத்தானே இருந்து வருகிறது. ஏன் சாமி கும்பிடுபவர்கள் எல்லோருமே கொலு வைப்பதில்லை?

நவராத்திரி அல்லது தசரா இந்துக்களின் பண்டிகையாக சொல்லப்பட்டாலும் பிராமணர்களின்/உயர்சாதியினரின் பண்டிகை. எனக்குத் தெரிந்து பெரும்பாலும் பார்ப்பனர்கள் மட்டுமே கொலு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே பார்ப்பனரல்லாதார் வெகுசிலர் வைத்தாலும், 'ரொம்ப சுத்தமா இருக்கணும், தினம் பூஜை பண்ணனும்' என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.கொலு வைக்கும் பழக்கம் இல்லாமல் வளர்க்கப்பட்ட பலரும், இந்துத்வா பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்காக கொலுவை சும்மாவேனும் வைக்கிறார்கள்.

அதைத்தாண்டி, மற்ற சாதியினர் யாருக்கும் கொலு வைக்கும் வழக்கம் இல்லை என்பதுதான் இதுவரை நான் கண்ட உண்மை. ஆம்பூர்,வடலூர் போன்ற சிற்றூர்களில் கொலுவுக்கோ அல்லது நவராத்திரிக்கோ இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்த்ததில்லை. நகரங்களில் இதெல்லாம் எதுவும் இருக்காது என்று நினைத்துக்கொண்டிருந்ததில் ஏமாளியாகி போனேன். இங்குதான் கொலுவும், ஆவணி அவிட்டமும், அமாவாசையும், பௌர்ணமியும் பெரிதாக கொண்டாடப்படுகிற‌து.

நகர்ப்புறங்களுக்கு வந்துவிட்டாலும் சாதிகள் என்றும் மறைந்துவிடவில்லை.
நுணுக்கமாக வெளிப்படவே செய்கின்றன. சாப்பிடும் உணவு முறையிலிருந்து சாதிரீதியாக பண்பாடுகளும் வாழ்வும் வேறு வேறாகத்தானே இருக்கின்றன. சிலமாதங்கள் முன்பு #உணவு முறை ட்விட்டரில் ட்ரெண்டிங்காக இருந்தது . அதில் பலரும் பலவித உணவுகளை ட்வீட் செய்தனர்.

பால் சோறும் பக்கடாவும் #நாடார் இரவு உணவு,
வத்தக்குழம்பு, இன்னபிற..என்று ஒரு ஃபுல் மீல்ஸ் அளவுக்கு இருந்தது (என்று நினைக்கிறேன்) #ஐயர் உணவு
இதே போல நாயர் உணவு, கொங்கு உணவு,செட்டிநாடு,கொங்கனி இரவு உணவு என்று பலவித Tagகள் இருந்தன. இதிலெல்லாம் கலந்துக்கொள்ள ஆர்வம் இல்லையென்றாலும் நான் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்று என்னால் கடைசி வரை முடிவுக்கு வரவே முடியவில்லை. மீதமிருக்கும் காலை மற்றும் மதிய உணவை வைத்து இரவை பார்த்துக்கொள்ளும் வழக்கம் தான். உணவு கிடைக்குமா என்ற நிலையில் இருப்பவர்களுக்கு? எனில், பாரம்பரிய அலலது ஸ்பெஷாலிட்டியான உணவு என்பது சாதிரீதியான உணவு என்றுதானே ஆகிறது?

ஊரிலெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாராவது சொல்வதோடு அல்ல‌து பூஜைக்கு அழைப்பதோடு முடிந்துவிடும். இப்போதோ, ரவராத்திரி சேல்ஸ் என்றும் ஆஃபர் என்றும் வியாபார‌ நோக்கத்திற்காக பார்ப்பனியத்தை, சாதியத்தை பறைசாற்றும் விழாவாகவே மாறி உள்ளது. ரம்ஜானுக்கு/மாற்றுமத பண்டிகைகளுக்கு லீவு விடாத பள்ளிகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பதைப் பார்த்து வீட்டிலும் கொலு வைத்து பூஜை செய்வது என்பது பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதாகத்தானே இருக்கிறது?

இந்த ஒன்பது நாள் கொண்டாட்டத்தில் பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையுமே. 'உழைப்பே தெய்வம்' என்றும் செய்யும் தொழிலே தெய்வம்' என்றும் அன்றாட வாழ்விலிருந்து விடுபட - கொண்டாட்ட மனநிலைக்கு ஒருநாள் தேவை என்ற அளவில் ஆயுத பூஜையை புரிந்துக்கொண்டாலும் அது களையப்படவேண்டிய ஒன்றுதான். அதில் எந்த பண்பாடும் இல்லை.

கொலு வைக்கும் சாதியினர் ஆயுதபூஜையை கொண்டாடி பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. படியையும்,மரக்கால்களையும், கத்திகளையும் சுத்தம் செய்து கொண்டாடும் நாளில் கொலு வைக்கும் மக்கள் எந்த ஆயுதங்க்ளை வணங்குகிறார்கள்? ஏன் கொலு வைக்கும் மக்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடுவதில்லை?

மகாகாளி, மகாலஷ்மி, மகா சரஸ்வதி என்று சக்தியின் மூன்று அவதாரங்கள் இந்த 9 நட்களிலும் மூன்று மூன்று நாட்களாக பிரித்து கொண்டாடப்படுகின்றன. இதிலும் கூட சாதியின் அடையாளத்தைப் பார்க்கலாம். பார்ப்பனர்கள், சரஸ்வதியையும் (அறிவார்ந்த மேல் தட்டு), சத்திரியர்கள் காளியையும் (வீரமரபு) வைசியர்கள் லஷ்மியையும் (செல்வம்,வணிகம்) வழிபடுகிறார்கள். இதுதான் வர்ணாசிர‌ம் இந்தியாவில் நவராத்திரி கொண்டாடப்படும் விதம்.

சாமி என்றால் ஒரே வடிவத்தில் கொண்டாடலாமே...ஏன் வருணத்திற்கொரு வடிவமாக சக்தி எனும் தெய்வம் இருக்கவேண்டும்? நலம் விசாரிப்பதில் கூட வர்ணாசிரமத்தில், வருணத்திற்கு ஒரு முறையாக இருக்கிறது. சாமிகளும் கூட வேறு வேறுதான்.

'அசுரனை வதம் செய்த காளி சக்தியின் அவதாரம்' என்றும் 'பெண்மையை சக்தியாகவே வழிபடும் இந்து மதம்' என்றும் புனிதமாக பலவித விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்ணை அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருக்கும் இந்து மதத்தின் கோர முகத்தை மறைக்கவே இந்த முகமூடி உபயோகப்படுகிறது.

சூத்திரனுக்கு எந்த சமூக உரிமையும் கொடுக்காத, பெண்மையை வழிபடுகிறோம் என்று சொல்லும் இந்த இந்துச் சமூகத்தில்தான் தலித் பெண்கள் மானப்பங்க படுத்தப்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாகக்கூட, ஒரு தலித் பெண்ணை கும்பலாக வன்புணர்ச்சி செய்து அந்த‌ வீடீயோவை மொபைலில் சுற்றுக்கு வேறு விட்டிருக்கிறார்கள், மகாராஷ்ட்டிராவை சேர்ந்த் சாதி இந்துக்கள். காவல்துறையினர் அவர்களை கைது செய்ததை செய்திகளில் கண்டிருக்கலாம்.

பெண்களை மதிப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன?

சொத்துரிமையில் சம பங்கு கிடையாது. ஐயப்பனை கும்பிடுவதில் கூட வேண்டாம், சக்தி எனும் பெண் தெய்வத்தை வழிபடும் நவராத்திரி காலத்திலேயே மாதவிடாயான பெண்ணுக்கு அனுமதி உண்டா? இயல்பான ஒன்றுக்கே இந்து மதத்தில் இத்தனை ஒடுக்கு முறைகள் என்றால்.....தலித்துகளைப் பற்றியும் தலித் பெண்களைப் பற்றியும் கேட்கவே வேண்டாம். தலித்துகளுக்கென்று ஒதுக்கப் பட்ட நிதியிலிருந்துதானே இன்று காம்ன்வெல்த் போட்டிகள் ந்டைபெற்றது. பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு தலித் பெண்களை விமான பணிப்பெண்களாக நியமனம் செய்ய தடையாக இருந்தது எது? எந்தவொரு தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலும், அது சாதி இந்துக்களால் கும்பலாகவே நடத்தப்படும் என்றும் ஒரு பத்திரிக்கையில் வாசித்த நினைவு.

90களில் நடந்த மண்டல் கமிஷனின் பிரச்சினை என்று நினைக்கிறேன். இடஒதுக்கீட்டுக்கெதிராக உயர்சாதியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அதில் எதிர்ப்பு தெரிவித்த தில்லிப் பெண்கள் எழுப்பிய குரல் "நாங்கள் வேலையற்றவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா" என்றோ "உத்தியோகமற்ற கணவர்கள்தான் எங்களுக்கு கிடைப்பார்கள்" என்பது போலவோ இருந்தது. (அப்போது நான் சின்னப்பெண், சரியான பதங்கள் நினைவு இல்லை) ஆனால் அதன் பொருள் நன்றாக நினைவில் இருக்கிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் படித்து முன்னேறி வந்து வேலை வாய்ப்பும் பெற்றுவிட்டால் எங்கள் சாதி ஆண்கள் வாய்ப்பிழந்துவிடுவார்கள். நாங்கள் அவர்களை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்பதுதான். எனில், இடஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வரும் ஆண்களை திருமணம் செய்துக் கொள்ள அவர்களைத் தடை செய்தது எது?

கோத்திரங்கள் பார்த்து செய்யும் திருமணங்களும், இன்ன சாதியில்தான் நீங்கள் பிறக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முறைகளுமாக சாதியை உயர்த்திப் பிடிக்கும் சனாதன மதத்தின் ஒரு முகம்தான் இது. இதன் கொண்டாட்டங்களை இன்னும் தொடரவேண்டுமா?

சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சிறுபான்மையினரும், பெரும் பான்மையினரும் சமம் என்று இருந்தாலும் பார்ப்பனரைத் தவிர வேறு சாதியினர் கோவில்களில் அர்ச்சகராக முடியாது.சாதியின் பெயரால் இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கத்தானே செய்கிறது. பாயி தூஜ் என்று உடன் பிறந்தவர்களுக்காக விரதம் இருக்கவும், கார்வா சௌத் என்று கணவன் உடல் நலத்திற்காக விரதம் இருக்கவும்தான் எத்தனை பண்டிகைகள்!அந்த காலத்தில் உடலுழைப்பு இல்லாத பார்ப்பனர்களுக்கு பொருளையும் உணவையும் வழங்குவதற்காகவே இந்த விழாக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். மனைவி உடல் நலத்திற்காக கணவனுக்காக் ஏதாவது விரதங்கள் இருக்கிறதா அல்லது தமக்கைகளின் நலத்திற்காக அண்ணன் தம்பிகளுக்குத்தான் ஏதாவது விரதங்கள்/நோன்புகள் இருக்கிறதா?

அமெரிக்காவில் கருப்பர்களும்,பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்களும், ஆஸ்திரேலியாவில் பழங்குடியனரும் இந்த ஒடுக்குமுறையை பாலியல் ரீதியாக, இன ரீதியாக‌ பலவேறு வகைகளில் சந்திக்கிறார்கள். சாதி மற்றும் வகுப்பு ரீதியாக இருப்பதுதான் இந்தியாவின் தனித்துவம்.

மாயாவதியை எடுத்துக்கொள்வோம். மற்ற அரசியல்வாதிகளுக்கும் மாயாவதியின் தோற்றத்திற்கும்தான் வித்தியாசத்தையும் கவனித்திருப்பீர்கள்... சோனியா காந்தி, ப்ரதீபா பாட்டில்,சுஷ்மா, பிருந்தா காரத் என்று நம்முன் நிறுத்தப் படும் பெண் அரசியல்வாதிகள் அனைவரும் வெளிர் நிற புடவை கட்டி முந்தானையை போர்த்திருப்பார்கள். மாயாவதி, சல்வாரும் துப்பட்டாதான் அணிந்திருப்பார். அவரது குரலும், கம்பீரமாகத்தான் ஒலிக்கும்.

பத்திரிக்கைகளிலிருந்த் எல்லா ஊடகங்களும் மாயாவதியைப் பற்றி எழுப்பும் பிம்பம் என்ன? மற்ற உயர்சாதி இந்துபெண்களின் சாதனைகளாக பத்திரிக்கைகள் இடும் பட்டியலைவிட‌ மாயாவதி சாதித்தது அதிகம்தான் என்றாலும், அவரை பற்றிய நெகடிவ் பிம்பம்தான் அழுத்தமாக எழுப்பப்படுகிறது. சினிமா நடிகைகளில் விடுமுறையை, அழகி போட்டிகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கும் ஊடகங்கள் ஏன் மாயாவதியின் சாதனைகளை உரக்க பேசவில்லை? ("Women and politics" பத்தி பேசிக்கிட்டிருக்கும்போது, Perimma shared this particular view, sometime back.)

மாறாக, அவர் புகழை விரும்புவார், சிலைகளை அமைத்துக்கொள்வார் என்றும் அதிக பணம் சேர்த்திருக்கிறார் என்றும்......மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது மாயாவதியின் கட்சி சமீபத்தில் வளர்ச்சியடைந்தது எனில், காலங்காலமாக இருக்கும் காங்கிரஸுக்கும் மற்ற கட்சிகளும் எவ்வளவு பணம் சேர்த்திருக்கும்? அதைப் பற்றி யாரும் பேச மறுப்பதேன்?

கொலு வைப்பதால் பிள்ளைகளின் க்ரியேட்டிவிட்டி வளர்வதாகச் சொன்னாலும் அதன் உள்ளடக்கம் மாறுவதில்லை. மாறாக, பார்ப்பனியம் நம் வாழ்வில் பங்கெடுப்பதை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருவதுதான் இன்றைய தேவையாக இருக்க முடியும். ஒருசில முற்போக்குக் கருத்துகள்,பொருளதார விடுதலை காரணமாக பெண்களின் மீதான மதத்தின் - பார்ப்பனியத்தின் பிடி ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், வெற்று கேளிக்கைகளுக்காக அந்த சடங்குகளை திருமப உயர்த்தி பிடிப்பது பழமையின் பிடியிலே நாமாகப் போய் விழுவதாகத்தான் முடியும்.

15 comments:

Deepa said...

//ரம்ஜானுக்கு/மாற்றுமத பண்டிகைகளுக்கு லீவு விடாத பள்ளிகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பதைப் பார்த்து வீட்டிலும் கொலு வைத்து பூஜை செய்வது என்பது பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதாகத்தானே இருக்கிறது?
//

இது மறுப்பதற்கே இல்லை. ரம்ஜான் கொண்டாடுபவர்களைக் காட்டிலும் கொலுவைப்பவர்கள் குறைவு தான். ஆனால் இரண்டுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் தான் எத்தனை வேறுபாடு?

இந்துக்கள் என்று எல்லா சாதியினரையும் தேவைக்கேற்ற போது அழைத்து அணைத்துக் கொள்வது தான் பார்ப்பனீயம் போலும்.

ராம்ஜி_யாஹூ said...

போன வருடமே பார்ப்பனர்கள் மட்டும் கொலு வைப்பது ஏன் என்ற பதிவு படித்த ஞாபகம்.
பிடிக்காதவர்கள் கொலு வைப்பது, வரலெட்சுமி விரதம் போன்ற பார்ப்பனர்கள் சார்ந்த பண்டிகைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

வியாபாரிகளும் இடம் பொருள் தெரிந்தே கடை விரித்து உள்ளனர். நந்கநல்லூர், மாம்பலம் பகுதிகளில் அதிக கொலு கடைகளை பார்க்கிறேன். உள்ளகரம், பல்லாவரம், குரோம்பேட்டையில் கடைகள் காணோம்.

பெரம்பூரில் ஈஸ்டர் பொழுது பிரவுன் முட்டை கடைகள் போலத்தான் இவையும்.

ராம்ஜி_யாஹூ said...

கலைஞர் டி வியில் விடுமுறை தினத்தன்று சிறப்பு படம் என்றே போடுகின்றனர். அனால் சிறப்பு பக்தி இன்னிசை ஏன் வைத்து உள்ளனர் என்று புரிய வில்லை

லெமூரியன்... said...

:) :)
வாழ்த்துக்கள்..!
பத்து வருடத்திற்கு முன்பு கொலு வைப்பது அல்லது பார்க்க வேண்டும் என்றால் ஒரு பிராமணர் வீட்டிற்குதான் போக வேண்டும் ,
இன்றும் தலை நகரத்தை தவிர்த்து வேறெங்கும் அவ்வளவாக மற்றைய சாதிகளில் இவ்வழக்கம் பின்பற்றபடுவதில்லை ..!

\\அதில் எதிர்ப்பு தெரிவித்த தில்லிப் பெண்கள் எழுப்பிய குரல் "நாங்கள் வேலையற்றவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா" ....//
ஐ ஐ எம் தேர்வில் இடஒதிக்கீடு வேண்டும் என்ற போராட்டம் வலுத்த பொழுது....எத்திராஜ் கல்லூரி மாணவிகள் தெளிவாக தங்களுடைய உயர்சாதி பற்றை
வெளிப் படுத்தினர் ஒரு தனியார் தொலைகாட்சியில்....
ஆதிக்க சாதி பெண்கள் எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல ,தங்கள் சாதி வெறியை காண்பிப்பதற்கு.....

பத்திரிக்கைகள் ஊடகங்கள் அரசின் வைப்பாட்டிகள்....மேலும் ஊடகத் துறையில் கோலோச்சும் அத்தனை உயர் அதிகாரிகளும் ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள்...
அவர்களிடம் எப்படி சமத்துவம் எதிர்பார்க்க முடியும்?????

அமுதா said...

சாதியும் மதமும் எந்த விதத்திலும் எங்கேயும் தன் ஆளுமையை விடவில்லை என்பது தான் உண்மை. கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை. சிட்டியில் கல்ச்சர் என்று சொல்லிக்கொண்டு முகமூடி போட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் தேவையான பொழுது அது முகத்தைக் காட்டத்தான் செய்கிறது. பண்டிகை என்பது மகிழ்ச்சிக்கு என்ற அளவில் கொண்டாடி விட்டு போகலாமே!!!! இதில் சாதியை இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் மதமும் சாதியும் கோரமுகங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கும். அந்த முகங்கள் நாம் அவற்றுக்கு கொடுப்பவை. எல்லோரும் மாற வேண்டும். நாம் சாதியிலும் மதத்திலும் “நீ சகித்துக் கொள்ளேன்” என்ற மனப்பான்மையில் தான் பேசுகிறோம். பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று எல்லாமே குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரு வழி. தீபாவளி ஆரிய பண்டிகை, மற்றவை சாதீய பண்டிகை என்று யோசித்துக் கொண்டிருந்தால் தப்புக்கள் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கலாம். இது மகிழ்ச்சிக்கான வழி, எல்லோருக்குமானது என்ற நிலைதான் மன நிம்மதி அளிக்கும்.

அம்பிகா said...

முல்லை,

ஒரு பண்டிகையின் பின்னிருக்கும் சாதீயத்தை வெளிப்படுத்தும் தீர்க்கமான பார்வை. இங்கே, விருப்பப் பட்டவர்கள் கொலு வைக்கிறார்கள், எந்த ஜாதியாக இருந்தாலும்.

நல்ல பார்வை..., நல்ல பதிவு.

? said...

நல்ல கட்டுரை. மாயாவதி பற்றிய கருத்தில் மாறுபடுகிறேன்.

V.Radhakrishnan said...

கட்டுரை நன்றாக இருக்கிறது.

இப்பொழுது சற்று வேறு கோணத்தில் யோசித்து பாருங்கள்.

வேறு ஒரு சூழலில், அதாவது கொலு வைத்து வாழும் சூழல், வாழ்ந்து இருந்தால் எப்படி உங்கள் எண்ணம் இருந்து இருக்கும்?

அதை இப்பொழுது நீங்கள் உறுதியிட்டு சொல்ல இயலாது. மனிதர்கள் எதையும் உயர்த்தி பிடிக்கவோ தாழ்த்தி பிடிக்கவோ நினைப்பதில்லை. வாழும் பழக்கங்கள் என பல காரணிகள் இருக்கின்றன.

நாம் வெவ்வேறு கோணங்களில் விசயங்களை பார்ப்பதன் காரணமாக பிரச்சினைகள் பெரிதாக தெரிகின்றன.

தலித் என்பதற்கு முன்னராக ஒரு பெண் என்கிற பார்வை எதற்கு வருவதில்லை. ஒரு சடங்கு சம்பிராதாயம் என்பதை பாராமல் இவர் செய்கிறார் அவர் செய்வதில்லை என சொல்வதன் அர்த்தம் என்ன. இந்த விசயத்தை பல விசயங்களுக்கு உட்படுத்தி பாருங்கள். இன்னும் பல விசயங்கள் புரிய வரும்.

பொதுவாக எவர் பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிக்க சொன்னது? தவறுகள் நம்மிடமே இருக்கின்றன. ஆனால் சுட்டுவதில் நாம் கெட்டிக்காரராக இருக்கிறோம். அங்குதான் தொடர்ந்து தவறுகள் நடந்தேறி கொண்டிருக்கின்றன. இவை நிறுத்தப்பட போவதில்லை.

LK said...

//ரம்ஜானுக்கு/மாற்றுமத பண்டிகைகளுக்கு லீவு விடாத பள்ளிகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பதைப் பார்த்து வீட்டிலும் கொலு வைத்து பூஜை செய்வது என்பது பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதாகத்தானே இருக்கிற///

எனக்கு எந்தப் பண்டிகைக்கும் விடுமுறை இல்லை. இதற்க்கு என்ன இயம் சொல்லப் போகிறீர்கள்?

LK said...

/ஏன் கொலு வைக்கும் மக்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடுவதில்லை?////

ஆயுத பூஜை என்பது அவர் அவர் செய்யும் உபயோகிக்கும் தொழில் கருவிகளுக்கு பூஜை செய்வது. என் தந்தை சிறிய உணவகம் வைத்து இருக்கிறார். அதற்கு என்ன கருவிகள் தேவையோ அதற்க்குத்தான் அவர் பூஜை செய்வார். அவரிடம் ஏன் அரிவாளுக்கு பூஜை போடுவதில்லை என்றுக் கேட்டால் அது நகைப்புக்குரியது . அது போன்றுதான் நீங்கள் சொல்லி இருப்பதும்

ஆயில்யன் said...

//இது மகிழ்ச்சிக்கான வழி, எல்லோருக்குமானது என்ற நிலைதான் மன நிம்மதி அளிக்கும்.///

அதே!

காமராஜ் said...

மிகத்தேர்ந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் சாயலும்,ஒரு
வசீகரத்தோடு வாசகனை இழுக்கிற எழுத்துமாக மெருகேறி வருகிறது தோழர் முல்லையின் படைப்புகள்.'பகலில் பொங்கி மீந்துபோனவைதான் இரவுக்கான உணவு' என்கிற இடத்தில் ஒரு அடர்த்தியான சிறுகதையின் நுட்பமும் இருக்கிறது. இரவில் மீந்து போன ரசத்தையும் சோத்தையும் சேர்த்துக்குழைத்த சட்டியை காலையில் திறக்கும் போது வருகிற வாசனை வருது முல்லை.

தீஷு said...

இப்பொழுது நவராத்திரி நிறைய மக்களால் கொண்டாடப்படுவதன் காரணம் என்னைப்பொருத்த வரை வெவ்வேறு கலாச்சார மக்களுடன் பழுகும் சந்தர்ப்பம் கிடைப்பதால். ஒருத்தர் பார்த்து ஒருத்தர் செய்வது தான். எனக்கு என் விருப்பத்திற்கு ஏற்ப பிறர் வற்புறுத்தல் இல்லாமல் அடுத்தவரை/அடுத்த உயிரை துன்புறுத்தாமல் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் விருப்பம் உண்டு. வீட்டில் கொலுவும் வைத்திருக்கிறேன், கிறுத்துமஸ் மரமும் அலங்கரித்து இருக்கிறேன்.

Bharath said...

Complete Negativity..unfortunately குழந்தை வளர்ப்பில் இருக்கும் உங்களின் Positivity வேறு எதிலும் இல்லை..
அடுத்து Halloween வரும் அதன் பின் ஹோலி வரும் அதற்கும் காரணம் பார்பனீயம் தான்!!!
எனனைப் பொறுத்தவறை கொலு என்பது பரத நாட்டியம் போல் ஒரு status symbol அவ்வளவே!!!

i criticize periyar said...

ஆயுத பூஜை கொண்டாடும் விதம் மாறுபட்டாலும் பிராமணர்களும் கார்,வாகனங்களுக்கு பூ வைத்து கொண்டாடுவது உண்டு.சரஸ்வதி பூஜை அன்று பூஜைக்கு வைத்ததை அடுத்த நாள் எடுத்து படிப்பது உண்டு.
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள்,அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் செய்யட்டும்.யாரும் உங்களை இந்த பூஜை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என்று கட்டாயப்படுத்துவதில்லையே.மதச்சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் எதற்கெல்லாம் விடுமுறை விடுகிறார்கள் என்று பாருங்கள். கிறித்துவர்களின் எண்ணிக்கை இந்திய மக்கள்தொகையில் 3%த்திற்கும் குறைவு.அனைத்து மாநில அரசுகளும் டிசம்பர்25ஐ விடுமுறை தினமாக அறிவித்து இருப்பதை அறிவீர்கள்தானே.கோவில்களில் கொலு வைப்பதில் உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. கொலுவுக்கு அழைத்தால் பார்பனியம், அழைக்காவிட்டால் ஒதுக்கல் என்று எதையும் விதண்டாவாதமாக மாற்றும் கலைதான் உங்களிடம் இருக்கிறது.