Wednesday, October 13, 2010

Mac Mac.....Guess which Mac?

வண்டலூர் ஆயா வீட்டிற்குச் சென்றிருந்தோம். பல உற்றார் உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். நிறைய குட்டீஸ். அப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம் என்றாலும் வெகு விரைவில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி ஒரே ஆட்டம்தான். மதியம் மூன்று மணிக்கு மேல் வீடு மிகுந்த பரபரப்பாகியது. குட்டீஸ் அனைவரும், சத்தம் போடக்கூடாதென்ற மிரட்டலுடன் வெளியே விரட்டி விடப்பட்டோம். எல்லா பெரியவர்களும் , கூட சில புதிய முகங்களும் உள்ளே பாயில்.... சேரில்... ஆக்கிரமித்திருந்தனர்.

என்ன நடக்கிறதென்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை. எல்லாரும் போனபின்
எங்களுக்கும் உள்ளே வர அனுமதி கிடைத்தது. பார்வதி அக்கா எல்லாருக்கும் ஸ்வீட், மிக்சர், முறுக்கு பலகாரங்களை வரிசையாக அமர வைத்து தந்தார். அக்கா புடவை கட்டி பூவெல்லாம் வைத்திருந்தார்.

"அக்கா, ஏன்க்கா எங்களை வரக்கூடாதுன்னு சொன்னீங்க‌, யாரு அவங்கள்ளாம்" என்று கேட்டதற்கு,

"எல்லாம் சொல்லணும் உங்களுக்கு...ஏன் எதுக்குனு...குடுத்த த‌ சாப்பிட்டுட்டு விளையாட ஓடுங்க" என்றார் சிடுசிடு முகத்துடன்.

கொஞ்சம் பயந்துதான் போனோம்.

ஜாலியா கதை சொல்ற அக்காவுக்கு என்ன ஆச்சு?
அன்றைய இரவில் விடை கிடைத்தது.

"அழகா முக்கியம், குணம்தான் முக்கியம். மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அழகென்ன அழகு...நல்ல குணம் இருக்கான்னு பாரு, அதான் முக்கியம்" என்று யாரோ யாருக்கோ வராண்டாவில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக பார்வதி அக்காவைத்தான் கன்வின்ஸ் செய்துக் கொண்டிருக்கவேண்டும்.

இதே டயலாக்கை வேறு அக்காக்களுக்கு வேறு குரல்கள் சொல்லியிருப்பதைக் கேட்டிருக்கிறேன். "நல்ல குண்ம், எந்த கெட்ட பழக்கம்" என்பதுதான் மாப்பிள்ளைக்கான முக்கியமான கான்டக்ட் சர்பிகேட். ( நல்ல குணம் என்பதற்கான அளவுகோல்தான் என்ன? பார்த்து விசாரித்தால் வெளிப்பட்டு விடுமா என்பதெல்ல்லாம் இங்கே தேவையில்லாதா கேள்விகள்.)

நல்ல குணமென்பதும், நல்ல பழக்க வழக்கமென்பதும் நிச்சயம் 'குடியும் சிகரெட்டையும்' கொண்டுதான் அளவிடப்பட்டன. அதற்கேற்றாற்போல, குடும்பத்தினர் யாருக்கும் குடிப்பழக்கமும் இல்லை. கல்லூரி படிப்ப‌வர்களுக்கு பணம் அளந்துதான் தரப்படும். அப்படியே இருந்தாலும் சின்னப்பசங்களான எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. அண்ணாதுரை சித்தப்பாவிற்கு மட்டும் சிகரெட் பழக்கம் இருந்தது அரசல்புரசலாக தெரியும். மேலும், ஒரு 'ப்ராஸ்பெக்டிவ் மாப்பிள்ளை'க்கான தகுதி ‍ "குடிபழக்கம் இல்ல,...எந்த கெட்ட பழக்கமும் இல்ல. தங்கமான குணம்" என்பதான சர்ட்டிபிகேட் பெறுவதுதான்.

பார்த்திருந்த ஒரு சில சினிமாக்களிலும் வில்லன்கள் சுழல்நாற்காலில் அமர்ந்துக் கொண்டு, ஹீரோ வந்ததும் ஸ்டைலாக முன்னால் திரும்பி வாயில் சிகரெட்டும் கையில் குடிபானமுமாக 'ஹஹ்ஹா' என்று சிரிப்பார்கள். வில்லன்களுக்கு படியாத முடி இருக்கும். ஹீரோக்கள் பெரும்பாலும் வெள்ளை சட்டை அணிந்திருப்பார்கள்.தலையை ஒழுங்காக சீவியிருப்பார்கள். இருவருக்கும் சண்டை ஆரம்பிக்கும். மனதிற்குள், வெள்ளை சட்டை போட்ட அண்ணா எப்படியாவது ஜெயிக்கணும் என்று சொல்லிக்கொண்டிருப்பேன். (ஓக்கே.. ஓக்கே..அது ரொம்ப சின்ன வயசு...ஒன்றாவது இரண்டாவது , வகுப்பில்.. அதற்கப்புறம் பெரிய கேப்!!) வெள்ளை சட்டை அண்ணா அடிவாங்கும்போது கண்களை இறுக்க மூடிக்கொள்வேன். முக்கியமாக, ஹீரோ குடிக்க மாட்டார். சோ, நல்லவர்கள் குடிக்க மாட்டார்கள்.

எப்படியோ, "குடிப்பவர்கள் கெட்டவர்கள்" அல்லது "கெட்டவர்கள் குடிப்பார்கள்" என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே மனதில் பதிந்து போயிருந்திருக்கிறது. 80களில் 90களில் வளர்ந்திருப்பவ‌ர்களால், நிச்சயம் இந்த மனோபாவத்தை அறிந்துக்கொள்ள முடியும். ( நல்லொழுக்க குடும்பமோ/family values அல்லது நடுத்தர வர்க்கத்திற்கான ஏதோ ஒன்றோ?!) மூன்றாவது பிளாக்கில் இருந்த ஒரு அங்கிளுக்கு 40 வயது வரை மணமாகாமலேயே இருந்தது. அவர் ஒரு மொடாக் குடியர் என்பதால் யாரும் பெண் கொடுக்கவில்லை. அப்புறம், ஒரு ஏழைப்பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

ஹீரோக்களும் குடிக்கலாம் என்று கொஞ்சநாள் கழித்துத் தெரிந்துக்கொண்டேன்.(ஆரம்ப கால சல்மான்கான், அமீர்கான் படங்களில்) ஹீரோயினுடன் பிணக்கு ஏற்பட்டாலோ அல்லது காதல் பிரிவிலோ ஹீரோக்கள் ஷாலை சுற்றிக்கொண்டு கையில் பாட்டிலுடன் பாடுவார்கள். பாட்டில் உடைந்து கையிலோ காலிலோ ரத்தம் வரும். ஹீரோயின் வந்து கட்டு போடுவார். அப்புறம், ஹீரோ நல்லவராகி விடுவார்.

இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நல்லொழுக்கம் மிடில் கிளாஸுக்கு மட்டும் சொந்தமாக இருந்தது போல தோன்றுகிறது. "குடிகாரன்" அல்லது "குடிகாரப்பய" என்பதுதான் ஒருவர் வாங்கும் மிக மோசமான திட்டாக இருக்கமுடியும். ஆனால், அதே ஹவுசிங்போர்ட் காம்பவுண்டை ஒட்டியிருந்த பி‍ கஸ்பாவில் (சேரி என்று பொருள் கொள்க) இருந்தவர்கள் குடித்தால்,அது அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி அல்லது அவர்களின் குணநலனே அப்படித்தான் என்பதாக எண்ணப்பட்டது. தாழ்ந்த சாதிகளின் இயல்பே அதுதான் என்பதுபோல ஒரு எண்ணம் இருந்தது. அவர்களுக்கு இயல்பாக கருதப்பட்டது காம்பவுண்டின் இந்தப் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒழுக்கத்தின் சின்னம்.
சாதிக்கொரு நீதி- genderக்கு ஒரு நியாயம்!

ஆதம்பாக்கத்தின் ஒரு தெரு முனையில் இருப்பக்கமும் மிகுந்த கூட்டமாக இருக்கும். நெடுநாட்கள் ஏன் கூட்டமென்று புரிந்ததில்லை. தெருவில் வாழைப்பழங்களை கூறு கட்டி வைத்திருக்கும் கடை இருக்கும். வாழைப்பழம் வாங்க ஏன் இவ்ளோ கூட்டம்...வாழைப்பழ மண்டி போல என்று நினைத்துக் கொண்டு, எப்படியாவது வழி கிடைத்தால் போதுமென்று இடுக்குகளில் புகுந்து ஓட்டிச் சென்றுவிடுவதால் யோசிக்கவும் இல்லை. ஒருநாள் ட்ராபிக் ஜாமில் அண்ணாந்து லுக் விட்ட போது கூட்டத்திற்கான காரணம் புரிந்தது. டாஸ்மாக். அதற்கு எதிர்சாரியில் எண்ணெய் வாணலியில் பொரிந்துக்கொண்டிருந்த ஸ்னாக்ஸ் வாசனை!

அட,அப்பாவியாக வாழைப்பழத்திற்குக் கூட்டம் என்று எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன்! பவ்வ்வ்வ்வ்!

இதேபோல, மடிப்பாக்கம் செல்லும் வழியிலும் ஒரு டாஸ்மாக்கை பார்த்திருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் கொஞ்சம் லேட்டாக வரும் தினங்களில் இதே போல முட்டி மோதும் கூட்டத்தை கண்டிருக்கிறேன். பைக், கார்கள், ஆட்டோக்களை நிறுத்துவிட்டு வாங்குவதற்கு முண்டியடிக்கும் கூட்டம். ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இல்லாத இடம் ஒருவேளை இதுவாக இருக்கக்கூடும். எப்போடா க்ராஸ் பண்ணுவோம் என்று லேசான பதைபதைப்பு இருக்கும். குடிபோதையில் வண்டியை ஓட்டமுடியாமல் வந்து இடித்துவிட்டால் என்ற பயம்தான். அதேபோல, விஜயநகர் சிக்னலுக்கு அருகில் இருக்கும் கடையிலும்.

குடிப்பது 'ஸ்டேடஸ் சிம்பலாக', எப்போதாவது 'அக்கேஷனலாக' அல்லது 'சோஷியல் ட்ரிங்' என்று சொல்லிக் கொண்டாலும் தனிப்பட்ட விதத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை.'நிதானம் தவறி போதையில் சொல்லிட்டாங்க' என்று சொல்லப்படும் சாக்குபோக்கு அதற்கிருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். எனது நண்பர்கள் பலர், மணமகன் குடிப்பார் என்று தெரிந்தே திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தயங்கிய பெற்றோரை , "அதெல்லாம் தப்பு இல்லைம்மா, இந்த காலத்துலே அப்படியெல்லாம் யாரும் கிடைக்க மாட்டாங்க, இப்போல்லாம் எல்லாரும்தான் குடிக்கறாங்க" என்று சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். குடிக்காத கணவர் வேண்டுமென்று ஆசையிருந்தாலும், நடைமுறையில் சாத்தியமில்லை என்பதாக உணர்கிறார்கள். தந்தையின் ஒழுக்கத்தைப் பற்றி பெருமையாக பேசியவர்கள் பலரும் கணவர் குடிப்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாதமொருமுறை என்று சொல்லப்பட்டு வாரமிருமுறையாக மாறினாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்.'நாமளும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும்ப்பா' என்று திருமணமாகாத பெண்களுக்கு போதிக்கிறார்கள்.

ஆண்களுக்கோ, லஞ்சோடு பீர் கிடைக்கும் ரெஸ்டாரண்டுதான் விருப்பமாக இருக்கிறது. குடிப்பேன் என்று சொல்லிகொள்வது ஃபேஷனாகிவிட்டது. முன்பு போல, யாரும் குடிகாரன் என்று சொல்லிவிடுவார்களோ என்று யாரும் அஞ்சுவதில்லை. "பீர்ல்லாம் குடிக்கலாம், தப்பே இல்ல, குடிச்சா கலராகலாம்" என்பது முகத்தை சுளிக்கும் பெண்களுக்கு வழங்கப்படும் ஃபிரீபிஸாக இருக்கிறது! 'குடிச்சாதான் ஸ்ட்ரெஸ்ல்லாம் போய் மைன்ட் ஃபிரீயா இருக்கு' என்று மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக காரணமும் சொல்கிறார்கள்.

அதே மன அழுத்தம், கூட இருக்கும் பெண்களுக்கும் இருக்கும் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பெண்கள் குடிப்பதை ஃபோட்டோ எடுத்து, கலாச்சார காவலராக மாறி, "நாடு ரொம்ப கெட்டுப் போச்சு" என்ற கமெண்ட்டுடன் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்கள் ‍‍ - வேட்டி சட்டையிலிருந்து வசதியாக பேண்ட் சர்ட்டுக்கு மாறிவிட்டு "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" என்று பாடுவதைப் போல!

16 comments:

லெமூரியன்... said...

ஹ்ம்ம்....!
காலைலேயே ஏன் இவ்ளோ டென்சன்...???? :(
குடிப்பது தமிழர்களின் கலாசாரம் தான்..! திருக்குறள் கள்ளுனாமை பத்தி சொல்லுது..!


\\இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நல்லொழுக்கம் மிடில் கிளாஸுக்கு மட்டும் சொந்தமாக இருந்தது போல தோன்றுகிறது.........//
குடிப்பது மட்டுமில்ல...உடுத்தும் உடைல இருந்து படுக்கும் பாய் வரைக்கும் அடுத்தவனோட கம்பேர் பண்ணியே வாழ்ற வாழ்க்கை மிடில் கிளாஸுக்கு......
ரொம்ப கீழிருப்பவனை பற்றியும் ரொம்ப மேலிருப்பவனை பற்றியும் சமுதாயம் ரொம்ப சிந்திக்காது.....

\\நல்ல குணமென்பதும், நல்ல பழக்க வழக்கமென்பதும் நிச்சயம் 'குடியும் சிகரெட்டையும்' கொண்டுதான் அளவிடப்பட்டன..........//
இது ரொம்ப பெரிய காமெடி முல்லை....
இப்போ அப்டி ஒரு பையன் கிடைக்கலாம்.இல்லைன்ல சொல்லல....ஆனா பையன் பெரிய சைக்கோவா இருப்பான் :) :) :)
அதுக்காக குடிக்காதவங்க எல்லாம் அப்டின்னு சொல்ல வரல...குணத்துக்கும் குடிப்பதற்கும் பெரிய சம்பந்தம் இல்லைன்னு சொல்றேன்...

\\ஹீரோக்களும் குடிக்கலாம் என்று கொஞ்சநாள் கழித்துத் தெரிந்துக்கொண்டேன்.(ஆரம்ப கால சல்மான்கான், அமீர்கான் படங்களில்) ஹீரோயினுடன் பிணக்கு ஏற்பட்டாலோ அல்லது காதல் பிரிவிலோ ஹீரோக்கள் ஷாலை சுற்றிக்கொண்டு கையில் பாட்டிலுடன் பாடுவார்கள். பாட்டில் உடைந்து கையிலோ காலிலோ ரத்தம் வரும். ஹீரோயின் வந்து கட்டு போடுவார். அப்புறம், ஹீரோ நல்லவராகி விடுவார்...........//

உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி போங்க :) :) :) அந்த வயசில ரசிச்சி பாத்த படத்த இப்போ இப்டி கிழிச்சி தொங்க விட்டீங்களே :( :(

\\இதேபோல, மடிப்பாக்கம் செல்லும் வழியிலும் ஒரு டாஸ்மாக்கை பார்த்திருக்கிறேன்...//

:) :) கூட்டத்திலே நானும் ஒருத்தன் வார இறுதியில் :) அந்த கடை பக்கம்...

\\நிதானம் தவறி போதையில் சொல்லிட்டாங்க.....//
இது கொஞ்சம் ஓவர்....ஆனா நெறைய பேர் இந்த தப்ப செஞ்சிடறாங்க.....சோம பானம் அருந்த முடிவெடுத்தால் முதல் செய்ற காரியம் அலைபேசியை அனைத்து வைப்பதுதான்....பிரச்சினை தோன்றது அங்கிருந்துதானே??? :(

\\பெண்கள் குடிப்பதை ஃபோட்டோ எடுத்து, கலாச்சார காவலராக மாறி, "நாடு ரொம்ப கெட்டுப் போச்சு" என்ற கமெண்ட்டுடன் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்கள் ‍‍........//

இவங்கதான் இப்போ பெரிய காமெடி பீசு...! எங்க பாடி ராவா சாராயம் குடிச்சிட்டு தாத்தாட்ட ஒரு பப் பீடி இழுப்பாங்க...!
ஒவ்வையார் பெண்கள் குடிப்பதை பற்றி சொல்லியிருக்கிறார் என்றான் நண்பன். தேடித் பார்த்து படிக்கணும்.

☀நான் ஆதவன்☀ said...

//கலாச்சார காவலராக மாறி, "நாடு ரொம்ப கெட்டுப் போச்சு" என்ற கமெண்ட்டுடன் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொண்டு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்கள் //

உண்மை :(

//பீர்ல்லாம் குடிக்கலாம், தப்பே இல்ல, குடிச்சா கலராகலாம்// ஹி ஹி பாஸ் இது உண்மைன்னா இந்நேரம் நான் வெள்ளைகாரனா மாறி "ஏமி ஜாக்சனை"யே தைரியமா பொண்ணு கேட்டிருக்கலாம்

Vivek Baktha said...

Chittrakoodathil Chithirangalum, varthai Ooviangalum Kidaithathu, kidaikinrana & Kidaikum.( Sorry. Not still familiar with tamil typing??)

Ambedhan said...

பெண் குடிக்கலாம்.. அவளுக்கும் மன அழுத்தம் உண்டு.. ஆம்பளை நாய்ங்க மட்டும் குடிக்கிற போது.. பெண் குடிப்பதில் என்ன தவறு ?

பெண் ஜீன்ஸூம், வெறும் பனியனும் மட்டும் அணிந்து டக்..டக்கென்று ஹைஹீல்ஸ் அதிர.. ஆணாதிக்க ஆண்கள்.. வெறிக்க .. நடப்பது இன்று சகஜம் என்று யாராவது 30 வருடங்களுக்கு முன் நினைத்தி ருப்பார்களா..

அதே போல் ஒரு காலத்தில் பின்வருவது நடப்பதும் சகஜமாகும்.....
அவள் போதை தலைக்கேறி போட்டிருந்த பனியனை அவுத்துப் போட்டுவிட்டு நடுராத்திரியில் "டேங்கோத்தா...தா..மவனே..பாஸ்டர்ட்" என்று ரவுசு பண்ணி காலனி மக்களை நடு ராத்திரியில் எழுப்பி கணவன் உள்ளிருந்து வந்து "என்னங்க இது ராத்திரி நேரத்துல குடிச்சிட்டு வந்து இப்படி கலாட்டா பண்றீங்க.. பசங்க தூங்குதுங்க பாருங்க.. சாப்பிட்டீங்களா.. உள்ள வாங்க..சத்தம் போடாம வந்து படுங்க" என்றோ..
இல்லை..
அவளைப் போலவே குடிபோதையில் இருந்த அவனும் உள்ளிருந்து வந்து பதிலுக்கு "அடிங்கோத்தா" என்று ரவுசு பண்ண.. ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை நடக்க.. நடுராத்திரியில் போலீசு வந்து இரண்டு பேரையும் இழுத்துச் செல்ல..

இப்படிக் காட்சிகள் நடப்பதும் உங்களைப் பொறுத்தவரை சரிதான் என்றால் சந்தோஷப்படுங்கள்... அது தான் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நடக்கப் போகிறது.

Ambedhan said...

வள்ளுவன் காலத்தில் குடித்தார்கள்.. ஒளவையார் குடித்தார்.. என்பது போன்ற வரலாற்று ஆதாரங்கள் எதற்கு ? குடியை நியாயப்படுத்தவா..

விஷயம் சிம்பிள். குடித்தவுடன் ஆல்கஹால் நமது ரத்தத்தில் நேராகக் கலக்கிறது. ரத்தத்தில் ஆல்கஹால் கூடியதும் மூளைக்குள் செல்லும் ரத்தத்தின் வழியே ஆல்கஹால் மூளைக்குள்ளும் செல்லும். மூளையின் செயல்படுதிறன், முடிவெடுக்கும் திறன், கட்டுப்பாட்டுத் திறன், நிற்கும் நடக்கும் உடற் செயற்பாடுகள் போன்ற பலவற்றையும் இந்த ஆல்கஹால் பாதிக்கும். மூளையை அடகுவைத்து விட்டு வள்ளுவனென்ன.. ஒளவை என்ன.. ஆணுக்கென்ன.. பெண்ணுக்கென்ன.. வீராப்பு வாழுது.

கொலைகாரர்களும், குற்றவாளிகளும் பெரும்பாலானவர்கள் கொடூரச் செயல்களை செய்வதற்கு முன் மதுவருந்திக் கொள்வது தற்செயலானது அல்ல.. பாலியல் குற்றங்கள் மது அருந்தியவர்களால் நடத்தப்பட்டிருக்கும் விகிதம் அதிகம்..

ஆர்.எஸ்.எஸ் காரன் பெண்கள் குடிப்பதை எதிர்ப்பதாலேயே பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம் போடத்தான் வேண்டும் என்று எதிர்த்திசைப் பக்கம் பார்ப்பது என்ன விதத்தில் சரி ? ஆர்.எஸ்.எஸ் காரன் கலாச்சாரக் காவலனாக மாறும்படி நீங்கள் வழி காட்டி விட்டு அப்புறம் ஆர்.எஸ்.எஸ் வளர்கிறது என்று பயப்பட வேறு செய்து கொண்டால் என்ன அர்த்தம் ?

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடித்தல் நடந்தது அந்தக் காலம். இன்றும் அப்படியே அது நீடித்தால் கூட பெரிதாக வருத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் இன்று 'வாழக்கையே கொண்டாட்டம்' என்று ஆண்களும் பெண்களும் சேர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் 'கொண்டாட்டத்திற்கு குடி'யென்றால்.. நாள்தோறும் 'சுதி' தான். போய்ப் பாருங்க நிறைய வெப்சைட்டுகளில். ஆணும் பெண்ணும் குடித்துவிட்டு போடும் ஆட்டங்களின் போட்டோக்கள் வேறு சாட்சியாக.

Deepa said...

//குடிப்பது 'ஸ்டேடஸ் சிம்பலாக', எப்போதாவது 'அக்கேஷனலாக' அல்லது 'சோஷியல் ட்ரிங்' என்று சொல்லிக் கொண்டாலும் தனிப்பட்ட விதத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடிந்ததில்லை.//
ஐயோ இந்த‌ ஃபேஷ‌ன், ஸ்டைல் என்று குடிப்ப‌து தான் மிக‌வும் ஆப‌த்தான‌ போக்கு.
எங்கே போய் முடியுமோ!
முன்பெல்லாம் ப‌ழ‌க்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கூட‌ ர‌க‌சியமாக‌, அவ‌மான‌மாய் நினைத்துத் தான் செய்தார்க‌ள். இப்போது ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளிடையே கூட இந்த‌க் க‌லாசார‌ம் வேக‌மாக‌ப் ப‌ர‌வி வருகிற‌து.

//வாழைப்பழம் வாங்க ஏன் இவ்ளோ கூட்டம்...வாழைப்பழ மண்டி போல //
இவ்வ‌ள‌வு வெள்ள‌ந்தியா நீ? ந‌ம்ம்ம்ம்ம்பிட்டோம்!

//பாஸ் இது உண்மைன்னா இந்நேரம் நான் வெள்ளைகாரனா மாறி "ஏமி ஜாக்சனை"யே தைரியமா பொண்ணு கேட்டிருக்கலாம்//
ஆத‌வ‌ன்! :)))

எப்படியோ உன் போஸ்டால‌ இன்ஸ்ப‌ய‌ராகி இந்த‌ச் சோம்பேறி ஒரு போஸ்ட் போட்டுட்டேன் இன்னிக்கு. தாங்க்ஸ்!

ரமேஷ் வைத்யா said...

mika siRappaaka ezuthiyirukkiRiirkaL.

அம்பிகா said...

முல்லை,
குடி என்பது நாகரீகத்தின் அடையாளமாக மாறி வருகிறது.
தீபா கூறுவது போல் முன்பு ரகசியமாய் குடித்தவர்கள், இப்போது அதிலென்ன தப்பு என்று விதண்டாவாதம் பேசுகிறார்கள். ஹூம்ம்ம்...

நசரேயன் said...

// "பீர்ல்லாம் குடிக்கலாம், தப்பே இல்ல, குடிச்சா கலராகலாம்"//

இதை சொன்னவரு விலாசம் கிடைக்குமா ?

N said...

Pls add your direct experience after consuming alchohol....all these are just third hand experiences and cinematic buildups, regarding alcohol.?

Does alcohol really relaxes women?

அன்புடன் அருணா said...

அட!நீங்கவேற!குடிக்காதவங்கல்லாம் தனிமைப் படுத்தப் படுகிறார்கள்னு தெரியுமா முல்லை?!

mani said...

//தாழ்ந்த சாதிகளின் இயல்பே அதுதான் என்பதுபோல ஒரு எண்ணம் இருந்தது. அவர்களுக்கு இயல்பாக//

அது எப்படி தாழ்ந்த ஜாதி என்று கூறலாம் நீங்கள்... அப்ப யாரை நீங்கள் தாழ்ந்த ஜாதி என்கிறீர்கள்....

பூங்குழலி said...

பீர் குடிச்சா கலராகலாம் ,குண்டாகலாம் இன்னும் பல கட்டுக் கதைகள் உண்டு .என் கணவரின் நண்பர் ஒருமுறை சொன்னார் ,"அது வெறும் பார்லி தண்ணி தான் சிஸ்டர்?" .நான் சொன்னேன்," நான் பார்லி தண்ணி காய்ச்சி தருகிறேன் ,குடிப்பீங்களா ?"என்று .என் வீட்டில் அப்பா பெரியப்பா என்று ஆண்கள் எல்லோரும் குடிக்காதவர்கள் தான் (இவர்கள் எவரும் சைக்கோ இல்லை ).எனக்கு எப்போதுமே குடிப்பது சிகரெட் பிடிப்பது இரண்டுமே கெட்ட பழக்கம் தான் .

Deepa said...

//,"அது வெறும் பார்லி தண்ணி தான் சிஸ்டர்?" .நான் சொன்னேன்," நான் பார்லி தண்ணி காய்ச்சி தருகிறேன் ,குடிப்பீங்களா ?"//
LOL!!! :)))

மாதேவி said...

"வாழைப்பழ மண்டி" :)

தீஷு said...

இப்பொழுது குடிக்காதவர்கள் கேவலமாகப் பார்க்கப்படுகின்றனர்.